கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 2,592 
 

(1959ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

13.மீண்டும் வந்தவன் 

சீதாராமனே வந்திருந்தான் என்றால் நளினி அதிக திருப்தி அடைந்திருப்பாள் என்பது உண்மைதான். அவனை விட வயதானவராக அவன் சாயலாகவே வேறொருவர் வந்திருந்ததும் ஒரு விதத்தில் நளினிக்குத் திருப்தியே தந்தது. 

சீதாராமனை அச் சந்தர்ப்பத்தில் விஜயபுரம் அக்ரகார வாசிகள் எப்படி வரவேற்றிருப்பார்கள் என்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. மூன்று வருஷங்களுக்குமுன் நடந்த சம்பவங்கள் அநேகருடைய ஞாபகத்திலிருந்து அழிந்தே போயிருக்கும் அல்லது அந்த ஞாபகங்களின் வேகம் சற்றுக் குறைவாகவே இருக்கும். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் காரணமாக “பாவம், சாது! அவர் பிழைப்பிலே மண்ணைப் போட வந்து முளைத்தானே!” என்று சீதாராமனைத் திட்டியவர்கள் தான் அதிகமே தவிர, பாங்கிக் கொள்ளைக் காரன், அயோக்கியப்பதர் என்று சீதாராமனையே தெரிந்து திரட்டியவர்கள் சொல்லப் போனால் மிகவும் குறைவு தான். சொல்லப்போனால் மிகவும் குறைவுதான். 

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் என்னவோ அன்றே அவனை மன்னித்துவிட்டார். அவரால் மன்னிக்க முடிந்தது. விதி என்கிற ஒன்று எல்லாவற்றிற்கும் பின்னால் இருந்து கொண்டு எல்லோரையும் ஆட்டி வைக்கிறது. யாரும் தன்னுடைய காரியங்களுக்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதற் கில்லை என்கிற ஒரு சித்தாந்தத்தைப் படைத்துவிட்டவர் களுடைய வாழ்க்கை உண்மையிலேயே சுலபமானதாகி விடுகிறது. அவர்களுக்கு விரோதிகளும் அதிகம் ஏற்படுவ தில்லை. எல்லோரையும் விதியின் விளையாட்டுக் கருவிகள் என்று அவர்கள் எண்ணுவதுபோல அவர்களே விதியின் விளையாட்டுக் கருவிகளாகக் காற்றடிக்கிற பக்கம் ஒதுங்கிக் கொண்டு எப்படியோ காமா சோமாவென்று மேடுபள்ளம் அதிகமில்லாத வாழ்க்கை நடத்திவிடுகிறார்கள். 

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கு மிகவும் சிரமமான தசைதான் அது. ஆனால் அவர் ஜாதகத்தைப் பார்த்துக் கூடத் தன் சிரமதசை எப்பொழுது விலகும் என்று அறிந்து கொள்ள ஆசைப்படவில்லை. விலகுமா என்றுகூட அவர் சிந்திக்க வில்லை. கொஞ்ச காலத்துக்கு முன்பிருந்த சிரமமல்லாத தசைக்கும் இப்பொழுதுள்ள சிரமதசைக்கும் உள்ள வித்தி யாசம் மிகவும் சொல்பமே என்று அறிந்தவர் போல இரண்டையும் ஏற்றுக் கொண்டு அனுபவித்தார். 

பர்வதத்தம்மாளோ அப்படியல்ல! சிரமத்தில் பாதி அவளாகக் கிளறிவிட்டுக் கொண்டு பட்ட சிரமம். அதனாலேயே அதிக சிரமம் தந்தது என்றுகூடச் சொல்லலாம். “தம்பி, தம்பி” என்று பெருமை பீத்திக்கொண்டு அடுத்த வீடுகளுக்குப் போய் ஏதாவது கடன் வாங்க வந்த சாக்கில் பட்டணத்துத் தம்பியின் பிரதாபங்களைப் பற்றி ஒரு சர்க்கம் சொல்லிவிட்டு வந்த அந்த மனநிலைதான் அவளை அதிகமாகத் துன் புறுத்தியது. அக்கிரகாரத்து ஸ்திரீகள் நாலுபேர் கூடினால் நாக்கில் நரம்பில்லாமல் பிறரைப் பற்றித் துளியும் அனுதாபமே தொனிக்காமல் வம்பளக்கக் கூடியவர்கள் தான். எனினும் தனித்தனியே ஸ்திரீகளாகக் கருதும் போது மிகவும் மென்மை யான இளகிய அனுதாபம் நிறைந்த மனம் படைத்தவர்கள் தான். அதாவது பிறரைப் பற்றி வம்பளக்கும் போதே தங்களுக்கு அம்மாதிரி நிலைமை ஏற்பட்டால் என்ன செய்வோம் என்று சிந்திக்கிறவர்கள் தான் வம்பளக்கும் கோஷ்டியில் யாராவது ஒருவர் “ஐயோ பாவம்!, என்று ஒருதுளி அனு தாபமும் பரிவும் காட்டிவிட்டால் போதும் எல்லோருமே “ஐயோ பாவம்!” என்று அங்கலாய்க்கத் தொடங்கி விடு வார்கள். மனத்தில் இருக்கும் அனுதாபம் பொங்கி வழிந்து பொல பொலக்கத் தொடங்கிவிடும்.” 

பர்வதத்தம்மாளைப் பற்றி முன்பெல்லாம் நல்லபிப் பிராயம் வைத்திராதவர்களுக்குக்கூட சீதாராமன் காரணமாகவும் (தெரிந்தே தெரியாமலோதான்!) கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் சிரமதசை காரணமாகவும் இப்போது மனசிலே நல்லபிப் பிராயம்தான். நளினியின் சின்னம்மாளே இதற்கு உதாரணம். முன்பெல்லாம் பர்வதத்தம்மாள் வந்தால் சின்னம்மா முகம் கொடுத்துக்கூடப் பேசமாட்டாள். இப்பொழுது நளினிக்குப் போட்டியாக அவள்கூடச் சிறிது நேரம் சிலசமயம் பர்வதத்தம்மாளுடன் பேச வருவாள். வேறு எதுவும் முக்கியமான விஷயம்பற்றி இராது. ஊர் வம்பு, பிறருக்குச் சொல்லா விட்டால் திருப்தி தராத வீட்டுக் காரியங்கள் – இந்த மாதிரி. 

நளினியின் தகப்பனார் விசுவநாதய்யர் தந்தி மெஷின், அதுபாட்டுக்குக் கட்டுக் கட வாசிக்குமே தவிர அந்தக் கட்டுக் கடவின் அர்த்தமெல்லாம் அதன் பொறுப்பல்ல. நாலைந்து நாட்களே அவருக்கு சீதாராமனைப் பற்றி ஞாபகம் இருந்தது. அதற்குப் பிறகு அவனை அடியோடு மறந்துவிட்டார். அவருக்கு எவ்வளவோ கவலைகள்! 

இன்று காலையில் நளினி எதிர்வீட்டுக்கு யாரோ விருந்தாளி வந்து இறங்குவதைக் கவனித்துக்கொண்டு நிற்கையில் ஸ்நானம் செய்துவிட்டுத் தலையைத் துவட்டிக் கொண்டே அவர் வாசலுக்கு வந்தார். வேடிக்கையாக நளினியைக் கோபித்துக்கொண்டார். “இந்த அக்கிரகாரத்திலே உனக்கு வேடிக்கை பார்க்க நாள் பூராவும் அப்படி என்னதான் இருக்கிறதோ!” என்றார். 

“வேடிக்கை பார்க்கறதுக்குன்னு பட்டணத்திலே பெண்ணுக்கு ஒரு மாளிகை கட்டித் தாருங்களேன்” என்று கூறிக்கொண்டே சின்னம்மா வந்தாள். 

“மாளிகை கட்டித் தருபவனாக வந்தால் தானே கட்டித் தரான் – நீ சொல்லணுமோ! நளினிக்கு நல்ல அதிர்ஷ்ட ஜாதகம்” என்றார் விசுவநாதய்யர். 

“தெரியறதே! வரவேண்டிய காலத்திலே மாப்பிள்ளை கூட வராதிருக்கிறதே அதிர்ஷ்டம்தான்” என்று கேலி செய்தாள் சின்னம்மா. 

இந்த விவாதத்தைக் காதில் வாங்கியும் வாங்காமலும், ஆனால் சிந்தனையில் போட்டுக் கொள்ளாமலே நின்றிருந்த நளினி தன் தகப்பனார் பக்கம் திரும்பிச் சொன்னாள்: “எதிராளாத்துப் பர்வதத்தம்மாளுடைய தஞ்சாவூர் தம்பி வந்திருக்கிறார். இப்பத்தான் வந்து வண்டியிலிருந்து இறங்கினார்.” 

ஆமாம்; நளினி ஊகித்தது சரியே. வந்திருந்தது தஞ்சாவூரிலிருந்த ஜெயராம சாஸ்திரிகள்தான். அவர் சாதாரண மாக விஜயபுரத்துக்கு வரப்பட்டவரல்ல. தன் சகோதரியிடம் வாஞ்சைக் குறைவு என்பதல்ல. அவர் ஊரைவிட்டு வந்து விட்டாரானால் அவருடைய ஜீவனம் சிரமப்பட்டுப் போகும். தவிர, நாலைந்து குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அவர் மனைவி தனியாகக் கஷ்டப்பட வேண்டி வந்துவிடும். இதை எல்லாம் உத்தேசித்து அவர் ஊரை விட்டுக் கிளம்புவதே கிடையாது. மிகவும் அவசியமான காரியம் இருந்தாலொழியக் கிளம்பமாட்டார். 

இப்பொழுது அவர் விஜயபுரம் வந்திருந்தது மிகவும் அவசியமான ஒரு காரியத்தை முன்னிட்டுத்தான். என்ன காரியம் என்று நளினியோ, விசுவநாதய்யரோ, சின்னம்மாளோ அவர்கள் வீட்டுத் திண்ணையிலிருந்து அவரைப் பார்த்துக் கொண்டு நின்றபொழுது ஊகிக்கவில்லை. 

ஜெயராம சாஸ்திரிகள் வைதிகர்தான். ஏதோ புஸ்தகங் களிலிருந்தும், குருமுகமாக அத்தியயனம் செய்தும் நெட்டுருப் போட்டிருந்த மந்திரங்களைக் கடகடவென்று உருட்டிவிட்டு அணாக் கணக்கில் தட்சிணை வாங்கி, ரூபாய்க் கணக்காக அதைப் பெருகவிட்டு, தம்பிடிக் கணக்கில் செலவு செய்து மிச்சம் பிடித்து ஏதோ தங்குவதற்கு ஒரு வீடு, கூட்டுச் சீட்டு இரண்டொன்றில் கொஞ்சம் பணம் என்று லௌகிகம் தெரிந்த மனிதராகத் தான் காலந் தள்ளி வந்தார். தஞ்சாவூர் நகரிலிருந்த எத்தனையோ வைதிகர்களில் அவரும் ஒருவர்; சற்றுக் கெட்டிக்காரர். கூடியவரையில் நியம நிஷ்டை தவறாதவர் என்று அவருக்குப் பெயர். 

அவர் வந்து தமக்கை வீட்டு வாசலில் வண்டியிலிருந்து இறங்குமுன்னரே ஒரு தினுசாக எதிர்வீட்டில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற பெண்ணைப் பார்த்துவிட்டார். பார்ப்பதற்குப் பெண் லட்சணமாகத் தான் இருந்தாள். அவர் தம்பி சீதாராமன் சொன்னது வாஸ்தவம்தான். சர்க்கார் உத்தியோகம் பார்த்து வந்தவருடைய பெண். பார்க்க அழகாகவும் இருந்தாள் தாயில்லாத பெண்ணென்று சற்றுச் சிறப்பாகவே எல்லாம் செய்வார்கள். தன் தம்பியினுடைய ஆசை பைத்தியக் காரத்தனமான ஆசை என்றே முதலில் ஜெயராம சாஸ்திரிகளுக்குப் பட்டது. 

ஆனால் யோசித்துப் பார்க்கும்போது அவர் தம்பிக்குத் தான் என்ன குறைவு? வயது அதிகமில்லை. பார்க்க நன்றாகத் தான் இருந்தான். பி.ஏ. படித்தவன். கொஞ்ச காலம் நல்ல உத்தியோகமும் பார்த்தவன். எப்படியோ கையில் கொஞ்சம் பணம் சேரவே சொந்தத் தொழில் செய்தான். சொந்தத் தொழில் செய்வது லாபகரமானது. பிறரிடம் கைகட்டிச் சேவகஞ் செய்து கண்ட லாபம் என்ன என்று அவன் கேட்டதும் உண்மைதான். இரண்டு வருஷமாக நாணயமாகவே தொழில் செய்கிறான். ரைஸ் மில் ஒன்று, எண்ணை மில் ஒன்று, ஒரு மளிகைக் கடை எல்லாம் சிறிய அளவில்தான். என்னவோ இதுவரை நஷ்டம் வராமல் ஏதோ கூடியவரையில் லாபகரமாகவே தான் நடந்தும் வருகிறது. பொறுப்புத் தெரியாதவன் என்று சொல்வதற்கில்லை. ஆனால் தமையன் என்கிற முறையில், தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து அவனுக்குச் செய்யவேண்டியதைச் செய்துவிடுவது தன் கடமை என்று உணர்ந்தார் ஜெயராம சாஸ்திரிகள். 

அவர் யோசனைதான் அது. விஜயபுரம் தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யர் சம்மதித்தால் அவர் பெண் நளினியை மணந்துகொள்ளச் சீதாராமனுக்கு ஆசை. 

“பெண் வீட்டுக்காராளாக வரணுமே தவிர நம்ம போய்க் கேட்கலாமோடா?” என்று ஆட்சேபங்கள் செய்து பார்த்தார் சாஸ்திரிகள். 

“பெண் வீட்டுக்காராளுக்கு என்னைப்பற்றி விவரம் தெரியாது. தப்பாக நினைக்கும்படியாகக் கூடச் சந்தர்ப்பங்கள் இருந்தன ” என்றான் சீதாராமன். 

“மூன்று வருஷத்துக்கு முன்னோடி விஜயபுரம் போனேன்னு சொன்னயே, அப்போ ஏதாவது….” என்று ஜெயராம சாஸ்திரிகள் கேட்டார். இந்த நாகரிக உலகத்தின் வேதத்திற்கேற்ப நடந்து சமாளித்துக் கொள்வது சாஸ்திரி களுக்குச் சிரமமாகத்தான் இருந்தது. அவர் தீங்கு செய்தாலும், தவறு செய்தாலும், பாவம் செய்தாலும் தற்கால சௌகரியத் தார்த்தத்தை உத்தேசித்தும் பிற்காலத்தில் ஏற்ற பரிகாரமும் பிராயச்சித்தமும் செய்துவிடத் தயாராக இருக்கிற மனோ பாவத்திலேயேதான் செய்பவர். யாரும் பிராயச்சித்தத்தை தீமையின் விளைவை அனுபவிக்க முடியாமல் போய்விட முடியும் என்று அவர் எதிர்பார்த்திருப்பவரல்ல. சீதாராமன் என்னென்ன பாபங்கள் செய்தானோ, என்னென்ன பரிகாரங்கள் செய்து எப்படி எப்படி அனுபவித்துச் சரிக்கட்ட இருந்தானோ என்பதுபற்றி அவர் மனத்தில் உள்ளூரப் பெருங் கவலைதான். அவன் பட்டணத்துப் பாங்கியில் வேலையாக இருந்து, அதை விட்டு வந்தபின் நடந்த சில சம்பவங்கள் அவர் மனத்திற்கு இன்று நினைத்தாலும் திகைப்பும் பீதியையும் ஊட்டு வனவாகவே இருந்தன. ஆனால் அதற்காகத் தம்பியை விட்டுக் கொடுத்துவிட முடியுமா? 

சீதாராமன் மற்றதற்கெல்லாம் பதில் சொல்லாமல் ஒரே அடியாகச் சொன்னான்: “நீ விஜயபுரம் போய்ப்பார். நான் தஞ்சாவூரில் இருக்கிற சமாசாரம் கூடத் தெரியாது. 

தெரியாது. நீயும் அக்காவைப் பார்த்துப் பல வருஷங்களாகின்றன. போய் விட்டு வா. அந்தப் பெண்ணுக்கு இன்னும் கலியாண மாகா விட்டால் விசாரித்துப் பார். சம்மதித்தார்களானால் முகூர்த்தம் கூட வைத்துக்கொண்டு வந்துவிடு” என்றான். 

“பைத்தியக்காரப் பயல்! ரெண்டு எழுத்துப் படிச்சுட்டா மனசிலே என்னெல்லாமோ தோணத் தொடங்கி விடறது. அப்புறம் கட்டிப்பிடிக்க முடியறதில்லை” என்று முணு முணுத்துக் கொண்டதான் ஜெயராம சாஸ்திரிகள் விஜய புரத்துக்குக் கிளம்பினார். காலை ரயிலில் கிளம்பினார் – மாலை அல்லது இரவுக்குள் திரும்பிவிடுவதாக. 

வண்டியிலிருந்து இறங்கும்போதே பெண்ணைப் பார்த்தாகிவிட்டது கல்யாணமாகவில்லை. சரி, அக்காவை விசாரித்தால் மற்றவை தெரிந்துவிடுகிறது என்று எண்ணிக் கொண்டே வீட்டிற்குள் போனார். 

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கு என்னவோ விசுவ நாதய்யரைச் சந்தித்து அது விஷயமாகக் கேட்கவே மனம் வரவில்லை. அசாத்தியமான காரியத்தைச் சாதிக்க முடியாதா, பார்க்கலாமே என்று பார்ப்பதற்குப் பெண்களுக்குள்ள சுபாவமோ, அல்லது நளினி தன் தம்பிக்கு மனைவியாக வந்து வாய்க்கமாட்டாளா என்கிற ஓர் ஆசையோ, அல்லது நளினிக்கு சீதாராமனிடம் ஒரு பிரியம் விழுந்திருந்தது என்று கண்டு கொள்ள இருந்த ஒரு இயற்கையான சாதுர்யமோ தூண்ட சின்னம்மாவிடம் பர்வதத்தம்மாள், அன்று மத்தியானமே விஷயத்தைப் பிரஸ்தாபித்து விட்டாள். இந்தக் கல்யாணத் துடன் விஜயபுர அக்கிரகாரத்திலே தன் மதிப்பே ஒரு படி உயர்ந்துவிடும் என்று அவள் எண்ணினாள். 

கல்யாணமாகிவிட்டால் போதும், மாப்பிள்ளை யாரானால் என்ன என்பது சின்னம்மாவின் அந்தரங்க அபிப்பிராயம். ஆனால் வெளிப்படையாக, அவரைக் கேட்கணும் என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்துவிட்டாள். 

மாலையில் விசுவநாதய்யர் ஆபீஸிலிருந்து திரும்பி வந்த பிறகு சின்னம்மாவுக்கும் அவருக்கும் இடையே இது குறித்து விவாதம் நிகழ்ந்தது. விசுவநாதய்யருக்கு சீதாராமன் நல்ல வரன் என்றே பட்டது. ஆனால் பழைய கலவரம்….? 

அவர் நளினியைக் கேட்டார். 

“போ, அப்பா!” என்றாள் நளினி என்றுமில்லாத லஜ்ஜையுடன். 

“இல்லையம்மா; சொல்லு, கேலி இல்லை. உன் சந்தோஷம் இதைப் பொறுத்துத்தானே இருக்கு?” என்றார் விசுவநாதய்யர். 

“அந்தக் குருஸ்வாமின்னு ஒருத்தர் வந்தப்போ அவருக்குப் பயந்துண்டு ஓடிப் போனாரே…. எனக்குச் சொல்லத் தெரியல்லையப்பா!” என்று மனத்திலிருந்ததை மறைத்தும் மறைக்காமலும் பதில் அளித்தாள் நளினி. 

சின்னம்மா குறுக்கிட்டாள்: “அதெல்லாம் பழைய சமாசாரம். அந்தக் குருஸ்வாமி காலிப்பயல். ஜெயில்லே இருக்கான். என்ன மிரட்டினானோ என்னவோ! 

“அது சரி. ஆனால் இவர் ஒண்ணும் தப்புத் தண்டாச் செய்யல்லேன்னு தெரிஞ்சுட்டா எனக்கு நிம்மதியாக இருக்கும். இல்லாட்டா ஆயுஸு பூராவும்…” என்றாள் நளினி. 

விசுவநாதய்யர் அன்று மாலையே ஜெயராம சாஸ்திரிகளைச் சந்தித்துத் தன் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்தார். ஜசதகம் பொருந்தியே இருந்தது. 

கல்யாணத்துக்கான பேச்சுகளெல்லாம் முடிந்த பிறகு கல்யாணத்துக்கான ஏற்பாடுகளெல்லாம் நடந்தது. 

நளினிக்கு மட்டும் மனசிலே ஒரு கலவரம்: “எனக்கு நிச்சயமாக அவர் குற்றம் செய்யவில்லை என்று தெரிந்தால் தான் நிம்மதி பிறக்கும்” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். விசுவநாதய்யரிடம் இரண்டொரு தரம் பிரஸ்தாபித்தாள். 

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. என் மாப்பிள்ளை ரொம்ப நல்லவன். நீ வேணுமானால் கல்யாணம் ஆன பிறகு அவனைக் கேட்டுப் பாரேன்” என்றார். 

கல்யாணம் ஆவதற்கு முன் நளினிக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவும் இல்லை.

அடைத்த கதவு 

சீதாராமனுக்கும் நளினிக்கும் கல்லியாணம் சற்று விமரிசையாகவே நடந்தது என்று தான் சொல்லவேண்டும். அதாவது தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யரின் நிலைமைக்குக் கல்யாண “செரப்புகள்” சற்று அதிகம்தான். இது சாத்திய மானதற்குக் காரணம் சீதராமன்தான். அவன் வரதட்சணையாக எதுவும் வாங்கிக் கொள்ள மறுத்துவிடவே. பெண்ணுக் கென்று சற்றுப் பெருமையாகவே மற்றச் செலவுகளைச் சிறப்பாகப் பெற்றதில் அவருக்குப் பரம திருப்தி தான். அவனும் நல்ல ஸ்திதியில் இருப்பதாகவே விசாரித்து அறிந்து கொண்டு எல்லையற்ற ஆனந்தத்தில் அழுந்தினார். 

தாயில்லாப் பெண்ணை எப்படியோ காப்பாற்றிக் கணவனிடம் ஒப்புவிக்கும் பொறுப்புக்கழிந்து விட்டதே என்று சின்னம்மாவுக்கும் சந்தோஷம்தான். அதுவும் எப்படிப் பட்ட மாப்பிள்ளை! மூக்கும் முழியுமாக, சிவப்பாக, கண் நிறைந்த வாலிபன்! ஏதோ சொத்தும் சிறப்பும் இருந்தது என்று சொல்லிக் கொண்டார்கள் நல்லதுதான். எல்லாவற்றிற்கும் மேலாக சீதாராமன் சேஷ ஹோமம் எல்லாம் ஆனபிறகு தன் மனைவியையும் தன்னுடன் தஞ்சைக்கு அன்றைக்கே அழைத்துப் போகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது அவளுக்குப் பிடித்திருந்தது. நளினி இனி தன் பொறுப்பாக விஜயபுரத்தில் இருக்கமாட்டாள் என்பது ஒன்று அவன் கணவன் அவளைப் பிரியமாக வைத்துக் கொள்வான் என்பதற்கு இது ஓர் அடையாளம் என்று கருதினாள் சின்னம்மா. 

அந்தப் புது சம்பந்தம் பற்றி கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி களுக்கும், பர்வதத்தம்மாளுக்கும் பரம திருப்தி. விஜயபுரம் அக்கிரகாரத்தில் அவர்கள் சீதாராமன் காரணமாக இழந்து விட்ட செல்வாக்கை எல்லாம் நளினி காரணமாகத் திரும்பவும் பெற்றவர்களாகி விட்டார்கள். நாளடைவில் முந்திய நிலையைத் தான் எட்டிவிட முடியும் என்கிற நம்பிக்கை பிறந்து கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகளுக்கும் புத்துயிர் தந்தது. 

விஜயபுரம் அக்கிரகாரவாசிகளில் சீதாராமனைப் பற்றிக் கெட்ட அபிப்பிராயம் கொண்டிருந்தவர்கள் கூட இப்பொழுது கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் காரணமாகவும், தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யர் காரணமாகவும் அவனைப் பற்றிச் சற்று மரியாதையாகவே பேசத் தொடங்கினார்கள். முன் நடந்ததெல்லாம் ஏதோ சிறுபிள்ளை விளையாட்டு என்று எண்ணி மறந்துவிட்டவர்கள் போலப் பேசினார்கள். 

சீதாராமன் – நளினியின் கல்யாணம் ஊரில் மற்றவர்கள் எல்லோருக்கும் திருப்தியளித்தது. ஆனால் சீதாராமனுக்கோ நளினிக்கோ திருப்தியளித்ததாக மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. 

மணப்பந்தலில் உதடுகளைக் கடித்துக்கொண்டு கண்களில் ஒரு மிரண்ட பார்வையுடன், தான் மாலையிட்டுக் கரம் பற்றியவனைப் பற்றி ஒருவிதமான முடிவுக்கும் வரமுடியாமல் உட்கார்ந்திருந்த நளினியைப் பார்க்க பார்க்க சீதாராமனுக்குக் கலவரமாக இருந்தது. அவளுடைய முகபாவம் அவனால் தெளிவு செய்துகொள்ள முடியாததாக இருந்தது. அவள் இந்தக் கல்யாணத்தில் விருப்பமோ பெருமையோ கொள்ள வில்லை என்கிற எண்ணம் சீதாராமன் மனத்தில் தோன்றியது. இந்த எண்ணத்தைத் தொடர்ந்து பலதரப்பட்ட கலவரங்கள் அவன் மனத்தில் எழுந்தன. பருவத்திற்குரிய குணம் என்று அவன் அதை ஒதுக்கிவிட்டிருக்கலாம். ஆனால் என்னவோ தெரியவில்லை. ஏதோ தன்னைப்பற்றிய ஒரு பயங்கொள்ளித் தனம் அவனைத் தூண்டியது மனதை ஒரு நிலைக்கு வர வொட்டாமல் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. 

நளினியின் மனோநிலை விவரிக்கும் தரமானதல்ல. அவள் அறிய விரும்பியது ஒன்றுதான்: “சீதாராமனுக்கும், குரு ஸ்வாமிக்கும், அந்தப் பாங்கிக் கொள்ளைக்கும் உள்ள சம்பந்தம் என்ன? சீதாராமன் அந்தப் பணத்தைத் திருட வில்லையானால் அவன் அன்று அப்படிப் பயந்து கொல்லைப் புறமாக ஓடுவானேன்? திருடியது சீதாராமன்தான் என்றால்….?” அதற்குமேல் சிந்திக்க நளினிக்குத் தைரியம் இல்லை. ஆயுள் பூராவும் ஒரு திருடனுடன் வாழ்ந்து, அவன் திருடன் என்கிற ஞாபகம் ஒவ்வொரு நிமிஷமும் மனத்தைப் பிய்க்க – அதற்குச் சம்மதிப்பதாக இல்லை நளினி. 

கல்யாணத்திற்கு முன்னதாகவே இந்தச் சந்தேகம் தீர்ந்து விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கலியாணத்திற்கு முன்னால் அவள் சீதாராமனைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் நேரில் கேட்டிருப்பாள். அவன் பதிலைப் பொறுத்திருக்கும் கலியாணம் நடப்பதும் நடக்காததும். ஆனால் இவ்வளவு தூரம் நடந்த பிறகு எப்படி நிறுத்துவது கல்யாணத்தை? கழுத்தில் தாலியும் ஏறிவிட்டது. கொஞ்சம் விசாரமாகவேதான் இருந்தது நளினிக்கு. ஆனால் எது எப்படியானாலும் சரி. அவர் திருடன் என்றால்? பாங்கியில் மோசடி நடத்தியவர் என்றால்? – மேலே சிந்திப்பதற்குச் சற்றுப் பயமாகவே இருந்தது நளினிக்கு. 

ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம் என்று தன் மனத்திலேயே முடிவுகட்டிக் கொள்ள விரும்புகிறவள் போலத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டாள். ஆனால் அப்படித் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வருவதும் மிகவும் சிரமமான காரியமாகத்தான் இருந்தது. 

உலக வாழ்க்கையைத் திண்ணையில் நின்று வேடிக்கை பார்த்து வாழ்க்கைப் பிரச்னைகளை நாடகப் பிரச்னைகளாகப் பாவித்துப் பழகியவள் அவள். தவிரவும் தீவிரமான முடிவு எதற்கும் வருவதற்குப் போதிய மனோதிடமும் அறிவு முதிர்ச்சியும் பெறாதவள். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் சீதாராமனைப் பற்றிய வரையில் அவளுக்கு ஒரு மனோ திடமும், சிந்திப்பதற்கான ஒரு முதிர்ச்சியும் ஏற்பட்டிருந்தது வாஸ்தவமே. குழந்தையுள்ளத்தில் சீதாராமனைப் பற்றிய வரையில் இரண்டே இரண்டு காட்சிகள்தான் நின்றன. ஒன்று முதல்தடவை சீதாராமன் விஜயபுரம் வந்தபோது அவனைப் போலீஸார் கைது செய்து அழைத்துப் போனது; இரண்டாவது குருஸ்வாமியும் அவனும் தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விவாதம் செய்தது. 

கல்யாணமாகிய உடனேயே தஞ்சைக்குப் புறப்பட்டார்கள் சீதாராமனும் அவனுடன் வந்தவர்களும். நளினியும் தன்னுடன் வரவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான் சீதாராமன். நளினிக்கும் இஷ்டமே. 

இரண்டாம் வகுப்பு வண்டியில் நளினியும் 

நளினியும் சீதாராமனும் மட்டும் இருந்தார்கள். தெய்வாதீனமாகத் தனக்குச் சௌகரியமாக ஏற்பட்ட காரியம் அது என்று அவளுக்குப் பட்டது. 

சீதாராமன் தான் முதலில் பேசினான்: “பட்டணத்து மாமான்னு நீ முதல் தடவை நான் வந்தபோது….” என்று சொல்லிக்கொண்டே அவளண்டையில் நெருங்கி உட்கார்ந்தான். 

சுபாவமாக உள்ள ஒரு நாணமும் கேட்க விரும்பிய கேள்வியைச் சரியாகக் கேட்கவேண்டுமே என்கிற விருப்பமும் தூண்ட நளினி சற்றே தூர நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள். எப்படித் தைரியமாக, என்ன கேட்பது என்று முதலில் தெரியவில்லை. 

“குருஸ்வாமி என்ற ஒருவர் வந்த அன்றைக்கு….” என்று தட்டுத்தடுமாறி ஆரம்பித்தாள். 

சீதாராமனின் ஞாபகம் சட்டென்று இன்ப உலகத் திலிருந்து அவ்வளவு இன்பகரமானதல்லாத ஒரு விஷயத்துக்குத் திரும்பியது என்பதை அவன் முகபாவம் காட்டியது. சற்றுக் கசந்த கடுமையான குரலில், “அதைப்பற்றி என்ன இப்போது?” என்றான். 

சட்டென்று அவன் முகம் மாறியதையும் அவன் குரல் கடுமையானதையும் நளினி கவனியாமல் இல்லை. கவனித்தாள். அவள் மனத்திலிருந்த சந்தேகம் சந்தேக நிலையைத் தாண்டி ஊர்ஜிதமாகிற மாதிரியாகிவிட்டது. ஆனால் தன் கனவுகளை இழக்க இவ்வுலகில் யார்தான் தயாராயிருக்கிறார்கள்? கனவென்று தெரிந்தாலும் உண்மையாகவே இருந்துவிடாதா என்று அவஸ்தைப்படுகிறார்கள் தானே மனிதர்கள்! 

படபடத்த உள்ளத்துடன் நளினி சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டே கேட்டாள். “அப்படியானால் அன்று குருஸ்வாமி கூறியதெல்லாம் உண்மையேதானா?” 

சீதாராமன் பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் குரலில் ஒலித்த ஓர் ஏக்கமும், நிராசையும், கன விழந்த பாவமும் அவன் உள்ளத்தில் சுரீரென்று தைத்தன. தஞ்சை போய்ச் சேருகிற வரையில் அவளுடன் இன்னின்ன பேசுவது, இப்படி இப்படி நடந்து கொள்வது என்று திட்டமிட்டிருந்த சீதாராமன் அவள் வார்த்தைகளாலும் குரலாலும் கிளறிவிடப் பட்ட சிந்தனைகளில் ஈடுபட்டவனாக உட்கார்ந்திருந்தான். அதுவரை அவன் உணர்ந்திராத ஓர் உணர்ச்சி அவனுக்கேற் பட்டது. பிராயச்சித்தமே இல்லாத ஒரு குற்றத்தைச் செய்து விட்டவன்போல. அவன் தலையிறங்கி சிந்தனைகளில் ஆழ்ந்தவனாக உட்கார்ந்திருந்தான். நளினியைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவன் விரும்பியபோது அவள் மனத்தில் தன்னைப்பற்றி எந்தவிதமான ஞாபகங்கள் இருக்கும் என்று தான் சிந்திக்காதது தன் தவறுதான் என்று எண்ணமிட்டான். 

எப்படியோ ரெயிலில் தனிமையில் இருவரும் பொழுதைக் கழித்துவிட்டார்கள். புதுசாகக் கல்யாணமான தம்பதிகளாகக் குதூகலத்துடன் தஞ்சையில் அவர்கள் ரெயிலைவிட்டு இறங்கவில்லை. நளினியின் முகத்திலே ஒரு சோகபாவம் நிரம்பியிருந்தது. ஆனால் அவள் வாயை இறுக மூடிக் கொண்டு, கண்களில் உள்ள கலக்கத்தை மறைத்துக் கொண்டு தான் இறங்கினாள். 

அவர்களுக்கென்று தனியாக வீடு ஏற்பாடு செய்திருந்தான் சீதாராமன். நேரே அங்கேதான் போனார்கள். அஸ்தமிக்க ஒரு நாழிகை யிருக்க வீடு போய்ச் சேர்ந்தார்கள் சீதாராமனும், நளினியும். 

தன் சிந்தனைகளைத் தப்புகிற உத்தேசத்துடனோ என்னவோ சீதாராமன் தன் கடைப் பக்கம் போய்விட்டுச் சீக்கிரமே வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான். போகுமுன் நளினியிடம், “அந்தப் பழைய கதையை எல்லாம் நீயும் நானும் மறந்துவிடுவதே நல்லது” என்று சொல்லி விட்டுப் போனான். 

அழுகை நிறைந்த மெல்லிய குரலில் நளினி, “அதெப்படி சாத்தியம்?” என்று கேட்டது அவன் காதில் விழுந்திராது. 

இரவில் கடைகளுக்கெல்லாம் போய்விட்டு நளினிக் கென்று கதம்பமும், ரோஜாப் பூவும் வாங்கிக்கொண்டு சீதாராமன் வீடு திரும்பும்போது மணி ஒன்பதரைக்கு மேலாகி விட்டது. வெளி வாசற்கதவு தாளிடாமல் வெறுமனே சாத்தி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததுமே அவனுக்கு என்னவோ பக்கென்றது. 

“நளினி!” என்று கூப்பிட்டான். 

இருளிலிருந்து யாரும் பதில் அளிக்கவில்லை. விளக்கை ஏற்றிப் பார்த்தான். நளினியின் பெட்டியும், படுக்கையும் வண்டிக்காரன் சாயங்காலம் கொண்டுபோய் வைத்த இடத்திலேயே இருந்தன. அந்தப் பெட்டியின்மேல் வைத்திருந்த ஒரு கடிதம் கண்ணில் பட்டது. அதைப் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லைபோல் இருந்தது அவனுக்கு. ஆயினும் பிரித்தே பார்த்தான் நடுங்கிய கைகளுடன். 

நளினிதான் எழுதியிருந்தாள்: “எவ்வளவு சாமர்த்திய சாலிதான் ஆனாலும் ஓர் அயோக்கியனுடன் வாழ நான் விரும்பவில்லை. திடீரென்று ஏற்பட்ட முடிவு அல்ல இது. என்னைத் தேட வேண்டாம்” என்றும், பின் குறிப்பாக. “நான் விஜயபுரம் போகவில்லை” என்றும் எழுதியிருந்தாள் நளினி. 

சீதாராமனின் கைகளிலிருந்து கதம்பமும் ரோஜாப் புஷ்பப் பொட்டலமும் அந்தக் கடிதமும் நழுவித் தரையில் விழுந்தன. அவன் அவசரத்தில் திறந்து வைத்துவிட்டு வந்திருந்த கதவு – வாசற் கதவு – காற்றில் படாரென்று அடித்துச் சாத்திக் கொண்டது!

(முற்றும்)

– நளினி (காவிரிக்கரை நாவல்), முதற் பதிப்பு: 1959, சந்தியா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *