முருங்கையிலைக் கஞ்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2024
பார்வையிட்டோர்: 1,318 
 

(2016ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவனுக்குப் பின்னால் இரண்டு பெட்டைப் பூச்சிகளும் ஒரு பெடியனும் இருந்தும், அவன் மீது தான் காட்டி வந்த அன்பு மற்றப் பிள்ளைகளுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஆறுமுகத்தார் படாத பாடுபட்டு வந்தார்.

பத்து வயது வரை உள்ளூர்ச் சைவப் பள்ளிக்கூடத்தில் படிக்கவிட்டு பதினோராவது வயதில் கந்தரோடைப் பாடசாலையில் அவனைச் சேர்த்துவிட அவர் பட்டபாடு.

கந்தரோடைக்கு அவன் பரீட்சைக்குப் போனபோது மிகவும் தாழ்ந்த புள்ளிகளையே எடுத்திருந்தான். அவன் பரீட்சையில் தேற வில்லை என்று அறிந்தவுடனே சைவப் பள்ளிக்கூடத் தலைமை உபாத்தியாயராகிய ஐயாத்துரைச் சட்டம்பியாரை அவர் திட்டிய திட்டு… ‘இவர்கள் பிள்ளையளை ஒழுங்காகப் படிப்பீச்சாலல்லோ … சைவப் பள்ளிக்கூடத்தில் படிப்பீச்சுக்கொண்டு படிக்கிற பெடியளிட்டை மச்சக்கறி வாங்கி வீட்டைக் குடுத்தனுப்பிறதும், கடை கண்ணிக்கு விடுகிறதும் போதாக்குறைக்கு மானம்பூ சூரன்போர், சரஸ்வதி பூசை எண்டு வரிசத்திலை பத்துப் பதினைஞ்சு கொண்டாட்டங்களையும் வைச்சுக் கொண்டிருந்தவங்களே தவிர, இவங்கள் பிள்ளையளைப் படிப்பீச்சுவங்களே…’ என்று நாலு பேருக்கு மத்தியில் தலைமைச் சட்டம்பிமாரையும் உதவிச் சட்டம்பிமாரையும் திட்டிவிட்டு, எப்படியும் பின்கதவு வழியாகவேனும் மூத்தவனைக் கந்தரோடைப் பாட சாலைக்குத் தள்ளிவிட ஆறுமுகத்தார் பட்டபாடு நல்லவேளையாக அப்போது போடிங் மாஸ்ரராக இருந்த தாடிக்காரக் கந்தசாமி மாஸ்ரரை இவரின் சினேகிதன் ஒருவன் கூட்டிச் சென்று அறிமுகப் படுத்திவிட்டமையால் ஒருமாதிரி அவனை உள்ளே தள்ளியும் விட்டார்.

இணுவில் நாலாம் கட்டையடியில் இருந்து கந்தரோடைப் பாட சாலைக்குச் சுமார் ஐந்து மைல் வரைபோக வேண்டும். பஸ் எடுப்ப தானால் சுன்னாகம்வரை ஒன்றும் அப்பால் ஒன்றுமாக இரண்டு பஸ்களைப் பிடிக்க வேண்டும். சுன்னாகம் பஸ் கிடைப்பது எளிதாகினும் கந்தரோடை பஸ் கிடைப்பது கடினம். சந்தை முறை நாட்களில் என்றால் கிடைத்துவிடும். ஆனாலும் மகனை பஸ்ஸில் விடுவதற்கு வள்ளிப்பிள்ளை மறுத்தாள்.

இவ ஒரு கண்டறியாத பிள்ளையைப் பெத்துப் போட்டுப் படுகிற பாடு!’ என்று சொல்வது இவருக்கும் விருப்பமில்லாத ஒன்றாகவே இருந்தது.

இறைப்புக் காலம் என்றால் விடிவெள்ளி காலிப்பதற்கிடையில் தண்ணீர்ப் பம்பை உருட்டிக்கொண்டு தோட்டத்திற்குப் போய், பல பலவென்று விடிவதற்கிடையில் ஒரு பக்கத்து இரண்டாயிரம் கண்டும் பாய்ச்சி முடித்து அவசர அவசரமாக அவர் ஓடிவந்து செம்பாடு படிந்த “கேக்கிளில்’ சைக்கிளை உருட்டவும் மகன் புத்தகங்களுடன் வந்து பின் கரியரில் ஏறவும் நேரம் சரியாக இருக்கும்.

கொத்துக்காலம், குழை தாழ்ப்புக்காலம், பாத்திக் கட்டுக் காலம், கண்டு நடுவைக் காலம், சீவல் எடுக்கும் காலம், புகை போடும் காலம், பாடம் போடும் காலம் இப்படியான அந்த நாலாயிரம் கண்டு புகையிலைச் செய்கைக்கு ஏற்றபடி நேரத்தைச் சமன் செய்துகொண்டு மூத்தவனின் பதினைந்தாவது வயதுவரை சைக்கிளில் ஏற்றி இறக்கியே கொண்டுதிரிந்தார்.

ஆறுமுகத்தாரின் செம்பாட்டுப் புழுதிச் சைக்கிள் இணுவில் ஆஸ்பத்திரியைத் தாண்டுமென்றால் அது சரியாக எட்டேகாலாகவும் சுன்னாகம், சந்தைச் சந்தியில் திரும்புமேயானால் எட்டரையாகவும், பாடசாலை வாயிலில் அவர் பெடல் கட்டைக்கு மேலான சைக்கிளின் நடு அச்சில் காலை வைத்துச் சீற்றைவிட்டுச் சற்று மேலெழுந்து நிலத்தில் குதிக்கும் போது மணி எட்டு நாற்பதாகவும்தான் இருக்கும் கீழே இறங்கியபின்தான் மகன் கீழே இறங்க வேண்டுமென்பது அவரின் கண்டிப்பான கட்டளை. இந்தக் கட்டளையை வீசமும் பிசக விடாமல் அவனும் நடந்து கொள்வான்.

பின்னேரம் ‘டாங் டாங்’ என மணியடிக்கும்போது ஆறுமுகத்தார் மகனை ஏற்றத் திரும்பி வந்து சைக்கிளில் குதிப்பார். அன்றெல்லாம் ஆறுமுகத்தாரின் அன்றாட நேர சூசி அப்படி, இடையிடை வீட்டுத் தேவைகள் சந்தைகண்ணி என்பதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப் படுவதில்லை. எல்லாவற்றிற்கும்தான் வள்ளிப்பிள்ளை இருக்கிறாளே!

இவருக்கு ‘அகிளான்’ ஆறுமுகம் என்று பட்டப்பெயர் வந்தது ஒரு பெரும் கதையல்ல. ஆனால் அந்தப் பட்டம் பெரிதாகி அவருடன் தொற்றிக்கொண்டு விட்டது.

தாவடிப் புகையிலை என்றால்தான் ஊர் உலகத்துக்குத் தெரியும். அந்தத் தாவடிப் புகையிலைச் செய்கைக்காரருக்கு இணையாகப் புகையிலைச் செய்கையில் இணுவிலுக்குள்ளும் ஒருவர் இருக்கிறா ரென்றால் அது அகிளான் ஆறுமுகத்தார்தான்.

வருடம் முழுவதும் புகையிலையும் அதோடு ஒட்டிய வேலைகளும் தான். இவருடைய புகையிலையைக் கட்டுவதற்குகென்று காலியிலிருந்து இரண்டு வேலணை வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். ஏனெனில் இவர் பாணிப் புகையிலைக்கென்று போடும் பாணியில் அவ்வளவு மகிமை.

‘மாத்தையா, ஆறுமுகத்தாரின்றைப் போயிலை குடுங்கோ’ என்று சிங்களப் பாவனையாளர்கள் அந்த வியாபாரிகளை நச்சரிப்பர். அவர்கள் சொன்னதுதான் விலை. ஆனால் ஆறுமுகத்தாரும் இங்குச் சொன்னது தான் விலை.

புகையிலை விற்பனையைப் பற்றி ஆறுமுகத்தார் என்றுமே கவலைப் படுவதில்லை. ஆனால் புகையிலை நடாத ஓய்வு காலத்தில் தோட்டக் காணிக்குள் ஊன்றப்படுகின்ற சிறுதாவர மரக்கறிவகைகளைக், குறிப்பாக இராசவள்ளிக் கிழங்குகளைத் தின்று தீர்க்கும் அகிளான் எலிகளைப்பற்றியதுதான் இவர் கவலையெல்லாம்.

தோட்டத்தில் எங்கேயாவது ஓரிடத்தில் அகிளான் புற்று வாயில் அரிமண்ணுடன் கிடந்துவிட்டால் ஒரு கண்டிலும் நோப்படாமல் அந்தப் புற்றுப்போகும் வழிகளைக் கிளைகிளையாக வகிர்ந்து வகிர்ந்து அகிளான் வெடிப்புற்றுக்கால் வெளியே எங்குச் சென்றாலும் அதைக் கொன்று விட்டுத்தான் அவர் மறுவேலை பார்ப்பார். இதுதான் ஆறுமுகத்தாருக்கு ‘அகிளான் ஆறுமுகம்’ என்று பெயர் வந்த சிறுகதை யாகும்.

மூத்தவனுக்குப் பதினைந்தாவது வயது வந்தபோது பாடசாலை ஓய்வு நாட்களில் நந்தாவில் தரவைக் காணிக்குள் தன் சைக்கிளிலேயே அவனை ஏற்றிக் கைத்தாங்கலாகப் பிடித்து, சுற்றிச் சுற்றி நடந்து ஓடி, களைத்து மறுபடியும் நடந்து நடந்து பெருமுயற்சி எடுத்து அவனை சைக்கிள் ஓட்டப் பழக்கிவிட்டார்.

வள்ளிப்பிள்ளை தனது சம்பாத்தியத்தில் அவனுக்கு இருபது இஞ்சிச் சைக்கிள் ஒன்றைப் பட்டணத்து நயினாக் கண்டன் கடையில் ஆறுமுகத்தாரையும் அழைத்துச் சென்று தன் கையாலேயே எழுபது ரூபா எண்ணிக் கொடுத்து, புத்தம் புதிதாக எடுத்து அப்போதுதான் பட்டணத்துக்கு வந்திருந்த செல்லர் ‘ரக்சி’யில் வீடுவரை கொண்டு வந்து சேர்த்துவிட்டாள்.

அன்றிரவு பாடசாலைப் பாடத்தை நிறுத்திவிட்டு ஆறுமுகத்தார் சைக்கிள் ஓடும்போது கவனிக்க வேண்டிய வீதி ஒழுங்கு முறைகளை மகனுக்குப் படிப்பித்து முடிக்கவே நேரம் ஒன்று பாதிக்கு மேலாகி விட்டது.

விடிந்ததும் தாய், சகோதரர்கள் அயலவர்கள் மூக்கின் விரலை வைத்துப் பார்க்க ஆறுமுகத்தார் சைக்கிளில் தொற்றி ஏறி வழிகாட்ட மூத்தவன் தனது சைக்கிளில் தகப்பன் போலல்லாமல் போல் கட்டை யில் கால்வைத்துத் தொற்றி, பிரிவில் சத்தம் கிண்கிணிபோட ஸ்ரை லாக அரைக் களிசான் காலைப் பின்பக்கமாக அகல விரித்து ஏறிக் கொண்டான். பின்னங்கரியலில் இருந்த ஸ்பிறிங் கிளிப்புக்குள் புத்தகத்தைக் கௌவக் கொடுத்திருந்தான்.

பாடசாலைவரையில் மகனைக்கொண்டு வந்து விட்டுவிட்டுத் தான் ஆறுமுகத்தார் திரும்பினார். பின்னேரம் மறுபடியும் அவனை அழைத்துவர சென்றார். மகன் செவ்வையாக நிதானப்பட்டு விட்டான் என்பதைத் தெரிந்து கொள்ள பத்து நாட்கள் ஆகிவிட்டன. அதற்குப் பின் அந்த நேரத்தை ஆறுமுகத்தார் வேறுவேலைகளில் செலவழித்தார். எனினும் மாலை அவன் வந்து சேரும் வரை அவரின் நெஞ்சு அடித்துக் கொண்டே இருக்கும். அவருக்கு மட்டுமல்ல வள்ளிப்பிள்ளைக்கும் அப்படித்தான். மற்றப்பிள்ளைகள் விவரம் தெரியாததுகள். கடைசிப் பெடியன் அப்போது பிறக்கவில்லை.

2

மூத்தவன் பாடசாலையில் சிறப்பான மாணவன் என்று சொல்லிவிட முடியாது. அது ஆறுமுகத்தாருக்குத் தெரியும். கந்தசாமி வாத்தியாரைப் பிடித்து அவனைப் பாடசாலைக்குள் தள்ளிவிட அவர் பட்டபாடு மறக்கக் கூடியதல்ல. அதனால் எப்படியும் அவனைக் கெட்டிக்காரன் ஆக்கிவிடுவதாக அவர் மனது சபதம் ஏற்றிருக்கவேண்டும். அவன் முக்கித்தக்கி எட்டாம் வகுப்பை எட்டிப் பிடித்து விட்டபோது, அவனுக்கு ஆங்கிலப் பாடமும் கணக்குப்பாடமும் சொல்லித்தர உள்ளூரில் இருந்த பென்சன்காரர் இராமசாமி வாத்தியாரை ஏற்பாடு செய்துவிட்டார்.

மூத்தவனை முதன் முதலாக இராமசாமி வாத்தியாரிடம் பாடம் படிக்கக் கூட்டிச் சென்றது, நன்றாக ஆறுமுகத்தாரின் மனதில் நிற்கிறது.

அன்று தைப்பூசம், மாரி மழை பின்கூற்றாக அடைத்துக்கொண்டிருந்த வேளை. ஆறுமுகத்தார் கொழுந்து வெற்றிலைக்குள் ஒரு பத்து ரூபா நோட்டை மடித்து குருதட்சணையாக இராமசாமி வாத்தியாரின் கைக்குள் பவ்வியமாக வைத்தபோதுதான் ஆறுமுகத்தாருக்கு மன நிறைவு ஏற்பட்டது.

சொல்லி வைத்தாற்போல் முப்பதாவது நாள் மூத்தவனிடம் ஒரு பத்து ரூபாவைக் கொடுத்தனுப்பினார். அந்தப் பத்து ரூபாவை இராமசாமி வாத்தியார் வாங்க மறுத்துத் திருப்பி அனுப்பியதும், அவர் நினைவுக்கு இன்று போல் தான் இருக்கிறது. அடுத்தநாள் மருதனாமடச் சந்தியடி யில் வாத்தியார் ஆறுமுகத்தாரைக் கேட்டாரே…

‘என்ன ஆறுமுகத்தார் உங்கினேக்கை இந்த நாளைய கஞ்சல் சட்டம்பிமாரைப்போல என்னையும் நினைச்சுப் போட்டீர் போல கிடக்கு? காசுக்காக சரசுவதியை விக்கிறவனெண்டே என்னை நினைச்சுப்போட்டீர்?’ என்ற இரண்டு கேள்விகளை. இன்றும் அந்தக் குரல் அவரின் காதுகளுக்குள் கேட்கின்றது. –

இராமசாமி வாத்தியாரிடம் படித்ததில் மூத்தவன் சற்று முன்னேறி வருவதை ஆறுமுகத்தார் அவதானிக்கத் தவறவில்லை . வீட்டில் அவன் ஆங்கிலப் புத்தகங்களைக் கரைத்துக் கரைத்துக் குடிப்பதைக் கண்டார்.

மூத்தவன் எட்டாவதில் சோதனை எழுதுவதற்காக முழுசாகப் படித்துக் கொண்டிருந்த காலம். மார்கழி முதல் வாரத்தில் சோதனை தொடங்க இருந்தது. அப்பொழுது தான் ஆறுமுகத்தாருக்குக் கண்டு நடுகைக்காலம்.

உயிலங்குழை உருவி வந்து தூவிப்போடப்பட்ட நாற்றுகள், இரண்டு மூன்று இலைகளாகிக் கூட்டான வாழ்க்கையை விட்டுப் பிரிந்து தனிக் குடித்தனம் செய்யத் துடிப்பதைப் போல ஆறுமுகத்தாரை ஏக்கத்துடன் பார்த்தன.

அந்த நாலாயிரம் கண்டுத் தரையையும் இரண்டு பொழிவரைத் தாளக்கொத்தி, நடுவைக் கொத்திக் கொத்தி, பலுவடித்து, சாறி முடித்து விட்ட கையோடு கயிறு பிடித்து கண்டு நடும் வேலை என்பது லேசுப் பட்ட தல்ல. அத்துடன் கண்டுநடுகை முடிந்து, அதை மூடி மறைப்பு நடுவதற்கு கொய்யா, கிஞ்ஞா ஓதி ஆகிய குழைக் கொப்புகளை முறித்து நடும் வேலையை வள்ளிப்பிள்ளை பொறுப்பேற்கா திருந்தால் அது ஆறுமுகத்தாரை வாட்டி வதைத்திருக்கும். அத்துடன் ஆறுமுகத்தார் வாய்க்கால் தண்ணீர் பாய்ச்சத்தொடங்கும் காலம் வரை பட்டைத் தண்ணீர், உச்சித் தண்ணீர் தெளிக்கும் வேலைகளையும் அவளே பொறுப்பேற்றுவிட்டாள். அது வழமையானது. இது அவருக்குப் பெரும் ஆறுதல்.

இம்முறை பசளை எரு, வீடு வேய்ந்த பனம் ஓலை குழை ஆகியவை களைப் பெறுவதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டார்.

கடைசியாக அவர் சிரமப்பட்டதெல்லாம் சேர்த்து இணுவில் மருதனாமடச் சந்தியில் வண்டில்காரர்களிடம் தலைத் தெரிவான பசளை இலைகளான காய்விளாய், பூவரசு, பன்னை ஆகியவை சேர்ந்து ஒரு பாரம் அகப்பட்டதில் அவருக்குப் பரம திருப்தி. அந்தத் திருப்தி யோடு உற்சாகமாகக் குழை தாழ்ப்பு, எருப்போடல் எல்லாவற்றை யுமே முன் கூட்டியே முடித்து வைத்திருந்தார்.

இப்போது கண்டு நடுகை முடிந்துவிட்டது. இந்த வேலைப் பளுவிலும், மூத்தவன் படிப்பைப் பற்றிய விஷயத்தில் அவர் விழிப்பாகவே இருந்தார்.

பரீட்சையும் எழுதி முடிந்து விடுதலையுமாகி, பாட சாலை தொடங்கியபோது முதல் நாள் பாடசாலைக்குச் சென்றவன் இரவு சாப்பிடும்போது அடுக்களைக்குள் இருந்து தாயுடன் எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தது வரிச்சுமட்டை இடையூடாகத் தாழ்வாரச் சாக்குக் கட்டிலில் படுத்திருந்த ஆறுமுகத்தாரின் கண்களுக்கு இலேசாகத் தெரிந்தது. மற்றப் பிள்ளைகள் இரண்டும் தூங்கிவிட்டன.

‘உவன் மூத்தவன் என்னவா மடியப்பா?… ஏதோ ரெண்டு பேரும் கனக்க கதைக்கிறயள்… எனக்கும் சொல்லுங்கோவன்’ ஆறுமுகத்தார் கேட்டார்.

‘அது ஒண்டுமில்லையப்பா… மூத்தவனைப் பள்ளிக் கூடத்திலை சட்டம்பிமாரும் பிள்ளையளும் பகிடி பண்ணு கினமாம். அதுதான்…’

வள்ளிப்பிள்ளை ஒரு மாதிரி பதில் சொல்லிவிட்டு எதையோ பேச வாயுன்னி நிறுத்திக் கொண்டான்.

‘என்ன… பகிடி பண்ணிறாங்களாமே ….?’ ‘ஓமப்பா!மூத்தவன் எண்ட பேர் கூடாமல் கிடக்காம்.’ ‘என்னடி, நான் பெத்த பிள்ளைக்கு ஆசைக்கு நான் வைச்சபேர் கூடாமல் கிடக்காமாடி. என்ரை பிள்ளையின்ரை பேர் கூடாது எண்டு சொல்ல உவங்களார்? இல்லை தெரியாமக் கேக்கிறேன்.’

‘உள்ளத்தைச் சொன்னால் உனக்கேனப்பா பத்துது; உதுகும் ஒரு பேரே! எளியஞ் சாதியளின்ரை பேர் மாதிரிக் கிடக்கு. உதுகும் ஒரு பேரெண்டு பதிஞ்சு வைச்சிருக்கிறியே.’

ஆறுமுகத்தார் மேலே ஒன்றும் பேசாமல் அட்டணக் காலைக் குலைத்துக் கொண்டு மறுபக்கமாகப் புரண்டு கொண்டார்.

மூத்தவன் உணவருந்தி முடிந்து வெளியே வந்ததும்; ‘இஞ்சேர், என்ரை சோத்தையும் போடு’ என்று சொல்லிக்கொண்டே ஆறுமுகத்தார் அடுக்களைக்குள் போனார். உணவருத்தி முடியும் தறுவாயில், ‘இஞ்சேர், வெள்ளாப்போடை என்னை ஒருக்கா அரட்டி விடு. நாளைக்கு நாலாங்கால் இறைப்புமுறையும் இல்லை. நான் எப்பன் விதானை வீட்டை மட்டும் போட்டு வாறன், மூத்தவன்றை பேர் மாத்திறத்துக்கு என்ன செய்யவேணுமெண்டு கேட்டு வாறன். எக்கணம் பேர் மாத்தினாலும் கூப்பிட்டுப் பழகினவங்கள் மூத்தவன் எண்டு கூப்பிடாமல் விடப் போறாங்களே? ஒரு மாதிரி மூத்தவன் எண்ட பேரோடை சேரக்கூடிய விதமாய் வைச்சுப் போட்டா நாளாந் தம்பழக்கத்திலை வந்தாலும் வந்திடும் எண்டுதான் நினைக்கிறேன். ‘

ஆறுமுகத்தார் பேசி முடித்துவிட்டு, சற்று நேரம் சோற்றில் கையை வைத்துக் கொண்டே யோசித்தபடி இருந்தார்.

“முகுந்தன் எண்டு வை ஐயா!’ என்று அடுக்களை வாயிலில் நின்றபடி மூத்தவன் சொன்னான்.

‘என்ன மோனை அது… முகுந்தனோ, அதிலையும் ‘இன்’ எண்டு தானேடா கேக்குது’ ஆறுமுகத்தார் தன் அதிருப்தியைக் காட்டிக் கொண்டார்.

‘இன்னெண்டு வந்தாலும் ஐயா அது மூத்தவன் எண்டதோடை சேராது. இன்னெண்ட பேரிலையும் நல்ல பேர் இருக்கு. இந்தியா விலை பேரெடுத்த விஞ்ஞானிக்கு ராமன் என்டு இன்னிலைதானே முடியுது’ மூத்தவன் கூறி முடித்துவிட்டான்.

‘இஞ்சரப்பா…! தம்பி ஆசைப்படுகிறான். அதைத் தானப்பா விதானையிட்டை சொல்லு’ என்று வள்ளிப் பிள்ளை தருணம் பார்த்துக் கூறிவிட்டாள்.

ஆறுமுகத்தார் இதற்குமேல் எதுவும் பேசவில்லை. கையலம்பி விட்டு எழுந்து சென்று, சிமினி விளக்கு வெளிச்சத்தில் ஒரு புகையிலைக் கீலத்தை எடுத்துச் சுருட்டாக்கி, லாம்பின் சிமிலியை உயர்த்தி, ஈக்குச்சி யால் கொளுத்தி சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டு, படுக்கையில் சரிந்தபோது அவரின் வாயிலிருந்து ‘அப்பனே முனியப்பா’ என்ற குரல் இலேசாகக் கிளம்பியது.

3

மூத்தவனாகிய முகுந்தனை இம்முறை பாடசாலையின் உதை பந்தாட்டக் குழுவில் சேர்த்திருந்தார்கள் ஆறுமுகத்தாருக்கு ஏற்கெனவே உதை பந்தாட்டம் என்றால் உயிர். பண்ணைத் துறைமுகத்துக்குப் பக்கத்தே இருந்த முற்றவெளி அடைப்புக்குள் நடக்கும் பிரசித்திப் பெற்றப் பாடசாலைகளின் மோதல்களில் அவர் பார்க்காதவை மிகச் சிலதான்.

அதிலும் ஸ்கந்த வரோதயாக் கல்லூரி என்றால் அவருக்கு அபிமானம் அதிகம் . அந்த அபிமானத்தினால் தான் மகனை அந்தக் கல்லூரியில் சேர்க்க மனம் அவரைத் தூண்டியிருந்தது. அத்துடன் தனது மகனும் ஓர் உதைபந்தாட்ட வீரனாக வரவேண்டுமென்ற அவர் இருந்ததாயினும் அதை அவர் மனதுக்குள்ளேயே அடக்கிக்கொண்டார்.

இம்முறை மகனின் கோஷ்டி என்ற பெருமிதத்துடன் தோட்டத்து வேலைகளையெல்லாம் அவ்வப்போது முடித்துவிட்டுச் சகல ஆட்டங் களையும் பார்த்துத் தீர்த்து விட்டார். மகனின் கோஷ்டி ஒருபக்கத்து இறுதி ஆட்டக் கோஷ்டியாகத் தெரிவு செய்யப்பட்டுவிட்டது. மறு பக்கத்திற்குக் கொக்குவில் இந்துக் கல்லூரி இருக்கும் பாடசாலை – அதில் இவரது உறவினர்களின் பிள்ளைகளும் பலர் விளையாடுகிறார்கள். இருந்தாலும் அவர் மனமெல்லாம் மகனின் கோஷ்டி பக்கமே.

இறுதி ஆட்டத்திற்கு நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. பத்தாம் திகதி சனிக்கிழமை பிற்பகல் நாலரை மணி!

மூன்று மணிக்கெல்லாம் ஆறுமுகத்தார் அடைப்புக்குள் போய் விட்டார். இவர் நுழைந்தபோது யாருமே உள்ளே இல்லை. இவர்தான் முதலாவது பார்வையாளன்.

நேரம் போகப் போக ஜனக்கூட்டம் கிடுகு அடைப்புக்குள் நிறைந்து விட்டது. வெடிச்சத்தங்களை அடுத்து இரு கோஷ்டிகளும் மைதானத்துக்குள் வந்துவிட்டன.

ஆறுமுகத்தாரின் கண்களுக்கு முகுந்தன் மட்டுமே கம்பீரமான வனாகத் தெரிந்தான்.

அங்குமிங்கும் இரு கோஷ்டிகளுக்குமாகப் பார்வையாளர்கள் நின்றனர். ஆரவாரித்தனர்.

ஆறுமுகத்தார் வேளையோடையே வந்து, கயிற்றுக்கு முன்வரிசை யில் குந்திக்கொண்டு விட்டமையால், அவருக்குப் பின்னால் வந்து சேர்ந்த யாவரும் எதிர்கட்சியினராகவே இருந்தனர். ஆறுமுகத்தாரால் தனது கோஷ்டியினருடன் சேர்ந்து கொள்ள முடியவில்லை.

நடுவாளர் விசில் ஊதினார் . இருபகுதியினரும் குழுமினர். இரு பக்கத்துத் தலைவர்களுக்கும் முன்னால் நடுவாளர் பூவா, தலையா போட்டுப் பார்த்தார். பின்பு எல்லாருமே அவரவர் இடங்களுக்குப் போய் நின்றுகொண்டனர்.

நடுவாளர் நேரத்தைச் சரியாகக் கணக்கெடுத்துக் கொண்டு விசிலை ஊதினார்.

ஆட்டம் தொடங்கிவிட்டது. முகுந்தன் முக்கியமான இடமான நடுவாளனுக்குப் பின் நடுவாளனாக நின்றான். ஆட்டம் விறு விறுப்பாக இல்லை.

ஆட்டத்தை விறுவிறுப்பாக்க இரு கோஷ்டியினரதும் கோஷ்டிக் காரர்களே விறுவிறுப்பாக இருந்தனர்.

‘கந்தரோடை பனங்கொட்டை தின்னிக்கு அடியடா மச்சான்.’ இப்படி ஒரு குரல்! ‘கொக்குவில் கொக்குக்காலன்ரை காலை முறியடா மச்சான்!’ இப்படி ஒரு பதில் குரல்! “டேய் அம்பயர்! கந்தரோடையான் இடிக்கிறான்ரா எங்கை யடாமிலாந்திறாய்’ இப்படி நடுவரை எச்சரிக்கும் குரல்!

‘டேய் பரதேசி! வெள்ளி கொக்குவிலாங்களுக்குத் தானடா… கந்தரோடையான் பவுளடா ஏன்ரா ஊதையில்லை.’

இது நடுவருக்கு மேலான வேறொரு குற்றச்சாட்டு. பாதி வேளை முடிந்தது! யாருக்குமே ஒரு கோலுமில்லை!

ஆறுமுகத்தாருக்கு மனம் அலைந்தது. இடைவேளை மடிக்குள் இருந்த வல்லுவத்தை அவிழ்த்து ஒரு வாய் வெற்றிலைப் போட்டுக் கொண்டார். மறுபடியும் ஆட்டம் தொடங்கியது.

இப்போதுதான் ஆட்டம் சற்றுச் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. பந்தில் படும் அடிகளுக்குப் பதிலாக விளையாட்டாளர்களின் கால் அடிகள் கேட்டுக் கொண்டிருந்தன. என்றாலும் விளையாட்டுக் குழம்ப வில்லை நடுவர் இடையிடையே ஓரிரு விளையாட்டுக்காரர்களை எச்சரித்தார். இந்த எச்சரிப்புக்கு உட்பட்டவர்களில் முகுந்தனும் ஒருவன்.

அப்போது ஆறுமுகத்தாரின் உடம்புத் துடிதுடித்தது. உச்சியிலிருந்து நடுக்கம் ஒன்று எழுவது போலிருந்தது. எப்படியோ அவர் சமாளித்துக் கொண்டார்.

நேரம் போய்க் கொண்டிருந்தது. யாராவது ஒரு கோலாவுதல் போடவில்லை. இன்னும் இருப்பதுவோ ஐந்து நிமிடங்கள்தான்.

இப்போது முகுந்தனின் காலில் பந்து ஒன்று வந்துவிட்டது. இரண்டு பேரை மடக்கி அடித்து, வெட்டி எடுத்துவிட்டு, இடதுபக்க எல்லைக் காரனுக்குப் பந்தை அனுப்பினான். அவனோ அதைப் பக்குவமாகக் கால்களால் அடக்கி இடது பக்கக் கரையோரம் கொண்டு சென்று மூலையில் வைத்து இரண்டு நபர்களை வெட்டி மடக்கி நிமிர்ந்து ஒன்றரை ஆள் உயரத்தில் பந்தை வீசி அடித்தான். அந்த அடியின் வயப்பட்ட பந்து சுருண்டு கோல் எல்லைக்கு நடுவாக வீழ்ந்தபோது எழுந்தானே முகுந்தன்.

மேலே எழுந்து, புழுப்போல நெளிந்து, தலையைச் சரித்துவிட்டானே ஓர் இடி தலையால்.

மின்னல் போல அது கோல் முகத்துக்குள் புகுந்துவிட்டது. பந்து கோல் முகத்துக்குள் புகுந்த அதே வேளை ஆறுமுகத்தாரின் உயர்ந்த கரம் படாரென்று முன்னே இருந்தவனின் தோள் மூட்டைத் தட்டிவிட்டது.

வந்ததே வினை! ஆறுமுகத்தாரை ஒருவன் பின்நின்று தாக்கினான். இன்னொருவன் அவரைத் தலைமயிரில் பிடித்து வெளியே இழுத்தான். அப்புறம்…. அடி உதை! அங்குமிங்குமாகப் பலர் ஓடிவந்தனர். இரு கோஷ்டிகளுக்குமிடையே கைகலப்பு. கூட்டம் மைதானத் திற்குள் குதித்துவிட்டது.

ஏகக்கலவரம் ! ஆறுமுகத்தாருக்கு அறிவில்லை, நினைவில்லை. ‘ஐயா என்ரை மோன் ஐயோ என்ரை மூத்தவன்’ என்று மட்டும் வாய் பிதற்றியபடி யாரோ ஒரு பார்வையாளனால் பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

நினைவுத் தொடர்கள் ஒன்றாகி இரண்டாகி மூன்றாகி…. ‘ஆறுமுகத்தாருக்கு வாறான அடியாம்’ இந்தச் சத்தம் ஊரெல்லாம் பரவிவிட்டது.

வள்ளிப்பிள்ளை கூக்குரல் இட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினாள். ஆறுமுகத்தார் நினைவிழந்து கிடந்தார். அவள் உள்ளே சென்றபோது கங்காணிதான் ஆறுமுகத்தாருக்குப் பக்கத்தில் நின்ற வேண்டியதைச் செய்து கொண்டிருந்தான்.

“ஐயோ, என்ரை ஐயா… மனிசனைக் காப்பாத்திப் போடுங்கோ ஐயா….’ என்று கங்காணியின் கால்களைத் தொட்டுக்கொண்டே வள்ளிப்பிள்ளை கத்திவிட்டாள். கங்காணிக்குச் சங்கடமாகிவிட்டது. அவள் தன்னைத்தான் டாக்குத்தர் என்று நினைத்துக்கொண்டிருக் கிறாள்’ என்று கங்காணிக்குத் தெரிந்துவிட்டது. இருந்தாலும் தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்லிவிடாமல் –

‘எணை அவருக்கு ஒண்டுமில்லையணை… சும்மா நாலைஞ்சு அடிதான் பட்டிருக்கு, படாத இடத்திலை ஒரு அடி பட்டதாலைதான் அவருக்கு எப்பன் மயக்கமாகக் கிடக்கு. பயப்படாதை, எல்லாம் நான் சுகப்படுத்தித் தாறன். கொஞ்சம் முந்தித்தான் கண்முழிச்சுப் பார்த்தவர்’ என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கங்காணி அப்பால் போய் விட்டான்.

ஆறுமுகத்தார் மனைவியின் குரலை இனங்கண்டு கொண்டார். டாக்குத்தர் பேசியது போன்ற குரலும் கேட்டது. ஆனாலும் உடலை ஆட்டி அசைக்க முடியவில்லை.

ஆறுமுகத்தார் இலேசாகக் கண் விழித்தார். மனைவி கண்ணீர் விட்டபடி வெயர்வையைச் சவுக்கத்தால் ஒற்றி எடுப்பதைக் கவனித்தார்,

‘ஏன்னப்பா அழுகிறாய்! மூத்தவன் வந்திட்டானே? அவனுக்கும் அடிச்சுக்கிடிச்சுப் போட்டாங்களே? என்ரை பிள்ளை ….’ ஆறுமுகத் தாரினால் தொடர்ந்து பேச முடியவில்லை. அழுகைதான் வந்தது வள்ளிப்பிள்ளை கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.

‘அவன் பள்ளிக்குடத்துப் பொடியன்களோடை சேர்ந்து பள்ளிக் கூடத்துக்குப் போட்டான் போலை கிடக்கு! தேப்பன் ஆக்களோட அடிபட்டதெண்டு தெரியாதெண்டு நினைக்கிறேன்’ வள்ளிப்பிள்ளை பேசி முடித்தாள்.

‘என்ன, நான் அடிப்பட்டனானோ… நீயும் அப்படிச் சொல்லுறியோ? என்ரை பிள்ளை கோல் அடிச்சுப் போட்டான் எண்டதாலை எல்லாரு மாகச் சேர்ந்து என்னை அடிச்செல்லோ முறிச்சவங்கள்!’ ஆறுமுகத் தாருக்கு அவ்வளவுதான் தெரியும். மகன் கோல் அடித்த போதுதான் விசுக்சிய கை முன்னுக்கு இருந்தவனுக்குப் பிடித்தது அவரது நினைவில் இல்லை .

‘இருட்டிப் போட்டுது போலைக்கிடக்கு. நீ தனியாகத்தான் வந்தனியே’ என்று மனைவியைப் பரிவோடு கேட்டார்.

‘ஓமோம், கேள்விப்பட்ட உடனை எல்லாத்தையும் விட்டிட்டு சந்தியிலை வசுவைப் பிடிச்சுக்கொண்டு ஓடியாறன். கொட்டப்பெட்டி சின்னையற்ரை பேரப் பொடியன் அடிபடேக்கை நிண்டவனாம். வந்து சொன்னவன்.’

வள்ளிப்பிள்ளை அப்போதுதான் தோட்டத்திற்குள் நின்று வந்திருக்க வேண்டும். அவளின் உடம்பில் செம்பாட்டு மண் தூள்கள் அங்குமிங்கு மாக ஒட்டிக் கிடந்தன. மேல் சட்டை எங்கும் செம்பாட்டுப் புழுதி. ஒழுங்கின்றி அள்ளி மேலுக்கு முடித்த குடுமி!

மனைவியானவளை இந்தக் கோலத்தில் காண ஆறுமுகத்தாருக்குப் பெருமையாகவும் வெட்கமாகவும் இருந்தது. அப்போது அவருக்கு வயது நாற்பதுக்குள்தான் இருக்கும்.

இதுவரை அவளுக்கு இளையவனுக்கு அடுத்த இரண்டு பிள்ளைகள் மட்டுமே!

‘வீட்டிலைப் பெட்டையள் கத்துவாளவை. மூத்தவனும் வந்து கேட்டுப்போட்டு வில்லங்கப்படுவான். சுணங்காமல் போ! எனக் கொண்டுமில்லை. நாளைக்குட் டாக்குத்தர் துண்டு வெட்டினாலும் வெட்டுவார்’ என்று அவர் கூறியபோது கங்காணி வந்து கொண் டிருந்தான்.

“உங்கை டாக்குத்தரும் வாறார். எப்பத் துண்டு வெட்டிறியள் எண்டு கையோடை கேப்பம்!’ என்றாள் வள்ளிப்பிள்ளை.

ஆறுமுகத்தாரின் கண்களுக்கு அடுத்த கட்டிலடியில். நின்ற ஏதோ செய்து கொண்டிருந்த கங்காணி பட்டான்.

“இஞ்சரப்பா, அது கங்காணி! டாக்குத்தர் இல்லை’ என்று தாழ்ந்த குரலில்கூறினார் ஆறுமுகத்தார். வள்ளிப்பிள்ளைக்கு வெட்கமாக இருந்தது. சற்று முன்னம் கங்காணியின் காலை டாக்குத்தர் என நினைத்துப் பிடித்தது நினைவுக்கு வந்தது.

‘இஞ்சர், குடிக்கிறதுக்கு ஏதும் வாங்கித் தந்திட்டுப் போகட்டே’ என்று அவள் கதையை மாற்றினாள்.

‘மடியிக்கை கிடந்த சில்லறையள் சண்டையிலைக் கொட்டுண்டு போச்சு. முடிச்சிலை கிடக்கிறதை எப்பன் அவிட்டுக் கையிலை தா. நான் கங்காணியை விட்டு சோடாப் போத்தில் வாங்குவிக்கிறேன்’ என்று மனைவி முடிச்சு அவிழ்க்க வசதியாக வெட்டிக்கட்டு வயிற்றை எக்கிக் கொடுத்தார். வள்ளிப்பிள்ளை முடிச்சு அவிழ்த்தாள். அதில் பத்து ரூபா நோட்டொன்று சுற்றி மடங்கி இருந்தது.

பணத்தை அவர் கைமேல் வைத்து ‘பத்திரமா, பத்து ரூபா கிடக்கு’ என்று எச்சரிக்கை செய்துவிட்டு அவள் போகப் புறப்பட்டாள்.

‘இஞ்சேர், நாளைக்கு இறைப்பு நாலாங்கால் முறை, அவனுக்கும் பள்ளிக்கூடம் லீவு! மூத்தவனையும் கூட்டிக்கொண்டு தோட்டத்துக்கை விட்டுத் தண்ணி இறைக்க மறந்திடாதை. அவன் தண்ணியைப் பாத்தி வழிய, வழியக் கட்டிப் போடுவான். நீ பாத்தியளுக்குத் தண்ணியைக் கட்டு. கவனமடியாத்தை, இளங்கண்டுகள் பாவம்! கண்டுகளைத் தட்டி உளக்கிக்கிளக்கிப் போடாதை. இஞ்சர் ஒண்டைச் சொல்ல மறந்து போனன். அவனுக்கு விளையாடேக்கை நல்லா இடிச்சுப் போட்டங்கள் போனை கிடக்கு, கொக்குவில் பரதேசிப் பொடியள்.

ராவைக்கும் வெள்ளணவும் எப்பன் முட்டைக் கோப்பி அடிச்சுக் குடுக்க வேணும் மறந்திடாதை!’

அவர் பேசிக்கொண்டிருந்தபோது அந்த வாட்டில் இருந்த எல்லோர் பார்வையும் அவரைச் சுற்றியே வந்தது.

‘பாவம் உந்த மனிசி, உள்ளுக்கு வாறதுக்கு வெளியிலை வாச்சரோடை சண்டை பிடிச்சுக்கொண்டுதானாம் வந்தது. நாட்டுப்புறத்து மனிசி யெண்டாலும் வலுசூரி!’ என்று கங்காணி பக்கத்துக் கட்டில்காரருக்கு கூறியது ஆறுமுகத்தார் காதிலும் விழுந்தது. பெருமையால் அவர் நெஞ்சு உயர்ந்தது. வள்ளிப்பிள்ளை போய்க்கொண்டிருந்தாள். ஆறுமுகத்தார் எதையோ நினைத்துக்கொண்டு ‘இஞ்சேரப்பா’ என்றார். குரல் கேட்டு வள்ளிப்பிள்ளை திரும்பி வந்தாள். குரலைக் கீழாகத் தாழ்த்திக் கொண்டு ‘மூத்தவன்ரை தேகத்திலை நல்லா நோப்பட்டிருக்கும் போலை… வீட்டுக்கை கொப்பர் பெட்டிக்காலோடை உரும்பிராயன் அரைப் போத்தில் கிடக்கு அதிலை எப்பன் எடுத்து நோப்பட்ட இடத்திலை உரஞ்சி விடு! மறந்திடாதை’ என்று சொல்லி முடித்தார். வள்ளிப் பிள்ளை தலையசைத்துவிட்டுப் போய்விட்டாள்.

4

மூன்றாண்டுகள் வழமையான வாழ்க்கை! மாசிப் பனி முடிந்து வரும் காலம். புகையிலைக் கன்றுகளின் குருத்துப் பச்சை நிறம் சிறிது, சிறிதாகக் கறுத்து வரும் வேளை. இப்போதுதான் இடைச் செருகல் சிறுபசளைகளை நாலு இஞ்சிக் கனத்துக்கு மேற்படாத ஆழத்தில் பக்குவமாகப் பரவி நோகாமல் சாறிவிட வேண்டும். ஆறுமுகத்தார், தன்னந்தனியாகவும், சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மூத்தவனுடன் கூட்டுச் சேர்ந்தும் இடைப் புற்களை அரித்தெடுப்பதில் வள்ளிப் பிள்ளையும், சின்னஞ்சிறிசுகளாக இருந்தாலும் உள்ளூர்ப் பாடசாலை முடிய மிகுதி வேளைகளில் பெட்டைகளும் உதவி செய்ய, கூட்டாக ஈடுபட்டனர்.

இடை உரல் புல்லரிப்பு வேலைகள் முடிய பதினைந்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. செடிகள் சராசரி பத்திலைக் கன்றுகளாகிவிட்டன.

நடுப்பகல் வேளை பார்த்து ஆறுமுகத்தாரும் வள்ளிப் பிள்ளை யும் தலைப்புகளைக் கிள்ளத் தொடங்கி அந்த வேலையை மூன்று நாட்களில் முடித்தும் விட்டனர். இந்த வேளைதான் கடந்த வருடத்து அறுவடையான தலைத் தெரிவி ‘சாற்று’ இலைகள் நடுவீட்டுக்குள் பாடத்தில் அடக்கமாக இருந்துவிட்டு விற்பனையானது.

இம்முறை ஒரு புங்குடு தீவுப் புது வியாபாரி, ஆறுமுகத்தாரின் இலையைப் பற்றிக் கேள்விப்பட்டு அதை நல்ல விலைக்குக் கொள்முதல் செய்து மாத்தளைக்குக் கொண்டு சென்றுவிட்டான்.

கடந்த போகத்தில் இரண்டாம் தெரிவான கொச்சியையும், மூன்றாம் தெரிவான பழுத்தலையும் நாலாம் தெரிவான அடிச்சல்லி இடைக் கொட்டுகளையும் சற்றுச் சகாய விலைக்குக் கொள்முதல் செய்த வேலணைக் காலிக் கடைக்காரன் தலைத் தெரிவான சாற்றுப் புகை யிலைக்கு விலை அதிகரித்து விடவே, ‘ஆறுமுகத்தார் எனக்குத் தராமல் ஆருக்குக் குடுக்கப் போறார்’ என்று எண்ணிக் கொண்டு விட்டுப் போய்விட்டான். நல்ல ஆறுமுகத்தார்தான், ஏமாந்து போவார்! நடு வீட்டுக்குள் ஒரு வருடம் சாற்று இலைகளைப் பாடத்தில் அடை வைத்துவிட்டு, இப்போது நல்ல விலைக்கு விற்றுவிட்டார்.

‘குடுக்கிற தெய்வமெண்டால் கூரையைப் பிய்ச்சுக் கொண்டெண் டாலும் குடுக்கும்’ என்று ஆறுமுத்தார் மனத்துக்குள் எண்ணிக் கொண்டபோது அந்தத் தெய்வம் மேலும் ஒன்றைக் கொடுத்து விட்டது. முகுந்தன் சோதனையில் தேறிவிட்டான். இதைவிட இனிப்பான நிகழ்ச்சி அவரின் வாழ்வில் வந்ததாக ஞாபகமில்லை. ஆயினும் கண்டிச் சர்வகலாசாலைக்குப் போக இது போதும் எண்டு நான் நினைக்கேல்லை’ என்று இராமசாமி வாத்தியார் இரண்டு நாட்களுக்குமுன் சொன்னது அவர் மனதை நெருஞ்சி முள்ளாகக் குத்தியது. இருந்தும் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை.

‘ஆறுமுகத்தார், கொழும்பிலை இந்தப் பட்டப் படிப்பு பற்றித் தெரியலை. ஏதோ ஏதோ எல்லாம் யோசிக்கிறாங்களெண்டு பேப்பரு களிலை அடிபடுகுது. என்ன நடக்குமெண்டு சரியாகச் சொல்லேலாமல் கிடக்கு. சில வேளை அதிர்ஷ்டம் அவன்ரை பக்கமாய் நிண்டாலும் நிக்கும்’ என்று இராமசாமி வாத்தியார் சொன்னது ஆறுமுகத்தாருக்குச் சிறிது நம்பிக்கையைக் கொடுத்தது. ‘குடுக்கிற தெய்வமெண்டாக் கூரையைப் பிய்ச்சுக் கொண்டெண்டாலும் குடுக்கும்’ என்று மறுபடியும் அவர் மனதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டார்.

இராமசாமி வாத்தியார் இலேசுபட்டவர் அல்ல. இந்த முறை சோதனைக்கு இன்ன இன்ன கேள்விகள் வரும் என்று அவர் சொல்லி விட்டால் பெரும்பாலும் அப்படியேதான் வரும். உலகத்துப் புதினங்கள் நிறையத் தெரிந்தவர். எம்பிமார் எல்லோருடனும் நிறையத் தொடர் புள்ளவர். அவர் சொல்வது பொய்யாகாது என்பது ஆறுமுகத்தாருக்கும் தெரியும். அரசியல் விவகாரமென்றால் வாத்தியார் எந்தப் பக்கமோ ஆறுமுகத்தாரும் அந்தப் பக்கம். வேறு எந்த விவகாரமாக இருந்தாலும் சரி கண்களை இறுக மூடிக்கொண்டு அவர் காட்டிய வழியில் சென்று விடுவார்.

முகுந்தன் இப்போது வீட்டோடும் வாத்தியார் வீட்டோடும் தந்தை யோடு தோட்டத்தோடும்தான். கண்டி அழைப்புக்காக காத்திருக்கின்றான்.

கன்றுகள் தொப்பி போலக் குமுள் வைத்து வளர்ந்து விட்டன. இலைகள் தடித்து முறுக்கேறி மேலும் மேலும் கறுத்து வந்தன.

மூன்று தடவைகளும் இடைக்கெட்டுகள் நுள்ளியாகி விட்டன. ஒரு நாள் காலை தோட்டத்தை அலசி நோட்டம் விட்டார் ஆறுமுகத்தார். துறையின் நட்டுக்கு நடுவே இடையே வெளிரல் தெரிந்தது. வாய்க்கால் ஓடைகளை மளமளவெனத் தாண்டி அந்த வெளிரல் பகுதிக்கு அவர் வந்து….அவர் நெஞ்சு குளிர்ந்து விறைத்தது. சில செடிகளை அழுக்கணவன் நோய்ப் பிடித்துக்கொண்டது. இதை அவர் எதிர்பார்க்கவில்லை. அழுக்கணவன் நோய் பிடிப்பதென்றால் பத்து நாட்களுக்கு முன்னாலேயே கன்றுகள் சோர்ந்து அழுது குறிப்புக் காட்டிவிடும். கடந்த நாட்களில் எந்தக் கன்றும் அழுததாக அவருக்குத் தெரியவில்லை .

வாடிப்போன சோர்ந்து போன மரணக்கோல மடைந்த செடிகளை அவர் கரங்கள் தாங்கலாகவே தடவிக் கொடுத்தன. பின்பு அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து விட்டார். ‘இஞ்சேரப்பா, ஐஞ்சாறு வருஷமாய் இல்லாமல் இருந்த ஆறுமுகத்தான்ரை தோட்டத்துக் குள்ளை அழுக்கணவன் எல்லே வந்திட்டுது’ அழாக் குறையாக அவர் வள்ளிப் பிள்ளைக்குக் கூறினார். வள்ளிப்பிள்ளைக்கும் கவலை வந்துவிட்டது. இருந்தாலும் அவரைச் சமாளிக்க எண்ணி ‘அது ஏதோ வண்டோ , கிண்டோ மேஞ்சிருக்கும்’ என்று கூறினாள்.

‘இந்த ஆறுமுகத்தாருக்கு நீ அழுக்கணவனைப் பற்றிப் படிப்பீக் கிறாய் என்ன? பொயிலைக் கண்டிலை பழமும் திண்டுக் கொட்டையும் போட்ட எனக்கு நீ சொல்லுகிறாய்.’

ஆறுமுகத்தாரின் இந்தக் குத்தல் பேச்சுக்குப் பிறகு வள்ளிப்பிள்ளை எதுவும் பேசவில்லை . இறப்பில் சொருகி இருந்த பெரிய பல்லுக் கொம்புச் சீப்பால் தலையை இரண்டு இழுவை இழுத்து அள்ளி முடிந்து கொண்டு அவள் புறப்பட்டு விட்டாள்.

‘கண்டுகளிலை அழுக்கணவன் பிடிச்சுட்டு தெண்டு நான் அழுகிறன். நீ எங்கையடிப்பா வெளிக்கிட்டுப் போறாய்? எப்பனும் மயின் பண்ணாமல்’ ஆறுமுகத்தார் பேசினார்.

‘அழுக்கணவன்ரை அலுவல் பாக்கத்தான் போறன். ஊதிலை சுதுமலைப் பனங்கட்டிப் பொன்னியிட்டை பினாட்டுத் தட்டு ஐஞ்சாறு வேண்டியருவம் எண்டிட்டுப் போறன்’ என்றாள் வள்ளிப் பிள்ளை .

ஆறுமுகத்தாருக்கு விஷயம் விளங்கிவிட்டது. முன்பு அழுக்கணவன் பிடித்தபோதெல்லாம் பனாட்டுத் தட்டினால் அழுக்கணவன் பிடிச்ச கன்றுகளைத் தடவித்தான் அவைகளையும் காப்பாற்றியது மல்லாமல் அத்துடன் சாம்பலைத் தூவித்தான் மற்றக் கன்றுகளுக்கும் தொற்றாமல் பாதுகாத்ததென்பதை அவர் மறந்து விடவில்லை. மனைவியைப் பனங்கட்டிப் பொன்னியிடம் பனாட்டு வாங்க அனுப்ப வேண்டுமென்று தான் அவர் தோட்டத்திலிருந்து அவசர அவசரமாக வந்திருந்தார். இப்போது வள்ளிப்பிள்ளை அவரை முந்திவிட்டாள். ம்

பொழுது சரிவிலிருந்து நிமிர்ந்து மேலே ஏறுவதற்கிடையில் வள்ளிப்பிள்ளை எட்டுப் பத்துப் பன்னாட்டுத் தட்டுடன் வந்து சேர்ந்து விட்டாள். அவள் வந்ததும் வராததுமாக அதில் இரண்டு தட்டுப் பனாட்டை எடுத்துக்கொண்டு அவர் ஓட்டமும் நடையுமாகத் தோட்டத்திற்குப் போய்விட்டார்.

இந்த நோய் நிமிடங்களைக் கணக்கிட்டுக் கொண்டே பரவிவிடக் கூடியது என்பது அவருக்குத்தெரியும். எட்டுப் பத்து நாளாக அடுப்புப் புகட்டு மூலையில் தேக்கி வைத்திருந்த சாம்பலைக் குஞ்சுக் கடகம் ஒன்றில் போட்டு இடுப்பில் ஏற்றிக் கொண்டே வள்ளிப்பிள்ளையும் ஆறுமுகத்தாரின் பின்னால் கிளம்பிவிட்டாள்.

நான்கைந்து நாட்கள் தொடர்ச்சியான பனாட்டுத் தடவலாலும் சாம்பல் தெளிப்பாலும் அழுக்கணவன் கட்டுக் கடங்கி இலைகள் மறுபடியும் பச்சையாகித் தெம்படைந்தன. இப்போதுதான் ஆறுமுகத் தாருக்கு மூச்சு ஒழுங்காக வந்தது.

பங்குனி முடிந்து வரும்போது இலைகள் முறுகித்தடித்து அடி இலைகள் பழுப்பு மஞ்சள் நிறம் காட்டி அறுவடைக்காக ஆறுமுகத்தாரரை அழைத்தன.

ஆறுமுகத்தார் மூத்தவனுடன் இன்னும் இரண்டு பேரைக் கூலிக்குச் சேர்த்துக்கொண்டு கன்று வெட்டத் தொடங்கிவிட்டார். கன்றுகளை அடியோடு வெட்டி, ஒரு நாள் பங்குனி வெயிலுக்கு வாடவிட்டுத் தெரிவு நறுக்கு வேலை ஆரம்பமாகி விட்டது.

சராசரி சாற்றிலைகளாக கன்றுக்கு ஐந்து தேறின. பாணி இடுவதற் காக அவைகள் தோட்டு வெட்டு வெட்டப்பட்டன.

அடுத்து கொச்சி இலைகள் குடி இலைக்காகச் சீவல்கள் ஆக்கப்பட்டு சராசரி கண்டுக்கு மூன்று இலைகள் தேறின.

பழுத்ததில் இரண்டு மூன்று வீதம். மிகுதி அலி சல்லியாகவும் தரம்பிரிக்கப்பட்டு, பனை ஓலைக் கீறாலால் ஐவ்வைந்தாக இணைக்கப் பட்டு வாடல் கயிற்றுக்குத் தூங்க விடப்பட்டன. இன்னும் இருப்பது மூன்றே மூன்று பெரிய வேலைதான். வாடிய இலைகளைக் குடிலுக்குள் தூக்குதல், பொச்சு மட்டையோ ஊமலோ கங்கு மட்டையோ போட்டுப் புகைத்தல். வேண்டுமானால் மூன்றையும் ஓரே தடவையில் சேர்த்துப் புகைத்தல். ஆறுமுகத்தார் தனக்கென்று கற்று வைத்திருந்த கருப்பணி தோய்த்தல், கண்டல் பட்டைப் பொருக்குக்குப் புகை காட்டல் அவ்வளவுதான். அப்புறமென்ன அவை நடுவீட்டுக்குள் தனித்தனிப் பாடமாக ஏறிவிடும். ஆறுமுகத்தார் எல்லா வேலைகளையும் கட்டிய கொடுக்கு அவிழ்க்க நேரமின்றிச் செய்து முடிக்க வள்ளிப்பிள்ளைக்கு நாலாவது பிள்ளையும் ஜனிக்க நேரம் சரியாக இருந்தது.

வள்ளிப்பிள்ளை சத்தி, சத்தியாக எடுத்தாள். ஆறுமுகத்தார் மிகவும் வெட்கப்பட்டார். இப்போது புகையிலைப் பாடமேற்றியதால் ஒரு சிறு ஓய்வு, ஒரு மாதம் போனால் நாலாயிரம் கன்றுகளின் அடிக்கட்டை களில் முளையிடும் கெட்டுகளையும் சுருட்டு உள்ளுடனுக்காக உலர்த்தி காசாக்க வேண்டும். இடையே ஒரு தடவை பாடங்களைப் பிரித்து ஐவ்வைந்து இலைகள் கொண்ட பத்துக் கட்டுகளை இணைத்துப் பெரு ஓலைக்கீற்றால் பெருங்கட்டுக்களாக்கி மறுபடி பாடம் வைத்துவிட்டால் அப்புறம் என்ன, உரிய காலத்திற்கு மாத்தளை வியாபாரிகளும் காலி வியாபாரிகளும் வந்து காசை அள்ளிப்போட்டு எடுத்துச் செல்வார்கள்.

சொல்லி வைத்தாற் போல மூத்தவனுக்கு அடுத்தவள் சரஸ்வதியும் புத்தி அறிந்துவிட்டாள். வள்ளிப்பிள்ளைக்குத்தான் வேலை. அடிக்கடி வரும் குமட்டலை அடக்கிக்கொண்டு கத்தரிக்காய்ச் சாறு, முட்டை வெள்ளைக்கரு என்றெல்லாம் பக்குவப்பட்ட மகளை வீட்டு மூலைக்குள் வைத்துப் பாகம் பண்ணிக்கொடுக்க வேண்டும். தான் பிராக்காக இருக்கும் போது சரஸ்வதி தண்ணீர்க் குடத்தடிக்குப் போய்த் தண்ணீர் குடித்து விடாதபடி இளையவளைப் பாடசாலையால் மறித்து அக்காள் காரிக்கு காவலும் வைத்துவிட்டாள்.

தோட்ட வேலைப்பளு, வீட்டு நிகழ்வுகள் எல்லாம் சேர்ந்து நீண்ட இரண்டு மாத காலம் ஆறுமுகத்தாரை இராமசாமிச் சட்டம்பியாரிடம் போகவிடாது தடுத்து விட்டன.

வாத்தியாரைப் பார்க்கும் சோட்டை அவருக்கு வந்துவிட்டது. ஒரு நாள் பொழுது கருகிவிட்ட பின்பு அவர் வாத்தியாரிடம் போனார்.

‘வாரும், வாரும் ஆறுமுகத்தார். என்ன கண்டு கனகாலம்? முகுந்தன் சொன்னவன் தங்கச்சியும் புத்தி அறிஞ்சிட்டாளெண்டு. அதுதான் உம்மை இங்கினேக்கைக் காணக்கிடைக்கேல்லை’ என வாத்தியார்

ஆறுமுகத்தாரை வரவேற்றார்.

‘ஓமோம் வாத்தியார். தோட்டவேலைகளம் ஒரு மாதிரி ஒப்பேறி யிட்டுது. திங்கக்கிழமைதான் நாள் பார்த்துப் பாடம் போட்டனான். அதோடை மனிசிக்கும் எப்பன் சுகமில்லை …’

ஆறுமுகத்தார் நீர் விழுங்கிறதைப் பார்த்தால் மனிசிக்கு…’ வாத்தியாரும் மேலே கேட்க முடியாமல் வெட்கப்பட்டார்.

‘ஓம் வாத்தியார், அதுதானாக்கும். சத்தி எடுக்கிறாள் பாவி. ‘ ஆறுமுகத்தாரும் எப்படியோ விஷயத்தைக் கக்கிவிட்டார். ‘அதுக்கேன் ஆறுமுகத்தார் வெட்கப்படுகிறீர்? இப்ப என்ன உமக்கு வயசா போட்டுது? வேறை ஊருகளிலை அறுவது வயதுவரை பெறுகிற வளவை தங்கப்பதக்க மெல்லே வேண்டுகினம். நீர் வெட்கப்படுகிறீர்.’

அந்தப் பேச்சு அத்துடன் நின்றது. அதை நீட்ட வாத்தியார் விரும்ப வில்லை .

‘ஆறுமுகத்தார் பொடியன்ரை காரியம் சரிவராது போலைக் கிடக்கு. கொழும்பிலை உள்ளுக்கு ஏதோ வில்லங்கப்படுகிறாங்கள் போலைக் கிடக்கு. எங்கடை எம்பீயளும் விடுகிறாங்கள் இல்லையாம். அதுதான் இந்தக் கோசு வண்டிக்குக் கூப்பிடுகிற பொடியளின்ற காரியத்தைப் பின் போடுறாங்காளம்.’

வாத்தியார் பேசும் போது ஆறுமுகத்தாரின் நெஞ்சு இடித்துக் குழம்பியது.

‘அப்ப வாத்தியார் என்ன செய்வம்?’ ஆறுமுகத்தார் மொட்டை யாகக் கேட்டார்.

‘எங்கடை எம். பியிட்டை முகுந்தனைப் பற்றிக் கதைச்சனான். உந்தப் படிப்போடை ஏதெண்டாலும் வேலை தேடலாம் எண்டும் சொன்னவர். உங்கடை விலாசமும் குடுத்திருக்கிறன்’ வாத்தியாரின் இந்தப் பேச்சு ஆறுமுகத்தாருக்கு நிம்மதியைக் கொடுத்தது.

ஆறுமுகத்தார் வாத்தியாருக்குப் பயணம் சொல்லி விட்டு சைக்கிளோடு வெளியேறிய போது வாத்தியாரின் கல்லு ஒழுங்கைக்குள் மக்கி ஏற்றிய வண்டி ஒன்று வந்து மக்கிப் பறித்துக் கொண்டிருந்தது.

‘என்ன ஆறுமுகத்தார்… துலையாலையே?’ என்ற குரல் ஒன்று கேட்டுத் திரும்பிப்பார்த்தார். குழைப்புறோக்கர் கந்தப்புத் தாடியைத் தடவிக் கொண்டே அருகே வந்தார்.

இல்லைக் காணும். வாத்தியார் வீடு மட்டும் போட்டு வாறன்’ என்று ஆறுமுகத்தார் சொல்லி முடிக்கு முன் –

‘இம் முறைக்கு எங்கையெண்டாலும் குழைக் கிளை தீர்த்திருக் கிறீரோ?’ எனக்கேட்டார் கந்தப்பு.

ஆறுமுகத்தார் அதற்குப் பதிலாக “இல்லைக் கந்தப்பர், வாற பறுவத்துக்குக் குழை தாழ்ப்பு துவங்க வேணும். ரெண்டு வண்டில் குழை அடுக்குப் பண்ணும்’ என்றார்.

‘என்ன காணும் வண்டிலோ…? இப்ப ரைக்ரரெல்லோ வந்திருக்கு’ என்று சொன்னபோது, ஆறுமுகத்தாருக்குச் சிறிது வெட்கம் வந்து விட்டது.

‘நீர் போங்காணும் ரெண்டு ரெக்ரர் குழை அனுப்பி விடுகிறன்’ என்றுகூறியபடி கந்தப்பர் பிரிந்துவிட்டார்.

5

அடுத்த புகையிலைக் கண்டுப் போகமும் வந்துவிட்டது. வாத்தியார் சொன்னது போல இந்த இடைக்காலத்துள் கண்டிக்கான அழைப்போ வரவில்லை. வாத்தியாருக்கு மதிப்புக் கொடுக்கும் எம்பீயிடமிருந்து எந்தத் தகவலுமே வரவில்லை .

மூத்தவனுக்கு ஆறுமுகத்தாரும் வேறு நான்கு பேர்களும் தோட்டக் கரைக் குழைதாழ்ப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்தத் தடவை தடித்த முறுக்கெடுத்த வேலணைக் குழையை புறோக்கர் கந்தப்பு அனுப்பி வைத் திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் உடுவில் தாமோதிரியான் ரைக்ரரில் உடுவில் குழை பறிபட்டிருந்தது.

பொழுது கிளம்பி நெற்றிக்கு மேலாக உயர்ந்துவிட்ட வேளை குழை தாழ்ப்புக்காரர்களுக்குக் குரக்கன் ரொட்டியும் அலுமினியப் பாத்திரத்தில் தேநீரும் கொண்டுவந்த வள்ளிப்பிள்ளைவயிற்றையும் தள்ளிக்கொண்டு வந்தாள். முந்தானைக்குள்ளிருந்து அவசர அவசர மாக மூத்தவனிடம் கடிதம் ஒன்றைக் கொடுத்தாள். அதில் ஆறுமுகம் முகுந்தன், முனியப்பர் கோவிலடி இணுவில் என விலாசமிடப் பட்டிருந்தது. ஒரு மூலையில் எம்.பீயின் முத்திரையும் பொறிக்கப் பட்டிருந்தது.

மூத்தவன் அவசர அவசரமாகக் கடிதத்தை உடைத்துப் படித்தான். ‘ஐயா, எம். பீயின்றைக் கடிதம் வந்திருக்கு உடனடியாக வந்து காணட்டாம்,’ வாய் நிறைய மூத்தவன் கூறினான்.

ஆறுமுகத்தாரின் நெஞ்சுக்குள் ‘வாத்தியார் சொன்னது போலை மூத்தவனுக்கு உத்தியோகம் வந்திருக்கு,’ என்ற எண்ணம் கூத்தாடியது.

‘அப்ப நீ போய் மேலைக் கழுவிப்போட்டு வெளிக்கிடு. நான் இந்த வரிசை சால் மறைஞ்சாப்போலை வாறன்’ என மூத்தவனைப் பார்த்துக் கூறினார் ஆறுமுகத்தார்.

‘இப்ப அவர் எங்கையெண்டாலும் வெளிக்கிட்டுப் போயிருப்பார். பொழுது படேக்கைப் போவம் ஐயா!’ மூத்தவனின் இந்தப் பேச்சு அவருக்குச் சரியாகவே பட்டது.

மத்தியானப் பொழுது நான்றாகச் சரிவுக்கு வந்துவிட்டதுடன் குழை தாழ்ப்பை நிறுத்திவிட்டு ‘தம்பி நீ போய்க் குளிச்சுக் குளிச்சிப் போட்டு வெளிக்கிட்டு நில். இந்த மண் வெட்டியளையும் கொண்டு போய்வை. நான் ஒருக்கா வாழையனிட்டைப் போட்டோடியாறன்’ என்று கூறிக் கொண்டே வாழையன் வீட்டுப் பக்கமாக ஆறுமுகத்தார் போனார்.

வாழை வளர்ப்பில் விண்ணனாகவும் வாழை வியாபாரத்தையே தனியச் செய்யபவனாகவும் இருந்தபடியால் அவனுக்கு வாழையன் என்ற பட்டப் பெயர் வந்திருக்க வேண்டும்.

வாழையனுடன் வாழைத் தோட்டத்துக்குள் நுழைந்து நல்ல இடைப் பழம்பழுத்த ஆழமான கப்பல் குலை ஒன்றை வெட்டி எடுத்துக் கொண்டார் ஆறுமுகத்தார்.

குறைத்துக் கணக்கிட்டாலும் உத்தேசத்திற்கு நூறு காய்களுக்கு மேல் தேறும்! கப்பல் வாழை அப்படிக் காய்ப்பது இல்லை. அது இளம் ஈத்துக் குட்டையாக இருந்தபடியால் தலை ஈத்தை அப்படிப் பெற்று விட்டது.

குலையை வாழைச் சருகினால் நன்றாக மூடிக்கட்டிக் குலைச் சுமையோடு ஆறுமுகத்தார் வீட்டுக்கு வர இருட்டிவிட்டது.

மூத்தவன் தகப்பனுக்காகக் காத்திருந்தான். கிணற்றடிக்குச் சென்று நாலு வாளி ஊற்றிவிட்டு வரவும் வள்ளிப்பிள்ளை கோப்பியைக் கலக்கி வைக்கவும் சரியாக இருந்தது.

கோப்பி நல்ல இளம் சூடு! குடிப்பதற்கு இதமாகத்தான் இருந்தது. ஆனால் அதைப் பொச்சடித்து, பொச்சடித்து உறிஞ்சிக் குடித்து உருசி பார்க்க அவருக்கு நேரம் இல்லை. ஓர் இழுவையிலேயே இழுத்துவிட்டு வாழைக் குலையை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவிட்டார். பின்னால் மூத்தவனும் தனது சைக்கிளில் சென்றான்.

எம்.பீயின் வீட்டுக்கு ஏறக்குறைய ஐந்து மைல்வரை போக வேண்டும். போகும் வழியில்தான் இராமசாமி வாத்தியாரின் வீடும் இருந்தது. வாத்தியார் வீட்டுக்குப் பெரு வீதியிலிருந்து ஒரு குச்சொழுங்கைக்குள் போக வேண்டும். சமீபத்தில் கிராமசபைத் தேர்தல் வர இருந்ததால் இப்போதைய கிராமசபை உறுப்பினர் நான்கைந்து வண்டில் மக்கிகளைக் கொண்டுவந்து கொட்டி அரையும் குறையுமாகப் பரவி விட்டிருந்ததால் வாழைக் குலைபாரத்துடன் சைக்கிளை அப்பால் கொண்டு செல்ல முடியவில்லை .

றோட்டுக் கரையில் வாழைக் குலைச் சைக்கிளை ஸ்ராண்டில் விட்டு மூத்தவனைக் காவலுக்கு விட்டுவிட்டு வாத்தியார் வீடுவரை ஆறுமுகத்தார் நடந்தே போனார். அவரின் கால்களில் கற்கூர்கள் குத்தி அவரைப் படாதபாடு படுத்தின.

ஆறுமுகத்தார் சென்ற போது வாத்தியார் வீட்டில் இல்லை. உடனேயே திரும்பி விட்டார். ‘பரவாயில்லை திரும்பி வரும்போது வரலாம்’ என்பது அவர் எண்ண ம்.

எம். பீ. வீட்டில் நிறையச் சனமாக இருந்தது. சனம் கலைந்து போகும் மட்டும் ஆறுமுகத்தாரோ மூத்தவனோ அல்லது வாழைக் குலையோ எம்.பீ கண்ணில் படவில்லை .

மணி பத்துக்கு மேலாகிவிட்டது. ‘அதிலை வந்து நிக்கிறது ஆறுமுகத்தார் போலை கிடக்கு?’

எம்.பீ. கண்டு விட்டார். கேட்டார்.

ஆறுமுகத்தாரும் மூத்தவனும் வெளிச்சத்துக்கு வந்தனர். வாழைக் குலை இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை.

‘உதுதானே உம்மடை மோன்? ஸ்கந்தாவிலை பந்தடியிலை வலு கெட்டிக்காரன் எண்டு பேர்! வாத்தியார் எல்லாம் எனக்குச் சொன்னவர்…. யூனிவசிற்றித் தெரிவை இம்முறை நிறுத்திப் போட்டாங்கள். எங்கடை சீமெந்துப் பக்ரறிக்கந்தோர் ஒண்டு கொழும்பிலை இருக்கு. அதிலை வேலையள் கிடக்கெண்டு கேள்வி. அதுதான் வரச்சொல்லிக் கடிதம் போட்டனான். எல்லாத்துக்கும் பேந்து நாளைக் கொருக்கா என்னை வந்து சந்தியுமன், உமக்கெண்டபடியாத்தான் பொடியனை அதிலை சேத்துவிட லாமெண்டு தெண்டிக்கிறன். எக்கணம் இஞ்சினியர்மார் அஞ்சைப் பத்தைக் கேப்பாங்கள். பிறகொருக்காச் சந்தியுமன்.’

எம்.பீ. தொடர்ச்சியாகப் பேசி முடித்துவிட்டார். ஆறுமுகத்தாரும் தலையசைத்துச் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

‘போகயுக்கை வெறும் கையோடை போறதோ எண்டு என்ரை மனிசி விட மாட்டனெண்டிட்டு… மூத்தவன் அதை ஒருக்கா அவிட்டு உள்ளுக்குக் கொண்டு போய் அம்மாட்டைக் குடு’ என்று கூறிக்கொண்டே

ஆறுமுகத்தார் தயங்கி நின்றார்.

‘ஆரும் கண்டா என்ன நினைப்பினம்? எண்டாலும் மனிசி குடுத்து விட்டதைத் திருப்பி அனுப்பிறதும் சரியில்லை ‘ எம். பீயும் நாசுக்காக நடந்து கொண்டார்.

மூத்தவன் வாழைக் குலையுடன் விறாந்தையைத் தாண்டி உள்ளே சென்று திரும்பினான். . ‘அப்ப நாங்கள் வாறம் ஐயா.’

ஆறுமுகத்தார் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.

முகத்தார் நில்லும், ஒரு கதை’ என்று கூறிக் கொண்டே எம்.பீயும் முற்றத்துக்கு இறங்கிவிட்டார்.

‘தம்பி, நீ முன்னுக்குப் போ வாறன்’ என்று கூறிக்கொண்டே ஆறுமுகத்தார் சற்றுத் தாமதித்தார்.

‘முகத்தார், அஞ்சைப் பத்தைக் குடுக்கிற விஷயத்தை அடுக்குப் பண்ணு… வாத்தியாருக்கு மூச்சு விட்டிடாதையும், பிறகு அந்தாளோடை அண்டவிக்க ஏலாது’ என்று ஆறுமுகத்தாரின் காதுக்குள் பக்குவமாகப் போட்டு வைத்தார் எம்.பீ.

ஆறுமுகத்தாரும் மூத்தவனும் வீட்டுக்கு வந்து சேர மணி பதினொன் றுக்கு மேலாகிவிட்டது. வள்ளிப்பிள்ளை அவர்களுக்காகக் காத் திருந்தாள்.

‘என்னவாமப்பா எம்.பீ.’ என வள்ளிப்பிள்ளை முந்திக்கொண்டு கேட்டாள்.

‘அதெல்லாம் ஒரு மாதிரி ஒழுங்கு பண்ணித்தாறன் எண்டு சொல்லிப் போட்டார். மனிசன் சொன்னாச் சொன்னதுதான் ஓமெண்டு சொல்லாது சொன்னா உயிர் போனாலும் செய்யாமல் விடாது.’

ஆறுமுகத்தார் அவருக்குப் புகழ்பாடினார். மூத்தவன் உணவருந்தி வீட்டுப் படுக்கப்போன பின்புதான் ஆறுமுகத்தார் அடுக்களைக்குள் போய் உணவருந்தினார்.

‘கொழும்பிலை எங்கடை சீமெந்து பைக்ரறியிலை இடம் கிடக்காம். அதிலை சேர்க்கலாமாம். அவங்கள் இஞ்சினியர் மாருக்குத்தான் அஞ்சைப் பத்தைக் குடுக்க வேண்டி வருமாம். அடுக்குப் பண்ணட்டாம். வாத்தியாருக்குத் தெரியப்படாதாம்!’

இதை ஆறுமுகத்தார் சொல்லி முடிக்குமுன், ‘அதுக்கென்ன அஞ்சு பத்துத்தானை’ வள்ளிப்பிள்ளை அநாயாச மாகக் கூறிவிட்டாள்.

ஐந்து பத்தென்றால் ஐந்தோ பத்தோ, அல்லது ஐம்பதோ நூறோ… அல்லாவிட்டால் ஐநூறோ ஆயிரமோ… அதுவுமில்லா விட்டால் ஐயாயிரமோ பத்தாயிரமோ… இவைகளில் எது என்பதை அறியும் உலக ஞானம் வள்ளிப்பிள்ளைக்கு இல்லை.

அப்பாடா! ஒரு மாதிரி விஷயம் ஒப்பேறிவிட்டது. புகையிலைத் தரைக்கு வாய்க்கால் தண்ணீர்விடத் தொடங்கிய காலத்தில் அகிளான் ஆறுமுகத்தாரின் சிரேஷ் புத்திரன் முகுந்தன் என்ற மூத்தவனுக்கு சீமேந்து பக்ரறி தலைமைக் கந்தோரில் வந்து வேலையை ஒப்புக் கொள்ளும் நாள் குறித்துக் கடிதம் கிடைத்துவிட்டது.

ஆறுமுகத்தாரின் வீடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. ஆறுமுகத் தாருக்குத் தோட்டத்திற்குப் போவது, முறைப்படி வேண்டியவை களைச் செய்வது, வருவது சாப்பிடுவது எதுவுமே இப்போது மனதுக்குள் தெரிந்து செய்யப்படுவதாக இருக்கவில்லை.

இதுவரை எந்த உறவினர் உதவி பெற்றோ அவர் வாழவில்லை . அவரின் சுபாவம் அப்படி.

அவரின் நெருங்கிய இரத்த உறவினர்களாகவும் மனைவி வழிவந்த உருத்தினராகவும் பலர் கொழும்பில் இருந்தனர். யாரிடமும் கடமைப் பட அவருக்கு மனது வரவில்லை. மாத்தளையிலும் கொழும்பிலும் கடை வைத்துக்கொண்டு கொழும்பிலே குடித்தனம் நடத்தும் புகை யிலை வியாபாரத்தின் பிற்பகுதி வாடிக்கைக்காரரான புங்குடுதீவு வீரசிங்கத்தின்ர மூத்தவனைக் கொண்டு கடிதம் எழுதுவித்தார்.

‘நந்தாவில் முனியப்ப சாமியின் கிருபையை முன்னிட்டு என்மேல் பட்சம் மறவாத திரு வீரசிங்கத்திற்கு… என்று ஆரம்பித்து வீட்டுச் சுகங்கள் எழுதி அவ்வீட்டுச் சுகங்களைக் கேட்டு விசாரித்து ‘எனது மகன் முகுந்தனுக்கு உங்குள்ள சீமேந்துப் பக்ரறி தலைமைக் கந்தோரில் வேலை கிடைத்திருக்கிறது. இந்த மாதம் இருபத்தி ஓராம் திகதி இரவு றெயிலில் புறப்பட்டுக் காலை கொழும்புக்கு வருகிறோம். கொழும்பு ஸ்ரேசனில் எங்களைச் சந்திக்கவும்…’ என்று எழுதி முடிப்பித்து வீர சிங்கத்தின் விலாசத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே அனுப்பி வைத்துவிட்டார்.

ஆறுமுகத்தார் தலைநகருக்குப் போகப் போகிறார். மூத்தவனாகிய முகுந்தனுக்குத் தைக்கப்பட்ட உடுப்புகளுடன் இவருக்குமாக வெள்ளை வெளேரென்ற துணியில் அரைக்கை நேஷனலும் ஒன்று தைக்கப்பட்டது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் வள்ளிப்பிள்ளையுடன் மண வறையில் கட்டியிருந்த மாறுகரைச் சேலம் பட்டுவேட்டியையும் விசிறிமடிப்பு மாறுகரைச் சால்வையும்தான் அரைக்கை நேஷனலுக்கு இணையாக அணிந்து கொள்ள வேண்டு மென்பது வள்ளிப்பிள்ளை யின் ஆசை. அந்த ஆசை மூத்தவனுக்குப் பிடிக்கவில்லை. அவர் வழக்க மாக நல்ல காரியங்களுக்கு இரண்டாக மடித்து உடுக்கும் சருகையால் ஆன ஆயிரத்து எழு நூற்று மூன்று போட்ட வேட்டியையும் அதற்கு இணையாகப் பரமாஸ் சால்வையையும் அணிந்துவர வேண்டுமென அவன் பிடிவாதம் பிடித்தான்.

‘ஏன்டாப்பா, நான் மாறுகரை உடுக்கிறது உன்ரை நீளக் களுசானுக்குப் பொருத்தமில்லையெண்டு நீ வெக்கப்பட்டா எனக்கும் ஒரு நீளக் களுசானைத்தாவன் போட்டுக்கொண்டு வாறன்’ என ஆறுமுகத்தார் மன வேக்காட்டுடன் சொன்னார். ஆயினும் இறுதியில் மகனின் விருப்பப்படியே ஆயிற்று.

மனைவிக்கும் பெட்டைகளுக்கும் கண்ணீர் மல்கபயணம் சொல்லி விட்டு புறப்பட்டபோது மனவிையின் வயிற்றைப் பார்த்துப் பரிதாபமும் ஏக்கமும் அடைந்தார்.

‘இஞ்சேர், நான் வாறதுக்கிடையிலை வயிதத்துக்கை ஏதெண்டாலும் செய்திட்டா முனியப்ப கோவிலடியிலை ஆரையும் விட்டுக் காரைப் பிடிச்சுக் கொண்டு இணுவில் ஆசுப்பத்திரிக்குப் போப்பா! கிட்டடி எண்டிட்டு நடந்து போயிடாதை!’ என்று கூறிக்கொண்டே ஆறுமுகத்தார் புறப்பட்டார்.

கொழும்பு ஸ்ரேசனுக்கு வரும்படிதான் ஆறுமுகத்தார் வீரசிங்கத் திற்குக் கடிதம் எழுதினார். இதனால் வீரசிங்கத்திற்குப் பெரும் இடைஞ் சலாகிவிட்டது. கொழும்பென்றால் மருதானையோ, கோட்டையோ என்பது பெரும் பிரச்சினையாகிவிட்டது. என்றாலும் அவர் அதை ஒரு மாதிரிச் சமாளிக்கக் கொழும்புக் கடையில் மனேச்சராக இருந்த மைத்துனனுக்கு ஆறுமுகத்தார் பற்றிய உருவ அமைப்பை மனத் திரையில் பதியவைத்து அவனை மருதானை ஸ்ரேசனில் நிற்க வைத்துத் தான் கோட்டை ஸ்ரேசனில் நின்றுகொண்டார்.

ஆறுமுகத்தார் கையில் தகர ட்றங்குப் பெட்டிசகிதம் இறங்க, மூத்தவன் பின்னால் இறங்கி வந்தான். ஆறுதலாகத் தனக்குப் பின்னால் தான் இறங்க வேண்டுமென்பது அவரின் கண்டிப்பான உத்தரவு.

வீர சிங்கத்தார் தனது போட் காரிலேயே வந்திருந்தார். அது வசதியாகி விட்டது. அவர்களைச் சுமந்து கொண்டு கார் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டது.

வீரசிங்கத்தாரின் வீடு வசதியான சிறிய மேல் அடுக்குக் கொண்ட வீடு. மறுநாள் வீரசிங்கத்தாரின் காரிலேயே மூத்தவன் இராசா போலச் சென்று வேலையைப் பொறுப்பேற்றுக் கொண்டான். ஆறுமுகத்தாருக்கு இப்போதுதான் மனதிற்கு நிம்மதியாக இருந்தது. கடைசி நேரத்தில் வேலை கிடைக்காமல் போய்விடுமோ? என அடித்துக்கொண்டிருந்த அவர் மனம் அமைதியடைந்தாலும் அந்த அமைதிக்குள்ளும் பெறு மாதக்காரியான வள்ளிப்பிள்ளையை அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை .

‘இஞ்சரும் முதலாளியார் வந்த வேலை முடிஞ்சது. நான் ராவைக்கேற யில் ஏறவேணும்… நான் உம்மோடை ஒரு விஷயம் கதைக்க வேணும் எண்டு நினைச்சனான் உமக்கேன் ஒளிப்பான். நான் சொந்தக்காரர் ஆரிட்டையும் வாய்விட மாட்டன். கனபேர் கொழும்பிலை இருக் கிறாங்கள். பொடியன் கடைச் சாப்பாடு திண்டுப் பழக்கமில்லாதவன். கைத்தீனிலை வளர்ந்தவன் அதுதான் நல்ல இடமாப் பாத்துச் சாப்பாட்டுக்கும் அறைக்கும் ஒழுங்கு செய்ய உம்மைக் கேக்க வாய் உன்னிப்போட்டு விட்டிட்டன்…!’

ஆறுமுகத்தார் ஒரு மாதிரி சுற்றி வளைத்துப் பேசி முடித்துவிட்டார். ‘நல்ல கதைதான் ஆறுமுகத்தார்! கப்பல் போலைப் போல்வீடு, கீழ்வீடு நான் வைச்சிருக்கிறன். பொடியனை வேறை எங்கையேனும் விடுவனோ, கேக்கிறன்…? பொடியன் மேல் வீட்டு அறையிலை தங்கட்டும், சாப்பாடும் வீட்டிலைதான். உமக்குச் செய்யாமல் வேறை ஆருக்குச் செய்யப்போறன்…’

6

வீரசிங்கத்தாரும் தன் முடிவைச் சொல்லிவிட்டார். வீரசிங்கத்தாரின் வீட்டில் அவரின் மகள் இருவரும் மருமகள் ஒருத்தியும் இருப்பதை இந்த ஒருநாள் இடைவெளிக்குள் அவதானித்துக் கொண்ட ஆறுமுகத் தாரின் மனத்திற்குள்’ குமர்ப்பிள்ளையள்’ இருக்கிற இடத்திலை ஒரு இளந்தாரியை விடுகிறதோ? என்ற எண்ணம் கனவேளைதான் ஓடியது. ஆனாலும் அவர் அதைப் பொருட்படுத்த விரும்பவில்லை.

மகனைவிட்டுப் பிரியும்போது அவனைக் கட்டித் தழுவிக் கொஞ்சிய ஆறுமுகத்தார் அழுது விட்ட காட்சியை அவ்வீட்டில் எல்லோரும் கண்டுவிட்டார்கள் என்பதை நினைக்க மூத்தவனுக்கு வெட்கமாக இருந்தது.

‘ஏன் முகத்தார், தம்பியும் கவலைப்படுகுது, ரெண்டு நாளைக்குத் தம்பியோட நிண்டிட்டுப் போமன்’ என்ற வீரசிங்கத்தாரின் கேள்விக்கு ‘அங்கை தோட்டம் துரவுகள் அலக்கழிச்சுப்போம்! பேந்து ஒரு நேரத்திலை வந்து ஆறுதலாய் நிக்கிறன்’ என்று பதில் கூறிவிட்டார் ஆறுமுகத்தார். வள்ளிப்பிள்ளை பெறுமாதம், நாளைக்குக் கனத்தநாள் என்பதைப் பற்றி அவர் மூச்சுக்கூட விடவில்லை.

அன்றே றயிலிலும் ஏறிவிட்டார். வள்ளிப்பிள்ளை கடைக்குட்டியனைப் பிரசவித்துவிட்டாள். பக்கத்தில் இணுவில் வைத்திய விடுதி இருந்தும் உள்ளூர் மருத்துவச்சிக் கிழவி நாகத்தையின் உதவியுமின்றியே அவளுக்குச் சுகப்பிரசவம் நடந்தது.

பொழுது கருகிய வேளை தோட்டக்கரைக்கு உளவாரம் புல்லுக் கட்டுடன் சென்று திரும்பி வந்தவளுக்கு இடுப்புவலி காணவே, கோடிப்புறம் சென்று அழுக்குகளைப் புதைக்கப் பாரையால் சிறு கிடங்கொன்றைத் தோண்டிவிட்டு ஆறுமுகத்தாரையும் மருத்துவிச்சி வீட்டுக்கு அனுப்பிவிட்டு அடி வீட்டுக்குப் போனவள் மருத்துவிச்சி வரும் முன்னே பிரசவித்து விட்டாள். கையோடு மருத்து விச்சியும்

ஆறுமுகத்தாரும் வந்து சேர்ந்துவிட்டனர்.

ஐந்துக்கு வெந்நீர் வார்க்க வேண்டும். பருத்தி, ஆடாதோடை ஆகியவைகளின் குழைகள் தோட்டத்தரைப் பக்கத்திலேயே கிடந்தன. நொச்சி மட்டும் கிடைக்கவில்லை. மூன்று மைலுக்கு அப்பால் உள்ள முக்கிரான் பிட்டிக்குச் சென்று அதைப் பிடிங்கிவந்து ஒரு மாதிரி வெந்நீர் வார்வை முடிந்தது,

ஏழுக்கும் ஒன்பதுக்கும் இலை குழைகளின் வெந்நீர் வார்வை போக, பதின் ஒன்றுக்கு வேப்பம் பட்டைத் தண்ணீர் வார்வையும் முடித்துக் கொண்ட போதுதான் கடைக் குட்டியானுக்கு இன்னும் பிள்ளைப் பதிவு செய்யவில்லை என்ற எண்ணம் அவருக்கு வந்தது.

முதலில் விதானையாரிடம் பதிந்து துண்டு வாங்கிச் சென்றுதான் பதிவுகாரனிடம் பெரும் பதிவு செய்யவேண்டும்.

‘இஞ்சை கேள், மூத்தவனுக்குப் பேர்வைச்சுப் பேந்து இடையிலை மாத்தினது போலை மாத்தாமை எப்பன் நல்ல பேராவை! இளையவன் எண்டு வைச்சுப்போடாதை… சந்திரன் எண்டு வைக்கச் சொல்லித்தான் பெட்டையள் சொல்லுறாளவை.’ என வீட்டுக்குள் இருந்து அவருக்குக் கேட்கும் விதத்தில் வள்ளிப்பிள்ளை குரல் வைத்தாள்.

இந்தப் பதினொரு நாள்வரை மருத்துவிச்சிக் கிழவி பாகம் செய்து கொடுக்க அரைத்து வந்த மூத்தமகள் சரஸ்வதிக்குக் காய்ச்சல் வந்து விட்டமையால் ‘உதென்ன பெரிய வேலையோ…?’ என்று கேட்டு விட்டு, அம்மியடியில் உட்கார்ந்து காயம் அரைத்து அதை உடம்பில் பல இடங்களிலும் புரளவைத்த புனித வாசனையோடுதான்

ஆறுமுகத்தார் பிள்ளைப் பதிவுக்குப் புறப்பட்டார்.

“மூத்தவன் பெயர் முகுந்தன். அடுத்தவள் பெயர் சரசு. அதற்கு அடுத்தவள் பெயர் மல்லிகா. இளையவன் பெயர் சந்திரன்’ பிள்ளைப் பதிவுக்காரன் வீட்டிலிருந்து திரும்பும்போது தனது பிள்ளைகளின் பெயர் இலட்சண வரிசையை மனதில் சொல்லிப் பார்த்துக்கொண்டு ஓடிவந்து சேர்ந்தார் ஆறுமுகத்தார்.

அடுத்த போகக் காலமும் தன்னாலேயே ஓடிவந்துவிட்டது. வள்ளிப் பிள்ளை குழந்தைப் பிள்ளைக்காரி என்பதால் இம்முறை இடைக்காலக் காய்கறிகளைச் சுன்னாகம் சந்தைக்கும் மருதனாமடம் சந்தைக்கும் உரும்பிராய் சந்தைக்கும் திருநெல்வேலிச் சந்தைக்குமாக நாலா பக்கமும் நான் பார்த்து, மாறி, மாறிக்கொண்டு செல்வதில் ஆறுமுகத் தாரே பெரும் பங்கினை எடுத்துக்கொண்டார்.

கோவா, போஞ்கி, வீக்ஸ், கரட், பீட்ரூட், போன்ற பிற பிரதேசக் காய் இலை வகைகளுடன் போட்டி போட முடியாதநிலை ஒன்று ஏற்பட்ட போதும் நிலைமைக்கு ஏற்றபடி கூடிய குறைந்த விலை களில் வீற்றுக் கெட்டித்தனமாக நிலைமையைச் சமாளித்துவந்தார் ஆறுமுகத்தார்.

புகையிலைக் கண்டுப்போகம் வந்தது. காய்பிஞ்சுபடி முறைகளை முறைப்படியே முடித்துவிட்டு கரையை லீவாக்கி புகையிலை போகத் திற்கான முதல் கொத்துத் தொடக்கம், குழை தாழ்ப்பு வரையில் செய்து முடிக்க ஆறுமுகத்தாருக்குக் களை தட்டிவிட்டது.

வயதும் உடம்பின் பலத்தை இலேசாகத் தின்றுகொண்டு வந்தது. கை உதவிக்கு மூத்தவனும் இல்லை. மனைவியும் கைக் குழந்தையோடு!

மூன்று வருடத்திற்கு முன்னம் பந்து விளையாட்டுப் பார்வையின் போது வாங்கிய அடியினால் ஊமைக்காயங்களாகியிருந்த சில இடங்களில் வலியும் உளைவும் தோன்றி வதைத்தன. அதற்காக அவர் ஒட்டகப்புலம் முறிவு, தறிவு வைத்தியரிடம் சென்றார்.

‘பழம்நோ கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எடுபடும் என்று ஒட்டகப் புலத்தான், நோவெண்ணெயை மட்டும் போட்டு உரசி அவரைக் குழற வைத்துவிட்டு எண்ணெயையும் கொடுத்தனுப்பினார்.

இம்முறை புகையிலைக் கன்றுகள் சரியாகப் பலன் தரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. செய்கை அப்படி. போதாக்குறைக்கு வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேர்வைப் பசலையை ஊரில் உள்ள கமக்காரர்களெல்லாம் (விவசாயிகளெல்லாம்) அள்ளிவந்து தங்கள் தோட்டங்களை நிரவிவிட்டபோது ஆறுமுகத்தார் மட்டும் அதற்குப் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

உடல் சுகமும் இருந்திருந்தால் அவர் தனது பிடிவாதத்தில் வென்று இருப்பார். ஆனால் இப்போது அவை இரண்டும் கிடையாது. அதனால் அவரின் கரைகள் விழுக்காடு கண்டன.

மூத்தவனிடமிருந்து வாரம் தவறாமல் கடிதங்கள் வந்து கொண்டு இருந்தன. மாத முடிவில் இங்கே பணத்தைக் கையில் பெற்றுவிடும் வசதிக்காக சீலை ஒட்டப்பட்ட கவரில் பணத்தை வைத்து இன்ஸ்சூரன்ஸ் செய்து அனுப்பி வைத்தான், தோட்டத்தின் விழுக்காட்டை அவனின் பணம் ஓரளவு நிவர்த்தி செய்தது.

முதல் சம்பளத்தில் சகோதரங்களுக்கு உடு புடைவைகளும், ஆறுமுகத்தாருக்குவேட்டி சால்வையும், வள்ளிப் பிள்ளைக்கு நீலநிற லங்காச் சேலையும் வாங்கி அனுப்பியருந்தான்,

ஆறுமாதங்கள் ஓடிவிட்டன. அவன் போனது நேற்றுப் போலத்தான் எல்லோருக்கும் தெரிந்தது. ‘அண்ணை போயும் கனநாளாய்ப்போச்சு. ஒரு தடவை தைப் பொங்லோடை வந்து தம்பி சந்திரனை ஒருக்காப் பார்த்துக்கொண்டு போங்கோ’ என்ற விதத்தில் மகளைக் கொண்டே ஒரு கடிதத்தை மூத்தவனுக்கு எழுதிப்போட்டுவிட்டார். உண்மையிலேயே அவருக்குத் தான் மூத்தவனை ஒரு தரம் பார்க்க வேண்டுமென்ற துடிப்பு, சோட்டை! மூத்தவன் பொங்கலுக்கு வந்தான்.

தோட்டத்தரையைப் பார்த்து விறைத்துப் போனான். அவனுக்கு அறிவு தெரிந்த காலத்திலிருந்து இப்படி ஒரு வறண்ட கோலத்தில் தோட்டம் இருந்ததை அவன் கண்டதில்லை, தந்தையிலும் இவ்வளவு விரைவில் ஓர் உடலில் மாற்றத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.

‘அம்மா, இதென்னம்மா ஐயாவின்ரை கோலம்?’ என அவன் தாயைக் கேட்டான்.

‘நான் என்னடா தம்பி செய்யிறது? முந்திப் பந்தடி பாக்கேக்கை அடி வாங்கின உள் காயங்களாம்! எங்கையெண்டாலும் ஆமான டாக்குத்தரிட்டைக் காட்டச் சொல்லி எத்தனை தரம் சொல்லிப் போட்டன். அதெல்லாம் ஒட்டகப் புலத்தான்ர எண்ணெயிலை சரிவருமென்டு மனிசன் சொல்லுது நீயும் சொல்லிப்பாரன் மோனை! வள்ளிப்பிள்ளை மகனிடம் சொன்னாள்.

அன்று மாலைபோல் மூத்தவன் தகப்பனிடம் சொன்னான். ‘ஐயா, பொயிலைக் கண்டுகளுக்கு அழுக்கணவன் நிறையப் புடிச்சுப் போச்சு. இண்டைக்குத் தோட்டப் பக்கம் போனான். பக்கத்துப் பக்கத்துத் தோட்டக்காரர் எல்லாம் பம்பாலை தங்கடை தோட்டங் களுக்கு மருந்தடிக்கிறாங்கள், நான் நாளைக்குப் பட்டணம் போய் மருந்துகளும் பம்பும் வாங்கியாறன். நாங்களும் மருந்தடிப்பம்’ என்ற மூத்தவனின் பேச்சுக்கு ‘என்ன நீர் இந்த ஆறுமுகத்தானுக்கு மருந் தடிச்சுக் காட்டப் போறீர் என்ன? சும்மா விசர்க்கதையை விட்டிட்டு உன்ரை வேலையைப்பார். உந்த கண்ட, கண்ட நஞ்சு மருந்துகளை அந்த வாயிலாச் சீவனுக்கு மேலை அடிச்சு அதுகளை வதைக்கிறதை விட தோட்டச் செய்கையை நிறுத்தினாலும் பரவாயில்லை. இந்தக் கதையை என்னட்டைக் கதைக்காத’ என்று ஆறுமுகத்தார் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். இது சம்பந்தமாக மூத்தவன் இதற்குமேல் பேசவில்லை . தந்தையின் சுபாவம் அவனுக்குத் தெரியும்.

‘தோட்டம் போனாப் போகட்டுக்கு. நாளைக்குக் காலமை டாக்குத்தர் பீ.எஸ். சிட்டை உங்களைக் காட்டிக்கொண்டு வருவமே ஐயா?” மூத்தவன் அழாக் குறையாகக் கேட்டான்.

“எட, தம்பி. இது அடிகாயமடா! விலா எலும்பிலை நோப்பட்டுப் போச்சு. இங்கிலீசு மருந்திலை எடுபடாது கண்டியோ, தமிழ் மருந்து தான் சரி. கொஞ்ச நாளெடுத்தாலும் ஒட்டகப்புலத்தான் மாத்திப் போடுவான்.’ மகனின் மறுகோரிக்கையையும் ஆறுமுகத்தார் தட்டிக் கழித்து விட்டார். ஊர் வந்ததில் மூத்தவனுக்கு மனக்கவலைதான் அதிகரித்தது. ஆயினும் மூத்த தங்கச்சியின் மளமளவென்ற வளர்ச்சி தான் சற்றுத் திருப்தியைத் தந்தது.

சாமர்த்திய வளர்ச்சி என்பார்கள். அப்படி அவள் வளர்ந்து விட்டாள். அடுத்தவளும் இன்றோ நாளையோ புத்தி அறியும் பருவத்துக்கு வருகிறாள். தாயானவள் பிள்ளைத் தொல்லையுடன் சோர்ந்து போனாள்.

“தம்பி எப்படியடா வீரசிங்கத்தார் வீட்டுச் சாப்பாடு? கொம்மா சமைக்கிற மாதிரிக் கிடக்கே?’ ஆறுமுகத்தார் அவன் உணவுபற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டார்.

“இஞ்சத்தையப்போலை அம்மி குளவி எல்லாம் வைச்சு அரைக்கிறவை. உரலுக்கை பொரிமா இடிக்கிறவை. எல்லாம் இஞ்சத்தையத் தீன் மாதிரிதான். என்னிலை வலுவாரப்பாடு! தேத்தண்ணி, கோப்பிகூட நான் கடையிலை குடிக்கிறதில்லை. மத்தியானம் சாப்பாட்டுப் பொடியனிட்டை கந்தோருக்குச் சாப்பாடு அனுப்பிறவை. வேலைக்குப் போகேக்கைச் சுடுதண்ணிப் போத்தலுக்கை விட்டுத் தாறவை . என்னை ஒரு சதமும் சிலவழிக்க விடாயினம்’ மூத்தவனின் இந்தப் பதில் ஆறுமுகத்தாருக்கு மனநிறைவைத் தந்தது.

‘வீர சிங்கமெல்லோ மனிசன்!’ என்று அவர் மனம் வீர சிங்கத்தை வாழ்த்திக் கொண்டது. மூத்தவன் வந்ததும் ஒரு தடவை இராமசாமி வாத்தியாரிடம் போய் வந்தான். போகும் போது அவரிடம் பயணம் சொல்லிவிட்டுத்தான் மூத்தவன் புறப்பட்டான்.

நான்கு ஆண்டுகள் கண்களை இறுக மூடிக்கொண்டு ஓடிவிட்டன. இந்த நான்கு ஆண்டுகால இடைவெளிக்குள் மூத்தவன் ஐந்து தடவைகள் ஊருக்கு வந்து போனான்.

தந்தையின் நோய் தீர்ந்து போனதிலும் அவர் பழைய பிடிவாதத்தை விடுத்து ஊரோடு ஒத்த விதத்தில் சேர்வை உரம் போட்டும் மருந் தடித்தும் தோட்டத்தைச் செய்கை பண்ணியதிலும் அவனுக்குப் பரமதிருப்தி. ஆனால் ஆறு முகத்தாருக்கோ தனது புகையிலை பழைய தரத்திற்கு இல்லை; பொதுவில் எல்லோருடையது போலத்தான் என்ற அதிருப்தி.

இப்போது அகிளான் ஆறுமுகத்தின் காணிப் புகையிலையை வியாபாரிகள் தேடிவந்து விலை கொடுக்கும் நிலை மாறிவிட்டது.

கடைசியாக மூத்தவன் வந்திருந்த போது சகோதரி சரசுவதிக்கு ஒரு கலியாணப் பொருத்தம் வந்தது. பத்தாயிரம் ரூபா சீதனம் பேசிப் பொருத்தப்பட்டது.

கையோடு நின்று சீதனப் பிசகுகளைத் தீர்த்து அதிக ஆடம்பரமின்றி வீட்டோடுமட்டு மட்டாக மூத்த தங்கையின் கல்யாண வைபவத்தை முடித்துவிட்டுக் கொழும்புக்குப்போன அடுத்த வாரமே இரண்டாவது தங்கை மல்லிக்கும் திருமணம் ஒன்று பொருந்தியிருப்பதாகக் கடிதம் வந்திருந்தது. பணமாக ரூபா இருபத்தையாயிரம் கேட்டிருக்கிறார் களாம். அவ்வளவு பணத்துக்கு மூத்தவன் எங்கே போவான்?

‘என்னவாம் பொடியன் மூஞ்சையைச் தொங்கப் போட்டுக் கொண்டு திரியிறான்?’ என்று வீரசிங்கத்தார் மனைவியைக் கேட்டார். அடுத்த நாள் காலையே வீரசிங்கத்தாருக்கு மனைவி காரணத்தைக் கூறிவிட்டு, ‘பொடியன் காசுக்குத்தான் யோசிச்சுக் கொண்டு திரியுது அதுதான்’ என்று இழுத்தாள்.

‘அதென்னவும் இழுக்கிறீர் சொல்லுமன்!’ வீரசிங்கத்தார் கேட்டார். ‘இல்லை. கஷ்டப்பட்ட பொடியனாய் இருந்தாலும் நல்ல பிள்ளை! வீட்டிலையும் நாலு வருசம் இருந்து போட்டான். வேறை விதமாய் கதையள் வாறதுக்கிடையிலை, இருவத்தையாயிரம் தானே குடுத்துப் போட்டு ஆறு முகத்தாரிட்டை கேட்டு வைப்பமெண்டு யோசிக்கறன். அவளும் இனிப்படிக்காள் போலைகிடக்கு…’ மனைவி மனதில் உள்ளதை அப்படியே சொல்ல முடிவில் மகளுக்கும் இனிப்படிப்பு ஓடாது என்று குறிகாட்டி முடிந்துவிட்டாள்.

மறுநாளாயிற்று. மாலை மூத்தவன் வேலையிலிருந்து வந்து கோப்பி அருந்திக் கொண்டிருந்தபோது, ‘தம்பி முகுந்தன், நாளைக்கு லீவைப் போட்டிட்டு நீர் ஒருக்கா ஊருக்குப் போட்டு வாரும். குமர் காரியத்தைப் பதம் பார்க்கக் கூடாது. உங்கை காசு இருபத்தி ஐயாயிரத்துக்குச் சொல்லி இருக்கிறன் வாங்கிக்கொண்டு போய் கொய்யாவிட்டை கடுத்து இளையவளின்ர காரியத்தையும் ஒப்பேத்திப்போட்டு வாரும். நாங்கள் பிறகு கொய்யாவோடையும் கொம்மாவோடையும் ஆறுதலாக கதைக்கிறம்.’

வீரசிங்கத்தாரின் இந்தப்பேச்சு மூத்தவனைத் திடுக்கிட வைத்தது. இப்படி ஒரு வழி பிறக்கும் என மூத்தவன் எதிர்பார்க்கவில்லை .

அந்த இருபத்தையாயிரத்திற்காகவும் தன்னுடன்வேலை செய்யும் நான்கு ஐந்து பேர்களிடம் மாறிப்பிரிக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி கண்டிருந்தான். சுனித்திரா ஐந்தாயிரமும் ராகுலன் ஐந்தாயிரமும் மைக்கல் ஐந்தாயிரமும் தர ஒப்புக் கொண்டிருந்தனர். இன்னும் பத்தாயிரத்திற்குத்தான் வழிகாணவேண்டிருந்தது. வீரசிங்கத்தாரே முழுவதையும் தர ஒப்புக்கொண்டதை அவனால் முதலில் நம்ப முடியாமல் இருந்தது.

வீரசிங்கத்தாரின் பெருந்தன்மையை அவன் யோசித்து யோசித்துப் பார்த்தான். அந்தப் பெருந்தன்மைக்கான மூல காரணத்தை அவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. வயது இருபத்தெட்டு ஆயினும் அவன் இன்னும் மனதால் குழந்தை!

அவசரமாக உடுப்பை மாற்றிக் கொண்டு அவன் புறப்பட்டான். ‘நான் பெரிய தபால் கந்தோர் மட்டும் போட்டு வாறன்’ என்று மட்டும் எல்லோரும் கேட்கக் கூடியதாகக் கூறிவிட்டு வெளியே வந்த அவன் இரட்டைத்தட்டு பஸ்ஸைப் பிடித்துக்கொண்டு தபால் கந்தோருக்கு வந்துவிட்டான்.

‘கலியாண ஏற்பாடுகளை உடனே செய்யவும். நாளை நான் பணத் துடன் வருகிறேன்’ இப்படித் தந்தி ஒன்றினைக் கொடுத்துவிட்டுப் படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தபோது, சுனித்திரா வயதான ஒரு பெண்ணுடன் எதிரே வருவது தெரிந்தது. இவனுக்கு முன்னால் வந்துவிட்ட அவள் நின்று நிதானித்து அந்த வயதான பெண்ணுக்கு இவனைச் சிங்களத்தில் அறிமுகம் செய்து வைத்தாள். மற்றவளை அவள் தன் தாய் என்றாள். இவர் என்னுடன் வேலை செய்பவர் எனக் கூறினாள்.

இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் சரளமாகச் சிங்களம் பேச மூத்தவன் கற்றிருந்தான். அந்த வயதான பெண் இவனைக் கரம் கூப்பி வினயமாக வணங்கிக் கொண்டாள். இவனும் பதிலுக்கு வணக்கம் செலுத்திக்கொண்டான்.

இருவரும் கைத்தோள் மூட்டில் பொங்கி நின்ற மேற்சட்டைகளின் கீழ் நாட்டுப்புறக் கொய்யக விசிறிகள் வழிய சேலை கட்டியிருந்தனர்.

மூத்தவன் அதிக நேரம் நிற்கவில்லை . அவனுக்கு மனதிற்குள் வெட்கமாக இருந்தது. அந்த வயதான பெண்ணுக்கு முன்னால் சுனித்திராவுடன் பேசுவதற்கு ஏன் இவன் அப்படி வெட்கப்படுகிறான்!

விடைபெற்றுக் கொண்டு அவன் வந்துவிட்டான். வெகுவிரை விலேயே அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்ததைக் கண்ட வீரசிங்கத்தார், இந்தப் பொடியன் குடத்து விளக்கு மாதிரிக் கிடக்கு. வெளியிலைச் சுத்திற ஆசைகூட எப்பனும் இல்லாத பொடியனாய் கிடக்கு’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டார். அவரின் இந்த நினைப்பு கணை யடித்துச் சுழியோடி அவர் சொண்டுகள்வரை வந்து கொடுப்புக்குள் அடங்கி முடிவுற்றது.

7

தந்தியில் காட்டப்பட்டிருந்தபடி மூத்தவன் மறு நாளைக்கு மறுநாள் இணுவிலுக்கு வந்து சேர்ந்துவிட்டான்.

ஆறுமுகத்தாருக்கு அவன் இவ்வளவு விரைவில் பணத்துடன் வந்து சேருவான் என்பதில் நம்பிக்கை வரவில்லை. தாயிடம் அவன் கைப் பையைக் கொடுத்து ‘அம்மா, காசு கிடக்குப் பத்திரம்!’ என்று சொன்ன போதுதான் அவருக்கு நம்பிக்கை வந்தது.

‘தம்பி, எங்கையடா காசு மாறுன நீ? மூத்தவளுக்கும் மாறிக் கொண்டு வந்து செலவழிச்ச கையோடை இளையவளுக்கும் எங்கை மாறுன நீ?’ ஆறுமுகத்தார் மனக்கசிவுடன் கேட்டார்.

‘நான் வேறை சிநேகிதரிட்டைக் கேட்டு ஒழுங்கு பண்ணிக் கொண்டிருக்கேக்கை வீரசிங்கத்தார் வலியத்தந்தவர். எல்லாம் நாங்கள் வந்து ஐயா அம்மாவோடை கதைக்கிறம். முதலிலை இதைக் கொண்டு போய்க் கலியாணத்தை ஒப்பேத்தச் சொல்லித் தந்தவர்!

மூத்தவன் சொல்லி முடித்து விட்டான். அவன் அடி வளவில் புதிதாகக் கட்டப்பட்ட கக்கூஸ் பக்கம் சென்றும் விட்டபோது,

‘பாவம் அந்த மனிசன். ஒரு நல்ல இரக்கமுள்ளது! வேறை ஆருமெண்டா இப்பிடிச் செய்வினமே? அவர் எங்கடை ரெத்த உருத்துக்காரரும் இல்லையப்பா!’ வள்ளிப்பிள்ளை ஆறுமுகத்தாரைப் பார்த்துக் கூறினாள்.

‘ஓமோம், முந்தி இனசனம் இல்லைத்தான். இப்ப இனசனமோ வரத்தான் காசு குடுத்திருக்கிறார் எண்டு தான் நினைக்கிறன். ஒண்டுக்கு ரெண்டு பெட்டையளெல்லே அந்தாளுக்கு இருக்குது’

ஆறுமுகத்தார் புதிர் போட்டுப் பேசினார். இது இப்போது வள்ளிப் பிள்ளைக்கு இலேசாக விளங்கி இருக்க வேண்டும்!

‘அப்பிடியெண்டாலும் தான் என்ன? இப்பிடிப்பட்ட மனிசன் மூத்தவனுக்கு மாமனாரா வரக் குடுத்துக் கிடக்கே?’ என்று அவள் கேட்டாள்.

‘உனக்கு விளங்கிட்டது என்ன? பார் அவவின் ரை புன்சிரிப்பை!’ என்று கூறிக்கொண்டே சூரி மண்வெட்டியைத் தொட்டுக் கொண்டு ‘ அவனுக்கு ரெண்டு முட்டை பொரிச்சு புட்டைக் குடப்பா?’ என்று கூறினார்.

‘என்ன, இண்டைக்கு வெள்ளிக்கிழமையிலையோ…? முட்டை பொரிக்கிறதோ…’ என்றாள் வள்ளிப்பிள்ளை.

‘ஊர் தேசத்திலை இருந்து பிள்ளை அவசரப்பட்டு ஓடியாறான். இவ வெள்ளிக்கிழமை எண்டு விண்ணாணம் கதைக்கிறா…!

எடி, இளையவள், கொக்கா வீட்டிலை இருந்தா இத்தறிதியிலை கொண்ணனுக்கு முட்டை அவிச்சுக் குடுத்திருப்பாள். கொம்மா சைவக்காரி அவ இண்டைக்கு மச்சச் சட்டியைத் தொடமாட்டா, நீ ரெண்டு முட்டை அவிச்சுக் கொண்ணனுக்குக் குடு. நான் உதிலை ஒருக்காத் தோட்டப் பக்கம் போட்டு வாறன். பொழுதுபடேக்கை பெருவரம்புக் கரையிலை அகிளான் புத்தொண்டு கண்டனான். அது எக்கணம் கிழங்குகளை நறுக்கித் தள்ளப்போகுது!’ என்று சொல்லிக் கொண்டே சூரி மண்வெட்டியையும் எடுத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தார். அவர் மண்வெட்டியை எடுத்துவிட்டால் அவரின் கூளைவால் நகுலன் நாயும் அவருக்கு முன்னால் ஓடிச் செல்வது வழக்கம்.

நான்கு நாட்களின் பின் மல்லிகாவின் கலியாணப் பதிவும் நடந்து முடிந்தது. அவளுக்குக் கணவனாக வந்தவன் அளவெட்டியைச் சேர்ந்த பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் மனேச்சர்.

கூட்டுறவுச் சங்கத்தின் மனேச்சர்மாருக்குச் சம்பளம் கம்மியாக இருந்தாலும் தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் அவ்வேலைக்கு இடைஞ்சல் இல்லாமல் நின்று பிடித்தாலே போதும். சீவிய காலம் வரை போதுமான அளவுக்கு அவர்கள் சம்பாதித்துக் கொள்வார்கள். இந்தச் சூத்திரம் தெரியுமளவுக்கு ஆறுமுகத்தார் மன விருத்தி அற்றவரா யினும் ஊரில் உள்ள பலருக்கு இந்த மனேச்சர் சம்பாத்தியம் பற்றிய சூத்திரம் தெரிந்திருந்தது. அதனால் பலர் அந்த மாப்பிள்ளையை எடுப்பதற்குப் போட்டிப் போட்டார்கள். ஆனால் அந்த மாப்பிள்ளை மல்லிகாவைப் பெண் பார்த்த அன்றே ‘முடித்தால் மல்லிகாவை அல்லது இல்லை’ என்ற முடிவுக்கு வந்து விட்டதும், சாதகப் பொருத்தம் பிரமாதமாக அமைந்து விட்டதும் வசதியாகிவிட்டது.

எல்லாம் முடிந்து மூத்தவன் பிரயாணத்துக்குத் தயாரானபோது, ‘எட, தம்பி அந்த மனிசனும் உன்னை நம்பிக் காசு அள்ளித் தந்து போட்டுது. அந்தாளின்ரை நம்பிக்கையைக் கெடுத்துப் போடாதை!’ வள்ளிப்பிள்ளை இதைக் கூறிய போது,

‘எணையம்மா! நான் அங்கை ரெண்டு முண்டுபேரிட்டை அடுக்குப் பண்ணி வைச்சிருக்கிறன். ஒரு பதினைஞ்சு தேறும். மிச்சத்தையும் பாத்துப் பிரட்டி அவையின்ரை காசை ஐஞ்சாறு நாளையில் குடுத் திடுவன்’ இப்படி மூத்தவன் பதில் கூறினான்.

‘அதுக்குச் சொல்லேல்லையடா தம்பி. அந்தாளும் ரெண்டு குமரு களை வைச்சிருக்கு. அதை மனசிலை வைச்சுக்கொண்டுதான் காசு தந்திருக்கிறார் எண்டு நினைக்கிறன். கொய்யாவும் சொன்னவர். அதுதான்….’ தாயாரின் இந்தப் பேச்சு முடிவதற்கிடையில்,

‘அதெல்லாத்தையும் குழந்தைப் பிள்ளைக்குச் சொல்லுற மாதிரிச் சொல்லிக் கொண்டிருக்கிறதேயடியாத்தை! றெயிலுக்கு நேரம் செண்டு போச்சு! எக்கணம் அந்தாளும் மனிசியும் வாறதெண்டும் சொன்னவை வருவினந்தானே வரட்டுக்கன். பேசி முடிவெடுப்பம்! சாதகங்களும் பொருந்து தோ எண்டு பாக்கவல்லே வேணும். அதுகளைப் பேந்து பாப்பம் வெளிக்கிடு தம்பி…!” என்ற ஆறுமுகத்தாரின் குரல் அடுக்களை வரை கேட்டது.

மூத்தவன் றெயில் ஏறிவிட்டான். அப்போதுதான் அவன் மூளை சுழன்றுச் சுழன்று வேலை செய்யத் தொடங்கியது.

வீரசிங்கத்தார் வலியப் பணம் கொடுத்ததும் எல்லாம் நாங்கள் வந்து ஐயா அம்மாவோடை கதைக்கிறம்’ என்று சொன்னதும் தாயும் தகப்பனும் இதற்கு முன்கூட்டியே இன்று சம்மதம் தெரிவித்து விட்டதுபோல் பேசியதும்,

‘நிலைமை இப்படித்தான் என்பதை வேளையோடு தெரிந்திருந்தால் அந்தப் பண உதவியைப் பெறாமலேயே விட்டிருப்பேன்’ என்ற விதத்தில் அவன் எண்ணினான்.

அந்தவீட்டில் வாழ்ந்துவிட்ட இந்த நாலாண்டுக் கால வாழ்க்கையில் என்றாவது ஒருநாள், அல்லது ஒரு கணப் பொழுது தன்னும் இப்படி ஓர் உறவுக்கான ஒரு சிந்தனை மின்னல் அவனுக்குத் தோன்றிய தில்லை. அந்தப் பெண்களில் யாருக்காவது ஒருத்திக்குக்கூட அப்படித் தோன்றியிருக்க முடியாது என்பது அவனின் நம்பிக்கை!

வீரசிங்கத்தாரினதும் மனைவியினதும் கொழும்பு போன உடனேயே முன்னையவர்களின் உதவியோடு மிகுதிப் பத்துக்கும் வழி தேடி இந்தக் கடனை அழித்துவிட வேணும்’ என்ற உறுதியான முடிவுக்கு அவன் வந்தான். அத்தோடு வேறு எங்காவது தங்குவதற்கான இடமும் பார்த்துவிட வேண்டும் என்றும் யோசித்தான்.

ட்றெயின் குறிப்பிட்ட நேரத்திற்குக் கொழும்புக்கோட்டை நிலையத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது. மூத்தவன் ஸ்ரேசனை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்த போது ‘தொரே!’ என்ற ஒரு பழகிய குரல் கேட்டது. வீரசிங்கத்தாரின் கார் டிரைவர் சில்வானின் குரல்.

‘ஐயா, அனுப்பியிருக்குத் தொரே!’ என்றும் கூறி அவனின் கைப் பையைவாங்கியபடி காருக்குள் ஏறினான்.

கார் சுற்றி வந்து நேராக மணிக்கூண்டு வீதியைத் தாண்டி, கொச்சிக் கடைவீதியை அண்மித்துக் கொண்டிருந்தபோது… ‘நான் இண்டைக்கு வருவேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்’ என சிங்களத்தில் மூத்தவன் கேட்டான்.

‘இன்றைக்குத் திங்கட்கிழமையல்லவா வேலைக்குக் கட்டாயம் வருவீர்களென்று ஐயாவுக்குத் தெரியும்’ என அவனும் சிங்களத்தில் கூறினான்.

வர, வர நிலைமை மோசப்பட்டுக்கொண்டு வருவதாக மூத்தவனின் உள்மனம் கூறியது.

சில நாட்கள் கழிந்துவிட்டன. அன்று அவன் வேலையில் இருந்து திரும்ப நேரம் சற்று ஆகிவிட்டது. இப்படி அவன் நேரம் கழித்து வந்ததில்லை. அப்படி நேரம் கழித்து வருவதாக இருந்தாலும்கூட வீரசிங்கத்தாரிடம் வேளையோடு சொல்லி வைத்திருப்பான்! இப்போது அவன் வீட்டுக்கு வந்த நேரம் ‘ரீ’ குடிக்கும் நேரமல்ல; இரவு உணவு அருந்தும் நேரத்திற்கு மேல். வழமையாக எப்போதாவது நேரம் கழித்து வர நேர்ந்துவிட்டால் அவனின் அறை மேசையில் அவனுக்காக உணவு வட்டக்கூடையால் மூடி வைக்கப்பட்டிருக்கும்.

இன்று அம்மாளே அவனிற்காகக் கோலில் காத்திருந்தாள். ‘தம்பி இப்பதான் வாறீரோ? வேலை முடிய செண்டு போச்சுப் போலைக் கிடக்கு…!’ இப்படி அம்மாள் கேட்டாள்.

‘வேலை நேரத்துக்கு முடிஞ்சு போச்சு. வேறை ஒரு அலுவலாய் போனாப் போலைச் சுணங்கிப் போச்சுது அம்மா…’ என்று கூறி அறைக்குச் சென்று, உடுப்பு மாற்றி பாத்றூம் சென்று உடம்பைக் கழுவிக்கொண்டு வந்தபோது அம்மாள் உணவை மேசையில் நிரைப் படுத்திக் கொண்டிருந்தாள்.

வையுங்கோ, அம்மா நான் எடுத்துச் சாப்பிடுகிறேன்’ என்று அவன் வெட்கத்தோடு சொன்னபோது… ‘ஏன் தம்பி நான் போட்டுத் தரக்கூடாதோ? வீட்டிலை அம்மா போட்டுத் தாறேல்லையா?’ என்றும் அம்மாள் கேட்டாள். அதற்குப்பின் பேச்சில்லை.

பெரும் மன அழுத்தத்தோடு மூத்தவன் உணவருந்தினான். உணவுப் பாத்திரங்களை எடுத்துச் சென்ற சிறிது வேளையில் இளம் சூடான பால் கிளாசுடன் அம்மாள் வந்தாள்.

‘அம்மா இதை எண்ணிப் பாத்திட்டு உள்ளுக்குக் கொண்டு போய் வையுங்கோ!’ என்று கூறிக்கொண்டே காசுக் கட்டொன்றை எடுத்து இரண்டு கைகளாலும் அவளிடம் நீட்டினான் மூத்தவன்.

அம்மா திடுக்கிட்டுவிட்டாள்! இதை அவள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அவள் ஏதாவது சொல்லவேண்டும். ‘இப்ப ஏன் தம்பி அவசரப்பட்டனீர்? உதுக்கு இப்ப என்ன அவசரம்?’ என்றாள்.

‘இல்லையம்மா நான் கேக்கிறதுக்கு முந்தியே, நீங்கள் பெரிய மனதோடை தந்தனீங்கள் ! இப்ப நீங்கள் கேக்கிறதுக்கு முந்தியே நான் தந்திட வேணுமெண்டுதான்… நீங்கள் செய்த உதவியை நானும் என்ரை குடும்பமும் ஒருநாளும் மறக்க மாட்டோம்’ இதற்குமேல் அவனும் பேசவில்லை. அம்மாளும் பேசவில்லை. அவனோடு இதற்குமேல் பேசுவது நாகரிகமற்றது என்பது அவள் உள் நினைப்பு,

மூத்தவன் படுக்கைக்குப் போய்விட்டான். அவனுக்கு இப்போது தான் மனம் சற்று நிம்மதியடைந்திருந்தது. இனி அவர்களின் மனம் நோகாத மாதிரி மெதுவாக வேறு இடத்தையும் பார்த்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

அம்மாளும் வீரசிங்கத்தாரும் இரவு வெகுநேரம் குசுகுசுப்பதைப் போல் அவன் செவிப்புலனுக்கு ஒர் உணர்வு! அப்படியே அவன் தூங்கிவிட்டான்.

8

‘ஏனப்பா, மூத்தவனை இனியும் வைச்சிருக்கிறதே வயதும் வாற பங்குனியோடை இருவத்தெட்டு முடியும் போகுது… கொழும்பிலை இருக்கிறவன் எல்லாம் சொல்லிக்கொண்டே? அவனை ஒரு கட்டையிலை கட்டிப்போடவேணும். வாறம் எண்டு சொன்ன வீரசிங்கத்தாரிட்டை இருந்து இரண்டு வரியிலை ஒரு மறுமொழி யையும் காணேல்லை. அவன்ரை காயிதத்திலும் ஒண்டையும் எழுதக் காணேல்லை…’ என மெதுவாகக் கதையைத் தொடங்கி வைத்தாள் வள்ளிப்பிள்ளை.

‘இஞ்சைபார் இவளின்ரை கதையை… மூத்தவன் காயிதத்திலை எழுதுவானெண்டு விசர் நினைப்பெல்லே நினைக்கிறாள். இரண்டு தங்கச்சிமாரையும் கரைசேர்க்கு மட்டும் கட்டுப்பெட்டி போல இருந்தவனை இவள் என்னெண்டு நினைச்சுப்போட்டாள். வீரசிங்கத்தார் ஆறுதலாய் எழுதட்டன். இப்ப என்ன அவசரம்? அவரும் அவசரப் படுத்தினாரெண்டா இப்ப செய்யிரதுக்கு எங்களிட்டை காசு களஞ்சு கிடக்கே? முந்தின கோசுகளைப் போலப் போயிலையும் வாய்க்கேல்லை. தாலி கூறைக்கெண்டாலும் வேண்டாமே? தாலி கூறைக்கும் பணம் தா எண்டு வீரசிங்கத்தாரைக் கேக்கிறது மரியாதையே?’ ஆறுமுகத்தாரும் பதில் சொல்லிவிட்டு மருதனாமடச் சந்திக்குக் குழை பார்க்கப் புறப் பட்டபோது மூத்தவனின் கடிதமும் வந்தது.

‘தம்பியின்ரை காயிதமும் வந்திட்டுது!’ என்று கூறிக் கொண்டு வள்ளிப்பிள்ளை கடிதத்தை எடுத்து மல்லிகாவிடம் படிக்கக் கொடுத்தாள். கடிதத்தின் புதினத்தை அறிந்து கொண்டு போகும் நோக்குடன் ஆறுமுகத்தார் முற்றத்திலே நின்றார்.

மல்லிகா கடிதத்தைத் திறந்த போது அதற்குள்ளிருந்து புகைப் படமொன்று கீழே விழுந்தது. அதை வள்ளிப் பிள்ளை கண்டாள். இரண்டு உருவங்கள் இருப்பதைப் போன்று கண்களுக்குத் தெரிந்தது.

‘இஞ்சை பாரம்மா அண்ணையும் ஆரோ ஒரு பெட்டையும்….’ மல்லிகா சொல்லி முடிக்கவில்லை. ஆறுமுகத்தாரின் உடல் நடுங்கியது. தலையைச் சுற்றிக் கொண்டு வருவதைப் போல இருந்தது. வள்ளிப் பிள்ளை அவளின் கைகளில் இருந்த படத்தைப் பிடிங்கிப் பார்த்தாள்.

‘எடி காயிதத்தைப் படியெடி!’ என்று பலமாகக் கத்தினாள். மல்லிகா வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே படித்தாள்.

‘எனது அன்பான அம்மா, ஐயா ஆகியோருக்கு… உங்கள் மகன் எழுதிக் கொள்வது, எனக்கும் இருபத்தொன்பது வயதாகப் போகிறது. இன்றுவரை உங்களுடைய விருப்பமின்றி, உங்கள் சம்மதம் பேணாமல் நான் ஒரு காரியமும் செய்ததில்லை. ஆனால் இப்போது அந்த விரதத்தை மீறிவிட்டேன். உங்களைக் கேட்டால் நிச்சயமாக நீங்கள் சம்மதிக்க மாட்டீர்கள் என்ற பயத்தில் நான் இங்கு சுனித்ரா என்ற சிங்களப் பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்துவிட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் சம்மதம் கிடைத்தால் நான் அவளை யும் அழைத்துக் கொண்டு வருவேன். இப்போது திருமணப் பதிவு மாத்திரந்தான் நடந்திருக்கிறது. உங்கள் சம்மதம் கிடைக்காத வரையில் நான் முறைப்படி கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். இது சத்தியம்; முனியப்பசாமிமேல் சத்தியம். எங்கள் கிராமம் போன்ற ஒரு கிராமத்துப் பெண்தான் அவள். தந்தை ஒரு விவசாயி. எல்லாவகை பெண் போலத்தான் அவள். எல்லாவகையிலும் மிக நல்லவர்கள்.’

மல்லிகா ஒருவாறு கடிதத்தைப் படித்து முடித்து விட்டாள். ஆறுமுகத்தார் முற்றத்தில் அப்படியே நிலை குத்தி நின்று அரையில் கட்டியிருந்த சவுக்கத்தைக் கழற்றி முகத்தை மூடிக்கொண்டு அழுதார்.

காலைதான் மல்லிகா முருக்கமிலைச்சாறு கலந்து மெழுகி விட்ட திண்ணையில் வள்ளிப்பிள்ளை சுருண்டு படுத்துவிட்டாள்.

கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு, மல்லிகா அடுக்களைக் குந்தில் குந்திய படி வெளி முற்றத்தை முறைத்துப் பார்த்தபடி இருந்தாள். கடைக்குட்டி சந்திரன் மட்டும் எதைப் பற்றியும் கவலை அற்றவனாக முதல்நாள் மல்லிகா செய்துகாட்டிய மாங்கொட்டை விளையாட்டை ஒத்திகை பார்த்துக் கொண்டு நின்றான்.

வெயில் ஏறிக்கொண்டிருந்தது. வீட்டில் மூச்சுப் பேச்சே இல்லை. ஆறுமுகத்தாரும் நின்ற நிலை கலைந்து அப்படியே குந்திவிட்டார்.

நீண்ட நேரமாயிற்று!

ஆறுமுகத்தார் எழுந்து சவுக்கத்தை உதறிப் பெருமூச்சு விட்டபடி வெளியே போனார். நேராக ராமசாமி வாத்தியார் வீட்டிற்குத்தான் போய்ச் சேர்ந்தார். வாத்தியார் வீட்டு விறாந்தையில் நான்கு ஐந்து பையன்களுக்கு ஆங்கிலப்பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘ஆறுமுகத்தார் ஏதும் அவசரமோ?’ என்ற வாத்தியாரின் கேள்விக்கு, ‘அவசரம் ஒண்டுமில்லை வாத்தியார். நீங்கள் பாடத்தை முடிச்சுக் கொண்டு வாருங்கோ’ என்று சொல்லிவிட்டு வெளிவிறாந்தை வாசலில் இருந்துவிட்டார் ஆறுமுகத்தார்.

பாடம் முடிய வெகு நேரம் எடுக்கவில்லை. பாடத்தை முடித்துக் கொண்டு மாணவர்கள் கலைந்து போக, வாத்தியார் ஆறுமுகத்தாரிடம் வந்தார்.

வாத்தியாரின் முகத்தை நேருக்குநேர் பார்த்ததும் ஆறுமுகத்தாருக்கு அழுகை வந்துவிட்டது. வாத்தியார் தடுமாறி, ‘என்ன, ஆறுமுகத்தார் என்ன நடந்தது?’ என அவசரமாகக் கேட்டார். ஆறுமுகத்தாருக்கு உடனே பேச்சு வரவில்லை. அவர் விக்கிக்கொண்டிருந்தார். ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டதாகவே அவர் எண்ணினார். அதனால் ஆறுமுகத்தாரின் சலிப்புத் தீருமட்டும் அவரை அழவிட்டார். வாத்தியார் பெண்சாதி வெளியே எட்டி எட்டிப் பார்த்தாள்.

நல்ல வேளையாக வாத்தியார் வீட்டில் பிள்ளைகள் ஒன்றும் இல்லை. இருந்தால் அவர்கள் ஆறுமுகத்தாரைச் சூழ்ந்து கொண்டிருப்பார்கள்.

ஆறுமுகத்தாரின் விம்மல் ஓய்ந்தது. ‘வாத்தியார்… நான் என்னத்தைச் சொல்ல… மூத்தவன் எங்கள் எல்லாரையும் ஏமாத்திப் போட்டான் வாத்தியார்!’

ஆறுமுகத்தாரின் இந்த வார்த்தைத் தொடர் வாத்தியாருக்கு ஓரளவு விஷயத்தை விளங்க வைத்திருக்க வேண்டும்.

‘ஏமாத்திப் போட்டு எங்கையன் வெளிநாட்டுக்குப் போட்டானோ….?” என்று வாத்தியார் கேட்டார்.

ஆறுமுகத்தார் சவுக்கத்தால் கண்களைத் துடைத்துக் கொண்டு ‘அவன் ஒரு சிங்களப் பெட்டையைக் கட்டியிட்டான் வாத்தியார்!” ஆறுமுகத்தார் பேசிமுடிக்கவில்லை . ‘எட, உதுதானே…?’ என வாத்தியார் சாதாரணமாகக் கேட்டார்.

‘ஆறுமுகத்தார் உம்மை நான் தெரியாமல் கேக்கிறன். அவனுக்கு இப்ப வயது எத்தினை? முப்பதுக்குக் கிட்டத்தட்ட இருக்குமெல்லே? தங்கச்சிமார் ரெண்டு பேரையும் கட்டிக் குடுத்துப் போட்டுத்தானே அவன் கட்டியிருக்கிறான். நான் கேக்கிறேன் எண்டு குறை நினைக்கா தையும்; அவனைப் பற்றி இத்தினை காலமும் ஏதும் கூடாத கதைகிதை கேள்விப்பட்டிருக்கிறீரே? முப்பது வயது மட்டும் கட்டுப்பாடாய் இருந்த பெடியன் இப்ப தனக்கெண்டு ஒண்டைத் தேடிப் போட்டான். இதிலை என்ன பிழை?’

வாத்தியார் பேசி முடிக்கும் வரை காத்திருந்த ஆறுமுகத்தார் ‘அவன் கட்டினதிலை ஒரு பிழையும் இல்லை வாத்தியார். சிங்களப் பெட்டையையெல்லே கட்டிப்போட்டான். இந்தமாதிரிக் கோழி இறகுக்கை வைச்சுக்காத்த மாதிரிக் காத்த எனக்கு ஒரு கதை சொன்னானே?’ என்ற அவசரப்பட்டுப் பேசினார்.

‘இஞ்சேரும் முகத்தார் நான் கேக்கிறன். ஒளியாமல் சொல்லும். நான் சிங்களப் பெட்டையைக் கட்டப்போறனெண்டு உம்மைக் கேட்டிருந்தா நீர் சம்மதிச்சிருப்பீரே?’ என்ரை முகத்தைப் பார்த்துச் சொல்லும்பாப்பம்.’

வாத்தியாரின் இந்தப் பேச்சு ஆறுமுகத்தாரின் வாயை அடைத்து விட்டது. அவர் எதுவும் பேச முடியாமல் இருந்தார். அதன் பின்பு வாத்தியாருடன் ஆறுமுகத்தார், பேசி முடித்துப் புறப்பட மதியம் திரும்பிவிட்டது. இடையே வாத்தியாரின் மனைவி இருவருக்கும் இரண்டு கோப்பியைக் கலக்கி வந்து கொடுத்தாள்; காலையும் ஆறுமுகத்தார் எதுவும் சாப்பிடவில்லை ; எனினும் பசி வரவில்லை .

தெளிந்த முகத்தோடு ஆறுமுகத்தார் வீட்டுக்கு வந்துசேர்ந்தபோது வள்ளிப்பிள்ளை இன்னும் அந்த இடத்திலேயே சுருண்டு கிடந்தாள். மல்லிகாவும் அடுக்களை முன் குந்தில்தான் இருந்தாள். இளையவன் சந்திரன் தாய்க்குப் பக்கமாக வெறும் திண்ணையில் கால்களை இடாப்பி, கைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக இலேசாக முட்ட வைத்து மெய்யுறக்கம் செய்து கொண்டிருந்தான்.

‘கொம்மா இன்னும் கிடந்த இடத்தை விட்டு எழும்பேல்லையே?’ என்று கேட்டுக் கொண்டே ஆறுமுகத்தார் வந்தார். அந்தக் குரலுக்குச் செவிசாய்த்தாளோ இல்லையோ வள்ளிப்பிள்ளை கண்விழித்தபடி அசையாமல் கிடந்தாள். அழுதழுது அவள் முகம் உப்பிப்போய் இருந்தது.

‘எழும்பப்பா! சும்மா இனி அழுதென்ன செய்யிறது? எழும்பி உலையைக்கிலையை வை! பிள்ளை, பேனையையும் சுடுதாசியையும் எடுத்துக் கொண்டு இப்பிடி வா! கொண்ணனுக்கு ஒரு காயிதம் எழுதிப்போடு. அங்கை வெச்சுக் கலியாணத்தைக் கட்டாதை இஞ்சை வைச்சுத்தான் தாலி கட்ட வேணும்; சந்நிதியில் முறைப்படிதான் கட்ட வேணும் பெட்டையையும் கூட்டிக்கொண்டு உடனை வரச்சொல்லி எழுது.’ ஆறுமுகத்தாரின் இந்தப் பேச்சு வள்ளிப்பிள்ளையை அதிர வைத்திருக்க வேண்டும். அவள் எழுந்து முன்றானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு,

‘உண்ணாணை உண்மையாத்தான் சொல்லுறியோப்பா?’ என்று கேட்டாள். நான் என்னன பகிடிக்கே சொல்லுறன். அந்தப் பெட்டை யும் ஒரு பொம்பிளைதானே! அவனும் ஆசைப்பட்டிட்டான். அவள் பெட்டையும் விரும்பியிட்டாள். தமிழ்சிங்களத்திலை என்ன இருக்கு?’

ஆறுமுகத்தார் பேசி முடிக்குமுன் மல்லிகா கொப்பி பேனையுடன் வந்து விட்டாள்.

‘எங்கை நான் சொல்லச் சொல்ல எழுது பாப்பம். முனியப்பசாமி கிருபை முன்னிட்டு வாழும்…’

ஆறுமுகத்தார் சொல்லிக்கொண்டே போனார். மல்லிகா ஆசை யுடன் எழுதிக்கொண்டிருந்தாள். கடிதம் இங்ஙனம் என்று முடிக்கப் பட்ட போதுதான், ஆறுமுகத்தார் சரியே; முடிக்கவோ என்று கேட்பதற் காக வள்ளிப் பிள்ளையைப் பார்த்தார்.

வள்ளிப்பிள்ளை மகினினதும் மருமகளினதும் படத்தைக் கையில் வைத்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘சிங்களத்தி எண்டாலும் லெட்சுமிகரமான பெட்டை’ என்று கூறிக்கொண்டே அந்தப் படத்தை ஆறுமுகத்தார் பார்க்கும்படி நீட்டினாள்.

‘பார், பார் இவள் விழுந்த பாட்டுக்குக் குறிசுடுகிறதை காலமை முழுக்க அழுதுகொண்டிருந்தவள் இப்ப மருமோளை லெச்சுமி எண்டு புளுகுகிறாள்!’

ஆறுமுகத்தார் நகைச்சுவையுடன் பேசினார். மல்லிகா கடிதத்தை முடித்து விட்டுத் தந்தையின் கை ஒப்பத்திற்காகப் பேனையை அவரிடம் கொடுத்தாள்,

ஆறுமுகத்தார் கை ஒப்பம் இடத் தொடங்கிவிட்டார். “ஐயா, மெல்லமாகடுதாசி கிழிஞ்சுபோம். மெல்லமா’என எச்சரிக்கை செய்தாள் மல்லிகா.

ஒரு மாதரி ஒப்பம் இடப்பட்டு முடிந்தது. அதற்கு ஏறக்குறைய இரண்டு நிமிடங்கள் எடுத்தன.

9

பத்திரிகைச் செய்திகள் பரபரப்பாக இருந்தன! தென்னிலங்கைப் பகுதியில் வகுப்புக் கலவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்திருப்பதாக வானொலிச் செய்தியும் கூறியது.

சிறிது சிறிதாக வடபகுதியை நோக்கித் தென்னிலங்கைத் தமிழர் ஓடி வந்து கொண்டிருந்தனர். இங்கிருந்தும் சிங்களக் குடிகள் இடம் பெயர்ந்து சென்றுகொண்டிருந்தன. உறவினர்களின் வரவை நோக்கி வடபகுதி எங்குமுள்ள ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டனர். ரெயிலின் வருகை குறைந்துவிட்டது. அகதி களாக்கப்பட்டவர்களுக்காகக் கப்பல் ஏற்பாடு நடந்து கொண்டிருப் பதாகவும் ஒரு தகவல்.

ஆறுமுகத்தார் அங்குமிங்குமாக ஓடி, ஓடி மகனைக் கண்டதாக யாராவது கூறமாட்டார்களா என்று ஏங்கித் திரிந்தும் மகன் பற்றிய தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. வீரசிங்கத்திற்குத் தந்தி கொடுத்துப் பார்த்தார்; பதில் இல்லை. வீரசிங்கத்தார்தான் அங்கிருப்பது என்ன நிச்சயம்?

முதலாவது கப்பல் காங்கேசன் துறைக்கு வருவதான செய்தி ஊர்ஜித மாகிவிடவே, ஆறுமுகத்தார் துறைமுகத்திற்குச் சென்று பார்த்தார்.

மூத்தவன் இல்லை .

இரண்டாவது நாளில் கப்பல் சென்ற போது மூத்தவனைக் கண்டு விட்டார்.

அவனின் கோலம்! அவன் பிரமை பிடித்தவனாக இருந்தான். யாருடனும் அதிகம் பேச அவனுக்கு முடியவில்லை . ஏங்கி, ஏங்கி விழிகளைப் புரட்டினான். அவனிடமிருந்து உடனடியாக நடந்தவை பற்றிய விவரங்களை அறிய முடியவில்லை .

மருமகளைப் பற்றிக் கேட்கும் நேரமல்ல இது. அவனை வீட்டுக்குக் கூட்டிவந்தபோது வீடே அவனைப் பார்த்துக் கதறியது.

ஊரில் பலரும் அவனைப் பார்க்க வந்திருந்தனர். இணுவில் கிராமத்தில் இருந்து அகதிகளாக வந்த பலரில் மூத்தவனும் ஒருவன். இராமசாமி வாத்தியாரும் வந்துபோனார்.

ஆறுமுகத்தாரைத் தனியாக அழைத்து இப்போதைக்குப் பெட்டையின் விவரம் ஒன்றையும் அவனிடம் கேட்கக் கூடாது என்று கூறிவிட்டுச் சென்றார்.

மூத்தவன் நன்றாக உண்பதில்லை, குளிப்பதில்லை, முழுகுவதில்லை. யாருடனும் அதிகமாகப் பேசுவதில்லை. போதுமான நித்திரை கொள்வதில்லை. தன்னாலேயே இடைக்கிடை கண்ணீர் சிந்துவான், விம்முவான், அழுவான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துப் பொறுமையை இழந்தவளாக வள்ளிப்பிள்ளை ‘தம்பி, பெட்டை எங்கை? தேப்பன் தாயோடை சுகமாய் இருக்கிறாளே?’ என்று ஒருநாள் கேட்டுவிட்டாள். எந்தவித வெட்கமுமின்றி அவனின் கோவென்ற அழுகைதான் அவளுக்குப் பதிலாகக் கிடைத்தது.

இரண்டு நாட்கள் கழித்து தாயானவள் மறுபடியும் அதே கேள்வி யைக் கேட்டாள். இப்போது கதறாமலேயே கண்ணீர் சிந்தினான்.

மீண்டும் ஒருநாள் கேட்டாள். இப்போது அவன் அவளைப் பற்றிச் சொல்லித் தொடங்கி விட்டான்.

தந்தையின் கடிதம் கிடைத்த மறுநாளே இத்தகவலைச் சொல்வ தற்காக அவன் கம்பஹாப் பகுதியில் உள்ள நித்தம்புவ என்ற கிராமத்தில் உள்ள அவளது வீட்டுக்குச் சென்றிருந்தான். அன்று விடுதலைநாள். சுனித்திரா வீட்டோடு இருந்தாள். தந்தையின் கடிதத்தைப் பற்றிய விவரத்தை அவளுக்கும் அவள் பெற்றோருக்கும் அவன் சொன்ன போது அவர்கள் கண்களில் மகிழ்ச்சியால் கண்ணீர் மல்கியது. நாளைக்கு மறுநாள் இருவரும் இரண்டு வார லீவு போட்டுவிட்டு யாழ்ப்பாணம் போவதாகவும் தீர்மானமாயிற்று. குறிப்பிட்ட நாளும் வந்தது. இரண்டு வார லீவும் போட்டாயிற்று.

கம்பஹா ஸ்ரேசனில் யாழ்ப்பாண ட்றேயினைப் பிடிக்க வேண்டும். அன்று காலையிலேயே அந்தப் பிரதேசத்தின் சில பகுதிகளில் கலவரம் நடந்திருப்பதாகத் தகவல் ஒன்று இருந்தது. ஆயினும் திட்டமிட்டபடி ட்றெயினைப் பிடிப்பதற்காக மாலை ஏழு மணிக்கே அவர்கள் கிராமத்தை விட்டுப் புறப்படும் வேளை!

வீட்டுக்கு வெளியே ஆரவாரங்கள் கேட்டன. பலர் உள்ளே ஓடிவருவதைப் போன்ற அதிர்ச்சி ஓசைகள்!

“கொல்லடா அவனை!’ என்ற ஒரு சிங்களப் பெரும் குரல்! முற்றத்தில் மூத்தவன் பலரால் சூழப்பட்டுவிட்டான். சுனித்திரா கத்தினாள். அவளின் தாயும் தந்தையும் அவர்களுக்கு நடுவே வந்து மூத்தவனை விலக்கிவிட வந்தனர்… அதற்கிடையில்…

உயர்ந்து வந்த தடியொன்று மூத்தவன் தலையை அணுகியபோது சுனித்திரா முன்னே பாய்ந்தது மட்டு, அவள் மண்டையில் அடிவிழுந்தது மட்டும், அவள் தலை சிதறியது மட்டும், அவனுக்கு ஞாபகம்! அதன்பின் அவனுக்கு நடந்தது ஒன்றும் நினைவில் இல்லை. நான்கு நாட்கள் ஒரு வைத்திய விடுதியில் இருந்துவிட்டு அகதி முகாமுக்குச் சென்று, அதிலிருந்து கப்பலேறி வந்தவரையில் நினைவில் பட்டதை அவன் சொல்லி முடித்துவிட்டான். அதற்குப்பின் அழுதான்!

வள்ளிப்பிள்ளை அழுதாள். அழாமல் இருக்க அவளால் முடிய வில்லை. கண்காணாத அந்த சுனித்திராவுக்காக அவள் அழுதாள். எல்லோரும் அழுவதைப் பார்த்துக் கடைக்குட்டிச் சந்திரனும் அழுதான். ஆனால் ஆறுமுகத்தாருக்கு மட்டும் அழுகை இப்போது வரவில்லை . பதிலுக்குப் பற்களை நறுநறுத்தார்.

எவ்வளவு விரைவில் வகுப்புக் கலவரம் தொடங்கியதோ அவ்வளவு விரைவாக அது அடங்கிவிட்டது. நாட்டுக்கு அது இரண்டாவது கலவரம். நாடு சகஜநிலைக்குத் திரும்பிவிட்டது. ஆனால் அந்த மூன்று நான்கு நாட்களுக்கிடையில் தலைவிரித்தாடிய வெறிதருவித்த ஞாபகச் சின்னங்கள் ஓர் இனத்தின் நடுவே நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டு விட்டன.

மூத்தவன் இன்னும் வேலைக்குத் திரும்பவில்லை. அவன் சந்நியாசக் கோலம் கலைக்கப்படவில்லை; அதற்கான தென்பும் அவனிடம் இல்லை .

ஒருநாள் வாத்தியாரிடமிருந்து மிகவும் வலியதான ஒரு கடிதத்தை வாங்கிக்கொண்டு ஆறுமுகத்தார் எம்.பீயைப் பார்க்கப் போயிருந்தார். மூத்தவனின் வேலையைக் காங்கேசன்துறைக்கு மாற்றுவது பற்றித்தான் கடிதத்தில் வற்புறுத்தப்பட்டிருந்தது. எப்படியும் அதை விரைவில் செய்து தருவதாக எம்பி வாக்குக் கொடுத்திருந்தார். அதன்படி நிறைவேற்றியும் விட்டார்.

மூத்தவனுக்கு இப்போது இங்குதான் வேலை! நாளாந்தக் கடமை ஒன்றைச் செய்வதுபோல இயந்திரமாக மூத்தவன் செயல்பட்டான்.

காலை ஏழுமணிக்கு இணுவில் சந்தியில் நின்று பஸ்ஸைப் பிடிப்பான். கையிலே உணவுப் பாத்திரம் ஒன்று இருக்கும். மாலை ஆறுமணிக்கு பஸ்ஸில் மறுபடியும் வந்திறங்குவான். குனிந்த தலை நிமிராது வீட்டிற்குள் செல்வான். நீட்டி நிமிர்ந்து படுப்பான். இரவுச் சாப்பாட்டுக்கு எழும்புவான். உணவருந்துவான். மறுபடி படுப்பான். அதிகாலை வந்து விடும். மறுபடியும் இணுவில் சந்தியில்பஸ் ! இடையில் ஒரு சினிமாவோ நண்பர்களுடன் அரட்டையோ… ஒரு வேடிக்கை வினோதமோ… குறைந்த பட்சம் ஏதாவது ஒரு களியாட்டமோ எதுவும் இல்லை .

ஆறுமுகத்தாரின் குலதெய்வமாகிய முனியப்பசாமியின் திருவிழாத் தொடங்கியது. எட்டு நாட்கள் நடந்தது. அடிப்படலைக்குள் நடந்த இந்த விழாக்களைப் பற்றிய எந்தவித உசுப்பனவும் அவனுக்கு வரவில்லை .

ஆறுமுகத்தார் கலவரத்தின் தேதியை நன்றாக மனதில் வைத்திருந்தார். மருமகள் சுனித்திரா உச்சந்தலையில் அடிபட்டு இறந்துபோன அந்தத் தேதி அவருக்கு மனப்பாடம். அதைச் சரியாகக் கணக்கிட்டுப் பார்த்ததில், ஆறுமாதத்திற்கு இன்னும் பத்துநாள்தான் இருந்தது. –

இம்முறை புகையிலை அறுவடை வாய்க்கவில்லை. பாணிப் புகை யிலைக்காகப் போட்டிப் போட்டுக் கொண்டுவரும் வியாபாரிகள் இம்முறை ஊருக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை. காரணத்தை அறிவதில் ஆறுமுகத்தாருக்குச் சிரமம் ஏற்படவில்லை. தென்னிலங்கை யில் அவர்களுக்கு இருந்த கடைகள் அழிக்கப்பட்டுவிட்டன.

தாவடி, இணுவில் அடங்க இம்முறை புகையிலை உற்பத்திக்குப் பதிலாகச் சகல தரைகளிலும் உருளைக் கிழங்கச் செய்கைதான் நடைபெற்றது. ஊருக்கு உருளைக் கிழங்குச் செய்கை புதிதுதான. ஆயினும், அது குறுகிய காலப்பயிராகவும், கிழங்கு கிளறிய உடனேயே அதைக் காசாக்கும் சந்தர்ப்பம் இருந்ததாலும், தோட்டத்தரைகள் இப்படி மாற்றம் அடைந்துவிட்டன.

ஆறுமுகத்தாரின் தரைதரிசாகவே இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டே இம்முறை இருந்து பார்க்கத்தான் அவர் முடிவு செய்தார்.

‘இஞ்சரப்பா! வாற வெள்ளிக்கிழமை மருமோளின்ரை அந்திரட்டி செய்யவேணும். மாதமும் சரியா ஆறாச்சு. எல்லாத்தையும் வடிவாய் அடுக்குப்பண்ணுங்கோ’ ஆறுமுகத்தார் மனைவியிடம் இப்படிக் கூறினார். அவளுக்கு இந்த வார்த்தை தேனாக இனித்தது. அகால மரணமடைபவர்களுக்கு ஆறு மாதத்தில்தான் அந்திரட்டி செய்வது வழக்கம். அந்த ஆறுமாத எல்லை கிட்டக்கிட்ட இவள் மனம் துடித்துக்கொண்டுதான் இருந்தது. ஆறுமுகத்தாரிடம் வாய்விட்டுக் கேட்க அவள் பயந்தாள். அன்று ஆறுமுகத்தார் கேட்டுவிட்டார்.

‘ஐயா, அந்திரட்டியிலண்டு அண்ணியின்ரை படத்தைப் பெரிசாக்கி வாசல் படியிலை வைக்க வேணும். அண்ணையிட்டைச் சொல்லி படத்தைப் பெரிசாக்கட்டே….?’ மல்லிகா ஆறுமுகத்தாரைக் கேட்டாள்.

அன்றிரவு மல்லிகா அண்ணனிடம் இதைச் சொன்னாள். அத்தை, தாய் சகோதரியின் ஒப்புதலை மூத்தவனால் நம்ப முடியவில்லை.

சிங்கள இனத்தின்மேல் தமிழர் அடங்கா வெறுப்புக் கொண்டிருக்கும் இவ்வேளை இப்படியொரு காரியத்தைச் செய்வதற்கு முன்வந்த தகப்பனின் பெரிய குணத்தை நினைத்து அவன் மனம் விம்மினான்.

வெள்ளிக்கிழமை வந்தது.

மூத்தமகள் சரசுவும் கணவனும் இளையமகளின் கணவனாகப் பதிவு செய்யப்பட்ட சங்கக்கடை மனேச்சர் மற்றும் மிக நெருங்கிய உறவினர்களின் குடும்பங்கள் ஆகியவர்களுடன் மட்டுமட்டாக அந்திரட்டி கிரியை தொடங்கிவிட்டது.

*கீரிமலையில் ஐயரைக் கொன்றாய்க்காப் பிடிச்சா என்ன?’ இப்படி ஒருவரின் அபிப்பிராயம்.

“செய்தா எல்லாம் திருப்தியாய் செய்து முடிக்க வேணும். பிறகு வீட்டுக் கிருத்தியம் செய்ய வேறை ஐயரைப் பிடிக்கிறதோ? இஞ்சை இருந்துதான் ஐயரைக் கொண்டு போக வேணும்.’

ஆறுமுகத்தார் முடிவாகச் சொல்லிவிட்டார். அதிகாலையோடு சகல அடுக்குகளோடும் இரண்டு கார்களில் கீரிமலைப் பிரயாணம் தொடங்கிவிட்டது. இணுவில் கிருத்திய ஐயர் சாமிநாதர் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேர நடுமுற்றத்தில் சாணிமெழுக்குச் செய்து, சாணி உருண்டைப் பிடித்து அதில் அறுகம்புல்லுச் சொருகிப் பிள்ளையா ராக்கி, வாழை இலை போட்டு புதிர் நெல்லுப் பரவி கும்பம் வைத்ததில் இருந்து அந்தியேட்டிக்கிரியைத் தொடங்கிவிட்டது.

‘சுனித்திரா’ என்ற பெயரை உச்சரித்துக்கொண்டே ஐயர் தொடங்கி வைத்தார். கார்கள் கீரிமலையை அதிகாலையிலே அடைந்துவிட்டன. நாற் சதுரமாக நான்கு மூலைகளிலும் பன்னிரண்டு நூல் சுற்றிய கும்பங்கள். நட்டநடுவே ஒரு கும்பம். நாற்சதுரக் கும்பங்களை இணைத்து நூல் தொடர்பு. மூத்தவன் கைவிரலில் கருப்பை! தோளில் பூணூல்! சூரிய நமஸ்காரத்துடன் கிரிகை தொடங்கிவிட்டது.

10

சுனித்திராவை உருவகப்படுத்திய தருப்பைக் கட்டு; அதை எடுத்துச் செல்லும் பாடை, சுடலையில் எரித்தல், சாம்பல் எடுத்தல், சுட்ட இடத்தில் கலப்பைக் கட்டி உழுதல், மறுத்தல், நவதானியம் விதைத்தல், சாம்பலை எடுத்துச் செல்லல், கங்கையில் கரைத்தல்; சுனித்திராவின் ஆத்மாவுக்கான சகல கிரிகைகளையும் முடித்துச் சாம்பலைக் கங்கையில் கரைத்துவிட்டு, தலை முழுகி மூத்தவன் கரையில் காலடி எடுத்து வைத்த போது கரையில் ஒருவன் கத்தியை வைத்துக்கொண்டு வழிமறித்தான்.

அவன் பரியாரி வல்லியன்! ‘எங்கைப் போட்டு வாறாய்?’

இதுவல்லியனின் கேள்வி. ‘எனது மனைவியான சுனித்திராவுக்குக் காசி கதிர் காமம் சென்ற தானம் குடுத்திட்டு வாறன்,’ இப்படி மூத்தவன் சொல்லவேண்டும். ஐயர் அவனைக்கொண்டு இதைச் சொல்ல வைத்தார். கிளிப்பிள்ளை போல மூத்தவன் இதைச் சொன்னான். கையில் இருந்த கொடுவாக் கத்தியால் நிலத்தில் குறுக்காகக் கோடு இழுத்தான் வல்லியன். கடற்கரை மணலில் கோடு தெளிவாக இருந்தது.

‘அப்படியானால் எனக்கும் தானதருமம் செய்து போட்டுப்போ!’ வல்லியன் நாக்குத் தெறிக்க இப்படிக் கேட்டான்.

இப்படி ஆயிரம் பேர்களிடம் அவனுக்குக் கேட்டுப் பழக்கம். தனக்கு மேல்பட்டவர்களிடம் நசிந்து நசிந்து பேசும் வழக்கத்தை உடைய அவனுக்கு இந்த ஒரு சந்தர்ப்பம்தான். ‘றாங்கி’யாக ‘எனக்கும் தான தருமம் தந்திட்டுப் போ!’ என்று ‘போ’ போட்டுப் பேச உரிமையானது. இந்த உரிமையை அவன் விடுவானா?

கட்டியிருந்த கோவணத்தை மட்டும் விட்டு விட்டு உடுத்த வேட்டியை அப்படியே தானமாக வல்லியனுக்குக் கொடுக்கவும் தீர்த்தக்கரை அந்தியேட்டி நிறைவுக்கு வந்து கொண்டிருந்தது?

இனி வீட்டுக் கிருத்தியம். வந்தவர்கள் எல்லோரும் கேணிக்குள் பாய்ந்து தீர்த்தமாடினர். தீர்த்தக்கரைக் கோவிலுக்குச் சென்றனர். வட்டக் கல்லில் இருந்த சந்தனக்கட்டையை உரைத்தனர். பொட்டிட்டுக் குறியிட்டனர். முன் தேநீர்க் கடையில் ஆளுக்கு இவ்விரண்டு வடைகளைக் கடித்துத் தேநீர் அருந்தினர். வீடு நோக்கிக் கிளம்பிவிட்டனர்.

கார்கள் வீட்டுக்கு வந்துசேர மணி பத்துக்கு மேலாகிவிட்டது.

சுனித்திராவின் படத்தின் கீழ் அணையாத விளக்கொன்று எரிந்து கொண்டே இருக்கும். அந்தியேட்டியன்று ஆறுமுகத்தார் வாங்கி வைத்த சின்னஞ்சிறு தூங்கா மணி விளக்கு அது. அந்த விளக்கு வருடங்கள் மூன்றுக்கு மேலாகியும் இன்றுவரை நூர்ந்ததில்லை. கிழமைக்கு இரண்டு நாட்களோ மூன்று நாட்களோ அதன் எண்ணெய் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்வது வள்ளிப்பிள்ளையினுடைய பொறுப்பு.

இளையவள் மல்லிகாவுக்குத் திருமணம் நடந்து அவள் அள வெட்டிக்குப் போய்விட்டாள். இடையிடையே இரு சகோதரிகளும் வந்து போவர். வரும்போது அவர்கள் வீட்டில் இருந்தே மலர்கள் கொய்து வந்து அண்ணியின் படத்திற்குச் சாத்துவதற்குத் தவறுவது இல்லை .

இந்த ஏற்பாடுகளை மூத்தவன் சொல்லிச் செய்யவில்லை. அவர் களாகவே செய்தார்கள்.

ஆறுமுகத்தார் ஏதாவது நாள் காரியம் செய்யப்போகும் போது அந்தப் படத்தில் சாற்றப்பட்டுள்ள புதிய பூவையோ, அல்லது வாடிவதங்கிவிட்ட பூவையோ எடுத்து வலக் காதில் செருகிக்கொண்டு செல்லும் அளவுக்குச் சுனித்திரா உயர்ந்துவிட்டாள்.

வருடத்தில் ஒரு தடவை சுனித்திராவின் அப்பாவும் அம்மாவும் இணுவிலுக்கு வந்து மருமகனைப் பார்த்துக்குசலம் விசாரித்துவிட்டுப்

போவதும் இந்த வழக்கங்களுடன் சேர்ந்து போய்விட்டது.

மகளின் படத்திற்கு அந்த வீட்டின் செய்யப்படும் மரியாதை அந்த மனிதக்கூடுகளின் உணர்ச்சி நரம்புகளைத் தட்டி எழுப்பிய சந்தர்ப்பங் களும் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இருந்திருக் கின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் வந்து போகும் போது, மூத்தவன் அவர்கள் கால்களில் முழந்தாள்படியிட்டுக் குனிந்து வளைந்து பௌத்த கலாசார முறைப்படி வணக்கம் செலுத்திக் கொள்வதை அவனைவிட இங்கு யாருமே உயர்ச்சியாகக் கருதவில்லை.

ஒவ்வொரு தடவையும் அவர்கள் வரும்போது சோட்டைப் பண்டங் களாக கித்துள்கட்டி, கஜுக் கொட்டை, கொண்டப் பணியாரம், சம்பிரதாய பூர்வமான ஆனை வாழைப்பழம் அத்துடன் அவனுக்கென இரண்டு கிரிபத்’ கட்டிகளையும் கொண்டுவரத் தவறுவதில்லை.

அதேபோல, ஒவ்வொரு தடவையும் பாணிப் பனாட்டுப்புழுக் கொடியல், செம்பாட்டான் மாம்பழம், கூவில்பனங்கட்டி, முருங்கைக் காய்க்கட்டு ஆகியவைகளைச் சம்பந்திகளுக்குக் கொடுத்தனுப்ப ஆறுமுகத்தாரும் தவறியதில்லை .

இவர்கள் வந்துபோவதுபோல் ஆறுமுகத்தாரும் மனைவி வள்ளிப் பிள்ளையும் கதிர்காம யாத்திரை போகும் போது அவர்களின் தடிகளால் கட்டப்பட்டு, களிமண்அப்பி உயர்த்தி எழுப்பப்பட்டு, அதன்மேல் வைக்கோலால் வேயப்பட்ட சிறு குடிசைக்குப் போகும் போது அவர்கள் சம்பிரதாய பூர்வமாக இவர்களை வெற்றிலைச் சுருள் கொடுத்து வரவேற்கத் தவறியதில்லை. அப்போதெல்லாம் அவர்கள் மண் சுவரில் மருமகளின் படம் தொங்குவதையும் கண்டனர்.

மூத்தவனுக்குப் பல இடங்களில் இருந்தும் சம்பந்தங்கள் பேசி வந்தனர். தரகர்மார் பலர் படாதபாடுபட்டனர். மூத்த மைத்துனர், இளைய மைத்துனர் பகுதிகளில் இருந்தும் பல சம்பந்தங்கள் இவர்கள் செல்வாக்கைப் பிரயோகித்துப் பேசி வந்தனர்.

இவைகளுக்கெல்லாம் மூத்தவன் கொடுத்த ஒரே ஒரு பதில் ‘நான் கலியாணம் கட்டமாட்டன்,’ என்பதாகும். இந்த விஷயத்தில் ஆறுமுகத்தார் படாத பாடுபட்டுவிட்டு முடிவில் ‘எல்லாத்துக்கும்
முதல்லை அவன்ரை முடிவைக் கேளுங்கோ? ‘ என வருபவர்களுக்கு மொட்டையாகச் சொல்லி அனுப்பிவிடுவார்.

தாயானவள் எப்போதாவது இருந்துவிட்டுக் கல்யாணப் பேச்சை எடுத்துவிட்டால் மூத்தவனுக்கு அழுவதைத்தவிர வேறு வழிகிடைப்ப தில்லை. ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் தோட்டத்தரைக் குள்ளேயே காலத்தைக் கடத்திவிடுவான். அவனின் கருந்தாடியும் தாடி மயிரும் தோட்டப் புழுதியில் அலையுண்டு அலையுண்டு செம்பாட்டு நிறம் சேர்ந்துவிட்டன. வேலைக்குப் போகும்போது மட்டும் அவை களைக் கழுவித் துடைப்பான், மற்றப்படி ஊத்தையனாகவே இருப்பான்.

‘என்னப்பா, மூத்தவன்ரை கோலம்? சாமியாப் போறவயதே? எப்பிடியெண்டாலும் ஒரு கட்டையிலைத் தெண்டிச்சுக் கட்டிப் போட்டமெண்டா பிறகு திருந்தியிடுவான்!’ என்று வள்ளிப்பிள்ளை ஆறுமுகத்தாரை நச்சரிக்கும் போதெல்லாம் ‘அதுக்கு என்னை என்னடி யப்பா செய்யச் சொல்லுறாய்! கட்டிறது நானோ, அவனோ, எனக் கேட்டுச் சினந்து கொள்வார்.

‘சந்நிதியானுக்கு ஒரு நேத்தி வைச்சு பிறதட்டைக் காவடி எடுத்துப் பாரனப்பா .’

‘எடி, எடி, விசரி பேசாமல் இரடி! சந்நிதியானுக்கு இப்பவேலை பொம்புளை தேடுறதோ?’

“மோனெண்டும் பாக்காமல் வெக்கத்தை விட்டுச் சொல்லுறன். உவனை ஒரு ஆமான தமிழ்ப் பரியாரியிட்டை காட்டினா என்னப்பா? கள்ளியங்காட்டு ராமசாமிப்பரியாரி உதுகளுக்கு ஒர லேகியம் குடுக் கிறவரெண்டு கேள்வி!’

‘எடி, அறுந்தவனே, சும்மா அலட்டாதையடி! பொடியனுக்கு லேகியம்வாங்கிக்குடுத்துச் சாகச் சொல்லிறியேடி? எனக்குத் தெரிஞ்ச மட்டிலை சொல்லுறன். அந்தச் சிங்களப் பெட்டை உயிரோடை வந்தாலொழிய அவன்ரை பிடிவாதம் தீராது.

சும்மா வீண்தனமாகக் கதைக்கிறாள் இவள்.’ ‘ஆரிட்டையெண்டாலும் நரம்பு டாக்குத்தரிட்டை காட்டச் சொல்லி கனபேர் சொல்லுகினம்!’

‘அவனுக்கு நரம்பு வருத்தம் இல்லையடி சும்மா கிடவடி!’ ‘ஏக்கத்துக்குப் பார்வை பார்த்துக் கழிப்புக் கழிச்சு நூல் கட்டவும் சொல்லுகினம்!’

‘ஆரோ, ஒரு விசரி உவளுக்குச் சொல்லிப் போட்டாள்!’ கணவனுக்கும் மனைவிக்குமிடையே நடந்த இந்தச் சம்பாஷணை அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

‘இஞ்சேரும் முகத்தார், அவள் சிங்களத்தியின்ரைப் படத்தை வாசல் படியிலைத் தூக்கிப்போட்டு, நீர் அதுக்குத் தூண்டாமணி விளக்கும் வைச்சு பூவும் சாத்திறியள். அது தான் பெடியன் அவளைத் தெய்வமாய் நினைச்சு கலியாணம் கட்ட மாட்டன் எண்டு நிக்கிறான். ஒரு அஞ்சாறு நாளைக்கு அந்தப் படத்தைக் கழற்றிவிடும். சில வேளை பெடியன் சரிவந்தாலும் வருவான்!

மருதனாமடம் குழைத்தரகர் தாடிக் கந்தப்பர் இப்படி அபிப் பிராயம் சொன்னார்.

ஆறுமுகத்தாருக்கு மனப்போராட்டம் தொடங்கிவிட்டது லெட்சுமி கரமான அந்தப் பெண்ணின் படத்தை இருப்பைவிட்டு அகற்ற, அவர் மனது கொஞ்சம்கூட சம்மதிக்கவில்லை. ஆனால் உள் மனதுக்கு இது பிரச்சினையாகி விட்டது. அந்தப் பிரச்சினையைச் சுமந்து கொண்டு அவர் வீட்டுக்குப் போனார்.

மதிய வேளை வள்ளிப்பிள்ளை அவருக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தபோது, ‘இஞ்சை கேள் பெட்டையின்ரை படத்தை ஐஞ்சாறு நாளைக்கு கழற்றி அவன்ரை கண்ணிலைப் படாமல் மறைச்சு வைச்சா மூத்தவன் கலியாணம் கட்டச் சம்மதிப்பான் எண்டு குழைத் தரகர் தாடிக் கந்தப்பர் செல்லுறாரப்பா?’ என்று ஆறுமுகத்தார் மெதுவாகக் கதைவிட்டுப் பார்த்தார்.

“இதுகுமொரு கண்டறியாத கதையெண்டு கேட்டுக் கொண்டு வந்து என்னட்டைச் சொல்லுறியோ…. அவன் இரணியன்! தோட்டக் காரரிட்டையும், குழைக்காரரிட்டையும் துடிக்கப் பதைக்கக்காசு புடுங்கிறவன்ரை கதையக் கேட்டுக்கொண்டு வந்து எனக்குச் சொல்லுறியோ? நான் சொல்லிப் போட்டன், செத்தாலும் அந்த லெச்சுமியின்ரை படத்திலைக் கைவைக்க விடன்.’

வள்ளிப்பிள்ளை ஆவேசமாகப் பேசிவிட்டு நேராகச் சுனித்திராவின் படம்வரை சென்று அதன் முன் வைக்கப்பட்ட குங்குமச் சிமிழைத் தொட்டுக் கண்ணாடிக்குமேல் வைக்கப்பட்ட சந்தனப் பொட்டின் மேல் விரலால் தொட்டு வைத்தாள். அந்தப் பொட்டு மிகவும் தடித்திருந்தது. அந்தியேட்டி நாளிலிருந்து சந்தனக் குழம்பினால் வைக்கப்பட்ட அப்பொட்டுக்கு மேல் மீண்டும் மீண்டும் போட்டு வைத்ததால் அது தடித்திருந்தது.

‘எடி, ஆரடியப்பா சொன்னது படத்தைக் கழற்றிறனெண்டு? ஏனடியாத்தை ஊரைக் கூட்டிற மாதிரி கத்துறாய்? ‘இப்படிச் சமாளித்துக் கொண்டார் ஆறுமுகத்தார்.

‘பின்னை என்ன… உதுகுமொரு கதையெண்டு கதைச்சா மனிசருக்குப் பத்தாமல் என்ன செய்யும்?’ என்று குரலைக் குறைத்துக் கொண்டாள் வள்ளிப்பிள்ளை.

அப்போதுதான் கொளுத்தும் வெயிலில் சிலேற்றைத் தலையில் பிடித்துக் கொண்டு பாடசாலையிலிருந்து வந்து சேர்ந்தான் இளையவன் சந்திரன்.

உணவருந்தி முடிந்து திண்ணையில் சற்று வேளைச் சரிந்து பொய்யுறக்கம் செய்து, மண்வெட்டியையும் தூக்கிக்கொண்டு தோட்டத் திற்குப் போன ஆறுமுகத்தார் பொழுது கருகிவிட்டபோதுதான் வீட்டுக்கு வந்தார்.

வந்ததும் வராததுமாக கிணற்றடி சென்று மேலைக் கழுவிக்கொண்டு இஞ்சரப்பா வாத்தியாருக்கு ஏதோ சுகமில்லையாம். நான் ஒருக்காப் போட்டு வாறன்’ என்று கூறிக்கொண்டே வேட்டியை மாற்றியபடியே புறப்பட்டுவிட்டார்.

11

படத்திற்குப் பூ வைக்கும் நேரம் வந்துவிட்டது. வள்ளிப்பிள்ளை கிணற்றடிப் பக்கம் சென்று, வழமையாக ஓரிரு பூக்களைப் பிடுங்கு பவள், இன்று கைநிறையப் பூக்களைப் பிடுங்கிக்கொண்டு வந்தாள். இன்று அவள் மனம் அப்படி இருந்தது.

ஆறுமுகத்தார் வாத்தியார் வீட்டுக்குச் சென்ற போது வீடு நிறையச் சனக் கூட்டமாக இருந்தது.

வாத்தியார் அறிவு நினைவற்றவராகக் கட்டிலில் கிடத்தப் பட்டி ருந்தார். உள்ளே போகும்போதே ஆறுமுகத்தாரின் நெஞ்சு அடிக்கத் தொடங்விட்டது.

மத்தியானம் போல் அவருக்குத் தலைசுற்று வந்தது. தன்னைப் பெரியாஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும்படி அவரே சொன்னார். அதன்படி அங்குக் கொண்டு சென்றனர்.

அவரிடம் ஆங்கிலம் சுற்றுத் தேறிய டாக்டர் ஒருவர் அவரைப் பார்வை இடும்போது மனம் தாளமாட்டாமல் அழுதுவிட்டதை அவர் கண்டுவிட்டார். உடனடியாகத் தன்னை வீட்டுக்குக் கொண்டு செல்லும்படி கூறவே அவர்கள் வாத்தியாரை மாலைக்கிடையில் வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டனர்.

இப்போது அவர் யாருடனும் பேசச் சக்தியற்று மரணத்தறுவாய்க்கு வந்துவிட்டார். மூச்சுக் குறைந்து வந்தது. நாடித் துடிப்பும் குறைந்து வந்தது.

இரவு எட்டு மணிபோல் அவர் உயிர் பிரிந்துவிட்டது. கூடவே நின்ற ஆறுமுகத்தார் “கோ….’ எனக் குரல் வைத்து அழுதார். ‘வாத்தியார், ஐயா… இனி நான் ஆரிட்டைப் போய் என்ரை குறை நிறையைச் சொல்ல!’ என்று ஆறுமுகத்தார் புலம்பினார்.

மூத்தவன் நான்கு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. ‘என்னப்பா, மூத்தவனை நாலு நாளாக் காணேல்லை… வேலைத் தலத்திலை ஏதும் வில்லங்கமோ. தெரியேல்லை. ஒருக்காப் போய் பாத்துக்கொண்டு வாவனப்பா.’

வள்ளிப்பிள்ளை அழாக் குறையாக ஆறுமுகத்தாரைக் கேட்டாள். ‘ஏதெண்டாலும் அவசரமான கணக்குக் கிணக்கு எழுதிற வேலை இருந்தாலும் இருக்கும். வருஷம் முடியிறகாலமெல்லே… வருவான் நீ, பேசாமல் இரு!’

இப்படிப் பதில் சொல்லிவிட்டு, ஆறுமுகத்தார் சூரிமண்வெட்டி யையும் கைப்பாரையையும் தூக்கிக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.

சூரி மண்வெட்டியையும் கடப்பாரையையும் எடுத்தாரானால் அது நிச்சயமாக அகிளான் வேட்டைக்காகத்தான் இருக்குமென நகுலன் நாய்க்கு விளங்கிவிடும். அது தன் கூழை வாலையும் ஆட்டிக்கொண்டு

ஆறுமுகத்தாருக்கு முன்னால் கிளம்பிவிடும்.

‘இஞ்சாரப்பா, கிழக்குப் பக்கத்தில் உள்ள பாத்தியிக்கை நேத்து அகிளான் புத்தொண்டைக் கண்டனான்’ என்று மனைவிக்குக் கேட்கக் கூறிக்கொண்டே ஆறுமுகத்தார் தோட்டம் நோக்கிக் கிளம்பிவிட்டார்.

அவர் தோட்டத்திலிருந்து திரும்ப நடுப்பகல் ஆகிவிடும் என்பது வள்ளிப்பிள்ளைக்குத் தெரியும். அவர் அகிளான் வெட்டத் தொடங்கி விட்டால் தோட்டத்தரை எங்கும் வகிர்ந்து, வகிர்ந்து, எங்காவது அகிளான் புற்றுக் கண் இருக்கிறதா என ஒரு விரிந்த அளவு ஆய்வு நடத்திவிட்டுத்தான் புறப்படுவார். சில சமயங்களில் தன்னையும் மறந்து நடுப்பகல் உணவையும் மறந்து, மாலைவரையும் அவர் நின்று விடுவதும் உண்டு.

வள்ளிப்பிள்ளைக்கு இன்று பகல் உணவுக்குக் குரக்கன்பிட்டு அவிக்க வேண்டுமென மனதுக்குப் படவே, குடுவை உரலை நிமிர்த்தி, சிறு பெட்டியளவு குரக்கனை அதில் கொட்டி, சுனை உலக்கையால் நான்குபத்துக்குத்துக் குத்திசுளகில் அதைப் பரவி அசடுகளைப் புடைத்துத் தள்ளிவிட்டு திருகைக் கல்லை எடுத்து, அதன் குழியில் நான்கைந்து பிடியளவு நிரப்பி, திருகையை ஆட்டத் தொடங்கிவிட்டாள். எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகலாம் ஒருபடி குரக்கன் அரைக்க என்பதைத் தெரிந்து கொண்டு வெற்றிலைத் தட்டத்தையும் அருகில் வைத்துக்கொண்டுதான் தொடங்கினாள்.

படலையைத் திறந்து கொண்டு ஆஸ்பத்திரியடி அன்னமுத்து வந்தாள். ‘அன்னமுத்து இந்த நேரத்திலை ஏன் வாறாள் தெரியயேல்லை. வாற அவசரத்தைப் பார்க்க ஏதோ சொல்ல வாறாள் போலை கிடக்கு…’ என நினைத்தபடி ‘வா அன்னமுத்தக்கா!’ என்று அவளை முகமன் கூறி வரவேற்றாள்.

அன்னமுத்து வந்து பக்கத்தே இருந்து சாக்குக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள். அவள் பக்கமாக வெற்றிலைத் தட்டத்தைத் தள்ளிவிட்டு விட்டு ,

‘குரக்கன் பிட்டுத் திண்டு கனநாளாப் போச்சு. அவன் தம்பிக்கும் இண்டைக்குப் பட்டினிப் பண்டம் ஏதும் தேடேல்லை. அவனும் நாலைஞ்சு நாளாய் வரேல்லை. அதுதான் லீவான நாளையிலை சோட்டைப் பண்டம் சரிக்கட்டுவம் எண்டு நினைச்சாப் போலை….’ வள்ளிப் பிள்ளை பேசி முடிக்கவில்லை.

‘ஓமடிபிள்ளை , பொடியனைப் பத்தித்தான் கேக்க வந்தனான்… ஆசுப்பத்திரியடி எல்லாம் கதையாக் கிடக்கு அவன் ஆரோ… அவன் ஆரோ… ஒரு… உனக்கு செல்லத்தானே வேணும் எப்படியெண்டாலும் நீ தாயேல்லே …’

அன்னமுத்து மேலே பேச முடியாமல் விக்கி, விக்கிக் கொண்டி ருந்தாள்.

வள்ளிப்பிள்ளைக்கு நெஞ்செல்லாம் கொதித்தெழும்பியது ஈரல் குலையில் இருந்து ஒரு நடுக்க உணர்வு மேலோங்கி உடலெல்லாம் பரவி….

அவளுக்குத் தலை சுற்றியது. ஏதோ மூத்தவனுக்கு நடக்கக் கூடாதது நடந்துவிட்டதாக… கடந்த மாதமும் சீமெந்துப் பக்ரரியிலை ஒருவன் மெசினுக்குள் அகப்பட்டு …. |

‘வள்ளிப்பிள்ளை! ஆரோ ஒரு பெட்டையோடை அவனைக் காரைதீவுக் கடற்கரையிலை கண்டவையாம். தாடியையும் வெட்டிப் போட்டானாம்…’

வள்ளிப்பிள்ளையின் நெஞ்சுக்குள் ஒரு கஷ்டம் நீங்கிவிட்டது போன்ற ஓய்வு.

‘வீண்ணாணக்கதை கதைச்சவனுக்கு மங்களம் குடுத்திட்டுத் தான் வாறன். அதுக்கென்ன அவன் ஆம்பியளை! பெண்டிலைப் பறிகுடுத் திட்டு எத்தினை காலத்துக்குத் தான் ஒண்டிக் கட்டையாக இருக்கிறது? முந்திப் பிந்தி வாழாதவன் எண்டாலும் பரவாயில்லை. வாழ்ந்து கெட்டவன்… இது பெரிய விண்ணாணம் எண்டு கதைக்கிறியள் … எண்டு கிழிச்சுப்போட்டுத்தான் வாறன். ஏதோ தங்கடை பிள்ளைய ளெல்லாம் சுத்தமெண்டு வெள்ளைச் சீலையிலை கையெழுத்து வைக்கினம். |

அன்னமுத்து தன் மனதில் உள்ளதைக் கொட்டிவிட்டாள். வள்ளிப்பிள்ளை எழுந்தாள். ‘அன்னமுத்தக்கா எப்பன் இரணை வாறன்…’ என்று கூறிக்கொண்டே தோட்டத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றாள்.

அப்போதுதான் அகிளான் எலியின் வெடிப்புத்தை வகிர்ந்து பிடித்து வெட்டும்போது அகிளான் வெடிப்புத்தால் ஓடாமல் தோளால் சவுக்கத்தை எடுத்து வெடிப்புத்தின் வாயில் பரவி விரித்துவிட்டு, அரிவாய்ப் புத்தை சூரிமண்வெட்டியால் வெட்டத்தொடங்கினார். ஆறுமுகத்தார்.

நகுலன் நாய் வேட்டையைப் பிடிப்பதற்குத் தயார் நிலையில் செவிகளை உயர்த்தியும் கூழைவால் முனையைத் தாழப்பதித்தும் கண்களால் வெருண்டும் கொண்டிருந்தது.

வள்ளிப்பிள்ளை அவருக்குப் பின்பக்கமாகவே வந்தாள். ஏற்கெனவே அவளைக் காண அவரால் முடியவில்லை .

‘இஞ்சேரப்பா!’ மனைவியின் இந்த அழைப்புக் குரல் கேட்டு, அவர் திடுக்குற்றுவிட்டார்.

அவள் கண்ணீரும் கம்பலையுமாக அவர் முன்வந்தாள். ‘என்னடியப்பா அது? ஏன் இப்படி ஆத்துப் பறந்து வாறாய்… என்னடி?’ ஆறுமுகத்தார் அவசரமாகக் கேட்டார்.

“மூத்தவன் … மூத்தவன்…’ மேலே பேசமுடியாமல் விக்கித்தாள். ஆறுமுகத்தாருக்கு நெஞ்சு துடித்தே விட்டது போன்ற ஒரு ஏக்கம்!

‘என்னடி… மூத்தவனுக்க என்னடி?…’ என அவர் மீண்டும் அதட்டிக் கேட்டார்.

‘அவன் ஆரோ ஒரு பெட்டையையும் கூட்டிக்கொண்டு காரைதீவுக் கடற்கரையிலே நிற்கின்றானாம்.’

வள்ளிப்பிள்ளை ஒரு மாதிரி சொல்லி முடித்துவிட்டாள். ‘எடி, அறுந்தவளே! இதைச் சொல்லத்தானேயடி இவ்வளவு வில்லங்கப்பட்டm? நான் அவனுக்கு ஏதோ என்னவோ எண்டு பயந்து போனேன்! |

ஆறுமுகத்தார் இப்போது நிதானமாகிவிட்டார். தாடியையும் வெட்டிப் போட்டானாம்!’ வள்ளிப்பிள்ளையின் இந்தப் பேச்சை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சூரிமண்வெட்டியையும் பாரையையும் எடுத்துக் கொண்டு அவர் வீட்டை நோக்கி நடந்தார். நகுலன் நாய் அவரின் காலடியை முகத்தால் தொட்டுத் தொட்டு நடந்தது. பின்னே வள்ளிப் பிள்ளை நடந்தாள். அவர்கள் வீட்டுக்கு வரும்வரை அன்னமுத்து

குரக்கன் திருகைக்குக் காவலாக இருந்தாள்.

ஆறுமுகத்தார் வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. கிணற்றடிக்குச் சென்றார். மேல் கழுவினார். வேட்டியை மாற்றினார். சவுக்கத்தைத் தோளில் போட்டார். சுனித்திராவின் படத்துக்கு நேரே சென்றார். படத்துப் பாதத்தில் கிடந்த பூவில் ஒன்றை எடுத்தார். வலக்காதில் செருகினார். ரத்தம் கொட்டிக் கொண்டேதான் இருந்தது. வெளியே சென்றுவிட்டார்.

முனியப்பர் கோவில் சந்திவரை வந்து காங்கேசன் துறைக்குப் போகும்பஸ்ஸைப் பிடித்துக்கொண்டு பக்ரறி வாயிலில் வந்திறங்கி வாயில் காப்போனிடம் எதை எதையோ கேட்டார்.

அவன் பக்ரறிக்கு முன் பக்கமாக இருந்த அலுவலகங்களைக் காட்டினான்.

நிரையில் சீமெந்துக்காக லொறிகள் அடுக்கிவிடப்பட்டிருந்தன. நேராக ஆறுமுகத்தார் ஓர் ஆடுகதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்று மூத்தவனாகிய முகுந்தனை விசாரித்தார். தான் அவனின் தந்தை என்றார்.

முகுந்தன் நான்கு நாட்களுக்கு முன் லீவு போட்டுக்கொண்டு போய் விட்டதாகத் தகவல் கிடைத்தது. பொழுது சருக்கலுக்குள் அவர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

காலையில் இருந்து தண்ணீரில்லை. வெந்நீரில்லை. வள்ளிப் பிள்ளை முன்றானையால் மூடிக்கொண்டு திண்ணையில் சுருண்டு போய்க்கிடந்தாள்.

இளையவனைக் காணவில்லை. கூழைவான் நகுலன் அவரை அணுகி வரவேற்றது. ‘இஞ்சாரப்பா… இஞ்சர்! எழும்பன்,’

ஆறுமுகத்தாரின் இந்தப் பரிவான குரல் கேட்டு வள்ளிப்பிள்ளை எழுந்திருந்து ஏக்கத்துடன் ‘என்ன வாமாப்பா… மூத்தவனைக் கண்டியே….?’ என்ற கேள்வியை அவசரமாகக் கேட்டாள்.

‘ஏனடியப்பா இப்ப வில்லங்கப்படுகிறாய்? இப்ப, என்னடி நடந்து போச்சு? நாலைஞ்சு வருசமாக்கலியாணம் கட்ட மாட்டன் எண்டு நாண்டு கொண்டு நிண்டவனை முனியப்பசாமி மனம் மாத்திப்

போட்டார்! இதுக்குச் சந்தோஷப்படாமல் ஏனடி அழுவான்?’

ஆறுமுகத்தாரின் இந்தக் கேள்விகளுக்கு வள்ளிப் பிள்ளையிட மிருந்து எந்தப்பதிலும் வரவில்லை .

சற்று வேளைக்குப் பின் வள்ளிப்பிள்ளை எழுந்து அடுக்களைக்குச் சென்றாள்.

இருட்டிக்கொண்டு வந்தது. இன்று தூங்காமணி விளக்கிற்கு எண்ணெய் விடும் முறை. எண்ணெய்ப் போத்தலுடன் அவள் வெளியே வந்தாள். தூங்காமணி விளக்கிற்கு எண்ணெய் வார்த்தாள். கிணற்றடிக்குப் போனாள்.

செம்பரத்தம் பூ ஒன்றை பறித்து வந்தாள். சுனித்திராவின் பாதங்களில் வைத்தாள். மீண்டும் அடுக்களைக்குள் போய்விட்டாள். ஆறுமுகத்தார் வள்ளிப்பிள்ளை படுத்திருந்த இடத்தில் சரிந்து விட்டார்.

இளையவன் விளயைாடிவிட்டு வந்து புத்தகமும் விளக்குமாக வீட்டுக்குள் செல்வதைக் கண்டார். பின்பு கண் அயர்ந்துவிட்டார்.

இஞ்சை கேளனப்பா-!’ அடுக்களைக்குள் இருந்து வள்ளிப்பிள்ளை யின் குரல் கேட்டது.

‘வாவன் சோத்தைத் தின்னன். இண்டு முழுக்கப் பட்டினி!’ மறுபடியும் வள்ளிப்பிள்ளையின் குரல். ‘இளையவன் திண்டிட்டானே?’ என்று கேட்டுக்கொண்டே குடத்தடிக்குச் சென்று பொச்சு மட்டைமேல் குந்தி இருந்த குடத்தைச் சரித்துக் கையலம்பிக் கொப்புளித்தபடி சாப்பிட வந்துவிட்டார்.

‘நீ சொல்லுறது ஒரு முறைக்குப் பாத்தா சரிதானப்பா! அந்தப் பெட்டை ஆரெண்டல்லோ அறிய வேணும்.

ஆறுமுகத்தார் ஒரு கோப்பைச் சாப்பாட்டை முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு, வள்ளிப்பிள்ளை இதைக் கேட்டாள்.

ஆறுமுகத்தார் வாய் திறக்கவில்லை . காலையைப் போன்று மீண்டும் மௌனம்! சாப்பாடு முடிந்தது. சாப்பிட்ட கையோடு சுருட்டைப்பற்றி முடித்துப் பாயை விரித்தாய் விட்டது. இனி அவர் படுத்து உறங்க வேண்டியதுதான்.

அவர் படுத்தார். தூங்குவதற்காகத்தான். ஆனால் விடியும்வரை அவரால் தூங்க முடியவில்லை. அதிகாலையோடு வயிரவன் வந்தான். இன்று வெள்ளிக்கிழமை. கிழங்கு கிளறுவதற்கு உதவியாக அவர் அவனை ஏற்கெனவே வரச் சொல்லியிருந்தார்.

வயிரவன்தான் இன்று அவருக்கு முழுவியளம். அவனையும் அழைத்துக் கொண்டு பாரைகளையும் எடுத்துக்கொண்டு அவர் தோட்டப் பக்கம் போய்விட்டார்.

‘நயினாருக்குச் சொன்னா என்ன… கதை மலிஞ்சாச் சந்தைக்கு வரும்தானே… எங்கடை மச்சாளின்ரை பொட்டை – அது தானாக்கும் சீமெந்துக் கொம்பனியிலை வேலை செய்யிற பொட்டை – அவளை ஐஞ்சாறு நாளாய்க் காணவில்லையாம். ஓடித்திரியினமாக்கும்.’

ஆறுமுகத்தாருக்குத் தரையில் கால் வைத்து நடப்பதைப் போன்ற உணர்வே இல்லை.

‘வயிரவன் நீ வீட்டை போ, நாளைக்கு வா, கிழங்கு கிண்டுவம்’ என்று மட்டும் சொன்னதாக ஞாபகம்.

ஆறுமுகத்தார் தோட்டத்திற்குப் போன கையோடேயே திரும்பி விட்டது வள்ளிப்பிள்ளைக்கு என்னவோ மாதிரி இருந்தது.

ஆறுமுகத்தார் திண்ணையில் படுத்துக் கொண்டார். ‘என்னப்பா ஏதெண்டாலும் செய்யுதே?… கொத்தமல்லி போட்டுக் கோப்பி கலந்துதரட்டே’ வள்ளிப் பிள்ளை இப்படிக் கேட்டாள்.

‘எனக்கொண்டும் வேண்டாம்.’ இப்படி மொட்டையாகவே ஆறுமுகத்தார் பதில் சொன்னார். வள்ளிப்பிள்ளை எதுவும் பேசவில்லை. சற்றுவேளை நிசப்தம். ‘இண்டைக்கு எப்பன் புளிக்கஞ்சி வையப்பா குடிக்க வேணும் போலை கிடக்கு.’

ஆறுமுகத்தார் திடீரென்று சொன்னார். புளிக்கஞ்சி காய்ச்சுவதற்கு இப்படி அவசரப்பட்டு என்றும் அவர் சொன்னதில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னேயே அதற்கான தினை, கிழங்குவகை, கீரை வகை சேகரித்து, கடைசியாகச் சேகரிக்கும் இரு இலையும் போட்டுப் புளிக் கஞ்சி காய்ச்சுவதுதான் வழக்கம்.

‘தினை அரிசி இல்லையப்பா.’ வள்ளிப்பிள்ளை மெதுவாகச் சொன்னாள். ‘ஏன் புழுங்கல் அரிசி இல்லையே.’

ஆறுமுகத்தார் விடவில்லை . ‘என்ன இண்டைக்கு இருந்தாப் போலை இந்த மனிசனுக்கு வந்திட்டு தாக்கும்,’ என்று உள் மனதுக்குள் சொல்லிக்கொண்டே அவள் எழுந்து கஞ்சி காய்ச்சுவதற்கான அடுக்குகளைச் செய்தாள்.

ஆறுமுகத்தர் கண்களை மூடிக்கொண்டு பொய்யுறக்கம் செய்தார். சற்று வேளையாயிற்று. அன்று வெள்ளிக்கிழமை, ஆரதக்கறி ஆக்க வைத்திருந்த கீரை, கிழங்கு ஆகியவைகளை ஒடித்தும் அறுத்தும் விட்டு வள்ளிப்பிள்ளை உலை வைப்பதற்காகப் பானையை உரசிக் கழுவிக்கொண்டிருந்தாள்.

அடுக்களையிக்கை வையாதை! மூண்டு கல்லை வைச்சு உலையை முத்தத்திலை வையப்பா.’

ஆறுமுகத்தார், கிடந்தபடியே கூறினார். வள்ளிப்பிள்ளைக்கு ஒன்றும் புரியவில்லை .

“மூத்தத்திலை வெய்யிலாக் கிடக்கு…’ என்று அவள் கூறி முடிக்கு முன்,

மூத்தத்திலை வையெண்டு நான் சொல்லுறன்…’ எனச் சற்று உரத்தக் குரலில் கூறினார் ஆறுமுகத்தார்.

இதற்கு மேல் அவருடன் வாதாட முடியாது. அவரின் சுபாவம் அப்படி.

வள்ளிப்பிள்ளை முற்றத்தில் மூன்று கற்களைத் தூக்கி வைத்து, அடுப்பை மூட்டி உலையை ஏற்றினாள்.

அடுப்பு முளாகி எரிந்து கொண்டிருந்தது. புளிக்கஞ்சிக்கு முறைப்படி அம்மியில் மிளகாய் அரைத்துத்தான் கலக்கவேண்டும். அதற்கு நேரமில்லை பழம் மிளகாயை பனம் ஈர்க்கில் கோர்த்து உலைப் பானையில் அவியவிட்டு. அதைக் கஞ்சிக்குள் கலப்பதுவும் ஒருமுறை.

வள்ளிப்பிள்ளை மிளகாய்ப் பழங்களை அளவான பனம் ஈர்க்கில் கோத்து, உலைப் பானைக்குள் போட்டாள்.

பின்பு கிழங்குகளையும் கீரைகளையும் கொட்டினாள். உப்பை விட்டாள். மிளகாய்க் கோவையை வெளியே எடுத்துப் பிசைந்து கரைத்து கஞ்சிப் பானைக்குள் விட்டாள்.

இனிப் புளிவிட்டு இறக்குவதுதான் பாக்கி. இளையவன் சந்திரனும் பாடசாலையிலிருந்து வந்துவிட்டான். ‘என்னடியப்பா புளிவிட ஆயித்தமே.’

ஆறுமுகத்தார் கேட்டார். ‘விடப்போறன்.’

என்றாள் வள்ளிப்பிள்ளை. ‘எப்பன் பொறு வாறன்.’ என்று கூறிக்கொண்டே ஆறுமுகத்தார் எழுந்தார். தாழ்வாரத்தில் பூவும் பிஞ்சுமாக நின்ற முருங்கைக் கொப்பு ஒன்றைப் பிடித்து வளைத்தார்.

ஒரு பிடி இலையை உருவினார். புளிக்கஞ்சி உலையடிக்குக் கொண்டு சென்றார். உலை மூடியை எடுத்தார்.

அந்த ஒரு பிடி முருக்கமிலையைப் பானைக்குள் பொத்தி வீசி, உலையை மூடிவிட்டார்.

வள்ளிப்பிள்ளை ஏங்கிப் போனாள்.

அவள் சின்ன வயசில் இருக்கும்போது அவளின் அண்ணன் யாரோ ஒரு பெட்டையைக் கூட்டிக்கொண்டு ஓடிவிட்டதற்காக அவளின் அப்பன் இப்படிக் கஞ்சியைப் பிடிச்சு ஒரு பிடி முருக்கமிலையை அதில் உருவிப்போட்டு

‘என்ரை மோனின்ரை உரிமைக் கஞ்சியடி குடியுங்கோ…’ என்று கூறியதும், அன்றிலிருந்து அவள் அண்ணன் சாவுக்கும் இல்லாமல் வாழ்வுக்குமில்லாமல் இருப்பது அவள் ஞாபகத்துக்கு வந்தது.

“ஐயோ, இதென்ன நாசமறுந்த வேலை!” என்று அவள் வாய்விட்டுக் கத்திவிட்டாள்.

நிதானமாக வாயிற்படிவரை சென்ற ஆறுமுகத்தார், மருமகளின் படத்தின் பாதத்தில் இருந்த துவண்ட மலர் ஒன்றை எடுத்து, வலது காதுக்குள் வைத்துக் கொண்டு,

‘மூத்தவன்ரை உரிமைக் கஞ்சியைக் குடிக்க தொன்னை கோல வேணும். பிலாவிலைப் பொறுக்கிக் கொண்டு வாறன்’ என்று கூறி விட்டுக் கோடிப்புற பிலாவடியை நோக்கிப் போனார்.

காலையில் தனக்குத்தேறுதல் சொன்னவர். இப்போது ஏன் இப்படிச் செய்தாரென்று வள்ளிப்பிள்ளைக்குப் புரியவில்லை.

வயிரவன் அவரிடம் சொல்லிவிட்டுப் போன தகவல் அவளுக்குத் தெரிய நியாயம் இல்லை .

அவள் கஞ்சி உலைக்கு முன்னால் முகத்தைப் பொத்தியபடி அழுது கொண்டிருந்தாள்.

இளையவன் சந்திரன் என்ன நினைத்துக் கொண்டானோ ‘ஏனணை அம்மா அழுகிறாய்? அண்ணை எங்கையணை… என்று கேட்டுவிட்டு விக்கி, விக்கி அழுதான்.

கோடிப்புறப் பிலாவடியில் இருந்து தொன்னை கோலிக்கொண்டே ஆறுமுகத்தார் வந்தார்.

இலைக்கஞ்சிப் பானையடிக்கு வரும்போது அவர் முகத்தில் எந்தவித கலக்கமும் இருக்கவில்லை .

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *