உன்னதமான உரையாடல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 27, 2023
பார்வையிட்டோர்: 992 
 
 

(வரலாற்றுச் சம்பவங்கள் கதை வடிவில்)

முன்னுரையாக ஒரு குறிப்புரை

“உன்னதமான உரையாடல்கள்” என்னும் இந்த நூலில் உலகப்புகழ் பெற்றவர்கள், நாட்டுப்பற்றாளர்கள், தலைவர்கள், இலக்கிய உலகில் கோலோச்சியவர்கள், அறிவியலாளர்கள் ஆகியோரின் வாழ்வில் இடம்பெற்ற சம்பவங்களும் உரையாடல்களும் சின்னஞ்சிறு கதை சொல்லல் வடிவில் தொகுக்கப் பெற்றுள்ளன.

புதிய தலைமுறையினருக்குப் பயன்படும் என்கிற நம்பிக்கையில் சமர்ப்பிக்கிறேன்.

மிக்க நன்றி.
எஸ். மதுரகவி.


1. எதையும் பெற விரும்பாதவன்

அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீனிடம் ஒரு நிருபர், நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கக் காரணம் என்ன என்று கேட்டார்.

அதற்கு ஐன்ஸ்டீன், நான் யாரிடமும் எதையும் பெற விரும்பாதவன் என்று பதிலளித்தார்.

தி.சா.ராஜு

2. மனநலம் மிகவும் முக்கியம்

எழுத்தாளர் தி.ஜானகிராமன், மற்றொரு எழுத்தாளர் தி.சா.ராஜு அவர்களிடம் நீங்கள் மேகசைன்ஸ் வாசிப்பதில்லையா என்று கேட்டார். அதற்கு தி.சா.ராஜு, மனநலம் கருதி சில சஞ்சிகைககளை நான் தொடுவதில்லை என்றார்.

3. இந்தியா தான் என் சொத்து

மக்கள் தலைவர் ஜீவா அவர்களிடம் மகாத்மா காந்தியடிகள், உரையாடல் இடையே தங்களுக்கு சொத்து ஏதேனும் உள்ளதா என்று கேட்டார். அதற்கு மக்கள் தலைவர் ஜீவானந்தம் அவர்கள், இந்தியா தான் என் சொத்து என்றார். அண்ணல் காந்தியடிகள், இல்லை இல்லை நீங்கள் தான் இந்தியாவின் சொத்து என்று கூறினார்.

4. மனைவியை ஏன் அழைத்து வரவில்லை?

மகாகவி பாரதியார், 1906 ஆம் ஆண்டு தேசபக்தர்கள் மாநாட்டுக்காக கொல்கத்தா நகரத்திற்குச் சென்றார். கொல்கத்தா நகரத்தின் அருகில் டம்டம் என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து தொண்டாற்றி வந்த சுவாமி விவேகானந்தரின் சீடர் பெண் துறறவி சகோதரி நிவேதிதா தேவி அவர்களைச் சந்தித்தார். சகோதரி நிவேதிதா தேவியார், பாரதியாரிடம் மனைவியை ஏன் அழைத்து வரவில்லை என்று வினவினார். பெண்களைப் புறக்கணிப்பது தவறு என்று எடுத்துரைத்தார். பாரதியாரின் பெண்கள் பற்றிய சிந்தனைக் கனலை ஊதுவதாக இந்த உரையாடல் அமைந்தது.

5. தமிழனாகப் பிறக்க வேண்டும்

மூதறிஞர் ராஜாஜி அவர்கள், தமது நண்பர் தமிழறிஞர் ரசிகமணி டி. கே. சி. (டி. கே. சிதம்பரநாத முதலியார்) அவர்களை மகாத்மா காந்தியடிகளிடம் அறிமுகப்படுத்தினார். டி. கே. சி அவர்கள், கம்ப ராமாயணம் பற்றி எடுத்துரைத்து கம்பனின் பாடல் ஒன்றை இராகத்துடன் பாடிக் காண்பித்தார். பொருளையும் நயத்தையும் விளக்கினார். காந்தியடிகள், கம்பருடைய பாடல்களை மூலத்தில் அனுபவிக்க வேண்டும் அதற்கு என்ன வழி என்று கேட்டார். டி. கே. சி அவர்கள், சற்றும் தயங்காமல் கம்ப ராமாயணம் மட்டுமல்ல தமிழ்ப் பாடல் எதுவாக இருந்தாலும் அதை அனுபவிக்க ஒரே வழிதான் உண்டு. அது நீங்கள் தமிழனாகப் பிறப்பதுதான் என்று பதிலளித்தார். இந்தப் பதிலைக் கேட்டு அண்ணலும் அருகில் இருந்தவர்களும் அதிசயப்பட்டனர்.

6. இயற்கையைப் பற்றி எழுதுங்கள்

உலகம் சுற்றிய தமிழர் என்று போற்றப்படும் ஏ. கே. செட்டியார் (ஏ. கருப்பன் செட்டியார்), தமிழ் மொழியின் பயண இலக்கிய முன்னோடி. இதழாளரும் ஆவார். தொழில்நுட்ப வசதிகள் ஏதும் இல்லாத கால கட்டத்தில் காந்தியடிகள் பற்றி, அரும்பாடுபட்டு ஆவணப்படத்தை எடுத்து சாதித்துக் காட்டியவர்.

இவர், புதுச்சேரியில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைச் சந்தித்தார். அப்போது ஏ. கே. சி அவர்கள், புரட்சிக்கவிஞரிடம் சமுதாய மேம்பாட்டுக்காகவும் மொழிப்பற்றுக்காகவும் கவிதைகள் படைக்கும் தாங்கள் இயற்கையைப் போற்றும் கவிதைகளை ஏன் எழுதக் கூடாது என்று வினா தொடுத்தார்.

இளைஞர் ஏ. கே. சி, முன் வைத்த எண்ணத்தை ஏற்று பாவேந்தர் “அழகின் சிரிப்பு” என்னும் இயற்கை அழகைப் போற்றும் காப்பியத்தைப் படைத்தார். ஏ. கே. சி அவர்களின் “குமரிமலர்” இதழில் அழகின் சிரிப்பு

தொடராக வந்தது. பின்னர், பதிப்புலக முன்னோடி முல்லை முத்தையா, அதனை நூலாகத் தொகுத்து வெளியிட்டார்.

7. தெய்வம் நீ என்று உணர்

புதிய ஆத்திச்சூடி படைத்த முண்டாசுக் கவிஞன், தெய்வம் நீ என்று உணர் என்று அந்த நூலில் குறிப்பிட்டான்.

பாரதத்தின் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைத்த மகான் சுவாமி விவேகானந்தர், இளைஞன் நரேந்திரனாக இருந்த போது இராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களைச் சந்தித்து கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்டார்.

அதற்கு பரமஹம்சர், தெய்வம் உன்னுள்ளும் இருக்கிறது என்னுள்ளும் இருக்கிறது என்று பதிலளித்தார். நரேந்திரன், பரமஹம்சர் பாதம் பணிந்து வணங்கி அவரை குருவாக ஏற்றார்.

8. உங்கள் இயக்கம் வெற்றி பெறட்டும்

ராஜாஜி அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த அண்ணல் காந்தியடிகளைச் சந்திக்கச் சென்றார் மகாகவி பாரதியார். ‘மிஸ்டர். காந்தி, இன்று மாலை, திருவல்லிக்கேணி கடற்கரை கூட்டத்திற்குத் தாங்கள் தலைமை ஏற்றுப் பேச முடியுமா? என்று அழைப்பு விடுத்தார். காந்தியடிகள், உதவியாளரிடம் கலந்து பேசி விட்டு, இன்று வேறு அலுவல் இருக்கிறது. கூட்டத்தை நாளைக்கு வைத்துக் கொள்ள முடியுமா என்று வினவினார். பாரதியார், ‘முடியாது பாதகமில்லை. தாங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்தை நான் ஆசீர்வாதிக்கிறேன் என்று கூறி விட்டு விடை பெற்றுச் சென்றார். பாரதியார் பற்றி ராஜாஜியிடம் கேட்டறிந்த காந்தியடிகள், இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

8. உன் மனைவியின் கண்ணீரைத் துடை

தமிழ்நாடு போற்றும் கடையேழு வள்ளல்களில் ஒருவன் – பேகன். குளிரில் நடுங்கிய மயிலுக்குப் போர்வை தந்தவன் என்று போற்றப்படுபவன். இவன் தன்னுடைய வாழ்வில் சில மாதங்கள், மனைவி கண்ணகியை மறந்து வேறு மகளிருடன் வாழ்ந்து வந்தான். (சிலப்பதிகாரத்தில் கோவலனின் மனைவி கண்ணகி. பேகனின் மனைவியின் பெயரும் கண்ணகி)

அப்படிப்பட்ட சமயத்தில் புலவர் பரணர், பேகனைப் பார்க்கச் சென்றார். அக்கால மரபுக்கு ஒப்ப, புலவருக்குப் பரிசில் தர முன் வந்தான் பேகன். பரணர், பரிசிலைப் பெற்றுக் கொள்ளவில்லை.

புலவர் பேசினார் :” மன்னா வள்ளலே உன்னையே எண்ணிக் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருக்கும் உன் மனையாளின் கண்ணீரைத் துடை. அவளுடைய துயரத்தைப் போக்கி அவளுடன் சேர்ந்து நீ வாழ வேண்டும். அதுதான் நான் வேண்டும் பரிசில்”.

புலவரின் வார்த்தைகள் பேகனின் மனத்தைத் தைத்தது. மனம் மாறினான். மனைவியுடன் இணைந்தான்.

9. மரணத்தை வரவேற்ற மாவீரன் பகத்சிங்

பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிய பகத்சிங் என்னும் மாவீரனுக்குத் தூக்கு மேடையே பரிசாகக் கிடைத்தது. அவருடைய தந்தையார், பகத்சிங்குக்காக கருணை மனு அளித்திருந்தார்.

தம்மைச் சந்திக்க வந்த தந்தையாரிடம் பகத்சிங் கூறினார் :

தந்தையே ஒரு தேசபக்தராக இருந்து நீங்கள் இப்படி நடந்து கொள்வது உங்கள் பலவீனத்தையே காட்டுகிறது. இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய நீங்கள் இப்போது பலவீனத்தைக் காட்டலாமா?

கபீர் தாசரின் பாடலை நினைவில் கொள்ளுங்கள் தந்தையே.

மக்களை அஞ்ச வைக்கும் மரணம் எனக்கோ மகிழ்ச்சியத் தருகிறது. மரணம் அன்றோ எனக்கு பேரின்பத்தைத் தருகிறது.

10. தலையைக் கொடுக்க வந்த தலைவன்

தலையையா கொடுக்க முடியும் என்பது அன்றாட பேச்சு வழக்கில் ஒலிக்கும் சொற்கள். சங்க காலத்தில் முதிரமலைத் தலைவன் குமணன் என்னும் மன்னன் நல்லாட்சி புரிந்து வந்தான். அவனுக்கும் கஷ்ட காலம் வந்தது. குமணனின் இளவல் இளங்குமணன் அண்ணணிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொண்டான். அதன் பின்னும் அண்ணன் மீது பகைமை தீராமல் அவனுடைய தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ஆயிரம் பொன் தருவதாக அறிவிப்பு செய்தான்.

வஞ்சக மனிதர்கள் வாழும் நாட்டை விட்டு வெளியேறி காட்டில் வாழ்ந்து வந்தான் குமணன்.

அந்த நாட்களில் கஷ்ட நிலையில் உள்ள அரசர்களையும் புலவர்கள் சந்தித்து வந்தனர். பெருந்தலைச் சாத்தனார் என்னும் சங்கத்தமிழ் கவி, குமணனை வனத்தில் சந்தித்தார். தேடி வந்தவருக்கு பொருள் எதுவும் தர இயலாத நிலையில் இருந்த அரசன், புலவரிடம் ” என் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசு தருவதாக என் இளவல் அறிவித்திருக்கும் செய்தி என் செவிகளை அடைந்தன. தாங்கள் என் தலையை வெட்டிச் செல்லுங்கள்” என்று கூறினான். தன்னுடைய வாளை புலவரிடம் தந்தான்.

தன்னை நாடி வந்த புலவருக்குத் தன்னுடைய தலையைக் கொடுக்க முன் வந்தான் இந்தத் தலைவன்.

மன்னன்தான் சொல்லி விட்டானே என்று புலவர் அவனை வெட்டிச் சாய்க்கவில்லை. அரசனிடம் விடைபெற்று நேராக நாட்டுக்கு வந்த வஞ்சக வழியில் நாடாளும் அவன் தம்பியைச் சந்தித்தார்.

அவனிடம் புலவர் கூறினார் :

” வாடிய காலத்திலும் வாரி வழங்கும் வள்ளல்தன்மை மாறாமல் இருக்கும் உன் தமையனின் குணத்தைப் பார். தலையைத் தானமாக வந்த தயாள குணத்தைப் பார். அவனோடு நீ பகை கொள்வது சரிதானா”

என்றெல்லாம் பேசி இளங்குமணன் மனத்தை மாற்றினார். அவனைத் திருத்தினார். இளவல் மனம் மாறினான். புலவர், இதனை புறநானூற்றுப் பாடலாகப் பதிவு செய்துள்ளார்.

11. நீர் காளிதாசன்

இந்தியாவின் இரண்டாவது இந்திய மொழி நாளிதழ் என்ற பெருமையைப் பெற்ற நாளேடு – சுதேசமித்திரன். இந்திய நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த கால கட்டத்தில், தமிழகத்தில் ஜீ. சுப்ரமண்ய ஐயர், ஆங்கிலத்தில் இந்து நாளிதழையும் தமிழில் சுதேசமித்திரன் நாளிதழையும் தொடங்கி நாட்டு மக்களிடையே சுதந்திர வேட்கையை உண்டாக்கினார்.

ஜீ. சுப்ரமண்ய ஐயர், மகாகவி பாரதியாரின் திறமையறிந்து அவரைத் தமது நாளேட்டின் துணை ஆசிரியராக சேர்த்துக் கொண்டார்.

பாரதியின் ஆற்றொழுக்கு நடையில் தம் மனதைப் பறி கொடுத்த ஜீ. சுப்ரமண்ய ஐயர் பாரதியிடம் கூறினார் : ” பாரதி நீர் அருமையாகத் தமிழ் எழுதுகிறீர். உனக்கு அட்சர லட்சம் கொடுக்கலாம். நீர் காளிதாசன் தான். ஆனால், உனக்குத் தக்க சன்மானம் கொடுக்க நான் போஜராஜன் இல்லையே. அதுதான் வருத்தமாக இருக்கிறது.” ஐயரின் வார்த்தைகளைக் கேட்டு பாரதி நெகிழ்ந்தார்.

12. உயிரைக் கொடுத்தவனே உயர்ந்தவன்

தேவதத்தன் என்னும் இளைஞன், மாலை வேளையில் ஒரு பறவையை அம்பெய்தி வீழ்த்தினான். பறவை துடிதுடித்து சோலையில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவனின் மடியில் விழுந்தது. இளைஞன் உடனடியாக அதற்கு சிகிச்சை செய்து காப்பாற்றினான். பறவையைத் தேடி வந்த தேவதத்தன், அதனைத் தரும்படி அந்த இளைஞனிடம் கேட்டான். இளைஞன் கொடுக்க மறுத்தான்.

இருவரும் அரசவைக்குச் சென்றனர். நடந்ததைக் கூறினர். அரசன் பார்த்தான். இளைஞனோ அவன் மகன் இளவரசன். தேவதத்தன் அவனுடைய தம்பியின் மகன். அதனால், பறவை யாருக்குச் சொந்தம் என்பதில் தீர்ப்பளிக்கும் பொறுப்பை அவையில் அமர்ந்திருந்த பெரியவரிடம் விட்டு விட்டுச் சென்று விட்டான் அரசன்.

பெரியவர், ” உயிரைப் பறிக்க முயன்றவனை விட உயிரைக் காப்பாற்றியவனே உயர்ந்தவன். எனவே, பறவை அதன் உயிரைக் காப்பாற்றிய இளைஞனுக்கே சொந்தம்” என்று கூறினார்.

அவையில் இருந்தவர்கள், நன்று நன்று நன்று என்று கொண்டாடினர்.

அந்த இளைஞன் தான் சித்தார்த்தன். பின்னாளில் ஆசிய ஜோதி என்று கொண்டாடப்பட்ட கௌதம புத்தர்.

13. புத்தரை எதிர்ப்பேன்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களொ, இந்திய நாட்டின் விடுதலைக்காக அயல்நாடுகளில் தங்கி இருந்து சுதேசி அரசு சுதேசி இராணுவம் அமைத்து பல செயற்கரிய செயல்களைச் செய்தார். அப்படி அவர் ஜப்பானில் இருந்த தருணத்தில் அங்கு ஒரு பள்ளிக்கூடத்திற்குச் சிறுவர் சிறுமியர் உடன் உரையாடினார்.

ஒரு சிறுவனிடம் நேதாஜி கேட்டார் ” இப்பொழுது புத்த தேவர் உன் முன்னால் தோன்றினால் என்ன செய்வாய்?”

சிறுவன் பதிலளித்தான் : கைகூப்பி வணங்கி பாதம் பணிந்து அவரது ஆசிகளைக் கோருவேன் “

நேதாஜி மற்றொரு கேள்வியால் அவனை மடக்கினார் :” அவர் உன்னுடைய வழிபடு கடவுளாக வராமல் உன் நாட்டின் மீது படையெடுத்து வந்திருப்பதாக சொன்னால் நீ என்ன செய்வாய்?”

அதற்கு அந்தச் சிறுவன் ஆவேசமாக கூறினான்

” அவர் என் நாட்டின் மீது படையெடுத்து வந்தால் ஆயுதம் ஏந்தி எதிர்க்கும் முதல் ஆளாக அவர் முன் நான் நிற்பேன்”

நேதாஜி அவர்கள், சிறுவனுடைய தேசபக்தியைக் கண்டு மனம் நெகிழ்ந்து அவனை வாரி அணைத்துக் கொண்டார்.

14. அறிவுடை நம்பியை திருத்திய பெரும்புலவர்

சங்ககாலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவன் அறிவுடை நம்பி. மிகவும் சிறப்பாக ஆட்சி செய்து வந்த அறிவுடை நம்பியின் அவைக்களப் புலவர்களுள் ஒருவர் பெரும்புலவர் பிசிராந்தையார்.

பிசிராந்தையார், சோழ நாடு சென்றாலும் சேர நாடு சென்றாலும் நம்பியின் ஆட்சி பற்றிய பெருமைகளைப் பிறரிடம் எடுத்துரைப்பார்.

விதிவசத்தால் இந்த மன்னனும் செங்கோல் ஆட்சியை விடுத்து கொடுங்கோல் ஆட்சி நடத்த முற்பட்டான். அளவுக்கு அதிகமாக மக்களிடமிருந்து இறைப் பணத்தை (வரி) வசூல் செய்யத் தொடங்கினான். தமிழ் நிலத்தின் வேறு பகுதியிலிருந்த பெரும்புலவர் பிசிராந்தையாரிடம் மக்கள் தலையில் ஏற்றப்பட வரிச்சுமை குறித்தும் மன்னனின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் பற்றியும் தெரிவிக்கப்பட்டது.

புலவர் அவசரம் அவசரமாக திரும்பினார். மன்னனிடம் சென்றார்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு என்று வள்ளுவப் பெருந்தகை கூறியதற்கு இணங்க அவனிடம் துணிவாகப் பேசினார் :

“ அரசே வயல்களில் விளையும் நெல்லைப் பதப்படுத்தி கவளமாகக் கொடுத்து வருதலே யானைக்கு உணவிடும் வழக்கமாகும். யானையே வயல்வெளிக்குச் சென்றால் நெல்லெல்லாம் அதன் காலடிப்பட்டு சிதைந்து போகும். அது போலவே அரசனும் முறைப்படி இறைப் பொருளை மக்களிடமிருந்து

பெறுவதிலேயே புகழ் பெறுவான். தவறாக வழி நடத்தும் அலுவலரோடு கூடி குடிமக்களின் அன்பு கெடும்படி வாரிக் குவித்தால் அது அவனுக்குப் பயன் தராது. உலகமும் கெடும் “

பெரும்புலவரின் வார்த்தைகளை பொறுமையுடன் செவி மடுத்த அரசன், மனம் மாறினான். அப்போதே மக்களை வதைக்கும் வரிச்சுமைகளை நீக்க அதிகாரிகளிடம் உத்தரவு பிறப்பித்தான்.

15. அகிம்சை வழியை எடுத்துரைத்த பட்டேல்

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பாக, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள், தில்லியில் இருந்த தருணத்தில் மும்பையில் ராயல் இந்தியன் நேவி குழுவினர், பிரிட்டிஷாருக்கான எதிர்ப்பை வன்முறை வழியில் காண்பித்தனர். பட்டேல் மும்பை விரைந்தார். எரிந்த கட்டிடங்கள், சூறையாடப்பட்ட கடைகள் எல்லாவற்றையும் பார்த்தார்.

வன்முறையில் ஈடுபட்ட கடற்படை வீரர்கள் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்து அவர்களைச் சந்தித்து பேசினார். வீரர் ஒருவர் சொன்னார் – நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நீங்கள் தலைமை தாங்குங்கள். இதோ கடற்படை.

அவருடைய ஆவேசத்தைக் கண்டு பட்டேல்ஜி அமைதியாகப் பேசினார் :

எனதருமை வீரர்களே நம்முடைய போர்முறைகள் வன்முறையற்றவை என்பது நீங்கள் அறியாததா? சட்டம் ஒழுங்கு என்பது இல்லாமல் இருக்கும் நம்மைப் பார்த்து இந்தியர்களால் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ள முடியாது என்றல்லவா பிரிட்டிஷார் நினைப்பார்கள். நீங்கள் அனைவரும் சரணடையுங்கள். உங்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.

பட்டேல்ஜியின்வார்த்தைகளைக் கேட்டு வீரர்கள் அனைவரும் ஆயுதத்தைக் கீழே போட்டு சரணடைந்தார்கள்.

16. என் சக பணியாளர்களைக் கை விட்டு விடாதீர்கள்

2010 ஆம் ஆண்டு. ஆகஸ்டு மாதம். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி என்கிற சின்னஞ்சிறிய நாட்டின் சான் ஜோன்ஸ் என்கிற தங்கத் தாமிரச் சுரங்கத்தில் 500 மீட்டர் ஆழத்தில் 33 தொழிலாளர்கள் பணி புரிந்து கொண்டிருந்த போது எதிர்பாராத நிலச்சரிவால் ஒரு இலட்சம் எடையுள்ள பூதாகரமான பாறை ஒன்று அந்தச் சுரங்கத்தை மூடி விட்டது.

33 நபர்களும் வெளி உலகத் தொடர்பு இல்லாமல் 17 நாட்கள் இருந்திருக்கிறார்கள்.

பூமிக்கடியில் புதையுண்ட தொழிலாளர்களின் கண்காணிப்பாளர் தலைவன் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக தொழிலாளர்களுக்கு நம்பிக்கயூட்டி தெம்புரை அளித்துக் கொண்டிருந்தார். அவர் பெயர் – லூயி உருசுவா(இவரும் 33 நபர்களில் ஒருவர்)

வெளி உலகத்தினர், அரும்பாடுபட்டு இவர்கள் புதையண்டதை 18 ஆம் நாள் அறிந்து தொடர்பு கொண்டனர்.

சிலி நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பினேரா, ஒயர்லெஸ்சில் பேசியபோது லூயி உருசுவா அவரிடம் சொன்ன வார்த்தைகள்

“என் சக பணியாளர்கள் அனைவரையும் கைவிட்டு விடாதீர்கள் “

உடன் பணியாற்றுபவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்காத உருசுவா, இயந்திரக்கூண்டு அமைத்து மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்ட போது உடனிருந்த அனைத்து தொழிலாளர்கள் அனைவரையும் பத்திரமாக மேலே அனுப்பி வைத்து விட்டு பின்னர் கடைசியாக மேலே வந்தார்.

கொஞ்சம் உணவு, கொஞ்சம் தண்ணீர், தலைக்கவசத்தின் டார்ச் ஒளி இவற்றால் 17 நாட்களை அவர்கள் கடத்தினார்கள். பேரிடர் நேரத்திலும் அவர்களை மனம் தளராமல் இருக்கச் செய்து மெய்சிலிர்க்க வைத்தார் உருசுவா.

17. தகுதியறிந்து தந்திடும் பரிசிலே வேண்டும்

ஔவையாருக்கு நெல்லிக்கனி அளித்த மன்னன் அதியமானைக் காண புலவர் பெருஞ்சித்திரனார் ஒரு முறை அவனுடைய அரண்மனைக்கு வந்தார்.

காவலர் தலைவன் விரைந்து உள்ளே சென்று மன்னனிடம் புலவர் பெருமான் வருகையைத் தெரிவித்தான்.

மன்னன் வேறு அலுவலில் இருத்ததால் காவலர் தலைவன் திரும்பி வந்தான். காத்திருந்த புலவரைப் பார்த்துக் கூறினான் :

புலவர் பெருமான் மன்னித்தருள வேண்டும். அரசரால் தங்களை நேரில் சந்தித்து தங்கள் இன்பத் தமிழைக் கேட்டு இன்புற முடியவில்லை. இந்தப் பரிசிலை ஏற்றருள வேண்டும்.

பொன்னும் மணியும்ஆடைகளும் அவன் கரங்களில் இருந்தன.

புலவர் பெருமான் மனம் வேதனை அடைந்தது. அவர் பேசிய வார்த்தைகளில் அவர் மன வேதனை வெளிப்பட்டது.

“காவலர் தலைவரே இப்படி பரிசுப் பொருள் வாங்க நான் ஒன்றும் வாணிகப் பரிசலன் அல்லன். அரசன் என்னைப் பேணி உபசரித்து என்னுடன் உரையாடி மகிழ்ந்து என் தகுதி பார்த்து திணையளவு பரிசில் தந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வேன். பாராமல் பரிசில் பெறுவது எனக்குப் பெருமை இல்லை. நான் சொன்ன செய்தியை மன்னரிடம் சொல்வீராக. நான் சென்று வருகிறேன். “

இவ்வாறு கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினார் புலவர் பெருமான். சங்கத் தமிழ் கவிகளின் தன்மானத்திற்குச் சான்றான இந்த நிகழ்ச்சி, புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

18. மரணத்தின் பிடியிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்றிய புலவர்

சங்க காலத்தில் தமிழ் நிலத்தில் சோழர் மரபில் உதித்த சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்னும் மன்னன் இருந்தான்.

அவன் மலையமான் என்னும் அரசன் மீது பகைமை கொண்டு போர்த் தொடுத்தான். வென்றான்.

அப்படியும் அவன் வஞ்சம் தீராமல் மலையமானின் புதல்வர்களான இரண்டு சிறுவர்களை யானைக் காலால் கொலை செய்து விட ஆணையிட்டான்.

இது பற்றி கோவூர் கிழார் என்னும் புலவர் கேள்விப்பட்டார். பதறித் துடித்தார். கொலைக் களத்திற்கு ஓடோடிச் சென்றார்.

அங்கே நின்று கொண்டிருந்த மன்னன் கிள்ளி வளவன் அருகில் சென்றார்.

அவனிடம் பக்குவமாகப் பேசினார்:

“மன்னா நீதான் புறாவின் துன்பத்தைப் போக்கிய சோழ ராஜாவின் பரம்பரையில் உதித்தவன்.

இந்த இளஞ்சிறார்கள் முதலில் யானைகளைக் கண்டு முதலில் பயந்தார்கள். இப்பொழுது துன்பத்தை எதிர்கொள்ள துணிந்து நிற்கிறார்கள். இவர்களைக் கொல்வதால் உனக்கு அவப்பெயரே மிஞ்சும். என் மனதில் பட்டதைச் சொன்னேன். நீ விரும்பியதைசெ செய். “

மன்னன் கிள்ளி வளவன் மனத்தை புலவரின் சொற்கள் தைத்தன. மனம் மாறினான். சிறுவர்களை விடுவித்தான்.

இந்த நிகழ்ச்சி, புலவரின் வார்த்தைகளில் புற நானூற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

19. சந்திப்பும் சிந்தனையும்

அறிஞர் ஐன்ஸ்டீன், சார்லி சாப்ளினைச் சந்திக்க விரும்பினார். 1931 ஆம் ஆண்டு, சிட்டி லைட்ஸ் திரைப்பட அறிமுக நிகழ்ச்சியில், ஐன்ஸ்டீன் அவர்கள், சாப்ளினைச் சந்தித்தார்.

ஐன்ஸ்டீன் : சாப்ளின், நீங்கள் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. ஆனால், மக்கள் உங்கள் கலையைப் புரிந்து கொண்டு பாராட்டி மகிழ்கிறார்கள். உங்கள் புகழ் மகத்தானது.

சாப்ளின் : சார், உங்கள் புகழ், நான் அடைந்த புகழை விட மேலும் மகத்தானது. நீங்கள் பேசும் ஒரு வார்த்தை கூட உலக மக்களுக்குப் புரிவதில்லை. ஆனால், அவர்கள் உங்களைக் கொண்டாடுகிறார்கள்.

20. நான்கு மை

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களை அமரர் கல்கி அவர்கள் சந்தித்துப் பேசிய ஒரு தருணத்தில், என். எஸ். கே. அவர்கள், ‘எனக்கு கதை எழுத வேண்டும் என்று ஆசை’ என்றார். அதற்கு கல்கி, ‘கதை எழுத நான்கு மை வேண்டுமே’ என்று கூறினார். என். எஸ். கே. அவர்கள், ‘என்னென்ன மை’ என்று வினவினார். கல்கி ‘திறமை, பேனா மை, தனிமை, பொறுமை’ என்று பதில் அளித்தார். என். எஸ். கே. ‘ நீங்கள் சொன்னது மிகவும் அருமை ‘என்று கூறி புன்னகை பூத்தார்.

21. ஜப்பான் வளர்ச்சி அடைய காரணம்

சுவாமி விவேகானந்தர் அவர்களிடம் ஒரு பத்திரிகை நிருபர், ஜப்பான் மிக விரைவில் உயர்ந்த நிலையை அடைந்த ரகசியம் என்ன என்று கேட்டார்.

அதற்கு சுவாமிஜி ‘ஜப்பானியர்களின் தன்னம்பிக்கையும் நாட்டுப்பற்றும் தான் காரணம். மனிதர்களே நாட்டை உருவாக்குகிறார்கள். ஜப்பானியர்களின் சமூக ஒழுக்கத்தையும் அரசியல் ஒழுக்கத்தையும் கைக்கொண்டால் அவர்களைப் போல் மேன்மை பெறலாம்.அவர்கள், நாட்டிற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளனர்’ என்றார்.

22. சாக்ரட்டீஸ் கூறிய கடைசி வார்த்தை

கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் இளைஞர்கள் இடையே சிந்தனை எழுச்சியை உண்டாக்கிய,’ நான் ஏதென்ஸ் காரன் அல்ல கிரேக்கனும் அல்ல நான் உலகின் குடிமகன் ‘என்று கூறிய தத்துவ ஞானி சாக்ரட்டீஸ் அவர்களுக்கு விஷம் அருந்தி சாக வேண்டும் என்கிற மரண தண்டனை அறிவிக்கப்பட்ட போது, நீதிபதிகள் முன்னால் சாக்ரடீஸ் கூறினார் :

‘நான் மரணம் அடையவும் நீங்கள் வாழவும் இப்போதைய தருணம் உள்ளது. நம்மில் யார் நல்ல நிலையில் உள்ளார் என்பது கடவுளைத் தவிர யாருக்கும் தெரியாது’

23. உழைப்பின் பெருமை

தங்கள் நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன என்று ஓர் இளைஞர் நூற்றாண்டு நிறை வாழ்வு வாழ்ந்த பொறியியல் மாமேதை சர். எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களிடம் கேட்டார்.

‘ என்னை அழைத்துக் கொண்டு போக எம தர்ம ராஜா, நான் மும்முரமாக வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு வேலை செய்பவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று போய் விடுவார்’ என்று பதில் அளித்தார்.

24. உரையாடலில் மதிநுட்பம்

அறிஞர் பெர்னார்ட் ஷா அவர்களை பொது நிகழ்ச்சியில் சந்தித்தார் ஒரு பருமனான உருவம் கொண்ட நபர்.

‘என்ன நீங்கள் அநியாயத்துக்கு ஒல்லியாக இருக்கிறீர்கள். உங்களை வெளிநாட்டவர் பார்த்தால் நம் நாட்டில் உணவுப் பஞ்சம் என்று அல்லவா நினைப்பார்கள்’ என்று உரையாடலில் சீண்டினார்.

ஷா உடனே கூறினார் : ‘ உங்களைப் பார்க்கும் போது அவர்கள் உணவுப் பஞ்சம் உங்களால் தான் வந்திருக்கும் என்று முடிவுக்கு வருவார்கள் ‘

25. புத்கத்திற்காக பண்ணையில் பணி

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று விரும்பினான் ஓர் அமெரிக்க ஏழை இளைஞன். அருகில் இருந்த ஒரு பண்ணையாரின் இல்ல நூலகத்தில் வாஷிங்டன் வாழ்க்கை வரலாறு இருப்பதை அறிந்து அவரிடம் புத்தகத்தை இரவல் தருமாறு கேட்டான் அந்த இளைஞன். மிகவும் கெஞ்சிக் கேட்ட பின்னரே அவர் புத்தகத்தைக் கண்ணில் காட்டினார். ஆர்வத்துடன் வாங்கிச் சென்றான் அந்த இளைஞன்.

எச்சரிக்கையாக இருந்தும் அன்றிரவு பெய்த மழையில் அந்த நூல் நனைந்து விட்டது. மறு நாள். நன்றாக வெயில் வந்த பிறகு உலர வைத்து புத்தகத்தை பண்ணையாரிடம் திருப்பிக் கொடுத்தான் இளைஞன். அவர் வாங்க மறுத்தார். “புத்தகத்தைப் பாழ் படுத்தி விட்டாய். நீயே வைத்துக் கொள். அதற்காக என் பண்ணையில் நான் இடும் வேலைகளை மூன்று நாட்கள் செய்ய வேண்டும்” என்றார்.

மூன்று நாள் வேலை செய்தால் புத்தகம் தனக்குரியதாகும் என்பதை நினைத்து மூன்று நாட்கள் அலுக்காமல் சலிக்காமல் அவர் சொன்ன வேலைகளைச் செய்தான். வாஷிங்டன் வரலாற்றுப் புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்தான்.

பிற்காலத்தில் அவனும் அமெரிக்க அதிபர் ஆனான். ஆம். அந்த இளைஞன் தான் ஆபிரகாம் லிங்கன்.

– முதற் பதிப்பு ஆகஸ்ட் 2023

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *