அடிச்சுவட்டில் ரத்தக் கறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2024
பார்வையிட்டோர்: 2,311 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆடம்பரமான வாழ்க்கைக்குத் தங்களை ஈடு கொடுத்துவிட்டவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் சிறிது குறைந்தாலும்கூட வாழ்க்கையே வறண்டுவிட்டது போல நினைப்பார்கள். 

இருபத்து நான்கு கல்லில் வைரத்தோடு போட்ட பெண்ணுக்கு, இருபது கல் தோட்டைக் கொடுத்தால் அது வைரம் போல் தோன்றாது. 

பளிங்குத் தரையில் படுத்திருந்தவனைச் சிமிண்டுத் தரையில் படுக்கச் சொன்னால் அது பாறாங்கல்போல் குத்தும். 

அனுபவிக்கின்ற வசதியில் சிறிது குறைந்தாலும், சிலர் தாங்கள் ஆண்டியாகி விட்டதாகவே நினைக்கிறார்கள். 

இத்தகைய சுபாவம் கொண்ட சமூகத்தில் வைதேகி மட்டும் விதி விலக்கல்லவே. 

வைதேகி என்று சீதையின் பெயர். சீதை புன்னகைக்கு அடிமையே தவிர பொன்னகைக்கு அடிமையல்ல. ஆனால் இந்த வைதேகி சீதையாக வாழ விரும்பவில்லை. 

காதல் இன்பத்தில் ராதையாகவும், கல்விச் சிறப்பில் மேதையாகவும், செல்வ சுகத்தில் ராணியாகவும் வாழ விரும்பினாள். அவள் பிறந்ததும் அத்தகைய வீட்டில்தான். 

குருவாயூர் கோபாலகிருஷ்ணன் பிள்ளை என்றால், திருச்சி நகரில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. மாதம் ஒருமுறை அவர் குருவாயூர் தரிசனம் செய்ததால் அவருக்கு அந்தப் பட்டப் பெயர் வந்தது. 

தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு வெல்லம் ஏற்றுமதி செய்து லட்சக் கணக்கில் சம்பாதித்தவர் அவர். மகள் பள்ளிக்குப் போவதற்கே ஒரு காரும் ஆயாவும் வைத்திருந்தார். காரிலே பட்டுப் பாவாடை பத்திருக்கும். ஒன்றிலே அழுக்கேற்பட்டு விட்டால் இன்னொன்றை மாற்றிக் கொள்ள வசதி. எல்லாக் குழந்தைகளும் யூனிபாரம் போட்டு வந்தாலும் வைதேகி மட்டும் யூனிபாரம் போடமாட்டாள். அவள் படிப்பதுதான் பாடம். ஆசிரியைகளுக்கும் அவள் சொல்வதுதான் வேதம். 

பக்கத்து வீட்டுக் குழந்தை புதுரக வளையல் போட்டிருந்தால், பத்து மணி நேரத்தில் அதே மாதிரி வைதேகிக்கு வந்து விடும். 

‘செல்லங் கொடுத்து வளர்க்கும் குழந்தையும் செருப்பில்லாம நடக்கும் காலும் ஏதாவது ஓர் விபத்தைச் சந்தித்தே தீர வேண்டியிருக்கும்’ என்பார்கள்.

ஆனால் பருவம் வரும்வரை ஒரு விபத்தும் இல்லாமல் செல்லப் பெண்ணாகவே வளர்ந்து விட்டாள் வைதேகி.

சாதாரணக் கல்லூரியிலா அவள் படித்தாள்? சென்னை கல்லாரி ஒன்றில் சேர்ந்து, தனி வீடு பிடித்து சமையல் வைத்து, ஒரு காரும் வைத்துக் கொண்டிருந்தாள். 

பணக்காரி என்பதால் தோழிகள் அதிகம். தோழிகள் அதிகம் என்பதால், தினசரி கதை பேசுவதும் அதிகம்.

யாரோ இடக்காடு ஜமீன்தார் மகனாம், இம்பாலா கார் வைத்திருக்கிறானாம். கல்லூரியில் தங்கையை பார்க்க வருவானாம். பிரமாத அழகனாம். எந்தப் பெண்ணோடும் பேச மாட்டானாம். வைதேகியைக் கண்டால் விடமாட்டானாம்! 

இப்படிச் சொல்லிவிட்டாள் தோழி ஒருத்தி. 

‘அவன் எப்படித்தான் இருக்கிறான். பார்ப்போமே’ என்று ஒரு நாள் கல்லூரி முடிவதற்குக் கொஞ்ச நேரம் முன்பே வெளியே வந்தாள் வைதேகி. 

அங்கே இம்பாலா நின்றது. அவனும் நின்றான். சும்மா சொல்லக் கூடாது. அவன் அந்தக் காலத்துப் பாகவதர் மாதிரி அழகாகத்தான் இருந்தான். 

அழகான ஆடவனைக் கண்டால் சில பெண்களுக்குள்ளே ஏதோ ஒன்று பீரிட்டு எழுமே, அப்படி ஒன்றும் எழுந்து விட வில்லை வைதேகிக்கு. ஆனால் மனத்தை என்னவோ செய்யத் தான் செய்தது. 

“நீ சொன்னது உண்மை தானடி”, என்றாள் தோழியிடம். 

“அவன் பி.எஸ்.ஸி. முதல் வகுப்பு மாலதியின் அண்ணன்தான். அதோ மாலதி காரில் ஏறுகிறாள் பார்த்தாயா? நாளைக்கு மாலதியி டம் சொல்லி வரும் ஞாயிற்றுக்கிழமை யன்று உன் வீட்டுக்கு விருந்துக்கு வரச் சொல்கிறேன். கொஞ்ச நேரம் ஆடிப்பாடிக் கொண்டிருக்கலாம்”, என்றாள் தோழி. 

ஞாயிற்றுக் கிழமையும் வந்தது. அவனும் வந்தான். மாலதியும்கூட வந்தாள். மேஜையின் மீது விதவிதமான சாப்பாடிருந்தது. உள்ளங்கையிலிருந்து முழங்கை வரையிலே வளையல் போட்டிருந்தாள், வைதேகி. அன்றைக்குப் பெண்கள்தான் அதிகம் பேசினார்களே தவிர, அவன் குறைவாகவேதான் பேசினான். 

அலை அலையாய்ச் சுருண்ட அழகிய கூந்தல், எடுப்பான நெற்றி, நீண்ட கைகள், சிவந்த முகம், சிவந்த கழுத்தில் மின்னிக் கொண்டிருக்கும் மைனர் சங்கிலி, சாக்லெட் கலரில் ஒரு வகையான புஷ் சர்ட், அதே கலரில் பாண்ட். 

ஆடம்பரமான பெண்களுக்கு எப்போதும் அடக்கமான மனிதனைத்தான் பிடிக்கும். வைதேகி விருந்து பரிமாறினாள். இல்லை, விழுந்து பரிமாறினாள். அவன் கூச்சத்தோடு சாப்பிட்டான். 

“சும்மா சாப்பிடண்ணா” என்று உற்சாகப் படுத்தினாள் மாலதி. 

அவனும் நிறையச் சாப்பிட்டு விட்டவன் போல் நடித்துக் கொண்டான். ஆனால், வாய்வு பதார்த்தங்களை ஒதுக்கி முறையாகவும், குறைவாகவும்தான் சாப்பிட்டான். 

அவனது குரல் இனிமையில் எதையோ பறிகொடுத்தவள் போலானாள் வைதேகி. டெலிபோன் நம்பரை வாங்கிக் கொண்டு அடிக்கடி டெலிபோன் செய்ய ஆரம்பித்தாள். இரவிலே தலையணையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கற்பனை செய்ய ஆரம்பித்தாள். 

அவளுக்கிருந்த மோகமும், வேகமும் அவனுக்கும் இருந்தன என்றாலும், அவன் கொஞ்சம் அடக்கமாக இருந்தான். 

இந்தக் காலத்துப் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம். ஒரு ஆடவனை அவர்கள் சந்திக்க விரும்பினாலும், அவனிடம் கெட்டுப் போக விரும்பினாலும் கூட அதை அவர்கள் சுலபமாக நிறைவேற்றிவிட முடியும்.

வைதேகியோ, மாலதியின் அண்ணன் சின்ன கிருஷ்ணனோ கெட்டுப் போக விரும்பவில்லை. மணந்தால் இருவரும்தான் மணந்து கொள்வது என்று முடிவு கட்டினார்கள். 

அதற்கு யார் குறுக்கே நிற்கப் போகிறார்கள்?

சின்ன கிருஷ்ணனின் பெற்றோருக்கு சின்ன கிருஷ்ணனையும், மாலதியையும் தவிர வேறு குழந்தைகள் கிடையாது. வைதேகியோ பெற்றோருக்கு ஒரே செல்லக் குழந்தை. 

அங்கே அவள் சொல்ல, இங்கே இவன் சொல்ல சம்பந்தமும் பேசித் திருமணமும் முடிந்து விட்டது. 

திருமணம் முடிந்த முகூர்த்தம் அரசாங்க அதிகாரியாகப் பதவி வகித்த சின்ன கிருஷ்ணன், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உயர்ந்தான். 

நாட்டிலே எங்கெங்கு சுக வாசஸ்தலங்கள் உண்டோ அங்கெல்லாம் அவர்கள் தேநிலவுக்குப் போனார்கள். 

அவள் படிப்பைப் பாதியிலே முடிக்க வேண்டி வந்தாலும், அவன் கலெக்டராகி விட்டான். கணவன் முகத்தைப் பார்ப்பதிலும் அவனைக் காதலிப்பதிலும் அளவற்ற இன்பத்தைக் கண்ட வைதேகி, அவன் பக்கத்தில் நின்று தங்களைப் பத்துப் பேர் பார்க்க வேண்டும் என்று கூட ஆசைப் பட்டாள். எங்கேயாவது வெளியே போவதென்றால் அவளுக்குக் கொள்ளை உற்சாகம். இருவரும் நடந்து வந்தால் ரதியும், மன்மதனும் நடந்து வருவது போலிருக்கும். 

கடவுள் சில நேரங்களில் சிலருக்கு நினைத்ததெல்லாம் கிடைக்கும் படி வரத்தை அருளிவிடுகின்றான். அந்த வரம் தனக்குக் கிடைத்திருப்பதாகவே வைதேகி கருதினாள். 

சாதாரணமாகக் கோவிலுக்குப் போயறியாத வைதேகி, பிளாட்பாரத்து வினாயகருக்கெல்லாம் தேங்காய் உடைக்க ஆரம்பித்தாள். 

முதல் பிரசவமே இரட்டைப் பிரசவம். கணவனே நினைவாக இருக்கிற மனைவி, கணவனைப் போலத்தானே குழந்தையைப் பெற்றெடுப்பாள்! லவனும் குசனும் போல் இரண்டு குழந்தைகள் அவளுக்கு வாய்த்தன. 

குழந்தை பிறந்தது ஜூன் மாதம்.

ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் கோவையில் ஒரு வேலை நிறுத்தம் நடந்தது. அமைச்சர்கள் தலையிட்டுத் தீர்க்க வேண்டிய காரியத்தைக் கூடத் தானே தலையிட்டுத் தீர்த்து வைக்கும் சின்ன கிருஷ்ணன், இந்த விஷயத்தையும் தானே முடித்து விட விரும்பினான். இரு தரப்பிலும் அவனே பேச்சு வார்த்தை நடத்தினான். 

எப்போதுமே ஒழுங்கான தொழிலாளர்களுக்கிடையே ஒன்றிரண்டு விஷமிகள் ஊடுருவி விடுவார்கள். அப்படிப் புகுந்த ஒருத்தன், ஊரிலே கலவரத்தை உண்டு பண்ணக் கருதி ஒரு பயங்கர வேலையைச் செய்தான். 

மில் முதலாளியோடு பேச்சு நடத்திவிட்டு சின்ன கிருஷ்ணன் வெளியில் வந்தபோது பயங்கரமான வெடிகுண்டை வீசினான் அவன். 

கார் சிதறியது. காருக்குள்ளிருந்த சின்ன கிருஷ்ணன் தூக்கியெறிந்து கொல்லப்பட்டான். 

மாதம் ஒன்றாகி விட்டது, கணவன் மறைந்து. வைதேகி படித்து விட்ட காரணத்தால் கணவன் மறைந்த பிறகும் பட்டுச் சேலை கட்டிப் பொட்டு வைத்துக் கொண்டுதான் இருந்தாள். 

ஒருநாள் மாலை, ஆறு மணி இருக்கும். முன்புறத்துப் பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. 

திடீரென்று ஆடம்பரமான கார் ஒன்று உள்ளே நுழைந்தது. அந்தக் கார் யாருடையதென்று வைதேகிக்குத் தெரியும். மில் முதலாளி ஜனார்த்தனத்தின் காரே அது. 

பால கோபாலா மில்லின் உரிமையாளர் அறுபது வயதைத் தாண்டி விட்ட ஜனார்த்தனத்திற்கு இரண்டு ஆண் குழந்தைகள் உண்டு. மனைவி இறந்து இருபது வருஷங்களாகி விட்டன. மறு விவாகம் செய்து கொள்ளவில்லை. இரண்டு பையன்களுக்கும் திருமணம் முடித்து பாகம் பிரித்து அனுப்பிவிட்டார். பெரிய பெண் வேட்டைக்காரரல்ல, ஆனால் வைதேகியைப் போலவே ஆடம்பரப் பிரியர். 

“இதோ பாரம்மா, உன் கணவன் உத்தமமானவன், பேரழகன். அவனை இழந்ததில் எங்களுக்கே தாள முடியாத துயரம் என்றால் உனக்கு எவ்வளவிருக்கும்? என்ன கஷ்ட காலமோ உன் தகப்பனாருக்குக் கூடத் தொழில் நொடித்துப் போய் விட்டதாகக் கேள்விப் பட்டேன். நீ நன்றாக வாழ்ந்தவள். வசதியாக வாழ்ந்தவள். இருக்கின்ற பணத்துக்குள் ஒருவேளைச் சாப்பாடு என்றெல்லாம் வாழ முடியாது. நானும் கடல் மாதிரி வீட்டை வைத்துக்கொண்டு தனியாகத்தான் இருக்கிறேன். அதில் இரண்டு ஏக்கர் நிலத்தில் பூங்கா இருக்கிறது. இந்தக் குழந்தைகளும் அங்கே விளையாடிக் கொண்டு திரியும். நீ கூச்சப் படவோ, வருத்தப்படவோ தேவையில்லை. ‘ஏன் வந்தாய், எதற்கு வந்தாய்’ என்று உன்னைக் கேள்வி கேட்கக் கூடியவர்கள் அங்கே யாருமில்லை. நீ விரும்புகிற காலம்வரை அங்கே நிம்மதியாக இருக்கலாம். என்னுடன் வந்து விடு!” என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லி விட்டார், முதலாளி. 

‘என் மகள் மாதிரி’ என்றோ. ‘என் தங்கை மாதிரி’ என்றோ சம்பிரதாயச் சொற்களை அவர் சொல்லவே இல்லை. 

“நான் யோசிக்கிறேன்!” என்று இழுத்தாள் வைதேகி.

“இதிலே யோசிப்பதற்கு என்ன இருக்கிறது. நீயும் யாரையும் கேட்க வேண்டியதில்லை. நானும் யாரையும் கேட்க வேண்டியதில்லை, புறப்படு!” என்றார், அவர். 

ஆடம்பரத்தையே அதிகமாக நேசிக்கும் வைதேகி, மேலும் சிந்திக்க விரும்பவில்லை. “போய்க் காலையிலே கார் அனுப்புங்கள்” என்று கூறிவிட்டாள். 


முதலாளி சொன்னது பொய்யல்ல. வீடு கடலேதான். ஆனால் எத்தனை திமிங்கிலங்கள், சுறாமீன்கள் இருக்குமோ என்ற பயம் அவளுக்கு வந்தது. 

வேலைக்காரர்கள் அறிமுகம் நடந்தபோது ஒருவருமே அவளுக்கு மோசமானவர்களாகத் தோன்றவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் தன்னை எஜமானி என்று அழைத்தது அவளுக்கு வெட்கமாகவும், கவலையாகவும் இருந்தது. ஆனால் அந்த வெட்கமும் கவலையும் கொஞ்ச நேரம்தான். “ஒரு வேளை அப்படி ஆகி விட்டால் தான் என்ன கெட்டது?” என்றே அவள் முடிவு கட்டினாள். 

அவள் புதுமைப் பெண்ணாக வளர்ந்தவளல்லவா! புதிய விஷயங்களைச் சீக்கிரம் ஏற்றுக் கொண்டு விடுவாள். 

எஸ்டேட் மானேஜர் என்று ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்ட போது, தான் ஒரு எஜமானி என்ற உணர்வே அவளுக்கு வந்து விட்டது. 

‘நாலைந்து நாட்கள் தான் ஒரு விருந்தாளி’ என்ற நினைவு அவளுக்கு இருந்தது. பிறகு, அதிகார தோரணையே வந்து விட்டது. 

‘நீ என்னோடு வாழுகிறாயா’ என்று அவரும் கேட்கவில்லை. ‘உங்களுக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறதா’ என்று இவளும் கேட்கவில்லை. 

இயற்கையாகவே பரிமாறுவது, பக்கத்தில் உட்கார்ந்து பேசுவது என்று ஆரம்பித்து மனைவி போலவே ஒரு பந்தம் உருவாகி விட்டது. 

முதலாளி துணிச்சல்காரர். “இப்படியே நான் உன்னை விட்டு விடப் போவதில்லை.” என்று ஏராளமான நண்பர்களை வரவழைத்து அவளைத் திருமணமே செய்து கொண்டு விட்டார். 

திருமணத்திற்குப் பரிசு பொருள்களும் வந்தன. 

பணக்காரன் எந்த வயதில் எதைச் செய்தாலும் உலகம் ஒப்பு கொள்ளத்தான் செய்யும். 

வாழ்க்கையை சக்கரவர்த்தியாகத் துவங்கி விட்டோம் என்று ஆதப்பட்ட வைதேகி, தனக்கு வந்த பரிசுப் பொருட்களை உடைத்துக் கூடப் பார்க்கவில்லை. அதிலெல்லாம் என்ன இருக்கப் போகிறதென்று – சாதாரணமாக இருந்து விட்டாள். 

ஒரு மாத காலம் தங்களுடைய சொந்தக் கப்பலில் அரபு நாடுகளுக்கெல்லாம் விஜயம் செய்து திரும்பியபின், “ஏன் இந்தப் பரிசுப் பொருட்களை உடைத்துக்கூட நீ பார்க்கவில்லை?” என்று கேட்டார், ஜனார்த்தனம். 

குழந்தைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவற்றையெல்லாம் பிரித்தாள் வைதேகி. 

”அம்மா! அம்மா! இந்த டப்பாவில் ஒன்றுமே இல்லை. கடுதாசி இருக்கிறது!” என்று எடுத்துக் கொடுத்தான், ஒரு பையன். 

கடுதாசியைப் பிரித்துப் பார்த்தாள் வைதேகி. 

“சகோதரி, உன்னை அடையத் தானே உன் கணவரைக் கொலை செய்தார் ஜனார்த்தனன். அதில் அவர் வெற்றி பெற்று விட்டார்.” என்பது அந்தக் கடிதத்தின் வாசகம். 

கடிதத்தைப் படித்த வைதேகி பதறவில்லை. தன் அடுத்த வாழ்க்கையைப் பற்றிய யோசனையில் இறங்கினாள். 

[ஒனாசிஸ் -ஜாகுலின் திருமணத்தை அடிப்படையாகக் கொண்டது.]

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *