நியூயார்க்கில் சங்கர்லால்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 9, 2024
பார்வையிட்டோர்: 2,065 
 
 

(1983ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-10

நியூயார்க் நகரின் போலீஸ் இலாக்கா. அங்கே ஒரு தனி

அறை. அதில் போலீஸ் தலைமைத் தலைவர் வில்லியம்ஸ் உட்கார்ந்திருந்தார். சிகரெட் ஊதியபடி இருந்தார். சிந்தனையுள் ஈடுபட்டிருந்தார். நியூயார்க் நகரில் கொலைகளும் கொள்ளைகளும் நிறைய அவருக்கு அவை பழகிப் போனவை!

ஆனால்,

இரண்டு நாள்களாகத் தொடர்ந்து நடந்த இரண்டு கொலைகள் அவரை உலுக்கிவிட்டன உலுக்கி!

முதலில் ஜங்கிள்ஜானின் பிணம் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவர் வியப்படைந்தார். ஜங்கிள்ஜானைக் கொல்லுவது என்பது அவ்வளவு எளிய செயல் அல்ல. அவன் சிறையிலேயே பல கொலைகளைச் செய்தவன். அவனுடன் சிறையில் இருந்தவர்கள் கொஞ்சம் தவறாக நடந்து கொண்டாலும், அவன், தன் கையாலேயே அவர்கள் கழுத்தை நெறித்துக் கொன்று விடுவான். சிறைப் போலீஸ் அதிகாரி ஒருவரைக் கூட அவன் கொன்று விட்டான். கொலை செய்வது என்பது அவனுக்கு காப்பி குடிப்பதைப் போல, ஒரு தடவை காப்பி குடித்ததும் மீண்டும் மீண்டும் காப்பி குடிக்கத் தோன்றுமே, அதுமாதிரி! மனச்சான்று என்பது அவனுக்கு இல்லை. துப்பாக்கியால் சுடுவதில் அவன் வல்லவன். கத்தியால் குத்துவதில் அதைவிட அவன் வல்லவன். கொலை செய்ய எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகளையும் அறிந்தவன் அவன்.

அப்பேர்ப்பட்ட வல்லவனுக்கு வல்லவனாகிய அவன் கொலை செய்யப்பட்டான். இதனால் வில்லியம்ஸ் மிக வியப்படைந்தார்.

அவனைக் கொலை செய்தவர்கள், அவனை விட ஆற்றல் உடையவர்களாக இருக்க வேண்டும்.

ஜங்கிள் ஜானைக் கொலை செய்தவர்கள் யார்? அவன் இறந்ததைப் பற்றிப் போலீசார் துன்பம் கொள்ளவில்லை. கொஞ்சமும் துன்பம் கொள்ளவில்லை. அவன் கொல்லப் பட்டதில் அவர்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால், ‘ஏதோ ஒரு பெரிய ஆபத்து நியூயார்க் நகரில் புயலைப் போல் வீசப் போகிறது. அதன் அடையாளமே ஜங்கிள்ஜான் கொல்லப்பட்டது’ என்ற எண்ணம் வந்தபோது, தலைமைப் போலீஸ் தலைவர் கலங்கினார்!

கூடையோடு வந்து அவன் பிணம் தண்ணீருக்கு மேலே மிகுந்த போது போலீசார் அதைக் கண்டுபிடித்தார்கள். எடுத்து. வந்தார்கள்.

ஆனால், ஜங்கிள்ஜான் அணிந்திருந்த சங்கர்லாலின் பிளாஸ்டிக் முகம் அவர்களிடம் கிடைக்கவில்லை. அதைத்தான் ஆல்பர்ட் தனது ஆட்களிடம் எடுத்து வரும்படி சொல்லி விட்டிருந்தானே!

இரண்டு பேர்கள் போலீஸ்காரர்களைக் கண்டதும் காரில் ஏறி ஓடினார்களே, அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களைக் கண்டு பிடிக்கும் வரையில் ஜங்கிள் ஜான் கொலை வழக்கை இரகசியமாக வைத்திருப்பது என்று போலீஸ் தலைமைத் தலைவர் முடிவு செய்திருந்தார். இதனால் பத்திரிகைகளில் இது பற்றிய எந்தச் செய்தியும் வெளிவரவில்லை!

மறுநாள் ஓர் அழகிய பெண் கொலையுண்டு கிடப்பதாகச் செய்தி வந்ததும், போலீஸ் தலைமைத் தலைவரான வில்லியம்ஸே அதைப்போய்ப் பார்த்தார்.

இவ்வளவு அழகிய பெண்ணை யார் கொன்றிருப்பார்கள் என்று அவர் வியந்தார். அந்தப் பெண் பிணத்தை உடனே சோதனைக்கு அனுப்பினார்.

அனுப்பிவிட்டு, அமைதியாக வந்து போலீஸ் பைல்களைப் பார்த்தார். அந்தப் பெண் யார் என்பது தெரிந்தது.

அவள் பெயர் ஷர்லி. அவளைப் பற்றிய முழு விவரங்களையும் அவர் படித்தார்.

அவள், பேரழகி, இருபத்தைந்து வயதுடையவள். மலிவான கிளப்புகளிலே இரவு நேரங்களில் நிர்வாண நடனம் ஆடி வந்தவள். போலீசார் இந்தக் கிளப்புகளில் படை எடுத்தபோது பலதடவை சிக்கிக் கொண்டவள். சிறைக்குப் போனவள். போய் வந்தவள். கொஞ்ச நாள்களில் இவள் பிக்பாக்கெட்டாக மாறினாள். இவளைக் கண்டு பல இளைஞர்கள் மயங்கினார்கள். இளைஞர்கள், தங்களுடைய கார்களிலே இவளுக்கு லிப்ட் கொடுப்பார்கள். காரில் போகும்போது இவளைக் கட்டியணைக்க முயலுவார்கள். இவளும் அவர்களுக்கு வெறியை மிக ஊட்டுவாள். அவர்களைக் கட்டி அணைப்பாள். இருவரும் தனிமையான இடத்தில் காரை நிறுத்துவார்கள். காதல் செய்வார்கள், அப்போது அவர்கள் சட்டைப் பைகளில் இருக்கும் பர்ஸைக் கிளப்பி விடுவாள். காரில் அவர்கள் வைத்திருக்கும் விலை உயர்ந்த பொருள்களை எடுத்து மறைத்து விடுவாள். இந்த வருமானம் இவளுக்குப் போதவில்லை. இதனால் இவள் தன் தொழிலை மாற்றிக் கொண்டாள். அது என்ன தொழில்? தனக்கு லிப்ட் கொடுக்கும் இளைஞர்களுடன் காரில் செய்வாள் அவர்கள் அவளிடம் மயங்குவார்கள். மயங்கியதும் அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லுவாள். அவள் வீட்டில் அவர்களுடன் அவள் காதல் செய்வாள். அப்போது பக்கத்து அறையிலிருந்து அவளுடைய கையாள் ஒருவன், அவர்கள் செய்யும் காதல் விளையாட்டுகளை இரகசியமாகப் புகைப்படம் பிடிப்பான். காமிரா சுவரில் பொருத்தப்பட்டிருப்பதே தெரியாது. இந்தப் புகைப்படங்களை வைத்து அந்த இளைஞர்களை பிளாக் மெயில் செய்வாள். செய்து பெரும் பணம் பறிப்பாள். இந்த வருமானமும் இவளுக்குப் போதவில்லை. இதனால் இந்தத் தொழிலையும் மாற்றிக் கொண்டாள். இவள் மாற்றிக் கொண்ட தொழில் என்ன? அண்மையில் தொடர்ந்து இவள் செய்து வந்த அந்தத் தொழில் என்ன என்பது தெரியவில்லை. புரியவில்லை. ஆனால் இவள் முன்பெல்லாம் செய்துவந்த குற்றங்களையெல்லாம் விட ஏதோ பெரிய குற்றங்களை இவள் இப்போது செய்து வந்திருக்க வேண்டும். அதுதான் இப்படி அவள் உயிரை வாங்கிவிட்டது என்று எண்ணினார் தலைமைப் போலீஸ் தலைவரான வில்லியம்ஸ்.

இந்த ஷர்லி கொலைக்கும் ஜங்கிள்ஜான் கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என்று கூட அவர் எண்ணினார். அதனால்தான் ஷர்லி கொலையைப் பற்றியும் கூடப் பத்திரிகைகளில் செய்தி வராதபடி அவர் அமுக்கி விட்டார்!

அவர் தொடர்ந்து சிகரெட் பிடித்தார். தொடர்ந்து சிந்தித்தார். மேசை விளிம்பில் இருந்த பொத்தானை அமுக்கினார். நீல உடையணிந்த போலீஸ்காரன் ஒருவன் வந்து நின்றான். சல்யூட் அடித்தான்.

“சார்ஜெண்ட் சண்டானாவைக் கூப்பிடு” என்றார். போலீஸ்காரன் போனான். வெளியில் போனான்.

கொஞ்ச நேரத்தில் சார்ஜெண்ட் சண்டானா வந்தான். சல்யூட் அடித்தான்.

சார்ஜெண்ட் சண்டானா, திறமை மிகுந்த ஒரு போலீஸ் சார்ஜெண்ட். அவன் தன் திறமையை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல், பல கொடியவர்கள் கூட்டத்துடன் தொடர்பு கொண்டுள்ள சிலருடன் பழகிக் கொண்டிருந்தான்.

“உட்கார்” என்றார் வில்லியம்ஸ்.

சார்ஜெண்ட் சண்டானா உட்கார்ந்தான். தயக்கத்துடன் உட்கார்ந்தான். இதுவரையில் வில்லியம்ஸ் அவனை உட்கார வைத்தது கிடையாது. உட்காரவைத்துப் பேசியது கிடையாது.

வில்லியம்ஸ், சண்டானாவைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தார். பார்த்து விட்டு, “ஜங்கிள்ஜான் கொலைக்கும் அழகி ஷர்லி கொலைக்கும் தொடர்பு மிகுந்த அளவில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“இருக்கலாம்.”

“இந்த இரண்டு கொலை வழக்குகளையும் நீதானே துப்பறிகிறாய்?”

“ஆமாம்.”

“இந்த இரண்டு வழக்குகளும் இரகசியமாகவே இருக்கட்டும். இது பற்றி பத்திரிகைகளில் வராதபடி பார்த்துக் கொள்”.

“ஆகட்டும்.”

“ஷர்லியின் பிணம் இருந்த இடத்தில் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கார் வந்து போன அடையாளம் தெரிந்ததே. அந்தக் கார் எது, எவருடையது, கண்டுபிடிக்க முடிந்ததா?”

“முடியவில்லை. முயற்சியைக் கைவிடவில்லை, தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ரோல்ஸ்ராய்ஸ் கார் வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள். பெரும் செல்வாக்கு உடையவர்கள். அவர்கள் மீது ஐயம் கொண்டு ஏதாவது செய்தால், அரசியல் தலைவர்கள் வரை அந்தச் செய்தி போய் விடும். நமக்கு ஆபத்து!”

“புரிகிறது. வேறு புதிய செய்தி உண்டா?”

“உண்டு. புதிய செய்தி. வியக்கத் தக்க செய்தி. இந்தியத் துப்பறியும் பேராளர் சங்கர்லால், டோக்கியோவிலிருந்து வந்திருக்கிறார். அவர் எதற்காக இங்கே நியூயார்க் வந்திருக்கிறார் என்பது தெரியவில்லை” என்றான் சண்டானா.

போலீஸ் தலைமைத் தலைவர் நிமிர்ந்தார். நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“உண்மையாகவா? அவர் எங்கே தங்கியிருக்கிறார்?”

“அஸ்டோரியா ஓட்டலில்.”

“நம்முடன் தொடர்பு கொள்ளாமல் அவர் எந்த வழக்கிலும் ஈடுபட முடியாது. பொறுத்திருப்போம். பார்ப்போம்” என்றார் வில்லியம்ஸ்.

சண்டானா விடைபெற்றான்.

புறப்பட்டான். போய் விட்டான்.

வில்லியம்ஸ் தம் கையிலிருந்த சிகரெட்டை அணைத்தார். மற்றொரு சிகரெட்டை எடுத்தார். பற்ற வைத்தார்.

அவர் தொடர்ந்து சிகரெட் பிடித்தார். அவர் தொடர்ந்து சிகரெட் பிடித்தால், அவர் மிக விரைந்து எதையோ சிந்தனை செய்கிறார் என்று அதற்குப் பொருள்!

அத்தியாயம்-11

முற்பகல், இரண்டுமணி.

நியூயார்க் நகரில் ஒரு மருத்துவ விடுதி. ஒரு தனி அறை. அதிலே படுத்துக் கிடந்தான் அந்தோணி. அவன் கையிலும் காலிலும் கட்டுகள் போடப்பட்டிருந்தன. அவனுக்கு வலி தெரியவில்லை!

அந்தோணி காரைத் தொடர்ந்து வந்த ஆல்பர்ட் கூட்டத்தைச் சேர்ந்த மற்றொருவன், அந்தோணியைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு வந்து மருத்துவ விடுதியில் சேர்த்து விட்டான்!

தனிப்பட்ட ஒருவருக்கு உரிமை உடைய ஒரு மருத்துவ விடுதி அது. ஆல்பர்ட் கூட்டத்தைச் சேர்ந்தவர்களில் எவருக்கு என்ன அடிபட்டாலும் அந்த மருத்துவ விடுதியில் தான் சிகிச்சை கொடுப்பது வழக்கம். துப்பாக்கி குண்டு உள்ளே பாய்ந்திருந்தால் கூட எந்தக் கேள்வியும் கேட்காமல் அறுவை சிகிச்சை செய்து குண்டை எடுத்து விடுவார்கள். போலீஸ் இலாகாவுக்கு எந்தவிதமான செய்தியும் கொடுக்க மாட்டார்கள்!

அந்தோணியை ஆல்பர்ட் வந்து பார்க்கவில்லை. ஆல்பர்ட்டிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. அந்தோணி துன்பம் கொண்டான். சங்கர்லாலைக் கொல்லும் முயற்சி தோற்றுவிட்டதால் தனக்கு இடர் வருமோ என்று அஞ்சினான். ஏற்கனவே அவன் பெரும் பணத்தைப் பெற்றிருந்ததாலும், சங்கர்லாலைக் கொல்லாததாலும், ஒரு விபத்திலே சிக்கிவிட்டதாலும், தன்னால் ஆல்பர்ட்டுக்கு இடர் வரலாம் என்றும், ஆல்பர்ட் தன்னைக் கொல்லக்கூடும் என்றும் அந்தோணி அஞ்சினான்!

இதனால் அந்தோணி, நியூயார்க் நகரத்தின் இரயில் நிலையத்தில் மறைத்து வைத்திருந்த பணத்துடன் தப்பி சிக்கர்கோவுக்கு ஓடிவிட எண்ணினான். சிகாகோவில் அவனுக்கு நண்பர்கள் இருந்தார்கள். கொஞ்சம் பணத்தை வாரிவிட்டால் போதும். பல ஆண்டுகளுக்கு அங்கே தலை மறைவாக அவனால் வாழ முடியும்!

அந்தோணி தங்கியிருந்த அந்த மருத்துவ விடுதி, நீக்ரோக்கள் வாழும் பகுதியில் அமைந்திருந்தது. கொஞ்சம் தரக்குறைவான பகுதி, மருத்துவ விடுதியிலே இறுதிப் பகுதியில் இருந்த ஓர் அறையில் அவன் இருந்தான். வெளியே செல்லும் தெரு அவன் அறைக்குப் பக்கத்திலேயே இருந்தது!

அவன் மெல்ல எழுந்தான். மருத்துவ விடுதியில் கொடுத்த வெள்ளை உடையை அகற்றினான். தன் உடையைப் போட்டுக் கொண்டான். அவனுடைய அந்த உடையில் இரத்தம் படிந்திருந்தது. அதனால் படுக்கையின் மீதிருந்த விரிப்பை எடுத்துப் போர்த்துக் கொண்டான். நகர்ந்தான். மெல்ல நகர்ந்தான். சன்னல் வழியே குதித்தான். பின்புறத் தெருவை அடைந்தான். சாலை ஓரமாக நடந்தான். விரைந்து நடந்தான். எந்த நிமிடமும் ஆல்பர்ட்டின் நீண்ட கரம் அவனை எட்டிப் பிடிக்கும் என்ற அச்சத்துடனேயே அவன் நடந்தான். மிக விரைந்து நடந்தான்!

வழியில் ஒரு வாடகைக் கார் வந்தது, பார்த்தான். நிறுத்தினான். காரோட்டி அவனைப் பார்த்தான். உற்றுப் பார்த்தான்.

அந்தோணி காரில் ஏறினான். உட்கார்ந்தான்.

“மருத்துவ விடுதியிலிருந்து கொஞ்சம் குணம் பெற்று வருகிறேன். இன்னும் காய்ச்சல் இருக்கிறது. குளிருகிறது. போர்த்துக் கொண்டிருக்கிறேன். கேள்விகள் கேட்காதே போ, பத்து டாலர் கூடக் கொடுக்கிறேன்” என்றான்.

காரோட்டி பேசவில்லை. காரை ஓட்டினான். அந்தோணி தன் இருப்பிடத்தை அடைந்தான். காரோட்டிக்குப் பணத்தைக் கொடுத்தான். அனுப்பினான். ஒரு வீட்டிற்குள் சென்றான். அவன் வீடு அது. தனி மனிதன். தனியாகவே வாழ்ந்து வந்தான். வேறு எவரும் இலர்!

நிறையப் பணம் கிடைத்ததும், சிக்காகோவில் ஓர் ஓட்டலில் பணியாற்றி வரும் ஒரு வரும் ஒரு பெண்ணை பெண்ணை மணந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தான்.

அவன் வீட்டிற்குள் சென்றான். கதவைச் சாத்தினான். மடையை மாற்றினான். நீண்ட ஓவர்கோட் ஒன்றை எடுத்தான். அணிந்து கொண்டான். வெளியே வந்தான். இப்போது அவனைக் காணும் எவரும் ஐயப்படமாட்டார்கள். கேள்விகள் கேட்கமாட்டார்கள்.

ஆனால்,

ஆல்பர்ட்டின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் அவனை தொடரக் கூடாதே!

அவள் வெளியே வந்தான். சாலையில் நடந்தான். ஓரமாகவே நடந்தான். ஒரு வாடகைக் காரில் நியூயார்க் நகர இரயில் நிலையத்திற்குப் போக வேண்டும். பணப் பெட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும். கென்னடி விமான நிலையத்துக்குப் போக வேண்டும். சிகாகோவுக்குப் போகும் அடுத்த விமானத்தின் புறப்பட வேண்டும். இதுதான் அவன் திட்டம்.

நீண்ட கோட்டின் காலரை மெல்ல மேலே விட்டுக் கொண்டான். தொப்பியைக் கொஞ்சம் முன்னால் தள்ளி வைத்துக் கொண்டான். அவனைப் போல் நீண்ட கோட்டு அணிந்து தொப்பியுடன் உலவியவர்கள் நியூயார்க்கில் பலர் இருந்தார்கள். பெண்களில் கூடப் பலர் இப்படி ஆடை அணிந்திருந்தார்கள்.

அவன் கொஞ்சத் தொலைவு வந்தான். மஞ்சள் நிற வாடகைக்கார் ஒன்று கண்ணில் பட்டது. அவன் கையைத் தட்டினான். அதை வரவழைத்தான். வாடகைக் கார் வந்து நின்றது, அதில் ஏறி உட்கார்ந்தான்.

“இரயில் நிலையத்துக்குப் போ” என்றான்.

வாடகைக் கார் விரைந்தது.

அந்தோணிக்கு எல்லாம் தெரிந்திருந்தது.

ஆனால்-

ஆல்பர்ட்டின் ஆட்களில் ஒருவன், மற்றொரு காரில் அந்தோணியைத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது மட்டும் அவனுக்குத் தெரியவில்லை.

அத்தியாயம்-12

சங்கர்லால், முஷ்டாங் காரை ஓட்டிச் சென்றார். பமேலாவைப் பார்த்துப் பேசிவிட்டுத் திரும்பினார். அஸ்டோரியா ஓட்டலில் ஓய்வு எடுத்துக் கொண்டார். பிற்பகலில் அவர் வெளியே புறப்பட்டார்.

இறந்து கிடந்த பெண்ணின் விக்கிலிருந்து கண்டெடுத்த சாவியை எடுத்து வைத்துக் கொண்டார். நியூயார்க் இரயில் நிலையத்தை நோக்கிச் சென்றார். லாக்கரில் அவள் என்ன வைத்திருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள விரும்பினார்.

தினசரிப் பத்திரிகையில் அவள் கொலையைப் பற்றிய செய்தி எதுவும் வரவில்லை. இது அவருக்கு வியப்பாக இருந்தது. காலையில் பிணத்தை எவராவது கண்டுபிடித்திருந்தால் உடனே செய்தி வந்திருக்கும். ஒரு மணி நேரத்திற்குள் பத்திரிகையில் செய்தி வந்திருக்கும். வரவில்லை!

மேல் நாடுகளில் காலையிலும் மாலையிலும் நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் வருகின்றன. எனவே, எந்தச் செய்தியானாலும் உடனுக்குடன் ஏதாவது ஒரு பத்திரிகையில் வந்து விடும்.

வரவில்லை!

சங்கர்லால், வழியில் இருந்த பத்திரிகைக் கடைகளில் இருந்த அத்தனை தினசரிப் பத்திரிகைகளையும் வாங்கிப் பார்த்தார். எந்தப் பத்திரிகையிலும் இதுபற்றி ஒரு செய்தி கூட இல்லை.

வரவில்லை!

போலீசார் இந்தக் கொலை வழக்கை இரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டார்!

சங்கர்லால், நியூயார்க் இரயில் நிலையத்துக்கு வெளியில் காரை நிறுத்தினார். இறங்கினார். மெல்ல இறங்கினார். காரைப் பூட்டினார். இரயில் நிலையத்திற்குள் சென்றார். மிகப் பெரிய நிலையம் ஒரு பெரிய கூடம். அதில் லாக்கர்கள் இருந்தன. ஆயிரக்கணக்கில் இருந்தன.

சங்கர்லால், தன் சட்டைப் பையில் இருந்த சாவியை எடுத்தார். 54 ஆவது எண்ணுள்ள லாக்கர் எங்கே இருக்கிறது என்று பார்த்தார். ஒரு பெரிய கம்பத்தின் ஓரமாக 54ஆவது லாக்கர் இருந்தது. அவர் அந்த லாக்கருக்குப் பக்கத்தில் போனார். லாக்கரில் சாவியைச் செருகினார். அப்போது-

கொஞ்சத் தொலைவில் மற்றொரு லாக்கரைத் திறந்து கொண்டிருந்தான் அந்தோணி. அந்தோணியைச் சங்கர்லால் பார்க்கவில்லை.

அந்தோணி, விரைந்து லாக்கரைத் திறந்து பணப்பெட்டியை எடுத்தான். எடுத்துக் கொண்டு திரும்பினான். திரும்பியதும் –

சங்கர்லாலைப் பார்த்தான். இடியால் தாக்குண்டவனைப் போல், அப்படியே நின்றான்!

சங்கர்லால் இங்கே எப்படி வந்தார்? என்னைக் கண்டு பிடிக்கத்தான் வந்தாரா? இங்கே பணம் வைத்திருப்பது இவருக்கு எப்படித் தெரியும்?’

அந்தோணியின் மனத்தில் எண்ணங்கள் பல பளிச் பளிச் சென்று மின்னலைப் போல் தோன்றின! தோன்றி மறைந்தன!

சங்கர்லால், வேறொரு லாக்கரைத் திறந்து அதிலிருந்து பெட்டியை எடுத்ததும், அவனுக்கு உண்மை விளங்கிவிட்டது!

‘சங்கர்லால் வேறு ஏதோ ஒரு வேலையாக வந்திருக்கிறார். தன்னைப் பற்றி ஒன்றும் அவருக்கும் தெரியாது’ என்பதை அந்தோணி புரிந்து கொண்டான். அதே நேரத்தில் –

அவன் மனத்தில் திடீரென்று ஒரு திட்டம் –

அவன், பணப்பெட்டியுடன் சிகாகோ நகருக்கு ஓடி விட்டாலும் கூட, ஆல்பர்ட்டின் ஆட்கள் எப்படியும் அவனைத் தேடுவார்கள். தேடிக் கண்டுபிடிப்பார்கள். வேட்டையாடுவார்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், அவன் மறைந்து மறைந்து வாழவேண்டும். பதுங்கிப் பதுங்கி வாழ வேண்டும். அதைவிடச் சங்கர்லாலைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆல்பர்ட்டிடம் மீதிப் பணத்தைப் பெற்றுக் கொண்டு தென் அமெரிக்காவுக்கோ, கிழக்கு இந்தியத் தீவுக்கோ போய்ப் பெரும்பணத்துடன், போலீஸ் அச்சமின்றி அமைதியுடன் வாழலாமே என்று அவன் எண்ணினான்!

அவனிடம் ஒரு துப்பாக்கி இருந்தது. அவன் அந்தத் துப்பாக்கியை எடுத்தான். சங்கர்லாலைக் குறிபார்த்தான். பளிச்சென்று சுட்டான்! சுட்டபோது

மூன்று வேட்டுகள் அதிர்ந்தன!

தொடர்ந்து மூன்று வேட்டுகள் அதிர்ந்த அதே நேரத்தில், சங்கர்லால் மின்னல் விரைவில் ஓர் இரும்புத் தூணின் மறைவில் பாய்ந்தார். பதுங்கினார்!

தூணின் மறைவிலிருந்து பார்த்தபோது, கொஞ்சத் தொலைவில் நின்ற அந்தோணி, அப்படியே குப்புறவிழுந்தான். அவன் பையிலிருந்த துப்பாக்கி, புகையுடன் கீழே விழுந்தது! அவன் முதுகில் மூன்று இடங்களில் ஓட்டைகள் விழுந்தன! மூன்று இடங்களிலும் வட்டமாக இரத்தம் கசிந்து பரவி வழிந்தது!

இரயில் நிலையத்தில் இருந்த கூட்டம், இங்கும் அங்கும் அஞ்சி அலைபாய்ந்து ஓடியது. பெண்கள் அலறினார்கள். ஆண்கள் அவர்களை இழுத்துக் கொண்டு ஓடினார்கள்!

அந்தோணிக்குப் பின்னாலிருந்து அவனைச் சுட்டவன், பாய்ந்து வந்து, அந்தோணியின் கையிலிருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடினான். ஓடி மறைந்தான்!

அந்தோணி, சங்கர்லாலைச் சுட்ட அதே நேரத்தில் பின்னாலிருந்து ஆல்பர்ட்டின் ஆள் அவனைச் சுட்டதால் அந்தோணியின் குறி தவறியது. அதனால், சங்கர்லால் தூணின் மறைவில் பதுங்கித் தப்பிவிட்டார். அந்தோணி விழுந்தான். இறந்தான்! ஆல்பர்ட்டின் ஆள், பணப்பெட்டியுடன் ஓடி மறைந்து விட்டான்!

தன்னைச் சுட முயன்ற ஒருவனைப் பின்னாலிருந்து ஒருவன் சீட்டதையும், சுட்டவன், சுடப்பட்டவன் கையிலிருந்த பெட்டியை எடுத்து கொண்டு ஓடி மறைந்ததையும் சங்கர்லால் நன்றாகப் பார்த்தார்!

உடனே சுட்டுவிட்டு ஓடும் அவனைத் தொடர்ந்தார்.

அவன், கூட்டத்தில் துப்பாக்கியைக் காட்டி மற்றவர்களை அச்சுறுத்தி விட்டுக் காற்றாய்ப் பறந்தான்! மாயமாய் மறைந்து போனான்!

வெளியில் பாய்ந்து வந்த சங்கர்லால், அவன் ஒரு காரில் ஏறிப் போவதைப் பார்த்தார். அவனைத் தொடர்ந்து போக எண்ணி அவர் தன் முஷ்டாங் காரை நோக்கிச் சென்றார். அவர் தன் காரை அடைவதற்குள் கொலையாளியின் கார் விரைந்து பறந்தது. மறைந்தது!

சங்கர்லால், காரைக் கிளப்பியபோது அவர் காருக்கு முன்னால் இரண்டு போலீஸ் சார்ஜெண்டுகள் தோன்றினார்கள். இருவரும் உயரமாக இருந்தார்கள். பருமனாக இருந்தார்கள். தங்கள் கண்களுக்கு மிகப் பெரிய அளவில் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார்கள். அரக்கர்களைப் போல இருந்தார்கள்.

அமெரிக்கப் போலீசார் உலகத்திலேயே மிகவும் திறமை வாய்ந்தவர்கள். வலிமையும் பெற்றவர்கள். இது சங்கர்லாலுக்குத் தெரியும்!

அவர் காரை நிறுத்திவிட்டு, தலையை மட்டும் வெளியில் நீட்டினார். பார்த்தார்.

அவர்களில் ஒருவன், “நீங்கள்தானே சங்கர்லால்?” என்றான்.

“ஆமாம்”.

“உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும். போலீஸ் தலைமைத் தலைவரின் அலுவலகத்துக்கு வருகிறீர்களா?”

“இப்போதா?”

“ஆமாம். இப்போது நடந்த கொலை வழக்கில் நீங்கள் ஒரு சாட்சி. ஆகையால் போலீஸ் தலைமைத் தலைவர் வில்லியம்ஸ் உங்களைக் காண விரும்புகிறார்” என்றான் அந்த சார்ஜெண்ட்.

மற்றொரு சார்ஜெண்ட், சங்கர்லாலைப் பார்த்து, ‘போலீஸ் தலைமைத் தலைவரின் அலுவலகத்துக்கு உங்களுக்கு வழி தெரியுமா? எங்கள் பின்னாலேயே வாருங்கள். நாங்கள் முன்னால் செல்லுகிறோம்” என்றான்.

இருவரும் போலீஸ் கார் ஒன்றில் ஏறினார்கள்.

உட்கார்ந்தார்கள்.

சங்கர்லாலின் கார், அவர்கள் காரைத் தொடர்ந்தது.

– தொடரும்…

– நியூயார்க்கில் சங்கர்லால் (நாவல்), முதல் பதிப்பு: 1983, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *