கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: January 6, 2024
பார்வையிட்டோர்: 5,525 
 

(2014ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-4 | அத்தியாயம் 5-8

அத்தியாயம்-1 

ஆதியும் அந்தமும் இல்லாத, அருவமும், உருவமும் அல்லாத இன்பமும், துன்பமும் இன்றி வேதங்களை கடந்து நிற்கும் இறைவா நீதான் அலைபாயும் என் மனதுக்கு நிம்மதி தரவேண்டும். 

ஆசைகளையும், உணர்ச்சிகளையும் அடக்கியாளும் மன வலிமையை கொடு. மனதின் வேண்டுதல், மூடியிருந்த கண்களின் வழியே கண்ணீரை வெளியேற்றுகிறது. தீப ஒளியில் சுடர்விடும் ஈசனை சிரம்தாழ்த்தி வணங்கியவள், அங்கிருந்த திருநீறை நெற்றியில் இடுகிறாள். 

“அம்மா.. அம்மா… எங்கேம்மா இருக்கே?” 

ஐந்து வயது மகன் பிரபுவின் மழலை மாறாத குரல்…

“இந்தா வந்துட்டேன் ராஜா… 

கண்ணீரை துடைத்துக் கொண்டு சுவாமி அறையை விட்டு வெளியே வருகிறாள். 

“காலை நேரத்தில் இப்படி அரை மணி நேரம் சாமியறையில் இருந்தா என்ன அர்த்தம். எல்.கே.ஜி போற பிள்ளையை கிளப்பணும். தினகருக்கு ஒன்பது மணிக்குள் சாப்பாடு ரெடி பண்ணனும். சுமதி காலேஜுக்கு கிளம்பிட்டிருக்கா… நீ என்னடான்னா வேலையே எதுவும் இல்லாத மாதிரி குளிச்சு முடிசிக சாவகாசமா வர்றே..” 

எரிச்சலும், கோபமும் வெளிப்பட மருமகளை பார்க்கிறார் அம்சவள்ளி. 

“இதோ அரைமணியில் முடிச்சுடுவேன்மா.” 

எதிரில் வரும் பிரபுவின் கையை பிடித்து அழைத்து அடுப்படிக்குள் நுழைகிறாள் சாந்தி. 

முருங்கை காய் சாம்பார், பீன்ஸ் பொரியல், உருளைக்கிழங்கு மசாலா, தக்காளி ரசம் டேபிளில் தயாராகிறது. 

“சமர்த்து இல்லையா, இந்த ஒரு வாய் மட்டும் சாப்பிடு, சாயந்திரம் நீ ஸ்கூல் விட்டு வந்ததும் அம்மா உன்னை பார்க்குக்கு கூட்டிட்டு போவேன்”. 

“நிஜமா..”

“ஆமாம்…” 

“இல்ல நீ பொய் சொல்றே. நீ வரமாட்டே.. தாத்தாவோடதான் அனுப்புவே. இன்னைக்கு நீயும், தாத்தாவும் வரணும்…” 

“வரேண்டா கண்ணா…” 

“அம்மா… நான் ஊஞ்சலில் ஸ்பீடா ஆடுவேன். பார்க்கிறியா…” 

“ம்… பார்க்கிறேன்.” 

“அங்கே கலர் கலராக நிறைய பூ இருக்கும்மா.” 

“அப்படியா…” 

பேச்சு சுவாரஸ்யத்தில் சாந்தி கொடுக்கும் சாப்பாட்டை விழுங்குகிறான். 

“சரி போய் ஷூ எடுத்துட்டு வா… போட்டு விடறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஸ்கூல்வேன் வந்துடும்.”

சிட்டாக பிரபு வாசலை நோக்கி ஓட… 

“அண்ணி, சாப்பாடு ரெடியா… சாப்பிடலாமா…” 

தினகரை பார்க்கிறாள். உருவ ஒற்றுமையில் அண்ணனை கொண்டிருந்தாலும், நிறம் கொஞ்சம் குறைவுதான். 

“நீ உட்கார் தினகர், நான் பரிமாறேன்.” 

அம்சவல்லி டேபிளில் தட்டை வைக்கிறாள். 

“காலையில் இட்லி, தோசைன்னு சாப்பிடாம, ஏண்டா சாதத்தை சாப்பிடறே…”

“சாதம் சாப்பிட்டா பசி இருக்காது. மூணு மணி போல லைட்டா ஸ்நாக்ஸ் எடுத்துக்கிட்டா போதும். கம்பெனியில் வேலை சரியா இருக்குமா…” 

சாம்பாரை தட்டில் ஊற்றியவள்.. 

“பெரிசா ஸ்டீல் கம்பெனி வச்சிருக்கேன்னுதான் பேரு. நல்ல லாபம் வந்தாலும், நீதான் உழைக்க வேண்டியிருக்கு.”

“என்னம்மா செய்யறது? முதலாளி பொறுப்போடு இருந்தாதான் தொழிலாளியும் ஒழுங்கா வேலை பார்ப்பான்.” 

“என்னவோ போ… உங்கண்ணன் டாக்டர்னு பெருமைப் பட்டேன். அந்த கடவுளுக்கே பொறுக்கலை… லாரி ரூபத்தில் ஆஜானுபாகுவா ஆறடி உயரத்தில் இருந்த என் பிள்ளையை அழைச்சுட்டு போயிட்டான். பெத்த தாய்க்கு ஈடு செய்யற இழப்பா இது… நினைச்சா பெத்த வயிறு பத்தி எரியுது…” 

“எதுக்கும்மா… காலங்கார்த்தாலே இந்த பேச்சு. அப்புறம் இன்னைக்கு முழுக்க பிரமைபிடிச்சதுபோல உட்கார்ந்திருப்பே. அப்பா கடைக்கு போயிட்டு வந்துட்டாரு போலிருக்கு. வாசலில் சப்தம் கேட்குது. போய் பாரு. சாப்பாடு நான் போட்டுக்கிறேன்.” 

அம்சவல்லி எழுந்து செல்ல… 

கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தபடி தன் அறைக்கு செல்லும் அண்ணியை பார்க்கிறான் தினகர். 

தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் விட்டவர். கத்தரி செடியிலிருந்து பிஞ்சு கத்தரிக்காய்களை பறிக்கிறார். தினகருக்கு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பிடிக்கும். அதுவும் சாந்தி கையால் செய்யறது அமிர்தமாக இருக்கும். நல்ல பெண். கடவுள் தான் கருணையில்லாமல் அவள் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கி விட்டார். 

“என்னங்க, இன்னும் தோட்டத்தில் என்ன செய்யறீங்க. டிபன் சாப்பிட வரலையா?”

“எல்லாரும் கிளம்பி போகட்டும். எனக்கென்ன அவசரம். மெதுவா சாப்பிடறேன்”. 

“அதானே மருமகளோடு உட்கார்ந்து பத்து மணிக்குதானே சாப்படுவீங்க. மார்க்கெட்டுக்கு போய் வந்தவுடன் தோட்டத்தில் நுழைஞ்சாச்சு. எனக்கு பசிக்குது. நான் சாப்பிடறேன்”. 

“நான் உன் கையை பிடிச்சுக்கலையே… போய் சாப்பிடு. ரிடையர்ட் ஆனபோது எவ்வளவு சந்தோஷமாக இருந்தேன்.” 

“அப்பா ரிடையர்ட் ஆயிட்டிங்க. பென்ஷன் வருது… இரண்டு பிள்ளைகள், ஒருத்தன் டாக்டர், இன்னொருத்தன் தொழிலதிபர். இனி நீங்க நிம்மதியா இருக்க வேண்டிய காலம் சுமதி கல்யாணத்தை நாங்க பார்த்துக்கிறோம்”. 

சுதாகார் புன்னகையுடன் அப்பாவின் கைபிடித்து சொல்ல…

“எனக்கென்னப்பா ராம லஷ்மணர் போல இரண்டு பேரும் என் மனசறிஞ்சு நடக்கிற பிள்ளைகள். அன்போடு தந்தை ஸ்தானத்தில் வைத்து என்னை கவனிக்கிற என் மருமகள் சாந்தி. நிம்மதிக்கு எந்தக் குறைவும் இல்லையே… நீ இப்படி பேசறதை கேட்கும்போது சந்தோஷமா இருக்கு சுதாகர்.” 

“அப்பா உங்களுக்கு வேலையே இல்லைன்னு நினைச்சுடாதீங்க. உங்க பேரன் பிரபுவை கவனிக்கிற முழு பொறுப்பும் உங்களுக்குத் தான். சாந்திக்கு அடுப்படியில் நுழைஞ்சிட்டா இந்த உலகமே தெரியாது”.
“சந்தோஷமா ஏத்துக்கிறேன். கரும்பு தின்ன கூலியா.” 

மனம் விட்டு சிரிக்கிறார். 

என்ன தோணியதோ தெரியவில்லை. ஈஸிசேரில் அமர்ந்திருக்கும் அப்பாவின் காலடியில் உட்காருகிறான். 

அப்பா… 

“என்ன சுதாகர்… சொல்லுப்பா…” 

“கல்யாணமாகி நாலு வருஷமாச்சுப்பா… அம்மா இன்னும் சாந்தியை முழு மனசோடு மருமகளாக ஏத்துக்கலைன்னுதான் தோணுது. எங்க காதல் உங்க முயற்சியில்தான் நிறைவேறிச்சி. உங்க அன்பும், ஆதரவும் சாத்திக்கு என்னைக்கும் இருக்கணும்பா. அவ மனசில் எந்த விகல்பமுமில்லை. இந்த குடும்பத்தை தன் உறவுகளாக ஏத்துக்கிட்டு வாழ்ந்துட்டிருக்க…. ஆனா… சமயத்தில் அம்மா அவக்கிட்டே எரிந்து விழும்போது என் மனசு சங்கடப்படுதுப்பா. அவ இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவதான். அதை ரொம்ப சுட்டிக்காட்டி பேசறாங்கப்பா”. 

“என்ன சுதாகர்… இதுக்கு போய் வருத்தப்படறே. உனக்கு அம்மா குணம் தெரியாதா… அவ எப்பவுமே இப்படிதான். அதுவுமில்லாம டாக்டருக்கு படிச்ச உனக்கு சீர் செனத்தியோடு பெரிய இடத்தில் மருமகளை தேடனும்னு நினைச்சா, அவ ஆசை நிறைவேறலை. அதோட தாக்கம் சமயத்தில் வார்த்தைகளாக வெளி வருது. அவ பேச்சை பெரிசு பண்ணாமவிடுப்பா.” 

“அப்படிதான்பா நானும் நினைக்கிறேன். ஆனா சமயத்தில் சாந்தியின் வாடிய முகத்தை பார்க்கும்போது வருத்தமா இருக்குப்பா. அப்பா… நீங்க கடைசிவரை சாந்திக்கிட்டே இதே பரிவோடும். அன்போடும். இருப்பீங்களாப்பா…”

“ஏன்ப்பா… இப்படி கேட்கறே. சுமதியை போல அவளும் என் மகள்தான். இந்த அன்பும், பாசமும் மாறாதுப்பா.”

“இந்த வீட்டில் நீங்கதான்பா அவளுக்கு ஆதரவு. எந்த காரணம் கொண்டும் உங்க மருமகளை கைவிட்டுட கூடாது. பிறந்த வீடு… அவளுக்கு துணை வராதுப்பா… நீங்கதான் கடைசிவரை அவளுக்கு துணையா இருக்கணும்பா.” 

“எதுக்குப்பா இப்படி பேசற. கட்டின புருஷன் நீயிருக்கே… அவளுக்கென்ன குறை. நல்லா சந்தோஷமா இருப்பா. உங்க அம்மா மனசும் நாளாக நாளாக மாறிடும். நீ கவலைப்படாதே.” 

நாளை நடக்க இருப்பதை அறிந்து கொண்டாற்போல் அன்று சுதாகர் பேசிய பேச்சு… 

அடுத்த வாரத்திலேயே காலையில் மகன் கன்னத்தில் முத்தமிட்டு, வாசலில் வழியனுப்ப நிற்கும் சாந்திக்கும், அவருக்கும் கையசைத்து கிளம்பியவன், 

அடுத்த அரை மணி நேரத்தில் லாரி மோதி கார் அப்பளமாக நொறுங்க… அந்த இடத்திலேயே சுதாகரின் உயிர் பிரிகிறது.

அத்தியாயம்-2 

வாசளில் இருந்த வேப்ப மரத்தின் காய்ந்த இலைகள் கீழே அம்பாரமாக கொட்டிக் கிடக்க அவற்றை கூடையில் கூட்டி அள்ளி கொட்டிய கமலத்திற்கு இடுப்பை வலித்தது. 

என்ன செய்வது, நிழல் தரும் மரம், வேப்பமரத்து காற்று… வீட்டையே குளிர செய்யும்போது இந்த சின்னச் சின்ன கஷ்டங்களை பொறுத்துக் கொள்ளதான் வேண்டும். 

சுத்தமாக கூட்டிப் பெருக்கி, வாசல் தெளித்து கோலமிட்டாள். இப்போதெல்லாம் முன்புபோல வேலை செய்ய முடியவில்லை. உடம்பு மட்டுமல்ல, மனமும் தளர்ந்துவிட்டது. காசு, பணம் இல்லாவிட்டாலும் அருமையாக வளர்த்த மகள் சாந்தி, தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு, டாக்டரை திருமணம் செய்ய நினைத்தபோது, மகளுக்கு எவ்வளவோ எடுத்து சொன்னாள். 

ஆனால் அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் சாந்தி இல்லை. 

“அவர் நல்லவர்மா. நீ கவலைப்படாதே. என் வாழ்க்கை நல்லபடியா இருக்கும். நீ பார்க்கதானே போறே.”

ஐந்து வருடங்கள் வாழ்க்கை அவள் சொன்னதுபோல் நன்றாகவே இருந்தது. மாமியார் தான் சற்று குணம் பத்தாமல் இருந்தாள். ஆனால் மாப்பிள்ளையின் அன்பு… அதை பெரிசுபடுத்தாமல் சாந்தியை வாழ வைத்தது. 

பேரன் பிரபுவோடு… மகளின் வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதை எண்ணி நிம்மதியடைந்தவள், தலையில் பாறாங்கல்லாய் வந்து விழுந்தது மாப்பிள்ளையின் மரணச் செய்தி. 

“இங்கே பாருங்க. எப்போதும் இப்படி அழுது வடிஞ்சுக்கிட்டு. இருந்தா… போனவரு வரவா போறாரு. உங்க மகளே தெளிஞ்சுட்டா. நீங்க ஏன் இன்னும் வாழ்க்கையே பறி போன மாதிரி இருக்கீங்க. யார் வீட்டில்தான் சாவு வரலை. எழுந்திருச்சி வேலையைப் பாருங்க. இதான் சாக்குன்னு பத்து நாளா படுக்கையில் கிடக்கறீங்க”. 

மருமகள் கிரிஜாவின் மனதை அறுக்கும் பேச்சு. 

வழக்கமான வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள். கிரிஜாவை பொறுத்தவரை கமலம் மாமியார் இல்லை. சம்பளமில்லாத வேலைக்காரி. 

மகன் லோகநாதன்… மனைவிக்கு பயந்தவன். எந்த பிரச்சினை என்றாலும், கமலத்தை தான் சத்தம் போடுவானே தவிர, கிரிஜாவை ஒரு வார்த்தை சொல்ல மாட்டான். 

சாந்தி இருந்தவரை அண்ணியின் குணம் தெரிந்து அம்மாவுடன் வேலைகளை பகிர்ந்து கொள்வாள். வாங்கும் சம்பளத்தையும் அப்படியே அண்ணியிடம்தான் கொடுப்பாள். 

“ஏன்ம்மா… சாந்தி… நீ வேலைக்குப் போறவ… எல்லா வேலையும் இழுத்து விட்டுக்கிட்டு செய்யறே. நான் பார்த்துக்கிறேன் நீ கிளம்புமா…” 

“இருக்கட்டுமா.. நீ ஒண்டியா எவ்வளவு வேலைதான் செய்வே.” 

“என்னம்மா செய்யறது. உங்க அண்ணி கொஞ்சமும் இரக்கம் இல்லாதவளா இருக்காளே… அவளை அண்டியிருக்க நாம் அவ சொல்றதை கேட்டால்தான் காலம் தள்ள முடியும்”. 

அன்று மகனுடன் வீட்டிற்கு வந்த சாந்தியை பார்த்ததும் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டாள் கமலம். 

“சாந்தி… உனக்கு இந்த சமயத்தில் ஆறுதலாக இருக்க வேண்டிய நான்… எதுவுமே செய்ய முடியாமல் கையாலாகதவளாக இருக் கேன்மா. ஒரு பத்து நாள் கூட வச்சு பார்த்துக்க முடியலை. உங்க அண்ணி கண்டிஷனா சொல்லிட்டா..” 

“உங்களையே வேறு வழியில்லாமல் இந்த வீட்டில் வச்சிருக்கேன். உங்க துணைக்கு உங்க மகளையும் கூட்டிட்டு வந்துடாதீங்க. டாக்டர்னு மயங்கி காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா… நீங்களும் பொட்டு தங்கம்கூட வச்சுக்காம இருந்ததையெல்லாம் மகளுக்கு போட்டு அழகு. பார்த்தீங்க. இப்ப திரும்ப இங்கேயே வந்துடப் போறா… புருஷன் வீட்டிலேயே இருக்க சொல்லுங்க. என்ன சொல்றது புரியுதா…” 

“அம்மா… கடவுள் இதையெல்லாம் அனுபவிக்கணும்னு என் தலையில் எழுதி வச்சுட்டாரும்மா. என் மகன் பிரபு எனக்கு ஆறுதலா இருக்கான். நான் வாழ்க்கைப் பட்டு போன வீட்டில் நல்லதோ. கெட்டதோ அட்ஜெஸ்ட் பண்ணி இருந்துப்பேன்மா. எனக்காக அண்ணிகிட்டே பரிந்து பேசி, நீ வாங்கி கட்டிக்காதே. கடைசிவரை நான் இருக்க வேண்டிய இடம் அதுதான்ங்கிறதில் உறுதியோடு இருக்கேன்.” 

“உன்னை பார்க்கணும்னு தோணும்போது வந்து பார்த்துட்டு போறேன். என்னை பத்தி கவலைப்பட்டு உன் உடம்பை கெடுத்துக்காதே”. 

கவலைகளை விழுங்கி வாழ பழகி கொண்டாள் கமலம். 

மகனை நம்பி எந்த பிரயோசனமுமில்லை. கிரிஜாவை மீறி அவன் எதுவுமே செய்ய மாட்டான். என் காலம் இருக்கும்வரை இப்படி கவலைப்பட்டே வாழ வேண்டும் என விதித்திருந்தால் அதை யாரால் மாற்ற முடியும். 

தூங்கி எழுந்த முகத்தோடு வாசலுக்கு வந்தவள், 

“என்ன இன்னும் வாசலிலேயே நிற்கிறீங்க. கோலம் போட்டு அழகு பார்த்தவரைக்கும் போதும். உள்ளே வந்து அடுப்படியை சுத்தம் பண்ணிட்டு காபி போடுங்க உங்க பிள்ளை எழுந்துச்சுட்டாரு”. 

கிரிஜா உள்ளே செல்வ… 

தூக்கி கட்டிய சேலையை அவிழ்த்துவிட்டு, முந்தானையால் கையை துடைத்தபடி அடுப்படிக்குள் நுழைந்து அடுத்த வேலைக்கு தயாராகிறாள் கமலம்.

அத்தியாயம்-3

“அண்ணி இங்கே கொஞ்சம் வாங்களேன்.” 

சுமதி அழைக்க… 

“பிரபு கண்ணா… நீ சமர்த்தா உட்கார்ந்து விளையாடு. நான் அத்தை கூப்பிடறாங்க போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்.”

“நீ… போம்மா. நான் வாசலில் தாத்தாவோடு இருக்கேன்,” வாசலுக்கு வரும் பேரனை சிவனேசன் கைப்பிடித்து அழைத்து செல்ல, சுமதியின் ரூமிற்குள் வந்தவள்…! 

பயாலாஜி புக் திறந்திருக்க.. எதிரில் நோட்ஸை திறந்து வைத்தபடி அதன் மேல் குப்புறப்படுத்தபடி தலை தூக்கியிருக்கும் சுமதியை பார்க்கிறாள். 

“அண்ணி உங்களால எனக்கு ஒரு காரியம் ஆகணும்”. 

“என்ன சுமதி, உன் ரிகார்ட் நோட்டில் டிராயிங் வரைஞ்சு தரணுமா….” 

“கரெக்ட் ப்ளீஸ் அண்ணி.” 

“உன் பாடம் சம்பந்தமான வேலைகளை நீ செய்தால்தான் நல்லது. இருந்தாலும் நீ சொன்னா கேட்க மாட்டே கொடு எதை வரையணும்.”

அவள் அருகில் உட்கார… 

டிராயிங் பண்ண வேண்டியதை குறித்து அவளிடம் கொடுக்கிறாள்.

“அவசரமில்லை அண்ணி. ரெண்டு நாள் டயம் எடுத்துக்குங்க. வெள்ளிக்கிழமை தந்தால் போதும்.” 

“சரி. ஏன் ரூமிலேயே அடைஞ்சு கிடக்கிற. அத்தை டி.வி. பார்க்கிறாங்க. தாத்தாவும், பேரனும் வாசலில் விளையாடறாங்க. வாயேன் வெளியே போய் உட்காரலாம்”. 

“இல்லை அண்ணி முக்கியமான கால்க்காக வெயிட் பண்றேன். நீங்க போங்க. நாள் அப்புறமா வரேன்.”

“இந்த வருஷம் உன் படிப்பு முடியுது சுமதி மாமா, உனக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டாரு. உங்க அண்ணன் தினகருக்கு பெரிய இடத்திலிருந்து எல்லாம் வரன்கள் வருதாம். உன் கல்யாணம் முடியணும்னு இருக்காங்க”. 

“அண்ணனுக்கு அவசரம்னா முடிக்க வேண்டியதுதானே. நான் மெதுவாதான் கல்யாணம் பண்ணிப்பேன்”. 

“அப்படிதான் சொல்வே. ராஜகுமாரன் மாதிரி ஒருத்தன் வந்து நின்னதும் ஓகே சொல்லிடுவே.!” 

சிரிக்கிறாள் சாந்தி. 

சாந்தியின் கையை அன்போடு பிடித்தவள்… 

“அண்ணி. உங்களை நினைக்கும்போது தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. உங்க முகத்தில் பழைய மலர்ச்சி இல்லை. அண்ணன் இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். அம்மாவும் உங்களை ஒரு மருமகளாக நடத்தறதில்லை. நான் ஒண்ணு கேட்டா நீங்க தப்பா எடுத்துக்க கூடாது. கேட்கட்டுமா…” 

இதழ்களில் லேசான புன்னகை, உள்ளுக்குள் இருக்கும் வலியை புன்னகை மறைத்தாலும் கண்களில் நீரோட்டம். 

“நீங்க இங்கே இருந்தா அம்மா வார்த்தைகளாலேயே உங்களை நோகடிச்சுடுவாங்க. அண்ணன் இறந்து ஒரு வருஷம் ஓடிபோச்சு. இழப்பு அவங்களுக்கு மட்டுமில்லை… உங்களுக்கும்தான்ங்கிறதை அவங்க நினைச்சு பார்க்க மாட்டேங்கிறாங்க. உங்க அம்மா வீட்டில் போய் இருந்தா உங்க மனசுக்காவது ஆறுதலா இருக்கும். நீங்க ஏன் அண்ணி கொஞ்ச காலம் அம்மா வீட்டில் இருக்க கூடாது”. 

தன் மீது உள்ள அக்கறையில் பெரிய மனுஷத்தனமாக பேசும் நாத்தனாரை அன்போடு தழுவியவள்… 

“இது நான் வாழ வந்த இடம் சுமதி. உங்க அண்ணன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் ஆத்மா இருக்கிற இந்த இடத்தில்தான் நான் இருக்கணும்னு நினைக்கிறேன். நான் இங்கே சந்தோஷமாக இருக்கலைன்னாலும், நிம்மதியா இருக்கேன். இதுதான் எனக்கு பாதுகாப்பான இடம். இதை எந்த காரணத்துக்காகவும் நான் விட்டுக் கொடுக்க விரும்பலை சுமதி”. 

“உங்க எண்ணம் புரியுது. ஆனா.. அம்மா அது மாதிரி நினைக்கலையே…”

அவள் குரலில் வருத்தம் தெரிந்தது. 

“பரவாயில்லை சுமதி. அத்தைதானே… என்னை திட்டறாங்க. கோபப்படறாங்க. அதை நாள் பெரிசா எடுத்துக்கறதில்லை. பிரபு பெரியவளாகி எனக்கு பக்கபலமாக வரும்வரை என் புகுந்த வீடுதான் எனக்கு பாதுகாப்பு” 

“சாந்தி… சாந்தி எங்கே போனே. எனக்கு தலைவலிக்குது சூடா காபி போட்டு எடுத்துட்டு வா…” 

அம்சவள்ளி கூப்பிட.. 

“இந்தா வந்துட்டேன் அத்தை…”

பரபரப்பாக எழுந்து செல்லும் சாந்தியை பாவமாக பார்க்கிறாள் சுமதி.


“ஹலோ. க்ருபா… என்ன இன்னைக்கு இவ்வளவு லேட்டா கூப்பிடறீங்க…” 

“ஸாரி சுமதி, ஆபீசில் முக்கியமான மீட்டிங் முடியவே ஏழு மணி ஆயிடுச்சு. வீட்டுக்கு வந்ததும் உனக்குதான் கால் பண்றேன்.”

“உங்ககிட்டேயிருந்து போன் வரலைன்னு நான் இன்னும் சாப்பிட கூட போகலை தெரியுமா. அண்ணி கூப்பிட்டுகிட்டே இருக்காங்க…”

“ஸாரி டியர்… ரொம்ப பசிக்குதா.. காலேஜ் விட்டு வந்து எதுவும் சாப்பிடலையா…” 

“ம்கூம். காபி மட்டும்தான்”. 

“உனக்காவது வருந்தி வருந்தி கூப்பிட அண்ணி, அம்மா எல்லாரும் இருக்காங்க. எனக்கு, வந்தா… வான்னு கூப்பிட்டு ஒரு வாய் காபி கொடுக்க கூட ஆளில்லை. சித்தப்பாவும் ஊரில் இல்லை”. 

“நான் வரட்டுமா…” 

“அந்த நாளுக்காகத்தான் நானும் காத்திருக்கேள் சுமதி, உனக்கு. படிப்பு முடியணும். அப்புறம் நம் காதலை உங்க பெத்தவங்க கிட்டே சொல்லணும். என்னை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா யாருமில்லாத இந்த அனாதையை உங்க வீட்டில் ஏத்துக்கணும்.” 

“ஏன் இப்படி பேசறீங்க க்ருபா. நீங்க படிச்சவர், ஒரு பெரிய நிறுவனத்தில் ஜி.எம்.மாக முக்கிய பதவியில் இருக்கீங்க. சொந்தமா வீடு. கார்னு நல்ல நிலைமையில் இருக்கிற உங்களை மாப்பிள்ளையாக அடைய அவங்கதான் கொடுத்து வச்சிருக்கணும்”. 

“நிஜமாகத்தான் சொல்றியா சுமதி.” 

“ஆமாம். உங்களுக்கென்ன குறைச்சல், அதுவுமில்லாம என் மனசுக்கு பிடிச்சவர் நீங்க. நான் யாருக்காகவும் உங்களை விட்டுத்தர மாட்டேன். நம் காதல் நிச்சயம் கல்யாணத்தில்தான் முடியும் கவலைப்படாதீங்க..”

“ஓகே சுமதி. நீ போய் சாப்பிடு. சமையல்காரன் என்ன செய்து வைச்சிருக்கான்னு தெரியவை, நானும் போய் டின்னரை முடிக்கிறேன்”.

அத்தியாயம்-4

“சாந்தி… உன்னைத்தான் சாந்தி.” 

“ம்… சொல்லுங்க… காதில் விழுது”. 

அவன் பக்கம் திரும்பாமல் கையிலிருந்த ஸ்வெட்டரை பிண்ணியபடி பதிலளிக்கிறாள். 

“இனிமே… என்னை கவனிக்கத்தான் மாட்டே.. காதலிங்கிற திலிருந்து மனைவிங்கிற ப்ரமோஷன்.. இப்ப அம்மாங்கிற பிரமோஷன்… என்னை இனிமே கண்ணிலே பார்க்கிறதே அபூர்வமாக போயிடும் போலிருக்கு.”

“நான்தான் பாவம். எனக்குன்னு யார் இருக்கா…” முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு திவாகர் பேசு, வந்த சிரிப்பை அடக்கி கொண்டவளாக.. 

“இப்ப நான் என்னதான் பண்ணனும்…” 

“அம்மா, தாயே… நீ எதுவும் பண்ண வேண்டாம். உன் மகனுக்கு ஸ்வெட்டர் பின்னு… ஆஸ்பத்திரியில்தான் பேஷண்டோடு போராடறேன். வீட்டுக்கு வந்து பெண்டாட்டியோடு ஜாலியா பேசிட்டு இருப்போம்னு பார்த்தா… அதுவும் நடக்க மாட்டேங்குது. அப்ப நான் பாவம்தானே…” 

பின்னிக் கொண்டிருந்த ஸ்வெட்டரை டேபிளின் மீது வைத்தவள், எழுந்து திவாகரிடம் வருகிறாள். கைகளை மாலையாக்கி அவன் கழுத்தில் போட்டவள், “டாக்டர் சார்… உங்க ஒய்ஃப் வந்தாச்சு. இனி நீங்க ஜாலியா பேசலாம்.” 

கண்களில் குறும்புடன் பார்க்க… 

மேடிட்ட அவள் வயிற்றை அன்போடு தடவியவள், தன்னருகில் உட்கார வைக்கிறான். 

“சாந்தி… நீ சந்தோஷமா இருக்கியா…!” 

“இதென்ன கேள்வி திவா. ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். மனசுக்கு பிடிச்ச கணவர், இன்னும் கொஞ்ச நாளில் வெளியே வரப்போகும் என் மகன்… தாய்மையின் பூரிப்போடு நிறைவா இருக்கேன்…” 

“இருந்தாலும் அம்மா மனசில் உன்மீது கொஞ்சம்கூட பரிவு இல்லை சாந்தி. மாசமா இருக்கேன்னு கூட பார்க்காம… உன்கிட்டே கடுமையா பேசறாங்க. நீ நிறைய சீரோடு வரலைன்னு அவங்களுக்கு வருத்தம். பெத்தப் பிள்ளையின் சந்தோஷம் முக்கியம்னு நினைக்காம பணம் தெரியலை. காசை பெரிசா நினைக்கிற அவங்களை எப்படி மாத்தறதுன்னு தெரியலை”

“எதுக்கு திவா. தேவையில்லாத பேச்சு. பெண்டாட்டிகிட்டே ஜாலியா போற பேச்சு இதுதானா… அத்தை குணம் மாறப் போறதில்லை. அவங்க நம்ப காதலை ஏத்துக்கிட்டதே பெரிய விஷயம்.” 

“தன் மகன் டாக்டர். நிறைய வரதட்சணை, நகைகளோடு மருமகளை எதிர்பார்த்து இருக்கலாம். அது நடக்காம்போன ஏமாற்றத்தின் எதிரொலிதான் அவங்க பேச்சு, நடவடிக்கை எல்லாம். போக போக சரியாயிடும். வேறு ஏதாவது பேசுவோமே.” 

கண்களில் சிரிப்புடன் பார்ப்பவளை, தழுவி கொண்டவன்… 

“கடைசிவரை இதே மாதிரி எங்க குடும்பத்தோடு அனுசரிச்சு போவியா சாந்தி” 

“எங்க குடும்பம் இல்லை. நம்ப குடும்பம். என்னால எந்தப் பிரச்சினையும் வராமல் பார்த்துப்பேன். கடைசிவரை நாமெல்லாம் ஒத்துமையா இருப்போம் போதுமா.”

“இது போதும் சாந்தி, கடைசிவரை இதே அன்பான குணத்தோடு நல்ல மருமகளாக இருக்கணும். உன்னை நினைச்சு நான் ஒவ்வொரு நாளும் பெருமைப்படனும்”. 

படுக்கையில் ஒருக்களித்து படுத்திருந்த சாந்தியின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் தலையணையை நனைக்கிறது. 

“நீங்க நினைச்ச மாதிரி நான் நல்ல மருமகளாக இருப்பேன் திவா. ஆனா எனக்கு உயிர் ஆதாரம் நீதானே. நீங்க இல்லாத உங்க சாந்தி ஒரு நடைபிணமாகதான் வாழ்ந்துட்டு இருக்கேன். நம்ப மகன் பிரபு. அவனுக்காகத்தான் என் உயிர் இன்னும் இந்த பூமியில் இருக்கு. இல்லாட்டி நானும் உங்ககிட்டே வந்திருப்பேன் திவா.” 

– தொடரும்…

– பிறை தேடும் இரவு (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 2014, செல்வி பெண்கள் நாவல், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *