நெஞ்சமடி நெஞ்சம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2023
பார்வையிட்டோர்: 4,727 
 

(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

மணக்குளம் விநாயகர் கோவிலில் தோழிகள் நால் வரும் கண்மூடி நின்று வேண்டிக் கொண்டிருந்தனர். அர்ச்சகர் பிரசாதம் கொடுக்கவும் பெற்றுக் கொண்டு கோவிலை வலம் வந்து முன் பிரகாரத்தில் அமர்ந்தனர். 

“அந்தத் தேங்காயை உடைடி கோமளா.” 

“நீ திங்கிறதிலேயே குறியாய் இரு…” 

“ஹா.. ஹா.. வாசவி வயிற்றுக்கு வஞ்சகம் பண்ண மாட்டாள்.” 

“மனிதருக்கும் வஞ்சகம் பண்ண மாட்டேன் ஜமுனா.”

தேங்காயை பல்லில் கடித்தபடி கோவிலைச் சுற்றிப் பார்வையை ஒட்டிய ரூபிணி. 

“இந்தக் கோவில் எவ்வளவு அழகாய் இருக்கிறது” என்று வியப்புடன் கூறினாள். 

“இந்தக் கோவிலைப் பற்றி ஓர் கதை இருக்கிறது தெரி யுமா?” ஜமுனா வாழைப் பழத்தின் தோலை உரித்தபடி வினவினாள். 

“தெரியாதே.” 

“பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த காலத் தில் பிரெஞ்சுக்காரர்கள் இந்த பிள்ளையார் சிலையை அகற்றப் பார்த்தார்களாம். முடியவில்லையாம். கடற் கரையில் இருந்த பிள்ளையார் சிலையை கையெடுத்து வணங்கிவிட்டு அவர்கள் முயற்சியை விட்டு விட் டார்களாம்.” 

பேசியபடியே தோழிகள் கோவிலை விட்டு வெளியே வந்து கடற்கரையோரமாய் நடந்தனர். 

“எவ்வளவு நீட்டான ரோடு பாரேன்…” 

“ஆமாம்.. கட்டிடங்கள் கூட பிரெஞ்சுக்காரர்கள் கட்டிய டைப்பில் அமைந்திருக்கிறது…” 

“என்னவோ போ.. வாசவி.. எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. இந்த சாக்கடை கட்டியிருக்கும் விதம் தான் சரியில்லை. நம் ஊர் பக்கங்களில் உள்ளது போல தெரு வோரங்களில் பள்ளமாகக் கட்டிவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ரோட்டின் இருபக்கமும் சாய்வாய் கட்டி விட்டிருப்பதுதான் சகிக்கவில்லை. தண்ணீர் தேங்கி நின்று கொண்டு.. அதில் குப்பைகள் ஊறிக் கொண்டு.. கொசு மொய்த்துக் கொண்டு.. சுகாதாரக்கேடு… எல்லா வற்றையும் யோசித்து மாற்றியமைக்கும் கவர்ன்மென்ட் இதையும் மாற்றி அமைக்கக் கூடாதா.” 

“நீ ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாய் ரூபிணி. நாம் என்றாவது ஒரு நாள் சுற்றிப் பார்க்க வருகிறோம். வந் தோமோ. போனோமான்னு இருப்பதை விட்டு விட்டு பாண்டிச்சேரியின் சுகாதாரத்தைப் பற்றி வீணாய் ஏன் யோசிக்க வேண்டும்?” 

“அப்படிச் சொல்லாதே ஜமுனா.. இது அழகான டூரிஸ்ட் ஸ்பாட்… ‘வாரணம் ஆயிரம்.. என்று கௌதம் மேனனின் சினிமா பார்த்திருப்பாயே… 

“ஆமாம்.. சூர்யா கூட அப்பா.. மகன்.. என்ற இரண்டு கெட்டப்பில் வருவார்… பாட்டெல்லாம் சூப்பராய் இருக்கும்.” 

“அதில் அப்பா கேரக்டரில் வரும் சூர்யா சிம்ரனைப் பார்த்து பாடும் பாடல் முழுவதும் பாண்டிச்சேரியில் தான் படமாக்கி இருந்தார்கள்.” 

“இங்கே நிறையப் படங்களின் ஷூட்டிங் நடக்கும் ரூபிணி.” 

“அதனால்தான் சொல்கிறேன். இவ்வளவு அழகான ஊரில்.. சிறு வழக்கத்தை மாற்றாமல் வைத்திருக்கிறார்களே…” 

மகாத்மா காந்தியின் சிலையடியில் நின்றபடி கடலைப் பார்த்தார்கள். தள்ளு வண்டியில் பாப்கார்ன் விற்றுக் கொண்டு வந்தவனிடமிருந்த பாப்கார்ன் வாங்கிக் கொறித்தபடி – மகாத்மா காந்தி சிலைக்கு எதிரேயிருந்த பூங்காவை நோக்கி நடந்தார்கள். பூங்காவிற்குள் இருந்த வெங்கடாஜலபதியின் கோவில் சென்று வணங்கி விட்டு பூங்காவைச் சுற்றி அலுத்து அமர்ந்தார்கள். 

“அடுத்து என்னடி ஜமுனா?” ரூபிணி கால்களை நீட்டி சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தபடி கேட்டாள். 

“இங்கே பீச்சோர ஸ்டார் ஹோட்டல்களில் ஒன்றில் மதியச் சாப்பாட்டை வெட்டலாம்” வாசவி கூறினாள். 

“வாசவி இதைத்தான் சொல்வாள் என்று நினைத்தேன்..” கோமளா அடிக்க வந்த வாசவியிடம் இருந்து தப்பித்துக் கொள்ள எழுந்து தள்ளி நின்று கொண்டாள். 

“வாசவி சொல்வதும் சரிதானேடி.. பீச் ரோட்டையும்.. பூங்காவையும் சுற்றி வந்ததில் பசிக்கிறது. மணியும் மதியம் ஒன்றரையாகி விட்டது. சாப்பிட்டு விட்டு.. இங்கே கடற்கரையோரமாய் ஷீ கோர்ஷ்ன்னு போட்டிங் போற இடம் ஒன்னு இருக்கு.. அங்கே போய் ஜாலியாய் போட்டிங் போய்விட்டு ஹாஸ்டலுக்கு திரும்பி விடலாம்.. எப்படியும் காருக்கு நாள் வாடகைதான் கொடுக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாமே…” ஜமுனா எழுந்து கொண்டாள். 

மெல்லிய மஞ்சள் வெளிச்சத்திலிருந்த ஏஸி ஹாலுக் குள் அவர்கள் பிரவேசித்தார்கள். தோதான இடம் தேடி அமர்ந்தார்கள். எல்லோருக்கும் என்ன வேண்டுமென்று கேட்டு ஜமுனா ஆர்டர் கொடுத்தாள். 

“இன்னைக்கு செம ட்ரீட் கொடுத்திட்ட ஜமுனா… தினமும் உன் பர்த்டே வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…?” வாசவி கூறினாள். 

“அவ்வளவுதான்… மாதம் முழுவதும் சம்பாதிக்கும் சம்பளத்தை நான்கே நாளில் காலி பணணிவிட்டு காலிபர்ஸை வைத்துக்கிட்டு ஜமுனா.. ஜிஞ்சா… ஜிஞ்சா..ன்னு ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பாள்.. ” கோமளா பொங்கிச் சிரித்தாள். 

“வருடத்திற்கு ஒரு நாள் இப்படி வரலாம்.. தப் பில்லை.. தினம் தினம்ன்னா.. அது சரி வராது..” ரூபிணி தண்ணீரைக் குடித்துக் கொண்டே கூறினாள். 

“இவள் ஒருத்தி… எல்லோரும் பணக்கணக்கைப் பார்த் தால் இவள் வெளியே சுற்றக் கணக்குப் பார்ப்பாள்…” ஜமுனா அலுத்துக் கொண்டாள். 

அதற்குள் அவர்கள் ஆர்டர் கொடுத்த உணவு வகைகள் வந்துவிட நால்வரும் அரட்டையும் சிரிப்புமாய் சாப்பிட்டு முடித்தனர். மற்ற மூவருக்கும் முன்னாலேயே சாப்பிட்டு முடித்து விட்ட ரூபிணி கை கழுவ எழுந்து சென்றாள். 

அவள் கை கழுவி விட்டுத் திரும்பும்போது உயரமாய்.. ஆஜானுபாகுவாய் இருந்த ஒருவன் வேண்டுமென்றே அவள் மேல் மோதினான். 

“மிஸ்டர்… பார்த்து வரக் கூடாது..” ரூபிணி சீறினாள். 

“பார்த்ததால்தான் வந்தேன்…” 

“வாட் டு யு மீன்?” 

“தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஷில் பேசி பயமுறுத்தாதே.. கண்ணுக்கு அழகா இருக்கே.. தொட்டுப் பார்க்கலாம்ன்னு தோணிச்சு. மேலே மோதிப் பார்த்தேன்… தப்பா?” 

“பின்னே.. தப்பில்லையா?” 

“எனக்குத் தப்பாத் தோணலை. என்னாங்கிற இப்ப…” 

அவன் வேண்டுமென்றே அவள் அருகில் நெருங்கி நின்றான். அவனது தோற்றம் அவனை ரௌடியென்று தெள்ளத் தெளிவாக உணர்த்தியது. செம்பட்டை முடியுடன்… அரக்கு ஜீன்ஸும் டி.சர்ட்டும் அணிந்து.. ஒரு காதில் வளையம் மாட்டியிருந்தான். வாயில் மது வாசனை வீசியது. 

நாற்றம் பொறுக்காமல் ஒரு கையால் மூக்கைப் பொத்திக் கொண்ட ரூபிணி, “மரியாதையாய் வழியை விடு.” என்றாள். 

“விட முடியாது.. என்ன செய்வே..?” 

அவன் இன்னும் நெருங்க ரூபிணி அருவெறுப்புடன் பயந்து போனவளாய் பின் வாங்கினாள். மிரண்ட அவள் விழிகள். சாப்பிட்டு முடித்து விட்டுக் கை கழுவ வந்து கொண்டிருந்த தோழிகளைப் பார்த்து உதவி நாடி இறைஞ்சின. 

நிலைமையைக் கணப் பொழுதில் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆத்திரத்துடன் வேகமாய் ரூபிணியின் அருகே வந்து நின்று கொண்டார்கள். 

“யார் மிஸ்டர்.. நீ..?” கோமளா முறைத்தாள்.

“தெரிஞ்சுக்கணும்னு ஆசையா?” அவன் இளித்தான்.

“சகிக்கலை.. உனக்கென்ன பெரிய மன்மதன்னு நினைப்பா.. ஆளும்.. மூஞ்சியும்.. லேடிஸ்கிட்ட வம்பு பண்ண அலைகிறாயா?” வாசவி ரூபிணியின் கையைப் பிடித்து தன்புறமாய் இழுத்துக் கொண்டே கேட்டாள். 

“நான் மன்மதன்தான். நீ ரதியாய் வரயா?” அவன் வாசவியை மேலும் கீழும் பார்த்தான். 

“திமிரா… ஹோட்டல் மேனேஜரிடம் கம்ப்ளெயின்ட் பண்ணலாம் வாடி. இந்த மாதிரி ரோக்கையெல்லாம் உள்ளே எப்படி அலோவ் பண்ணினார்கள்ன்னு கேட்கலாம்..” ஜமுனா வேகமாய் கை கழுவினாள். 

“போ.. போய் தாராளமாய் சொல்லு… இது எங்க முதலாளியோட ஹோட்டல். நான் என் இஷ்டத்துக்கு வருவேன். போவேன்.” அவன் பார்வையால் அவர்களைச் சூறையாடினான். 

சகிக்க மாட்டாத ஜமுனா விடுவிடென்று சென்று மேனேஜர் என்ற போர்டு போடப்பட்டிருந்த அறையின் வெளியே நின்று கொண்டு கதவைத் தட்டினாள். 

“யெஸ்…” என்றபடி கதவைத் திறந்து கொண்டு டை கட்டிய வாலிபன் ஒருவன் வெளியே வந்தான். 

“உங்களுடைய ஹோட்டல் டீசன்டானது என்று நம்பித்தான் நாங்கள் லன்ச்சுக்கு இங்கே வந்தோம்..” கோபமாய் கூறினாள் ஜமுனா. 

“உங்கள் நம்பிக்கை குலையும்படி என்ன நடந்தது மேடம்? இது ஸ்டார் அந்தஸ்துள்ள ஹோட்டல். எங்களின் வாடிக்கையாளர்களுக்கு நல்ல முறையில்தான் சர்வீஸ் பண்ணிக் கொண்டிருக்கிறோம்… உங்களுக்கு என்ன குறையென்று என்னிடம் சொல்லுங்கள். நான் நிவர்த்தி செய்கிறேன்.” அந்த வாலிபன் பவ்யமாய் வினவினான். 

“நாங்கள் நால்வரும் விழுப்புரத்தில் வொர்க் பண்ணு கிறவர்கள். இந்த ஞாயிறை இங்கு மகிழ்ச்சியாக கழிக்கலாமென்று வந்தோம். உங்கள் ஹோட்டலின் ஸ்டார் அந்தஸ்தை மதித்து வந்தால் எங்களுக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைக்கிறது.” 

“என்னவென்று சொன்னால்தானே நான் ஏதாவது செய்ய முடியும் ?” 

“அந்த ஆள் எங்களிடம் மிஸ் பிஹேவ் பண்ணுகிறான்.” 

“ஹூ இஸ் தட் ப்ளடி ராஸ்கல்?” 

மேனேஜர் கோபமாய் உள்ளே வந்தான். அந்த ரௌடி அதே இடத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் வேகமாய் வந்த மேனேஜர் தயங்கி நின்றான். 

“லாரன்ஸ்.. வாட் இஸ் திஸ்?” 

“தமிழ் தெரியாதா.. தமிழில் பேசு.” 

“ச்சு..” 

மேனேஜர் அலுப்புடன் தலையை இடம் வலமாக ஆட்டினான். 

“லாரன்ஸ்.. நீ இருக்க வேண்டிய இடம் பிஷ் எக்ஸ்போர்ட் கம்பெனியில். இங்கே உனக்கு என்ன வேலை?” 

“அதை நீ கேட்காதே.” 

“நான் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள் ? இது என்னுடைய கன்ட்ரோலில் இருக்கும் ஹோட்டல். இங்கே வரும் லேடிஸிடம் நீ தகராறு பண்ணுவதை நான் அனுமதிக்க மாட்டேன்.” 

“என்ன செய்வாய்?” 

“எம்.டி.யிடம் கம்ப்ளெயின்ட் பண்ணினேன்னு வை.. நீ இந்த ஹோட்டலுக்குள் எப்போதுமே கால் வைக்க முடியாது.” 

லாரன்ஸ் அடங்கிப் போனான். சிவந்த விழிகளால் அவர்கள் நால்வரையும் உறுத்து விழித்து விட்டு வெளியேறப் போனான். 

“லாரன்ஸ்.. அவங்ககிட்ட ஸாரி சொல்லிட்டுப் போ..” 

“என்னையா ஸாரி கேட்கச் சொல்லுகிறாய்?” 

“உன்னைத் தான் சொல்கிறேன். நம் ஹோட்டலுக்கு வந்தவர்கள் மனம் வருந்திப் போகக்கூடாது. ஸாரி சொல்லு.. இல்லையென்றால் நான் நடந்ததை எம்.டி. யிடம் சொல்வேன்.” 

லாரன்ஸ் தன் கருத்த முகம் இன்னும் கருக்க பெண்கள் நால்வரையும் முறைத்துக் கொண்டே பல்லைக் கடித்துக் கொண்டு, 

“ஸாரி..” என்றான். 

பின் விர்ரென்று அங்கிருந்து வெளியேறி விட்டான். மேனேஜர் சிரித்த முகமாய் ஜமுனாவின் பக்கம் திரும்பி. 

“இப்ப திருப்திதானே மேடம். எங்கள் ஹோட்டலில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருந்துகிறேன். இனி ஒரு போதும் இப்படி நடக்காது. நீங்கள் எல்லோரும் எப்போது பாண்டிச்சேரிக்கு வந்தாலும் எங்கள் ஹோட்டலுக்கே வரவேண்டும்..” என்று வேண்டிக் கொண்டான். 

“ஷ்யூர்…” ஜமுனா சிரித்தவாறு விடைபெற்றுக் கொள்ள அவர்கள் நால்வரும் ஹோட்டலை விட்டு வெளியே வந்து காரில் ஏறினார்கள். ரூபிணி மௌன மாக வந்தாள். 

“ஏண்டி.. இவ மூட் அவுட் ஆகி இருக்காள்.” ஜமுனா விடம் வினவினாள் வாசவி. ஜமுனா ரூபிணியைக் கேள்வியாகப் பார்த்தாள். அவள் முகம் சுளித்தபடி, 

“எனக்கு போட்டிங் வர இஷ்டமில்லை. ஹாஸ்டலுக்குப் போய் விடலாம்..” என்றாள். 

“எதுக்கு?” 

”ஜமுனா.. எனக்கென்னவோ அந்த ரௌடியைப் பார்க்க பயமாய் இருக்கிறது. அவன் பார்வையே சரியில்லை.” 

“போடி.. அவனுக்காக நம் புரோகிராமை மாற்றுவதா.” ஜமுனா பிடிவாதமாய் போட்டிங் போக அவர்களை அழைத்துச் சென்றாள். அங்கே ரூபிணி பயந்தது போல் அந்த ரௌடி நின்று கொண்டிருந்தான். 

“இவன் ஏண்டி இங்கே வந்தான்?” 

“நமக்கு முன்னாடியே எப்படி வந்து நிற்கிறான் பார்.”

தங்களுக்குள் பேசிக் கொண்டபடி அவர்கள் போட்டிங் போக போட்டில் ஏறினார்கள். திரும்பி வந்து காரையில் ஏறும்போது லாரன்ஸ் வேகமாக வந்து ரூபிணியின் கையைப் பிடித்தான். அதிர்ந்து போன ரூபிணி அவனை ‘பளார்’ என்று கன்னத்தில் அறைந்து விட்டாள். எல்லோரின் மத்தியிலும் ஒரு பெண்ணின் கையால் அடி வாங்கியவன் மீண்டும் அவள் மேல் பாய்ந்தான். அதற்குள் நான்கு பெண்களும் சேர்ந்து அவனை மொத்து மொத்தென்று மொத்தி விட்டனர். அத்தோடும் விடாமல் போலீஸில் கம்ப்ளெயின்ட் பண்ணி உள்ளே தள்ளி விட்டனர். 

அத்தியாயம்-5

ரூபிணி கொடுத்த கம்ப்ளெயின்ட்டை வாங்கிக் கொண்ட இன்ஸ்பெக்டர், 

“ஓகே மேடம்.. நீங்க போகலாம். பட் ஒன்திங்… நீங்கள் கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கும் இந்த ஆள் பெரிய இடத்தில் வேலை பார்க்கிறவன். அவனுடைய முதலாளியின் பெயர் சொன்னால் அழுத குழந்தை கூட வாய் மூடும் அவரிடம் மோதுவது உங்களுக்கு நல்ல தல்ல” என்றார். 

“அதற்காக.. இந்த மாதிரி அயோக்கியனை சும்மா விடுவதா?” 

“மேடம்.. அவன் இருக்கும் இடம் அப்படி? போலீஸ்.. கோர்டெல்லாம் மற்றவர்களுக்குத்தான். ஹரிஹரன் சாரே ஓர் நடமாடும் போலீஸ் ஸ்டேஷன்… கோர்ட்… ஊரில் இருக்கிற எல்லோரும் அவர்கிட்ட பஞ்சாயத்துக்குப் போவாங்க.. அவருடைய ஆளையே தூக்கி உள்ளே போட வைத்திருக்கீங்க. இது எங்கே போய் முடியப் போகுதோ.” 

“சார் எது வந்தாலும் நான் பேஸ் பண்ணிக்கிறேன். நான் இந்தக் கம்ப்ளெயின்ட் கொடுத்தது கொடுத்தது தான்.” 

“அப்புறம் உங்கள் இஷ்டம். விழுப்புரம்.. கடலூர்.. பாண்டிச்சேரி.. மூன்று ஊர்களிலும் அவரை எதிர்த்து நிற்க எப்பேர்பட்ட தைரியசாலியாய் இருந்தாலும் பயப்படுவார்கள். ம்ம்.. நீங்கள் வெளியூரிலிருந்து வேலை செய்ய வந்திருக்கிறீர்கள்.. உங்களுக்கு எதுக்கு வம்பு?” 

“நானாய் வம்பைத் தேடிப் போகவில்லை சார்.. அவன்தான்.. நான் போகுமிடமெல்லாம் பின்னால் வந்து வம்பு பண்ணினான்.” 

“நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் மேடம். தூசு போல் இருக்கிறவன் பண்ணிய வம்பிற்காக மலையோடு மோதப் போகிறீர்களா?” 

“சார்… நான் எதையும் பேச விரும்பவில்லை. நான் போகலாமா?” 

“மேடம்.. நான் வெளிப்படையாகவே சொல்லுகிறேன். ஹரிஹரன் சாருக்கு விழுப்புரத்தில் ஒரு இன்ஜினியரிங் காலேஜ்.. ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்.. கடலூரிலும்… பாண்டிச்சேரியிலும் மீன் பதப்படுத்தி அனுப்பி வைக்கிற பெரிய எக்ஸ்போர்ட் கம்பெனிகள். பாண்டிச்சேரியில் பைவ் ஸ்டார் ஹோட்டல்.. இன்னும் நிறைய தொழில்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இது எல்லாவற்றையும் விட அவருக்கு முக்கியமான அடையாளம் ஒன்று இருக்கின்றது.” 

“என்ன….?” 

“அவர் மிகப் பெரிய தாதா மேடம். விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி ஆகிய மூன்று ஊர்களில் உள்ள ரௌடிகள் எல்லோரும் இவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்கள்.” 

ஜமுனா பயந்து போனாள். ரூபிணியின் கை பிடித்து நிறுத்தினாள். 

“ரூபி.. கொஞ்சம் யோசி.. நான் ஹரிஹரன் சாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். எங்க காலேஜ் ஓனர் கூட அவர் முன்னால் கை கட்டித்தான் நிற்பாராம். அவரை எதிர்த்து யாரும் தொழில் பண்ண முடியாதாம். தொழிலதிபர்கள் கதியே அப்படியிருக்கும் போது.. நாமெல்லாம் அவர் முன் எம்மாத்திரம்? வேண்டாம் ரூபி… இதை இப்படியே விட்டுவிடு…” 

“முடியாது ஜமுனா.” 

“ரூபி.. உன் பிடிவாதம் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. வெளியே வர யோசிப்பவள் நீ… இப்போதுகூட எதற்கு வம்பு.. நாம் திரும்பிப் போய்விடலாம் என்றுதான் நீ சொன்னாய். இப்போது மட்டும் ஒதுங்கிப் போக ஏன் யோசிக்கிறாய்?” 

“ஜமுனா.. எனக்கு அதிகம் வெளியே சுற்றப் பிடிக்காது. அதனால் வர மாட்டேன். அவன் வம்பு பண்ணுகிறான் ஒதுங்கிப் போகலாம் என்று நான் சொன்னேன். நீங்கள் யாரும் கேட்கவில்லை. அவன் வம்பு பண்ணியதோடு இல்லாமல் என்னைக் கையைப் பிடித்தும் இழுத்து விட்டான். இதை நான் சும்மா விடப் போவதில்லை. வருமுன் காக்க வேண்டும் என்பது என் கொள்கை. வந்து விட்டால் எதிர்த்து நிற்பது என் குணம்.” 

ரூபிணி விடுவிடென்று வெளியே வந்து காரில் ஏறிக் கொண்டாள். பின்னாலேயே ஓட்டமும் நடையுமாய் அவளைத் தொடர்ந்து வந்த கோமளா, வாசவி, ஜமுனா மூவரும் அலுத்துக் கொண்டே காரில் ஏறினர். கார் போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து சாலையில் சென்றது. 

வரும்போது அவர்களிடையே குடிகொண்டிருந்த குதூகலம் இப்போது காணாமல் போயிருந்தது. 

“பேசாமல் நாம் அப்போதே ஹாஸ்டல் திரும்பியிருக்கலாம்” வாசவி முணுமுணுத்தாள். 

“கிளம்பும்போது, அந்த மறதி மணிமேகலை எதிரே வந்துச்சு. எதுவும் விளங்கலை..” ஜமுனா எரிச்சலுடன் கூறினாள். 

“அவனும் அவன் முகரையும்.. சே.. “ரூபிணி சொல்லும்போதே கேட்டிருக்கணும்.. கோமளா தலையில் அடித்துக் கொண்டாள். 

“ஆமாம்.. இவள் சொன்னதை நாம் கேட்கணும். நாம் சொல்றதை மட்டும் இவள் கேட்க மாட்டாள்… வேண்டாம்.. வேண்டாம்ன்னு சொல்லச் சொல்ல உரலில் தலையைக் கொடுக்கிறாள். நான்தான் இவளை வற்புறுத்தி அவுட்டிங் போகலாம்ன்னு கூட்டி வந்தேன். இப்ப இவளுக்கு இவ்வளவு பெரிய பிரச்னையை உண்டு பண்ணி விட்டோமே என்று எனக்கு குற்ற உணர்வா இருக்கு கோமளா…” ஜமுனா கண் கலங்கினாள். 

“ஜமுனா.. இன்றைக்கு உன் பர்த்டே.. நீ சந்தோசமாய் இருக்க வேண்டும். இது என் பிரச்னை. இதற்கும் உனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. புரிந்ததா? இனி மேல் யாரும் இதைப்பற்றிப் பேசக்கூடாது…” ரூபிணி கண்டிப்புடன் கூறினாள். 

தோழிகள் மௌனமாகி விட காரோட்டிக் கொண்டிருந்த டிரைவர் ரூபிணியைத் திரும்பிப் பார்த்துப் பேசினான். 

“உங்க பிரண்ட்ஸையே தலையிட வேண்டாம்ன்னு சொல்லிட்டிங்க. நான் மூன்றாம் மனிதன்.. நான் தலையிடக் கூடாதுதான்.. ஆனால் மனசுக்குக் கேட் கலை. நான் இங்கேயே பிறந்து வளர்ந்தவன். ஹரிஹரனை ஒருவர் எதிர்த்துவிட்டால் அந்த ஆளை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவாராம் ஹரிஹரன்… இதை நான் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். தவறு செய்பவர்களை எல்லாம் தண்டிப்பது என்பது நடை முறைக்கு ஒத்து வராதுங்கம்மா. நேரே மோதுகிறவர்களிடம் மோதலாம். நிழலோடு மோத முடியுமா? ஹரிஹரன் நிழல் உலகின் தாதா… அவர் கண்ணசைத்தால் இந்த மூன்று ஊரும் கொந்தளிக்கும். அவர் கைகாட்டும் ஆட்கள்தான் பெரிய போஸ்டிங்கில் உட்காருவார்கள்.. அவர் தண்ணியில்லாத காட்டிற்கு மாற்ற வேண்டும் என்று நினைத்து விட்டால் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் தூக்கி அடிக்கப்பட்டு விடுவார்கள். அவர் கிங் மேக்கர்… இவ்வளவு ஏன்.. இந்த மூன்று ஊர்களுக்குமே.. அவர்தான் முடிசூடாத ராஜா.. அதனால் ரிஸ்க் எடுக்காதீர்கள் மேடம்.” 

“தேங்க்ஸ் பார் யுவர் அட்வைஸ். நான் இந்த கம்ப்ளெயின்ட் கொடுத்தது அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதற்காக மட்டுமில்லை. இனிமேல் இது போன்ற செயல்களில் அவன் ஈடுபடக் கூடாது என்பதற்காகவும் தான். ஸோ… இதைப்பற்றி டிஸ்கஸ் பண்ணுவதை நாம் விட்டு விடலாமே. இதை மறந்து விட்டு வேறு பேச்சை பேசலாமே…” 

ரூபிணி பட்டுக் கத்தரித்து விடவும் அவர்கள் அனை வரும் அமைதியாகி விட்டனர். ஹாஸ்டல் வாசலில் இறங்கியவுடன் ஜமுனா பணம் கொடுக்க தாமதிக்க.. ரூபிணி வாசவியையும் கோமளாவையும் பின் தொடர்ந்தாள். ஜமுனா கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்ட டிரைவர், 

“எதற்கும் உங்க பிரண்டை பத்திரமாய் பார்த்துக்கங்க மேடம்” என்றான். 

பதில் கூறாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டுச் சென்றாள் ஜமுனா. அவள் மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது. எதிரே வந்த வார்டன் மணிமேகலை. 

“ஜமுனா.. நாளைக்கு உன் பர்த்டேயில்லை..? பார்த்தாயா எப்படி நினைவு வைத்திருக்கிறேன் பார்…” என்றாள். 

மற்ற நேரமாக இருந்தால் நின்று வம்படித்திருப்பாள். இன்றைய மனநிலையில் எதுவும் பேசத் தெம்பில்லாதவளாய் தலையை மட்டும் ஆட்டிவிட்டு மாடியறைக்குச் சென்றாள். 

ரூபிணி அமைதியாய் துவைத்த துணிகளை மடித்துக் கொண்டு இருந்தாள். ஜமுனா அவள் எதிரே அமர்ந்து கலக்கமாய் அவள் முகம் பார்த்தாள். 

“காலையில் இருந்து நிறைய சுற்றியிருக்கே. அலுப்பாக இருக்கும். படுத்துத் தூங்கு…” என்றாள் ரூபிணி. 

“ரூபிணி.. நான் சொல்வதைக் கேளு.”

“தூங்குன்னு சொல்கிறேனில்ல.” 

மறுநாள் ஆபிஸிற்குள் நுழையும் போதே வாசலில் எதிர்பட்ட ஜவஹர் “ஹாய்.. ரூபிணி.. எங்கே உங்க பிரண்ட்?” என்றான். 

“இப்போதுதானே ஆபிஸிற்குள் நுழைகிறேன்? எனக்கு எப்படித் தெரியும்? உங்களுக்குத்தானே அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியும்?” 

“எல்லாம் சீட்டில் வந்து உட்கார்ந்தாகிவிட்டது… உங்களிடம் பேச்சை ஆரம்பிக்கத்தான் அப்படிக் கேட்டேன்.”

“ஐ…ஸீ… என்னிடம் என்ன பேச வேண்டியிருக்கிறது?” 

“நீங்கள் உங்கள் பிரண்டுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா?” 

“எதைப் பற்றி?” 

“என்னைப் பற்றிங்க… ஜவஹர் நல்லவன்.. வல்லவன்.. நாலும் தெரிந்தவன்னு சும்மா.. என் பெருமைகளை எடுத்து விடக் கூடாதா?” 

ரூபிணிக்குச் சிரிப்பு வந்து விட்டது. 

“ஏங்க சிரிக்கறீங்க? என் நிலைமையைப் பார்த்தால் உங்களுக்குச் சிரிக்கத் தோன்றுகிறதா? ஹெல்ப் பண்ணத் தோன்றவில்லையா?” 

“ஜவஹர் சார்.. காதல் தானாய் வரவேண்டும்.. அதற்கு சிபாரிசு இருக்கக் கூடாது. உங்களுக்கு உங்கள் காதல் மேல் நம்பிக்கை இல்லையா?” 

“எனக்கு என் காதல் மேல் நம்பிக்கை இருக்கிறது. அவள் மேல் தான் நம்பிக்கை இல்லை.” 

“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?” 

“ஆபிஸில் எல்லோரோடும் சிரித்துப் பேசுகிறாள். என்னைக் கண்டால் மட்டும் உர்ரென்று ஆகி விடுகிறாள்.” 

“நீங்கள் மட்டும்தானே அவளிடம் காதல் சொல்லியிருக்கிறீர்கள். அதனால் உங்களிடம் பேசச் சங்கடப்பட்டிருப்பாள்.” 

“வேறு யாரும் அவளிடம் காதல் சொல்லி விடுவார்களோன்னு எனக்குப் பயமாக இருக்கிறது… 

“சேச்சே.. ஆண் பிள்ளை பயப்படலாமா… தைரியமாய் இருங்கள்” மீண்டும் ரூபிணிக்குச் சிரிப்பு வந்து விட்டது. 

வாசல் பக்கம் வந்த சபாபதி ரூபிணி ஜவஹரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே ஒரு பைலை எடுத்துக் கொண்டு சென்றான். 

ப்ரீதி கம்ப்யூட்டர் திரையை உயிர்ப்பித்து கீ போர்டை தட்டிக் கொண்டிருக்க.. அவளருகே சென்ற சபாபதி, 

“இந்தாங்க மேடம் நீங்க கேட்ட ஃபைல்” என்று பைலை அவளிடம் கொடுத்தான். 

“பரவாயில்லையே… இவ்வளவு சீக்கிரத்தில் எடுத்து வந்து விட்டாயே..” பாராட்டியவாறு வாங்கிக் கொண் டாள் ப்ரீதி. 

”ஏன் மேடம்… ஜவஹர் சார்கிட்டப் பேசினால் உங்களுக்கு தலைவலி வருது. ரூபிணி மேடத்திற்கு மட்டும் சிரிப்பு வருதே.. எப்படி?” சபாபதி சந்தேகம் கேட்டான். 

“நீ எப்போது அவள் ஜவஹரிடம் சிரிப்பதைப் பார்த்தாய்?” 

“இதோ.. இப்போதுதான். வாசலில் நின்று பேசிச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.” 

ப்ரீதி நகம் கடிக்க ஆரம்பித்தாள். ரூபிணி அவளருகே வந்து, 

“என்ன யோசனை?” என்று கேட்டது கூட அவள் காதில் விழுகவில்லை. 

“என்னவாம் சபாபதி.. இவள் இவ்வளவு சீரியஸாக எதை யோசிக்கிறாள்?” 

“மேடம் இன்னைக்கு கிரீம் கலரில் சுடிதார் போட்டிருக்கிறாங்க. அதற்கு ஜவஹர் சார் என்ன சிச்சுவேஷன் சாங் பாடப் போகிறார்ன்னு யோசிக்கிறாங்களோ.. என்னவோ?”

சபாபதி கூறியதைக் கேட்டதும் ரூபிணிக்கு வழக்கம் போல் சிரிப்பு வந்து விட்டது. வாயை மூடிக் கொண்டு சிரித்தாள். அவளது சிரிப்பு சத்தத்தில் தந்நிலைக்குத் திரும்பின ப்ரீதி அவளை முறைத்தாள். 

“என்னடி சிரிப்பு வேண்டிக் கிடக்கு?” 

“ஜவஹர் சாரைப் பற்றி சபாபதி பேசியதும் சிரிப்பு வந்து விட்டது.” 

“அந்த ஆள் பெயரைக் கேட்டாலே உனக்கு சிரிப்பு வருகிறதா?” 

“இல்லையா பின்னே. அவரைப் பற்றி நினைத்தாலே சிரிப்பு வந்து விடும். கவலை மறந்து விடும்.” 

இயல்பாய் பேசியபடி ரூபிணி தன் டேபிளில் இருந்த கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தாள். ப்ரீதி உம்மென்று வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று அவர்களின் அருகே, 

“நான் பார்த்ததிலே.. அவள் ஒருத்தியைத்தான். நல்ல அழகியென்பேன்..” என்ற பாடல் கேட்டது.

நிமிர்ந்து பார்க்காமலே அது ஜவஹர்தான் என்று அவர்கள் இருவருக்கும் தெரிந்து விட்டது. ப்ரீதி என்றும் போல் இன்றும் முகம் திருப்பிக் கொள்ள ரூபிணி மட் டும் புன்னகைத்தாள். 

“ஏன் சார் பாட்டுப் பாடி என் பிரண்டை பயமுறுத்தறீங்க?” 

”பயமுறுத்த நான் என்ன ஹரிஹரனா? நான் சாதாரண ஆள் மேடம்.” 

ரூபிணியின் சிரிப்பு மறைந்து முகம் மாறியது. 

ஏன் அந்த ஹரிஹரனைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள்? 

அவள் மனதில் எழுந்த கேள்வியை வாய் விட்டுக் கேட்டாள். 

“நல்லாக் கேட்டிங்களே ஒரு கேள்வி. அவரைப் பார்த்து பயப்படாமல் யாரைப் பார்த்துப் பயப்படுவது?”

எல்லோரும் பயப்படும் அந்த ஹரிஹரன் ரூபிணியைத் தேடி வந்தான். ஊரே பார்த்துப் பயப்படும் அந்த மனிதனை பயமில்லாமல் எதிர்கொண்டாள் ரூபிணி. 

புள்ளிமான் தன்னைத் தேடி வந்த புலியை பயமின்றி எதிர் கொண்டது. புலி… தன் இரையை விடுமா? இல்லை தொடுமா? 

அத்தியாயம்-6

மதிய உணவு உண்ண டைனிங் டேபிளில் அமர்ந்து ஒரு கவளம் எடுத்து வாயில் வைத்திருப்பாள் ரூபிணி. சபாபதி பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான். மூச்சிரைக்க தன் முன் வந்து நின்றவனைப் பார்த்து வியப்புடன், 

“எதுக்கு சபாபதி இப்படி ஓடி வருகிறாய்?” என்று கேட்டாள் ரூபிணி. 

“மேடம்… மேடம்.. ” அவன் வார்த்தைகளால் தந்தி அடித்தான். 

“இந்தாப்பா.. தண்ணி. குடித்துவிட்டு பதட்டப்படாமல் சொல்லு.” ரூபிணி அவனிடம் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள். 

அவசரமாய் அதை வாங்கிக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், 

“உங்களைப் பார்க்க அவர் வந்திருக்கார் மேடம்.. ” என்றான். 

”எவர்..?” ரூபிணி புருவம் உயர்த்தினாள்.

“ஹரிஹரன் சார்…” 

அவன் வார்த்தையைக் கேட்ட டைனிங் ஹாலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்கள் அனைவரும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவர்களையே பார்த்தனர். தன்னைச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்ட ரூபிணி உணவுப் பொட்டலத்தை அப்படியே வைத்து விட்டு எழுந்தாள். 

“இருடி.. நானும் வருகிறேன்..” ப்ரீதி எழப் போனாள்.

“வேண்டாம் ப்ரீதி.. நான் போய் விட்டு வந்து விடு கிறேன்.. நீ சாப்பிடு” ரூபிணி அவளைத் தடுத்து விட்டாள். 

“என்னடி பிரச்னை?” 

“நத்திங்…” 

“அந்த ஆள் பயங்கரமானவர்”

“இருக்கட்டுமே.. எனக்கென்ன வந்தது?” 

ரூபிணி கைகழுவிவிட்டு கைக்குட்டையால் கையைத் துடைத்துக் கொண்டு சபாபதியைப் பார்த்து, 

“எங்கேயிருக்கிறார்?” என்று வினவினாள். 

“ஆபிஸரோட ரூமில்… “

“சரி நான் போய் பார்த்துக் கொள்கிறேன்.. நீ போ.” ரூபிணி ஆபிஸரின் அறைக் கதவை ஒரு விரலால் தட்டினாள். 

“யெஸ் கமின்…” ஆபிஸரின் குரல் கேட்டது. 

உள்ளே நுழைந்தாள். ஆபிஸர் அவரது இருக்கையை விட்டு எழுந்தார். 

“மிஸ் ரூபிணி.. சார் உங்களிடம் ஏதோ பேச வேண்டுமாம். பேசிக் கொண்டிருங்கள். நான் லன்ச்சுக்கு போய் விட்டு வந்து விடுகிறேன்” என்றவர் அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார். 

தனது அதிகாரத்தை உணர்த்தும் தோரணையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள் ரூபிணி. 

மாநிறம்.. உயரமான தோற்றம்.. பெரிய மீசை.. கூரிய விழிகள். எதிரேயிருந்தவன் ஒரு இரும்பு மனிதன் என்று முதல் பார்வையிலேயே பிடிபட்டு விட அவன் அருகே யிருந்த மற்றொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, 

“வணக்கம்…” என்றாள் ரூபிணி. 

அவனும் அவளை எடை போட்டுக் கொண்டுதான் இருந்தான். ‘போலீஸ் கம்பளெயின்ட்’ என்றதும் அடாவடியான ஆத்திரக்காரப் பெண்ணை எதிர்பார்த்து வந்தவனுக்கு.. மென்மையான தோற்றத்துடன் ஓர் பூங்கொடி போன்ற மெலிவுடன் உயரமாய் அழகாய் வந்து அமர்ந்து கரம் குவித்த பெண்ணைப் பார்த்ததும் வியப்பாய் இருந்தது. 

அவளது வணக்கத்தை சிறு தலையசைவால் அங்கீகரித்தவன், “நீங்கள் வெளியூர் என்று கேள்விப்பட் டேன்… இந்தப் பக்க நிலவரம் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… என்னுடைய மதிப்பும்.. மரியாதையும் எந்த அளவில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்… என்னுடைய பலம் தெரியாமல் விளையாடிப் பார்க்கிறீர்கள். என் பலத்தை ஒரு பெண்ணிடம்.. அதுவும் ஊர் விட்டு ஊர் வந்திருக்கும் இளம் பெண்ணிடம் பிரயோகம் பண்ண எனக்கு விருப்பமில்லை. அந்த ஒரே ஓர் காரணத்திற்காகத்தான் நான் உங்களைத் தேடி வந்தேன்… இதுவே வேறு ஒரு ஆளாக இருந்திருந்தால் என் ஆளை போலீஸில் மாட்டி விட்டதற்காக உண்டு இல்லை என்று பண்ணியிருப்பேன்..” என்று கோபமாய் தாடையைத் தடவியபடி கூறினான். 

ரூபிணி நிதானத்தை இழக்கவில்லை. 

“சார்.. நான் வெளியூர். எனக்கு உங்களைப் பற்றியும் உங்கள் பெருமைகளைப் பற்றியும் தெரியாது. ஆனால் உங்கள் ஆள் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளும் அந்த லாரன்ஸிற்கு உங்களைப் பற்றியும் உங்கள் பெருமைகளைப் பற்றியும் தெரியும் தானே..” அமைதியாய் வினவினாள். 

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” அவன் புருவம் உயர்த்தி வினவினான். 

“உங்கள் பெருமைகளை சீர்குலைக்கும் வண்ணம் அவன் நடந்து கொண்டான் என்பதைச் சொல்ல வருகிறேன். நான் அவன் மேல் புகார் கொடுத்தவுடன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முதற் கொண்டு.. என் கூட வேலை பார்ப்பவர்கள் வரை உங்களைப் பற்றிச் சொன்னார்கள். ஒருவர் கூட நீங்கள் பெண்களை அவமரியாதை செய்யும் வழக்கமுள்ளவர் என்றோ பெண்களிடம் தகாத வார்த்தைகள் பேசி தகாத முறையில் நடந்து கொள்பவர் என்றோ சொல்லவில்லை… அப்படியிருக்கையில் உங்களைப் போன்ற ஓர் மனிதரிடம் வேலை பார்ப்பவன் பெண்களிடம் வம்பு பண்ணலாமா? அவன் உங்களைச் சேர்ந்தவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவனுடைய பழிபாவம் எல்லாமும் உங்களைச் சேர்ந்து விடும் என்று அவன் நினைக்கவில்லையே… நான் உங்கள் கௌரவத்தை மதிக்கிறேன் சார். அவன்தான் உங்கள் கௌரவத்தை மதிக்கவில்லை… மதித்திருந்தால் இப்படி ஒரு கீழ்த்தரமான மனிதனுக்காக உங்களைப் போன்ற ஓர் பெரிய மனிதர் பரிந்து கொண்டு என்னைப் பார்க்க வரும் நிலையை உருவாக்கி இருக்க மாட்டான்… ” ரூபிணி தெளிவாகப் பேசினாள். 

ஹரிஹரன் அயர்ந்து விட்டான். இந்த விசயத்தை இப்படி ஒரு கோணத்தில் அவன் சிந்திக்கவில்லையே.. “லாரன்ஸ் என்ன செய்தான்?” யோசனையாய் அவளைப் பார்த்தபடி வினவினான் ஹரிஹரன். 

“நாங்கள் நான்கு பேர்… பாண்டிச்சேரியைச் சுற்றிப் பார்க்கப் போனோம்… மதியம் லன்ச் சாப்பிட உங்களது ஹோட்டலுக்குச் சென்றோம். சாப்பிடும் இடத்தில் நான் கைகழுவப் போனபோது இந்த லாரன்ஸ் வந்து என் மேல் வேண்டுமென்று மோதி அசிங்கமாய் பேசினான். ‘பார்த்து வரக்கூடாதா’ என்று கேட்டேன். ‘உன்னைப் பார்த்ததால்தான் வந்தேன். தொட்டுப் பார்க்க வேண்டும்னு தோணிச்சு. உன் மேல் மோதினேன். என்ன இப்ப’ என்று கேட்டான். என் பிரண்ட்ஸ் வந்து என்னைக் காப்பாற்றினார்கள். ஹோட்டல் மேனேஜரிடம் புகார் பண்ணினோம்..” ரூபிணி கூறிக் கொண்டிருக்க, 

“யார்.. பிரசாத்திடமா?” என்று கேட்டான் ஹரிஹரன். “எங்களுக்கு அவருடைய பெயர் தெரியாது சார். அவர் வந்து லாரன்ஸை திட்டி எங்களிடம் ஸாரி சொல்லச் சொன்னார். அவனும் கேட்டான். ஹோட்டல் மேனேஜர் நடந்தவைக்கு வருத்தம் தெரிவித்தார்… நாங்களும் அதை அப்படியே விட்டு விட்டு போட்டிங் போனோம். அங்கே இந்த லாரன்ஸ் வந்து என் கையைப் பிடித்து இழுத்து விட்டான் சார்…” ரூபிணியின் கண்கள் சிவந்து கலங்கின. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவள் தொடர்ந்தாள். 

“நான் அவன் கன்னத்தில் அறைந்து விட்டேன்.. அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல்தான் போலீஸில் புகார் கொடுத்தேன்… அவனைப் பழி வாங்க வேண்டும் என்பதற்காக அல்ல.. அவன் இனிமேலும் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்யக் கூடாது என்பதற்காக..” 

ஹரிஹரன் அவளையே இமைக்காமல் பார்த்தான். அவள் வார்த்தைகளில் பொய்யில்லை. முகத்தில் நேர்மை இருந்தது. தனக்கு ஏற்பட்ட அவமரியாதையை விவரிக்கும்போது அவளது கண்களில் மனதின் வலி தெரிந்தது. 

ஹரிஹரன் போனை எடுத்தான். நம்பரை அழுத்திப் பேசினான். 

“பிரசாத்.. லாஸ்ட் சன்டே.. லன்ச் டயத்தில் நம் ஹோட்டலில் சாப்பிட வந்த நான்கு லேடிஸ் உன்னிடம் வந்து கம்ப்ளெயின்ட் பண்ணினார்களா?” 

மறுமுனையில் பேசப்படுவதை குறுக்கிடாமல் கேட்டவன். போனை அணைத்து விட்டு ரூபிணியைப் பார்த்தான். 

“பிரசாத் நீங்கள் சொன்னதைத்தான் சொல்கிறான்.. இப்போது நீங்கள் ஒரு வார்த்தை சொன்னீர்களே.. அவனை பழி வாங்க நினைக்கவில்லை. இனி இது போன்ற தவறுகளை அவன் செய்யக்கூடாது என்று… அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். அவனுக்கான தண்டனையை நான் கொடுக்கிறேன். ஹரிஹரனிடம் வேலை பார்த்த ஆள் கோர்ட்டில் போய் நிற்கக்கூடாது… என் மேல் நம்பிக்கை இருந்தால் உங்கள் கம்ப்ளையின்ட்டை வாபஸ் பண்ணி விடுங்கள்.” 

ரூபிணி பதில் பேசாமல் ஆபிஸரின் டேபிளில் இருந்த பேனாவையும் பேப்பரையும் எடுத்தாள். மடமடவென்று தன் புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக எழுதி ஹரிஹரனிடம் கொடுத்தாள். 

“நான் உங்களை நம்புகிறேன் சார்.” 

அந்த முதல் சந்திப்பு அவர்கள் இருவரின் மனதிலும் ஒருவர் மேல் மற்றொருவருக்கு மிகப் பெரிய மதிப்பையும் மரியாதையையும் உண்டு பண்ணி விட்டது. இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக் கொள்ளும் வரை ஒருவர் மேல் மற்றொருவர் கோபமாகவே இருந்தார்கள். 

ரூபிணிக்கு ஹரிஹரன் ஓர் ‘தாதா’ என்று தெரியப் படுத்தப்பட்டிருந்தான். அவனிடம் வேலை பார்க்கும் ஆளோ பெண்களிடம் மிகக் கேவலமாய், கண்ணியக் குறைவாய் பேசவும். நடந்து கொள்ளவும் செய்தான். அப்படிப் பட்ட ஆளை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளி எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற எண்ணம் ரூபிணிக்கு இருந்தது. 

ஹரிஹரனுக்கோ தன்னிடம் வேலை பார்ப்பவனை போலீஸில் ரிமான்ட பண்ணியது தன் பலக்குறைவு என்பதில் கோபம் வந்தது. புகார் கொடுத்த பெண்ணிடம் தான் எவ்வளவோ ஹரிஹரனைப் பற்றி எடுத்துக் கூறியும் அவள் அதை கேட்டுக் கொள்ள மறுத்து விட்டாள் என்று போலீஸ் இன்ஸ்பெக்டரே கூறி விட்டார். சிறு கேலிப் பேச்சைக் கூட பொறுத்துக் கொள்ளாமல் ‘ஈவ் டீஸிங்’ என்ற பெயரில் தனது ஆளை உள்ளே தூக்கிப் போட்டு விட்டாள் என்ற கொதிப்பு ஹரிஹர னுக்கு இருந்தது. கூடுதலாக விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு ஊர் சுற்ற வந்த பெண் எப்படிப்பட்டவளாக இருப்பாள் என்ற எண்ணமும் இருந்தது. 

ரூபிணிக்கு ஒரு விசயம் நன்றாக நினைவில் இருந்தது. பாண்டிச்சேரி ஹோட்டல் மேனேஜர் லாரன்ஸிடம் ‘இங்க நடந்ததை எம்.டி. கிட்ட சொன்னேன்னு வை. நீ ஹோட்டலில் கால் வைக்க முடியாது…’ என்று கூறினான். அத்தோடு விட்டு விடாமல் எம்.டி.யின் பெயரைச் சொல்லி மன்னிப்பு வேறு கேட்க வைத்தான். ஒரு வேளை ஹரிஹரன் பெண்களிடம் தரக்குறைவாய் நடந்து கொள்வதை அனுமதிக்காதவனாய் இருக்கலாம் அல்லவா? 

அந்த நினைவில்தான் ரூபிணி.. தன் தரப்பு நியாயங்களை அவனிடம் எடுத்துக் கூறினாள். மென்மையான குணம் கொண்ட பெண். ஊர் சுற்றிப் பார்க்க வந்த இடத்தில் அவனிடம் வேலை செய்த ஆளால் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டதை உணர்ந்து கொண்டான் ஹரிஹரன். 

ரூபிணி நடந்த தவறுக்கு நியாயம் கேட்காமல்.. அவனைத் தண்டிக்க விரும்பாமல்.. இனி இது மாதிரியான தவறுகளை அவன் செய்யக்கூடாது என்பதற்காக புகார் கொடுத்ததாகக் கூறியது ஹரிஹரனின் மனதைக் கவர்ந்து விட்டது. 

ஹரிஹரன் சில குணங்களைக் கொண்டவன். அவனை நம்புகிறவர்களுக்கு அவன் கடவுள்.. தன்னிடம் உதவி கேட்டு ஒருவர் வந்து விட்டால் தன் உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டான். அதுவே ஒருவன் அவனை எதிர்த்து நின்று விட்டால்… அவனை பூண் டோடு அழிக்கவும் செய்வான். 

இங்கே அவன் ஒன்றைத்தான் ரூபிணியிடம் சொன்னான். 

“என் மேல் நம்பிக்கை இருந்தால் புகாரை வாபஸ் பண்ணுங்கள்…” 

உடனே ரூபிணி தன் புகாரை வாபஸ் பண்ணி எழுதி அவன் கையில் கொடுத்து விடவும் அவன் மனம் இதமாகி விட்டது. அவனைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு பெண். அவளை அவமரியாதை செய்தவனை யார் சொல்லியும் கேட்காமல் உள்ளே தூக்கிப் போட்டவள். அவன் சொன்ன ஓர் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறாள். 

எத்தனையோ வெற்றிகளை தினம் தினம் சந்திக்கும் அந்த பலவான் அந்த வெற்றிகளில் அடைந்த மன நிறைவை விட இன்று அதிக அளவில் மனம் நிறைந்து விட்டதாக உணர்ந்தான். 

ரூபிணிக்கு அவன் காட்டிய கண்ணியமும்… நிதானமும் ஆச்சரியத்தை அளித்தது. மற்றவர்கள் பயமுறுத்திய அளவிற்கு அவன் கொடியவன் அல்ல என்றே அவளுக்குத் தோன்றியது. அவன் நினைத்திருந்தால் அவளை போனில் மிரட்டியிருக்கலாம். அல்லது அவனுடைய உதவியாளர்களில் ஒருவரை அனுப்பி அவளிடம் பேச வைத்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் நேரடியாய் அவளைச் சந்திக்க அவனே வந்ததும் அல்லாமல்.. அவளிடம் மரியாதையாய் அவன் பேசிய விதமும்… அவளின் மனக்குறையை கேட்டவுடன் தன் ஹோட்டல் மேனேஜரிடம் பேசி அது உண்மை என்பதை அறிந்து கொண்டு.. தவறுக்கு தண்டனையை தான் கொடுப்பதாக உத்தரவாதம் அளித்ததும்.. அவளது மனதைத் தொட்டு விட்டது. உடனடியாய் தன் புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டாள். 

ரூபிணியிடம் இருந்து பேப்பரை வாங்கிக் கொண்ட ஹரிஹரன் எழுந்து கொண்டான். ரூபிணியும் எழுந்து நின்றாள். 

முதன் முதலாக ஒரு பெண்ணிடம் இயல்பாய் விடை பெற முடியாமல் தன் தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக் கொள்வதை உணர்ந்த ஹரிஹரன் ஒரு சிறு தலை அசைவுடன் அவளிடமிருந்து விடைபெற்றான். 

புலியின் மனதில் புள்ளிமானின் மேல் ஈர்ப்பு தோன்றி விட்டது. 

– தொடரும்…

– நெஞ்சமடி நெஞ்சம் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 2010, அறிவாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *