நியூயார்க்கில் சங்கர்லால்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 7, 2024
பார்வையிட்டோர்: 2,150 
 
 

(1983ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

சங்கர்லாலே கொஞ்சமும் எதிர்பாராத நிகழ்ச்சி! இவ்வளவு விலை மிகுந்த, இவ்வளவு ஆரவாரமான ரோல்ஸ்ராய்ஸ் காருக்குள் ஒரு பிணம்?

சங்கர்லால், மர்லினுக்குப் பக்கத்தில் முன் சீட்டிலேயே உட்கார்ந்திருந்தார்.

உடனே சங்கர்லால், திரும்பிப் பின் சீட்டிலும் அதன் அடியிலும் பார்த்தார்.

பிணம் இல்லை!

எதுவும் இல்லை!

“எங்கே? காரின் டிக்கில் இருக்கிறதா?” என்றார் சங்கர்லால். “ஆமாம்” என்று சொல்லிவிட்டுக் குழந்தையைப் போல் தன் தலையை மேலும் கீழும் ஆட்டினாள் மர்லின்.

“ஆணா? பெண்ணா?”

“தெரியவில்லை. பிணத்தை நீங்களே பாருங்கள்.”

காலையில் விடியாத அந்த மங்கிய இரவு நேரத்தில் ஒன்றிரண்டு கார்கள் போய்க் கொண்டிருந்தன. வந்து கொண்டிருந்தன.

“பிணம் எப்படிக் கார் டிக்கில் வந்தது? காரில் தொலைபேசி இருக்கும்போது, பொதுத் தொலைபேசியிலிருந்து ஏன் நீ பேசினாய்?” என்று கேட்டார் சங்கர்லால்.

“உங்களை அஸ்டோரியா ஓட்டலில் விட்டுவிட்டு வந்தேன். வந்ததும், கொஞ்சத் தொலைவில் ஒரு சிற்றுண்டிச் சாலையைச் பார்த்தேன். மோட்டல் என்று பெயர். எனக்குப் பசி. மிகவும் பசி. அந்தச் சிற்றுண்டிச் சாலையில் இருபத்து நாலு மணி நேரமும் நல்ல தின்பண்டங்களையும் காப்பி தேநீர் ஆகியவற்றையும் விற்கிறார்கள். பெரும்பாலும் இரவில் வாடகைக் கார் ஓட்டுபவர்களும் டிரக் ஓட்டுபவர்களும் தாம் இங்கே வருவார்கள். வந்து சாப்பிடுவார்கள். நான் காரை வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே போனேன். பசி எடுக்கும் போதெல்லாம் அமெரிக்க மக்கள் வெளியில் மிக விரும்பிச் சாப்பிடும் உணவு ஹாம்பர்கர். இந்த ஹாம்பர்கர் என்பது ரொட்டிக் கடையில் விற்கும் பன்னைப் போல் இருக்கும். அதற்குள் அடுக்கு அடுக்காக மாமிசம், வெங்காயம் காய்கறி வகைகள் ஆகியவற்றை வைத்திருப்பார்கள். இதை சுவைத்துச் சாப்பிடக் கொஞ்ச நேரம் ஆகும். நான் ஒரு ஹாம்பர்கரைச் சாப்பிட்டுவிட்டு மெல்லக் காப்பி பருகினேன். அதற்கு அரைமணி நேரம் ஆகிவிட்டது. காப்பி பருகியபடி சிற்றுண்டிச் சாலையிலிருந்து கண்ணாடி சன்னல் வழியாக வெளியே பார்த்தேன். அப்போது நான் கண்ட காட்சி என் இரத்தத்தை உறையும்படி செய்தது!”

“சொல்லு, தொடர்ந்து சொல்லு”

“ஒரு பெரிய பியூக் கார் வந்தது. அது ரோல்ஸ்ராய்ஸ் காரின் பக்கத்தில் நின்றது. அதிலிருந்து இரண்டு பேர்கள் இறங்கினார்கள். அவர்கள் ரோல்ஸ்ராய்ஸைப் பார்த்தார்கள். ஒருவன் பியூக்கின் டிக்கைத் திறந்தான். மற்றொருவன் ரோல்ஸ்ராய்ஸின் டிக்கைத் திறந்தான். டிக்கை நான் எப்போதோ பூட்ட மறந்தது அப்போதுதான் என் நினைவுக்கு வந்தது. அந்த இருவரும் மின்னல் விரைவில் பியூக் டிக்கில் இருந்த பிணத்தை எடுத்து ரோல்ஸ்ராய்ஸின் டிக்கில் வைத்து விட்டு டிக்கை மூடினார்கள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. உணர்ச்சியற்றேன். உட்கார்ந்துவிட்டேன். அதற்குள் அவர்கள், பியூக்கின் டிக்கையும் ரோல்ஸ்ராய்ஸின் டிக்கையும் மூடிவிட்டு பியூக்கில் ஏறிப் போய் விட்டார்கள். காரில் பிணம் இருப்பதைப் போலீஸார் கண்டு பிடித்தால் என்மேல் அல்லவா அவர்கள் ஐயம் கொள்வார்கள்? என்னுடைய தலைவி பமேலாவுக்கு உண்மை தெரிந்தால் எனக்கு என் வேலையே போய்விடும். ரோல்ஸ்ராய்ஸில் பிணம் இருந்தது என்ற உண்மை தெரிந்தால் மீண்டும் அவள் இந்தக் காரில் ஒரு நாளும் ஏற மாட்டாள்! எனக்கே ரோல்ஸ்ராய்ஸ் காரை எடுக்க அச்சமாக இருந்தது. காருக்குள் போய்த் தொலைபேசியில் பேசக் கூடத் துணிவு ஏற்படவில்லை. அதனால் சிற்றுண்டிச் சாலையிலிருந்து பொதுத் தொலைபேசியிலிருந்து உங்களுடன் தொடர்பு கொண்டேன். பேசினேன், உங்களிடம் பேசியதும் துணிவு வந்தது. காரை எடுத்தேன். வந்தேன் சேர்ந்தேன்.”

“பியூக்கின் எண் தெரியுமா?”

“தெரியாது.”

“பியூக்கிலிருந்து இறக்கிப் பிணத்தை எடுத்து ரோல்ஸ்ராய்ஸில் வைத்த அந்த மனிதர்களைக் கண்டால் உன்னால் அடையாளம் காட்ட முடியுமா?’

“ஓரளவு முடியும். அவர்கள் முகத்தை நான் பார்க்கவில்லை. அவர்கள் தங்கள் முகம் தெரியாதபடி தொப்பி அணிந்திருந்தார்கள். நீண்ட கோட்டுகள் அணிந்திருந்தார்கள். கோட்டின் காலர்வேறு அவர்களுடைய முகங்களை மறைத்துக் கொண்டிருந்தது!”

“சரி, காரை ஓட்டு.”

“எங்கே?”

“முதலில் பிணத்தைப் பார்க்க வேண்டும். இங்கே டிக்கை திறந்து பார்க்கக்கூடாது. பார்த்தால் சாலையில் போகிறவர்கள் எவராவது பார்த்து விடுவார்கள்.”

மர்லின் காரைச் செலுத்தினாள்.

“எங்கே போக வேண்டும்? சொல்லுங்கள்.”

“மிகவும் தனிமையான ஏதாவது ஓர் இடத்துக்குப் போ.”

மர்லின், காரை ஓட்டினாள். விரைவாக ஓட்டினாள். அவள் கைகள் நடுங்கவில்லை. அதற்கு, அவள் ஒன்றும் தவறு செய்யவில்லை என்பது ஒரு காரணம். அவளுக்குப் பக்கத்தில் சங்கர்லால் இருக்கிறார் என்ற துணிவு ஒரு காரணம்!

நியூயார்க் நகரைக் கடந்து ஒரு பெரிய அகன்ற சாலையில் கார் போய்க் கொண்டிருந்தது. எங்கும் பட்டப்பகலைப் போல் விளக்குகள், சாலையில் போக்குவரத்து அந்த நேரத்திலும் கூட இருந்தது. நியூயார்க் நகரின் உயரமான கட்டடங்கள் விலகிக் கொண்டே சென்றன.

சாலையில் போய்க்கொண்டே இருந்தால் அமைதியான இடமே இருக்காது போல் இருந்தது!

“நீண்ட தொலைவு போக வேண்டாம். இப்படியே சாலையிலிருந்து விலகிப் போய் எங்கேயாவது மறைவான ஓர் இடத்தில் காரை நிறுத்து” என்றார் சங்கர்லால்.

மர்லின், காரைத் திருப்பினாள். திருப்பி, பாதையிலிருந்து விலகினாள். விலகிச் சென்றாள். மேடு பள்ளமான இடம். கொஞ்சத் தொலைவு சென்றதும் ஒரு பள்ளமான இடம். அந்த இடத்தில் காரை நிறுத்தும்படி சொன்னார் சங்கர்லால்.

மர்லின் காரை நிறுத்தினாள்.

இருவரும் காரை விட்டு இறங்கினார்கள்.

இருட்டான இடம் அது. சாலையின் விளக்கு வெளிச்சம் அந்தப் பக்கம் தலை காட்டவில்லை.

சங்கர்லால், மின்பொறி விளக்கை எடுத்தார். அவரிடம் எப்போதும் ஆற்றல் வாய்ந்த சிறிய மின்பொறி விளக்கு ஒன்று இருக்கும். அதை எடுத்து அதை ஒளிவீசச் செய்தார்.

“டிக்கைத் திற” என்றார்.

மர்லின், டிக்கைத் திறந்தாள். உள்ளே –

ஒரு பெண்ணின் பிணம் இருந்தது!

அழகிய பெண், மிக அழகி. அவள் ஒரு திரைப்பட அழகியாக இருக்கலாம். அல்லது ஒரு நடனக்காரியாக இருக்கலாம் அல்லது விளம்பரங்களுக்கு மாதிரிகொடுக்கும் மாதிரிப் பெண்ணாக இருக்கலாம். அவளுடைய அழகிய கூந்தல் பொன் நிறமாக இருந்தது. சாயம் தடவப்பட்ட கூந்தல்!

“இவள் யார் தெரியுமா?” என்று கேட்டார் சங்கர்லால்.

“தெரியாது.”

“இதற்குமுன் இவளை நீ பார்த்ததே இல்லையா?”

“இல்லை.”

சங்கர்லால், மின்பொறி விளக்கை நீட்டி அவள் உடலை ஒருதடவை தலையிலிருந்து கால்வரையில் பார்த்தார்.

அவள் உடலில் பல இடங்களில் இரத்தம் கசிந்து வழிந்திருந்தது! அவளை ஊசியால் குத்திச் சித்திரவதை செய்திருக்கிறார்கள்! அவள், அவர்கள் விரும்பிய ஏதோ ஓர் உண்மையை சொல்லவில்லை. அது ஒரு பெரும் மறை பொருளாக இருக்கலாம். அவள் என்ன செய்தும் பேசவில்லை என்பதால், அவள் கழுத்தை நெறித்து அவளைக் கொன்றிருக்கிறார்கள். பிறகு பிணத்தை வழியில் நின்ற ரோல்ஸராய்ஸ் காரில் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள்!

“மர்லின்”

“உம்.”

“பிணத்தைப் பிடி, நாம் இருவரும் இவளை இறக்கிப் போட்டுவிட்டுப் போய்விடுவோம். இதைப் பற்றி நீ எவரிடமும் சொல்லாதே!”

“ஆகட்டும்.”

இருவரும் பிணத்தைப் பிடித்தார்கள். எடுத்தார்கள். தூக்கிப் போடப் போனார்கள். சங்கர்லால் பிணத்தின் தலைப்பக்கம் பிடித்தார். மர்லின், பிணத்தின் கால் பக்கம் பிடித்தாள். இருவரும் பிணத்தைத் தூக்கி ஓர் ஓரமாகப் போட்டார்கள். போட்ட போது, சங்கர்லாலின் கையோடு பிணத்தின் கூந்தல் வந்துவிட்டது!. அவள் அணிந்திருந்தது விக்!

சங்கர்லால், மின்பொறி விளக்கை பிடித்துப் பார்த்தார். அவள் விக்கின் உள்பக்கம் ஒரு பிளாஸ்டிக் உறை இருந்தது. அது டேப்பினால் ஒட்டப்பட்டிருந்தது. அந்த உறைக்குள் ஒரு சாவி இருந்தது. சங்கர்லால் அந்தப் பிளாஸ்டிக் உறையை எடுத்தார் எடுத்துத் தன் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டார்.

மர்லின், நிமிர்ந்து அப்போதுதான் சங்கர்லாலைப் பார்த்தாள்.

“என்ன அது? விகல் கையோடு வந்துவிட்டதா?”

“ஆமாம்.”

சங்கர்லால் மீண்டும் மின்பொறி விளக்கைப் பிடித்துப் பார்த்தார் பிணத்தை.

அவளுக்கு முடி கறுப்பாக இருந்தது. அவள் முடி, மிக அளவுடன் வெட்டப்பட்ட கிராப்பு!

சங்கர்லால், மீண்டும் தன் கையில் இருந்த அந்த விக்கை அவளுடைய தலையில் பொருத்தினார்.

“போகலாமா?” என்றார்.

“போகலாம்.”

மர்லின், காரில் ஏறி உட்கார்ந்தாள். சங்கர்லாலும் காரில் உட்கார்ந்தார்.

கார் புறப்பட்டது.

மர்லின் மிகவும் சிந்தனையுடன் காணப்பட்டாள்.

“இனிமேல் என்ன நடக்கும்?” என்றாள் அவள்.

“காலையில் எவராவது பிணத்தைப் பார்ப்பார்கள். போலீசாருக்குச் செய்தி கொடுப்பார்கள். போலீசார் வந்து உடனே பிணத்தைக் கைப்பற்றுவார்கள். கைப்பற்றிக் கொண்டு போவார்கள். கொண்டு போய் வைத்துக் கொண்டு துப்பறிவார்கள்.”

“நம்முடைய கார் வந்து போன அடையாளம் தெரியுமே!”

“ரோல்ஸ்ராய்ஸ் கார் என்பது தெரியும். ஆனால் எந்த ரோல்ஸ்ராய்ஸ் கார் என்பது தெரியாது. நியூயார்க்கில் இருக்கும் அத்தனை ரோல்ஸ்ராய்ஸ் கார்களையும் அவர்கள் தேடிக் கொண்டிருப்பார்களா என்ன! முடியாது!”

“நியூயார்க்கில் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வைத்திருப்பவர்கள் பெரும் பணக்காரர்கள். போலீசார், சரியான சான்று இல்லாமல் பணக்காரர்களுக்குத் தொல்லை கொடுக்க மாட்டார்கள்.”

ரோல்ஸ்ராய்ஸ், விரைந்து போய்க் கொண்டிருந்தது.

சங்கர்லால் அஸ்டோரியா ஓட்டலில் கொண்டு போய் விட்டுவிட்டு, மர்லின், தன் வீட்டிற்குப் போகவேண்டும். கார் போய்க் கொண்டிருந்தது. வழியில் –

காரிலிருந்த தொலைபேசி மிக அலறியது!

மர்லின், காரை ஓர் ஓரமாக நிறுத்தனாள்.

அவள், தொலைபேசியை எடுப்பதற்குள் சங்கர்லால் சொன்னார். “தொலைபேசியில் அழைப்பது உன் தலைவி பமேலாவாகத்தான் இருக்கும். வழியில் கார் நின்றுவிட்டதாகவும் ஸ்பார்க் பிளக்கைத் தூய்மைப்படுத்திப் போட்டுக் கொண்டு வருவதாகவும் சொல்லு! வேறு ஒன்றும் சொல்லாதே” என்றார் சங்கர்லால்.

அவள் தொலைபேசியை எடுத்தாள். “ஹலோ” என்றாள். பமேலா தான் பேசினாள்.

“மர்லின், நீ எங்கே இருக்கிறாய்? விமானம் நேரடிப்படி வந்து விட்டதா? சங்கர்லால் வந்து விட்டாரா? இந்த நேரத்திற்குள் நீ நம் மாளிகைக்கு வந்திருக்க வேண்டுமே!” என்றாள்.

“சங்கர்லால் வந்து விட்டார். விமானம் நேரப்படி வந்துவிட்டது. ஸ்பார்க் ப்ளக் வேலை செய்யவில்லை. என்ன கோளாறு என்பதைக் கண்டு பிடிக்க நேரமாகிவிட்டது. ஸ்பார்க் பிளக்கைத் தூய்மைப்படுத்திப் போட்டு கொண்டு வருகிறேன்.”

“நீ வந்து சேர எவ்வளவு நேரம் பிடிக்கும்?”

“மிகுதியாகப் போனால் ஒரு மணி நேரம்”

“சரி” என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்தாள் பமேலா.

பெருமூச்சு விட்டாள் மர்லின்.

மீண்டும் கார் புறப்பட்டது. புறப்பட்டு அஸ்டோரியா ஓட்டலை நோக்கிப் பறந்தது!.

அத்தியாயம்-8

சங்கர்லால் அஸ்டோரியா ஓட்டலை அடைந்தார். அறைக்குச் சென்றார். விளக்கைப் போட்டார். போட்டு விட்டு வெளிச்சத்தில் இறந்துகிடந்த பெண்ணின் விக்கில் கண்டெடுத்த சாவியைப் பார்த்தார். நன்றாகப் பார்த்தார். சாவியின் மேல் நியூயார்க் நகர இரயில்வே ஸ்டே டஷனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அத்துடன் லாக்கரின் எண்ணும் அதில் குறிக்கப்பட்டிருந்தது. லாக்கரின் எண் 54

சங்கர்லால், தொலைபேசியை எடுத்தார். வரவேற்பாளருடன் தொடர்பு கொண்டார். உடனே ஒரு கோப்பைத் தேநீர் அனுப்பி வைக்கும்படி சொன்னார். கொஞ்ச நேரத்தில் தேநீர் வந்தது.

அவர், தேநீரைப் பருகினார்.

பருகிவிட்டுப் படுக்கையில் படுத்தார். சிந்தித்தார்.

எவளோ ஒரு நல்ல அழகி. அவள் எதையோ நியூயார்க் நகர இரயில்வே ஸ்டேஷன் லாக்கரில் மறைத்து வைத்திருக்கிறாள். இது அவளைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. அவளைப் பேசவைத்து உண்மையை வரவழைக்கச் சிலர் முயற்சி செய்திருக்கிறார்கள். முடியவில்லை. அதற்காக அவளை வன்கொலை செய்திருக்கிறார்கள். வன்கொலையில் அவள் இறந்து விட்டாள். வழியில் நின்ற ரோல்ஸ்ராய்ஸ் காரின் டிக்கில் பிணத்தைப் போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். இந்தப் பெண் யார்? இவளைக் கொன்றவர்கள் யார்? தெரியாது. நியூயார்க் இரயில்வே ஸ்டேஷனின் லாக்கரில் என்ன இருக்கிறது? அதைக் கண்டுபிடிக்கலாம். காலையில் பமேலாவைப் பார்க்கலாம். பார்த்துவிட்டுப் பிறகு நியூயார்க் நகர இரயில்வே ஸ்டேஷனுக்குப் போகலாம். போய்ப் புதிதாக எதையாவது கண்டுபிடிக்கலாம்.

சங்கர்லால் இப்படி எண்ணினார். எண்ணியபடியே தூங்கிவிட்டார்.

காலை. மணி எட்டு.

சங்கர்லால், கண்களைக் கவரும் நீல வண்ணச் சட்டையும், அதற்கு ஏற்ற வெள்ளைக் கால்சட்டையும் அணிந்தார். பட்டையான கழுத்துப்பட்டையைத் தளர்த்திவிட்டுக் கொண்டார். அஸ்டோரியா ஓட்டலின் கீழே இறங்கி வந்தார்.

ரோல்ஸ்ராய்ஸ் கார் அவருக்காகக் காத்திருந்தது. காருக்கு வெளியில் காரின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தாள் மர்லின்.

அவள், சங்கர்லாலைப் பார்த்ததும், மகிழ்ச்சியுடன், ‘குட்மார்னிங்” என்றாள். காரின் கதவைத் திறந்து விட்டாள்.

சங்கர்லால், “குட் மார்னிங்” என்று சொல்லிக் கொண்டே காரில் ஏறினார். உட்கார்ந்தார்.

மர்லின், சங்கர்லாலைப் பார்த்ததும் மகிழ்ச்சி கொண்டாள். மெய், ஆனால் அவள் தன் மனத்தில் கொண்டிருந்த அச்சத்தினாலும் துன்பத்தினாலும் அவள் கண்கள் சோர்வு அடைந்திருந்தன!

அவள், காரைக் கிளப்பினாள். ஒரே விரைவுடன் செலுத்தினாள். காலை எட்டு மணிக்கே நியூயார்க் நகரச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அடைந்து விட்டது. ஆயிரக்கணக்கான கார்கள் வரிசை வரிசையாகப் போயின. போய்க் கொண்டே இருந்தன. கார்கள் ஒன்றன்பின் ஒன்றாகத்தான் போக வேண்டியதிருந்தது. நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஒரு காரை ஒரு கார் முந்த முடியாது. முந்திக் கொண்டு போக முடியாது!

நியூயார்க் நகரின் எல்லையில் அமைந்திருந்தது பமேலா மாளிகை. அந்த மாளிகையை அடைவதற்குள் ஏதோ நீண்ட தொலைவு பயணம் செய்வதைப் போன்று இருந்தது சங்கர்லாலுக்கு!

மாளிகையைச் சுற்றிலும் ஒரு தோட்டம். பெரிய தோட்டம். ஆரவாரமான மாளிகை. நியூயார்க் நகரில் இப்படி ஒரு மாளிகையா? இப்படி ஒரு மாளிகையில் வாழ வேண்டுமானால், பமேலா ஒரு பெரும் பணக்காரியாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணினார் சங்கர்லால்.

மாளிகையின் பின்னால் பணியாள்களுக்கு விடுதிகள் கட்டப்பட்டிருந்தன. கார்கள் நிற்க நான்கு கார்க்கூடங்கள் இருந்தன. ரோல்ஸ்ராய்ஸ் காரைத் தவிர மேலும் மூன்று கார்கள் இருந்தன. மற்றக் கார்களைப் பெரும்பாலும் மற்றவர்கள் பயன்படுத்தி வந்தார்கள். பமேலா, பெரும்பாலும் ரோல்ஸ்ராய்ஸ் காரைத்தான் பயன்படுத்துவது வழக்கம். மாளிகைக்குள் எல்லாம் மிக ஆரவாரமாக இருந்தன. கூடத்தில் மாட்டப்பட்டிருந்த படங்கள் கண்களைக் கவர்ந்தன. புகழ்பெற்ற ஓவியர்களால் வரையப்பட்ட படங்கள் சில இருந்தன. மாளிகைக்குள் சங்கர்லால் நுழைந்த ஒரு சில விநாடிகளில், அவரை வரவேற்கப் பமேலா வந்தாள். மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.

பமேலாவுக்கு ஏறக்குறைய எழுபது வயது. இருந்தபோதிலும், அவள் இன்னும் சுறுசுறுப்புடன் இருந்தாள். ஒல்லியாக இருந்தாள். உடலுடன் ஒட்டிய நீண்ட கவுன் அணிந்திருந்தாள். அவளுக்கு வயதாகி விட்டதற்கு அடையாளமாகத் தோலில் சுருக்கங்கள் விழுந்திருந்தன. அவள் வெட்டியிருந்த கிராப்பில் நரை படர்ந்திருந்தது. கண்களில் பருமனான கண்ணாடி.

அவள் காதுகளில் விலைமிகுந்த வைரத்தோடுகள். அந்த வைரத்தோடுகள் பட்டாம் பூச்சிகள் மாதிரி இருந்தன. அவள் கவுனில் புரூச் குத்தியிருந்தாள். அந்தப் புரூச்சில் வைரங்கள் பதிந்திருந்தன!

அவள் கையை நீட்டினாள். சங்கர்லாலை வரவேற்றாள். “வாருங்கள் சங்கர்லால் அஸ்டோரியா ஓட்டல் உங்களுக்கு வசதியாக இருக்கிறதா?” என்று கேட்டாள்.

சங்கர்லால் அவள் கையைப் பிடித்துக் குலுக்கினார்.

குலுக்கிவிட்டு, “மிகவும் வசதியாக இருக்கிறது” என்றார்.

“உட்காருங்கள்” என்றாள் அவள்.

சங்கர்லால் உட்கார்ந்தார். எதிரில் மற்றொரு நாற்காலியில் அவள் உட்கார்ந்தாள்.

“தேநீர் பருகுங்கள். மாடிக்குப் போவோம்” என்றாள் பமேலா.

சங்கர்லால், “ஆகட்டும்” என்றார்.

அழகிய பணிப்பெண் ஒருத்தி, இரண்டு கோப்பை தேநீர் கொண்டு வந்தாள். சங்கர்லாலிடம் ஒரு கோப்பையைக் கொடுத்தாள். மேலாவிடம் ஒரு கோப்பையைக் கொடுத்தாள். பருகிக் கொண்டே

இருவரும் தேநீர் பருகினார்கள்.

பொதுவாகப் பேசினார்கள்.

“சங்கர்லால், நீங்கள் டோக்கியோவில் இன்னும் எத்தனை நாள்களுக்கு. இருப்பீர்கள்?”

“ஓய்வு வேண்டும். அதற்காகக் குடும்பத்துடன் டோக்கியோவில் தங்கியிருக்கிறேன். அங்கேயும் என்னை விடமாட்டேன் என்கிறார்கள். நேப்பிள்ஸிலிருந்து திரும்பினேன். திரும்பியதும் உங்களிடமிருந்து அழைப்பு வந்தது. வந்துவிட்டேன்”.

“நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி. நியூயார்க் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?”

“பிடித்திருக்கிறது. மிகவும் பிடித்திருக்கிறது. என்னைப் போன்றவர்களுக்கு நியூயார்க்கில் தொடர்ந்து வேலை இருக்கும் போல் இருக்கிறது” என்றார் சங்கர்லால்.

ரோல்ஸ்ராய்ஸ் காரில் கண்ட பிணத்தை நினைவில் கொண்டு அவர் அப்படிப் பேசினார்!

பமேலா உடனே, “எதை வைத்து அப்படிச் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டாள்.

“நியூயார்க் நகரில் நடக்கும் அளவுக்குக் கொலைகளும் கொள்ளைகளும் குற்றங்களும் அமெரிக்காவில் வேறு எந்த நகரத்திலும் நடப்பது இல்லை.”

“மெய் சங்கர்லால் மெய். இங்கே இருக்கும் போலீசார் திறமையானவர்கள். கெட்டிக்காரர்கள்! ஆனால், இங்கே இருக்கும் குற்றவாளிகள் அவர்களைவிடத் திறமைசாலிகள்! அவர்களைவிடக் கெட்டிக்காரர்கள்!”

சங்கர்லால் தேநீரைப் பருகினார். பருகிவிட்டுக் காலிக் கோப்பையை வைத்தார்.

“இங்கே இருக்கும் குற்றவாளிகளைப் போலீசார் கண்டுபிடிக்க முடியாது என்று தானே என்னை நீங்கள் வரவழைத்திருக்கிறீர்கள்?” என்றார் மெல்லச் சிரித்தபடி.

“உண்மைதான் சங்கர்லால்” என்று சொல்லிவிட்டு, அவள் தேநீரைப் பருகினாள். பருகிவிட்டுக் காலிக் கோப்பையை வைத்தாள்.

பிறகு, “உங்களை ஏன் வரவழைத்தேன் என்று சொல்ல வேண்டும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நாம் மேலே போவது நல்லது” என்றாள்.

அவள் எழுந்து கொண்டாள். சங்கர்லாலும் எழுந்து கொண்டார்.

இருவரும் மெல்ல மாடிக்குச் சென்றார்கள்.

மாடியிலிருந்த ஒரு பெரிய அறையை அடைந்தார்கள். பமேலா, சங்கர்லாலை உட்காரும்படி சொன்னாள். சங்கர்லால் உட்கார்ந்தார். உட்கார்ந்ததும் அவள் கதவைச் சாத்தினாள். சாத்திவிட்டு அவருக்குப் பக்கத்தில் வந்தாள். உட்கார்ந்தாள்.

சங்கர்லால் அந்த அறையை ஒரு முறை பார்த்தார். குளிர் வசதி செய்யப்பட்ட அறை. அதில் டெலிவிஷன், தொலைபேசி, பிரிஜ், ஒரு சிறிய லைப்ரரி – எல்லாமே இருந்தன.

“சங்கர்லால், முதலில் என்னை உங்களுக்கு அறிமுகம் செய்து கொள்கிறேன். என் பெயர் பமேலா ஜான்ஸன். ஜான்ஸன் என்பது என் கணவரின் பெயர். அவர் இப்போது, இன்று உயிருடன் இலர். நாங்கள் ஏறக்குறைய திருமண வாழ்க்கையில் இந்தியர்களைப் போல் வாழ்ந்துவிட்டோம். இங்கேயெல்லாம் பெண்கள், தங்கள் கணவனைச் சட்டை மாதிரி மாற்றுவார்கள். ஆண்கள், பெண்களைப் பட்டாம் பூச்சியைப் போல் பறந்து பறந்து சென்று அனுபவிப்பார்கள். ஆனால், நாங்கள் தூய்மையுடன் கணவன் மனைவியாக ஆயுள் முழுவதும் வாழ்ந்துவிட்டோம். இவ்வளவு நாள் நாங்கள் ஒன்றாக வாழ்ந்தும் எங்களுக்குப் பிள்ளை நான் மலடியா? என் கணவர் மலடரா? பிறக்கவே இல்லை. தெரியாது. தெரிந்து கொள்ளவில்லை.

“ஜான்ஸன் பெரும் பணம் சேர்த்து வைத்துவிட்டு இறந்து போனார். அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்த போது ஐந்து கோடி டாலர் சொத்து இருந்தது. இப்போது அதே மதிப்புள்ள சொத்து, எட்டுக் கோடி டாலராகப் பெருகிவிட்டது. என் பெயருக்கு இருக்கும் கம்பெனி ஷேர்கள் நாளுக்கு நாள் விலை ஏறிக் கொண்டே வருகின்றன. பாங்கில் மட்டும் பணமாக மூன்று கோடி டாலர் இருக்கிறது.”

“இவ்வளவு சொத்துக்கும் ஒரு வாரிசு இல்லை. இல்லையா?”

“மிக விலை உயர்ந்த என்னுடைய சொத்தையும் பணத்தையும் மருத்துவ விடுதிகளுக்கும், அனாதைப் பிள்ளைகள் விடுதிகளுக்கும் எழுதி வைத்திருக்கிறேன். என்னிடம் வேலை பார்த்து வருகிறவர்களில் மிகவும் நாணயமானவர்களுக்கு மிக நன்றி உள்ளவர்களுக்கு, ஒரு பகுதியைப் பகிர்ந்து கொடுக்க வழி செய்திருக்கிறேன். என் உயில் இரகசியமாக இருந்து வருகிறது.”

“புரிகிறது. உங்கள் தொல்லை என்ன?”

“ஒரு வாரத்துக்கு முன் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அன்று சனிக்கிழமை. சனிக்கிழமையன்று நான் ஏதாவது ஒரு திரைப்படத்துக்குப் போய் வருவேன். வழக்கம். அதனால் சனிக்கிழமையன்று மட்டும் திரைப்படத்திலிருந்து திரும்பி வந்து சாப்பிட்டுவிட்டுப் படுக்கப் போவதற்குள் பதினோரு மணியாகிவிடும். ஒரு சனிக்கிழமை, அன்று, சாப்பிட்டுவிட்டு நான் படுக்கப் போகும்போது என் படுக்கை அறையில் ஒரு கறுப்புப் பூனை என்னைப் பார்த்து ‘மியா’ என்று கத்தியது! எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பூனை என்றால் எனக்கு அச்சம். மாளிகைக்குள் பூனை வந்தால் எனக்குப் பிடிக்காது. இந்தப் பூனை, ஓர் அழகிய பூனை. சயாம் நாட்டுப் பூனை, அதன் கண்கள் பார்ப்பதற்கு அச்சத்தைக் கொடுத்தன. நான் அஞ்சினேன். அப்படியே நின்றேன். அந்தப் பூனை ஒரு கத்துக் கத்திவிட்டுப் பாய்ந்து வந்தது. வந்து என் காலடியில் ஒரு காகிதத்தை வைத்துவிட்டுத் திரும்பி ஓடியது, சன்னல் வழியாகப் பாய்ந்து வெளியே ஓடிவிட்டது!”

“பிறகு?”

“கீழே குனிந்தேன். அந்தக் காகிதத்தை எடுத்தேன். பார்த்தேன். விளக்கு வெளிச்சத்தில் பார்த்தேன். காகிதத்தில் சில வரிகள் டைப் செய்யப்பட்டிருந்தன. படித்தேன். அதில் எழுதியிருந்ததைப் படித்ததும் என் உடம்பில் இருந்த இரத்தம் உறைந்துவிட்டது!”

“சொல்லுங்கள்”

“என் உடல் நடுங்கியது.”

“சொல்லுங்கள்”

“என் குடல் கலங்கியது.”

“சொல்லுங்கள்’

“அந்தக் கடிதத்தில்.”

“சொல்லுங்கள்”

“அந்தக் கடிதத்தில், ‘பமேலாவுக்கு, வசதியுடன் இருக்கும்போது வயதானவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் இறக்க விரும்புவதில்லை. இது எனக்குத் தெரியும். நீ உயிருடன் வாழ விரும்பினால், நான் அனுப்பும் ஆளிடம் ஒரு கோடி டாலர் பணத்தை ஒரு பெட்டியில் போட்டுக் கொடுத்து அனுப்பு. நான் அனுப்பும் மனிதன் சனிக்கிழமையன்று இரவு பதினோரு மணிக்கு வருவான். அடுத்த சனிக்கிழமை நான் கேட்கும் பணம் முழுவதும் நூறு டாலர் நோட்டுகளாக இருக்க வேண்டும் பூனை’, என்று எழுதியிருந்தது!”

“கடிதத்தை எழுதியவன் பெயர் பூனை, இல்லையா?”

ஆமாம் .”

“கடிதத்தைக் கொண்டு வந்தது உண்மையில் ஒரு பூனைதானா?”

“ஆமாம்.”

“எவராவது வேடிக்கைக்காக ஏன் இப்படி ஒரு பூனையிடம் கொடுத்தனுப்பியிருக்கக் கூடாது?”

“முதலில் நானும் அப்படித்தான் எண்ணினேன். என்றாலும் எனக்கு அச்சமாக இருந்தது. அந்த அச்சம் மிகுதி ஆயிற்று. நியூயார்க் நகரில் உள்ள ஒரு பெரிய போலீஸ் அதிகாரியை எனக்குத் தெரியும். உடனே அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பூனை என்கிற பெயரிலே எவராவது கொடியவர்கள் இருக்கிறார்களா என்று கேட்டேன். பணக்காரர்களை அச்சுறுத்திப் பூனை என்ற பெயரில் ஒருவன் பெரும்பணத்தைப் பிடுங்கிக் கொண்டிருப்பதாகவும், பணம் கொடுக்காதவர்களை அவன் எப்படியாவது கொன்றுவிடுகிறான் என்றும் அவர் சொன்னார்! பிறகு, பூனை என்பவனிடமிருந்து எனக்கு ஏதாவது கடிதம் வந்ததா என்று கேட்டார். நான் இல்லை என்று சொல்லிவிட்டேன்!”

“ஏன்?”

“போலீசாரால் இந்தப் பூனை மனிதனை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை. நான் உண்மையைச் சொன்னால் போலீசார் இங்கு வருவார்கள். வந்து வந்து போவார்கள். எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் பூனை என்கிற அவன், பணம் கொடுக்க மறுப்பவர்களை எப்படியாவது கொன்றுவிடுகிறானாம்! அதனால்தான் நான் உங்களை வரவழைத்தேன். உடனே வரவழைத்தேன்”.

“இன்று சனிக்கிழமை இல்லையா?”

“ஆமாம்.”

“அந்தப் பூனையினுடைய ஆள் இரவு பதினோரு மணிக்கு வருவான். இல்லையா?”

“ஆமாம்”

‘ஒரு கோடி டாலர் பணத்தைப் பாங்கிலிருந்து வாங்கி விட்டீர்களா?”

“இல்லை”

“ஏன்?”

“நீங்கள், வரவில்லை என்றால்தானே நான் பணத்தைப் பாங்கிலிருந்து வாங்க வேண்டும். ஒரு கோடி டாலர் பணத்தைப் பாங்கிலிருந்து பணமாக வாங்கினால் பாங்க் பொறுப்பாளர் ஐயப்படுவார். இவ்வளவு பெரும் பணம் எதற்கு என்று கேட்பார். பல தொல்லைகள், உண்மையை மறைக்க முடியாது”

“உண்மைதான். நீங்கள் துன்பம் கொள்ள வேண்டாம். இன்று இரவு பதினோரு மணிக்குப் பூனையின் ஆள் வரட்டும். அவனிடம் பணத்தைக் கொடுப்போம். அப்போது நானும் உங்களுடன் இங்கே இருக்கிறேன்.”

“உண்மையாகவா?”

“ஆமாம். ஆனால் பணத்துக்குப் பதில் பெட்டிக்குள் தினசரிப் பத்திரிகைகளை எடுத்து வெட்டிக் கட்டுக்கட்டாகப் பணம் போல் இருக்க ஏற்பாடு செய்யுங்கள்”

“இது என் பணியாள்களுக்குத் தெரியலாமா?”

“மர்லினைத் தவிர வேறு எவருக்கும் தெரிய வேண்டாம். எனென்றால், மற்றவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.”

“ஆகட்டும் மர்லினையே பத்திரிகைகளை வெட்டிப் பெட்டியில் அடுக்கும்படி சொல்லுகிறேன்” என்றாள் பமேலா.

“வழக்கம்போல் நீங்கள் திரைப்படத்திற்குப் போய் விட்டு வாருங்கள்” என்றார் சங்கர்லால்.

பமேலா விழித்தாள்.

“துன்பம் கொள்ளவேண்டாம். நீங்கள் பூனைக்கு அஞ்சிப் பங்களாவில் அடைந்து கிடக்க வேண்டாம். திரைப்படத்திலிருந்து நீங்கள் திரும்பி வரப் பத்து மணி ஆகுமா?” என்றார் சங்கர்லால்.

“ஆகும்.”

“மிகச் சரியாகப் பத்து மணிக்கு நான் இங்கு வருகிறேன். பிறகு சரியாகப் பதினொரு மணிக்குப் பூனையின் தூதுவனைக் காண்போம்!”

“ஆகட்டும்.”

சங்கர்லால் புறப்பட்டார்.

“அஸ்டோரியா ஓட்டலில் உங்களை விட்டு விடும்படி சொல்லுகிறேன்” என்றாள் பமேலா.

“வேண்டாம். எனக்கு ஒரு கார் வேண்டும். உங்கள் காரில் ஒன்றைக் கொண்டு போகிறேன்.”

“காரோட்டி வேண்டாமா? நீங்களே நியூயார்க்கில் காரைச் செலுத்துவது உங்களுக்கு மிகத் துன்பமாக இருக்காதா?” நெருக்கம் மிகுந்த நகரம்.”

“டோக்கியாவை விடவா? டோக்கியோவின் வளர்ச்சிக்குப் பிறகு நியூயார்க், டோக்கியோவுக்கு அடுத்தபடியாக ஆகிவிட்டது?”

பமலோ சிரித்தாள்.

“உங்களுக்கு எந்தக் கார் வேண்டுமோ எடுத்துச் செல்லுங்கள்”

“உங்களிடம் முஷ்டாங் கார் இருக்கிறது அல்லவா?”

“ஆமாம்”

“அதைக் கொடுங்கள். விரைந்து செல்லக்கூடிய கார் தான் எனக்கு இப்போது வேண்டும்.”

இருவரும் கீழே மெல்ல இறங்கி வந்தார்கள்.

அத்தியாயம்-9

ஆல்பர்ட்டின் கார் விரைந்து போய்க் கொண்டிருந்தது. அவன் மனம் சிந்தனையுள் ஆழ்ந்திருந்தது. காரை அவனே ஓட்டிச் சென்றான். கார் நியூயார்க் நகரில் 51ஆவது தெருவில் நுழைந்தது. நுழைந்து ஒரு பெரிய கட்டடத்தின் முன் வந்தது, நின்றது.

ஆல்பர்ட், காரைவிட்டு இறங்கினான். உள்ளே சென்றான். லிப்டில் ஏறினான். இருபதாவது மாடியை அடைந்தான். இருபதாவது மாடியில் பூனை என்கிற பெயரில் உள்ளவன் வாழ்ந்து வந்தான்.

ஆல்பர்ட், பூனையின் இருப்பிடத்தை அடைந்து மணியை அடித்தான். மணியடித்தவுடன் ஒரு நீக்ரோப் பெண் வந்தாள். வந்து கதவைத் திறந்தாள். ஆல்பர்ட்டைப் பார்த்தாள். பார்த்ததும் தயங்கினாள். நின்றாள்.

“ஜாக்ஸன் இருக்கிறாரா?” என்று கேட்டான் ஆல்பர்ட்.

பூனையின் உண்மையான பெயர், ஜாக்ஸன். பூனை என்கிற பெயரில் ஜாக்ஸன் ஒரு கொடியவனாக இருந்து வருவது அவனுடன் நெருங்கிப் பழகிய ஒருசிலருக்கு மட்டுமே தெரியும்!

“இருக்கிறார், உள்ளே வாருங்கள்” என்றாள் நீக்ரோப் பெண்.

ஆல்பர்ட் வரவேற்பு அறைக்கு வந்தான். நின்றான்.

உள்ளே சயாம் பூனை ஒன்று கத்தியது. மெல்லக் கத்தியது. அதை அதட்டிவிட்டு ஜாக்ஸன் வரவேற்பு அறையை நோக்கி வந்தான்.

அவன் பிடித்துக் கொண்டிருந்த விலை உயர்ந்த சுருட்டின் வாசனை வீடு முழுவதும் வந்து கொண்டிருந்தது.

ஜாக்ஸன், ஆறடி உயரம் இருந்தான். அவன் கொஞ்சம் கறுப்பு. அவன் தாய் வெள்ளைக்காரி. தந்தை நீக்ரோ. ஆகையால், அவன் உடலில் கலப்பு இரத்தம் ஓடியது. அவன் தலைமயிர் கொஞ்சம் சுருண்டு இருந்தது. அவன் பணக்காரனைப் போல் மிக ஆரவாரமாக வாழ்ந்தான். அவன் வீட்டிலே அவன் அணிந்திருந்த உடையிலே, அவன் தோற்றத்திலே, அவன் சட்டை பொத்தான்களிலே கூடப் பணவாடை தெரிந்தது!

அவன் கண்கள் சிவந்திருந்தன. இயற்கையாகவே அவன் கண்கள் எப்போதும் சிவந்திருக்கும்!

“உட்கார்” என்றான் ஜாக்ஸன்.

ஆல்பர்ட், உட்காரவில்லை. ஜாக்ஸன் உட்கார்ந்த பிறகு தான் அவன் உட்கார்ந்தான்.

சுருட்டை ஒரு தடவை இழுத்துப் புகையை விட்டுவிட்டுப் பேசினான் ஜாக்ஸன்.

“சங்கர்லால் தப்பிவிட்டார்! அந்தோணி தவறு செய்துவிட்டான்! இல்லையா?”

“ஆமாம். ஆனால் முழுக்க முழுக்க அந்தோணியின் தவறு அது என்று சொல்லிவிட முடியாது. சங்கர்லாலைக் கொல்ல வேண்டிய இடத்தில் ஒரு விபத்து. இதனால் கார்களை வேறு பக்கம் திருப்பிவிட்டார்கள் போலீசார். சங்கர்லால் காரை அந்தோணியால் தொடர்ந்து போக முடியவில்லை. அதே நேரத்தில் அவன் சென்ற கார் வேறு விபத்துக்குள்ளாகி விட்டது.”

“அந்தோணி இப்போது எப்படி இருக்கிறான்?”

“உடலில் கொஞ்சம் அடி. இரகசியமாக ஒரு நர்சிங் ஹோமில் இருக்கிறான். சிகிச்சை பெற்று வருகிறான். குணம் அடைந்துவிடுவான், ஆனால் அவன் குணம் அடைந்து வெளியே வர ஒரு வாரம் ஆகும்”.

“அந்தோணிக்குக் கொடுத்த பணம் வீணாகிவிட்டது! இல்லையா?”

ஆல்பர்ட் பேசவில்லை.

“அந்தோணியை ஒழித்துவிடு. அவனுக்குக் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற வேண்டும். புரிகிறதா?”

ஆல்பர்ட் தலையை ஆட்டினான்.

“சங்கர்லால் தப்பிவிட்டார். அதனால் அந்தக் கிழவி பமேலா பணம் தருவாளா? அது ஐயமே! அவளிடம் பணத்தை வாங்கிவர இன்று இரவு மிகச் சரியாகப் பதினோரு மணிக்கு ஒரு தூதுவனை அனுப்ப வேண்டும். பமேலா கொடுக்கும் பெட்டியை வாங்கிவர அவன் போக வேண்டும். பெட்டியில் என்ன இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியக்கூடாது. பமேலா, பெட்டியைக் கொடுக்கவில்லை என்றால், தூதுவன் திரும்பியவுடன் பமேலா கொலை செய்யப்பட வேண்டும்.”

“அது அவ்வளவு எளிதல்ல!”

“முயன்றால் முடியாதது என்ன இருக்கிறது இந்த உலகத்திலே? ஒன்றுமில்லை. சங்கர்லால் நியூயார்க்கில் இருக்கிறார் என்பதால் வீணாக நீ அஞ்சுகிறாய். பமேலாவைக் கொல்ல உனக்குத் துணிவு இல்லை என்றால், இப்போதே சொல்லிவிடு. நான் அதற்கு வேறு ஏற்பாடு செய்து விடுகிறேன்”.

ஆல்பர்ட் தயங்கினான்.

“முடியுமா? முடியாதா?” என்று உரக்கக் கேட்டான் ஜாக்ஸன்.

“முடியும்” என்றான் இறுதியாக ஆல்பர்ட்.

ஜாக்ஸனின் முகத்தில் மகிழ்ச்சி படர்ந்தது.

“கிழவி பமேலாவைக் கொன்றுவிட்டால் சங்கர்லால் மறந்தும் கூட பமேலாவைப் பூனையிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை என்கிற செய்தி பரவிவிடும். இதற்கு அடுத்தபடியாக எந்தப் பணக்காரனைப் பணம் கேட்டாலும் ஓசையின்றி அவன் கொடுத்துவிடுவான். புரிகிறதா?”

“புரிகிறது.”

“நீ போகலாம்.”

ஆல்பர்ட் புறப்பட்டான்.

அவன் மறைந்ததும் ஜாக்ஸன் மனத்திற்குள் எண்ணிக் கொண்டான்.

‘பமேலா பணம் கொடுப்பாள் என்று ஆல்பர்ட் எண்ணினால் அவன் ஒரு முட்டாள்! சங்கர்லாலைக் கொன்று விட்டிருந்தால் அவள் பணத்தை உண்மையிலேயே கொடுத்து விட்டிருப்பாள். இப்போது அவள் பணம் கொடுக்க வேண்டும் என்று எண்ணினாலும், சங்கர்லால் அதைக் கொடுக்க விட மாட்டார். பமேலா இறக்க வேண்டியதுதான்! அவள் இறந்த பிறகு சங்கர்லாலும் ஒழிய வேண்டியதுதான்!’

– தொடரும்…

– நியூயார்க்கில் சங்கர்லால் (நாவல்), முதல் பதிப்பு: 1983, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *