கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2023
பார்வையிட்டோர்: 2,521 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘டெர்ரிகல்’ என்றாள் அவர் மகள். அந்தக் கடற்கரையின் பெயர். சிட்னியில்.

‘இயற்கை அளிக்கும் செல்வத்தை நாசமாக்கவும் முடியும், நாம் சென்னையில் ‘மெரினா’வைச் செய்திருப்பது போல்’ என்று அவர் தமக்குள் சொல்லிக் கொண்டார்.

இங்கு அழகுக்கு அழகு சேர்த்திருந்தார்கள் வெள்ளைக்காரர்கள். ஒவ்வொரு கணத்தையும் வாழத் துடிக்கும் ஆர்வத்தில், இயற்கையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மனிதனின் கைவண்ணத்தில் – இயற்கையின் இயல்பான சீற்றம் தணிந்து, மனத்துக்கு இதம் தருகிறது.

அவர்சுற்றுமுற்றும் பார்த்தார்.

நேற்று சூரியனுக்கு ஓய்வு. சாம்பல் பூசிய நாளாய் இருந்தது. இன்று, நேற்று பெற்ற ஓய்வில் களைப்பு நீங்கி புதுப்பொலிவுடன் வானத்தில் பவனி வந்தான் சூரியன். அவனை வாரி உடம்பில் பூசிக் கொள்ள மணலில் மல்லாந்து கிடந்தன பல வெள்ளை உடல்கள். இளைஞர்கள், வயதானவர்கள், பால் வேறுபாடின்றி, கண்களில் மட்டும் கறுப்புக் கண்ணாடி திரையிட்டு உடம்பின் மற்றைய பகுதிகளை சூரியனின் அரவணைப்புக்குச் சமர்ப்பித்திருந்தனர்.

அவரால் இப்படிப் படுத்துக் கொள்ள முடியுமா? ‘நமக்குத்தான் எத்தனை மனத்தடைகள்?’ என்று நினைத்தார் அவர். இந்த ‘மனத்தடைகளு’க்குத்தாம் கலாசாரம் என்ற பெயரா?

‘இவர்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கையில்லை; ஒரே பிறவி, அநுபவிக்க வேண்டுமென்ற அவசரம். நமக்கு ஒரு பிறவிதான் என்ற ‘சீலிங்’ இல்லை… இப்பிறவியில் நம்மை வருத்திக் கொண்டால், அடுத்த பிறவி சொர்க்கம் என்ற நம்பிக்கை… விரும்பியதைச் செய்யக் கூடாது என்று உணர்ச்சிகளுக்குத் தடையிட்டால் அது ‘வருத்துவதை ‘த் தவிர வேறென்ன? அடுத்த பிறவியிலும் இதைத்தான் செய்வோம். சொர்க்கம் என்பது தொடுவானம்… அல்லது தொட முடியாத வானம்…


அப்பொழுது அந்தக் குன்று அவர் கண்களில் பட்டது. அதன் மீது ஏறி, பலர் கடற்காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அவருக்கும் அங்கு போக வேண்டும் போலிருந்தது. அவர், தம் மகளும் மருமகனும் எங்கிருக்கிறார்கள் என்றறிய திரும்பிப் பார்த்தார்.

கடல் பறவைகளுடன் கொஞ்சிக் கொண்டிருந்தனர். அவர் தம் மகளைச் சற்று உரத்த குரலில் கூப்பிட்டார். திரும்பிப் பார்த்த அவள் முகத்தில் சிறிது எதிர்ப்பு தெரிந்தது. உரக்கக் கூப்பிட்டிருக்கக்கூடாது. மல்லாந்து கிடந்தவர்களின் நிச்சலனமான அமைதி நீரோட்டத்தில் கல்லெறிவது போல்.

பக்கத்திலிருந்த ஒரு வயோதிகத் தம்பதிகள், கண்ணாடியை விலக்கி அவரைப் பார்த்ததினின்றும், இது அவருக்குத் தெரிந்தது.

‘ஐ ஆம் ஸாரி” என்றார் அவர், அவர்களிடம். கண்ணாடி யதாஸ்தானத்துக்குச் சென்றது.

அவர் தம் கைக் குறிப்பு மூலம் குன்றின் மீது ஏறப் போவதாக மகளுக்குத் தெரிவித்தார். குன்றையும், அவரையும் மாறி மாறிப் பார்த்த அவள் தோள்களைக் குலுக்கிக் கொண்டாள். அவரால் ஏற முடியுமா என்ற அவநம்பிக்கை அவளுக்கிருக்கலாமென்று அவருக்கு தோன்றிற்று. இந்தச் சாவலை ஏற்க வேண்டுமென்ற உந்துதல் அவருக்கேற்பட்டது.

அவர் வாழ்க்கையில் எதையும் சவாலாக ஏற்று, செய்து முடித்த கதாநாயகரல்லர். சாலை விதிகளை என்றும் மீறாத, நேர்வழிக் குடிமகன், ஆசாரநெறிகள் தவறாத அப்பாவும், அப்பாவால் தவறு செய்ய முடியாது என்று தீவிரமாக நம்பிய அம்மாவும் அவரை வளர்த்த விதத்தில், அவருடைய ‘அடி’மனம் இறுகப் பூட்டப் பட்டிருந்தது.


அடிமனம் என்று ஒன்றிருக்கிறதென்று, அவருக்கு சம்பத்தோடு பழகிய போதுதான் தெரிந்தது. சம்பத், கும்பகோணத்தில், அவருடைய நெருங்கிய பள்ளி, கல்லூரி நண்பன். குணத்தில் இவருக்கு நேர்மாறானவன். இருவரும் எப்படி நெருங்கிய நண்பர்களாக இருக்க முடிந்தது என்பது, பலருக்கு மட்டுமின்றி, அவர்களுக்கே பல சமயங்களில் ஆச்சர்யமாகவிருந்தது.

சம்பத் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் தாத்தா ஆதீனங்கள், மடங்கள்; ஜமீன்கள் போன்ற பெரிய பெரிய இடங்களுக்கு ஆஸ்தான வக்கீல். கொள்ளை வருமானம். அந்தக் காலத்தில், தஞ்சாவூர் ஜில்லாவில் முதன் முதல் ‘பாண்டியாக்’ கார் வாங்கியது அவன் தாத்தாதான் என்று சொல்வார்கள்.

சம்பத்தின் அப்பாவும் வக்கீல். தாத்தாவின் ஒரே வாரிசு. கட்சிக்காரர்களும், அவன் தாத்தா தொழிலிலிருந்து ஓய்வு அடைந்ததும், கட்சி மாறவில்லை. பரம்பரை வருமானத்துக்குப் பழுது இல்லாமலிருந்தது.

சம்பத்தின் தாத்தா கும்பகோணம் ‘எக்ஸ் டென்ஷனில்’ ஒரு பெரிய பங்களாவில் தனியாக இருந்தார். சம்பத் மேட்டுத் தெருவில் ஒரு பெரிய வீட்டில் அப்பா, அம்மாவுடன் இருந்தான். பூமா என்ற ஒரு தங்கை. சின்னக் குடும்பம். வீட்டில் வேலைக்காரர்கள் தாம் அதிகமிருந்தனர்.

சம்பத்தின் தாத்தா ‘தனியாக’ இருந்தார் எனறால், சம்பத்தின் பாட்டி உயிருடன் இல்லை என்றுதான் அர்த்தம். அவன் தாத்தாவை ‘எல்லாவிதங்களிலும்’ கவனித்துக் கொள்ள ஓர் அழகான துணை இருந்தது.சேர நன்னாட்டு இளம்மங்கை. முப்பது வயதிருக்கும். சம்பத் தாத்தாவின் வயது எழுத்தைந்து.

பார்த்தால் நிச்சயமாய் அந்த வயது தெரியாது. நெடிய கம்பீரமான தோற்றம். செக்கச் செவேலென்று பழம் போலிருப்பார்.

ஒருசமயம் சம்பத்துடன், அவன் தாத்தாவின் பங்களாவுக்குப் போனது அவர் நினைவுக்கு வந்தது.


பெரிய தோட்டம். ‘தோப்பும் துரவும் தொங்கலிட்ட மாம்பழமும்’ என்பார்களே அந்த மாதிரி. விஸ்தாரமான பங்களா வாசலில் ஒரு பெரிய ஊஞ்சல்.

அவரும் சம்பத்தும் போனபோது, அந்தப் பெண் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள்.

சம்பத்தைக் கண்டதும் முகம் மலர்ந்து, ‘வாடா என் கண்ணா’ என்று கூறிக் கொண்டே அவனை இறுகக் கட்டி முத்தம் கொடுத்தாள்.

அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. சம்பத்துக்கு அப்பொழுது பதினெட்டு வயதிருக்கும். நல்ல வாட்டசாட்டமான உடல். சம்பத்தும் ‘பாட்டி’ என்று சொல்லிக் கொண்டே அவளுக்கு முத்தம் கொடுத்தான்.

‘பாட்டியா?’ என்று அவர் சற்று திடுக்கிட்டார்.

இளமையின் தலைவாசலில் நிற்கும் அவள்.

‘பாட்டியா?’ பிறகுதான் அவருக்குத் தெரிந்தது.

அவளை அவன் அப்படித்தான் கூப்பிட வேண்டுமென்று அவள் கட்டளை.

அப்பொழுதுதான் அவளுக்கு அடிமனம் இருப்பது அவருக்குத் தெரிந்தது. அடி மனம் கேட்டது: ‘இது சரியா?’

இதற்குப் பிறகு இந்த, ‘சரி, தப்பு’ப் பற்றிய விவாதங்கள் அவர்களுக்கிடையே அடிக்கடி ஏற்படும். சம்பத்தின் கருத்துப்படி குற்ற உணர்வு இல்லாமல் செய்யும் காரியம் எதுவுமே சரிதான். அப்பொழுதெல்லாம், இவனுடன் நட்பை முறித்துக் கொள்வதே தமக்குச் சரி என்று அவருக்குத் தோன்றும். இரண்டு மூன்று நாட்கள் அவனுடன் பேச மாட்டார். அவன் அவரைத் தேடிக் கொண்டு அவர் வீட்டுக்கு வந்து விடுவான். அவனை அவரால் ஒதுக்கி விட முடியவில்லை.


“எக்ஸ்கியூஸ் மீ…”

தம் சிந்தனையில், படகு ஒன்றை எடுத்துச் சென்ற ஓர் இளம் தம்பதியின் வழிக்குத் தடையாக நின்று கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார்.

“ஐ ஆம் ஸாரி…” என்று கூறிக் கொண்டே அவர் ஒதுங்கினார். அவர் ‘வருத்தத்தை’ அவர்கள் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டனர்.

நடந்து கொண்டிருந்தவர் எதற்காக நின்றார்? அவருக்கே தெரியாது. களைப்போ? இருக்கலாம். தன்னிச்சையாக நின்றிருக்க வேண்டும்.

அவர் குன்றை நோக்கி மீண்டும் நடக்கத் தொடங்கினார்.

சம்பத், கல்லூரிப் படிப்பு முடித்த, இரண்டு, மூன்று வருஷங்களுக்குப் பிறகு, அவர் வாழ்க்கையிலிருந்து திடீரென்று மறைந்து போனான். எங்கே போனான் என்று யாருக்கும் தெரியாது. அவன் தாத்தா அவன் கல்லூரியில் படிக்கும்போதே போய் விட்டார். கல்லூரிப் படிப்பு முடித்த அடுத்த வருஷம் அவனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. அம்மா ‘கான்சரி’ல் போனாள். அவனுக்கு அம்மாவின் மீது அசாத்திய பிரியம்.

சம்பத், அவர் வாழ்க்கையினின்றும் மறைந்து போனான் என்று சொல்வது சரியா? அவருக்குள் எப்பொழுதும் அவன் ஒளிந்து கொண்டிருந்தான் என்றே அவருக்குத் தோன்றிற்று. சரி, தப்பு பிரச்னை வரும்போதெல்லாம், அவருக்கு சம்பத் குரல் கேட்கும்.

அவன் எங்கே போயிருப்பான்? வெளிநாடு போய் விட்டதாகச் சொன்னார்களே தவிர, அவனைப் பற்றிய சரியான தகவல் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை.

அவனுடைய அப்பா, அவன் அம்மா போன பிறகு ‘அவளை’த் தம் வீட்டிலேயே கூட்டி வைத்துக் கொண்டார்.

யார் ‘அவள்?’… அதுவும் அவருக்கேற்பட்ட சுவாரஸ்யமான அனுபவம்.


அவர் சம்பத் வீட்டில் பாதி சமயங்களில் இரவு உறங்கி விடுவதுண்டு. சம்பத் அம்மாவுக்கு அவரை மிகவும் பிடிக்கும்.

ஒரு சமயம், நள்ளிரவில், சம்பத்தின் அம்மா அவனை எழுப்பினாள். அவரும் எழுந்து விட்டார்.

‘அப்பா அந்தாத்திலேருக்கார்… பூமாவுக்கு 105 டிகிரி. எனக்கு பயமாருக்கு… அப்பாவைக் கூட்டிண்டு வா…’

அந்த ‘அகம்’ என்பது இந்தக் காலத்திய ‘சின்ன வீடு….’ அவருக்கு அதைப் பற்றியும் நன்றாகத் தெரியும், சம்பத் சொன்ன தகவல். அந்தப் பெண் திருமணமானவள். அவளை அவர் பார்த்ததில்லை. அவள் கணவரைப் பார்த்திருக்கிறார். நாட்டு வைத்தியர். வயதானவர். சம்பத்தின் அப்பாதான் அவருக்கு இளம்பெண்ணைக் கல்யாணம் செய்வித்ததாக சம்பத் அவரிடம் சொல்லியிருக்கிறான்.

“வாடா போகலாம்…” என்றான் சம்பத் அவரிடம்.

“அவன் எதுக்குடா?” என்றாள் அவன் அம்மா.

“போனா அவனோட போவேன், இல்லாட்டா போக மாட்டேன். டாக்டரை நான் கூட்டிண்டு வரேன்.”

“டாக்டர் ஊரிலில்லே… அதான் எனக்கு பயமாயிருக்கு… ஆஸ்பத்திரிக்கு போகணும்னா…”

‘வாடா போகலாம்” என்று இரண்டாம் தடவையாக உறுதியான குரலில் சொன்னான் சம்பத் அவரிடம்.


அவர்கள் வீடு, காமாட்சி ஜோஸ்யர் தெருவிலிருந்தது. ‘சைலன்ஸர்’ இல்லாத மோட்டார் சைக்கிளில் அவரையும் பின்னால்

ஏற்றிக் கொண்டு, மிக ஆர்ப்பாட்டமாய் அந்த வீட்டெதிரே ‘பைக்’கை நிறுத்தினான் சம்பத்.

சிறிதும் பெரிதுமில்லாத நடுத்தரமான வீடு. வாசல் மரக்கதவை பலமாகத் தட்டினான் சம்பத்.

“யாரு?” என்ற குரல். ஆண்குரல், உள்பக்கத்திலிருந்து மிகச் சன்னமாக ஒலித்தது.

சம்பத் பதில் சொல்லவில்லை. அதிக வேகமாகக் கதவைத் தட்டினான் இரண்டாவது தடவையாக.

சில விநாடிகளுக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. ‘அரிக்கேன்’ விளக்கைக் கையிலேந்தியவாறு, கண்களை இடுக்கிப் பார்த்தார் வைத்தியர். அந்த மங்கலான வெளிச்சத்தில் அவர் நாமம் ‘பளிச்’ சென்று தெரிந்தது.

“யாரு? சம்பத்தா… வாடா வா.”

“அப்பாவைக் கூப்பிடுங்க…”

“யா…ரு? அ…ப்…பாவா? இங்கேயே…?”

“ஆமாம்… இங்கேதான். கூப்பிடுங்க…”

“அவர் வந்து…” அவர் தயங்கித் தயங்கி சொல்லி முடிப்பதற்குள் அவரைத் தாண்டி உள்ளே சென்றான் சம்பத்.

“அப்பா…” வீடு எதிரொலிக்கும்படியான குரலில் உரக்கக் கூப்பிட்டான் சம்பத்.

கூடத்தை ஒட்டியிருந்த அறையிலிருந்து கண்களைக் கசக்கிக் கொண்டு வெளியே வந்தார் சம்பத்தின் அப்பா.

“எங்கே வந்தே?” என்றார் அவன் அப்பா. குரலில் எரிச்சல் தெரிந்தது.

“பூமாவுக்கு நல்ல ஜுரம். 105 டிகிரி. அம்மா கூட்டிண்டு வரச் சொன்னா உங்களை; டாக்டர் ஊரிலில்லே. “

“என்னடா ஆச்சு குழந்தைக்கு?” என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தாள் வைத்தியரின் மனைவி.

அவள் குரலில் கண்ட பரிவு, பாசாங்கு இல்லை என்று அவருக்குப் பட்டது.

“நீ போ உள்ளே…” என்று அதட்டல் போட்டார் சம்பத்தின் அப்பா.

“நல்ல ஜுரம் சித்தி…” என்றான் சம்பத். அவன் அவளைச் ‘சித்தி’ என்று கூப்பிடுவான் என்பதை அவன் அப்பா எதிர்பார்க்கவில்லை என்று தோன்றிற்று.

அவர் அவனை எரித்து விடுபவர் போல் பார்த்தார். பிறகு மிகக் கோபமாகக் கேட்டார். ‘உன்சிநேகிதனையும் கூட்டிண்டு வரணுமா.”

“வொய் நாட்? அவன் என் பாட்டியைப் பார்த்திருக்கான் எக்ஸ்டென்ஷன்லே, சித்தியைப் பார்க்கக் கூடாதோ?”

சம்பத்தின் அப்பா அளவற்ற சினத்துடன் அவன் அருகில் வந்து அவனை அடிக்கக் கையை ஓங்கினார்.

சம்பத் அவர் கையை அப்படியே இறுகப் பற்றிக் கொண்டான்.

“செய்யறதைத் துணிஞ்சு செய்யணும்… வேஷம் கூடாது. ஒரு அடி என் மேலே விழுந்தது, அப்புறம்… என்ன ஆகும்னு எனக்கே தெரியாது,” என்றான் சம்பத்.

அந்த ஒருகணம் உலகம் ஸ்தம்பித்து நின்றது போல இருந்தது அவருக்கு. அவன் அப்பாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

கை தானாகவே கீழே இறங்கியது. அவர் கண்களில் பயம் தெரிந்தது.

சம்பத் வெளியே வந்தான். அவரும் அவனைத் தொடர்ந்தார். அவர் சொன்னார், வெளியே வந்தவுடன்: “அப்பாகிட்டே நீ இப்படிப் பேசியிருக்க வேணாம்…”

“என் தாத்தா தைரியமா செஞ்சார். இதென்ன, கோழைத்தனம், இன்னொருத்தனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சு, ராத்திரி வேளையிலே முட்டாக்குப் போட்டுண்டு நுழையறது? அவளை வச்சிண்டிருக்கார், ஆனா அவரோட சொந்த வீட்டு விஷயம் பத்தி அவ விசாரிக்கக் கூடாது. அவர் சொந்த வீடு ‘ஒரு புனிதமான விஷயம்’. அவ வப்பாட்டிதானே, அவளுக்குக் கேக்க உரிமையில்லே… அவ நல்ல மனுஷியாத்தான் எனக்குப் படறது. பாவம், காசில்லாத கொடுமை…”

“உங்கம்மாவுக்கு அவர் துரோகம் பண்றாரே, அது ‘இஷ்ஷியு’வே இல்லியா?” என்றார் அவர்.

“எங்கம்மாவை எனக்கு நன்னா தெரியும். வீட்டுக்குக் கூட்டிண்டு வராத வரைக்கும் அவளுக்கு இது ‘இஷ்ஷியு ‘வே யில்லே… அவளுக்கும் வீடு ‘ஒரு புனிதமான விஷயம்’ டாமிட். நம்ம ‘கல்சர்’லே, ஆட்களுக்கு முக்கியத்துவமே கிடையாது… ‘அப்ஸ்டராக்ட்’ விஷயங்கள், கற்பு, கிற்பு, தாலி பாக்கியம்…சச் ஸ்டஃப் அன்ட் நான்ஸென்ஸ்’ இதுக்குத்தான் முக்கியத்துவம்…’

சம்பத் அம்மா போன பிறகு அவனுடைய அப்பா அவளைத் தம்முடைய வீட்டிலேயே அழைத்து வைத்துக் கொண்டார். வைத்தியர் என்ன ஆனார் என்ற விவரம் யாருக்கும் தெரியாது.

அன்று அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சம்பத் அவர் உள் மனத்தை ஊடுருவி நின்றான் என்று அவரால் உணர முடிந்தது.

குன்று ஏறுவது கொஞ்சம் சிரமமாகத் தானிருந்தது. செங்குத்தாக இருந்ததனால் கொஞ்சம் மூச்சு வாங்கிற்று.

உச்சிக்குச் சென்று, சுற்றிப் பார்த்ததும், குன்றேறிய பலன் அவருக்குக் கிடைத்தாற்

போலிருந்தது. அற்புதமான காட்சி/

மேலிருந்து சரிந்த நீலமும், கீழே விரிந்து கிடந்த நீலமும் ஒன்றோடு ஒன்று இணைந்து, ஒரு ராட்சச நீல வாய் திறந்து, அவரை விழுங்க வருவது போல் அவருக்குத் தோன்றிற்று. அலைகள் எச்சில்களாக வழிந்தன.

அவர்கண்களை மூடிக் கொண்டார். எத்தனை நேரம் அப்படியே நின்றார் என்று அவருக்குத் தெரியாது.

கண்களைத் திறந்து, பக்கவாட்டத்தில் பார்த்தபோது…

“வாட் எ கோய்ன்ஸ்டன்ஸ்!”

பக்கத்தில் நின்றவர் சம்பத் போலவே இருந்தார். சம்பத்தாக இருக்க முடியாது. இருபத்தைந்து வயது இளைஞன். அவனருகில் ஓர் இளம்பெண். வெள்ளைக்காரப் பெண். தென் அமெரிக்கப் பெண் போல் தோன்றினாள்.

ஏன் சம்பத்தின் மகனாக இருக்கக்கூடாது என்று அவருக்குத் தோன்றிற்று. அதே நீண்ட நாசி, கூர்மையான கண்கள், சுருள் முடி… நாற்பது வருஷங்கள் கரைந்து அவருக்கும் இளமை வந்து விட்டாற்போல், அவர் உற்சாகத்தின் கொடுமுடியில் நின்றார்.

அவர் அவனருகே சென்றார். ”எக்ஸ் கியுஸ் மீ…” என்று அவர் சொன்னதும், அவன் அவரைத் திரும்பிப் பார்த்தான்.

“எஸ்…?” என்றான் அவன்.

‘என்னுடைய நெருங்கிய நண்பன் சம்பத் மாதிரி நீங்கள் இருக்கிறீர்கள்…” இதற்கு மேல் என்ன சொல்வதென்று அவருக்குத் தெரியவில்லை. அவனையே பார்த்துக் கொண்டு அவர் நின்றார்.

அவன் அவரை உற்றுநோக்கினான். உடனே அவன் பதிலேதும் சொல்லவில்லை. அவர் முகத்தில் அவன் ஏதோ தேடுவது போலிருந்தது.

சில விநாடிகள் கழித்து, அவர் பெயரைச் சொல்லி அவரைக் கட்டிக் கொண்டான்.

“நம்பவே முடியலே… நீ சம்பத்தா? அன்னிக்குப் பார்த்த அதே மாதிரி… நோ… நோ…”

”இப்பொ நீ எனக்கு அன்னிக்கு எப்படி இருந்தியோ அப்படியேதான் இருக்கே. ஒரே யொரு வித்தியாசம், நம்ம ரெண்டு பேருக்கும் அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி, நான் இளைஞன்தான்… உனக்கு அப்பவே வயசாயிடுத்து… ஓ.கே.. இது என் மனைவி, வில்மா… இவன் என் பால்ய சிநேகிதன்…” அவன் அவருடைய பெயரையும் சொன்னான்.

“மைகாட்! அதெப்படி அவளும் இவ்வளவு இளமையா இருக்காளே?” என்றார் அவர்.

‘எனக்கு ‘புரூ’ன்னு ஒரு பிள்ளை. அவன் கிட்டேயிருந்து நான் இளமையை வாங்கிண்டேன், இவ, அவன் வொய்ஃப் கிட்டே யிருந்து வாங்கிண்டா… போறுமா?” என்று கூறிவிட்டு, உரக்கச் சிரித்தான் சம்பத்.

”நிஜமா சொல்றேன். இன்க்ரெடிபில்… நீ இப்போ எங்கே, ஆஸ்த்ரேலியாவிலேதான் இருக்கியா?” என்றார் அவர்.

“எஸ்… இப்பெ.. ஆறு மாசமா இங்கே… எத்தனை நாள் இங்கே இருப்பேன்னு எனக்குத் தெரியாது. வட அமெரிக்காவிலே அஞ்சு வருஷம், தென் அமெரிக்காவிலே பத்து வருஷம், யு. கேவிலே அஞ்சு வருஷம். நைஜிர்யாவிலே அஞ்சு வருஷம்… ஐ ஆம் எ க்ளோப்ட்ராட்டர்… நாப்பது வருஷத்துக்கு முன்னாலே கால்லே ஏறின சக்கரம் ஓடிண்டேயிருக்கு. என்ன செய்யறேன்னு கேக்காதே…எல்லாவிதமான வேலையும் செய்யத் தெரியும். ‘ப்ரொஃபஸர்,’ ‘ப்ரொஃபஷனல்’… எல்லாம். நீ என்ன செய்யறே… ‘தி ஸேம் ஓல்ட் வீபிங் ஃபிலாஸபர்?’ வாழ்க்கையிலே அழறதை நிறுத்தியாச்சா, இல்லே, இன்னும், ‘மாரல்’, கீரல்னு சொல்லிண்டு அழுதுண் டிருக்கியா?” என்று சொன்னவன், மனைவி பக்கம் திரும்பி, “மன்னித்துக் கொள்… நாங்கள் எங்கள் மொழியில் பேசுவதை…’ என்றான் ஆங்கிலத்தில்.

அவள் புன்னகை செய்தாள்.

“ஆர் யு ஹாப்பி” என்றார் அவர்.

”குட்… இது நல்ல கேள்வி. இந்தக் கேள்வியைக் கேட்டுண்டே யிருந்து, ‘ஆமாம்’னு நாம் ‘ஃபீல்’ பண்ணா… அது போறும். உனக்கு இப்பொ கேள்வி கேட்க தெரிஞ்சுருக்கு… நல்ல ஆரம்பம்… ‘வால்யு ஜட்ஜ்மெண்ட்’ அது இதுன்னு சொல்றதெல்லாம் காலாவதி யாயிடுத்து… பழசைப் பத்தி என்னை ஒண்ணும் கேக்காதே, நானும் உன்னைக் கேக்க மாட்டேன். ஓ. கே…?”

அவன் மறுபடியும் என்னைக் கட்டிக் கொண்டான்.

“சரி … வா… அதோ இருக்கு. எங்க மோட்டார் – போட்… ஒரு ‘ரைட்’ போயிட்டு வருவோம்.

அவர் அவர்களை மாறி மாறிப் பார்த்தார். காயகல்பம் சாப்பிட்டவர்கள் போல… இல்லை, அமுதத்தை விழுங்கியவர்கள் போல இருந்தார்கள்.

“என்ன வரயா, சொல்லு” என்றான் சம்பத்.

“எங்கே?”

”ஜஸ்ட் எஜாலி ரைட்… அந்தத் தொடுவானம் மட்டும், அதைத் தொட்டுட்டுத் திரும்பி வந்துடலாம்…”

“தொடுவானத்தைத் தொட முடியாது,” என்றார் அவர்.

“தொடணும்னு அவசியமில்லே… பயணந்தான் முக்கியம். அதுதான் சந்தோஷமான அநுபவம். மைகாட், இது கூடவா உனக்குத் தெரியாது…?”

“நௌயுஆர்ஆன் காட், நான் ஒண்ணு உன்னைக் கேக்கலாமா?”

“அப்ப ஒரு கேள்வி கேட்டியே, ‘ஆர் யு ஹாப்பி’ன்னு அந்தக் கேள்வியிலே, எல்லாம் அடங்கிடுத்து. என்ன கேள்வி கேட்டாலும், கேள்வியோட துணைக்கேள்விதான்…”

“உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கா?” என்றார் அவர்.

அவன் பலமாகச் சிரித்தான்.

அவர் பயந்து விட்டார்.

பிறகு சொன்னான்: “வாட் எ கொச்சின்? நான் பிரபஞ்சத்தை நம்பறவன். நான்தான் பிரபஞ்சம்னு நம்பறவன். கடவுள் பிரபஞ்சம்னா, கடவுள் பிரபஞ்சத்துக்குள்ளே ஊடுருவி இருக்கார்னா, நான் கடவுளையும் நம்பித்தான் ஆகணும். அப்படி நம்பலேன்னா, எனக்கு பிரபஞ்சத்துப் பேரிலே நம்பிக்கையில்லே, என் பேரிலேயே நம்பிக்கையில்லேன்னு அர்த்தம். அப்படி எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கான்னு நான் என்னை நானே மீண்டும் மீண்டும் கேட்டுண்டேயிருக்கணும்னு ஒரு கடவுள் விரும்பினார்னா, அவர் கடவுளே இல்லே… அவர் ஒரு போகஸ் கடவுள் ‘பொய்த்தேவு’. இதுதான் ‘ஸர்மன் ஆன் தி மௌன்ட்’ ஸாங் ஆஃப் குருக்ஷேத்திரா…! சரி… ஓ.கே.போகலாம் வரயா…?”

“இப்பொ வர முடியும்னு எனக்குத் தோணலே. ‘என் டாட்டரும் மாப்பிள்ளையும் என் கூட வந்திருக்கா. நான் திரும்பிப் போயாகணும். இன்னொரு நாளைக்கு…”

அவன் இடைமறித்தான்… “சரி… என் டெலிஃபோன் நம்பரைத் தரேன்… கான்டாக்ட்பண்ணு, ஓ.கே…?”

அவன் அவர் பையிலிருந்து ஒரு துண்டுக் காகிதத்தையும் ‘பால் பாய்ன்ட்’ பேனாவையும் எடுத்து அவசர அவசரமாக அவன் டெலிஃபோன் நம்பரை எழுதி, அத் துண்டுக் காகிதத்தை அவர் பையில் போட்டான்.


அவர் குன்றிலிருந்து கீழே இறங்கியதும், அங்கு அவர்மகளும், மருமகனும் அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

“என்ன யோசிச்சிண்டிருந்தீங்க, ரொம்ப நேரமா, தனியா நின்னுண்டு?” என்றாள் அவர் மகள்.

“தனியாவா?”

“ஆமாம்… நாங்க அப்பவே வந்துட்டோம். நீங்க இறங்கி வருவீங்கன்னு காத்திண்டிருந்தோம்… ” என்றாள் அவர் மகள்.

அவர் தனியாக இல்லை என்று அவர்களுக்குச் சொல்வதற்காகத் தம் பையிலிருந்த துண்டுக் காகிதத்தை எடுத்து அவர் மகளிடம் நீட்டினார்.

அவள் அதைப் பார்த்துவிட்டு, “இது நம்ம வீட்டு டெலிஃபோன் நம்பர். உங்களுக்கு ஞாபகம் இருக்கே, அதுவே ஆச்சர்யந்தான்” என்றாள்.

அவர் குன்றைத் திரும்பிப் பார்த்தார்.

விசைப்படகுச் சவாரிக்கு ஒத்துக் கொண்டிருக்கலாமென்று அவருக்குத் தோன்றிற்று. ஆனால் விசைப்படகு கண்ணுக்குத் தெரியவில்லை. குன்றின் மீது ஏறிப் பார்த்தால் அது தெரியக்கூடுமென்று அவருக்குப்பட்டது.

– இந்திரா பார்த்தசாரதி கதைகள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *