கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 972 
 

நண்பகல் நேரம். நீதி மன்றத்தின் உள்ளே பார்வையாளர்கள் பகுதியில், டாக்டர் கங்கா மணியின் கணவர், கனமான உடல்வாகு கொண்ட பொன்னு ரங்கமும் அவரது நண்பர் ஒல்லியான மணியும் அமர்ந்து இருந்தனர். மணி சன்னமான குரலில் பேசினார் :

‘ ஏம்பா கோல்டு, ஒங்க மனைவி தொடுத்த வழக்கை நீ வக்கீல் செல்லப்பா கிட்ட கொடுத்தே அங்க பாரு ஒன்ன மாதிரியே உருவம் கொண்ட ஆள்

வக்கீல் ட்ரெஸ் ல இருக்காரு இப்படி ஒரு ஆள் அவர் டீம்ல இருக்காருன்னு செல்லப்பா உன் கிட்ட சொல்லலையா?’

பொன்னு ரங்கம் பதில் அளித்தார்

‘சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் னு விட்டுப்பாரு ‘

‘எனக்கு என்ன தோணுது ன்னா சினிமா, நாவல்ல வரா மாதிரி ஒங்க தந்தையார், உனக்கும் ஒங்க தாயாருக்கும் தெரியாம இன்னொரு குடும்பம் நடத்தி இருப்பாரு போல.. ‘

‘மணி சொன்னதற்கு பொன்னு ரங்கம் அவரை முறைத்தார். ‘ என்னய்யா இது ஒரு நொடில, மேல போய்ட்ட எங்க அப்பாவை ரெண்டு மனைவி ஆள் ஆக்கிட்டே….. சரி.. ஹியரிங் ஆரம்பிக்க போவுது.. பேசாம இரு.. என்றார் பொன்னு ரங்கம்.

நீதிபதி முத்துக்குமரன் தமது இருக்கையில் வந்து அமர்ந்தார். நீதிபதி பேசினார்

‘மகப்பேறு மருத்துவர் கங்கா மணி வெர்சஸ் செய்திக் கதம்பம் நாளிதழ் சென்னை… ஆரம்பிங்க..’

ஒல்லியான தேகம் கொண்ட இளம் வழக்கறிஞர் எழுந்து நின்றார்

‘ மி லார்ட், நான் வீர குமார்… என்னுடைய கட்சிக்காரர் செய்திக் கதம்பம் நாளிதழ் மருத்துவர் கங்கா மணி பற்றி அவர்களுக்கு கிடைத்த செய்தியை வெளியிட்டதற்காக அவர் மான நஷ்ட வழக்கு தொடுத்து இருக்கிறார் ‘

நீதிபதி குறுக்கிட்டார் – ‘அது எனக்கு தெரிகிறது. உங்கள் ப்ளீ என்ன? ‘

வீர குமார் பேசினார் :

‘பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் பற்றி வரும் தகவல்களை இந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது. அந்த காலம் அதாவது பத்தியின் தலைப்பே காற்று வாக்கில் என்பது. இதை அவர் எளிதாக கடந்து செல்ல வேண்டும்’

‘அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் செய்து விட்டார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்… ‘

‘மி லார்ட் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்… ‘

சரி வீர குமார். நீங்கள் அமருங்கள். டாக்டர் கங்கா மணி சார்பாக….’

பொன்னு ரங்கம் போல் இருக்கும் நபர் எழுந்து நின்றார்.

‘ மி லார்ட், நான் ராஜப்பா….’

‘ உங்கள் வாதங்களை முன் வையுங்கள்’ என்றார் நீதிபதி. ‘ மி லார்ட் என்னுடைய கட்சிக்காரர் மகப்பேறு மருத்துவர் கங்கா மணி அவர்கள், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தொழில் முறை மருத்துவராக மருத்துவம் பார்த்து வருகிறார். ரோஜா மருத்துமனையில் மட்டும் அல்ல மற்ற நேரங்களில் அவர் வசித்து வரும் பகுதியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு மருத்துவ யோசனை உடன் பிரசவம் பார்த்து வருகிறார். விளிம்பு நிலை பெண்களுக்கும் அவர்களின் அழைப்பின் பேரில் பிரசவம் பார்த்து வருகிறார். அவரைப் பற்றி ரோஜா மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியாமல், அங்கு இறந்த நோயாளிகளின் உள் உறுப்புகளை கங்கா மணி திருடுகிறார் அவர் கணவர் பொன்னு ரங்கம் அவற்றை வியாபாரம் செய்கிறார் என்று அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளது செய்திக் கதம்பம் நாளிதழ். மிகுந்த மன உளைச்சலுக்கு என் கட்சிக்காரர் ஆளாகியுள்ளார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அவரை வம்புக்கு இழுத்து அவருடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட இந்த பத்திரிகை நிறுவனம், இதற்கு மன்னிப்பை முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட விருப்பம் இல்லை என்றால் நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாயை எனது கட்சிக்காரருக்கு தர வேண்டும். பல தாய்மார்கள் தங்கள் குழந்தையைப் பெற்றெடுக்க உதவி புரியும் என் கட்சிக்காரருக்கு அவருக்கு என்று…

வீர குமார் எழுந்தார் ‘ தனிப்பட்ட விஷயம் சொல்லி நீதிமன்றத்தின் இரக்கம் பெற முயற்சி செய்வதை அனுமதிக்க கூடாது யுவர் ஆனர்’ என்றார்.

நீதிபதி முத்துக்குமரன் சொன்னார் – மிஸ்டர் ராஜப்பா, பர்சனல் நோட் வேண்டாம் தொடருங்கள்… ‘

ராஜப்பா கூறினார் : அதுதான் மி லார்ட், இது வரை, மருத்துவ துறையிலும் பொது மக்கள் இடையேயும் அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர் என்று நற்பெயர் பெற்ற என் கட்சிக்காரருக்கு எதிராக அவதூறு வெளியிட்டதற்கு முதல் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு வெளியிட வேண்டும் அல்லது ரூபாய் ஒரு கோடியை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அவ்வளவு தான் யுவர் ஆனர். ‘

ராஜப்பா அமர்ந்தார்.

நீதிபதி முத்துக்குமரன் பேசினார்

‘மகப்பேறு மருத்துவர் கங்கா மணி அவர்கள் பற்றி வந்த செய்தியை நான் வாசித்துப் பார்த்தேன். அதை எழுதிய மிஸ்டர் எக்ஸ் என்பவர் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் கங்கா மணி மருத்துவம் பார்த்து இருப்பார். ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே என்றும் ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் என்றும் தமிழ் இலக்கிய வரிகள் அன்னையின் பெருமையை சொல்லும். உயிருக்குள் உயிர் வளர்க்கும் பெண், குழந்தையைப் பெற்றெடுப்பது மறு பிறவி என்றே முன்பெல்லாம் சொல்வார்கள். இத்தனை ஆண்டுகளாக பிரசவ மருத்துவம் பார்த்தவர் அவரும் ஒரு தாய்தானே. பலரும் வாசிக்கும் நாளிதழில் அவரைப் பற்றி மெடிக்கல் மாபியா போல் அவதூறு எழுதியதற்கு அந்த நாளிதழ் தங்கள் முதல் பக்கத்தில் மறுப்பும் மன்னிப்பும் வெளியிட வேண்டும். தவறினால் அவர் கோரி உள்ளவாறு ரூபாய் ஒரு கோடியை அந்த பத்திரிகை நிறுவனம் வழங்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. ‘

வீர குமார் எழுந்து நின்றார் -‘யுவர் ஆனர், இதை ஏற்க இயலாது. நாங்கள் மேல்முறையீடு செய்வோம்’ என்றார். நீதிபதி முத்துக்குமரன் ‘இதுதான் தீர்ப்பு. கோர்ட் இத்துடன் கலைகிறது’ என்று கூறி வெளியேறினார். வீர குமார், வேகமாக நீதிமன்றத்திலிருந்து வெளியே சென்றார். பொன்னு ரங்கம், ராஜப்பா அருகில் வந்தார். தன்னைப் போலவே இருக்கும் பொன்னு ரங்கத்தைப் பார்த்த ராஜப்பாவின் விழிகள் விரிந்தன. மணி, ‘சார் இவர்தான் பொன்னு ரங்கம், கங்கா மணியின் லைப் பார்ட்னர்’ என்று அறிமுகப்படுத்தினார். பொன்னு ரங்கம், நெகிழ்ந்து போய் அவரது கைகளைப் பற்றிக் கொண்டார். ராஜப்பா அவரது தோள்களை அன்புடன் தொட்டார்.

– என்னைப் போல் ஒருவன் – உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட 10 கதைகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *