பழுப்பு மட்டைகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 15,152 
 

ராமாயி கம்பை ஊன்றிக் கொண்டு புறப்படும்போது, அவள் மருமகள் இருபது ரூபாய் பணத்தை நீட்டினாள்.

ராமாயி கம்பை ஊன்றிக் கொண்டு புறப்படும்போது, அவள் மருமகள் இருபது ரூபாய் பணத்தை நீட்டினாள். வாங்கி தன் இடுப்பில் செருகி இருந்த சுருக்குப் பையில் போட்டு முடிந்து கொண்டே புறப்பட்டாள்.

“”பணம் பத்தரம், பத்தரம்; ஆமாம் சொல்லிட்டேன்; சொல்லிட்டேன்” என்றாள் மருமகள் வேலிப்படலை திறந்துவிட்டுக்கொண்டே.

ராமாயிக்கு அவள் எந்தப் பணத்தைச் சொல்கிறாள் என்பது புரிந்தது. ஆனாலும் புரியாதவள் போல் தன் சுருக்குப் பையை தடவிப்பார்த்தாள்.

“”நா இந்தப் பணத்தை சொல்லலை; வாங்கப்போற பணத்தை சொல்றன் மெத்தனமா வாயைப் பாத்து நின்னுகிட்டு, பணத்த பறக்கவிட்டுட்டு வராம, பத்தரமா கொண்டாந்து வீடு சேக்கட்டும். தீவாளி செலவு கொஞ்சமா இல்ல; ரெண்டு பொண்ணுவளுக்கும் வரிச எடுக்கணும். பணம் சாக்ரதை!”

என்று திரும்பத் திரும்ப சொன்னாள்.

ராமாயிக்கு எரிச்சலாவது எரிச்சல். மெத்தனமா இருக்கறது யாரு? போன மாசம், ரேஷன் கடைக்கு போறேனு போயி, சொளையா நூறு ரூவா நோட்ட தொலைச்சுட்டு வந்தது யாரு நீயா, நானா? போன புதங்கெழம அன்னைக்கு புள்ள சட்டைல பணமிருக்கு எடுத்து வையின்னு சொல்லி இருக்கான். அந்த நெனப்பு கூட இல்லாம துணி ஊற வச்சு தொவைச்சு, அலசி காயப் போட்டா, சட்ட பையிலேர்ந்த எறநூத்தி நாற்பது ரூபாயும் நஞ்சு பிஞ்சு போனுதே, அது யாரால? என்னாலயா போனுது பணம்? எம்புள்ள ரத்த வேர்வ வேர்த்து சம்பாரிக்கற காசு, இப்புடி சந்தீல அடிக்கரதயும் அடிச்சுட்டு என்னையப் பார்த்தா சொல்ற மெதந்தனமா இருக்காதேன்னு? துக்கிரி புடிச்சவளே; வாயைப் பாரு; வாய; வெறுஞ் சிறுக்கிக்கு வாயும், வார்த்தையும், பாரு எத்தினி வக்கணையா இருக்குன்னு! என்று தனக்குள் நினைத்துக் கொண்டே கம்பை அழுந்த ஊன்றி நடந்தாள் ராமாயி; வாய் திறந்து மருமகளிடம் ஒன்றும் கேட்கவில்லை; கேட்டால் பதிலுக்கு அவள் ஒன்று சொல்வாள். அவளுடன் லாவணி பாடிக் கொண்டிருக்க இவளுக்கு இஷ்டமில்லை. அதனால், அவள் வார்த்தையைக் காதில் வாங்காதவள் போல் வெளியே கிளம்பி நடக்க ஆரம்பித்தாள்; அந்த வீட்டை விட்டு வெளியே வந்த உடனேயே, சுண்ணாம்பு காளவாசலிலிருந்து வெளியே வந்ததுபோல் நிம்மதியாய் இருந்தது. வீட்டிற்குள் எப்பொழுதும் வெக்கையும், புழுக்கமும் இறுக்கமும் மூச்சுத்திணறலும் நிறைந்து இருப்பதாய்ப்பட்டது. வெளியே வந்தால் அலாதியாய், ஆனந்தமாகத்தான் உள்ளது. அப்பாடா; இன்னைய பொழுதுக்கு சாடைப் பேச்சும், இடிசொல்லும் இல்லை, தப்பித்தோம் என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டு நடக்க ஆரம்பித்தாள். எதிரே ஜனங்கள் வயல் வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர். வாய்க்காலில் சீராய் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

“‘எங்கத்தை, பணத்துக்கா?” என்றாள் எதிரே தலையில் சும்மாடும் கூடையுமாய் வந்த முத்தம்மாள்.

“”ஆமாம்!” என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தாள் ராமாயி.

“‘என்னா பெரியம்மா. இன்னைக்கு பணம் போடுறாங்களா? இரு எங்கூட்டு கெழவியையும் அனுப்புறேன். அழைச்சுட்டுப் போ..!” என்று சொன்ன வள்ளி, உள்ளே சென்று தன் மாமியாரையும் அழைத்துவந்து இவளுடன் விட்டாள்.

“”அண்ணி… நல்லா இருக்கியா?” என்று கேட்டுக் கொண்டே இவளுடன் நடக்க ஆரம்பித்தாள் கோவிந்தம்மாள்; ராமாயி வயதுதான் இருக்கும் அவளுக்கு. ஆனால் இன்னும் கம்பு ஊன்றவில்லை. பார்வையும் நன்றாக இருந்தது கோவிந்தம்மாளுக்கு.

“”ராமாயி” என்ற குரல் கேட்டு,

“”என்ன?” என்பது போல் நின்றனர் இருவரும்.

“”ந்த.. கொஞ்சம் நில்லுங்க ரெண்டு பேரும்; நானும் வர்றேன் சேந்து போவலாம்ல?” என்றான் காத்தான் தட்டிப்பாலத்தில் வந்து கொண்டே…

“”நீ பாட்டுக்கு வர்றதுதான? ஆம்பள, ஒனக்கு என்னா, பொட்டச்சிவளோட?” என்றாள் கோவிந்தம்மாள்.

“”ஆமா அறுவது வயசுக்கு மேல ஆம்பள என்னா பொம்பள என்னா? எல்லாம் ஒண்ணுதான். செத்த நின்னு வந்துட்டேன். பேசிக்கிட்டே போவோம்!”

என்று சொல்லிக்கொண்டே இரண்டு விரல் வைத்து வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டு, வேட்டியை உதறி கட்டிக்கொண்டே கூட ஓடிவந்தான் காத்தான். இவர்களைவிட இரண்டு வயதாவது மூத்தவன்.

மூவரும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தனர். பள்ளிக்கூடத்திற்கு சீருடை அணிந்த பெண்களும், பையன்களும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

“”ஒம்பேரன உட்டு, சைக்கிள்ல கொண்டாந்து உட சொல்லலாம்ல ராமாயி; நடக்க ரொம்ப செரமப்படுறியேன்னு கேக்குறேன்?” என்றான் காத்தான்.

“”யாரு அவனா? பன்னன்டாவது படிக்குற புள்ள, தன் சைக்கிள்ல பாட்டியாள அழைச்சுட்டு போறத பாத்தா, அவங்கூட படிக்கிற பையனுவ கிண்டல் பண்ணுவாங்களாம்; எம்மருமவ சொல்ற சேதி இது. சொன்னா அழைச்சுட்டுப் போவாந்தான்; அதுக்கு முன்னாடியே இவ முந்திக்கிறாளாம். “நீ போடா தம்பி; இது வேற ஒக்காற தெரியாம உளுந்து வச்சுதுன்னா, யாரு பதில் சொல்றது ஒப்பனுக்கு; நீ போடாம்பி’ன்னு அழைச்சுட்டு போறேன்னு சொல்றவனையும் அனுப்பிடறா; நா கஷ்டப்பட்டு நடக்கறதப் பாக்குறதுல அவளுக்கு அவ்ளோ ஆனந்தம்” என்றாள் ராமாயி.

“”கெடக்கு வுடு; இன்னைக்கு நமக்குன்னா நாளைக்கு அதுக்கு, அது புரிஞ்சா இந்த ஆட்டம் ஆடுமா?” அடுத்தடுத்த தெருக்களில் லெட்சுமி, மருதாயி, மீனாட்சி, காசியம்மா, அஞ்சலை, உத்தண்டி, பெருமாள், பொன்னுசாமி, சாமிகண்ணு, செல்லம்மாள் என்று ஒவ்வொருவராய் சேர்ந்துகொண்டனர். வயதானவர்கள் – ஒரு கூட்டமாய் செல்வது பலருக்கு வேடிக்கையாய் இருந்தது.

“”எங்க எல்லாம் பாலர் பள்ளிக்கா?” என்றான் அன்பழகன் நக்கலாக.

“”இல்ல, பால்வாடிக்கு; நீயும் வர்றியா?” என்று கேக்கவும், அவன் சிரித்துக் கொண்டே பதில் சொல்லாமல் போய்விட்டான்.

வெண்ணாறு சுழித்து ஓடிக்கொண்டிருந்தது.

“‘இந்த ஆத்துல குளிச்சி எத்தினி நாளாவுது கோயிந்தம்மா?” என்றாள் ராமாயி.

“”நாளா? வருசக்கணக்கா ஆவுது; அப்பல்லாம் உச்சுவாடி, கொத்தூர், மண்ணஞ்சின்னு எட்டுன வரைக்கும் வெளியூர் நடவுக்கு போவோம்; வரும்போது வடவேற்குடி வழியா குறுக்க எறங்கி இந்த ஆத்துலதான் வுழுந்து குளிச்சுட்டு வாறது; அப்பல்லாம் பெட்டாம் கட்டைல; ஆடிக்கும் கோடைக்கும் தண்ணி ஓடிட்டே இருக்கும்; இப்ப என்னன்னா, பதினெட்டாம் பெருக்குக்குக் கூட தண்ணி வர மாட்டேங்குது; அதெல்லாம் ஒருகாலம்!” என்று பெருமூச்சு விட்டவாறே நடந்தனர்.

வழியில் கிருஷ்ணன் டீ கடையில் உளுந்து வடை போட்டுக் கொண்டிருந்தனர். வாசனை மூக்கைத் துளைத்தது. வாயில் எச்சில் ஊறிற்று எல்லோருக்கும். ஆனால் யாரிடமும் காசில்லை. ஒவ்வொருவரும் வீட்டில் கணக்கு சொல்ல வேண்டும். வாங்கிக் கட்டிக் கொள்வதைவிட, வாயைக் கட்டிக் கொள்வது மேல் என்று பேசாமல் நடந்தனர்.

வழியில் நாகம்மா வீடு வந்தது. எல்லோரும் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு, நாகம்மாவையும் அழைத்துக் கொண்டு குளம் முனை தாண்டி, கடைவாசல் வந்தனர். கடைவாசலில் வேப்ப மரமும், புங்கை மரமும் அடுத்தடுத்து வளர்ந்த்து நல்ல நிழலை பரப்பி இருந்தன. அக்கடா! என்று அங்கங்கே உட்கார்ந்தனர்.

“”என்ன அனுமதி இல்லா பேரணி ஒண்ணு வந்து, சத்தமில்லாம கடை வாசல்ல உட்காந்திருக்கு, ஏதாவது ஆர்ப்பாட்டமா?” என்றார் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர்.

“”எல்லாம் நத்தம், நெடுங்கரை, ஜனங்க; ஓஏபி பணம் வாங்க, மாசா மாசம் வருவாங்க. நம்ம கடை வாசல்தான் கூடுற இடம்; தபால்காரர்ட்டேர்ந்து பணம் வாங்கிகிட்டு, நம்ம கடைல ஏதாவது பொருள் வாங்கிகிட்டு சில்லரை மாற்றி வீட்டுக்கு எடுத்துட்டு போவாங்க; தபால்காரருக்கும் வசதியா இருக்கும். எல்லாம் ஒரே எடத்துல கூடிடறதால பணத்தை பட்டுவாடா பண்ணிட்டு ஈசியா போயிடுவார்!” என்று கடை உரிமையாளர் அவருக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். ஊட்டியாணிலிருந்தும் சுபத்தரியத்திலிருந்தும் ஏழெட்டு முதியோர் ஒற்றைப் பனைமரம் வழியாக குறுக்கே இறங்கி நடந்து, பெரிய குளம் கீழக்கரை வழியாக கடைவாசல் வந்தனர். தங்களுக்கு முன் பெருங்கூட்டமாய் தம் மக்கள் கூடி இருப்பதைக் கண்டவுடன் அவர்களுக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

“”ராமாயி அக்கா, நல்லா இருக்கியா? கோயிந்தம்மா அண்ணி எப்புடி இருக்க; காத்தாண்ணே நல்லா இருக்கியா? வடவேற்குடி அத்தாச்சி ஒடம்பு தேவலையா? நெடுங்கர மாமா, கால் புண்ணு ஆறிடுச்சா?” என்று பாசமாகக் கேட்டுக் கொண்டு இடம் பாத்து உட்கார்ந்தனர்.

பெரும்பான்மையோர் மாதத்திற்கு ஒருமுறை இப்படி பார்த்துக் கொண்டால்தான் ஆயிற்று. வயோதிகம், தள்ளாமை, வீட்டு கெடுபிடி, வேலை என்று அவரவர்க்கும். ஆயிரம் கஷ்டம். மாதம் ஒருநாள் தம் மொத்த நண்பர்களைப் பார்ப்பது, அடுத்த ஒரு மாதத்திற்கான தெம்பையும் நம்பிக்கையையும் அவர்களுக்கு கொடுக்கும்.

“”என்னா, இன்னைக்கு பணம் உண்டாமா?”

“”உண்டு, உண்டு; மாசம் பொறந்துதான் பன்னன்டு நாளாச்சே!”

“”வரும்போது தபால்காரரப் பாத்தேன். பணம் வந்துடுச்சாம். தபாலை குடுத்துட்டு சுருக்கா வந்துர்றேன்னாரு. எல்லாரையும் இருந்து பணம் வாங்கிட்டு போச்சொன்னாரு..”

“”மெதுவா வரட்டும். இன்னிய பொழுதுக்குள்ள வந்தா சரி; வெயில் தாழ வீட்டுக்கு போனா போதும்; சீக்கிரம் போயி என்னாத்த பெரட்டப் போறோம்?”

“”வீட்டுக்கு போறது செயிலுக்குப் போறதாட்டம் இருக்குடி பச்சையம்மா, நம்மளோட எது மொகங்குடுத்து பேசறேங்குது? என்னமோ வேண்டாத விருந்தாளி கணக்காதான் ஒட்டிக்கிட்டு இருக்கேன்..”

“”இங்க மட்டும் என்னா வாழுதாம்; எங்கயும் அதே கதைதான். நீ வாயவுட்டு சொல்லிபுடற… வெக்கத்துக்கு ஆத்தமாட்டாம வெளீல சொல்லாத நா வெம்பி சாவுறேன்.”

“”எம்மருமவகாரி, தபால்காரருக்கு குடுக்க ஆயிரம் ரூவா நோட்ட மாத்தி ஏதாவது வாங்கி துன்னுடுவனாம்; அதுக்காக வரும்போதே இருவது ரூபா கொடுத்து உட்டுட்டா எங்கிட்ட. நா பணத்தை வாங்கி கொண்ட, மடிப்பு குலையாம அந்தம்மாகிட்டே கொடுத்திடணும். எங்க அடுக்கும் இது?”

“”என்னாடி, மாசம் ஆயிரம் வாங்கி கொண்டு கொடுக்கிறோமே. இந்தா ஒரு அம்பது நூற வச்சிக்க; பசிச்ச நேரத்துக்கு ஒரு இட்டிலி வாங்கி தின்னு. ஒரு டீய குடி; காந்த வாயிக்கு வெத்தல பாக்கு வாங்கி போட்டுக்கன்னு குடுக்கப்படாது? ஒரு பைசா நமக்கு புண்ணியப்படுதா?”

“”வெக்கக்கேட்ட வெளீல சொன்னா, அடிச்சுக்க ரெண்டு கையி பத்தாது. வயித்துக்கு ஒழுங்கா சோறு கெடைக்குதா? எல்லாரும் கசாலைகுள்ள குந்தி திம்பாவோ; எனக்கு மட்டும்சோறு தட்லேபோட்டு வெளீல வரும். தெனம் தெரு லைட் மரத்தடி வெளிச்சத்துலதான் ராச்சாப்பாடு ஆவுது. எனக்கு என்ன வீடு வாசல் இல்லியா? எம்மாமியா இருந்த வரைக்குந்தான், கள்ளிகாட்ல பொங்கி தின்னு, கருவ காட்ல கழுவி கவுத்தவளேன்னு.. என்னைய சுடுசொல்லால் பாடாய்ப்படுத்தும். மருமவ வந்து என்ன கருவகாட்டுக்கே தொறத்திபுடுவா போல இருக்கே!”

“‘நீயாச்சம் பரவாயில்ல; நேத்தி காலம்பற ரெண்டுவாய் பழையது தின்னது; ரெண்டு நாளா தண்ணிய மொண்டு குடிச்சு ஒப்பேத்திக்கிட்டிருக்கேன். கெழக் கொடலு பசி தாங்குதா? நடக்க முடியல. மயக்கம் கிறுகிறுண்ணு கொண்டு தள்ளுது. எங்க உழுந்து மண்ட பொளந்து சாவப் போறேனோ தெரியலை?”

“”ஏன்டாப்பா வீட்டுக்கு போவணும்னு இருக்கு; யாராச்சும் ஒரு புண்ணியவான் ஒரு பெரிய எடத்தைக் கட்டி போட்டு நாம பாட்டுக்கு ஆளுக்கு ஒரு வேலயா செஞ்சிகிட்டு கூட்டாஞ்சோறு ஆக்கறாப்புல புடிச்சத செஞ்சி சாப்புட்டு, டீ குடிச்சி, வெத்தல பாக்கு போட்டுகிட்டு கால நீட்டி ஒக்காந்து பேசி சிரிச்சுக்கிட்டே பழங்கதையப் பேசிகிட்டே சொச்ச காலத்த நிம்மதியா ஒட்டுனா எத்தினி நல்லா இருக்கும்? என்று ரெங்கம்மா சொல்லவும், அத்தனை பேரும் சுவர்க்கத்தை நினைத்து ஏங்குவதைப்போல ஏங்க ஆரம்பித்தனர்.”

“”வீடே புடிக்கலைக்கா, நரகமா இருக்கு. ஏன்டா போறோம்னு இருக்கு. வேண்டா வெறுப்பா அங்க இருக்கிற சோறு தொண்டைல எறங்கு வேணாங்குது. அப்படியே திண்ணாலும் ஒடம்புல ஒட்ட மாட்டேங்குது. ச்சை.. நாம இப்பிடியே இருந்துட மாட்டமான்னு ஏக்கமா இருக்குக்கா” என்று அந்த வயதான ஜீவன்கள், தம்தம் வீடுகளில் புறக்கணிக்கப்பட்டு வேண்டா வெறுப்பாய் ஒட்டிக் கொண்டிருக்கும் வயோதிகர்கள், தங்கள் தங்கத்தை கொட்டிக் கொண்டிருப்பதை அந்தக் கடைக்காரர் ஆர்வமுடன் கவனித்துக் கொண்டிருந்தார்.

“”ஐயா, கட மொதலாளி, நீங்களாச்சும் எதுக்க ஒரு பெரிய எடம் நாங்க தங்கிக்கற மாதிரி கட்டிப் போட்டா என்னா? ஒங்களுக்கு புண்ணியமா போகும். மாசம் வர்ற ஆயிரம் ரூபாய வச்சிக்கிட்டு கடேசி காலத்தை நிம்மதியா ஓட்டுவோம்ல…” என்று அவரைப் பார்த்துக் கேட்டான் இலஞ்சியம்.

“”எனக்கும் ஆசயாத்தான் இருக்கு. கைல மொதலிருந்தா பேசாம ஒரு விடுதிய கட்டிட்டு ஒங்களை எல்லாம் கஷ்டமில்லாம ஒரே எடத்துல வச்சிக்கணும்னுதான் ஆசயா இருக்கு பார்ப்போம்! கூடிய சீக்கிரமே நடக்கும்!” என்று அவர் சொல்ல, அந்த வயோதிக முகங்களில் வெளிச்சம் சுடர்விட்டது. அதேநேரம் தபால்காரர் சைக்கிளில் வந்து இறங்க, எல்லாம் எழுந்து அவரை மொய்த்துக் கொண்டனர். இரண்டு பேர் மட்டும் கையெழுத்திட்டனர். மீதி எல்லாம் ரேகை பதித்தனர். எல்லோர் வீட்டிலும் சரியாய் இருபது ரூபாய் கொடுத்து அனுப்பி இருந்தனர். தபால்காரர் அதைப் பெற்றுக்கொண்டு, ஆளுக்கு ஆயிரம் வீதம் முழு ரூபாய்த்தாளை கொடுத்தார். வாங்கி கண்ணில் ஒத்திக் கொண்டதும், அததும் சுருக்குப் பையிலும், புடவைத் தலைப்பிலும் முடிந்து கொண்டது. தபால்காரர் அனைவருக்கும் பட்டுவாடா பண்ணிவிட்டு புறப்பட்டு போயும் இவர்கள் யாரும் அசையவில்லை. ஒருவருக்கும் புறப்பட மனமில்லை. கடைக்காரருக்கு என்னவோ தோன்ற, அனைவருக்கும் கலர் உடைத்து கொடுக்கச் சொன்னார். சில்லென்று பன்னீரும் ஆரஞ்சும் வர அந்த முதிய ஜீவன்கள் நன்றியோடு வாங்கிப் பருகினர்.

“”ஒங்களுக்கு புண்ணியமாய் போவும்; அந்த நாகூர் ஆண்டவர் சன்னதி வெளங்குறாப்புல, ஒங்க வம்சம் தழைக்கணும்; நாங்க குளுந்த மனசோட சொல்றோம். நீங்க நல்லா இருப்பீங்க. நாங்க சொன்னதை மட்டும் மறந்துடாதீங்க. சீக்கிரமா நம்ம பழைய வீடு இருந்த எடத்துல, பெரிய கட்டடம் கட்ட ஏற்பாடு பண்ணுங்க சாமி; சாவுற காலத்துல நாங்க ஏச்சும் பேச்சும் வாங்காம அந்த எடத்துல வந்து நிம்மதியா சாவுறோம்!”

“”அவசியம் செய்துட்டா போச்சு; சீக்கிரமா ஏற்பாடு பண்றேன்!” என்று அவர் சொன்னதும் நம்பிக்கையுடன் பெரிய கும்பிடு போட்டுவிட்டுப் புறப்பட்டனர். வரும்போது நடையில் இருந்த சுறுசுறுப்பும் உற்சாகமும் இப்பொழுது இல்லை. தளர்வாய் விருப்பமில்லாமல் அவரவர் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

“”அடுத்த மாசம் நாளைக்கே வந்துவிடக்கூடாதா?”

என்று எண்ணியவாறே கம்பை ஊன்றி நடந்தாள் ராமாயி.

– ஜூன் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *