Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அடுத்த பொங்கலுக்கு!

 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. இந்த பழமொழியை தை மாதம் பிறக்கும் முன்பே எல்லோரும் சொல்லிக்கொள்வார்கள். வழி பிறக்குதோ இல்லையோ ஒரு மன ஆறுதலுக்காவது சொல்வதுண்டு. காவிதாவுக்கும் அவளுடைய பத்துவயது மகன் திணேஸ்சுக்கும் கடந்த ஆறு வருடங்களாக தை பிறந்தும் வழி பிறக்கவே இல்லை.

வன்னியின் சிறப்புக்களில் ஒன்றாக திகழும் ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரன் எழுந்தருளியுள்ள ஒட்டுசுட்டான் கிராமத்திலேயே வாழ்ந்து வருகிறாள் கவிதா. அவள் இளம்வயதில் விளையாட்டாக கற்றுக்கொண்ட தையல் இன்று அவளுடைய குடும்ப சீவியத்தை கொண்டு நடத்த உதவுகின்றது.

தினேஸ் படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரன். சென்ற ஆண்டில் நடைபெற்ற புலமைப்பரீட்சையில் சித்திபெற்றவன். சிறுவர்களுக்கே உரிய குறும்பும்;, குழப்படியும் அவனிடம் இருந்தாலும் அவன் மனதில் ஒரு ஏக்கம் அப்பா இல்லையே!

கவிதாவும் தினேஸ்சும் கடந்த ஆண்டு கூட பல ஆர்ப்பாட்டங்களுக்கு சென்றிருப்பார்கள். நடுவீதியில் நின்று திணேஸ் ‘எங்கள் அப்பாவை விடுங்கள் எங்கள் அப்பாவை விடுங்கள்’ என உலகறிய கத்தியிருப்பான். ஆனால் அதையாரும் செவிசாய்ப்பாதாய் இல்லை. இராணுவமும், பொலிசாரும் என மாறிமாறி பலதடடைகள் பெரும் விசாரணைகளை மேற்கொண்டு பதிவுகளை எடுத்துச் சென்றிருப்பார்கள். ஆனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

தினேஸின் அப்பா ஆதவன். விடுதலைப்புலிகளின் பிரேங்கி படையணியின் தளபதியாக இருந்தவர். புதுக்குடியிருப்புப்பகுதியில் நடைபெற்ற சண்டையின் போது விழுப்புண் அடைந்திருந்தார். மருத்துவ சிக்சைக்காக இராணுவத்திடம் ஒப்படைத்த கவிதா தானும் தினேஸ்சை அழைத்துக்கொண்டு அதவனுடன் கூடவே சென்றாள். ‘உங்க கணவன நாங்க கொஸ்பிட்டல் அனுப்பிறது நீங்க ரெண்டு போரும் முகாம் போங்க’ எனக்கூறி இருவரையும் செட்டிகுளத்தில் உள்ள அகதிகள் முகாமுக்கு அனுப்பினார்கள் இராணுவத்தினர்.

தினேஸின் அப்பாவை போல விழுப்புண் அடைந்த நூற்றுக்காக்கான விடுதலைப்புலி உறுப்பினர்களை அவர்களின் உறவினர்கள் இராணுவத்திடம் சிகிச்சைக்காக ஒப்படைத்தனர்.

அன்று ஒப்டைத்த அப்பாவை இன்றும் தேடிக்கொண்டே இருக்கின்றனர். இன்னும் கிடைக்கவிலலை. ஆதவன் என்றோ ஒரு நாள் வருவார் என்ற நம்பிகையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் இருவரும்.

தைப்பொங்கலுக்கு முதல் நாள் ஆங்காங்கே வெடியோசைகள் கேட்கத்தொடங்கியது. பொங்கலுக்கான நிறைய தையல் வேலைகள் இருந்த படியால் கவிதா தையலில் முழ்கி இருந்தாள். எங்கிருந்தோ ஓடிவந்த தினேஸ் ‘அம்மா அம்மா இந்த முறை நாங்க பொங்கலயா’

‘அப்பா எப்ப வறாரோ அப்பாதான் எங்களுக்கு பொங்கல்’ எனக் கரகரத்த குரலில் சொல்லிக் கொண்டு கலங்கிய விழியோடு தினேஸைப் பார்த்தாள்.

ஏமாற்றத்துடன் கிணற்றடிப்பக்கம் சென்ற தினேஸ் தந்தையின் நினைவுடன் தோடமரத்தின் கீழ் அமர்ந்து கொண்டான்.

‘அப்பா இருக்கேக்க பொங்கல் என்றால் எப்படியிருக்கும்’

பொங்கலுக்கு இரண்டு நாளைக்கு முன்பே விடுப்பில் வந்திடுவார் ஆதவன்.

மூவரும் மோட்டச் சைக்கிளில்; புதுக்குடியிருப்புக்குச் சென்று சேரன் பல்பொருள் வாணிபத்தில் புதுஉடுப்புக்களையும், பொங்கலுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும், பாட்டாசுகளையும் வேண்டிக்கொண்டு வருவார்கள். புதுக்குடியிருப்புக்கு செல்லும் போதெல்லாம் பாண்டியன் சுவையூற்றில் ஐஸ்கிறீம் குடிப்பதற்கு மறந்ததேயில்லை.

பொங்கலுக்கு முதல்நாள் தினேஸின் வீட்டில் இருந்து தான் முதாலாவது பாட்டாசு வெடிக்கும் அப்போதுதான் சிலருக்குத் தெரியவரும் நாளைக்கு பொங்கல் என்று, இரவு பூராகவும் தந்தையும் மகனும் பட்டாசுகளையும், ஈக்கிள் வானங்களையும் கொழுத்தி ஒரே கொண்டாட்டாம் தான். இருவரும் நடுச்சாமத்துக்கு பிறகுதான் படுத்துக்கொள்வார்கள்.

அதிகாலையே மூவரும் எழுந்து குளித்து புத்தாடையை அணிந்து பொங்கலுக்கு ஆயுத்தமாவர்கள்.

வீட்டு முற்றத்தில் சானகத்தால் மெழுகி, மாவால் கோலம் போட்டு மண் அடுப்பில், மண்பானையை வைத்து பொங்கி பால் வடியும் போது தினேஸ் வெடிகொழுத்துவதிலேயே குறியாய் இருப்பான். அந்த சின்ன வயதிலும் வெடிகொழுத்துவதென்றால் அவனுக்கு அலதிபிரியம். தினேஸ் தன்னுடய சின்னக்கையால் பொங்கல் பானையில் அரிசியை அள்ளிப்போடுவான். அந்த அழகை இருவரும் பார்த்து மகிழ்வார்கள்.

பொங்கல் பொங்கி முடிந்ததும் அதனை சூரியபகவானுக்கு படைத்தபின் தினேஸ் தேவாரம் பாடியே முடித்துவைப்பான்.

சக்கரைப் பொங்கல் என்றாள் தினேஸ்சுக்கு ரெம்ப பிடிக்கும்.

இருந்தாலும் தாயுடன் சென்று அக்கம் பக்கத்தில் உள்ள எல்லோரும்க்கும் கொடுத்து விட்டு வந்துதான் அவன் சாப்பிடுவான்.

பொங்கல் முடித்துக் கொண்டு மூவரும் ஒட்டுசுட்டான் சிவன் கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து, நண்பர்கள் வீடுகளுக்கும் சென்று வருவார்கள். இனிதே பொங்கலும் நிறைவு பெற, அடுத்த நாள் ஆதவனும் விடுப்பு முடிந்து கடமைக்கு சென்றுவிடுவார்.

அன்று முழுக்க அவனுக்கு பொங்கல் நினைவுகளே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இரவுப்பொழுதில் ஊரெங்கும் வெடியோசைகள் அதிரத்தொடங்கியது. கவிதா தையலை முடித்துக்கொண்டு திணேஸ்சுடன் படுத்துக்கொண்டாள்.

ஆதிகாலையில் இருந்து மழை துறிக்கொண்டிருந்தது. கவிதா எழுந்து வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள். தினேஸ் எழுந்து கிணற்றடிக்குச் சென்றான்.

‘கவிதாக்க கவிதாக்க’ என அயல் வீட்டு யமுனா கூப்பிட்டுக்கொண்டு உள்ளே வந்தாள்.

‘என்ன கவிதாக்க இந்த முறையும் நீங்க பொங்கல போல’

‘இல்ல யமுனா’

‘மழையால பொங்க கொஞ்ச நேரம் போச்சு’ என தான் கொண்டு வந்த சர்க்கரை பொங்கல கவிதாவிடம் கொடுத்துவிட்டு சென்றாள்.

‘தினேஸ் தினேஸ்….’

அம்மாவின் குரல் கேட்டு ‘வறேன் வறேன்’ என கத்திக் கொண்டு கிணற்றடியில் இருந்து ஓடிவந்தான்.

‘இந்தாட யமுனா அன்ரி சர்க்கரை பொங்கல் தந்திட்டு போற கொஞ்சம் சாப்பிடு’ என ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொடுத்தாள்.

பொங்கல் கிண்ணத்த கையில் வேண்டிய தினேஸ் ‘அம்மா அடுத்த பொங்கலுக்கு அப்பா வந்திடுவாரா’

கவிதாவுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் மாரிகால வெள்ளம் போல பெருக்கெடுத்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
காலை வெய்யில் இதமாக அடித்துக் கொண்டிருக்க படலையடியில் 'றீங் றீங்' பெல் சத்தம் யாரெனப் பார்போம் என வெளியில் வந்தாள் துளசி. 'அட செந்தில் அண்ணையே... வாங்கோ' என்று கூப்பிட்டுக் கொண்டே படலையை நோக்கி நகர்ந்தாள் துளசி. 'அது பிள்ளை வந்து.. வீட்டுத்திட்டத்துக்கு ...
மேலும் கதையை படிக்க...
பானுவுக்கும் அவளுடைய மூன்று பிள்ளைகளுக்கம் மிகுந்த சந்தோஷமான நாள். தடுப்பில் இருந்த நகுலன் இன்று விடுதலை. அந்த செய்தி கேட்டதில் இருந்து அவள் உள்ளத்தில் பெரும் சந்தோஷம். யுத்தம் நிறைவடைந்து எல்லோரும் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது, நகுலனை ஓமந்தை இராணுவ முகாமில் வைத்து கைது ...
மேலும் கதையை படிக்க...
சுமதி தெரிந்தவர்கள் எல்லோருக்கும் போன் எடுத்து 'எங்கேயும் தெரிஞ்ச இடத்தில வீடு வடகைக்கு இருக்கிறதா' என விசாரித்துக் கொண்டிருந்தாள். தாய் வசந்தி அடுப்படியில் சமையல் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். மகள் வேலைக்கு போகும் முன் சமைத்து முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் ...
மேலும் கதையை படிக்க...
அன்று விடுமுறை நாள் சீலன் பாடசாலை செல்லவில்லை. இன்றைக்கு தாத்தாவுடன் நல்ல விளையாட்டுத்தான் என நினைத்துக்கொண்டு வெளியே வந்த சீலன் தாத்தா வழமையா இருக்கும் இடத்தில் காணவில்லை. தாத்தாவை எழுப்புவதற்காக பாடுத்திருக்கும் அறைக்குச் சென்றான். அங்கு தாத்தாவை காணாததால் அலறிக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
முல்லைத்தீவுக்கு அண்மையில் உள்ள விவசாயக் கிராமமே முத்துஐயன்கட்டு. இங்கு வாழ்பவர்கள் தமது ஜீபநோபாய தொழிலாக விவசாயத்தினையே மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் இல்லையெனில் இவர்களுக்க வாழ்க்கையே இல்லை. பல்வேறு பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினை கொண்டே தமது அன்றாட ...
மேலும் கதையை படிக்க...
துளசி..
சாட்சி
வீடும் வளவும்
தாத்தா
களிமண் கணினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)