திருட்டுப்பசங்க

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 9,817 
 

ஏதோ தட்டும் சத்தம் கேட்டது. அப்பொழுது சந்தானம் மாடியில் இருக்கும் தனது அறையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு தாண்டியிருந்தது. அநேகமாக இரண்டு மணியாக இருக்கக் கூடும். மொட்டை மாடியில் இருந்து வீட்டிற்குள் வருவதற்கான கதவில் இருந்துதான் சத்தம் வந்தது. பூனையாக இருக்கும் என்றுதான் சந்தானம் முதலில் நினைத்தார். தொடர்ந்து சத்தம் கேட்டதில்தான் அவரது தூக்கம் கலைந்தது. விபரீதம் நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் முன்பாகவே தட்டுவதன் வேகமும் சத்தமும் அதிகமானது. தட்டுவது என்பதை விடவும் உடைப்பது என்ற சொல்தான் பொருத்தமானதாக இருக்கும்.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “யார்றா அது” என்றார். வெளியே இருந்து கதவை உடைத்து கொண்டிருப்பவர்களுக்கு இவரின் குரல் நிச்சயம் கேட்டிருக்கும். ஆனாலும் கதவு உடைபடுவது நிற்கவில்லை. என்ன ஆனாலும் வீட்டிற்குள் நுழைந்துவிடுவது என்ற முடிவோடுதான் உடைக்கிறார்கள் போலிருக்கிறது. சந்தானம் கதவுக்கு அருகில் சென்று பார்த்த போது அது கிட்டத்தட்ட பிளக்கும் நிலையில் இருந்தது. சற்று குரலை உயர்த்தியவாறே உள்ளுக்குள் இருந்தபடியே கதவு திறந்துவிடாமல் அழுத்தினார்.

சந்தானம் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்திருக்கிறார். கோடிகளில் புரளாத ஆனால் இலட்சங்களுக்கு குறைவில்லாத பனியன் கம்பெனி. வீடு திருப்பூரில் இல்லை. பல்லடம் பக்கத்தில் இருக்கும் மங்கலத்தில். வீட்டிற்கும் கம்பெனிக்கும் இருபது கிலோமீட்டர் இருக்கும். தினமும் ஸ்கார்ப்பியோ காரில் போய் வந்துவிடுகிறார். ஸ்கார்ப்பியோ ஓட்டும் அளவிற்கு இளம் வயது இல்லையென்றாலும் ஆள் முறுக்கமாகத்தான் இருப்பார்.

வீட்டின் கீழ் தளத்தில் அவரது மனைவியும், மகளும், மகளின் குழந்தையும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைக்கு ஒரு வயது கூட முடிந்திருக்கவில்லை. குழந்தை பிறப்பிற்கு பிறகாக தாய் வீட்டிற்கு வந்த சந்தானத்தின் மகள் அடுத்த வாரம்தான் கணவன் வீட்டிற்கு போவதாக இருக்கிறாள். இந்தச் சமயத்தில்தான் கதவை உடைக்க முயற்சிக்கிறார்கள். வீட்டிற்குள் வந்துவிட்டால் குழந்தையை வைத்துக் கூட மிரட்டுவது அவர்களின் திட்டமாக இருக்க கூடும் என்று சந்தானம் பயந்தார்.

திருடர்கள் ஒரு வாரமாகவே இந்த இடத்தை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சந்தானத்தின் வீடு மட்டும் அந்தப் பகுதியில் தனித்து இருக்கிறது. சத்தமிட்டாலும் கூட அருகில் யாருக்கும் காது கேட்கப்போவதில்லை. அதுமட்டுமில்லாமல் பெரிய பங்களாவாகவும் இருக்கிறது. அதனால்தான் இந்த வீட்டை முடிவு செய்து கொண்டார்கள்.

இரவு பன்னிரெண்டு மணிக்கெல்லாம் ஆம்னி வேனிலும் ஒரு பைக்கிலும் வந்துவிட்டார்கள். ஆம்னியை சற்று தள்ளி நிறுத்திவிட்டு பைக்கை காம்பவுண்ட் சுவர் ஓரமாக நிறுத்தினார்கள். முதலில் இரண்டு பேர் மட்டும் காம்பவுண்ட் ஏறி குதிப்பது என்று முடிவு செய்து கொண்டார்கள். மற்றவர்கள் ஆம்னி வேனிலேயே இருந்து கொண்டார்கள். வீட்டிற்குள் குதித்த இருவரில் ஒருவன் வீட்டின் மேல் நின்று கொள்வது. இன்னொருவன் மொட்டைமாடியில் இருக்கும் கதவைத் தட்டி உடைப்பது என்பது முன்பே திட்டமிடப்பட்டிருந்ததுதான். அதை அச்சு பிசகாமல் செயல்படுத்தத் துவங்கினார்கள்.

கதவை உடைத்து உள்ளே சென்றுவிட்டால் மொத்தக் கட்டுப்பாட்டையும் அவர்களால் எடுத்துக் கொள்ள முடியும். பிறகு செல்போனில் தகவல் கொடுத்தால் ஆம்னி வேனில் இருப்பவர்களும் உள்ளே நுழைந்துவிடுவார்கள். முடிந்தவரை வீட்டில் இருப்பவர்களை மிரட்டிப் பறிப்பது, தேவைப்பட்டால் கொலையும் செய்வது என்று யோசித்திருந்தார்கள். ஆனால் உள்ளே குழந்தை இருப்பது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

இப்பொழுது தங்களது திட்டத்தில் நாற்பது சதவீதத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். சந்தானத்தின் சத்தமும் கதவு உடைபடும் ஓசையும் கீழே உறங்கிக் கொண்டிருந்த சந்தானத்தின் மனைவிக்கு கேட்டிருக்கிறது. ஓடிச்சென்று வெளிக்கதவை திறக்க முயன்றபோது அது வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. யாரும் வீட்டிற்குள்ளிருந்து வெளியே சென்றுவிடாமல் தடுக்க திருட வந்தவர்கள்தான் தாழிட்டு வைத்திருக்கிறார்கள். தூக்கம் கலைந்தும் கலையாமலும் சந்தானத்தின் மனைவி வேகமாக மாடிக்கு ஓடி வந்த போது படியில் இருக்கும் ஜன்னல் வழியாக வீட்டீன் மேல் ஒருவன் நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டார். கையில் கடப்பாரையுடன் ஆஜானுபாகுவான தோற்றத்தில் நின்று கொண்டிருந்தான். சந்தானத்தின் மனைவிக்கு ஒருகணம் உடல் சில்லிட்டது.

கதவிடுக்கு வழியாக விட்டு நெம்புவதற்கும் தேவைப்பட்டால் கதவை உடைப்பதற்கும் தோதான வகையில் நீண்ட கடப்பாரை போன்ற கம்பியின் இரண்டு பக்கமும் வளைத்து வைத்திருக்கிறார்கள். சந்தானத்தின் மனைவி மேலே வந்து சேர்ந்தபோது கம்பியின் ஒரு முனை கதவிடுக்கின் வழியாக உள்ளே வந்துவிட்டது. சந்தானம் போராடிக் கொண்டிருந்தார். இனி தனது கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்று சந்தானம் பயந்தபோது குழந்தையின் முகம் நினைவில் வந்துபோனது.

அவசரகதியில் மாடிக்கு வந்துசேர்ந்த சந்தானத்தின் மனைவி செல்போனில் கொஞ்சம் தள்ளிக் குடியிருக்கும் முருகேசனை அழைத்தார். முதல் அழைப்பிலேயே முருகேசன் ஃபோனை எடுத்துவிட்டார். சந்தானத்தின் மனைவி பதட்டத்தில் அரைகுறையாக உளறினார். முருகேசன் தூக்கக் கலக்கத்தில் அரைகுறையாகக் கேட்டார். முருகேசன் தனது வீட்டிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தாலும் கூட போதும். இவர்கள் வீட்டை உடைத்துக் கொண்டிருப்பது தெரிந்துவிடும். ஆனால் முருகேசனுக்கு அவ்வளவு சீக்கிரமாக புரியவில்லை.

இன்னும் ஒரே அடியில் கதவு உடைந்துவிடும் என்ற நிலைமை வந்திருந்தது. அறைக்குள் சென்று தாழிட்டுக் கொள்ளுங்கள் என்று சந்தானம் தனது மனைவியிடம் சொன்னார். தன்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொன்ன போது சந்தானத்தின் குரல் உடைந்திருந்தது. இன்னும் சில வினாடிகளுக்குள் கதவை உடைத்துவிடுவார்கள் என்று தோன்றியது.

மேலே நின்று கொண்டிருந்தவன் கதவை உடைப்பவனிடம் ஓங்கி அடி என்ற உத்தரவைக் கொடுக்கவும் முருகேசன் தனது வீட்டின் விளக்குகளை போட்டுவிட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. சந்தானத்தின் வீட்டுக்கதவை யாரோ உடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த முருகேசன் பேயறைந்ததைப்போல ஆகிவிட்டார். மேலே நிற்பவன் முருகேசனை பார்த்துவிட்டான். சுதாரித்துக் கொண்ட முருகேசன் ”திருடன் திருடன்” என்று கத்தத் துவங்கினார். இப்பொழுது நிலைமை தங்களின் கட்டுப்பாட்டை இழப்பதை உணர்ந்த திருடர்கள் கடப்பாரையை விட்டுவிட்டு மொட்டை மாடியிலிருந்து பைப் வழியாக இறங்கினார்கள். கீழே வருபவர்களில் ஒருவனையாவது பிடித்துவிடலாம் என்று முருகேசன் முன்னேறினார். இரண்டு பேருமே பெரும் உருவமாக இருந்தார்கள். இருட்டில் முகம் சரியாகத் தெரியவில்லை. முருகேசன் ஒருவனை நெருங்கியபோது போது “கன் இருக்கு. ஷூட் பண்ணிடுவேன்” என்றான். பிள்ளை குட்டிகளோடு இருக்கும் தனக்கு எதுக்கு வம்பு என முருகேசன் ஒதுங்கிக் கொண்டார்.

பெரும் உருவத்துடன் நகர்ந்தவன் திரும்பி மேலே பார்த்தான் அப்பொழுது ஜன்னல் வழியாக சந்தானம் அவர்களை பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். எச்சரிக்கை செய்யும் விதமாக ஆள்காட்டி விரலை அசைத்துக் கொண்டே சென்றவன் ஆம்னி வேனில் ஏறிக் கொண்டான். அந்த விரலசைவு திருடுவது என் உரிமை என்று பிரகடனப்படுத்துவதாக இருந்தது. சந்தானம் வியர்வையில் நனைந்திருந்தார்.

குறிப்பு:
(கடைசியாக எழுதப்பட்ட திருடர்களின் க்ளாசிக் காலம், களவும் கற்று மற்றும் திருட்டுப்பசங்க ஆகிய கதைகள் களவின் மூன்று காலகட்டத்தை சித்திரமாக்கும் முயற்சி. முயற்சியின் வெற்றி தோல்வியை வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். நன்றி)

– ஜூலை 27, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *