காதல் கொடூரன்! – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 18,963 
 

மற்றொரு கொலைக்குத் தயாராகிவிட்டான் சுந்தர்…..அழகான பெண்களாகத் தேர்ந்தெடுத்துக் காதல் வலையில் சிக்க வைத்துக் கொலை செய்துவிடும் ‘காதல் கொடூரன்’ அவன்!

இன்று கீதா!

முதல் சந்திப்பிலேயே அவனிடம் மனதைப் பறிகொடுத்தவள்; இரண்டாம் சந்திப்பில், “I love you” சொன்னவள்; அவன் அரவணைப்புக்காக மூன்றாம் சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவள்.

கீதாவை முதல் முறை சந்தித்த போதே தன் அப்பாவிடம், “கீதா ரொம்ப அழகுப்பா” என்றான் சுந்தர்.

“ஐயய்யோ…ஆபத்துடா…உலகம் தாங்காதுடா மகனே. அழகான பெண்கள் அத்தனை பேரும் துரோகிங்க; ஆபத்தானவங்க. கூசாம அவங்களைக் கொல்லணும்டா சுந்தர்” என்றார் அப்பா. அழகழகான பெண்களின் துரோகத்தால் விரக்தியின் விளிம்பைத் தொட்டவர் அவர்!

“கீதா உட்காருன்னா உட்காருரா. எழுன்னா எழுந்திரிக்கிறா. படுன்னா படுத்துருவா. இன்னிக்கி அவளைத் தீர்த்துடுறேன்” என்று தன் அப்பாவிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு பளபளக்கும் கூரிய கத்தியுடன் கிளம்பினான் சுந்தர்.

எலியட்ஸ் பீச் இருட்டியிருந்தது.

சுந்தருக்காகக் காத்திருந்த கீதா, பலி ஆடு போல, அவனைப் பின் தொடர்ந்து நடந்தாள். ஒரு படகின் மறைவில் இருவரும் அருகருகாக அமர்ந்தார்கள்.

கீதாவின் கவர்ச்சி அங்கங்களைப் பார்வையால் விழுங்கிக்கொண்டே அவளின் வழவழப்பான சங்குக் கழுத்தைத் தன் இடக்கரத்தால் வளைத்தான் சுந்தர்.

‘க்ளுக்’…..அவளிடமிருந்து வெளிப்பட்ட மென் சிரிப்பு அவனை உற்சாகப்படுத்தியது. பேண்ட் பாக்கெட்டிலிருந்த கத்தியை எடுக்க முனைந்தபோது…

அவன் நெஞ்சில் ‘சுரீர்’ வலி. சுந்தர் அலறினான்…”ஆ…ஆ…ஆ…”

இப்போது, கீதாவின் கையில் ரத்தம் சொட்டும் கூரிய கத்தி இருந்தது.

கத்தியை மறைத்துக்கொண்டு வீடு திரும்பினாள் கீதா.

தன் அம்மாவின் புகைப்படத்தின் முன்னால் நின்று சொல்லிக்கொண்டிருந்தாள்….“அம்மா, உனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாத்திட்டு வர்றேன். சுந்தர் ஐந்தாவது ஆள். ஆண்கள் எல்லோருமே அயோக்கியர்கள். இனியும் என் கொலை தொடரும்.”

– 28.02.1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *