தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,710 
 

ஒரு மனிதன் காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

அவன் உழைத்துச் சாப்பிடும் எண்ணமில்லாத சோம்பேறி. வயிறு பசித்தாலும் யாராவது கொடுத்தால் சாப்பிட்டுக் கொள்ளலாம் எனும் முயற்சியில்லாத சிந்தனையைக் கொண்டவன்.

உழைப்பில் வாழ்அவன் பெரியவனாகும் வரை அவனது பெற்றோர், அவனது பழக்கத்தினை மாற்ற முடியாதவர்களாக இருந்தனர். பெற்ற கடமைக்காக அவனுக்கு உணவும் உடையும் கொடுத்து வளர்த்து வந்தார்கள்.

அவர்களுக்கும் வயதாகி, நோயாளிகளாக மாறி ஒரு கட்டத்தில் இறந்தும் போனார்கள்.

பெற்றோருக்குப் பின், பெற்றோரின் சேமிப்பு, உறவினர் சிலரின் உதவிகளால் இதுவரைத் தனது பசியைப் போக்கிக் கொண்டு எப்படியோ வாழ்ந்து வந்தான்.

இப்பொழுது அதுவும் இல்லாத நிலையில் வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டான். எந்தவித முயற்சியும் இல்லாமல் உணவைப் பற்றிக் கவலைப்படாமல் கால் போனபோக்கில் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்படியே நடந்தவன் ஒரு காட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தான்.

காட்டின் வழியே போகும்போது, கால்களை இழந்த நரி ஒன்று கீழே படுத்துக் கிடப்பதைப் பார்த்தான்.

“கால்கள் இல்லாது, இரைதேட முடியாத நரி எப்படிப் பிழைத்திருக்கிறது..? அதுவும் எந்தவித வாட்டமும் இல்லாமல்..?’ என்று ஆச்சரியப்பட்டான் அந்த மனிதன்.

அந்த நேரத்தில் புலி ஒன்று தான் வேட்டையாடிய பிராணியின் மாமிசத்துண்டுகளை வாயில் கவ்விக் கொண்டு அந்தப் பக்கமாக வந்தது.

அது கால்களில்லாமல் படுத்துக் கிடக்கும் நரிக்குத் தான் கொண்டுவந்த மாமிச உணவைக் கொடுத்து சாப்பிட வைத்தது. நரி சாப்பிட்டு முடித்ததும், புலி தன் வழியே சென்றுவிட்டது.

“கொடிய புலி ஒன்று, அதற்குக் கீழான ஒரு நரிக்கு, அதுவும் கால்கள் இல்லாமல் பலவீனமான நிலையிலுள்ள பிராணிக்கு உணவு கொடுத்துவிட்டுச் செல்கிறதே… இது அதிசயமாக இருக்கிறதே!’ என்று அந்த மனிதன் வியப்படைந்தான்.

“இது இப்படி தொடர்ந்து நடக்கின்றதா என்று பார்க்க வேண்டுமே..!’ என்ற நினைப்போடு அங்கே உதிர்ந்து கிடந்த சில பழங்களைத் தின்றுவிட்டு நரிக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு நிழலான இடமாகப் பார்த்துப் படுத்துக் கொண்டான். அப்படியே உறங்கிப் போய் விட்டான்.

மறுநாளும் புலி, நரிக்கு முதல்நாள் போலவே உணவு கொடுத்துச் செல்வதைக் கண்டான்.

“கடவுள்தான் இந்த அதிசயத்தைச் செய்கிறார். கால்களில்லாத நரியிடம்தான் கடவுளுக்கு எத்தனை பரிவு? முடியாதவர்களுக்குக் கடவுள் இப்படி உதவுகிறாரே! அதனால்தான் நரி இந்த நிலையிலும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது போலும்…’ என்று எண்ணிய மனிதன், “நானும் நரிபோல,

செயல்பட முடியாத முடவன் போல படுத்துக் கிடந்தால் எனக்கும் தானாக உணவு கிடைக்க கடவுள் உதவுவார்…’ என்று நினைக்க ஆரம்பித்தான்.

தன் நினைப்பைச் செயல்படுத்த மனிதன் விரைவான நடவடிக்கையில் இறங்கினான்.

ஒரு மரத்தின் நிழலைத் தேடி, அங்கு தன் துண்டை விரித்தான். அதன் மேல் முடவனைப்போல முகத்தில் வாட்டத்தை வரவழைத்துக் கொண்டு படுத்துக் கொண்டான்.

அவன் அப்படிப் படுத்துக் கிடக்கத் துவங்கி இரண்டு மூன்று நாட்கள் கடந்து போயின. அவன் பசியால் உண்மையிலேயே வாட்டமுற்றான். அடுத்த சில நாட்களில் உணவின்மையால் உடல் சோர்ந்துபோய் நோயாளி போல ஆகிவிட்டான். மரணபயம் வந்துவிட்டது.

அப்போது அவனுக்கு அசரீரிக் குரல் ஒன்று கேட்டது –

“அற்பனே! நீ தவறான சிந்தனையில் செயல்பட்டு கடவுளை ஏமாற்றவும் அவரது பரிவுச் செயலைக் கேலி செய்யவும் நினைக்கிறாய். புலியின் செயலையும் நரியின் நிலைமையையும் பார்த்து இந்தச் செயலுக்கு வந்துள்ளாய். நீ நினைப்பது தவறு. நரி உண்மையிலேயே இயலாமையால் தவிக்கிறது. அதனால் அதற்கு உணவு கிடைக்கின்றது. உனது இயலாமை போலியானது. நீ கண்களை உண்மையின் பக்கமாகத் திருப்பு. உழைக்காமல் உணவு கிடைக்கும் என்ற எண்ணத்தைக் கைவிடு. உழைத்துச் சாப்பிடு. உன் உழைப்பிலே வாழ். அப்பொழுதுதான் கடவுளின் அருள் உனக்குக் கிடைக்கும்… அவரது பரிவும் உன்னை நோக்கி வரும்!’

கடவுளின் செய்தியாகவே அந்த அசரீரியின் சொற்களை ஏற்றுக் கொண்ட அந்த மனிதன் திருந்தினான்.

காட்டில் உணவைத் தேடி உண்டு, தனது பசிக் களைப்பைப் போக்கிக் கொண்டு, உழைத்துப் பிழைக்கும் உறுதியோடு நாட்டை நோக்கிப் புறப்பட்டான்.

“ஏமாற்றுவதும் பொய் புனைவதும் சோம்பலும் மனிதனது வாட்டத்தைப் போக்காது. அதை அதிகரிக்கவே செய்யும். உண்மையும் உழைப்புமே வாழ்வை மேம்படுத்தும்’ இந்த நீதிமொழிகளை அந்த மனிதன் நாட்டில் இனி எல்லோருக்கும் சொல்வான்.

– மதுரை க.பரமசிவன் (மார்ச் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *