மரம்வெட்டியும் தங்க ஊசியும்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,896 
 

ஓரு காலத்தில் மரம்வெட்டி ஒருவர் இருந்தார். அவர் பக்கத்தில் இருக்கும் காடுகளுக்குச் சென்று மரங்களை வெட்டித் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்.

ஒருநாள் பக்கத்திலிருக்கும் காட்டிற்கு மரம் வெட்டச் சென்றார். அந்தக் காட்டில் இருக்கும் பூஞ்ச மரம் அருகே சென்றார் மரம்வெட்டி.

இதைப் பார்த்த பூஞ்ச மரம் “எனக்கு மிகவும் சின்ன வயசு. ஆகவே என்னை நீங்கள் வெட்ட வேண்டாம். அப்படி என்னை வெட்டிவிட்டால் எனது குழந்தைகள் அனாதைகள் ஆகிவிடுவார்கள்’ என்றது. இதைக் கேட்ட மரம்வெட்டி “சரி’ என்று சொல்லி அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றார்.

சிறிது தூரம் சென்ற பிறகு ஓக் மரம் ஒன்றைப் பார்த்தார். கையில் கோடலியுடன் தன்னை நோக்கி மரம்வெட்டி வருவதைப் பார்த்த ஓக் மரம், “தயவுசெய்து என்னை வெட்டி விடாதீர்கள். நான் இப்போதுதான் காய் வைத்திருக்கிறேன். இந்தக் காய்கள் பழுத்து, கீழே விழுந்து புதிய மரம் வளர வேண்டும். நீங்கள் என்னை வெட்டிவிட்டால் புதிய மரங்கள் இந்தக் காட்டில் வளராது. ஆகவே, என்னை வெட்டிவிடாதீர்கள்’ என்று கெஞ்சியது.

இதற்கும் அந்த மனிதர் தலையை ஆட்டியபடி அடுத்த மரத்தை நோக்கிச் சென்றார்.

காட்டு மரமான ஆஷ் குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடியது. அந்த மரத்தை வெட்டுவதற்காக அதனருகே சென்றார் அவர். அவரைப் பார்த்த ஆஷ் மரம், “நேற்று என் மனைவிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அவளுக்கு என்னைவிட்டால் வேறு யாரும் இல்லை. ஆகவே நீங்கள் பெரிய மனசு வைத்து என்னை விட்டுவிடுங்கள்’ என்றது.

அடுத்ததாக ஐந்துகூர் இலைகளைக் கொண்ட மரம் ஒன்று இருந்தது. அதனருகே சென்றபோது, அந்த மரம், “எனக்குச் சின்னச் சின்ன கிளைகள் இருக்கின்றன. அவற்றிற்கு பாலூட்டிக் கொண்டிருக்கிறேன். அவர்களை வளர்த்துப் பெரியவர்களாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது. அந்தக் கடமை முடிந்தபிறகு நீங்கள் என்னை வெட்டிக் கொள்ளலாம். அதுவரை என்னை விட்டு விடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டது.

இதற்கும் சரியென்று சொல்லிவிட்டு, யோசித்தபடியே செர்ரி மரத்தை நோக்கிச் சென்றார் அந்த இரக்கமுள்ள மனிதர்.

அவரைப் பார்த்தவுடன் செர்ரி மரம், “இங்குள்ள பறவைகள் எல்லாம் என்மீது உட்கார்ந்து பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, பாட்டுப்பாடி மகிழ்கின்றன. நீங்கள் என்னை வெட்டிவிட்டால் அவற்றுக்கு உணவும் கிடைக்காது, நீங்களும் அந்தப் பாட்டைக் கேட்க முடியாது’ என்றது.

இதுவும் சரிதான் என்று நினைத்தார் மரம்வெட்டி. இதனால் இனி மரங்களை வெட்ட வேண்டாம் செடி கொடிகளை வெட்டுவோம் என்று முடிவெடுத்து தூரத்திலிருந்த செடியை நோக்கிச் சென்றார்.

ஆனால் அது செடி இல்லை. ஒரு தாவரம் கொடியாகப் படர்ந்திருந்தது. அதுவும் முரட்டுத்

தனமாக படர்ந்திருந்தது. அதை மகிழ்ச்சியுடன் பார்த்தார்.

அப்போது அந்தக் கொடி, “இரவில் கள்வர்கள் வழிதவறி வரும்போது என்மீது பட்டு கால் இடறி விழுந்து விடுவார்கள். இதனால் அப்பாவிகள் காப்பாற்றப்படுகிறார்கள். நீங்கள் என்னை வெட்டிவிட்டால் அப்பாவி ஜனங்கள் கஷ்டப்படுவார்கள். ஆகவே என்னை வெட்டாமல் விட்டுவிடுங்கள். அவர்களும் நானும் வாழ்நாள் முழுவதும் உங்களுக்குக் கடமைப்பட்டவர்களாவோம்’ என்றது.

இனிமேல் எதை வெட்டிக் கொண்டு வீட்டுக்குச் செல்வது என்ற யோசனையில் நடந்தார் அந்த நல்ல மனிதர். அப்போது ஒரு பைன் மரம் கண்ணில் பட்டது.

“எப்படி இருந்தாலும் சரி! இந்த மரத்தை வெட்டிவிடுவோம்’ என்று எண்ணியபடியே அதனருகில் சென்றார்.

அவரைப் பார்த்தவுடன் பைன் மரம், “நான் ரொம்பச் சின்னப் பையன். இப்போதுதான் வளர்ந்து வருகிறேன். நான் வளர்ந்தபிறகு என்னைப் பார்த்தாலே எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். ஆகவே என்னை நீங்கள் வெட்டினால் மற்றவர்களுடைய மகிழ்ச்சியைக் கெடுத்த மனிதர் என்ற அவப்பெயர் உங்களுக்குக் கிடைக்கும். அதனால் தயவுசெய்து அந்தப் பாவத்தை நீங்கள் செய்யாதீர்கள்’ என்று கூறியது.

இதைக் கேட்ட மரம்வெட்டி, “நான் பேசுகிற மரங்களைப் பார்த்ததே இல்லை. மரங்களும் செடிகளும் சொல்வது சரிதான்! இதனால் எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் என் மனைவிக்கு நான் என்ன பதில் சொல்வது’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டே நடந்தார்.

அப்போது தாடி வைத்த வயதான மனிதர் ஒருவர் எதிரில் வந்தார். அவர் மரம்வெட்டியைப் பார்த்துச் சிரித்தார். உடனே மரம்வெட்டி, அந்தக் காட்டில் தனக்கு நடந்தவற்றை அவரிடம் கூறினார்.

இதைக் கேட்டவுடன் அந்தத் தாத்தாவுக்குச் சிரிப்பு வந்தது.

“கவலைப்படாதே… நான் உனக்கு நல்லது செய்கிறேன். ஆனால் உனக்குப் பேராசை மட்டும் ஏற்படக்கூடாது, சரியா?’ற என்று சொல்லியபடி, ஒரு தங்க ஊசியை எடுத்து மரம்வெட்டியிடம் கொடுத்தார்.

“உனக்கு கஷ்டம் வரும்போது, உனக்கு வேண்டியதைக் கேட்டு இந்தத் தங்க ஊசியை கையில் வைத்துத் தேய்த்தால், உனக்கு எல்லாம் கிடைக்கும்’ என்றார்.

அந்த ஊசியை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றார் மரம்வெட்டி.

அவருடைய கதையைக் கேட்ட மரம்வெட்டியின் மனைவி கோபம் கொண்டு அவரைத் திட்டினாள்.

அவள் பேராசை பிடித்தவளாகவும் இருந்தாள். இதனால் அவளுடைய பேச்சைக் கேட்டு மரம்வெட்டி மனம் நொந்து போனார்.

உடனே, தங்க ஊசியை எடுத்து, “என் மனைவியைத் திருத்துவதற்கு ஏதாவது செய்!’ என்றார். அதைக் கேட்டவுடன், தங்க ஊசி ஒரு மரத்தைப் பெரிதாக வளர்த்தது.

அந்த மரத்தின் கை அவருடைய மனைவியைச் சுற்றிக் கொண்டது.

பயந்துபோன அந்தப் பெண், “என்னைக் கொடுமைப்படுத்தாதே! நான் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன்’ என்று அலறினாள்.

சில நாட்கள் சென்றன. “என்னுடைய கோடலி மிகவும் பழசாகிவிட்டது. புதிய கோடலி ஒன்று எனக்கு வேண்டும்’ என்று தங்க ஊசியிடம் கேட்டார் மரம்வெட்டி.

சிறிது நேரத்தில் வீடு முழுவதும் விதவிதமான கோடலிகள் தோன்றின.

நாட்கள் இப்படியே சந்தோஷமாகச் சென்று கொண்டிருந்தது. தங்க ஊசியின் தயவால், சிலந்திப் பூச்சிகள் மரம்வெட்டிக்கும் அவரது மனைவிக்கும் விதவிதமான ஆடைகளை நெய்து கொடுத்தன. எறும்புகள் நிலத்திலிருந்து கோதுமை மணிகளைக் கொண்டு வந்த கொடுத்தன.

இதையெல்லாம் பார்த்த அக்கம்பக்கத்திலுள்ள மக்கள் நமக்கும் இதுபோன்று ஒரு தங்க ஊசி கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்குமே என்று எண்ணி ஏங்கினார்கள்.

மரம்வெட்டியின் காலம் மகிழ்ச்சியுடன் சென்றது. அவருடைய பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டனர். வாழ்க்கை நன்றாக இருந்தது. இதனால் அந்த மரம்வெட்டியும் அவருடைய பிள்ளைகளும் அந்தத் தங்க ஊசியை மறந்தே போய்விட்டார்கள்.

அவருடைய பிள்ளைகள் அந்த ஊசியைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படாதவர்களாக வளர்ந்தார்கள்.

ஆண்டுகள் பல சென்றன. மரம்வெட்டியின் காலத்துக்குப் பிறகு, அந்தத் தங்க ஊசி, தற்செயலாக மூடன் ஒருவனின் கையில் கிடைத்தது.

அவன் அந்த ஊசியிடம், “சூரியனை எனக்கு அருகில் கொண்டு வந்து கொடு’ என்று கேட்டான். தங்க ஊசிக்குத் தயக்கமாக இருந்தது. அதனால் அந்த ஆசையை அது நிறைவேற்ற யோசித்தது.

ஆனால் அந்த மனிதன், “முட்டாள் ஊசியே, நான் சொன்னதைச் செய்’ என்று கோபத்தில் கத்தினான்.

வேறு வழியில்லாமல் தங்க ஊசி சூரியனை அவனருகில் கொண்டு வந்தது.

சூரியனின் வெப்பம் தாங்காமல் அவன்

கருகிப் போனான். தங்க ஊசியும் கருகி மறைந்து போனது.

– முத்தையா வெள்ளையன் (நவம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *