தக்காளிப் பழங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2024
பார்வையிட்டோர்: 1,203 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘கம், கம்’ என்று இருமி, முக்கி முனகிக்கொண்டே படுக்கையில் புரண்டு நெளிந்த வைரமுத்துக் கிழவன் கைகளை மேலே நீட்டினான். தலை மாட்டில் தணித்து வைக்கப்பட்டிருந்த ‘லாம்பு’ கையில் தட்டியதும், தட்டுத் தடுமாறி லாம்பின் திரி தூண்டியைத் திருகி, வெளிச்சத்தை வருவித்துக்கொண்டே மறுபடியும், மறுபடியும் இருமினாள்.

‘பிள்ளை!’

‘பிள்ளை …!’ ‘என்னம்மான்?’ ‘கொஞ்சம் சுடுதண்ணி தா பிள்ளை !’ சிறிது நேரத்துக்குள் தண்ணீர் கிளாசுடன் பிரசன்னமான கண்ணம்மா, கிழவனின் தலைமாட்டில் தண்ணீர்க் கிளாஸை வைத்துவிட்டு, கிழவன் எழுந்திருக்க உதவி செய்வதில் ஈடுபட்டாள்.

முழங்கைகளைப் படுக்கையிற் குத்தி, தலையை நிமிர்த்தி, பக்க வாட்டிற் சரிந்தவாறே கிளாசை எடுத்துத் தண்ணீரைக் குடித்தான்.

தண்ணீர் குடித்து முடிவதற்கிடையில், கிழவனுக்குக் களைப்பு வந்துவிட்டது. முனகிக்கொண்டே பக்கவாட்டில் சரிந்து, மறுபடியும் படுத்துக்கொண்டான். கலைந்து கிடந்தகிழவனின் போர்வையை இழுத்து, காலிலிருந்து கழுத்துவரை போர்த்திவிட்டுப் பக்கத்தே இருந்த நாற்காலியில் அமர்ந்து, கிழவனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள் கண்ணம்மா.

பக்கத்து வீட்டு வானொலியில் பத்துமணி ஒலிபரப்பு அப்போது தான் ஆரம்பமாகியது. ‘அம்மான், மணி பத்தாச்சுது, மருந்தைக் குடிச்சுப் போட்டுப் படுங்கோவேன்’ கிழவனின் தோள் மூட்டை இலேசாக வருடிக் கொண்டே கண்ணம்மா கேட்டாள்.

‘எனக்குமருந்து வேண்டாமென்று எத்தனை தரம் சொல்லிப் போட்டேன்.’

இந்த வார்த்தைகளைச் சொல்லி முடிப்பதற்கிடையில் கிழவன் ஒரு தடவை இருமித் தீர்த்துவிட்டு இளைத்தான்.

கண்ணம்மா சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். உடம்பை மறுபுறமாகத் திருப்பி, தலையை மட்டும் மேலே நிமிர்த்தி, தலை மாட்டில் வைக்கப்பட்டிருந்த எச்சில் படிக்கத்துள் துப்பிவிட்டு, போர்வையை இழுத்து உடம்பெல்லாம் மூடி மறைத்துக்கொண்டே கிழவன் சுருண்டு படுத்தான்.

‘அம்மான்!’ ‘ஏன் பிள்ளை என்னை அலட்டுகிறாய்? எனக்கு மருந்தும் வேண்டாம், ஒண்டும் வேண்டாமெங்கிறேன். நீ சாப்பிட்டுட்டுப் போய்ப் படுபிள்ளை!’ இதற்குமேல் கண்ணம்மாவால் கிழவனை வற்புறுத்த முடியவில்லை. எழுந்து சென்று மேசைமேல் வைக்கப் பட்டிருந்த வெள்ளைப் பேப்பரையும் பேனாவையும் எடுத்து வந்து வைரமுத்தரின் முப்பதாவது வயதில் தாயும் முப்பத்தைந்தாவது வயதில் அக்காளும் செத்துப் போனார்கள். வைரமுத்தர் அந்தக் குடிசையிலே தனித்துவிட்டார். உறவினர் என்று சொல்லிக்கொண்டு பலர் வந்து துக்கம் தெரிவித்துப் போனார்கள். ஆனால், அவரின் தனிமையைப் போக்க யாரும் முன் வந்ததாயில்லை.

வைரமுத்தருக்குச் சபலம் தட்டவில்லையென்று அழுத்தமாகக் கூறமுடியாவிட்டாலும், ஒரு துணைவேண்டுமென்று அவர் மனதில் தோன்றிய எண்ணம் இதன்பாற்பட்டது என்று கூறிவிட முடியாது. உடலையும், உள்ளத்தையும் சுற்றிக்கொண்டு புகைந்தெழும் ஒருவகை நெஞ்சோக்கல்!

அடுத்த வீட்டுக்காரர் ஒருவர் வைரமுத்தருக்குப் பெண்கொடுக்க முன் வந்தார். அவர் வைரமுத்தருக்கு இரத்த உறவினர் அல்லர். ‘அயல்’ என்ற தொடர்பு அவ்வளவு தான்.

நாலு பேர் முன்னிலையில் கவிழ்ந்த தலையை நிமிர்த்திக் கொள்ளாமல், சோற்றை உருண்டையாகக் குழைத்து, வைரமுத்தரின் கையிலே சீதேவி வைத்தாள்.

கூனிக் குறுகிக்கொண்டே சீதேவியால் தரப்பட்ட சோற்றுருண்டை யைப் பெற்றுச் சாப்பிட்டுவிட்டுச் சம்பிரதாயத்தைப் பூர்த்தி செய்தார் வைரமுத்தர்.

சீதேவியும், வைரமுத்தரும் குடும்பமாகிவிட்டனர்.

பொன் முருவிய ஒரு ஜோடி வளையல், தங்கத்தாலான ஒரு ஜோடி திருகு கடுக்கன் – இவைதான் சீதேவிக்குக் கிடைத்த சீதனப் பொருள்கள். தந்தையால் அணிவிக்கப்பட்ட ஒரு ஜோடிக் கோளைக் கடுக்கன், தாயால் கட்டப்பட்ட இரட்டைப்பட்டு வெள்ளி அரைஞாண் ஆகியவை தான் வைரமுத்தரின் முதிசச் சொத்துக்கள். பேருக்கு வீடும் தோட்டத்து நிலமும் இருக்கிறது. ரூபா நூறும், பதினைந்து வருட வட்டியும் கொடுத்து மீட்க வேண்டுமே.

***

ஒன்று, இரண்டு என்று நிதானமாக அடியெடுத்து வைத்துக் குடும்பத்து எண்ணிக்கை ஆறாகிவிட்டது. மூத்தது இரண்டும் பெண்கள். ஆகையால் வெட்டிவிடப்பட்ட கள்ளிச் செடிபோல் அவர்கள் வளர்ந்து விட்டார்கள்.

கடைசியாகச் சீதேவியின் வயிற்றிலிருந்து ஒருவன் அடியெடுத்து வைத்தான்.

‘நல்ல கேது நட்சத்திரத்தில் பையன் பிறந்திருக்கிறான். அங்கு மிங்குமாக நின்று மேல்வீட்டாரும் கீழ்வீட்டாரும் சந்தித்ததனால் அதிர்ஷ்டம் விரைந்தோடி வருகிறது’ என்று மடத்தடிச் செவிட்டுச் சாத்திரியார் சொல்லி வைத்தார். வைரமுத்தருக்கு மனம் குதியாகக் குதித்தது. சீதேவி இன்பத்தால் பூரித்துப் போனாள்.

சாத்திரியார் எதைச் சொன்னாரோ, கடைசியாக ஒருநாள் அது நடந்தேவிட்டது.

பிள்ளைப் பதிவு செய்வதற்காக விதானையார் வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்த வைரமுத்தர் விதானையார் வீட்டுக் குச்சு ஒழுங்கையின் வேலியில் ஒரு சரையை வைத்துக்கொண்டு, கைகளைக் காற்றிலே ஆட்டி காகத்தைப் பயங்காட்டினார். கொத்திய சரையை அப்படியே போட்டுவிட்டு காகம் பறந்தோடிவிட்டது.

விளையாட்டாகச் சரையை காலால் வருடிப்பார்த்த வைரமுத்தரின் மனது படபடத்தது. நான்கைந்தாக மடித்துச் சுருட்டப்பட்டுக் கிடந்த பணநோட்டுகள் அவரைப் பார்த்து நடுங்கின. அங்குமிங்கும் கண்களை மிரளமிரள விட்டுக்கொண்டு பணநோட்டுகளை எடுத்து மடிக்குள் சுருட்டி வயிற்றுச் சுருக்கோடு நெருடிச் செருகிக் கொண்டே நடையை வேறு வழியில் திரும்பினார். மனது மீண்டும் அடித்துக் கொண்டது. “திரும்பிப் போவதை யாராவது பார்த்தால் தவறாகப் புரிந்து கொள் வார்கள்’ என்று மனது சொல்லியிருக்கவேண்டும். கால்களைத் திருப்பி விதானையார் வீட்டுப் பக்கமே விட்டார்.

‘ஐயா !’

‘ஆரது? – வைரமுத்துவின் குரல் போலை இருக்கு!’

‘ஓமையா நான்தான்!’

‘வைரமுத்து இஞ்சாலை உள்ளுக்கு வாடாப்பா! எனக்குக் கால்லை சுகமில்லை .’

வைரமுத்தர் வாயிற்படி தாண்டி உள்ளே காலடி எடுத்து வைத்ததும். விதானையாரின் கால் வீங்கியிருந்ததைப் பார்த்துப் பயந்துபோனார். அந்த நால்சார் வீட்டின் நடு முற்றத்திலே சாய்மனை நாற்காலியில் சாய்ந்து, கால்களை நீட்டி முன்னே வைக்கப்பட்டிருந்த முக்காலியில் – முண்டவைத்திருந்தார் விதானையார்.

‘வயசெல்லே செண்டுபோச்சு. ஒரு மாதம் படுக்கையிலே கிடந்த தினாலை கால் வீங்கிப் போச்சு’ என்று தானாகவே கூறிக்கொண்டு தமக்கே சமாதானம் செய்தார் விதானையார்.

விதானையாருக்குச் சம்பிரதாயப்படி அனுதாபம் தெரிவித்துவிட்டு, வந்த காரியத்தை வெட்கத்தோடு சொல்லி முடித்தார் வைரமுத்தர்.

‘உனக்கென்ன, ரெண்டு ஆம்பிளைப் பிள்ளையளைப் பெத்துப் போட்டாய். உன்ரை சோத்தை நாயும் தின்னாது! நான் எல்லாத்தை யும் பொட்டையளாய்ப் பெத்துப் படறபாடு…!’ என்று அலுத்துக் கொண்டே விதானையார் மகளையழைத்து பேர் பதிந்த துண்டைக் கொடுக்கும்படி மகளுக்குக் கட்டளையிட்டார்.

சிறிது நேரத்திற்குப்பின் பார்வதி பதிவுக் கொப்பிகளுடன் வந்து சேர்ந்தாள்.

பேரென்ன வைக்க?’ ‘கேது என்று வை புள்ளை !’ “என்ன ? கேது…?’ ‘ஓமோம் புள்ளை . அவன் கேது நட்சத்திரத்திலைப் பிறந்தவன். அதனாலேகேது என்றே வச்சிடுவம்!’ நடுங்கும் கரங்களால் கையெழுத் திட்டு துண்டை வாங்கிக் கொண்டே வைரமுத்தர் தாமதியாது நடையைக் கட்டினார். அவர் உடம்பெல்லாம் வியர்த்து வடிந்தது!

‘வாற நேரமெல்லாம்காணியைப் பற்றிப் பேசிறவன் இண்டைக்கு ஒண்டும் பேசாமல் போறானே! என்று விதானையார் ஆச்சரியப் பட்டார்.

ஓடோடியும் சீதேவியின் முன் சென்று, வாய் நிறைய நடந்ததைக் கூறிக்கொண்டே பண நோட்டுக்களை எண்ணிப் பார்த்தார் வைர முத்தர்.

ரூபா முந்நூற்றைம்பது! துடக்கு வீட்டுக்குள் கிடக்கும் சீதேவியைச் சந்தோஷத்தில் குதிக்க வைக்கவேண்டுமென்று அவர் எண்ணினார். ஆனால், சீதேவி சொன்னது….

“இஞ்சார், இப்படி வாற பணம் சந்ததிக்குக்கூடாது கொண்டுபோய் விசாரிச்சுக் குடுத்திட்டு வா?’

சீதேவியின் இந்தக் கட்டளைக்குப் பணிந்து, விதானையார் வீட்டைச் சுற்றி வந்து, பலரிடம் கதைவிட்டுக் கதை கேட்டுப் பார்த்தார் வைரமுத்தர். அந்தப் பணத்திற்குச் சொந்தக்காரரென்று யாரும் வரவில்லை.

‘தோஷம்’ ஒன்றும் தொடராதிருக்க இருபத்தைந்து ரூபா செலவில் அம்மனுக்குக் குளுர்த்தி செய்துவிட்டு வீட்டுக்கு வந்த வைரமுத்தர் மறுநாள் விதானையார் வீட்டுக்குப் போய்ப் பணத்தைக் கொடுத்து காணியை மீட்டுக் கொள்வதாக இருந்தார்.

விடிந்ததும் விடியாததுமாக வடக்கே துக்க மேளம் கேட்டது. விதானையார் வீட்டுப் பக்கம் கேட்டது. விதானையார் வீட்டுப் பக்கமென்ன? – விதானையார் வீட்டிலேயே கேட்டது.

‘விதானையார் கண்களை மூடிவிட்டாராம்’ என்ற செய்தியைக் கேட்டதும், வைரமுத்தரின் மார்பில் சுரீரென்றது. ‘அதுகள் யோக்கிய மான பிள்ளைகள். அப்படிச் செய்யாயினம், என்றை காணியிலை ஆசைப்படாகினம்’ என்று தன்னைத்தானே சமாளித்துக்கொண்டு மரண வீட்டுக்குப் போய்வந்தார்.

***

காடு மாற்றி முடிந்தது. எட்டுச் செலவும் கழிந்த மறுநாள் விதானையார் வீட்டுக்குப் போயிருந்த வைரமுத்தர், விதானையாரின் மூத்த மகள் பார்வதியிடம் இலேசாக விஷயத்தை வெளியிட்டார்.

‘அந்திரட்டி முடியட்டன் இப்பென்ன அவசரம்!’ என்று பார்வதி பதில் சொல்லியதுடன் ‘நாங்கள் அள்ளிக் குடுத்திட்டிருக்கிறம்’ என்று மனதிற்குள் புகைந்து கறுவிக் கொண்டாள்.

‘அந்திரட்டி முடிய முந்தி நான் இப்படிக் கேட்டிருக்கப்படாது’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டு வைரமுத்து வீடு வந்து சேர்ந்தார்.

ஒருமாத காலம் கழித்து, தலையின் பிறை வளைவு வெட்டையும், முகத்தையும் சவரம் செய்து, குளித்துத்தண்ணீர்தடவி வால் குடுமி யைத் தட்டி முடிந்து, அப்போதுதான் சலவையிலிருந்து வந்திருந்த வேட்டியையும் மடித்து உடுத்திக்கொண்டு, பணப்பையை இறுக்கிப் பிடித்ததவாறே வைரமுத்தர்விதானையார் வீட்டை அடைந்தார்.

‘ஏன் புள்ளை அந்தக் காணிச் சங்கதியை, இண்டைக்கு முடிப்பமே. நல்ல நாள்-!’

‘ஓ… ஓ காணி எனக்குத்தான் சீதனமாய் எழுதியிருக்கினம். அவரும் கொழும்பிலை நிக்கிறார். வரட்டுக்கன். வட்டிக் கணக்கெல்லாம் பார்க்க வேணும். வட்டிக் கணக்கு மட்டும் இப்ப ஐநூற்றுக்கு மேலை வருமே!’

“ஐந்நூறு!’ |

வைரமுத்தரின் அந்தராத்மா நடுங்கியது. ‘என்னட்டைஅப்பிடி யெல்லாம் வேண்டக்குடாது புள்ளை. ஏதோ ஆண்டவனுக்கு நீதியாய்ப் போடுங்’ என்று நா தழுதழுக்கக் கூறிவிட்டு, வளர்த்த நாய் முகத்தைப் பார்ப்பதைப் போலப் பார்வதியைப் பார்த்தபடி நின்றார்.

‘சரி சரி நீபோ! நான் காயிதம் போட்டு அவரைக் கூப்பிட்டிட்டு உனக்கு ஆள் விடறன்.’

ஒரு வழியாகக் காரியம் முடிந்தது என்ற மனத்திருப்தியுடன் நடந்தார் வைரமுத்தர்.

மூத்தபிள்ளை இரண்டையும் கட்டிக் கொடுத்து, மூத்த மகன் சுப்பிரமணியத்தை எட்டாம் வகுப்புவரை படிக்க வைத்து, அவனுக்குக் கொழும்பிலே பியோன் வேலையும் வாங்கிக் கொடுத்துக் கல்யாணமும் செய்து, இரண்டாம் மகன் கேது படித்து வரும்வரை உதவியாக இருந்த சீதேவி போய் இவ்வளவு காலமாகியும், அந்தக் காணித்துண்டை மீட்க வைரமுத்தரால் முடியவில்லை .

“இனி என்ன செய்யிறது! நீயும் கனகாலமாய் அதிலை இருந்திட்டாய். பிள்ளைக்குட்டிக்காரன் காணிக்கு விலையாக இரண்டாயிரம் தந்திடு உன் பேரிலை காணியை எழுதிறன்.’

இப்படி விதானையாரின் மக்கள் பார்வதி போட்ட நிபந்தனையிலே மனதை ஊறப் போட்டுக் கொண்டு வைரமுத்தர் இருந்தார்.

‘காசு இரண்டாயிரமும் கட்டித் தீராமலுக்கு இந்தத் தோட்டத்திலை மண் வெட்டியைப் போடறதில்லை’ என்று வைரமுத்தர் சபதம் செய்து கொண்டு வாழ்ந்தார்.

***

சுப்பிரமணியத்திற்கு வாய்த்த மனைவி கண்ணம்மா சாந்தமானவள் பொறுப்புணர்ச்சி உடையவள். அந்தக் குடும்பத்திற்கு அவள் கிடைத்தது பேரதிர்ஷ்டந்தான்!

அம்மான் அம்மான்’ என்று வைரமுத்தர் மேலும், ‘தம்பி தம்பி’ என்று கேது மேலும் அவள் உயிரையே வைத்திருந்தாள்.

அம்மானின் ஆசையைப் பூர்த்தி செய்வதுதான் அவளின் ஆசை யெல்லாம். கணவனால் மாதா மாதம் அனுப்பி வைக்கப்பட்ட ரூபா நூறில் அப்படி இப்படியென்று மீதிப்படுத்திப் பக்கத்து வீட்டுப் பாறாத்தையுடன் சீட்டுப் போட்டதில் ஆயிரத்தை நூறு தேறியது. மிகுதிப் பணத்திற்கும் ஏதோ வழி செய்து வைரமுத்தர்கையில் கொடுத்தாள்.

மருமகளின் கையிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டபோது, அவரின் உரோமங்கள் குத்திட்டு உடம்பெல்லாம் குளிரோடியது.

இளையமகன் கேதுவும் ஊரிலில்லை. அண்ணனுடன் பத்துநாட்கள் தங்கிக் கொழும்புப் பட்டணத்தைப் பார்ப்பதற்காக அவன் போய் விட்டான்.

கண்ணம்மாவையும் துணைக்கு அழைத்துக்கொண்டு விதானையார் வீடு சென்று, பார்வதி பரமேஸ்வரர் சகிதமாக நொத்தாரிசு வீட்டை அடைந்ததும்தான் கண்ணம்மாவின் கழுத்தை வைரமுத்தர் கவனித்தார்.

‘புள்ளைதாலிக்கொடி எங்கை?’ தாழ்ந்த குரலில் கேட்டார்! கண்ணம்மாவினால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. ஆனாலும் புத்திசாலித்தனமாகப் பதில் சொல்லி விட்டாள்.

பின் கொக்கிக் கழன்று விட்டதென்று மருமகள் கூறியது பொய் யென்று வைரமுத்தருக்கு நன்றாக தெரிந்துவிட்டது. குழிவிழுந்த கண் களால் மருமகளை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு அவர் நடந்துவிட்டார்.

புதிதாக உறுதி முடியும்போது, ‘மருமகளின் சீதனப் பணத்தால் கொண்ட கொள்விலை’ என்று நொத்தாரிசிடம் எழுதுவிக்கும் போது எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள், கண்ணம்மா வாயடைத்துப் போய் சிலையாக நின்றாள்.

இரவெல்லாம் வைரமுத்தரால் கண்ணுறங்க முடியவில்லை. ‘அந்தப் பூமியின் மார்பைக் கிழித்து, உரத்தைத்தூவி, கேதுவை மாடாயுழைக்க வைத்து…’ இப்படி அவர் எத்தனையோ நினைத்தார். தூக்கம் எப்படி வரும்? மனதின் இன்ப வேதனை அவரைப் படாதபாடு படுத்தியது.

விடிந்தது. “என்னம்மான் முகமெல்லாம் இரைச்சுக்கிடக்கு’ தேநீரை எடுத்து வந்து அவரிடம் நீட்டும்போது கண்ணம்மா இப்படிக் கேட்டாள்.

இறப்பிலே மாட்டப்பட்டிருந்தகண்ணாடியை எடுத்து முகத்தைப் பார்த்தார். கண்களின் கீழ். இமைப்பிறை வளைவு முருத்துகள் உப்பிப் போயிருந்தன, வைரமுத்துச் சுட்டுவிரலால் அந்த வீக்கத்தை உரசி விட்டார்.

இறப்பின் மூலையோடு தலை கீழாகத் தொங்கவிடப் பட்டிருந்த மண்வெட்டியைக் கையிலேடுத்து, அதன் இருபுறமும் பற்றிப் பிடித்திருந்த துருவைக் கால்களால் உரசிவிட்டு இலாவகமாக உயர்த்தி தோள் மீது போட்டுக் கொண்டே இராச நடைபோட்டுத் தோட்டத்து நிலத்தில் காலடி எடுத்து வைத்தார்.

கால்கள் குளிர்ந்தன. அந்தக் கிழத்தைப் பார்த்துக் கண்ணம்மா பெருமையால் பொருமினாள்.

வெயில் நெருப்பாய் எரிந்தது. இடையிடையே மழையும் தூறியது. தூற்றலில் நனைந்து, வெயிலில்காய்ந்து கொண்டே வைரமுத்தர் இயந்திரமாக வேலை செய்தார். கண்ணம்மா எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்டால் தானே! பூமித்தாய் எவ்வளவு இதமாக இருந்தாள்!

நல்ல நாள், ஏதாவது இன்று நட்டுவிட வேண்டுமென்று வைரமுத்தரின் மனது கூறியது. அடுத்த வீட்டுக்குச் சென்றவர், ஒருபிடி தக்காளிக் கன்றுகளுடன் வந்து சேர்ந்தார்.

வீட்டோடு மருவிய தோட்டத்து வெளியிலேயே சிறிய நீள் பாத்தி அமைத்து, மாட்டுக் கட்டையின் எருக் கும்பியில் ஒரு கடகம் எடுத்து வந்து பரவிக் கொத்தி, பத்துத் தக்காளிக் கன்றுகளை நிரையாகநட்டு, வரம்பு கட்டி, சுள்ளிகளை எடுத்துச் சிறிய வேலியும் அமைத்துவிட்டு,

வைரமுத்தர் கூனல் முதுகை நிமிர்த்தி உளைவெடுத்தார்.

‘அம்மான், தம்பிக்கு வேலை கிடைத்திட்டதாம், பியோன் வேலை தானாம்’ என்று கூறிக்கொண்டே கண்ணம்மா ஓடிவந்தாள்.

வைரமுத்தர் தலையை நிமிர்த்தியபடி அப்படியே நின்றார். ‘அம்மான், அவர் தந்தி குடுத்திருக்கிறாரம்மான், தம்பிக்குவேலை கிடைத்திட்டுதாம் அம்மான்.’

தந்தியை நீட்டியபடி கண்ணம்மா மறுபடியும் கூறினாள். வைரமுத்தரின் பஞ்சடைந்த கண்கள் கண்ணம்மாவுக்கு நேரே குத்திநின்றன.

அந்தப் பார்வை! இமை வெட்டாத அந்தப் பார்வை! வைரமுத்தரின் கண்களிலிருந்து பெருக்கெடுத்து வந்த கண்ணீர் அந்தத் தக்காளிச் செடிகளில் விழுந்து சிதறியது.

ஏக்கத்தின் சாயைப் படர்ந்த அந்த முகத்தை உற்றுப் பார்த்தபடி கண்ணம்மா நின்றாள்.

இரவு வைரமுத்தருக்கு ஜுரம் அடித்தது. அவர் ஏதேதோ பிதற்றித் தள்ளினார்.

கண்ணம்மா கண் விழித்திருந்தாள். அன்று பிடித்த ஜுரம் இன்று வரையிலே அந்த நிலையில்தான் இருக்கிறது.

மூன்று மாதங்கள்! இன்றுவரையில் கண்ணம்மா கண் விழித்துக் காத்திருக்கிறாள். இத்தனை நாட்களும் அம்பலவாணரின் மருந்தைக் குடித்து அவருக்கு அலுத்துவிட்டது.

கண்ணம்மாவின் கடிதம் கிடைத்ததும், சுப்பிரமணியமும், கேதுவும் ஓடோடி வந்து சேர்ந்துவிட்டார்கள்.

பிள்ளைகளைக் கண்டதும் வைரமுத்தர் பார்த்த பார்வை – அந்தப் பார்வையின் ஏக்கம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவருக்கு மயக்கம் வந்துவிட்டது.

அவசர அவசரமாக அம்பலவாணர் அழைத்து வரப்பட்டார். நாடியைப் பரிசோதித்த அம்பலவாணரின் முகத்தில் களை குன்றிப் போய்விட்டது.

‘தம்பி! விதியை வெல்ல யாராலை முடியும்? நாடி விழுந்து கொண்டு வருகுது. இன்று இரவு பத்து மணிக்குள்…’

அம்பலவாணர் இப்படிக் கூறிக் கைவிரித்துவிட்டார். வைத்திய விடுதித் தலைமை டாக்டர் பாலசிங்கம் அழைத்து வரப்பட்டார்.

அம்பலவாணர் கூறியதற்கும் அவர் கூறியதற்கும் வேறுபாடு இருக்கவில்லை .

கண்ணம்மா கோவென்று கத்தினாள்.

வைரமுத்தர் முன் விறாந்தையில் கிடத்தப்பட்டார். உறவினர்கள் எல்லோரும் சூழ நின்றனர். அவர்கள் எதற்காகவோ காத்திருந்தனர்.

கருக்கல் வேளை, அடிவானத்தில் செங்குருதித் தடவிக் கிடந்தது. அது வைரமுத்தரின் முகத்தில் பட்டுப் பிரதிபலித்திருக்கவேண்டும். அவர் முகம் சிவந்து கிடந்தது.

உடம்பை இலேசாக ஆட்டி அசைத்துக்கொண்டே வைரமுத்தர் கண் திறந்தார். சூழநின்ற உறவினர்களைப் பார்த்து என்ன நினைத்துக் கொண்டாரோ! கைகளைக் காட்டி அவர்களை விலகி நிற்கும்படி சைகை செய்தார்.

கண்ணம்மா முன்னே வந்து, எல்லோரையும் வழி விலக்கி விட்டாள்.

தோட்டத்து வெளி அவர் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது. நீண்டு வளர்ந்த தக்காளிச் செடிகளில் தொங்கிக் கொண்டிருந்த தக்காளிப் பழங்கள் காற்றில் அசைந்தாடின.

விரல்களை அசைத்துக் கண்ணம்மாவை அழைத்த வைரமுத்தர், அவள் காதில் ஏதோ சொன்னார்.

பொருமி வந்த விம்மலை மென்று விழுங்கியவாறே. அந்தத் தக்காளிப் பழங்களில் இரண்டைப் பறித்து வந்து மாமனின் கரத்தில் வைத்தாள் கண்ணம்மா.

அவசர அவசரமாக அந்தப் பழங்களை எடுத்துக் கடித்து மென்று விழுங்கினார் வைரமுத்தர்.

இருட்டிக்கொண்டு வந்தது. உறவினர்கள் எதற்கோ காத்திருந்தார்கள். விடிந்தது. உறவினர்கள் தோற்றுப் போனார்கள். மறுபடியும் இருட்டியது. காலை, மாலை தவறாமல் இரண்டிரண்டுப் பழங்களாகப் பறித்து வந்து மாமனாரின் கையில் வைத்து வந்தாள் கண்ணம்மா.

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *