ராதையின் கானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2023
பார்வையிட்டோர்: 2,240 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மார்கழி மாதத்தில் விடியற்காலம் என் மருமாள் ராதை பூஜை அறையில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தாள். எதிரே சுவரில் நடராஜரின உருவப் படம் ஒன்று மாட்டி இருந்தது, பக்கத்தில் குழல் ஊதும் மாயக்கண்ணனின் திரு உருவம். கீழே வெள்ளிக் குத்து விளக்கு நிழல்போல் எரிந்து கொண்டிருந்தது. சாமந்தியும், மருக்கொழுந்துமாகச் சேர்த்துத் தொடுத்த மாலையைப் படங்களுக்குப் போட்டிருந்தது. ஊதுவத்தியின் மணத்துடன், மலர்களின் மணமும் கலந்து ஒரு தெய்விக வாசனை அறை முழுவதும் சூழ்ந்திருந்தது.

ராதை ஒரு சிலைபோல் அமர்ந்து, ‘இனம் தெரியாமல் எவனோ, என்னகம் தொட்டுவிட்டான்’ என்ற ஒரே அடியைத் திருப்பித் திருப்பிப் பாடிக்கொண்டிருந்தாள். ராதைக்குப் பத்து வயது. கண்ணும், மூக்கும் சிலையில் வடித்ததுபோல இருக்கும். நித்தரை தெளிந்து எழுந்த நான் பூஜை அறை வாசற்படியண்டை போய் நின்றேன். என் தம்பி வாசுவும் தன் பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்து ரசித்துக்கொண்டிருந்தான். இடையிடையே பெருமூச்சுடன் அவன் மனம் வேதனைப்பட்டது ராதைக்குத் தெரியவில்லை. என்னைக் கண்டதும் வாசு, “ராதை! அத்தை வந்திருக்கிறாள். இந்தப் பாட்டையே முதலில் இருந்து பாடு” என்றான். ராதை ஒரு புன்சிரிப்புடன் என்னைப்பார்த்தாள்.

“அத்தை! அப்பாவுக்கு இந்தப் பாட்டைத் தவிர வேறு எதுவுமே பிடிக்கிறதில்லை. பைத்தியம்மாதிரி ‘தூண்டிற் புழுவினைப்போல்’ பாடு என்றுதான் சொல்லிக்கொண்டே இருக்கிறார்” என்று பரிகாசம் செய்துகொண்டே கலகல வென்று சிரித்துத் தம்பூரை மீட்டத் தொடங்கினாள். திரும்பவும் கேதாரகௌளத்தில் ஆரம்பித்த அந்தப் பாட்டு, தம்பூர் சுருதியுடன் கலந்து அறையில் சுழன்று என் செவிக்கு இன்பமூட்டியது. வாசுவின் சிந்தனை நிறைந்த முகமும், ராதையின் எடுப்பான சாரீரமும் சேர்ந்து பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்றை என் மனத்திரையில் காட்ட ஆரம்பித்தன.

எங்கிருந்தோ ஒரு இனிய நாதம், ‘பாலும் கசந்த தடி’ என்று பாடிக் கொண்டே அபிநய பாவத்தில் ஜல் ஜல் என்று சதங்கை சப்திக்க என்முன் ஆடுவது போல் ஒரு பெண் உருவம் தோன்றியது. பதினாறு வயதுப் பால குமாரி, யெளவனம் கொழிக்கும் நடன சிங்காரி, என் பால்ய சிநேகிதை ராதையின் உருவம்தான் அது. ராதை எனக்குச் சிநேகிதி. என் தம்பி வாசுவுக்குக் காதலி. தலைப்பித்துக்கொண்ட வாசுவின் மனத்தை அவள் கொள்ளைகொண்டது ஒரு கதையாக இன்று முடிந்து விட்டது.


எனக்கு விவாகமான புதிதில் தனிக் குடித்தனம் செய்ய என் கணவருடன் சென்னை வந்துசேர்ந்தேன். தாயில்லாப் பிள்ளையாகிய என் தம்பி வாசுவை அப்பாவிடம் தனியாக விட்டுவர மனமில்லாமல் என்னுடன் அழைத்து வந்தேன். அப்போது அவன் திருச்சி காலேஜில் படித்துக்கொண்டிருந்தான். ‘சென்னையில்தான் வந்து படிக்கட்டுமே, நமக்கும் துணையாக இருக்கும்’ என்று எண்ணி வாசுவை அழைத்து வந்தது என் பிசகு தான். எழும்பூரில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஓர் அழகிய பங்களா மட்டுந்தான் இருந்தது. அதற்கு அப்புறம் பஸ் செல்லும் சாலை ஒன்றும்,ரெயில்வே லயனுந்தான். திருச்சியில் சிநேகிதிகளுடன் கலகலப்பாகப் பழகிய எனக்கு முதலில் சென்னை வாசம் பிடிக்கவில்லை. என் கணவருக்கு வெளியே ‘காம்ப்’ போகும் வேலை. மாதத்தில் பத்துத் தினங்கள் வீட்டில் இருப்பது அபூர்வம். அந்த நாட்களில் மாலை ஐந்து மணிக்கே சமையல் வேலையெல்லாம் முடிந்து, வீட்டுக்கு முன்புறம், ‘காம்பவுண்டி’ ல் இரண்டு நாற்காலிகளில் நானும் வாசுவும் உட்கார்ந்து ஏதாவது பேசிக் கொண்டிருப்போம். இரவு ஏழரை வரையில் இப்படிப் பொழுதுபோக்குவது தினசரி வழக்கமாக இருந்தது.

அன்று வெள்ளிக்கிழமை. வாசுவும் காலேஜிலிருந்து சீக்கிரமாகவே வந்துவிட்டான். வழக்கம்போல் நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு வெளியே உட்கார்ந்தோம். சென்னைக்கு வந்த நாட்களிலிருந்து அடுத்த பங்களாவில் யார் வசிக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ளவே இல்லை. இது சென்னையில் சகஜமான விஷயம். அன்றும் உலக விவகாரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது பளபள வென்று மின்னும் கார் ஒன்று வந்து பக்கத்துப் பங்களா எதிரில் நின்றது. நாங்கள் இருவரும் பேச்சை நிறுத்திவிட்டுக் காரைக கவனித்தோம். காரிலிருந்து நாற்பது வயது ஸ்திரீ ஒருத்தியும். பதினாறு வயதுப் பெண் ஒருத்தியும் இறங்கினார்கள். அவர்கள் இறங்கினவுடன் கதவை மூடிக்கொண்டு பின்னால் ஒருவர் சென்றார்: ஆஜானுபாஹுவான தேகம் களைபொருந்திய முகம். அவர் முக ஜாடையும், அந்தப் பெண்ணின் முக ஜாடையும் ஒன்றாக இருந்தன. யாரோ பணக்காரக் குடும்பம் ஒன்று அந்தப் பங்களாவில் வசிக்கிறது என்று தெரியவந்தது. அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் தம்பூர் சுருதியின் ஓசை கேட்க ஆரம்பித்தது. அத்துடன் ஜல் ஜல் என்று சதங்கை ஒலியும் சேர்ந்து வந்தது. வாசுவின் முகம் ஆவலால் நிறைந்தது. “சாதாரணப் பணக்காரக் குடும்பம் இல்லை அக்கா. அவர்கள் தேவதாஸிகள். அந்தப் பெண்ணுக்கு நாட்டியம் பழக்கித் தருகிறார்கள்போல் இருக்கிறது” என்றான் வாசு.

“இருக்கும்; இருந்தாலும் குடும்பஸ்தர்கள் மாதிரித் தான் இருக்கிறார்கள்” என்றேன் நான்.

அதற்குமேல் அன்று நாங்கள் அவர்களைப்பற்றிப் பேசமுடியவில்லை. ஏனெனில் இழைந்த குரல் ஒன்று ‘தூண்டிற் புழுவினைப்போல்’ என்று பாட, அதற்கு ஏற்றமாதிரியாகச் சதங்கைச் சப்தம் ஜல் ஜல் என்று சப்திக்க ஆரம்பித்தது. வாசு மெய்ம்மறந்த நிலையில் உட்கார்ந்திருந்தான். பாட்டு, நாட்டியம் எல்லாம் முடிந்ததும் பங்களாவிலிருந்து கலகல வென்று மணிக் குரலில் யாரோ சிரித்தார்கள்.

“இவ்வளவு மல்லிகைப் பூவையும் என் தலையில் வைத்தால் நான் ஆடச்சே உதிர்ந்து வீணாப்போயிடும் அம்மா” என்று அந்தப் பெண்தான் கூறியிருக்க வேண்டும்.

“எதுக்கும் நீ இப்படித்தான். என்ன வேணுமோ செய்துகொள்” என்று தாயார் கடிந்துகொள்வதும் கேட்டது.

“கொஞ்சம் பூ தனியாக வைத்துவை அம்மா. பக்கத்து வீட்டு அம்மாவுக்குக் கொஞ்சம் கொடுத்துடலாம்” என்றாள் அந்தப் பெண்.

“கொடுக்கட்டுமே ரஞ்சிதம். குழந்தை மனசை நாட்டியம் ஆடற சமயத்தில் கெடுக்காதே” என்றது ஒரு புருஷக்குரல்.

என்னைவிட வாசுவின் கண்களில் ஆவல் நிறைந்திருந்தது. அந்தப் பெண் வருவாள் என்று சிறிது நேரம் வெளியே காத்திருந்தோம். நன்றாக இருட்டிவிடவே உள்ளே போகும்படி ஆயிற்று.

பிறகு நாட்டியத்தை முடித்துவிட்டார்கள்போல் இருக்கிறது. தம்பூரின் சுருதி ஓய்ந்துவிட்டது, இரவு மணி எட்டரை ஆகிவிடவே, வாசுவைச் சாப்பிடக் கூப்பிட்டேன் சமையல் அறையில் நாங்கள் இருந்தபோது கதவை யாரோ லேசாகத் தட்டினார்கள். தட்டுவதுகூட அபிநயபாவத்தில் இருந்தது.

“சீக்கிரம் போய்ப் பார் அக்கா. இருட்டில் அந்தப் பெண் நிற்கப் போகிறது” என்றான் வாசு.

கதவைத் திறந்ததும் கையில் கட்டு மல்லிகைப் பூவுடன் அந்தப் பெண் நின்றுகொண்டிருந்தாள்.

“உள்ளே வா அம்மா” என்று அழைத்தேன்.அவள் கூடத்தில் விளக்கடியில் நின்று, “அம்மா கொடுக்கச் சொன்னாங்க” என்று புஷ்பத்தை நீட்டினாள்.

“வீட்டில் நான் ஒருத்திதானே பெண்பிள்ளை. இவ்வளவு பூ எதற்கு அம்மா?” என்றேன்.

“இப்போது கொஞ்சம், காலையில் கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்களேன்.”

“உட்காரேன், போக வேண்டுமா?” என்று கேட்டேன்.

“கொஞ்ச நேரம் காணாவிடில் அம்மா தேடுவாங்க” என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்தாள்.

பெண்களுக்கு இயற்கையான விசாரணை எல்லாம் முடிந்தது; அவள் பெயர் ராதை. தேவதாஸிகள் தாம் ஆனால் அம்மா,அப்பா இருவரும் அவளுக்கு நாட்டியக் கலையை. ஊக்கத்துடன் சொல்லிக்கொடுக்கிறார்கள். அவளுக்கும் அதைப் பயிலுவதில் ஆசைதான். இன்னும் இரண்டொரு வருஷத்தில் நல்ல பிள்ளை ஒருவனுக்கு அவளை விவாகம் செய்து கொடுக்கப் போகிறார்கள். இப்படிச் சொல்லிவிட்டு, ஆனால் கல்யாணம் பண்ணிக் கொண்டால் நாட்டியம் ஆட முடியுமா அம்மா? நான் கல்யாணமே பண்ணிக்கொள்ளப் போகிறதில்லை” என்றாள் ராதை.

சாப்பிட்டு முடிந்து வெளியே வந்த வாசு இதைக் கேட்டுவிட்டுச் சிரித்தான். ராதைக்கு வெட்கமாகப் போய் விட்டது. கள்ளங் கபடு இல்லாமல் இவ்வளவு நேரம் பேசியதை வாசு கேட்டுவிட்டான் என்பதை உணர்ந்தபோது அவள் முகம் ரோஜாமலரைப்போல் வெட்கிச் சிவந்தது.

அன்றைத் தினத்திலிருந்து ராதையும், நானும் சிநேகிதிகள் ஆகிவிட்டோம். அவள் தாயார் ரஞ்சிதத்திற்கும் ராதை எங்கள் வீட்டுக்கு வருவது பிடித்திருந்தது. மத்தியான்ன வேளைகளில் வீட்டில் யாரும் இல்லாமல் இருக்கும் போது ராதை அந்தத் தனிமையை நிவர்த்தி செய்தாள். சிறிது நேரம் சோழி ஆடுவோம், கட்டம் ஆடுவோம். அவள் நாட்டியம் ஆட ஆரம்பித்துவிட்டால மட்டும் மணி போவதே தெரியாது. அந்தரத்தில் சுழலும் ஒரு பொம்மை மாதிரி, சுழன்று சுழன்று அவள் மோகன உருவம் எங்கள் கூடத்தில் ஆடும்போது என் மனமே அவளைக் கண்டு ஆசை கொண்டது. ராதையும், நானும் சிநேகிதிகள் என்று தெரிந்தவுடன் வாசு மத்தியான்ன வேளைகளில் காலேஜை விட்டு வீட்டுக்கு வர ஆரம்பித்தான். அவள் ஆடும்போது வந்துவிட்டால் ராதை வெட்கப்பட்டு ஆட்டத்தை நிறுத்திவிடுவாள்.

“இப்படி வெட்கப்பட்டால் பிரபலமாக நீ எப்படி முன்னுக்கு வரமுடியும் ராதை?” என்பேன் நான்.

“உன் நாட்டியத்தைப் பார்க்க நூற்றுக் கணக்கில் புருஷர்கள் வருவார்களே; வெட்கப்பட்டால் முடியுமா?” என்று கேட்பான் வாசு.

கொஞ்ச நாட்களில் இருவரும் மனம் விட்டுப் பழகினார்கள். இப்பொழுதெல்லாம் ராதை, வாசுவைக் கண்டு வெட்கப்படுவதில்லை. ஆனால் வாசு படிப்பில் கவனம் செலுத்துவதையே விட்டுவிட்டான். அவனுடை அலஷ்யம் என் மனத்தை வருத்தியது. ‘ஊரில் இருக்கும் அப்பாவுக்கு என்ன பதில் சொல்வது’ என்று எனக்குப் பெரிய வேதனையாக இருந்தது.

“வாசு, நாட்டியம், சங்கீதம் என்று பிராணனை விடுகிறாயே; படிக்கவேண்டாமா?” என்று ஒரு தடவை அவனைக் கேட்டேன்.

“போ அக்கா. என்ன படிப்பு இது? மனத்துக்கு உத்ஸாகம் அளிக்காத வித்தை ஒரு வித்தையா என்ன?”

“படிக்காமல் என்ன பண்ணப்போகிறாயாம்?”

“பாட்டுச் சொல்லிக்கொள்ளலாம் என்று பார்க்கிறேன்.”

“ரொம்ப நன்றாக இருக்கிறது !” என்றேன் நான்.

அவன் மாறுதலுக்கு ராதைதான் காரணம் என்றாலும் அவளை வெறுக்க என் மனம் துணியவில்லை. ‘கள்ளம் பெடற்ற பெண் அவள் ‘அவள் நாட்டியம் ஆடினால் வாசுவைச் சங்கீதம் கற்றுக்கொள்ளச் சொன்னாளா என்ன? பைத்தியக்காரன்!’ என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் ராதை அவன் மனத்தில் அழியாத ஸ்தானம் ஒன்றை அடைந்துவிட்டாள் என்பது எனக்குத் தெரியவில்லை. சிறு வயதாயிற்றே. மனம் அப்படித்தான் சலன மடையும் என்று எண்ணினேன். ராதையின் தாயார் ரஞ்சிதம் தெய்வபக்தி உடையவள். வீண் ஆடம்பரத்தை
வெறுப்பவள். பூஜை செய்யப் போய்விட்டாளானால் மணிக்கணக்காக உள்ளம் உருகி அங்கேயே உட்கார்ந்து விடுவாள். ராதையும் நானும் சந்தித்த பல மாதங்களுக்குப் பிறகு ஒரு வெள்ளிக்கிழமையன்று மஞ்சள் குங்குமத்துக்காக என்று என்னை ராதை அவர்கள் வீட்டுக்கு அழைத்தாள். போயிருந்தேன். கூடத்தில் விளக்கேற்றி அலங்காரமாக இருந்தது அவர்கள் அவர்கள் வீடு. ரஞ்சிதம் ஸ்நானம் செய்து ஈரம் உலராத கூந்தலுடன் கூடத்தில் அம்பிகையின் படத்துக்குப் பூஜை செய்துகொண்டிருந்தாள்.

பூஜை யெல்லாம் முடிந்ததும் ராதையைக் கூப்பிட்டுப் படத்துக்கு நமஸ்காரம் செய்துவிட்டுப் படத்தண்டை வைத்திருந்த இரண்டு பொட்டலங்களில் ஒன்றை எடுக்கச் சொன்னாள். எனக்கு இதெல்லாம் புதிராக இருந்தது. ராதை, பொட்டலத்தைத் தாயாரிடம் கொடுத்து விட்டு நின்றாள். ரஞ்சிதம் அதைப் பிரித்தபோது உள்ளே நசுங்கிக் கிடந்த மல்லிகை மலர் ஒன்று காணப்பட்டது. பொட்டலத்தை உற்றுப் பார்த்தபடியே ரஞ்சிதம் பேசாமல் நின்றாள்.

“இது வம்சத்துக்கே ஏற்பட்ட சாபம்போல் இருக்கிறது அம்மா ” என்றாள் ரஞ்சிதம்.

நான் விஷயந் தெரியாமல் விழித்தேன்.

“ராதையை என்னுடைய ஒன்றுவிட்ட தமையன் பிள்ளைக்குக் கொடுக்கலாம் என்று தீர்மானித்தோம். நல்ல அந்தஸ்தில் இருக்கிறான். கல்யாணம் செய்துகொண்டு கௌரவமாகக் காலந் தள்ளட்டும் என்பதுதான் என் அபிப்பிராயம், அதற்கு அம்பிகை உத்தரவு கொடுக்கவில்லையே அம்மா. என்னைப்போல அவளும் மேடை மேடையாக ஆடித்தான் பிழைக்கவேண்டும்போல் இருக்கிறது. நல்ல அந்தஸ்தில் இருந்த என் அத்தானைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் ஆடிப்பிழைப்பது நானாகச் செய்து கொண்ட வழி அம்மா. முதலில் சங்கீத தேவதைக்கே என்னை அர்ப்பணம் செய்துவிடுவது என்று இருந்தேன்.என் வாழ்க்கையில் இருவர் குறுக்கிட் டனர். சங்கீதத்தில் நிபுணரான ராதையின் தகப்பனார் ஏழையாக இருந்தாலும் என் மனத்தில் முக்கிய ஸ்தானம் வடித்தார். இதே அம்பிகையின் படத்துக்குமுன் நானாகவே என் முடிவை அறிந்து கொள்ள இந்த முறையை அனுஷ்டித்தேன். இதே மல்லிகை மலர் என் வாழ்வின் போக்கை யாற்றியது. இன்று ராதையையும் அம்பிகை தடுக்கிறாள் ” என்று கண்ணீருடன் கூறி முடித்தாள். ஒரு கணம் வாசுவின் உருவம் தோன்றி மறைந்தது. இந்த அபலையின் வாழ்க்கையில் வாசு குறுக்கிட்டு விடுவானோ என்று ஒரு ஐயம் எழுந்தது என் மனத்துள்.

“அம்மாவுக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்கிறது” என்று ராதை புன்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே, “நாட்டியம் ஆடுகிறேன் அம்மா. அந்த அம்மாவும் ஆசைப்படுகிறார்கள்” என்று, ‘தூண்டிற் புழுவினைப் போல்’ என்ற மனத்தை உருக்கும் அதே பாட்டை எடுத் துக்கொண்டாள் அபிநயம் பிடிக்க. ‘இந்தத் தெய்விகக் கலையையா பயின்றவள் மனிதனுக்கு ஏன் அடிமையாக வேண்டும்? உலக இன்பங்களில் ஏன் உழலவேண்டும்? தெய்வமே இவளை ஆட்கொள்ளட்டுமே’ என்றுதான் நான் நினைத்தேன்.

இப்படி ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி இருந்த எங்களை வாசுவின் குரல் திடுக்கிடச் செய்தது. என்னை அழைக்க வந்த சாக்கில் வாசு அங்கே உட்கார்ந்து பாட ஆரம்பித்துவிட்டான்.

“இது யார் அம்மா?” என்று ரஞ்சிதம் கேட்டாள். “என் தம்பி; சங்கீதத்தில் அபாரப் பிரேமை” என்றேன் நான். அவள் முகத்தில் கவலைக் குறி தோன்றியது. அன்றைய இரவைப் பல வருஷங்கள் கழித்து இன்று நினைத்தாலும் தேகம் புல்லரிக்கிறது. ராதை அவ்வளவு அற்புதமாக ஆடினாள்.

ரஞ்சிதத்தினிடம் விடைபெற்றுத் தெருவை அடைந்தபோது ரஞ்சிதம் தெருவரைக்கும் வந்து, “அம்மா, உங்களை நான் கும்பிடும் அம்பிகையாக நினைத்துச் சொல்கிறேன். உங்கள் தம்பிக்குக் கல்யாணம் செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் நான் ராதையுடன் எங்காவது போய்விடவேண்டும்” என்று உருக்கமாக வேண்டினாள்.

அன்னையின் மனத்தாங்கலின் முன்பு வாசுவின் பிரேமை ஒன்றும் பிரமாதமில்லை. ‘அதுவும் ஒரு தாசிப் பெண்ணுடனா?’ என்றுதான் என் மனம் நினைத்தது. அன்று இரவே அப்பாவுக்கு நிலைமையை விவரித்து ஒரு கடிதம் எழுதினேன்.

ஒரு வாரத்துக்கெல்லாம் அப்பாவிடமிருந்து பதில் வந்தது.வாசுவுக்குக் கல்யாணம் செய்ய நிச்சயித்திருப்பதாகவும் அவனை உடனே வரும்படியும் எழுதியிருந்தார். வாசுவுக்குத் தகப்பனார்மேல் கோபம். ஆனால் ராதையை அடைய முடியும் என்கிற நம்பிக்கையும் அவனுக்கு ஏற்படக்காரணமில்லை.


அவன் மனத்தில் அடித்த புயல் நாளடைவில் ஓய்ந்திருக்கு மென்று நினைத்தேன். ஆனால், ராதையின் தெய்விக கானமான, ‘தூண்டிற் புழுவினைப்போல்’ அவன் மனத்தை வேதனையில் ஆழ்த்த, அதைத் தன் மகளுக்குச் சொல்லிக் கொடுத்து அதிலிருந்தாவது மனச்சாந்தியை நாடுகிறான் என்பதை அன்றுதான் தெரிந்துகொண்டேன்.

“ராதை எங்கிருக்கிறாள் என்பது உனக்குத் தெரியுமா அக்கா?” என்று கேட்டான் என்னை.

“தெற்கே இருக்கிறாளாம்.யாரையுமே கல்யாணம் செய்துகொள்ளவில்லையாம். நாட்டியத்தில் ஆயிரக் கணக்கில் சம்பாதித்துத் தர்மம் செய்து வருகிறாளாம். ஜனங்கள் அவளைப்பற்றிப் பிரமாதமாகச் சொல்லுகிறார்கள் ” என்றேன்.

என் மருமாள் ராதை மறுபடியும் கணீரென்று பூபாளத்தில் கீர்த்தனம் ஒன்றைப் பாடத் தொடங்கினாள். பலபலவென்று சூரிய உதயத்தில் அந்தக் கானம் எழுப்பிய இன்பத்தைப் பல வருஷங்களுக்குமுன் ராதை பாடக் கேட்ட போது அநுபவித்த நினைவு வந்தது.

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *