அட்டைப்பட முகங்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 21,824 
 

அரவிந்தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டழுதான்.’யாழ்ப்பாணத்தில் இன்னுமொருதரம் குண்டுவீச்சு. தேவாலயம் தரைமட்டம், இருபது முப்பது தமிழ் மக்கள் இறந்திருக்கலாம்’.இலங்கைப் பத்திரிகையை வாசித்ததும் அடக்க முடியாத சோகம் அழுகையாக மாற தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து அவன் அழுகிறான்.

தேவாலயத்துக்கு அருகிலிருந்த குடும்பத்தை அவனுக்குத் தெரியும். அங்கு குடிவாழ்ந்த ‘தேவசகாயம் மாஸ்டரும் அவரின் குடும்பமும்,இறந்த போன தமிழர்களில் சிலராக இருக்கக்கூடாது’. அவன் தனக்குள்ப் பிரார்த்தித்துக் கொள்கிறான்.அவனின் நினைவு தெரிந்த நாள் முதல் நெருங்கிப் பழகிய குடும்பம் அது.

அந்தக் குடும்பத்தின் அழகுத் தேரான ஸ்டெலாவும் இறந்திருப்பாளா?

‘ஸ்ரெலாவும் இறந்து விட்டாளா?’

அவன் மனம் அடிக்கடி ஸ்ரெலாவின் முகம்தேடித் தவித்தது. அரவிந்தனும் ஸ்ரெலாவும் காதலர்களல்ல,ஆனால் அதையுமவிட ஆழமான ஒரு.பவுத்திரமான உறவு. அவள் அவர்களின் வீட்டில் நான்காவது மகள். அவளுக்கு முன்னால் இரண்டு தமக்கைகளும் ஒரு தமயனும் இருந்தார்கள். அவள் அந்த நிலையில் காதலிக்கத் துணியும் நிலைமையுமற்றவள். இல்லாமையைத் தன் முகத்திற்காட்டாமல் ஆயிரம் நட்சத்திரங்களின் வெளிச்சத்தைத் தன் புன்னகையில் அரவிந்தனுக்குக் காட்டியவள். அந்தப் பன்சிரிப்பின் புனிதத்தில் அவளின் காதலைத் தரிசனம் கண்டவன் அரவிந்தன்.

இலங்கையிலிருந்து எத்தனையோதரம் இப்படியான செய்திகளைக் கேட்டுக் கலங்கியிருந்தாலும்,இன்றைய செய்தியின் பின்னிருப்பவர்கள் தனக்குத் தெரிந்தவர்கள் என்ற துயரம் வந்ததும் கண்கள் கலங்குகின்றன.

வெளியில் லண்டன் தெருக்களில்ச் சரியான பனி கொட்டிக்கொண்டிருந்தது. இன்றைக்கு வேலைக்குப்போக முடியாது. ட்ரெயின் பயணங்களை முடியுமானாற் தவிர்த்துக் கொள்ளச் சொல்லி டெலிவிஷனிற் சொன்னார்கள்.

கொஞ்ச தூரத்திலுள்ள தமிழ்க்கடைக்குப் போய்த் தமிழ்ப் பேப்பர் வாங்கிக்கொண்டபோது,அங்கிருந்தவர், யாழ்ப்பாணத்தில் நடந்த குண்டு வீச்சைப் பற்றிய பல விடயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். துயர விடயங்களின் கதாநாயகர்களாக மடிந்தவர்களில் தேவசகாயம் குடும்பத்தினரும் இருப்பார்களா, அவர்களைப் பற்றிய ஞாபகங்கள் வேதனை தருகின்றன. அரவிந்தனின் பெற்றோர் தங்களிடமுள்ள விற்கக்கூடிய பொருட்களையெல்லாம் விற்று அவனை லண்டனுக்கு அனுப்பமுதல் அரவிந்தன் தேவசகாயம் மாஸ்டரைக் கடைசியாகக் கண்டான்.

ஆறுபிள்ளைகளுக்குத் தகப்பன் அவர்.இவனுடைய மதிப்புக்குரிய ஆசிரியர். தங்கள் ஊதியத்தின் மூலப் பொருட்களாக மாணவர்களைக் கணிக்காமல்,மாணவர்களின் திறமைகளைக் கண்டுபடித்து ஊக்குவிப்பவர் அவர். அவரின் ஆலோசனைகள, அறிவுரைகள் அரவிந்தன் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அவரின் மூத்த மகளுக்கு முப்பது வயதுக்கு மேலாகிறது. இன்னும் ஒரு கல்யாணமும் சரியாகவரவில்லை. அரவிந்தனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல்,மாஸ்டரின் மூத்த மகளின் முகத்தில் தவழும் சாடையான சோகம் அவனின் மனதை ஏதோ செய்யும்.

விடுதலை கிடைக்காத சிறையில் அகப்பட்ட சோகம் அது. ஆறுபிள்ளைகளைப் பசியின்றி வளர்ப்பதே பெரிய பொறுப்பாகவுள்ள குடும்பத்திலிருந்து தனக்கு ஒரு வரன் பார்த்து,சீதனம் கொடுக்க எனது பெற்றோர்களால் முடியாது என்ற உண்மையின் வெளிப்பாடாகவா அந்த சோகம் அவள் முகத்தில் நிழலாடியது?

அரவிந்தனின் டெலிபோன் அவனை,யாழ்ப்பாணத்தில்த் தேவசகாயம் வீட்டாரின் நினைவுகளிலிருந்து லண்டனுக்கு இழுத்தது.
இயந்திரம்போல் றிசிவரைத் தூக்கினான். வெளியில் பனி கொட்ட அவன் மனதில் துயர் கொட்டிக்கொண்டிருந்தது.

டெலிபோனில் பேசுபவர்; லண்டனிற் வெளியாகும் தமிழ்ப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர்.அடுத்தவன் அவலத்தை ஆதாயமாக்கும் மனிதமற்ற மனிதர்களில் ஒருத்தர்.

‘ என்ன இண்டைக்கு வேலைக்குப் போகவில்லைபோல கிடக்கு’

‘ஓம் சரியான பனிதானே, ட்ரெயின்கள் பெரும்பாலும் ஒடாது என்று செய்தியிற் சொன்னார்கள்.சிக்னல் பிரச்சினைகளாம்’

‘ நானும் செய்திகள் கேட்டேன். நீர் வீட்டில் இருப்பீர்; என்டு நினைச்சன்,..சரியாய்ப் போச்சு’ ஆசிரியர் எதற்கோ அடித்தளம் போடுகிறார் என்று அரவிந்தனின் உள்ளுணர்வு சொல்லியது.

அவன் மவுனமாக இருந்தான் அவர் என்ன கேட்கப் போகிறார்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.
‘அரவிந்தன் ஒவ்வீசுக்கு ஒருக்கா வர முடியுமோ? ட்;ரெயின் எடுக்கத் தேவையில்ல, பக்கத்தில் பஸ் எடுத்து….’ ஆசிரியர் ‘இனிப்பைத்’ தன் பேச்சில் சேர்க்கிறார்.அவர் எதையும் சுடச்சுடவும், இன்pமையாகவும் தன் பத்திரிகைச் செய்திகளாக வெளியிடத்தெரிந்தவர்.

அவர் குறிப்பிடும் ‘ஒவ்விஸ்’ என்பது அவர் வீட்டின் முன்னறை. அங்குதான் அவரின் பத்திரிகை வேலைகள் நடக்கும். ஆபிசுக்கு வரிகட்டும்போது, வீட்டுச் செலவுகளான,லைட் பில்ஸ் என்பன ஒவ்விஸ் செலவாகக் காட்டப்படும்.

அத்துடன் பார்ட்ரைம் வேலை என்றும் ஏதோ செய்கிறார். சம்பளம் என்றும் கிம்பளம் என்றும் உழைக்கத் தெரிந்த புத்திசாலித் தமிழர்களில் அவர் ஒருத்தர்.
அரவிந்தன் அவரின் பத்திரிகையின் அட்டைப்படத்தற்குத் தேவையான புகைப் படங்களை எடுத்துக் கொடுப்பவன்.

இன்று,அரவிந்தனின் மனம் படும் துயருடன் அவரைப் பார்க்கப்போக வேண்டும் என்ற அவசரமோ தேவையோ இருப்பதாக அவன் நினைக்கவில்லை.

‘என்ன பேசாமலிருக்கிறாய்?’

ஆசிரியரின் குரல் அடுத்த பக்கத்திலிருந்து சாடையாக அதட்டியது. அரவிந்தன் இல்லாவிட்டால் எத்தனையோ புகைப்படக் கலைஞர்கள் லண்டனில் இருக்கிறார்கள். தங்களிடமிருக்கும் பணத்தை மற்றவர்களுக்குக் காட்ட, எதையும் சாட்டிப் பார்ட்டிகள் வைக்கவும், அதை வீடியோ எடுத்து ஊருக்கு அனுப்பி மகிழவும் புதுப் பணக்காரர்கள் லண்டனிற் அதிகரித்துக்கொண்டு வருகிறார்கள்.அத்துடன், லண்டன் முழுதும் பரதக்கலை, பாட்டுக்கச்சேரிகள் தாராளமாக நடக்கின்றன. பூப்பு நீர்வார்ப்புக்கள், பிறந்தநாள்ப் பார்ட்டிகள் என்று பல நிகழ்ச்சிகளைப் படமெடுக்கப் பலர் கமராவுடன் திரிகிறார்கள். அரவிந்தனும் சிலவேளை அழைக்கப் படுவான்.

அவனுடன் பேசிக் கொண்டிருக்கும்,ஆசிரியரின் மைத்துனி பரதநாட்டியம் ஆட, மாமியார் பாட,அடிக்கடி கலை விழா(?) நடக்கும். அரவிந்தன் அவர்களைப் படமெடுக்க அழைக்கப்படுவான்.

பல கோணங்களில் படங்கள் வரும். பலர் ரசித்துப் பார்ப்பார்கள். பத்திரிகை விலைப்படும்.

இப்போதும் அப்படி ஒரு கலைவிழாவுக்கு அவன் வரவேண்டும் ஆசிரியர் எதிர்பார்க்கிறார் என்பது ஆசிரியரின் அழைப்பிற் தென்பட்டது. அரவிந்தன் இருக்கும் ‘மூட்டில்’ எங்கும் போகவிரும்பவில்லை.

‘கொஞ்சம் தடிமற் குணமாகவிருக்கிறது’ அரவிந்தன் ஆசிரியரிடமிருந்து தப்ப மனமறிந்த பொய் சொன்னான்.

‘சரி..பினனேரம் எண்டாலும் ஒருக்கா வரப்பாரும். அடுத்த கிழமைக்குப் போடவேண்டிய அட்டைப்படம் பற்றி உன்னோட ஒருக்காப் பேசவேணும’

ஆசிரியருக்கு அரவிந்தனின் தடிமலையோ இருமலையோ பற்றி எந்த அக்கறையும் கிடையாது என்று அவனுக்குத் தெரியும்.இவன் போகாவிட்டால், அவரின் அழைப்புக்கு வர எத்தனையோ பேர் கமராவும் கையுமாகக் காத்திருக்கிறார்கள். ‘புகைப் படக்கலையின் நுணுக்கங்கள் தெரிகிறதோ இல்லையோ ஒரு கமராவைக் கையில் எடுத்தால், பிரித்தானிய புகைப்படக்கலைஞர்களில் ஒருத்தரான டேவிட் பெயிலி என்று நினைத்துக் கொள்கிறார்கள்’
அரவிந்தன் தனக்குள்ச் சொல்லிக் கொள்கிறான்.

தானிருக்கும் சுற்றாடலை நோக்கினான் அரவிந்தன்.

மௌனம் சூழ்ந்த நிலை அவன் மனத் துயரை அதிகரித்தது. அரவிந்தனுடன் இன்னும் இரண்டு வாலிபர்கள்; அந்த வீட்டில் இருக்கிறார்கள். இரண்டு படுக்கையறைகளும்;, ஒரு ஹோல், குசினியறை, பாத்றூம் கொண்ட அந்த வீட்டில் இலங்கையிலிருந்து வந்த மூன்று வாலிபர்களும் வாழ்கிறார்கள்.

எல்லோரும் அகதிகள் அவர்களுக்கு பிரித்தானிய அரசு கொடுக்கும் உதவிப் பணத்தை ஊருக்குத் தங்கள் பெற்றோர் சகோதரங்களுக்கு அனுப்பி விட்டு, தாங்கள் லண்டனில் வாழ இரண்டு மூன்ற வேலைகள் செய்து பிழைப்பவர்கள்.

அரவிந்தன் ஒரு குஜராத்தி முதலாளியின் கடையில் பகலில் வேலை செய்பவன்.

தனக்கு இன்று சுகமில்லை வேலைக்கு வரமுடியவில்லை என்று சொன்னபோது. இந்திய முதலாளிக்குக் கோபம் வந்து விட்டது.’ பனியும் குளிரும்தான் எல்லோரும்,நாங்களும் வேலை செய்கிறோம் உங்களுக்கெல்லாம் நீங்கள் அரச உத்தியோகத்தர் என்ற நினைப்போ? நீpங்கள் வராவிட்டால் சம்பளம் கிடைக்காது என்று தெரியாதோ’

முதலாளியிடம் வாக்குவாதம் செய்யாமல்,’ தயவு செய்து என்னை இன்றைக்கு மன்னித்து விடுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.

உடனே இன்னொரு தரம் டெலிபோன் அடித்தது. யாழ்ப்பாணத் தேவாலயத்தில் குண்டு போட்டதால் நடந்த கொடுமையைச் சொல்லியழ இன்னும் ஒரு நண்பன் போன் பண்ணினான்.

தேவாலயத்துக்குப் பக்கத்திலிருந்த அத்தனை வீடுகளும் தரைமட்டமாகிவிட்டதாகவும், அவற்றிலிருந்த அத்தனை மக்களும் இறந்து விட்டதாக நண்பன் சொல்லித் துக்கப் பட்டான்.

அரவிந்தன் வாங்கிவந்த தமிழ்ப்பத்திரிகை அவனுக்கு முன்னாற் கிடந்தது. தமிழர்களின் அவல வாழ்க்கை வெறும் பத்திரிகைச் செய்திகளுக்குள் அடங்கி மறைகிறதா? பத்திரிகையில் தமிழர்களைப் பற்றி வந்த செய்தியின் ஒவ்வொரு எழுத்தும்,இலங்கையில் கதறும் ஒவ்வொரு ஏழைத் தமிழரின் கண்ணீர்த் துளிகளாக அவனுக்குத் தெரிந்தது. துயருடன்; எழுந்தான் அரவிந்தன்.

முன் அறையிலிருக்கும் வாலிபன், வழக்கம்போல் குனிந்த தலை நிமிராமல் பாணும் பருப்புக் கறியும் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.அவன் பெயர் தர்மலிங்கம். யாருடனும் அதிகம் பேசமாட்டான். பிரித்தானிய அரச மானியம் வந்த கையோடு கடைக்குப்போய்ச் சாப்பாட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக்கொண்டு வருவான்,சமைப்பான், சாப்பிடுவான், தனது அறையைச் சாத்திவிட்டுத் தூங்குவான். தர்மலிங்கம் எப்போது லண்டனுக்கு வந்தான் என்று அரவிந்தனுக்கோ மற்ற இளைஞன் மூர்த்திக்கோ தெரியாது.

அரவிந்தன் லண்டனுக்கு வந்து மூன்ற வருடங்களாகின்றன. அப்போது தர்மலிங்கம் அந்த வீட்டிலிருந்தான். அவனது குடும்பம் ஒட்டுமொத்தமாகச் சிங்கள அரசின் ஷெல் அடியில் அழிந்து விட்டதாகவும், தர்மலிங்கத்துக்கு லண்டனில் யாரும் நெருக்கமான உறவுகளோ, சினேகிதர்களோ கிடையாது என்று மூர்த்தி அரவிந்தனுக்குச் சொல்லியிருந்தான். தர்மத்திற்கு எதிராக இலங்கையில் நடக்கும் கொடுமைகளால் வெறும் நடைப்பிணமாக வாழ்பவர்களில் தர்மலிங்கமும் ஒருத்தன்.

தர்மலிங்கம்,அரவிந்தனை ஏறிட்டும் பார்க்கவில்லை. ஓருத்தரையும் ஏறிட்டுப் ‘பார்க்காமல்,’ தனது தனியுலகில் தர்மலிங்கம் வாழ்வதால் சிலர் அவனைப் பைத்தியம் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியுமா அவன் மனதில் குமையும் வேதனை நெருப்பு. அரவிந்தன் தனக்கு ஒரு தேனிரைப் போட்டுக்கொண்டு தர்மலிங்கத்திற்கு முன்னால் அமர்ந்தான். அரவிந்தனுக்க யாருடனாவது பேச வேண்டும்போலிருந்தது.

‘யாழ்ப்பாண்தில் குண்டு போட்டதால் நிறையப்பேர்; செத்துப் போச்சினமாம்’தர்மலிங்கத்தைப் பார்த்தபடி சொன்னான் அரவிந்தன்.

தர்மலிங்கத்தின் உடம்பு மிகவும் பெருத்து,அளவுக்கு மீறிய வயதைக்காட்டியது. யாரையம் நிமிர்ந்து பார்க்காததால் அவன் கண்களைச் சுற்றியும் தசைவரத் தொடங்கிருந்தது. தலை வாரப்படாமல் கிடந்தது. கசங்கிய சேர்ட்டும் சாரமும் அணிந்திருந்தான். வாழவேண்டிய வாலிபம் வாழ்வின் வலியால் தனியாக ஒடுங்கி பரிதாபத் தோற்றம். அரவிந்தனுக்கு அவனைக் கட்டிக்கொண்டழவேண்டும்போலிருந்தது.

‘ அங்கு நடந்த ஷெல் அடியிலயும், குண்டு வீச்சிலயும் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பமும் செத்திருக்கும் என்று நினைக்கிறன்.’ அரவிந்தனுக்குத் தன் கண்ணீரை அடக்கவேண்டும் என்று தோன்றவில்லை. அரவிந்தன் அழுதான். தர்மலிங்கம் மௌனமாக இருந்தான்.

‘யாருக்காவது சொல்லியழவேண்டம்போலிருக்கிறது தர்மலிங்கம்’ அரவிந்தன் வெட்கம் விட்டுத் தேம்பினான்.

அரவிந்தனுடன் சிரித்து மகிழ்ந்து சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் இன்று சரித்திமாகிவிட்ட செய்தி அவனாற் தாங்கமுடியாதிருந்தது.

வீட்டு ஜன்னலுக்கு வெளியே பெருங்காற்றுடன் பனியும் கொட்டிக்கொண்nருந்தது.அரவிந்தனின் மனதில் அதைவிடப் பெரிய சூறாவளியடித்துக்கொண்டிருந்தது.

தர்மலிங்கம் தனது முகத்தைத் திருப்பி, வெளியில் கொட்டும் பனியைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘அந்தக் குடும்பத்தில ஆறு பிள்ளைகளும் தாய்தகப்பனும்..’அரவிந்தன் தன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.

அந்த ஆறு பிள்ளைகளில் ஒருத்தன் டானியல்,ஸ்டெல்லாவின் தமயன், அரவிந்தனின் நெருங்கிய சனேகிதன். அரசியல் என்ற பெயரில் நடக்கும் மிருகத்தனமான,கொடுமைகளை,நரபலிகளைக் கண்டு குமுறியவன். ‘இந்தக் கொடுமைகளை எதிர்த்துப் பேசவே உரிமையில்லாத பிறவிகளாகி விட்டோம். இப்படி வாழ்வதைவிட…..’டானியல் வெடிப்பான்.

‘என்ன செய்வது எல்லாம் எங்களின் தலைவிதி” அரவிந்தன் நண்பனுக்குச் சொல்வான் ‘இயலாமையை விதியிற் போடுவது கோழைத்தனம்…’ டானியல் விரக்தியுடன் சிரிப்பான்

‘என்ன செய்யப்போகிறாய்?’ ;

‘பாதிரியாகப் போகப்போகிறேன்’ கிண்டலாகச் சொல்வான் டானியல் அவன் பாதிரியாகப்போகவில்லை. இப்போது வாழ வேண்டிய வயதில்,பரலோகம் போய்விட்டான்’.

டானியலின் தமக்கை,கல்யாணச் சந்தையில் ஒரு முதுகன்னி. யாழ்ப்பாணத்தில் இன்று என்ன இருக்கிறது? முதுகன்னிகளும பழைய பஸ்களும்;தானே@
டயனியலின் தங்கை ஸ்டெல்லா. அவளின் அழகிய,துடிப்பான கண்கள் அரவிந்தனின் ஞாபகத்தில் மோதின அவளுமா இறந்திருப்பாள்? அவள் பெயர் ஞாபகம் வந்ததும் அரவிந்தனின் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியதுபோன்ற வேதனை.

அரவிந்தன் தர்மலிங்கத்தைப் பார்த்தான் தனது குடும்பம் அழிந்தபின் மனம் பேதலித்துப் போனவன் தர்மலிங்கம்,அதை இன்று அரவிந்தனாற் புரிந்து கொள்ள முடிகிறது.

‘உனக்குத் தூரத்துச் சொந்தத்திலும்; யாரும் அக்கா தங்கை கிடையாதா?’ தனது அந்தக் கேள்விக்கு,தர்மலிங்கம் மறுமொழி சொல்ல மாட்டான் என்று அரவிந்தனுக்குத் தெரியும்.

தர்மலிங்கம் எழுந்து போய்விட்டான்.

தமிழ் இனத்துக்கு நடப்பதைப் பார்த்து உணர்ச்சிகள் மரத்து விட்ட மனிதனா தர்மலிங்கம? தர்மம் சிறைப் பட்டுவிட்டதே எப்போது எங்களுக்கு விடுதலை?

அமைதி காக்கவென்ற இந்தியப்படை 1987ம் ஆண்டு.தமிழ்ப்பகுதிகளுக்கு வந்ததும் அதன்பின் அந்த ‘இந்திய அமைதிப்படை’ செய்த துவம்சங்களிலிருந்து தப்பிய குடும்பங்களில் அரவிந்தன், தேவசகாயகம் மாஸ்டரின் குடும்பம் போல்ச் சிலவாகும்.

பழைய நினவுகள், இப்போது நடப்பவை என்று எதை நினைத்தாலும் நினைவுகள் தாங்கமுடியாத வேதனைகளைத் தருகின்றன.

பின்னேரம் பத்திரிகை ஆசிரியரைப் போய்க்காணவேண்டும். மனம் நிம்மதியின்றியலைந்தது. மனதில் கொழுந்து விட்டெரியும் வேதனைத்தீயைக் கொஞ்சம் தணிக்க வெளியிற் செல்வது நல்லது.

குளித்து விட்டுப் புறப்பட ஆயத்தமானான்.வெளியில் பனி கொட்டும்போது இதமான சுடுநீரில் இறங்கி உடலையும் உள்ளத்தையும் அமிழவைப்பது மனதுக்கு ஆறுதல் தருமா?

வேதமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்த குடும்பம். ஸ்டெலாவின் அழகிய கண்கள் அவனுடன் குளியலறைக்குள் வந்து நின்று அவனைப் பார்த்து ஏங்குவது போன்ற பிரமை.

அரவிந்தன் சைக்கிளில் ரியுஷனுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது,ஸ்டெலாவைக் காண்பதுண்டு. அரவிந்தன் அவள் தமயனின் சினேகிதன்,என்பதற்கப்பால் அவர்களுக்கு எந்த உறவும் கிடையாது. டானியலைப் பார்க்கத் தேவசகாயம் வீட்டுக்குப்போகும்போது,அரவிந்தன் தனது சைக்கிளைப் படலையிற் சாத்தி வைத்து விட்டுத் தன் நண்பனுக்குக் குரல் கொடுப்பான். பெரும்பாலும் ஸ்டெலாதான் வேலிக்கு அப்பால் நின்று கொண்டு,’ அண்ணா வெளிக்கிடுகிறார்,கெதியில் வந்திடுவார்’ என்று சொல்வாள். அவள் குரல் இன்மையானது. வாழ்க்கையின் கொடுமைகள் தெரியாத புனிதமான இளமையின் இன்னிசை ஓசை அது.

அவளைத் தற்செயலாகக் காணும்போது அவள் விழிகள் அடிக்கண்ணால் இவனைத் தழுவிவிட்டு ஓடிவிடும். அரவிந்தன் லண்டனுக்கு வெளிக்கிடும்போது,அவள் வேலிக்கப்பால் அவனைத் தரிசனம் செய்ததை அரவிந்தன் அறியாமலில்லை. அரவிந்தனும் பதிலுக்கு அவளின் பார்வைக்கும் குரலுக்கும் தவித்ததுண்டு.ஆனால், இருவரின் குடும்ப,சாதி,சமய ,பொருளாதார வித்தியாசங்கள் இருவரின் மனக்கிடக்கைகளை வெளியே வராது மறைத்து விட்டது.

அரவிந்தனின் நினைவுகள் யாழ்ப்பாணத்து வடலிகளுக்குள் நுழைந்து திரிந்தபோது, டெலிபோன் மணியடித்தது. பொல்லாத பனியடிக்கும் இன்றைக்குப் பலர் வேலைக்குப் போக மாட்டார்கள்.; டெலிபோன் பண்ணி அலட்டிக் கொண்டிருப்பார்கள்.

பத்திரிகை ஆசிரியராகவிருந்தால் அவருடன் பேசுமளவுக்கு அவன் மனம் திடமாகவில்லை.ஆனாலும் டெலிபோனை எடுத்தான். இன்னுமொரு நண்பன் யாழ்பாணத்தில் நடந்த குண்டு வீச்சு பற்றிக் கேட்கிறான்.

அவனுக்குத் தேவசகாயம் மாஸ்டரையும் அவரின் குடும்பத்தையம் தெரியும். தேவசகாயம் மாஸ்டரிடம் ரியுசன் எடுத்த மாணவர்களில் அவனும் ஒருத்தன்.
‘என்ன மச்சான், சிங்கள நாய்கள் யாழ்ப்பாணத்தில சரியாகக் குண்டு மழை பொழிகிறார்களாம்’ நண்பன் சொன்னான். அரவிந்தன் உம் கொட்டினான்.

குளிப்பதற்கு பெனியனைக் கழற்றியிருந்ததால் உடம்பு குளிர்ந்து சிலிர்த்தது.

‘எங்க குண்டு தாக்கியது என்டு கேள்விப் பட்டிருப்பாய்…பாவம் மாஸ்டரின்ர குடும்பம்..’நண்பன் சொல்லிக் கொண்டிருந்தான்.

அரவிந்தன் பதில் சொல்லாமற் கேட்டுக் கொண்டிருந்தான்.

‘மாஸ்டரின்ர வீட்டுப் பக்கம் எல்லாம் தரை மட்டமாம்…அவரின்ர குடும்பத்தில..’ நண்பன் தான் கேள்விப்பட்ட விடயங்களைச் செய்தியாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.

‘ஏதோ எங்களுக்குக் கடவுள் புண்ணியத்தில இங்கேவர வழியிருந்தபடியால் தப்பி விட்டம்..இல்லயென்டால் எங்கட கெதியும் இப்படித்தானிருந்திருக்கும்’நண்பனின் குரலில் கடவுளுக்கு நன்றி.

இந்திய இராணுவத்திடம் சூடுவாங்கி முடமாகியவன் அவன்.

கடவுளின் புண்ணியமா?

மிகவும் ‘நல்ல மனிதர்களாக, வாழ்ந்த பல தமிழர்களுக்குக் கடவுளின்’ புண்ணியம்’ ஏன் இல்லாமற் போனது? அரவிந்தன் நண்பனுடன் அந்த விடயம் பற்றித் தர்க்கம் செய்யாமல், ஜன்னல் வழியாக,வெளியிற் கொட்டும் பனியை வெறித்துப் பார்த்தான். அவன் கண்களில் நீர் நிறைந்தது.

ஸ்டெல்லாவுக்காகவும் அவளின் குடும்பத்திற்காகவும், குண்டடி பட்டு இறந்த தமிழர்களுக்காகவும் வானம் தனது பனியைக் கொட்டி அழுகிறதா?

‘ அரவிந்தன் உனக்கு மாஸ்டரின்ர பெட்டை ஒன்டில ஒரு கண்ணல்லோ’ நண்பன் ஒளிவு மறைவின்றி அரவிந்தனைக் கேட்டான்.

இந்த சந்தர்ப்பத்தில் கேட்கக் கூடிய கேள்வியா இது?

அரவிந்தன் தனது பழைய நினைவுகளைப் பனியுடன் சேர்ந்து புதைத்துவிடத் துடித்தான்.

அரவிந்தனின் மௌனம் அவனது மனநிலையை அவனது நண்பனுக்குத் தெளிவு படுத்தியிருக்கவேண்டும்.

‘ ஐயாம் வெரி சொரி மச்சான்.. பின்னேரம் வந்து பார்க்கிறன்’.

‘நான் பேப்பர் ஒவ்விசுக்குப் போகவேணும்..வீட்டில இரவு எட்டு மணிக்குப் பிறகு இருப்பன்’ அரவிந்தனுக்குத் தன் நண்பனைக் கண்டு மனம் விட்டழ வேண்டும் போலிருந்தது.

அரவிந்தன் போனை வைத்தான். கீழ்மாடியில், தர்மலிங்கம் கதவைச் சாத்தும் கேட்டது.

.. பத்திரிகை ஆசிரியர் சூட்டும் கோட்டும் போட்டு மிகவும் எடுப்பாகத்தெரிந்தார்.இவர்களெல்லாம் பெரிய மனிதர்கள். ஏதோ ஒரு பொது நிகழ்ச்சிக்குப் புறப்படடுக் கொண்டிருந்தார் போலும். லண்டனில் இப்போதெல்லாம், இலக்கியம் என்றால் என்ன விலை, சமய தத்துவங்கள் சந்தையில் வாங்கலாமா என்று கேட்கும், ‘பெரிய அறிஞர்கள்’ பொது மேடைகளிற் சொற்பொழிவு கொடுக்க மலிந்து விட்டார்கள். பணமிருந்தாற் பத்தும் செய்யும் என்பதைச் சரியாகப் பயன் படுத்துபவர்கள் எங்கள் தமிழர்கள்!

அவரின் மேசையில் ,அடுத்த பிரசுரத்திறகான அட்டைப் படத்துக்குத் தேவையான பல புகைப் படங்கள் சிதறிக் கிடந்தன. இப்போதெல்லாம்,மீன். நண்டுக்கால்,கோழிக்கால்,; ஊரரிசி, ஒடியல்;, பட்டுச்சேலைகள், தொடக்கம் சோதிடம், மணமகள்,மணமகன் தேவை,விளப்பரங்களுடன்,மரண அறிவித்தல்களுடன்;,’சூடான’ சில விடயங்களையும் மசாலா செய்து, பத்திரிகை நடத்துவது லண்டனிற் பெரிய ஆதாயம் தரும் விடயமாகும்.

‘சூடான விடயங்கள்’ பலரகமானவை. இலங்கையிலிருந்து வரும் கொடிய குண்டடிப்புக்களும் மனித அவலங்களம் அதில் அடங்கும். அங்கு நடக்கும் அதிரடிகள், அதிகாரப் போட்டிகளுக்கான வெறியாட்டங்கள்,கப்பம் வாங்குதல், கம்பத்திற் கட்டுதல், எல்லாம் சூடான விடயங்களாக லண்டனுக்கு இறக்குமதியாகின்றன.

சித்தார்ந்த வரட்சியும், சீரான பத்திஜீவித்துவ விளக்கமுமற்ற அவசர பதிப்புக்கள்,தனிநபர் வழிபாடுகள்.அளவுக்கு மீறிய ஆணவமான எதிர்பார்ப்புக்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டவை ‘வாழ்க்கையின் வசதிக்காக’ அவசரப்படும் மக்களின் வாசிப்புக்களுக்கு இரைகளாகின்றன.

கால மாற்றத்தால், கல்வியறிவு உள்ளவர்கள் சமுகத்தில் பெரியவர்களாயிருந்ததற்குப் பதில், காசுள்ளவர்களைக் காக்கா பிடிக்கும் சமுதாயமாக மாறிவிட்ட தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றி நினைத்தால் அரவிந்தனுக்குப் பைத்தியம் பிடித்து விடும். அவனுக்குக் கொஞசம் உழைப்பை அந்த பத்திரிகை ஆசிரியர் கொடுக்கிறார்.அவன் தனது உணர்வுகளை ஒதுக்கி வைத்து விட்டு உழைக்கவேண்டும்.

அரவிந்தனின் மனம் பலதையும் பத்தையும் நினைக்க அவன் கைகள் தன்பாட்டுக்குப் பத்திரிகைகளை விரித்துக் கொண்டிருந்தன.பத்திரிகை ஆசிரியர், தனது மிடுக்கான தோற்றத்தில் அரவிந்தனை ஏறிட்டுப் பார்த்தார்.அவன் முகத்தில் படிந்திருந்த சோகத்தை ஒரு தரம் அளவிட்டாh.

‘என்ன ஒரு மாதிரியிருக்கிறீர்?’

‘யாழ்ப்பாணத்தில நிறையக் குண்டு போட்டவையாம்.’அவன் குரல் அவனையுமறியாமற் தழுதழுத்தது. ஸ்டெல்லாவின் ஞாபகம் வந்ததும்,இலங்கை அரசின் ஷெல் அடியில் அரவிந்தனின் பக்கத்து வீட்டுச் சிறு குழந்தையும் சிதறி விழுந்து அழிந்தததைக் கண்ட ஞாபகம் வந்தது.

‘இலங்கையில் எப்போது,குண்டடியோ அல்லது ஷெல் அடியோ இல்லா நாட்கள் இருக்கின்றன?.’
இன்று இவன் என்ன புதினமாக ஏதோ நடந்தது போல குண்டு வீழுந்த கதை சொல்கிறான் என்ற வியப்புடன்; அவனை ஏறிட்டுப்பார்த்தார் ஆசிரியர்.

‘தமிழர்கள் இருக்கிற இடங்களில குண்டு போடுறது சாதாரணமான விடயம்தானே?’ ஆசிரியர் குரலில் ஒருவித சோகமும் இல்லை. அவரின் குடும்பத்தில் ஆடு மாடுகள், அம்மி குளவிகள் தவிர மற்றப்படி அத்தனைபேரும் உலகமெல்லாம் ஓடிவிட்டார்கள். அவருக்கு அழுகை வரக் காரணம் ஒன்றும் இன்றில்லை.

‘ம் ம்.. எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றும் ….’ அதற்கு மேலே அவனாற் தொடர முடியவில்லை. ஆண்மகன் என்பதையும் மறந்து ஆசிரியருக்கு முன்னாலிருந்து வெட்கத்தை விட்டு அழுதான்.

தமிழரின் இன்றைய அவலத்தை நாளைய இலாபமாக்கும் சுயநலம் பிடித்த இந்த ஆசிரியருக்கு அவன் வேதனை புரியுமா?
ஆசிரியர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

அவர் கண்களில் ஒரு பள பளப்பு, ஒரு எதிர்பார்ப்பு.

‘உனக்குத் தெரிந் குடும்பம் என்றா சொன்னாய்?’ ஆசிரியர் கவனமாகத் தனது வார்த்தைகளை வெளியே விட்டார்.
சோழியன் குடும்பி சும்மா ஆடுமா?

அரவிந்தன்,அவர் கேட்டதன் அர்த்தத்தைப் புரியாமல் ‘ஓம…என்னுடைய சினேகிதனின் குடும்பம்…;’ என்று முணுமுணுத்தான்.

‘அந்தக் குடும்பத்தில் உனக்கு நெருக்கமான யாரும் இருக்கிறார்களா..இருந்தார்களா?’அவரின் கேள்வியின் முழு அர்த்தமும் புரியாமல் ஆசிரியரை நிமிர்ந்து பார்த்தான்.

‘அந்தக் குடும்பத்தில் உனக்கு நெருக்கமான சினேகித..சினேகிதிகள்….’ஆசிரியரின் முகத்தில் நெழிந்த குமுட்டுச்சிரிப்பை அரவிந்தன் விரும்பவில்லை.

‘மாஸ்டரின்ர மகன் டானியல் என்ர சினேகிதன்….அரவிந்தன் மென்று விழுங்கிச் சொன்னான். அதற்கப்பால் விளக்கமாச் சொல்ல என்ன இருக்கிறது, நினைவில் ஸ்டெலாவின் அழகிய கண்கள் வந்து மறைந்துபோயின. நிலவின் தண்ணொழியில் அவள் நினைவு வந்து ஏங்க வைத்த ஞாபகங்கள் அவனின் தனிப்பட்ட உணர்வு. தென்றல் அவனை வருடும்போது அவள் நினைவு தடவியது அவனின் உள்மன இரகசியங்கள், உருவமற்றவை.

‘சினேகிதனுக்குத் துக்கப் படுபவர்கள்; கண்ணீர் விட்டழுவதில்லை’ ஆசிரியர் தான் ஏதோ பெரிய தத்துவத்தைக் கண்ட படித்தமாதிரிக் கல கலவென்று சிரித்தார்.

அவன் சிந்தனை இன்னும் இலங்கையில் நடக்கும் கொடுமைகளில் ஊறி நின்றது. ‘ஸ்டெல்லா போன்ற பெண்கள் உலகத்தின் புண்ணிய விதைகள், அவற்றை ஏன் அழிக்கிறார்கள்?’ இமயத்தில் ஏறிநின்று கதறவேண்டும் போன்ற ஒரு வெறி அவனுக்கு.

‘ பாலஸ்தீனியரின் பிரச்சினை தீர அரபாத்தும் இஸ்ரேலியரும், ஐரிஷ் பிரச்சினை தீர சின்பெயினும் ஆங்கிலேயர்களும் பேச்சுவார்த்தைகள் நடத்துகிறார்கள்… பொஸ்னியனும்,சேர்பியனும் தங்கள் பிரச்சினையைத் தீர்க்க, மனித உரிமைகளைப் பேண ஒருத்தருடன் ஒருத்தர் பேசுகிறார்கள்…அப்படி ஏன் நாங்கள் செய்யக் கூடாது? ஏன் எங்களுக்கு உருப்படியாக எதையும் அணுகத் தெரியாமல் இருக்கிறது?’

அரவிந்தன் தனது ஆத்திரத்தையெல்லாம் வார்த்தைகளிற் கொட்டினான்.

அரவிந்தனின் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லத் தேவையற்ற பெரிய மனிதர் அந்த ஆசிரியர். அவரின் பார்வையில் கூர்மை

‘மாஸ்டரின் பெட்டையின்ர படம் உன்னிட்ட இருக்கா’? புத்திரிகை ஆசிரியர் மிகவும் சீரியசாகத் தன் முகத்தை வைத்துக்கொண்டு அரவிந்தனைக் கேட்டார். அவரின் கேள்வியால் அரவிந்தன் திடுக்கிட்டான்.

‘காதலி குண்டடியில் போயிருக்காட்டா இப்படிக் கண்ணீர் விட்டழ முடியாது’ ஆசிரியரின் குரலில் சாடையான நக்கல். அவர் எப்படி அவனின் துயரைத்தன் வியாபாரத்தின் முதலீட்டாக்க முனைகிறார் என்ற அவனின் அதிர்ச்சியிலிருந்து மீழமுதல் ஆசிரியர் தொடர்ந்தார்.

‘லண்டன் புகைப் படக்கலைஞரின் காதலி, இலங்கை அரசின் குண்டடிபட்டு அகால மரணம்…எப்படியிருக்கிறது தலையங்கம்?’
ஆசிரியர் தனது மேதாவித்தனத்தைத் தானே பாராட்டியமாதிரி வாய்விட்டுச் சிரித்தார்.

‘ ஒரு கட்டுரையும், புகைப்படமுமிருந்தால் அதை அட்டைப்பட முகமாகவும் போடலாம’;.

ஆசிரியர் தான் சொல்ல வந்தததைச் சொல்லிவிட்ட திருப்தியில் எழுந்தார்.

அரவிந்தன்,ஆசிரியருக்குப் பதில் சொல்ல முடியாத அதிர்ச்சியில்,சிலையாகவிருந்தான்.

(யாவும் கற்பனையே)

– ‘மரபு’ பத்திரிகைப் பிரசுரம். 1996

Print Friendly, PDF & Email

1 thought on “அட்டைப்பட முகங்கள்

  1. பத்திரிக்கை துறையில் இருந்து கொண்டே அதில் நடக்கும் கீழ்த்தரமான நிகழ்வுகளை வெளிக்கொணர்வது, நீங்கள் நேசிக்கும் பணியை எவ்வளவு நேர்மையாக செய்கிறீர்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *