கிளி என்ன சொல்லுச்சு…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 13,641 
 

ஒரு தென்னை மரத்தில் காகம் ஒன்று அமர்ந்து, “கா, கா…’ என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டிருந்தது. காகத்தின் அருகே ஒரு பஞ்சவர்ணக்கிளி சென்று அமர்ந்தது. “”என்ன காக்கையாரே! உமது இறக்கையைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது. இவ்வளவு அழகில்லாத அருவருப்பைத் தரக்கூடிய இறக்கையை நீர் பெற்றிருக்கிறீரே, உமக்கு வெட்கமாக இல்லை?” என்று கிளி ஏளனமாகக் கேட்டது.

KiliEnna

“”நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? கருப்பு நிறம் சிறப்பானதுதான். மற்ற நிறங்கள் எவ்வளவு உயர்ந்தவை என்பதை ஒப்பு நோக்கிப் பார்ப்பதற்காகத்தான் கருப்பு நிறத்தைக் கடவுள் உண்டாக்கியிருக்க வேண்டும். இப்போது எனது இறக்கையால் உமது இறக்கையின் அழகு சிறப்பு பளிச்சென்று தெரிகிறது அல்லவா?” என்று தன் இறகின் அழகைத் தானே பாராட்டிக் கொண்டது காகம்.

அந்தச் சமயத்தில், ஒரு புறா அந்தப் பக்கமாக வந்து அவர்கள் அருகே அமர்ந்தது.

“”என்ன… நீங்கள் இரண்டு பேரும் ஏதோ சர்ச்சையில் ஈடுபட்டு இருக்கிறீர்கள் போலிருக்கிறதே!” என்று புறா கேட்டது.

“”நல்ல நேரத்தில் நீங்கள் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். எங்கள் இருவருடைய இறக்கையின் அழகைப் பாருங்கள். எங்கள் இருவரில் யாருடைய இறக்கை அழகாக இருக்கிறது? நீங்களே தீர்ப்பளியுங்கள்!” என்று புறாவைக் கேட்டுக் கொண்டது பஞ்சவர்ணக்கிளி.

“”உண்மையில் கொஞ்சம்கூட அறிவுக்குப் பொருத்தமில்லாத சர்ச்சை இது. கடவுள் உலகத்தில் உயிரினங்களுக்கான எந்த உறுப்பையும் பயன் இல்லாமல் சிருஷ்டிப்பதில்லை. ஒவ்வொருவருடைய உடல் உறுப்புக்களும் ஒவ்வொரு வகையில் சிறந்தனவாக, அழகானவைகளாகவே இருக்கும். பஞ்சவர்ணக்கிளியே! உனது இறக்கை பார்க்க அழகாக இருக்கலாம். ஆனால், காகம் போன்று அவ்வளவு விரைவாகவும், ஒரே சமயத்தில் நீண்ட தூரம் பறக்கவும் உன்னால் முடியாது. “”கோடை நாளில் உன் இறக்கைகள் உனக்கு அதிகப் பயன் தருவதாக இருக்கக்கூடும். குளிர், மழைக் காலத்திலோ, காக்கையின் இறக்கைகள் தாம் மிகவும் பயனுடையதாக இருக்கும். உயிரினங்களின் உறுப்பு அழகைப் பற்றி மட்டுமே பேசக்கூடாது. அவற்றின் பயன்பற்றித் தான் பேச வேண்டும். பயன் இல்லாதவை என்று உலகத்தில் எதுவுமே இல்லை. அவ்வாறு பயன் உள்ள உறுப்புகளை நமக்கு அளித்தமைக்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!” என்று புறா கூறிற்று. அதைக் கேட்டதும் புத்தி தெளிந்து தன் ஆணவத்தை விட்டொழித்தது பஞ்சவர்ணக்கிளி.

– ஜூலை 09,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *