நீ உன்னை அறிந்தால்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் நாடகம்
கதைப்பதிவு: May 3, 2024
பார்வையிட்டோர்: 1,701 
 
 

(2015ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி -1

(ராஜன் வீட்டின் முன்னறை. மல்லிகா காபி கொண்டு வந்து கொடுக்க, பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த ராஜன்,காபியை வாங்கி பருகுகிறான்.)

மல்லிகா: பக்கத்து வீட்டு தேவிகா நேற்று புதுசா ஒரு வைர மாலை வாங்கியிருக்கிறாள்.

ராஜன்: அடுத்தவர்களோடு நம்மை எப்போதும் கம்பேர் பண்ணிப் பார்க்காதே. நம்முடைய வருமானத்திற்கு ஏற்ற செலவை தான் நாம் செய்ய முடியும்.

மல்லிகா: ஆமா அவ வீட்டுக்காரரும் உங்க ஆபிஸிலே தானே வேலை செய்கிறார். அதுவும் உங்களுக்கு கீழே தான் வேலை செய்கிறார். அவர் வீட்டுலே கார் இருக்கிறது. செம்பூரிலே இன்னொரு வீடு வாங்கியாச்சு. நாளும் கிழமையும் பட்டுப்புடவையாக எடுத்துத் தள்ளுகிறாள். நினைத்தால் உடனே தங்க நகை வாங்குகிறாள். உலகத்திலே உள்ள எல்லா மாடல்களிலும் வைர நகை வச்சிருக்கா. நம்ம வீட்டுல ஒரு பண்டிகைக்கு புதுத்துணி எடுக்கவே யோசிக்கிறீங்க. பட்டுச்சேலை எனக்கு கல்யாணத்திற்கு எடுத்தது. அப்புறம் பட்டுச் சேலையை அடுத்தவங்க உடுத்துதான் பார்த்திருக்கிறேன். எங்க அப்பா போட்ட ரெட்டை வடச் சங்கிலியைத் தவிர ஒரு பொட்டுத்தங்கம் வாங்கித் தந்ததுண்டா.

ராஜன்: மல்லிகா….திரும்பவும் புலம்ப ஆரம்பிச்சுட்டியா? தேவிகா வீட்டுக்காரன் அங்கே இங்கே மேஜைக்கு கீழே பணம் வாங்குகிறான். நான் அப்படியில்லை. நேர்மையாக வேலை செய்து வாய்மையே வெல்லும் என் ற கொள்கையோடு இருக்கிறவன்…. மல்லிகா லஞ்சம் வாங்கி இப்படி கார் பங்களா தங்க நகை என இருப்பதை விட உன் புன் நகையோடு நேர்மையாக வாழ்ந்தால் போதாதோ….

மல்லிகா: ஆமா… இந்தக் கொஞ்சலுக்கு மட்டும் குறைச்சலில்லை. ஆ… பூ…. என்று சொல்லி வாயடைத்து விடுவீர்கள். பணம் சம்பாதிக்க வழி தெரியவில்லை. இப்படிக் கொஞ்சல் என்ன வேண்டியதிருக்கு…. கொஞ்சல்…

ராஜன்: நாம் நேர்மையாக வாழ பழகிக் கொள்வோம். நீ தானே அடிக்கடி சொல்வாய்.வாழ்க்கையில் எப்போதும் தவறான பாதைக்குச் செல்லக் கூடாது என்று….

மல்லிகா: அதற்காக பணம் சம்பாதிக்கக் கூடாதென்று சொன்னேனா…

ராஜன்: தவறான வழியில் சம்பாதிக்கும் பணம் தங்காதடியம்மா…

மல்லிகா: சும்மா வேதாந்தம் பேசாமல் பணம் கொண்டு வரப் பாருங்க. பொண்ணுக்கும் வயதாகிவிட்டது. இனி அவளுக்கு வரன் பார்க்க வேண்டும்.

ராஜன்: அதற்காக தவறான வழியில் சம்பாதிக்கச் சொல்கிறாயா….

மல்லிகா: ஏன்… தேவிகா வீட்டுக்காரர் மோகன் சம்பாதித்துக் கொட்டவில்லையா..ஏன் இப்படி நத்தை கூட்டுக்குள் குடித்தனம் நடத்தனும்.

ராஜன்: இது தவறு என் அன்பு மனைவியே…

மல்லிகா: தப்பு நியாயமெல்லாம் தேவைகளை மீறித்தான் ஒழுங்காக நிறையச் சம்பாதிக்கப் பாருங்க.

ராஜன்: ஏன் இப்படிப் பணப்பேய் பிடித்து அலைகிறாய்.

மல்லிகா: உங்களுக்கென்ன.. காலையிலே ஆபீஸ் போய் விடுவீர்கள். சுத்தி இருக்கிறவங்க எல்லாம் உன் வீட்டுக்காரருக்கு உதவியாளராக இருக்கின்ற மோகன் இப்படிச் சம்பாதிக்கிறார். உங்க வீட்டுக்காரருக்கு சம்பாதிக்க போதுமான தெம்பு கிடையாதோ என்று எல்லோரும் என்னைக் கிண்டல் பண்ணுகிறார்கள்.

ராஜன்: அதற்காக நான் தவறான பாதையில் ஒரு நாளும் போகப் போவதில்லை.

மல்லிகா: இப்படியே தரித்திரத்தில் தான் வாழ்க்கை நடத்தணும். நான் எங்க அம்மா வீட்டிற்குப் போகிறேன்.

ராஜன்: அது உன் விருப்பம்

(அழுது கொண்டே மல்லிகா போக, காபியை பருகுகிறார் ராஜன்.)

காட்சி-2

(மோகன் வீட்டின் முன்னறை. மோகன் சிகரெட் புகைத்துக் கொண்டிருக்க, மல்லிகா உள்ளே வருகிறாள்.)

மோகன்:வாங்கம்மா… தேவிகா வெளியே போயிருக்கா என்ன விஷயம்…

மல்லிகா: அது வந்து…எப்படி சொல்றது..(அவள் முடிக்குமுன் தேவிகா உள்ளே வந்து)

தேவிகா: என்ன மல்லிகா என்ன விஷயம்….

மல்லிகா: அதாண்டி..நேற்று உன்னிடம் சொன்னேனே..

தேவிகா: ஓ! அதுவா… (மோகன் பக்கம் திரும்பி) உங்கள் சூப்பர்வைசர் ராஜனிடம் சொல்லி கொஞ்சம் நாலு காசு பார்க்கச் சொல்லுங்களேன்.

மோகன்: அவர் திருந்துகிற ஆள் இல்லை. நேர்மையாக நடக்கணும். அரசாங்கம் நமக்குத் தருகின்ற சம்பளத்திற்கு உண்மையாக உழைக்கணும். ஏழை மக்களுக்கும் எல்லாம் கிடைக்கப் பாடுபடணும் என்று தத்துவம் பேசிக் கொண்டிருக்கின்ற வேதாந்தி அவர். வருகின்ற வரை சம்பாதித்து விட்டு ஒதுங்கிப் போய் ஜாலியாக வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று எத்தனையோ முறை அவரிடம் சொல்லிச் சலித்துப் போய் விட்டேன்.

தேவிகா: உன் கணவர் இப்படி அடம் பிடித்தா எப்படிச் சம்பாதிக்க முடியும்.

மல்லிகா: அதனால் தான் சொல்லிச் சொல்லிப் பார்த்து விட்டு நான் என் அம்மா வீட்டிற்கு போய்விடலா என்று முடிவு செய்து விட்டேன்.

தேவிகா: அவர் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவா குழந்தைகள் படிக்க வேண்டாமோ?

மல்லிகா: அப்படிச் செய்தாலாவது அவருக்குப் புத்தி வருகிறதா என்று பார்க்க வேண்டியது தான்.

மோகன்: முயற்சி செய்து பாருங்கள்.

மல்லிகா: எல்லாம் ஆண்டவன் விட்ட வழி.நான் வர்றேன் தேவிகா.

காட்சி-3

(ஆலய வளாகம். வயதான மாமி, சுந்தரியும் மல்லிகாவும் சந்தித்துக் கொள்கிறார்கள்.)

சுந்தரி: எப்படி இருக்கிற மல்லிகா.

மல்லிகா: ஏதோ இருக்கிறேன் மாமி,எப்படியோ போகிறது வாழ்க்கை.

சுந்தரி: ஏண்டி சலித்துக் கொள்கிறாய்? உனக்கு என்ன குறைச்சல், அரசாங்க வேலை செய்கிற புருசன். கண்ணுக்கு அழகான பிள்ளைகள்…அப்புறம் ஏன் வருத்தப்படுகிறாய்.

மல்லிகா: அரசாங்க வேலை பார்த்து என்ன பிரயோசனம்.பணம் சம்பாதிக்க தெரியாத மனிதராக இருக்கிறாரே….இன்னும் அந்தச் சாண் வீட்டிலே ஒட்டுக் குடித்தனம் தானே நடத்த வேண்டியிருக்கு. பாருங்க தேவிகா வீட்டுக்காரர் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்… ஊரிலே உலகத்திலே ஒவ்வொருத்தரும் எப்படியெல்லாமோ பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். எங்க வீட்டுக்காரர் நேர்மை, நியாயம், வாய்மை என்று சவடால் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

சுந்தரி: மல்லிகா சும்மா சலித்துக் கொண்டிருக்காதே, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சொல்வார்கள். உனக்குக் கிடைத்த வாழ்க்கையை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கப்பார்… உன் வாழ்க்கைப் பாதை இப்படி இருக்க வேண்டும் என்று ஆண்டவன் தீர்மானித்திருக்கலாம். அதையும் மீறிக் கொண்டு

மல்லிகா: போங்க மாமி. நீங்களும் எனக்குத் தான் புத்திச் சொல்கிறீர்கள். என்னுடைய கணவர் நீங்கள் சொன்னா கேட்பார் என்று உங்களிடம் வந்து பேசினால்…. இப்படி சொல்கிறீர்களே….

சுந்தரி: யாரையும் அளவிற்கதிகமாய் தொந்தரவு செய்யாமல் புத்திமதி சொல்ல வேண்டும். ராஜன் நேர்மையாக நடக்க வேண்டும் என்று நினைக்கிறார் அதன் பலன் இப்போது உனக்கு புரியாது.

மல்லிகா: உங்களிடம் சொல்லிப் புண்ணியமில்லை. நான் என் அம்மா வீட்டிற்குப் போய் விட்டால் என் கணவர் தானாக வழிக்கு வருவார்.

சுந்தரி: நல்ல குடும்பத்து பெண்மணி நீ அப்படி செய்யலாமா?

மல்லிகா: உங்களுக்கு அதெல்லாம் புரியாது மாமி. நான் வர்றேன்.

காட்சி-4

இடம்: ரோடு. (மல்லிகா கையில் பையோடு சென்று கொண்டிருக்க, எதிரில் தேவிகா அழுது கொண்டே வர, சுந்தரி மாமி அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு வருகிறாள்.)

மல்லிகா: பதட்டத்துடன் என்ன தேவிகா ஏன் அழுது கொண்டு வருகிறாய்.

சுந்தரி: அவள் கணவன் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிப்பட்டு அவனை போலீஸ் ஸ்டேனுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். நாங்கள் அவனை ஜாமீன் எடுக்கப் போகிறோம்.

மல்லிகா: அய்யய்யோ பாவமே……எப்படி மாட்டினார்.

சுந்தரி: எவனோ பாவி? கம்ப்ளெய்ன்ட் கொடுத்து கையும் களவுமாக பிடித்துக் கொடுத்து விட்டான். ஆமாம், நீ எங்கே கையில் பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாய்.

மல்லிகா: நான் என் அம்மா வீட்டிற்கு கிளம்பினேன். நல்ல வேளை கண் திறந்தார் ஆண்டவன். ஆமாம் மோகனை விட்டு விடுவார்களா?

சுந்தரி: பாவம், அவனுடைய சொத்துக்களையெல்லாம் பறித்துக் கொண்டு அவனை ஏழு ஆண்டு ஜெயிலில் போட்டு விடுவார்கள்.

மல்லிகா: அடப்பாவமே…தேவிகாவிற்கு இப்படி ஒரு நிலை வரணுமா?

சுந்தரி: இதற்குத் தான் சொன்னேன் ஒழுங்காக வீட்டிற்குப் போய் உன் கணவரோடு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தப் பாரு..

மல்லிகா: ரொம்ப நன்றி மாமி

காட்சி-5

(ராஜன் வீட்டின் முன்னறை. ராஜன் பேப்பர் வாசித்துக் கொண்டிருக்க, வேகமாக அவர் காலில் வந்து விழுகிறாள் மல்லிகா.)

மல்லிகா: என்னை மன்னித்து விடுங்கள். இனி மேல் ஒரு நாளும் உங்களை விட்டுப் பிரிந்து போக மாட்டேன்.

ராஜன்: ஒய்…மல்லிகா என்னாச்சு….?

மல்லிகா: நான் உங்களை லஞ்சம் வாங்கியாவது சம்பாதிக்கச் சொன்னேன். லஞ்சம் வாங்கிய தேவிகாவின் கணவர் மோகனை போலீஸில் பிடித்துக் கொண்டு போய் விட்டார்களாம்.

ராஜன்: பார்த்தாயா….நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்தால் வாழ்க்கையில் சந்தோ’மாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்.

மல்லிகா: பாருங்கள் இனி தேவிகாவின் குடும்பநிலை என்னவாகும்? அவர்களுடைய சொத்துகளையெல்லாம் அரசாங்க எடுத்துக் கொள்ளுமாம். அவளும் அவள் குழந்தைகளும் தெருவில் நிற்கப் போகிறார்கள். அவள் கணவன் ஜெயிலில் இருக்கப் போகிறான். உலகம அவர்களைப் பற்றி எவ்வளவு மோசமாக பேசும்.

ராஜன்: மல்லிகா நேர்மையாக வாழ்ந்தால் எப்போதும் சந்தோசமாக வாழ முடியும். நமக்கு வருகின்ற வருமானத்திற்குள் நாம் எப்போதும் வாழ்க்கையை நடத்திப் பழகிக் கொண்டு போதுமென்ற மனத்தோடு வாழ்ந்தால் பொன்னான வாழ்க்கையை அமைக்க முடியும். வா இறைவனை துதித்துப்பாடி நமக்கு இன்பமான சுகமான வாழ்க்கையைத் தந்தவருக்கு நன்றி. கீதம் பாடலாம்.

மல்லிகா: ஆம். என் பாவக் கண்களைத் திறந்த தேவனுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

இருவரும் சேர்ந்து நன்றி பாடல் பாடுகிறார்கள்.

-நிறைவுறுகிறது-

, மும்பை.

– சந்தனச் சாரல், நவம்பர் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *