பொன்னியின் செல்வன்

0
கதையாசிரியர்: ,
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 10, 2023
பார்வையிட்டோர்: 2,349 
 
 

(2012ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

11 – 20 | 21 – 30

21. லதா மண்டபம்

அடர்ந்த மாந்தோப்புக்கிடையே சென்ற ஒற்றையடிப் பாதையின் வழியாக அம்மங்கை விடுவிடுவென்று நடந்து செல்ல, வந்தியத்தேவனும் விரைவாகத் தொடர்ந்து சென்றான். மரஞ் செடிகளின் மீது மோதிக் கொள்ளாமல், அந்த இருளில் நடந்து செல்லுவது கஷ்டமாகத்தான் இருந்தது. ஒரு சமயம் இவன் மரத்தில் மோதிக் கொள்ளப் பார்த்துத் தயங்கி நின்றபோது, அந்த மங்கை திரும்பிப் பார்த்து, “ஏன் நிற்கிறாய்? வழி மறந்து போய் விட்டதா? நீதான் இருட்டில் கண் தெரிகிற மனிதன் ஆயிற்றே!” என்றாள். அதற்குப் பதிலாக வந்தியத்தேவன் உதட்டில் விரலை வைத்து முன்னால் அவள் சொன்னது போல் “உஷ்!” என்றான். அதே நேரத்தில் மதில் சுவருக்கு வெளியே ஏதோ சப்தம் கேட்டது. மனித நடமாட்டம் போலத் தொனித்தது. பிறகு இருவரும் மறுபடி நடந்தார்கள்.

அச்சமயம் காற்றின் அசைவில் மரக்கிளைகள் விலகி நிலாக் கதிர் ஒன்று வந்தியத்தேவனுடைய முகத்தின் மீது விழுந்தது.

அந்தப் பெண் சற்று வியப்புடனும் திகைப்புடனும் அவனைப் பார்த்தாள்.

“என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டான்.

“நீ, நீதானா என்று பார்த்தேன்!”

“நான், நான் இல்லாவிட்டால் வேறு யாராயிருப்பேன்?”

“போன தடவை நீ வந்திருந்த போது பெரிய மீசை வைத்திருந்தாயே!”

“நல்ல கேள்வி கேட்கிறாய்! என்னைப் போல் சுவர் ஏறி குதித்து வருகிறவன் அடிக்கடி வேஷத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால் எப்படி?”

“முன்னைக்கு இப்போது இளமையாய்த் தோன்றுகிறாயே?”

“உற்சாகம் இருக்கும்போது இளமைதானே வருகிறது!”

“அப்படி உனக்கு என்ன உற்சாகம் வந்தது?”

“உங்கள் மகாராணியின் தயவு இருக்கும்போது உற்சாகத்துக்கு என்ன குறைவு?”

“பரிகாசம் செய்ய வேண்டாம். இன்றைக்கு எங்கள் எஜமானி இளைய ராணிதான். ஒருநாள் நிச்சயமாக மகாராணி ஆவார்கள்!”

“அதைத்தான் நானும் சொல்லுகிறேன்.”

“இதுதானா சொல்வாய்? உன்னுடைய மந்திர சக்தியினால்தான் மகாராணி ஆனார்கள் என்று கூடச் சொல்வாய்! பாதி ராஜ்யத்தைக் கொடு என்று கேட்டாலும் கேட்பாய்!”

வந்தியத்தேவன் அறிய விரும்பியதை ஒருவாறு அறிந்து கொண்டான். பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை. தீவிரமாக யோசித்துக் கொண்டே நடந்தான்.

தான் சந்திக்கப் போகிறது யாரை? பழுவூர் இளையராணியாயிருக்கலாம். அல்லது மதுராந்தகத் தேவரை மணந்து கொண்ட சின்னப் பழுவேட்டரையரின் மகளாயிருக்கலாம். தன்னை மந்திரவாதியென்று எண்ணி அந்தப் பெண் அழைத்துக் கொண்டு போகிறாள். போய், அந்த ‘இளையராணி’ யாராயிருந்தாலும் அவளைச் சந்திக்கும்போது எப்படி நடந்து கொள்வது? நெஞ்சே! தைரியத்தைக் கைவிடாதே! தைரியம் உள்ள வரையில் ஜயமும் உண்டு! சமயத்தில் ஏதேனும் யுக்தி தோன்றாமல் போகாது!

ஒரு பெரிய மாளிகையை அவர்கள் நெருங்கிச் சென்றார்கள். ஆனால் மாளிகையின் முன் வாசலை நோக்கிச் செல்லவில்லை. பின்புற வாசலையும் நெருங்கவில்லை. மாளிகையின் ஒரு பக்கத்தில் தோட்டத்துக்குள் நீட்டி விட்டிருந்த சிருங்கார லதா மண்டபத்தை நெருங்கினார்கள். இன்னும் அருகில் நெருங்கிய போது, அந்த லதா மண்டபம் இரண்டு பெரிய பிரம்மாண்டமான மாளிகைகளை ஒன்று சேர்க்கும் பாதையைப் போல் அமைந்திருப்பது தெரிந்தது. அப்படிச் சேர்க்கப்பட்ட இரு கட்டடங்களும் ஒருவிதத்தில் மாறுபட்டிருந்தன. வலதுபுறத்து மாளிகை அதன் உள்ளே சுடர் விட்டு எரிந்த பல தீபங்களினால் ஜொலித்துக் கொண்டிருந்தது. உள்ளிருந்து பலவித கலகலப்பான தொனிகள் வந்து கொண்டிருந்தன. இடதுபுறத்துக் கட்டடத்திலோ, ஒரு சின்னஞ் சிறு தீபம் கூட எரியவில்லை. நிலா வெளிச்சத்தில் அதன் வெளிச்சுவர்கள் நெடிதுயர்ந்து தெரிந்தன. ஆனால் அந்த மாளிகையின் உள்ளே நிசப்தமும் இருளும் குடிகொண்டிருந்தன.

வந்தியத்தேவனை அழைத்துக் கொண்டு வந்த பெண், லதா மண்டபத்தை அணுகியதும் அவனைப் பார்த்துச் சமிக்ஞையினால் அங்கேயே நிற்கும்படி சொன்னாள். அவனும் அப்படியே நின்றான். அவ்விதம் நின்றபோது தான் அந்த இடத்தில் நிறைந்திருந்த மலர்களின் நறுமணத்தை அவன் உணர்ந்தான்.அப்பப்பா! என்ன வாசம்! மூக்கில் நெடி போல ஏறித் தலையைக் கிறுகிறுக்க அடிக்கிறதே!

அந்தப் பெண் லதா மண்டபத்துக்குள் நுழைந்ததும், அவளுடைய குரலும் இன்னொரு இனிய பெண் குரலும் கேட்டன. “வரச் சொல் உடனே! கேட்பானேன்? நான்தான் இத்தனை நேரமாய்க் காத்திருக்கிறேன் என்று தெரியுமே?” என்ற சொற்கள் அவனுக்கு மயக்கத்தை உண்டாக்கின. அந்தக் குரல் பழுவூர் இளையராணியின் குரல்தான்! சந்தேகமில்லை! அடுத்த கணம் அவள் முன்னால் போய் நிற்கப் போகிறோம். அந்த நிலைமையை எவ்விதம் சமாளிக்கப் போகிறோம்? எதிர்பார்த்த மந்திரவாதிக்குப் பதிலாகப் பல்லக்கில் வந்து மோதிய மனிதன் வந்து நிற்பதைக் கண்டு அவள் என்ன நினைப்பாள்? ஆச்சரியப்படுவாளா? கோபம் கொள்வாளா? ஒருவேளை மகிழ்ச்சி அடைவாளா?

அவனை அழைத்து வந்த மங்கை லதா மண்டபத்து வாசலில் நின்றபடி சமிக்ஞையால் அழைத்தாள்.

வந்தியத்தேவன் அவள் நின்ற இடத்தை அடைந்து மண்டபத்தின் உட்புறம் நோக்கினான். ஒரு நொடிப் பொழுதில் அங்கே தோன்றிய காட்சி அவன் கண் வழியாக மனத்தில் பதிந்தது. தங்க விளக்கு ஸ்தம்பத்தில் ஒளிர்ந்த தீபச் சுடர் பொன் ஒளியைப் பரப்பியது. பல வர்ண நறுமண மலர்களைப் பரப்பிய சப்ரகூட மஞ்சத்தில் ஒரு பெண் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு வீற்றிருந்தாள். அவள் பழுவூர் இளையராணிதான். பகலில் பல்லக்கில் பார்த்தபோது அவள் அழகியாகத் தோன்றினாள். இரவில் தங்கக் குத்துவிளக்கின் வெளிச்சத்தில் அழகென்னும் தெய்வமே உருவெடுத்தது போலக் காணப்பட்டாள்.

வந்தியத்தேவனைப் பார்த்த பழுவூர் இளையராணி நந்தினி, அவளுடைய பவழ இதழ்கள் சிறிது விரிந்து முத்துப் பற்களை வெளிக்காட்டும்படி வியப்புடன் நோக்கிக் கொண்டிருந்தாள். பேச முடியாத நிலையை அவள் அச்சமயம் அடைந்திருந்தது வந்தியத்தேவனுக்கு அனுகூலமாகப் போயிற்று.

இலேசாக அவன் ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு, “அம்மணி! தங்கள் தாதிப் பெண்ணுக்குத் திடீரென்று சந்தேகம் வந்து விட்டது;– நான் மந்திரவாதியா இல்லையா என்று! அதை எப்படிக் கேட்டாள் என்று நினைக்கிறீர்கள்? ‘நீ நீதானா?’ என்று கேட்டாள்!” என்று சொல்லி மறுபடியும் சிரித்தான்.

நந்தினி புன்னகை புரிந்தாள். “இவளுக்கு அப்படித்தான் ஏதாவது சந்தேகம் திடீர் திடீர் என்று வந்துவிடும்! வாசுகி! ஏன் இங்கேயே மரம்போல் நிற்கிறாய்? உன் இடத்துக்குப் போ! யாராவது வரும் காலடிச் சத்தம் கேட்டால் கதவைப் படீரென்று சாத்து! என்றாள் நந்தினி.

“இதோ, அம்மா!” என்று சொல்லிவிட்டு, வாசுகி லதா மண்டபத்தின் உள் வழியாகப் பிரகாச மாளிகைக்குச் சென்ற நடைபாதையில் நடந்து போய்ச் சற்றுத் தூரத்தில் மங்கலாகத் தெரிந்த வாசற்படியாண்டை உட்கார்ந்து கொண்டாள்.

நந்தினி சிறிது குரலைத் தாழ்த்திக் கொண்டு, “உன்னை மந்திரவாதியில்லையென்றா இவள் சந்தேகிக்கிறாள்? அசட்டுப் பெண்! மந்திரவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்களில் முக்கால்வாசிப் பேர் வெறும் பொய்யர்கள். நீதான் உண்மை மந்திரவாதி! என்ன மாய மந்திரம் செய்து இந்தச் சமயத்தில் இங்கே வந்தாய்?” என்று கேட்டாள்.

“அம்மணி! மாயமந்திரம் செய்து நான் இங்கு வரவில்லை. சுவர் மீது சாத்தியிருந்த ஏணி மேல் ஏறித்தான் வந்தேன்!” என்றான் வந்தியத்தேவன்.

“அதுதான் தெரிகிறதே! இந்தப் பெண்ணை என்ன மாயமந்திரம் செய்து ஏமாற்றினாய் என்று கேட்டேன்.”

“நிலா வெளிச்சத்தில் ஒரு புன்னகை புரிந்தேன். அவ்வளவுதான்! அதற்குச் சரிப்பட்டு வராவிட்டால் தாங்கள் கொடுத்த மந்திர மோதிரத்தைக் காட்ட எண்ணியிருந்தேன்.”

“அதைப் பத்திரமாய் வைத்திருக்கிறாய் அல்லவா? அந்த மோதிரம் இருக்கும்போது பட்டப் பகலில் பகிரங்கமாக இங்கே வந்திருக்கலாமே? எதற்காக இந்தக் குருட்டு வழியில் திருட்டுத்தனமாக வந்தாய்?”

“அம்மணி! தங்கள் மைத்துனர் இருக்கிறாரே, சின்னப் பழுவேட்டரையர், அவருடைய ஆட்கள் என்னைப் பின்தொடர்ந்து ஒரு கணம் கூடப் பிரியாமல் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து பிரிய பட்டபாடு பெரும் பாடாகப் போயிற்று. பிரிந்த பிறகு சந்து பொந்துகளில் புகுந்து தங்களுடைய மாளிகை மதில் சுவரைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் சுவர் மேல் வைத்த ஏணியைப் பார்த்ததும் தாங்கள் தான் இந்த ஏழையை நினைவுகூர்ந்து இந்த ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் என்று எண்ணிவிட்டேன். அது தவறு என்று தெரிந்து கொண்டேன். மன்னிக்க வேண்டும்.”

“மன்னிப்பதற்கு அவசியம் ஒன்றும் ஏற்படவில்லையே!”

“அது எப்படி, அம்மணி ?”

“நீ நினைத்தது அவ்வளவாகத் தவறும் இல்லை. மந்திரவாதியை எதற்காக நான் தருவிக்க நினைத்தேன், தெரியுமா?”

“தெரியவில்லை அம்மணி! எனக்கு மந்திரமும் தெரியாது; ஜோசியமும் தெரியாது!”

“உன்னை நேற்று பார்த்தது முதலாவது உன்னுடைய ஞாபகமாகவே இருந்தது. நீ ஏன் இன்னும் என்னைப் பார்க்க வரவில்லையென்று தெரிந்து கொள்ள விரும்பினேன். அதற்காகவே தான் நான் மந்திரவாதியைக் கூப்பிட்டனுப்பினேன். ஏதோ ஆழ்வார்க்கடியார்நம்பி என்பவர் செய்தி சொல்லி அனுப்பியதாக…”

“ஆம், அம்மணி, அவர் சொல்லி அனுப்பிய செய்தியைத் தங்களிடம் சொல்வதற்காகவே முதலில் தங்களைப் பார்க்க விரும்பினேன். தங்களை ஒருமுறை பார்த்த பிறகு, பழைய காரணமெல்லாம் மறந்து போய்விட்டது.”

“ஆழ்வார்க்கடியாரை நீ எங்கே பார்த்தாய்? என்ன செய்தி சொல்லியனுப்பினார்?”

“வீர நாராயணபுரத்துக்கு அருகில் ஆழ்வார்க்கடியார்நம்பியைச் சந்தித்தேன். அவர் தம் கைத்தடியின் சக்தியைக் கொண்டு விஷ்ணுதான் பெரிய தெய்வம் என்று மெய்ப்பிக்க முயன்றார். அச்சமயத்தில் பெரிய பழுவேட்டரையரின் பரிவாரங்கள் வந்தன. அவரைத் தொடர்ந்து தங்கள் பல்லக்கும் வந்தது. அங்கே என்ன ரகளை என்று பார்ப்பதற்காகவோ என்னவோ, தங்களுடைய ஒரு பொற்கரம் பல்லக்கின் திரையை விலக்கிற்று. அப்போதுதான் தாங்கள் என்று தெரிந்து கொண்டு ஆழ்வார்க்கடியார் தங்களுக்கு ஒரு செய்தி அனுப்ப விரும்பினார். நானும் அன்றிரவு கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கியபடியால் என்னிடம் செய்தி சொல்லி அனுப்பினார். ஆனால் கடம்பூரில் தங்களை நான் பார்க்க முடியவில்லை. தஞ்சாவூர்க் கோட்டைக்கருகில் சாலையில்தான் சந்திக்க முடிந்தது.”

இவ்விதம் வந்தியத்தேவன் சொல்லி வந்தபோது நந்தினி மேலே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆகையால் அவளுடைய முகபாவத்திலிருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.


22. மந்திரவாதி

தூரத்தில் பேரிகைகளின் பெருமுழக்கம் கேட்டது. எக்காளங்கள் சப்தித்தன. மனிதர்களின் குரல்கள் ஜயகோஷம் செய்தன. கோட்டைக் கதவுகள் திறந்து மூடிக் கொள்ளும் சத்தமும், யானைகள் குதிரைகளின் காலடிச் சத்தமும் எழுந்தன.

நந்தினியின் கவனத்தை அந்தச் சத்தங்கள் கவர்ந்தன என்பதை வந்தியத்தேவன் அறிந்து கொண்டான்.

பிறகு வந்தியத்தேவனைப் பார்த்து, “தனாதிகாரி கோட்டையில் பிரவேசிக்கிறார். சக்கரவர்த்தியின் க்ஷேமத்தை விசாரித்து விட்டு, கோட்டைத் தளபதியைப் பார்த்துப் பேசிவிட்டு, இங்கே வருவார். வருவதற்குள் நீ போய்விட வேண்டும். ஆழ்வார்க்கடியார் கூறிய செய்தி என்ன?” என்று வினவினாள்.

“அம்மணி! அந்த வீர வைஷ்ணவ சிகாமணி தங்களை அவருடைய சகோதரி என்று சொல்லிக் கொண்டார்; அது உண்மைதானா?” என்று வல்லவரையன் கேட்டான்.

“அதைப் பற்றி நீ ஏன் சந்தேகப்படுகிறாய்?”

“பச்சைக் கிளியும் கடுவன் குரங்கும் ஒரு தாயின் குழந்தைகள் என்றால் எளிதில் நம்ப முடியுமா?”

நந்தினி சிரித்துவிட்டு, “ஒரு விதத்தில் அவர் சொன்னது உண்மைதான். நாங்கள் ஒரே வீட்டில், ஒரே குடும்பத்தில் வளர்ந்தோம். உடன்பிறந்த தங்கையைப் போலவே என்னிடம் பிரியம் வைத்திருந்தார். பாவம்! அவருக்குப் பெரும் ஏமாற்றம் அளித்து விட்டேன்!”

“அப்படியானால் சரி! ஆழ்வார்க்கடியார் தங்களுக்குச் சொல்லி அனுப்பிய செய்தி கிருஷ்ணபகவான் தங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான். தாங்கள் கண்ணனை மணந்து கொள்ளும் கலியாணக் காட்சியைப் பார்க்க வீர வைஷ்ணவ பக்தகோடிகளும் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்!”

நந்தினி ஒரு பெருமூச்சு விட்டாள். “ஆகா! இன்னும் அவருக்கு அந்தச் சபலம் நீங்கவில்லை போலிருக்கிறது! நீ அவரைப் பார்த்தால் எனக்காக இதைச் சொல்லி விடு. என்னை அடியோடு மறந்து விடச் சொல்லு! ஆண்டாளைப் போல் பரமபக்தையாகக் கொஞ்சமும் தகுதியற்றவள் நான் என்று சொல்லு!

“ஐயா, உம்முடைய பெயர் என்னவென்று இன்னமும் சொல்லவில்லையே!”

“என் சொந்தப் பெயர் வந்தியத்தேவன்; பட்டப்பெயர் வல்லவரையன். ஆழ்வார்க்கடியாரைப் பார்த்துத் தங்கள் மறுமொழியைச் சொல்ல வேண்டும். அவருக்கு என்ன சொல்லட்டும்?”

“அவருக்கு ‘நந்தினி’ என்று ஒரு சகோதரி இருந்தாள்’ என்பதை அடியோடு மறந்து விடும்படி சொல்லும்!”

இத்தனை நேரமும் ஒய்யாரமாகப் படுக்கையில் சாய்ந்து படுத்திருந்த நந்தினி திடீரென்று எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

“ஐயா! நான் ஒன்று சொல்கிறேன். அதை ஒப்புக் கொள்வீரா?” என்று கேட்டாள்.

“சொல்லுங்கள், அம்மணி!”

“நீரும் நானும் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளலாம். நீர் எனக்கு உதவி செய்ய வேண்டியது. நான் உமக்கு உதவி செய்ய வேண்டியது. என்ன சொல்கிறீர்!”

“அம்மணி! தாங்கள் சோழ மகாராஜ்யத்தில் சர்வ சக்தி வாய்ந்த தனாதிகாரியின் ராணி. நினைத்ததை நினைத்தபடி சாதிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவர். நானோ ஒருவிதச் செல்வாக்கும் இல்லாதவன். தங்களுக்கு நான் என்ன விதத்தில் உதவி செய்ய முடியும்?” என்றான்.

அவன் உள்ளத்திலிருந்து பேசுகிறானா, உதட்டிலிருந்து பேசுகிறானா என்று தெரிந்து கொள்ள விரும்பிய நந்தினி தன் கூரிய விழிகளை அவன் மீது செலுத்தினாள்.

வந்தியத்தேவன் அதற்குச் சிறிதும் கலங்காமல் நின்றான்.

“எனக்கு அந்தரங்கமான பணி ஆள் ஒருவர் தேவையாயிருக்கிறது. இந்த அரண்மனையில் உமக்கு வேலை வாங்கிக் கொடுத்தால், ஒப்புக் கொள்வீரா?” என்று கேட்டாள்.

“இதே மாதிரி சேவையை இன்னொரு மாதரசிக்குச் செய்வதாக ஏற்கெனவே ஒப்புக் கொண்டு விட்டேன். அவள் வேண்டாமென்று நிராகரித்தால் தங்களிடம் வருகிறேன்.”

“அது யார் அவள், என்னோடு போட்டிக்கு வருகிறவள்?”

“இளையபிராட்டி குந்தவை தேவி தான்.”

“பொய்! பொய்! அப்படி ஒரு நாளும் இருக்க முடியாது! என்னை வேடிக்கை செய்யப் பார்க்கிறீர்…!”

வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலர் குந்தவைக்குக் கொடுத்த ஓலையை எடுத்து நீட்டினான்.

நந்தினி ஓலையை விளக்கினடியில் பிடித்துக் கொண்டு படித்தாள். படித்து முடித்தபோது அவளுடைய கண்களிலிருந்து கிளம்பிய மின்னல் ஜுவாலை நாக சர்ப்பத்தின் வாயிலிருந்து வெளிவந்து மறையும் அதன் பிளவுபட்ட நாவை வந்தியத்தேவனுக்கு நினைவூட்டியது; அவனையறியாமல் அவன் உடம்பு நடுங்கியது.

நந்தினி கம்பீர பாவத்துடன் வந்தியத்தேவனைப் பார்த்து, “ஐயா! நீர் இந்தக் கோட்டையிலிருந்து உயிரோடு தப்பிச் செல்ல எண்ணுகிறீர் அல்லவா?” என்று கேட்டாள்.

“ஆம் அம்மா! அதற்குத்தான் தங்கள் உதவியை நாடி வந்தேன்.”

“ஒரு நிபந்தனையின் பேரில்தான் உம்மைத் தப்பித்து விட நான் உதவி செய்யலாகும்.”

“நிபந்தனையைச் சொல்லுங்கள்!”

“இந்த ஓலைக்குக் குந்தவை என்ன மறு ஓலை கொடுக்கிறாளோ, அதை மறுபடியும் என்னிடம் கொண்டு வந்து காட்ட வேண்டும், சம்மதமா?”

“மிக அபாயமான நிபந்தனை போடுகிறீர்கள்!”

அச்சமயம் அருகிலுள்ள தோட்டத்திலிருந்து ஆந்தையின் கடூரமான குரல் கேட்டது. ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை கேட்டது.

வந்தியத்தேவனுடைய உடம்பு சிலிர்த்தது. நந்தினி தோட்டத்தில் ஆந்தைக் குரல் வந்த இடத்தை நோக்கி, “நிஜ மந்திரவாதியே வந்து விட்டான்!” என்றாள்.

பிறகு வந்தியத்தேவனைப் பார்த்து, “அவன் எனக்கு இனித் தேவையில்லை. ஆனாலும் இரண்டு வார்த்தை அவனிடம் சொல்லி அனுப்புகிறேன். ஒரு வேளை, உம்மைத் தப்பித்து விடுவதற்கும் அவன் உபயோகமாயிருக்கலாம். சற்று நேரம் நீர் அதோ அந்தப் பக்கம் போய் இருட்டில் மறைந்து நில்லும்!” என்று முன்னம் அவளுடைய தாதிப் பெண் போன திசைக்கு நேர் எதிர்த் திசையைக் காட்டினாள்.

லதா மண்டபத்தின் தோட்ட வாசலண்டை வந்து நின்று நந்தினி மூன்று தடவை கையைத் தட்டினாள்.

தோட்டத்தில் சிறிது தூரம் வரையில் பெரிய பெரிய அடி மரங்களும் அவற்றைச் சுற்றிக் கொண்டிருந்த கொடிகளும் தெரிந்தன. அப்பால் ஒரே இருட் பிழம்பாயிருந்தது.

இருளைக் கீறிக் கொண்டு, கொடிகளை விலக்கிக் கொண்டு, மரம் ஒன்றின் பின்னாலிருந்து மந்திரவாதி வெளியே வந்தான்.

நந்தினி தன்னுடைய புஷ்ப மஞ்சத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். அவள் அழகிய முகத்தில் இப்போது அமைதி குடிகொண்டிருந்தது.

மந்திரவாதி லதா மண்டபத்துக்குள் நுழைந்தான். தங்க விளக்கின் சுடர் ஒளி அவன் முகத்தின் மீது விழுந்தது.

திருப்புறம்பியம் பள்ளிப் படையினருகில் நள்ளிரவில் கூடியிருந்த மனிதர்களில் ஒருவன் இவன். பையிலிருந்து பொன் நாணயங்களைக் கலகலவென்று கொட்டியவன். “ஆழ்வார்க்கடியானைக் கண்ட இடத்தில் உடனே கொன்று விடுங்கள்!” என்று மற்றவர்களுக்குக் கூறிய ரவிதாசன்தான் இவன்.

“நான் இன்று வரப் போவதாக முன்னதாகச் சொல்லி அனுப்பியிருந்தும் வழக்கமான இடத்துக்கு உன் தாதிப் பெண்ணை ஏன் அனுப்பி வைக்கவில்லை?”

“அனுப்பி வைத்துத்தான் இருந்தேன். உனக்கு வைத்திருந்த ஏணியில் இன்னொருவன் ஏறி வந்து விட்டான். அந்த மூடப் பெண் அவனை நீதான் என்று எண்ணி அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.”

“இன்னும் ஒருகணத்தில் என் உயிருக்கு ஆபத்து வருவதாயிருந்தது. அந்த வாலிபனைத் தேடி வந்த கோட்டைக் காவலர் என்னைப் பிடித்துக் கொள்ள இருந்தார்கள். இந்த அரண்மனைக்குப் பக்கத்துக் காட்டிலுள்ள குளத்தில் மூச்சுத் திணறும் வரையில் முழுகியிருந்து, அவர்கள் போன பிறகு தப்பித்து வந்தேன். சொட்டச் சொட்ட நனைந்து வந்தேன்…”

“வந்த காரியம் என்னவென்று நீ இன்னமும் தெரிவிக்கவில்லை…”

“காஞ்சிக்கும் இலங்கைக்கும் ஆட்கள் போக ஏற்பாடாகி விட்டது. இலங்கைக்கு போகிறவர்கள் பாடு ரொம்பவும் கஷ்டம். அங்கே வெகு சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும்…”

“அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? இன்னும் பொன் வேண்டுமா? உங்களுடைய பொன்னாசைக்கு எல்லையே கிடையாதா?”

“பொன் எங்களுடைய சொந்த உபயோகத்துக்கு அல்ல; எடுத்த காரியத்தை முடிப்பதற்காகத்தான். பின் எதற்காக உன்னை இங்கு விட்டு வைத்திருக்கிறோம்? இலங்கைக்குப் போகிறவர்களுக்குச் சோழ நாட்டுப் பொன் நாணயத்தினால் பயன் இல்லை; இலங்கைப் பொன் இருந்தால் நல்லது…”

“இதைச் சொல்வதற்கு ஏன் இத்தனை நேரம்? நீ கேட்பதற்கு முன்பே நான் எடுத்து வைத்திருக்கிறேன்” என்று நந்தினி கூறி, தான் இருந்த மஞ்சத்தின் அடியில் குனிந்தாள். ஒரு பையை எடுத்து ரவிதாஸன் கையில் தந்தாள். “இது நிறைய இலங்கைப் பொற்காசு இருக்கிறது. எடுத்துக் கொண்டு போ! அவர் வரும் நேரமாகி விட்டது!” என்றாள்.

ரவிதாஸன் பையை வாங்கிக் கொண்டு புறப்பட்டபோது, “கொஞ்சம் பொறு! அந்த வாலிபனைக் கோட்டைக்கு வெளியில் கொண்டு போய் விட்டு விடு! அப்புறம் அவன் வேறு பாதையில் போகட்டும்! சுரங்க வழியை அவனுக்கு காட்டிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை!” என்று சொல்லிவிட்டு எழுந்து நின்று, இருண்ட மாளிகைப் பக்கம் பார்த்தாள்.

அங்கே ஒன்றும் தெரியவில்லை விரல்களினால் சமிக்ஞை செய்தாள்; இலேசாகக் கையைத் தட்டினாள்; ஒன்றிலும் பலன் இல்லை.

அவளும் ரவிதாசனும் லதா மண்டபப் பாதை வழியாகச் சிறிது தூரம் சென்றார்கள். அந்தப் பிரம்மாண்டமான இருள் மாளிகையில் அங்கிருந்து பிரவேசிக்கும் வாசலை நெருங்கினார்கள்.

ஆனால் வந்தியத்தேவனைக் காணவில்லை! சுற்றும் முற்றும் நாலாபுறத்திலும் அவனைக் காணவில்லை!


23. சிம்மங்கள் மோதின!

பெரிய பழுவேட்டரையர் தஞ்சைக் கோட்டைக்குள் பிரவேசித்தபோது அவருடன் வந்த பரிவாரங்கள் வழக்கமான முழக்கங்களைச் செய்தபோதிலும் வீதிகளில் குதூகல ஆரவாரம் இல்லை; ஜனக் கூட்டமும் அதிகமில்லை. சின்னப் பழுவேட்டரையர் கோட்டை வாசலுக்கு அண்ணனை வரவேற்பதற்காக வந்து காத்திருக்கவும் இல்லை.

ஆனால் தனாதிகாரி இதைப் பொருட்படுத்தாமல் நேரே தம்பியின் மாளிகையை நோக்கிச் சென்றார். ஏதோ ஒரு முக்கியமான காரியத்தில் இளையவன் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். மாளிகை வாசலுக்குத் தமையனை வரவேற்க வந்த தளபதியின் முகத்தில் பரபரப்பும் கவலையும் காணப்பட்டன. இருவரும் மாளிகைக்குள் சென்றார்கள். நேரே அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்துக்குள் பிரவேசித்தார்கள்.

இருவரும் தனிப்பட்டதும், “தம்பி! காலாந்தகா! என்ன ஒரு மாதிரி இருக்கிறாய்? ஏதாவது விசேஷம் உண்டா? சக்கரவர்த்தி சுகமா?” என்று தமையனார் கேட்டார்.

சின்னப் பழுவேட்டரையராகிய காலாந்தக கண்டர், “சக்கரவர்த்தி எப்போதும் போல் இருக்கிறார். அவரது சுகத்தில் அபிவிருத்தியும் இல்லை; சீர்கேடும் இல்லை!” என்றார்.

“பின் ஏன் வாட்டம் அடைந்திருக்கிறது உன் முகம்? ஏன் கோட்டை வாசலுக்கு வரவில்லை? ஊரும் ஒரு மாதிரி சலசலப்புக் குறைந்திருக்கிறதே!” என்று பெரியவர் கேட்டார்.

“அண்ணா! ஒரு சிறு சம்பவம் நடந்திருக்கிறது. பிரமாதம் ஒன்றும் இல்லை. அதைப் பற்றிப் பிற்பாடு சொல்கிறேன். தாங்கள் போன காரியங்களெல்லாம் எப்படி?” என்று காலாந்தககண்டர் கேட்டார்.

“நான் சென்றிருந்த காரியம் பூரண வெற்றிதான். அழைத்திருந்தவர்கள் அவ்வளவு பேரும் கடம்பூருக்கு வந்திருந்தார்கள். எல்லோரும் ஒருமுகமாக உன் மருமகன் மதுராந்தகனே அடுத்த பட்டத்துக்கு உரியவன் என்று ஒப்புக் கொண்டார்கள். நியாயத்துக்குக் கட்டுப்படவில்லையென்றால் கத்தி எடுத்துப் போர் செய்து உரிமையை நிலைநாட்டவும் அவ்வளவு பேரும் சித்தமாயிருக்கிறார்கள். சம்புவரையர் தம் கோட்டை, கொத்தளம், படை, செல்வம் எல்லாவற்றையும் ஈடுபடுத்தச் சித்தமாயிருக்கிறார். அவருடைய மகன் கந்தமாறன் மிகத் தீவிரமாயிருக்கிறான். வேறு என்ன யோசனை? திருக்கோவலூர் மலையமான், பல்லவன் பார்த்திபேந்திரன், கொடும்பாளூர் வேளான் இந்த மூன்று பேருந்தான் ஒருவேளை எதிர்க்கக்கூடும். அவர்களில் கொடும்பாளூரான் இங்கில்லை; இலங்கையில் இருக்கிறான். மற்ற இருவராலும் என்ன புரட்டிவிட முடியும்? கூடிய சீக்கிரத்தில் சக்கரவர்த்தியிடம் சொல்லி உடனே முடிவு செய்துவிட வேண்டியதுதான்!” என்றார் பெரிய பழுவேட்டரையர்.

“தலைவர்களைப் பற்றித் தாங்கள் சொல்வதெல்லாம் சரி; ஜனங்கள்? ஜனங்கள் ஆட்சேபித்தால்?” என்று கேட்டார் காலாந்தககண்டர்.

“ஆகா! ஜனங்களை யார் கேட்கப் போகிறார்கள்? ஜனங்களைக் கேட்டுக் கொண்டா இராஜ்ய காரியங்கள் நடக்கின்றன? ஜனங்கள் ஆட்சேபிக்கத் துணிந்தால், மறுபடியும் அவர்கள் இம்மாதிரி காரியங்களில் பிரவேசிக்காதபடி செய்துவிட வேண்டும். சக்கரவர்த்தியின் விருப்பம் என்றால் பேசாமல் அடங்கி விடுவார்கள். மேலும், அருள்மொழிவர்மன் நல்லவேளையாக இலங்கையில் இருக்கிறான். அவன் இருந்தாலும் ஒருவேளை ஜனங்கள் தங்கள் குருட்டு அபிமானத்தைக் காட்ட முயல்வார்கள். ஆதித்த கரிகாலன் மீது ஜனங்கள் அவ்வளவு பிரேமை கொண்டிருக்கவில்லை. மதுராந்தகன் மீது அவர்களுடைய அபிமானத்தைத் திருப்புவது சுலபம். ‘சிவபக்தன்’, ‘உத்தம குணம் படைத்தவன்’ என்று ஏற்கெனவே பெயர் வாங்கியிருக்கிறான். சுந்தர சோழரின் புதல்வர்கள் இருவரைக் காட்டிலும் உன் மருமகனுடைய முகத்தில் களை அதிகம் என்பதுதான் உனக்குத் தெரியுமே? ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று கருதும் முட்டாள் ஜனங்கள் ‘மதுராந்தக சக்கரவர்த்தி வாழ்க’ என்று கோஷிக்காவிட்டால்தான் ஆச்சரியமாயிருக்கும். எப்படியிருந்தாலும் நான் ஒருவன் இருக்கும்போது உனக்கு என்ன கவலை….?”

“அண்ணா! முக்கியமான எதிர்ப்பு பழையாறையிலிருந்துதான் வரும். அந்தக் கிழவியும் குமரியும் சேர்ந்து என்ன சூழ்ச்சி செய்வார்களோ, தெரியாது. அதைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்…”

“தம்பி! காலாந்தகா! போயும் போயும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கா என்னைப் பயப்படச் சொல்கிறாய்? அவர்களுடைய தந்திர மந்திரங்களுக்கெல்லாம் மாற்று என்னிடம் இருக்கிறது. கவலைப்படாதே!”

“இரண்டு பிள்ளைகளையும் தஞ்சைக்கு வரும்படி அழைப்பு அனுப்ப வேண்டும் என்று சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார்…”

“ஆதித்த கரிகாலன் வரமாட்டான். ஒருவேளை அருள்மொழி தந்தை கட்டளைப்படி புறப்பட்டு வருவான். வந்தால், அவனைத் தடுக்க வேண்டியதுதான்! மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிச் சிம்மாசனத்தில் சகல அதிகாரங்களுடன் ஏற்றிய பிறகுதான் அவர்கள் இருவரும் வந்தால் வரலாம். அதற்கு முன் வரக் கூடாது. இதை என்னிடம் விட்டு விடு! மற்றபடி நீ என்னவோ சிறிய விசேஷம் இங்கே நடந்ததாகச் சொன்னாயே, அது என்ன?”

“காஞ்சியிலிருந்து வாலிபன் ஒருவன் வந்தான். சக்கரவர்த்திக்கு ஒரு ஓலையும் குந்தவைக்கு ஒரு ஓலையும் கொண்டு வந்தான்…”

“அவனை என்ன செய்தாய்? ஓலைகளைப் பிடுங்கிக் கொண்டு அவனைச் சிறைப்படுத்தியிருக்கிறாய் அல்லவா?”

“சிறைப்படுத்தவில்லை!”

“பின்னே, என்ன செய்தாய்?”

“ஊர் பார்க்க வேண்டும் என்றான். பார்த்துவிட்டு வரட்டும் என்று இரண்டு ஆளையும் பின்னோடு அனுப்பினேன். அவர்களை ஏமாற்றி விட்டு மறைந்து விட்டான். அவனைத் தேடுவதற்குத்தான் ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அதனால்தான் கோட்டை வாசலுக்குக் கூட வரவில்லை! நகர மக்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறேன்…”

“அட சீ! நீயும் ஒரு மனிதனா? மீசை முளைக்காத ஒரு சிறு பிள்ளையிடமா ஏமாந்து போனாய்? ஒரு தறுதலைப் பயல் உன்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாயில்லையா?”

“உங்கள் முத்திரை மோதிரத்தையும் காட்டினான். அதை அவனுக்கு நீங்கள் கொடுத்தீர்களா?”

“இல்லவே இல்லை! அப்படியெல்லாம் ஏமாந்து விட நான் உன்னைப் போல் ஏமாளியா?”

“அவனிடம் முத்திரை மோதிரம் இருந்தது உண்மை. கோட்டை வாசல் காவலர்களிடம் காட்டி விட்டுத்தான் உள்ளே புகுந்தான். நீங்கள் கொடுத்திராவிட்டால், இன்னும் ஒரே ஒரு இடத்திலிருந்துதான் அதை அவன் பெற்றிருக்க முடியும்.”

“யாரைச் சொல்கிறாய்?”

“தங்களால் ஊகிக்க முடியவில்லையா? இளையராணியைத்தான் சொல்கிறேன்…”

“சீச்சீ! ஜாக்கிரதை! நாக்கை அறுத்து விடுவேன்!”

“நாக்கை அறுத்தாலும் அறுங்கள்; தலையைக் கொய்தாலும் கொய்யுங்கள். வெகு நாளாய்ச் சொல்ல விரும்பியதை இப்போது சொல்லி விடுகிறேன். விஷ நாகத்தை அழகாயிருக்கிறது என்று எண்ணி வீட்டில் வைத்து வளர்க்கிறீர்கள். அது ஒருநாள் கடிக்கத்தான் போகிறது. நம் எல்லோரையும் நாசம் செய்யப் போகிறது! வேண்டாம்! அவளைத் துரத்தி விட்டு மறு காரியம் பாருங்கள்!”

“காலாந்தககண்டா! வெகு நாளாக உனக்குச் சொல்ல எண்ணியிருந்த ஒரு விஷயத்தை நானும் உனக்கு இன்று சொல்லுகிறேன். வேறு எந்தக் காரியத்தைப் பற்றி வேண்டுமானாலும் உன் அபிப்ராயத்தை நீ தாராளமாய்ச் சொல்லலாம். என் காரியம் பிடிக்காவிட்டால் தைரியமாகக் கண்டித்துப் பேசலாம். ஆனால் நான் கைப்பிடித்து மணந்து கொண்டவளைப் பற்றிக் குறைவாக இனி எப்போதேனும் ஒரு வார்த்தை சொன்னாலும் சரி; உன்னை வளர்த்த இதே கையினால் உன்னைக் கொன்று விடுவேன். உனக்குக் கத்தி பிடிக்கச் சொல்லிக் கொடுத்த நான், உன் கத்தியைப் பிடுங்கியே உன்னை வெட்டிக் கொல்லுவேன்! ஜாக்கிரதை!”

அந்த இரு சகோதரர்களும் அப்போது போட்டுக் கொண்ட ஆத்திரச் சொற்போர் சிங்கமும் சிங்கமும் மோதிப் பயங்கரமான சண்டை பிடிப்பது போலவே இருந்தது. அவர்களுடைய குரலும் சிம்ம கர்ஜனையைப் போலவே முழங்கிற்று. அவர்கள் பேசியது அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்தில்தான் என்றாலும், வெளியில் காத்திருந்தவர்களுக்கெல்லாம் அவர்களுடைய குரல், விவரம் இன்னதென்று தெரியாமல் இடிமுழக்கம் போல் கேட்டது.


24. இருள் மாளிகை

காணாமற்போன வந்தியத்தேவன் இருளடர்ந்த மாளிகைக்கு அருகில் சென்று மறைந்து நின்றான். மந்திரவாதியும் நந்தினியும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அவன் முதலில் காது கொடுத்துக் கேட்க முயன்றான். ஆனால் அவர்களுடைய பேச்சு ஒன்றும் அவன் காதில் விழவில்லை. அதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் அவ்வளவாக அவனுக்குச் சிரத்தையும் இல்லை.

இதோ இந்த இருள் அடைந்த மாளிகை இருக்கிறதே! இது ஏன் இருளடைந்திருக்கிறது? இதற்குள்ளே என்ன இருக்கும்? இதன் உள்ளே புகுந்தால் இதன் இன்னொரு வாசல் எங்கே கொண்டு போய் விடும்? எல்லாவற்றுக்கும் இதற்குள் புகுந்து பார்த்து வைக்கலாமா?

ஆனால், இதற்குள்ளே எப்படிப் பிரவேசிப்பது? எவ்வளவு பெரிய, பிரம்மாண்டமான கதவு! இதற்கு எவ்வளவு பெரிய பூட்டு! அப்பப்பா! என்ன அழுத்தம்! என்ன கெட்டி! ஆ! இது என்ன? கதவுக்குள் ஒரு சிறிய கதவு போலிருக்கிறதே! கையை வைத்ததும் இந்தச் சிறிய கதவு திறந்து கொள்கிறதே! அதிர்ஷ்டம் என்றால், இதுவல்லவா அதிர்ஷ்டம்! உள்ளே புகுந்து பார்க்க வேண்டியதுதான்!

பெரிய கதவுக்குள்ளே, பார்த்தால் தெரியாதபடி பொருத்தியிருந்த சிறிய கதவைத் திறந்து கொண்டு வந்தியத்தேவன் அந்த இருளடைந்த மாளிகைக்குள் புகுந்தான். உள்ளே காலடி வைத்ததும் அவனுக்குத் தோன்றிய முதலாவது எண்ணம், தான் அம்மாளிகைக்குள் புகுந்தது நந்தினிக்குக் கூடத் தெரிய கூடாது என்பதுதான். ஆகையால் சிறிய கதவைச் சாத்தினான். சாத்தியவுடன் உள்ளிருந்த இருள் இன்னும் பன்மடங்கு கனத்து விட்டதாகத் தோன்றியது. கதவு திறந்திருந்த ஒரு வினாடி நேரத்தில் சில பெரிய தூண்கள் நிற்பது தெரிந்தது. இப்போது அதுவும் தெரியவில்லை. இருட்டு என்றால், இப்படிப்பட்ட இருட்டைக் கற்பனை செய்யவும் முடியாது! வெளிச்சத்திலிருந்து இருட்டில் வந்திருப்பதால் முதலில் இப்படித்தான் இருக்கும். சற்று போனால் இருட்டின் கனம் குறைந்து பொருள்கள் மங்கலாகக் கண்ணுக்குப் புலப்படும்.

சற்றுத் தூரம் குருடனைப் போல் கையை முன்னால் நீட்டிக் கொண்டு வந்தியத்தேவன் நடந்தான். அவன் நினைத்தபடியே ஒரு தூண் கைக்குத் தட்டுப்பட்டது! மேலும் கொஞ்ச தூரம் நடந்ததும் இன்னொரு தூண் கைக்கு அகப்பட்டது. ஆனால் இன்னமும் கண்ணுக்கு ஏதும் தெரிந்தபாடாயில்லை. மேலே தூண் ஒன்றும் கைக்கு அகப்படவில்லை! ஏதோ பள்ளத்தில் இறங்குவது போன்ற உண்ர்ச்சி உண்டாகிறது! ஆ! இதோ ஒரு படி! நல்லவேளை, விழாமல் தப்பினோம்! இப்படியே இந்த இருட்டில் ஒன்றும் தெரியாமல் எத்தனை நேரம், எத்தனை தூரம் போவது?…. எதனாலோ வந்தியத்தேவன் மனத்தில் ஒரு பீதி உண்டாயிற்று. மேலே போகத் துணிவு ஏற்படவில்லை. வந்த வழியில் திரும்ப வேண்டியதுதான்! கதவைத் திறந்து கொண்டு லதா மண்டபத்துக்கே போக வேண்டியதுதான்! இவ்வாறு எண்ணி வந்தியத்தேவன் திரும்பினான்.

ஆகா! இது என்ன ஓசை! சடசட வென்ற ஓசை! எங்கேயிருந்து வருகிறது? வௌவால்கள் சிறகை அடித்துக் கொள்ளும் ஓசையாக இருக்க வேண்டும். இல்லை! இது வௌவால் இறகின் சத்தம் மட்டும் இல்லை! காலடிச் சத்தம்! யாரோ நடக்கும் சத்தம்!…. நடப்பது யார்? வந்தியத்தேவனுடைய தொண்டை உலர்ந்து போயிற்று! நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது! காது கொடுத்துக் கேட்டபோது அந்தக் காலடிச் சத்தம் மேலும் மேலும் கேட்டது. வந்தியத்தேவன் நின்ற இடத்திலேயே நின்று உற்றுக் கேட்டான். அதே சமயத்தில் ஓசை வந்த திசையை நோக்கி அவனுடைய கண்களும் உற்றுப் பார்த்தன.

ஆ! வெளிச்சம்! அதோ வெளிச்சம்! கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது! நெருங்கியும் வருகிறது! வெளிச்சத்துடன் புகை! யாரோ தீவர்த்தியுடன் வருகிறார்கள். நந்தினிதான் தன்னைத் தேடிக் கொண்டு வருகிறாளோ, என்னமோ! அப்படியானால் நல்லது. வேறு யாராவதாயிருந்தால்? எல்லாவற்றுக்கும் சிறிது நேரம் ஒளிந்திருந்து பார்க்கலாம். ஒளிந்து நிற்பதற்கு இங்கே இடத்துக்குக் குறைவில்லை! தூரத்திலே வந்த தீவர்த்திக் கொழுந்து அது ஒரு விசாலமான மண்டபம் என்பதைக் காட்டியது. அதில் பெரிய பெரிய தூண்கள் இருந்தன. கீழேயிருந்து ஒரு படிக்கட்டு மேலே வந்து அங்கே ஒரு வளைவு வளைந்து திரும்பி மேலேறிச் சென்றது. அந்தப் படிக்கட்டின் அடிப்பக்கத்திலிருந்துதான் தீவர்த்தி வெளிச்சம் வந்தது என்பதையும் அறிந்து கொண்டான். அடுத்த கணம் ஒரு பெரிய தூணின் மறைவில் போய் நின்று கொண்டான். மகா தைரியசாலியான வந்தியத்தேவனுடைய கைகால்கள் எல்லாம் அச்சமயம் வெலவெலத்துப் போய் நடுநடுங்கின!

படிக்கட்டின் வழியாக மேலேறி மூன்று உருவங்கள் வந்தன. ஒருவன் கையில் தீவர்த்தியிருந்தது. இன்னொருவன் கையில் வேல் இருந்தது. நடுவில் வந்தவன் கையில் ஒன்றும் பிடித்திருக்கவில்லை. தீவர்த்தி வெளிச்சத்தில் அவர்கள் முகங்கள் புலப்பட்டதும் வந்தியத்தேவனுடைய பீதி அடியோடு அகன்றது. பீதியைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான வியப்பு உண்டாயிற்று. அவர்களில் முன்னால் வந்தவன் வந்தியத்தேவனுடைய பிரிய நண்பனாகிய கந்தமாறன்தான்! நடுவில் வந்த உருவம் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அரை குறையாகத் தான் பார்த்த இளவரசர் மதுராந்தகத் தேவர் என்பதை அறிந்து கொண்டான். மூன்றாவதாக, கையில் தீவர்த்தியுடன் வந்தவனை வல்லவரையன் முன்னால் பார்த்ததில்லை. அவன் வாசற் காவலனாகவோ, ஊழியக்காரனாகவோ இருக்க வேண்டும்.

வந்தியத்தேவனுடைய மூளை அதிவேகமாக வேலை செய்தது. அவர்கள் அந்தப் பாதாள வழியில் படிக்கட்டு ஏறி வருவதன் மர்மம் என்னவென்பது வெகு விரைவில் அவனுக்கு விளங்கி விட்டது. பழுவூர் இளையராணி பல்லக்கில் ஏறி முதலாவது நாளே வந்து விட்டாள். பெரிய பழுவேட்டரையர் அன்றிரவு தஞ்சைக் கோட்டைக்குத் திரும்பி விட்டார். இருவரும் கோட்டை வாசல் வழியாகப் பகிரங்கமாக வந்து விட்டார்கள். ஆனால், மதுராந்தகத்தேவர் வெளியில் போனதும் தெரியக் கூடாது; திரும்பி வருவதும் தெரியக் கூடாது. அதற்காக இந்த இரகசியச் சுரங்க வழியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த இருளடைந்த மாளிகையின் மர்மமே இதுதான் போலும்! கந்தமாறன் தன்னைக் கொள்ளிடக் கரையில் விட்டுப் பிரிந்த பின்னர், வேறு எங்கேயோ ஓரிடத்தில் பெரிய பழுவேட்டரையருடன் சேர்ந்திருக்கிறான். இந்த அந்தரங்க வேலைக்கு அவனைப் பழுவேட்டரையர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மதுராந்தகத்தேவரைச் சுரங்க வழியில் அழைத்துச் செல்லத் துணையாக அனுப்பி வைத்திருக்கிறார்.

இதற்குள் அந்த மூவரும் படிக்கட்டில் மேலேறிப் போய் விட்டார்கள். வெளிச்சமும் வர வர மங்கத் தொடங்கியது. அவர்களைப் பின்தொடர்ந்து போகலாமா என்று வந்தியத்தேவன் ஒருகணம் நினைத்து, அதையும் உடனே மாற்றிக் கொண்டான். அவர்கள் கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரின் அரண்மனைக்குப் போகிறார்கள் என்பது நிச்சயம். அங்கே தான் திரும்பிப் போவதில் என்ன பயன்? சிங்கத்தின் குகையிலிருந்து தப்பித்து வந்த பிறகு தலையைக் கொடுப்பது போலத்தான்! இனித் திரும்ப நந்தினி இருந்த லதா மண்டபத்துக்குப் போவதிலும் பயன் இல்லை. ஒருவேளை பெரிய பழுவேட்டரையர் இதற்குள் அங்கு வந்திருக்கலாம். அதுவும் அபாயகரந்தான் வேறு என்ன செய்யலாம்?… ஏன்? இந்தப் படிக்கட்டு வழியாக இறங்கிப் போய்ப் பார்த்தால் என்ன? இவ்விதம் எண்ணி அந்தச் சுரங்கப் படிக்கட்டில் இறங்கினான்.

இருண்ட சுரங்கப் பாதையில் வந்தியத்தேவன் காலை ஊன்றி வைத்து, விழுந்து விடாமல் நடந்தான். படிகள் கொஞ்ச தூரம் கீழே இறங்கின. பிறகு சமநிலமாயிருந்தது. மறுபடியும் படிகள். மீண்டும் சமதரை. இரண்டு கைகளையும் எட்டி விரித்துப் பார்த்தான் சுவர் தட்டுப்படவில்லை. ஆகவே, அந்தச் சுரங்க வழி விசாலமானதாகவே இருக்க வேண்டும். மறுபடி சற்றுத் தூரம் போனதும் படிகள் மேலே ஏறின. வளைந்து செல்வதாகவும் தோன்றியது. அப்பப்பா! இத்தகைய கும்மிருட்டில் தட்டுத் தடுமாறி இன்னும் எத்தனை தூரம் நடக்க வேண்டுமோ தெரியவில்லையே! வந்தியத்தேவன் வெளியேற எண்ணினான். ஆனால் வெளியேறும் வழிதான் தெரியவில்லை. வந்த வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கே போனாலும் இருள் என்னும் பூதம் வாயைப் பிளந்து கொண்டிருந்தது.

ஆகா! கதவு திறந்து மூடும் ஓசை!… மறுபடியும் காலடி ஓசை!… இன்றைய இரவின் அதிசயங்களுக்கு முடிவே கிடையாது போலும்! அதிசயங்களுக்கும் அளவில்லை! பயங்கரங்களுக்கும் எல்லையில்லை! இம்முறை வெகு தூரத்திலிருந்து அந்தக் காலடிச் சத்தங்கள் கேட்டன.

கூத்து மேடையிலிருந்து மிகத் தொலைவிலே உட்கார்ந்திருப்பவனுக்கு மேடையில் தோன்றும் காட்சிகள் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது வந்தியத்தேவன் அப்போது கண்ட காட்சி. அவன் அச்சமயம் இருந்த இடத்துக்கு உயரமான ஓர் இடத்தில், தொலை தூரம் என்று தோன்றிய தூரத்தில் அது நடந்தது. கூத்து மேடையின் ஒரு பக்கத்திலிருந்து ஒரு தீவர்த்தி வந்தது. தீவர்த்தி வெளிச்சத்தில் இரு கரிய உருவங்கள் தெரிந்தன. வந்தியத்தேவன் மேலும் கண் விழிகள் பிதுங்கும்படி உற்றுப் பார்த்து அந்த உருவங்கள் யாருடையவை என்பதை ஒருவாறு தெரிந்து கொண்டான். வந்த இரு உருவங்கள் மதுராந்தகத்தேவரை அழைத்துச் சென்ற கந்தமாறனும் காவலனும்.

கந்தமாறன் படிக்கட்டில் இறங்கினான். அவனுக்குப் பின் கையில் தீவர்த்தியுடன் வந்த காவலனும் கந்தமாறனைத் தொடர்ந்து படிக்கட்டில் இறங்கினான். கந்தமாறன் மதுராந்தகத்தேவரை அழைத்து வந்த சுரங்க வழியில் திரும்பிச் செல்கிறான் என்பதில் ஐயமில்லை. இப்போது கந்தமாறன் போகும் வழியைத் தொடர்ந்து சென்றால், எப்படியும் வெளியேறும் வாசலைக் கண்டு கொள்ளலாம். பிறகு ஏதேனும் உபாயம் செய்து தப்பிக்கலாம். தீவர்த்தி வெளிச்சத்தை விட்டு விடாமல், அதிகமாகவும் நெருங்காமல், காலடி ஓசை கேட்காதபடி மெதுவாக அடிவைத்து நடந்து சென்றான். சுரங்கப் பாதையின் முடிவு வந்து விட்டது. எதிரில் ஒரு பெருஞ்சுவர் தெரிந்தது. காவலன் தன் வலது கையிலிருந்த தீவர்த்தியை இடது கைக்கு மாற்றிக் கொள்கிறான். வலது கையினால் சுவரில் ஓரிடத்தில் கைவைத்து திருகாணியைத் திருகுவது போல் திருகுகிறான். சுவரில் மெல்லிய கோடு போல் ஒரு பிளவு தோன்றுகிறது. அப்பிளவு வரவரப்பெரிதாகி வருகிறது. ஓர் ஆள் நுழையும்படியான பிளவாகிறது. காவலன் ஒரு கையினால் அதைச் சுட்டிக்காட்டுகிறான். கந்தமாறன் அவனிடம் ஏதோ சொல்லிவிட்டுச் சுவரில் தோன்றிய பிளவில் ஒரு காலைவைக்கிறான். வந்தியத்தேவன் தான் ஒதுங்கி நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து வெளி வந்தான். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான்!


25. பழுவேட்டரையரின் ஆட்கள்

பாய்ந்து சென்றவன் காவலனுடைய கழுத்தில் தன்னுடைய ஒரு கையைச் சுற்றி வளைத்துக் கொண்டான். இன்னொரு கையால் தீவர்த்தியைத் தட்டிவிட்டான். தீவர்த்தி தரையில் விழுந்தது. அதன் ஒளிப் பிழம்பு சுருங்கிப் புகை அதிகமாயிற்று. காவலனுடைய கழுத்தை ஒரு இறுக்கு இறுக்கி வந்தியத்தேவன் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து அவனைக் கீழே தள்ளினான். காவலனுடைய தலை சுரங்கப் பாதையின் சுவரில் மோதியது அவன் கீழே விழுந்தான். வந்தியத்தேவன் தீவர்த்தியை எடுத்துக் கொண்டு அவன் அருகில் சென்று பார்த்தான். செத்தவனைப் போல் அவன் கிடந்தான். ஆயினும் முன் ஜாக்கிரதையுடன் அவன் அங்கவஸ்திரத்தை எடுத்து இரண்டு கையையும் சேர்த்து இறுக்கிக் கட்டினான். இவ்வளவையும் சில வினாடி நேரத்தில் செய்து விட்டு ஓடினான். உடனே கதவு தானாகவே மூடிக் கொண்டது. சுவர் அந்தப் பெரும் இரகசியத்தை மறைத்துக் கொண்டு இருள் வடிவமாக ஓங்கி நின்றது. ஓங்கி அடித்த காற்றிலிருந்து கோட்டைக்கு வெளியே வந்தாகிவிட்டது என்பதை வந்தியத்தேவன் அறிந்து கொண்டான். அடர்ந்த மரங்களும் கோட்டைச் சுவர் கொத்தளங்களும் சந்திரனை மறைத்துக் கொண்டிருந்தபடியால் நிலா வெளிச்சம் மிக மிக மங்கலாகத் தெரிந்தது.

ஓர் அடி எடுத்து வைத்தான். சடசடவென்று மண் சரிந்து செங்குத்தாகக் கீழே விழும் உணர்ச்சி ஏற்பட்டது. சட்டென்று வேலை ஊன்றிக் கொண்டு பெரு முயற்சி செய்து நின்றான். கீழே பார்த்தான். மரங்களும் கோட்டைச் சுவரும் அளித்த நிழலில் நீர்ப் பிரவாகம் தெரிந்தது. அதிவேகமாகப் பிரவாகம் சுழல்கள் சுழிகளுடன் சென்று கொண்டிருந்ததும் ஒருவாறு தெரிந்தது. நல்ல வேளை! கரணம் தப்பினால் மரணம் என்ற கதி நேரிட்டிருக்கலாம். தஞ்சைக் கோட்டைச் சுவரை ஓரிடத்தில் வடவாறு நெருங்கிச் செல்வதாக வந்தியத்தேவன் அறிந்திருந்தான். இது வடவாறாகத்தான் இருக்க வேண்டும்.

ஆகா! இது என்ன? ஒரு மரம் ஆற்றில் விழுந்து கிடக்கிறதே! வெள்ளம் அதனுடைய வேரைப் பறித்துவிட்டது போலும்! பாதி ஆறு வரையில் விழுந்து கிடக்கிறது. அதில் ஏறித் தட்டுத் தடுமாறி நடந்தான். வெள்ளத்தின் வேகத்தில் மரம் அசைந்து கொண்டிருந்தது. மரத்தின் கிளைகளும் இலைகளும் தண்ணீரில் அலைப்புண்டு தவித்தன. காற்றோ அசாத்தியமாக அடித்துக் கொண்டிருந்தது. மரத்தின் நுனிக்கு வந்ததும் வேலை விட்டு ஆழம் பார்த்தான். நல்லவேளை! இங்கே அவ்வளவு பள்ளமில்லை! வந்தியத்தேவன் மரத்திலிருந்து நதியில் இறங்கிக் கடந்து சென்றான். சேந்தன் அமுதனுடைய நினைவு வந்தது. அவனுடைய தோட்டமும் வீடும் வடவாற்றின் கரையிலேதான் இருக்கிறது. இங்கே சமீபத்திலேயே இருக்கக் கூடும்.

இரவில் மலரும் பூக்களின் நறுமணம் குபீரென்று வந்தது. சேந்தன் அமுதனுடைய வீடு சமீபத்தில்தான் இருக்க வேண்டும் என்று அவன் எண்ணியது வீண் போகவில்லை. விரைவில் தோட்டம் வந்தது ஆனால் அந்தத் தோட்டம்! முதலாவது நாள் பார்த்ததற்கும் இன்று பார்ப்பதற்கு எவ்வளவு வித்தியாசம்? அனுமார் அழித்த அசோகவனத்தை அத்தோட்டம் அப்போது ஒத்திருந்தது. ஆகா! தன்னைத் தேடிக் கொண்டு பழுவேட்டரையரின் ஆட்கள் இங்கே வந்திருந்தார்கள் போலிருக்கிறது. வந்தவர்கள் இத்தகைய அக்கிரமங்களைச் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்! அடடா! சேந்தன் அமுதனும் அவனுடைய அருமை அன்னையும் எவ்வளவு அரும்பாடுபட்டு இந்த நந்தவனத்தை வளர்த்திருக்க வேண்டும்? அவ்வளவும் பாழாய்ப் போய்விட்டதே!

நந்தவனம் அழிந்ததில் அனுதாபம் சட்டென்று விலகியது. தன்னுடைய அபாயகரமான நிலைமை நினைவு வந்தது. ஒற்றர்களும் கோட்டைக் காவல் வீரர்களும் இங்கே சமீபத்தில் எங்கேயாவது காத்திருந்தால் என்ன செய்வது?… அவர்களை ஒரு கை பார்த்துச் சமாளிக்க வேண்டியதுதான். நல்லவேளையாக, அதோ நமது குதிரை, கட்டிய மரத்திலேயே இன்னும் இருக்கிறது!…ஒருவேளை தன்னைப் பிடிப்பதற்காகவே அதைவிட்டு வைத்திருகிறார்களோ? எப்படியிருந்தாலும் என்ன செய்ய முடியும்? குதிரையில் ஏறித் தட்டிவிட வேண்டியதுதான். இங்கே புறப்படும் குதிரை பழையாறை போய்த்தான் நிற்க வேண்டும்.

மெள்ள மெள்ள அடிமேல் அடி வைத்து நடந்து குடிசை வாசலை அடைந்தான் வாசல் திண்ணையில் படுத்திருந்த சேந்தன் அமுதனைத் தட்டி எழுப்பினான். தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்த அமுதனுடைய வாயைப் பொத்தினான். பிறகு மெல்லிய குரலில் சொன்னான்; “தம்பி! நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும். பெரிய சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

“இன்று மாலையிலிருந்து கும்பல் கும்பலாகப் பல வீரர்கள் வந்து உன்னைத் தேடிவிட்டுப் போனார்கள். அவர்களால் நந்தவனமே அழிந்து போய் விட்டது. போனாலும் போகட்டும் நீ தப்பிப் பிழைத்தால் சரி. நல்லவேளையாக உன் குதிரையை அவர்கள் விட்டுப் போய் விட்டார்கள். குதிரையில் ஏறி உடனே புறப்படு!”

தூரத்தில் திடுதிடுவென்று மனிதர்கள் ஓடிவரும் சத்தம் கேட்டது.

“போ! போ! சீக்கிரம்!” என்றான் அமுதன்.

குதிரையின் சத்தம் கேளாதபடி மெதுவாகவே செலுத்தினான் வந்தியத்தேவன். சற்றுத் தூரம் போன பிறகு தட்டி விட்டான். குதிரை பாய்ச்சலில் பிய்த்துக் கொண்டு சென்றது.

குதிரை புறப்பட்ட அதே நேரத்தில் ஐந்தாறு வீரர்கள் குடிசைக்கு வந்து சேர்ந்தார்கள். கதவைத் தடதடவென்று தட்டினார்கள்.

அமுதனின் தாய் கதவைத் திறந்தாள். வாசற்படியில் நின்றாள்.

“இங்கே என்னமோ கூச்சல் கேட்டதே? அது என்ன?” என்று இரைந்தான் ஒரு வீரன்.

அமுதனின் அன்னை ஏதோ உளறிக் குளறினாள்.

“இந்தச் செவிட்டு ஊமையிடம் பேசி என்ன பயன்? உள்ளே போய்ப் பார்க்கலாம்!” என்றான் ஒருவன்.

“அடே! குதிரைச் சத்தம் கேட்கிறதடா!”

“எல்லோரும் ஓடுங்கள்! அவன் எங்கும் போய்விட மாட்டான்.” எல்லோரும் ஓடினார்கள். அமுதன் அன்னையின் ஓலம் அவர்களைத் தொடர்ந்து வந்தது.


26. குந்தவைப் பிராட்டி

சோழ மாளிகைக்குப் பின்புறத்தில் கடலைப் போல பரவி அலைமோதிக் கொண்டிருந்தது ஓடை, மாளிகைக்கு வெகு தூரம் மேற்கில் இருந்தது அத்துறை. ஓடைக்கரையில் அடர்ந்த மரங்கள் பல இருந்தன. படகு ஒன்று அலையில் அலைப்புரண்டு மிதந்தது. அரண்மனைப் படகு மாதிரி தோன்றியது. படகுக்காரன் கரையில் நின்று கொண்டிருந்தான்.

பட்டரையும் அவருடன் வந்தவனையும் பார்த்ததும் அவன் படகைக் கரையோரமாக இழுத்து நிறுத்தினான். இருவரும் படகில் ஏறிக் கொண்டார்கள். படகு நீரில் போக ஆரம்பித்தது.

நீரோடைக் கரையில் படகு வந்து நின்றது. அதிலிருந்து ஈசான பட்டரும் வந்தியத்தேவனும் இறங்கினார்கள். பிறகு நீர்த்துறையின் படிக்கட்டுகளின் வழியாக ஏறி வந்தார்கள்.

படிக்கட்டுகளுக்குச் சற்றுத் தூரத்தில் தோட்டத்தில் அமைந்திருந்த பளிங்குக்கல் மேடையில் இளையபிராட்டி குந்தவை அமர்ந்திருந்தாள்.

படகில் வந்தவர்கள் நீர்த்துறையில் படிக்கட்டுகளில் ஏறி மேற்படிக்கு வந்ததும் இளையபிராட்டி குந்தவை தேவி எழுந்து நின்றாள்.

வந்தியத்தேவன் அப்போதுதான் அப்பெண்ணரசியின் திருமுகத்தைக் கூர்ந்து பார்த்தான். பார்த்தது பார்த்தபடியே நின்றான்.

அவனுக்கும் இளையபிராட்டி குந்தவைக்கும் மத்தியில் ஒரு பூங்கொடி தன் இளந்தளிர்க்கரத்தை நீட்டி இடைமறித்து நின்றது.

அந்தக் கொடியில் ஓர் அழகிய பட்டுப் பூச்சி – பல வர்ண இறகுகள் படைத்த பட்டுப் பூச்சி – வந்து உட்கார்ந்தது. குந்தவை தன் பொன் முகத்தைச் சிறிது குனிந்து அந்தப் பட்டுப் பூச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வந்தியத்தேவனோ குந்தவையின் முக மலரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான்.

ஈசான சிவபட்டர் தொண்டையைக் கனைத்த பிறகுதான் இருவரும் ஏதோ ஒரு முக்கியமான காரியம் பற்றி இங்கே சந்திக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டார்கள்.

“நீர் என்னைத் தனிமையில் பார்க்க வேண்டுமென்று ஈசான பட்டரிடம் தெரிவித்தது உண்மையா?” என்று குரலைக் கடுமைப்படுத்திக் கொண்டு இளையபிராட்டி வினவினாள்.

அந்தக் குரலின் கடுமையும் அதிகார தோரணையும் வந்தியத்தேவனை நிமிர்ந்து நிற்கச் செய்தன.

“தாங்கள் யார் என்று தெரிந்தால் அல்லவா தங்களது கேள்விக்கு விடை சொல்லலாம்? ஈசான பட்டர் என்னைத் தவறான இடத்துக்கு அழைத்து வந்து விட்டாரோ என்று ஐயுறுகிறேன்!” என்றான்.

“எனக்கும் அவ்வித சந்தேகம் உண்டாகிறது. நீர் யாரைப் பார்க்க விரும்பினீர்?”

“சோழர் தொல்குலத்தின் மங்காமணி விளக்கை, சுந்தர சோழ மன்னரின் செல்வத் திருமகளை, ஆதித்த கரிகாலருக்குப் பின் பிறந்த சகோதரியை, அருள்மொழிவர்மரின் அருமைத் தமக்கையை, இளையபிராட்டி குந்தவை தேவியைப் பார்க்க வேண்டுமென்று ஈசான சிவபட்டரிடம் சொன்னேன்……”

குந்தவைப் பிராட்டி புன்னகை பூத்து, “அவ்வளவு பெருமையையும் தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டிருப்பவள் நான் தான்!” என்றாள்.

“அப்படியானால் அரிசிலாற்றங்கரையில் நான் பார்த்த நாரீமணி தாங்கள் இல்லைதானே?” என்றான் வல்லவரையன்.

“ஆமாம், ஆமாம்! அவ்வளவு மரியாதைக் குறைவாகத் தங்களிடம் நடந்து கொண்டவளும் நானேதான். அந்த நாகரிகமில்லா மங்கையை மறுபடியும் இவ்வளவு சீக்கிரத்தில் சந்திப்போம் என்று எதிர்ப்பார்த்திருக்க மாட்டீர்!”

“மறுபடியும் சந்திப்பதாகச் சொல்வது பொருத்தமில்லை, தேவி!”

“ஏன்?”

“விட்டுப் பிரிந்திருந்தால் அல்லவா மறுபடியும் சந்திப்பதாகச் சொல்லலாம்? தாங்கள் என் மனத்தை விட்டு ஒரு கணமும் அகலவில்லை…….”

“தொண்டை மண்டலத்தார் இவ்வளவு சமத்காரமாகப் பேசுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”

“எல்லாப் பெருமையையும் சோழ நாட்டிற்கேதான் கொடுப்பீர்களாக்கும். வேறு நாடுகளுக்கு ஒரு பெருமையும் தர மாட்டீர்கள் போலிருக்கிறது.”

“ஆம்; என்னிடம் அந்தக் குற்றம் இருப்பது உண்மைதான். உமக்கு எங்கள் சோழ நாட்டைப் பிடிக்கவில்லையாக்கும்!”

“பிடிக்காமல் என்ன? நன்றாய்ப் பிடித்திருக்கிறது. ஆனால் இச்சோழ நாட்டில் பெரும் அபாயங்கள் இருக்கின்றன…..!”

“எந்த அபாயங்களைப் பற்றிச் சொன்னீர்?”

“தங்களுடைய அருமைச் சகோதரரின் ஓலையுடன் தூதனாக வந்த என்னைத் தஞ்சைக் கோட்டைத் தலைவர் சிறிய பழுவேட்டரையர் பிடித்து வர ஆட்களை ஏவினார். என் குதிரை மேல் இந்தப் பழையாறை நகரை நோக்கி வந்து கொண்டிருந்தேன். அதற்குள் பழுவேட்டரையரின் ஆட்கள் சிலர் எங்களை நெருங்கி வந்து விட்டார்கள். நான் வந்த காரியம் முடிவதற்குள் அவர்களிடம் பிடிபட விரும்பவில்லை.”

“தாங்கள் வந்த காரியம் என்ன?” என்று இளைய பிராட்டி குந்தவை தேவி கேட்டாள்.

“இதோ நான் வந்த காரியம்; தங்கள் தமையனாரின் ஓலை” என்று வல்லவரையன் கூறி ஓலையை எடுத்து நீட்டினான்.

குந்தவைப் பிராட்டி வந்தியத்தேவன் நீட்டிய ஓலையைப் பெற்றுக் கொண்டு படித்தாள். அதுவரையில் நெரிந்த புருவங்களுடன் சுருங்கியிருந்த அவள் முகம் இப்போது மலர்ந்து பிரகாசித்தது.

வல்லவரையனை நிமிர்ந்து நோக்கி, “ஓலையைக் கொடுத்து விட்டீர். இனி என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டாள் குந்தவை தேவி.

“தங்களிடம் ஓலையைக் கொடுத்ததுடன் என் வேலையும் முடிந்து விட்டது. இனி, நான் ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான்.”

“உமது வேலை முடியவில்லை; இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது!”

“தாங்கள் சொல்லுவது ஒன்றும் விளங்கவில்லை, தேவி!”

“உம்மிடம் அந்தரங்கமான வேலை எதையும் நம்பி ஒப்புவிக்கலாம் என்று இதில் இளவரசர் எழுதியிருக்கிறாரே? அதன்படி நீர் நடந்து கொள்ளப் போவதில்லையா?”

“இளவரசரிடம் அவ்விதம் ஒப்புக் கொண்டுதான் வந்தேன். ஆனால் என்னை நம்பி முக்கியமான வேலை எதுவும் ஒப்புவிக்க வேண்டாம். தங்களை ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன்.”

“உமது கோரிக்கை எனக்கு விளங்கவில்லை. ஒன்றை ஒப்புக் கொண்ட பிறகு பின்வாங்குவதுதான் வாணர் குலத்தின் மரபா?”

“பழம் பெருமை பேசுவது வாணர் குலத்தின் மரபு அன்று; ஒப்புக் கொண்டு பின்வாங்குவதும் வாணர் குலத்து மரபு அன்று.”

“பின்னர், ஏன் தயக்கம்? இளவரசர் உங்களிடம் இந்த ஓலையைக் கொடுத்தபோது இதில் எழுதியிருப்பதைப் பற்றிச் சொல்லவில்லையா?” என்று இளவரசி வினவினாள்.

“தேவி! இளவரசர் விருப்பத்தை நன்கு தெரிந்து கொண்டுதான் புறப்பட்டு வந்தேன். ஆனால் வழியெல்லாம் விரோதிகளைச் சம்பாதித்துக் கொண்டு வந்தேன். நாலாபுறத்திலும் பகைவர்கள் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் தாங்கள் இடும் பணியை நான் நிறைவேற்றுவதாக எப்படி உறுதி சொல்ல முடியும்? இதனால்தான் தயங்குகிறேன். என்னால் தங்கள் காரியம் கெட்டுப் போகக் கூடாதல்லவா?” என்று சொன்னான் வல்லவரையன்.

“யார் யார் அந்தப் பகைவர்கள்? எனக்குத் தெரிவிக்கலாமா?” என்று குந்தவை கவலை தொனித்த குரலில் கேட்டாள்.

“பழுவேட்டரையர்கள் என்னை வேட்டையாடிப் பிடிக்க நாலாபுறமும் ஆட்களை ஏவியிருக்கிறார்கள்.”

பழையாறைக்குத் தான் வந்து சேர்வதற்குள்ளாகவே பழுவேட்டரையரின் ஆட்கள் வந்திருப்பார்கள் என்று வந்தியத்தேவன் ஊகித்திருந்தான். நகரத்தின் நுழை வாசல்கள் தோறும் அவர்கள் காத்திருப்பார்கள். சந்தேகம் ஏதேனும் தோன்றினால் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள். அவர்களிடம் சிக்காமல் பழையாறை நகருக்குள் பிரவேசிப்பது எப்படி? — இந்தக் கவலையுடன் வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலர் சொல்லி அனுப்பியபடி வடமேற்றளி ஆலயத்துக்குச் சென்று ஈசான பட்டரைச் சந்தித்துப் பேசினான். அவர் இளவரசி குந்தவைப் பிராட்டியிடம் முன்னால் தெரிவித்து விட்டு ஓடை வழியாக அழைத்து வந்தார்.

அவன் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நடந்ததைச் சொல்லத் தொடங்கியது முதலாவது குந்தவைக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் அவசரமும் பரபரப்பும் அதிகமாகி வந்தன. “மேலே என்ன?” “அப்புறம் என்ன?” என்று கேட்டுக் துரிதப்படுத்தி வந்தாள்.

இந்த விவரங்களைக் கேட்ட இளவரசி வந்தியத்தேவனை வியப்பினால் மலர்ந்த கண்களைக் கொண்டு பார்த்து, “வெற்றித் தெய்வமாகிய கொற்றவையின் கருணை இந்தச் சோழர் குலத்துக்குப் பரிபூரணமாக இருக்கிறது. ஆகையினாலேதான் இந்தச் சங்கடமான நிலைமையில் தங்களை எனக்கு உதவியாகத் தேவி அனுப்பி வைத்திருக்கிறாள்!” என்றாள்.

“அரசி! இன்னும் தாங்கள் எந்த விதப் பணியும் எனக்கு இடவில்லையே? என் பூரண ஆற்றலைக் காட்டக் கூடிய சமயம் இன்னும் கிட்டவில்லையே!” என்றான் வல்லவரையன்.

“அதைப் பற்றிக் கவலை வேண்டாம். இது காறும் தமக்கு நேர்ந்திருக்கும் அபாயங்கள் எல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லக் கூடிய அளவு அபாயம் நிறைந்த வேலையைத் தரப் போகிறேன்!” என்றாள்.

அரண்மனை நந்தவனத்தின் மத்தியில் பளிங்கினால் ஆன வஸந்த மண்டபம் ஒன்று இருந்தது. அதை நோக்கிக் குந்தவை நடந்தாள். பட்டரும் வந்தியத்தேவனும் இளவரசியைத் தொடர்ந்து சென்றார்கள்.

மண்டபத்துக்குள்ளிருந்த மணி மாடம் ஒன்றிலிருந்து குந்தவை ஒரு சிறிய பனை ஓலைத் துணுக்கையும் தங்கப் பிடி அமைத்த எழுத்தாணியையும் எடுத்தாள். ஓலைத் துணுக்கில் பின் வருமாறு எழுதினாள்:

“பொன்னியின் செல்வா! இந்த ஓலை கண்டதும் உடனே புறப்பட்டு வரவும். விவரங்கள் இது கொண்டு வருகிறவர் சொல்லுவார். இவரைப் பூரணமாக நம்பலாம்.”

இவ்விதம் எழுதி அடியில் ஆத்தி இலை போன்ற சிறிய சித்திரம் ஒன்று வரைந்தாள். ஓலையை வந்தியத்தேவன் கையில் கொடுப்பதற்காக நீட்டியவாறு, “சிறிதும் தாமதியாமல் இந்த ஓலையை எடுத்துக் கொண்டு ஈழ நாட்டுக்குச் செல்ல வேண்டும். இளவரசர் அருள்மொழிவர்மரிடம் கொடுத்து அவரைக் கையோடு அழைத்து வர வேண்டும்!” என்றாள்.

வந்தியத்தேவன் ஆனந்தத்தின் அலைகளினால் மோதப்பட்டுத் தத்தளித்தான். நெடு நாளாக அவன் கொண்டிருந்த மனோரதங்கள் இரண்டில் ஒன்று நிறைவேறி விட்டது. சோழர் குல விளக்கான இளைய பிராட்டியைச் சந்தித்தாகி விட்டது. அவர் மூலமாகவே இரண்டாவது மனோரதமும் நிறைவேறப் போகிறது. இளவரசர் அருள்மொழிவர்மரைச் சந்திக்கும் பேறு கிடைக்கப் போகிறது.

“தேவி! என் மனத்துக்குகந்த பணியையே தருகிறீர்கள். ஓலையை எடுத்துக் கொண்டு இப்போதே புறப்படுகிறேன்!” என்று சொல்லி ஓலையைப் பெற்றுக் கொள்வதற்காக வலக் கரத்தை நீட்டினான்.

குந்தவை ஓலையை அவனிடம் கொடுத்த போது காந்தள் மலரையொத்த அவளுடைய விரல்கள் வந்தியத்தேவனுடைய அதிர்ஷ்டக் கையைத் தொட்டன. அவனுடைய மெய் சிலிர்த்தது; நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. ஆயிரம் பதினாயிரம் பட்டுப் பூச்சிகள் அவன் முன்னால் இறகுகளை அடித்துக் கொண்டு பறந்தன. ஆயிரம் பதினாயிரம் குயில்கள் ஒன்று சேர்ந்து இன்னிசை பாடின. மலை, மலையான வண்ண மலர்க் குவியல்கள் அவன் மீது விழுந்து நாலா பக்கமும் சிதறின.

இந்த நிலையில் வந்தியத்தேவன் தலை நிமிர்ந்து குந்தவை தேவியைப் பார்த்தான். என்னவெல்லாமோ சொல்ல வேணும் என்று அவனுடைய உள்ளம் பொங்கியது. சொல்ல வேண்டியதையெல்லாம் அவனுடைய கண்களே சொல்லின.

ஈசான சிவபட்டர் தம் குரலைக் கனைத்துக் கொண்டார்.

வந்தியத்தேவன் இந்த உலகத்துக்கு வந்து சேர்ந்தான்!


27. ஆதித்த கரிகாலன்

மாமல்லபுரத்து வீதிகளின் வழியாக இரட்டைக் குதிரைகள் பூட்டிய அழகிய விமான ரதம் ஒன்று சென்றது. குதிரைகளின் அலங்காரங்களும், ரதத்தின் வேலைப்பாடுகளும், பொன் தகடு வேய்ந்து மாலை வெயிலில் மற்றொரு சூரியனைப் போல் பிரகாசித்த ரதத்தின் மேல் விதானமும் அதில் இருந்தவர்கள் அரச குலத்தினராயிருக்க வேண்டும் என்பதை உணர்த்தின.

அந்தப் பொன் ரதத்தின் விசாலமான உட்புறத்தில் அரசகுலத்தினர் மூவர் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் தான், வீராதி வீரனும் சுந்தர சோழரின் மூத்த குமாரனுமான ஆதித்த கரிகாலன். மிக இளம்பிராயத்திலேயே இவன் போர்க்களத்துக்குச் சென்று செயற்கரும் வீரச் செயல்கள் புரிந்தான். மதுரை வீரபாண்டியனை இறுதிப் போரில் கொன்று, “வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி” என்று பட்டப் பெயர் பெற்றான். வீரபாண்டியன் வீர சொர்க்கம் அடைந்து பாண்டிய நாடு சோழ சாம்ராஜ்யத்தின் கீழ் வந்த உடனடியாகத்தான் சுந்தரசோழர் நோய்வாய்ப்பட்டார். ஆதித்த கரிகாலனே அடுத்த பட்டத்துக்கு உரியவன் என்பதை ஐயமற நிலைநாட்ட அவனுக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகம் செய்வித்தார். அது முதலாவது கல்வெட்டுக்களில் தன் பெயரைப் பொறித்துச் சாஸனம் அளிக்கும் உரிமையும் ஆதித்த கரிகாலன் பெற்றான்.

பின்னர், தொண்டை மண்டலத்தை இரட்டை மண்டலத்துக் கன்னர தேவனுடைய ஆதிக்கத்திலிருந்து முழுதும் விடுவிக்கும் பொருட்டு ஆதித்த கரிகாலன் வடநாட்டுக்குப் பிரயாணமானான். அங்கேயும் பல போர்க்களங்களில் செயற்கரும் வீரச் செயல்களைப் புரிந்தான். இரட்டை மண்டலத்துப் படைகளை வட பெண்ணைக்கு வடக்கே துரத்தியடித்தான். மேலும் வடதிசையில் படையெடுத்துச் செல்வதற்குப் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ளுதல் அவசியமாயிற்று. ஆதலின் காஞ்சியில் வந்து தங்கிப் படை திரட்டவும் மற்றும் படையெடுப்புக்கு அவசியமான ஆயுத தளவாட சாமக்ரியைகளைத் திரட்டவும் தொடங்கினான். இந்த நிலையில் பழுவேட்டரையர்கள் அவனுடைய முயற்சிக்குத் தடங்கல் செய்யத் தொடங்கினார்கள். இலங்கைப் போர் முடிந்த பிறகுதான் வடநாட்டுப் படையெடுப்புத் தொடங்கலாம் என்று சொன்னார்கள். இன்னும் பலவிதமான வதந்திகளும் காற்றிலே மிதந்து வரத் தொடங்கின. இலங்கையில் போர் செய்யச் சென்றுள்ள படைக்குச் சோழ நாட்டிலிருந்து வேண்டிய உணவுப் பொருள் போகவில்லையென்று தெரிந்தது. இதனாலெல்லாம் ஆதித்த கரிகாலனுடைய வீர உள்ளம் துடித்துக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

வீரர்கள் இருவர் அச்சமயம் ஆதித்த கரிகாலன் ஏறிச் சென்ற ரதத்தில் அவனுடன் சம ஆசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள். இவர்களில் ஒருவர் திருக்கோவலூர் மலையமான். இவர் ஆண்ட மலையமானாடு வழக்கத்தில் பெயர் சுருங்கி ‘மலாடு’ என்றும் ‘மிலாடு’ என்றும் வழங்கியது. ஆகையால் இவருக்கு ‘மிலாடுடையார்’ என்ற பட்டப் பெயர் ஏற்பட்டிருந்தது.

சுந்தர சோழ சக்கரவர்த்தியின் இரண்டாவது பத்தினியாகிய வானமாதேவி இவருடைய செல்வத் திருமகள்தான். எனவே, ஆதித்த கரிகாலனுடைய பாட்டனார் இவர். ஆதித்த கரிகாலன் இவரிடம் பெரும் பக்தி வைத்திருந்த போதிலும் இவருடைய புத்திமதி சில சமயம் அந்த வீர இளவரசனின் பொறுமையைச் சோதித்தது.

ரதத்தில் இருந்தவர்களில் இன்னொருவன் பார்த்திபேந்திரன். இவன் பழைய பல்லவர் குலத்திலிருந்து கிளை வழி ஒன்றில் தோன்றியவன். ஆதித்த கரிகாலனை விட வயதில் சிறிது மூத்தவன். அரசுரிமை அற்றவனாதலால் போர்க்களத்தில் தன் ஆற்றலைக் காட்டி வீரப் புகழை நிலை நாட்ட விரும்பினான். ஆதித்த கரிகாலனைச் சென்றடைந்தான். வீரபாண்டியனோடு நடத்திய போரில் ஆதித்த கரிகாலனுக்கு வலது கையைப் போல இருந்து உதவி புரிந்தான். இதனால் ஆதித்த கரிகாலனுடைய அந்தரங்க நட்புக்கு உரியவனானான். வீரபாண்டியன் விழுந்த நாளிலிருந்து இருவரும் இணை பிரியாத் தோழர்கள் ஆனார்கள்.

இந்த மூவரும் ரதத்தில் சென்றபோது தஞ்சாவூரிலிருந்து பராபரியாக வந்த செய்திகளைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இந்தப் பழுவேட்டரையர்களின் அகம்பாவத்தை இனிமேல் என்னால் ஒரு கணமும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. நாளுக்கு நாள் அவர்கள் வரம்பு கடந்து போகிறார்கள். நான் அனுப்பிய தூதன் பேரில் ‘ஒற்றன்’ என்ற குற்றம் சுமத்துவதற்கு இவர்களுக்கு எத்தனை அகந்தை இருக்க வேண்டும்? அவனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் பொன் வெகுமதி கொடுப்பதாகப் பறையறைவித்தார்களாமே? இதையெல்லாம் நான் எப்படிப் பொறுக்க முடியும்? என் உறையிலுள்ள வாள் அவமானத்தில் குன்றிப் போயிருக்கிறது” என்றான் ஆதித்த கரிகாலன்.

“தாத்தா! ஏன் இப்படி மௌனமாயிருக்கிறீர்கள்? தங்களுடைய கருத்து என்ன? ஒரு பெரும் படை திரட்டிக் கொண்டு சென்று தஞ்சாவூரிலிருந்து சக்கரவர்த்தியை மீட்டு காஞ்சிக்கு அழைத்து வந்துவிட்டால் என்ன? எத்தனை நாள் சக்கரவர்த்தியைப் பழுவேட்டரையர்கள் சிறையில் வைத்திருப்பது போல வைத்திருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருப்பது? எத்தனை நாள் பழுவேட்டரையர்களுக்குப் பயந்து காலம் கழிப்பது?” என்று பொங்கினான் ஆதித்த கரிகாலன்.

“அந்தப் பாவி பழுவேட்டரையர்களின் நோக்கம் என்ன தான் என்று தெரியவில்லை. எத்தனை நாள் இதையெல்லாம் சகித்துக் கொண்டிருப்பது? தாத்தா! ஏன் இன்னும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருக்கிறீர்கள்? ஏதாவது வாயைத் திறந்து சொல்லுங்கள்!” என்றான் கரிகாலன்.

“கரிகாலா! பழுவேட்டரையர்களின் நோக்கம் இன்னதென்று தெரியவில்லை என்பதாகச் சற்று முன்னால் சொன்னாய் அல்லவா! அவர்களுடைய நோக்கம் இன்னதென்று நான் சொல்லுகிறேன், கேள்! உன்னையும் உன் சகோதரனையும் தனித் தனியே பலவீனப்படுத்துவதுதான் அவர்களுடைய நோக்கம். இலங்கையில் உன் தம்பி அருள்மொழி தோல்வி அடைய வேண்டும். அதனால் அவனுக்கு அவமானம் நேர வேண்டும். இங்கே உனக்கு உன் தம்பியின் பேரில் கோபம் ஏற்பட வேண்டும். நீங்கள் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும். அதைப் பார்த்து இந்தக் கிழவன் வேதனைப் படவேண்டும்! இதுதான் அவர்களுடைய அந்தரங்க நோக்கம்…..” என்று மிலாடுடையார் ஆத்திரத்துடன் சொல்லி வருகையில் கரிகாலன் குறுக்கிட்டான்.

“இந்த நோக்கத்தில் அவர்கள் ஒரு நாளும் வெற்றி அடையப் போவதில்லை, தாத்தா! என் தம்பியையும் என்னையும் யாராகிலும் பிரிக்க முடியாது. அருள்மொழிக்காக நான் உயிரையும் விடுவேன். எனக்கு ஒவ்வொரு சமயம் தோன்றுகிறது; – கப்பல் ஏறி நானும் இலங்கைக்குப் போகலாமா என்று. அங்கே அவன் என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறானோ என்னமோ! நான் இங்கே சுகமாக உண்டு உடுத்து அரண்மனையில் தூங்கிக் கொண்டு காலங்கழிக்கிறேன். என் வாளும் வேலும் துருப்பிடித்துப் போகின்றன. ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு யுகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. இங்கு இருக்கவே பிடிக்கவில்லை.”

“அரசே! அருமையான யோசனை! பல நாளாக நான் நினைத்துக் கொண்டிருந்ததைத் தாங்களும் சொல்லுகிறீர்கள். புறப்படலாம், வாருங்கள்! இதற்குத் தாத்தாவை யோசனை கேட்பதில் பயனில்லை. இவரைக் கேட்டால் ‘வேண்டாம் பொறு!’ என்றுதான் புத்திமதி சொல்லுவார்! நாளைக்கே நாம் புறப்படலாம். தொண்டை மண்டலப் படையில் பாதியை அழைத்துக் கொண்டு போகலாம். இலங்கை யுத்தத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு நேரே நாகப்பட்டினத்தில் வந்து இறங்கலாம். இறங்கித் தஞ்சாவூருக்குச் சென்று அந்தப் பழுவேட்டரையர்களை ஒரு கை பார்த்து விடலாம்…!” என்று பார்த்திபேந்திரன் பொறித்துக் கொட்டினான்.


28. மலையமான் ஆவேசம்

“கரிகாலா! நீ வீராதி வீரன். உன்னைப் போன்ற பராக்கிரமசாலி இந்த வீரத் தமிழகத்திலே கூட அதிகம் பேர் பிறந்ததில்லை. என்னுடைய எண்பது பிராயத்துக்குள் நானும் எத்தனையோ பெரிய யுத்த களங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எதிரிகளின் கூட்டத்தில் தன்னந்தனியே புகுந்து சென்று உன்னைப் போல் சண்டையிட்ட இன்னொரு வீரனைப் பார்த்ததில்லை. சேவூர்ப் பெரும்போர் நடந்தபோது உனக்குப் பிராயம் பதினாறு கூட ஆகவில்லை. அந்த வயதில் பகைவர்களின் கூட்டத்தில் நீ புகுந்து சென்ற வேகத்தையும், இடசாரி வலசாரியாக வாள் சுழன்ற வேகத்தையும், பகைவர்களின் தலைகள் உருண்ட வேகத்தையும் போல் நான் என்றும் பார்த்ததில்லை. இன்னும் என் கண் முன்னால் அந்தக் காட்சி நின்று கொண்டிருக்கிறது. உன்னைப் போலவே உன் சிநேகிதன் பார்த்திபேந்திரனும் வீராதி வீரன்தான். ஆனால் நீங்கள் இரண்டு பேரும் பதற்றக்காரர்கள்; முன்கோபம் உள்ளவர்கள். அதனால் உங்களுக்கு யோசிக்கும் சக்தி குறைந்து விடுகிறது. எது செய்ய வேண்டுமோ அதற்கு நேர்மாறான காரியத்தைச் செய்யத் தோன்றிவிடுகிறது. உன் சகோதரன் அருள்மொழியை உடனே இவ்விடத்துக்கு அழைத்துக் கொள்ள வேண்டும். நீயும் உன் சகோதரனும் பிரிந்திருக்கவே கூடாது…”

“தாத்தா! இது என்ன யோசனை? அருள்மொழி இங்கே வந்துவிட்டால் இலங்கை யுத்தம் என்ன ஆகிறது?”

“இலங்கை யுத்தம் இப்போது ஒரு கட்டத்திற்கு வந்திருக்கிறது, அநுராதபுரத்தைப் பிடித்தாகிவிட்டது. இனி அங்கே மழைக் காலம். இனி நாலு மாதத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. பிடித்த இடத்தை விட்டுக் கொடாமல் பாதுகாத்து வர வேண்டியதுதான். இதை மற்ற தளபதிகள் செய்வார்கள். அருள்மொழி இச்சமயம் இங்கே இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கரிகாலா! உண்மையை மூடி மூடி வைப்பதில் பயன் என்ன? விஜயாலய சோழரின் குலத்துக்கும் அவர் அடிகோலிய சோழ சாம்ராஜ்யத்துக்கும் பேராபத்து வந்திருக்கிறது. நீயும் உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் இப்போது ஒரே இடத்தில் தங்கிச் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்முடைய பலத்தையெல்லாம் திரட்டி வைத்துக் கொள்ளவும் வேண்டும். எப்போது என்ன விதமான அபாயம் வரும் என்று சொல்ல முடியாது…….

“தாத்தா! இது என்ன இப்படி என்னைப் பயமுறுத்துகிறீர்கள்? என் கையில் வாள் இருக்கும் வரையில் எனக்கு என்ன பயம்? எப்படிப்பட்ட அபாயம் வந்தால் தான் என்ன? தன்னந்தனியாக நின்று சமாளிப்பேன். எத்தகைய அபாயத்துக்கும் நான் பயப்படுகிறவன் அல்ல…..”

“மறைவில் நடக்கிற சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் கண்ணுக்குத் தெரியாத அபாயங்களுக்கும் பயப்பட்டேயாக வேண்டும். பயப்பட்டு, அந்தந்த நிலைமைக்குத் தகுந்த முன் ஜாக்கிரதையும் செய்து கொள்ள வேண்டும். அரச குலத்தில் பிறந்து சிம்மாசனத்துக்கு உரியவர்கள் இது விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. இருந்தால் நாட்டுக்கே நாசம் விளையும்.”

“தாத்தா! அப்படி என்ன இரகசிய அபாயங்களைத் தாங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? சற்று விளக்கமாகச் சொன்னால்தானே நாங்கள் ஜாக்கிரதையாயிருக்க முடியும்…?”

“சொல்லத்தான் வருகிறேன். சில நாளைக்கு முன்னால் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அர்த்த ராத்திரி வேளையில் ஒரு கூட்டம் நடந்தது. அதற்குப் பெரிய பழுவேட்டரையர் வந்திருந்தார். இன்னும் தென்னவன் மழவராயர், குன்றத்தூர்க் கிழார், வணங்காமுடி முனையரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார் – இவர்கள் எல்லாரும் வந்திருந்தார்களாம். என் காதுக்கு வந்தது இந்தப் பெயர்கள் தான். வேறு பலரும் வந்திருக்கலாம். அந்த நள்ளிரவுக் கூட்டம் கிழவர்களின் கூட்டம் மட்டும் அல்ல. சில வாலிபர்களும் அதில் இருந்தார்கள். ஒருவன் சம்புவரையன் மகன் கந்தமாறன். இன்னொருவன்…” என்று தயங்கினதைப் பார்த்து, “யார், தாத்தா? இன்னொருவன் யார்?’ என்று கரிகாலன் தூண்டிக் கேட்டான்.

“உன்னுடைய பெரிய பாட்டனார் கண்டராதித்தருடைய திருக்குமாரன், உன்னுடைய சித்தப்பன் – மதுராந்தகத் தேவன்தான்!”

“தாத்தா! இன்னும் எதற்காக மர்மமாகவே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? விட்டுச் சொல்லுங்கள்! பழுவேட்டரையர்கள் என்னதான் விரும்புகிறார்கள்? ஊர் ஊராய்ச் சென்று அவர்கள் கூட்டம் போடுவதின் நோக்கம் என்ன? மதுராந்தகத் தேவனை வைத்துக் கொண்டு என்ன செய்யப் பார்க்கிறார்கள்?” என்று ஆதித்த கரிகாலன் கேட்டான்.

“வேறு ஒன்றும் இல்லை. உனக்கும் உன் தம்பிக்கும் இராஜ்ய உரிமை இல்லையென்று செய்துவிட்டு, மதுராந்தகனைச் சோழ நாட்டின் சிம்மாசனத்தில் ஏற்ற எண்ணியிருக்கிறார்கள். அதற்கு உன் தந்தையின் சம்மதத்தைப் பெறுவதற்காகவே அவரைத் தஞ்சைக் கோட்டையில் சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்கள்!” என்றார் மிலாடுடையார்.

“தாத்தா! இப்படியெல்லாம் நாடு நகரங்களில் சிலர் பேசி வருவதாக என் காதிலும் விழுந்தது. அது வெறும் பொய் வதந்தி என்று எண்ணியிருந்தேன். நீங்கள் இவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறீர்களே? தெரிந்து கொண்டுதான் சொல்கிறீர்களா? இப்படியும் நடக்கக்கூடுமா!” என்றான்.

“ஏன் நடக்க முடியாது? உன் பாட்டனாருக்கு முன்னால் உன் பெரிய பாட்டனார் கண்டராதித்த தேவர்தானே சோழ நாட்டை ஆண்டார்! அவருடைய குமாரனுக்கு உங்களைக் காட்டிலும் அதிக உரிமை இந்த ராஜ்யத்தில் உண்டல்லவா?” என்றார் மலையமான் மிலாடுடையார்.

“இல்லவே இல்லை! அந்த முழு அசடன், நாலு வார்த்தை பேசத் தெரியாதவன், கையில் வாள் எடுத்து அறியாதவன், அவனுக்கு இந்த இராஜ்யம் உரிமையா? பால் மணம் மாறாத பன்னிரண்டாம் பிராயத்தில் போர்க்களம் புகுந்தவர், வீர பாண்டியன் தலை கொண்ட சிங்கம், தோல்வி என்பதையே அறியாத வீராதி வீரர், ஆதித்த கரிகாலருக்கு உரிமையா?’ என்று சீறினான் பார்த்திபேந்திரன்.

அவனைக் கரிகாலன் அதட்டி அடக்கி விட்டு, “தாத்தா! எனக்கு இந்த இராஜ்யம் ஒரு பொருட்டு அல்ல. வேண்டுமானால் என் கை வாளின் உதவி கொண்டு இதைப் போன்ற பத்து இராஜ்யங்களை ஸ்தாபித்துக் கொள்வேன். ஆனால் இதில் நியாயம் எப்படி? முதலிலேயே மதுராந்தகனுக்குத்தான் இராஜ்யம் என்று சொல்லியிருந்தால் நான் குறுக்கே நின்றிருக்க மாட்டேன். நாடு அறிய, நகரம் அறிய மக்கள் எல்லாரும் அறிய எனக்குத் தான் அரசுரிமை என்று இளவரசப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு, இப்போது எப்படி மாறலாம்? உங்களுக்கு இது சம்மதமாயிருக்கிறதா?” என்று கேட்டான்.

“எனக்குச் சம்மதமாயில்லை, ஒரு நாளும் நான் சம்மதிக்கப் போவதுமில்லை. நீ சம்மதித்து இராஜ்யத்தை மதுராந்தகனுக்குக் கொடுப்பதாகச் சொன்னால், முதலில் உன்னை இந்த வாளால் கண்டதுண்டமாய் வெட்டிப் போடுவேன். பிறகு உன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற உன் தாயை வெட்டிப் போடுவேன். பிறகு உன் தாயைப் பெற்றவனாகிய நானும் என் கையினாலேயே வெட்டிக் கொண்டு சாவேன். என் உடம்பில் உயிர் இருக்கும் வரை இந்தச் சோழ ராஜ்யம் உன்னை விட்டுப் போக விடேன்!” என்று அந்த வயோதிகர் கர்ஜித்தபோது, அவருடைய மங்கிய கண்களில் மின்னொளி வீசியது. உணர்ச்சி ஆவேசத்தில் தளர்ந்து போயிருந்த அவர் உடம்பெல்லாம் நடுங்கியது.

“அதனால்தான் முதலிலேயே நான் சொன்னேன்; — பெரிய அபாயம் நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்று!”

“உபாயம் என்ன, தாத்தா! உபாயம் என்ன?”

“முதலில் இலங்கைக்கு நம்பிக்கையான ஆள் ஒருவனை அனுப்ப வேண்டும். அனுப்பி, அருள்மொழியை அழைத்து வரச் செய்ய வேண்டும். அவன் போர்க்களத்தை விட்டு, தன் கீழுள்ள போர் வீரர்களை விட்டு, இலேசில் வரமாட்டான். அவன் மனத்தைத் திருப்பி அழைத்து வரக்கூடிய ஆற்றல் உள்ளவன் ஒருவனை அனுப்ப வேண்டும்……”

பார்த்திபேந்திரன் முன் வந்து, “ஐயா! நீங்கள் சம்மதம் கொடுத்தால் நானே போய் அழைத்து வருகிறேன்!” என்றான்.

“அது கரிகாலன் இஷ்டம்; உன் இஷ்டம்.”

“தாத்தா! இதெல்லாம் எப்படித் தங்களுக்குத் தெரிந்தது?”

“கடம்பூர் மாளிகை விருந்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. அதிலேயே கொஞ்சம் சந்தேகம் உண்டாயிற்று. பிறகு, அங்கு வந்துவிட்டுத் திரும்பி ஊருக்குச் சென்ற குன்றத்தூர்க் கிழாரை வழியில் சிறைப்படுத்தி என் மலைக் கோட்டைச் சிறைக்குக் கொண்டு போனேன். அவரிடமிருந்து அங்கு நடந்தவைகளையெல்லாம் தெரிந்து கொண்டேன். பார்த்திபேந்திரா! நீ நாளைக்கே இலங்கைக்குப் புறப்படுகிறாய் அல்லவா?” என்றார்.

“நண்பா! பாட்டன் சொன்னபடி நீ நாளைக்கே புறப்பட்டு இலங்கைக்குப் போ! என் சகோதரன் அருள்மொழியை எப்படியாவது வற்புறுத்தி இங்கே அழைத்து வா!”


29. பூங்குழலி

அந்தி நேரம் அமைதி பெற்று விளங்கியது. கோடிக்கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்திருந்தது. கட்டு மரங்களும், படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்திருந்தது. அதற்கு அப்பால் வெகுதூரத்துக்கு வெகுதூரம் காடு படர்ந்திருந்தது. செங்கதிர்த் தேவன் கடலும் வானும் கலக்கும் இடத்தை நோக்கி விரைந்து இறங்கிக் கொண்டிருந்தான்.

கரை ஓரத்தில் கடலில் ஒரு சிறிய படகு மிதந்தது. கடலின் மெல்லிய அலைப் பூங்கரங்கள் அந்தப் படகைக் குழந்தையின் மணித் தொட்டிலை ஆட்டுவது போல மெள்ள மெள்ள அசைத்தன. அந்தப் படகில் ஓர் இளம் பெண் இருந்தாள். அவள் பூங்குழலி, பெயருக்குத் தகுந்தாற் போல் இவள் கூந்தலில் ஒரு தாழம்பூவின் இதழ் அழகு பெற்றுத் திகழ்ந்தது. நீண்ட கரிய கூந்தல் சுருண்டு சுருண்டு விழுந்து அவளுடைய கடைந்தெடுத்த தோள்களை அலங்கரித்தன. கடல் அலைகள் கரையில் ஒதுக்கும் சங்குகள், சிப்பிகள் முதலியவற்றை ஆரமாக்கி அவள் அணிந்து கொண்டிருந்தாள். படகு கரை அருகில் வந்து சேர்ந்தது. பூங்குழலி படகிலிருந்து துள்ளிக் குதித்துக் கரையில் இறங்கினாள். படகைக் கரையில் இழுத்து போட்டாள்.

நாலாபுறமும் இருள் சூழ்ந்து வரும் விசித்திரத்தைப் பூங்குழலி பார்த்துக் கொண்டேயிருக்கையில், குதிரையின் காலடிச் சத்தத்தைக் கேட்டாள். சத்தம் வந்த வழியே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். வருகிறது யாராயிருக்கக்கூடும்? கொஞ்ச காலமாகப் புது ஆட்கள் வருகிறதும் போகிறதும் அதிகமாய்த் தானிருக்கிறது. இராஜாங்க காரியமாக வருகிறார்களாம்; போகிறார்களாம். நேற்றைக்குக் கூட இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்களைப் பார்ப்பதற்கே அருவருப்பாயிருந்தது. அண்ணனைப் படகு வலிக்கச் சொல்லி ஈழத்துக்குச் சென்றார்கள். பணமும் நிறையக் கொடுத்தார்கள்.

குதிரைமேல் வந்தவன் வந்தியத்தேவன்தான். வந்தியத்தேவனுடைய முகம் பூங்குழலியைக் கண்டதும் சிறிது மலர்ந்தது. அவள் தன்னுடைய முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும் அவனுக்கு இயற்கையான உற்சாகமே பிறந்து விட்டது. அவனும் குதிரையே நிறுத்தி விட்டு அவளுடைய முகத்தை ஆர்வத்துடன் உற்றுப் பார்க்கலானான்.

பூங்குழலி குதிரையின் அருகில் சென்று அதன் முகத்தைத் தடவிக் கொடுத்தாள். அதனால் மகிழ்ச்சி அடைந்ததைப் போல் குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு சற்று இலேசாகக் கனைத்தது.

“உன்னை என் குதிரைக்குப் பிடித்துவிட்டது! இது மிக்க நல்லது.”

“என்ன விதத்தில் நல்லது?”

“நான் இலங்கைக்குப் போகவேண்டும். இந்தக் குதிரையை உன்னிடம் ஒப்புவித்து விட்டுப் போகலாம் என்று எண்ணுகிறேன். பார்த்துக் கொள்கிறாயா?”

“ஓ! பார்த்துக் கொள்கிறேன். எல்லா மிருகங்களும் என்னிடம் சீக்கிரம் சிநேகமாகிவிடும். நீங்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?”

“சக்கரவர்த்திக்கு உடம்பு குணம் இல்லை அல்லவா? அவருடைய நோயைக் குணப்படுத்தச் சில மூலிகைகள் வேண்டியிருக்கின்றன. இந்தக் காட்டில் அபூர்வ மூலிகைகள் இருக்கின்றனவாமே? அதற்காகத் தான் …”

“சற்று முன் இலங்கைக்குப் போக வேண்டும் என்று சொன்னாயே?”

“இங்கே கிடைக்காத மூலிகைகளை இலங்கையிலிருந்து கொண்டுவர வேண்டும். இலங்கையில் அனுமார் கொண்டு வந்த சஞ்சீவி பர்வதம் இன்னமும் இருக்கிறதாமே?”

“ஆமாம், இருக்கிறது அதனாலேதான் அங்கே ஆயிரக்கணக்கான ஜனங்கள் விஷக்காய்ச்சலில் இப்போது செத்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள்…”

“அதுவும் அப்படியா? எனக்குத் தெரியாதே? அனுப்பிய அரண்மனை வைத்தியருக்கும் அது தெரியாது…”

“ஆண்பிள்ளைகளைப் போல் பொய் சொல்லுகிறவர்களை நான் கண்டதேயில்லை. இரண்டு நாளைக்கு முன் இரண்டு பேர் இங்கே வந்தார்கள். அவர்களும் இப்படித்தான் ஏதோ பொய் சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னது கொஞ்சம் நம்பக் கூடிய பொய்யாக இருந்தது.”

“அவர்கள் யார்? என்ன பொய் சொன்னார்கள்?”

“அவர்கள் தங்களை யாரோ மந்திரவாதி அனுப்பியதாகச் சொல்லிக் கொண்டார்கள். சக்கரவர்த்திக்கு ரட்சை கட்டுவதற்காகப் புலி நகமும், யானை வால் ரோமமும் வேண்டும் என்றும், அதற்காக இலங்கை போவதாகவும் சொன்னார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு என் அண்ணன் படகோட்டிக் கொண்டு இலங்கைக்குப் போயிருக்கிறான்…”

“ஓ! ஓ! அதுவும் அப்படியா?” என்றான் வந்தியத்தேவன். அவனுக்கு ரவிதாஸன் என்னும் பயங்கர மந்திரவாதியின் நினைவு வந்தது.

‘நமக்கு முன்னாலேயே இலங்கைக்குப் படகில் சென்றிருப்பவர்கள் யாராயிருக்கக் கூடும்! இந்தப் பெண்ணை எவ்வளவு தூரம் நம்பலாம்? இவளும் ஒருவேளை அந்தச் சதிகாரக் கூட்டத்தில் சேர்ந்தவளாயிருக்கக் கூடுமோ!… இராது, இராது! இவள் கள்ளங்கபடம் அற்ற பெண். இவளை எப்படியாவது சிநேகிதம் செய்து வைத்துக் கொள்வது நல்லது.’

“பூங்குழலி! உன்னிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். சற்று முன் மூலிகை கொண்டு போக நான் வந்திருப்பதாகச் சொன்னேனே, அது பொய்தான்! மிக முக்கியமான இரகசியமான காரியத்துக்காக நான் இலங்கைக்குப் போகிறேன்.”

கலங்கரை விளக்கின் அருகிலிருந்த வீட்டை அவர்கள் நெருங்கினார்கள். வீட்டுக்குள்ளிருந்த ஒரு பெரியவரும், வயது முதிர்ந்த ஸ்திரீயும் வெளியே வந்தனர்.

“பூங்குழலி! இவர் யார்?” என்று கேட்டார் பெரியவர்.

“சக்கரவர்த்தியின் வைத்தியத்துக்காக மூலிகை கொண்டு போவதற்கு வந்திருக்கிறார், அப்பா!”

“ஏன் ஐயா, இந்தப் பெண் சொல்லுவது உண்மைதானா?” என்று அந்தப் பெரியவர் வந்தியத்தேவனைப் பார்த்துக் கேட்டார்.

“ஆம், பெரியவரே! இதோ சீட்டு!” என்று சொல்லி, வந்தியத்தேவன் இடையில் கட்டியிருந்த துணிச்சுருளிலிருந்து ஓலை ஒன்றை எடுத்துப் பெரியவரிடம் கொடுத்தான்.

பெரியவர் அந்த ஓலையை வாங்கிக் கொண்டார். கலங்கரை விளக்கின் வெளிச்சத்தில் அதைக் கவனமாகப் பார்த்தார். அவர் முகம் மலர்ந்தது. தமது மனையாளை நோக்கி, “இளையபிராட்டி ஓலை கொடுத்து அனுப்பியிருக்கிறாள். இவருக்கு உணவு அளிக்க வேண்டும். உள்ளே சென்று உன் மருமகளிடம் சொல்லு! சோற்றுப் பானையைக் கவிழ்த்து உருட்டிவிடப் போகிறாள்!” என்றார். ” என்றார்.

இரவு போஜனம் ஆன பிறகு வந்தியத்தேவன், கலங்கரை விளக்கின் தலைவரைத் தனிப்படச் சந்தித்து இலங்கைக்குத் தான் அவசரமாகப் போக வேண்டும் என்பதைத் தெரிவித்தான். தியாகவிடங்கக் கரையர் என்னும் பெயருடைய அப்பெரியவர் தமது வருத்தத்தைத் தெரிவித்தார்.

“இந்தக் கரையோரத்தில் எத்தனையோ பெரிய படகுகளும், சிறிய படகுகளும் ஒரு காலத்தில் இருந்தன. அவையெல்லாம் இப்போது சேதுக்கரைக்குப் போய் விட்டன. இலங்கையில் உள்ள நமது சைன்யத்தின் உதவிக்காகத்தான் போயிருக்கின்றன. எனக்குச் சொந்தமாக இரண்டு படகுகள் உண்டு. அவற்றில் ஒன்றில் நேற்று வந்த இரண்டு மனிதர்களை ஏற்றிக் கொண்டு என் மகன் போயிருக்கிறான். அவன் எப்போது திரும்பி வருவான் என்று தெரியாது. என்ன செய்யட்டும்?” என்றார்.

“அந்த மனிதர்கள் யார்? அவர்கள் ஒரு மாதிரி ஆட்கள் என்று தங்கள் குமாரி கூறினாளே?”

“ஆமாம்; அவர்களைக் கண்டால் எனக்கும் பிடிக்கவில்லைதான். அவர்கள் யார் என்பதும் தெரியவில்லை; எதற்காகப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை. பழுவேட்டரையரின் பனை இலச்சினை அவர்களிடம் இருந்தது. இச்சமயம் நீ கேட்கும் உதவியை என்னால் செய்ய முடியவில்லையே!”

“இன்னொரு படகு இருப்பதாகச் சொன்னீர்களே?”

“படகு இருக்கிறது. தள்ளுவதற்கு ஆள் இல்லை. நீ தள்ளிக்கொண்டு போவதாயிருந்தால் தருகிறேன்…”

“எனக்கு படகு ஓட்டத் தெரியாது. எனக்குத் தண்ணீர் என்றாலே கொஞ்சம் பயம். அதிலும் கடல் என்றால்…”

“படகு ஓட்டத் தெரிந்தாலும் அநுபவம் இல்லாதவர்கள் கடலில் படகு ஓட்ட முடியாது. கடலில் கொஞ்ச தூரம் போய்விட்டால் கரை மறைந்து விடும். அப்புறம் திசை தெரியாமல் திண்டாட வேண்டி வரும்.”

“ஏதாவது ஒரு வழி சொல்லி நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்” என்றான் வந்தியத்தேவன்.

“இந்தப் பகுதியிலேயே பூங்குழலியைப் போல் சாமர்த்தியமாகப் படகு தள்ளத் தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. இலங்கைக்கு எத்தனையோ தடவை போய் வந்திருக்கிறாள். அவளிடம் நான் சொல்லுகிறேன்; நீயும் கேட்டுப்பார்!”
இவ்விதம் தியாகவிடங்கக் கரையர் கூறிவிட்டுக் கலங்கரை விளக்கை நோக்கிச் சென்றார்.

அவருடைய வீட்டுத் திண்ணையில் வந்தியத்தேவன் படுத்தான். நீண்ட பிரயாணம் செய்த களைப்பினால் தூக்கம் கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது; விரைவில் தூங்கிப் போனான்.


30. “சமுத்திர குமாரி”

மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் வந்தியத்தேவனைத் தட்டி எழுப்பின. உறக்கம் நீங்கிய பிறகும் சுய உணர்வு வருவதற்குச் சிறிது நேரம் பிடித்தது. அலையும் ஆட்டமும் அதிகமில்லாமல் அமைதியாக இருந்த அந்தக் கடலில் இறங்கிக் குளிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த சுருள் துணியையும் கத்தியையும் எடுத்துக் கடற்கரையில் வைத்துவிட்டுக் கடலில் இறங்கினான். ‘அடேடே! ஆழம் இல்லை என்று எண்ணிக் கொண்டே கரையிலிருந்து வெகுதூரம் வந்து விட்டோமே?’ என்ற எண்ணம் தோன்றிக் கரைப் பக்கம் திரும்பிப் பார்த்தான். ஓகோ! அதோ பூங்குழலி வருகிறாளே!

‘ஓ! ஓ! இது என்ன? கரையில் குனிந்து அவள் என்ன பார்க்கிறாள், என்னத்தை எடுக்கிறாள்? நம்முடைய இடுப்பில் சுற்றும் சுருள் துணியையல்லவா எடுக்கிறாள்? பெண்ணே! அதை எடுக்காதே! அது என்னுடையது… நாம் சொல்வது அவள் காதில் விழவேயில்லை! இந்தக் கடல் அலைகளின் இரைச்சல்!

‘இதோ நம் குரல் அவளுக்குக் கேட்டுவிட்டது! நம்மைப் பார்த்து அவளும் ஏதோ சொல்கிறாள்! பூங்குழலி! அது என்னுடையது! எடுக்காதே!…’

வந்தியத்தேவன் கரையை நோக்கி ஓட ஆரம்பித்தான்! ஒரு தடவை பூங்குழலி அவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு அவளும் ஓடத் தொடங்கினாள். வீடும் கலங்கரை விளக்கமும் இருந்த பக்கத்துக்கு எதிர்பக்கமாகக் காட்டை நோக்கி ஓடினாள்!

இரண்டு தடவை கடலில் இடறி விழுந்து ஒருவாய் உப்புத் தண்ணீரும் குடித்துவிட்டு வந்தியத்தேவன் மெதுவாக கரையேறினான். பிறகு அந்தப் பெண்ணைத் தொடர்ந்து ஓடினான். ஓட ஓட, அவளுடைய ஓட்டத்தின் வேகம் அதிகமாயிற்று. இதோ காட்டிற்குள் புகுந்தே விட்டாள். “பூங்குழலி பூங்குழலி!” என்று கூச்சலிட்டான். திடீரென்று மரத்தின் மேலிருந்து ஏதோ விழுந்தது!

ஆ! அவனுடைய அரைத் துணிச் சுருள்தான்! மிக்க ஆவலுடன் அதை எடுத்துச் சுருளைப் பிரித்துப் பார்த்தான். ஓலை, பொற்காசுகள் எல்லாம் பத்திரமாயிருந்தன! “பணம் பத்திரமாயிருக்கிறதா?” என்று ஒரு குரல் மேலேயிருந்து வந்தது. வந்தியத்தேவன் அண்ணாந்து பார்த்தான். பூங்குழலி மரக்கிளையில் உட்கார்ந்திருந்தாள்.

வியர்த்து விறுவிறுத்துப் போயிருந்த வந்தியத்தேவன் தன்னை மீறிய கோபத்தினால், “உன்னைப் போன்ற மந்தியை நான் பார்த்ததேயில்லை!” என்றான்.

“உன்னைப் போன்ற ஆந்தையை நான் பார்த்ததில்லை அம்மம்மா! என்ன முழிமுழித்தாய்?” என்றாள் பூங்குழலி.

“எதற்காக இதைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாய்?”

“அவ்விதம் நான் செய்திராவிட்டால் நீ காட்டுக்குள் வந்திருக்க மாட்டாய். எங்கள் வீட்டுக்கு திரும்பிப் போயிருப்பாய்!”

“போயிருந்தால் என்ன?”

“இந்த மரத்தின் மேல் ஏறிப் பார் தெரியும்!”

“என்ன தெரியும்?”

“பத்துப் பதினைந்து குதிரைகள் தெரியும்! வாள்களும், வேல்களும் மின்னுவது தெரியும்!”

அவளுடைய முகத் தோற்றத்திலிருந்து அவள் கூறுவது உண்மையாயிருக்கலாம் என்று தோன்றியது. ஆயினும் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள விரும்பி வந்தியத்தேவன் மரத்தின் மேல் ஏறினான். மரத்தின் மேலேறிக் கலங்கரை விளக்கின் பக்கம் நோக்கினான். ‘ஆம் பூங்குழலி கூறியதும் உண்மைதான்’ அங்கே பத்துப் பதினைந்து குதிரைகள் நின்றன. குதிரைகள் மீது வாள்களும், வேல்களும் பிடித்த வீரர்கள் இருந்தார்கள்.

‘அவர்கள் யாராக இருக்கும்?… நம்மைப் பிடிப்பதற்கு வந்த பழுவேட்டரையரின் ஆட்கள்தான்! வேறு யாராயிருக்க முடியும்?’

பூங்குழலி தன்னைப் பெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றினாள். “பூங்குழலி என்னைப் பேராபத்திலிருந்து காப்பாற்றினாய். உனக்கு மிக மிக நன்றி!” என்றான் வந்தியத்தேவன்.

“இந்த வீரர்கள் என்னைத் தேடி வந்திருக்கிறார்கள் என்பதை எப்படி அறிந்தாய்?”

“உன்னைப் பார்த்தால் தெரியவில்லையா? – நீ தப்பி ஓடி ஒளிந்து கொள்ள வந்திருக்கிறவன் என்று நேற்றைக்கே ஊகித்தேன்.”

“பெண்ணே! நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறாய் என்பதைச் சொல்லி முடியாது. மிச்ச உதவியையும் நீதான் செய்யவேண்டும்…”

“என்ன செய்யவேண்டும் என்கிறாய்?” என்று கேட்டாள்.

“நீதான் படகு வலித்து வந்து என்னை இலங்கையில் சேர்ப்பிக்க வேண்டும்!”

பூங்குழலி மௌனமாயிருந்தாள்.

“நான் தப்புக் காரியம் எதுவும் செய்யக்கூடியவன் அல்ல என்று உனக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா? பெண்ணே! இலங்கைக்கு மிக முக்கியமான காரியமாக நான் உடனே போய்த்தீர வேண்டும். இந்த உதவி எனக்கு நீ அவசியம் செய்தேயாக வேண்டும்…”

“செய்தால் எனக்கு என்ன தருவாய்?” என்று பூங்குழலி கேட்டாள்.

“பெண்ணே! இந்த உதவி நீ எனக்குச் செய்தால் உயிர் உள்ள அளவும் மறக்க மாட்டேன்; என்றென்றும் நன்றி செலுத்துவேன். உனக்கு நான் இதற்குப் பிரதியாகச் செய்யக்கூடியது எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நீ ஏதாவது செய்யும்படி சொன்னால், கட்டாயம் செய்வேன்!”

பூங்குழலி மீண்டும் சிறிது நேரம் சிந்தனை வயப்பட்டிருந்தாள்.

“சரி, என்னுடன் வா! இந்தக் காட்டில் ஓரிடத்துக்கு உன்னை நான் அழைத்துப் போகிறேன். அங்கே இன்று பொழுது சாயும் வரையில் நீர் இருக்க வேண்டும். நான் சொல்லும் இடத்தில் இருட்டும் வரை நீ இருக்க வேண்டும்! இருட்டிய பிறகு நான் திரும்ப வந்து ஒரு சத்தம் செய்வேன். குயில் ‘குக்கூ குக்கூ’ என்று கூவுவதைக் கேட்டிருக்கிறாயா?”

“நன்றாய்க் கேட்டிருக்கிறேன். அப்படிக் கேட்டிராவிட்டாலும் உன் குரலைத் தெரிந்து கொள்வேன்.”

“நான் குரல் கொடுத்ததும் நீ அவ்விடத்திலிருந்து வெளி வர வேண்டும். இருட்டி ஒரு ஜாமத்திற்குள் படகில் ஏறி நாம் புறப்பட்டுவிட வேண்டும்.”

“குயிலின் குரல் எப்போது வரும் என்று காத்திருப்பேன்.”

காட்டின் மத்தியில் மணல் மேடு இட்டிருந்த ஓரிடத்துக்குப் பூங்குழலி வந்தியத்தேவனை அழைத்துப் போனாள். மேட்டின் மறு பக்கத்தில் மரஞ் செடி கொடிகள் மற்ற இடத்தைவிட அதிக நெருக்கமாயிருந்தன. அவற்றை லாவகமாகக் கையினால் விலக்கிக்கொண்டு ஒரு மரத்தின் வழியாகப் பள்ளத்தில் இறங்கினாள். வந்தியத்தேவனும் அவளைப் பின்பற்றி இறங்கினான். அங்கே ஒரு பழைய மண்டபத்தின் மேல் விளிம்பு காணப்பட்டது. இன்னும் உற்றுப் பார்த்ததில் இருளடைந்த மண்டபத்தின் இரு தூண்கள் தெரிந்தன. இவை எல்லாவற்றையும் மரங்களும் செடி கொடிகளும் மறைந்திருந்தன. எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் அந்த மண்டபம் அங்கே இருப்பது தெரியவே தெரியாது.

“இன்று பகலெல்லாம் இங்கேயே இரு! நாலா புறமும் மனிதர்கள் குரல் கேட்டாலும் குதிரைகள் ஓடும் சப்தம் கேட்டாலும் வேறு என்ன தடபுடல் நடந்தாலும் நீ வெளியில் தலை காட்ட வேண்டாம். மேட்டில் மேல் ஏறிப் பார்க்க வேண்டாம்!” என்று பூங்குழலி கூறினாள்.

அன்று பகற்பொழுது வந்தியத்தேவனுக்கு எளிதில் போய்விட்டது. பாதி நேரத்துக்கு மேல் தூங்கிக் கழித்தான்.

மேற்குக் கடலில் சூரியன் அஸ்தமித்தது. நாலாபுறமும் அந்தகாரம் சூழ்ந்து வந்தது. மறைந்த மண்டபத்தில் முன்னமே குடி கொண்டிருந்த இருள் பன்மடங்கு கரியதாயிற்று. வந்தியத்தேவனால் அங்கே மேலும் இருக்க முடியவில்லை வெளியேறி வந்தான். மண்டபத்தை மூடிய மணல் திட்டின் மீது நின்றான். வெகுதூரத்தில் கலங்கரை விளக்கின் ஒளி தெரிந்தது. வானத்தில் வைரமணிகள் சுடர்விட்டு ஜொலித்தன. காட்டில் பல விசித்திரமான ஒலிகள் உண்டாயின.

இதோ குயிலின் குரல்; ‘குக்கூ!’, ‘குக்கூ!’ அந்தக் குரல் தேவகானத்தைப் போல் வந்தியத்தேவன் காதில் ஒலித்தது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றான். பூங்குழலி அங்கு நின்றாள். ‘சத்தம் செய்யாமல் என்னுடன் வா’ என்று சமிக்ஞை செய்தாள். அங்கிருந்து கடற்கரை வெகு சமீபம் என்று தெரிய வந்தது.

கடற்கரையில் படகு ஆயத்தமாயிருந்தது. அதில் பாய் மரமும் பாயும் அதைக் கட்டும் கயிறும் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. படகிலிருந்து இரண்டு கழிகள் நீட்டிக் கொண்டிருந்தன. அந்தக் கழிகளின் முனையில் ஒரு பெரிய மரக்கட்டை பொருத்திக் கட்டப்பட்டிருந்தது.

பூங்குழலி படகை லாவகமாகத் தள்ளிக் கடலில் இறக்கினாள். சிறிதும் சத்தமின்றிக் கடலில் அப்படகு இறங்கியது. படகைப் பிடித்து இழுத்துக் கொண்டே போனாள். கரை ஓரத்தில் அலை மோதும் இடத்தைக் தாண்டிய பிறகு “இனிமேல் படகில் ஏறிக்கொள்ளலாம்!” என்று சொல்லி, அவள் முதலில் ஏறிக் கொண்டாள். வந்தியத்தேவனும் தாவி ஏறினான். அப்போது படகு அதிகமாக ஆடியது. அந்த ஆட்டத்தில் வந்தியத்தேவன் கடலில் விழுந்து விடுவான் போலத் தோன்றியது; சமாளித்துக்கொண்டு உட்கார்ந்தான்.

“பாய்மரம் கட்ட வேண்டாமா?”

“இப்போது எதிர்க்காற்று அடிக்கிறது. பாய்மரம் விரித்தால் படகை மறுபடி கரையிலே கொண்டு போய் மோதும். நடுநிசிக்கு மேல் காற்றுத் திரும்பக்கூடும். அப்போது பாய்மரம் விரித்தால் பயன்படும்!” என்று பூங்குழலி கூறினாள்.

“ஓ உனக்கு இதெல்லாம் நன்றாய்த் தெரிந்திருக்கிறது; அதனாலேதான் உன்னை அழைத்துப் போகும்படி உன் தந்தை சொன்னார்.”

“என் தந்தையா? யாரைச் சொல்லுகிறாய்?”

“உன் தகப்பனாரைத்தான் சொல்லுகிறேன். கலங்கரை விளக்கின் தியாகவிடங்கக்கரையரைச் சொல்லுகிறேன்.”

“கரையில் இருக்கும்போதுதான் அவர் என்னுடைய தந்தை, கடலில் இறங்கிவிட்டால்…”

“தகப்பனார் கூட மாறிப் போய்விடுவாரா, என்ன?”

“ஆமாம்; இங்கே சமுத்திர ராஜன்தான் என் தகப்பனார். என்னுடைய இன்னொரு பெயர் சமுத்திரகுமாரி.”

“அது என்ன விசித்திரமான பெயர்?”

“சக்கரவர்த்தியின் இளைய குமாரனைப் ‘பொன்னியின் செல்வன்’ என்று சிலர் சொல்லுகிறார்கள் அல்லவா! அது போலத்தான்!”

அவனுடன் பேசிக்கொண்டே பூங்குழலி துடுப்பை வலித்துக்கொண்டிருந்தாள். படகு போய்க் கொண்டிருந்தது.

“இலங்கைத் தீவுக்கு நாம் எப்போது போய்ச் சேரலாம்?” என்று கேட்டான் வந்தியத்தேவன்.

“பொழுது விடியும் சமயம் போய்ச் சேரலாம், காற்று நமக்கு உதவியாக இருந்தால்!”

காற்று சுகமாக அடித்தது. படகு விர்ரென்று கடலைக் கிழித்துக்கொண்டு சென்றது. கடலின் ஓங்கார நாதம் கேட்டுக் கொண்டே இருந்தது.

வந்தியத்தேவனுடைய கண்களைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. விழிப்பு நிலையிலிருந்து உறக்க நிலைக்கு இலேசாக நழுவிச் சென்றான்.

மறுபடியும் வந்தியத்தேவன் கண் விழித்தபோது, அவன் எதிரேயும் சுற்றிலும் தோன்றிய காட்சி அவனைப் பிரமிக்கச் செய்தது. கிழக்கே வானமுகட்டில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். அங்கே கடல் உருக்கிவிட்ட தங்கக் கடலாகித் தகதகவென்று திகழ்ந்தது. அவனுக்கு எதிரே படகு போய்க் கொண்டிருந்த திசையில் ஒரு மரகதத் தீவு நீலக் கடலாடை போர்த்துக்கொண்டு விளங்கியது. வலப்புறத்தில் அதே மாதிரி இன்னொரு பச்சை வர்ண பூமிப் பிரதேசம் காணப்பட்டது. இரண்டு மரகதப் பிரதேசங்களுக்கும் ஊடே பார்த்தால் தூரத்தில் அத்தகைய இன்னும் பல தீவுகள் பச்சை நிறத்தின் பல்வேறு வகைக் கலவைகளுக்கு உதாரணமாகத் தோன்றிக் கொண்டிருந்தன.

இந்தக் காட்சியைக் கண்டு மெய்ம்மறந்து நினைவிழந்திருந்த வந்தியத்தேவனுடைய செவியில், “இது சொர்க்கம் அல்ல; இது இலங்கை!” என்ற வார்த்தைகள் விழுந்து அவனை விழிப்படையச் செய்தன.

“ஆம்! இது சொர்க்கமோ என்று நான் சந்தேகித்தது உண்மைதான்!” என்றான் வந்தியத்தேவன்.

படகு தீவை நெருங்கிக் கொண்டிருந்தது. கடல் நடுவே கேட்கும் ஓங்காரத் தொனிக்குப் பதிலாகக் கடல் அலைகள் கரையிலே மோதும்போது உண்டாகும் சலசலப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது.

படகு தீவின் கரையை அணுகியது. இருவரும் படகிலிருந்து இறங்கினார்கள். வந்தியத்தேவன் கரையில் ஏறி விடை பெற்றுக்கொண்டான். பூங்குழலி படகைத் திருப்பினாள்.

– தொடரும்…

நன்றி: http://poniyinselvan.blogspot.com/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *