காதலுக்கு மூடுவிழா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 28, 2019
பார்வையிட்டோர்: 17,518 
 

(இதற்கு முந்தையை ‘காதல் யதார்த்தம்’ கதையைப் படித்த பின், இதைப் படித்தால் புரிதல் எளிது)

திடீரென சடசடவென்று மழை பெரிதாக பெய்ய ஆரம்பித்தது. மழையில் நனைந்தபடி மூவரும் அங்கேயே அமர்ந்திருந்தனர்.

சிவா “நாம எல்லோருமே இப்ப குற்றால பசு மாடுகள்…” என்றான். தொப்பலாக நனைந்தபிறகு மூவரும் மெதுவாக எழுந்தனர். மேன்ஷனை நோக்கி மெல்ல நடந்தனர்.

அப்போது கவிதா திருவல்லிக்கேணி குளத்தைத் தாண்டி தேரடித் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தாள். சிவா, சுந்தர், குமரேசன் மூவரும் சற்றும் எதிர்பாராமல் அவளை தூரத்திலேயே பார்க்க நேர்ந்தது.

கவிதாவை பார்த்துவிட்ட குமரேசனுக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது. காலையில் ஒளிர்ந்த வானவில்லின் ஒளி தற்போது தேரடித் தெருவில்…

“யார்டாது… நம்ம கீர்த்தி சுரேஷ் மாதிரி இவ்வளவு அழகா..டாப்பா ஒருத்தி..?” சிவா பலமாக கமென்ட் அடித்தான். குமரேசன் சிவாவின் விரல்களை ரகசியமாக அழுத்தி, மிக மெல்லிய குரலில், “டேய் இதாண்டா கவிதா, கப்சிப்னு வா…”

அதற்குள் கவிதாவும் நெருங்கி வந்துவிட நேருக்கு நேராக அவளும் குமரேசனும் வந்துவிட்டர்கள். முற்றிலும் நனைந்த தோற்றத்தில் இருந்த குமரேசன் மிகவும் வெட்கத்துடன் “குட் ஈவ்னிங் மேடம்” என்றான். கவிதா சர்வ சுதந்திரமாக இயல்பாக குமரேசனைக் கண்டு ஆச்சரியம் கொண்டாள்.

“வாட் இஸ் திஸ்? இப்படி நனைஞ்சு போய் வர்றீங்க குமரேசன்?”

சிவாவும் சுந்தரும் தாங்கள் அத்தனை ஈரமான உடைகளுடன் குமரேசனுக்கு நெருக்கமாக நிற்பது அநாகரீகமாகக் கருதி, சற்றுத்தள்ளிப் போய் நின்று கொண்டார்கள்.

குமரேசன் பய பக்தியுடன், “நீங்க எப்படி இந்தப் பக்கம்…?” என்றான்.

“என் உறவினர் வீடு இங்கு இருக்கிறது… நீங்க தங்கி இருக்கிற லாட்ஜிங் ஹவுஸ் இந்தத் தெருதானே?”

“யெஸ் மேடம், அதோ அந்த பில்டிங்.. ரூம் நம்பர் பதினைந்து. வெளியே பெரிதாக மார்க்கபந்து மேன்ஷன் என்று போட்டிருக்கும்.” கையை நீட்டிக் காண்பித்தான்.

“ஒருநாள் மேன்ஷனுக்கு வாங்க மேடம்.”

“கண்டிப்பா வரேன். ஏன் இப்படி நனைஞ்சு போய் வர்றீங்க?”

“பீச்சுக்கு போயிருந்தேன் மேடம்… மழை வந்திருச்சி.”

“நாட் பேட்! கேர்ள் ப்ரெண்டோடதானே நனைஞ்சிருப்பீங்க? நல்ல எக்ஸ்பீரியன்ஸ்தான்… ஓகே, நான் வரட்டுமா?”

“சரிங்க மேடம் குட் நைட்…”

கவிதா நகர்ந்து மெதுவாக நடந்தாள். குமரேசன், தெரு என்பதையே சுத்தமாக மறந்து அவள் நடந்து போகிற அழகை ரசித்து, அப்படியே வியந்தபடி நின்றான்.

“உஸ்… பாத்தது போதும், மிச்சத்தை நாளைக்கு பாக்கலாம். வா போகலாம்.” சிவா வந்து அவன் கையைப்பிடித்து இழுத்தான்.

அறையைத் திறந்து உள்ளே நுழைந்ததுதான் தாமதம், மூவரும் சிலிர்த்துக் கெக்கலித்தார்கள். சிவா, குமரேசனைத் தூக்கி குதூகலத்துடன் தட்டாமாலை சுற்றினான்.

சுந்தர் பதறியபடி, “டேய் டேய்… கீழே போட்டுடாதேடா அவனை… பூசணிக்காய் உடையற மாதிரி உடைஞ்சிடப் போறான்..” என்றான். சிவா, குமரேசனைக் கட்டிப்பிடித்து முத்தமே தந்துவிட்டான்…!

“நான் கனவுலகூட நெனைக்கலடா குமரேசா, உண்மையாவே அவ சூப்பர்ஸ்டார்தான்… எவளும் நிக்கக்கூட முடியாது அவ பக்கத்ல.. நெஜமாவே அவ உடம்புல ஒரு க்ளோ இருக்கு பாத்தியா.. வெரி பியூட்டிஃபுல் கேர்ள். வெரி ப்ரெட்டி. மடையா, என்னமோ அவளுக்கு உன்னைவிட வயசு அதிகமா இருக்கும்னு சொன்னியே…?”

“அப்ப, அதிகமா இருக்காதுன்னு சொல்றியா?”

“பெட் கட்றேன்.. இருக்கவே இருக்காது. அந்த சொபிஸ்டிகேஷன், அந்த ஹைட், அந்த டச்-அப் அப்படிக் கொஞ்சம் ஒண்ணு ரெண்டு வயசை லேசாக் கூட்டிக் காட்டுது. அவ்வளவுதான். கண்டிப்பா இருபத்தி நாலுக்கு மேல அவ வயசு இருக்காது…”

“ஆனா குமரேசா ஒண்ணு மட்டும் இப்ப உறுதியாயிடுச்சு… கேர்ள் ப்ரெண்டுன்னு துருவறா பாத்தியா அதை இனிமே கேர்லெஸ்ஸா விட்டுட முடியாது. என்னவோ மனசில வச்சிட்டு சாகஸம் பண்றா..”

“க்ளீயரா கேட்ச் பண்ணிட்டேடா சுந்தர்..” சிவா சொன்னான்.

குமரேசனுக்கு ஏனோ உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொண்டது. கவிதா தனக்குக் கிடைத்து விடப்போவதைப் போலவே பிரமை வந்தது. மனத்தில் தனக்காகவே அவள் பிறந்து வளர்ந்திருப்பதாக பிரமிப்பு ஏற்பட்டது.

“என்னடா திடீன்னு சைலன்ட் ஆயிட்டே..?”

“ஒண்ணும்ல…நெஜமாவே கவிதா எனக்குக் கிடைக்கப் போறாளான்னு நெனச்சிப் பாத்தேன்..”

“அதெல்லாம் ஷ்யூரா சொல்ல முடியாதுடா குமரேசா, அவளுக்கும் ஒனக்கும் பேஸிக்கா ரெண்டு மூணு பெரிய வித்தியாசம் தெரியுது.”

“அதுல ஒண்ணே ஒண்ணு சொல்லேன்.”

“சொல்றேன், ஆனா நீ ஹர்ட் ஆயிடக்கூடாது.”

“கண்டிப்பா ஆக மாட்டேன் சிவா.”

“அவ ரொம்ப ரிபைன்ட் கேர்ள். ஆனா நீ கொஞ்சம் ரா..! ஆனா உன்னோட இந்த ரா க்வாலிட்டியே அவளுக்கு அப்பீல் ஆகியிருக்கோ என்னவோ? அதை இன்னும் கொஞ்ச நாள் அவளை ஸ்டடி பண்ணிட்டுத்தான் சொல்ல முடியும்.. இப்ப முடியாது.”

“அப்படியா…?”

“பொம்பளைங்க விஷயமே அவதிதான் குமரேசா.. அதான் நான் சீரியஸா எதிலேயும் மாட்டிக்கிறது இல்லை. ஒருவாரம் அல்லது பத்துநாள் நல்லா யோசனை பண்ணிக்க. அதக்குள்ள அவளுக்குள்ளேயும் வளர்ச்சி எப்படி இருக்குன்னு பாத்துப்போம். நீயும் ஆபீஸ்ல அவளிடம் நெருங்கிப் பழகு. அவள்மீது அக்கறை எடுத்துக்கொள். பாக்கலாம் எப்படி டிவலப் ஆகுதுன்னு…”.

குமரேசன் ஈர உடைகளைக் களைந்து எறிந்துவிட்டு, லுங்கியை மட்டும் கட்டிக்கொண்டு ஜன்னல் வழியாகத் தெருவையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘சற்றைக்கு முன் என் தேவதை நடந்துபோன தெரு’ என்று எண்ணி உணர்ச்சி வசப்பட்டான். எந்தக் குறிப்பிட்ட பெண் மீதும் இதுவரை அவனுக்குத் தோன்றியிராத இளம் பாலுணர்வு குமரேசனின் புதிய உணர்ச்சிகளில் கண் இமைத்தது.

கடல் அலை ஓரம் போய் கவிதாவின் மடியில் தலை வைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அவளின் செவியோரங்களின் அருகில் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஒரு தளிரை அள்ளிக் கொள்வதுபோல கவிதாவை இறுகத் தழுவிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஒரு பனி தேங்கிய ரோஜாவை முத்தமிடுவது போல அவளை ஒரே ஒருமுறை முத்தமிட வேண்டும் போலிருந்தது.

“ஏய் கூப்பிடறது காதில் விழலையா? சாப்பிடப் போறோம்டா.. வர்றீயா இல்லையா?”

“ஓகே எங்கு போகலாம்?” குமரேசன் ஷர்ட்டை அணிந்தவாறே கேட்டான்.

“வேற எங்க? முனியாண்டி விலாஸ்தான்.”

“அய்யோடா…நான் வரலேப்பா. நான்தான் அன்னிக்கே சொல்லிட்டேனே, இனிமே மட்டன் கிடையாதுன்னு…”

“கவிதா மட்டன் சாப்பிடற பெண்ணா இருந்தா.?”

“அப்ப மட்டன் சாப்பிடுவேன்.”

“டேய் டேய் சுந்தர்.. பார்றா அவன் மூஞ்சியை! எப்படி வழியறான் பார்! கவிதா மட்டன் சாப்பிட்டா இவனும் சாப்பிடுவானாம். சரி, எப்படியும் ஒழி. நீ போய் மாமி மெஸ்ஸில் வத்தக்குழம்பும் தயிரும் சாப்பிடு. நாங்க போய் பரோட்டாவும், பாயாவும் ஒரு வெட்டு வெட்றோம்…”

மூவரும் கதவை பூட்டிக்கொண்டு கிளம்பினர்.

அடுத்த சில நாட்களில் கவிதாவும், குமரேசனும் காதலுக்கு முந்தைய நட்பில் இறுகி விட்டனர்.

அன்று சனிக்கிழமை. ஆபீஸ் அரை நாள். வீக் எண்ட் என்பதால் கவிதா ப்ளூ ஜீன்ஸ், கறுப்பு டாப்ஸ் அணிந்து அமர்க்களமாக வந்திருந்தாள். அவளின் சிவந்த மேனிக்கு கறுப்பு டாப்ஸ் மிகவும் எடுப்பாக இருந்தது. குமரேசனிடம் அன்று மிகவும் அக்கறை காட்டினாள்.

அவனை மதிய உணவிற்கு லீ மெரிடியன் அழைத்துச் சென்றாள். “பீர் சாப்பிடறீங்களா…?” என்று கேட்டாள்.

“நோ நோ மேடம்.. எனக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. ரொம்ப டிஸிப்ளினா வளர்ந்துட்டேன்…”

“அது ரொம்ப நல்ல விஷயம் குமரேசன். என்னை இனிமேல் மேடம்னு கூப்பிடாதீங்க குமரேசன். பேர் சொல்லியே கூப்பிடுங்க…”

சாப்பிட்டதும் அவள்தான் பில் செட்டில் செய்தாள். குமரேசன் கனவுலகில் மிதந்தான். சிவாவிடம் எல்லாத்தையும் சொல்லி விரைவாக அடுத்த ஸ்டெப் மூவ் பண்ண வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். மெரிடியனை விட்டு வெளியே வந்ததும் அவளுடன் ஊபரில் வந்து மேன்ஷன் முன்னே இறங்கிக் கொண்டான்.

அறைக்கு வந்ததும் மொபைலில் சிவாவைத் தொடர்புகொண்டு, “டேய் சிவா, சீக்கிரம் ரூமுக்கு வாடா.. கவிதா பத்தி நிறைய சொல்லணும். . நான் சரக்கு வாங்கி வைக்கிறேன்… இன்னிக்கி ரூம்லேயே நீராகாரம் குடிச்சிட்டு சமத்தா ரூம்லேயே சிக்கன் ஆர்டர் பண்ணி சாப்பிடலாம். சுந்தர்கிட்ட சொல்லி அவனையும் அழைச்சிகிட்டு சீக்கிரம் வந்து சேரு…”

வெளியே சென்று அப்சொல்யூட் வோட்கா இரண்டு பெரிய பாட்டில்களும், ஸ்ப்ரைட் எட்டு பாட்டில்களும், சிப்ஸும் வாங்கினான்.

மாலை ஏழு மணி. அறையில் நண்பர்கள் ஒன்றுகூடி வோட்காவை ஆர்வத்துடன் திறந்தனர். மூன்று கண்ணாடி க்ளாஸ்கள் வோட்கா – ஸ்ப்ரைட் கலந்து ‘சீயர்ஸ்’ சொல்லி சங்கமித்துக் கொண்டன.

அவ்வளவுதான், சற்று நேரத்தில் கவிதாவைப் பற்றி பேச்சு ஆரம்பமானது. குமரேசன் அன்று நடந்ததை வரிசையாகச் சொன்னான். சுந்தரும், குமரேசனும் இரண்டாவது பெக்கில் இருக்கும்போதே, சிவா நான்காவது பெக் போய்விட்டான்.

சிவா உளற ஆரம்பித்தான். “மச்சி அந்தக் காலத்திலிருந்தே பெண்களை நான்கு வகைகளா பிரிச்சு வச்சிருக்காங்க… அது என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று சுவையான டாப்பிக்கை ஆரம்பித்தான்.

“எங்களுக்கு அழகான பெண்கள்; அழகில்லாத பெண்கள் மட்டும்தான் தெரியும்… நீயே சொல்லு.”

“ஜொள்றேன், ஜொள்றேன்… அவர்களை பத்மினி; சங்கினி; ஹஸ்தினி, சித்ரிணி என்பார்கள்.

பத்மினி வகைப் பெண்கள் சொக்கவைக்கும் அழகு; இனியசொல்; புனிதம்; புன்சிரிப்பு; எப்போதும் மலர்ந்த முகம் கொண்ட மேன்மையானவர்கள்.

சங்கினி பெண்கள் அழகானவர்கள்; புத்திசாலிகள்; சுறு சுறுப்பானவர்கள்; சுதந்திர சிந்தனை படைத்தவர்கள். ஹஸ்தினி பெண்கள் கேளிக்கையை விரும்புபவர்கள்; ஆண்களை கோபமூட்டி காதலிப்பவர்கள்; ஊடல் குணம் அதிகம். சித்ரிணி பெண்கள் அலங்காரத்திலும்; கலைகளிலும் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். இவர்களை சிங்காரி, அலங்காரி என்றும் அழைப்பர். இது வட இந்திய கணிப்புகள்…”

குமரேசன், சாப்பிட சிக்கன் வகைகள் நிறைய ஆர்டர் செய்தான்.

“ஆனால் தமிழர்கள் பெண்களை வயது அடிப்படையில் பேதை; பெதும்பை; மங்கை; மடந்தை; அரிவை; தெரிவை; பேரிளம் என ஏழு வகைகளாகக் கணித்துள்ளனர்.

சுந்தர், “எப்டி மச்சி உனக்கு இவ்வளவு தெரியும்?” என்றான்.

சிவா முழு மப்பில் இருந்தான். சடக்கென்று க்ளாஸை ஒரே மடக்கில் காலிசெய்து விட்டு, “மயிரு… இன்னும் சொஞ்சம் ஊத்து ஷோல்றேன்…” என்றான்.

மூவரும் இரண்டு பாட்டில்களையும் காலி செய்துவிட்டு மப்பில் திளைத்தனர். சிவா வோட்கா பாட்டிலின் மூடியைத் திறந்து அதனுள் ஒரு நெருப்புக் குச்சியை கிழித்துப் போட, அது குப்பென நீல நிறத்தில் ஒரு செகண்ட் ஒளிர்ந்தது. மூவரும் கைகொட்டி சிரித்தனர்.

இருக்கிற சிகரெட் அனைத்தும் காலியானதும், ஆஷ்ட்ரேயில் தூக்கி எறிந்த சிகரெட் துண்டுகளுக்கு மறுபடியும் உயிரூட்டி புகைத்தனர். என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேசிப்பேசி இரவு இரண்டு மணிக்கு மேல் தரையில் உருண்டு தூங்கிப் போயினர்.

மறுநாள் காலை ஏழரை மணி. சென்னை வெயில் சுள்ளென அடித்துக் கொண்டிருந்தது. மூவரும் மட்டையாகிக் கிடந்தார்கள்.

அப்போது கதவு படபடவென தட்டப்படும் சத்தம் கேட்டது.

குமரேசன் மிகுந்த சிரமப்பட்டு தரையிலிருந்து எழந்து சென்று, எரிச்சலான கண்களுடன் கதவைத் திறக்க – அங்கு கவிதா புன்னகைத்தபடி நின்றாள். “பீச்சுக்கு மார்னிங் வாக் வந்தேன்…அப்படியே உங்களுக்கு குட்மார்னிங் சொல்லிட்டு போகலாம்னு….” உள்ளே வந்தாள்.

அறையில் தூக்கியடித்த மதுவாசனையும்; ஜிவுஜிவு என சிவந்திருந்த குமரேசனின் கண்களையும் பார்த்து அதிர்ந்தாள். அலங்கோலமாகப் படுத்திருந்த சிவாவும், சுந்தரும் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றனர்

பல்லு கூடத் தேய்க்காமல், கலைந்த தலை மயிருடன்; அழுக்கு லுங்கி பனியனில் தான் இருப்பதை உணர்ந்த குமரேசன் கூச்சத்துடன் “இந்த மாதிரி சூழ்நிலைல நான் நம்முடைய சந்திப்பை கொஞ்சமும் எதிர்பாக்கலை மேடம்… “ என்றான்.

“எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது குமரேசன். நீங்க நல்லா குடிச்சிருக்கீங்க… நான் நம்மைப்பற்றி சில நல்ல முடிவுகளை எடுக்கலாம் என்று இருந்தேன். நல்ல வேளையாக நான் தப்பித்தேன்…” படபடத்தாள்.

“மேடம் ப்ளீஸ்… அவசரப் படாதீங்க. நான் சத்தியமா குடிகாரன் இல்ல. வீக் எண்ட்ல இந்த மாதிரி எப்பவாச்சும் நண்பர்களுடன் மட்டும்தான். நீங்க சொன்னா அதையும் விட்டுடுவேன்..” என்று கெஞ்சினான்.

“சாரி குமரேசன், நான் தவறுகள் செய்யாது நேர் கோட்டில் அமைதியா வாழ்ந்துவரும் ஒரு பெண். ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளதான் எனக்கு விருப்பம். உங்களை மாதிரி பெரும்பாலான இளைஞர்கள் விளையாட்டா நண்பர்களுடன் குடிக்க ஆரம்பிச்சு அப்புறம் மனைவி கிட்ட பல கெட்ட பழக்கங்களை மறைச்சு, நாற்பது வயசுலேயே ஷுகர், ஹார்ட் அட்டாக் என்று ஆரம்பித்து படிப்படியாக முற்றி ஐம்பது வயதில் காங்ரீன் ஏற்பட்டு தவணை முறையில் கால் விரல்களை எடுத்து கடைசியாக கால்களையும் இழக்க நேரிடும் கொடுமைகளை நான் நிறையப் பார்த்துவிட்டேன், போதும்…”

விருட்டென்று வெளியேறினாள்.

குமரேசன் வேதனையில் விக்கித்துப் போனான்.

சிவா நிலைமையின் தாக்கத்தை உணராது விவஸ்தை கெட்டத்தனமாக “போனா போகுது மச்சி நீ கவலைப் படாத. இந்தக் கவிதா இல்லன்னா இன்னொரு அனிதா… அடுத்த தடவை யார் தட்டினாலும் கதவைத் திறக்காதே..” என்றான்.

சுந்தர், “டூட் நேத்து நீ சொன்ன நாலு வகைகளில் இவள் எந்த வகை?” என்றான்.

“கண்டிப்பாக சங்கினிதான். சுதந்திரமான புத்திசாலிப் பெண்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *