கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 7,748 
 

காலையை பின்னுக்குத்தள்ளி மதியத்திற்கு கடிகாரம் நகர்ந்திருந்தது. பெரிய முள்ளும் சின்ன முள்ளும் கூடிக் கலைந்திருந்தன. அந்த பிரம்மாண்ட மாலில் கூட்டம் ட்யூப்பில் அடைக்கப்பட்ட பேஸ்ட்டைப் போல அடர்த்தியாய் இருந்தது. ஏற்றிவிடுவதும் இறக்கி விடுவதுமாய் எஸ்கலேட்டர் ஓய்வில்லாமல் மடங்கிக் கொண்டிருந்தது. பத்தடிக்கு ஒரு ஜோடி. கமிட் ஆனவர்களும் ஆகப்போகிறவர்களும் கண்களில் கனவு விதைத்து உதடுகளில் அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். மாலில் நுழைந்த அவன் ஜீன்ஸ் அணிந்திருந்தான். பொருந்தா ஆஃப் ஸ்லாக்கை தாறுமாறாக இன் செய்திருந்தான். ஸாக்ஸ் தவிர்த்து ஷூ அணிந்திருந்தான்.

செக்யூரிட்டிகளுக்கு நல்ல பிள்ளையாய் கைதூக்கி, மெட்டல் டிடெக்டர்களில் அமைதி காத்து வேகமாய் லானில் நுழைந்தான். நடுத்தரமான உடல்வாகு. வற்றிப்போன கன்னங்கள். தீர்க்கமான கண்கள். சிகரெட் பழகி இருந்த உதடுகள். லானைக் கடந்து எஸ்கலேட்டரில் சகமனிதர்களைப் பின்னுக்குத் தள்ளி அதன் வேகத்தை சகிக்க முடியாமல் செலுத்தப்பட்டவன் போல இரண்டிரண்டு படிகளாகக் கடந்து நான்காவது ஃபுளோருக்கு வந்தான். தடுப்புக் குழாயின் கைகளை ஊன்றி கீழே இருந்த காபி ஷாப்பை கவனித்தான். பிறகு, கால்களை எக்கி தடுப்புக் குழாயின் மீது வைத்து, அருகில் நின்றிருந்தவர்கள் ஆபத்து உணருமுன்…பாய்ந்தான்.

காற்றில் அலைந்து கீழே காபி ஷாப்பில் இருந்த இருவர் மீது உத்தேசமாக விழுந்து மண்டை சிதறினான். பெண்கள் அலறினார்கள். ஆண்கள் பரபரப்பானார்கள். விபரீதம் புரியாமல் குழந்தைகள் மிரண்டன. ஒட்டுமொத்தக் கூட்டமும் அந்த இடத்தில் திரண்டது. செல்போன் காமிராக்கள் விழித்துக் கொள்ள… போலீஸுக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் பறந்தது.

“போன தடவ இப்படி ஒரு இன்ஸிடென்ட் நடந்ததுமே வார்ன் பண்ணினேன். பேரிகேட் உயரத்த அதிகப்படுத்துங்க, செக்யூரிட்டிய டைட் பண்ணுங்க, யாரையும் மேல ஏற விடாதீங்கன்னு சொன்னேன்…’’

இன்ஸ்பெக்டர் விஜயசாரதி கடுப்படித்தார்.

மால் இன்சார்ஜ் அமைதியாக அவரைப் பார்த்தார்.

“என்னய்யா.. இருக்கா போயிட்டா…?”

ஆம்புலன்ஸ் உதவியாளர் உதட்டைப் பிதுக்கினார்.

“ரெண்டு பேரும் அவுட் சார்…”

“சார்… ஃபெஸ்டிவல் நேரம். கூட்டம் அதிகமா இருக்கு… தயவுசெஞ்சு…”

மால் மேனேஜர் பேசி முடிப்பதற்குமுன் இன்ஸ்பெக்டரின் செல்போன் ஒலித்தது. அஸிஸ்டென்ட் கமிஷனர் என்றது. அமைதியாகக் கேட்டார். பிறகு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரைப் பார்த்தார்.

“பிரபாகர்… ஏசி பாடி க்ளியர் பண்ணச் சொல்றாரு. செல்போன்ல சீன் ஆஃப் சூஸைட் கவர் பண்ணுங்க. கந்தசாமி, நீங்க கிரவுட க்ளியர் பண்ணுங்க. பாடிய ரூட் பண்ணுங்க. செத்துட்டாங்கன்னு தெரிய வேணாம். யாராவது பத்திரிகைக்காரன் கேட்டான்னா ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காங்கன்னு சொல்லுங்க. உயிர் இருக்கற மாதிரி பில்டப் கொடுத்திட்டு ஆம்புலன்ஸ்ல ஏத்துங்க…”

மக்கள் மீண்டும் பர்ச்சேஸில் தீவிரமானார்கள்.மாலின் சிசிடிவி கன்ட்ரோல் ரூமுக்கு முன்னால் இன்ஸ்பெக்டர் விஜயசாரதியும், எஸ்.ஐ. பிரபாகரும், ஹெட் கான்ஸ்டபிள் கந்தசாமியும் நின்றிருந்தார்கள். குறிப்பிட்ட அந்த நேரத்தில் மாலுக்குள் நுழைந்த கூட்டத்தைப் பார்த்தார்கள்.

“பிரபாகர்… இந்தக் காலத்துல செல்போன் கூட இல்லாத ஒருத்தன். ஆச்சரியமா இருக்குல்ல…’’

“சூஸைட் மூட்ல வந்திருக்கான். பேண்ட் சட்டை பாக்கெட் எல்லாம் துடைச்சி வச்சது மாதிரி இருக்கு…’’“தற்கொலை பண்ணிக்கறதுக்கு இந்த இடம்தான் கிடைச்சுதா… சிட்டில ஏகப்பட்ட மால் இருக்கே…’’ “சார்… அவன் கீழ விழுந்து சாகறதுக்கு கொஞ்சம் முன்னாடி கிரவுண்ட் ஃபுளோர்ல இருக்கற பொட்டிக் ஷாப்ல ஒரு பொண்ணுக்கும் பையனுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கு. அந்தப் பொண்ணு பையன இங்கிலீஷ்ல ஏதோ திட்டியிருக்கா. அந்தப் பையன் டென்ஷனாகி வேகமா வெளில வந்திருக்கான். மண்டை சிதறிப் போனதால கடைக்காரங்களால அடையாளம் காட்ட முடியல. ஒரு வேளை இவன் அந்தப் பையனா கூட இருக்கலாம் சார்…’’

“பார்ப்போம். ஒருவேளை அதமாதிரி இருந்தா ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கணும் இல்ல…’’“அவனுக்கு முன்னாடி வந்து வெயிட் பண்ணிக்கிட்டும் இருந்திருக்கலாம் சார்…’’இப்போது மானிட்டரில் அவனைப் போலவே ஓர் உருவம் வேகமாக மாலுக்குள் நுழைவது தெரிய… ‘‘சார்… அதே ஜீன்ஸ்… சட்டை. இவன்தான் சார்…’’ ‘‘ரீவைண்ட் பண்ணுங்க…’’அவன் சரசரவென பின்னால் போனான். கேமராவுக்கு என்ட்ரி கொடுத்தான் “தனியாத்தான் வந்திருக்கான். என்ன எழவுக்காக குதிச்சான்னு தெரியலை. இப்போதைக்கு நீங்க சொன்ன தியரியையே வச்சுப்போம். அதான் பிரச்னை இருக்காது.

காதல் பிரச்னை. காதலி கூட சண்டை. அதனால சூஸைட் அப்படின்னு நியூஸ் கொடுத்திடலாம். அந்த பொட்டிக் ஷாப்காரன்கிட்ட ஒரு ஸ்டேட்மென்ட் வாங்கிக்குங்க. மத்தத அப்புறம் பார்க்கலாம். என்ன..?’’ சப் இன்ஸ்பெக்டர் பிரபாகர், “அதான் சார் சேஃப்…’’ என்றபோது திரையில் கவனமாக கண்களைப் பதித்திருந்த கான்ஸ்டபிள் கந்தசாமி அந்த உருவத்தை கவனித்தார். உற்றுப் பார்த்து திடுக்கிட்டார். “அப்படியே ஜூம் பண்ணுங்க…’’ என்றார் மானிட்டரைக் கையாண்டு கொண்டிருந்தவனிடம். ஜூம் செய்தான். அந்த உருவம் அருகே வந்தது. கந்தசாமி உற்றுக் கவனித்தார். திடுக்கிட்டார். மெல்ல இன்ஸ்பெக்டர் காதில் கிசுகிசுத்தார்.

“சார்… இவரு ஃபார்மர் ஐ.பி டைரக்டர். முருகன்…’’

“அதுக்கென்ன இப்ப..?’’

“சென்ட்ரல் ஐபில டைரக்டரா இருந்தவரு. நாலு வருஷத்துக்கு முந்தி ரிசைன் பண்ணிட்டாரு. அவரோட ரெஸிக்னேஷன் அப்ப பரபரப்பா பேசப்பட்டுச்சு. தமிழ்நாட்டுலேந்து டெபுடேஷன்ல ஹோம் மினிஸ்ட்ரிக்குப் போனவரு. மதுரையில டி.ஐ.ஜி.யா இருந்தப்ப அவருக்கு எஸ்கார்ட் போயிருக்கேன்…”

“இப்ப என்னய்யா அதுக்கு…?’’

“இந்த நேரத்துல அவரு ஏன் இங்க வரணும்..? செத்துப்போனவன் வேற சந்தேகப்படற மாதிரி இருக்கான். சூஸைட்லயும் டவுட்ஸ் இருக்கு. ஏதோ நிரடல…”

“இன்னும் பத்தே நாள்ல உங்களுக்கு ரிடையர்மென்ட். எனக்கு அது மட்டும்தான் நிரடுது கந்தசாமி. ஏதாவது உளறி வைக்காதீங்க. மீடியாக்காரன் வம்போட அலையறான்…”

இன்ஸ்பெக்டரும், எஸ்.ஐ.யும் நகர… கந்தசாமி மானிட்டரைப் பார்த்தபடி நடந்தார்.‘வடபழனியில் உள்ள பிரபல மாலில் நான்காவது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை… காதலியுடன் பிரச்னை காரணமா..?’ மாலை பேப்பர்கள் அலறின.

வளசரவாக்கம். அன்பு நகர். அதிகாலை நேரம். கான்ஸ்டபிள் கந்தசாமி டூவீலரில் சாய்ந்தபடி சாலையை கவனித்துக் கொண்டிருந்தார். மழை மெலிதாகத்தூறிக்கொண்டிருக்க… அந்த டீக்கடையில் சொற்பமான கூட்டம்.

கந்தசாமிக்கு மழை மற்றும் பனிக்காலத்தில சுவாசப் பிரச்னை வரும். ஆஸ்துமாக்காரர். சூரிய வெளிச்சம் பரவியவுடன்தான் வெளியில் வருவார். ஆனால், கடந்த நான்கு நாட்களாக மூச்சே நின்று போனாலும் பரவாயில்லை என்கிற எண்ணம். கடமையை நேசிக்கும் ஓர் உண்மையான போலீஸ் கான்ஸ்டபிளின் உறுதி அவரை அந்நேரத்துக்கு அங்கே நிற்க வைத்திருந்தது. காதலியுடன் பிரச்னை; இளைஞன் தற்கொலை என்று கேஸ் முடித்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தற்கொலைக்குப் பின்னால் ஒரு மர்மம் இருக்கிறது என்பது அவருக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது.

அன்று மாலில் பார்த்தது. முருகன் ஐபிஎஸ். அவரது தோற்றத்தில் நிறைய மாற்றம். இன்ஸ்பெக்டரும் சப்இன்ஸ்பெக்டரும் நகர்ந்தவுடன் சிறிது நேரம் அந்த வீடியோ ஃபுட்டேஜை ஓடவிட்டு பார்த்துவிட்டுத்தான் நகர்ந்தார். அந்த சம்பவம் நடந்ததும் அனைவரும் உள்ளே ஓடுகிறார்கள். ஆனால், முருகன் சார் மட்டும் பரபரப்பாக ஒருவித பதற்றத்தோடு வேகமாக பக்கவாட்டில் போனது ஏன்..? செத்துப்போனவனுக்கு எந்த ஹிஸ்டரியும் இல்லை. யார் அவன்? ஏன் அங்கே வந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும்..? அதேநேரத்தில் முருகன் சார் ஏன் வேகமாக நகர வேண்டும்..?

சட்டென சிந்தனை அறுந்து, தன்னைக் கடந்து போனவரை கவனித்து விட்டார். மங்க்கி குல்லா. கழுத்தில் மப்ளர். ஆனால், நடையில் மட்டும் போலீஸ் அதிகாரியின் கம்பீரம்.

“சார்…”

அவர் நிற்கவில்லை. திரும்ப அழைத்தார். இப்போது திரும்பினார். அவரேதான்! முருகன் சார். கந்தசாமி விறைப்பாக அட்டென்ஷனில் நின்று போலீஸ் சல்யூட் கொடுத்தார்.

“சார்… நான் கந்தசாமி. நீங்க முருகன் சார்தானே..?

அவர் அமைதியாக இருந்தார்.

“சார்… முருகன் சார்…’’

அவர் வேகமாக தலையை ஆட்டி மறுத்தார்.

“நீங்க முருகன் சார்தான். மறுக்காதீங்க. நான் போலீஸ் சல்யூட் கொடுத்தப்ப உங்க உடம்புல ஒரு ஜெர்க் வந்துச்சு சார்…”

“எப்படி என்னை கண்டுபிடிச்சே..?”

சிறிது நகர்ந்து வந்திருந்தார்கள்.

“ரிடையர்ட் ஐஜி சரவணன் சார நாலு நாளைக்கு முந்தி பார்த்தேன். பேச்சுவாக்குல நீங்க சென்னைலதான் எங்கேயோ இருக்கிறதா சொன்னாரு. பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி நீங்க டிசியா இருந்தப்ப நான் கீழ்ப்பாக்கம் ஸ்டேஷன்ல கான்ஸ்டபிள். உங்களுக்கு இந்த ஏரியால ஒரு வீடு இருக்கறது தெரியும். அப்பப்ப ரெஸ்ட் எடுக்க வருவீங்க. வீட்டை மறந்துட்டேன். விடிகாலைல உங்களுக்கு டீ குடிச்சாகணும். ஒருவேளை வீட்டுல யாரும் இல்லாம இருந்து நீங்க வெளில வரலாம். அந்த தியரி மட்டும்தான் எனக்கு இருந்துச்சு. கடவுள் என்னைக் கைவிடல சார்…”

முருகன் அமைதியாகக் கேட்டார்.

“எதுக்கு என்னைத் தேடி வந்தீங்க..? என்ன வேணும் உங்களுக்கு?’’

“சார்… அன்னைக்கு மால்ல ஒருத்தன் சூஸைட் பண்ணிக்கிட்டப்ப நீங்க அங்க வந்தீங்களா..?’’

தலையை ஆட்டினார். “நோ நோ… நான் ஏன் அங்க வரணும்… அதெல்லாம் இல்ல…’’ நகர முயற்சித்தார்.

“சார் ஒரு நிமிஷம்…. நீங்க வந்தீங்க. இருபத்தஞ்சு வருஷமா டிப்பார்ட்மென்டுல இருக்கேன். இன்டெலிஜென்ஸ்ல ரெண்டு வருஷம் இருந்திருக்கேன். என்னோட உள்ளுணர்வு சொல்லுது சார். ப்ளீஸ்… ரிடையர்மென்டுக்கு இன்னும் நாலே நாள். சர்வீஸ்ல ஏதோ ஒண்ண கண்டுபிடிச்ச திருப்தி வேணும். சூஸைட் பண்ணிக்கிட்ட அவனுக்கும் நீங்க அங்க வந்ததுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு…நீங்க எதையோ மறைக்கிறீங்க…”

சிறிது நேரம் யோசித்தார். உற்று அவரைப் பார்த்தார்.

“இருக்கு’’ என்றார் பளிச்சென்று.

“சார்…”

“அன்னைக்கு என்னைக் கடத்தறதுக்கோ இல்ல கொல்றதுக்கோ திட்டம் போட்டிருந்தாங்க…’’

“சார்..”

“கந்தசாமி… சின்சியர் போலீஸ்மேன்! இந்தக் காலத்துல இப்படி ஒரு போலீஸ்காரர். எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமா இருக்கு கந்தசாமி. நான் இங்க உக்காந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு என் நண்பர்கள் யாருக்கும் தெரியாது. ஆனா, என்னைப் பிடிக்காதவங்களுக்குத் தெரியும். இப்ப நான் உங்ககிட்ட பேசறது கூட என்னைப் பத்தின ஒரு அலிபி கிரியேஷன்தான்.

உங்களால புரிஞ்சிக்க முடியும்னு நினைக்கிறேன். நாடு போற போக்கு சரியில்ல கந்தசாமி. கடந்த சில வருஷங்கள்ல நடந்த சில நிகழ்வுகள் எல்லாம் மக்களுக்கு வெறும் செய்தி. ஆனா, என்னை மாதிரி பாதுகாப்பு அமைப்புகள்ல இருக்கறவங்களுக்கு அதெல்லாம் கேள்விகள்… பிரதமருக்குத் தெரியாமலே ராணுவம் மூவ் ஆவுது. யார் உத்தரவு கொடுத்தா..? இருபது வருஷமா செக்யூரிட்டி ஏஜென்சிகளுக்கு டிமிக்கி கொடுத்துகிட்டு பாகிஸ்தான்ல பதுங்கி இருக்கற அண்டர்கிரவுண்ட் தாதா ஒருத்தன் தில்லிக்கு வர்றான். அவன சிலர் சந்திக்கிறாங்க. என்னோட ஏஜெண்டுகள் இத ஸ்மெல் பண்ணி சொல்றாங்க. நான் அவன மடக்கியாகணும்னு அலர்ட் ஆகி என்னோட மேலதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு போறேன்…

‘கீப் கொயட்டு’னு எனக்கு பதில் வருது. இதுமாதிரி பல விஷயங்கள். பிஹைண்ட் த சீன்ல நடக்கற சில இன்ஸிடென்ட்ஸ் எனக்கு கலவரத்த ஏற்படுத்துது. பாதுகாப்புத் துறைய சேர்ந்த ஒரு அதிகாரியா என் நாட்டப் பத்தி கவலை வருது. மக்களுக்கு அரணா இருக்க வேண்டியவங்க ஆபத்தா இருக்காங்க. எனக்கு என் வேலைல உடன்பாடு இல்ல… ரிஸைன் பண்ணிட்டேன். ஆனா, என்னோட அஃபீஷியல் டேஸ்ல நடந்தது எல்லாத்தையும் இந்திய மக்களுக்கு தெரிவிச்சாகணும். பதிவு பண்ணியாகணும். அந்தக் கடமை எனக்கு இருக்கு. அந்தமாதிரி சம்பவங்கள தொகுத்து புத்தகமா எழுதிக்கிட்டு இருக்கேன்.

என்னோட இந்த புத்தக முயற்சி அரசியல்வாதிகள் சிலருக்கு, அதிகாரிகள் பலருக்கு பிடிக்கல. என்னை அப்புறப்படுத்த முயற்சிக்கிறாங்க. எனக்கு இன்ஃபார்மரா இருந்த ஒருத்தன்கிட்ட சில விஷயங்கள் டிஸ்கஸ் பண்ண வேண்டி இருந்துச்சு. அவன தில்லியிலேந்து வரவழைச்சு கூட்டத்தோட கூட்டமா கலந்து அந்த மாலுக்கு நாலு நாள் மதிய நேரத்துல வந்தேன்… காபி ஷாப்ல நின்னுகிட்டே பேசிட்டு யாரோ மாதிரி போயிடுவோம். அன்னைக்கும் அப்படித்தான். ரெண்டு பேருமே லேட். இது அந்த சூஸைட் ஸ்குவாட் ஆசாமிக்குத் தெரியல. கொடுத்த நேரத்துல கரெக்ட்டா பாஞ்சிட்டான். நாங்க தப்பிச்சிட்டோம்…’’

“சார்… நான் இத…’’

“மூச்சு விடக்கூடாது. உங்களோட சின்சியாரிட்டிக்காக… இப்படி சின்சியரா இருக்கற போலீஸ்காரன் உண்மையா, விசுவாசமா தேசபக்தியோட இருப்பாங்கறதுக்காக உங்ககிட்ட சொல்றேன்… புத்தக வேலை முடிஞ்சிட்டுது.பதினாறாம் தேதி பதிப்பகத்துக்கு அனுப்பிடுவேன். அன்னைக்கு மால்ல நடந்ததுதான் க்ளைமாக்ஸ்… இப்ப இந்த செய்தி வெளிய போனா எனக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம்…’’

“சார், பதினாறாம் தேதி எனக்கு ரிடையர்மென்ட். சர்வீஸ்ல ஏதாச்சும் பண்ணிட்டு ரிடையர் ஆகணும்னு நெனக்கிறேன்…”

“கந்தசாமி, அடுத்த சில நாட்கள்ல இந்திய அரசியல்ல என்னால நடக்கப் போற பரபரப்பான காட்சிகளுக்காக, அது எனக்குக் கொடுக்கப்போற நிறைவுக்காக, ஒரு உண்மையான நேர்மையான போலீஸ்காரனுக்கு நான் ட்ரீட் கொடுக்கப்போறேன்… இதை இந்த சொசைட்டி உங்க நேர்மைக்கும் சின்சியாரிடிக்கும் கொடுக்கற மரியாதைன்னு கூட நீங்க எடுத்துக்கலாம்…”

“சார்…”

“பதினேழாம் தேதி இதே நேரத்துக்கு இங்க வாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு கப் டீ சாப்பிடலாம்…”

கந்தசாமி, விறைப்பாய் ஒரு சல்யூட் கொடுத்தார்.

– Feb 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *