குருஷேத்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2023
பார்வையிட்டோர்: 3,280 
 
 

அங்கம் 3 | அங்கம் 4 | அங்கம் 5

இப்போதெல்லாம் சாரதா கல்லூரிக்கு அக்காமார் மாதிரியே தினமும் போய் வருகிறாள். அந்தத் தடங்கள் அவளுக்குப் புதியவை. கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்கே நடைபவனியாக அவள் போய் வந்த காலம் அவளுக்கு ஒரு பொற்காலம். இனிச் சுதந்திரமான அந்த நடைப்பயணமில்லை. உடம்பைச் சுற்றி மூடிமறைக்க அரைத்தாவணி வேறு அவள் போடவேண்டிய தேவை ஏற்பட்டது. அந்தப்பன்னிரண்டு வயது இளப்பிராயத்திலே அவளுக்கு அந்தச்சிலுவை.

ஆறாம் வகுப்பில் கால்வைத்த போது ஒரு புதிய சகாப்தம் தொடங்கி விட்ட மாதிரி இருந்தது. வகுப்பு டீச்சர் விஜயலட்சுமியக்கா. அங்கெல்லாம் டீச்சரை அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். விஜயலட்சுமியக்கா நல்ல வெள்ளை நிறம். களையான முகம். கண்கள் ஒளிவிட்டுச் சிரிக்கும் போது கறையெரிந்து போகும்.

சாரதாவை அவர் மனதார ஏற்றுக்கொண்டிருந்தார். அதற்குக் காரணம் அவளின் தமிழ்ப் புலமை. சரளமாக அவள் தமிழ் எழுதுவாள். கட்டுரைகள் சுயசிந்தனைத் தெளிவோடு அபூர்வமாக இருக்கும். சிறுவயதிலிருந்தே வாசிப்புத் திறனிருந்ததால்தான் இந்தச்சிறப்பு அவளிடம். வுpஜயலட்சுமியக்கா அவள் எழுதும் கட்டுரைகளை வகுப்பு

மாணவர்களறியப் பிரகடனப்படுத்தி வாசித்துக் காட்டிய சந்தர்ப்பங்களுமுண்டு. அவளுக்கு அப்போது மனம் கொள்ளாத பெருமிதமாகவிருக்கும். எனினும் ஒரு மனக்குறை. முன்புபோல் ஆனந்த விகடன் வாசிக்க முடியாமல் போன குறை,நெஞ்சை அரித்தது .லஷ்மியின் நாவல்களென்றால் அவளுக்கு உயிர். அடுத்தவீடு தொடர்கதை பாதியிலே நின்று போன மன வருத்தம் அவளுக்கு.அது மட்டுமல்ல மனம்கொள்ளாத பரவசமூட்டும் அவளது அந்த அழகிய கிராமத்தின் சுவடுகளே விட்டுப் ;போனமாதிரித் ;தான்.தினமும் கல்லூரிக்குக் காரிலேயே போய்வருவது சலிப்பாக இருந்தது. வீட்டிற்கு வந்தால் சிறைதான். அப்பா கிடுகு வேலிக்கப்பால் எங்குமே அவளைப் போக விடுவதில்லை. திருமணமானால்தான் இந்த விலங்கு உடையுமென்று எல்லோரும் காத்திருக்கிறார்கள். பவானி அக்கா கூடி அந்த வழிதான். அவள் கல்யாணவயதில் கனவுகளோடு காத்திருக்கும் இளமை மனம் அவளுக்கு. எஸ்எஸ்ஸி மட்டும் படித்துப் பாஸ் பண்ணிவிட்டு மேலே படிப்பைத் தொடர விரும்பாமல் வீட்டுச் சிறைக்குள்ளேயே இப்போது அவள். அம்மாவுக்கு உதவியாக அடுக்களைக்குள் அவளின் தடங்;கள். அது ஒற்றைநிழலில், துருவேறிக் கொண்டிப்பதாகச் சாரதாவுக்குப் பிரமை மூளும். இதையெல்லாம் பார்த்தவாறு படிப்புலகில் சஞ்சரிக்க அவளால் முடிவதில்லை. தமிழ் ஒன்றே மூச்சு விட்டுப் போகாத வளமான நினைவுகளுடன் நன்றாக எழுத வந்தது. மற்றப்பாடங்கள் மண்டைக்குள் ஏறவில்லை. விஜயலட்சுமியக்காவே பலதடவைகள் சொல்லியிருக்கிறார்.

‘சாரதா! நீர் தமிழ் மட்டும் செய்தால் போதாது மற்றப்பாடங்களிலும் கவனம் எடுக்க வேணும்’

எங்கே முடிந்தது.சாரதாவால். தமிழ் படித்தபோதுதான் தேவசஞ்சாரமாக இருக்கும். கணிதபாடம் என்றால் சுத்தமாகப் பிடிக்காது. மிகக் குறைவான புள்ளியே கிடைத்தன. இருந்தாலும் எப்படியோ ஒவ்வொரு வகுப்பிலும் தேறி எஸ்எஸ்ஸி வரை வந்து விட்டாள். சரியாக நான்கு வருடங்கள் எப்படி ஓடினதென்றே தெரியவில்லை. அழகான பருவம் அவளுக்கு. படிப்பு ஏறாவிட்டாலும் கண்களுக்குள் காட்சிமயமாக உலகம் பிடிபடுகிற வயது. எனினும் உள்நெருடலாக அதில் மயக்கமிருந்தது. வாழ்க்கை பற்றி எதிர்மறையான எவ்வளவோ எண்ணஅலைகள். பவானி அக்காவினுடைய கல்யாணசமயம். செந்தூரன் படிப்பு முடிந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளனாக இருந்தாலும் விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வரும் போது வீடுகளைகட்டும். அவனுக்கும் கல்யாண வயதுதான்.

தங்கைமார் இருவரினதும் கல்யாணம் ஒப்பேறியபின் தான் தனது கல்யாணமென்று, சொல்லிக்கொண்டிருக்கிறான். பவானியின் கல்யாணத்துக்காக இப்போது விடுமுறையில் வந்து நிற்கிறான். அவன் வருகையில் சாரதாவுக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது. கல்யாணத்தன்று கட்டுவதற்குச் சரிகை இழைத்த புதுப்பாவாடை சட்டை, தாவணி வேறு அப்பா வாங்கிக் கொடுத்திருந்தார். கடன்பட்டுத்தான் இந்த ஆடம்பரச் செலவு.

பவானியக்காவுக்கு உள்ளுர் மணமகன்தான். தூரத்து உறவும் கூட. பெயர் பார்த்தீபன். கச்சேரியில் கிளார்க்காக இருக்கிறான். அவனுக்கு நிறைய ஆண் சகோதரர்கள். வாட்டசாட்டமான கம்பீர அழகு அவனுடையது. வசீகரமான வட்டக்கண்களைக் கொண்ட முகத்தில் உதடுகளுக்கு மேலே அழகான மீசை. அவனுக்கு ஒரு தனிக்களையைக் கொடுத்தது அவர்களுடைய கல்யாணம் ;;மிக விமரிசையாக நடந்தேறியது. வில்லுப்பந்தல் போட்டுப் பெரிய அளவில் அலங்காரமணப்பந்தல் கண்ணைப் பறித்தது. அதற்கே ஏகப்பட்ட செலவு. வீடு முழுக்க வெள்ளை கட்டித் தூண்களில் மலர்க்கொத்துக்கள் செருகி வீடே தேவலோகம் போலக் காட்சி தந்தது. பலகார வாசனை மூக்கைத் துளைத்தது. ஒரு கிழமைவரை உறவுப்பட்டாளத்திற்கு அம்மா விருந்து படைத்தது, சாரதாவுக்கு என்னவோ போலிருந்தது. அவள் தனியாக நின்றுகொண்டிருந்தாள் அவள் கண்முன்னாலேயே அக்கா கல்யாணத் தேர் ஏறிப்போனது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பகல் முழுக்கப் பூட்டிய அறைக்குள் புதுமணமக்களினுடைய சல்லாபக் களிப்பு அலைகள் காலடியில் பாய்வதாகச் சாரதா பிரமை கொண்டாள். இந்தத் தெளிந்து ஓடும் பரவச அலைகளிடையே மனம் வேறுபட்டுத் தன்னிச்சையாக நின்று கொண்டிருந்தாள். வீட்டில் கல்யாணக்களை இன்னும் மாறவில்லை. செந்தூரன் குரல் கேட்டது.

‘என்ன சாரு பார்க்கிறாய்.? நீயும் ஒருநாள் இப்படித்தானே’ என்றான் அவன் சுயாததீனமாக.

‘போங்களண்ணா. இந்த வெளிச்சத்துக்குப் பின்னாலே வெறிச்சோடியிருக்கிற வாழ்க்கையின் முகம் பிடிபட்டபின் எனக்கு ஒன்றையுமே யோசிக்க வரேலை. நான் இப்படியே இருந்திட்டுப் போறனே’

‘நீ ஏன் எதிர்மறையாக வாழ்க்கையைப் பார்க்க வேணும்?.உனக்கு என்ன மனக்குறை? எதுக்காக நீ இப்படியெல்லாம் யோசிக்கவேணும்? தனியாக ஒரு பெண் வாழ இயலுமா?’

‘இயலுமண்ணா. மனதிலே வைராக்கியமிருந்தால் துறவியாக இருக்க என்னதடை?’.

அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவளுக்கென்ன தெரியும் சின்னப் பெண் என்று யோசனை ஓடியது. உணர்ச்சிகளையடக்கியாள்வதற்கு நீ என்ன தபஸ்வினியா என்று கேட்கத் தோன்றியது. ஆனால் கேட்க மனம் வரவில்லை. போகப் போகச் சரியாகிவிடுமென்று நினைத்தான். அவளோ தன்வட்டத்துக்குள்ளேயே நின்று கொண்டிருந்தாள். இன்னும் படிப்பு முடியவில்லை. சுபாவக்காவுடன் தனியாகக் கல்லுரி போய் வருவது சங்கடமாக இருந்தது. அவளுடைய உலகம் வேறு. அவளுக்குப் படிப்பு ஏறவில்லை. அழகு ஒன்றுதான் கதியென்று இருந்தாள். அவளின் அலங்கார ஒப்பனைக்காக அண்ணன் வாங்கித் தந்த அலங்காரப் பொருட்கள் நிலைக்கண்ணாடி மேசையில் நிரம்பி வழிந்தன. சாரதா அவற்றை மனதால் கூடத் தீண்டவில்லை. உடல்வழி அழகு வெறும் மாயம் என்றுபட்டது. மனம் சுத்தமாக இருந்தால் போதுமென்று நம்பினாள். அன்பு நிறைவான ஒரு வாழ்க்கையே அவளுக்குப் பெரிய அளவில் தேவையாக இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *