ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 8, 2022
பார்வையிட்டோர்: 27,022 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9 | அத்தியாயம் 10

இன்ஸ்பெக்டர் சங்கரன் ஆதிகேசவனின் ஆராய்ச்சி சாலையில் என்ன நடக்கிறது என்று கவனிப்பதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் மேசையின் மீதிருந்த டெலிபோன் மணி ஒலித்தது! டெலிபோனைக் கையில் எடுத்தார் இன்ஸ்பெக்டர்.

“ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?” என்றது ஒரு பெண்ணி னுடைய குரல்.

“ஆமாம்! நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

“நான் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியிலிருந்து போன் செய்கிறேன். துப்பறியும் துளசிங்கம் இங்கு அனுமதிக்கப்பட்டிருக் கிறார். தயவுசெய்து உடனே புறப்பட்டு வரமுடியுமா?” என்று கூறினாள் அந்தப் பெண்.

“துளசிங்கம் ஆஸ்பத்திரியில் இருக்கிறாரா? அவருக்கு என்ன உடம்பு? சற்று நேரத்திற்கு முன்பு நன்றாக இருந்தாரே?”

“அது எனக்குத் தெரியாது. கால் மணி நேரத்திற்கு முன்பு ஒரு டாக்ஸியில் இங்கு வந்து சேர்ந்தார். அவர் மூர்ச்சையாகி இருந்தபடியால் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அவருக்குச் சிகிச்சை செய்துகொண்டிருக்கிறோம்.”

“அப்படியா? உடனே புறப்பட்டு வருகிறேன்” என்று கூறி டெலிபோனை வைத்துவிட்டு ராயப்பேட்டை ஆஸ்பத் திரிக்குக் கிளம்பினார் இன்ஸ்பெக்டர். சங்கரன் ஆஸ்பத்திரியை அடைந்தபோது துப்பறியும் துளசிங்கம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு தில்லைநாயகத்தைப் பரிசோதனை செய்த அதே டாக்டர் தான் இப்பொழுது துளசிங்கத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். டாக்டர், துளசிங்கத்திற்கு ஊசிபோட்டு சில மருந்துகளைக் கொடுக்கும்படி சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டரை அழைத்துக்கொண்டு அவ் வறையைவிட்டு வெளியே வந்தார்.

துளசிங்கத்தின் உடல் நிலை ஏன் திடீரென்று பாதிக்கப்பட்டிருக்கிறது? அவர் ஒரு மணிக்கு முன்பு என்னுடன் பேசிக் கொண்டிருந்தாரே, அப்பொழுது அவர் நன்றாகத் தானே இருந்தார், அவர் உடம்பிற்கு என்ன?” என்று மிகுந்த ஆவலுடன் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

அவருடைய ரத்தத்தில் திடீரென்று விஷக்கலப்பு ஏற்பட்டு இருதயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது எப்படி ஏற்பட்டது என்று சொல்லமுடியவில்லை. அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்ததினால், நான் விசேஷ மாற்று மருந்தை உபயோகித்திருப்பதினால் உயிருக்கு அபாயம் ஒன்று மில்லை. இன்னும் சற்று நேரத்தில் அவருக்கு உணர்வு வந்து விடும்” என்று கூறினார் டாக்டர்.

இன்ஸ்பெக்டர் திகிலடைந்து போனார். ஆதிகேசவனைப் பார்க்கச் சென்ற வரையில் அவர் நன்றாகத்தான் இருந்திருக்கிறார். பிறகு அவருடைய இருதயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆதிகேசவனை அவர் சந்தித்தாரா? ஆராய்ச்சிசாலையில் என்ன நடந்தது? எவ்வாறு அவருடைய உடல் பாதிக்கப்பட்டது என்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணர்வுபெற்றார் துளசிங்கம். நடந்த விஷயங்களும் தான் இருக்கும் இடமும் அவருக்கு விளங்கிய போதிலும் உடனே அவரால் பேசமுடியவில்லை.!

இன்ஸ்பெக்டர் அவரை விசாரித்தார். துளசிங்கம் ஆதிகேச வனின் ஆராய்ச்சிசாலைக்குச் சென்றதும் அவர் அவசர வேலை யாக வெளியே சென்றிருந்ததையும், அவர் எழுதிவைத்திருந்த குறிப்புக் கடிதப்படி கவர்களை ஒட்டி வேலைக்காரனின் மூலம் கொடுத்து அனுப்பியதையும் உடனே உடல் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டு வந்ததையும் விளக்கினார்! அந்தக் கவர்களின் பசையில் ஒருவித விஷம் தடவப்பட்டிருக்க வேண்டும் என்றும், நாக்கினால் அந்தப் பசைகளைத் தடவியவுடன் விஷம் உமிழ்நீருடன் கலந்து உடலினுள் சென்றுவிட்டது என்று துளசிங்கம் முடிவு செய்து கொண்டார். அந்தக் கவரின் உறை களில் யார் விஷம் தடவி இருக்கமுடியும் என்ற கேள்வி எழுந்தது. இன்ஸ்பெக்டருக்கும் துப்பறிபவருக்கும் ஆதிகேச வனின் மீது சந்தேகம் ஏற்படாமல் இல்லை. அவர் அவசர வேலையாக வெளியே செல்லாமல் இருந்திருந்தால் அந்த உறை களை அவர்தான் ஒட்டியிருப்பார். அப்பொழுது அவரே அல்லவா இவ்வித நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருப்பார்?-இந்தக் கேள்வி அவர்களுக்குச் சற்று குழப்பத்தை உண்டாக்கியது. ஆயினும் ஆதிகேசவனின் மீதிருந்த சந்தேகம் நீங்கிவிடவில்லை! குற்றவாளி தான் அந்தக் கவர்களில் விஷம் தடவி இருக்கவேண்டும். அவன் விஷயம் வெளிப்பட்டு விடலாம் என்ற பயத்தில் அந்தக் கவர்களைக் கண்டிப்பாகப்பிருந்தாவனம் ஓட்டலிலிருந்து அப்புறப் படுத்த முயற்சிப்பான். அந்தக் கவர்களை பிருந்தாவனம் ஓட்டலில் யார் வாங்கப்போகிறார்? அவர் அதை என்ன செய்யப் போகிறார் என்பவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் குற்ற வாளியைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது அவருக்கு!

டாக்டரின் பெருமுயற்சியினாலும், விசேஷ மருந்துகளை உபயோகப் படுத்தியதினாலும் அன்று இரவிற்குள் துப்பறியும் துளசிங்கத்தின் உடல் நிலை சரியாகி எழுந்து நடமாடுவதற் கான தெம்பு ஏற்பட்டுவிட்டது. மறுநாள் காலை டாக்டரின் வேண்டுகோளையும் நிராகரித்துவிட்டு ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்துகொண்டு காலை ஒன்பது மணி சுமாருக்கு பிருந்தாவனம் ஓட்டலுக்குப் போய்ச் சேர்ந்தார் துளசிங்கம்.

ஓட்டல் மானேஜரைச் சந்தித்துத் தான் யாரென்பதை வெளி யிட்டார். மானேஜருக்கு அவரிடம் விசேஷ மதிப்பு ஏற்பட்டது. துளசிங்கம் கேட்ட கேள்விகளுக்குத் தடுமாற்றமின்றி ‘பளிச்’ சென்று பதில் சொல்லிக்கொண்டே வந்தார். முதல்நாள் ஆதிகேசவனின் குறிப்புக் கடிதத்தின்படி வேலைக்காரனிடம் கொடுத்து அனுப்பிய கவர்களில் எழுதப்பட்டிருந்த பெயரை அவர் நன்றாக நினைவு வைத்துக்கொண்டிருந்தார். அவைகளில் டாக்டர் நீலகண்டன் என்று எழுதப்பட்டிருந்தபடியால் அந்தப் பெயர் கொண்ட ஆசாமி யாராவது அந்த ஓட்டலில் வசித்து வருகிறார்களா என்று விசாரித்தார்.

“நேற்று நீலகண்டன் என்பவர் இன்று தான் இங்கு வரப் போவதாயும், தனக்கு ஒரு அறையை எற்பாடு செய்து வைக்கும் படியும் கடிதம் எழுதி பணம் அனுப்பியிருந்தார். மாடியில் ஓர் அறையை அவருக்காக ஒழித்து வைத்திருக்கிறோம். ஆனால் அவர் இன்னும் வரவில்லை. அவருக்குச் சில கடிதங்கள் வந்திருக் கின்றன. அவைகளை இந்த போர்டில்தான் வைத்திருக்கிறேன்” என்று கூறி வலது பக்கத்துச் சுவரில் இருந்த கண்ணாடி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த கடிதங்களை எடுத்து துளசிங்கத்தினிடம் கொடுத்தார். அவைகள் அனைத்தும் தான் நேற்று ஒட்டி அனுப்பியவைகள் தான் என்று விளங்கி விட்டன. ஆகவே தன்னைப்பற்றி ஒருவரிடமும் வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் தினசரிப் பத்திரிகையினால் தன்னை மறைத்த வண்ணம் நீலகண்டனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார் துளசிங்கம்.

அவருக்கு முன்னாலிருந்த மணி நிதானமாகப் பத்து முறை ஒலித்தது. அந்த மணியோசை அடங்குவதற்கும் பிருந்தாவனத்தினுள் ஒரு டாக்ஸி வேகமாகப் பிரவேசிப்பதற்கும் சரியாக இருந்தது.

துளசிங்கம் விழிகளை மட்டும் உருட்டி வருவது யாரென்று கவனித்தார். நாகரிகமான உடைகளை அணிந்து பெரிய மூக்குக் கண்ணாடியால் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த ஆதிகேசவன் அந்த டாக்ஸியிலிருந்து இறங்கினார்!

ஏற்கனவே அவர்மீது ஏற்பட்டிருந்த சந்தேகம் இப்பொழுது அதிகமாகிவிட்டது. தினசரியைப் படிப்பதுபோல் தோற்ற மளித்த போதிலும் அவருடைய கவனம் அனைத்தும் ஆதிகேசவனின் மீது தான் பதிந்திருந்தது. ஆதிகேசவன் கம்பீரமாக கடந்து மானேஜரின் முன்னால் போய் நின்றார்.

“என் பெயர் நீலகண்டன்! நான் எழுதிய கடிதம் உங்க ளுக்குக் கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறேன்” என்று கேட்டார் அவர்.

“நீங்கள் தானா மிஸ்டர் நீலகண்டன்? மாடியில் இருக்கும் ஒன்பதாவது நெம்பர் அறையை உங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். காலையிலேயே உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்” என்றார் மானேஜர்.

“வண்டி வருவதற்குத் தாமதமாகி விட்டது. அத்துடன் வேறு ஒருவரையும் பார்க்கப் போயிருந்தேன். அதனால்தான் இவ்வளவு நேரமாகி விட்டது. அது சரி, மாடி அறையின் சாவியைக் கொடுங்கள்” என்று கேட்டார் அவர். மானேஜர் ஒரு முறை அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு மாடி அறையின் சாவியை எடுத்துக் கொடுத்தார். ஆதிகேசவன் மாடிக்குச் செல்லப் படிக்கட்டுகளில் காலை வைத்தார். மறுகணம் எதையோ நினைத்துக்கொண்டவர் போல், “எனக்கு ஏதாவது கடிதம் வந்திருக்கின்றதா?” என்று கேட்டார்.

“உங்கள் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. நான்கு கடிதங்களில் வெவ்வேறு டாக்டர்களின் பெயர்கள் போடப்பட் டிருந்த போதிலும் உங்கள் வசம் ஒப்படைக்கும்படி குறிப்பிடப் பட்டிருக்கின்றன” என்று கூறி அவைகளை அவரிடம் கொடுத் தார் ஓட்டல் மானேஜர். ஆதிகேசவன் அவைகளைப் பார்க்க வில்லை; அலட்சியமாகக் கோட்டுப் பையினுள் திணித்துக்கொண்டு கம்பீரமாக மாடிப் படிக்கட்டுகளில் நடந்து சென்றார்.

ஆதிகேசவன் தான் குற்றவாளி என்பது துப்பறியும் துளசிங்கத்திற்கு இப்பொழுது நிதர்சனமாகத் தெரிந்துவிட்டது.

தில்லைநாயகத்தைக்கொன்றவர் அவர்தான்; கவர்களில் விஷத்தைத் தடவி, தன்னைக் கொல்லத் திட்டமிட்டதும் அவர் தான்!! இதில் சந்தேகம் இல்லை! அவர் அந்தக் கவர்களை மறைக்க முயலுவதற்கு முன்பு அவைகளை அபகரித்து விடவேண்டும் என்று விரைந்து அவரைப் பின்தொடர்ந்து சென்றார் துளசிங்கம்.

மாடியில் இருந்த ஒன்பதாம் நெம்பர் அறையின் கதவைத் தட்டினார் துளசிங்கம். ஆதிகேசவன் கதவைத் திறந்தார். அடுத்த கணம் துளசிங்கத்தைக் கண்டு திகைப்படைந்து போனார்!

“நீங்களா?…இங்கு எப்படி வந்தீர்கள்?…நான் இங்கு இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று குழப்பம் நிறைந்த குரலில் கேட்டார்.

“நான் டாக்டர் நீலகண்டனைப் பார்க்க வந்தேன்! நீங்கள் உங்கள் பெயரை இப்படி மாற்றி வைத்துக் கொள்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை! அதுசரி! நேற்று என்னைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தானே இந்தக் கவர்களின் மேல் பகுதியில் விஷத்தைத் தடவி வைத்து, அவைகளை ஒட்டி அனுப்பி வைக்கும்படி எழுதி வைத்திருந்தீர்கள்?” என்று கேட்ட வண்ணம் அவர் மானேஜரிடம் வாங்கி வந்து அவ்வறையிலிருந்த மேசையின் மீது போட்டிருந்த கவர்களை எடுத்துப் பத்திரப் படுத்திக்கொண்டார் துளசிங்கம்.

“நான் உங்களைக் கொலை செய்யப் பார்த்தேனா? நீங்கள் சொல்வதும் ஒன்றும் புரியவில்லையே?” என்று விழிப்பது போல் பாவனை செய்தார் ஆதிகேசவன்.

“எல்லாம் எனக்குத் தெரியும்! உண்மையை மறைக்க வேண்டாம். ‘நீலகண்டனின் வசம் ஒப்படைக்கும்படி கடிதங் கள் எழுதி, ஏன் அவைகளுக்குத் தனியாகக் கவர்களை வைத்திருக்க வேண்டும் என்று நான் அப்பொழுதே சந்தேகப்பட்டேன்! ஆனால் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றே உங்களுடைய கடிதப்படி செய்தேன். கடைசியில் அது என் உயிருக்கே அபாயத்தை விளைவிக்கப் பார்த்தது! அது சரி! தில்லைநாயகத்தின் மீதிருந்த பொறாமையினாலும், அவருடைய ஆராய்ச்சியின் பயனை அடைய வேண்டும் என்பதற்காகவும் நீங்கள் தானே அவரைத் தந்திரமாகக் கொலை செய்தீர்கன்.”

ஆதிகேசவன் பதிலொன்றும் சொல்லாமல் துளசிங்கத்தை ஆத்திரமாகப் பார்த்தார். பிறகு கரங்களை முகவாய்க் கட்டையில் பொறுத்திய வண்ணம் வைத்த விழி வாங்காமல் துளசிங்கத்தைப் பார்த்தவண்ணம் மௌனமாக அமர்ந்துவிட்டார். துளசிங்கத் திற்கு ஆதிகேசவனின் மீது அளவு மீறிய ஆத்திரம் வந்தபோதிலும் அதை வெளிக்காட்டாமல் அவர் செய்த குற்றங்களை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

“நீங்கள் தில்லைநாயகத்துடன் நெருங்கிப் பழகி வந்திருக் கிறீர்கள். அவர் தன் ஆராய்ச்சியில் மகத்தான வெற்றிபெற்று வருவது உங்களுக்குப் பொறாமையை உண்டாக்கி இருக்கிறது. ஆராய்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் அதனால் வரக்கூடிய வருமானத்தில் பாதிதானே கிடைக்கிறது என்று எண்ணி, அவரை ஒழித்துக் கட்டிவிட்டு அவர் கண்டுபிடித்து வைத்திருக்கும் ரகசியங்களைப் பயன்படுத்தி பெருஞ் செல்வந்தராகத் திட்டமிட் டிருக்கிறீர்கள். தில்லைநாயகத்தை ஒழிக்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறீர்கள். சென்ற செவ்வாய்க்கிழமையன்று விஜயவல்லியிடமிருந்து வந்த எச்சரிக்கைக் கடிதத்தை அவர் காண்பித்து இருக்கிறார். அன்றே உங்கள் எண்ணத்தைப் பூர்த்தி செய்யத் தீர்மானித்தீர்கள். உண்மை வெளியானாலும் விஜய வல்லியின் மீது சந்தேகம் ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் எண்ணி யிருக்கிறீர்கள். அன்று தில்லைநாயகத்தினிடம் இருமல் மாத்திரை கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். உங்களிடமிருந்த மூன்று மாத்திரைகளிலும் விஷத்தை கலந்திருக்கிறீர்கள். அன்று மாலை உங்களுடன் வந்து கொண்டிருந்த அவர் இருமியபோது விஷம் கலந்த இரண்டு மாத்திரைகளை அவருக்குக் கொடுத்து விட்டீர்கள். உங்கள் மீது சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற் காக மீதி ஒன்றை விழுங்கிவிட்டீர்கள். அதனால் தான் அவர் இறந்து விட்டார். நீங்கள் பிழைத்து விட்டீர்கள். இந்த வழக்கில் குழப்பத்தை உண்டாக்குவதற்காக நீங்கள் தான் உங்கள் அறையில் இருந்த ஆராய்ச்சிக் கருவிகளை உடைத்து நொறுக்கி இருக்கிறீர்கள். அந்த பங்களாவின் பின்புறம் இருந்த கண்ணாடி ஜன்னலையும் நீங்கள் தான் உடைத்துச் சிதறச் செய்தீர் கள் ; விஜயவல்லி தன் கணவரைப் பயமுறுத்தி அவரிடமிருந்து கடிதம் ஒன்று வாங்குவதற்காகச் சில ஏற்பாடுகளைச் செய்திருந்த படியால்தான் இந்த வழக்கில் இத்தனை குழப்பங்கள் ஏற்பட் டிருக்கின்றன. நான் இங்கு வருவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு விஜயவல்லி என்னைக் காண வந்திருந்தாள். மாரிசாமி பணத் திற்காகத்தான் அவளைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறான் என்றும், தில்லைநாயகத்தின் சொத்து அனைத்தும் வக்கீல் பஞ்சநாதனுக்கும் தனஞ்சயனுக்கும் போய்விடப் போகிறது என்பதை அறிந்து கொண்டு அவன் தன்னைக் கைவிட்டு விட்டான் என்றும் கூறிக் கண்ணீர் விட்டாள். தன் கணவனுக்குச் செய்த துரோகத்திற் காக இப்பொழுது அவள் பெரிதும் வருந்துகிறாள். பெண்கள் எவ்வளவுதான் படித்திருந்த போதிலும் என்ன தான் முற்போக்கு வாதிகளாக இருந்தபோதிலும் அவர்களுக்குக் கணவன் தான் தெய்வம் என்பதை அவளே இப்பொழுது ஒப்புக்கொள்கிறாள்! மாரிசாமி தில்லைநாயகத்தின் செல்வத்தை அடைய, விஜய வல்லியை ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைத்தான். ஆனால் அவன் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.

“ஏனென்றால், அவனை நீங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள். தில்லைநாயகத்தின் பணத்தைப் பதுக்கி வைத்தீர்கள். எனக்கு உங்கள் மீது சந்தேகம் தோன்றிவிட்டது என்பதை உணர்ந்து கொண்டு, என்னை ஒழித்து விட்டால் பிறகு கவலையற்று வாழ லாம் என்று ஒரு நூதனமான முறையைக் கையாண்டு என்னைக் கொலை செய்யப் பார்த்தீர்கள். நான் அதிர்ஷ்டவசத்தினால் பிழைத்துவிட்டேன். தில்லைநாயகத்தைக் கொலை செய்தது முதல் குற்றம்! என்னை ஒழித்துக்கட்ட தீர்மானித்தது இரண் டாவது குற்றம்!! இந்த இரண்டு குற்றங்களையும் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று ஏளனம் கலந்த குரலில் கேட்டார் துளசிங்கம்.

“நீங்கள் உண்மையைக் கண்டுபிடித்து விட்டீர்கள்! என்னைக் குற்றவாளியாக்க உங்களிடம் ஆதாரங்கள் இருக் கின்றன. அப்படி இருக்கும்போது நான் எவ்வாறு உண்மையை மறைக்க முடியும்? தில்லைநாயகத்தின் மரணத்திற்கு நான் தான் காரணம்! ஆனால் அந்தப் பழியை விஜயவல்லியின்மீது சுமத்த முயன்றேன். உங்கள் பெருமுயற்சி என்னைத் தோல்வி அடையச் செய்துவிட்டது. நிரபராதிகள் தண்டிக்கப் பட்டதில்லை; குற்றவாளிகள் தண்டனையிலிருந்தும் தப்பியதும் இல்லை.’ என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். உங்கள் வெற்றிக்கு என்னுடைய பாராட்டு. எனக்கு தொண்டை சரியாக இல்லை. இந்த இரண்டு மாத்திரைகளை மட்டும் விழுங்குவதற்கு அனுமதிப்பீர் களா?” என்று கோட்டுப் பையிலிருந்து ஒரு சிறிய கண்ணாடிப் புட்டியை எடுத்தார் ஆதிகேசவன்.

“அவசரப்படாதீர்கள்! அவ்வாறு அனுமதி கொடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. இன்ஸ்பெக்டர் சங்கரனை வரவழைக்கிறேன். அவரைக் கேட்டுகொண்டு எதையும் செய்யுங்கள்” என்று அந்தக் கண்ணாடிப் புட்டியை அவரிடமிருந்து சட்டென்று வாங்கிப் பத்திரப்படுத்திக்கொண்டு அவ்வறையின் மூலையில் இருந்த ரிஸீவரைக் கையிலெடுத்து ஒரு நெம்பரைத் திருப்பினார் துளசிங்கம்.

“ஹலோ! போலீஸ் ஸ்டேஷனா? இன்ஸ்பெக்டர் சங்க ரனைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா?” என்று கேட்டுவிட்டு, வெற்றிப் புன்னகை தவழப் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய இடது கை, கோட்டுப் பையிலிருந்து எடுத்த பேனாவினால் அரும்பு மீசையை ஒரு முறை தடவி விட்டது. அந்தச் செய்கை துப்பறியும் துளசிங்கத்தின் வெற்றியைப் பறை சாற்றுவதுபோல் இருந்தது.

– முற்றும் –

– ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?, முதற் பதிப்பு: பெப்ரவரி 1957, தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *