நட்சத்திர பங்களா

2
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2023
பார்வையிட்டோர்: 6,864 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

மூத்த மகள், மருமகனின் மரணம் அம்மாவைப் பலக்க அடித்துவிட்டது.

புருஷனின் இழப்பைப் பிள்ளைகளுக்காய் தாங்கிக் கொண்டாள். அப்போது வயதும் சாதகம்.

உடலும், உள்ளமும் மேலும் தளர்ந்த நிலையில் இத்தனை வெறியான அடியை அம்மாவால் தாங்கமுடியவில்லை.

கவலைதான் உடலை அரித்ததோ… உடம்பு நோயைக் கவலையினால் அலட்சியம் பண்ணினாளோ- ஆறாம் மாசம் அம்மா படுத்த படுக்கையில்.

பிறகு, உடம்பு ஓரளவு தேறினாலும்… முன்பு போலில்லை. பள்ளிக்கூடம் போன் நேரம் தவிர பரணி சமைத்தாள், துவைத்தாள், தைத்தாள்.

குழந்தையை அம்மா பார்த்துக் கொள்ள முடிந்தது. அனு பள்ளிக்குப் போக ஆரம்பித்த பிறகு அம்மாவின் நிலை மேலும் மோசமானது. இருந்த சேமிப்பை முழுக்கக் கரைத்து வைத்தியம் பார்த்தும் பயனில்லை.

தற்சமயம் அம்மா கற்றுத் தந்த கைத்தொழில்தான் துணை.

ஆனால், பெரியம்மா இல்லாவிட்டால் தடுமாற்றம் அதிகமாய் படுத்தியிருக்கும். அவர்களது அன்பு பெரும் பலம். அம்மா மறைந்த முதல் மாதம் இவர்கள் படுக்கை பங்களாவில்தான்.

‘இனி அங்கே எதுக்கம்மா பரணி தனியே இருக்கணும்? எங்கூட இரு…’ என்றார் கருணையுடன்.

இவளுக்கும் மறுபேச்சிற்கான திராணி இல்லை.

சோகம் அவள் சக்தியை எல்லாம் பிரிந்து உதறியிருந்தது. வேளைக்கு வற்புறுத்தி சாப்பிடச் செய்து,

‘எனக்காக காலார நடந்தா சவுகரியம் பரணி- துணைக்கு வர்றியா?’ என்று இவளை வெளியே கிளப்பி, ‘உங்கம்மா சாம்பலாயிட்டதாவா நினைக்கற? தினம் மூப்படைஞ்சு அழியற உடம்பு மட்டுந்தான் சாம்பல் ஆயிடுச்சு. ஆன்மா… அது தன்னைப் படைச்சவர்கிட்ட போயாச்சு. பசி, துக்கம், கண்ணீர் இல்லாத சொர்க்கத்தில் இருப்பா சுப்பு. உம்மனசைத் தேத்த நான் சொல்லலை. இதுதான் உண்மை…’ -இதமாய் பேசினார். ‘இனி அனுவுக்கு நீதானே எல்லாம்?’ என்று அதட்டுவார். அதுவரை சிலையாய் இருந்தவள் இதற்கு மட்டும் தலையசைப்பாள்.

‘ஆம்…மா.’

‘தோ பாரேன், அனு உனக்குன்னு வரைஞ்ச படம். இதுதான் நீயாம். இது தினைக்கும் நீ வாசல்ல போடற கோலமாம்…’

குச்சிக் கை- கால்களுடன் ‘இவள்’ உச்சிமுடி சிலுப்பியபடி நிற்க, பெரும் வட்டங்களின் கிறுக்கலாய் ‘கோலம்’ – இவளைவிடப் பெரியதாய்!

கண்ணீர் புன்னகையுடன் குட்டி அனுவை அணைத்துக் கொண்டாள்.

மெதுவாய் சிரித்தாள்.

பிறகு மெல்ல தேறினாள்.

‘கிளம்பு பரணி, ஐயா மதுரைக்குப் போறாங்க. நாமும் போயிட்டு வரலாம்.’

‘தையல் வேலை இருக்கேம்மா’

‘அதெங்க ஓடிப்போகும்? கால் இருக்கற நாமதான் அங்க இங்க சாடிட்டு வரணும். கிளம்பு. இன்னும் நாலு பண்டல் துணி, பட்டன் வாங்கணுமனியே… அதையும் முடிச்சிடலாம்.’

‘அது… அதுக்குப் போதுமான காசு இன்னும் சேரலம்மா’

‘எங்கிட்ட இருக்குதே. வாறது ஜூன் மாதம், ‘யூனிபார்ம்’ தைக்கிற வேலை தாராளமாய் வரும். அப்ப இந்தக் கடனைத் தீர்த்திடு பிறகு இந்த ‘ரெடிமேடு’ ரவிக்கை தைக்க நேரம் இருக்காதே?’

இப்படி பெரியம்மா தொழிலும் உதவ, சீக்கிரமே சுதாரித்துக் கொண்டாள் பரணி.

வெறும் ரவிக்கைக்கே முப்பது ரூவா கூலி. நீ முதுகிலே, படி க்கட்டு, ஜன்னல், முத்துன்னு நாலு தினுசாய் தைக்கிறே பெண்ணே. தவிர, மூச்சிரைக்க ஓடிப்போய் துணியும், நூலும் வாங்கற அலைச்சல் வேற- குறைஞ்சது ஐம்பதேனும் வாங்கு. வேலை ஜாஸ்தின்னா எழுவது.’

‘இப்போ மொத்தமாய் வந்து வாங்கிக்கறாங்கம்மா. விலையைக் கூட்டினா… சரக்கு வேண்டாம்னு சொல்லிட்டா…?’

‘அவங்க அடிக்கிற லாபத்தில அஞ்சு, பத்து- அதுவும் உனக்குச் சேரவேண்டியதை அவன் ஏன் தரமாட்டான்? தாராளமாத் தரேன்னாச்சு…’

‘எப்போ… எப்படி பெரியம்மா?’

‘ஐயாவை விட்டுப் பேசச் சொன்னேன். சிறு பொண்ணு- உன்னை ஏய்ச்சிடுவாங்க – வியாபாரிங்க தடாலடியாப் பேசுவாங்க. நம்ம ஐயா சொன்னதும், ‘சரிய்யா’ன்னு தலையை உருட்டிட்டாங்க. இனி ‘பில்’லைக் கூட்டியே போடு’

சகாயம் ஐயா, அம்மாவிற்கு ஏற்றவர்.

சாந்தமான சிரிப்பும், அமர்த்தலமான பேச்சுமாக…

பெண்டாட்டியை தலை மேல் வைத்துக் கொண்டாடும் புருஷன்.

‘ரெண்டு பெண்களையும் கட்டிக் கொடுத்தாச்சு. இனி சீராட்டி பாராட்ட இவமட்டுந்தானே எனக்கு’ என்பார்.

இவர்கள் இருவரின் துணை இருக்கும் துணிவில் கையை சற்று எட்டியே போட்டு நீந்தினாள் இவள். மறுபடி ஓரிரு பெண்களை உதவிக்கு நியமித்தாள்.

இரட்டைத் தையலோடு சாயம் போகாத உள்பாவாடைகள், ‘நைட்டி’கள் என்று விஸ்தரித்தது தொழில்.

ஆனால், ஒரு வாரம் இவள் கை ஓய்ந்தாலும்… வியாபாரம் தளர்ந்துவிடும் அபாயம் இருந்தது. நிலையான வருமானமில்லை. இதில் வயிற்றுப்பாட்டைச் சமாளிக்கலாம். ஆனால், அனுவின் படிப்பு- திருமணம்?

அதிர்ச்சிகளை விழுங்கி, வாழ்வைச் சீராக்கி, ‘அவள் எதிர்காலம் என்ன? எப்படி?’ என்று ஆராய்ந்த வேளையில் அடுத்த அடி விழுந்தது.

சகாயம் ஐயா இறந்து போனார்.

பெரியம்மாவைத் தேற்ற வேண்டுமே என்பதைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் போனது.

நான்காம் நாள்- வெளிநாட்டிலிருந்த பெரியம்மாவின் இரு மகள்களும் வந்து சேர்ந்தனர்.

ஓரிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை இருவரும் மாறி மாறி வந்து போவார்கள். மூத்தவள் பமீலா. இளையவள் நிர்மலா.

இருவருக்கும் ஏற்காடு பள்ளியிலும், பிறகு நகர்ப்புற கல்லூரிகளிலும் படிப்பு. விடுமுறைகளில் அவர்களோடு பழகினாலும் வயது – அந்தஸ்து இடைவெளி பரணியை அதிகமாய் ஒட்டவிடவில்லை.

பமீலாக்கா திருமணத்தின்போது பரணிக்கு பத்து வயதிருக்கும். சிறுவயதின் சந்தோஷ நினைவுகளில் அந்த வைபத்திற்குத்தான் முதல் இடம்.

வெள்ளை அடிக்கப்பட்டு, பால் போல பிரகாசித்த நட்சத்திர பங்களா எங்கும் பொடி விளக்குச் சரங்கள்.

வீட்டு முகப்பின் நான்கு வளைவுகளிலும் மின்னி மின்னி கண்சிமிட்டிய வர்ண விளக்குகள்.

பருத்த தூண்களை வளைத்துச் சுற்றியபடி ஜரிகைப் பூக்கள். பரணிக்கும் புதுசு எடுத்திருந்தார்கள்.

‘பரணி, வா. உனக்கும் வர்ணம் போட்டுவிடுறேன்’ என்று மணப் பெண் பமீலா, இவள் குட்டி நகங்களுக்குச் சாயமிட்டாள்.

மூன்றாம் நிமிடம் சாயம் காய்ந்திருக்கும் – ஆனாலும் அன்று முழுக்க தான் நகங்களை ‘ப்பூ’ என்று ஊதியபடி- முட்டையை ஆனந்த அடைகாத்த கோழியாய் திரிந்தது இன்னும் மறக்கவில்லை.

சமையலறையில் சதா ஜமாய்க்கும் வாசனை.

அம்மாவும் அங்கேதான் ஒத்தாசைக்கு நின்றிருந்தாள்.

‘சுப்பு … முதல்ல உம்பிள்ளைகளுக்கு சாப்பாடு போடு. சிறுசுங்க பசி தாங்காது’ பெரியம்மா முதலிலேயே கறாராய் சொல்லிவிட- நேரா நேரத்திற்கு விருந்து.

புதுத் தீப்பெட்டி போல வீடு நிரம்ப மனிதர்கள்.

சந்தோஷ முகத்துடன் உறவுக் கூட்டம்.

அத்தனையிலும் ஒன்றே ஒன்றுதான் நெருடலான நினைவு. – அல்லது ஒருவன்தான் மீசை அரும்பும் பருவத்திலிருந்த பாஸ்கர்.

இவளைச் சதா முறைத்தபடி, இவள் கையின் பதார்த்தங்களைத் தட்டிப் பறித்து தன் வாயிலிட்டுக் கொள்ளும் போக்கிரி. ‘கை வலிக்குது… விடுங்க’ என்று இவள் சிணுங்கும்வரை விடாது அளுத்துவான் அக்குறும்புக்காரன்.

நிர்மலாக்காவின் திருமணமும் தடபுடல்பட்டது என்றாலும், அப்போது பரணிக்கு வயது பதினாறு. பெரியம்மா இவளுக்காக புதுப்பட்டுச் சேலையே எடுத்திருந்தார்.

பாசிப் பச்சையில் காசிப்பட்டு.

அதைக் கட்டிக்கொண்டபோது, கொசுவங்களைச் சீராக்கிய அம்மா திருஷ்டி கழித்தாள்.

‘யப்பா… கொடி சுத்தின பொற்சிலை போலேயிருக்கே’ என்று.

ஆனாலும் அது சங்கடமாய் உணரும் வயது. ஆக, இவள் அடுத்ததாய் பமீலாக்காவின் திருமணத்தின்போது முன்பு போல எங்கும் கையில் பிசுபிசுக்கும் இனிப்புடன் சுற்றித் திரியாமல் அம்மாவுக்கு உதவியாய் ஒதுங்கியே நின்றாள்.

பலரும் பிரியமாய், ‘அடடே, சுப்புவோட சின்னப் பெண்ணைப் பாரேன்… கொடியாய் வளர்ந்துட்டா’ என்று கன்னம் தட்டினர்.

‘ஆளு அஞ்சரை அடின்னா… பின்னல் அஞ்சடி இருக்கும் போல?’ என்ற வாஞ்சையான பாராட்டு.

இப்பொழுதும் பாஸ்கர் அவளை முறைத்தான்!

அவன் பெரியம்மா வீடு வந்திருப்பது தெரிந்தால், இவள் வீட்டைவிட்டே இறங்கமாட்டாள். இம்முறை தவிர்க்க முடியாத சூழ்நிலை.

அவனும் வெகுவாய் வளர்ந்திருந்தான். மீசையும், மாரும் முரட்டுத்தனமாய் தோன்றின.

ஆனாலும், அவனை நிமிர்ந்து நேரே பார்க்கவே முடியாத படிக்கு அவன் விழிகள் இவளை மாம்பழத்து வண்டாய் குடைந்தன.

பம்மிப் பதுங்கினாள்.

“என்ன பரணி… போன தடவை சதா கையிலே பிசுபிசுன்னு லட்டு. ஜாங்கிரியோட அலைஞ்ச; பிடுங்கித் தின்ன லேசாய் இருந்துச்சு. இப்ப நீ சாப்பிடறதேயில்லை? இப்படி மெலிஞ்சிட்டே?”

சீண்டுபவனை ‘நான் செவிடு’ என்ற பாவனையுடன் கடந்து போவாள்.

அச்சமயம் அக்கா மசக்கையில் துவண்டிருக்க – பரணிக்கு கூடுதல் பொறுப்புகள்.

பட்சணம் பொரித்தாள். கல்யாணப் பை மடித்தாள். விருந்தினர்களை கவனித்து உபசரித்தாள்.

வெளிநாட்டிலிருந்து இரண்டு அக்காமார் வர, இவளுக்கு ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் சேரும். நடுநிசி வரை பங்களாவில் பேச்சும், சிரிப்பும் ஓயாது.

ஆனால் அப்பா மரணத்திற்கு இம்முறை மகள்கள் வந்திருக்க, பங்களாவில் மயான அமைதி… அந்தக் கட்டடமே ஓய்ந்து சரிந்த பிரமை.

“பரணி, இனி அம்மா இங்க தனியாய் இருக்க வேணாம். என்னோட பிளாரிடா வந்திரட்டும்”

“ச….சரிக்கா”

“ஆனா, அம்மா உனக்காக யோசிக்கிறாங்க. சிறு பெண்ணை எப்படி தனியே விட்டுட்டுப் போகன்னு..”

“நீ இருக்கற வீடு உனக்கேதான் பரணி. நீ தொடர்ந்து தங்கிக்கலாம். தவிர, தோட்டக்கார தாத்தாவுக்கு மாசா மாசம் சம்பளம் அனுப்பிடுவோம். துணைக்கு அவரும் இருப்பார்.”

“ம்… ம்…”

“அம்மாவுக்கு மாற்றம் தேவை. ஆறு மாசம் அக்காவோட, பிறகு ஆறு மாசம் எங்கூட லண்டன்ல தங்கட்டும். அப்புறம் அவங்க மனசுக்கு எங்கே பிடிக்குதோ அங்கே இருக்கட்டும். இந்தியாவுக்கும் அப்பப்போ வரட்டும்… ஆனா, எங்களோடு இப்ப கிளம்பறது நல்லது…’

“ஆகட்டுங்க்கா.”

முழு மனதாய் சொல்ல முயன்றாள் – ஆனால், சம்மதம் தர சங்கடமாக இருந்தது – எதிர்கால பயம் உச்சியைப் பிடித்து ஆட்டிற்று.

“நீ அம்மாட்ட வந்து சொல்லு பரணி”

எல்லோருமாய் சேர்ந்து பேசி – பெரியம்மாவை விமானம் ஏறச் செய்தாயிற்று. ஆனால், இந்தப் பதினைந்து நாட்களாய் வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது – அலை மறந்த சமுத்திரம் போல…

சமையல்கார ராணியும் இல்லாததில் பின்கட்டிலும் கடும் அமைதி. தோட்டக்கார தாத்தா மட்டும் அங்குமிங்குமாய் உலாவித் திரிவார்.

முன்பு இப்படி மதுரைக்குப் போய் அலைந்து, வாடித் திரும்பும் வேளைகளில் முதலில் பரணிதான் பங்களாவினுள் நுழைவாள்.

‘வாம்மா பரணி – முதல் இந்த மோரைக் குடி… ராணி ரெண்டு தோசை வார்த்தெடு’ என்ற பாசமான அரவணைப்பு கிடைக்கும்.

இப்போது அரவணைக்க யாருமில்லை.


வீட்டின் வெளி ‘கேட்’ திறந்து கிடந்தது.

ஏன்…?

காம்பவுண்டினுள் நுழைந்தவளுக்கு மேலும் ஆச்சரியம். பறந்து பாய்ந்து வந்த பெரிய கரும் பச்சை கார், பங்களாவின் முன் பவிசாய் நின்றது.

வெகு தொலைவு ஓடி வந்தது போல அதன் கீழ்ப்புறமெல்லாம் அடர்ந்த புழுதி.

இதில் வந்தது யார்?

வீடு பூட்டியிருப்பதைப் பார்த்த பிறகும் வந்தவர்கள் ஏன் போகவில்லை?

பங்களாவின் அகலப் படிகளை ஏறிப் பார்த்தவளுக்கு மேலும் திகைப்பு.

வீட்டின் பருத்த இரு தேக்குக் கதவுகளும் விரியத் திறந்திருந்தன.

– தொடரும்…

– ராணிமுத்து மார்ச் 1, 2009

Print Friendly, PDF & Email

2 thoughts on “நட்சத்திர பங்களா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *