கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2019
பார்வையிட்டோர்: 5,216 
 

கையில் பூக் கூடையுடன் கோயில் பக்கவாட்டில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டில் திரும்பியவளை நெருங்கினாள் அவள். .

தொட்டில் கட்டியவளுக்கு வயது 28. நல்ல களையான முகம். எடுப்பான நாசி. அழகு சொட்டும் நல்ல அகலமான கண்கள். புருவ மத்தியில் பொட்டு.

இவளை நெருங்கியவளுக்கும் ஏறக்குறைய அதே வயது. மாநிறம். ஒல்லியான உடல்வாகு. பார்த்ததுமே பரிச்சயப்படுத்திக்கொள்ளுமான பளீர் முகம், புன்னகை. சாமி கும்பிட்டு வந்ததற்க்கடையாளமாய் நெற்றியில் விபூதி, குங்குமம்.

” வணக்கம்….! ”

இப்படி திடீர் வணக்கத்தை எதிர்பார்க்காத இவள், ” வ….ணக்கம்….! நீ…ங்க…..? ” குழப்பத்துடன் ஏறிட்டாள்.

” நான் ஆதித்யா. பக்கத்து ஊர். உங்க பேர் ? ”

” ரம்யா.! ”

” குழந்தை வேண்டி தொட்டில் கட்டுறீங்களா ? ” ஆதித்யா அவளைச் சகஜமாக கேட்டாள்.

” இல்லே ! ”

” அப்புறம்…..? ”

” ஊர்ல, நாட்டுல….இருக்கிற எல்லா குழந்தைகளும் நல்லா இருக்கனும், வளரும்ன்னு கட்றேன்.”

இந்த பதில் ஆதித்யா எதிர்பாராதது.

” அப்படியா….!! ” மெல்ல வாயைப் பிளந்து தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியவள்;, ” பிரகாரம் சுத்திடீங்களா ? ” கேட்டாள்.

” இல்லே. ”

” வாங்க சுத்தலாம். ”

இருவரும் நடந்தார்கள்.

ஓரளவிற்குப் பெரிய கோயில் என்றாலும் அதிகக் கூட்டம் இல்லை. வெள்ளிக் கிழமை என்பதால்…அங்கும் இங்குமாகக் கொஞ்சம் பெண்கள், ஆண்கள்.

” உங்களுக்குக் குழந்தை இருக்கா ? ” ஆதித்யா கேட்டாள்.

” இல்லே…! ”

” நிஜமாவா சொல்றீங்க…..?! ”

” ஆமாம். ”

” இப்படிப்பட்ட நீங்களா மத்தக் குழந்தைகளுக்காக தொட்டில் கட்டுறீங்க ?? ”

” இல்லாதப்பட்டவங்களுக்குத்தான் இருக்கிற அருமை தெரியும். அந்த வகையில் நான் அவுங்களுக்காக வேண்டி கட்றேன்.” என்ற ரம்யா….கோயில் சுவரோரம் இருந்த துர்க்கை அம்மன் முன் நின்று கைகூப்பி வணங்கி…..நெற்றியில் கொஞ்சம் குங்குமம் எடுத்து இட்டுக் கொண்டு நடந்தாள்.

” உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. ” சொல்லி ஆதித்யாவும் துர்க்கையைக் கும்பிட்டு ரம்யாவைத் தொடர்ந்தாள்.

ரம்யா பதில் சொல்லவில்லை.

” உங்க வீட்டுக்காரர் என்ன பண்றார் ? ”

” இங்கே… அரசாங்கத்துல வேலை. பொதுப்பணித் துறையில் அதிகாரி. ”

” சந்தோசம். உங்களுக்குக் கலியாணம் முடிஞ்சு எத்தனை வருசம் ஆச்சு ? ”

” ஏழு. ”

” ஏழு வருசமாவா குழந்தை இல்லே.?! ”

” ஆமாம். ” ரம்யா….பிரகார திருப்பத்திலுள்ள விநாயகர் மண்டபத்தில் ஏறி அவரை வணங்கி முடித்து இறங்கினாள்.

” அதுக்காக முயற்சி எடுத்தீங்களா ? ” ஆதித்யாவும் அவரைக் கும்பிட்டு அவளைத் தொடர்ந்து நடந்து கொண்டே பேச்சுக் கேட்டாள்.

” ஏகப்பட்ட கோயில், குளங்கள் ஏறி மூழ்கி…எழுந்தாச்சு. ”

” பரிகாரங்கள்….? ”

” நிறைய அதையும் முடிச்சாச்சு.” ரம்யா மூலவரின்; பின் பக்க சுவற்றை தொட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு அப்படியே… திருப்பத்தில் இருக்கும் முருகன் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் மண்டபம் நோக்கி நடந்தாள்.

” இதுக்காக நிறைய நாட்டு வைத்தியம், நகர வைத்தியம் எல்லாம் முடிச்சாச்சு. ” சொல்லி முருகன் வள்ளி தெய்வானைகளை வணங்கி பின் பிரகார குறுக்கால் நடந்தாள்.

அங்கு….சண்டிகேஸ்வரைக் கும்பிட்டாள்.

ஆதித்யாவும்.. கும்பிட்டு….” என்ன கோளாறு ? ” பேச்சைத் தொடர்ந்தாள்.

ரம்யாவிடமிருந்து பதில் இல்லை.

” மருத்துவ பரிசோதனை செய்தீங்களா ? ”

” ரெண்டு பேரும்….அதையும் முடிச்சாச்சு.”

” யார் மேல குறை ? ”

” வீட்டுக்காரர் மேல.”

” எ……என்ன குறை ? ”

” அவர் உயிரணுக்களில் வீரியம் கம்மி, எண்ணிக்கையும் குறைவு. நாலு பிரசண்ட்தான் இருக்கு.”

” அதுக்கு மருந்து மாத்திரை…எடுத்துக்கிட்டீங்களா ரம்யா ? ”

” நிறைய எடுத்தாச்சு பிரயோசனமில்லே. ”

” அப்புறம்…..? ”

” அப்புறமென்ன…உங்களுக்கு நான் குழந்தை, எனக்கு நீங்க குழந்தைன்னு முடிவெடுத்து நாங்க அந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைச்சாச்சு.”

” அப்படியா ..!! ”

” ஆமாம். வேற வழி ? ”

” நிறைய இருக்கு ரம்யா.” ஆதித்யா மெல்ல சொன்னாள்.

கோயில் கிணற்றைத் தாண்டினார்கள். நடந்தார்கள்.

” என்ன வழி ? ”

” குளோனிங் முறை.”

” அப்படீன்னா…”

” விந்து வங்கிகள் மூலம் ஆண் வீரிய உயிரணுக்கள் வாங்கி….நம்ம உயிரணுவையும் அதையும் ஒன்னா சேர வைச்சு கருவாக்கி….நம்ம கார்ப்பபையில் அதை ஊசி மூலம் வைச்சி வளர்த்து பெத்துக்கிறது.”

” ஐயோ வேணாம். உவ்வே.! ” ரம்யா குமட்டினாள்.

” ஏன்….என்ன…? ” ஆதித்யா அவளைப் புரியாமல் பார்த்தாள்.

” அது அடுத்தவன்கிட்ட படுக்காம பெத்துக்கிற முறை. நெனைக்கவே அருவருப்பு, கொதிப்பாய் இருக்கு. உடம்பு கூசுது. எனக்கு அந்தமாதிரி குழந்தை தேவை இல்லே. எனக்கு என் புருசனாலதான் குழந்தை வேணும். எங்க ரெண்டு பேர் வாரிசுதான் எனக்குத் தேவை. இது வேணாம். பேசாதீங்கன்னு சொன்ன மருத்துவமனையிலும் என் கணவரிடமும் அடிச்சு சொல்லிட்டேன்.! ” என்றவாறு நவக்கிரகத்தைச் சுற்றினாள் ரம்யா.

” தத்து..! ” ஆதித்யாவும் அவளை விடாமல் நவக்கிரகத்தைச் சுற்றினாள்.

” அதைவிட இது நல்லது. ஆனாலும் வேணாம்.”

” ஏன் ? ”

” இது நமக்கு சம்பந்தா சம்பந்தமில்லாத அடுத்தவங்க குழந்தை ! ”

” நிஜம்தான்.! இருந்தாலும்…..ஒரு ஏழைக் குழந்தை, அனாதைக் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தால்….நாம அதுக்கு ஆதரவளிச்சி வாழ்வளிச்சது போலிருக்கும். நமக்கும் வாரிசுக்கு ஒரு குழந்தை ஆகும். ” சொன்னாள் ஆதித்யா.

ரம்யா எதுவும் பதில் சொல்லாமல் வாய் மூடி நடந்தாள்.

” என்ன யோசனை ? ” ஆதித்யாவும் அவளை விடாமல் கேட்டாள்.

” வேணாம்.! ” சொன்ன ரம்யா முதல் சுற்று முடிந்ததற்கடையாளமாய் மூலவர் பிரகார வாசலைப் பார்த்து கும்பிட்டுவிட்டு அடுத்தச் சுற்றிக்கு நடந்தாள்.

ஆதித்யாவும் அவளை விடாமல் நடந்தாள்.

” இளமை…..! இன்னைக்கு நமக்கு வாரிசு, அடுத்தவங்க உதவி ஒத்தாசை தேவை இல்லாமல் இருக்கலாம். பிற்காலம்…..கணவன் மனைவி இழப்பு, வயோதிகம், நோய் நொடின்னா….நம்மைக் காப்பாத்த கண்டிப்பா ஒரு ஆள், வாரிசு வேணும்.” சொன்னாள்.

” அப்படியெல்லாமில்லே. அதெல்லாம் இந்தக் காலத்துக்கு அநாவசியம்.”

” புரியலை…?! ” ஆதித்யா அவளைக் குழப்பமாகப் பார்த்தாள்.

” அதுக்கெல்லாம் ஆசிரமம், முதியோர் காப்பகம் இருக்கு. அங்கே போய் சேர்ந்தால் எந்தவித கஷ்டம், தொந்தரவு இல்லாமல் போய் சேர்ந்துடலாம்.”

” இருக்கலாம். ஆனாலும்….நம்ம வாரிசு, பெத்து வளர்த்தெடுக்கிற குழந்தைகளுக்கு ஈடாகாது. அதுக்கு மேல.. அங்கே…நம்ம பேத்தி, பேரப்புள்ளைக மகிழ்ச்சி, கொண்டாட்டம் கிடைக்காது. அதையும் தாண்டி நம்ம குடும்ப நீட்சி, வளர்ச்சி எல்லாம் இருக்காது. ” சொன்னாள் ஆதித்யா.

” உண்மைதான். அதெல்லாம் யோசிச்சு… இந்த பிறப்பில் இதுதான் வாழ்க்கைன்னு முடிவாகியாச்சு.”

இரண்டாவது சுற்று பாதி முடிந்தது.

” ரம்யா! உங்களுக்கு நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல சரியான ஆளில்லே. அதான் உங்களுக்கு இந்த முடிவு. நான் சொல்றேன். தனிமை ரொம்ப ரொம்ப கஷ்டம்மா….! ” என்றாள் ஆதித்யா.

” கஷ்டம்ன்னு நெனைச்சா எல்லாம் கஷ்டம். ஆதித்யா. நான் அதையெல்லாம் தாண்டி மாறிட்டேன். போரடிச்சா நல்ல புத்தகங்கள் படிப்பேன். மன மாறுதலுக்காக நானும் என் வீட்டுக்காரரும் வாரம் ஒரு முறை…..குழந்தைகளுக்குத் தேவையான தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு…. ஏதாவது ஒரு அனாதை ஆசிரமம் போய்…கொடுத்து, கொண்டாடி, குழந்தைகளைக் கொஞ்சி வருவோம். அப்புறம்….பிஞ்சு குழந்தைகள் நல்லா வளரனும், வளர்க்கனும் என்கிறதுக்காக நான் எந்த ஊர்ல இருந்தாலும்…. செவ்வாய், வெள்ளி.. அங்கே இருக்கிற அந்த ஊர் கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்து…. இப்படி தொட்டில் கட்டி வருவேன். இப்படி எந்தவித கஷ்டமும் இல்லாமல் எங்கள் வாழ்க்கை நிறைவாய் ஓடுது. ” என்றாள்.

” ஆனாலும் வாரிசு முக்கியம் வேணும் ரம்யா. ” ஆதித்யா அழுத்திச் சொன்னாள்.

ரம்யா மௌனமாய் நடந்தாள்.

” பெத்தவங்க முகம் தெரியாத பொறந்த குழந்தையை எடுத்து நம்ம சொந்த குழந்தை… வாரிசாவே வளர்க்கலாம் ரம்யா.”

இதற்கும் அவள் வாய்த் திறக்கவில்லை.

” எனக்குத் தெரிஞ்ச பெண் ஒருத்தி. மூணு பெண் குழந்தைகளுக்குத் தாய். ஆண் வேணும்ன்னு நாலாவதாவும் வயித்தைத் தள்ளிக்கிட்டிருக்காள். இதுவும் பெண் குழந்தையாய் இருந்தால்….என்ன செய்யிறதுன்னு யோசனை. மாமியார், கணவன் வேற…. பொட்டப் புள்ளையாய்ப் பொறந்தால் வீட்டுக்குள்ளேயே நுழைய வேணாம்ன்னு கண்டிச்சு சொல்றாங்க. அவளென்ன செய்வாள் பாவம். மீறி…. வழி இல்லாமல் வந்தால்…. கள்ளிப் பாலைக் கொடுத்து கொன்னுடுவேன்னு சொல்றாங்க. சுமக்கிறவள் பாவம் பொறக்குறப் புள்ளை பொழைக்குமோ பொழைக்காதோன்னு அழுது மடிந்தாள். அவளைப் பார்த்து பேசிய எனக்கு மனசு துடிச்சுப் போச்சு. அப்படியெல்லாம் ஆகவிடமாட்டேன். நீ அழாததேன்னு அவளுக்கு ஆறுதல் சொல்லி…..நான் அவள் கணவன், மாமியாரை அழைச்சி….நமக்குத் தேவை இல்லாத குழந்தை பிறந்தால்….இப்படியெல்லாம் அநாவசியமாய்க் கொல்ல வேணாம். இல்லாதப்பட்ட வேண்டியவங்களுக்கு விலைக்கு வித்தால்…..நமக்கு மத்தப் புள்ளைங்களைக் காப்பாத்த பணத்துக்குப் பணமும் ஆச்சு. புள்ளையும் உசுரா எங்கேயோ நல்லா வாழும்ன்னு சொன்னேன். அவுங்களும் சரின்னு சம்மதம் சொல்லி தலையாட்டி இருக்காங்க. அந்த குழந்தையை நீ எடுத்து வளர்த்தால்…உன் பொறப்பே புண்ணியமாப் போகும். கஷ்டம் தீரும். ” சொன்னாள்.

அவர்களின் இரண்டாவது சுற்று முடிந்து மூன்றாவது சுற்று தொடங்கியது.

ரம்யா வாய் மூடி நடந்தாள்.

” என்ன யோசனை. நீ மத்த குழந்தைகளுக்காக பிரார்த்தனை பண்ணி தொட்டில் கட்றே. அதைவிட புண்ணியம்…. நீ மனசு வைச்சு இந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தால்….ஒரு ஏழைக்குடும்பம், புள்ளைக்கு நல்லது காட்டி வாழ்வளிச்சது போலிருக்கும். ” சொன்னாள்.

பேசாமல் நடந்த ரம்யா மனசுக்குள் மாறுதல் வந்தது.

” அந்தக் குழந்தையை என்ன விலைக்கு முடிக்கலாம் ? ” கேட்டாள்.

” ஏழைப்பட்ட குடும்பம் மூணு லட்சத்துக்கு முடிக்கலாம்ன்னு பேசி இருக்கேன். குறைச்சு முடித்தால் பாவம். ” என்றாள்.

” பொறக்கிறது ஆணாய் இருந்தால்…..? ” ரம்யாவிற்குள் சந்தேகம் வந்தது.

” உனக்கு என்ன குழந்தை விருப்பம் ? ” ஆதித்யா அவளைத் திருப்பிக் கேட்டாள்.

” ஏன்…? ” இவள் அவளை ஏறிட்டாள்.

” .அவுங்க வறுமை. அதிக விலை பேசி அதையும் முடிக்கலாம். ”

” என்ன விலை ஆகும்.? ”

” ரெண்டு லட்சம் அதிகப்படுத்தி அஞ்சுல முடிக்கலாம். இந்தப் பணம் அவுங்களுக்கு வாழ்வாதாரம், அமிர்தம். கண்டிப்பா கொடுக்க சம்மதிப்பாங்க. உனக்கு என்ன குழந்தை வேணும்…ரம்யா ? ” ஏறிட்டாள்.

” எனக்குப் பெண் குழந்தைதான் பிடிக்கும். அதுதான் விருப்பம். ”

” அப்போ….. வயித்துல இருக்கிறது பெண் குழந்தைன்னே நினை. பொண்ணாய்ப் பொறக்கனும்ன்னே வேண்டிக்கோ.”

” …………………. ”

” ஏன்….இன்னும் என்ன யோசனை ? புருசன்கிட்ட சொல்லி சம்மதம் கேட்கனுமா ? கண்டிப்பா கேளு. வீட்டுக்காரர் சம்மதம் முக்கியம். அவர் உன் பேச்சைக் கேட்க மாட்டார். இப்போ வாழும் வாழ்க்கையே போதும்ன்னு சம்மதம் சொல்ல தயங்குவார்ன்னா சொல்லு நான் பேசி அவரை வழிக்குக் கொண்டு வர்றேன்.”

” …………………………….. ”

” இன்னும் என்ன தயக்கம்..? பணப்பிரச்சனையா ? ”

” அதெல்லாம் இல்லே. ”

” அப்புறம் என்ன யோசனை ? ”

ரம்யா மூன்றாவது சுற்று முடித்து….ஒரு ஓரமாகப் போய் அமர்ந்தாள். ஆதித்யாவும் அவளருகில் அமர்ந்தாள்.

” குழந்தை எப்போ கிடைக்கும்…? ” ரம்யா கேட்டாள்.

” நிறை மாசம். அவளுக்கு முந்தாநாளே வலி வந்து மருத்துவமனையில் சேர்த்தாச்சு. ஆனா…டாக்டரம்மா பரிசோதிச்சு…..இது பொய் வலி;. ஆனாலும்…..இன்னைக்கோ, நாளைக்கோ….இல்லே இந்த வாரமோ கண்டிப்பா புள்ளை பொறக்கும்ன்னு சொல்லி இருக்காங்க. நான் சேர்த்துவிட்டு வந்ததோட சரி. எனக்கு வேற வேலை. திரும்பிப் போய் பார்க்கலை. பிரசவம் ஆச்சா, ஆகலையா தெரியலை. ”

ரம்யா கொஞ்சமாய் யோசனை செய்து….

” அவள் எந்த மருத்துவமனையில் இருக்காள் ? ” கேட்டாள்.

” இந்த ஊர் அரசு மருத்துவமனையில்தான். ஏன்…? ”

” போய் நேரடியாவேப் பார்த்து பேசி முடிக்கலாம். ”

” வேணாம். அது சரி வராது. ”

” ஏன்…? ”

” அது கொடுத்து வாங்குற ரெண்டு பேருக்குமே கஷ்டம். ”

” புரியலை…?! ”

” நேரடியாய்ப் பேசி வாங்கினால்….பெத்தவள் கண்ணுக்கு கையில் வாங்கும் பணம் பெரிசா தெரியாது. தன்னைவிட்டுப் போகும் குழந்தையும், வாங்கிப் போகிறவர்கள் முகமும்தான் கண்ணுக்கு நல்லாத் தெரிஞ்சு வாழ்நாள் முழுக்க சங்கடப்படுத்தும். அதே மாதிரி…குழந்தையை வாங்கும் நமக்கும்….அந்த குழந்தை தன்னுடையதாய் மனதில் ஒட்டாது. இது அடுத்தவங்க குழந்தை பணம் கொடுத்து வாங்கி இருக்கோம்ங்குற நெனப்பும் அவுங்க முகம்தான் என்னைக்கும் கண்ணுக்குள் நின்னு சங்கடப்படுத்தி நம்மைப் பாடாய்ப் படுத்தும். என்னை மாதிரி சம்பந்தமில்லாதவர்களிடமிருந்து வாங்கினால்……பணத்தைக் கொடுத்துப் பொருளை வாங்குவது போல. யாருக்கும் யார் முகமும் தெரியாது, கண்ணில் வராது. வித்தவங்களுக்குப் பணம் பிரதானமாகப் போகும். நமக்கும் பிள்ளை பிரதானமாகப் போய் மனசு நம் வாரிசாகவே ஏத்துக்கும். ” சொன்னாள்.

ஆதித்யா சொன்னது ரம்யாவிற்கு ஏற்புடையதாய் இருந்தது. ஆனாலும்…. யோசனை.

” இன்னும் என்ன தயக்கம். நான் பெத்தவங்களுக்கு முழு தொகையும் கொடுக்காமல் இடையில் எடுத்துக்கிட்டு கொஞ்சமாய்க் கொடுத்து தில்லு முல்லு பண்ணுவேன்னு பயமா..? ” என்று எதிரி மனதைப் படம் பிடித்தது போல் ஆதித்யா பட்டென்று கேட்டாள்.

” அப்படியெல்லாம் இல்லே.” ரம்யா அதை அவசரமாக மறுத்தாள்.

இருந்தாலும் ஆதித்யா தொடர்ந்தாள்.

” எனக்கு அப்படியெல்லாம் குறுக்குப் புத்தி கிடையாது. ஒரு பொட்டப்புள்ளை உசுரைக் காப்பாத்தனும் என்கிற அக்கரை. அதன் மூலமா… ஒரு ஏழைக் குடும்பத்தைக் கரையேத்தனும் என்கிற நெனப்பு தானேத் தவிர வேற எந்த யோசனையும் கிடையாது. என் வீட்டுக்காரர் துபாய்ல வேலை பார்த்துத் திரும்பியவர். நிறைய சொத்து, லட்சக் கணக்குல பணம் இருக்கு. எங்க ரெண்டு புள்ளைங்களும் ஊட்டி கான்வென்டுல படிக்கிறாங்க. நாங்கதான்….பொச்சரிப்பு, பொறாமையில் சொந்த ஊர்ல வாழப் பிடிக்காமல் இங்கே பக்கத்து ஊர்ல வந்து வாழ வந்திருக்கோம். ” சொன்னாள்.

ரம்யாவிற்கு அவள் சொன்ன விதமே மனதுக்குக் கஷ்டமாய் இருந்தது.

” ஆதித்யா! குழந்தையை என் வீட்டுல கொண்டு வந்து கொடுத்து பணம் வாங்கிப் போக முடியுமா ? ” கேட்டாள்.

” எங்கே வீடு ? ”

” இங்கேதான் பக்கம். ”

” வேணாம். அது சரி வராது. பச்சைக் குழந்தையை இவ்வளவு தூரம் ஆட்டோவுல கொண்டு வந்து கொடுக்கிறது கஷ்டம். குழந்தை தாங்காது. மருத்துவமனைக்குக் கொஞ்ச தூரத்துல பொதுவான ஒரு இடம்….இல்லே இப்படி .கோயில்ல வைச்சு கொடுத்து வாங்கிக்கலாம். குழந்தையைத் தெய்வம் கொடுத்தது மாதிரியும் இருக்கும். அதுக்கான எந்த நல்லது கெட்டதையும் தெய்வம் ஏத்துக்கும், பார்த்துக்கும். உங்க வாழ்க்கையில் தீமை எதுவும் அண்டாமல் துணை நிற்கும். ” சொன்னாள்.

‘ என்ன ஒரு நல்ல எண்ணம் ? ‘ – ரம்யாவிற்குள் ஓடியது. அப்படியே…அரசு மருத்துவமனைக்கு அருகில் எந்த கோயில் இருக்கிறது ? என்று மனசுக்குள் அலசினாள்.

ஒரு கிலோ மீட்டர் தள்ளி உள்ள எல்லை மாரியம்மன் கோயில் தட்டுப் பட்டது. பெரிய கோயில் விஸ்தாரமானது.

சொன்னாள்.

” அந்த கோயில்லேயே வைச்சு நாம கொடுத்து வாங்கிக்கலாம். நீ இந்த நிமிசத்திலிருந்து பணத்தைக் கையில வைச்சிக்கிட்டுத் தயாராய் இரு. இன்னையிலிருந்து எண்ணி மூணு நாளைக்குள் குழந்தை உன் கையில் கிடைக்க நான் உத்திரவாதம். குழந்தை பிறந்திருக்கும்….மருத்துவமனைலிருந்தோ வீட்டிலிருந்தோ வாங்கி வந்து உன்கிட்ட ஒப்படைக்கிறதுதான் என் வேலை. குழந்தை என் கையில் கிடைச்ச அடுத்த விநாடியே நான் போன் பண்றேன். நீ உடன் பணத்தோடு வந்து அந்த எல்லை மாரியம்மன் கோயில்ல இரு. நானும் வந்துடுறேன். கொடுத்து மாத்திக்கலாம். உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கும். உன் போன் நம்பரைச் சொல்லு ? ” என்ற ஆதித்யா…. கீழே சுற்றும் முற்றும் பார்த்து எதையோத் தேடினாள்.

” என்ன தேடுறீங்க ? ” – ரம்யா.

” கோயிலுக்கு வந்ததால கையில கைபேசி எடுத்து வரலை. அதான் உன் போன் நம்பரை எழுதி எடுத்துப் போக தாள் பார்க்கிறேன். ” தேடினாள்.

” பேனா…? ”

” அதுவும் கிடையாது. ! ” என்ற ஆதித்யா….” தம்பி ! ” இவர்களை கடந்து சென்ற ஒரு இளைஞனை அழைத்தாள்.

” என்னக்கா ? ” அவன் நின்று திரும்பிப் பார்த்தான்.

” பேனா இருக்கா ? ”

” இருக்குக்கா. ”

” நம்பர் எழுத தாள் இருக்கா ? ”

” இருக்குக்கா..” சொல்லி சட்டைப் பையில் கையைவிட்டு பேனாவும் சிறு பாக்கெட் நோட்டும் எடுத்துக் கொண்டு இவர்கள் அருகில் வந்தான்.

” சொல்லு ரம்யா ? ” என்றாள் ஆதித்யா.

ரம்யா சொன்னாள்.

அவன் எழுதி தாளைக் கிழித்தான்.

ஆதித்யாவே அதை கை நீட்டி வாங்கி, ” ரொம்ப நன்றி தம்பி ! ” சொன்னாள்.

” பரவாயில்லேக்கா. ” சொல்லி அவன் அகன்றான்.

” சரி ரம்யா. நாம போகலாம்.” சொல்லி ஆதித்யா எழுந்தாள்.

உடன் ரம்யாவும் எழுந்தாள். இருவரும் கோயில் வாசல் நோக்கி நடந்தார்கள்.

” பணத்தோட நீ மட்டும் வருவீயா உன் புருசனும் வருவாரா ? ” ஆதித்யா கேட்டாள்.

” அவர் வரமாட்டார். ”

” ஏன் ? ”

” அவருக்கு விசயத்தைச் சொல்லாமலேயே திடீர்ன்னு குழந்தையைக் கண் முன் காட்டி இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போறேன் ! ”

” மிரண்டு… அவர் ஏத்துக்காம போகப்போறார் ! ”

” மாட்டார். அவருக்கே இந்த தத்தெடுக்கிற ஆசை உண்டு. நான்தான் பிடிவாதமாய் அடுத்தவங்க பெத்தக் குழந்தை நமக்குத் தேவை இல்லேன்னு தடுத்து நிறுத்தி முட்டுக்கட்டைப் போட்டு இருக்கேன். அதனால கண்டிப்பா ஏத்துப்பார், சந்தோசப் படுவார். எந்த பிரச்சனையும் இருக்காது.”

கேட்ட ஆதிர்யாவிற்குத் திருப்தியாய் இருந்தது.

இருவரும் கோயில் விட்டு வெளி வந்து பிரிந்தார்கள்.

மூன்றாம் நாள் மாலை. 5.30 மணி.

அலுவலகம் விட்டு வீட்டு வாசலுக்கு வந்து தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி படி ஏறிய தினேஷ் வழக்கம் போல் சாத்தி இருக்கும் கதவில் கையை வைத்தான்.

திறக்க வில்லை.

தள்ளிப் பார்த்தான். விலகவில்லை.

அழைப்பு மணி அழுத்தினான்.

திறக்கவில்லை.

மறுபடியும் அழைப்பு மணி அழுத்தினான். அசைவில்லை.

” ரம்யா…! ” கதவைத் தட்டி உரக்க அழைத்தான்.

சத்தம் இல்லை. எந்தவித எதிர்வினையுமில்லை.

மறுபடியும் சத்தம் போட்டு அழைத்துத் தட்டினான்.

வீடு அதே அமைதி.!

உடன் கைபேசி எடுத்து…தொடர்பு கொண்டான்.

அழைப்பு மணி சென்றது.

” ஹலோ..! ” அவள் குரல் ஒலித்தது.

” கதவைத் திற. ”

” நான் வீட்ல இல்லே.”

” எங்கே இருக்கே ? ”

” நம்ம ஊர் காவல் நிலையத்துல இருக்கேன். ”

எதிர்பாராத செய்தி. சொரக்கென்றது.

” அங்கே ஏன் ? ” பதற்றமாகக் கேட்டான்.

” பதறாமல் நேரா இங்கே வாங்க சொல்றேன்.” அணைத்தாள்.

‘ ஏன் என்ன பிரச்சனை ? எதற்கு அங்கு போனாள் ? ‘ – தினேஷ் மண்டைக்குள் கேள்விகள் குடைய…..நிறுத்தி வந்த இரு சக்கரவாகனத்தை உயிர்ப்பித்து விரட்டினான்.

அரை மணி நேரத்தில் காவல் நிலைய வாசலில் நிறுத்தினான்.

அங்கு…நாலைந்து இரு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, காவல் நிலைய ஜீப் நின்றது.

தினேஷ்….வாசலில் துப்பாக்கி ஏந்தி நின்ற காவலாளியைத் தாண்டி உள்ளே நுழைந்தான்.

அங்கே…. நாளைந்து காவலர்கள். இரண்டு மேசை, நாற்காலிகள். ஒன்றில் ஏட்டு. அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். எதிரில் அமர்ந்து ஒரு காவலாளி அவருக்கு உதவிக்கொண்டிருந்தான்.

இன்னொன்றில் காவல் நிலைய கண்காணிப்பாளர். அவர் எதிரில் ரம்யா. நாற்காலியில் இருந்தார்கள்.

படபடப்புடன் மனைவி அருகில் சென்றான்.

” எ….என்ன ரம்யா ? ” வேர்த்தான்.

” சார்.! இவர் என் கணவர் தினேஷ்.” – ரம்யா தன் எதிரிலிருந்தவருக்கு இவனை அறிமுகப்படுத்தினாள்.

”சார்! பயப்படுறா மாதிரி ஒன்னுமில்லே. மேடம் பக்கத்துல உட்காருங்க சொல்றேன்.” என்றார் அவர் இவனைப் பார்த்து.

இவன் குழப்பமாக அமர்ந்து எதிரில் உள்ளவரைப் பார்த்தான்.

சட்டைப் பையில்….கண்காணிப்பாளர், பொன்னுதுரை பெயர் இருந்தது. முகத்தை ஏறிட்டான்.

” சார் ! உங்க மனைவி ரம்யா. சரியான நேரத்தில் தகவல் கொடுத்து கையும் மெய்யுமாய் ஒரு குழந்தைக் கடத்தல் ஜோடியை கோயில்ல வைச்சு கைது பண்ண உதவி இருக்காங்க. ” என்றார் அவர்.

தினேஷால் நம்பமுடியவில்லை.

” கடத்தினவங்க அதோ சிறையில் இருக்காங்க. கடத்தப்பட்டக் குழந்தை அதோ அங்கே தாய்கிட்ட பால் குடிச்சிக்கிட்டிருக்கு. ” பொன்னுதுரை இருந்த இடத்தில் இருந்தபடியே இடத்தைக் காட்டினார்.

தினேஷ் திரும்பிப் பார்த்தான் சிறையில் ஒரு ஆணும் பெண்ணும் நின்றார்கள்.

அடுத்து சுவரோரம் ஒட்டிப் போடப்பட்டிருந்த பெஞ்சில் இளம்பெண் ஒருத்தி சப்பளம் போட்டு அமர்ந்து தன் பிஞ்சு குழந்தையை மார்போடு அணைத்து பாலூட்டிக் கொண்டிருந்தாள்.

பொன்னுதுரை பேச்சைக் கேட்ட அவள்….

” ஆமாம் சார். இது என் முதல் குழந்தை. தலை பிரசவம். படுபாவி நான் கட்டிலேர்ந்து கக்கூசுக்குப் போன சமயம் பார்த்து எங்கிருந்தோ வந்து…இவள் என் செல்லத்தைத் தூக்கி வந்து உங்க மனைவி ரம்யா அம்மாகிட்ட விற்கப் பார்த்திருக்காள். அவுங்க சுதாரிச்சு இங்கே தகவல் கொடுக்கலைன்னா…இங்கே என் செல்லம் என் கைக்குக் கிடைச்சிருக்காது, காணாமல் போயிருக்கும் ! ” தழுதழுத்தாள்.

தினேஷ் திரும்பி… எதிரிலிருந்த பொன்னுதுரை மேல் பார்வையைப் படியவிட்டான்.

” இந்த ஜோடிக்குக் குழந்தைகளைக் கடத்தி விக்கிறதுதான் தொழில். ஊருக்கு ஊர் பெயர் மாத்தி வீடு எடுத்துத் தங்குவாங்க. அடுத்து…. முதல் வேலையாய் தங்கும் ஊரிலுள்ள முக்கிய கோயில், குளங்களுக்குப் போய்… பிள்ளை இல்லாதவங்களைக் கண்டு பிடிச்சு, பேச்சுக்கொடுத்து வாடிக்கையாளரைப் பிடிப்பாங்க. வாடிக்கையாளரைப் பிடிச்சு முடிஞ்சதும்…அரசு மருத்துவமனை பிரசவ வார்டுக்குப் போய்… இந்தப் பெண் மாதிரி பெத்தவ குழந்தையை விட்டுப் போன சமயமாய்ப் பார்த்து அதைக் கடத்தி வந்து கொடுத்து காசு பார்ப்பாங்க. நாங்க முறையாய் விசாhரித்தில் ஜோடிங்க தங்கள் தொழில் ரகசியத்தை எல்லாம் உடைச்சிட்டாங்க. ” என்ற பொன்னுதுரை உடன் ரம்யாவைப் பார்த்து, ” உங்க உதவிக்கு ரொம்ப நன்றி மேடம். ” சொல்லி…..” .சார் ! நீங்க வர்றதுக்குள்ளே…மேடத்துக்கிட்ட புகாரெல்லாம் வாங்கி எங்கள் பக்க வேலைகளை முடிச்சிட்டோம். மேடத்தை நீங்க பயமில்லாம அழைச்சுப் போங்க.” சொன்னார்.

இருவரும் நாற்காலியை விட்டு எழுந்து நடந்தார்கள்.

சிறைக்குள் நின்ற ஜோடி இவர்களைப் பார்த்து தலைகுனிந்தார்கள்.

நடந்து அந்த இளம்பெண்ணைக் கடக்கும்போது….

”அம்மா! நீங்க நல்லா இருக்கனும். எனக்கு வாரிசைக் கொடுத்து என் வயித்துல பாலை வார்த்ததுமில்லாம எனக்கு வாழ்க்கையேக் கொடுத்திருக்கீங்க, ” என்று குழந்தையை மார்பை விட்டு அகற்றாமல் ரம்யாயைக் கையெடுத்துக் கும்பிட்டு தழுதழுத்தாள்

காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த தினேஷ்…..

” எப்படி…எப்படி ரம்யா இது.?!! ” இன்னும் தன் காது, கண்களை நம்ப முடியாமல் தன் அருகில் வந்த மனைவி முகத்தைப் பார்த்து திக்கினான்.

” பொம்பளைக் குழந்தைங்களுக்கு மத்தவங்க நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் சொல்லிக் கொடுக்கிறோமில்லே. அதுபோலத்தான் இதுவும். நாமும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருந்தால் நல்ல நட்பு, நல்ல பேச்சு, கெட்டப் பேச்சு கண்டுபிடிச்சு கொஞ்சம் புத்திசலித்தனத்தையும் உபயோகப்படுத்தினால்….யாரும் எந்த வித சிக்கலிலும் மாட்டாமல் இப்படி நிறைய சாதிக்கலாம் !”. சொன்னாள்.

” புரியலை….! ” ஆளை நிறுத்தி ஆழமாகப் பார்த்தான்.

” அந்தக் குழந்தைக் கடத்தல் பொம்பளை ஆதித்யா என்னை விடாமல் பின்னிப் பின்னிப் பேசியதிலிருந்தே ஓரளவுக்கு முழிச்சேன். அடுத்து…..அவள் உனக்கு ஆண் குழந்தை விருப்பமா பெண் குழந்தை விருப்பமான்னு கேட்டதும் ‘ சரி இவள் குழந்தை கடத்தி ! ‘ என்ற முடிவுக்கு வந்து எச்சரிக்கையானேன். இல்லாதவங்களை விட இருந்து இழக்கிறவங்களுக்குத்தான் வலி அதிகம். இவளைப் புடிச்சி குடுத்துடனும்ன்னு அப்பவே முடிவு பண்ணி வீட்டுக்கு வந்து நேரா காவல் நிலையம் போனேன். அங்கே பொன்னுதுரையைச் சந்திச்சேன். சார் நிலைமை இப்படி. இரண்டு நாள்ல நான் உங்களுக்கு போன் பண்ணுவேன். உடனே வந்தால்…கடத்தல்காரர்களைக் கையும் மெய்யுமாய்க் கண்டிப்பா பிடிக்கலாம் ! சொன்னேன். அவரும் தலையாட்டினார். அவள் குழந்தையோடு கிளம்பும்போது எனக்குப் போன் பண்ணினாள். நான் பணம் எதுவும் எடுக்காமல்….வீட்டைவிட்டுக் கிளம்பும்போது பொன்னுதுரைக்குப் போன் பண்ணி இடத்தைச் சொல்லி…புறப்பட்டேன். சார் உடனே தன் இரு சக்கரவாகனத்தில் சாதாரண உடையில் ஒரு போலீஸ்காரரோடு எனக்கு முன்னால் போய் கோய்pல் வாசலில் நின்னார். நான் போனதும்… இருவரும்…கோயில்ல என்னைக் கண்காணிச்சப்படி கண்ணுக்கு மறைவாய் தலைமறைவாய் இருந்தாங்க. ஆதித்யா… தன் கணவர், குழந்தையோடு கோயிலுக்குள் வந்து என்னிடம் வந்தாள். பொன்னுதுரையும் போலீஸ்காரரும் கையும் மெய்யுமாய் அவர்களைக் கைது பண்ணினாங்க. வேலை முடிஞ்சுது. ” சொன்னாள்.

கேட்ட தினேசுக்குள் பிரமிப்பு, புல்லரிப்பு. உற்சாகம் தாங்க முடியவில்லை. தாங்கள் நிற்பது காவல்நிலைய வாசல், பொது இடம் என்பதையும் மறந்து…” என் செல்லம்டி நீ ! ” என்று கொஞ்சி ரம்யாவை இறுக்கி அணைத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *