ஆந்தை விழிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 14, 2024
பார்வையிட்டோர்: 2,870 
 

(1973ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45

அத்தியாயம்-36 

சங்கர்லாலின் மனம் சற்று மகிழ்ச்சியுடன் இருந்தது. இருளில் பளிச்சிடும் விளக்குகளுடன் கடைதெருக்கள் அவர் மனதைக் கவர்ந்தன. நேராக ஓட்டலுக்குப் போவதற்குப் பதில், வழியில் எங்கேயாவது நின்று கடைகளைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் போக அவர் எண்ணினார். அவர் காரின் விரைவைக் குறைத்து மெல்ல ஓர் ஓரமாக நிறுத்தினார். 

காரின் கதவுகளைப் பூட்டிவிட்டு, மெல்ல அவர் நடந்தார். கடைகளின் வெளியே இருந்த கண்ணாடி அறைகளைப் பார்த்தபடி அவர் நடந்தார். 

ஒரு கடையின் கண்ணாடி அறையில் பல பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. வகை வகையான பொம்மைகள் அவர் கண்களையும் மனத்தையும் கவர்ந்தன. சரடிப் பொம்மை முதல், ஜெட் விமானம்வரை எல்லா வகை பொம்மைகளும் அங்கே இருந்தன. அவர் அந்தப் பொம்மைகளில் சிலவற்றைத் தமது அருமை மகன் கண்ணனுக்காக வாங்கிச் செல்லவேண்டும் என்று எண்ணினார். 

சங்கர்வால் கடைக்குள் இருந்த பொம்மைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கடையின் மற்றொரு பக்கத்தில் இரண்டு பேர்கள் நின்று பேசுவதை அவர் கண்கள் தற்செயலாய்க் கண்டன. மிகப் பெரிய கடை அது. நீளமாக இருந்த அந்தக் கடையில், இரு பக்கங்களிலும் கண்ணாடி அறைகளில் பல பொம்மைகள் அடுக்கி அறையில் இருந்த வைக்கப்பட்டிருந்தன. கண்ணாடி பொம்மைகளைப் பார்த்தபடி அந்த இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி தேன்மொழி.

மற்றொருவன், யாரோ ஓர் இளைஞன்! அவர் வேலப்பனா? இல்லை! 

சங்கர்லால் மிகத் தெளிவாக இருவரையும் பார்த்தார். அவர்கள் ஏதோ ஒரு பொம்மையைச் சுட்டிகாட்டி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். 

சங்கர்லால் மெல்ல வெளியே நழுவினார். கடையின் வெளியே வந்து ஓர் ஓரமாக நின்று கண்ணாடி அறையின் வழியாகப் பார்த்தார். சங்கர்லால் உள்ளே வந்து மெல்ல வெளியே நழுவியதை எவரும் கவனிக்கவில்லை! பொம்மைகளை வாங்குவதில் எல்லாருடைய கவனமும் இருந்தது. 

சங்கர்லால் சிறிதுநேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். தேன்மொழியுடன் இருந்த இளைஞன் கடைக்காரரை அழைத்தான். கடைக்காரர் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு, அவர்களிடம் சென்றார். அந்த இளைஞன் ஏதோ ஒரு பொம்மையைச் சுட்டிக்காட்டினான். கடைக்காரர், கண்ணாடி அறையைத் திறந்து, இரண்டடி உயரம் உள்ள ஒரு கரடிப் பொம்மையை எடுத்தார். அதை அந்த இளைஞன் வாங்கித் தேன்மொழியிடம் கொடுத்தான். தேன்மொழி அதைப் பார்த்துவிட்டு முகத்தைச் சுளித்தாள். அந்தப் பொம்மையை ஏதோ குறை கூறுவதைப்போல் சொல்லிக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டாள்.

கடைக்காரர் சிரித்தார். அவர் சிறிதும் சளைக்காமல் உள்ளே சென்று அட்டைப்பெட்டி ஒன்றைக் கொண்டுவந்து அதைத் திறந்தார் அதில், மற்றொரு கரடிப் பொம்மை இருந்தது! 

அதைப் பார்த்ததும் தேன்மொழி சிரித்தாள். அவள் அதை எடுத்துக்கொண்டு பணத்தைக் கொடுத்தாள். சங்கர்லால் உடனே நழுவிப் பின்னால் விரைந்து சென்று, மூன்றாவது கடையின் ஓரமாக நின்றபடி பார்த்தார். 

தேன்மொழியும் அந்த இளைஞனும் வெளியே வந்ததும், வாடகைக் கார் ஒன்றில் ஏறிச் சென்றுவிட்டார்கள் 

சங்கர்லால் அமைதியுடன் இப்போது அந்தக் கடைக்குள் சென்றார். இன்னும் கூட்டம் ஓயவில்லை. கூட்டம் ஓயும் வரை சங்கர்லால் காத்திருந்தார். கடைக்காரர் சங்கர்லாலின் பக்கத்தில் வந்தபோது, சங்கர்லால் தேன்மொழி முதலில் பார்த்த கரடிப் பொம்மையைப் பார்த்துக்கொண்டிருந்தார். 

“இந்தப் பொம்மை மிகச்சிறந்தது! சாவி கொடுத்தால், கரடியைப்போலவே சுத்தும்! ஜப்பானிலிருந்து புதிதாக வந்தது இது!” என்றார் கடைக்காரர். 

அதை வெளியே எடுக்கும்படி கடைக்காரரிடம் சொன்னார் சங்கர்லால். கடைக்காரர் அந்தப் பொம்மையை  எடுத்தார். சங்கர்லால் அதை வாங்கிப் பார்த்துவிட்டு, *இதைப் போல் இன்னொரு பொம்மை வேண்டும்” என்றார். 

கடைக்காரர் விழித்தார். “இந்த மாதிரிப் பொம்மை ஒன்றுதான் வந்தது. வேறு இல்லை” என்றார். அவர் பிறகு, “இந்தப் பொம்மை நன்றாகத்தானே இருக்கிறது!” என்றார். 

சங்கர்லால் அந்தப் பொம்மையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். அந்தப் பொம்மையில் எந்தவிதக் குறையும் இல்லை. அது மிகப் புதிதாகவே இருந்தது. அவர் கடைக்காரரைப் பார்த்து “இது நன்றாகத்தான் இருக்கிறது! இந்தப் பொம்மையைப்போல் இன்னொன்று வேண்டும். இரண்டு வாங்கப்போகிறேன்!” என்றார். 

“இந்த மாதிரி பொம்மை இந்தியாவிலேயே கிடைக்காது. இது ஒன்றுதான் வந்தது! வேறு இல்லை!” என்றார் கடைக்காரர். 

சங்கர்லால் மனத்திற்குள் சிரித்துக்கொண்டார். கடைக்காரரிடம் தேன்மொழி மற்றொரு பொம்மையைக் கொண்டு வரும்படி சொல்லி, அட்டைப் பெட்டியிலிருந்து எடுத்த பொம்மையை வாங்கிச் சென்றதை அவர் சொல்ல விரும்பவில்லை. “அப்படியா? அப்படியானால் சரி, இதைக் கட்டிக் கொடுங்கள்” என்றார். 

அந்தப் பொம்மையின் விலை 150 ரூபாய்! சங்கர்லால் பணத்தைக் கொடுத்துவிட்டு அட்டைப் பெட்டியுடன் நடந்தார், அவர் காரில் ஏறி உட்காரும் வரையில், எந்தவிதக் குறையும் இல்லாத இந்தப் பொம்மையைத் தேன்மொழி ஏன் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் என்று வியந்தது அவர் மனம். இதனால் எதிர்பாராத புதுச் சிக்கல் இப்போது அவருக்குத் தோன்றியது! 

அத்தியாயம்-37 

வீனஸ் ஓட்டலுக்குச் சங்கர்லால் திரும்பி வந்தபோது நீண்ட நேரமாகி விட்டது சங்கர்வால் காரிலிருந்து இறங்குவதற்குமுன், கான்ஸ்டபின் ஒருவன் ஓடிவந்து கதவைத் திறந்தான். அவர் உள்ளே இருக்கும் அட்டைப் பெட்டியை எடுத்து வரும்படி சொல்லிவிட்டு, தன் அறைக்குள் நுழைந்தார். 

கான்ஸ்டபிள் உள்ளே வந்து அட்டைப் பெட்டியை வைத்தார். சங்கர்லால் அதை மேசை அறையில் வைக்கும்படி சொல்லிவிட்டு, “நீ போய் உலகையாவின் இருப்பிடத்தைக் கவனிக்கும் கான்ஸ்டபிளை அனுப்பு” என்றார். 

“ஆகட்டும் ஐயா” என்று சொல்லிவிட்டு, வெளியே சென்றான் அந்தக் கான்ஸ்டபிள். 

சிறிது நேரத்தில் அந்தக் கான்ஸ்டபிள் வந்தான். சங்கர்லால் அவனிடம் கேட்டார். “உலகையாவின் இருப்பிடத்துக்கு யாராவது வந்தார்களா?”. 

“எவரும் வரவில்லை. ஆனால் அந்தப் பெண் மட்டும் வெளியே போய் விட்டுத் தனியாகத் திரும்பி வந்தாள். அவள் கையில் ஓர் அட்டைப்பெட்டி இருந்தது”. 

“அந்த அட்டைப் பெட்டியில் என்ன இருந்தது தெரியுமா?” என்றார் சங்கர்லால். 

“தெரியும். ஒரு கரடிப் பொம்மை அதில் இருந்தது. அந்தப் பெண் சின்னப் பிள்ளையைப்போல் அந்தப் பொம்மைக்குச் சாவி கொடுத்துக் கத்த வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு, அதை அப்படியே மேசை மீது வைத்துவிட்டாள்!”

“அந்தப் பொம்மையைக் கொண்டுவர முடியுமா?” என்றார் சங்கர்லால் மெல்ல.

கான்ஸ்டபிள் விழித்தான். 

சங்கர்லால் மிக அமைதியுடன் மெல்லக் கேட்டார்: “உண்மையாகத்தான் கேட்கிறேன்! அந்தப் பொம்மையை கொண்டுவர முடியுமா?” 

“அந்தப் பொம்மையைத் திருடிக்கொண்டு வரும்படி சொல்லுகிறீர்களா?” 

“திருடச் சொல்லவில்லையே! அதைப்போலவே மற்றொரு பொம்மை என்னிடம் இருக்கிறது! இதைக்கொண்டு போய் அங்கே வைத்துவிட்டு, அந்தப் பொம்மையைக் கொண்டு வரவேண்டும்!” என்றார் சங்கர்லால். பிறகு அவர் மேசையின் அறையிலிருந்த அட்டைப் பெட்டியைக் காண்பித்தார். 

அந்தக் கான்ஸ்டபில் சிறிது நேரம் விழித்தான் பிறகு, கீழே கிடந்த அட்டைப் பெட்டியைப் பிரித்து, உள்ளே இருந்த கரடிப் பொம்மையை எடுத்தான், “முயற்சி செய்கிறேன்” என்றான். 

“முயற்சி செய்தால் மட்டும் போதாது! வெற்றியுடன் திரும்பிவரவேண்டும்! உன்னால் முடியாது என்றால் சொல்லிவிடு! அகப்பட்டுக் கொள்ளக்கூடாது”

சங்கர்லாலின் சொல்லைக் கேட்டதும், எதற்கும் துணிந்தவனைப்போல், “நீங்கள் துன்பம் கொள்ள வேண்டாம். இன்றிரவு எப்படியாவது பொம்மையை மாற்றிக்கொண்டு வந்துவிடுகிறேன்! விடியும்போது அந்தப் பொம்மை இங்கே இருக்கும். இந்தப் பொம்மை அங்கே இருக்கும்!” என்று சொல்லிவிட்டு இருளில் நடந்தான். 

சங்கர்லால் கடிகாரத்தைப் பார்த்தார். அப்போது இரவு மணி பதினொன்று, அதன்பிறகு அவர் இரவு: உணவைச் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றார். 

அத்தியாயம்-38 

சங்கர்லால் எப்போதும் தன் கையில் இருக்கும். கடிகாரத்தைக் கழற்றி வைப்பதில்லை. குளிக்கும்போதும், கை கால்களைக் கழுவும்போதும் மட்டும் அதைக் சுழற்றிவைத்து விட்டு மீண்டும் மிசுக் கவனமாக அதைக் கையில் அணிந்து கொள்வார். ஆகையால், தூங்கும்போதும் கூட எப்போதும் கடிகாரம் அவர் கையில் இருக்கும்! சுவிட்சர்லாந்துக்குச் சங்கர்லால் சென்றிருந்தபோது. சுவிட்சர்லாந்து அரசினர் அவருக்குப் பரிசாக அனித்த அந்தத் தங்கக் கடிகாரம் இரயில்கூடப் பளிச்சென்று நேரத்தைக் காட்டும். சங்கர்லால் அன்றிரவு இரண்டு மூன்று தடவைகள் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு கடிகாரத்தைப் பார்த்தார். நடு இரவு சென்றுவிட்டது! கான்ஸ்டபிள் அந்தப் பொம்மையை மாற்றிக்கொண்டு வருவானா மாட்டானா என்ற ஐயம் சங்கர்லாலுக்கே வந்துவிட்டது! 

விடியற்காலையில், எவரோ மெல்லக் கதவைத்தட்டும் ஓசை கேட்டது. வந்திருப்பன் பொம்மையை மாற்றிவிட்டு வரச்சென்ற கான்ஸ்டபிள் தான் என்பதை உணர்ந்து கொண்ட சங்கர்லால், மெல்ல எழுந்து சென்று கதவைத் நிறந்தார். 

அந்தக் கான்ஸ்டபிள் வெற்றிப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான். 

“மாற்றிவிட்டாயா?” என்றார் சங்கர்லால், இப்படிக் கேட்டுவிட்டு அவர், கான்ஸ்டபிள் கையிலிருந்த பொம்மையை இருளில் பார்த்தார். 

“மாற்றிவிட்டேன்!” என்று சொல்லியபடி அவன் உன்னே வந்து மேசையின்மீது அந்தப் பொம்மையை வைத்தான். 

சங்கர்லால் அந்தப் பொம்மையை விளக்கு வெளிச்சத் தில் பார்த்தார் அந்தப் பொம்மையில் எந்தலித மாறுதலும் இல்லை. சங்கர்லால் வாங்கிவந்த பொம்மையையே கான்ஸ்டபின் மாற்றிக்கொண்டு வந்துவிட்டதாகச் சொல்லித் திருப்பிக்கொண்டு வந்துவிட்டானோ என்றுகூட அவருக்கு ஐயம் வந்தது. அவர் சிரித்துக்கொண்டே, “நான் கொடுத்த பொம்மையையே நீ திருப்பிக் கொண்டுவந்திருந்தாலும் எனக்குத் தெரியாது” என்றார்! 

கான்ஸ்டபிளுக்குத் தூக்கிவாரிப் போட்டது! “நீங்கள் கொடுத்த பொம்மையையே திருப்பிக் கொண்டுவந்து மாற்றி விட்டதாகச் சொல்ல எனக்குத் துணிவு ஏது? நீங்கள் கொடுத்த பொம்மையில் எவருக்கும் தெரியாமல் ஏதாவது அடையாளம் செய்திருப்பீர்கள் என்ற அச்சம் முன்பு எனக்கு இருந்தது. இப்போது நான் பொம்மையை மாற்றிவிட்டேன் என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டுமே என்ற அச்சம் எனக்கு இருக்கிறது” என்றான் அவன்! 

அந்தக் கான்ஸ்டபிளைப் பார்க்கச் சங்கர்லாலுக்குக் கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருந்தது. அச்சமும் ஐயமும் மிகுந்த அந்த மனிதன் எப்படிப் போலீஸ் படையில் சேர்ந்தான் என்று விழிப்படைந்தது அவர் மனம். 

“பொம்மையை மாற்ற இவ்வளவு நேரம் பிடித்ததா?” என்றார் சங்கர்லால். 

“உலகையாவும் அவர் மகள் தேன்மொழியும் வெளிக் கதவைத் தாழிட்டுவிட்டுத் தூங்கப் போய்விட்டார்கள் . வெளியேயிருந்து ஓசையின்றித் திறக்கமுடியவில்லை. விடிவதற்குச் சற்று முன் தான் உலகையா வெளியே நடந்து சென்றார். அவர் போனதைப் பார்த்தால், அவர் வெளியே சிறிது நேரம் நடந்து காற்று வாங்கி விட்டுத்தான் வருவார் என்று தோன்றியது! அவர் கதவைத் தாழிடாமல் சாத்திவிட்டுச் சென்றார். உள்ளே தேன்மொழி ஓர் அறையில் தூங்கிக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் நான் மெல்லச் சென்று, மேசை மீதிருந்த பொம்மையை மாற்றிவிட்டு வந்து விட்டேன்! அதற்குள் எனக்கு வேர்த்துக் கொட்டிவிட்டது!” என்றார் கான்ஸ்டபிள்.

”நன்றி. நீ போய் இந்தத் தேன்மொழி எப்போது வெளியே புறப்படுகிறாள் என்று பார்த்துக் கொண்டிரு! அவள் வெளியே புறப்படும்போது என்னிடம் வந்து சொல்லு.”

“ஆகட்டும் ஐயா” என்று சல்யூட் அடித்துவிட்டுப் போய்விட்டான் அந்தக் கான்ஸ்டபிள். 

சங்கர்லால் மேசைமீதிருந்த பொம்மையைக் கையில் எடுத்து மீண்டும் இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தார். பிறகு, அதை அப்படியே மேசையின் அடியில் இருந்த அட்டைப் பெட்டியில் வைத்துவிட்டுச் சிறிது நேரம் சிந்தித்தார். 

பொழுது விடிந்துவிட்டது. ஆனாலும், பனி வெளியே புகையைப்போல் திரை போட்டிருந்தது. இந்தப் பனி கலையக் கதிரவன் வந்து சிறிது நேரம் ஆகவேண்டும் என்று எண்ணினார் அவர். 

ஓட்டல் பையன் ஒருவன் தேநீர் கொண்டுவந்து கொடுத்தான். சங்கர்லால் அதைப் பருகிவிட்டு, புதிதாக வந்த பத்திரிகைகளைச் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது தொலைபேசி அலறியது. 

சங்கர்லால் தொலைபேசியை எடுத்தார். 

அவர் பேசும்முன் “அலோ, சங்கர்லாலா?” என்றார் கமிஷனர். 

“ஆமாம் கமிஷனர்,” 

“இப்போது நான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். விமான நிலையத்துக்கு வருகிறீர்களா?” என்றார் கமிஷனர்.

சங்கர்லால் மெல்லச் சிரித்தார். விமான நிலையத்துக்குக் கமிஷனர் ஏன் செல்லுகிறார் என்பது சங்கர்லாலுக்குத் தெரியும். அவர் சொன்னார்: “நீங்கள் மட்டும் போய்வாருங்கள். எனக்கு வேறு சில தலையாய வேலைகள் இருக்கின்றன”. 

கமிஷனர் சொன்னார்: “விமானத்தில் வேண்மகள் என்னும் பெண் வருகிறாள் பாதுகாப்புடன்; அவளை நீங்கள். பார்க்கவேண்டாமா?” 

சங்கர்லால் சொன்னார்: ”இப்போ து தேவை இல்லை. அவளை நீங்களே அழைத்துச் சென்று டாக்டர் குப்தாவின் மருத்துவ விடுதியில் சேர்த்துவிட்டுப் பிறகு ஓய்வாக நான் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வாருங்கள்!” 

“ஆகட்டும்’ என்றார் கமிஷனர், பிறகு தொலைபேசியின் தொடர்பு நின்றது. 

சங்கர்லால் குளித்துவிட்டு, வேறு உடைகளை அணிந்து கொண்டார். அவருக்கு விமான நிலையத்துக்குப் போய் வேண்மகளைக் காணவேண்டும்போல் இருந்தது. ஆனால் இந்தத் தேன்மொழி-வேலப்பன் தொடர்பாகத் அவர் தொடர்ந்து சில வேலைகளைச் செய்ய முடிவு கட்டியிருந்ததால், வேண்மகளைக் காணுவதைக் கொஞ்சம் தள்ளிப் போட்டார். 

நேரம் நழுவிக்கொண்டிருந்தது. 

சங்கர்லால் சிறிது நேரம் வானொலிப் பெட்டியைத் திருப்பி, உலகத்தின் செய்திகளையெல்லாம் கேட்டார். பிறகு வானொலிப் பெட்டியை அமர்த்திவிட்டு எழுந்து சன்னல் வழியாகப் பார்த்தார். 

உலகையாவின் இருப்பிடத்தைக் கவனித்துக்கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஓடிவந்தான். அவன் உள்ளே ஓடி வந்து “தேன்மொழி எங்கேயோ புறப்பட்டுப் போகிறாள்” என்றான். 

“அவள் மட்டுமா?” என்றார் சங்கர்லால், 

“அவள் மட்டும்தான். பச்சை நிறப் பிளிமத் கார் ஒன்று இப்போதுதான் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய இளைஞன் ஒருவனுடன் புறப்பட்டுப் போக அவள் ஆயத்தமாகி விட்டாள்”.

சங்கர்லாலுக்கு நேற்று மாலை பொம்மைக் கடையில் தேன்மொழியுடன் பார்த்த இளைஞனின் கவனம் வந்தது. 

“அப்படியானால் நீ ஒன்று செய், வெளியே சென்று வாடகைக் கார் ஒன்றைப் பிடித்து, அந்தப் பிளிமத் காரைத் தொடர்ந்து செல்!” என்றார் சங்கர்லால். 

அவன் வீழித்தான்.

“இப்போது விழிப்பதற்கு நேரமில்லை! அந்தக் கார் எங்கே போகிறது என்பதைக் கண்டுபிடித்துத் தொலைபேசியில் எனக்குச் செய்தி அனுப்பு:” 

“ஆகட்டும் ஐயா” என்று புறப்பட்டான் அவன். 

மற்றொரு கான்ஸ்டபிளை அழைத்து உலகையாவின் இருப்பிடத்தைக் கவனிக்கும்படியும், அவர் திரும்பி வந்ததும் தனக்குத் தெரிவிக்கும்படியும் சொல்லி அனுப்பினார். சங்கர்லாலுக்கு ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு மணியாக இருந்தது. அவர் கடிகாரத்தைப் பார்த்தபடி இப்படியும் அப்படியும் உலாவிக்கொண்டிருந்தார். அவர் மனம், டார்ஜிலிங்குக்கு அவர் வந்தது முதல், இதுவரையில் என்ன நடந்தது என்பதை ஒரு முறை மின்னலைப்போல் எண்ணிப் பார்த்தது! 

அத்தியாயம்-39 

தொலைபேசி அலறியது. 

சங்கர்வால் ஓடிப்போய் தொலைபேசியை எடுத்தார். அவர் அனுப்பிய கான்ஸ்டபிள் பேசினான். 

”அந்தக் காரைத்தொடர்ந்து வந்தேன். கல்கத்தாவின் மேற்குப் பக்கம் நகரைவிட்டு விலகிச் செல்லும் ஒரு பாதையில் அந்தக் கார் சென்றுவிட்டது. அங்கே வெட்டவெளி! அதைக் கடந்ததும் மலைகள்! வெட்டவெளியில் அந்தக் காரைத் தொடர்ந்து சென்றால், உண்மை தெரிந்துவிடும்!” என்றான் கான்ஸ்டபிள். 

“பிளிமத் காரில் அந்த இளைஞனும் இருக்கிறானா?” என்றார் சங்கர்லால், 

“இல்லை. அவன் வழியில் இறங்கிவிட்டான்;” 

“நீ திரும்பி வந்துவிடு” என்று சங்கர்லால் சொல்லி விட்டு, மிகவும் விரைந்து சென்று, கமிஷனர் சங்கர்லாலுக்காகக் கொடுத்திருந்த காரில் ஏறி உட்கார்ந்தார். 

அப்போது, உலகையாவின் இருப்பிடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஓடிவந்து, காரின் பக்கத்தில் நின்று குனிந்து, “உலகையா வந்துவிட்டார்! தேன்மொழி எங்கே சென்றாள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் ஓட்டல் பையன்களிடம்!” என்றான். 

சங்கர்லால் ஒன்றும் சொல்லவில்லை. அவர் தலையை ஆட்டிவிட்டு, காரை மிக விரைவாகச் செலுத்தினார். 

அந்தப் பிளிமத் காரை எப்படியும் பிடித்தாக வேண்டும் என்று முடிவு செய்தபடி, காரை மிக விரைவாகச் செலுத்தினார். ஐம்பது, அறுபது கல் விரைவில் கார் விரைந்தது! நகரைக் கடந்து வெட்டவெளியான இடத்தை அடைந்தபோது, தொலைவில் எங்கேயும் அந்தப் பிளிமத் காரைக் காணவில்லை! வெட்டவெளிக்கு அப்பால், மலைக் குன்றுகள் அழகாக நின்றன. 

மலைச்சரிவின் ஓரத்தில், புகைவண்டி ஒன்று புகையைக் கக்கியபடி விரைந்தது. 

சங்கர்லால் காரை இப்போது மிக விரைவாகச் செலுத்தினார். மலைச் சரிவை நோக்கி! 

மலை ஓரத்தில்தான் எங்கேயாவது பினிமத் கார் நிற்கும் என்று எண்ணியது சங்கர்லாலின் மனம், அவர் தன் காரைப்புகைவண்டியைப் பார்த்துக்கொண்டே ஓட்டினார். 

புகைவண்டி எங்கேயோ தொலைவில் மலை ஓரமாக வந்து கொண்டிருந்தது. சங்கர்லால் காரைக் கொஞ்சம் விரைவாகவே ஓட்டினார். அவர் சென்ற சாலை எங்கேயாவது ஓர் இடத்தில் புகைவண்டிப் பாதையைக் குறுக்கிட்டுச் செல்லும் எனபதை உணர்ந்த அவர். புகைவண்டி வருவதற்குமுன் புகைவண்டிப் பாதையைக் கடக்கவேண்டும். என்று காரை மிக விரைவாகச் செலுத்தினார். 

கார் மிகவும் விரைந்து சென்றது. ஆனால், புகை வண்டிப் பாதையை அவர் அடைவதற்குள் புகைவண்டி வந்துவிட்டது. சங்கர்லால் காரை நிறுத்தினார். புகை வண்டி மிகவும் ஓசையை எழுப்பியபடி. புகையை அள்ளி விட்டுக்கொண்டு பறந்து சென்றது. சங்கர்லால், காரின் ஸ்டீயரிங்கின்மீது கன்னத்தை வைத்துக்கொண்டு புகைவண்டி சென்றதும், பாதுகாப்பு இல்லாத அந்தப் பாதையைக் கடந்து சென்றார். 

புகைவண்டிப் பாதையைக் கடந்ததும். ஓர் இடத்தில் இரண்டு பக்கங்களில் சாலை பிரிந்து சென்றது. வலப்பக்கம் ஒரு பாதையும், இடப்பக்கம் ஒரு பாதையுமாக இரண்டு பாதைகள் சென்றன. அவருக்கு முதலில் எந்தப் பக்கம் போவது என்பது புரியவில்லை. அவர் காரை நிறுத்தி விட்டு, சாலையை உற்றுப் பார்த்தார். வலப்பக்கம் சென்ற பாதையில்தான் தேனமொழி பிளிமத் காரை ஓட்டிச் சென்றிருக்க வேண்டும் என்று முடிவு கட்டினார். வலப்பக்கம் காரைத் திருப்பி மலை ஓரமாகச் சென்ற அந்தப் பாதையில் விரைந்து சென்றார். 

புகைவண்டிப் பாதையும், கார்கள் செல்லும் பாதையும் ஒன்றை ஒன்று இணைந்தாற்போல் சென்றன. அவர் காரை விட்டபடியே எதிரே பார்த்தார். எங்கேயும் பிளிமத் காரைக் காணவில்லை! 

இரண்டு கல் தொலைவைக் கடந்ததும், அந்தப் பாதை மலைக்கு அடியில் சென்றது. புகைவண்டிப் பாதையும் அதே பக்கத்தில் சென்றது. மலைகள் நிறைந்த அந்த இடத்தில் ஓர் ஓரமாகப் பிளிமத் கார் நின்றிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் தேன்மொழி. அவள் மட்டும் தனியாக அந்தக் காரில் உட்கார்ந்திருந்தாள். 

சங்கர்லால், காரைச் சற்று மெல்லச் செலுத்திப் பிளிமத் காருக்குப் பின்னால் நிறுத்தினார். தேன்மொழி திரும்பிப் பார்க்கவில்லை. அவள் காரில் உட்கார்ந்துகொண்டு விக்கி விக்கி அழுதாள் 

சங்கர்லால், தனது காரைவிட்டு இறங்கியதும், அவள் பக்கத்தில் சென்று “என்ன தேன்மொழி. என்ன நடந்தது? ஏன் இப்படி இந்த மலைக் காட்டில் தனியாக வந்து உட்கார்ந்துகொண்டு அழுகிறாய்?” என்று என்று கேட்டார் பரிவுடன். 

சங்கர்லாலைப் பார்த்ததும் அவளுக்கு மேலும் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அவள் முகமும் கண்களும் சிவந்திருந்தன. அவளால் பேசமுடியலில்லை. சங்கர்வாலை அவள் பார்த்ததும் சற்று விழிப்புடன் பார்த்தாள் அந்த இடத்தில் சங்கர்லாலை அவள் எதிர்பார்க்கவே இல்லை! அவள் புகை வண்டிப் பாதையை நோக்கிக் கையைக் காட்டினாள்! அவள் கை நடுங்கியது! 

சங்கர்லால் திரும்பிப் பார்த்தார். அவள் கையைக் காட்டிய பக்கம் பார்த்தபோது- 

அவருக்கே மிகத் தூக்கி வாரிப் போட்டது! 

புகை வண்டிப் பாதையில் ஒரு மனிதன் நசுங்கி விழுந்து கிடந்தான். புகை வண்டி அவன் மீது ஏறிவிட்டுச் சென்றதால் அவன் உடல், உருவம் தெரியாமல் நசுங்கிப் போய்க் கிடந்தது. கை கால்களின் விரல்களைத் தவிர, உடலின் மற்றப் பாகங்களில் எதுவுமே உருப்படியாகத் தெரியவில்லை. 

சங்கர்லால் சற்று விரைந்து சென்று அந்த மனிதனைப் பார்த்தார். ஓர் இளைஞனின் உடலாகத்தான் அது இருக்க வேண்டும். முகம் தெரியவில்லை. அந்த இளைஞனைப் பெற்ற அன்னையால்கூட இப்போது அவனைக் கண்டால் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. அந்த இளைஞன் தான் வேலப்பனா? வேலப்பனைத்தானே இந்தத் தேன்மொழி காண எவருக்கும் தெரியாமல் பீளிமத் காரில் விடிந்ததும் பறந்து வந்தாள். 

சங்கர்வால் சிறிது நோம் அந்த உருவத்தைச் சற்றுப் பார்த்தார், பிறகு திரும்பிக் காரைப் பார்த்தார். மலைப் பகுதியில் எதிரொலி கேட்கும்படி வாய்விட்டு அலறிக்கத்தினாள் தேன்மொழி. 

அத்தியாயம்-40 

சங்கர்வால், கார் இருந்த இடத்துக்குத் திரும்பி வந்தார். தேன்மொழியின் தலையைத் தடவிக் கொடுத்து, “மனத்தை உறுதிப்படுத்திக்கொள் தேன்மொழி. எல்லாருடைய வாழ்க்கையிலும் இப்படிச் சில வேளைகளில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன!” என்றார். 

தேன்மொழி அழுகையை நிறுத்தவில்லை. 

“படித்த பெண் நீ. மனம்விட்டு அழுவதால் துன்பத்தின் சுமை சிறிதளவு நீங்கும் என்று தெரிந்திருக்கும் உனக்கு. ஆனாலும், மனத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரிந்து கொள்ள வேண்டும். நடந்தது நடந்து விட்டது. மேலே நடக்க வேண்டியதை நாம் கவனிப்போம். நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லு” என்றார் சங்கர்லால். 

அவள் அழுகையை நிறுத்த முயன்றாள். பல தடவை கண்களையும் முகத்தையும் துடைத்துக் கொண்டாள். நீண்ட நேரத்திற்குப்பின் தான் அவளால் அழுகையை நிறுத்த முடிந்தது. 

“வேலப்பன் தானே அங்கே இறந்து கிடப்பது.” என்று கேட்டார் சங்கர்லால். 

“வேறு யாராவது விழுந்து இறந்திருந்தால் நான் ஏன் இப்படி அழப்போகிறேன்?” என்றாள் தேன்மொழி. 

சங்கர்வால் உடனே சொன்னார்: “பெண்கள் சற்று இரக்க குணமுடையவர்கள், எவராவது இப்படி நசுங்கி இறப்பதை அவர்கள் தேரில் கண்டுவிட்டால், முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும்கூட அச்சத்தாலும் துன்பத்தாலும் அவர்கள் அழுது விடுவார்கள்” 

“வேலப்பனேதான் அவர். என் கண்முன்னால் அவர் புகைவண்டிப் பாதையில் விழுந்து நசுங்கி இறப்பதை நான் கண்டேன். இதில் ஐயமே இல்லை” என்றாள் தேன்மொழி. 

“எப்படி நடந்தது? வேண்டுமென்றே வேலப்பன் புகைவண்டியின்முன் வந்து விழுந்தாரா?” என்று கேட்டார் சங்கர்லால்.

“வேண்டுமென்று அவர் போய் விழுவதாக இருந்தால் அவர் என்னை ஏன் காதலிக்கவேண்டும்? நாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வதாக இருந்தோம் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே” என்றாள் தேன்மொழி. 

“அப்படியானால், வேலப்பன் ஏன் புகைவண்டி வரும் போது குறுக்கே ஓடி வந்தார்?” என்று கேட்டார் சங்கர்லால். 

தேன்மொழி, தன் கண்களில் மீண்டும் கொட்டிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சொன்னான்: “புகைவண்டிப் பாதையின் அந்தப் பக்கம் மலைச் சரிலில் உட்கார்ந்து எனக்காகக் காத்திருந்தார் வேலப்பன். நான் வந்து காரை நிறுத்தியதும், என் கார் இருக்கும் இடத்துக்கு வர விரைந்து ஓடி வந்தார். அப்போது, புகைவண்டி வருவதை அவர் அறியவில்லை. என்னைக் கண்டதும் அவர் இந்த உலகத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நானும் அப்படித்தான். புகைவண்டி வரும் ஓசை, கனவில் கேட்டதைப்போல்தான்! எனக்கு இருக்கிறது. வேலப்பன் ஓடி வந்தபோது. புகைவண்டி அந்தத் திருப்பத்திலிருந்து திடீரென்று மிக அருகில் வந்துவிட்டது! அதோ பாருங்கள், புகைவண்டிப் பாதை வளைந்து செல்லுகிறது. அந்தப் பக்கம் வளைவில் மலை மறைந்திருப்பதால் புகைவண்டி வருவதைப் பார்க்க முடியாது”. 

”நடந்ததைச் சொல்லு. வேலப்பன் உன்னைக் கண்டதும் ஓடி வந்தார், பிறகு?” என்றார் சங்கர்லால். 

தேன்மொழி தொடர்ந்தாள் “வேலப்பன் புகைவண்டிப் பாதைக்கு வந்ததும், புகைவண்டி மிகப் பக்கத்தில் வந்து விட்டது! அவர் அச்சத்தால் தடுக்கி விழுந்துவிட்டார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.நான் காரில் உட்கார்ந்த படியே அலறியபடி மயங்கிச் சாய்ந்துவிட்டேன்! புகைவண்டி நிற்கவில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. புகைவண்டியில் இருந்தவர்களில் எவரும் விபத்து நடந்ததை உணரவில்லை”. 

சங்கர்லால் பெருமூச்சு விட்டார். அவர் சொன்னார். “வேலப்பனுக்கு இந்த நிலை ஏற்படும் என்றுதான் எனத் தொடர்ந்து வந்தேன். என்ன பலன்?” 

”என்னைத் தொடர்ந்து வந்தீர்களா? வேலப்பனைக் கண்டுபிடிக்கவா? ஏன்?” என்றாள் தேன்மொழி மிக வியப்புடன்! 

சங்கர்வால் சொன்னார்: “உண்மையைச் சொன்னால் நீ இவ்வளவு துன்பம் கொள்ளமாட்டாய்! உண்மையில் இந்த வேலப்பன் இறந்தது அவருக்கு நல்லது என்றே நீ முடிவு கட்டுவாய்!” 

தேன்மொழிக்கு எதுவும் புரியவில்லை: “என்ன சொல்லுகிறீர்கள்? கொஞ்சம் விளங்கும்படி சொல்லுங்கள்!” என்றாள் அவள்.

சங்கர்லால் மிக அமைதியுடன் சொன்னார்: “இந்த வேலப்பனைப் போலீசார் தேடிவருகிறார்கள். நானும் அவரைக் கண்டுபிடிக்கவே முயற்சிகள் செய்துவந்தேன். வேலப்பன் கல்கத்தாவுக்குத்தான் வந்திருக்க வேண்டும் என்று நான் எண்ணியதால், நானும் சுல்கத்தாவில் அவரைப் பிடிக்கக் காத்திருந்தேன்!” 

‘”அப்படி என்ன தவறு செய்துவிட்டார் வேலப்பன்?” என்று கேட்டாள் தேன்மொழி. 

“இரண்டு கொலைகளைச் செய்துவிட்டுத் தலைமறைவாக வாழ்ந்துவந்தார் வேலப்பன்” 

தேன்மொழி இதைக் கேட்டுவிட்டுச் சங்கர்லாலைச் சற்றுக் கொதிப்புடன் உற்றுப் பார்த்தாள். “இந்த உண்மையை ஏன் நீங்கள் நேற்று என் தந்தையிடமோ என்னிடமோ சொல்லவில்லை?” என்று கேட்டாள் தேன்மொழி. 

சங்கர்லால் அமைதியுடன் சொன்னார்: “நான் இந்த வேலப்பனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்த நேரக்கில், நீ வேலப்பனை மணந்துகொள்ளப் போவதாகவும் அவரை விரைவில் காணப்போவதாகவும் சொன்ன போது, உண்மையை நான் சொன்னால் என்ன ஆகும்? இந்த வேலப்பனின் மீது நீ அன்பு மிகக் கொண்டிருந்ததால் போலீஸ் இலாக்காவும், சங்கர்லாலும் அவரைப் பிடிக்க முடியாதபடி உதவி செய்து தப்பவைத்துவிடுவாய் அல்லவா? அதனால்தான் உண்மையைச் சொல்லவில்லை” 

“வேலப்பன் இரண்டு கொலைகளைச் செய்திருப்பார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை!” என்றாள் தேன்மொழி. 

“இதைப்பற்றிச் சிறிதும் நீ ஐயம் கொள்ளவேண்டாம். முதலில் செல்லையா என்பவனைக் கொலைசெய்துவிட்டார். அடுத்தபடியாக பூவேந்தன் என்னும் விமானியைக் கொலை செய்துவிட்டார்! வைரங்களைக் கடத்தும் தொழிலில் இந்த வேலப்பன் ஈடுபட்டிருந்ததால், இந்த இரு கொலைகளையும் அவர் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது!”

தேன்மொழி சிறிது நேரம் பேசவில்லை. பிறகு அவள் அமைதியுடன் சொன்னாள்: “அப்படியானால் என் தந்தையின் ஐயம் சரியாகிவிட்டது! அவருக்கு ஏனோ இந்த வேலப்பனை முதலிலிருந்தே பிடிக்கவில்லை! ஆனால், என் பிடிவாதத்தினால் பொறுத்துக் கொண்டிருந்தார்!” 

“வேலப்பன் உன்னை இங்கே வரும்படி யாரிடம் சொல்லி அனுப்பினார்?” என்று கேட்டார் சங்கர்லால். 

“ஏன் கேட்கிறீர்கள்?” என்று கேட்டாள் தேன்மொழி. 

சங்கர்லால் அவளைச் சோதிக்க எண்ணியவரைப்போல் “வேலப்பனை நீ காணப்போவதாக நேற்று என்னிடம் சொன்னாய். அவர் கடிதம் போட்டாரா அல்லது எவரிடமாவது சொல்லியனுப்பினாரா என்பதைத் தெரிந்துகொள்ளவே கேட்டேன்” என்றார். 

வேலப்பன் இரண்டு நாட்களுக்குமுன் தேன்மொழி யுடன் கல்பனா ஸ்டுடியோவுக்குச் சென்ற உண்மையை அவள் சொல்லுகிறாளா இல்லையா என்று எதிர்பார்த்தது சங்கர்லாலின் மனம், அவருடைய இந்தக் கேள்விக்குத் தேன்மொழி சொன்ன பதில் சங்கர்லாலுக்கு மிகுந்த வியப்பை உண்டாக்கியது!

தேன்மொழி உண்மையைச் சொல்லிவிட்டாள். “நான் இரண்டு நாட்களுக்கு முன் வேலப்பனைக் கண்டேன்! ஆனால் என் தந்தையின் முன் உண்மையைச் சொல்ல எனக்குத் துணிவு இல்லை. இவருக்குத் தெரியக்கூடாது என்று அப்போது நான் எண்ணினேன்!” 

“ஏன அப்படி?” என்றார் சங்கர்லால். 

தேன்மொழி சொன்னாள்: “வேலப்பன். எங்கள் திருமணம் நடக்கும் என்பதை நம்பவில்லை. அதனால் அவர் என்னுடன் வெளிநாட்டுக்குச் சென்று, அங்கேயே என்னை மணந்துகொள்ள முடிவு செய்தார்! எனக்கு எப்போது வேண்டுமானாலும் வெளிநாடு செல்லப் பாஸ்போர்ட் இருக்கிறது. வேலப்பனுக்குப் பாஸ்போர்ட் இல்லை. அதற்காக அவர் விரைந்து பல வேலைகளைச் செய்தார். பாஸ்போர்ட் வாங்கப் புகைப்படங்களைக்கூட அன்றுதான் எடுத்தார். அதிலிருந்துதான் இரண்டு புகைப்படங்களை நான் வாங்கிவந்தேன். அப்போது அவர் என் தந்தையிடம் தன்னைக் கண்டதைப்பற்றிச் சொல்லவேண்டாம் என்றும், அஞ்சலில் புகைப்படங்கள் வந்ததாகவும், அதிலேயே இன்று பார்க்கும்படி எழுதியிருந்ததாகவும் சொல்லும்படி சொன்னார்!”. 

“இன்று பார்க்கும்படி இருந்ததை மட்டும் உன் தந்தையிடம் ஏன் சொல்லச் சொன்னார்?” என்ற கேட்டார் சங்கர்லால். 

தேன்மொழி சொன்னாள், ”இன்று வேலப்பன் என் தந்தையிடம் வந்து, எங்கள் திருமணத்தைப் பற்றி இரண்டில் ஒன்று கேட்டுவிட எண்ணினார். என் தந்தை எங்கள் திருமணத்துக்கு உறுதியாக ஒப்புக் கொள்ளாவிட்டால் இன்றிரவே நானும் வேலப்பனும் வெளிநாட்டுக்குப் பறந்து போய், அங்கே எங்கேயாவது நானும் அவரும் திருமணம் செய்துகொள்ளது என்று முடிவு செய்திருந்தோம். பாஸ்போர்ட் வாங்கவும், வெளிநாட்டுக்குப் புறப்படவும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்ததால், அவர் கல்கத்தாவுக்கு ஏற்கெனவே வந்து இருந்ததையும், என்னைக் கண்டதையும் சொல்லவேண்டாம் என்றார்!” 

“உண்மையில் வேலப்பன் கல்கத்தாவில் இருந்தது போலீசாருக்கு எப்படியாவது தெரித்துவிடக் கூடாதே என்று அஞ்சி, உன் தந்தையிடம் கூடச் சொல்லவேண்டாம் என்று கூறியிருக்கலாம் அல்லவா?” 

”ஆமாம்” என்றாள் தேன்மொழி. 

“உன்னுடன் வெளிநாட்டுக்குப் புறப்படவேண்டியவர் விபத்துக்குள்ளாகி விட்டார்! போலீசாருக்கு அஞ்சி உன்னுடன் வெளிநாட்டுக்குப் புறப்படவே முன்னேற்பாடாக இருந்திருக்கிறார். உன் தந்தை திருமணத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டாலும், அதை அவர் வரவேற்றிருக்க மாட்டார். வேலப்பன் இரு கொலை வழக்குகளில் ஈடுபட்டிருந்ததால், உன்னுடன் வெளிநாட்டுக்குப் போய்விடுவதையே விரும்பியிருப்பார். இந்த உண்மையை நீ ஏற்றுக் கொள்கிறாயா?” என்றார் சங்கர்லால். 

தேன்மொழி, சிறிது நேரம் விழித்தாள். பிறகு, “என்னால் எதையுமே நம்பமுடியவில்லை. உண்மையைச் சொல்ல வேலப்பன் உயிருடன் இல்லாததால், நீங்கள் சொல்லுவதை நான் நம்பித்தான் ஆகவேண்டும்! ஏனென்றால், சங்கர்லால் சொல்லுவது பொய்யாக இருக்க முடியாது!” என்றாள். 

சங்கர்லால் சொன்னார்: “நீ புறப்படு. இன்னும் இந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்காதே. ஓட்டலுக்குச் சென்றதும், நடந்ததை அப்படியே ஒரு காகிதத்தில் எழுதிப் போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிவிடு, நான் இந்தப் பிணத்தை அகற்றவேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறேன்”. 

அவள் தயங்கியபடி புறப்பட்டாள். 

சங்கர்லால், அவள் கார் மறைந்ததும், தன் காரில் ஏறி உட்கார்ந்தார். கார் விரைந்தது. 

கல்கத்தாவை அடைந்ததும், கமிஷனருக்கு உடனே உண்மையைச் சொல்லிப் பிணத்தைச் சோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யத் தொலைபேசிப்பெட்டி ஒன்றின் முன் காரை நிறுத்தினார். தொலைபேசியில் கமிஷனர், அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டார். கமிஷனர் அலுலவகத்தில் இல்லை. உதவிப் போலீஸ் சமிஷனரிடம் புகைவண்டி வேலப்பன் மீது ஏறிவிட்டதைச் சொல்லி, உடனே பிணத்தைச் சோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யச் சொன்னார். 

”ஆகட்டும்” என்றார் உதவிப் போலீஸ் கமிஷனர். சங்கர்லால் காரில் ஏறி உட்கார்ந்தார். உடனே கார் வீனஸ் ஓட்டலுக்குப் போகவில்லை. சிந்தனை செய்தபடியே எங்கேயெல்லாமோ காரை விட்டார். பிறகு வழியில் இருந்த ஒரு புது ஓட்டலில் பலகாரம் சாப்பிட்டுவிட்டு பதினொரு மணிக்கு வீனஸ் ஓட்டலுக்குச் சென்றார். 

அங்கே, போலீஸ் கமிஷனர், சங்கர்லாலின் வருகைக்காக அவர் அறையில் வந்து உட்கார்ந்துகொண்டு சங்கர்லால் வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருந்தார். 

சங்கர்லால் உள்ளே நுழைந்ததும், “சங்கர்லால்! வந்து விட்டீர்களா! எங்கே போய்விட்டீர்கள்?” என்று எழுந்து – சங்கர்லாலின் கையைக் குலுக்கினார் கமிஷனர். 

சங்கர்லால் மெல்லச் சிரித்தபடி, ”வெளியில் கொஞ்சம் வேலை இருந்தது. உட்காருங்கள் போகலாம்” என்று கமிஷனரை உட்காரவைத்து விட்டு இருவருக்கும் தேநீர் கொண்டு வரும்படி சொன்னார்.

– தொடரும்…

– சங்கர்லால் துப்பறியும் ஆந்தை விழிகள் (நாவல்), ஐந்தாம் பதிப்பு: 1973, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *