வருவாள், காதல் தேவதை…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 8,619 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40

அத்தியாயம்-36

எவ்வளவு ஆசைகள் வந்தாலும் அதை அடக்குகிறவன் அமைதியடைகின்றான். எல்லாவற்றையும் அடைய வேண்டுமென எண்ணுபவன் அமைதியை இழக்கின்றான். -பகவத்கீதை 

சரண்யா வெளியில் சென்றதும் சுஜிதா கதவை சார்த்திவிட்டு வந்து ஆகாஷின் அருகில் அமர்ந்தாள். அவளைக் கண்டதில் அவன் முகம் மலர்ந்திருந்தது. 

“யாரவ..?” 

”தூரத்து சொந்தம்… ஹெல்புக்காக வந்திருக்கா”

”இவதான் அந்த சரண்யாவா?” 

“ம்…” 

”என்ன ‘ம்?’ உடம்பு துடச்சு விட வேற ஆள் கிடைக்கலயா, இல்ல உங்களுக்கே இது வேண்டியிருக்கா?” 

“ஹாஸ்பிடல்ல நர்ஸ் பண்றதில்லையா? அது மாதிரிதான் சுஜி. ஏன் பொறாமையார்க்கா? அப்பொ நாளைலேர்ந்து நீயே துடைச்சு விடு. நீயே எல்லாம் செய்! உன் கை பட்டாலாவது நா எழுந்து நடக்கறேனான்னு பார்ப்போம்.’ 

“டாக்டர் என்ன சொல்றார்?” 

”நீ பக்கத்துல இருந்தா சரியாப் போய்டும்னு சொல்றார். அந்த பவுடரை எடுத்து போட்டுவிடேன் சுஜி” 

சுஜிதாவின் முகம் ஒரு மாதிரியாயிற்று.

“இதெல்லாம் எனக்கு பழக்கமில்ல ஆகாஷ். ஒரு மேல் சர்வன்ட் போட்டுடுவோம். எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். வரச்சொல்றேன். ஒரு ஆயிரம் ரூபா கொடுத்தா போதும் உங்களுக்கு வேணுங்கற எல்லா வேலையும் செய்வான்.’ 

”அம்மாட்டதான் கேக்கணும். அவங்க சரின்னு சொன்னா வரச் சொல்லு. ஆமா அம்மாவைப் பார்த்தயா?” 

“பார்த்துட்டு வந்துடறேன்” 

சுஜிதா எழுந்து வெளியில் வந்தாள். சாரதாவின் அறைக்கு சென்றாள். இவளைப் பார்த்ததும் வாயெல்லாம் பல்லாக எழுந்து உட்கார்ந்தாள் சாரதா.

”யப்பா..! எவ்ளோ நாளாச்சு சுஜி உன்னைப் பார்த்து! என்ன பரிட்சையா?” 

”ம்… எப்டியிருக்கீங்க ஆண்ட்டி?” 

”என்னத்த சொல்ல சுஜி. மகாலஷ்மி மாதிரி இருந்த நீ இந்த வீட்டை விட்டு எப்ப வெளில போனயோ அப்பொ பிடிச்சுது இந்த வீட்டுக்கு சனி. பாரேன் எவ்ளோ பெரிய கஷ்டம் வந்துடுச்சு. லட்ச லட்சமா பணம் போயாச்சு. இன்னும் ஆகாஷ் எழுந்து நடந்த பாடில்ல. இப்ப நீ வந்துட்ட இல்ல! இனி னி எல்லாம் சரியாப் போய்டும் பார். இனிமே எல்லா பொறுப்பும் மறுபடியும் உங்கிட்டதான். இந்த சாவிய வாங்கிக்க சுஜி. நீ போனதும் கண்ட தரித்திரங்களும் தங்கற கூடாரமாய்டுச்சு இந்த வீடு. அவ என்ன பிளான்ல உள்ள வந்துர்க்கான்னு தெரியல. அவளுக்கு முதல்ல கல்தா குடுத்து வெளில அனுப்ப வேண்டியது இனி உன் சாமர்த்தியம்.” 

கடைசி வரிகளை ரகசிய குரலில் சொல்லி நிறுத்தினாள். சற்று கழித்து கேட்டாள்.

“ஆமா நீ உன் துணிமணிகள் எல்லாம் கொண்டு வந்துட்ட இல்ல? மாடி ரூம் கிளீன் பண்ணி வெச்சிருக்கும். ஏதாவது சாப்ட்டயா? டிபன் கொண்டு வரச் சொல்லவா?” 

“இல்ல வேணாம் ஆண்ட்டி நா உடனே போணும்.”

”என்னம்மா போணுங்கற?” 

”அதில்ல ஆண்ட்டி… அப்பா அம்மாவைப் பார்த்து ஏழெட்டு மாசமாச்சு. சித்தி பொண்ணுக்கு கல்யாணம் வேற! போகாட்டி நல்லார்க்காது. வரேன்னு ப்ராமிஸ் வேற பண்ணிட்டேன். இன்னிக்கு நைட் பிளைட்ல கிளம்பறேன். ஒரு மாசத்துல திரும்பி வந்துடுவேன். அப்பறம் இங்கதானே வரப் போறேன்.” 

சாரதாவின் முகம் ஏமாற்றத்தில் வாடியது. 

”அப்பறம் ஆண்ட்டி ஆகாஷை கவனிச்சுக்க ஒரு மேல் சர்வன்ட் போட்டுக்க வேண்டியது தானே? ஆள் கிடைக்கலன்னா நா வேணா ஒரு பையனை அனுப்பறேன். ஆயிரம் ரூபாகிட்ட கேப்பான். ஆனா பெட்பான் வெக்கறதுலேர்ந்து எல்லாம் பக்காவா பண்ணிடுவான். இப்ப யார் பெட்பான் வெக்கறாங்க? அவளா?”

“அது மட்டும் அவங்கப்பா தான்” 

“அப்பொ ஆள் அனுப்பவா வேணாமா?” 

“வெச்சா நல்லாதான் இருக்கும். ஆனா வீடு இப்பொ இருக்கற நிலைல பணத்தை பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டியிருக்கு. இது வரைக்கும் ஆகாஷ்க்கே பதினஞ்சு லட்சம் செலவு பண்ணியாச்சு. எனக்கு ரெண்டரை”. 

சுஜிதா விழி விரித்து திகைப்பைக் காட்டினாள்.

“பிஸினஸ் வேற டல்லடிக்குது. வசூல் ஆகாம நிக்கற பணமே நிறைய இருக்கு. ஆகாஷோட வருமானம் சுத்தமால்ல. சங்கீதா கல்யாணம் வேற கௌரவமா நடந்தாகணும். கஷ்டம்னு பெரிசா இல்லாட்டாலும் அனாவசிய செலவுகளை குறைச்சுக்கறது நல்லது இல்லையா! அதனாலதான் அந்த பொண்ணை நா போனாப் போகட்டும்னு விட்டு வெச்சிருக்கேன். நீ வந்துட்டா அவளையும் அனுப்பிடலாம்னு இருந்தேன்.” 

“அப்டின்னா இந்த வீட்டு வேலைக்காரியவா நா இருக்கணும்னு எதிர்பார்க்கறீங்க?'” 

சுஜிதா பட்டென்று கேட்க ஒரு வினாடி திடுக்கிட்டுப் போனாள் சாரதா.

“அய்யோ நா அப்டி சொல்லலம்மா…” 

“சாரி ஆண்ட்டி. அப்டியே நா இங்க வந்தாலும் சமையலுக்கு ஆள், ஆகாஷை கவனிச்சுக்க ஒரு ஆள் மத்த வேலைகளுக்கு ஒரு ஆள்னு இருந்தாதான் என்னால பொறுப்பேற்றுக்க முடியும். கால் நகத்துல கூட தூசி படாம வளர்ந்தவ. இந்த ஊர்ல தான் நா நடக்கறேன். அங்கெல்லாம் பத்தடி போணும்னாலும் கார்தான். வேலை செஞ்செல்லாம் எனக்கு பழக்கமில்ல.” 

”அதுக்கென்ன. நீ வந்தப்பறம் ஆள் போட்ரலாம். அதுக்காக வராம இருந்துடாதே” 

சுஜிதா எழுந்து மறுபடியும் ஆகாஷிடம் வந்தாள்.

“பாத்தயா அம்மாவை? ரொம்ப சந்தோஷப்பட்ருப்பாங்களே! நீ எப்ப வருவன்னு நச்சரிச்சுட்டாங்க!” 

”இன்னிக்கு நைட் பிளைட்ல நா ஊருக்கு போறேன் ஆகாஷ்” 

”என்ன சுஜி…? நா இப்டியிருக்கும்போது நீ ஜாலியா ஊருக்கு போறயே, நியாயமா?” 

“கஸின்க்கு கல்யாணம் ஆகாஷ். கண்டிப்பா போகணும்”

“எப்பொ வருவ?” 

“ஒரு மாசமாகும்னு நினைக்கறேன்.” 

“அதுக்கு முன்னாடி வர முடியாதா? அவ்ளோ நாளாகுமா?”

”நா ஊருக்குப் போய் ஒரு வருஷமாகுது ஆகாஷ். ஏற்கனவே எல்லாரும் எம்மேல ரொம்ப கோவமா இருக்காங்க. இப்பொ கல்யாணத்துக்கும் போகாட்டி சுத்தமா எனக்கு தலமுழுகிடுவாங்க” 

ஆகாஷ் எதுவும் பேசவில்லை. தான் சொல்லி அவள் கேட்கப் போவதில்லை என்பது புரிந்தபின் எதற்கு பேச வேண்டும் என்று மௌனமாயிருந்தான்.

“ஓ.கே .ஆகாஷ். நா வரட்டுமா? முடிஞ்சப்பொ பேசறேன். உடம்பை பார்த்துக்குங்க” சுஜிதா சம்பிரதாயமாக சொல்லி விட்டு கிளம்பினாள். 

அவள் போனதும் சம்பத் சாரதாவின் அறைக்கு வந்தார்.

”பரவால்லயே நீ கூட நம்ம கஷ்டத்தை எல்லாம் புட்டுப்புட்டு வெக்கற! ஆனா அப்படியும் அவ புரிஞ்சுக்கிட்ட மாதிரி தெரியலையே. தன் பிறந்த வீட்டு பெருமையை பேசிட்டுப் போறா. மாசம் மூவாயிரம் ரூபா குடுத்து மூணு வேலைக்காரங்களை எல்லாம் வெக்க முடியாது தாயே! அவ இங்க வரவே வேணாம்னு சொல்லிடு” 

“என்ன பேசறீங்க நீங்க..? அவ ஆகாஷைக் கட்டிக்கப்போறவ. அவ செளகர்யத்தை நாம பார்க்க வேண்டாமா?” 

“இதோ பார் சாரதா முதல்ல ஆகாஷ் எழுந்து நடக்கட்டும். அதுக்கு முன்னாடி அவனுக்கு கல்யாணமும் பண்ண முடியாது. இந்த பொண்ணு அவனை பண்ணிக்கவும் மாட்டா.” 

”அவளுக்கு அவன் மேல இருக்கறது அசைக்க முடியாத காதல். அவன் எப்டியிருந்தாலும் பரவால்லன்னு கட்டிக்கத்தான் நினைப்பா. ஏன்னா காதல் அந்த அளவுக்கு சக்தி வாய்ஞ்சது.” 

“அடேயப்பா..! டெஃபனிஷன்லாம் குடுக்கற! காதல் சக்தி வாய்ந்ததுதான். அதுல சந்தேகம் எல்லாம் இல்ல. ஆனா இந்த பெண்ணுக்கும் ஆகாஷ் மேல இருக்கறது என்ன மாதிரி காதல்ங்கறது தான் என் சந்தேகம்!” 

“நீங்க என்னிக்கு அவளை நல்ல பொண்ணுன்னு சொல்லியிருக்கீங்க! உள்ள ஒண்ணு வெளில ஒண்ணுன்னு இல்லாம மனசுல தோண்றதைப் பளிச்சுனு சொல்ற டைப் அவ. அதுல என்ன தப்பு…! அவ சொல்றாப்பல கோல்டன் ஸ்பூனோட பிறந்தவதான் அவ தூசி படாம வளர்ந்திருக் கான்றது நிஜம் தானே! அந்தஸ்து பாக்கறவளார்ந்தா நம்மா ஆகாஷையா லவ் பண்ணுவா அவ..! எத்தனை கோடீஸ்வரன் கிடைப்பான் அவளுக்கு!” 

”உங்கிட்ட பேசி பிரயோஜனமில்ல. கஷ்டப்படத் தெரியாதுன்னு சொல்றவ எதுக்குடி காதலிக்கணும்? வாழ்க்கைன்னா எப்பவும் டூயட்டே பாடிட்ருக்கலாம்னு நினைச்சாளாமா? இதே ஆக்ஸிடென்ட் கல்யாணத்துக் கப்பறம் அவனுக்கு நடந்திருந்தா இப்டிதான் எதுவும் செய்ய மாட்டேன்னு ஓடிடுவாளாமா..? கல்யாணத்துக்கு முன்னால எந்த உரிமையோட இங்க வந்து தங்கி இருந்தாளோ அதே உரிமையோட அவனை கவனிச்சுக்க அவளுக்கு மனசில் லேன்னா அப்பறம் எப்டி அவ காதலை நல்ல காதல்னு சொல்ல முடியும்?” 

”அவதான் ஊருக்குப் போணும்னு சொல்றா இல்ல? ஏன் எப்பப்பாரு அந்த பெண்ணை தப்பு சொல்லிக்கிட்டே இருக்கீங்க! வேற வேலை எதுவும் இல்லையா உங்களுக்கு?” 

சம்பத் ‘ச்சேபோ’ என்ற மனசோடு வெளியில் வந்தார். தான் சொல்வதெல்லாம் உண்மை என்பது அவளுக்குப் புரியாமல் இல்லை. ஆனாலும் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறாள். ஈகோவா அல்லது சுஜிதாவிடம் உள்ள பயமா? அவளை விட்டால் இனி தன் பிள்ளையை யாரும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணமா? எதுவோ இருந்துவிட்டு போகட்டும். யார் என்ன திட்டம் போட்டாலும் எது நடக்க வேண்டும் என்றிருக்கிறதோ அதுதான் நடக்கும். அவை நடக்கும்போது இவள் நிஜம் புரிந்து கொள்வாள்! அவர் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பாமல் வெளியில் கிளம்பிச் சென்றார். 

விமானம் பறக்க ஆரம்பித்ததும் அப்பாடா என்றிருந்தது. ஆகாஷின் வீட்டுக்குப் போன போது அங்கிருந்த நிலையில் தலைசுற்றியது. அசைவற்று படுக்கையிலேயே கிடக்கும். ஆகாஷின் நிலை சுத்தமாய் பிடிக்கவில்லை. அவள் விரும்பிய ஆகாஷ் வேறு. இவன் வேறு. அவன் துடிப்பானவன். குறும்பானவன். கம்பீரமானவன். அழகிய இளைஞன். இவனிடம் சோகம் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. எவ்வளவு நாள் இவன் இப்படி இருப்பான்? சரியாகி விடுவானா? ஒரு வேளை இது சரியாகவே ஆகாது இறுதி வரை படுக்கைதான் என்றால் நான் என்ன செய்யப் போகிறேன். காதலா, சந்தோஷமான வாழ்க்கையா? காதலித்து விட்டோமே என்று படுக்கையில் கிடப்பவனை கல்யாணம் பண்ணிக் கொண்டு எவ்வித சுகமுமில்லாது இயந்திர வாழ்க்கை வாழ தன்னால் முடியுமா? தியாகி, உத்தமி என்ற பட்டங்கள் வேண்டுமானால் கிடைக்கலாமே தவிர வேறு என்ன சந்தோஷம் அதில் எதிர்பார்க்க முடியும்? குழம்பியது அவளுக்கு அப்படி ஒரு குழப்பத்தோடுதான் மும்பைக்கு வந்தாள் அவள். 

அங்கே அவர்களது மாளிகை விழாக்கோலம் பூண்டிருந்தது. பூமியில்தான் இருக்கிறோமா அல்லது தேவலோகத்திலா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அந்த அளவுக்கு அலங்கரிக்கப் பட்டிருந்தது வீடு. எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். பணத்திலும் செழிப்பிலும், வசதிகளிலும் நீச்சலடித்துக் கொண்டிருந்தார்கள். தான் மட்டும் ஏதோ ஒரு தீவில் இத்தனை நாள் கஷ்டப்பட்டு விட்டாற்போல் தோன்றியது சுஜிதாவுக்கு. ஏன் அப்படி தோன்றுகிறதென்று தெரியவில்லை. சித்தியின் பெண் தேவதை மாதிரி இருந்தாள். அவளுக்கு கணவனாகப் போகிறவன் இளம் சினிமா டைரக்டராம். அவனே சினிமா ஹீரோ போல அழகாக இருந்தான். கண்களில் குறும்பு மின்னியது. அவன் தன் வருங்கால மனைவியை ஓரக்கண்ணால் கண்கள் சிரிக்க பார்த்தபோதெல்லாம் சுஜிதாவுக்கு என்னமோ செய்தது. தான் எதையோ இழந்து விட்டாற்போல் தோன்றியது. அவன் படா பணக்காரன் என்று சொன்னார்கள். 

பணமும் பணமும் ஒன்று சேரும் கோலாகலம் அந்த வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தெரிந்தது. 

அம்மா அவளிடம் ஆதங்கமாய்ப் பேசினாள். 

“நீ எப்டி இருக்க தெரியுமாடி? உன்னை நீயே கண்ணாடில பாத்துக்கறயா இல்லையா? வெய்யில்ல வீசிப்போட்ட ஆப்பிள் மாதிரி சுருங்கி வெதும்பிப் போய்ட்டயே. என்னடி ஆச்சு உனக்கு? ஊர் விட்டு ஊர் போய் படிக்க வேணாம்னா கேட்டயா? இங்க ராணி மாதிரி அலுங்காம குலுங்காம இருக்கறதை விட்டுட்டு..! மத்தவங்களை எல்லாம் பார்த்த இல்ல? தகதகன்னு எப்டி இருக்காங்க பார் ஃப்ரெஷ்ஷா! அவங்கள்ளாம் பெரியவங்க பேச்சை மதிக்கறவங்க. அதான் அப்படியிருக்காங்க! உன்னை மாதிரி ஒத்தை கார் வெச்சிருக்கற சின்ன பணக்காரன் பின்னால சுத்தினா என்ன ஆவும்னு அவங்களுக்கு தெரியும். ஆனா உனக்கெங்க தெரியுது? உன் கண்ணைத்தான் எதுவோ மறைச்சிருக்கே! யார் யார் தலையெழுத்து எப்டியோ அப்டித்தான் இருக்கும். மாத்திடவா முடியும்? என்னமோ செய்! அப்பறம் உன்னோட அந்த ஆள் எப்டியிருக்கான்? எப்ப கல்யாணம்? அதைச் சொல்லிட்டா நாங்க சொன்னபடி பணமும் சீரும் அனுப்பிட்டு தலை முழுகிடுவோம்.” 

சுஜிதா எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றாள். அம்மாவின் பேச்சு அவளைக் குத்திக் குதறியிருந்தது. திருமணமாகும் வரை உறவு தொடரும் என்று அவர்கள் சொல்லியிருந்ததால்தான் இந்த கல்யாணத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறாள். இல்லாவிட்டால் இந்த பக்கம் கால் வைத்திருக்கக் கூட முடியாது. ஆகாஷ் நன்றாக இருந்த வரையில் எதுவும் தெரியவில்லை அவளுக்கு. தன் வீட்டில் பணம். செல்வாக்கு, அன்பு எதைப் பற்றியும் நினைக்கவில்லை. காதல் கண்ணை மறைத்து தான் இருந்தது. இப்போது அவனும் படுக்கையில் என்றான பிறகு பிறந்த வீட்டிலும் ஒதுக்கப்பட்டு காதலிலும் பிடிப்பிழந்து போய் அனாதையாகி விடுவோமோ என்ற பயம் ஏற்பட்டது. எல்லோரும் நன்றாயிருக்க ஏன் நான் மட்டும் கஷ்டப்பட வேண்டும் என்று தோன்றியது. எல்லாமாய் சேர்ந்து அழுகை வர அவள் தனிமையை விரும்பி தன் அறைக்கு ஓடினாள். அவள் சென்ற அடுத்த நிமிடம் அப்பா உள்ளே வந்த அம்மாவை முறைத்துப் பார்த்தார்.

“இப்டியா பேசுவ அவகிட்ட?” 

“பின்ன எப்டி பேச?” 

”அவளே இப்ப நொந்து போய் வந்திருக்கா தெரியமில்ல. அந்த பையனுக்கு ஆக்ஸிடென்ட் ஆகி முதுகெலும்புல அடி. இனி எழுந்து நடக்கறது கஷ்டம்னு எல்லா டாக்டரும் கை விட்டுட்டாங்க. இப்ப அந்த பையன் படுத்த படுக்கைல” 

அம்மா அதிர்ந்தாள். “இதெல்லாம் எப்டி உங்களுக்கு…?” 

”இவளைப் பத்தி விசாரிச்சுக்கிட்டுதான் இருக்கேன். விட்ரவாமுடியும்? இப்ப அந்தப் பையன் குடும்பம் ஏகப்பட்ட லட்சங்களை செலவழிச்சும் பிரயோஜனமில்லாம முழி பிதுங்கி நிக்குது. இந்த நிலைல அவங்க இருக்கும்போது எப்டி இவளை அவனுக்கு கட்டிக் கொடுக்க முடியும்?” 

“ஆனா அவதான் பிடிவாதமா…” 

“அதெல்லாம் அப்பொ! இப்பொ குழம்பிப் போயிருக்கா.. இந்த குழப்பம்தான் நமக்கு லாபம். இந்த நேரத்துல நாம் பேசற விதமா பேசினா நிச்சயம் அவ மனசு மாறும். இந்த நேரத்துல இங்க வந்து மத்தவங்க சந்தோஷத்தையும், எல்லாரும் நல்லார்க்காங்கன்னும் கண்கூடா பார்த்தாலே, அவ மனசு தான் எவ்ளோ மோசமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கோம்னு புரிஞ்சுக்கும். அதனாலதான் அவளை கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடுன்னு நானே போன் பண்ணி கூப்ட்டேன். அவளோட அக்கா தங்கைகள், அண்ணன்கள்னு எல்லாரும் எவ்ளோ வசதியா வாழறாங்கன்னு அவ பார்க்க பார்க்க நம்ம வேலை சுலபமாய்டும்.” 

“அப்பொ… ஏதோ திட்டத்துல தான் அவளை வரவழைச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க.” 

“போகப் போகப் பார்!” அப்பா சிரித்தார். 

அத்தியாயம்-37 

ஒரு பெண்ணிடம் அவள் அழகாயிருக்கிறாள் என்று ஒரு தடவை சொல்லுங்கள். குட்டிச்சாத்தான் அதை ஒரு நாளைக்கு நூறு முறை அவன் காதுக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும். -ஃபிரெஞ்சுப் பழமொழி. 

சங்கீதாவின் திருமணம் எளிமையாய் மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்களின் முன்னிலையில் நடந்து முடிந்தது. மெடிகல் சர்ட்டிபிகேட் அது இது என்று கெடுபிடி செய்த சாரதாவால் இப்போது எதுவும் செய்ய முடியவில்லை. அன்று குடும்பம் இருந்த நிலை வேறு. இன்று இருக்கும் நிலை வேறு. இன்றைய நிலையில் பெண்ணுக்கு கல்யாணமானால் போதும் என்றிருந்தது. ஆனால் அது இவ்வளவு எளிமையாக நடக்கும் என்று அவள் நினைக்கவில்லை. அவள் ஏதேதோ கற்பனை செய்து வைத்திருந்தாள். அவைகள் நிறைவேறாமலே போய்விட்டது.சுஜிதாவின் பாராமுகமும், ஒதுங்கலும் அவள் அடி மனதைப் பிராண்டிக் கொண்டிருந்தது. ஆகாஷின் உடல்நிலை அதைவிட பிராண்டியது. 

எப்படியிருந்த தன் குடும்பம் எப்படியாகிவிட்டது என்று உள்ளூர உருகினாள். அவள் பகட்டு, பந்தா, திமிர், கர்வம் எல்லாவற்றிற்கும் பலத்த அடி விழுந்திருந்தது. வலுவிழந்த புயல் மாதிரியாகியிருந்தாள். ஓரளவுக்கு எழுந்து நடமாட ஆரம்பித்திருந்தாலும் முன்போல் வேலை செய்ய இயலவில்லை. எனவே திட்டமிட்டபடி சரண்யாவை வீட்டை விட்டு வெளியேற்ற முடியவில்லை. அதே நேரம் அவள் அந்த வீட்டில் சகல உரிமைகளையும் எடுத்துக் கொண்டு விடுவாளோ என்ற பயமும் இருந்தது. அதற்கான தகுதி அவளுக்கு இல்லை என்றே அவள் இன்னமும் நினைத்தாள். அவள் தன் வீட்டின் அத்தனை வேலைகளையும் செய்கிறாள் என்ற இரக்கமெல்லாம் ஏற்படவேயில்லை. மூன்று வேளை உணவும், தங்க இடமும் கொடுத்திருக்கிறோம். செய்யட்டுமே! என்றுதான் நினைத்தாள். சமயம் கிடைத்த போதெல்லாம் வார்த்தைகளை திராவகத் தூறலாய் தெளிக்கவும் தவறவில்லை. 

இரண்டு முறை சரண்யா அந்த வார்த்தைகளில் வலி தாங்க முடியாமல் வீட்டை விட்டு கிளம்பத் தயாரானாள். சம்பத் சமாதானப்படுத்த இருதலைக் கொள்ளி எறும்பாய் அவரைப் பார்த்தாள். 

“ஸோ…நீ போற…!” 

“வருவேன் மாமா. தினமும் வருவேன். ஆனா தங்க மாட்டேன், சாப்ட மாட்டேன்”. 

“வேலைக்கு வரா மாதிரி வருவேன்ற!” 

“பின்னே…மாமி எனக்கு சம்பளம் தராங்க இல்ல…? கை நீட்டி சம்பளம் வாங்கறவ ரொம்பவும் உறவு கொண்டாடக் கூடாது!” 

“ஒரு நிமிஷம் இரு. இதோ வந்திடறேன்” சம்பத் அவளை வாசலிலேயே நிற்க வைத்துவிட்டு சாரதாவிடம் வந்தார். 

“ஆக அந்த பெண்ணை ஒரு வழியா வெளிய அனுப்பறதுன்னு தீர்மானிச்சுட்ட அப்டித்தானே..?” 

“நானா போகச் சொன்னேன்? அவளா கிளம்பினா, போகாதடின்னு கால்ல விழுவேனாக்கும்…!” 

”யாரும் யார் கால்லயும் விழ வேணாம். நா இப்பொ வந்தது உன்னை அவ கால்ல விழச்சொல்ல இல்ல” 

“பின்ன…?” 

“அவ கடனைத் தீர்த்துட்டு அப்பறம் அவளை வெளிய அனுப்புன்னு சொல்ல!” 

சாரதா புருவம் சுருக்கிப் பார்த்தாள்.

“என்ன பாக்கற…?” 

“அவ வேலை செய்யறதுக்கு நாந்தான் சம்பளம் கொடுக்கறேனே. அப்பறம் என்ன கடன்..?” 

”நீ உயிரோட நடமாடறதுக்கு நா வாங்கின கடனை அடைக்க வேணாமா?” 

“யார்ட்ட வாங்கினீங்க?” 

”சாட்சாத் சரண்யாகிட்டதான் பணம் வாங்கியிருக்கேன்.”

சாரதா அதிர்ச்சியோடு நம்ப முடியாமல் அவரை ஏறிட்டுப் பார்த்தாள்.

“ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல. மூணு லட்சம் குடுத்திருக்கா. அவப்பா சாவுக்கு அவளுக்கு வந்த நஷ்டஈடு. அதைத் திருப்பிக் கொடுக்காம அவளை வீட்டை விட்டு அனுப்பினா, பாவம் மட்டும் சேராது. மோசடிப் பேர்வழிகள்ங்கற பட்டமும் கிடைக்கும். பரவால்லன்னா அனுப்பு.” 

சாரதா விக்கித்து நின்றாள். 

இவ்வளவு பணம் இவள் கொடுத்திருக்கிறாளா..? இவளிடம் கை நீட்டி பணம் வாங்கும் அளவுக்கு தன் நிலை தாழ்ந்துவிட்டதா..? உள்ளுக்குள் குமுறிக்குமைந்தாள்.

”சொல்லப்போனா நீ கொடுக்கறது சம்பளமில்ல. வட்டி! வட்டிக்கும் கூட காணாது! சம்பளம் கொடுக்கறாளாம் சம்பளம்..! பணக்காரத் திமிர் இன்னும் கூட குறையலடி உனக்கு” 

சம்பத் வெளியில் வந்தார். சரண்யா விழியோரம் நீர்த்துளிகளோடு ஆதங்கம் பரவிய முகத்துடன் மாமாவைப் பார்த்தாள்.

”நல்லா நாக்கைப் பிடுங்கிக்கறா மாதிரி கேட்டுட்டு வந்துட்டேன்!” 

“இதைவிட நீங்க என்னை கொன்னிருக்கலாம் மாமா”

அவர் அடிபட்டாற்போல் அவளைப் பார்த்தார். 

“பணம் கொடுத்துட்டா நா பெரிய ஆள் ஆய்டுவேனா? இல்ல கடன்தான் தீர்ந்துடுமா?” 

“நீ சும்மா இரு சரண்” 

“இல்ல மாமா, நீங்க அப்டி பேசியிருக்கக் கூடாது. யாரையும் குத்திக்காட்டறதுக்கோ, புண்படுத்தறதுக்கோ நாம பிறக்கல. குறுகின வாழ்க்கைல முடிஞ்ச வரை எல்லாரையும் நேசிக்கத் தெரிஞ்சுக்கணும். இதான் என் பாலிஸி. பாவம் மாமி அவங்களை தலைகுனிய வெச்சுட்டீங்களே..! இனிமே எப்டி நா சகஜமா வந்து போவேன் இங்க?” 

“வர வேண்டாம்…” மாமியின் குரல் பின்னால் ஆக்ரோஷமாகக் கேட்க பதறிப் போய் திரும்பினாள்.

“எவ்ளோ குடுத்த நீ…? மூணு லட்சமா..? இந்தா இதுல நாலு லட்சத்துக்கு சமானமான பொருள் இருக்கு. நகை, எஃப்டி,எம்பேர்ல இருக்கற நிலங்கள். எல்லாம் நாலு லட்சம் தேறும். எடுத்துக்கிட்டு போய்டு” 

“மாமி நா …” 

”பேசாதே…! போய்டு…! இனிமே இங்க வரவேணாம். நீ உதவி செய்யாட்டா நாங்க ஒண்ணும் செத்துட மாட்டோம். காசை விட்டேறிஞ்சா ஆயிரம் பேர். இன்னும் பத்து இருபது நாள்ள என் மருமக வந்துடுவா. அவ வந்துட்டா அவ கவனிச்சுப்பா ஆகாஷை! உன்னை விட நல்லாவே!” 

சம்பத் திகைத்து நிற்க, சரண்யா பரிதாபமாக அவரைப் பார்த்தாள். “வாங்க உள்ள…” சாரதா அவரை இழுத்துக் கொண்டு வாசல் கதவை சார்த்தியபடி விறுவிறுவென்று உள்ளே போனாள். கையிலிருந்த பொருட்கள் கனக்க, என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறி நின்றாள் சரண்யா.

‘திடுதி’ப்பென்று வீட்டை விட்டு அனுப்பினால் எங்கே செல்வது? எங்கு தங்குவது?

சற்று நேரத்தில் மீண்டும் கதவு திறந்தது. சம்பத் அவளுடைய துணிமணிகள் அடங்கிய சூட்கேஸோடு வெளிப்பட்டார். 

“தப்பு எம்பேர்லதான் சரண். அவசரப்பட்டுட்டேன். ஆனா அவ உடம்பு இப்ப இருக்கற நிலைல ரொம்ப முரட்டுத்தனமா பேசவும் முடியல. கொஞ்சம் விட்டுப்பிடிப்போம். அவளே உன்னை இந்த வீட்டுக்கு கூப்டுவா பார். அதுவரை சங்கீதா வீட்ல போய் இருந்துக்க. நா போன் பண்ணி சொல்லிடறேன்.” 

“இதையெல்லாம் எப்டி மாமா… மாமிதான் அவசரப்பட்டுக் குடுக்கறாங்கன்னா அதுக்காக நானும் இதையெல்லாம் எடுத்துட்டு போயிட முடியுமா? அவங்களுக்குத் தெரியாம இதை உங்க ரூம்ல கொண்டு வைங்க…” சரண்யா வற்புறுத்தி அவற்றை அவரிடம் கொடுத்துவிட்டு வெளியில் வந்தாள். 

சித்தி பெண்ணின் திருமணம் கனஜோராக நடந்தது. கோடீஸ்வரன் வீட்டு திருமணம் என்பது ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தெரிந்தது. பணம் பாதாளம் வரை பாய்ந்திருந்தது.உலக அளவில் பணக்காரர்கள் விலை உயர்ந்த கார்களில் சர் சர்ரென்று வந்திறங்கி தங்கமும் வைரமுமாய் லட்சக்கணக்கில் பரிசுகள் வழங்கிவிட்டுச் செல்ல பிரம்மித்துப் போனாள் சுஜிதா. அவள் குடும்பத்து செல்வமும் செல்வாக்கும் அவளுக்குத் தெரியாததல்ல என்றாலும் காதலென்ற பெயரில் தான் ஒரு தனித் தீவில் சேர்ந்து விட்டதால் எல்லாமே பிரம்மிப்பாயிருந்தது அவளுக்கு. வித விதமான உடைகளில் நவ நாகரீகமாய் வந்து வாழ்த்திய திரையுலக பிரமுகர்களும் நடிகைகளும், மேல் மட்ட நாகரீக மனிதர்களின் கூட்டமும் அவளைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றியது. இதுதான் சொர்க்கம், காதலென்ற பெயரில் நீ சேரப்போகும் இடம் நரகம் என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது.

“ஹலோ…” பின்னால் ஒரு கரகரப்பான குரல் கேட்க திரும்பினாள். ஆறடி உயரத்திற்கு கனகம்பீரமான இளைஞனொருவன் புன்னகையோடு நின்றிருந்தான். 

“ஐ ஆம் சந்தீப். விஷ்வா ஆன்லைன்னு கேள்விப்பட்ருப்பீங்களே, கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் நிறுவனம். அதன் ஆர்கனைஸர் அண்ட் மானேஜிங் டைரக்டர் நான்தான். ” 

“ஓ…!” சுஜிதா விழி விரித்து அவனைப் பார்த்தாள். 

இவ்வளவு அழகான கம்பீரமான ஆணை இதுவரை அவள் பார்த்ததில்லை. பணத்தால் ஏற்பட்ட மிடுக்கா, அல்லது இந்த மிடுக்கினால் இவ்வளவு பணமா…? எவ்வளவு தான் கட்டுப்படுத்திக் கொண்டாலும் கண்கள் அலை பாய்ந்தது. 

“யூ லுக் வெரி பியூட்டிஃபுல் மிஸ் சுஜிதா. இதைச் சொல்லத்தான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். எதையும் வெளிப்படையாக சொல்லிவிடுவது என் சுபாவம்’ அவன் புன்னகையோடு நகர சுஜிதா திகைப்போடு அவனையே பார்த்தாள். அவன் சென்ற இடமெல்லாம் கண்கள் பின் தொடர்ந்தது. இவ்வளவு அழகான ஆண் பாராட்டுமளவுக்கு அவ்வளவு அழகாகவா இருக்கிறேன் நான்! வியந்தபடி ஆளுயரக் கண்ணாடியில் திரும்பித் திரும்பி தன்னைத்தானே பார்த்துக் கொண்டாள். அவன் சொல்லி விட்டதாலேயே அடுத்த வேளைக்கான உடையை இன்னும் நேர்த்தியாய் அணிந்து, இன்னும் அழகாய்த் தன்னை அலங்கரித்துக் கொண்டு நடமாடினாள். 

அவன் பார்வைக்காகவும், பாராட்டுக்காகவும் தவித்தாள்.ஏதோ ஒரு புது லோகத்தில் பறப்பது போலிருந்தது. எல்லாமே புதுசாய்த் தெரிந்தது. சந்தீப் அவ்வப்போது மின்னலாய்த் தென்படுவான். அவளிடம் தணிந்த குரலில் ஏதாவது சொல்லிவிட்டுப் போனான். புளகாங்கிதமடைந்தாள், அவள். கம்பீரமான, அழகான, கோடீஸ்வரனான ஒரு ஆண் தன்னை கவனிக்கிறான் என்ற உணர்வு ரத்தம் முழுக்க பரவி ஒருவித பரவசத்தை ஏற்படுத்தியது. வடக்கத்திய முறையில் திருமணம் நடந்ததால மாற்றி மாற்றி ஏதோ சடங்குகளும், விருந்தும் கேளிக்கையுமாய் அரண்மனை மாதிரியிருந்த அந்த வீடு அமர்க்களப்பட்டது. சென்னை, ஆகாஷ், சாரதா, சம்பத் எல்லாவற்றையும் மறந்து அந்த ஆடம்பர சூழ்நிலை கொடுத்த சந்தோஷத்தில் ஆழ்ந்து போனாள். 

”என்னம்மா ரொம் சந்தோஷமார்க்க போல்ருக்கு…!” அப்பா கிட்டே வந்து கேட்டார். 

“ம்… ரொம்ப..!” அவள் இயல்பாகச் சொன்னாள். 

“தெரியுது. எல்லா சந்தோஷத்தையும் முடிஞ்ச வரை அனுபவிச்சுக்க, நாளைக்கு கல்யாணம்னு ஆகி அந்த சின்ன வீட்டுல அடைஞ்சுட்டன்னா இப்டியெல்லாம் சந்தோஷமா இருக்க முடியாதில்ல…?” 

சுஜிதாவின் முகம் சுருங்கியது.

அப்பா சாதாரணமாய்ச் சொல்லுகிறாரா, இளக்காரமாய்ச் சொல்லுகிறாரா? என்று புரியாமல் அவரை வெறித்துப் பார்த்தாள்.

”என்னம்மா முகம் ஒரு மாதிரியாய்டுச்சு. நா ஏதாவது தப்பா சொல்லிட்டேனா…?’ 

”ம்… ஏன்…என் சந்தோஷத்துக்கென்ன?” 

“ஓ…! தாராளமா நீ சந்தோஷமாதான் இருப்ப. எனக்கு ஒரு சந்தேகமும் இல்ல. படுத்த படுக்கையா புருஷன், பைபாஸ் ஆன மாமியார், செலவுகளை சமாளிக்க முடியாம தலைய பிச்சுட்ருக்கற மாமனார் இவங்களுக்கு நடுல சந்தோஷத்துக்கு பஞ்சமா இருந்துடப் போறது…?” 

சுஜிதாவின் முகம் அஷ்டகோணலாய் மாறியது. அப்பா கிண்டல்தான் செய்கிறார். அவருக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது?… என்கிற அதிர்ச்சியோடு அவரை ஏறிட்டுப் பார்த்தாள். 

“ஷாக்காய்ட்ட…! எனக்கெப்டி இதெல்லாம் தெரியம்னுதானே?” 

சுஜிதா எச்சில் விழுங்கினாள்.

“பிள்ளைக்கு வைத்தியம் பார்க்க லட்சம் லட்சமா உங்க வருங்கால மாமனார் செலவழிச்சுட்ருக்கார். பணம் பத்தாம ஒண்ணு ரெண்டு நிலங்களை வந்த விலைக்கு வித்தார். வாங்கினது வேற யாருமில்ல. நாந்தான்” 

சுஜிதா திகைப்போடு பார்த்தாள்.

“உனக்கு சீதனமா தரதுக்காக வாங்கல. நல்ல இடம் சீப்பா விலைக்கு வந்துச்சேன்னு வாங்கினேன். கஷ்டப்பட்டனும்னு உன் தலைல எழுதியிருந்தா யாரால என்ன செய்ய முடியும்? ஏதோ இங்க இருக்கற வரை சந்தோஷமா இரு. ஹைகிளாஸ் சாப்பாடு சாப்டு. நல்ல நல்ல டிரெஸ் போட்டு அனுபவி. அங்க போய்ட்டா நர்ஸ் டிரெஸ்தான் போடணும். இல்ல வேலக்காரி டிரெஸ்…!” 

அப்பா நிறுத்த சுஜிதாவின் முகம் பேயறைந்தாற் போலாயிற்று. அப்பா தொடர்ந்தார். 

”நா கவனிச்சேன் சுஜி..அந்த சந்தீப்பை பார்க்கும்போது உன் முகம் பிரகாசமாறதையும் அவன் பின்னால் உன் கண்கள் அலைபாயறதையும் கவனிச்சேன். இன்னோண்ணு சொல்லவா…? அவன்தான் நாங்க உனக்கு பார்த்த மாப்பிள்ளை, இவனைத்தான் நீ வேண்டாம்னு உதறிட்டு ஆகாஷ் பின்னால போன..!” 

ஸ்தம்பித்துப் போனாள் சுஜிதா.

“இப்பவும் ஒண்ணும் கெட்டுடல சுஜி. ஆண்டவன் உனக்கும் சந்தீப்புக்கும்தான் முடிச்சு போட்டு வெச்சிருக்கான் போல்ருக்கு. அதனாலதான் விபத்துங்கற பேர்ல ஆகாஷை விலக்கிட்டான். எல்லாத்தையும் கெட்ட கனவா நினைச்சு மறந்துடு. அதான் உனக்கு நல்லது. காதல் எல்லாம் சும்மா ஃபேன்டஸி சுஜி. சினிமாலதான் அது ஜாலியா காட்டப்படும். நிஜ வாழ்க்கை வேற சுஜி. கஷ்டம்னு தெரிஞ்சு யாராவது மாட்டிப்பாங்களா…? மடத்தனம் இல்லையா அது…? உன் மேல எங்களுக்கில்லாத பாசமும் அக்கறையும் வேற யாருக்கு இருக்கும் சொல்லு. நாங்க உனக்கு கெடுதல் செய்வோம்னா நினைக்கற? யோசிச்சு பார் சுஜி. இதுக்கு மேல சொல்ல எதுவுமில்ல. சந்தீப் எப்டி பார்த்தாலும் ஆகாஷை விட பல மடங்கு உயர்ந்தவன். படிப்பு, பணம், அந்தஸ்து, கம்பீரம், குணம் எதுக்கும் அவன்கிட்ட குறைவில்ல. இன்னும் கொஞ்ச நாள் கூட இங்க இருந்தன்னா உன் மனசு முழுக்க முழுக்க ஆகாஷ்கிட்டேர்ந்து விடுபட்டு சந்தீப்கிட்ட சரண்டராய்டும். நா சும்மா சொல்லல சுஜி. இது நடக்கறதா இல்லையான்னு பார்.” 

அப்பா நிறுத்த.. சுஜிதா ஆணியறைந்தாற்போல் நின்றாள். அப்பா சொல்வது போல் நடந்து விடுமா…? 

அத்தியாயம்-38 

புத்திசாலியான பெண் ஒரு ஆடவனின் மனதைக் கவர்ந்து விடுகிறாள்; அழகான பெண் ஆணை மயக்குகிறாள்; குணமுள்ள பெண் ஆணின் அறிவை ஒளிவீசச் செய்கிறாள். பாசமும் பரிவுமுள்ள பெண் அவனை தனக்கே சொந்தமாக்கிக் கொள்கிறாள். – அரிஸ்டாட்டில். 

பசி வயிற்றைக் கிள்ளியது. ஆகாஷ் பொறுமையிழந்து நாலைந்து முறை அம்மாவை அழைத்து விட்டான். அதன் பிறகும் அரைமணி கழித்துதான் சாரதா டிபனோடு வந்தாள்.

”என்னம்மா இவ்ளோ நேரம்?” எரிச்சலோடு கேட்டான்.

”நா என்ன செய்யட்டும்…? ஆளா தேளா? முந்தி மாதிரி முடியுமா என்ன?” 

”அது சரி அத்தனை வேலையும் பொறுமையா செஞ்சுட்ருந்த சரண்யாவை யார் வெளில அனுப்பச் சொன்னாங்க? நல்ல நாள்ளயே உனக்கு வேலைக்காரி கிடைக்கறது குதிரைக் கொம்பு. இப்ப இருக்கற நிலைக்கு எந்த வேலைக்காரி வருவா?’ 

“ஆரம்பிச்சுட்டயா… த பார்ரா ஆகாஷ். வேலைக்காரி கிடைக்காட்டி போறா. அதுக்காக நா ஒண்ணும் அவ கால்ல விழ மாட்டேன்.” 

”வேணாம். இப்டியே விறைச்சுக்கிட்டு இரு! என்னிக்குத் தான் நீ மனுஷங்களைப் புரிஞ்சுக்கப் போறயோ?” 

“இன்னும் ஒரு வாரம்தாண்டா. சுஜி வந்துடுவா. அப்பறம் எனக்கென்ன… கஷ்டம்.. அவ கவனிச்சுப்பா உன்னை”. 

அம்மா சொல்ல ஆகாஷ் மெளனமானான். சுஜிதாவின் வரவை அவன் மனமும் ஆவலோடு எதிர்பார்ப்பது நிஜம்தான் என்றாலும் இந்த ஒரு மாதத்தில் ஒரு முறை கூட அவள் அவனோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை என்ற உண்மை அவனை உறுத்தியது. அவனுக்காக பணம், அந்தஸ்து, பெற்றோர் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு வந்தவளுக்கு இப்போது என்னவாயிற்று? ஒருவேளை இனி அவன் எழுந்து நடமாட மாட்டான், இவனால் நமக்கென்ன சந்தோஷம் என்று நினைக்கிறாளா..? அல்லது போன இடத்தில் அவளது பெற்றோர் அவளை திரும்பிச் செல்லவிடாது சிறை வைத்து விட்டார்களா…? என்னதான் ஆயிற்று அவளுக்கு என்பதை எப்படி அறிவது…? மும்பைக்கு போன் பண்ணி பேசினால்…? முன்பொரு முறை அவள் கொடுத்த நம்பர் டைரியிலிருந்தது. தலையணைக்கு அடியிலிருந்த அந்த டைரியை எடுத்து நம்பர் பார்த்து அழுத்தினான். சிறிது நேர முயற்சிக்குப் பிறகுதான் லைன் கிடைத்தது.கரகரப்பாக பேசிய ஆண் குரலிடம் சுஜிதா வேண்டுமென்று ஆங்கிலத்தில் பணிவோடு கேட்டான். 

“நீங்கள் யாரென்று அறியலாமா?” 

”சென்னையிலிருந்து ஆகாஷ் என்று சொல்லுங்கள்.”

மறுமுனை ஒரு வினாடி மௌனித்தது. பிறகு தொடர்ந்து பேசியது.” 

“நான் அவளுடைய அப்பா பேசுகிறேன்.” 

“நமஸ்தே சார்.” 

“நமஸ்தே. உங்கூட நா முதல்ல பேசிடறேனே” 

“என்ன விஷயம் சார்…?” 

“உங்க உடம்பு எப்டி இருக்கு ஆகாஷ்? எழுந்து நடகக் ஆரம்பிச்சுட்டீங்களா?” 

“இல்ல சார்…” 

“டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க…?” 

”அவங்களும் எல்லா முயற்சியும் செய்துக்கிட்டுதான் இருக்காங்க”. 

”ஆக நீங்க எழுந்து நடப்பீங்களான்னு உங்களுக்கே சந்தேகமா இருக்கு அப்டித்தானே..?” 

“அது… இல்ல…” 

“ப்ளீஸ் மிஸ்டர் ஆகாஷ். நா அவ தகப்பன் என் கோணத்துலேர்ந்து இந்த விஷயத்தை பாருங்க.என் உணர்வுகளைப் புரிஞ்சுப்பீங்க. சுஜிதாவை கொஞ்ச நேரம் உங்க மகளா நினைச்சுக்குங்க. கட்டிக் குடுப்பீங்களா…? உங்களை மாதிரி படுத்த படுக்கையா இருக்கறவனுக்கு கட்டிக்குடுப்பீங்களா…?” 

ஆகாஷ் திகைத்தான். என்ன பதில் சொல்வது இதற்கு..? என்று அவன் யோசிப்பதற்குள் அவர் தொடர்ந்தார்

“காதல்னா என்ன ஆகாஷ்? ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கறதுதானே…? சந்தோஷமா இருக்கறதுக்காகத் தானே கல்யாணம்!” 

”உண்மைதான் சார்.” 

”இப்ப சொல்லுங்க. அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னா, அவ அங்க சந்தோஷமா இருப்பான்னு நினைக்கறீங்களா…? தாலி கட்டக்கூட எழுந்து உட்கார முடியாத நிலையில இருக்கறவனைக் கட்டிக்கிட்டு எம்பொண்ணு எப்டி ஆகாஷ் சந்தோஷமா இருப்பா…? உங்க காதல்க்கு நா சம்மதிச்சேன். எப்டியோ போன்னு வேண்டா வெறுப்பா ஒத்துக்கிட்டேன். அதுக்கு காரணம் அந்தஸ்துல குறைஞ்சவரா இருந்தாலும் ஆள் நல்லா இருக்கீங்கன்னுதான். இப்ப அதுவும் இல்லாம போய்டுச்சு. உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன் ஆகாஷ் எம்பொண்ணை தொந்தரவு பண்ணாதீங்க. ஒரு தகப்பனா அவளை நல்ல நிலமைல பாக்கணும்னு ஆசைப்படறேன். அவளை உண்மையா நேசிச்சீங்கன்னா அவ நல்லார்க்கட்டும்னு விட்ருங்க. உங்க ட்ரீட்மெண்ட்டுக்காக எவ்ளோ வேணாலும் பணம் அனுப்பி வெக்கறேன் பதிலுக்கு. உடம்பு நல்லானப்பறம் உங்களுக்கேத்த பொண்ணா பார்த்து கட்டிக்கிட்டு நல்லாருங்க. வேற ஒண்ணுமில்லையே வெச்சுடவா..?” 

ஆகாஷ் வியர்வையைத் துடைத்துக் கொண்டான். துக்கம் தொண்டையை அடைத்தது. ஒரு தகப்பனாக அவர் பேசியதெல்லாம் நூற்றுக்கு நூறு ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனா இதே நிலை அவளுக்கு ஏற்பட்டிருந்தால், தன் அப்பா இப்படி பேசியிருப்பாரா என்று யோசித்தான். அப்பா பேசுவது இருக்கட்டும். தான் அவளை ஒதுக்கி விடுவோமா..? நிச்சயம் மாட்டோம் அல்லவா? அதே எண்ணம்தானே அவளுக்கும் இருக்க வேண்டும்! ச்சேச்சே அவளுக்கு நிச்சயம் இருக்கும். இவர் அவள் மீது வைத்திருக்கும் பெற்ற பாசம் அவளை அணை போட்டு தடுத்து நிறுத்தியிருக்கிறது. அதனால்தான் அவள் வரவில்லை. இனி வரவும் மாட்டாள். போகட்டும். எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். அவர் சொல்வது போல் அவனால் அவளுக்கு என்ன சந்தோஷம் கிடைத்துவிடும்…? கஷ்டப்படுத்தவா கல்யாணம் செய்து கொள்வார்கள்? ஆகாஷ் தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள முயன்றான். அதையும் மீறி அழுகை வந்தது. ஒரு தலையணையை முகத்தின் மீது வைத்து மறைத்துக் கொண்டு துக்கம் கரைய அழுதான். 

“ஆகாஷ்..”அப்பாவின் குரல் கேட்க தலையணையிலேயே கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அதை நகர்த்தி அப்பாவைப் பார்த்தான். 

”என்னடா தலகாணிய முகத்துல வெச்சுக்கிட்டு” என்றபடி கிட்டே வந்தவர் கலங்கிச் சிவந்திருந்த அவன் கண்களைப் பார்த்ததும் பதறினார். 

”என்னடா… அழுதயான்ன…?” 

“இல்லயே…” 

“என்னடா ஆச்சு..? உன் கண்ணு சொல்றதே அழுதன்னு! எதுக்குடா…?” 

அப்பா பரிவோடு கேட்க, மீண்டும் கண்கள் உடைந்தது.

“இப்டி படுக்கை போட்டுடுச்சேன்னு அழறயா..?” 

“ப்ஸூ…” 

”பின்னே..? சுஜிதாவைப் பார்க்க முடியலைன்னா…? போன் பண்ணி பேசறதுதானே?” 

“போன் பண்ணினேன்” 

”என்ன சொன்னா…?” 

“அவகிட்ட பேசல” 

“பின்னே..?” 

“அவங்கப்பாதான் பேசினார்”ஆகாஷ் தட்டுத்தடுமாறி அவர் பேசியதை அப்பாவிடம் சொன்னான். அனைத்தையும் கேட்டு விட்டு அவர் பரிவோடு அவன் கேசத்தை தடவினார். 

“இது நா எதிர்பார்த்ததுதாண்டா ஆகாஷ்! எந்த தகப்பனும் தெரிஞ்சே தன் பெண்ணை கஷ்டத்துல தள்ளமாட்டான். போகட்டும் விடு. இதை ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். உண்மைகள் எப்பவுமே கசப்பாத்தானே இருக்கும். தெரியாதா உனக்கு…? அதையும் விட முக்கியமான உண்மை ஒண்ணு இருக்கு. யாருக்கு யார்னு இறைவன் முடிச்சுப் பேரடறானோ அதன்படிதான் இங்க எல்லாமே! நீ விரும்பறதை விட உன்னை விரும்பறவளை ஏத்துக் கறதுதாண்டா ஆகாஷ் புத்திசாலித்தனம். இந்த நிலைலயும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒரு மனசு துடிச்சுட்ருக்குன்னு தெரியுமா உனக்கு?” 

அப்பா நிறுத்த ஆகாஷ் திகைப்போடு அவரைப் பார்த்தான்.

“நம்ப முடியல இல்ல ஆனா அதுதான் உண்மை” 

“யா… யாருப்பா..?’ 

”சரண்யா…!” 

ஆகாஷ் அதிர்ந்தான். நம்ப முடியாமல் அவரைப் பார்த்தான்.

“உன் மனசு சுஜிதாகிட்ட போகப்போகுதுன்ற ஜோசியம் தெரியாம சரண்யாக்கு நா நிறைய நம்பிக்கையைக் கொடுத்து அவ மனசுல காதல் கனலை மூட்டி விட்டுட்டேண்டா ஆகாஷ். அதுக்கப்பறம் சுஜிதாவைப் பத்தி தெரிஞ்சதும் நானே அணைக்க வேண்டியதா போச்சு. அவ தன் மனசை மாத்திப்பான்னு நினைச்சேன். ஆனா நா மூட்டி விட்ட நெருப்பு முழுசும் அணையல நீறு பூத்த நெருப்பாவே இருக்குன்னு சொன்னா நம்புவயா…? நீ ‘ம்’னு ஒரு வார்த்தை சொல்லுடா. சரண்யாவை உனக்கு கட்டி வெக்கறேன்.” 

ஆகாஷ் எவ்வித உணர்ச்சியுமின்றி அவரைப் பார்த்தான்.

“என்னடா யோசிக்கற? உங்கம்மா அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டாளே அவ எங்க போனாளோ… நா எங்க போய்த் தேடுவேனோன்னு யோசிக்கறயா? அவ எங்கயும் போகல. சங்கீதா வீட்லதான் இருக்கா. இப்ப சொல்லு போய்க் கூட்டிட்டு வரேன். நீ சப்போர்ட் பண்ணினாதான் இந்த விஷயத்துல உங்கம்மாவை என்னால முழுமையா எதிர்த்து ஜெயிக்க முடியும்.” 

“அப்பா ப்ளீஸ்… நா குழம்பிப் போயிருக்கேன். எதையும் யோசிக்கிற மனநிலைல இல்ல நான்.” 

”குழம்பினாதாண்டா தெளிய முடியும்? கவலைப்படாதே. நல்லா யோசி. யோசிச்சு ஒரு முடிவுக்குவர நிஜத்தை புரிஞ்சுக்கிட்டு நல்ல முடிவா எடு” அப்பா வெளியேற ஆகாஷ் பிரமை பிடித்தவன் போல படுத்திருந்தான். சற்று நேரத்தில் அம்மா வந்தாள் 

”நா கொஞ்சம் கடைக்குப் போய்ட்டு வரணும். உனக்கு ஏதாவது வேணுமா…?” 

“போய்ட்டு வா…” 

“போய்ட்டு வர ஒரு மணி ஒண்ற மணி ஆவும்.உங்கப்பா இருக்கார். ஏதாவது வேணும்னா அவரைக் கேளு” என்றபடி சாரதா கிளம்பினாள். 

அவள் அந்தப் பக்கம் போனதும் இந்தப் பக்கம் சம்பத் அவசரமாக சங்கீதாவின் வீட்டுக்குப் போன் செய்தார். 

“நாந்தாம்மா அப்பா பேசறேன். உங்கம்மா வெளில போயிருக்கா. வரதுக்கு ஒரு மணி ரெண்டு மணி ஆகும். நீ உடனே சரண்யாவையும் கூட்டிக்கிட்டு இங்க வா. உன்னால வர முடியாட்டி சரண்யாவையாவது அனுப்பி வை.” 

”இல்லப்பா நானும் வரேன்” சங்கீதா போனை வைத்துவிட்டு மாமியாரிடம் சொல்லிக் கொண்டு சரண்யாவோடு உடனே கிளம்பினாள். அவளுக்கென்று பிரவீண் வாங்கிக் கொடுத்திருந்த சிறிய மாருதி காரில் இருபதே நிமிடத்தில் அங்கு வந்தாள். அப்பா அவர்களை முதலில் தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.” 

“எதுக்குப்பா இவ்ளோ அவசரமா… கூப்ட்டீங்க?” 

”விஷயம் தெரியுமா உனக்கு. சுஜிதாவோட அப்பா ஆகாஷ்கிட்ட பேசியிருக்கார். பளிச் பளிச்சுனு பேசி தன் பெண்ணை இவனுக்கு தர இஷ்டமில்லன்னு சொல்லியிருக்கார். ஒரு அப்பாவா என் கோணத்துல நின்று யோசிச்சு பார். என் உணர்வு உனக்கு புரியும்னு சொல்லியிருக்கார்.” 

“கஷ்டமே…! அண்ணா ரொம்ப அப்ஸெட் ஆய்ட்டானா…?” 

”பின்னே…? ஆனா யோசிக்க ஆரம்பிச்சுட்டான். சுஜிதாவை இனி எதிர்பார்க்கறதுல எந்த அர்த்தமும் இல்லன்னு புரிஞ்சுக்கிட்டான். இதுதான் சரியான சமயம்னு நா சரண்யாவைப் பத்தி அவன் மனசுல உறைக்கறா மாதிரி பேசிட்டேன். அந்த நல்ல மனசு இன்னமும் உனக்காக காத்துட்ருக்குடான்னு சொல்லிட்டேன். நா சொன்னது சரிதானே சரண்? உன்னைக் கேக்காமயே சொல்லிட்டேன். எம்பிள்ளை எழுந்து நடப்பான்னு நீயாவது நம்புவயா..? நம்பி அவனுக்கு கழுத்தை நீட்டுவயாம்மா…?” 

“மாமா…” 

”அண்ணன் இதுக்கு ஒத்துப்பானாப்பா? சுஜிதா மாதிரி தானே சரண்யாவும், இவளை மட்டும் எதுக்கு கஷ்டப்படுத்தணும்னு கேட்டா…?” 

“இது எனக்கு கஷ்டமில்ல சங்கீதா…” சரண்யா சட்டென்று சொல்ல, சம்பத் புன்னகைத்தார். 

“நா சாதாரண மனுஷி மாமா… ஆகாஷ்க்கு இப்டி ஆனதுனாலதான் சுஜிதா விலகிப்போனான்னு சீப் ரேட்ல சந்தோஷப்படலன்னாலும் இது எனக்கு கிடைச்சிருக்கற ஒரு வாய்ப்புன்னு வெளிப்படையா ஒத்துக்கறதுலயோ ஏத்துக்கறதுலயோ எனக்கு எந்த தயக்கமும் இல்ல.கடசி வரை ஆகாஷோட அருகாமைல இருக்கறதுதான் என்னைப் பொறுத்தவரை சுகம்.” 

“வெரிகுட் சரண். இந்த யதார்த்தம்தான் உங்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயமே. போ கீழ போய் ஆகாஷோட மனசு விட்டுப் பேசு. குழம்பிக் கிடக்கற அவன் மனசுக்கு தெளிவைக் குடு மத்ததை நா பாத்துக்கறேன். இப்பதான் எனக்கு புது தெம்பே வந்திருக்கு. நாமள்ளாம் சேர்ந்து உற்சாகமும், நம்பிக்கயும் கொடுத்தோம்னா ஆகாஷ் நிச்சயம் எழுந்து நடப்பான். அந்த நல்ல நாள் வெகு தூரமில்லன்னு எனக்குள்ள ஒரு குரல் சொல்லுது”

சம்பத் சரண்யாவை கீழே அனுப்பி வைத்தார்.

இதுவரை எவ்வளவோ முறை அந்த அறைக்குள் சென்றிருக்கிறாள். எவ்வித தயக்கமும் இன்றி அவனுக்கு சிச்ருஷை செய்திருக்கிறாள். சர்வ சாதாரணமாக பேசிக் கொண்டிருந்திருக்கிறாள். ஆனால் இப்போது கால்கள் பின்னுக்கிழுத்தது. தேகத்தில் ஒருவித படபடப்பு ஊடுருவிற்று.

தயங்கியபடி அவன் அறைக்கதவைத் தள்ளினாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த ஆகாஷ் சரண்யாவைக் கண்டதும் திகைத்தான். அப்பா சொன்னதெல்லாம் மனசுக்குள் முட்டி மோத, அவளையே இமைக்காமல் பார்த்தான். அவன் பார்வையின் தீட்சண்யம் தாங்காமல், அவள் விழிகளில் ஈரம் படர்ந்து உருண்டு திரண்டு கன்னத்தில் உருளத் தயாராயிற்று. 

அத்தியாயம்-39 

பணத்தினால் உண்மையான சுகம் பெறு முடியாது. கணவனோ மனைவியோ, பிள்ளைகளோ அனைவரையுமே அவர்களுக்காக கல்லாமல் நமக்காகவே நேசிக்கிறோம். என் கணவன், என் பிள்ளை, என் மனைவி என்ற பற்றினால் நேசிக்கிறோம். இந்த ‘நான்: ‘என்னுடையது’ என்பதே நாம் நேசிக்கக் காரணம் நமக்கும் அதற்கும் ஆன்மீகத் தொடர்பு இருக்கிறது. அந்த ஆன்மீக அறிவைப் பெறுவதே இன்பந்தருவதாகும். -தரகதாரண்யம். 

சாரதா இருட்டில் அமர்ந்திருந்தாள். வீட்டில் யாருமில்லை. மனசைப் போலவே வீடும் இருந்தது. இடமாற்றம் தேவையென்று டாக்டர் சொன்னதைத் தொடர்ந்து ஆகாஷை சங்கீதா தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக சொன்னபோது சாரதாவுக்கு மறுக்க முடியவில்லை. எப்படியோ பிள்ளை நல்லபடியாக தேறி எழுந்து நடமாடினால் போதுமென்றிருந்தது. தன்னாலும் பார்த்துக் கொள்ள இயலாத நிலையில் சங்கீதா அவனை அழைத்துச் சென்றதும் ஒரு விதத்தில் நல்லது என்றே நினைத்தாள் அவள். பாவம் அவனுக்கும் இங்கே யார் இருக்கிறார்கள் பேச்சுத் துணைக்கு! அங்கேயிருந்தாலும் சங்கீதாவும் பிரவீணும் சிரிக்க சிரிக்க ஏதாவது பேசி பொழுது போக உதவுவார்கள்.

சாரதா பெருமூச்சு விட்டாள். எப்படி இருந்த வீடு எப்படியாகி விட்டது! சங்கீதாவின் கல்யாணம் ஜாம்ஜாமென்று நடக்கும். அதைத் தொடர்ந்து ஆகாஷ் சுஜிதா திருமணமும் ஆடம்பரமாக நடக்கும். சுஜிதா வந்த பின் வீட்டில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. பேரன், பேத்தி என்று வீடு நிறையும் என்றெல்லாம் எவ்வளவு கனவுகள். எல்லாமே பொய்த்து விட்டது. சுஜிதா இப்படி ஆகாஷை ஒதுக்கித் தள்ளிவிடுவாள் என்று யார் நினைத்தார்கள். கஷ்டகாலம் வந்தவுடன் கழித்துக்கட்டி விட்டுப் போவதுதான் காதலா…? அல்லது சுஜிதாவின் காதல் அந்த ரகமா…? பாவம் குழந்தை! பட்ட காலிலேயே படுவது போல் அடுத்தடுத்து எத்தனை கஷ்டங்கள்…! என்று இந்த கஷ்டங்கள் தீர்ந்து விடியும்? என்று அவன் பழையபடி கம்பீரமாக நடப்பான்? கல்யாணம், குடும்பம் குழந்தை என்று எல்லோரைப் போலவும் எப்போது வாழ்வான்..? இந்த வீடு என்று பழையபடி ஆகும்?

சாரதா மீண்டும் பெருமூச்சு விட்டாள்.

“எதுக்கு லைட்டைக் கூடப் போடாம உக்கார்ந்திருக்க?” 

சம்பத்தின் குரல் கேட்க எழுந்தாள்.

“நீங்க ஏன் இவ்ளோ லேட்…?” லைட்டை போட்டபடி கேட்டாள். 

“ஆகாஷைப் பாத்துட்டு வரேன்.” 

“ஏன் என்னைக் கூப்ட்டா நானும் வந்திருக்க மாட்டேனா?’

“அதுக்கென்ன அடுத்த வாரம் போய்ட்டா போச்சு.”

“ஏன் அதுக்கு நடுல போனா என்னவாம்…?” 

”ஒண்ணுமில்லையே தாராளமா போய்ட்டு வா. என்னால கூட வர முடியாது”. 

”சம்பந்தியம்மா மூஞ்சில முழிக்கவே என்னமோ மாதிரி இருக்கு.” 

“எல்லாம் உன் பிரமை. அவங்க உன்னை விசாரிச்சுக்கிட்டே தான் இருக்காங்க. வரச் சொல்லுங்க. அவங்களும் இங்க கொஞ்ச நாள் இருக்கட்டுமேன்னு சொன்னாங்க இன்னிக்குக் கூட.” 

சாரதா பதில் சொல்லவில்லை. எல்லோரும் நல்லவர்கள்தானா..? தனக்குத்தான் யாரையும் புரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டதா? இருந்தாலும் எல்லாரும் குறை சொல்லும் அளவுக்கு தான் அப்படி ஒன்றும் கெட்டவள் அல்லவே! பின் ஏன் தன்னை யாருக்கும் பிடிக்கவில்லை. பணம், அந்தஸ்து என்றிருப்பது அவ்வளவு பெரிய குற்றமா? ஊர் உலகத்தில் எத்தனை பேர் இப்படியில்லை? சின்ன வயதில் அவள் பட்ட கஷ்டம் அவளுக்குத் தானே தெரியும். பணம்தான் பெரிதென்று தோன்ற ஆரம்பித்ததும் அந்த கஷ்டங்களால் தானே! தான் பட்ட கஷ்டம் தன் குழந்தைகளுக்கு எந்த காலத்திலுமே வராமலிருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா? இது ஏன் யாருக்கும் புரியமாட்டேன் என்கிறது.

சாரதா, சம்பந்தி வீட்டுக்கு போகலாமா வேண்டாமா என்று யோசித்த அதே நேரம் சம்பத்திற்கு வேறு வித கவலை. ஒருவேளை இவள் அங்கே போனால் சரண்யாவை அங்கு பார்த்துவிட்டு ஏதாவது கலாட்டா பண்ணுவாளா? அங்கிருந்தும் விரட்டுவாளோ..? கூடியவரை இப்போதைக்கு இவள் அங்கு செல்லாமல் இருப்பதே உத்தமம் என்று நினைத்தார் அவர். போகாதே என்று சொல்லவும் முடியாது. அவள் தானாக புறப்பட்டுப் போகிறாள் என்று தெரிந்தால் முன்கூட்டி சங்கீதாவுக்கு தகவல் சொல்லி சரண்யாவை அவள் கண்ணில் படாதவாறு இருக்கச் சொல்லலாம். இப்படி நினைத்தவர் போனை எடுத்து பெண்ணின் வீட்டுக்கு பண்ணினார். 

“நாந்தாம்மா பேசறேன்” 

”என்னப்பா…? அதுக்குள்ள பிள்ளை ஞாபகமா?” 

“அதில்ல… ஒரு வேளை உங்கம்மா அங்க வந்தா சரண்யாவை அவ கண்ல படாம பார்த்துக்கோன்னு சொல்லத்தான்.” 

”அம்மா வரட்டும் நா பார்த்துக்கறேம்ப்பா”

“பிரச்சனை எதுவும் வேணாம் சங்கீதா..” 

‘பயப்படாதீங்கப்பா… அம்மா மனசு நோகாம் நா பேசிக்கறேன் சரியா…?” 

சங்கீதா போனை வைத்தாள்.

“யாரு…?” ஆகாஷ் கேட்டான். 

”அப்பாதான். அம்மாக்கு உன்னைப் பாக்கணும் போல இருக்காம். வந்தாலும் வருவான்னார்.” 

“எதுக்கு.. இங்கேர்ந்தும் சரண்யாவை விரட்டவா…? வர வேணாம்னு சொல்லு” ஆகாஷ் சட்டென்று சொல்ல சங்கீதா புன்முறுவலோடு அவனைப் பார்த்தாள். இந்த அளவுக்கு அவன் சரண்யாவிடம் கரிசனம் கொண்டிருந்ததைக் கண்டு சந்தோஷமாக இருந்தது. தன் பேச்சு நினைத்து ஆகாஷே வியந்துதான் போனான். சுஜிதா இனி வரமாட்டாள் என்பது புரிந்த பிறகு, சரண்யாவின் அன்பு பற்றி அப்பா அவனிடம் பேசிய பிறகு, அதுவரை சாதாரணமாகத் தெரிந்த சரண்யா ஆழ்ந்து கவனிக்கத்தக்கவாளாக மாறி விட்டாள். அவளறியாதவாறு அவளை கவனிப்பதில் ஒரு சுவாரசியமிருந்தது. அந்த எளிமையும், அமைதியும் இயல்பான அழகும் ஏதோ விதத்தில் அவனை ஈர்த்தது நிஜம்… அப்பா சொன்னதன் பிறகு அவளிடம் சகஜமாகப் பேச முடியவில்லை. ஒருவித லஜ்ஜை மேலிட்டது. அவளும் மெல்லிய கூச்சத்தோடுதான் அவனோடு பேசினாள். அவனது தேவைகள் முழுக்க அவள்தான் கவனித்துக் கொண்டாள். அவளது உதவியோடு தான் பிஸியோ தெரபிகளை செய்தான் அவன். 

”நா எழுந்து நடப்பேனா சரண்?” தினமும் அவளிடம் அவன் கேட்கும் கேள்வி இது. ‘”கண்டிப்பா…!” இது அவள் சொல்லும் பதில். 

“எனக்கு ஏன் இப்டியாச்சு சரண்? ஏன் எல்லாமே தப்பாய்டுச்சு…?” 

”நல்லதோ கெட்டதோ நமக்கு வருவதைத் தடுக்க முடியாதுன்னு எங்கப்பா அடிக்கடி சொல்லுவார்.” 

“சுஜிதாவைப் பத்தி நீ என்ன நினைக்கற?” தைரியமாக ஒரு முறை அவளிடம் கேட்டுவிட்டான். 

”என்ன நினைக்கறேன்னா..?’ 

“இல்ல…திடீர்னு அவ இப்டி விலகிப் போய்ட்டாளே… அதைப் பத்தி…” 

“அவ பிறந்த சூழல், வளர்ந்த சூழல் இதையெல்லாம் வெச்சுப் பார்த்தா அவ முடிவுல எனக்கு எந்த ஆச்சர்யமும் ஏற்படல. ஏன் உங்களுக்கு கஷ்ட்டமார்க்கா..அவளை மறக்க முடியல இல்ல…?” 

“இல்ல… வருத்தமா இருக்கு. தப்பான ஆள்கிட்ட என் காதலை வீணடிச்சுட்டேனேன்னு இருக்கு. நா சின்சியராதான் இருந்தேன் சரண். ஆனா அதே சின்சியாரிட்டி அந்த பக்கம் இல்லாததுக்கு நா என்ன செய்ய முடியும்? அப்பா ஆரம்பத்துலேர்ந்தே சொன்னார். நாந்தான் புரிஞ்சுக்கல. ஒரு விதத்துல இந்த ஆக்ஸிடென்ட் ஆனது கூட நல்லதுக் குத்தான்னு தோண்றது. கஷ்டம்னு வந்தாதானே, யார் கூட ருக்காங்க, யார் ஜூட் விடறாங்கன்னு தெரிஞ்சுக்க முடியுது! இருந்தாலும் யோசிச்சுப் பார்க்கும் போது சுஜிதா மேல கோவம் வரல. நா இருக்கற நிலைல எந்தப் பெண்தான் என்னைக் கட்டிக்க விரும்புவா…? அல்லது என் சுயநலத்துக்காக ஒரு பெண்ணோட வாழ்க்கையை வீணடிக்க எனக்கு தான் என்ன உரிமை இருக்கு…?” 

அவன் நிறுத்த சரண்யா திகைப்போடு அவனைப் பார்த்தாள். சற்று நேரம் மௌனமாய் நகர ஆகாஷே அந்த மௌனத்தைக் கலைத்தான்.

“என்ன சரண் மௌனமாய்ட்ட…?” 

“வெளிப்படையா உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கலாமா ஆகாஷ்..?” 

“தாராளமா…?” 

“இப்பவும் ஒரு பெண் தானா விரும்பி உங்களை கல்யாணம் பண்ணிக்க நினைச்சா அவளுக்கு என்ன பதில் சொல்வீங்க…?” 

ஆகாஷ் அவளை உற்றுப் பார்த்தான். அவள் கேள்வியின் ஆழத்திலிருந்த அர்த்தம் அவனுக்கு நன்றாகவே புரிந்தது. அவன் சில வினாடிகள் கண் மூடி யோசனையிலாழ்ந்தான். யாராயிருந்தாலென்ன? நியாயங்கள் ஏன் மாற வேண்டும்…? 

அவன் கண் திறந்து அவளைப் பார்த்தான்.

“இல்ல சரண்யா. யாராயிருந்தாலும் என் பதில் நோ தான். எந்தப் பொண்ணும் என்னால கஷ்டப்பட வேண்டாம்.” 

“நீங்க நிச்சயம் நடப்பீங்க ஆகாஷ்!” 

“நடந்தப்பறம் அதைப் பத்தி யோசிக்கறேனே.”

“யோசிக்கறேன்னு சொன்னதுக்கே நன்றி.”

”நீ எதுக்கு நன்றி சொல்ற?” 

சரண்யா பதில் சொல்லாது புன்னகைத்தபடி அவன் பக்கத்தில் கிடந்த ஹிந்து பேப்பரை எடுத்தாள். இரண்டாம் பக்கத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விழிகளை மேய விட்டாள். நேஷனல் ஜியாக்ரபிக் நிகழ்ச்சிகளை படித்தவள் விழிகள் சட்டென்று பிரகாசித்தன. கழுத்தை திருப்பி மணி பார்த்தாள்.

”எட்டு மணிக்கு ஒரு நல்ல டாக்குமென்ட்டரி இருக்கு ஆகாஷ்.நீங்க நிச்சயம் பார்க்கணும். இன்னும் பதினஞ்சு நிமிஷம் இருக்கு எட்டாக. நல்ல காலம் எதேச்சையா புரோக்ராம்ஸ் பார்த்தேனோ தெரிஞ்சுதோ” 

“என்ன டாக்குமென்ட்ரி?” 

“நீங்களே பாருங்க புரியும். நாலஞ்சு மாசத்துக்கு முந்தி நா பார்த்தேன். பார்த்துட்டு அப்டியே உக்காந்துட்டேன். என்ன சொல்றதுன்னு தெரியல.” 

அவள் சொல்லச் சொல்ல ஆகாஷின் ஆர்வம் அதிகரித்தது. எட்டாக இன்னும் பத்து நிமிடமிருந்தது.

சரண்யா ரிமோட்டை எடுத்து டி.வி.யை ஆன் பண்ணினாள். ஆகாஷின் தலைக்கடியில் இன்னும் இரண்டு தலையணைகளை வைத்து அவன் சற்றேதலை உயர்த்தி பார்க்க உதவினாள். 

டாக்குமென்ட்ரியின் முதல் இரண்டு நிமிடங்களிலேயே ஆகாஷ் அயர்ந்து போனான்.

டான் எனும் இளைஞன், கிட்டத்தட்ட உடம்பின் எந்த அங்கமுமே இயங்காதவன். கடுமையான ஸ்பாஸ்டிக். தலை முதல் கால் வரை எல்லா உறுப்பும் கட்டுப்பாடிழந்து ஆடிக் கொண்டிருந்தது. பேச முடியாது. நடக்க முடியாது. கைகால் அசைக்க முடியாது. அவனிடம் முழுதாக இருப்பது அவனுடைய எண்ணங்களும், நம்பிக்கையும் மட்டும்தான். அந்த எண்ணங்களையும் வெளிப்படுத்த அவனால் இயலவில்லை. அவனைப் புரிந்து கொள்ள யாரும் இல்லை. அவனுக்குள்ளும் சில கனவுகளும் லட்சியங்களும் இருப்பதை உணர்ந்து கொள்ள எவரும் இல்லை. இவனால் என்ன முடியும்? அய்யோ பாவம் என்ற இரக்கப் பார்வையைத் தவிர வேறு ஏதும் அவன் கண்டதில்லை. கிட்டத்தட்ட பூமியில் விழுந்து விட்ட வேண்டாத உயிர் என்று அனைவரும் கைவிட்ட நிலையிலும் அவன் நம்பிக்கையோடு தன்னைப் புரிந்து கொள்ளும் ஒரு ஜீவனைத் தேடுகிறான். 

அப்படி ஒரு ஜீவன் அவனுக்கு உதவ முன்வருகிறது. அவனுக்கு கம்ப்யூட்டர் கற்றுத்தர முன்வருகிறார் அந்த மனிதர். தலையில் ஒரு பெல்ட் கட்டி நெற்றிப் பக்கமிருந்து நீளும் ஒரு குச்சியினால் சிரமப்பட்டு குனிந்து கம்ப்யூட்டரில் அந்த குச்சியினால் எழுத்துக்களை அழுத்தி அழுத்தி தன் எண்ணங்களையும் ஆசைகளையும் அவன் வெளிப்படுத்த அந்த மனிதர் வியந்து போகிறார். ஒரு நல்ல ஓவியனாக வர வேண்டும், ஓவியப் பயிற்சியில் பட்டம் பெற வேண்டும். இதுதான் அந்த ஊனமுற்ற இளைஞனின் ஆசை, லட்சியம் முடியுமா உன்னால்? அவர் கேட்க அவன் முடியும் என்று கம்ப்யூட்டர் மூலமே பதில் சொல்ல அவர் அவனுக்கு உதவ தீர்மானிக்கிறார். “உனக்கு இது வேண்டாத வேலை!” தெரிந்தவர் அறிந்தவர் எல்லோரும் அவரை கேலி செய்கிறார்கள். அவனால் எதுவும் முடியாது. கை கால் இயங்குபவனுக்கே ஓவியம் சிரமமான விஷயம். இந்நிலையில் எதையுமே அசைக்க இயலாதவனுக்கு எப்படி இது சாத்தியமாகும் நேரத்தை வீணாக்காதே விட்டுவிடு! என்று அவர்கள் அவருக்கு அறிவுரை சொல்ல, அவர் இன்னும் உறுதியாய் அவனுக்கு உதவியே தீருவது என்று முடிவு செய்கிறார். 

”வண்ணக்குப்பிகள், வரைவதற்கான பேப்பர், போர்டு, பிரஷ் எல்லாம் வாங்கி வருகிறார். அவன் தலையில் விசேஷ பெல்ட் கட்டி அதில்குச்சிக்கு பதிலாக தூரிகையைப் பொருத்துகிறார். லொட லொடவென்று ஆடிய தலையை தன் இரண்டு தோள் பட்டைகளால் இறுக்கிக் கொண்டு தலையைத் தாழ்த்தி வண்ணங்களில் தூரிகையை முக்கி ஓவியம் தீட்ட ஆரம்பிக்கிறான் டான். அந்த மனிதர் எடுத்த பிரயத்தனங்கள் வீண் போகவில்லை. நூறு பர்ஸன்ட் ஊனம் கொண்ட டான் தன் தலையில் பிரஷ் பொருத்தி வரைந்த ஓவியங்கள் ஊனமற்று பிரகாசித்தன.அற்புதமான ஓவியங்களை தீட்டுகிறான் அந்த இளைஞன். அதுமட்டுமல்ல, கம்ப்யூட்டரில் அவன் உருவாக்கும் வீடுகளின் மாடல்கள் ஒரு உதவியாளனால் மினியேச்சர் மாடல்களாக செய்யப்பட, அவனுடைய மாடல்களும், ஓவியங்களும் பல பரிசுகள் பெறுகிறது. ஏளனமாய் பார்த்தவர்கள் அவ்வளவு பேரும் பிரம்மிப்போடு அவற்றைப் பார்த்து வியக்கிறார்கள். டாஸன் பல்கலைக் கழகத்தில் டான் ஓவியப் படிப்பில் பட்டம் பெறுகிறான். பட்டமளிப்பு விழாவுக்கு சக்கர நாற்காலியில் அவன் வரும்போது அவ்வளவு விழிகளும் கண்ணீர் சிந்தி வரவேற்கிறது.” 

”மேடையில் அவன் பட்டம் வாங்கிய போது அவன் தாய் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள். பார்வையாளர்கள் விழிகளிலும் கண்ணீர் கரகோஷம் விண்ணைப் பிளக்கிறது. உடலில் எவ்வித இயக்கமும் இல்லாத டான் இப்போது ஓவியப் பட்டதாரி கம்ப்யூட்டர் புலி. அவனைப் பற்றிய குறிப்புகளோடு டாக்குமென்ட்ரி நிறைவு பெற ஆகாஷ் விழிகள் பொங்கி வழிய பார்த்துக் கொண்டிருந்தான். யாரும் யாரோடும் பேசவில்லை. பிரம்மிப்பில் வாயடைத்துப் போயிருந்தது. கிட்டத்தட்ட அரைமணி நேரம் எவ்வித பேச்சுமின்றி அந்த இளைஞனின் சாதனைகளையே அசை போட்டபடி கிடந்தான் ஆகாஷ். அவன் யோசிக்கட்டும் என்று நினைத்தபடி டி.வி.யை அணைத்துவிட்டு எழுந்தாள் சரண்யா. 

“இத்தனை கடுமையான ஊனத்திலும் இந்த இளைஞனால் இவ்வளவு சாதனை செய்ய இயலும்போது என்னால் முடியாதா? தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். முடியும் என்று பதிலும் சொல்லிக் கொண்டான். நிச்சயம் முடியும் எனக்கு பேச வரும், எழுத வரும், பாட வரும். இது பிறவி நோயல்ல. விபத்தினால் விளைந்தது. விதி என்று இதனை ஏற்றுக் கொள்வதை விடுத்து தன்னம்பிக்கையோடு இதனை எதிர்த்தால் நிச்சயம் என்னால் ஜெயிக்க முடியும். மனம் ஊனமானால், நம்பிக்கை ஊனமானால் வாழ்க்கை ஊனமாகி விடும். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. முயற்சி செய் ஆகாஷ்..! இப்படியே படுத்துக் கிடக்காதே. முயற்சி செய். சாவுவருமென்றாலும்பரவாயில்லை. முயற்சி செய்து விட்டு செத்துமடி! அமிர்தம் உண்டாற்போல் எங்கிருந்தோ ஒரு அசுர பலம் அவனுக்குள் புகுந்தது. அவன் மெல்ல மெல்ல உடலை அசைக்க முயற்சித்தான். கதவிடுக்கு வழியே அவனது முயற்சிகளை கண்ணீரோடு பார்த்தாள் சரண்யா. நிச்சயம் அவன் ஜெயித்து விடுவான் என்ற நம்பிக்கை அவளுக்குள் நிறைந்தது.” 

அடுத்த நாள் காலை அவன் அறைக்குச் சென்றவளுக்கு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. உடம்பெல்லாம் தெப்பலாக நனைந்திருக்க, ஆகாஷ் படுக்கையில் சாய்ந்தாற்போல் கைகளை ஊன்றிக் கொண்டு அமர்ந்திருந்தான். சரண்யா அவன் அருகில் ஓடினாள். கை எடுத்தால் விழுந்து விடும் நிலையிலிருந்தவனின் இடுப்பில் கை கொடுத்து அவன் சரியாக அமர உதவினாள். 

“வெரிகுட்… ஆகாஷ்… எக்ஸலன்ட்..! இந்த தன்னம்பிக்கையைத்தான் நா உங்ககிட்ட எதிர்பார்த்தேன்” என்றவள் சந்தோஷமாக டெலிபோனை எடுத்து அவசரமாக சம்பத்தை அழைத்தாள். எதிர்முனையில் ரிஸிவர் எடுக்கப்பட்டதுமே சம்பத்தான் பேசுகிறார் என்ற நினைப்பில், “ஆகாஷ் தானா எழுந்து உக்காந்துட்டார் அங்கிள். சீக்கிரம் வாங்களேன்” என்றாள் உற்சாகத்தோடு. ரிஸிவரை காதில் வைத்திருந்த சாரதாவின் முகம் மாறியது. பிள்ளை எழுந்து உட்கார்ந்தான் என்ற சந்தோஷச்செய்தியை விட சரண்யா அங்குதான் இருக்கிறாள் என்ற விஷயம்தான் அவளை தாக்கியது.

அத்தியாயம்-40 

என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் இறைவன் துணை நிற்பான் என்ற கடவுள் நம்பிக்கையும் செயல்படுவோம், நல்லன நடக்கும் என்ற பொது நம்பிக்கையும் கருந்தால் வாழ்க்கை நிச்சயம் வளமடையும். -ஜீன்ஸ். 

“எல்லாரும் சேர்ந்து என்னை முட்டாளாக்கிட்டீங்க இல்ல?” புருஷனிடம் சீறினாள் சாரதா. சம்பத் குத்துக்கல் மாதிரி அமர்ந்திருந்தார்.

“அவளையும் அவனையும் சேர்த்து வைக்கத்தான் அவனை அங்க கூட்டிட்டு போனிங்களாக்கும் எல்லாரும்!” 

“இதோ பார் சாரதா நீ வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டா அந்த பொண்ணு செத்துடணுமாக்கும். அவளைக் கொண்டு போய் தன் வீட்ல வெச்சுக்க சங்கீதாக்கு சகல உரிமையும் உண்டு. அதைக் கேக்க உனக்கு எந்த உரிமையும் இல்ல. புரிஞ்சுதா?” 

“தாராளமா இருந்துட்டு போகட்டும். ஆனா என் பிள்ளையை அங்க கூட்டுட்டு போய் விட்ருக்கீங்க பாருங்க. அதான் தப்பு. போதும் அவன் அங்க இருந்தது. போய் கூட்டிட்டு வாங்க இப்பவே”. 

“அவன் இங்க வர விரும்பல சாரதா” 

“அப்டின்னு அவன் சொன்னானா…?” 

“பின்னே சந்தேகமிருந்தா போன் பண்ணித்தரேன். நீயே அவங்கிட்ட கேட்டுக்கயேன்”. 

“நீங்க என்ன பண்ணிக் கொடுக்கறது? எனக்குத் தெரியாதாக்கும்?” சாரதா ரிஸிவரை எடுத்து சங்கீதா வீட்டின் எண்களை அழுத்தினாள். எதிர்முனையில் சம்பந்தியம் மாளின் குரல் கேட்க சட்டென்று குரலை தணித்து பேசினாள். 

”சௌக்கியமா? நா சாரதா பேசறேன்” 

“எப்டியிருக்கீங்க?” 

”நல்லார்க்கேன். ஆகாஷ்கிட்ட கொஞ்சம் பேசலாம்னு…”

“பேசுங்களேன்… இதோ கொடுக்கறேன்” 

சற்று நேரத்தில் ஆகாஷ் லைனில் வந்தான். அவன் குரல் கேட்டதும் சாரதாவுக்கு அழுகை வந்தது. 

“எப்டிடா இருக்க…?” 

“எழுந்து உக்கார ஆரம்பிச்சுட்டேம்மா. கூடிய சீக்கிரம் நடந்துடுவேன்.” 

”பழனி முருகனுக்கு பாலாபிஷேகம் பண்றேன்னு வேண்டிக் கிட்டேண்டா. அந்த முருகன் கைவிடல. கூடிய சீக்கிரம் உன்னை மலை ஏற வெச்சுடுவான் பாரு.நீ உடனே இங்கே வந்துடுடா ஆகாஷ். நீ இல்லாம வீடே நல்லால்ல. சங்கீதாகிட்ட போனைக் குடு. நா சொல்றேன்”. 

”அவசரப்படாதேம்மா. நா இன்னும் கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு வரேன்.” 

“இந்த வீட்டையும் என்னையும் விட உனக்கு தங்கச்சி வீடு உசத்தியா போய்டுச்சில்ல? வேணும்னா சங்கீதாவையும் மாப்ளயயும் இங்க வந்து கொஞ்ச நாள் இருக்கச் சொல்லேன்.” 

“இன்னொரு ஆளும் அங்க வரணும்னு நா விரும்பறேன். அதுக்கு நீ அனுமதிப்பாயாம்மா?’ 

“யாரு…?” 

”சரண்யா! அவ அங்க வர நீ அனுமதிப்பன்னா சொல்லு. நா வரேன்.” 

சாரதா விக்கித்தாள். நேருக்கு நேர் ஆகாஷ் இப்படி கேட்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

”நிச்சயம் இதுக்கு நீ ஒத்துக்கமாட்டன்னு தெரியும்மா எனக்கு” ஆகாஷ் சிரித்தான்.

“அப்பொ… என்னைவிட உனக்கு அவ உசத்தியா போய்ட்டா இல்ல? வெளிப்படையா சொல்லுடா ஆகாஷ் .நீ யாரைக் காதலிக்கற சுஜிதாவையா, இல்ல இந்த சரண்யாவையா?” 

“சுஜிதாவை காதலிச்சேம்மா, அது நா நா செய்த தவறு. யோசிச்சு பார்த்தா காதல்ங்கற டெபனிஷன்க்கு அந்த காதல் கொஞ்சமும் பொருந்தலன்னு தான் சொல்லணும். நெருப்புல குதிச்சாலும், நீர்ல அடிச்சுக்கிட்டு போனாலும், புயல்ல சிக்கிக்கிட்டாலும் அழிஞ்சு போகாம இருக்கற அன்புதான் காதல்னா என் மேல சுஜிக்கு இருந்த அன்பு காதலே இல்ல. வெறும் தூரத்து பச்சை. இது அனுபவம் எனக்கு புரிய வெச்ச உண்மை! இத்தனை கஷ்டத்துக்கு அப்பறமும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, எவ்வித சுகமும் கிடைக்காதுன்னு தெரிஞ்சுக்கிட்டும் என் கூட வாழத் தயாரா இருக்கா சரண்யா. எது காதல்னு எனக்கு புரிய வெச்ச தேவதை அவதாம்மா. அவளுக்கு அனுமதியில்லாத வீடு எனக்கும் வேண்டாம்” ஆகாஷ் தீர்மானமாகச் சொன்னான். 

சாரதா திகைத்தாள். பிள்ளை தன்னையே எடுத்தெறிந்து பேசி விட்டு சரண்யாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு பேசியதில் முகம் சிவந்தது.

”வேணாம்டா.. எனக்குயாரும் வேணாம். எல்லாரும் எப்டியோ போங்க. பத்து மாசம் சுமந்து பெத்து வளர்த்து ஆளாக்கின பாவத்துக்கு அனுபவிச்சுதானே ஆகணும். அனுபவிக்கிறேன்!” 

அழுகை பீறிட போனை வைத்தாள். எல்லா ஆத்திரமும் எதிரில் அமர்ந்திருந்த சம்பத்தின் மீது பாய்ந்தது. 

”போய்த் தொலைய வேண்டிய தானே நீங்களும். போய் எல்லாரும் சந்தோஷமா இருங்க. நா செத்தா கூட யாரும் எட்டிப் பார்க்க வேண்டாம். 

சம்பத் புன்னகைத்தார்.

“நீ மாறவே மாட்டயா சாரதா..? அந்த பொண்ணு உனக்கு என்ன கெடுதல் பண்ணினா'” 

”ஏன்? அவ மூணு லட்சம் கொடுத்துட்டா நா அவளுக்கு அடிமையாய்டணுமா…? அதைத்தான் திருப்பிக் கொடுத்தாச்சு இல்ல? எடுத்துக்கிட்டு எங்கயாவது ஒழிஞ்சு போய்ட வேண்டியதுதானே? எதுக்கு எம் பொண்ணு வீட்ல போய் உக்கார்ராளாம்? எப்படா என் பிள்ளை படுத்த படுக்கையாவான், வளைச்சு போடலாம்னு காத்துட்ருந்தாளாக்கும். இப்ப இவனைக் கட்டிக்க எந்த பொண்ணும் கிடைக்க மாட்டான்னு உடனே இவளை நா கட்டி வெச்சுடுவேன்னு கனவு காண்றாளாக்கும்! ஒரு நாளும் முடியாதுங்க! எனக்கு மருமகளாகற தகுதி எப்பவும் அவளுக்கு கிடையாது. நா பிச்சையே எடுத்தாக் கூட, இவ கோடியில புரண்டா கூட அவளை நா மருமகளேன்னு ஆசிர்வாதம் பண்ண மாட்டேன்!” 

“பண்ணாட்டி போ…! யாரு கேட்டா உன் ஆசிர்வாதத்தை? நல்ல அம்மான்னா பிள்ளை இதயத்தையே அறுத்து எடுத்துக்கிட்டு போனாலும் நல்லாருடான்னு வாழ்த்துவா. உன்னைப் போல் ராட்சஸிகிட்ட போய் அதையெல்லாம் யாராவது எதிர்பார்ப்பாங்களா? நாய் வாலைக் கூட நிமிர்த்திடலாம்டி சாரதா. நீ மட்டும் திருந்தவே போறதில்ல. அந்த நம்பிக்கையே எனக்கு போய்டுச்சு. ஆனா, பணத்தை விட்டெறிஞ்சுட்டேன்னு சொன்னயே. அந்த பணத்தை அவ எடுத்துக்கிட்டு போகல. எங்கிட்டயே திருப்பிக் கொடுத்துட்டு வெறுங் கையோடதான் போயிருக்கா. உன் பணத்தையும் நகையையும் மூட்டை கட்டி பத்திரமா வெச்சிருக்கேன். அதை எடுத்துத் தரேன். அதோட பேசு, சிரி, கொஞ்சு, மருமகளேன்னு கூப்டு. மனுஷங்க எதுக்கு உனக்கு?” 

சம்பத் வெறுப்போடு வார்த்தைகளை உமிழ்ந்துவிட்டு தன் பீரோவில் வைத்திருந்த அந்த சிறிய துணி மூட்டையைக் கொண்டு வந்து அவளெதிரில் பொத்தென்றுவைத்து விட்டு கிளம்பியவர், என்ன நினைத்தாரோ மறுபடியும் திரும்பி வந்து அந்த பணமூட்டையை எடுத்துக் கொண்டார். 

“இதை எதுக்கு உங்கிட்ட கொடுக்கணும்? இது அவளோட பணம். அவங்கப்பா செத்து கொடுத்த பணம். இதை அவகிட்டயே சேர்க்கறேன். அதான் நியாயம். இந்த பணத்துலதான் அவ கல்யாணம் நடக்கணும். நடத்தி வைப்பேன்! மனசு மாறினா வந்து ஆசிர்வாதம் பண்ணு. இல்லாட்டி இங்கேயே இருட்டுல கிட. உன்னைக் கட்டிக் கிட்ட தோஷத்துக்கு கடசி வரை இங்க இருக்க வேண்டிய தலையெழுத்து எனக்கு மட்டும்தான். மத்தவங்களுக்கில்ல. நா போய் ஆகாஷை பார்த்துட்டு வரேன்.” 

அவர் பணத்தோடு கிளம்பிச் செல்ல சாரதா இடி விழுந்தாற்போல் சோர்ந்து அமர்ந்தாள்.

டாக்டரே ஆச்சர்யப்பட்டார். “உங்க வில் பவர்தான் ஆகாஷ். வேற ஒண்ணுமில்ல” என்று பாராட்டினார். 

”சரண்யா கொடுத்த சக்தி டாக்டர்” ஆகாஷ் அவளை சுட்டிக்காட்டினான். 

“அவ மட்டும் அன்னிக்கு அந்த டாக்குமென்ட்ரியப் பார்க்கச் சொல்லாம இருந்திருந்தா நா இவ்ளோ முயற்சி செய்திருப்பேனாங்கறது சந்தேகம்.” 

“அப்டின்னா நீங்க அந்த டானுக்குத்தான் நன்றி சொல்லணும்” சரண்யா சிரித்தபடி சொன்னாள். 

“அதென்ன டாக்குமென்ட்ரி..?” டாக்டர் அவனை பரிசோதித்தபடி கேட்க ஆகாஷ் அந்த இளைஞனைப் பற்றி சொன்னான். 

”கிரேட்..!” டாக்டர் வியப்போடு சொன்னார். 

”நாளைக்கு ஃபிஸியோதெரபிஸ்ட் வருவார் ஆகாஷ். உங்களை நிக்க வெக்கறது அடுத்த ஸ்டெப். நீங்க கோ ஆபரேட் பண்ணணும்.” 

“நிச்சயமா” 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது சம்பத் வந்தார். பிள்ளையின் உடல் நிலையில் ஏற்பட்டிருந்த முன்னேற்றம் அவர் முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தியது.

டாக்டர் போனதும் அவர்கள் அனைவரும் ஆகாஷின் அருகில் அமர்ந்தார்கள். ஆகாஷ், அம்மா தன்னிடம் பேசியதைச் சொல்லி வருத்தப்பட, சம்பத் அதற்குப் பிறகு தனக்கும் அவளுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையைக் கூறினார். 

“கடவுளே மறுபடியும் அந்த பணத்தைக் கொண்டு வந்துட்டீங்களா…?” சரண்யா சலித்துக் கொண்டாள். 

”உன் கூடப் பிறந்த அக்காவே இந்தப் பணத்துல பங்கு வேண்டாம், அது உன் பேர்லயே இருக்கட்டும்ன்னு பெருந்தன்மையா விட்டுக் கொடுத்திருக்கும் போது இதை நா மட்டும் எப்டி வெச்சுக்க முடியும் சரண்?”

சரண்யா பதில் சொல்லவில்லை. பணம் வந்தபோது ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்வோம். அதுதான் நியாயம் என்று இவள் கூறியதும் சரவணன் மறுத்து விட்டான். “உங்கப்பா உயிரோட இருந்து உங்கக்காவை எனக்கு கட்டிக் கொடுத்ததே பாக்கியம் சரண். உங்கக்காக்கு நா இருக்கேன். என்ன கஷ்டம் வந்தாலும் அவளை நல்ல படியா பார்த்துக்குவேன். இந்த பணம் அப்டியே உன் பேர்லயே இருக்கட்டும். உன் கல்யாணத்துக்கு ஆகும். இதுல பங்கு வாங்கறது மகா பாவம்!” 

தீர்மானமாக சொல்லி விட்டான் சரவணன். சத்யா கொடுத்து வைத்தவள்தான். இப்படி ஒரு புருஷன் கிடைப்பது பூர்வ ஜென்ம புண்யம். 

“என்ன யோசிக்கற சரண்?” மாமா அவள் தோளில் மெல்ல தட்டினார். 

“ம்… ஒண்ணுமில்ல நா இப்பொ என்ன செய்யணும் மாமா …?” 

“அப்டி கேளு சொல்றேன்… நீ ஏதோ ஸ்கூல் ஆரம்பிக்கணும்னு சொன்ன இல்ல? இந்த பணத்தை வெச்சு அதை ஆரம்பி…”

“கரெக்ட்…!” 

ஆகாஷும், சங்கீதாவும் அதை ஆமோதித்தார்கள். பிரவீண் தைரியம் கொடுத்தான். 

“வேளச்சேரில எனக்கு ஒரு வீடும் கொஞ்சம் நிலமும் இருக்கு சரண்யா. அந்த வீட்டை உன் ஸ்கூலா மாத்திக்க. உன் புண்யத்துல எனக்கும் கொஞ்சம் பங்குகிடைக்கட்டுமே!” பிரவீண் சொன்னான். 

“முதல்ல அஞ்சுகிளாஸ் வரை நடத்த அனுமதி வாங்கிடுவோம். ஏழைக் குழந்தைகளுக்கு மட்டும்தான் இந்த ஸ்கூல். கல்வி இலவசம். ஆனா அதுக்காக டீச்சர்களுக்கு சம்பளம் கொடுக்க மாட்டோம்னு இல்ல. நல்ல சம்பளம் குடுப்பேன்.” 

”சம்பளமில்லாம நா வந்து அங்க வேலை செய்ய விரும்பினா?” சங்கீதா சிரித்தபடி கேட்டாள். 

“ம்… அப்டி யாராவது விருப்பப்பட்டு வந்தா வேணாம்னா சொல்லுவாங்க…?” 

”உன் ஸ்கூல்ல எனக்கும் ஒரு வேலை தருவயா சரண்?” ஆகாஷ் கேட்க சரண்யா முகம் மலர்ந்தாள்.

“ஆக இது நம்ப ஸ்கூல். நம்ப ஸ்கூல்ல படிக்கற ஏழைக் குழந்தைகளும் ஆங்கிலம் பேசணும். நல்ல தமிழ் பேசணும்.” 

”நல்லதைச் செய், அதை இன்றே செய்னு ஒரு வாக்கு இருக்கு. சீக்கிரம் வேலைகளை ஆரம்பிச்சுடுவோம்” பிரவீண் நிஜமான உற்சாகத்தோடு சொன்னான். ஆரம்ப கட்ட வேலைகளை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினான். 

“ஏம்பா வீட்டுக்குப் போனா டோஸ் விழுமா…? உம் பொண்டாட்டி சமைச்சு வெச்சிருப்பாளா?” சங்கீதா கிண்டலாகக் கேட்டாள். 

“இல்லாட்டி நா சமைச்சு அவளுக்கு போட்டுட்டு போறேன்.” 

“அம்மா எப்பொப்பா மனசு மாறுவா?” 

“மாறுவா, நிச்சயம் மாறுவா. எனக்கு சரண்யா மேல நம்பிக்கை இருக்கு. ஆகாஷ் விஷயத்துலயே தன் பொறுமையாலயும் உறுதியான காதலினாலயும் ஜெயிச்சிருக்கறவ உங்கம்மா விஷயத்துல ஜெயிக்காமயா போய்டுவா? நிச்சயம் அவ அன்பை இவ வெளில கொண்டு வந்துடுவா பார். இதென்ன சினிமாவா சங்கீதா, கடைசி சீன்ல எல்லாரும் மனம் திருந்தி கை பிடிச்சுக்கிட்டு நெகிழ்ந்து உருகறதுக்கு…? இது ரியல் லைஃப்மா! மாற்றங்கள் மெதுவாதான் ஏற்படும். ஆனா நிச்சயம் ஏற்படும் என்ன சரண்..? ஜெயிப்ப இல்ல…?”

“கண்டிப்பா மாமா. மாமியை விட்ர முடியுமா என்ன…?”

“அப்பொ நா கிளம்பறேன்” சம்பத் எழுந்தார். 

அடுத்த நாள் பிஸியோதெரபிஸ்ட் வந்தார். ஒரு பக்கம் சரண்யாவும், மறுபக்கம் சுவருமாகச் சேர்ந்து ஆகாஷை மெல்ல தூக்கி நிற்க வைத்தனர். நிற்க முடியாமல் அவன் தேகம் தடதடவென்று ஆடியது. பயத்தில் சரண்யாவைப் பிடித்திருந்த பிடி இறுகியது. 

“அப்டிதான் இருக்கும் மிஸ்டர் ஆகாஷ். உங்க தன்னம்பிக்கையும் முடியும்ங்கற மந்திரமும்தான் இதுக்கு மருந்து.உங்க நரம்புகள் செயல்பட முயற்சி செய்ங்க…” பிஸியோதெரபிஸ்ட் உற்சாகப்படுத்த ஆகாஷ் கடுமையாய் முயற்சித்தான். வியர்த்துக் கொட்டியது. அரைமணி நேர பிரயத்தனத்தில் அரை இன்ச் காலை நகர்த்தினான். 

“குட் வெரிகுட்… இதுவே முன்னேற்றம்தான். நா வேணா எழுதித்தரேன். சரியா ஆறாவது மாசம் நீங்க ஓடுவீங்க பாருங்க. கொஞ்சம் கொஞ்சம் நடக்க ஆரம்பிச்சதும் ஒரு வாக்கிங் ஸ்டிக் வெச்சுக்குங்க. போகப் போக அது தேவையிருக்காது” பிஸியோதெரபிஸ்ட் பலவிதமான உடற்பயிற்சிகளை அவனுக்கு சொல்லிக் கொடுத்து தானே சிலவற்றை அவனுக்கு செய்ய வைத்தார். எப்படி செய்ய வைக்க வேண்டுமென்று சரண்யாவுக்கும் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனார். 

பதினைந்தாவது நாள் யாரையாவது பிடித்துக் கொண்டு இரண்டடி நடந்தான். அவனுக்கே சந்தோஷம் தாங்கவில்லை. உடற்பயிற்சிகளை சின்சியராகச் செய்தான். 

“சீக்கிரமே கல்யாணத்துக்கு நாள் பார்த்துடலாமா…?” பிரவீண் உற்சாகமாகக் கேட்டான். 

“நோ… நா நல்லா நடக்கணும். டாக்டர்கிட்ட ஒரு சர்ட்டிபிகேட் கேட்கலாம்னு இருக்கேன். அவர் ஓகேன்னு சொன்னாதான் கல்யாணம்”. 

அவன் சொல்ல சரண்யாவின் முகம் மாறியது. அன்று மதியம் அவனுக்கு சாப்பாடு கொடுக்கும் போது மௌனமாயிருந்தவளை வியப்போடு பார்த்தான் ஆகாஷ். 

“மௌன விரதமா…?” 

“ப்ஸூ..!” 

”கோவமா…?” 

“..”

“நா நடக்க ஆரம்பிச்சட்டேன்னு கோவமா…?” 

அவன் கிண்டலாகக் கேட்க பக்கென்று சிரித்தாள்.

”இப்பொ சொல்லு எதுக்கு இந்த மௌனம்?”

”பின்னே…? டாக்டர் ஓகே சொன்னாதான் கல்யாணம்னு சொன்னா..?” 

“உன் நல்லதுக்காகத்தான் அப்டி சொன்னேன்.”

”என் நல்லது எதுன்னு எனக்கு தெரியும்.” 

“அப்டியா, எது… சொல்லேன் கேப்போம்.” 

“பேசாதீங்க ஆகாஷ், வேணும்னே என்னை வம்புக்கு இழுக்கறீங்க.”

“அப்டியா தோணுது.. உனக்கு…?” 

“பின்ன…?” சரண்யா ஜன்னலருகில் சென்று நின்றாள். 

“இங்க வாயேன் சரண்” 

“மாட்டேன்” 

“உனக்கு ஒண்ணு தரேன். வந்து வாங்கிக்க” 

“எதுவும் வேணாம்”

“அவ்ளோதானா எம்மேல ஆசை உனக்கு?” 

“..”

“போகட்டும். உனக்கு ஆசையில்லாட்டா என்ன? எனக்கு இப்பதான் பொத்துக்கிட்டு வருது. நானே அங்க வரேன் பார்” 

ஆகாஷ் படுக்கையிலிருந்து மெல்ல எழுந்தான். வாக்கிங் ஸ்டிக்கை பிடித்தபடி பல்லைக் கடித்துக் கொண்டு மிக மிக மெதுவாக நடந்தான். ஓரிடத்தில் தடுமாறி விழப் போக சரண்யா சட்டென்று தாங்கிப் பிடிக்க அவள் தோளில் சாய்ந்தவன் தன் இதழ்களுக்கு வெகு அருகாமையிலிருந்த அவள் கன்னத்தில் முத்தமிட்டான். உடலெங்கும் ஒரு இன்ப அதிர்ச்சி பரவ சரண்யா கண்களை மூடிக் கொண்டாள். பரவசத்தில் விழிகளிலிருந்து நீர் உருண்டு வழிந்தது. இந்த அன்புக்குத் தானே அவள் ஏங்கினாள், தவமிருந்தாள், காத்திருந்தாள். இதோ இப்போது அது கையில் கிடைத்திருக்கும் நேரத்தில் இதைப் பார்த்து சந்தோஷப்பட அப்பா இல்லாமல் போய்விட்டாரே..! சந்தோஷமும் சங்கடமும் சமமாய் மனசில் பொங்க, உதட்டைக் கடித்துக் கொண்டாள். 

ஆகாஷ் வியந்தான். வருஷக்கணக்காக காதலித்தும் சுஜிதாவிடம் அவன் மறந்தும் கூட எல்லை மீறியதில்லை. ஒரு வேளை பிரிந்து விடுவார்கள் என்று தெரிந்ததால்தான் தெய்வம் அவன் மனசில் விபரீத சலனங்களை ஏற்படுத்தவில்லையோ என்று தோன்றியது. அவளிடம் அப்படி இருந்தவன் இதோ இந்த பெண்ணிடம் எப்படி நெகிழ்ந்து விட்டேன் என்று நினைத்தவனுக்கு சிரிப்பு வந்தது. இதுதான் காதலாக இருக்க வேண்டும். இவள் என்னுடையவள் என்ற உரிமையில் கொடுத்ததுதான் இந்த முத்தம்.

”இப்டியே நின்னுட்டா எப்டி…? இன்னோண்ணு வேணும்னு அர்த்தமா…?” 

அவள் காதருகில் கிசுகிசுத்தான். சட்டென்று விலகினாள். இதுவரை ஏற்படாத வெட்கம் குப்பென்று பொங்கியதில் முகம் ரத்தமாய்ச் சிவந்தது. 

சரியாய் ஆறாம் மாதம் ஓரளவுக்கு நன்றாகவே நடக்க ஆரம்பித்தான் அவன். பள்ளி ஆரம்பிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டது. அட்மிஷன் மும்முரமாக நடந்தது. ஆகாஷை அழைத்துச் சென்று ஸ்கூலைக் காட்டினாள். 

”நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சரண்யா. இந்த அளவுக்கு சந்தோஷமா இதுவரை நிச்சயம் இருந்ததில்ல. நாம நாளைக்கு அம்மாவைப் போய்ப் பார்த்து பேசுவோம். கல்யாணத்துக்கு நாள் பார்க்கச் சொல்லுவோம். சட்டுனு சம்மதிக்க மாட்டாங்கதான். சம்மதிக்கற வரை தினமும் போவோம். எறும்பு ஊர ஊர அம்மியே தேயும்போது அம்மா கரைய மாட்டாளா என்ன?” 

”அதானே… கரையாம யார் விட்டா?” சரண்யா சிரிக்க, ஆகாஷ் அவள் கைகளை கோர்த்துக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அந்த இறுக்கத்தில் தெரிந்த அன்பில் கரையத் தயாரானாள் அவள்.

(முற்றும்)

– வருவாள், காதல் தேவதை… (நாவல்), முதற் பதிப்பு: 2012, தேவி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *