நியூயார்க்கில் சங்கர்லால்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 13, 2024
பார்வையிட்டோர்: 1,785 
 
 

(1983ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-19

அத்தியாயம்-16

சங்கர்லால், நியூயார்க் வருவதற்கு முன் ஆல்பர்ட்டைப் பொறுத்த வரையில் எல்லாமே அவன் திட்டப்படி நடந்து வந்தன. ஆனால், சங்கர்லால் நியூயார்க்கில் வந்து இறங்கியது முதல், எதுவும் அவன் திட்டப்படி நடக்கவில்லை. சங்கர்லால் வந்துவிட்டார் என்ற அச்சத்தினால், அவன் ஆட்கள் தவறு செய்து வருகிறார்களா? சூழ்நிலை இயற்கையாகவே சங்கர்லாலுக்கு வாய்ப்பாக அமைகிறதா? புரியவில்லை. சங்கர்லால் வேடத்தில் இருந்த ஜங்கிள்ஜானை அந்தோணி எளிதில் சுட்டுவிட்டதைப் போல், சங்கர்லாலையும் சுட்டுக் கொன்றிருந்தால் எல்லாம் திட்டப்படி அமைந்திருக்கும். அச்சத்தின் காரணமாகவோ என்னவோ, அந்தோணி எதிர்பாராத ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டான். அவன் பணத்துடன் தப்பி ஓட முயன்றபோதுகூடச் சங்கர்லாலைச் சுட முயன்றிருக்கிறான்! முடியவில்லை! ஏதோ ஒன்று நடந்து சங்கர்லாலைக் காப்பாற்றிவிட்டது! அந்தோணியால் சுட முடியாத ஒரு மனிதரை வேறு எவராலும் சுட முடியாது!

இந்த எண்ணம் அவன் மனத்தில் இழை ஓடியபோது அவன் உடல் சிலிர்த்தது!

அவன் காரை ஓட்டிக்கொண்டே சிந்தனை செய்தான்.

‘பெரும்பணம் பெறவேண்டும் என்ற ஆசையால் நான் பூனையின் வலையில் விழுந்தேன். பூனை எனப்படும் ஜாக்ஸன் கொடியவன். வல்லவன். மூளை உள்ளவன். இப்போது நான் அவன் பிடியிலிருந்து தப்பி அந்தோணியைப் போல் ஓட எண்ணினால், என்னையும் ஜாக்ஸன் ஒழித்துக் கட்டிவிடுவான். கொலை செய்வது என்பது அவனுக்குச் சுருட்டுப் பிடிப்பதைப் போல! மனச்சான்று என்பது அவனுக்கு இல்லை! அச்சம் என்பது அவனுக்கு இல்லை. அவன் கட்டளைப்படி நடக்காதவர்களை எங்கே இருந்தாலும் தேடிப்பிடித்து அவர்களைக் கொன்று விடுவான். அவனுக்காக ஒரு கொடிய கூட்டம் வேலை செய்கிறது. ஆகையால், நான் எப்படியும் பமேலாவைக் கொல்ல வேண்டும். கொன்றுவிட்டு, ஜாக்ஸனிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும். நான் சங்கர்லாலுக்கு அஞ்சிப் பயன் இல்லை!’

இப்படிச் சிந்தனை செய்துகொண்டே தன் இருப்பிடத்துக்குச் சென்றான். பணப்பெட்டியை மேசை அறையில் வைத்தான். பூட்டினான். பிறகு விரைந்து கீழே வந்தான். வந்து, காரில் ஏறினான். மீண்டும் புறப்பட்டான்.

கார்களைத் திருடி விற்று அவன் இதுவரையில் மிகுந்த பணம் திரட்டி வந்தான். அதில் அவன் மிக வெற்றிகரமாக இருந்து வந்தான். அதையே தொடர்ந்து செய்து வந்திருந்தால் ஆபத்துக் குறைவாக இருந்திருக்கும். இதுவரையில் அவன் போலீசாரிடம் அகப்பட்டதில்லை. அப்படியே அகப்பட்டிருந்தாலும் சான்றுகள் எதுவும் இல. அதனால் அவன் தப்பி வந்தான். இன்று என்ன நடக்குமோ? தப்ப முடியுமா?

ஆல்பர்ட், தன் காரை ஈராஸ் திரையரங்குப் பக்கம் செலுத்தினான். திறந்தவெளி அரங்கில் படம் ஓடிக்கொண்டிருந்தது. ஏறக்குறைய முன்னூறு கார்கள் வெளியில் நின்று கொண்டிருந்தன. காரில் இருந்தபடியே காரில் வந்தவர்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஓர் ஓரமாகக் காரை நிறுத்தினான். நிறுத்திவிட்டு, டிக்கெட் வாங்கிக் கொண்டு காருக்கு வந்தான். மிகப் பெரிய அளவில் திரையில் படம் ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு காருக்குப் பக்கத்திலும் ஒலிபெருக்கியைப் பொருத்தி இருந்தார்கள். அது ஒரு சிறிய வானொலிப் பெட்டியைப் போல் இருந்தது. அதைத் தூக்கிக் காரில் வைத்துக் கொள்ளலாம். அதைத் திருப்பினால் படத்தின் வசனமும் இசையும் கேட்கும். தேவையான அளவுக்கு ஓசையைக் குறைத்து வைத்துக் கொள்ளலாம். கூட்டியும் வைத்துக் கொள்ளலாம்.

ஆல்பர்ட், படத்தைப் பார்த்தான். ஹிட்ச்காக்கின் படத்தில் ஒரு கொலை நடந்து கொண்டிருந்தது. நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்த ஓர் அழகிய பெண்ணை ஓர் இளைஞன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு வெளியே ஓடுகிறான். அவள் அலறும் ஓசை மிகவும் அச்சம் தரும் வகையில் இருந்தது!

ஆல்பர்ட், படத்தை உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், கொஞ்ச நேரத்தில் அவன் மனம் சோர்வு அடைந்தது. ஹிட்ச்காக்கின் படங்கள் அவனுக்குப் பிடிப்பதில்லை. காரணம், இறுதிக் காட்சியில், கொலையாளியைப் போலீசார் பிடித்து விடுவார்கள்! அந்தக் காட்சி அவனுக்குப் பிடிப்பதில்லை!

‘எல்லாக் கொலையாளிகளையும் போலீசாரால் பிடிக்க முடிகிறதா? கொலையாளி தப்பிவிடுவதைப் போல்தான் ஹிட்ச்காக் ஒரு படம் எடுத்தால் என்ன? ஹிட்ச்காக்குக்குக் கையெழுத்துப் போடாமல், உண்மையான பெயரை வெளியிடாமல், ஒரு கடிதம் எழுத வேண்டும்.

ஆல்பர்ட்டின் பார்வை, கார்களின் பக்கம் திரும்பியது. ரோல்ஸ்ராய்ஸ் கார் எங்கே இருக்கிறது என்று பார்த்தான். இரண்டு மூன்று ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் தெரிந்தன. பமேலாவுக்கு உரிமையுடைய ரோல்ராய்ஸ் எது என்று பார்த்தான். காரின் வெளியே நின்று கொண்டு காரில் சாய்ந்தபடி மர்லின், படம் பார்த்துக் கொண்டிருந்தாள். பமேலா உள்ளே உட்கார்ந்திருந்தாள், அந்தக் கார் கொஞ்சம் தொலைவில் இருந்தது. பமேலாவின் காரை இப்போது நெருங்கக் கூடாது. அது புறப்பட்டதும், மெல்ல அதைத் தொடர வேண்டும்.

அவன், கெடிகாரத்தைப் பார்த்தான். படம் முடிய இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.

ஆனால்,

திடீரென்று மர்லின், காரில் ஏறி உட்கார்ந்தாள்.

பமேலாவின் கார் அங்கிருந்து புறப்பட்டது!

அத்தியாயம்-17

பமேலா மன அமைதி இன்றிக் கிடந்தாள். என்னதான் சங்கர்லால் வந்திருந்தாலும், பூனை குறிப்பிட்ட நேரம் நெருங்க நெருங்க அவளுக்கு அச்சம். அந்த அச்சம் அவள் மனம் முழுவதும் படர்ந்தது. பூனை இதுவரையில் அச்சுறுத்தியவர்களைச் சும்மா விட்டதில்லை. எத்தனையோ பேர்களை அவன் ஈவு இரக்கம் இன்றிக் கொன்று தள்ளியிருக்கிறான். பணம் கொடுக்காவிட்டால் தன்னையும் கொன்று விடுவான் என்று அவள் எண்ணினாள். நம்பினாள்!

நியூயார்க் இரவில்வே ஸ்டேஷனில் சங்கர்லாலை ஒருவன் கொல்ல முயன்றதையும் அவனை மற்றொருவன் சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிவிட்டதையும், மாலைப் பத்திரிகைகளில் அவள் படித்தாள்.

அவளுக்குத் துன்பம் படர்ந்தது! தொடர்ந்தது.

சங்கர்லால் வந்திருப்பதை அறிந்து பூனை தான் அவரைக் கொல்ல முயன்றிருக்க வேண்டும் என்று அவள் எண்ணினாள். அவள், சங்கர்லாலைப் பார்த்து நிறையப் பேசவேண்டும். நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும் என்று எண்ணினாள். ஆனால் அவர் ஏற்கெனவே அவளிடம் வழக்கப்படி திரைப்படம் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டதால் வேறு வழி இல்லை. திரைப்படம் பார்க்க வந்தாள். ஹிட்ச்காக் படத்தில் கொலையைப் பார்த்ததும் அவள் மனம் மேலும் துன்பம் கொண்டது. அச்சம் கொண்டது. படத்தில் வந்ததுபோல் எவனாவது வந்து தன்னையும் பாத்ரூமில் கொலை செய்து விடுவானோ?

அவளால் தொடர்ந்து படத்தைப் பார்க்க முடியவில்லை. உடனே அவள் பங்களாவுக்குத் திரும்பிப் போக எண்ணினாள்.

மர்லினுக்கு ஹிட்ச்காக்கின் படத்தை மேலும் தொடர்ந்து பார்க்க வேண்டும் போல் இருந்தது.

மர்லின், பமேலவைப் பார்த்து, “படம் பார்க்கவில்லை? இனிமேல் தான் படம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்” என்றாள்.

“நான் உன் கருத்தைக் கேட்க முன்னேற்பாடுடன் இல்லை. காரை எடு. பங்களாவுக்குப் போ.”

மர்லின் அமைதி கொண்டாள். காரை எடுத்தாள்.

வாழ்க்கையில் அவளுக்குக் கிழவி பமேலாவின் மீது எப்போதாவது சினம் ஏற்பட்டது என்றால், அது இப்போது தான்! மர்மக்கதையின் முடிவைத் தெரிந்து கொள்ளாமல் அவள் போக விரும்பவில்லை என்றாலும், காரை எடுத்தாள். புறப்பட்டாள்.

கார், வெளியில் வந்தது. விரைந்து போய்க் கொண்டிருந்தது. “பமேலாவிற்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம்” என்று சங்கர்லால் அவளிடம் சொல்லியிருந்தது அவளுக்கு நினைவு வந்தது. ஆகையால் அவள் காரைக் கருத்துடன் ஓட்டினாள். கவனத்துடன் ஓட்டினாள்.

காரின் இரண்டு பக்கமும் பக்கவாட்டில் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. அந்தக் கண்ணாடிகளை அடிக்கடி அவள் பார்த்தாள். பின்னால் ஒரு கார் வருவது தெரிந்தது. காரின் ஹெட்லைட்டுகள் கண்ணாடியில் தெரிந்தன. அந்தக் கார் ரோல்ஸ்ராய்ஸ் காரை நெருங்கி வந்து கொண்டிருந்தது. மர்லின், காரின் டாஷ்போர்டில் இருந்த ஒரு பொத்தானை அமுக்கினாள். உடனே காரின் கண்ணாடிகள் அனைத்தும் மேலே எழும்பின. மூடிக் கொண்டன!

“ஏன் கண்ணாடியை ஏற்றிவிட்டாய்?” என்று கேட்டாள் பமேலா.

“ஏர்கண்டிஷன் போடுகிறேன்” என்று சொல்லிவிட்டு மற்றொரு பொத்தானை அழுத்தினாள் மர்லின்.

“ஏர் கண்டிஷன் வேண்டாம்”

“பொறுத்துக் கொள்ளுங்கள், கண்ணாடிகளை இறக்கி விடட்டுமா?”

“உடனே இறக்கு.”

மர்லின், காரின் விரைவை மிகவும் குறைத்து விட்டாள். இப்போது பின்னால் வந்த கார் மிகவும் நெருங்கிவிட்டது. அது ரோல்ஸ்ராய்ஸ் காரைக் கடந்து போகட்டும் என்று மர்லின் எண்ணினாள்.

ஆனால்,

அது ரோல்ஸ்ராய்ஸ் காரைக் கடந்து போகவில்லை. அது விரைந்து வந்து ரோல்ஸ்ராய்ஸ்காரின் பக்கத்திலேயே ஓடியது. மர்லின், தன் காரின் விரைவைக் குறைத்தாள். பக்கத்தில் வந்த காரும் விரைவு குறைந்தது. மேலும் குறைந்தது!

ரோல்ஸ்ராய்ஸ் காரின் கண்ணாடிகள் இறக்கப்படவில்லை. கண்ணாடிகளின் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தாலும் கண்ணாடியை அது துளைக்காது. இதனால், காரை, பக்கத்தில் ஓட்டி வந்த ஆல்பர்ட் வெடிகுண்டைப் போடுவதா வேண்டாமா என்று சிந்தித்தான். கொஞ்சம் தடுமாறினான். வெடிகுண்டு ரேல்ஸ்ராய்ஸ் காரின் கண்ணாடிமீது பட்டு மீண்டும் திரும்பிவந்து, தன் காரின் மீதே விழுந்து விட்டால்…?

“யார் இவன்? காரை ஏன் இப்படிப் பக்கத்தில் கொண்டு வருகிறான்; மெல்லப் போ. இன்னும் மெல்லப் போ. கண்ணாடியை இறக்கு” என்றாள் பமேலா.

“பொறுத்துக் கொள்ளுங்கள். கொஞ்ச நேரம் பேசாமல் இருங்கள். பக்கத்தில் காரில் வருகிறவனைப் பார்த்தால் எனக்கு ஐயமாக இருக்கிறது” என்றாள் மர்லின்.

அவள், காரை மெல்லச் செலுத்துவதைவிட விரைந்து செலுத்துவது நல்லது என்று முடிவு செய்தாள். ஆக்சிலேட்டரை அமுக்கினாள். ரோல்ஸ்ராய்ஸ், நூறு கல் அளவைத் தொட்டது.

பின்னால் வந்த ஆல்பர்ட்டின் காரும் இப்போது விரைந்து வரத் தொடங்கியது!

ஏதோ ஒரு பெரிய ஆபத்து ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்த மர்லின், காரை மேலும் விரைவாகச் செலுத்தினாள். நூற்றுப்பத்து… நூற்று இருபது… நூற்று முப்பது..

அகன்ற சாலை, மிக வியப்பாக இருந்தது. ரோல்ஸ்ராய்ஸ் கார் மிக எளிதில் விரைந்தது! பறந்தது!

ஆல்பர்ட்டும் ஏறக்குறைய அதே விரைவுடன் வந்து கொண்டிருந்தான். தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். அவன் எப்படியாவது பமேலாவின் ரோல்ஸ்ராய்ஸ் காரைத் தாக்குவது என்று உடனே முடிவு கொண்டான். அவன் இப்போது பமேலாவின் காரைத் தாக்காவிட்டால், ஜாக்ஸன் ஆல்பர்ட்டைச் சும்மா விடமாட்டான். ஆகையால், அவன் துணிந்தான். செயலில் இறங்கினான்!

கொஞ்சம் முன்னால் போய்க் கொண்டிருந்த ரோல்ஸ்ராய்ஸ் காரைப் பார்த்தான். தன் காரின் விரைவை மிகுதிப்படுத்தி, ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு இணையாகப் போய், பக்கவாட்டில் கொஞ்சம் விலகிக் கொண்டு ரோல்ஸ்ராய்ஸ் காரின் சக்கரங்களைத் தாக்கும்படி வெடிகுண்டை வீசி எறிய முடிவு செய்தான். காரின் அடிப்பாகம் தாக்குண்டால், பெட்ரோல் டாங்கும் உடனே தீப்பிடிக்கும். கார் உருண்டு விழும்போது தீயும் சேர்ந்து பிடித்துக் கொண்டால் கிழவி பிழைக்க மாட்டாள். காரிலிருக்கும் மர்லினும் கூட பிழைக்க முடியாது என்று அவன் முடிவு செய்தான்.

அவன், காரை நூற்று முப்பது கல் விரைவில் செலுத்தி ரோல்ஸ்ராய்ஸ் காரைக் கடப்பது போல் வந்தான். வந்து கொஞ்சம் விலகினான். இரண்டு கார்களும் இடையில் ஒரு கார் போகும் அளவுக்கு மட்டுமே இடம் இருந்தது. ஆல்பர்ட் அதே விரைவில் காரை ஓட்டிக் கொண்டு வெடி குண்டை எடுத்தான். ஒரு குண்டை எடுத்து அதன் திரியை வாயால் கடித்து வீசி எறிய முயன்றபோது –

கொஞ்சமும் எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடந்தது!

திரைப்படத்தில் ஸ்டண்ட் வீரர்கள் செய்வார்களே, அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி! எவரும் அந்த நேரத்தில் எதிர்பாராத நிகழ்ச்சி!

பின்னால், இந்த இரண்டு கார்களுக்கும் பின்னால், சங்கர்லாலின் முஷ்டாங் கார், விரைந்து வந்து கொண்டிருந்தது.

பமேலாவுக்கும் தெரியாமல், ஆல்பர்ட்டுக்கும் தெரியாமல், பின்னால் சங்கர்லால் தனது முஷ்டாங்கைப் பறத்திக் கொண்டு வந்தார். அவர் கார், கொஞ்சம் பின்னாலேயே வந்து கொண்டிருந்தாலும், அவர் தனது திறமையின் காரணமாக விளக்கே இல்லாமல் காரை ஓட்டி வந்ததாலும் எவரும் கவனிக்கவில்லை. பமேலாவின் காருக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்த சங்கர்லால், இரண்டு கார்களுக்கும் இடையே ஒரு கார் போகும் அளவு இடம் கிடைத்ததும், முஷ்டாங் காரை, துப்பாக்கிக் குண்டு பாய்வதைப் போல் பாயவிட்டார்! திடீரென்று ஒரு ஜெட் விமானத்தின் விரைவில் பாய்ந்த ஆற்றல் மிகுந்த முஷ்டாங் கார், இரு கார்களுக்கும் இடையே நுழைந்ததுடன், இடப்பக்கம் வந்துகொண்டிருந்த ஆல்பர்டின் காரை அது ஓர் உரசு உராய்ந்தது. விரைந்து செல்லும் ஒரு காரை மற்றொரு கார் பக்கவாட்டில் போய்க் கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் உராய்ந்தால், உராயப்பட்ட காரின் இரண்டு சக்கரங்களும் பக்கவாட்டில் மேலே எழும்பிவிடும் என்பது சங்கர்லாலுக்குத் தெரியும். அவர் முயற்சி உடனே பலன் தந்தது. ஆல்பர்ட்டின் கார், அப்படியே இடப்பக்கம் இருந்த இரு சக்கரங்களில் ஓடியது! கவிழ்ந்தது! அது கவிழ்ந்த போது ஆல்பர்ட் வீசி எறிந்த வெடிகுண்டு, பக்கவாட்டில் போகாமல் மேலே போய் மீண்டும் அவன் காரின் மேலேயே வந்து விழுந்தது! வெடித்தது!

ஒரு பயங்கர ஓசை!

ஆல்பர்ட்டின் கார் அப்படியே சாலையிலிருந்து உருண்டு போய் வெடித்துச் சிதறித் தீப்பிடித்துக் கொண்டது?

சங்கர்லால், தன் காரை, கிரீச்சென்று ஓசையுடன் நிறுத்தினார். சாலையில் எதிரில் வந்த கார்கள், வெடித்துச் சிதறிய காரின்மீது மோதாமல் இருக்க இப்படியும் அப்படியும் ஓடின. ஒன்றின்மீது ஒன்று மோதின, நின்றன!

வியக்கத்தக்க விபத்து!

ஒரு காரின் மீது எதிரும்புதிரும் வந்த இரண்டு கார்கள் மோதியதுடன், அந்தக் காரின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு கார்கள் மேலே ஏறி நின்றன! ஒரு பெரிய லாரி – அரக்க அளவில் இருந்த அந்த லாரி, சாலையின் இறக்கத்தில் இறங்கியது. ஒரு மரத்தின் மீது மோதியது! நின்றது!

சங்கர்லாலின் கார் நின்றதும், ரோல்ஸ்ராய்ஸ் காரும் சர்ரென்று ஓசை செய்து கொண்டு நின்றது!

சாலையில் இப்படியும் அப்படியும் ஓடிய கார்கள், அப்படி அப்படியே குறுக்கும் நெடுக்குமாக நின்றுவிட்டன!

சங்கர்லால், இறங்கி ஓடிப்போய்த் தீப்பிடித்த காரைப் பார்த்தார். அதன் உள்ளே சிக்கிய ஆல்பர்ட்டின் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கருகிக் கொண்டிருந்தது!

உடனே சில போலீஸ் கார்கள் விரைந்து வந்தன. தீப்பிடித்த காரின் பக்கத்தில் வந்தன. நின்றன. அவற்றிலிருந்து இறங்கிய போலீஸ்காரர்கள், மற்றக் கார்களிலிருந்து இறங்கி ஓடிவந்தவர்களைத் தடுத்தார்கள். நிறுத்தினார்கள். இரண்டு போலீஸ் பொறுப்பாளர்களை மட்டும் தீப்பிடித்த காரின் பக்கத்தில் போனார்கள். போய்ப் பார்த்தார்கள். அதில் சிக்கியவனைக் காப்பாற்ற முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். உணர்ந்ததும், அவர்கள் தங்கள் காருக்கு வந்தார்கள். வந்து தொலைபேசியில் செய்தி தெரிவித்தார்கள்.

ஒரு சில விநாடிகளில் தீயணைக்கும் படையினர் வந்தார்கள். விரைந்து வந்தார்கள். மேலும் பல போலீஸ் கார்கள் வந்தன. நின்றன.

சங்கர்லால் விரைந்து சென்றார். சென்று, பமேலாவின் காரின் பக்கத்தில் சென்றார். மர்லின் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தாள். சங்கர்லாலைப் பார்த்ததும், அவள், காரின் கதவைத் திறந்து திறந்து விட்டாள். பமேலா காரிலிருந்து இறங்க முயன்றாள்.

சங்கர்லால் அவளைத் தடுத்து, “இறங்க வேண்டாம்” நான் போலீசாரிடம் பேசிக் கொள்கிறேன். நீங்கள் வீட்டிற்குப் போய்ச் சேருங்கள்” என்றார்.

“என்ன நடந்தது சங்கர்லால்? என்னால் நம்பவே முடியவில்லையே!” என்றாள் பமேலா.

“எல்லாம் பூனையின் வேலை. நாம் பதினோரு மணிக்கு அவனுடைய தூதுவன் வருவான் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். இல்லையா? நீங்கள் பணம் கொடுக்க மாட்டீர்கள் என்று முடிவு செய்து, கொஞ்சம் முன்னாலேயே உங்களைக் கொலை செய்ய முடிவு செய்திருக்கிறான். நல்ல வேளை. மர்லின், கார் கண்ணாடிகளை மூடிவிட்டாள். இல்லாவிட்டில் மிக எளிதில் வெடிகளை அவன் உங்கள் காருக்குள் வீசி எறிந்திருப்பான். அவன் காருக்குப் பதில் உங்கள் கார் நொறுங்கியிருக்கும்! தீப்பிடித்திருக்கும்!”

“காரில் வந்தது பூனையா?”

‘பூனையாக இருக்க முடியாது. அவன் ஆள்களில் ஒருவனாக இருக்க வேண்டும். என்னை நீங்கள் வரவழைத்ததால் உங்களைத் தீர்த்துக்கட்ட முடிவு கட்டிவிட்டான். காரில் வந்து தாக்கியவன் யார் என்பதைப் போலீஸார் கண்டுபிடித்து விடுவார்கள். அவன் யார் என்பதற்குச் சான்றுகள் கிடைக்கும். நீங்கள் புறப்படுங்கள்.”

சங்கர்லால், பமேலாவிடம் பேசிக் கொண்டிருந்த போதே, “குட் ஈவினிங் மிஸ்டர் சங்கர்லால்” என்று ஒரு குரல் கேட்டது.

சங்கர்லால், திரும்பினார். பார்த்தார்.

போலீஸ் தலைமைத் தலைவர் வில்லியம்ஸ் நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் சார்ஜண்ட் சண்டாணா நின்று கொண்டிருந்தான்!

“சங்கர்லால், இங்கே என்ன நடந்தது? உங்கள் கார் வந்து மோதியதால்தான் அதோ அந்தக் கார், சாலையை விட்டு விலகியது. விலகிப் போய்க் கவிழ்ந்தது. கவிழ்ந்து விழுந்து தீப்பிடித்துக் கொண்டது. இதுதான் நடந்தது. இது உண்மையா?” என்று கேட்டார் போலீஸ் தலைமைத் தலைவர் வில்லியம்ஸ்.

“உண்மைதான். ஆனால் அதில் வந்தவன் இதோ இந்த வயதான பாட்டியை வெடிகுண்டு எறிந்து தாக்க வந்தான் என்பதை எவராவது சொன்னார்களா? அவன் கார் வெடித்ததற்குக் காரணம், அவன் எறிந்த வெடிகுண்டுதான். வெடிகுண்டு அவன் காரிலேயே விழுந்துவிட்டது!”

“யார் இந்தச் சீமாட்டி?” என்று கேட்டுக் கொண்டே காரிலிருந்த பமேலாவைப் பார்த்தார் வில்லியம்ஸ்.

பிறகு, “யாரது? மேலாவா? நியூயார்க்கிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் நீங்கள்! உங்களை ஏன் அவன் தாக்க வேண்டும்?” என்றார் வில்லியம்ஸ்.

பமேலா, சங்கர்லாலைப் பார்த்தாள்.

“நீங்களே சொல்லுங்கள்” என்றார் சங்கர்லால்.

“பொறுத்துக் கொள்ளுங்கள் மிஸ்டர் வில்லியம்ஸ். பமேலா மிகத் தாக்குதல் அடைந்திருக்கிறாள். அவளை வீடு போய்ச் சேர அனுமதியுங்கள். நான் உங்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லுகிறேன்” என்றார் சங்கர்லால்.

வில்லியம்ஸ் இதற்குப் பதில் சொல்லுவதற்குள், சங்கர்லால் மர்லினைப் பார்த்து, “காரை விடு. புறப்படு. பங்களாவில் பமேலாவை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி சொல். நான் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுகிறேன்” என்றார் சங்கர்லால்.

மர்லின், காரைக் கிளப்பினாள். ரோல்ஸ்ராய்ஸ் கார் புறப்பட்டதும், சங்கர்லால், வில்லியம்ஸைத் திரும்பிப் பார்த்தார்.

வில்லியம்ஸ் சங்கர்லாலைப் பார்த்து, “இதோ இவன் தான் சார்ஜண்ட் சண்டானா. இந்த வழக்கை இவன்தான் துப்பறிகிறான்” என்றார்.

சங்கர்லாலும் சண்டானாவும் கைகுலுக்கிக் கொண்டார்கள்.

“சங்கர்லால், சண்டானா இந்த வழக்கைத் துப்பறிய உங்களுடைய முழு ஒத்துழைப்பும் தேவை. மேலா உங்களை ஏன் வரவழைத்தாள் என்று சொல்ல முடியுமா?” என்றார் வில்லியம்ஸ்.

அதற்குள் அங்கே ஒரு கூட்டம் கூடியது. போலீசார் எவ்வளவு விரட்டியும் கூட்டம் போகவில்லை!

சங்கர்லால் வில்லியம்ஸைப் பார்த்து, “நான் ஏன் இங்கு வந்திருக்கிறேன் என்பது இரகசியமானது. தனிமையில் இதைப்பற்றிப் பேசுவோம். முதலில் சண்டானாவை அனுப்பி வெடிகுண்டு வீச முயன்றவனைப் பற்றிக் கண்டுபிடிக்கச் சொல்லுங்கள்” என்றார்.

வில்லியம்ஸ், சண்டானாவைப் பார்த்தார். உடனே சார்ஜண்ட் சண்டானா, விரைந்து ஆல்பர்ட்டின் கார் எரிந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்தான்.

வில்லியம்ஸ், சங்கர்லாலைத் தனியாக அழைத்துச் சென்றார்.

“பமேலா எதற்காக உங்களை வரவழைத்தாள் என்று சொல்ல முடியுமா?” என்றார்.

வில்லியம்ஸ் ஓரளவுக்கு ஊகம் செய்திருப்பார் என்று சங்கர்லாலுக்குத் தெரியும். இனியும் மூடிமறைப்பதில் பயன் இல்லை என்று அவர் எண்ணினார்.

“பூனைதான் காரணம்.”

“என்ன? பூனையா?”

“ஆமாம். பணக்காரர்களிடம் பெரும் பணம் பிடுங்கும் பூனை, பமேலாவை அச்சுறுத்திப் பணம் பிடுங்க முயன்றான். அவள் என்னை வரவழைத்ததும், அவன் அவளைக் கொல்ல முடிவு செய்துவிட்டான்!”

“பூனை யார் என்று கண்டுபிடித்தீர்களா?”

“இன்னும் இல்லை.”

“பூனையைப் பற்றி ஏதாவது தெரிந்தால் உடனே சொல்லுங்கள். சண்டானா துப்பறிவதில் ஈடு இணையற்றவன். அவன் ஏதாவது கண்டுபிடித்தால் உங்களிடம் சொல்லும்படி சொல்லுகிறேன்.”

சங்கர்லாலுக்கு எதிராகச் சண்டானாவைத் துப்பறியச் சொல்லிச் சங்கர்லாலுக்குச் சவால் விடுவதைப் போலிருந்தது வில்லியம்ஸின் செயல்!

சங்கர்லால் மெல்லச் சிரித்தார்.

“என்ன நினைக்கிறீர்கள் சங்கர்லால்?”

“பூனையைப் பற்றி சண்டானா கண்டுபிடிப்பதென்றால் எப்போதோ கண்டுபிடித்திருக்க வேண்டுமே! இத்தனை நாள்கள் ஏன் கண்டு பிடிக்கவில்லை? இப்போது மட்டும் என்ன? பூனை யார் என்று வெளிப்பட இன்னும் கொஞ்ச நேரமே இருக்கிறது. உங்கள் சண்டானா வெற்றி கண்டால் முதலில் என் பாராட்டுகள் அவனுக்குக் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டுச் சங்கர்லால் தன் முஷ்டாங்கை நோக்கி நடந்தார்.

வில்லியம்ஸ் செயலற்று நின்றார்!

அத்தியாயம்-18

போலீஸ் லீஸ் தலைமைத் தலைவர் வில்லியம்ஸும்

சார்ஜண்ட் சண்டானாவும் தனியாக நின்று கொண்டிருந்தார்கள்.

விபத்து நடந்த இடத்திலேயே அவர்கள் இன்னும் இருந்தார்கள். அங்கே இப்போது ஒரு போலீஸ் படையே வந்துவிட்டது. விபத்தில் சிக்கிய கார்களை அவர்கள் அகற்றும் வேலையில் மிக ஈடுபட்டிருந்தார்கள். இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள் அங்கே விபத்து நடந்ததா என்று ஐயப்படும்படி அவர்கள் எல்லாவற்றையும் தூய்மையாக அகற்றி விடுவார்கள்!

வில்லியம்ஸ், சண்டானாவிடம் கேட்டார் “விபத்தில் இறந்தவன் யார் என்று தெரிந்ததா?”

“தெரிந்தது. அவனுடைய ட்ரைவிங் லைசென்ஸ் டாஷ்போர்டில் இருந்தது. கார் வெடித்துச் சிதறியதும் அது தொலைவில் போய் விழுந்து கிடந்தது. அதை எடுத்து வைத்திருக்கிறேன். அவன் பெயர் ஆல்பர்ட்.”

“எப்படிப்பட்டவன்?”

“கொடியவன். அந்தோணியும் இவனும் எப்போதும் சேர்ந்து இயங்குவார்கள். இவர்கள் இருவரையும் பிடிக்க இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் தப்பி வந்தார்கள்.”

“பமேலாவைத் தாக்க வந்தவன் ஆல்பர்ட என்னும் உண்மை உனக்குத் தெரிந்து விட்டது. சங்கர்லாலுக்குத் தெரியாது என்று எண்ணுகிறேன். பமேலாவுக்குப் பூனையின் ஆள்களால் ஏதாவது ஆபத்து ஏற்படலாம் என்று அவர் பமேலாவைத் தொடர்ந்து வந்திருக்க வேண்டும். பமேலாவைக் காப்பாற்றி விட்டார். ஆல்பர்ட்டைக் கொன்று விட்டார். இது அவருக்கு ஒரு பெரிய வெற்றியே. ஆனால் பூனையை அவர் கண்டுபிடிப்பதற்குமுன் நீ அவனைக் கண்டுபிடித்து விட வேண்டும். நீ என்ன செய்வாயோ எனக்குத் தெரியாது! பூனையைப் பிடிக்கக் கொஞ்ச நேரம் போதும் என்று அவர் சவால் விட்டு விட்டுப் போயிருக்கிறார். நீ விரைந்து செயலாற்ற வேண்டும்.”

“முதலில் ஆல்பர்ட்டின் இருப்பிடத்தைச் சோதனை போடுகிறேன். பூனையுடன் அவன் தொடர்பு கொண்டவன். அதனால் பூனையைப் பற்றி ஏதாவது சான்றுகள் கிடைக்கலாம்.

“புறப்படு. சங்கர்லாலின் உதவி இன்றியே அமெரிக்கப் போலீசாரால் பூனையைப் பிடிக்க முடியும் என்பதை நாம் செயலில் காட்ட வேண்டும்” என்றார் வில்லியம்ஸ்!.

சண்டானா, உடனே தன் காரில் புறப்பட்டான். கொஞ்ச நேரத்தில் அவன் ஆல்பர்ட்டின் முகவரியைக் கண்டு பிடித்தான். கண்டுபிடித்து அவன் இருப்பிடத்தை அடைந்தான். ஆல்பர்ட்டின் இருப்பிடம் பூட்டப்பட்டிருந்தது. பூட்டை சண்டானா மாற்றுச் சாவி போட்டுத் திறந்தான். திறந்து கொண்டு உள்ளே போனான். போய்த் துருவிப் பார்த்தான். ஓர் இரும்புப் பெட்டி இருந்தது. அதைத் திறந்த முயன்றான். முடியவில்லை. மேசை அறைகளைத் திறந்து பார்த்தான். பார்த்தபோது ஒரு கைப்பெட்டி இருந்தது. அதைத் திறந்தான். உள்ளே கற்றை கற்றையாகப் பணம்! தப்பி ஓட முயன்ற அந்தோணியைச் சுட்டுவிட்டு அவனிடமிருந்து ஆல்பர்ட்டின் ஆள் ஒருவன் பணப்பெட்டியைப் பறித்து வந்தான் அல்லவா? அவன் பணப்பெட்டியை ஆல்பர்ட்டிடம் கொடுத்த போது, அவன் அதை ஜாக்ஸனிடம் கொடுக்கப் போனான். ஆனால், ஜாக்ஸன் அந்தப் பணத்தை அவனுக்கே

கொடுத்துவிட்டான். பமேலாவைக் கொல்ல அவனுக்குக் கிடைத்த பரிசு அது. திறந்த வெளித் திரையரங்குக்கு விரைந்து போக வேண்டியதிருந்ததால், அவன் பணப்பெட்டியை மேசை அறையில் வைத்துவிட்டுப் போய் விட்டான். அந்தப் பணந்தான் அது!

சண்டனாவின் மூளை விரைந்து வேலை செய்தது.

பூனை யார் என்று தெரிய ஆல்பர்ட்டின் இருப்பிடத்தில் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் இந்தப் பணம் முழுவதையும் கொடுத்தாவது கொடியவர்கள் உலகில் தொடர்பு கொண்டு, எவரிடமிருந்தாவது பூனை யார் என்பதை தெரிந்து கொள்ள சண்டானா திட்டமிட்டான். அதனால் அவன் உடனே பணப்பெட்டியுடன் புறப்பட்டான்!

கொடிய கூட்டத்தினர் பொதுவாக இரவில் தூங்குவதில்லை. அவர்கள் பெரும்பாலும் நைட்கிளப்புகளில் பொழுதைப் போக்குவார்கள். சண்டானவுக்கு இரகசியங்களைத் தெரிவிக்கும் ஒருசிலர் புழங்கும் நைட் கிளப் அவனுக்குத் தெரியும். அங்குக் காரைச் செலுத்தினான்.

போலீஸ் உடையுடன், போலீஸ் காரில் சென்றால், அவனை மற்றவர்கள் ஐயக் கண்களுடன் பார்ப்பார்கள். ஆகையால், அவன் நைட் கிளப்பின் வெளியில் நின்றுகொண்டு, கிளப்பில் வேலை செய்யும் ஒருவனைப் பார்த்து, “உள்ளே ராபர்ட்ஸ் என்று ஒருவன் இருப்பான். உனக்குத் தெரியுமே! அவனை மெல்ல நான் கூப்பிடுவதாகச் சொல்லு” என்றான்.

அவன் உள்ளே போய்விட்டான்.

கொஞ்ச நேரத்தில் ராபர்ட்ஸ் வெளியில் வந்தான். பார்த்தான். ஐயத்துடன் பார்த்தான். அவன் தான் அந்தோணியைக் கொன்றவன். ஆனால், அவன் தான் அந்தோணியைக் கொன்றவன் என்பது சார்ஜண்ட் சண்டானாவுக்குத் தெரியாது. தன் மீது ஐயம் கொண்டுதான் சண்டானா வந்துவிட்டானோ என்று அவன் அஞ்சினான். அஞ்சியபடி வந்தான்.

“ராபர்ட்ஸ், காரில் உட்கார்.”

“எங்கே?”

“கொஞ்சம் பேச வேண்டும். காரில் உட்கார்ந்து பேசுவோம்.”

அவன் காரில் ஏறினான். உட்கார்ந்தான்.

சண்டனா காரைக் கிளப்பினான்.

“எனக்கு ஒரு செய்தி வேண்டும், நீ சொல்ல அஞ்சுவாய். அது எனக்குத் தெரியும். ஆனால் எப்படியும் நீ அதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். வேறு வழி இல்லை. இப்போது நேரத்துடன் நான் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறேன். புரிகிறதா?”

“என்ன செய்தி வேண்டும்?”

“பூனை என்பவனைப்பற்றி முழு விவரங்களும் எனக்குத் தேவை!”

இதைக் கேட்டதும் ராபர்ட்ஸின் உடம்பு குப்பென்று வியர்த்தது. வேர்வை கொட்டியது. அவன் முகம் வெளிறியது. அவன் முகத்தில் இரத்த ஓட்டமே இல்லை!

“காரை நிறுத்துங்கள்.”

“ஏன்?”

“இறங்கிக் கொள்கிறேன்.”

“ஏன்! அவ்வளவு அச்சமா?”

“பூனையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது! என்னை விட்டு விடுங்கள்”

“உன் உயிருக்கு நீ அஞ்சுகிறாய்! அதுதானே?”

“பூனையைப் பற்றி சொல்லுவதைவிடத் தற்கொலை செய்து கொள்வது மேல்! அவன் என்னை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து ஒழித்து விடுவான்!”

“உனக்குப் பெரும் பணம் கிடைக்கும். இதோ பார். இந்தப் பணப்பெட்டியைத் திறந்து பார். எல்லாம் உனக்கு. பூனை யார்? அவன் எங்கே இருக்கிறான், என்று சொன்னால் போதும்!” என்று சொல்லிக் கைப்பெட்டியை அவன் மடியின்மீது தூக்கிப் போட்டான் சண்டானா!

ராபர்ட்ஸ் அதைத் திறந்தான். பார்த்தான். பணக்கட்டுகள், அந்தோணியிடமிருந்து அவன் பறித்து வந்து ஆல்பர்ட்டிடம் கொடுத்து விட்டு வந்த அதே பெட்டி! அதே பணம்! இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு அவன் அப்போதே ஓடிவிட்டிருக்கலாம் ஆனால் பூனைக்கு அஞ்சித்தான் ஆல்பர்ட்டிடம் அதைக் கொடுத்து விட்டான். இப்போது –

“இந்தப் பணத்துடன் நீ வேறு நாட்டிற்கு ஓடிவிடு. உனக்கு ஒன்றும் ஆபத்து வராது. பூனை யார் என்பதை மட்டும் சொல்லிவிடு. அவன் இருப்பிடத்தை மட்டும் சொல்லிவிடு. போதும்”.

ராபர்ட்ஸ் சிந்தனை செய்தான். அவ்வளவு பணம் அவனுக்குக் கிடைப்பது அரிது. ஆஸ்திரேலியாவுக்கோ, ஹாங்காங்குக்கோ போய்விட்டால் அமைதியுடன் அவன் வாழலாம். எவரைப் பற்றியும் எதைப்பற்றியும் துன்பம் இல்லை!

“உண்மையாகவா? பூனையைப் பிடித்து விடுவீர்களா?”

“அவனை ஒழித்து விடுகிறேன், அவனைப் பற்றி நீ அஞ்ச வேண்டாம். பணம் முழுவதும் உனக்கே! விரைந்து சொல்லு”.

“பூனையின் பெயர் ஜாக்ஸன். அவன் 51ஆவது தெருவில் 20ஆவது மாடியில் வாழ்கிறான். அவனிடம் ஆபத்து மிகுந்த பூனை ஒன்று இருக்கிறது!”

சார்ஜண்ட் சண்டானா காரை நிறுத்தினான். அவன் ராபர்ட்ஸை உடனே இறக்கி விட்டான். இறக்கிவிட்டு உடனே பூனையின் இருப்பிடத்திற்குப் போகத் துடித்தான்!

பூனையின் இருப்பிடத்தையும், பூனை என்பவன் யார் என்பதையும் சொல்லிவிட்ட பிறகுதான், ராபர்ட்ஸ் தன் தவறை மிக மிக உணர்ந்தான். சண்டானா, பூனையை வேட்டையாடப் போனால், பூனை ராபர்ட்ஸை வேட்டையாடப் புறப்படுவான்! எப்படியாவது அவன் உண்மையைக் கண்டுபிடித்து விடுவான்! ஆகையால்-

ராபர்ட்ஸ் விரைந்தான். துப்பாக்கியை எடுத்தான். எடுத்து சண்டானாவைச் சுட்டான்!

தொடர்ந்து பல குண்டுகள்!

சண்டானாவின் வயிற்றிலிருந்து இரத்தம் கொட்டியது!

அவன் அப்படியே சாய்ந்தான்!

பணப்பெட்டியுடன் ராபர்ட்ஸ் இறங்கினான். ஓடினான். அவன் கொஞ்ச தூரந்தான் ஓடியிருப்பான். அதற்குள் சண்டானா சமாளித்துக் கொண்டான். துப்பாக்கியை எடுத்தான். சுட்டான்!

ஒரே ஒரு குண்டுதான்!

ராபர்ட்ஸ் அப்படியே சுருண்டு விழுந்தான்! இறந்தான்.

அத்தியாயம்-19

பமேலாவின் பங்களாவில் சங்கர்லாலும் பமேலாவும் மர்லினும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மணி, இரவு 10.45

“பூனையின் ஆள்தான் என்னை வழியில் கொல்ல முயன்றான். அவனால் முடியாது போயிற்று. இப்போது வேறு ஒரு மனிதனைப் பூனை இங்கு அனுப்புவானா?” என்று கேட்டாள் பமேலா.

“அனுப்பலாம். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பணியாள்கள் அனைவரையும் அவர்கள் விடுதியில் இருக்கும் படி சொல்லிவிடுங்கள். நீங்களும் நானும் மர்லினும் மட்டும் பங்களாவில் இருந்து கொண்டு பார்ப்போம். பூனை என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய நான் ஆவல் மிகக் கொண்டிருக்கிறேன்” என்றார் சங்கர்லால்.

பமேலா, மர்லினிடம் பணியாட்களைப் பார்த்து விடுதியில், இருக்கும்படி சொல்லிவிட்டுத் திரும்பியபோது –

மணி 10.55

பூனையின் தூதுவன் 11 மணிக்கு வர வேண்டும். இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன.

சங்கர்லால் இப்படியும் அப்படியும் உலாவிக் கொண்டிருந்தார். பமேலா, ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். மர்லின், சன்னல் ஓரமாக நின்று கொண்டிருந்தாள்.

பங்களாவில் இருந்த மிகப் பெரிய கெடிகாரம் பதினொரு தடவைகள் முழங்கியது. ஓய்ந்தது.

எங்கும் அமைதி. எவரும் பேசவில்லை. சங்கர்லால் மிகவும் அமைதியுடன் இருந்தார்.

தூதுவன் எவனும் வரவில்லை!

மணி 11.01

திடீரென்று விளக்குகள் அணைந்தன!

“விளக்கும் போய் விட்டதே” என்று கத்தினாள் மர்லின்.

சங்கர்லால், தொலைபேசி இருந்த இடத்தை ஏற்கெனவே பார்த்து வைத்திருந்தார். தொலைபேசி இருக்கும் இடத்தை நெருங்கினார். தொலைபேசியை எடுத்தார். அதைக் காதில் வைத்துப் பார்த்தார்.

தொலைபேசி அறுந்து கிடந்தது!

“என்ன இது? தொலைபேசி இயங்கவில்லையா?” என்றாள் பமேலா.

“இல்லை.”

சங்கர்லால், பமேலாவின் பக்கத்தில் வந்து நின்றார். அவள் கையைப் பிடித்துக் கொண்டார்.

“அஞ்சாதீர்கள்! நான் இருக்கும்வரையில் உங்களுக்கு ஒன்றும் ஆபத்து இல்லை!”

பமேலா, பேசவில்லை. அவளுக்கு அச்சம் வந்துவிட்டது.

அவள் கைகள் நடுங்கின!

சங்கர்லால், சின்னக் குழந்தையை அணைப்பதைப் போல் பமேலாவை அணைத்துக் கொண்டார். பமேலா, அவர் கையை இப்போது கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

சங்கர்லால், “மர்லின்” என்றார்.

“உம்.”

“உனக்கு அச்சம் இல்லையே?”

“இல்லை.”

“இந்தக் கூடத்திற்குள் எவராவது வந்தால் நீ பதுங்கிக் கொள். ஒன்றும் செய்யாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்.”

எங்கும் இருட்டு. அச்சம். அமைதி. அந்தப் பகுதியில் எங்குமே விளக்கு இல்லை. வெளிச்சம் இல்லை!.

நிமிடங்கள் நகர்ந்தன.

மணி 11.04.

திடீரென்று கூடத்தில் இரண்டு பெரிய கண்கள் தெரிந்தன. இருட்டிலே ஒளிவிடும் பூனையின் கண்கள் அவை!

பூனையின் கண்களைக் கண்டதும் பமேலா அலறினாள்! அதே நேரத்தில் பூனையும் அலறியது!

சங்கர்லால், வலக்காலைத் தூக்கி விரைந்து ஆற்றலுடன் ஓர் உதை விட்டார்.

சன்னல் பக்கத்திலிருந்து பமேலாவின் கழுத்தைப் பார்த்துப் பாய்ந்த பூனை, இருட்டில் அலறியபடி கீழே விழுந்தது!

சங்கர்லாலின் ஷுவிலிருந்து கிளம்பிய நீண்ட கத்தி பூனையைக் குத்திக் கிழித்தது! கொன்றுவிட்டது!

எல்லாம் ஒரு சில வினாடிகளில்!

“என்ன ஆயிற்று?” என்றாள் பமேலா அச்சத்துடன்.

“பூனை இறந்துவிட்டது! நீங்கள் பேசாமல் இருங்கள்.”

மீண்டும் அமைதி.

சுவர் ஓரமாகப் பதுங்கியிருந்த மர்லின், மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்தாள். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை!

பமேலாவைச் சங்கர்லால் அணைத்தபடி அவள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அவள் நாற்காலியிலேயே உடகார்ந்திருந்தாள்!

திடீரென்று விளக்குகள் எரிந்தன!

அதே நேரத்தில் வாயிலில் துப்பாக்கியுடன் ஜாக்ஸன் நின்றான்!

விளக்கு எரிந்ததும், அவன் துப்பாக்கியை நீட்டினான்

சுட்டான்!

ஆனால்,

சங்கர்லால் விரைந்து தன் மற்றொரு காலை மேலே தூக்கினார். மின்னல் விரைவில், அவருடைய ஷூவிலிருந்த துப்பாக்கியிலிருந்து பட்பட்டென்று இரண்டு குண்டுகள் பாய்ந்தன!

ஜாக்ஸன் அப்படியே மரம்போல் சாய்ந்தான்!

அவன் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு சன்னல்மீது பட்டுத் தெரித்தது. சிதறி விழுந்தது!

விளக்கு வெளிச்சத்தில் இரத்த வெள்ளத்திலே மிதந்து கொண்டிருந்த பூனையையும் ஜாக்ஸனையும் சங்கர்லால் பார்த்தார். பூனை, இறந்துவிட்டது!

ஜாக்ஸன் உயிர், பிரிந்து கொண்டிருந்தது!

சங்கர்லால், அவன் பக்கத்தில் போய்க் குப்புற விழுந்து கிடந்த அவனைத் தன் காலால் புரட்டினார்!

“சங்கர்லால், இந்த உலகத்தில் உங்களை எவராலும் வெல்ல முடியாது… கொல்ல முடியாது… உறுதி. உங்களைக் கொல்ல நான் செய்த முயற்சிகள் இப்படித் தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கவில்லை… உங்களைக் கொல்லுவதில் தவறு செய்யக்கூடாது என்று, நீங்கள் விமான நிலையத்திலிருந்து வரும்போது, எப்படிச் சுட வேண்டும் என்று ஒத்திகை பார்த்தோம்… உங்களைப் போல் வேடம் பூண்டு நடித்த ஜங்கிள் ஜான் மிக எளிதில் கொல்லப்பட்டான்…. உங்களை இதுவரையில் வராலும் ஒன்றும் செய்ய முடிவில்லை… நான் இப்போது இங்கே வருவேன் என்று எவரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்… நீங்கள் பகைவனின் பயங்கரத் திட்டம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்… நான் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வந்ததும், போலீசார் என் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு எனக்காகக் காத்திருக்கிறார்கள்… அவர்களால் என்னைப் பிடிக்க முடியாது… பமேலாவையும் உங்களையும் கொன்று விட்டிருந்தால், நான் வெளியூருக்கு தப்பி ஓடியிருப்பேன்… எனக்காக ஒரு தனி விமானம் காத்திருக்கிறது…

இப்படிச் சொல்லிக் கொண்டே பூனை மனிதனான ஜாக்ஸன் தன் உயிரை விட்டான்!

சங்கர்லால், தொலைபேசியை எடுத்தார். அது வேலை செய்யவில்லை.

சங்கர்லால் விரைந்தார். வெளியே சென்றார். முஷ்டாங்காரில் இருந்த வானொலித் தொலைபேசியில் போலீஸ் தலைமைத் தலைவருடன் தொடர்பு கொண்டார்.

“மிஸ்டர் வில்லியம்ஸ், பூனையைப் பிடிக்க ஒரு போலீஸ் படையே ஜாக்ஸன் வீட்டுக்குப் போயிருப்பதாகக் கேள்வி…”

“சங்கர்லால், உங்களுக்கு எப்படி அவன் பெயர் தெரியும்!”

“அவனே சொன்னான். அவன் இப்போது உயிருடன் இலன், ஜாக்ஸன் இங்கே பிணமாகக் கிடக்கிறான். அவன் வளர்த்த பூனையும் இங்கே பிணமாகக் கிடக்கிறது. பமேலா வீட்டில் இப்போது இங்கே பூனை மனிதனான ஜாக்ஸனும், அவனுடைய பூனையும் பிணங்களாகக் கிடக்கின்றனர். உடனே வாருங்கள், பமேலாவின் பங்களாவிற்கு.”

“பூனை அங்கு வந்தானா? வியப்பிற்குரிய செயல். ஒரு தடவை கொலை செய்ய முயன்று தோல்வி அடைந்ததும் மீண்டும் அவன் அந்தப் பங்களாவுக்கு வருவான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை! சார்ஜண்ட் சண்டானா பூனையைப் பற்றிக் கண்டுபிடிக்கப் போய் வயிற்றில் குண்டுகளுடன் மருத்துவ விடுதியில் கிடக்கிறான்! உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால், அவன் நடமாடக் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும்.”

“என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு, சங்கர்லால் தொலைபேசியை வைத்தார்.

அவர் திரும்பிப் பங்களாவுக்குள் வந்து, “போலீஸ் தலைமைத் தலைவர் வில்லியம்ஸ் வருகிறார். துணிவுடன் இருங்கள்” என்றார்.

பமேலா எழுந்து கொண்டாள். அவள் விரைந்து ஓடி வந்து, சங்கர்லாலைக் கட்டி அணைத்துக் கொண்டு, அவர் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்! கிழவியின் முத்தம்!

(முற்றும்)

– நியூயார்க்கில் சங்கர்லால் (நாவல்), முதல் பதிப்பு: 1983, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *