இது ஒரு ஸ்பாம் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 2,233 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘கார்த்தி, சின்னப் பிரச்சினை” என அதிகாலையிலேயே என் நண்பர் அப்பாவி கணேசன் எழுப்பினார்.

அப்பாவி கணேசன் பிரச்சினை என்றாலே அது ஒரு சின்னப் பிரச்சினையாகத்தான் இருக்கும். சின்னப் பிரச்சினை என்றால் கண்டிப்பாக ஒரு மொன்னையான பிரச்சினையாகத்தான் இருக்கும் என எரிச்சலுடன் எழுந்தேன்.

“பேஸ்புக்ல, 16 வயசுப் பெண் தற்கொலைப் பண்ணிக்கிற வீடியோன்னு ஒன்னு வந்துச்சு”

“யோவ், அதை எல்லாம் ஏன் பார்க்கிறீர்… அது ஸ்பாம்… நீங்க கிளிக் செஞ்சீங்கன்னா, உங்க பிரண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் அது போகும்”

அது தெரியும் கார்த்தி, இது ஸ்பாம் மாதிரி இல்லை, வீடியோவே இருந்துச்சு, அந்தப் பொண்ணு நிஜமாவே தற்கொலைப் பண்ணிக்குது”

“அப்போ, ஏதாவது சினிமா டிரெயிலர் ஆ இருக்கும்,படுத்துத் தூங்குங்க கணேசன்”

“கார்த்தி, கொஞ்சம் சீரியஸா கேளு … அந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிற ரூம்ல என் போட்டோ மாட்டி இருக்கு, திரும்பத் திரும்ப வீடியோவைப் பார்த்துட்டேன், அதுல என் போட்டோ இருக்குது, ரொம்பப் பயமா இருக்கு”

“கணேசன், அந்த வீடியோ லிங்கை எனக்கு அனுப்புங்க, மதியானம் பார்க்குறேன்”

அதன் பின்னர் எனக்குத் தூக்கம் வரவில்லை. எனக்கும் அடிக்கடி இந்த மாதிரி ஸ்பாம் வீடியோக்கள், பாருங்கள் பாருங்கள் டீன் ஏஜ் பெண், திறந்து காட்டுகின்றாள் என அடிக்கடி பேஸ்புக் டைம்லைனில் மேல் எழும்பும். யாஹூ காலத்தில் இருந்து பார்க்க வேண்டியதை எல்லாம் மெய்யாகவும் மெய்நிகராகவும் எதார்த்தமாகவும் பதார்த்தமாகவும் பார்த்துவிட்டதால், வெற்று ஆர்வம் கூட வந்தது இல்லை. கடைசியாக வீடியோ சாட்டில், நான் பார்த்தது காத்தரீனாவைத்தான், மால்மோவில் இருந்தபொழுது நிஜத்தில் அறிமுகமானவள், பின்னர் நான் ஸ்டாக்ஹோல்ம் வந்தபின் அடிக்கடி வீடியோ காதல் எங்களுக்குள் நடக்கும். கல்யாணம் செய்து கொள்ள வேண்டினாள், காதலுக்கும் காமத்திற்கும் இடையில் கல்யாணம் அவசியமில்லை என்ற மறுநாளில் இருந்து அவளைக் காணவில்லை.

“கார்த்தி, கார்த்தி” எனத் திரும்ப என்னை உலுக்கினார்.

“யோவ், என்னய்யா.. இப்போ”

“கார்த்தி, யார் பார்க்கிறாங்களோ, அவங்களுக்கு எல்லாம் அந்தப் பொண்ணோட ரூம்ல, அவங்க அவங்க போட்டோ வருது”

“கணேசன், இது சிம்பிள் ட்ரிக் ஆ இருக்கும், பேஸ்புக் போட்டோஸ்ல எதுனாச்சும் ஒன்னை ஆட்டோமெடிக் ஆ எடுத்துட்டு, அந்த வீடியோல சேர்க்கிற மாதிரி அப்ளிகேஷன் எழுதி இருப்பானுங்க… நோ வொர்ரீஸ்”

“அட, ஆமாம் கார்த்தி, எல்லோருக்கும் அவங்க புரபைல் போட்டோஸ் தான் வருது… கார்த்தி கார்த்திதான்… பிரில்லியண்ட் பாய்”

நல்லத்தூக்கம் தூங்கி எழுந்து, சாயங்காலம், கணேசன் எனக்கு அனுப்பி இருந்த அந்த வீடியோவை ஓடவிட்டேன். ஒரு பெண்ணின் கைகள் தெரிந்தது. மணிக்கட்டை அறுத்துக் கொள்கின்றாள். ரத்தம் சொட்டு சொட்டாக பொங்கி வழிகின்றது. மறுகையால், வெப்காம் பொசிஷன் சரி செய்யப்படுகின்றது. சுவற்றில், எனது படம் இருக்கின்றது… இருங்கள் இருங்கள்… அது என் பேஸ்புக் புரபைல் போட்டோ இல்லை. அது மால்மோவில் எடுத்தது. அந்தப் படத்தை எடுத்தவள் காத்தரீனா. அந்தப் படத்தை இதுவரை எங்குமே இணையத்தில் ஏற்றியதில்லையே….

வெப்காம் மீண்டும் சரி செய்யப்படுகின்றது… அந்தப் பெண்… அது காத்தரீனா…

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *