பாவ மன்னிப்பு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 27, 2023
பார்வையிட்டோர்: 1,546 
 
 

தான் வந்த சிறிய படகை நங்கூரமிட்டு இறுக கட்டிவிட்டு “ஆலன்சாவ்” அந்தத் தீவில் தரை இறங்கினான்.

சூரியன் சுட்டெரிக்காத இளங்காலை.

அவனது ஒரு கையில் பைபிளும், மறுகையில் பரிசுப் பொருட்களும், உணவுப் பொட்டலங்களும் இருந்தன.

புதர்களை அண்டி இறைச்சி வாட்டும் புகையடுப்புகள் அங்குமிங்குமாக இன்னமும் புகைந்து கொண்டிருந்தன.

அந்தப் புகை இன்னமும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு அடையாளமாக இருந்தது.

கண்ணிற்கெட்டிய தூரம்வரை எவரையும் காணவில்லை.

கடற்கரை நீர் பளிச் சென்ற நீலநிறத்தில் நிர்மலமாக இருந்தது.

நுரை தள்ளிய அலை சாந்தமாக ஓடியோடிக் காலை நனைத்தது.

மணல்தரை நடக்க மிகுந்த மிருதுவாக விருந்தது.

ஈச்சம் பற்றையில் கருநிறப் பழங்கள் குலை தள்ளி கிடந்தன.

நாகதாளி முள்நீட்டிச் சிலிர்த்தது.

அந்தகார மெளனத்தை குலைத்துக் கொண்டு விர்ரென்று ஓர் அம்பு அவனது கையிலிருந்த பைபிளில் ஏறி அதனை தூரச் சுழற்றி வீசியடித்தது.

அவல ஓசையெழுப்பி ஓய்ந்தது ஆட்காட்டிக் குருவி.

“கர்த்தரே” …என்று விளித்தபடியே ஆலன்சாவ் திடுக்கிட்டு அம்பு வந்த திசை நோக்கினான்.

அங்கே ஒரு சிறுவன் அடுத்த அம்பு விடத் தயாராகி நின்றான்.

வெல வெலத்துப் போன “ஆலன்சாவ்”

நான் பகையாளியல்ல, அன்பைப் போதிக்க வந்த ஆன்மீக வாதி கொஞ்சம் பொறு …என்று கையுயர்த்திக்கத்தினான்.

அவனது கூச்சல் சிறுவனுக்குப் புரியவில்லை.

சிறுவன் ஆலன்சாவின் நெஞ்சிற்கு குறிபார்த்து வில்லுயர்த்தி அம்பெய்த முயல்கையில் அதனைத் தட்டிப்பறித்தெறிந்தாள் ஓர் வன தேவதை.

உயிர்காத்த தேவதையை ஆலன்சாவ் நெஞ்சிற்கு குறுக்கே சிலுவையிட்டு ஜெபித்தான்,

தலையில் மாலையணிந்து, பச்சிலை போர்த்தி முகத்தில் வர்ணக் கோடுகளோடு நின்றாள் அந்தக் கரும்பேரழகி.

சிறுவன் நிர்வாணமாக நின்று அவளை முறைத்தான்.

அன்னியனைக் கொல்ல விடவில்லை என்கிற ஆதங்கம் அவனுக்கு.

“நீ இங்கிருப்பது உனக்கு நல்லதல்ல. வந்த வழியே திரும்பிப் போ” உரத்துக் கூச்சலிட்டாள் ஆங்கிலத்தில்.

அவனுக்குப் பெருவியப்பு.

அந்தமானுக்கு அப்பால் கிடக்கிற 60000 ஆயிரம் ஆண்டுப் பழைமைமிக்க சென்டினல் தீவின் பழங்குடிப் பெண் எவ்வாறு ஆங்கிலம் அறிந்தாள்??

பழங்குடிகள் எப்போதும் தத்தம் கலாச்சாரம் மட்டுமே உறுதியாகப் பேணுபவர்கள்.

தத்தம் மொழி தவிர பிற மொழி அறியாதவர்கள் பேச விரும்பாதவர்கள்.

அவ்வாறெனில் இவள் எவ்வாறு ஆங்கிலம் பேசுகிறாள்?

“கடவுளுக்குத் தோத்திரம்” மொழியறிந்த உன்னால் என் விதி மீண்டது. எவ்வாறு பெண்ணே நீ ஆங்கிலமறிந்தாய்.. இங்குள்ளவர்கள் அனைவரும் ஆங்கிலம் பேசுவார்களா? என்றான் ஆலன்சாவ்.

அவனுக்கு் பைபிள் போதனை செய்ய அவர்கள் ஆங்கிலம் பேசுவது அவசியமாய் இருந்தது.

பல வருடங்களுக்கு முன்னதாக உன்னைப் போன்றவர்களினால் தான் இந்தத் தீவிலிருந்து நட்ட நடு இரவில் என் மூன்று சகோதரர்களும், என்பெற்றோரும் கடத்தப்பட்டோம்.

அவர்கள் எம்மை ஆராட்சி செய்வதாக கூறி எம்மைச் சிறைப் படுத்தி ஆராயும் விலங்காக்கினர்.

எமக்குத் தடுப்பூசி போட்டனர். மொழி படிப்பித்தார்கள்.

அம்மாவும், அப்பாவும் அந்தத் தடுப்புச் சிறையில் இறக்க காரணமானது வைரஸ் ஏற்றப்பட்ட அவர்களின் தடுப்பூசி.

உங்களைப் போல் எங்களிடம் கொடு நோய்களும் இல்லை. அவற்றை எதிர்க்கும் சகதியும் இல்லை.

நோய் வாய்ப்பட்டு இறக்கும் தறுவாயில் இருந்த சிறுவர்களான எங்களை இந்தக் கடற்புற மேட்டில் திரும்பவும்எறிந்து விட்டுச் சென்றார்கள்.

ஒன்றன்பின் ஒன்றாய் என் சகோதரர்கள் சாக நான் மட்டுமே இன்று எஞ்சியிருப்பவள்.

உங்கள் தடுப்பூசி என் சகோதரர்களையும் கொன்று விட்டது.

ஆத்திரத்தோடு பேசினாள் அவள்.

கலங்கிய கண்களில் கண்ணீர் வடிந்தது.

அவள் கம்மிய குரலைச் சீர்செய்ய தன் அரையில் தொங்கிய மூங்கில் குழாயின் நீரைப் பருகினாள்.

நீ போய்விடு கண்முன் நிற்காதே.

உங்களின் போலி உலகும் உங்கள் கலாச்சாரமும் உங்கள் மதமும் எங்களுக்கு என்றும் கேடு.

உங்களின் காலனித்துவத்தை, சிலுவைப் போர்களை, இனவெறியை, அடிமை வியாபாரத்தைத் தானே உன் மதபோதனை எங்களுக்குள் விதைத்தது.

ஏழைகளை ஆக்கிரமிப்பதற்கான கலைகளை மிக நுட்பமாக விதைப்பதற்குத்தானே உங்கள் மதங்கள் இங்கே சிருஷ்டிக்கப் பட்டுள்ளன.

இந்தத் தீவிற்கு எவரும் வருவதில்லை.

நாம் வர அனுமதிப்பதும் இல்லை.

உன் நல்ல வேளை மொழியறிந்த என்னிடம் நீ சிக்கிக் கொண்டது.

பழங்குடிகளாகிய நாம் எம்முடைய கலாச்சாரத்தை இறுக்கமாகப் பேணுபவர்கள் என்று அறிந்த பிறகும் நீங்கள் ஏன் எம்மைத் துன்புறுத்துகின்றீர்கள் ? பின் தொடர்கின்றீர்கள். ??

அவள் குரல் கடுமையாக ஒலித்தது.

நான் செய்வதை கிறுக்குத்தனம் என நீ எண்ணலாம்.

ஆனால் இந்த மக்களிடம் இயேசு குறித்து அறிவிப்பது மதிப்புமிக்க ஓர் செயல் என நான் எண்ணுகிறேன்’என்றுகுழைந்தான் ஆலன்சோவ்

நீ என் மொழியறிந்தது என் பெரும் பாக்கியம்.

நான் கடவுள் சேவை செய்ய வந்தவன்.

என்னோடு சேர்ந்து நான் வாசிக்கிற பைபிள் நற்செய்திகளை உன் மக்களுக்கு உன் மொழியில் எடுத்துச்சொல்.

கடவுள் கருணை நிறைந்தவர் உங்களை நிச்சயம் பைபிள் காப்பாற்றும்…. என்றான்.

அவள் அட்டகாசமாய்ச் சிரித்தாள்.

உன் பைபிள், தன்னையே காப்பாற்ற முடியாமல் அம்பு துளைத்துக் கிடக்கிறது.

அதுவா எம்மைக் காப்பாற்றும் ?? என்றாள் எகத்தாளமாக..

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்று ஆரம்பிக்கிற உன் பைபிளின் ஆரம்பமேதெளிவின்மையோடு பயணிப்பது.

பூமியைப் படைத்த உன் கடவுள் இல்லாத வானத்தை எப்படிப் படைத்தார்? வானம் என்ற ஒன்று உண்டா ??

முதல் நாளில் பகல் இரவைப் படைத்ததாக கூறும் உன் கடவுள் நாலாம் நாள்தான் சூரியனைப் படைத்ததாககூறுவது முரணில்லையா?

நாடு பிடிப்பதற்கு வந்த நீங்கள்

மதத்தை பரப்புவது என்பது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் மக்களை’நாகரிக்கப்படுத்துவதற்கான’ வழியென்றும், அதுதான் மனிதத்தின் மதிப்பார்ந்த செயலென்றும் வெள்ளையவியாபாரிகளான நீங்கள் எமக்கு காலங்காலமாக கற்பிக்கின்றீர்கள்.

உங்களை நேசிக்காதவர்களை நீங்கள் கொன்று புதைப்பீர்கள்.

கனேடியப் பாடசாலைகள் ஒவ்வொன்றின் கீழும் இப்படித்தானே எம் பழங்குடியினத்துப் பச்சைத் தளிர்களைலட்சோப லடசமாய் கொன்று புதைத்தீர்கள்.

உனக்கு உள்ளதை உள்ளபடியே சொல்வதென்றால் உலகப்பரப்பெங்கும் உன் கட்டாய பைபிள் திணிப்பில்பலியாகிப் புதைக்கப் பட்டவர்களால் தான் உலகம் மூடுண்டு கிடக்கிறது.

எம்முடைய நாடுகளை அடிமையாக்கி நீங்கள் எம் சொத்துகள் எல்லாவற்றையும் பிடுங்கிப் போவதை பொய்சொல்லாத உங்களின் பாப்பாண்டவரும், இயேசுவும் உண்மையில் அறிய மாட்டார்களா ?

எம் குடும்பத்தையே கொன்றெறிந்த உங்கள் கருணைகளை நாங்கள் ஏற்கனவே நன்கு அறிவோம்.

இன்னும் எங்களுக்கு எதைப் போதிக்கப் போகின்றாய்? என்றாள் கோபங்கொப்பளிக்க அந்த வன தேவதை!

உன் கோபம் புரிகிறது பெண்ணே..

இறைவனது கருணையையும், அன்பையும்,மன்னிப்பையும் நாமும் கைக் கொண்டு நாங்களும் பிறரைமன்னிப்பவர்களாக இருக்க வேண்டிய அவசியத்தையே நான் போதிக்க வந்தேன் என்றான் கழுத்தில் தொங்கியசிலுவையில் கை பதித்த படி ஆலன்சாவ்….

உன் இறைவன் மன்னிப்பவரா ?

புவி தோன்றியதிலிருந்து ஆப்பிளைத் தின்ற ஆதாம், ஏவாளிற்காக இற்றை வரை ஒட்டுமொத்த மானிடகுலத்தை மட்டுமல்ல ஆப்பிள் சாப்பிடாது, தப்பே செய்யாத மற்றைய ஜீவராசிகளுக்கும் மன்னிப்பே வழங்காமல்எல்லோரையும் கொன்று கொன்று முடிக்கின்ற உன் இறைவன் உண்மையில் மன்னிப்பவரா ?

கருணையும் அன்பும் கொண்டவரா ??

பாவம் செய்தவன் மன்னிப்புக் கேட்டால் பாவம் சரியாகிப் போகும் என்கின்ற பாவ மன்னிப்புப் பீடத்தைஒவ்வொரு கோவில்களிலும் குருமார் வைத்திருப்பது மன்னிக்கத் தெரியாத உன் ஆண்டவனுக்கு தெரியுமா?

அவள் கேள்விகளை அடுக்கினாள்.

உன் பைபிளின் உபாகமம் 7 ம் அதிகாரத்தின் முதல் ஐந்து வசனங்களையும் எனக்கு வாசித்து விளக்கம் சொல்என்றாள்.

அம்பு பட்ட பைபிளை அச்சத்தோடு திறந்தான் ஆலன்சாவ்.

“உன்னைப் பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கைபண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்” என்று அதில் இருந்தது.

அவன் மெளனமானான்.

கடவுள் என்று ஒன்று இருந்தால் அது உலகில் உள்ள எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால் இந்தக் கடவுள்கள் ஒரு இனத்தை மட்டும் தேர்ந்து எடுத்து அந்த இனத்துக்காக பிற இனங்களைசங்கரித்து அழிக்கத் துடிப்பது ஏன்?

பாவம் செய்த மனிதர்களையெல்லாம் அழித்தொழிப்பதற்காக 40 நாட்கள் கடுமழை பெய்வித்து அனைத்தையும்அழிக்கும் போது கடவுள் விசுவாசியும், நல்ல மனிதருமான நோவாவை மட்டும் தேர்ந்தெடுத்து கப்பல்செய்வித்துக் காப்பாற்றிய நீ சொல்கிற கருணைக் கடவுள், கடைசியில் அவனையும் கொன்றதேன்?

உன் கருணைக் கடவுள் எமக்குத் தேவையில்லை. இயற்கையே எமது கடவுள். நீ போய்விடு என்றாள்கோபமாக…

காட்டில் வாழும் பட்டிக்காட்டுப் பழங்குடிப் பெண்ணிடமிருந்து இத்தகு விடையறியாக் கேள்விகள் வரும் என்றுஆலன்சாவ் கனவிலும் எண்ணியவனல்ல.

குள்ளமான நளினமிக்க அந்தமான் நிக்கோபார் தீவகத்துப் பழங்குடிகளாகிய நாம் தான் தென்கிழக்காசியாவின்வரலாற்றிற்கு முற்பட்ட நெகிரிட்டோக்கள்.

ஒற்றுமையோடும், உணர்வோடும் நாம் கூட்டாக வாழும் இயல்பினர்.

உணவிற்காய் மீன்கள் மற்றும் விலங்குகளை வேட்டையாடியும், காய், கனிகளை பறித்தும், கிழங்கு மற்றும் அரியவேர்களை தோண்டியெடுத்தும் உண்கின்ற பண்பினர்.

எம்மவர்கள் எறும்பைப் போல சுறுசுறுப்பானவர்கள்.

இந்த வடக்கு சென்டினல் எனப்படும் 60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காட்டுப் பெருந்தீவில் கடந்த60000 ஆயிரம் வருடங்களாக வாழ்கிற நாம் எம்மைச் சீண்ட வரும் எதிரியை வீழ்த்துவதையே எங்களின்இலக்காக கொண்டவர்கள்.

எங்கள் அப்பாவிப் பழங்குடிகளைக் கொல்லவென கடலில் மிதந்த மதுப் போத்தல்களில் நீங்கள் கலந்துவைத்த மெத்தனோல் நஞ்சை மதுவென நினைத்துக் குடித்து இறந்தவர்கள் பலர்.

இன்றுவரை எம் கடலில் மிதக்கும் உங்களின் இரசாயனக் கெடுதிகளாலும், நஞ்சேற்றப்பட்டகழிவெண்ணைகளாலும், நஞ்சு மீன்களைத் தின்றும் நிரந்தர நோயாளிகளாய்த் தவிக்கின்றார்கள் பலர்.

இது திட்டமிட்ட செயலல்ல, தற்செயல் என்று தப்பித்துக் கொள்வீர்கள் நீங்கள்.

ஓர் ஆதிக் குடிஇனத்தை… மத,மொழி,சாதிய வேற்றுமையினால் அல்லது தேசிய இன வேற்றுமையினால் கொல்ல நினைப்பது இனப்படுகொலை…

இந்த இனப்படுகொலை என்கின்ற வார்த்தை உங்களுக்குள் முதன் முதலில் ரபேல் லேம்கின் அவர்கள் 1944ல்உபயோகித்த போதும் அந்தச் சொல் எங்கள் மீதுதான் காலாதி காலம் தொட்டு உங்களின் மதப் பெயரால், நாடுபிடிப்பதன் பெயரால், கல்வியின் பெயரால் தொடர்ந்து செய்து வருகிற மிகப் பெரு அநீதி.

இந்தப் பூமியின் வரலாற்றை எவனும் சரி வர எழுதி விட முடியாது. ஆனாலும் பொய்யை உண்மையென எழுதிக்கொண்டிருப்பவர்கள் நீங்கள். பல லட்சம் வருடமாக மானிடம் வாழ்ந்த அமெரிக்க மண்ணை தானே கண்டதாகஎழுதிய கடலோடிக் கொலைஞனான கொலம்பஸைப் போன்றே அந்தமானின் வடக்கே ஆட்களைக் கொல்கிறபேய்களின் தீவை நான் கண்டேன்.

அங்கு தரிக்க முற்பட்ட வேளை அம்பு தாக்காமல் உயிர் தப்பியதே பெருங்காரியம் என்று ஓடிய நாளது” என

13-வது நூற்றாண்டில், கப்பலில் உலகைச் சுற்றி நாடு பிடிப்பதற்கு வேவுபார்த்த இத்தாலிய மாலுமி மார்க்கோபோலோ, இந்த சென்டினல் தீவில் வசிப்பவர்களை மிகவும் கொடூரமானவர்கள், மனிதரைத் தின்பவர்கள் என்றுதன் நாளேட்டில் பதிவு செய்து வைத்திருக்கின்றான்.

அயலில் உள்ள கடாரம், இலங்கை, மாலைதீவு,இந்தோனேசியா என்று கால் போன திசையெங்கும் நாடுபிடித்துத் தன் பெயர் பொறித்த இராசராஜ சோழன் போன்றவர்கள் கூட எம்மை அடிமை கொள்ள நாம்அனுமதித்தவர்களல்ல.

அதனால்த்தான் எம் தீவை பூமிப் பந்தில் 60000 ஆயிரம் ஆண்டுகளாக வெளியுலகத்தவர் போகத் தயங்கும் கொலைகாரப் பூமியென்கின்றீர்கள் நீங்கள்.

நாமோ எவர்க்கும் அடிபணியா மானஸ்தவர்களின் மண் என்கின்றோம்.

பெருநெருப்பும் சூறைக்காற்றும்,இடியும் மின்னலும், சுனாமியும் தீராப் பெருமழையும் கடல்நடுவே யிருக்கின்றஇந்தச் சென்டினல் தீவை இன்றுவரை தாக்கிச் சிதைத்தும், எம் மன உறுதி எம்மை இன்றும் வாழ்விக்கின்றது.

பச்சையாய் மாமிசத்தை இச்சை வந்த போதெல்லாம் சாப்பிட்டு வாழுகிற, இலைதழைகளை உணவாக்கியும், போர்வையாய்ப் போர்த்தியும் வாழுகிற கலாச்சாரத்தை இன்றும் பேணுகிறவர்கள் நாங்கள்.

நவீன உலக கண்டு பிடிப்புகள் அனைத்திலும் இருந்து வேறுபட்டிருக்கிற ஆதிமனிதர்கள் நாம்.

அவளுக்கு மூச்சு முட்டியது.

அவளைச்சூழ 15 பேருக்கு மேலான ஆதிப் பழங்குடிகள் தாரை தப்பட்டைகளோடு அவளை வலம் வந்தனர்.

“ஒன்கே” என்று அவளைத் தம் மொழித் தெய்வமாய்ப் போற்றினர்.

நீங்கள் தான் சென்டினல் தலைவரோ? என்றான் ஆலன்சாவ்..வியப்புடன்

தலைவர், முதல்வர் என்பதெல்லாம் உங்களைப் போன்ற ஆதிக்கக் கார்ர்களுக்கானது.

500 பேரிலிருந்து 25 பேராக அழிந்து பட்டுப் போகும் எம் பழங்குடிகளை காக்க வேண்டிய தன்னார்வத்தொண்டர் நான் என்றாள் அவள்.

வேட்டைச் சமுதாயம் விலங்குகளை வேட்டையாடி இரையாக்கிக் கொண்டும், பிற விலங்குகளுக்கு தாங்கள்இரையாகி மாண்டும் போகிற அவலத்தில் தான் இன்னும் இருக்கிறது .

இயற்கையை சிதைத்தெறிந்து தனது தேவைகளைப் பூா்த்தி செய்கிற புதுப்பாதையை நோக்கி மனிதகுலம் முண்டியடித்துப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிற இவ் வேளையில், அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் பழமைபேணும் நாம் நிலைகுலைந்து போய்த் தான் இருக்கின்றோம்.

ஆனாலும் அதற்காக நம் உயிரைக் கொடுத்தும் நாம் போராடுவோம்.

ஆலன்சாவ் திக்கித்து நின்றான்.

நான் 1492 ல் கொலம்பஸால் உருவான அமெரிக்கா என்கிற ஏமாற்றுத்தனத்தை நம்பி என் ஆதிப் பரம்பரையின்மூலத்தையும், அதன் பழமையையும் மறந்தேனே .

உலகம் முழுவதும் இன்னமும் வாழ்கிற சுமாா் 30 கோடிக்கும் மேற்பட்ட அப்பாவிப் பழங்குடி மக்களுக்காக, அவர்கள் உரிமைக்காக சென்டினலில் எஞ்சிக் கிடக்கிற உங்களிற்காக நான் இங்கேயே தங்கி விடப்போகின்றேன்.

உங்களைப் போற்றியே என் காலத்தைக் கழிப்பேன் என்றழுதான் .

அவன் கண்ணில் கபடமில்லை.

தமிழகத்திற்கு வந்த கிறிஸ்தவ ஜோசப் பெஸ்கி வீரமாமுனிவராகி தமிழ் சுவடி தேடும் சாமியாராகத் தமிழ்காத்தாரே அது போல் இவனும் இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்தாளோ என்னவோ..

வன தேவதை எதுவும் பேசவில்லை.

மெளனம் சம்மதமோ ??

சிலுவை மரமொன்றில் தன்னைப் போன்ற உருவப் பொம்மை ஒன்றைச் செய்தான் ஆலன்சாவ்.

தன் உடைகளை கழைந்து அதற்கு அணிவித்தான். தன் உடம்பெங்கும் கரியைப் பூசி கறுப்பாக்கிபழங்குடியாய் உருமாறினான்.

பழங்குடி உறவுகள் சூழ தாரை தப்பட்டை முழங்க தன் அடையாள மரத்தை எரித்தான்.

ஆலன்சாவும், அவன் கடவுளும் இறந்து போனார்கள் என்று கத்திக் குதூகலித்தான்.

அவன் மனம் நிறைந்திருந்தது.

மதம் மாற்ற வந்து தானே வீரமாமுனிவராய் மாறி நின்றான் அவன்.

கடலில் நின்ற அவன் நண்பர்கள், பழங்குடியினர் ஆலன்சோவ் எனும் தம் நண்பனைப் கொழுத்தி விட்டார்கள்.

அந்தக் கொடுமையைக் கண்ணால் கண்டோம் என்று கலங்கிக் துடித்தார்கள்!

ஊடகங்களில் செய்தியாக்கினார்கள் .

ஆம் ……

இனி ஆலன்சாவ் என்றும் இல்லை.!

(உண்மை தழுவிய கதை)

– நம்நாடு கனடா 1998, தாய்வீடு மீள் பதிவு 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *