ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 9, 2012
பார்வையிட்டோர்: 15,115 
 

‘அழகான குட்டி தேவதை!’

இப்படி ஒரே வரியில் மீனாகுமாரியை உங்களுக்கு அறிமுகம் செய்துவைப்பது தவறுதான். மன்னிக்கவும். மீனாகுமாரி சிரித்தால், கோபப்பட்டால், குனிந்தால், நடந்தால்… இத்தியாதிகள் பல செய்தாலும் அழகாகப்படுவதால், ஒரே வரியில் சொல்லிவிட்டேன்.

மீனாகுமாரிக்கு எடுப்பான கண்கள். வலது கையில் மட்டுமே நான்கு வளையல்கள். இடது கையில் சிட்டிசன். பெண்களுக்கான டிசைன். எந்த வண்ண சுடிதாரிலும் எடுப்பாக இருப்பாள். எனவே, உங்களுக்கு மீனாகுமாரியைப் பிடித்துப்போனதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. ‘உனக்குப் பிடிக்கலையா ராம்குமார்?’ என்று என்னைக் கேட்கிறீர்கள். ஊனமுற்றவன், கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாது என்றுதானே சொல்லி வந்தீர்கள். சரி விடுங்கள்… இப்போது நான் சொன்னதும் இனிமேல் சொல்லப்போவதும் நமக்குள் ரகசியமாக இருக்கட்டும்.

மீனாகுமாரி, நான் தங்கி இருக்கும் அறைக்குச் சொந்தக்காரருடைய ஒரே செல்ல மகள். அருகில்தான் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. படிக்கிறாள். இப்படி உங்களை அமரவைத்து மீனாகுமாரிபற்றி ரகசியம் பேசுவது, அவள் குடும்பத்தாருக்குத் தெரிந்தால், இந்த நகரில் இப்படி இனிமையான வீடு எனக்கு இல்லை என்று ஆகிவிடும். இரண்டு, மூன்று நாட்கள் எங்காவது பிளாட்ஃபாரத்திலோ, பஸ் நிறுத்தத்திலோ, சுரங்கப் பாதையிலோ தலைக்குத் துணி மூட்டை கொடுத்து, அட்டணங்கால் போட்டுக்கிடக்க நேரிடும். புரிந்து இருப்பீர்கள்… இது ரகசியம்.

இந்த மாதிரி குடும்பத்தோடு ஒட்டிய அறையில் என்னை மாதிரி தனியன் தங்கி இருப்பது எப்பேர்ப்பட்ட வசதி தெரியுமா? மீனாகுமாரியின் அம்மா தயவால் பால் காபி, புதிதாகத் தயாரிக்கப்படும் தின் பண்டங்கள், இல்லாத சமயங்களில் ரசம், மோர் இப்படி அடிக்கடி கிட்டும். இப்போது புரியுமே… மீனாகுமாரி மீது பிரியம்தோன்றி னால், பொறுக்கித் திங்கும் கோழிக்கு மூக்கைத் தறித்ததுபோல் ஆகிவிடும்தானே. தவிர சாப்பாடு, தின்பண்டம்பற்றிப் பேசத் துவங்கினேன் என்றால், பொழுது துவங்கி பொழுது மறையும் வரை பேசுவேன். நாம் பேச வந்தது தின்பண்டம்பற்றி இல்லை என்பதால், மீனாகுமாரிக்கே வந்துவிடுகிறேன்.

மீனாகுமாரிக்கு என் மீது கொள்ளைப் பிரியம். அதைவிட, என்னிடம் இருக்கும் புத்தகங்கள் மீது கொள்ளையோ கொள்ளைப் பிரியம். சில பேர் என்ன… ஏதெனத் தெரியாமல், பொழுதை ஓட்டப் படிப்பார் கள். இவர்கள் பரீட்சைக்கு என்று அசோகர், அசோகர் சாலை ஓரங்களில், சாலை ஓரங்களில் மரங்களை நட்டார், நட்டார் என்று மொண்ணை உருப்போட்டு பரீட்சை எழுதி பாஸ் செய்யும் கட்சி. சிலருக்கு நான்கைந்து பாரா படிக்கவே நேரம் பிடிக்கும். அத்தனை யோசிப்பு. ஆனால், மீனாகுமாரி தனி ரகம்.

ராணி முத்து, ராஜேஷ்குமார், சுபா, பாக்கெட் நாவல் என்று படித்து வந்தவள், திடீரென என்னிடம் கிடக்கும் எஸ்.ராமகிருஷ்ணன், சந்திரா, லீனா மணிமேகலை, ஸ்னேகிதன் என்று இவர்களை எல்லாம் எடுத்துப்போய் படிக்க ஆரம்பித்து, இப்போது கொஞ்சம் பொறுப்பாகத் தெரிகிறாள். நான்கைந்து கவிதைகள் எழுதி வந்து என்னிடம் நீட்டினாள்.

பெண் கவிகள் தொடர்ந்து களத்தில் நின்று சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாகக் குவிக்கும் தருணத்தில் மீனாகுமாரியுமா? இப்போது இவள் எழுதி நீட்டிய கவிதையிலேயே, வீட்டுக்கு வந்துபோகும் காகம், வயிற்றைத் தடவி நிற்கும் பிச்சைக்காரன், டைனோசர்கள் என்று இருக்கிறது. மேற் கொண்டு இனி உடலின் மொழி என்று எழுதத் தலைப்பட்டுவிட்டாள் என்றால், சொந்தமாகச் சூனியம்வைத்துக்கொண்டதுபோல் ஆகிவிடும். ஆக, கவிதை உலகுக்கு மீனாகுமாரி என்கிற பெண் கவிதாயினியை நுழைக்க முயற்சி எடுக்காமல், இருட்டடிப்புச் செய்துவிடுகிறேன்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக தஞ்சை ப்ரகாஷின், ‘மீனின் சிறகுகள்’ என்ற நாவலை என்னிடம் இருந்து தூக்கிப் போனாள் மீனாகுமாரி. ஐயோ! இதைப் படித்தால் ‘காய் கனிந்துவிடுமே’ என்று பயந்தேன். முன்பு எல்லாம் ரோட்டோரத் தள்ளுவண்டிக் கடைகளில் கிடைக்கும் புத்தகங்கள்தான் கனியவைக்கும் வேலையைச் செய்துகொண்டு இருந்தன. இப்போது அவை இல்லை. அவை எல்லாம் டி.வி.டி. தட்டுகளாக உருவெடுத்துவிட்டன. எடுத்துப் போனவள் ஒரு மணி நேரத்தில் கொண்டு வந்து புத்தக அடுக்கில் வைத்துவிட்டாள். ”அசிங்கமாயில்ல இருக்கு!” என்றாள். காய் கனியாது, இதுபற்றிப் பேசவும் என்னால் இயலாது. பிளாட்ஃபார ஞாபகம்தான். அடுக்குச் சோத்தை நம்பி ஒடுக்குச் சோத்துக்கும் துன்பமாயிட்டா?

”ஏதாச்சும் ஜோக் சொல்லுங்க ராம்குமார். காலேஜ்ல எல்லாருமே ஆளாளுக்குப் புதுசு புதுசா ஜோக் சொல்றாங்க. எனக்குத்தான் ஒண்ணும் தெரியறது இல்லை!” என்றவளுக்கு, ”எனக்கு நிறைய ஜோக் தெரியும். ஆனா, ஞாபக மறதி அதிகம்” என்றேன். சிரித்தாள். சில்லறைகள் சிதறுவது மாதிரி. நீங்க சொல்லாட்டிப் போச்சாது. நான் சொல்லவா?” என்றதும் மிரண்டேன். ஒரு முறை இப்படி சரி என்று சொல்லித்தான், ஏடாகூட ஜோக்குகளைச் சரமாரியாகக் குவித்தாள். என் தயக்கம் கண்டவள், ”இல்லை, அது மாதிரி இல்லை… இது புதுசு. என் தோழி ரீட்டா சொன்னது” என்று ஆரம்பித்தாள்.

”நோய் நோய்னு ஒருத்தன் எல்லா மருத்துவமும் பார்த்து சரியாகாம மனோதத்துவ டாக்டர்கிட்ட போனானாம். அவர் ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தாராம். ‘எனக்கு எந்த நோயும் இல்ல’ அதான் மந்திரம். காலையில் பதினஞ்சு தடவை, சாயந்திரம் பதினஞ்சு தடவை சொல்லணும். அவனும் அதைச் சொல்லிச் சொல்லி ரெடி ஆயிட்டானாம். அவனோட மனைவி பார்த்துட்டு, ‘தனியாவே தூங்குறோமே… டாக்டர்கிட்ட மந்திரம் கேட்கலாம்ல’னு சொன்னாளாம். அவனும் ‘சரிதான்’னு டாக்டர்கிட்ட போனானாம். டாக்டர் அதுக்கும் மந்திரம் சொல்லிட்டாரு. ‘என்ன மந்திரம் அது’ன்னு மனைவி கேட்டப்ப எல்லாம் அவன் சொல்லவே இல்லை. 10 நாள்ல ரெடி ஆயிட்டான். மனைவிக்கும் சந்தோஷம். ஆனா, அது என்ன மந்திரம்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டு, ஒருநாள் பாத்ரூம்ல அவன் முன கிட்டு இருக்கிறதைக் காது கொடுத்துக் கேட்டாளாம். ‘அவ என் மனைவி இல்லை, அவ என் மனைவி இல்லை!’ எப்படிங்க ராம்?” மீண்டும் அறைக்குள் சில்லறைகள் சிதறின. நான் உர்ர்ர்ர்ர்… என்று இருந்தேன்.

பாப்பா நல்ல ஜோக் சொல்லி இருக்கு, சிரித்திருக்கலாம் என்கிறீர்கள். எல்லாருமே சிரிக்கறாங்கன்னு பூனையும் ஓடிப்போய் பொடக்காலில் உட்கார்ந்துட்டுச் சிரிச்சுதாம். நான் மீனாகுமாரி போகட்டும் பிறகு சிரிச்சுக்கிறேன். எனக்குக் கொட்டாவி வந்தது. கொமரிப்பொண்ணு தனியாப் போனாலும் கொட்டாவி தனியாப் போகாதாம். மீனாகுமாரியும் கொட்டாவி ஒன்று போட்டபடி மீண்டும் என் புத்தக அடுக்கில் தேடலை ஆரம்பித்தாள்.

ஓஷோ புத்தகங்களில் எனக்கு ஈடுபாடு உண்டு. மதம், பெண் விடுதலை, காமம், காதல், தியானம் என்று நிறையப் பேசி இருக்கிறார் என்பதால், அவருடைய புத்தகங்களில் மஞ்சள் வண்ணத்தில் அடிக்கோடு இடும் பழக்கம் எனக்கு உண்டு. என்ன உண்மைகள் மறைந்து இருக்கோ என அவருடைய ‘மறைந்து இருக்கும் உண்மைகள்’ புத்தகத்தை எடுத்துக்கொண்டு, ”குட் நைட்” சொல்லி விடைபெற்றாள். ஆத்தா எப்படா போவா, திண்ணை எப்படா காலியாகும்னு இருந்தவன், கதவைத் தாளிட்டுக் கட்டிலில் விழுந்தேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓஷோ புத்தகத்தைத் திருப்பிக் கொண்டுவந்தவள், ”இவரு கடவுளா?” என்றாள்.

”பிறக்கவும் இல்லை… இறக்கவும் இல்லைனு போட்டு இருக்காங்க?” என்றாள். ஏனோ, அப்பாவித்தனமான கேள்விகளுக்கு என்னால்தான் அப்பாவித்தனமாகப் பதில் கள் சொல்ல முடியவில்லை. ”ஆமாம்” என்பதோடு முடித்துக்கொண்டேன். செத்தவன் கையில் வெத்தலை பாக்கு வைப்பதுபோல, என் கையில் புத்தகத்தை வைத்துவிட்டுப் போய்விட்டாள்.

எப்படியோ மீனாகுமாரி எனக்குத் தோழியாகிப் போனாள். கொடுப்பினை கொஞ்சம் வேணும்போல்தான் இருக் கிறது. ஆனால், காலம் ஒரே மாதிரி யாகவா இருக்கிறது.

மீனாகுமாரியின் முதல் காதல் கடுதாசி ‘மறைந்திருக்கும் உண்மைகள்’ புத்தகத்தின் எட்டாவது பக்கத்தில் இருந்தது.

‘திரும்பிய பக்கம் எல்லாம் புன்ன கைக்கிறாயே என் உள்ளம் கவர்ந்த கள்வனே!

எந்த நேரமும் உனைப்பற்றியே சிந்திக்கிறதே இந்த மனம்…

என்ன செய்ய?’

என்றெல்லாம் கேள்வி கேட்டுஇருந் தாள். அளவான குடும்பம் வளமான வாழ்வு வரை நீளமான கடிதம் அது. சொய்ங்… என அம்பு ஒன்று இதயத்தைத் துளைத்துக்கொண்டு போவதுபோல் படம் வேறு. நம் ஊர் மருது, ம.செ., எல்லோரும் தோற்றார்கள் போங்கள். ‘நான் அழகா?’ என்றொரு கேள்வி வேறு. வீட்டுல கட்டி வளர்த்துற மாட்டைப் பார்த்து, தெருவுல வண்டி இழுத்துட்டுப் போற வத்த மாடு நெனைக்கறதுக்கு என்ன இருக்குங்க?

முன்பு ஒரு முறை மீனாகுமாரியிடம், ”உன் கையெழுத்து அச்சுக்கொழிச்ச மாதிரி அழகா இருக்கு” என்றேன்.

”எங்கே… கோழி கிறுக்குன மாதிரி” என்றாள். கடிதமோ பிரின்ட்டிங் எடுத்துவைத்ததுபோலத்தான்.

காலையில் பஸ் நிறுத்தம் வரை உலகச் செய்திகளில் இருந்து உள்ளூர் செய்திகள் வரை லொட லொடவென வாசித்தபடியே வருபவள், மைக் செட்டைக் கழற்றி வீட்டில் போட்டு வந்துவிட்டாளோ என்று சந்தேகம் வரும் அளவுக்குப் பேச்சைக் குறைத்துக்கொண் டாள்.

பொட்டாட்டம் வந்தாள். பொட்டாட்டம் போனாள். தலைகால் புரியவில்லை. புத்தகங்களைக் கேட்டு எடுத்துப் போய்ப் படித்தவள், கேட்காமலேயே எடுத்துப்போகும் அளவுக்கு ஆகிவிட்டது. உரிமை எடுத்துக்கொண்டாளோ? புரிபடாத விஷயங்கள் எச்சுஎச்சா இருக்கும்போலப் பெண்களிடம். மீனைக் கேட்டா, தூண்டிலை வீசுவாங்க? மீனாகுமாரி வீசிவிட்டாள். கழுவுற மீன்லயும் நழுவுற மீனைப் பார்த்திருக்கீங்களா? நானேதான்!

இந்தச் சமயத்தில் என் ஆபீஸில் இருக்கும் அவந்திகாபற்றியும் நாம் ரகசியம் பேசி ஆக வேண்டும். இந்த அவந்திகா இருக்கே… இது ரொம்ப மாடர்ன். ஜீன்ஸ் பேன்ட், டி-ஷர்ட்தான். ஒரு 20 வயதுப் பெண் உதட்டை மென்றுகொண்டு, கண்களில் கொஞ்சம் விஸ்கி போதை காட்டியபடி, கொஞ்சம் சாய்மானமாக நின்று, ”இன்று இரவு என்னோடு தங்குவீரா?” என்று கேட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

‘அவந்தி… அவந்தீ… இது தப்பு அவந்தி. வீட்டுக்குப் போய் பகவத் கீதையோ, ஆத்திசூடியோ படி’ என்று தாட்டிவிடலாம் அல்லது ‘சரிதான் ஆட்சேபணை ஒன்றும் இல்லை’ என்றும் கூறலாம். இரண்டுமே இல்லாமல் ‘பார்க்கலாம்’ என்று சொன்னேன் நான். பின்னே, ‘சயனம் சொல்லும்பல்லியே போய் தாழித் தண்ணியில் விழுந்துடுச்சு பார்’ என்பீர்கள். இதெல்லாம் கடந்த ஒரு மாதம் முன்பாக நடந்தது. ஆபீஸ் விஷய மாக அவளோடு டூ வீலரில் சுற்றும் நிலை கள் உண்டு.

‘பாருங்கள், பல்லு போனவனுக்கு முறுக்குக் கடையில் என்ன ஜாப்?’ என்று என்னைக் கிண்டல் செய்யாதீர்கள். நாம் ரகசியம் பேசுகிறோம். மீனாகுமாரி எங்கள் இருவரையும் எந்த வீதியில் கண்டாளோ… அடுத்த நாள் நான் ஆபீஸ் நுழைந்ததும் அவந்திகா உஷ்ணமாக என்னைப் பிடித்துக் கொண்டாள். ”ராம், உன்னோட ஊர் மேயுற டாங்கியாம் நான். அதுவும் கோவேறு டாங்கியாம். உன்னை என் கக்கத்துல வெச்சுக்கப் பாக்குறேனாம். முணுக்முணுக்னு இருந்துட்டு த்ரீ ஹண்ட்ரட் வீட்டுக்கு ஃபயர் பத்த வெச்சிடுவனாம். பன்னி மாதிரிப் பேசுறா… ஷிட்!” என்றாள். எனக்குத் தாமசமாகத்தான் புரிந்தது. மீனாகுமாரி வழியில் எங்கோ பிடித்து இவளை வாட்டி இருக்கிறாள்.

கல்லு தடத்தைக் காணாதவரும் இல்லை, முள்ளு தடத்துல மொணையாதவனும் இல்லை. நமக்குக் கல்லும் வேணாம், முள்ளும் வேணாம். இதுபற்றி மீனாகுமாரியிடம் நான் எதுவும் கேட்கவில்லை. கேட்கப்போனால், அவளுக்கு விளையாடுவதற்கு ப்ளே கிரவுண்டு அமைத்துக்கொடுத்ததுபோல் ஆகிவிடும். ஊசி நான் இடம் கொடுத்தால்தானே, நூல் நுழையும்? பந்தியில் உட்காரப் போவதற்கு முந்தியே நம்ம பத்தியச் சாப்பாட்டைப்பத்தி யோசிக்கணும். பிளாட்ஃபாரம், துணி மூட்டை, சுருண்டு படுத்து இருக்கும் பேன்ட் அணிந்த வாலிபன் என்று எனக்கு லைட் அடித்துக்கொண்டே இருக்கிறது.

தவிர சாப்டாச்சா, குட்மார்னிங், போய் வருகிறேன் இந்த வார்த்தைகளைத் தவிர, வேறு வார்த்தைகளை மீனாகுமாரி என்னிடம் பேசவில்லை. இந்த மாதம் முழுக்கவே நானுமே சரி… ம், மார்னிங் என்றே முடித்துக்கொள்வதோடு சரி. ஆனால், இவை கூட வெறும் பாசாங்குகளாகவே எனக்குப்படுகிறது.

சரி, மீனாகுமாரி விஷயத்துக்கு என்னதான் தீர்வு என்று நீங்கள் கேட்கலாம். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணச் சொல்லியா எங்கம்மா டவுனுக்குப் பிழைக்க அனுப்பிச்சாங்க? இதற்கு சாப்பாடுபற்றியே நீ விலாவாரியாகப் பேசி இருக்கலாம் என்கிறீர்கள். ‘உரியில நெய்யை வெச்சுக்கிட்டு, ஊர் முழுக்க இனி தேடப்போறியா’ என்று கூறிச் சிரிக்கிறீர்கள். வேண்டாம்… பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவீர்கள்.

மீனாகுமாரி என் முகம் பார்த்து, ‘உங்களைக் காதலிக்கிறேன்’ என்று சொல்லிவிடுவாளா? சொல்லிவிட்டால் பிரச்னை முடிந்தது. ஆனால், அவளால் சொல்ல முடியாது. சரி, நீதான் சொல்லிவிடேன் என்கிறீர்கள். என்னை அப்படி முறைக்காதீர்கள். எனக்கு மீனாகுமாரி மீது காதல் இல்லை. இதனால் எனக்கு அது சுத்தமாகப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை. உங்களுக்கு எப்படித் தனித் தனி டேஸ்ட் இருக்கிறதோ, அதேபோல் எனக்கும் தனி டேஸ்ட் இருக்கத்தான் செய்கிறது. கண்ணாமூச்சி விளையாட என் வாழ்க்கையா? ஐயகோ! என் பெட்டிப் படுக்கையை எடுத்துக்கொண்டு வேறு எங்காவது நான் சென்றுவிட்டால், பிரச்னை முடிந்துவிடும்தான்.

மீனாகுமாரி தண்டவாளத்தில் நசுங்குவதற்காகவே ஒரு தலை வைத்து இருந்தாள். இல்லை கயிறு தேடுவாள், மருந்து குடிப்பாள் என்று எல்லாம் யோசிக்க வேண்டியதே இல்லை. சொந்த அறிவும் புத்தக அறிவும் அவளுக்கு உண்டு. காலம் மீனாகுமாரிக்கு ஒருநாள் வேறு பதில் சொல்லும். இப்படி ஒரு புள்ளப்பூச்சியா இந்தக் கலி காலத்தில்? என்கிறீர்கள் என்னிடம். உடனே முடிவு செய்யாதீர்கள்.

அதிலே பாருங்கள், கெதி கெட்ட நாய் அமாவாசை கும்பிட்டதுபோல… வெளியே அறை எதுவும் கிட்டாமல் அவந்திகாவின் குட்டி அறையில் ஒரு வாரம் இரவு நேரத்தில் கிடந்தேன்.

நீங்கள் தெரு முனையில் பார்த்த நண்பரிடம் ஆரம்பிக்கிறீர்கள்… ”விஷயம் தெரியுமா? நம்ம ராம்குமார் பயல் இருக்கானே… அவன் செஞ்ச காரியத்தைக் கேட்டா…” என்று!

– ஆகஸ்ட் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *