உடையும் புல்லாங்குழல்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 9,318 
 

இளையராஜாவைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அவளுக்கு அவன் நினைவு வந்துகொண்டே இருந்தது. அவளுக்குச் சங்கீதம் பற்றி எல்லாம் சொல்லிக்கொள்கிற மாதிரி எதுவும் தெரியாது. எப்போதாவது தனியாக இருக்கும்போது நல்ல பாட்டு கேட்கப்பிடிக்கும். அதுவும் நாமே இந்தப் பாட்டு கேட்க்கலாம் என்று முடிவு செய்து பாட்டுக்கேட்பதை விட அந்தக் காலத்தில் சிலோன் ரேடியோவில் இரவு பத்து மணிக்குப் பின் பாட்டுப் போடுவார்கள் பாருங்கள். என்ன பாட்டு போடப் போகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. அப்படிக் கேட்பதில் தான் எவ்வளவு சந்தோஷம். அந்த இருள் சுழ்ந்த தனிமையில் பி.சுசிலாவின் குரலில் தீடிரென மழைப் பொழியும், வானம் அழும், மலர்கள் ஆடும்..அப்படியே தாலாட்டும். அங்குமிங்கும் பார்த்துவிட்டு கனவுலக ராஜகுமாரனனின் கைகளில் முத்தமிடும்.. அந்த மாதிரியான அனுபவம் இப்போது ஆடியோ, வீடியோ, சி.டி, டி.வி.டி எதிலும் கிடைப்பதில்லை. அது என்னவோ தெரியவில்லை இளையராஜா எங்கே ?அந்த தெருப்பாடகன் எங்கே?. சம்பந்தமா சம்பந்தமில்லாமல் ஒருவரைப் பார்த்தவுடன் இன்னொருவர் நினைவு ஏன் வந்து தொலைக்கிறது என்பது தெரியாமல் அவள் குழம்பிப்போய் தவித்தாள்.

இளையராஜாவை அவள் பார்த்ததில் அவளுக்கு அப்படி ஒன்றும் தவப்பயன் கிடைத்துவிட்ட சந்தோசமெல்லாம் இல்லை. சர்வதேச திரைப்படம் பார்க்க சென்னையிலிருந்து மும்பை வந்திருந்த நண்பர்கள் பட்டாளத்துடன் அவளும் போனாள்.

‘சென்னையிலிருந்து கொண்டு இங்கே மும்பையில் வந்து இளையராஜாவைப் பார்க்கனும் என்று துடிக்கிறீர்களே?’

அவள் கேள்வியைக் கேட்டு சிரித்தார் அவர்களுடன் வந்திருந்த உதவி இயக்குநர் லெனின். ‘அய்யோ சென்னையில் இளையராஜாவை எல்லாம் எங்களால் பார்க்க முடியுமா.. இன்றைக்கு மும்பைக்கு வந்ததில் எங்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறது’ என்று அவர்கள் அனைவரும் சந்தோசத்தில் மிதந்தார்கள்.

யுக்தா கபூரின் மியூசிக் ஸ்டுடீயோவை எப்படியோ கண்டுபிடித்து போய் உள்ளேயும் போயாகிவிட்டது. கூட வந்தவர்களில் பெரும்பாலோர் சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள். பக்கத்தில் நின்று புகைப்படமெல்லாம் எடுத்துக் கொண்டார்கள். அவளையும் நிற்கச்சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். அந்த இடத்தில் நிற்கமாட்டேன் என்று சொன்னால் சரியாக இருக்காது என்று அவளும் கூட்டத்துடன் கூட்டமாக நின்று கொண்டாள்.

இளையராஜா ரொம்ப சிம்பிளாக இருந்தார். வெள்ளை வேட்டியில் தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எட்டிப்பார்க்கும் வெள்ளை முடிகளுக்கு நடுவில் சிரித்த முகத்துடன். அந்த அறையில் பெரிய பெரிய ராட்சச கீ போர்டுகள் மாதிரி என்னவெல்லாமோ இருந்தது. இத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நடுவில், நுணுக்கமாக பலநூறு மாற்றங்களைச் செய்யும் வசதிகளுடன் பாட்டு இசையமைக்கப்படுவதை அப்போதுதான் அவள் பார்க்கிறாள். “ஒகோ இவ்வளவு இருக்கிறதா.. இந்த இசைத்திரைக்குப் பின்னால்” என்று அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தக் கண்ணாடி அறையில் மனிதர்கள் எல்லாம் ரொம்பவும் சின்ன பொம்மைகள் மாதிரி நிற்பதாகவும் அந்த ஆயிரத்தெட்டு ஒயர்கள், கணினி வசதிகள், இன்னும் ராட்சத உருவத்தில் இருந்த பெரிய பெரிய பெயர்த்தெரியாத இசைக்கருவிகள் , இவைகளை இயக்கும் இளம் ரோபட் மனிதர்கள் .. அவர்கள் ஒரு சின்ன பொத்தானை அமுக்கி இளையராஜா சரி என்று தலையாட்டும்வரை என்னவெல்லாமோ செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த அறையிலிருக்கும் எதுவும் அவளுக்குத் தெரிந்தப் பொருட்களாகவே இல்லை. அதற்கெல்லாம் என்ன பெயர் என்பதையும் அவள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. தனக்குத் தேவையில்லாத, தொடர்பில்லாத எதைப் பற்றியும் அவள் தனக்குத் தெரியவில்லையே என்று அலட்டிக்கொள்வதில்லை. இளையராஜாவின் உபயத்தில் எல்லோரும் ஸ்டுடீயோ கேண்டீனில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு வெளியில் வரவும் அவர்களுக்கு எல்லாம் ஒரு பெரிய டாடா சொல்லிவிட்டு ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தாள்.

தூங்கப்போகும் போதுதான் இளைய ராஜாவைச் சந்தித்ததைச் சாதாரணமாக சொன்னாள். எல்லோரும் கொடுத்து வைத்தவள் என்று சொன்னபோது கோபம் வந்தது. ஏன் மனிதர்கள் பிரபலங்களின் பைத்தியங்களாக இருக்கிறார்கள் என்ற நினைப்பில் அவர்களிடம் எதுவும் சொல்லாமல் தூங்கப்போனாள்.

அந்த புல்லாங்குழலின் ஓசை.. அப்படியே சர்ச்கேட் ஸ்டேஷன் நிலவறைப் பாதையில் தவழ்ந்து கூட்டத்துடன் கூட்டமாய் அதிகாலையில் ஏற்றிவைத்த ஊதுபத்தியின் மணத்தைப்போல அப்படியே சுற்றி சுற்றி வருகிறது. டிரெயினில் இடித்துப் பிடித்து ஏறி உடைகள் கசங்கி சக்கையாக வெளியில் துப்பி எறியப்பட்ட கரும்பு சக்கையைப் போல இறங்கி வருபவர்களுக்கு அந்தச் சங்கீதம்.. அந்தப் புல்லாங்குழலின் இசை கொஞ்சம் கொஞ்சமாக மனித ராகத்தை மீட்டுக் கொடுக்கும் தருணம். வேகமாக அவரவர் செல்ல வேண்டிய திசைகளில் கால்கள் நடக்கும். அப்போதும் அந்தக் குழலின் ஓசை அப்படியே வளைந்து நெளிந்து காற்றுடன் கலந்து மனிதர்களைத் தழுவி அணைக்கும். அவளுக்கு மட்டுமில்லை. அதைக் கடந்து செல்லும் எல்லா மும்பை வாசிகளுக்கும் இப்படி ஒரு வித பரவச அனுபவத்தை அவனும் அவன் புல்லாங்குழலும் தந்து கொண்டுதானிருந்தது.

அப்போதெல்லாம் அவள் இந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டும்தான் வாங்குவாள். இப்போது போல ஒரு நாளைக்கு நான்கைந்து பத்திரிகைகள் வாங்குவதும் அதில் தலைப்பு செய்திகளை மட்டும் வாசித்துவிட்டு மடித்து வைக்கும் பழக்கமும் அப்போது அவளுக்கில்லை. வாங்கும் ஒரு பத்திரிகையையும் வீட்டில் எல்லோரும் வாசிப்பார்கள். அதுவும் சண்டே எக்ஸ்பிரஸ் ஒரு வரி விடாமல் வாசிப்பாள். ஒரு முறை சர்ச்கேட் ரயில்வே பாதையில் புல்லாங்குழல் வாசிக்கும் அவனைப் புகைப்படத்துடன் ஒரு கவிதையும் போட்டு எழுதியிருந்தார்கள். அதைக் கூட அவள் கட் பண்ணி வைத்திருந்தாள்.

அதற்குப் பின் அவள் வேலை செய்த பன்னாட்டு நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் ஆரம்பித்து புதுவருடம் பிறக்கும்வரை ரிசப்ஷன் ஹாலில் கண்தெரியாதவர்கள் ஸ்கூலிலிருந்து யாராவது வந்து பியானோ வாசிப்பார்கள். குளிர்ந்த ஏ.சி.ஹாலில் கார்ப்பெட்டுகளின் மீது மெத்தென்ற சோபாவில் உட்கார்ந்து தங்களுக்கான அழைப்பு வரும்வரை காத்திருக்கும் கஸ்டமர்களுக்கு காத்திருப்பின் எரிச்சலை அந்த நாட்களில் அங்கு இசைக்கப்படும் மெல்லிய பியானோவின் சங்கீதம் தணிக்கும். அதிலும் கண்தெரியாதவர் வாசிக்கிறார் என்பதால் காத்திருப்பை மறந்து சிலர் அந்த இசையில் லயித்துப்போய் புன்னகையுடன் இருப்பதை அவள் பலமுறைப் பார்த்திருக்கிறாள். வருடக்கடைசியில் ஏகப்பட்ட பாக்கிகள், கிளியர் ஆகாதப் பில்கள் இப்படி நிறைய பிரச்சனைகளுடன் வரும் கஸ்டமர்களை இப்படியும் குளிர்விப்பது ஒருவகையான வியாபாரத்தந்திரம்தான். கேட்டால் சொல்வார்கள் நம் கம்பேனி செய்யும் மக்கள் சேவை இதெல்லாம் என்று. அப்போதெல்லாம் சர்ச்கேட் புல்லாங்குழல் இசை நினைவில் வரும்.

சர்ச்கேட்டில் புல்லாங்குழல் இசைப்பவன் எப்போதும் யாரிடமும் பிச்சைக் கேட்டதில்லை. அவன் முன்னால் ஒரு சிறிய அட்டைப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும். விருப்பப்பட்டவர்கள் அதில் போடுவார்கள். யார் காசு போடுகிறார்கள், யார் போடவில்லை, யார் எவ்வளவு போடுகிறார்கள் ..எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவன் தன் புல்லாங்குழலின் இசையில் தானே மயங்கி தானே அதுவாகி இசைத்துக்கொண்டிருப்பான். கண்கள் மூடியிருக்கும். ரொம்ப நாளைக்குப் பிந்தான் அதுவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் சண்டே பேப்பரில் அவன் புகைப்படத்துடன் எழுதியிருந்தப் பிறகுதான் அவளுக்குத் தெரியும். அவன் பார்வை இல்லாதவன் என்பது கூட. அவன் முகத்தில் அம்மைத் தழும்புகள் அழுத்தமாக பதிந்திருக்கும். அவன் பார்வைகூட இந்த அம்மை நோயில் போயிருக்கலாம் என்று அவள் நினைத்தாள்.

இப்போது இளையராஜாவைப் பார்த்துவிட்டு வந்தப்பின் சர்ச்கேட் புல்லாங்குழலிசை அடிக்கடி நினைவில் வந்தது. அவளுக்குத் திருமணமாகி செம்பூரில் செட்டிலாகியபிறகு வி.டி. ஸ்டேஷன் , செம்பூர் என்று அவள் தினசரி பயணம் திசைமாறிப் போய்விட்டது.

அதன் பின் பலமுறை அம்மா, அண்ணன் எல்லோரையும் பார்க்க அவள் வெஸ்டர்ன் லைனில் போய்வந்திருக்கிறாள். என்னவோ அப்போதெல்லாம் அவன் நினைவு வரவேஇல்லை.

அவன் இப்போது எப்படி இருப்பான்? என்னவாக இருப்பான்? சர்ச்கேட் பாதையில் அவன் புல்லாங்குழல் ஏன் இப்போதெல்லாம் ஒலிப்பதில்லை? அவனுக்குத் திருமணமாகி இருக்குமா? இப்போது எப்படி இருக்கிறானோ ? அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை என்றால் தலை வெடித்துவிடும் போலிருந்தது. அவள் மீதே அவளுக்கு கோபமும் எரிச்சலும். இசைமேதை இளையராஜா எங்கே.. இந்த தெருப்பாடகன், கண்தெரியாதவன், இவன் எங்கே? அவரைப் பார்த்தவுடன் அந்த நினைவுகள் இவனில் வந்து ஏன் முட்டி மோத வேண்டும்?

அன்று சனிக்கிழமை. அம்மாவைப் பார்க்க ஆபிஸிலிருந்து அப்படியே கிளம்பினாள். அந்த சர்ச்கேட் நிலவறைப் பாதை வழியாக நடந்து கொண்டிருந்த போது அங்கேயும் இப்போதெல்லாம் நிறைய கடைகள் வந்துவிட்டது. கூட்டமும் முன்பை விட அதிகமாகவே இருந்தது. அந்தப் புல்லாங்குழலிசை தவழ்ந்த இடம் இதுதானா? அந்தக் கூட்டமும் கடைகளின் நெரிசலும் முதல் முறையாக அவளுக்கு ரொம்பவே எரிச்சலை ஏற்படுத்தியது. ‘உச்ச்’ கொட்டிக்கொண்டாள். இந்த தடவை அம்மா வீட்டுக்குப் போகும்போது தன்னுடைய பழைய புத்தகங்களில் எங்காவது அந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பர் கட் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எங்கே இருக்கப்போகிறது? அண்ணி எல்லாவற்றையும் எடுத்து பழைய பேப்பர் கடைக்காரனிடன் இன்னுமா போடாமல் வைத்திருக்கப் போகிறார்கள்? அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. 550 sq.ft வீட்டில் நாங்கள் அக்கா தங்கைகள் எல்லோரும் எங்கள் பொருட்களை அப்படி அப்படியே விட்டுவிட்டு சென்றால் அண்ணிக்கும் பிள்ளைகளுக்கும் எங்கே இடமிருக்கும்? அதுவும் இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பர் கட் புத்தகத்தில் அப்படியே இருக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்ப்பதும் கொஞ்சம் ஓவராகத்தானே இருக்கிறது.

அவனைப் பற்றிய பேப்பர் கட் கிடைத்துவிட்டால் அதிலிருந்து என்ன புல்லாங்குழலின் இசை பொங்கி வழிந்திடவா போகிறது? ·பார்ஸ்ட் ட் ரெயின். வசதியாக ரைட் சைட் விண்டோ பார்த்து உட்கார்ந்தாள். அம்மாவிடம் எவ்வளவோ சொல்லியும் கேட்க்காமல் ஊருக்குப்போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். ஒன்றுமில்லை.. போனமாசம் செய்த ரத்த சோதனையில் அம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக டாக்டர் சொல்லிவிட்டார். அவ்வளவுதான் அன்றைக்குப் பிடித்தது சனியன் அம்மாவுக்கு. டாக்டர் சொன்னதிலிருந்து எவ்வளவோ சொல்லியும் இனி இந்த ஊரில் இருக்க மாட்டேன் என்கிறாள். இது ஒரு ஊரா? நிம்மதியா சாகனும்னு நினைக்கறிவன் இந்த ஊரில இருப்பானா? என்று இதுவரை வாழ்ந்த ஊரை காலில் போடும் மிதியடி மாதிரி கழட்டி ஏறிய விரும்புகிறாள். சர்க்கரை வியாதி எல்லாம் ஒரு சின்ன கொசுக்கடி மாதிரிம்மா, இப்போதெல்லாம் சின்னக்குழந்தைகள், வயதுப்பிள்ளைகளுக்கும் சர்க்கரை வியாதி வருகிறது. மும்பையில் யாருக்கு சர்க்கரை வியாதி வரவில்லை சொல்லு? என்று அவளிடம் வாதிட்டு பயனில்லை. மற்றவர்கள் சொல்கிற பாயிண்டை எல்லாம் அப்படியே அவளுக்குச் சாதகமாகத் திருப்பிவிடுவாள் அவள் அம்மா. அப்படித்தான் அவள் சொன்னததுக்கும் பதில் சொன்னாள்.

‘ வயசு ஆன இந்த வியாதி எல்லாத்துக்கும் வரும்னு சொல்றியே, இந்த ஊருலேதானே இப்படி எல்லாம் வியாதியும் வந்து டாக்டர் மருந்து ஊசினு காலந்தள்ள வேண்டி இருக்கு. நம்ம ஊர்லே யாருக்குடீ சர்க்கரை வியாதியும் பிளட் பிரஷ்ஷரும்? மாசத்துக்கு ஒரு தடவை பிளட் செக்கப் பண்ணுமாம். சொல்ல வந்துட்டா. ஊர்லே யாருடீ இதெல்லாம் செய்துக்கிட்டு இருக்காங்க. ‘

அவள் சொல்வதும் சரியாக இருக்குமோ?

அங்கே எல்லா கிழங்களும் கண்ணில் கண்ணாடி கூட போடாமல் இன்றும் தினத்தந்தி வாசிக்கிறதை அவளும் பார்த்தது நினைவுக்கு வந்தது. அம்மா சொல்லறது சரியா? இல்ல நாமெல்லாம் இங்கே இருக்கப்போ அம்மா தனியா ஊர்லே போய் கஷ்டப்படனுமானு அண்ணன் சொல்றது சரியா? உங்க அம்மா ஊருக்குப் போய் தனியா இருந்தா என்னைப் பற்றி ஊரில் என்ன நினைப்பார்கள்? என்று அவள் அண்ணி சொல்வது சரியா?

அவரவர் பார்வையில் அவரவர் சொல்வது சரியாகத்தான் இருப்பதாக அவளுக்குப் பட்டது. பாந்திரா ஸ்டேஷனில் கூட்டம் ஏறியது அதிகமாக. அன்று சனிக்கிழமை. ஆதலால் எல்லோருக்கும் அரைநாள் வேலை. நல்ல வெயிலில் முகத்தில் போட்டிருக்கும் சன் ஸ்க்ரீன் லோஷன் மேல் வியர்வை அரும்பிய முகத்துடன் ஒரு பெருங்கூட்டம் உள்ளே நுழைந்தது. அந்த வெயிலும் கூட்டமும் பெண்களின் பேச்சும் வியாபாரம் செய்யும் பையன்கள், பொண்ணுகள் என்று அடைந்து கிடந்த டப்பாவில் பண்டி அவுர் பப்லி திரைப்படத்தில் வரும் பாடலைப் பாடிக்கொண்டு ஒரு வயதானவனும் ஒரு சின்னப்பொண்ணும் அந்தக் கூட்டத்தில் மெதுவாக வந்து கொண்டிருந்தார்கள். அந்த வயதானவன் சிறுமியின் கையைப் பிடித்துக்கொண்டு பெண்கள் மீது இடித்துவிடாமல் நகர்ந்து கொண்டிருந்தான்.

அவள் தன் கைப்பையைத் திறந்து பார்த்தாள். ஸ்டேஷனில் இறங்கியவுடன் ஷேர் ஆட்டோவுக்கு சரியாக மூன்றரை ரூபாய் கொடுக்கவேண்டும். மீதி எல்லாம் ஐந்து ரூபாய் நாணயங்களும் பத்து ரூபாய் நோட்டுகளுமாய் இருந்தன. சரி பரவாயில்லை என்று அவள் கைப்பை ஜிப்பைப் போட்டு பத்திரமாக மடியில் வைத்துக்கொண்டாள். அவள் கைப்பையைத் திறந்தவுடன் அவளை நோக்கி கைகளை நீட்டிய சிறுமி தன் முகத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு சட்டென வேறொரு பாட்டுவரிகளுக்குத் தாவினாள்.

போரிவலி ஸ்டேஷன் வந்தவுடன் கூட்டத்துடன் கூட்டமாய் அந்தச்சிறுமியும் அவனும் இறங்குவதற்கு நின்றார்கள். அவன் கிழிந்த துணிப்பையில் நீட்டிக்கொண்டிருந்த புல்லாங்குழல் கூட்டத்தில் யாரையோ இடித்துவிட்டது .அதற்காக அவனையும் அந்தச் சிறுமியையும் இறங்குவதற்கு வாசலருகே நின்ற பெண்களின் கூட்டம் திட்டித் தீர்த்தது அவரவர் மொழியில். ‘சரியான ந்யுசன்ஸ்’ என்று சொல்லிக்கொண்டே அவளும் கூட்டத்துடன் கூட்டமாய் இறங்கினாள்.

– அக்டோபர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *