நெஞ்சமடி நெஞ்சம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2023
பார்வையிட்டோர்: 4,083 
 

(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம்-19

ரூபிணியை அணைத்துக் கொண்ட ஜமுனா நந்த கோபால் பக்கம் திரும்பி, 

“இவள் ரூபிணி… என் ஹாஸ்டல் ரூம் மேட் அன்ட் மை டியரெஸ்ட் பிரண்டு…” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள். 

“ஹலோ…” என்றான் நந்தகோபால், 

என்ன பேசுவது என்று தெரியாமல் ரூபிணி லேசாக புன்னகைத்தாள். 

“வீடியோவுக்கு நில்லுடி…” ஜமுனா தன்னருகில் ரூபிணியை நிற்க வைத்துக் கொண்டாள். 

மிகச் சரியாக அந்த நேரத்தில் ஹரிஹரன் மேடையேறி நந்தகோபாலின் அருகே நின்று கொண்டு இயல்பாக வீடியோவுக்கு போஸ் கொடுத்தான். 

ஜமுனாவும்.. நந்தகோபாலும் நடுவில் நிற்க… அவர் ள் இருவர் பக்கமும் ரூபினியும் ஹரிஹரனும் நிற்பது போல் வீடியோவில் எடுக்கப்பட்டு விட்டது. 

ஜமுனாவின் விழிகள் ரூபிணியிடம், 

‘பார்த்தாயா..?’ என்று வினவின. ரூபிணி என்ன செய்வாள்…? தன் வழக்கப்படி இதழ்களை மடித்துக் கடித்தாள். அதைப் பார்த்தவாறு ஹரிஹரன் மேடையை விட்டு இறங்கிச் சென்றுவிட்டான்.

‘அவன் எங்கே..?’ என்று ரூபிணியின் விழிகள் துழாவின. ஆனால் அவளின் பார்வை வட்டத்திற்குள் அவன் சிக்கவேயில்லை. ரூபினிக்கு மனம் வலித்தது. 

மின்னல் போல் வந்தான். அவள் மணமக்களின் ஒரு புறம் நிற்க.. இவன் மறுபுறம் நின்று வீடியோ எடுத்துக் கொண்டு மறைந்துவிட்டானே.. 

மூன்று மாதங்களாய் அவனைப் பார்க்காத நெஞ்சம் பதறியது… அவனைப் பார்க்கத் துடித்தது. கட்டுக் காவலை உடைத்துக் கொண்டு அவனிடம் ஓடி விட மனம் தவித்தது. 

“வா ரூபிணி.. சாப்பிட்டு விட்டு வந்துவிடலாம்…” வாசவி அழைத்தாள். 

ரூபிணி மெளனமாய் அவர்களுடன் டைனிங் ஹாலை நோக்கி நடந்தாள். மெல்லிசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. 

‘பாடும் திறமையுள்ளவர்கள் இந்தக் கூட்டத்தில் இருந்தால் மேடையில் ஏறிப் பாட வரலாம்…” பாடகர் மைக்கில் அறிவித்தார். 

ரூபிணியின் ஹாஸ்டல் தோழிகள் ‘ஹோ…’வென்று ஆர்ப்பரித்தனர். சிலர் மேடையில் ஏறிப் பாடினார்கள். அவர்களில் ஒருத்தி, 

“அடுத்து எங்கள் தோழி ரூபிணி பாடுவாள்..” என்று மைக்கில் அறிவித்தாள். 

ரூபிணி அதிர்ச்சியுடன் விழித்தாள். கோமளாவிடம் படபடத்தாள். 

“நானாவது மேடையில் ஏறிப் பாடுவதாவது.. இவள் ஏன் என் பெயரைச் சொல்கிறாள்… “

“இங்கே பார்… என்றாவது ஒருநாள் இதுபோல் ஜாய் பண்ணும் பங்ஷன் வருகிறது.. இதில் போய் அன் ஈஸியாய் பீல் பண்ணிக் கொண்டு ஒதுங்கி நின்றால் எப்படி ரூபிணி ? நீ நன்றாகப் பாடுவாய் என்பதுதான் அவளுக்குத் தெரியுமே… அதனால் சொல்லிவிட்டாள்.. போய் பாடு..” கோமளா அவளை 

மேடை நோக்கித் தள்ளிவிட்டாள். 

திருமண மண்டபத்தின் மாடியில் கைப்பிடியில் சாய்ந்து கொண்டு ரூபிணி சங்கடத்துடன் மேடையேறு வதைப் பார்த்துக் கொண்டு இருந்தான் ஹரிஹரன். நீண்ட பின்னல் ஆட பச்சைப் பட்டுப் புடவையில் அவள் அழகுற மைக்கின் முன்னே வந்து நின்ற விதம் அவனைக் கிறங்கச் செய்தது. பெண்மையின் வடிவாய் எழிலுற நின்றவளை ஏக்கத்துடன் பார்த்தான். 

இதுவரை ஹரிஹரன் விரும்பிய எதுவும் அவனுக்குக் கிட்டாமல் போனதில்லை… முதல் முறையாய் மாதக் கணக்கில் அவன் ஏங்கி உருகுவது அவளை நினைத்துத்தான். 

கிட்டே நெருங்கினாலே பயப்படுகிறாள். போனில் பேசப் பதட்டப்படுகிறாள்.. அவளிடம் எப்படித் தன்னை புரிய வைப்பது..? எப்படி அவள் நெஞ்சத்தில் இடம் பிடிப்பது என்று அறியாமல் அவன் திகைத்து நின்றான். 

அவளது நெஞ்சில் அவன் இருக்கிறான் என்பதை அவன் யூகிக்கும் வண்ணம் அவள் வாய் திறந்து பாட ஆரம்பித்தாள். 

“நீயில்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் 
நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை. 
காயும் நிலா வானில் வந்தால் கண் உறங்கவில்லை உன்னைக் 
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை…” 

ரூபிணியின் நெஞ்சத்தின் தாபம் பொங்கி எழுந்தது. சொல்ல வார்த்தைகள் இல்லாமல் சொல்லி அழுக ஓர் ஜீவனும் இல்லாமல் அவள் துடிக்கும் துடிப்பு பாடலாய் வெளிவந்து கொண்டிருந்தது. 

“உன் முகத்தைக் காண்பதற்கே கண்கள் வந்தது…
உன் மார்பில் சாய்வதற்கே உடலும் வந்தது…
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது… 
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது…”

அவள் விழிகள் அவனைத் தேடின… எல்லாவற்றையும் தாண்டி அவனிடம் ஓடி விட அவளது நெஞ்சம் தவித்தது. ‘இனி நீ அழைக்காமல் உன்னைத் தேடி வர மாட்டேன்’ என்று சொன்னவன்.. அவள் கண் பார்வையிலிருந்தும் கருத்திலிருந்தும் மறைந்து போனான். பிரிந்து போனான். எதிர்பாராமல் அவன் இங்கு வந்து நின்றும்… அவன் காலடியில் விழுந்து இதயத்தைத் திறந்து அவனைக் காதலிக்கும் உண்மையை ஒப்புக் கொள்ளா மல் ஊமையாய் அவள் நிற்கிறாளே… அவளே வேலியடைத்து உருவாக்கிக் கொண்ட சிறையில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறாளே.. இதிலிருந்து அவளுக்கு விடுதலையே கிடைக்காதா..? அவன் முகத்தை இனிப் பார்க்கவே முடியாமல் போகிவிடுமோ… அவள் மனம் பரிதவித்தது. 

“பொன்விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே.. 
உன்னைப் புரிந்தும் கூடச் சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே… 
இன்று.. நாளை.. என்று நாளை எண்ணுகின்றேனே…” 

அவள் பாடப்பாட ஹரிஹரனின் புருவங்கள் முடிச் சிட்டன. அவளது விழி சொல்லும் கதை அவனுக்குப் புரிந்தது. அவளது நெஞ்சம் படும்பாடு அவன் மனத்தைத் தொட்டது. 

‘ஏன் இப்படித் தவிக்க வேண்டும்.. ஓர் வார்த்தை.. அது கூட வேண்டாம்.. ஓர் பார்வை பார்த்தாலே போதுமே.. அவளை சிறை மீட்டு விடுவேனே.. அவள்தான் தானாய் பூட்டிக் கொண்ட விலங்கு என்பதை ஒத்துக் கொள்கிறாளே.. அவளாக அதை உடைக்காமல் அவனால் எப்படி அவளை சிறை மீட்க முடியும்?’ 

ஒரு பெருமூச்சுடன் அவன் திருமண மண்டபத்தின் மாடியிலிருந்து பின் பக்கமாய் இறங்கிய மாடிப்படிகளில் மெதுவே இறங்க ஆரம்பித்தான். முன்பக்கமாய் போய் ரூபிணியை பார்க்க அவன் விரும்பவில்லை. எங்கே தன் சுய கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு அவளைத் தூக்கி காரில் போட்டு கொண்டு பறந்து விடுவோமோ என்ற பயத்தில் அவன் அவளைப் பார்ப்பதைத் தவிர்த் தான். பின்பக்கம் இறங்கிய மாடிப்படிகள் தோட்டத்தில் போய் முடிவடைந்தது. கடைசிப் படியில் கால் வைத்தவன் அப்படியே நின்றுவிட்டான். 

எவளைப் பார்க்க அஞ்சி.. எவருக்கும் அஞ்சாத அஞ்சா நெஞ்சன் ஹரிஹரன் திருடன் போல் பின்பக்கமாய் நழுவ எண்ணிப் படி இறங்கினானோ… அவள்.. ரூபிணி.. அவளது தோழிகளுடன் அங்கே நின்று பேசிக் கொண்டிருந்தாள். 

இருளில் ஹரிஹரனின் உருவம் அவர்களுக்குத் தெரியாமல் போக அவர்கள் தங்கள் போக்கில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி, 

“ரூபிணி.. யாரை நினைத்துடி இப்படி உருகி உருகிப் பாடினாய்?” என்று கேட்டுச் சிரித்தாள். 

“இவள் யாரையும் நினைத்து உருகினாளோ.. இல்லையோ… எனக்குத் தெரியாது.. ஆனால் மண்டபத்தில் நிறைய ஆண்கள் இவளை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயமாய் எனக்குத் தெரியும்.. அதுவும் என் பக்கத்தில் அட்டகாசமாய் ஜீன்ஸும் காட்டன் சர்ட்டும்.. கூலிங்கிளாஸுமாய் ஹீரோ போல் நின்று கொண்டிருந்த ஒருவன் ரூபிணியை வைத்த கண் வாங்காமல் விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்… ஊடே… ‘ஸ்வீட் வாய்ஸ்’ன்னு கமென்ட் வேற அடித்தான்.. ஜமுனாவின் ஹஸ்பெண்ட் கூட வேலை பார்க்கிறவனாம்… இன்ஜினீயர்… இப்போது கூட உள்ளே கூட்டத்தில் ரூபிணியைத்தான் அவன் தேடிக் கொண்டிருப்பான்…” இன்னொருத்தி சொல்லச் சொல்ல ஹரிஹரனின் நெஞ்சம் கோபாவேசம் கொண்டது. 

அத்தியாயம்-20

ஹரிஹரன் புலனடக்கம் இழந்தான்… வாய் திறந்து.. தன் அந்தஸ்தை.. தன் பொருளாதார உயர்நிலை தரத்தை மறந்து வார்த்தைகளைச் சிதறவிடப் போனான். அந்த நொடியில் ரூபிணியின் கோபக் குரல் எழுந்தது. 

“ஷட் அப் காயத்ரி… திஸ் இஸ் டூ மச்… யாருக்கும் யாருக்கும் முடிச்சுப் போடுகிறாய்.. உன் கண்ணுக்கு வேண்டுமானால் அவன் ஹீரோவாகத் தெரியலாம்… எனக்குத் தெரியவில்லை…” 

கொதித்து எழுந்த பால் குளிர் நீர் பட்டதும் அடங்கி விட்டது. ஹரிஹரனின் நெஞ்சம் ரூபிணியின் வார்த்தைகளால் குளிர்ந்து விட்டது. அப்போது இன்னொரு பெண் சிரித்தாள். 

“அது தானே… உன் கண்ணுக்கு ஹரிஹரனைத் தவிர வேறு யாருமே ஹீரோவாகத் தெரிய மாட்டார்களே…” 

“வாசவி.. வேண்டாம்.. இந்தப் பேச்சை இத்தோடு விடு…” 

“அவளை ஏன் அடக்குகிறாய்? அந்த ஹரிஹரனிடம் அப்படி என்ன அழகு இருக்கிறது? பணம்தான் இருக்கிறது…” 

“ஸ்டாப் இட் காயத்ரி.. பணம்.. படை பலம்.. இரண்டுமே இல்லாத ஹரிஹரனாக மட்டும் அவர் இருந்திருந்தால்.. இந்நேரம் ஓடி அவர் காலடியில் விழுந்திருப்பேன். அவருக்கா அழகு இல்லை? அவரின் ஆண்மை நிறைந்த நடை.. நேர் கொண்ட பார்வை.. வீரம் கொண்ட குணம்.. என்று எல்லாமே அழகுதானே.. அவர் ஹீரோ இல்லையென்றால் வேறு யாருமே ஹீரோ இல்லை…” 

“ஏய் ரூபிணி.. விளையாட்டுப் பேச்சுக்கு ஏன் இப்படி அழுகிறாய்..? இவ்வளவு உணர்ச்சி வசப்படும் அளவிற்கு இப்போது என்ன நடந்துவிட்டது? ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்…” 

மற்ற பெண்கள் சமாதானப்படுத்த கண்களைத் துடைத்துக் கொண்ட ரூபிணி தற்செயலாய் திரும்பிப் பார்த்தவள் திடுக்கிட்டாள். 

இருளில் நிழல் உருவமாய் நிற்பது ஹரிஹரன் அல்லவா? அவளது உள்ளுணர்வு அவனை அடையாளம் கண்டு கொண்டது. 

‘அவன் இவ்வளவு நேரமும் இங்கா நின்று கொண்டிருந்தான்? இந்தப் பெண்கள் பேசுவதை கேட்டுக் கொண்டா இருந்தான்.. சும்மாவே கோபக்காரன்.. இவர் கள் பேச்சைக் கேட்ட பின்பு எப்படிக் கொதித்திருப் பானோ.. கடவுளே.. அவனை என் கண்ணிலும் காட்டி… அவனது கோபத்தையும் தூண்டிவிட்டிருக்கிறாயே.. பெருமாளே… இது சரியா?’

ரூபிணி அசைவற்று அங்கேயே நின்றுவிட மற்றவர்கள் அவள் உடன் வராததைக் கவனிக்காதவர்களாய் தங்களுக்குள் பேசிச் சிரித்தவாறு மண்டபத்தின் உள்ளே போய் விட்டார்கள். 

ரூபிணி அசைவற்று நின்றிருக்க அழுத்தமான காலடிகளுடன் ஹரிஹரன் அவளை நெருங்கினான். இருள் அவர்களைச் சுற்றிப் போர்வையாய் கவிந்திருக்க… யாரும் பார்த்து விடுவார்களே என்ற பதட்டமின்றி படபடத்த இதயத்துடன் ஹரிஹரனைப் பார்த்தாள் ரூபிணி 

இருளிலும் தன்னைத் துளைக்கும் அவனது பார் வையை உணர்ந்தவளாய் ‘ஏன் இப்படிப் பார்க்கிறான்..?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். 

‘நீ மட்டும் அவனைப் பார்ப்பதில்லையா..?’ அவள் மனம் பதிலுக்கு கேள்வி கேட்க உதட்டைக் கடித்துக் கொண்டாள். 

‘நல்லவேளை இருட்டில் நிற்கிறோம்… இல்லையென்றால் இவன் இந்நேரம் என் வாயை ரசனையாய் பார்த்திருப்பான்’ என்று தோன்ற… அவள் மனம்.. 

‘இப்போது மட்டும் பார்க்கவில்லையென்றா நினைக்கிறாய்..?’ என்று நகைத்தது. 

அவள் பேசாமல் அவன் பேசமாட்டான் என்பது புரிய ரூபிணி ‘பிடிவாதக்காரன்..’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாள். அதே நேரம் ‘அந்தப் பிடிவாதமும் ஓர் அழகுதான்…’ என்று அதை ரசிக்க வேறு செய்தாள். வேறு வழியின்றி நிலவின் ஒளியில் தெரிந்த அந்த பிடிவாதக்காரனின் முகத்தை நிமிர்ந்து பார்த்து, “வந்து விட்டீர்களா… எப்போது வந்தீர்கள்…?” என்று வினவினாள். 

அவனது உடலில் ஓர் அதிர்வு ஓடியது. எவ்வளவு உரிமையாக வினவுகிறாள். அவனது வரவிற்காக காத்திருந்தது போல… அவனது வரவால் மனம் குளிர்ந்து போல… அவள் கேட்ட விதம் அவனது மனப்புண்ணை ஆற்றியது. 

“இன்றைக்கு மாலையில் வந்தேன்… “

“போன வேலை முடிந்து விட்டதா..?” 

“நானாக உருவாக்கிக் கொண்டு போன வேலை அது. நானாக நினைக்காமல் அது முடியாது… “

“அப்படியென்றால் திரும்பிப் போய் விடுவீர்களா?” 

“வேண்டாமென்று ஓர் வார்த்தை சொல்லு… போகவில்லை” அவன் குரலில் இறைஞ்சல் இருந்தது. 

‘ஹரிஹரனின் குரலில் இறைஞ்சல் இருப்பதா..?’ ரூபிணியின் நெஞ்சம் தாளாமல் தவித்தது. 

“ஏன்.. நான் வாய் திறந்து சொன்னால்தான் இருப்பீர்களா?” 

“உன் மனதில் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரிய வேண்டாமா?” 

“அது நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா?” ரூபிணியின் நாத்தழுதழுத்தது. 

ஹரிஹரனின் நெஞ்சம் குலுங்கியது. அவளை நெருங்கி நின்றான். அவள் விலகி நகரவில்லை. அதை உணர்ந்தவனின் மனம் பாரம் விலகி இறகைப் போல் லேசானது… மனத்தில் உல்லாசம் பிறந்தது. 

“ஏன்… நீதான் அதைச் சொல்ல மாட்டாயா…?” அவன் கை நீட்டி அவள் கரம் பற்றி அவளை அருகே இழுத்தான். 

எதிர்பாராத இந்தத் தொடுகையால் ரூபிணி நடுங்கிப் போனாள். ஆனால் நீண்ட நாட்களாய் அவனைப் பிரிந்திருந்த தாபம்.. அவன் மேல் அவள் நெஞ்சத்தில் தோன்றியிருந்த காதல்.. விட்டால் அவன் மீண்டும் பிரிந்து போய் விடுவானோ என்ற பயம்.. எல்லாம் சேர அவள் மறுப்பே சொல்லாமல் அவனது மார்பில் முகம் புதைத்தாள். 

நம்ப மாட்டாதவனாய் கொடிபோல் தன்மேல் படர்ந்து நின்றவளைச் சுற்றி வளைத்தன ஹரிஹரனின் கரங்கள். அவளை இறுகத் தழுவி அவளது தோள் வளைவில் முகம் புதைத்தான் அவன். அவளது கூந்தலில் சூடியிருந்த மல்லிகை வாசம் அவனைக் கிறங்கச் செய்தது. அவளது பின்னங்கழுத்தில் இதழ் பதித்தான்… அவள் சிலிர்த்தாள்… ஆனால் அவன் பிடியிலிருந்து விலகாமல் இணைந்து நின்றாள்… ஹரிஹரனின் இதழ்கள் உயர்ந்து அவளது நெற்றியில் பதிந்தன.. அவள் கண் மூடிக் கிறங்கி நின்றாள்.. அவளது கன்னத்தில் முத்தமிட்டவன் விலகி அவளது இதழோடு இதழ் பதித்து அவளை இறுக்கித் தழுவிக் கொண்டான். 

விலக மனமில்லாமல் நின்றிருந்தவர்கள்… ரூபிணியைத் தேடி அவளது தோழிகள் வரவும் விலகினர். ஹரிஹரன் நகர்ந்து மாடிப்படியின் அடியில் இருளில் மறைந்து நின்று கொண்டான். ரூபிணி தோட்டத்து இருளில் இருந்து வெளியேறி அவளது தோழிகளை நோக்கிப் போனாள். 

“இங்கே என்னடி பண்ணிக்கிட்டு இருக்கிறாய்…?” வாசவி அதட்டினாள். 

என்ன பண்ணிக் கொண்டிருந்தாள் என்ற நினைவில் முகம் சிவந்தாள் ரூபிணி. 

“என்னடி… இது இந்த விழி விழிக்கிறாய்… உன் பார்வையே சரியில்லையே.. என்ன விசயம்…” வாசவி சந்தேகமாய் நோக்க… 

“ச்சு… ஜமுனா கல்யாணம் பண்ணிக் கொண்டு போய்விட்டாள்… அடுத்து என் ரூம் மேட் நல்லவளாய் அமைய வேண்டுமே என்று யோசித்துக் கொண்டே இங்கு நின்று விட்டேன்…” இருளில் ஹரிஹரன் இருந்த திசையைப் பார்த்துக் கொண்டே மெய்சிலிர்க்க பொய்யுரைத்தாள் ரூபிணி. 

“இதுக்குப் போய் ஏன் வீணாய் யோசிக்கிறாய்? என்னைக் கேட்டால் நான் சொல்ல மாட்டேனா? உன் ரூமில் முதலில் கலா இருந்தாள்… ஜமுனா ரூம் மேட்டாய் வந்தாள்.. கலாவிற்கு கல்யாணம் ஆகி டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு போய் விட்டாள்.. ஜமுனா இருந்தாள்.. நீ ரூம்மேட்டாய் வந்தாய்.. இப்போது ஜமுனாவிற்கு கல்யாணம் ஆகிப் போய்விட்டாள்.. அடுத்து உனக்கு யாராவது ஒருத்தி ரூம் மேட்டாய் வருவாள்.. உனக்கு கல்யாணமாகி நீ ஹாஸ்டலை விட்டுப் போய் விடுவாய்… அவள் கவலைப்பட்டுக் கொண்டு நிற்பாள்… “

வாசவி கூறக் கூற ரூபிணி ‘தனக்குக் கல்யாணம்’ என்ற நினைவில் உதட்டைக் கடித்துக் கொண்டாள். இருளில் நின்ற ஹரிஹரன் ஆசையுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

ரூபிணி முகம் சிவக்க இருளில் ஹரிஹரன் நின்று கொண்டிருந்த திசையை திரும்பிப் பார்த்துக் கொண்டாள். வாசவி சொன்னது ஹரிஹரனின் காதில் விழுந்திருக்குமோ.. என்று வெட்கத்துடன் நினைத்தாள். 

ஹரிஹரனின் காதுகளில் வாசவி பேசியது மிக நன்றாகக் கேட்டது.. அவன் மனதில் மணப்பெண் கோலத்தில் ரூபிணி தெரிந்தாள்… மெல்லடியை எடுத்து வைத்து நடந்து வந்து ஹரிஹரனின் அருகில் அமர்ந்தாள்.. ஹரிஹரன் அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான். அவன் கரம் பற்றி அவனைப் பின் தொடர்ந்து அவனது வீட்டிற்குள் வந்தாள். அதன்பின்.. ஹரிஹரனின் உடல் சூடேறியது… சற்று முன் அவனது கரங்களுக்குள் அடங்கினவள்…. அன்று அவனுடன் முழுதாய் கலந்து விடுவாள். 

ரூபிணியின் தாய் தந்தையரைப் பார்த்துப் பேச வேண்டும். இனியும் காலம் தாழ்த்தக் கூடாது. ரூபிணியின் மனதில் என்ன இருக்கிறது என்பதுதான் தெளிவாய் தெரிந்து விட்டதே.. இதுவரை அவளது பயத்தைக் கண்டு எங்கே அவள் விலகிச் சென்று விடு வாளோ… என்ற விரக்தி அவனது நெஞ்சத்தில் இருந்தது. 

இப்போதுதான் எல்லாம் சரியாகிவிட்டதே.. அவள் தான் தன் தயக்கத்தையும் பயத்தையும் உதறிவிட்டு அவனிடம் தஞ்சம் அடைந்து விட்டாளே.. நினைக்கும் போதே.. இன்னும் அவளது பயம் முழுவதும் தெளிந்து விடவில்லையென்று அவனுக்கு இடித்தது. 

அவன் மனதில் அவள் இருக்கலாம். அவளைத் தவிர வேறு ஒருத்தியின் நிழலை கூட அவன் திரும்பிப் பார்க்க மாட்டான். ஆனாலும் அவளது சந்தேகங்களுக்கு விடை அளிக்காமல் அவளது சஞ்சலத்தை போக்காமல் அவள் கரம் பிடிக்கக் கூடாது. 

அவளுடன் பேச வேண்டும்.. தன் வாழ்க்கையைப் பற்றி முழுவதுமாய் அவளிடம் கூறிவிட வேண்டும். ஹரிஹரன் முடிவு செய்துவிட்டான். 

அத்தியாயம்-21

வேனை விட்டு இறங்கி மாடியேறி மற்ற தோழிகளிடம் கையாட்டி விட்டு அறைக்குள் போய் ரூபிணி கதவைத் தாழிட்ட மறுகணம் அவளது செல்போன் ஒலித்தது. 

‘அவன்தான்..’ அவள் மனதில் மணியடித்தது. 

ஓடிப்போய் செல்போனை எடுத்துப் பார்த்தாள். அவனே தான்.. மூச்சிரைக்க, “ஹலோ…” என்றாள். 

“ஏன் மூச்சு வாங்குகிறாய்..” 

“இப்போதுதான் என் ரூமிற்குள் வந்தேன்…” 

“தெரியும்…” 

“எப்படி..?” 

“எப்படியா..? உன்னைப் பின் தொடர்ந்து என் காரில் வந்தேன்.. இப்போதும் உன் ஹாஸ்டலின் ஓரமாய் இருட்டில்தான் என் கார் நின்று கொண்டிருக்கிறது. மாடியில் உன் ரூமில் விளக்கு எரியவும் போன் பண்ணுகிறேன்…” 

‘இது என் ரூம்தான் என்று எப்படித் தெரியும்?”

“ஹரிஹரனுக்குத் தெரியாதது என்று எதுவும் இல்லை…” 

“என் மனம் மட்டும்தான் தெரியாது…” 

“தெரியும்டி… உன் மனம் எனக்கு நன்றாகத் தெரியும்.. ஊரைப் பார்த்துப் பயந்தாய்.. என்னைக் கண்டு பயந்தாயா? உனக்குத் தெரியுமா ரூபிணி.. என்னிடம் அச்சமின்றி முகம் பார்த்துப் பேசியது நீ மட்டும்தான்.. அதேபோல் என்னை நாடி வரும் எல்லோரும் அவர்களுக்காகத்தான் உதவி கேட்டு வருவார்கள். அப்படி இல்லாமல் உன்னை நாடி என்னை வர வைத்தவளும் நீதான். உனக்காக இல்லாமல் மற்றவருக்காக என் உதவியை நாடியதும் நீதான். என்னிடம் இருக்கும் பணத்தையும்.. பலத்தையும் பவரையும் பார்த்து ஊரே மயங்க.. என்னிடம் மட்டும் மயங்கியவளும் நீ ஒருத்தி மட்டும்தான்.. என்னை மயங்க வைத்தவளும் நீ ஒருத்தி மட்டும்தான்.. நீ எனக்கு என்னை விட முக்கியமானவள் ரூபிணி.. உன் வேதனை கண்டுதான் நான் உன்னைப் பிரிந்து சென்றேன். கோபத்தினால் இல்லை. உன்னிடம் கோபம் கொள்ள என்னால் முடியாது ரூபிணி. என்னை நீ விரும்பினாய்.. என்னிடம் மயங்கினாய்.. ஆனாலும் என்னிடம் பழகத் தயங்கினாய்… அதனால் தான் உனக்காக.. உன்னை விட்டு சில மாதங்கள் விலகிச் சென்றேன்.. எனக்கு உன்னைத் தெரியும்.. என்றாவது ஒருநாள் என்னைத் தேடி வருவாய் என்றும் தெரியும்.. அந்த நாள் இன்று வந்துவிட்டது. நான் உன் மனதைத் தொட்டு.. உன்னையும் தொட்டு விட்டேன்..” ஹரிஹரனின் குரலில் மயக்கம் இருந்தது. 

ரூபிணி உடை மாற்றாமல் ஜன்னலருகே ஓடிச் சென்று சாலையைப் பார்த்தாள். இருளில் பார்வையைச் செலுத்தி.. இருளுக்குள் அவனைத் தேடினாள்.. சற்றுத் தள்ளி மறைவாக ஒரு கார் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. 

“கண்டுபிடித்து விட்டாயா..?” 

“நான் கண்டுபிடிக்காமல் வேறு யார் கண்டு பிடிப் பார்கள்?” 

“மற்றவர்களின் பிடிக்குள் இந்த ஹரிஹரன் சிக்கவும் மாட்டான்.”

“என்னிடம் மட்டும் வலிய வந்து ஏன் சிக்குகிறீர்களாம்?” 

“காலமெல்லாம் உன் கைப்பிடிக்குள் இருக்கத்தான்… “

“நான் காலமெல்லாம் உங்கள் காலடியில் இருப்பேன்…” 

“இதைத்தானே உன் பிரண்டிஸிடமும் சொன்னாய்.. ஓடிப்போய் அவருடைய காலடியில் விழுந்து விடுவேன் என்று.. என் காலடியில் கிடப்பதில் அவ்வளவு ஆர்வமா?” 

“பின்னே இல்லையா.. மகாலட்சுமி தேவி.. மகாவிஷ்ணுவின் காலடியில் இருக்கிறதை விரும்பி அமர்ந்திருக்கும் போது.. ரூபிணி ஹரிஹரனின் காலடியில் கிடக்க தவம் கிடக்க மாட்டாளா…?” 

“காலடியில் மகாலட்சுமி அமர்ந்திருந்தாலும் அவள் வாசம் செய்வது மகாவிஷ்ணுவின் இதயத்தில்… அதுபோல் நீ குடியிருக்கும் இடம் என் நெஞ்சம்… “

“திரும்பவும் ஊருக்குப் போய் விடுவீர்களா?”

“உன்னை விட்டுப் போக என்னால் முடியுமா..?”

“இத்தனை நாளும் முடிந்ததே..” 

“மற்ற நாளும் இன்றைய நாளும் ஒன்றா… “

ரூபிணி… அவனது இதழ் தொட்ட தன் இதழ்களை கடித்துக் கொண்டாள். ஹரிஹரனின் உல்லாச சிரிப்பு கேட்டது. 

“என்ன மௌனமாகி விட்டாய்.. கல்யாண மண்டபத்தின் தோட்டம் நினைவிற்கு வந்து விட்டதா…?” 

ரூபிணி இனம் புரியாத உணர்ச்சிகளால் தாக்கப்பட்டிருந்தாள் பேச முடியாமல் தடுமாறினாள். 

“பேசேண்டி… ஊமையாகி விட்டால் எப்படி?” அவனது நெருக்கம் கொண்ட பிரியமான அழைப்பு அவளது மனதை வருடிச் சென்றது. 

“நீங்கள்தான் என்னை ஊமையாகச் செய்கிறீர்களே..”

“ரூபி… நான் உனக்காகத்தான் பறந்து வந்தேன்.. உன் முகம் பார்த்தால் மட்டும் போதும் என்ற கணக்குடன் வந்தேன்.. நீ எப்படியும் மேடையேறி வீடியோவுக்கு போஸ் கொடுப்பாய் என்பது எனக்குத் தெரியும்.. கவனித்துக் கொண்டேயிருந்து உன்னுடன் ஒன்றாக போஸும் கொடுத்துவிட்டேன்.. ரிசப்சன் செலவுகள் என்னுடையவை… வீடியோகிராபரும் நான் ஏற்பாடு செய்தவர்தான்.. நம் புகைப்படத்தை பிரிண்ட் போட்டு வைத்துக் கொள்ளத் திட்டமிட்டிருந்தேன்.. இன்றைக்கு நைட்டே டெல்லி திரும்பி விட நினைத்திருந்தேன்…”

”டெல்லி… டெல்லி… அங்கே எந்த மும்தாஜ் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்?” 

“என் மும்தாஜ் விழுப்புரத்தில்தான் இருக்கிறாள்… பட் ரூபிணி ஷாஜகானைப் போல் நான் எனது காதலிக்காக தாஜ்மஹால் எல்லாம் கட்ட மாட்டேன்…” 

”ஊருக்கெல்லாம் அள்ளி வழங்கும் வள்ளல் என்று உங்களைச் சொல்லுகிறார்கள்.. கடைசியில் நீங்கள் இவ்வளவு கஞ்சமா?” 

“கஞ்சமில்லைடி… உன்னிடம் நான் தஞ்சம்…” 

“தஞ்சமடைந்தது நீங்களா.. இல்லை நானா..? முதலில் என் கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்கள்… “

“ஷாஜகான் போல மும்தாஜ் போன பின்னாலும் நான் உயிர் வாழ மாட்டேன். உன்னைப் பிரிந்தால் அந்த நொடியில் நானும் உன்னுடன் சேர்ந்து வந்து விடுவேன்.. ஒருவேளை நான் முந்திக் கொள்ளும் நிலை வந்தால் உன்னைக் கொன்று.. என்னுடன் அழைத்துச் சென்று விடுவேன்…” 

ரூபிணி பேச்சிழந்தாள். வன்முறையாளனின் காதல் என்பது இப்படித்தான் இருக்குமா? உலகிற்கு கொடுங்கோலனாய் தெரிந்த ஹிட்லர் தன் கடைசி வினாடியில் தன் காதலியை விசம் குடித்து சாகச் சொல்லிவிட்டு.. அவள் இறந்த பின்.. துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொண்டு மாண்டானாமே… அது தான் அவனின் காதலா? 

“என்னடி… பயமாய் இருக்கிறதா..?” 

“பயமே உங்களைக் கண்டால் பயப்படும்போது.. உங்கள் நெஞ்சத்தில் குடியிருக்கும் எனக்கு எங்கேயிருந்து பயம் வரப்போகிறது..” 

“நான் இப்படித்தான் ரூபிணி… நீ அன்று சொன்னாயே.. ‘நீங்கள் ஏன் இவ்வளவு பெரிய விஐபியாக இருக்கிறீர்கள்’ என்று… உன் பிரண்ட்ஸிடம் சொன்னாயே.. ‘பணமும்.. படைபலமும் அவரிடம் இல்லாமலிருந்தால் அவரது காலடியில் போய் விழுந்திருப்பேன்’ என்று… ஏன் அப்படிச் சொன்னாய் ரூபிணி.. “

‘அது… அது.. வந்து…” 

“சும்மா சொல்லு.. நமக்குள் என்ன தயக்கம்?” அவன் குரல் தந்த தைரியத்தில் அவள் பட்டென்று சொல்லிவிட்டாள். 

“உங்களுக்கு ஊருக்குள் ஒரு இமேஜ் இருக்கிறது…”

‘’தாதா’ என்று தானே…” அவனும் பட்டென்று கேட்டுவிட்டான். 

“ஆமாம்..” அவள் நலிந்த குரலில் பதில் சொன்னாள்.

ஹரிஹரன் பதில் சொன்னான். அவனது பதிலில் அவனது கடந்த கால வாழ்க்கையின் துயரங்களும் சோகமும் வெளிவந்தன. பட்டுக் கம்பளத்தில் நடந்து கொண்டிருக்கும் ஹரிஹரன்… கடந்த காலத்தில் முள் பாதையில் நடந்து வந்தவன் என்பதை ரூபிணி அன்று அறிந்தாள். 

– தொடரும்…

– நெஞ்சமடி நெஞ்சம் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 2010, அறிவாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *