கடைசிப் பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 11,332 
 

அந்த ஹோண்டா சிட்டி சக்கரம் தேய, ஹாரன் அலறி நிற்க, ஒரு கோபமான முகம் கண்ணாடி இறக்கித் திட்டியது. காதில் விழாமல், விஜய் சாலையைக் கடந்து, விமான நிலையத்துக்குள் நுழைந்தார். அப்பா விபத்தில் இறந்து… உறவுக்காரனை நம்பி ஒப்படைத்த வியாபாரம் நொடித்து… நேசித்த மனைவி வேறு ஒருவனோடு ஓடிப்போய்… வாழ்க்கையே தலைகீழாகிப்போன கடந்த மாத நிகழ்வுகளுக்குப் பின்னர், உயிர் வாழும் ஆர்வம் அவருக்கு அவ்வளவாக மிஞ்சியிருக்கவில்லை.

மும்பையிலிருந்து ஹாங்காங் செல்லும் விமானம் ஒரு மணி நேர தாமதத்துக்குப் பின், புறப்பட ஆயத்தமாக இருந்தது. நிலையத்தின் வாகனம், அந்த ராட்சச இரும்புப் பறவையின் காலடியில் அவரைச் சேர்ப்பித்தது. படிக்கட்டுகளில் ஏறும்போது, அப்பாவின் கருகிய சடலம் மறுபடி அவர் கண்களுக்குள் விரிய, உள்ளே நுழையும்போது இடறினார்.

”ஜாக்கிரதை” என்று விமானப் பணிப்பெண் அன்புடன் அவரைப் பிடித்துக்கொள்ள, சுதாரித்துக்கொண்டு அவள் உதவியை மறுத்தார். அவளின் சிவப்பு உதட்டுச் சாயம் லீனாவையும் அவளது கவர்ச்சிகரமான சிரிப்பையும் நினைவூட்டியது.

விமானம் ஓடுதளத்தில் இரைச்சலுடன் கிளம்பி, வேகம் எட்டி, வானைக் கீறியது. ஜன்னல் வழியே மும்பையின் உயர உயர அழுக்குத் தலை கட்டடங்கள் சிறியதாகி, தீப்பெட்டிகளாய்ச் சுருங்கின. மும்பையைப் பார்ப்பது இதுதான் கடைசி முறையாக இருக்கலாம் என்ற ஏக்கத்தோடு பார்க்கையில், மனசில் இன்னும் வலி மிகுந்தது. அவரின் வெற்றிகள், சந்தோஷங்கள், ஏமாற்றங்கள் எல்லாம் பொதிந்துகிடந்த ஊர் புள்ளியாகி மறைய, அவமானத்துக்குப் பயந்து கண்காணாமல் செல்லும் வேதனை பூதாகரமாகி, நெஞ்சை அடைத்தது.

டேக் ஆஃப் பயம் விலகி, அனைவரும் ஸீட் பெல்ட் விடுவிக்க, விமானம் உயரம் எட்டி, பிசிறில்லா வானிலையில், சலனமில்லாமல் விரைய, விஜய்யின் மனம் மட்டும் உளைச்சலில் ஊளையிட்டது. அப்பா இறந்ததைத் தொடர்ந்து மனச்சுமைகள் அடுத்தடுத்து வந்து தன்னை நிலைகுலையச் செய்யும் என சற்றும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. தீயில் கருகி, வெள்ளைத் துணி சுற்றிய சுருங்கிப்போன உடலாய், ஆயுசுக்கும் வருத்தும் நினைவாய் மனசுக்குள் உறைந்துபோனதை மெள்ள மறக்க முயன்றுகொண்டு இருந்தபோதுதான், ஆடிட்டர் ரங்கநாதன் கூப்பிட்டுப் பேசினார்…

”விஜய்… உன் கம்பெனி விவகாரங்களை தீபக் உனக்குச் சரியா சொல்றானா?”

”நாலஞ்சு மாசமா டாலர் கொஞ்சம் கீழே இறங்கியிருப்பதால், கஸ்டமர்களிடம் பணம் கலெக்ட் பண்றதைக் கொஞ்சம் தள்ளிப்போட்டிருப்பதாச் சொன்னான். பிசினஸில் பணப் புழக்கம் கம்மியாக இருக்கு, ஒரு மாசம் போனால் சரியாகிடும்னு…”

”மகா பொய்! திரும்பி வரும்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அவன் என்னவோ சாக்கு சொல்றான். ஷேர் மார்க்கெட்டில் அகலக்கால் வெச்சிருக்கான். பாதிக்கும் மேல விலை குறைஞ்சிருச்சு. சொந்தக்காரனா இருந்தாலும், இப்படியெல்லாம் கண்ணை மூடிக்கிட்டுப் பணம் கொடுக்காதே. உன் பர்சனல் கேரன்ட்டியில் பேங்க் லோன் வாங்கியிருக்கே, ஞாபகம் இருக்கட்டும். உடனே என்னை வந்து பாரு!”

எண்களை நிரப்பி அச்சடித்த காகிதத்தில் கூட்டலும் கழித்தலுமாய் ரங்கநாதன் விளக்கியது விஜய்க்குப் புரியவில்லை. தீபக் துரோகம் செய்திருக்கிறான் என்பதும், தனது மலபார் ஹில்ஸ் வீடு, டோம்பிவில்லி நிலம் எல்லாம் விற்கவேண்டி வரும் என்பதும் மட்டும் முகத்தில் அறைந்தது.

விமானச் சூழல் இறுக்கம் தளர்ந்து, சகஜ நிலைக்கு வந்தது. பணிப்பெண்கள் முன்னும் பின்னும் விரைந்து, புன்னகையுடன் உணவு பறிமாறினார்கள். மெலிதான பேச்சுக்குரல் விமானம் முழுக்கப் பரவியது.

அப்பா இறந்ததும், செல்வங்கள் தொலைந்ததும்கூடப் பின்தங்கிப்போய்விட்டது, மனைவி லீனா பற்றி நாயக் சொன்னதில்…

”அவன் ஒரு குட்டி நடிகன். டான்ஸர். டி.வி சீரியல்… அப்புறம் ஒண்ணு ரெண்டு சினிமாவுல ஹீரோவுக்கு ஃப்ரெண்ட்! டான்ஸ் ஸ்கூல்ல ஆரம்பிச்ச பழக்கம், கொஞ்சம் தீவிரமான நிலைக்குப் போயிருக்கு. நீ பாதி நாள் வெளியூர் பறந்துடுறே. அது அவங்களுக்கு வசதியாயிடுச்சு! டான்ஸ் ஸ்கூல்லகூட சில பேருக்குத் தெரிஞ்சிருக்கு. ரொம்ப விவரம் வேண்டாம். உன்னால ஜீரணிக்க முடியாது. விஜய், நான் போலீஸ் ஆபீஸரா இல்லை… உன் அப்பா வோட நண்பனா இதை அணுகியிருக்கேன். நல்லா விசாரிச்சுட்டேன். ட்ரஸ்ட் மி!”

வெளியூரிலிருந்து தொலைபேசியில் தான் கூப்பிடும்போது பல நேரம் அவள் இல்லாததும், அப்படியே ரிசீவர் எடுக்கப்பட்டாலும் ஹலோ சொன்னவுடன் அறுபட்ட தொலைபேசித் தொடர்புகளும், நாட்டிய வகுப்புக்குப் பின் அவளின் அதீத உற்சாகமும், தான் வாங்கித் தராத பரிசுப் பொருட்களும் புதிய அர்த்தங்கள் கற்பித்தன.

விமானத்தின் குளிரையும் மீறி வியர்த்தது. இருக்கையை விட்டு எழுந்து, டாய்லெட் நோக்கி நடந்தார். தன்னைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருப்பது போலத் தோன்றியது. விஜய் அவர்களைப் பார்த்துக்கொண்டே நடந்ததில், மறுபடி இடறினார். அதே பணிப்பெண் மறுபடி அவரைக் கவனித்தாள்.

”உடம்பு சரியில்லையா? பாரசிட்டமால் தரட்டுமா?”

”நோ தேங்க்ஸ்” என்று மறுத்தார். மீண்டும் தன் இருக்கையில் போய் அமர்ந்தார்.

”இதை ஜாக்கிரதையா கையாளணும் விஜய்! என் போலீஸ் தொடர்பை வெச்சு மறைமுகமா மிரட்டிப் பார்த்தேன். மசிய மாட்டேங்கறான். ‘நாங்க தீவிரமா இருக்கோம். லீனா விவாகரத்துக்கு மனுப் போடுவா’ங்கறான். ரொம்பத் தலையிட்டா மீடியாவுல அடிபட ஆரம்பிச்சுடும். மும்பைல உங்க குடும்பத்துக்கு நிறைய மதிப்பு இருக்கு. உங்கப்பா ஏர்ஃபோர்ஸ் பைலட்டா இருந்து, நாட்டுக்காகச் சண்டை போட்டவர். இந்தப் பிரச்னை எல்லாம் பத்திரிகைகள்ல அடிபடும். அதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு நீ இங்கே இருக்கவேணாம். லீவ் எடுத்துக்கிட்டு எங்கேயாவது வெளியூர் போய், கொஞ்ச நாள் இருந்துட்டு வா!”

வாரக்கணக்கில் தூக்கம் இழந்த கண்கள் எரிச்சல் எடுத்தன. நெஞ்சு முழுக்க வேதனையில் தவிக்க, பயணம் முடிவுறும் நிலையில் பதற்றமாக இருந்தார். எண்ணங்கள் தாறுமாறாக ஓடி, மனது கொந்தளித்தது.

‘தீபக்கை என் தம்பி போலல்லவா நம்பினேன்! அவன் சொன்னதற்கெல்லாம் தலையாட்டி, அவன் காட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போட்டு, கேட்கும் போதெல்லாம் பணம் தந்து… அவனை முழுமையாக நம்பாமல், என் ஆட்களை நிறுவனத்தில் வைத்து அவனைக் கண்காணிக்கச் சொல்லியிருக்க வேண்டுமோ?’

இறங்கும் ஆயத்தத்தில், விமானம் கீழே மெள்ள மெள்ளச் சரிந்தது. தரையில் இறங்கி ஹாங்காங்கோ, ஜப்பானோ எந்த அந்நிய தேசத்துக்குப் போனாலும் மறுபடி மனிதர்களைச் சந்தித்துக் கணவன், மனைவி, உறவினர் என்று தன் அவலங்களை நினைவுறுத்தும் உறவுகள்கொண்ட சூழலை எதிர்கொள்ள வேண்டும் என்கிற நினைவே ஆயாசம் தந்தது. ‘யாரையும் சந்திக்காமல், பழகாமல் இப்படி வானத்திலேயே சஞ்சரித்துக்கொண்டு இருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்?’

‘லீனா என்னிடம் என்ன எதிர்பார்த்தாள்? இன்னும் கொஞ்சம் ரசனை? அவள் நடனம் ஆடும்போது முதுகில் தட்டி ஒரு சபாஷ்? என்ன வேண்டியிருந்தது அந்தக் கிராதகிக்கு? ஏன் சொல்லவில்லை? கண்ணியமாக விவாகரத்துகூட தந்திருப்பேனே! போய் யாரோடு வேண்டுமானாலும் கூத்தாடு என்று விட்டொழித்திருப்பேனே! இப்படி அசிங்கம் செய்து, ஊர் சிரிக்கச் செய்துவிட்டாளே!’

தரை தொடும் இலக்கில் மெள்ள இறங்கிப் பயணித்தது விமானம்.

‘எனக்கு என்ன குறைச்சல்! இந்த 36 வயதில், பின் மண்டையில் லேசான வழுக்கை, வயதைக் கொஞ்சம் கூட்டிக் காண்பிக்கிறது; அவ்வளவுதான்! என்னை விருப்பம் இல்லாமலா கல்யாணம் செய்துகொண்டாள்? ஒரு கணவனுக்கு நிகழும் உச்சகட்ட அவமதிப்பு இதுதான். தன் அந்தரங்க உடைமையை இன்னொருவன் அபகரிக்கும் அவமானம். இந்த மனச்சுமையோடு வாழ்வது எப்படி?’

கடல் மேல் பொம்மைகளாகச் சிதறிக்கிடந்த கப்பல்கள் தெரிந்தன. கட்டடக் காளான்களாக, விமானத்தை நோக்கி விரைந்து வந்தது ஹாங்காங்.

‘சே… என்ன வாழ்க்கை இது! இருப்பதை எல்லாம் இழந்துவிட்டு, மனைவியை இன்னொருத்தனிடம் பறிகொடுத்துவிட்டு, வாழ்ந்து என்ன ஆகப்போகிறது? பேர் சொல்ல ஒரு வாரிசும் இல்லை. ஏன் இப்படி அடுத்தடுத்து அடி விழுகிறது என் மேல்? நீ வாழ்ந்தது போதும்… போய்ச் சேர் என்று கடவுள் காட்டும் சமிக்ஞையா இது?’

‘செத்துப் போ, கையாலாகாதவனே! மனைவியை ஒருவன் கவர்ந்துகொண்டது தெரிந்தும் வெட்கம் இல்லாமல் வாழ்ந்துகொண்டு இருப்பவனே!’ என்று தலைக்குள் ஆயிரம் குரல்கள் ஒலிக்க, அவர் இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. லீனாவும் அந்தக் குட்டி நடிகனும் கட்டிலில் இச்சையுடன் சல்லாபிப்பது கண் முன் நின்றது. ‘செத்துப் போ! வெட்கம் கெட்டவனே, செத்துப் போ!’ என்று அந்த விமானம் பூரா குரல்கள் எதிரொலித்தன.

சீராகப் போய்க்கொண்டு இருந்த விமானம், திடீரென்று கடல் நோக்கித் தலைகுப்புற செங்குத்துப் பாய்ச்சலில் விரைந்தது. பெல்ட் அணியாத பயணிகள் இருக்கையிலிருந்து விடுபட்டுப் பறந்து மேலே மோத, விமானத்தின் நெகிழ்ச்சியான இசையை மூழ்க டித்துக் கதறல் சூழ்ந்தது. விமானம் கடல் நோக்கிப் பாய்ந்து, கடல் பரப்பின் மௌனத்தைத் தகர்த்து உள்ளே… உள்ளே…

”கேப்டன் விஜய்! என்ன செய்கிறீர்கள்?” என்று சக விமானி கதறியது, பாதிதான் கேட்டது அவருக்கு.

பின்குறிப்பு:

அதிர்ச்சிகரமான திருப்பத்தைக் கொண்டுவருவது மட்டுமே கதையின் நோக்கம் என்றாலும், ஓர் உண்மைச் சம்பவத்தையும் உதாரணமாகக் காட்டலாம். சிங்கப்பூரின் சில்க் ஏர் விமானி, மனச்சுமை காரணமாகத் தான் செலுத்திக்கொண்டு இருந்த விமானத்தோடு தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது. அந்தச் செய்திக்கான இணைய தளம்: http://en.wikipedia.org/wiki/Silkair Flight 185.

– 11th ஜூன் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *