மனதில் ஒரு விம்மிதம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2023
பார்வையிட்டோர்: 2,420 
 

உண்மைகளை உள்ளபடி உரிய நேரத்தில் விளக்கிச் சொல்லாத காரணத்தினால்தான் அநியாயக்காரர்கள் அரியாசனத்தில் ஒட்டிக் கொண்டிருக்க முடிகிறது. –

பக்தன் சொல்வதைக் கேட்கும் சாமிகளும்.. சாமிகளுக்கு கட்டளையிடும் பக்தர்களும்!…

ஓம் விக்கினேஸ்வராய நம…

ஓம் சரவணபவ நம…

ஓம் நாராயணாய நம…

ஓம் சரஸ்வதிதேவி நம…

ஓம் சிவாய நம…

கையில் கற்பூரத்தட்டுடன் ஒவ்வொரு மந்திரத்தையும் ஒவ்வொரு தெய்வப் படத்தின் முன்பாகவும் சொல்லிக் கொண்டார் அருணாசலம்.

பக்தியும், பரவசமும் அவர் உள்ளத்தில் கிளர்ந்தன. உடம்பிலும்தான்.

ஐரோப்பா கண்டத்திலிருந்து அமெரிக்காகண்டத்திற்குள் சுகமாகச் சென்று சேர வேண்டும்.அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளைக் கவனித்தாகிவிட்டது.

சிறிது காலம் ஐரோப்பாவில் பிறிதொரு நாட்டில் தங்க வேண்டும். அவ்வளவுதான்.

“ராகு காலம் தொடங்கப் போகுது. அதற்கு முன் புறப்பட வேண்டும்.”

மனைவி மனோஹரியின் குரல் இதயத்தை முட்டி மோதுகின்றது.

நாள் நட்சத்திரம் சகுனம் சுப வேளை அனைத்தும் அவளுள் அடக்கம் என்பது அருணாசலத்துக்கு புரியும்.

“இஞ்சாரப்பா.. இந்தச் சுவாமிப் படங்களை என்ன செய்வது? இங்கேயே விட்டு விட்டுப் போற தெண்டால்.. எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை”

“சும்மா விசர்க் கதை கதையாதையும். நாங்கள் போறதே திடுமுட்டாகத்தான். போய் சேருவமோ எண்டும் தெரியாது. அதுக்கை உதுகளையும் எங்கை கொண்டு போறது. கடவுள் எப்பவும் எம்முடன்தான் இருப்பார். எமக்கு நல்ல வழி காட்டுவார்.”

பேசி முடித்த அருணாசலம் வள்ளலார் அருளிய அருட் பெருஞ் ஜோதி அகவலை முணுமுணுக்க தொடங்கினார்.

எச் சோதனைகளும் இயற்றா தெனக்கே… அச்சோ ஏற்றருள் அருட் பெரும் ஜோதி….

வலது கை தன்னிச்சையாகவே ஷேட் பொக்கற்றை தடவிப் பாரத்தது.

அதற்குள் விபூதிச் சரை பவுத்திரமாகச் சிம்மாசனமிட்டிருந்தது.

பல வருடங்களுக்கு முன்பு இந்த நாட்டுக்கு வருவதற்காக மிகவும் சிரமப்பட்ட பொழுது தகப்பன் பக்தியுடன் அச்சரையைக் கொடுத்திருந்தார்.

எப்ப கஷ்டம் வந்தாலும் சிவாய நம எனச் சிந்தித்திரு. மந்திரமாவது நீறு என்பதை ஓது. அவற்றை மறவாதே என்பதுதான் அன்று தகப்பன் சொல்லிக் கொடுத்த மந்திரம்.

மனதில் ஏதோ ஒரு விம்மிதம்.

போகிற வழிக்குத் துணையாக சிவபெருமான் கூடவே வருவார் என்றதில் ஏதோ ஒரு தென்பு.

வீட்டைப் பூட்டிய பின் திறப்பை என்வலப்பினுள் வைத்துக் கவனமாக ஒட்டினார்.

அடுத்த வீதியில் உள்ள நெருங்கிய நண்பன் சங்கரனிடம் சேர்ப்பிக்க வேண்டும். இந்த வீட்டை விலைக்கு வாங்கும் உத்தேசமும் சங்கரனுக்கிருந்தது.

தற்போது போகும் நாட்டிலிருந்து, போகப்போகும் நாட்டிற்கு செல்லும் ஏற்பாடுகளை தனது மருமகன் யோகன் கச்சிதமாகச் செய்து தருவான் என்ற நம்பிக்கை ஊட்டியவர் சங்கரன்தான்.

அங்கு அதிக அளவில் சைவ ஆலயங்கள். இன சனங்கள். மொழிப் பிரச்சினை இல்லை.

சரி என்று சொல்லிவிட்டேன்.

எப்படித்தான் இங்கு அத்தனை வசதிகளையும் வைத்துக் கொண்டு செல்வதற்கான தைரியம் வந்ததோ!

உண்மையில் இது… போக விருப்பமில்லை என நான் தவிர்க்கப் பார்த்து மனம் மாறியதில் மேற்கொள்ளும் ஓர் அசட்டுப் பயணம்.

ஐரோப்பிய ஒன்றியம் தந்த பல சலுகைகளுள் ஒன்று அதன் அங்கத்துவ நாடுகளுக்கு இலகுவாகச் சென்று திரும்ப வழி வகுத்தது.

அலைய விடாத அரசாங்கங்கள் – கண்களுக்குள் தென்றலடித்தன.

சிவசிவா! சிவசிவா! சிவசிவா! புகையிரதத்தின் புறச்சத்தம் எதுவும் அவருக்குக் கேட்கவேயில்லை.

நாம் எதை நினைக்கின்றோமோ அதுவே எம்முள் தொனிக்கும் எனச் சிறு வயதில் படித்ததை நிருபிப்பது போல சிவ நாமம் தாள லயத்துடன் மனசெங்கும் எதிரொலித்தது.

இடைக்கிடை அந்த வீபூதிச் சரையையும் வாஞ்சையுடன் கை தடவிக் கொண்டது.

தான் கடல் கடக்க வேண்டும் என்பதற்காக தகப்பன் கால் நடையாக ஐந்து ஈஸ்வராலயங்களுக்கும் சென்று கடும் விரதம் அனுஷ்டித்துப் பெற்று வந்த அருட் பிரசாதம் அல்லவா அது!

நகுலேஸ்வரம் – கோணேஸ்வரம் – கேதீஸ்வரம் – முன்னேஸ்வரம் – தொண்டீஸ்வரம்.

கீரிமலை – திருக்கோணமலை – மன்னார் – சிலாபம் – காலி.

காலியில் அந்தப் புனிதபூமியைத் தொட்டுத் தியானத்தால் மட்டும் வழிபட்டிருப்பாரோ?

ஆ! எண்ணத்துக்கும் வியர்க்குமா? வியர்க்கின்றதே!

தில்லையம்பல நடராஜா! செழுமை நாதனே பரமேசா! அல்லல் தீர்தாண்ட வா!

அருணாசலத்தின் நினைவுகள் பெற்றோரைச் சுற்றிப் படர்ந்தன.

“பல நாட்கள் பிள்ளையில்லாமல் இருந்து … வைக்காத நேர்த்தி எல்லாம் வைத்துப் பெற்ற பிள்ளை”

அருணாசலத்தைக் காட்டித் தாயார் மற்றவர்களுக்குப் பெருமையுடன் கூறுவது இப்பவும் காதுக்குள் கேட்கின்றது.

தீட்சை கேட்டது முதல் காவடி தூக்கியது வரை மனதில் விரிகின்றது.

பக்தன் சொல்வதைக் கேட்கும் சாமிகளும்.. சாமிகளுக்கு கட்டளையிடும் பக்தர்களும்!…

சைவ சமயத்தில்த்தான் எத்தனை ஆழந்த தத்துவங்கள். அர்த்தங்கள். உயர் நம்பிக்கைகள்.

மெய் ஞானம் காணவென எத்தனையோ வெள்ளையர் கூட சைவத்தை தழுவி உள்ளனர்.

மனைவியின் முகத்தைப் பார்க்கின்றார்.

ஆழந்து தூங்கிவிட்டாள்.

முகத்தின் அழகையும் மீறி ஜொலிக்கின்றது குங்குமம்.

எங்கெல்லாமோ அலை பாய்ந்த சிந்தனை சாஸ்திரத்துக்குத் தாவுகின்றது.

ஓ! இப்ப வியாழனும் சனியும் நல்ல இடத்தில் நிற்கின்றார்கள்.எனவே பயணத்தில் வில்லங்கம் வராது.

கையுடன் எடுத்து வந்த அறிஞர் அண்ணாத்துரையின் புத்தகம் ஒன்றில் பார்வை சென்றது.

  • கிளறாத சோறு வேகாது! சீவாத தலை படியாது! துவைக்காத துணி வெளுக்காது! இவற்றைப் போலத்தான் விளக்காத உண்மை வீணாகிப் போகும். உண்மைகளை உள்ளபடி உரிய நேரத்தில் விளக்கிச் சொல்லாத காரணத்தினால்தான் அநியாயக்காரர்கள் அரியாசனத்தில் ஒட்டிக் கொண்டிருக்க முடிகிறது. –

எத்தனையோ தடவைகள் வாசித்த வரிகள்.ஆனாலும் இம் முறை மனம் லயிக்கவில்லை.மூடி வைத்தார்.

இரு பக்கங்களும் காடுகளும், கட்டிடங்களும், இருட்டும், வெளிச்சமும் மாறி மாறி இன்னமும் மனதுள் ஓடிக் கொண்டிருக்க – புகையிரதம் பெரு மூச்சுடன் நின்றது.

சென்றடைய வேண்டிய நகரம் – விரைவாகவே அருகே வந்துவிட்டதோ!

“ஜேசு நேசிக்கின்றார் அங்கிள்” என்று கூறி கை குலுக்கி வரவேற்கின்றான் யோகன்.

“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்” – குலுக்கிய கைகளை விடுவித்துக் கொண்டே அருணாசலம்.

“பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பரம பிதா உங்களை இரட்சிப்பாராக” – இது யோகன்.

“தேசனடி போற்றி! சிவன் சேவடி போற்றி!” அருணாசலத்தின் பதிலிது.

யோகன் பிறப்பால் சைவன். உற்ற நண்பன் சங்கரனின் சொந்த மருமகன்.

அவனா? அவன்தான் இவ்விதம் வரவேற்கின்றானா?

அருணாசலத்தால் நம்ப முடியவில்லை.

ஏன்? ஏன்? ஏன்? அவன் எப்படி ஜேசு விசுவாசியாக மாறினான்? அவனுள் குடி கொண்டது கெட்டித்தனமா அல்லது நீசத்தனமா? மனதுள் கேள்விகள் விசுவரூபம் எடுத்தன.

சிறிது கணம் மனம் போராடினாலும் அதற்கான விடையை அனுமானிக்க முடியா நிலையில் தன்னை சுதாகரித்துக் கொள்கின்றார் அருணாசலம்.

“சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்.. அவனருளாலே அவன் தாள் வணங்கி” விட்ட இடத்திலிருந்து அருணாசலம்.

“கேளுங்கள் தரப்படும்… தட்டுங்கள் திறக்கப்படும்.” – விட்டுக் கொடுக்காமல் யோகன்.

“இது..இது..இது.. எப்படி யோகன்?… எப்படி உன்னால் முடிந்தது!” – பொறுமை இழந்த அருணாசலத்தின் வியப்புடனான வினா இது.

“எனது நண்பன் ஒருவன் ஊழியம் புரிவது திருச்சபை ஒன்றில். முள்முடி திருச்சபை என்பது அதன் பெயர். என்ன..பெயரே வித்தியாசமானதாக இருக்கு என்று பார்க்கின்றீர்களா? எனக்கும் அப்படித்தான் பட்டது. கிட்டடியிலை என்னையும் ஒரு நாள் அங்கு அழைத்துச்

சென்றான். திருச்சபையில் உருவ வழிபாடு இருக்கவில்லை. கண்களை மூடித் திறந்தால் கந்தனும் கண்ணனும் காட்சி தந்தனர். திருச்சபைக்கு என்னை அறிமுகப்படுத்தி வைக்க போதகரின் அறிமுகம் எனக்குத் கிட்டியது. அதன் போதகர் சொலமன்.”

யோகன் – சொலமன் நட்பு விரைவாக மலர்ந்தது என்பதை விட சிறிய இடைவெளியைக் கூட விடாமல் சொலமன் ஒட்டிக் கொண்டதே உண்மை.

அபிப்பிராயம் எதுவும் கேட்கப்படாமலே யோகனிடம் முதல் நாள் பைபிளும் செபமாலையும் கொடுக்கப்பட்டன.

அவற்றை நிராகரிப்பது அநாகரிகம் எனக் கருதிய அவனிடம் மெழுகுவர்த்திகள் சில அடுத்த நாள் கையளிக்கப்பட்டன.

ஞானஸ்தானம் பெற்ற நாளன்று ஆலயத்திற்கான வாராந்தர பிரசங்கமொன்றை யோகன் மேற் கொள்ள நேர்ந்தது.

அதற்காக பைபிளையும் பல தடவை புரட்டியிருந்தான்.

யாரும் தமக்குத் தெரியாததை பேசுவார்களா? என்ன?

அதனால் சைவ சமயத்தில் பெற்ற அறிவே யோகன் பிரசங்கிக்க உதவியது.

சைவ சமய தெய்வங்களின் பெயர்களை உச்சரிக்க வேண்டிய இடங்களில் மத்தேயூ – தோமஸ் எனக் குறிப்பிட்டு ஜெபித்தான்.

எங்கே குரலை உயர்த்திப் பேசினால் நல்ல பெயர் கிடைக்கும் எப்படி விரல் அசைத்தால் தன் இமேஜ்

இன்னும் வலுவடையும் என்பதையும் சாமர்த்தியமாக செயற்படுத்தினான்.

அப் பிரசங்கம் யோகனை தாமதமின்றி அருட்திரு சகோதரர் யோகனராகப் பிரகடனப்படுத்தியது.

“போதகர் சொலமன். பாவங்களில் இருந்து மீட்டு பாதை காட்ட வல்லவர். பேசாதவர்களை பேச வைப்பார். பார்காதவர்களை காண வைப்பார். முடவர்களை நடக்க வைக்கவும் அவரால் முடியும். மூடர்களை அறிய வைக்கவும் அவரால் முடியும். அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடக்கும் இலகுவான வழியும் அவருக்குத் தெரியும்!”

சொல்லிக் கொண்டே போன யோகன் சற்று அழுத்தமாகவே அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடக்கும் இலகுவான வழியில் முத்தாய்பு வைத்தான்

மனது மௌனித்தது.

ஒரு நேர்மையாளனை விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு இந்த உலகம் வசதி படைத்தது அல்ல.

இதையே கொஞ்சம் மாற்றியும் சொல்லலாம்.

ஒரு பேராசைக்காரனைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு இந்த உலகம் பணம் படைத்ததும் அல்ல!

அவை வெளி வந்தால் உளறி கொட்டிடும் அபாயம் தோன்றிவிடுமோ?

அருணாசலத்தின் கை ரகஸியமாக வீபூதிச் சரையைத் தடவி மிண்டது.

“ஜேசுவின் கிருபையால் நான் விரைவில் அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடக்கும் வழி பிறக்கும். அதற்குள் உங்களையும் போதகருக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றேன். அல்லேலூயா என்ற ஒற்றைச் சொல் உங்கள் விசுவாசத்தையும் உங்கள் பரிசுத்தத்தையும் உங்கள் ரட்சிப்பையும் புலப்படுத்தும். ஞானஸ்தானம் உங்களுக்கு இலகுவாகும்.”

கண்ணீரால் கரைக்க முடியாத பக்தி ஆழ்மனதில் நிலை கொண்டிருந்தது.

குங்குமமும், வீபூதியும் சொலமானின் நம்பிக்கைக்காக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மேற் கொள்ள வேண்டும் எனக் கோரப்பட்ட நாளில் மனைவி காதுக்குள் கிசுகிசுத்தாள்.

“பார்த்தியே அப்பா! சுவாமி படங்களை விட்டு விட்டு வந்ததற்கு சுவாமி தண்டிச்சுப் போட்டார்.”

அடுத்த நாள். வலுக் கட்டாயத்தின் பேரில் வேறு வழியின்றி போதகர் சொலமனை சந்தித்தார் அருணாசலம்.

வாய் முழுவதும் சிரித்தார் சொலமன்.

எதிர்ப்பை முன் கூட்டியே சமனப்படுத்தி, நட்புப் பாலத்தை அமைக்க முற்படுகிறாரா? அல்லது நீங்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதைச் சொல்லாமல் சொல்ல முனைகிறாரா?

“இங்கே அறிமுகமான நண்பர்கள் பலர் என் வாழ்நாள் வரம்” என்றார் சொலமன்

மனதுக்குள் அழுதார் அருணாசலம்.

நறுக்கென நாலு வார்த்தையாவது கொட்டித் தீர்க்கத் தீர்க்கத்துடன் குமுறியது ஆழ்மனம்.

“உள்ளபடியே இது எவ்வளவு சரியான முடிவு என்பதை அவர்கள் இப்போது உணர்கின்றார்கள்.”

வார்த்தைகளை அர்த்தமற்றவை ஆக்குவதிலும் பார்க்க, – மௌனத்தை அர்த்தமுள்ளதாக்குவது உகந்ததாகப் பட்டது அருணாசலத்துக்கு.

“நீங்கள் கைக் கொள்ளும் சில நெறிகளையும், சில இயல்புகளையும் கைவிட வேண்டும் என நிர்ப்பந்திப்பது ஒன்றும் மடமையல்ல. வர்ணாசிரமமும், நரபலியும், மிருக பலியும், குடுமியும், பஞ்சகச்சமும் எப்படிப் போய் விட்டனவோ அப்படித்தான் இவையும்.”

“தன்னலம் மறந்து, துவேஷம் தணிந்து, பொதுவான மனித குல வளர்ச்சிக்கும், உன்னதம் மிக்க வாழ்க்கைத் தரத்துக்கும், லட்சிய வேகத்துடன் எவன் செயல்படுவானோ அவன்தான் எமக்குத் தேவை.”

“அந்த லட்சியத்துடன் எவன் தன்னை அர்ப்பணித்துக் கொள்கின்றானோ அவன் அளப்பரிய சலுகைகளையும், வாய்ப்புக்களையும், வசதிகளையும் தனதாக்கிக் கொள்வான்.”

பிரசார நெடி சிறிதுமின்றி குட்டிப் பிரசங்கமே செய்து முடித்தார் சொலமன்.

சுற்றி வளைத்து விஷயத்துக்கு வந்தால் முடியாது என்று சொல்ல வாய்ப்பு வரும்.அதனால் கவனத்தை திசைதிருப்ப விடாமல் நேரடியாகவே பேச்சை ஆரம்பித்திருந்தார்.

எல்லாம் மனோ தத்துவம்தான்.

நிமிர்ந்து நோக்காமல் கழுத்தை வெடுக்கென்று ஒரு வெட்டு வெட்டி அவர் சொல்வது தனக்குப் பிடிக்கவில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தினார் மனைவி மனோஹரி.

புரிந்தது சில. புரியாதது சில.

எது புரிந்தது.. எது புரியவில்லை.. அதுவும் புரியவில்லை!

அளவற்ற ஆசை அடிமைத்தனத்தில் கொண்டு போய்விடும். அதிகாரத்துக்கு எத்தனை தூரம் வேண்டுமானாலும் அடிபணிய அது தூண்டும்.

இது போதும் என என்று ஒரு எல்லைக்குள் நிற்கிறோமோ அன்றுதான் நமக்கு பிடித்தபடி வாழ ஆரம்பிப்போம்.

சொலமன் எப்படிப் பேசுவார் என்றாலும்… அதனை எப்படி மறுக்க வேண்டும்… அல்லது எப்படி மடக்க வேண்டும்… என முன் கூட்டியே பிளான் பண்ணி வைத்திருந்தேன்.

“உனது திமிர்.”என்பார்.

“உனது அகம் பாவம்.” என்பேன்.

ஆனால் தற்பொழுது?

உதடு சொல்லத் துடித்தது. உள்ளம் சொல்லாமல் துடித்தது.

என்ன சொல்லலாம்? எப்படி வாதத்தைக் கொண்டு செல்லலாம்? போராடிய மனம் விடுதலை பெற ஏங்கியது.

எனக்கு ஞானஸ்தானத்தில் உடன்பாடில்லை.அதனால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. உப்படியான நிபந்தனைகள்

இருக்கு மெனின் நான் இருந்த இடத்திலேயே இருந்திருப்பேனே.

சொலமனுக்கு நேரடியாக சொல்லும் தைரியம் வரவி்ல்லை என்பதிலும் பார்க்க, வீண் விதண்டா வாதத்தை தவிர்கலாம் எனத் தோன்றியதால் இதனை அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன்.

யோகன் வந்தான். ஏன்..என்னிடம் சொல்லியிருக்கலாமே? சலுகைகள் பெற ஏற்ற சமயம் இது…ஏன் விட்டீர்கள்? என்பதை தவிர சொல்வதற்கு வேறு ஏதுவும் அவனிடம் இருக்கவில்லை.

“எனது இட மாற்றம் எவ்வித தடுமாற்றத்தையும் எனக்குத் தரவில்லை. இலகுவாக இருந்த இடத்திற்கே என்னால் திரும்ப முடியும். உனது மன மாற்றம் எவ்வித ஏமாற்றத்தையாவது உனக்குத் தந்தால் இலகுவாக இருந்த இடத்திற்கே உன்னால் திரும்ப முடியுமா? ”

நான் முறைக்க…அவன் விறைக்க….

“எனது மகிழ்ச்சி எது என்று தேர்வு செய்யும் உரிமை என்னிடம்தான் இருக்கின்றது. எனது சமயம் மீது எனக்குப் பக்தி என்பதை விட காதல் தான் அதிகம். அதனால் உனது விருப்பம் எப்படி எனது மனதை மாற்றும்? நம்பிக்கையை நீக்கும்? எனது காலில் அடிபட்டால் தன்னிச்சையாக ‘சிவனே’ என்றுதானே அலறித் துடிக்கின்றேன். அது மாறுமா? அது போலவே என்னுடைய தனித்துவமான சமய நம்பிக்கையும். எம்முள்ளே என்னுள்ளே வேரூன்றியிருக்கும் எனது பாரம்பரியம், எனது கலாசாரம், எனது நாகரிகம், நான் சந்திர மண்டலத்தில் குடியிருந்தாலும் கூடவே வரும்.”

என்னிடமிருந்து இ்ந்தப் பதிலை யோகன் எதிர் பார்க்கவில்லை.

தனது எதிர்காலம் இருளடைந்தது போல் அவன் முகம் இருண்டது.

உண்மையின் வெக்கை அவனைத் தகித்ததோ?

“இனி நான் எப்படி சொலமனின் முகத்தில் விழிப்பது? ” என்றான் யோகன்.

“எனது வாழ்வில் இனி அவரைச் சந்திக்கவே கூடாது ”என்றேன் நான்.

“மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் அதற்கு நாம் பொறுப்பல்ல.ஆனால் அவர்கள் நம்மைப் பற்றி எப்படி நினைக்க வேண்டும் என்பதற்கு முழுப் பொறுப்பும் நாமே தான். ” இதுவும் நான் தான்.

வேதனையில் உழன்றான்.

அவனுக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை.

எனக்கும் வெளியே செல்ல வேண்டியிருந்தது.

இருவருமே புறப்பட்டோம்.

எதிரே திடுதிப்பென விஸ்வரூபமாய்… சொலமன்!

சிறிது நேரம் இருவரும் ஆளை ஆள் பார்த்தபடி மௌன மொழி பேசினோம்.

“உங்கள் கண்ணியம் எனக்கு மிகவும் பிடித்தது” என்றார்.

“உங்கள் திண்ணியம் எனக்கும் மிகவும் பிடித்தது” என்றேன்.

“உங்கள் மின்னஞ்சல் பார்த்தேன். உங்கள் ஈடுபாடு தெரிந்தது. பாகுபாடு தெரியவில்லை. மதபேதம் பேசி முரண்படாத, எதனையும் சாடாத, எவற்றையும் தாக்காத, எவரையும் புண் படுத்தாத பேரறிவும் கூருணர்வும் மிக்கவராக உங்கள் பதிலில் உங்களை நான் கண்டேன். வலிந்திழுத்து மல்லுக்கட்டவே பலரும் விழையும் நிலையில் உங்கள் தன்னிலை விளக்கம் சாந்தி சமாதானத்துக்கான ஒரு சின்னமாகவே நான் கருதுகின்றேன். ஒருவன் தனித்து இருக்கும் பொழுது எதைப்பற்றி யோசிக்கின்றானோ…அதுவே பெரும்பாலும் அவனது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது என்கிறது உளவியல். ஆசைப்படுங்கள்.அவற்றை அடைவதற்கான திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.அடையுங்கள். நன்றி.” என்றார் சொலமன்.

நமக்கு விருப்பமானவர்கள் என்றால் ஒரு விதமாகவும், வெறுப்பானவர்கள் என்றால் இன்னொரு விதமாகவும் மனம் தீர்ப்பு எழுதுமோ?

சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை.

சோதியே சுடரே சூழொளி விளக்கே ….

ஒளிச் சுடருக்குத்தான் எத்தனை சொற்கள் … அடை மொழிகள் .

மனதில் ஏதோ ஒரு விம்மிதம்.

விம்மிதம் என்றால் உவகை. விம்மிதம் என்றால் அச்சம். விம்மிதம் என்றால் வியப்பு.

மூன்றும் எப்படி என்னுள் ஏக காலத்தில்… அதுவும்..ஏற்புடையதாக…

எமது நட்பு இறுக்கமடைந்தது.

எனது செல்போனுக்கு நினைத்த மாத்திரத்தில் தொடர்பு கொண்டு பேசக் கூடிவர்களில் இப்போது சொலமனும் ஒருவர்.

காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தினமும் பேசிக் கொள்வோம்.

எந்தச் சமயம் பற்றியும், எந்தச் சமயத்திலும் நாம் பேசிக் கொள்வதில்லை!

நம் வாழ்வில் சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருப்பதே நல்லது!

இருந்தாலும் என்ன?…கடவுளிடம் கேட்பதற்கு உங்களிடமும் இப்பொழுது ஒரு கேள்வி இருக்கலாம்!

– அக்டோபர் 2021, அக்கினிக்குஞ்சு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *