கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 7, 2024
பார்வையிட்டோர்: 1,027 
 
 

(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7 

வெண்புரவியின் அருகே ஒரு யுத்த வீரனுக்குரிய ஆடையலங்காரங்களுடன் ஆஜானுபாகுவாகக் காட்சியளித்த அமைச்சரைப் பார்த்த பூங்குழலிக்கு அவர் விசித்திரயூகி என்றே தோன்றவில்லை. அவருடைய எடுப்பான தோற்றமும் அந்த உடையும் அவரை ஓர் அரசகுமாரனைப்போல் தோற்றமளிக்கச் செய்தது. பூங்குழலி கூட அவரை ஒரு தந்தைக்கு ஒப்பாக மதித்தாலும் அவரது வயது கூறமுடியாதபடி அவர் இந்த உடையில் இளமைப் பொலிவுடன் விளங்கினார். 

“என்ன பூங்குழலி! விழி மூடாமல் என்னையே உற் றுப் பார்க்கிறாய. என் மனைவி நீ என்னை இப்படி நோக் குவதைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தால் உன்மேல் கடுங் கோபப்படப்போகிறாள்” என்று அவர் ஹாஸ்யமாகக் கூறப் பூங்குழலி அந்தக் காட்டுவழி முழுதும் அதிரும்படி யாக வாய்விட்டுச் சிரித்தாள். 

“அமைச்சர் கூறுவது பெருந் தவறு. இப்படிக் கூறிய தற்காகச் சிவகாமி அக்காள் உங்கள் மீதுதான் கோபப் படப்போகிறாள். ஏனெனில் யார் என்மீது கோபப்பட்டா லும், சந்தேகப்பட்டாலும் சிவகாமி அக்கா மட்டும் என்னை அப்படியெல்லாம் நினைக்க மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். “ஆமாம்! உங்களை இந்த உடையில் இன்னும் சிவகாமி அக்கா காணவில்லையா? கண்டிருந்தால் நிச்சயமாகத் திருஷ்டி கழித்துத்தான் அனுப்பியிருப்பாள்’ என்று கூறிவிட்டுப் பூங்குழலி சிரித்தாள். 

“உன் அக்காவைப்பற்றி நீ நன்றாகத்தான் அறிந்து வைத்திருக்கிறாய். சிவகாமியிடம் விடைபெற்றுக் கொண்டு தான் இந்தப் பக்கமாக வந்தேன். எங்கு செல்வதானாலும் கூட அவளிடம் விடை பெறாமற் செல்ல முடியுமா? என்னை இந்த உடையிற் பார்த்த அவள் திகைத்தே விட்டாள். எனக்குத் தன் கண்ணே பட்டுவிடப்போகிறது என்று திருஷ் டியும் கழித்துவிட்டாள். என் நெற்றியிலிருக்கும் திலகத்தை நீ பார்க்கவில்லை யா?” என்று சளைக்காமல் அமைச்சர் விசித் திரயூகியாரும் பதிலளித்தார். 

“ஆமாம் நீங்கள் போர்க்கோலம் பூண்டு போவதைப் பார்த்தால், அமைச்சர் விசித்திரயூகிமீது எனக்கு அனுதாபப் படத்தான் தோன்றுகிறது. பாவம் அவர்! அரசி ஆடக சவுந்தரியின் ஆட்சியில் அமைச்சர் விசித்திரயூகி அவர்கள் செலுத்திச் சென்ற படைகள் இதுகாலவரை தோல்வி யடைந்ததாகச் சரித்திரமே இல்லை” என்று பூங்குழலி கூற அமைச்சர் இடைமறித்து. 

“ஆமாம் பூங்குழலி! நீ கூறுவது உண்மைதான். ஆனால் இம்முறை போர் நடந்தால் கூட வெற்றியையிட்டு எனக்கே நம்பிக்கை இல்லை. மன்னன் குளக்கோட்டனை வெல்வதென்பது எமது அரசி நினைப்பதுபோல் அவ்வளவு சுலபமான தல்ல. உம்! விதி என்ன நினைத்திருக்கோ?” என்றார் அமைச்சர். 

அவரது பேச்சு பூங்குழலியைச் சிந்திக்கத் தூண்டியது. ஏன் அப்படிக் கூறுகிறீர்கள் அமைச்சரே? உங்களுக்கு வயதாகிவிட்டதே என்கிற தன்னம்பிக்கைக் குறைவா? அல்லது உண்மையாகவே குளக்கோட்டு மன்னனின் படைகள் அவ்வளவு வலிமை வாய்ந்தனவா?” என்று ‘திடும்’ எனக் கேட்டாள் பூங்குழலி. 

அவளது பேச்சைக் கேட்ட அமைச்சர் சிரித்தார். “இரண்டுமேயில்லை பூங்குழலி! அதுதான் விந்தையாக இருக்கிறது இல்லையா?” 

“அப்போது அமைச்சர் போர் என்றதும் பயப்படுவதற்குக் காரணம் யாதாக இருக்கலாம்?” 

“அதுதான் எனக்கும் புரியவில்லை. உன் தோழியும் அரசியுமான ஆடகசவுந்தரிக்கும் புரிந்திருக்க முடியாது என்று தான் நான் நினைக்கின்றேன்” என்று அவர் கூற பூங்கு ழலி யோசித்தாள். 

அரசியைப்பற்றி எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று அவளே சிந்தித்துக்கொண்டிருந்தபோது, அமைச்சரே அதற்கு வழிதிறந்துவிட்டார். அது அவளுக்கும் சாதகமாய்ப்போய் விட்டது. அதனால் “என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே? தயது செய்து நீங்கள் சொல்வதைச் சற்று விளக்கமாகவும், புரியும்படியும் கூறினால், நலமாயிருக்கும்” என்றாள். 

விசித்திரயூகி சிரித்தார். “உன் அரசியின் போக்கில் ஒரு திடீர் மாறுதல். முதலில் போர் செய்து மன்னனைப் பிடித்துவாருங்கள் என்று அஞ்சாத வீரநெஞ்சத்துடன் கூறிய அரசி சொற்ப நேரத்தில் தன் முடிவையே மாற்றி “மன்ன னைத் திறை செலுத்தும்படி பணியுங்கள். அதற்கு மறுத் தால் மட்டுமே போரைப் பற்றிச் சிந்தியுங்கள்” என்று கூறிவிட்டார் என்றால், அந்த மாபெரும் மன்னன் செய்து கொண்டிருக்கும் கோணநாயகர் ஆலயத் திருப்பணியின் மகிமை அதற்குக் காரணம் என்றுதான் கூறவேண்டும். கோணநாயகர் ஏதோ ஒரு விதத்தில் அரசியின் மனதில் தோன்றி அவரது மனதை மாற்றி விட்டிருக்கவேண்டும். எனக்குக்கூட அவருடன் போர் செய்யக்கூடிய துணிவுமில்லை; வல்லமையுமில்லை. அந்த மன்னனை நேரிற் பார்த்தவர்கள் எவரும் அவருடன் பகைமை பாராட்டமுடியாது. அப்படி யான வசீகர சக்தி வாய்ந்தவர், அந்த மன்னர்” என்றார் அமைச்சர். 

“அது சரி அமைச்சரே! மன்னன் திறை செலுத்த மறுத் தால் போர் தடந்துதானே ஆகவேண்டும்!” 

“ஆம் அதுதான் அரசியின் கட்டளையுங்கூட!” 

‘அரசியாரிடம் பேசி அவரது முடிவை பாற்றிவிட்டால்?” 

“அது முடியாத காரியம் பூங்குழலி” 

“அமைச்சர் அவர்கள் நினைத்தால் முடியாத காரியம் என்று கூட ஒன்று இருக்க முடியுமா? தாங்கள் மட்டும் நினைத்தால் அரசியின் மனதை மட்டுமல்ல முடிவையே மாற்றிவிடலாம்” 

அவளுடைய பேச்சைக்கேட்டு அமைச்சர் சிரித்தார். “அரசியின் அந்தரங்கத் தோழியாகிய உன்னாலேயே அவரது முடிவை மாற்ற முடியாவிட்டால் சாதாரண அமைச்சர் என்கிற பதவியை வகிக்கும் என்னால் எப்படி முடியும்?” என்று பூங்குழலியை மடக்கிவிடும் நோக்கத்துடன் பேசினார் விசித்திரயூகி. 

பூங்குழலி அவரைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்து விட்டு “எங்கள் அரசி இளம்பருவத்தினள். பருவ மங்கை. மன்னர் குளக்கோட்டரும் ஒரு பிரம்மச்சாரியாக இருப்பதால், இருவருக்கும் இடையில் ஒரு நல்லமுடிவை ஏற்படுத்தி, இருவரையும் சம்சார பந்தத்தில் ஆழ்த்திச் சதிபதிகளாக்கிவிட்டால் அவர்களுக்கும் நன்மையாக இருக் கும். நம்நாட்டிற்கும் பெரும் நன்மை ஏற்படும்” என்று தன் மனக் கருத்தை வெளியிட்டாள் பூங்குழலி. 

அவளுடைய முடிவைக்கேட்டு அமைச்சர் பலத்த சத்தமாகச் சிரித்தார். அவருடைய உள்ளத்திலும் அப்படியான ஓர் எண்ணமிருந்தாலும் பூங்குழலி அதைக் கூறியபோது, அவர் சிந்தித்தார். எல்லாம் தட்சிணகைலாய் இறைவனுடைய செயலாகத்தான் இருக்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத் துக் கொண்டு “நீ சொல்வது நல்ல முடிவுதான் பூங்குழலி! ஆனால் பூனைக்கு மணி கட்டியாகவேண்டுமே? அதைச் செய்வது யார்? அரசியின் மனநிலை எப்படியானது என்பதை நீ அறிவாய். அவருக்குத் திருமணத்தைப் பற்றிய கவலையே இல்லை. அதை எடுத்துக்கூறக்கூடிய துணிவு எனக்கில்லை. ஆகவே நீ நினைப்பது நல்லபடியாக நடக்க வேண்டுமானால், உன்னுடைய ஒத்தாசை எனக்கு நிறைய வேண்டும்.” என்று அமைச்சர் கூற, அந்த நல்ல முடிவை நிறைவேற்ற என் உயிரை வேண்டுமானாலும் உவந்தளிக்கச் சித்தமாயிருக்கிறேன். இப்போது உங்கள் மனக்கருத்தை ஓரளவுக்குப் புரிந்து கொண்டுவிட்டேன். நீங்கள் சென்றுவரும் பெறுபேற்றிற்றான் என் வெற்றியுந் தோல்வியும் தங்கியுள்ளன. நீங்கள் வெற்றியுடன் திரும்பி வாருங்கள். மிகுதியை நான் கவ னித்துக் கொள்கிறேன்,” என்று கூறிவிட்டுப் பூங்குழலி அமைச்சரிடம் விடைபெற்று நகர்ந்தாள். 

அவள் மிகவும் வேகமாக நடந்து அரண்மனையை அடைந்தாள். அப்போது அமைச்சரின் குதிரை வெளியே அவருக்காகக் காத்திருந்தது. அதனால் அமைச்சர் உள்ளே இருக்கிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. அவள் உள்ளே செல்லாமல் வெளியே காத்திருந்தாள். 

அரைமணி நேரத்தின் பின் அமைச்சர் வெளியே வந்து கொண்டிருந்தார். பூங்குழலி வெளியே நிற்பதைக் கண்ட தும் அவர் சிறிது நேரம் தாமதித்தார். “என்ன செய்தி?’ என்று கேட்பதுபோற் பூங்குழலி அவரைப் பார்த்தாள். முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆயினும் என்னால் இயன்றவரை ஓர் அவசரமுடிவை ஏற்படுத்த முயல்கிறேன்” எனக் கூறிவிட்டு அவர் கடிவாளத்தைப் பிடித்தபோது, குதிரை புழுதியைக் கிழித்துக் கொண்டு விரைவாக ஓடத் தொடங்கியது. 

குதிரை மறையும் வரை அதையே பார்த்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த பூங்குழலி அரண்மனைக்குச் சென்றாள். அங்கே அரசியைக் காணாதுபோகவே அவள் அந் தப்புரத்திற்கு விரைந்தாள். அரசி பஞ்சணை மெத்தையில் சாய்ந்த வண்ணம் கண்மூடித் துயிலில் ஆழ்ந்திருப்பதுபோற் சயனித்திருக்க. பணிப்பெண்கள் இருவர் அவளுக்கு விசிறிக் கொண்டிருந்தனர். அவர்களை அவ்விடத்தை விட்டு அகலும் படி பூங்குழலி சைகை காட்ட அவர்கள் விசிறியை மெது வாகப் பக்கத்தில் வைத்துவிட்டு அகன்றனர். அவர்கள் சென் றதும் பூங்குழலி காலடியோசை கேட்காமல் அன்னம்போல் நடந்து சென்று விசிறியைக் கையில் எடுத்து விசிறத்தொடங்கியபோது, அரசி மெதுவாகக் கண்திறந்தாள். ‘அங்கே பூங்குழலி நிற்பதைக் கண்டதும் அவளுக்கு வியப்பாக இருந்தது. அவள் சயனத்தைவிட்டு எழுந்து அமர்ந்து “நீ எப் போதடி வந்தாய்?” என்று வினவ “நான் இப்போதுதான் வந்தேன். அதற்குள் தாங்கள் கண்விழித்து விட்டீர்கள். தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட மோன நிலையை நான் கலைத்துவிட்டேன். மனதில் என்னென்ன கற்பனைக் கோட்டைகள் எழுப்பிக் கொண்டிருந்தீர்களோ? மன்னர் உங் கள் மனக்கோட்டையை ஆக்கிரமித்து விட்டார்” என்று கூறிவிட்டுச் சிரித்தாள். ஆனால் அரசி அவளுடைய பேச்சைக் கவனியாதவள் போல் அந்த நான்கு சுவர்களிலும் தன் விழி களைச் சுழல விட்டாள். 

அத்தியாயம்-8 

அரசி அந்த அறையைச் சுற்றித் தன் பார்வையைச் செலுத்தியதைக் கண்ணுற்ற பூங்குழலி என்ன தேவி அப்படிப் பார்க்கிறீர்கள்? அரசர் அறைக்கு வந்து விட்டதுபோற் கனவு கண்டீர்களோ?” என்று குறும்பு செய்ய, “போடி உனக்கு ஒரே கேலிதான்! நான் பணிப்பெண்கள் எங்கே யென்றுதான் பார்த்தேன்,” என்று பதிலளித்தாள் அரசி. “ஓ நான் நீங்கள் பார்த்தவிதத்தைப் பார்த்துப் பயந்தே விட்டேன். பணிப்பெண்கள் சென்று வெகுநேரமாய்விட் டது. அவர்களை வைத்துக்கொண்டே தங்களைக் குறும்பு செய் கிறேன் என்று பயந்துவிட்டீர்களாக்கும்,” என்றாள் பூங்குழலி. 

“நீ சற்று நேரத்துக்கு முன் கூறினாயே, விழிப்புக்கும் தூக்கத்துக்கும் இடைப்பட்ட நிலை என்று. அது முற்றிலும் உண்மையான கூற்று. அமைச்சரை அனுப்பிவிட்டு நான் இங்கே தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறேனடி. அரசர் கூறப்போகும் பதிலில்தான் என் வாழ்க்கையே தங்கியிருககிறது!” 

“ஏன் அப்படி நினைக்கிறீர்கள் தேவி” என்று இடை மறித்தாள் பூங்குழலி. 

“அரசர் என் வேண்டுகோளுக்குச் செவிசாயக்காதுவிட்டால் போருக்குச் செல்வதைவிட வேறு வழியே எனக்குப் புலப்படவில்லையடி. இதனால் என் மனமே குழம்பிப் போயக் கிடக்கிறன்து.” 

“அரசியார் உத்தரவளித்தால் இந்த ஏழை தங்களுக்கு ஒரு யோசனை கூறலாம் என நினைக்கிறேன்,” என்று பூங்குழலி இழுத்தாள். 

“என்னடி பீடிகை மிகவும் பெரிதாக இருக்கிறது. சரி உன் யோசனையைக் கூறு. சரிப்பட்டு வருமா என்று பார்க்கிறேன்” என்றாள் அரசி. 

“அரசருடன் போர் செய்யாமல் தாங்கள் ஒரு சமா தான உடன்படிக்கைக்கு வந்து அவரைத் திருமணம் செயது கொண்டால்….” அவள் முடிக்கவில்லை. 

“அது நடக்காது பூங்குழலி என் வீரப் பரம்பரைக்கே அது ஒரு களங்கமாக அமைந்து விடும். எனது பரம்பரை யின் கெளரவத்தையும் வீரத்தையும் பெருமையையும் கட்டிக்காக்கவேண்டிய மகத்தான பொறுப்பை என் தந்தை என்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கிறார். என் சுயநலத்தின் பொருட்டு ஒரு திருமணத்திற்காக, என் பரம்பரையின் பெருமையை விட்டுக்கொடுக்க நான் ஒருபோதும் துணியமாட்டேன்” என்று கூறிவிட்டு அரசி நெடுமூச்செறிந்தபோது பூங்குழலியின் இதயம் அரசிக்காக விம்மியது. “அரசியார் நினைக்கும் அளவுக்கு இது அவ்வளவு பாரதூரமாகப்போகும் என நான் நினைக்கவில்லை. அமைச்சர் விசித் திரயூகியார் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவர். அதனால் அவர் நிச்சயமாக ஒரு சுமுகமான முடிவுடன்தான் வருவார்” என்றாள் பூங்குழலி. 

இவர்கள் இங்கே இப்படியாக உரையாற்றிக் கொண்டி ருக்கும் அதேவேளையில் அமைச்சர் விசித்திரயூகியார் பரி வாரங்கள் புடைசூழக் காடும் மலையும் வெளியும் கடந்து தட்சிண கையாலயத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தார். ஈழவளநாட்டின் மத்திய பகுதியிலிருந்து கீழ்த்திசை நோக் கிச் செல்வது அந்நாட்களில் எளிதான ஒன்றாக அமைந்தி ருக்கவில்லை. உயிரைப் பணயம் வைத்துச் செல்லவேண்டியி ருந்தது. பாதைகள் இருக்கவில்லை. திசை கண்டு பிடிப்பது பெருங் கஷ்டமாக இருந்தது. 

தொடர்ந்து இரண்டு நாட் பயணத்தின் பின் ஏதாவது வாடி அமைத்து ஆறிப்போக வேண்டியும் ஏற்பட்டது. இவற் றினால் அமைச்சர் விசித்திரயூகியார் மிகவும் களைத்துவிட் டார். ஆயினும் அரசி ஆடகசவுந்தரியின் மீது அவர் கொண்டிருந்த தூய்மையான அன்பும் அபிமானமும் அவரை அந்தக் கஷ்டங்களையும் இன்னல்களையும் துச்சமாக மதித்துப் பயணத்தைத் தொடரும்படி செய்தது அவர். தமக்கு ஏற் பட்ட களைப்பையும் கஷ்டத்தையும் வெளிக்காட்டாமல் தம் முடன் வந்த படைகளுக்கு உற்சாகமளித்துக் கொண்டிருந்தார். 

மூன்று வாரங்கள் இடைவிடாது பயணஞ்செய்ததால் ஒருபடியாகத் தட்சிணகைலாயத்தின் மேற்குப்பகுதியை அடைந்தனர். அங்கே நின்று பார்த்தபோது கோணேசர் ஆலயத்தின் உயர்ந்த கோபுரம் கண்ணுக்குப் புலப்படக் கூடியதாக இருந்தது. அமைச்சர் அந்தக் கோபுரத்தின் அழ கையும் நாட்டின் சிறப்பையும் கண்டு மகிழ்ந்தார். தம்மை மறந்த நிலையில் தம் இருகரம் கூப்பிக் கோணேசப் பெருமானை மனதார வணங்கினார். ‘இறைவா! இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்துவிட்டேன். முதலில் என் கண்ணுக்குத் தோற்றமளித்தவன் நீதான். நான் வந்த காரியம் எல்லாம் செவ்வனே நல்லபடியாக நிறைவேற நீதான் எனக்கருள் புரிய வேண்டும்” என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டார். 

அங்கேயிருந்த அடர்ந்த சோலையின் மத்தியில் வாடிய மைத்துத் தம் பரிவாரங்களுடன் தங்கிக்கொண்ட அமைச்சர் தம் பரிவாரங்களை அங்கேயே தங்கியிருக்கும்படி கூறி லிட்டுத் தாம் மட்டும் குதிரையில் ஏறித் தமனிய மண்டப வாயிலிற் சென்று யாருடையவோ வரவைக் காத்து நிற்ப வர் போல் நின்றார். அமைச்சரின் வருகை மன்னனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னன் அமைச்சரை ஒரு நண்பருக்குரிய முறையிற் கோலாகலமாக வரவேற்று உபசரித்தார். மன்னனின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல் அவருடைய விருந்தினரானார். தட்சிணகைலாயத்தின் சிறப்பையும் மன் னன் குளக்கோட்டனது அன்பு முகத்தையும் பார்த்த மாத் திரத்தே அமைச்சருக்குத் தாம் நினைத்து வந்த காரியமே மறந்துவிட்டது. அமைச்சர் மன்னனின் அழகான தோற்றத் தில் தம்மை மறந்து இலயித்திருந்தபோது “அமைச்சர் அவர்கள் காடும் மேடும் கடந்து இவ்வளவு தூரம் என்னைக் காணவேண்டிவந்த நோக்கத்தை யான் அறியலாமா?” என்று அரசன் வினவியபோதுதான் அமைச்சர் தம் நிலையை உணர்ந்தார். அதற்கிடையில் அரசன் அமைச்சரை அழைத்துக் கொண்டு சபா மண்டபத்திற்குச் சென்று, அவரை ஒரு பொற்பீடத்தில் அமரச் செய்து சந்தன தாம்பூலம் அளித் தான். அத்துடன் அமைச்சருடன் வந்திருந்த பரிவாரங்களை யும் அழைப்பித்து அவர்களுக்கு வயிறார உண்ண உணவும் தங்க உறையுளும் அளித்தான். 

அரசனின் வினா அமைச்சரைக் குழப்பியது. அவருடைய கண்முன்னே பூங்குழலி தோன்றினாள். “அமைச்சரே! நான் கூறியதை மறந்துவிடாதீர்கள் எப்படியாவது சென்ற காரியத்தைவெற்றிகரமாக முடித்து விடுங்கள்,” என்று அவள் கூறுவதுபோன்ற பிரமை உண்டாயகிது. அதனால் அரசி ஆடக சவுந்தரி தம்மை எதற்காக மன்னனிடந் தூது அனுப்பினாள் என்பதை மறந்து தாங்கள் சிறந்த சிவாலயம் ஒன்று ஸ்தா பிப்பதாக உன்னாச்சிகிரி அரசி ஆடகசவுந்தரிக்குச் செய்தி எட்டியது. அதனால் இப்படியான ஒரு சிறந்த திருப்பணியில் அரசியார் தங்களுக்குத் தேவைப்படும் எந்த உதவியையும் செய்து கொடுக்கும்படி என்னை இங்கு அனுப்பிவைத்தார்கள். அரசியின் கட்டளையை நிறைவேற்ற இதோ யான் உங்கள் முன்னிலையில் நிற்கிறேன். மன்னர் கட்டளையிடுங் கள்’ என்று விசித்திரயூகியார் கூற, மன்னன் வாய்விட்டு அந்த மண்டபமே அதிரும்படியாக சிரித்தான். 

மன்னனின் அந்தச் சிரிப்பு அதிர்ச்சியைக் கொடுக்கவே, அவர் ஆச்சரியத்தோடு அரசனைப் பார்த்தார். 

“பெயருக்கேற்றபடி அமைச்சர் மதிநுட்பம் வாய்ந்தவர். விசித்திரமானவரும் கூட! அல்லது இவ்வளவு அழகாகவும் சாதுரியமாகவும் ஒரு பெரிய உண்மையே மறைத்துப் பேசி சியிருக்க முடியுமா?” என்று மன்னன் தொடர்ந்து கூறியபோது அமைச்சருக்குத் தம்முன் இருப்பது ஓர் அரசனா அல்லது தெய்வப்பிறவியா என்கிற சந்தேகம் எழுந்திருக்கவேண்டும். அவர் எதுவும்கூறத் திராணியற்றுப் பதற் றத்துடன் “மன்னர் கூறுவது எனக்குப் புரியவில்லை” என்று தட்டுத் தடுமாறிக் கூறினார். 

“அதாவது அமைச்சர் தாம் வந்தது பற்றிக கூறிய செய்தி மிகவும் பொருத்தமற்றது என்றுதான் கூறவந்தேன். இன்னும் விளங்கக் கூறவேண்டுமானால் அது முழுப் பொய்! உன்னாச்சிகிரி அரசி ஆடகசவுந்தரி தங்களை இங்கு அனுப்பி யது எனக்குதவிசெயவல்ல அமைச்சரே. நான் திறைசெலுத்த வேண்டும். தவறினால் இங்கு எழுப்பப்படும் ஆலயத்தைத் தரைமட்டமாக்கி என்னையும் கைதியாகப் பிடித்துவரும்படி தான் அரசியார் தங்களை அனுப்பி வைத்தார்கள்” என்று சொல்ல அமைச்சர் பயந்து மன்னனை வணங்கி, *உண்மை தான் மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்” என்றார். 

அரசர் புன்னகைத்து, “அமைச்சரே!” என அழைத்துக் கூறத்தொடங்கினார். 

“தங்களுக்கு நான் கூறியது விந்தையாக இருக்கும். இல்லையா..? தங்கள் நாட்டு அரசி ஆடகசவுந்தரி எங்கள் சோழ வளநாட்டைச் சேர்ந்தவள் என்பதும் என்வம்சத்தைச் சேர்ந் தவள் என்பதும் தங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைத் தான். கலிங்கதேசத்திலுள்ள அசோக மாநகரத்தை ஆண்ட அசோக சுந்தரன் என்னும் மன்னனுக்கும் அவன் மனைவி மனோன்மணி சுந்தரிக்கும் மகளாகப் பிறந்தவள் தான் அரசி ஆடகசவுந்தரி. ஆனால் துரதிர்ஷ்ட வசத்தால் இவள் பிறக் கும்போதே வாரிமுடிந்த கூந்தலுடனும் வாய்நிறைந்த பற்க ளுடனும் பிறந்ததால் ஜோதிடர்கள் இவள் பிறதேசத்தை ஆளப்பிறந்தவள் என்றும் அரசனது மாளிகையில் அந்தக் குழந்தை வளர்ந்தால் அசோக சுந்தரனது பரம்பரையே அழிந்துவிடும் என்றும் கூறிப்போந்தனர். இதனாற் கவலை யும் பீதியுமடைந்த அசோக சுந்தரன் பொன்னால் ஒரு பேழை செய்து அதற்குள் இக்குழந்தையை வைத்துக் கடலில் விட் டான். அது ஈழ நாட்டின் சமுத்திரக் கரையொன்றில் வந்து சேர்ந்தது. 

“அதைக் கண்டவர்கள் அப்போது உன்னாச்சிகிரி என்ற மலைநாட்டை ஆண்ட அரசனாகிய மனுநேய கயவாகுவிடம் சென்று கூற, அரசன் வந்து அப்பெட்டியைத் திறந்தான். அதற்குள் அழகிய பெண் குழந்தையொன்று இருக்கக்கண்ட அரசன் அதை எடுத்து தன் மார்புடன் அணைத்துக்கொண்டான். பிள்ளையில்லாதிருந்த அவனுக்கு அந்தக் குழந்தை அக் குறையைத் தீர்த்துவைத்தது. உடனே அவன் அந்தக் குழந்தையைச் சிவிகையில் ஏற்றிச்சென்று தன் மனைவியிடம் கொடுத்தான். அவள் மனம் நிறைந்த மகிழ்வுடன் அதை எடுத்து தன் குழந்தைபோல் வளர்த்து வந்தாள். மன்னனுக்குப் பின் ஆடகசவுந்தரி தற்போது பட்டத்துக்கு வந்துள்ளார்” என்று கூற அமைச்சர் ஆச்சரியமும் வியப்புமடைந்தார். 

“அமைச்சர் அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். போகட்டும்! தங்கள் நல்ல உள்ளங் கண்டு தங்களிடம் உண் மயாகவே ஓர் உதவி கேட்கலாம் என நினைத்தேன். கோணேசர் ஆலயத் திருப்பணி ஒருபடியாக முடிவுற்றுக் கொண்டிருக்கிறது. ஆயினும் என் மனதில் நிம்மதியில்லை. ஓர் ஆழ்ந்த கவலை என் உள்ளத்தை வாட்டிக்கொண்டே யிருக்கிறது. கோணநாயகருக்கு உலகுள்ளளவும் நித்திய நைமித்தியங்களுக்குக் குறைவுவராமல் இருக்கும் பொருட் டுப் பல குளங்களை அமைத்து வயல்வெளிகளையும் திருத்தி னேன். ஆனால் நான் நினைத்த அளவுக்குத் தண்ணீர் வரக் கூடியதாக அவை அமையவில்லை. எப்போதும் மாறாமடை பாயக்கூடிய ஒரு குளம் கட்டுவதற்கு தகுந்த இடம் எவ்வி டத்து உண்டென்பதை எனக்குத் தெரியச் சொல்லவேண்டும்” என்று கேட்டார் மன்னர். 

அதற்கு அமைச்சர் விசித்திரயூகி சிறிதுநேரம் சிந்தித்து விட்டுத் “தட்சிணகைலைக்குத் தெற்குப்பக்கமாக நீங்கள் கேட்டபடி ஒரு நல்ல இடம் உண்டு. நான் சொன்ன இடத் தில் இரண்டு மலைகள் இருக்கின்றன. அவ்விரு மலைகளையும் ஒன்றாகப் பொருத்தும்படி இடையிலோர் கட்டுக் கட்டவேண் டும். அப்படிக் கட்டி முடித்தால் அதுவே ஒரு பெரிய குள மாகும்” என்று கூறினார். 

“அதைப்பற்றி நானும் சிந்தித்ததுண்டு; ஆனால் அந்தப் பெரிய கட்டுக் கட்டுவதற்குச் சமானிய தொழிலாளரால் எப்படி முடியப் போகிறது என்றுதான் அந்த யோசனை யைக் கைவிட்டேன். அது மனிதனால் ஆகக்கூடிய கருமமா என்று சிரிப்புடன் கூறினார் மன்னன். 

அப்போது மந்திரி தான் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் வந்துவிட்டதாக நினைத்து “அரசர் நினைக்கிறபடி அது ஒன் றும் அவ்வளவு பிரமாதமில்லை. கற்பரசியாகிய எமது அர சியை மன்னர் திருமணஞ் செய்து கொள்ளச் சம்மதித்தால் ஒன்பது நாட்களுக்குள் அக்குளத்தைக் கட்டி வயல் வெளி களையும் திருத்தித் தங்களிடம் ஒப்புவிப்பேன்” என்று வாக்களித்தார். 

அமைச்சரின் பேச்சு அரசருக்கு வியப்பாக இருந்தது அரசியை மணமுடிப்பதாக இருந்தால் ஒன்பது நாட்களுக்குள் இந்தப் பெரிய கைங்கரியத்தைச் செய்து முடிக்கமுடியுமென்கிறார். அப்படியானால் இவர்களது அரசி ஒரு மந்திரவாதியாக இருக்கலாமா என்று நினைத்து “அது எப்படி முடியும் அமைச்சரே! உங்கள் அரசி ஏதாவது மந்திர தந்திரங் கற்றவரா?” என்று கேட்டுச் சிரிக்க அமைச்சர் பதில்கூறத் தொடங்கினார். 

“அரசே! நான் கூறப்போவது தங்களுக்குக் கட்டுக்கதை போலிருக்கலாம். ஆயினும் இது உண்மை நிகழ்ச்சி. ஆம் அரசே மனுநேயகயவாகு மன்னன் தான் இறக்கமுன் தனது மகளும் தற்போதைய அரசியுமாகிய ஆடகசவுந்தரியையும் என்னையும் அழைத்து ஓர் இரகசியத்தைக் கூறிவைத்தார். அதாவது “உங்கள் இராட்சியத்தின்கீழ் எவ்வித பாரித்த வேலைகளாயினும் நீங்கள் செய்யத் தொடங்கு முன், பூதங்களை அழைத்துச் செய்விக்கலாம்” என்று கூறியதோடு அப் பூதங்களின் பெயர்களையும் அவற்றை அழைக்கும் மந்திரங் களையும் எமக்குச் சொல்லித் தந்தார்” என்று அமைச்சர் சொல்ல மன்னன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். 

அடுத்த பேச்சிற்கு இடமின்றி மன்னன் தன் கைவிரலில் இருந்த கணையாழியையும் கொடுத்து, தான் அரசி ஆடக சவுந்தரியை மணந்து கொள்வதாகவும் வாக்குக் கொடுத் தான். அந்தக் கணையாழியைக் கொடுத்தபோது அவன் உள் ளத்தில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி தாண்டவமாடியது. 

அத்தியாயம்-9 

அமைச்சர் விசித்திரயூகியார் மன்னனிடம் விடைபெற் றுச் சென்றதும், தன்னை மறந்த ஒரு நிலையில் அமர்ந்திருந் தான். அப்போதுதான் கோணேசர் ஆலயத் திருப்பணியை மேற்பார்வையிடச் சென்றிருந்த அமைச்சர் கலிங்கராயர் திரும்பிக் கொண்டிருந்தார். அன்று காலையில் அமைச்சர் விதித்திரயூகியாருடன் கலிங்கராயரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிற்பாடுதான் அவர் மன்னனால் கோவில் திருப்பணி வேலையைக் கவனிக்க அனுப்பப்பட்டிருந்தார். அதனால் அரசருக்கும் விசித்திரயூகியாருக்கும் நடைபெற்ற முக்கியமான பேச்சு வார்த்தைகளில் அவராற் கலந்து கொள்ள முடியாமற் போய்விட்டது 

மன்னன் ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதை அவதா னித்த கலிங்கராயர் அவரைக் குழப்ப விரும்பாமல் மௌன மாக ஒரு பக்கத்திற் சென்று நின்றார். மன்னனுக்கும் உன் னாச்சிகிரி அமைச்சர் விசித்திரயூகிக்கிகும் இடையில் என்ன பேச்சுவார்த்தை நடந்திருக்கும் என்பதை அறிந்துகொள்ள அவர் உள்ளம் துடித்த போதும் அதைத்தானாகக் கேட்பது அழகல்ல என்று மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அரசர் எதையும் தனக்கு ஒளிக்கமாட்டார் என்கிற உண்மை புலப்பட்ட போதும் உடனடியாக அதைத் தெரிந்துகொள்ள அவர் உள்ளம் துடித்தது. 

அப்போது ‘கோயில் திருப்பணி வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதா? எப்போது கும்பாபிஷேகம் நடாத்தலாம்?’ என அரசரே அவரிடம் முதலிற் பேசினார். 

அரசன் தன் வசம் இழந்த போதும் தன்னிலை இழக்க வில்லை என்று ஆறுதல் பெற்றவராய், “அநேகமாக எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. இன்னும் இரண்டு நாட்களில் கோணநாயகருக்குக் கும்பாபிஷேகம் நடத்தலாம். இன்று வெருகலம்பதியில் இருந்து கோணநாயகருக்கு ஆயிரம் வெள்ளைத்தாமரை மலர்கள் வந்திருந்தன. அவற்றை இறை வனின் பாதங்களில் அர்ப்பணித்திருந்தார்கள். அவற்றிற் சிலவற்றைப் பாசுபதர் தங்களுக்குக் கொடுக்கும்படி தந்தார் அவற்றை இதோ கொண்டுவந்துள்ளேன். கும்பாபிஷேகத் துக்கு முன்னரே இப்படியென்றால்… அதன் பின் பூசைகள் எல்லாம் முறையாக ஆரம்பித்த தும் மலர்கள் கோயில நிறைத்துவிடும். ஆமாம்! அரசர் ஏதோ ஆழ்ந்த சிந்தனை யில் இருந்ததால் மலர்களைக் கூடையுடன் ஓரமாக வைத் திருந்தேன்” எனக் கூறிக் கூடை நிறைந்த மலர்களை அரசனி டம் நீட்ட, அரசன் அதை அப்படியே வாங்கித் தன் கண் களில் ஒற்றிக் கொண்டான். அவனது முகத்தில் ஒரு பிர காசமும் மகிழ்ச்சியும் தோன்றின. 

அமைச்சரே கோணநாயகர் உண்மையில் ஓர் அற்புத மான தெய்வந்தான். இன்று காலையில் சில வெள்ளைத் தாமரை மலர்களை இறைவன் பாதங்களுக்கு அர்பணிக்க வேண்டும் என்கிற ஓர் அபூர்வ ஆசை என் மனதில் தோன்றியது. அதற்கான மலர்களைத் தன்பலவெளியில் (தம்பல காமம்) இருந்து வரவழைக்கும்படி தங்களிடம் கூறுவதற் காகத்தான் தங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் நான் நினைத்தபடியே எல்லாம் நடந்துவிட்டன. எவ்வளவு அற்புதமான செயல் பார்த்தீர்களா?” என்று வியந்தான் மன்னன். 

“உலகில் எவரும் செய்ய நினைக்கமுடியாத ஒன்றைத் தாங்கள் கோண நாயகருக்குச் செய்து பேரும் புகழும் எய்தி விட்டீர்களே! தாங்கள் செய்து முடித்திருக்கும் இந்தத் திருப்பணியைக் கோண நாயகர் மனதாக உவந்து ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதற்கு வேறு என்ன சான்று தேவை? இனித் தங்கள் திருமண விடயத்தையும் கோணநாயகரே பார்த்து முடித்து வைக்க வேண்டும்.” என்று அமைச்சர் முடிப்பதற்குள். 

“ஆ! நிச்சயம் நடக்கத்தான் போகிறது அதைக் கூறத்தான் நான் இப்போது வந்தேன். அதற்குள் அமைச்சர் முந்தி விட்டார்.” என்று சொல்லிக்கொண்டே அங்கு முகி லன் வர, அரசரும் அமைச்சரும் ஆச்சரியத்துடன் ஒரு வரையொருவர் மாறிமாறிப் பார்த்தனர். 

அரசர் அமைச்சரையும் முகிலனையும் ஒருமுறை பார்த்து விட்டுச் சிரித்தார். ‘என்ன அமைச்சரே! நான் மெதுவா கப் பேச்சை ஆரம்பித்து வைக்கிறேன்- அதைத் தொடர்ந்து பேச நீ என் பின்னாலேயே வந்துகொண்டிரு” என்று தாங் கள் இங்குவரும்போது முகிலனிடம் கூறிவிட்டு வந்தீர்களாக் கும்” என்று குத்தலாகக் கேட்டார். 

அவருடைய பேச்சு அமைச்சருக்குப் புதிராக இருந்தது. அவர் கோயிலுக்குப் போய்த் திரும்பும்வரை முகிலனை அவர் காணவேயில்லை. அதனால் மன்னிக்க வேண்டும் அரசே! தங்கள் யூகம் பிழைத்துவிட்டது. அரண்மனையில் இருந்து தங்கள் கட்டளையின் பேரில் புறப்பட்ட நான் இப்போது திரும்பவும் தங்கள் முன்னிலையில் தான் முகிலனைச் சந்திக்கிறேன். அதுவும் எதிர்பாராதவிதத்தில் அதனால் அவனும் நானும் பேசக்கூடிய வாய்ப்பு ஏற்படவேயில்லை” என்று கூற, அரசன் முகிலனைப் பார்த்து “என்ன முகிலா! அமைச்சர் கூறுவது உண்மைதானே” என்றார் குறும்பாகச் சிரித்துக்கொண்டு. 

“சத்தியமாக உண்மைதான் அரசே. நானும் முல்லையும் இன்று விடிந்ததின்பின் அமைச்சரைக் காணவில்லை, முல்லையும் நானுந்தான் ஒன்றாக வந்தோம். முல்லை தங்களுடன் ஏதோ பேசவேண்டும் என்று கூறிற்று. அதனால் அரசர் தனியாக இருக்கிறாரா என்று பார்க்கத்தான் நான் வந்தேன். நான் சொல்லவந்த செய்தியை அமைச்சரே கூறியதால் அது நடக்கத்தான் போகிறது என்றேன்” என்றான் முகிலன். 

அரசருக்கு எல்லாமே குழப்பமாக இருந்தன. அதனால் ‘சரி சரி! இருவருக்கும் ஒரே வேளையில் இந்த எண்ணம் உதித்துவிட்டதாக்கும் ஆமாம். இப்போது முல்லை எங்கே? இங்கு இப்போது அமைச்சரைத் தவிர வேறு யாருமேயில்லை. அவளை அழைத்துவா!” என்று முகிலனுக்குக் கட்டளையிட, அவன் வெளியே சென்றான். 

முல்லைக்கு அரசனை நன்கு தெரிந்திருந்தாலும் அவள் அரசர் முன் போகும்போது கூனிக்குறுகிக் கொண்டுதான் போவாள். அது பயத்தினால் ஏற்பட்டதா அல்லது பக்தியி னால் ஏற்பட்டதா என்று அவளுக்கே புரிவதில்லை. அன்றும் அப்படித்தான். முகிலன் சென்று அவளை அழைக்க, அவள் பயந்து நடுநடுங்கியபடி அரசமண்டபத்தையடைந்து மன்ன னின் பாதங்களில் மிகவும் பணிவாக வணக்கஞ் செலுத்தி னாள். 

அவளை உச்சிமுதல் உள்ளங்கால்வரை பார்த்த மன்னன் “என்னிடம் ஏதோ பேசவேண்டுமென்று கூறினாயாம்
என்ன விஷயம்? எப்போதும் நீதான் என்னுடன் பேச விரும்புகிறாய்!” என்று கூறி அரசர் சிரித்தார். 

அரசர் முன் கைகட்டி வாய் புதைத்து நின்ற முல்லை “ஆம் அரசே! ஆண்டவன் புண்ணியமாய் ஆலயத்திருப்பணி எல்லாம் முடிவுற்று விட்டன. இனி அரசரின் திருமணத் திற்குத் தடையேதும் இருக்காது என்பது எங்கள் நம்பிக்கை. அரசருக்கும் தாய்தந்தை என்றிருந்திருந்தால் இவற்றை நேரத்துடன் செய்து வைத்திருப்பார்கள். இப்போது தங்களிடம் துணிந்து இதுபற்றிப்பேச யாருமில்லை. இந்த நிலையில் அரசரிடம் இது விடயமாக ஒரு முடிவு எடுக்க வந்தேன்” என்று கூறி முடித்தாள். 

முகிலனும் முல்லையும் தன்மீது காட்டிய பெருங் கருணை யும் அக்கறையும் மன்னரைப் பரவசப்படுத்தின. அவர் முல் லையை நன்றிப் பெருக்குடன் பார்த்துவிட்டு ஆசை உன் கூடிய விரைவில் நிறைவேறப்போகிறது முல்லை. அதற்கு முன் திருக்குளத் திருப்பணி முடியவேண்டும். அதுபற்றி இன்னும் இரண்டு தினங்களில்
முடிவு வந்துவிடும். அதுவரை பொறுத்திருங்கள்” என்று அரசர் கூற முகிலனும் முல்லையும் வேறு வழியின்றி அவ்விடத்தை விட்டகன்றனர். 

முல்லை சென்றதும் “பார்த்தீர்களா அமைச்சரே! என் னைப் பற்றிக் கவலைப்படத்தான் எத்தனை உயிர்கள் உள்ளன?” என்று மன்னர் கூறிவிட்டுச் சிரித்தார். 

“முல்லை பாவம்! அவளுடைய ஆசையைப் பூர்த்தி செய்யவாவது நான் கண்டிப்பாக ஒரு திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும்” என்ற மன்னர் அமைச்சரைப் பார்த்து “ஆலயத்திருப்பணி முடிவுற்று விட்டது. ஆயினும் இன்னும் ஒரு சில வேலைகள் பாக்கியுள்ளன. முக்கோண சபையின் ஒரு சிங்காசனமுமியற்றி அதன் நடுவிலும் பூகம் பழ மளவொரு துவாரம் விட்டு, சிங்காசனத்துக்கு இரு பக் கத்திலும் இரண்டு தூண்டாமணி விளக்கு விதிப்படி செய் வித்துத் தூக்கி, பின்பு அர்த்தமண்டபம், மகாமண்டபம் முதலிய மண்டபங்களையும் விநாயகர் சுப்பிரமணியர் முதலிய தேவர்களுக்கு ஆலயங்களையும், திருமஞ்சனசாலை நடுவ ணாக இரத்தினங்களினால் யாகசாலை, பாகசாலை, புட்பசாலை. வாகனசாலை விழாமண்டபம் முதலியவற்றையும் இரத்தினப் பிரகாசமாக விதிப்படி கட்டி முடிக்கவேண்டும். அதன்பின் ஐந்து வீதியும் திருத்தி, பாவநாச சுனையையும் வெட்டிப் படித்துறைகளையும் கட்டித் தாமரைத் தடாகங்கள் கூவலக பிரமாலயங்கள், மடங்கள், அன்ன சத்திரங்கள், நாற்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் முதலியன அமைக்கப் படவேண்டும். ஒவ்வொரு வாயிலிலும் ஆகாயத்தை அளாவும் வகையில் நாலு கோபுரங்கட்டிச் சிகரங்களும் அமைத்து மதிலுக்குப் பிற்பக்கத்தில் தெப்பக் குளமும் வெட்டி அக் குளத்திற்கு மேற்குத் திக்கில் நிற்கும் வெள்ளை வில்வருட் சத்தடியில் செப்பத் திருநாளுக்குக் கோணநாயகர் வந்து வீற்றிருப்பதற்கு அலங்காரமான ஒரு மண்டபமும் கட்டி முடிக்கவேண்டும். 

இவையாவும் இன்னும் ஒரு வாரத்தில் முடிந்துவிட லாம். அதன்பின் வசிஷ்டரை இங்கே யழைத்துவந்து அவரைக் கொண்டே கும்பாபிஷேகத்தைச் செய்விக்கவேண்டும். இங்கே பூசை செய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் பாசு பதர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டவண அரிசியும் மற்றும் பொருட்களும் குறைவறக் கொடுத்து ஆறுகாலப் பூசை யும் குறைவற நடக்க வழி செய்யவும் வேண்டும். 

திருவிழாக்காலங்களில் உபயோகிப்பதற்கு நவரத்தினங்க ளால் இழைக்கப்பட்ட திருவாபரணங்கள், சுடர்த் திரு வாசிகள், கணக்கில்லாத சந்திர சமாசாரங்கள், அழகு பொருந்திய ஐந்து தேர், பொற்கேடங்கள் முதலியனவும் செய்யப்படவேண்டும். பங்குனி உத்தரத்தில் இரத்தோற்சவ மும் தீர்த்தோற்சவமும் நடை பெறவேண்டும் இவையெல் லாம் கூடிய விரைவில் முடியவேண்டும். இவற்றைக் கவனிப் பது இனித் தங்கள் பொறுப்பு” என்று பணித்தார். 

அதுவரை அரசர் கூறுவதையெல்லாம் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்த அமைச்சர் *அரசே! தங்கள் ஆணைப் படி கோணநாயகருக்கு நித்திய நைமித்தியங்கள் குறைவற நடப்பதற்காக மகாவலிகங்கைக்குச் சமீபமாயுள்ள அல்லைக் குளத்தைக் கட்டி முடித்துவிட்டேன். அத்துடன் வெண்டரசன் குளமும் முடியுந்தறுவாயில் உள்ளது. இனியாவது வயல் வெளிகளுக்குக் குறைவில்லாமல் நீர் கிடைக்குமென நினைக்கிறேன்” என்று மிகவும் பணிவுடன் கூறினார். 

“எனது முதலமைச்சரின் திறமைபற்றி எனக்குத் தெரி யாதா என்ன? தங்கள் வல்லமை புரிந்தபடியால்தான் இத் தனை பெரிய பொறுப்புகளையெல்லாம் தங்களிடம் ஒப்படைத் துள்ளேன். தங்கள் புத்திநுட்பத்தையறிந்து தானே என்னுடைய தந்தையாகிய அமரர் வரராமதேவர் தங்களை எனக்கு முதல் மந்திரியாக நியமித்துச் சென்றார். 

”அமைச்சரே! இது ஒருபுறமிருக்க, அரசி ஆடகசவுந் தரியின் அமைச்சர் விசித்திரயூகி இங்கே தன்பலவெளிக்கு அருகில் இருக்கும் இரு மலைகளையும் இணைத்து மகாவலி கங்கை நீரைத் தேக்கிக் குளங் கட்டுவதற்குரிய முயற்சிகளை அரசியின் உத்தரவுபெற்றுச் செய்து தருவதாகக் கூறிச் சென் றுள்ளார். அதற்கிடையில், அரசி கோயில் திருப்பணி வேலை யைப் பார்ப்பதற்காக இங்கு வரலாம். அல்லது திருக்குளம் சம்பந்தமாகப் பேசுவதற்கு என்னை அங்கே வரும்படி அழைக் கலாம். எதற்கும் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அதனால்தான் தாங்கள் இந்தத் திருப்பணி வேலைகளைக் கூடிய விரைவிற் செய்து முடிக்கவேண்டும் என்றேன். 

“ஏனெனில் நான் அங்கு போவதாக இருந்தாலும் அல்லது அரசியே இங்கு வருவதாக இருந்தாலும், இரண்டிலும் தாங்களும் முக்கிய பங்கு எடுக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். எல்லாம் கோணநாயகர் அருட்படி நடக்கட்டும்” என்று கூறிவிட்டு மன்னன் சிந்தனையில் மூழ்கினான்

– தொடரும்…

– கோவும் கோயிலும் (நாவல்), முதற் பதிப்பு: ஜனவரி 1980, நரெசி வெளியீடு, திருகோணமலை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *