கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 3, 2024
பார்வையிட்டோர்: 1,842 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஊருக்கு அருகே இருந்த ஒடைப்பாலம். அங்கே அமர்ந்திருந்த அந்த நால்வரின் உரையாடலுக்கு வரையப்பட்ட ஒவியம்போல், மாலைநேர மஞ்சள் வெயில், பாலத்தில் பாதியும், அவர்கள் வாய்களில் மீதியும் விழுந்து கொண்டிருந்தது. பேச்சுக்கு ஏற்றாற்போல அவர்கள் வாய்கள் மஞ்சள் தனமாக விளங்கின. பாலத்தின் ஒரு ஒரத்தில் ஒரு காலை தூக்கி கையால் விலாவோடு சேர்த்து அனைத்தபடி இருந்த கிருஷ்ணன், தமது இதர சகாக்களைப் பார்த்து ஏதோ ஒரு மூச்சில், “அவன் ரொம்ப சின்னப் பையன்ப்பா.. என்னைவிட ஒரு வயசுதான் அதிகம்” என்றார்.

அந்த நாற்பது வயதுக்காரர்களுக்கு அருகே, நெற்றியைப் பிடித்துக்கொண்டிருந்த வாலிபப் பையன் பெருமாள். “அவரோ அல்லது நீரோ சின்னப் பையன்னா, நான் இப்போ எங்க அம்மாகிட்ட பால் குடிச்சிக்கிட்டு இருக்கணும்” என்றான். உடனே, அவனை அடுத்து இருந்த ஐம்பது வயது லட்சுமணன் ‘பாலுணர்வு தெறிக்கும் படியான ஒரு பேச்சை போட்டார். அவர், பேச்சை முடிக்கு முன்னாலேயே, இரண்டுபேர் விழுந்து விழுந்து சிரித்தபோது, சின்னப்பையன்கள் லிஸ்டில் இருந்து விடுபட்டாலும், வாலிப லிஸ்டிற்குள் இன்னும் வராத விடலைப் பையன் ராமன், எழுந்து நின்றே சிரித்தான். கிருஷ்ணன் மாமாவோட பேச்சு அவனுக்குப் புரிந்துவிட்டதாம்! இனிமேலும் அவனைக் குழந்தையாய் நினைக்கப்படாதாம்.

ஊர் வாயின் கோரை பற்களான இவர்கள், பத்திரிகைகளுக்குத் தக்கபடி கதை எழுதும் எழுத்தாளர் போல், அந்தப் பக்கமாக வந்துபோன பெண்கள் எல்லோரையும் அவர்களின் குடும்பப் பின்னணிக்குத் தகுந்தாற்போல் விமர்சனம் செய்தாகிவிட்டது. ஒரு எளியவனின் மகள் புல்லுக்கட்டு சுமந்து போனபோது, “எதையோ சுமக்க வேண்டிய வயசில. இதை சுமக்கியம்மா” என்று வெளிப்படையாகவே கேட்டாகிவிட்டது. ஊரான் வீட்டுப் பெண்களைத் தங்கள் வீட்டுச் சங்கதிகள் தெரியாமல் விளாசியாகி விட்டது.

ஒரு மிராசுதாரர் பெண்ணைப் பார்த்ததும் முன்னாலும் பேசாமல், பின்னாலும் பேசாமல் விட்டாகிவிட்டது. ஏனென்பது அவர்களுக்கே தெரியும். அவள் அண்ணன், சண்டை கோழி. மூக்கில் கொத்துவான். அப்பா, அடியாளை வைத்து உதைப் பார். ஆக மொத்தத்தில், இவர்கள் மூஞ்சுகளை அயிரை மீனை உரசுவதுபோல, இந்தப் பாலத்திலேயே வைத்து உரசிவிடுவார்கள். ஆகையால் அந்தப்பெண் போவது வரைக்கும் தலைகளைத் தாழ்த்திக் கொண்ட அந்த வீரர்கள் பிறகு வேறு யாரும் கிடைக்காததால், ஒரு ஆணை விமர்சித்து, அதன் விளைவாய்த் தங்களைத் தாங்களே விமர்சித்துக்கொண்டார்கள்.

சுய விமர்சனம் என்றைக்குமே அலுப்புத் தருவது. அது அவர்களுக்கும் வந்தது. திடீரென்று விடலைப்பையன் கத்தினான்.

“அங்க. பாருங்க. கேனயன் வேலுச்சாமி வாரான், வாயக்கிளறலாம். நல்லா நேரம் போவும்.”

எழுந்திருக்கப்போன லட்சுமணன், இரண்டு கால்களையும் மடித்துப் பாலத்தில் வைத்துக்கொண்டார்.வாலிபன் பெருமாள் அமர்த்தலாகச் சிரித்தான். தொலைவில் தெரிந்தவன் வருவது வரைக்கும், பொறுக்கமுடியாதவன்போல், விடலை ராமன் பாலத்தின் மீதே எழுந்து நின்றான்.

தொள தொள என்று கட்டுமளவுக்கு கட்டுமானம் இல்லாத நாலு முழ வேட்டி, இடுப்பை விட்டு இறங்கப் போவதுபோல் லூசாக இருக்க, வெற்றிலை எச்சங்கள் நீலச் சட்டைக்கு சிவப்பு ஒட்டுத் துணிகள்போல் தோன்ற, நேராகப் பார்க்கத் தெரியாதவன்போல மேலும் கீழும் பக்கவாட்டிலும் பார்த்தபடி வேல்சாமி வந்து கொண்டிருந்தான். முப்பது வயதிருக்கலாம். அடியும், தலையும் ஒரே மாதிரியான உடலமைப்பு. சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற நிறம். துருத்திய கண்கள் அவிழப்போன வேட்டியைக் கட்டவேண்டும் என்ற உணர்வில்லாமலே, அதை வயிற்றுப் பக்கமாக ஒரு கையால் அனைத்துப் பிடித்து, வேல்சாமி எக்கி, எக்கி நடந்தான்.

வேல்சாமியிடம், அவர்கள் பேசவேண்டிய அவசியமில்லை; அவனே பேசினான். பேசும்போது வார்த்தைகள் மெதுவாகவும், எச்சில் வேகமாகவும் அதிமாகவும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. கேணத் தனமாகத்தான் கேட்டான்.

“என்ன இது. பாலத்தில் உட்கார்ந்திட்டியே! நான் வயலுக்குப் போகும்போதும் ஒக்காந்தியே! வரச்சிலயும் இருக்கிய”

கிருஷ்ணன் பெளவ்விய பாவனையோடு பதிலளித்தார்.

“ஏதோ தெரிஞ்சு தெரியாம ஒக்கார்ந்துட்டோம்! நீ என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறோம்! என்ன செய்யணும்னு சொல்லு!”

“நல்லா இருக்கே நாயம். மாமா சொல்லி மருமவன் செய்யனுமா மருமவஞ் சொல்லி மாமா செய்யனுமா?”

“சரி, மருமவனே! நான் கண்ண மூடிக்கிட்டு ஒண்ணு செய்வேன். நீ அதே காரியத்த கண்ண திறந்துகிட்டே செய்யனும் ஒன்னாலே முடியுமா?”

“என்ன மாமா நீரு? செய்து காட்டும். செய்யுறேனோ, இல்லியான்னு பாரும்!”

“கண்டிப்பா?”

“கண்டிப்பாவே.. சோளத்தட்டைக்குள்ள ராசாத்தியக் கட்டுறதா வாக்குக் கொடுத்துட்டு அப்புறம் கை விட்டானே மாடக்கண்ணு, அவன் இல்ல நான். ஐயா வேல்சாமி!”

“இது என்னடா புது சமாச்சாரம். எந்த ராசாத்தி? எந்த மாடக்கண்ணு?”

“அவிய கிடக்கட்டும். நீரு சொன்னத செய்யும்”

“சரி, மாமா தோத்துட்டேன்னு வச்சிக்கிடு. எந்த ராசாத்தி!”

“நீரு மொதல்ல, கண்ண மூடுமுன்னா மூடும்”

கிருஷ்ணன், பாலத்தில் தேங்காய் சிரட்டை மாதிரி இருந்த குழியில் கிடந்த மண்ணை அள்ளி, கண்களை மூடிக்கொண்டு அதை கண் மேல் போட்டார். பிறகு கண்களைத் திறந்து புருவத்தின் மீதும், கன்னங்கள் மீதும் இருந்த மண் துகள்களை துண்டால் துடைத்துவிட்டு கைகளைத் தட்டிக்கொண்டே வேல்சாமியைப் பார்த்தார். அவன் தயங்குவது போலிருந்தது. இப்போது கிருஷ்ணன் விட்ட இடத்தை லட்சுமணன் தொடர்ந்தார்.

“பூ. இவ்வளவுதான் ஒன் வைராக்கியமா? பெரிய அரிச்சந்திரன்மாதிரி சபதம் போட்ட!”

“யாரு சின்னய்யா. இப்போ மாட்டேன்னது? அதுக்கு வேற ஆளப் பாரும்!”

வேல்சாமி, அவர்களுக்கு எதிரே கீழே உட்கார்ந்தான். இரண்டு கைய நிறைய மண்ணை அள்ளிக்கொண்டான். கண்களை அகலமாகத் திறந்து வைக்க கன்னத்துச் சதையை கீழ் நோக்கி இழுத்துக்கொண்டான். நெற்றியை மேல் நோக்கிச் சுழித்துக் கொண்டான். கண்களை சுழலாமல் வைத்துக்கொண்டே, கையில் இருந்த மண்ணை எடுத்து சரஞ்சரமாகப் போட்டான். கண் உறுத்துவதையும் பொருட்படுத்தாமல் சர்வ கட்சிகளும் பயன்படுத்தும் ஒரு அரசியல் கோஷத்தை அடிக்கடி கேட்டுப் பழகிய அவன், “இந்த மண்ணு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?” என்று கூட பேசி, அந்த முயற்சியில் வாய்க்குள்ளும் மண்போனது. கண்கள் திறந்திருந்தாலும் அவனால் பார்க்க முடியவில்லை. வலது கையால், இடது கண்ணையும், இடது சாரிக் கையால், வலது சாரிக் கண்ணையும் அவன் கசக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணின் குரல், ஆவேசமாக ஒலித்தது.

“ஒருவன் பைத்தியார தர்மர்னா, இப்படியா துண்டி விடுறது. வெளயாட்டுக்கும் ஒரு வரமுற இல்லியா? ஓங்க அண்ணன் தம்பியள இப்டி பண்ணுனா சம்மதிப்பியளா?”

பாலக்காரர்கள், வேல்சாமியின் தங்கையைத் திடுக்கிட்டுப் பார்த்தார்கள். விளையாட்டு ஜோரில், அவள் வருவதைப் பார்க்காமல் இருந்துவிட்டார்கள். இப்போது இருக்கமுடியாதது போல் நெளிந்தார்கள். தோளில் மண்வெட்டி தொங்க நின்ற அந்தப்பெண், அண்ணனைப் பார்த்து ஆடிப்போனாள். பிறகு அந்த நால்வரையும் நேராகவும், கூராகவும் பார்த்துக்கொண்டே ஆவேச சக்தியாய் அவள் நின்றபோது, வேல்சாமி தங்கையைச் சாடினான்.

“ஆம்பிளைங்க பேசிக்கிட்டு இருக்க இடத்துல. ஒனக்கென்னழா வேல. பேசாம வீட்டுக்குப் போ! போன்னா போழா!”

“நீ ஆம்புளமாதிரி நடக்காமப் போனதால, நான் பொம்பளமாதிரி நடக்க முடியாம இவங்க முன்னால நிக்க வேண்டியதாப் போச்சு அய்யா, பெரிய மனுஷமாரே வேணு முன்னா…. எங்கண்ணனை, ஒங்க கையால கொன்னுடுங்க. ஆனா இப்படி ப் பண்ணாதிய! கொன்னுட்டிங்கன்னா எங்களுக்கும் ஒரு கவல முடிஞ்சது மாதிரி இருக்கும்.”

வேல்சாமியின் தங்கை போய்விட்டாள். கிருஷ்ணன், துக்கம் விசாரிப்பவர்போல் –

“ஆயிரந்தாலும் இருந்தாலும், ஒரு பொண்ணுக்கு இவ்வளவு வாய் ஆவாது. கூடப்பிறந்த அண்ணனைப் பேசுற பேச்சா இது!”

“அவள வீட்ல போயி என்ன பண்ணுறேன்னு பாருங்க! அங்க விழுவுறது இங்க கேக்கும்படியா அடிக்கப்போறேன்! வேணுமுன்னால் பாருங்க!”

“ஏண்டா! அவளுக்கு கல்யாணம் என்னடா ஆயிட்டு?”

“அம்மா பாத்துக்கிட்டு இருக்கா”

“பேசாம இவன் பெருமாளுக்குக் கட்டலாம்!”

“இவன் பெரிய இடமுல்லா பாப்பான்?”

“அதுக்கு நானாச்சு.”

வாலிபப் பையன் பெருமாள் குறுஞ்சிரிப்பாக சிரித்துக் கொண்டே பேசினான்.

“நம்மளால, பழகிப் பார்க்காம கட்டமுடியாது.”

“சும்மா துள்ளாதப்பா. இவன் அதுக்கு ஏற்பாடு பண்ணுவான்.”

விடலை ராமனுக்கு இது அதிகபட்சமாகத் தெரிந்தது. எனக்குன்னாலும் பரவாயில்ல. இந்தப் பெருமாளுக்கா. சீ. ஒரு குடும்பப் பெண்ணை இப்படியா பேசுறது? அவன் பேச்சை மாற்றினான்.

“அவள் கிடக்காள். முதல்ல நம்ம வேலு மச்சானுக்கு கல்யாணம், கருமாந்திரம் ஏதும் இருக்கான்னு ரேகைப் பாத்துச்சொல்லும்.”

வேல்சாமி ஆவலோடு கேட்டான்.

“கிருஷ்ண மாமாவுக்கு ரேகை சாஸ்திரம் தெரியுமா?”

“இவரைப்பத்தி என்ன மச்சான் நினைச்சே? ஒருவன் இத்தனாம் தேதி சாகனுமுன்னு இவரு சொல்லிட்டா, அத்தனாம் தேதி அவன் சாகாட்டாலும் செத்தவன் மாதிரி தூங்கிக்கிட்டாவது இருப்பான்.”

“அடடே, அப்படியா! மாமா.. எனக்கும் பாரு மாமா. மாமா… மாமா…”

வேல்சாமி, ஆவலோடு நீட்டிய கையை, ஐந்து நிமிடம் உற்றுப் பார்ப்பதுபோல் பாவலா செய்த கிருஷ்ணன், பிறகு, ‘இது அற்புதமான கைப்பா! இதோ பாரு. வேல் ரேகை. வேல் இருந்தால் ஞானம் வரும். மாப்பிள்ளை ஞானியாகப் போறான்!”

“அப்படின்னா. இவருக்கு முருகன் அருள் நிறைய இருக்கோ?”

“என்னப்பா அப்படிச் சொல்லிட்டே இடும்பனுக்குப் பிறகு, நம்ம வேல்சாமிதான் முருகனுக்கு நெருக்கமான தோழன். அடேயப்பா! இவன் மயிலும் வேலும் துணைன்னு சொல்லிட்டா போதும், யாரும் எதுர்ல நிக்கமுடியாது. மாப்பிள்ள, கால தொட்டுக் கும்பிடலாம் போலத் தோணுது.

இவரு கோபமான ஞானி; ஞானமான கோபி, இப்போ தங்கச்சி மேல கோபமாய் இருக்கார்! என்ன பண்ணப் போறாரோ, மாப்பிள்ள, தங்கச்சிய அடியும் வேண்டாங்கல. ஒம்மகிட்ட அடிபட்டால் சூரன் திருந்தினது மாதிரி அவளும் திருந்துவாள். ஆனால், பிரம்ப வச்சு அடியும். கல்ல எடுக்கப்படாது.

வேல்சாமி, கையை மட்க்கிக்கொண்டு புறப்பட்டான். இடும்பனுக்கு அடுத்தபடியாக ‘முருகன் தன்னை நேசிப்பதில் அவனுக்கு தாளாத மகிழ்ச்சி. ஊர் மத்தியில் இருந்த முருகன் கோவிலை முதன் முறையாக முழுமையாக ஏறிட்டுப் பார்த்தான். இடும்பன் சிலைக்கு அருகே தானும் இன்னொரு சிலையாக நிற்கவேண்டும் போல் ஒரு எண்ணம் ஏற்பட்டது. உள்ளங்கையைப் பார்த்து, வேல் ரேகை இன்னும் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான்.

முருகன், சூரபத்மனை வதம் செய்ததுபோல் தானும் தங்கையை அடித்து ஆட்கொள்ள வேண்டும் என்று நினைத்தபடி, வேலும், மயிலும் துணை என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே வீட்டை நெருங்கினான்.

வீட்டுக்குள் தங்கை அழுதுகொண்டிருந்தாள். அம்மாக்காரி தன் இளைய மகன் முத்துவின் கைகளைப் பிடித்துக்கொண்டு “கூலி வேலைக்கிப் போய். இவள் மாடா உழைச்ச காசுடா. சாராயத்துக்கு தகாத காசுடா. கடவுளே! நான் என்ன பண்ணுவேன்! இளையவன் கேடியா போயிட்டான்! மூத்தவன் பேடியா போயிட்டானே என்று புலம்பிக் கொண்டிருந்தாள். முத்து, அம்மாவின் பிடியில் இருந்து கைகளை விடுவித்துக் கொண்டு, அவளைக் கீழே தள்ளப்போனான். இந்த மாதிரி சமயங்களில், “எப்படியும் நாசமாப் போங்க… எனக்கு வெத்தில பாக்குக்கு வராத காசு. சாராயத்துக்குப் போவுது,” என்று ஒதுங்கி கொள்பவன் வேல்சாமி. ஒரு சமயம் மட்டும் ஒதுங்காமல் இருந்தபோது, தம்பிக்காரன் அம்மா விழ வேண்டிய இடத்தில், அண்ணனைத் தள்ளினான். இப்போதும் முத்து அம்மாவைக் கீழே தள்ளுவதற்காக உடம்பை வளைத்தபோது தங்கைக்காரி தாயைத் தாங்கிப் பிடிக்கக் கையை விரித்தாள். வேல்சாமி சுவரில் தொங்கிய காலண்டரைப் பார்த்தான். அதில் முருகன் படம் வேலோடு நின்றது. வேல்சாமி தனக்குள்ளேயே சொல்லி கொண்டான். வேலும் மயிலும் துணை.

அவ்வளவுதான், அவனுக்குத் தெரியும். ஏதோ பாய்வது மாதிரி பாய்ந்தான்.

முத்து, தான் முன்பு விழவைத்த இடத்தில் விழுந்து கிடந்தான். அவன் வயிற்றில், வேல்சாமியின் கால் இருந்தது. ரூபாய் நோட்டுக்கள் சிதறிக் கிடந்தன. அம்மாவும் மகளும் ஆனந்தமான அதிர்ச்சியில் இருந்து விடுபட்டு பின்னர் நிதர்சனம் புரிந்தவர்களாய் முத்துவை விடும்படி வேல்சாமியை மன்றாடினார்கள். வேல்சாமியும் விட்டான். முத்துவும் நொண்டிக்கொண்டே வெளியே ஒடினான். பிறகு, வேல்சாமி பிரதான எதிரியான தங்கையை அடிக்க ஆயத்தம் செய்தபோது, அவள் “என் தங்க அண்ணாச்சி. இன்னைக்கிதான் நீ மனுஷனாய் ஆகி இருக்கே” என்று சொல்லி, அவன் கையை எடுத்து முத்தமிட, அடிக்கப்போன வேல்சாமி அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.

அன்றிரவு வேல்சாமியால் தூங்க முடியவில்லை. உள்ளங்கையை விரித்து வேல் ரேகை இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான். காலண்டர் முருகனை மார்புடன் சேர்த்து அணைத்தபடி, தூங்குவதுபோல் கிடந்தான். ஏதோ ஒரு பரவச உணர்வு உடலெங்கும் பரவியது. ஆகாயத்தில் பறப்பது போன்ற புளகாங்கிதம். தன்னுள்ளே, ஏதோ ஒன்று பேசுவது போன்ற ஆனந்தம். தனக்கும், ‘எல்லா வல்ல ஏதோ ஒன்றுக்கும் ஆதியந்தம் அற்ற பந்தம் ஒன்று இருப்பது போன்ற கண்ணோட்டம்.

வேல்சாமிக்கு, தாத்தாவின் நினைவு ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சூன்யமானவர். அதன் சூட்சமத்தி உணர நினைத்து, தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற நூல்களைப் படித்துக்கொண்டிருந்தவர். அவர் மேலே போனபோது அந்த நூல்களும், மேலே போயினபரணுக்கு வேல்சாமிக்கு இப்போது எந்நாளும் இல்லாத ஒரு ஆசை..

தாத்தா படித்த புத்தகங்கள், எப்படித்தான் இருக்கும் என்பதை அறியும் ஆவலில், அவன் நள்ளிரவில் பரனைத் துழாவினான். பல்லி பாசான்களோடு, பல நூல்கள் விழுந்தன. எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் படித்து, கல்லூரியில் மாணவர்களின் ரேக்கிங்’கால் பாதிக்கப்பட்டு ஊருக்கு ஓடிவந்த இவன் , இப்போது புத்தகங்களை, பயபக்தியோடு எடுத்தான் அவனால் எல்லாவற்றையும் படிக்க முடியவில்லையென்றாலும், புரட்ட முடிந்தது. அப்படிப் புரட்டப் புரட்ட தனக்குள் ஏதோ ஒன்று புரண்டது. ஆன்மாவோ, அடி மனசோ அறியான்.

ஒராண்டு காலம் பாதி தாத்தாவின் புத்தகங்களை படிப்பிலும் பாதி உழைப்பிலும் செலவாயின.

வேல்சாமி வழக்கம்போல் வயலுக்குப் புறப்பட்டான். இரவிலும், அதிகாலையிலும் படித்துப் பார்த்த தாத்தாவின் புத்தகங்கள், அவனுக்குப் புதிய உலகை, அகத்திலும் புறத்திலும் காட்டின. வேல் ரேகையை விழிப்போடு பார்த்துக்கொண்டு, வழியில் முருகன் கோயிலை வாஞ்சையோடு வணங்கிவிட்டு பாலத்தருகே வந்தான். காலங்காத்தாலேயே, மேக்கப்போடு உட்கார்ந்திருந்த அந்த நால்வரையும் நன்றியுடன் நோக்கினான். பழைய கிருஷ்ணன், புதிய வேல்சாமியைப் பார்த்து, “என்ன மாப்பிள்ளை. போன வருஷம் கைபார்த்தேன் பாரு. அப்போ இன்னொன்னையும் சொல்ல மறந்துட்டேன். ஒன் கையில் உடுக்கு ரேகையும் இருக்கு ஒன்னால அநியாயத்த பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. ஒன் தங்கச்சி இப்போகூட எங்களப் பாத்து ஜாடையா திட்டிக்கிட்டு போனாள். அடிக்கடி அவளை தலையில தட்டி வை மாப்பிள்ள” என்றார்.

வேல்சாமி, எங்கேயோ தொலை தூரத்தைப் பார்ப்பவன் போல் நின்றான். உடனே பெருமாள், அவரு நிஷ்டையில் நிக்கார். அதக் கலைக்கப்படாது’ என்றான். ராமன், பெருமாளை விலாவில் இடித்தபடி சிரித்தான். உடனே லட்சுமணன், அவன் நிஷ்டையிலே நிக்கலப்பா. அதோ அந்த கொழுஞ்சி செடி கருகிப்போய் இருக்கறதை கலக்கத்தோடு பாக்கார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்னு ராமலிங்கசுவாமி பாடினார். நம்ம வேல்சாமியும், செடி வாடுவதைப் பார்த்து வாடுறான். தப்பு. அவன்னு சொல்லப்படாது. அவரும் வாடுறார். என்றான். அப்படிச் சொல்லிவிட்டு, அவன் மற்றவர் களைப் பார்த்து கண்ணடித்துக் கொள்ளவும் தவறவில்லை.

வேல்சாமி, அவர்களிடம் விடைபெற்றுக் கொள்ளாமலே நகர்ந்தான். வள்ளலாரின் வாடிய பயிரை நினைக்க நினைக்க, அவனுக்கு அன்பின் வடிவமைப்பு அழகாகத் தெரிந்தது. எவ்வளவு பெரிய பேரன்புப் பாடல். வயலுக்குப் போனவனுக்கு, அங்கே நின்ற தென்னை மரங்களும், பருத்திச் செடிகளும், தும்பைச் செடியும், புல்லும், பூண்டும் உயிர் ஜீவிகளாக, இதுவரை பார்த்தறியா பரம்பொருள் உயிர்ப்புகளாகத் தோன்றின. நகராத ஜீவிகளான செடி கொடிகளும், மரங்களும், விதையாகி, காயாகி, வெடிப்பாகி, வெடித்தது வீழ்ந்து, வெடிக்கப் பட்டது வாழ்ந்து, மானுடத்தைப் போல் வாழ்க்கைப் பிரவாகத்துள் ஆனந்த நர்த்தனம் புரியும் அவை, தன் மேனிக்குள் அணுக்களாய் அவதாரம் கொண்டது போலவும், தானே அந்தத் தாவரங்களின் இலையிலும், பூவிலும் எல்லா இடத்திலும் அணுக்களாய்ப் போனது போலவும் தோன்றியது. தனிப்பெரும் ஜோதியின் கீற்றுக்களான அவற்றுடன் பேசாமல் பேசிக்கொண்டிருந்த வேல்சாமி, சத்தங்கேட்டு நிமிர்ந்தான்.

ராமன், கையில் ஒரு கிளியை வைத்துக்கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தான். அந்தக் கிளி இறக்கைகள் அவன் கையில் சிக்க, கால்களை இறக்கைகள் போல் ஆட்டியது. வேல்சாமி-முன்பு பலருக்குப் பல கிளிகளைப் பிடித்துக்கொடுத்த அதே வேல்சாமி, இப்போது ராமனைப் பார்த்து அழுத்தமாகப் பேசினான். உடுக்கடிக்கும் சிவன். அவனைப் உந்துவது போலிருந்தது. பட்டென்று சொன்னான்.

“அந்தக் கிளியை விட்டுடு அதை முடக்கிப் போட நமக்கு உரிமை இல்ல.”

“என்ன மச்சான் நீ! கூண்டு கூட செய்துட்டேன். எப்படி விட முடியும்?”

“நீ விடப்போறியா? இல்ல உன்னை இந்தக் கிணத்துல தூக்கிப் போடணுமா?”

ராமன், சிறிது நகரப்போனான். வேல்சாமி அவனை நெருங்கினான். ராமன் கிளியை விட்டுவிட்டான். அதேசமயம் யோசித்தான். வேல்சாமிக்குப் பைத்தியம் முத்திட்டு. ஊர்ல சொல்லணும். உடனே சொல்லணும்.

வேல்சாமியும் யோசித்தான்.

ஒன்றின் அன்பு, இன்னொன்றின் அழிவாகக்கூட ஆகலாமோ! அழிவை ஆட்டிப் படைப்பதும் அன்பு தானே! இதனால்தான் அன்பின் ஊற்றான ஈஸ்வரன் அழிவுக் கடவுளாய் சுடலைப் பொடி பூசுகிறானோ?

வேல்சாமி, அடியோடு மாறிவிட்டான். யாரிடமும் பேசுவதில்லை. இதை, பலர் பைத்தியத்தின் இன்னொரு கட்டம் என்று நினைத்து, அடுத்த உச்சக்கட்டத்தை, ஆவலோடு எதிர்பார்த்தார்கள். வேல்சாமியும், தாத்தாவின் நூல்கள் அனைத்தையும் ஆவலோடு படித்தான். இடும்பனுக்கு அடுத்த படியானவன் என்று சொன்னதாலோ என்னவோ, நூலகம் போய், பல புத்தகங்களை இடும்ப வேகத்தில் படித்தான். நாத்திவாதிகளின் நூல்களையும் படித்து, அவர்களும் சமூகத்தின் மீதிருந்த அன்பாலேயே, கடவுள் மறுப்புத் தத்துவத்தைத் கையாண்டிருக்கிறார்கள் என்று நினைத்தான். எல்லாவற்றையும் ஓரளவு படிக்கப்படிக்க, அவனால் அவற்றை எடை போட முடிந்தது. இதனால் தனக்கென்று, ஒரு ஆன்மீக வடிவத்தையும், சமூக நோக்கையும் அமைக்க முடிந்தது. தாத்தா, முன்பு செய்த பல யோகப் பயிற்சிகளில் சிலவற்றைச் செய்து பழகினான். மனம் ஒருமைப்பட்டது. அச்சமில்லாத ஒருமை. அக்கிரமங்களுக்கு எதிரான ஒருமை.

சித்திரை விசாகம். முருகன் கோவில் முன்னால் தேராகவும், திருவிழாகவும் மக்கள் வெள்ளத்தில் மத்தியில் நின்றது. சிறிது நேரத்தில் பாட்டுக் கச்சேரி. அப்புறம் உபன்யாசம்…… உபன்யாசம் செய்பவர் வந்துவிட்டார். கச்சேரிக்காரர்களைக் காணவில்லை. மக்கள் பொறுமை இன்றி முண்டியடித்தார்கள். பெண்கள் பக்கமாக நின்ற, பழைய சகாக்களும், தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

“வேல்சாமிய, மேடையில இழுத்துவிடுவோமோ?”

‘அவன் தெளிஞ்சுட்டான். இப்போ நம்மள கண்டா பேசமாட்டக்கான் பாரு’

“இது பைத்தியம் பிடிக்கிறதுக்கு முன்னால வார தெளிவு! வாங்கப்பா பயல மேடையில ஏத்தி ஒளர வைப்போம்.”

அந்த நால்வர் கூட்டம் பெண் ரசனையை உதறிவிட்டு வேல்சாமி பக்கம் வந்தது. கிருஷ்ணன், கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டே, வேல்சாமிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

‘மாமா சொன்னதுமாதிரி. நீ ஞானியாயிட்டே! மேடையில போயி பேசப்படாதா? எங்களோட அஞ்ஞானத்தைப் போக்கப்படாதா?

வேல்சாமி, அவர்களை நிமிர்ந்து பார்த்தான். பிறகு எதுவும் பேசாமல், மேடையில் ஏறி, மைக் முன்னால் நின்றான். கூட்டம், ஒரு பைத்தியத்தின் கூத்தை ரசிக்கப் போவதுபோல் சிரித்து, சிரித்து ஒத்திகை பார்த்தது. தங்கைக்காரியும், தம்பி முத்துவும் “அண்ணாச்சி. அண்ணாச்சி” என்று மேடையை நோக்கி ஓடினார்கள். அவர்களை, சில வேடிக்கைக்காரர்கள் பிடித்துக் கொள்ள அங்கே ஒரு மல்யுத்தமே நடந்து கொண்டிருந்தது.

வேல்சாமி, திருவாசகப் பாடல் ஒன்றை, ஒரு ஒதுவார் மாதிரியே பாடினான். அந்தப் பாட்டின் பரசவத்தில் கூட்டம் அமைதிப்பட்டது. பின்னர் தம்பியும், தங்கையும் நின்ற இடத்திலேயே நிற்கும்படி பேசினான்.

“பெரியவர்களே! தாய்மார்களே!”

“இந்தப் பைத்தியம், எதை உளறப்போகிறதோ என்று நீங்கள் நினைப்பது நியாயத்தான். நான் பைந்தியந்தான். நீங்கள் நினைப்பது மாதிரியான பைத்தியம் அல்ல. ஈஸ்வரனைப் போன்ற பித்தன். சிலுவையில் அறையப்பட்ட இயேசு பீறிட்டு எழுந்தது போன்றவன். ஒரு கதை சொல்லுகிறேன் கேளுங்கள்.”

கூட்டம் அவனோடு ஒன்றியது. ஆனாலும் தம்பியும், தங்கையும் உயிரை கையில் பிடித்திருப்பது போல் நின்றார்கள். வேல்சாமி, கதை சொன்னான். புராணக்கதை.

“ஒரு காட்டில், ஒரு முனிவர், பாதி மிருகமாகவும், பாதி மனிதனாகவும் வடிவு கொண்டதாகக் கூறப்படும் நரசிம்ம அவதாரத்தை அப்படியே பார்ப்பதற்காக ஆண்டுக் கணக்கில் தவம் இருந்தார். தவம் பலிக்காமல் இருந்த நேரம். அந்தச் சமயத்தில், ஒரு வேடன் வேட்டையாட வந்தான். அந்த முனிவரைப் பார்த்து, ‘சாமி! எதை தேடிக்கிட்டு இங்கே இருக்கிறீக?” என்றான். உடனே அந்த முனிவர், நான் ஒரு மிருகத்தை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்தார். உடனே இந்த வேடன் பலமாய் சிரித்து விட்டு, ‘எனக்குத் தெரியாத மிருகமா? சொல்லுங்கள். அதைக் கட்டிப் பிடித்து கொண்டு வருகிறேன்’ என்கிறான். முனிவரோ, மமதையோடு சிரிக்கிறார். வேடன் மீண்டும் வற்புறுத்துகிறான். உடனே அவர், அந்த மிருகம் பாதி மனித வடிவத்திலும், மீதி சிம்ம வடிவத்திலும் இருக்கும். உன்னால் பிடிக்க முடியாது’ என்கிறார்.”

அந்த வேடன் சிறிது அயர்ந்து போகிறான். ஆனாலும் முனிவரிடம் சபதம் போடுகிறான். ‘எப்படியும் இன்று மாலைக்குள், அந்த மிருகத்தை உங்கள் முன்னால் கொண்டு வந்து காட்டுகிறேன். அப்படி முடியாது, போனால் நெருப்பை வளர்த்து அதில் உயிர் மாய்க்கிறேன் என்கிறான். வில்லும் அம்புமாய் காட்டுக்குள் சுற்றுகிறான். எல்லா மிருகங்களும் கிடைக்கின்றன. ஆனால் அந்த மிருகத்தை காணவில்லை. இறுதியில் காட்டு விறகில் நெருப்பூட்டி உயிரை மாய்க்கப்போகிற சமயத்தில் –

அந்த நரசிம்ம வடிவம் உறுமிக் கொண்டே, அவனை நெருங்குகிறது. இவன், அதன் கழுத்தை கயிற்றால் கட்டி, முனிவரிடம் இழுத்து வருகிறான். இந்த மிருகத்தைப் பாருங்கள் சாமி என்கிறான். முனிவர் கண் விழிக்கிறார். அவருக்கு மனிதக்குரல் கலந்த ஒரு சிம்மக் கர்ஜனை கேட்கிறது. கயிறும் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அந்த மிருகத்தைத்தான் பார்க்க முடியவில்லை. உடனே, ஆகாயத்தில் ஒரு அசரீரி குரல்.

“ஏ மூட முனிவனே! இன்னும் நீ, நான் என்ற ஆணவத்தை விடவில்லை. ஆனால், இந்த அப்பாவி வேடனோ, என்னை பிடிப்பதற்காக என்னிடமே ஒன்றி விட்டான். ஆகையால் அவன் அன்புப் பிடிக்குள் அகப்பட்டு விட்டேன். இப்போதுகூட, நீ என் குரலைக் கேட்பது, அவனை நீ பார்த்த புண்ணியத்தால்தான்” என்று ஒலித்துவிட்டு, அந்தக்குரல் முடிகிறது.

வேல்சாமி கூட்டத்தை அங்கம் அங்கமாகவும், ஒட்டு மொத்தமாகவும் பார்க்கிறான். கூட்டமோ மெய் மறந்து அவன் வாயையே பார்க்கிறது. வேல்சாமி தொடர்கிறான்.

“ஆகையால் பெரியோர்களே! இந்த வேடன் கதைதான் என் கதை.”

“ஞானம், மூடனுக்கும் வரும். சில மூடர்களாலும் வரும்.”

– தினமணிக்கதிர் 1990

– ஆகாயமும் பூமியுமாய் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *