காதல் அல்ல காதலி!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 24, 2023
பார்வையிட்டோர்: 3,627 
 

(2006ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம்-5

“ஸஸ ரிரி கக ரிரி கக மம மம ப்ப தத” 

வாயில் முனகிக் கொண்டு அந்த நாற்பது வயது சுமார் நபர் அந்தச் சின்ன குறுகலான இடைவெளியில் நடந்து சென்றான். 

வரிசையாய்ப் பல வாயில்கள் அந்த இடைவெளியில் இருந்தன. 

ஒவ்வொன்றின் உள்ளும் ஒரே அறைக் குடும்பங்கள் முடங்கிக் கிடந்தன. 

கடைசிக் கதவைப் போய் ‘டொக் டொக்’ கென்று தட்டினான். 

“யார்?” என்று பெண் குரல் கேட்டது. 

“நான்தான் மதனா!” என்றான் அவன். 

உள்ளே திறக்கப்படும் சப்தம்! 

அவன் நுழைந்து கதவை உடனே சாத்தி தாழ்ப்பாள் போட்டான். 

அறையில் ஏதோ ஒரு சன்னல் லேசாக வெளிச்சம் விட்டிருக்க, கீழே மட்டும் கிடந்த இருட்டில் சம்மணமிட்டு அமர்ந்தான். 

“ஏதாவது தெரிஞ்சுதா?” என்றாள் மதனா. 

அவள் முகம் முழுதும் வீங்கி இருந்தது. 

“விசாரிச்சுட்டேன். உங்க அக்கா உன்னைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படல்லை. அந்தக் கட்டிடத்தோடு நீயும் போயிட்டதாக நினைச்சாங்க.” 

மதனா பேசவில்லை. கர்சீப்பை எடுத்து கண்களைத் துடைத்தாள். 

“இல்லை நான் செல்றேன். நான் வீட்டுக்குப் போய் ஒரே ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்துடறேன்!” என்று கூறி அவனுக்கு முன்னால் தழைய உட்கார்ந்தாள். 

அவளது கலக்கத்தை அவன் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. 

“என்னைத் தேடி யாராவது வந்தாங்களா?” என்றான்.

“யாரோ வந்தாங்க. நாகசாமி! நாகசாமின்னு கூப்பிட்டாங்க!” 

ஒரு கணம் அந்த நபர் நெஞ்சில் கை வைத்தான்.

சுவாசம் இழுத்தது. 

“யாரு அது?” என்றான் பதட்டத்துடன். 

“சொல்றது முழுதையும் காதிலே வாங்கிக்கிடுங்க! அவர் அடுத்த வீட்டுக்கு வந்திருக்கிறார் போல இருக்கு”

“என் பெயரைச் சொன்னான் சொன்னியே?” 

“இல்லையே! பக்கத்து வீட்டுக்காரர் பேரும் நாகசாமி போல இருக்கு!”

அவனது கலக்கம் நொடியில் விலகியது. சடக்கென்று அவளை இழுத்தான். மடியில் நிறைத்துக் கொண்டு மெள்ள இடையில் கை வைத்தான். 

எத்தனை நாள் இந்த இடை கிடைக்குமா என்று ஏங்கி இருப்பான்? 

டி.வி. நாடகம் நடிக்க கோஷ்டி சங்கீதம் பாட எத்தனை டீன் ஏஜ்கள் போட்டி போட்டுக் கொண்டு அவனை மொய்த்தன? 

‘உனக்கு குரல் பிரமாதமா இருக்கு. உன்னை ஜேசுதாஸ்கிட்டே சேர்த்து விடறேன். உன்னை பாலசுப்ரமணியம்கிட்டே அழைச்சுட்டுப் போறேன்!’ என்று எத்தனை பேர்களிடம் சொல்லி அந்தப் பெண்களைச் சொக்க வைத்திருக்கிறான். 

‘உன் குரல் இனிமை சொட்டுது போ! டி.வி. ஸ்டேஷன் டைரக்டர் எனக்குத் தெரியும். முதல்லே உன்னைச் செய்தி வாசிப்பாளராக சேர்த்து விடறேன்’.

நாளையே காரியத்தை முடித்து விடுவது போல் எத்தனை பெண்களிடம் கூறியிருக்கிறான்? 

அத்தனை பேரும் அவன் பாட்டுக் கிளாசில் படிக்கும் பெண்கள். 

அவர்களைப் புகழ்ந்து பேசுகிற அந்த வேகத்திலேயே அவர்கள் பின்பகுதிகளைச் செல்லமாகத் தட்டுவது, இடுப்பில் சதையைத் தொட்டுக் கிள்ளுவது, தோளில் தட்டிக் கையைக் குழைப்பது, கையைக் குலுக்குவது போல் பிடித்து உள்ளங்கையில் ஒரு விரலால் சுரண்டுவது…

இப்படி எத்தனை லீலைகள் பண்ணியிருக்கிறான்?

ஒரு ஆசிரியர் என்கிற முறையில் அவனுக்குக் கிடைத்த லைசென்சுகள் இவை! 

இதில்தான் யாராவது வலையில் விழுவார்களா? என்று காத்திருக்க அடேயப்பா, நினைத்தால் கொத்து மீன்கள் கிடைத்து விடுவது போல் தோன்றும். 

சிலவற்றை தாற்காலிக உபயோகத்துக்குக் கூட வைத்துக் கொண்டிருக்கிறான். 

ஆனால் நல்ல உடல் அமைப்போடு, வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றை என்றைக்காவது தட்டிக் கொண்டு விட வேண்டுமென்று ஆசை. 

அதற்கு இலக்கான நபர் இந்த மதனா என்று தெரிந்ததும் எத்தனை நாசூக்காக அவளுக்கு வலை வைத்து வந்தான்? 

இப்போது! இதோ, அந்த வசதி வீட்டுப் பெண் அவனுக்கு அடிமையாகி மடியில் கிடக்கிறாள். 

“இந்தப் பாரு! இப்போ நீ போனா நிச்சயம் அகப்படுவே! உன்னாலே நானும் அகப்படுவேன். அதெல்லாம் விட்டுறு! என்னை லவ் பண்றீயா இல்லியா?” என்றான் சாந்திரான குரலில்.

கிட்டத்தட்ட இருபது வயது வித்தியாசத்தில், அந்தப் பெண்ணே அவனைக் காதலிக்கிறேன் என்று சொல்ல வைத்ததே அவனது சாமர்த்தியம்தான். 

காதல் தெய்வீகமானது. அதற்கு ஏற்றத்தாழ்வு கிடையாது. வயது வித்தியாசம் கிடையாது. அது புனிதமானது. காலத்தால் மறையாதது. என்றென்றும் நிலைத்திருப்பது என்று அவன் கூறிக் கொண்டே வர, 

அந்தப் பெண் அதுவரை பார்த்த சினிமாக்களும் படித்த புத்தகங்களும் அதே வரிகளையே சொல்லிச் சொல்லி அவள் மனதில் தூபம் போட, 

இளம் குறுத்துப் பெண்ணான அவள் மனம் கிறுக்காகி, ஏன் அவனிடம் படிய மாட்டாள்? 

“அப்போ உங்க திட்டந்தான் என்ன?” என்றாள் சிணுங்கிக் கொண்டு. 

“நாளை ஊட்டிக்குப் போறோம்.” 

“போயி…” 

“உல்லாசமாக கொஞ்ச நாள் இருந்திட்டு வரலாம்.”

அந்தத் திட்டம் அவளுக்குப் பிடித்திருந்தது. 

எங்கேயாவது கொஞ்ச நாள் போனால் நன்றாக இருக்கும் போல் இருந்தது. 


“ஆச்சரியம் ஸார்! யாரும் நாகசாமியை பார்க்கலைன்னு சொல்றாங்க!” என்றான் லிங்க். 

சிங் தீவிரமாக ஒரு கடிதத்தில் ஈடுபட்டிருந்தார். அவன் முடித்ததும் கடிதத்தைத் தாழ்த்திக் கொண்டு நிமிர்ந்து பார்த்தார். 

“ஒருத்தரும் பார்க்கலையா?” 

“ஆமா ஸார்! ரேடியோ ஸ்டேஷன்! டி.வி. ஸ்டேஷன்! அக்கம் பக்கம், பாட்டு கிளாஸ் எல்லாத்தையும் தேடியாச்சு!” 

“எத்தனை நாளாக காணல்லை?” 

“அந்தக் கட்டிடம் விழறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி கூடப் பார்த்திருக்காங்க!” 

சிங் மெள்ள நெற்றியை அழுத்தினார். 

“ஆள் எப்படிப்பட்டவன்னு விசாரிச்சியா?” 

“ஆமாம் ஸார்! எல்லோரும் ஒரே மனசாச் சொல்றாங்க! ஆள் நல்லவன்னு…”

“ப்ளாட்லே தனியாத்தானே இருந்திருக்கான்?” 

“ஆமாம் ஸார்.” 

“யாராவது அவனோட பழகுவாங்களா.” 

“அந்த மார்க்கபந்துதான் சமீப காலத்திலே அடிக்கடி வந்ததாகச் சொன்னாங்க!” 

“மார்க்கபந்து யாரு? கொஞ்சம் மறந்து போச்சு.” 

“கன்னிங்ஹாம் ஹோட்டல்லே கேட்டரிங் சூபர்வைசர்” 

“ஓ! அவரும் தனியாத்தானே இருந்தார்.”

“ஆமாம்! மூணாவது தளத்திலே!” 

“சரி! இப்போ நாகசாமிக்கு என்ன செஞ்சிருக்கே!” 

“ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், ஏர்போர்ட் எல்லா இடத்திற்கும் தகவல் கொடுத்திருக்கேன்.” 

“ரைட்! வேறே ஏதாவது துப்பு கிடைக்கிறதா பாரு.” 

“பார்க்கிறேன் ஸார். அப்புறம் அந்தக் காதலனைக் கண்டுபிடிச்சுட்டேன் ஸார்.” 

சிங்குக்கு பக்கென்று கோபம் வந்தது. 

அடக்கிக் கொண்டார். 

அந்தப் பெண் நித்யாவிடம் தீவிரம் காட்டுகிறான். காட்டட்டும். இளவயது. கொஞ்சம் மயக்கம் இருக்கும். 

“சரி! யார் அது?” 

அவன் திருப்திக்காகவே அந்தக் கேள்வியைக் கேட்டார்.

“வசந்த்னு பேர்! பாங்க்லே க்ளார்க்!” 

“ஓ! கண்டுபிடிச்சுட்டியா? குட்! அதிலே இப்போ என்ன தெரியுது?” 

“ஒண்ணுமில்லை! ஸார்!” 


நாகசாமி எழுந்து காலையில் நான்கு மணிக்கே வெளியே போய் விட்டான். 

ஆறுமணிக்கு கதவைத் தட்டினான். 

கதவைத் திறந்த மதனாவுக்கு ஆச்சரியம். 

இதென்ன ஆள் மாறிவிட்டார். மேலும் கீழும் கண்களைப் பிதுக்கிக் கொண்டு பார்த்தாள். 

“எல்லாம் காரியமாத்தான். முதல்லே கதவை மூடு!”

மதனா கலக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

நாகசாமியின் தலை பாதி போய்விட்டது. 

அந்த மீசையையும் எடுத்திருந்தான். மேலே ஜிப்பா போன இடம் தெரியவில்லை. 

அதன் இடத்தில் “டி” ஷர்ட் ஒன்று படிந்திருந்தது.

“வா! வா! உடனே எல்லாத்தையும் பாக் பண்ணு! கோவை எக்ஸ்பிரஸ்ஸை பிடிக்கிறோம்!” 

“பாக் செய்ய என்ன இருக்கு? அதிகமில்லை.”

ஒரு சின்ன கைப்பெட்டியுடன் புறப்பட்டார்கள்.

ஆட்டோவில் ஏறி ரயில் நிலையம் அடைந்தார்கள்.

ரயிலில் அவசரமாக ஏறி உட்கார்ந்தாள். 

அவன் ஒரே பார்வையாக பிளாட்பாரத்திற்கு எதிர்ப்புறம் பார்த்திருந்தான். 

ஜன்னல்கள் பக்கம் திரும்பவே இல்லை.

ரயில் புறப்பட்ட பிறகுதான் திரும்பினான்.

“மதனா!” என்றான் மெதுவாக. 

“ஹும்! என்றாள் மெல்லிதாக. 

“இனிமே கவலைப்படாதே! நாம இனிமே பிரமாதமா வாழப் போறோம்.” 

அவள் கண் லேசாகச் சிலும்பியது “அப்படியா?”

“ஆமாம் நீ என்னை என்னவோ நினைச்சுட்டே இனிமே பாரு.” 

பிரயாணத்தில் அவன் அடிக்கடி எழுந்து போய்க் கொண்டிருந்தான். 

ஒன்று, இரண்டு, தடவை அவளும் எழுந்து நடைபாதைப் பக்கம் வந்து அவன் எங்கே போகிறான் என்பதைக் கவனித்திருக்கிறாள். 

ஏன் டாய்லெட்டுக்குள் அடிக்கடி போனான்? 

சமயத்தில் கதவைத் திறந்து வெளியைப் பார்த்தவாறே ஏன் நின்றான்?

அத்தியாயம்-6

மலை ரயில் மாலையில் ஊட்டியை அடைந்தது. மதனாவும், நாகசாமியும் இறங்கினார்கள். கவீன் ஹோட்டலில் ரூம் எடுத்திருந்தான். ஊட்டியை மதனா முதல் முறை பார்க்கிறாள். இரவில் ஒரே குளிர்! காலையில் எழுந்ததும் டிபன் வரவழைத்துச் சாப்பிட்டார்கள். “ஏங்க? அந்தக் கட்டிடம் இடிஞ்சு விழுந்துட்டதாமே” அவன் முகத்தில் ஒரு சுளிப்பு ஓடியது. “உனக்கு எப்படித் தெரியும்? “ரயில்லே ஒரு அம்மா பேப்பர் வச்சிட்டிருந்தாங்களே.” “படிச்சியா?” “ஆமாம். உங்களைத் தேடறதா போட்டிருக்கு” மீண்டும் ஒரு சுளிப்பு அவனிடம். “ஏதேனும் உளறாதே!” “ஆமாங்க! உங்களையும் வேறே யாரையுமோ போலீஸ் தேடறாங்க, ஏன் தேடணும்?” 

“தெரியலை.” 

“செத்துப் போனதாக நினைச்சுக்கட்டுமே! எல்லாரும் செத்தாச்சு இல்லையா?” 

“பல பேர் அந்த நேரத்துக்கு வெளியிலே போயிருந்தாங்களாமே.” 

“இந்த பாரு நானே பேப்பரைப் பார்த்தாச்சு” கட்டடம் விழுந்தப்போ நான் உள்ளே இருந்தேனா? அல்லது வெளியிலே போயிருந்தேனான்னு பார்க்கிறாங்க” 

“எதுக்கு அப்படிச் செய்யறாங்க?” 

“எதுக்கும் கணக்கு வேணுமில்லே. இன்னும் ஏதாவது பிரேதம் எங்கேயாவது இருக்குமான்னு.”, 

“ஆமா நீங்க ஏன் திடீர்னு வேஷத்தை மாத்திட்டீங்க.” நாகசாமி ஒரு கடுமைப் பார்வையை வீசினான். மதனாவின் பார்வை அஞ்சிக் கொண்டு பின்வாங்கியது.

“ஏது?” என்று ராகமாக இழுத்தான். “நீ என்ன போலீஸ்காரனா? என்னை விசாரிக்கிறே?” 

உள்ளே அறை முழுதும் சூடு ஏறிவிட்டது. அவள் பார்வை நடுங்கியது. சிறிது நேரம் நிசப்தம்! 

“இதெல்லாம் ஏன் உனக்கு கவலை! மதனா! நான் தான் இருக்கேனே” சட்டென்று அவளை இழுத்தான். இடுப்புக்கு மேல் அவளை தன் மீது சாய்த்துக்கொண்டான். 

மீதிப் பாதி உடலை அப்படியே தூக்கி சோபாவில் நீட்டி வைத்தான். பைத்தியம்! இதிலேதான் என்கிட்டே ஏமாந்தது என்று நினைத்தான். 

அவள் உடம்பை வீணை பிடிப்பதுபோல் பிடித்திருந்தான். 

உண்மையில் அது அவள் குற்றமல்ல. அவளது தேக அமைப்பில் பெற்றோர் வழி வந்த ஜீன்கள் செய்த துரோகம் அது. 

சராசரி பெண்களைவிட அவளுக்கு அந்த ‘பி.எச்.டி’ உணர்வுகளை அள்ளிக் கொடுத்திருந்தன. 

லேசாக அவள் உடம்பு தொடப்பட்டாலும் போதும், இந்த உணர்வுகள் பெட்ரோலைப் போல் குபீர் பற்றலாகப் பற்றிக் கொண்டன. 

இந்த சப்ஜெக்டில் ஒரு ‘பி.எச்.டி’ பண்ணியது போல எல்லாம் அறிந்து வைத்திருந்தான் நாகசாமி. 

இந்த ஒரு பலவீனத்தில் மட்டும் அவள் அவனிடம் பெட்டிப் பாம்பு! இல்லாவிட்டால் அந்த இருபது வயது இளம்பெண் பைத்தியமாக நாற்பது வயது ஆசாமியோடு அவ்வளவு தூரம் வீட்டு உறவுகளை இழந்து விட்டு ஓடி வந்திருப்பாளா?

அவளை அந்த இன்ப லயங்களில் மெய்மறக்க வைத்துவிட்டு, அவன் எழுந்து வெளியே வந்தான். 

அறைக்கு வெளியே வந்ததும்; திடுக் திடுக் என்று ஒவ்வொரு நொடிக்கும் பயம். உண்மையில் பேப்பரை அவன் பார்த்திருந்தான்.

அவன் அந்த கட்டிட இடிசலோடு இறந்துவிட்டான் என்று போலீஸ் நம்பவில்லை. 

சிறிது நேரம் அறையைப் பார்த்து நின்றான் பிறகு அவசரமாக புறப்பட்டான். 


நாகசாமியின் காலடிகள் மறையும் வரை மதனா காத்திருந்தாள். பிறகு மெல்ல எழுந்து கதவைத் தாழ்ப்பாள் போட்டாள். 

இங்கும் அங்கும் கண்களைச் சுழற்றினாள். 

மேஜை மீது பார்வை லயித்தது. 

அருகே சென்று அதன் டிராயரைத் திறந்த போது ஹோட்டலின் பெயர் தரித்த லெட்டர் பேடும் இடையூர்ல. பால்பாயிண்டும், வெற்றுக் கவர்களும் இருந்தன. 

கடவுளாகவே தனக்கு அவைகளை வைத்திருக்கிறார் என்று நினைத்தாள். 

நாற்காலி மீது அழுத்தமாக உட்கார்ந்தாள். 

‘டியர் நளினா! 

இதைப்போன்று ஒரு கடிதம் வரும் என்று நீ கனவிலும் எதிர்பார்க்க மாட்டாய்! 

உன் பேச்சை நான் கேட்கவில்லை. 

நீ ஏதோ பொறாமையில் சொல்லுகிறாய் என்று நினைத்தேன். 

அவன் என்னை டி.வி. நிலையங்களில் கொண்டு போய் பலரிடம் அறிமுகப்படுத்தியபோது அகமகிழ்ந்து போய்விட்டேன். 

ஒரு விதத்தில் சின்ன ஸ்டாராகவாவது மாற முடியும் என்று எண்ணினேன். 

அதன் வேகத்தில்தான் அவன் பின்னால் ஒரு அடிமைப் பிராணிபோல சுற்ற ஆரம்பித்து விட்டேன். 

இதில் நான் எல்லாவற்றையும் இழந்தாகிவிட்டது.

இப்போது உயிரையும் இழப்பேனோ என்ற ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. 

அதனால்தான் இந்தக் கடிதம் உனக்கு எழுதுகிறேன். 

என்னை ஊட்டிக்கு அழைத்து வந்திருக்கிறான். 

இவன் வசிக்கும் ப்ளாட் இடிந்து விழுந்தபோது நானும் அவனும் அங்கே இல்லை! அதில் எனக்கு ஒரு ஆச்சரியம்! 

ஒருவேளை இவனுக்கு அந்தக் கட்டிடம் இடிந்து விழுகிறது தெரியுமோ என்று! 

ஏனெனில் அவன் முன்னேற்பாடு போல் ஒரு கச்சா இடத்தில் என்னோடு போய்த் தங்கினான். 

இப்போது சுட்டிடம் இடிந்து விழுந்து விட்டதால், இவன் ஒரே உற்சாகத்தில் இருக்கிறான். 

அதுதான் என்னை இவன் மீது சந்தேகம் கொள்ள வைத்தது. 

என்னைப் பிடித்திருந்த சனி போச்சு! என்று அடிக்கடி சொல்கிறான். 

அந்த விபத்தில் அவனும் இறந்ததாகக் கருதப்படுவான் என்ற ஒரு சந்தோஷமான எதிர்பார்ப்பு அவனிடம் இருக்கிறது 

அவனும் இறந்தான் என்று அறியப்பட வேண்டும் என்று எண்ணம் அவனுக்கு அதிகமாக இருக்கிறது. 

என்னை இப்போது ஊட்டியில் இந்த ஓட்டலில் தங்க வைத்திருக்கிறான். அடுத்து அவன் திட்டம் தெரியாது. 

அவன் சொற்பேச்சை நம்பி என் நெக்லஸை நான் போட்டுக் கொண்டு இங்கே வந்துவிட்டேன். 

எனக்கு அவன்மீது நம்பிக்கை குறைந்து வருகிறது. அவனிடமிருந்து கழன்று சீக்கிரம் வந்துவிடுவேன்’ 

உன் அன்புள்ள, 
மதனா. 

கடிதத்தைக் கவருள் போட்டு மூடினாள். ஸ்டாம்பு வேண்டுமே.. 

எழுந்தாள். ஆ! அது வேண்டாம் போஸ்டாபீஸில் “DUE” போட்டால் போடட்டும். 

“DUE” முத்திரை குத்தினால் நிச்சயமாக நளினா கையில் போய்ச்சேரும். 

கதவைத்திறந்து மெல்ல வெளியே பார்த்தாள். எச்சரிக்கையோடு வெளியே ஓட்டல் முகப்பில் உள்ள தபால் பெட்டிக்கு வந்தாள். கடிதத்தைப் போட்டுவிட்டு அவசரமாகத் திரும்பினாள். 

ஒரு கணம் யோசித்தாள். 

மனதில் ஒரே படபடப்பு! 

இப்போதே இந்த இடத்தைவிட்டு தப்பித்துப் போனால் என்ன? 

முடியுமா? 

எங்கே போக? எப்படிப் போக? 

இரண்டு வழிகள்! 

ஒன்று ரயில்! 

இன்னொன்று பஸ் ஸ்டாண்ட்! 

இரண்டு இடத்திலும் அவளைத்தேடி வந்து விடுவானோ? 

திரும்பிப் பார்த்தாள். 

ஹோட்டலையும், அறையையும் பார்க்கும்போதே பகீர் என்றது. 

மனசு கேட்கவே இல்லை. 

‘மதனா! தப்பி விடு! தப்பி விடு!’ என்று குரல் கொடுத்துக்கொண்டே இருந்தது. 

கால்கள் தாமாக வெளி வாசலை நோக்கிப்போக ஆரம்பித்தன. 

‘தடும்’ ‘இடும்’ இதயத்துடன் வெளி வாசல் வந்துவிட்டாள். 

குளிர் விறைத்தது. 

வெளியே ஒரு குழிவான இடம் வழியே பாதை ஓடியது. 

கட்டிடங்கள் தள்ளித் தள்ளி இருந்தன! 

நகரங்களில் உள்ளது போல நெருங்கியே இல்லை. 

நடந்தாள். 

நடந்துகொண்டே இருந்தாள். 


நல்லா பாருங்க! என்றார் இன்ஸ்பெக்டர் சிங்!

பல் டாக்டர் ராகவேந்திரா ஃபோர்ஸெப்புடன் விளக்கில் அந்த பல் வரிசையை நீட்டினார். 

திரும்பத் திரும்பப் பார்த்தார். “நோ மிஸ்டர் சிங்” இது மதனா இல்லை. 

“வேறே யாரு?” 

“தெரியாது!” 

“தீர்மானமாவா!” 

“தீர்மானம்!” 

அந்தப் பெண்ணுக்கு முன் இடது வரிசைப்பல். இல்லே இது முன் வயது வரிசைப்பல்தான். 

சிங் திகைத்தார். 

“டாக்டர் சொந்த அக்காக்காரி அடையாளம் காட்டறா?” 

“காட்டினா என்ன? பல்லை எடுத்தவன் நான்தான். என்கிட்டே பல் வரிசைப்படமே இருக்கு.” 

சிங் முகத்தில் நிழல்! 

“ஜனா” என்றார். 

ஜனார்த்தனம் ஓடி வந்தார். 

“இதை அடைச்சுக்குங்க.” 

சிங்கும் டாக்டர் ராகவேந்திரனும் மார்ச்சுவரியை விட்டு வெளியே வந்தார்கள். 

டாக்டர் விடைபெற்று தமது காரில் ஏறினார். சிங் யோசனையோடு வந்து ஜீப்பில் தாவினார். 

“அப்போ அந்தப் பெண் இல்லை என்றால் அவள் வேறு யார்?” 

அது போகட்டும். இப்போது நாகசாமியைச் சுற்றி எழுப்பிய அத்தனை ஊகங்களும் தொப்பென்று விழுந்து விட்டனவே! 

மதனா எங்கே போனாள்? 

நாகசாமி எங்கே? 


“ம்! சாப்பிடு” என்றான் நாகசாமி. 

“ஆகட்டுங்க!” என்றாள் அவள். 

அவள் குரலில் சுரத்து இல்லை. 

வெளியில் போன அவளை, குழிப்பாதை செல்லும் வழியில், 

“ஏய் என்று அதட்டும் குரல் அசரீரி போல் கேட்டது.

இங்கும் அங்கும் திரும்பிப் பார்த்து கடைசியில் மேலே பார்த்தாள். 

மேலே போகும் ரஸ்தாவில் நாகசாமி நின்று கொண்டிருந்தான். 

முதலில் கடு கடு என்று காட்டிய அவன் முகம், அடுத்த விநாடியில் புன்னகையாக மாறியது. 

அப்பா எவ்வளவு நடிப்பு அவனிடம்! 

“எங்கே புறப்பட்டே?” 

“சும்மா இப்படி வாக்கிங், உள்ளே இருக்க முடியலை.” 

“வெளியே எங்கும் போகாதே திரும்பிடு!” 

மரியாதையாகத் திரும்பி விட்டாள். 

அறைக்கு வந்ததிலிருந்து ஒரே தவிப்பு! 

மதனாவின் மனது ஆயிரம் மைலில் சென்றது. இந்தக் காப்பியில் ஏதாவது கலந்திருப்பாரோ? அவர் ஏன் காப்பி வாங்கித்தர வேண்டும். 

ரொம்ப அக்கறையாக அவளிடம் கொடுக்கிறாரே மயக்க மருந்து அல்லது விஷம் இதில் போட்டிருப்பாரோ? 

“ம், சாப்பிடு சொல்றேன்” என்றான் நாகசாமி கோபமாக. 

அவள் மேஜை நோக்கி வந்தாள். படக் படக் என்று மனம் எகிறியது. நாற்காலியில் உட்கார, டெலிபோன் மணி அடிக்க அவன் எழுந்தான். 

போனை நோக்கிப் போக அந்தக் கணத்தில் அவள் நினைத்து அந்த இரு டம்ளர்களையும் மாற்றி வைத்தாள். 

நிமிர்ந்தபோது நெற்றி வியர்த்தது. 

நல்லவேளை அவன் கவனிக்கவில்லை. 

போன் பக்கத்தில் போய் முதுகைக்காட்டி நின்றான். தயக்கமா “ஹல்லோ” என்றான். 

மதனா அவனை விறைப்பாகக் கவனித்தாள். விநாடிகள் பயங்கர மெதுவில் ஓடின. 

“ஆ ரூம் நம்பர் 33 இது மேடம்” 43 இல்லை. ஸாரி!

போன் வைத்தபோது அவன் முகத்தில் வந்த நிம்மதிக்கு எல்லை இல்லை. 

மகிழ்ச்சியை ஒரு காலை வெய்யில் போல் அடித்துக் கொண்டு மேஜை முன்னால் வந்து உட்கார்ந்தான். “ஆங்! குடி! நானும் குடிக்கிறேன். நீயும் குடி.” 

அவள் குடிக்க அவனும் குடித்தான். வா வெளியிலே போகலாம். 

புறப்பட்டார்கள். 

அவள் அடிக்கடி அவனைப் பார்த்தாள். ஏதாவது நடக்குமா? 

வெளியே வந்தார்கள். மூடு பனி ஒரு திரைபோலக் கிடந்தது. ஓட்டலின் முகப்பைத் தாண்டி உலகம் மறைந்துவிட்டது. 

அவளது தற்போதைய கவலையையும் தாண்டி ஒரு மகிழ்ச்சி வந்தது. ஊட்டியை இப்போதுதான் முதலில் பார்க்கிறாள். 

பனிக்குள் நுழைந்தார்கள். அத்தனையும் சில்! தலைப்பை இழுத்துப் போர்த்தினாள். தனி ரோட்டில் நடந்தார்கள். 

நேரம், ஏற ஏற பனி தூர்ந்து கொண்டிருந்தது. 

அங்கங்கு காட்சிகள் டெக்னிக்கலராக வந்தன. மூச்சை நிறுத்தின. கண்களை விரித்து பார்த்தாள். 

அரைமணி போவதற்குள் எலும்புக் குறுத்துக்குள் குளிர் ஒழுகி விட்டது. 

“இந்தாங்க திரும்பலாமா?” என்றாள். 

“இன்னும் கொஞ்ச தூரம்தான் அங்கே வந்து பாரு அசந்து போவே.” 

நடந்தார்கள். ரோடு நின்று ஒற்றையடிப் பாதைகள் கிளை பிரிந்தன. 

ஆ இதென்ன? அத்தனை மரங்களும் ஓங்கி எழுந்து ஆகாயத்தை மறைத்துக்கூடு கட்டியிருந்தன. திடீரென்று அந்தி நேரத்துள் வந்தது போல் இருந்தது. 

செழிப்பின் அபரிமிதத்தைப் பார்ப்பதில் மனம் திக்காடியது. 

சீக்கிரத்தில் இடது பக்கம் திரும்பி இருபதடியில் வந்து நிற்க. 

பூலோகமே ஆயிரம் அடிகள் கீழே போய்விட்டது போலிருந்தது. 

ஆமாம். ஒரு பரந்த பள்ளத்தாக்கு! கீழே விரிந்து கிடந்தது. 

அவர்கள் மேலே விளிம்பில் வந்து நிற்க செங்குத்தான சரிவு ஒன்று கீழே விருட்டென்று அதள பாதாளத்தை நோக்கி இறங்கி இருந்தது. 

விளிம்பு அருகில் வந்து நின்றாள். 

ஆச்சரியத்தில் விரிந்த அவளது வாய் அடுத்த கணம் அச்சத்தில் விரிந்தது. 

அவள் ‘படக்’ என்று திரும்பி ஓட முயன்றாள். 

ஆனால் அவளது முதுகின் சோளியை அவன் இறுக்கமாகப் பற்றி இருந்தான். 

அவள் முதுகைப் பிடித்துக் திருப்பினான். 

மறுகணம் கீழே தள்ளினான். 

அவளது ‘ஆ’ கீழே அவள் நூறு அடி பறந்து போகும் வரை கேட்டது. 

கீழே போய்க் கொண்டிருந்தாள். 

புள்ளியாகச் சிறுத்து போய்க்கொண்டே இருந்தாள்.

– காதல் அல்ல காதலி!, முதற் பதிப்பு: 2006, பூம்புகார் பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *