காதலாகி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 5,084 
 

சுஜா, ரேடியோவில் பாட்டுக்கேட்டு கொண்டிருந்தாள். “நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது”…. மேற்க்கொண்டு இதை கேட்பதா நிறுத்திவிடலாமா என்று ஒரு நிமிடம் தவித்து போனாள், நினைவுகள் என்றும் உறங்குவதில்லை. காரணம் பாபு.

அவனை முதல்முறை தன் தோழியின் அக்கா திருமணத்தில் பார்த்தாள். பெண் வீடு என்பதால் சுஜாவும் அவள் தோழியுடன் கல்யாண வேலையில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்ததால், பாபுவை கவனிக்கவில்லை. திருமணம் முடிந்து எல்லோரும் கிளம்பிவிட, பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாருக்கு நெருக்கமானவர்களோடு நலங்கு தொடங்கியது. அவர்கள் வழக்கப்படி நிகழ்ச்சி முடிந்ததும்,மணமக்களின் நண்பர்கள் அந்தாக்க்ஷரி, மற்றும் சில விளையாட்டுக்கள் விளையாடினர்.

அப்போது தான் அவனை கவனித்தாள் ,ஆர்பாட்டம் இல்லாத அமைதியான முகம், மனதின் அழகு கண்களில் தெரிந்தது. அவனும் இவளையே பார்த்து கொன்டிருப்பதை பார்த்து முகத்தை திருப்பிகொண்டாள். எல்லாரும் கிளம்பிவிட்டனர். மரியாதை நிமித்தம் அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

அவன் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிடுந்தான், அவள், எம்.எஸ்.சி முடித்துவிட்டு வேலைக்காக முயற்சித்து கொண்டிருந்தாள் . இரண்டாம் முறையாக,இருவருக்கும் பொதுவான ஒரு தோழியின் பிறந்தநாள் விழாவில் சந்தித்து கொண்டனர். சிறிது நேரம் பேசிவிட்டு கைபேசி எண் பரிமாறி கொண்டனர். வாட்ஸ் ஆப், பேஸ்புக், என அவர்களது நட்பு மெல்ல அழகான காதலாக மாறியது.

அவனுக்கு அவளிடம் என்ன பிடித்திருந்தது என்று அவளுக்கு தெரியவில்லை, ஆனால் அவனின் அமைதி,அவளிடம் மட்டும் காட்டும் குறும்பு அவளை வெகுவாக ஈர்த்தது. பொதுவாக அழகு என்பது ஒவ்வொருவருடைய பார்வயை பொருத்தது. அவனுடைய அகம் போலவே புறமும் அவளை காந்தமாக கவர்ந்தது.. ஓரு பெண்ணிற்க்கு வரம் என்பது பணம்,நகை,வசதியான வாழ்க்கையில் இல்லை, அவள் மீது நிபந்தனையற்ற அன்பு மற்றும் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கும் ஆண் கிடைக்க பெறுவதே. சுஜாவிற்கு அந்த வரம் கிடைத்திருந்தது.

அவன் இயல்பில் அமைதியாக இருந்தாலும், காதல் என்று வந்ததும் சரவெடி போல் அவள் மேல் உள்ள காதலை அவளிடம் தொடர்ந்து வார்த்தைகளால் உணர்த்தினான். மாறாக, எப்போதும் பேசிகொண்டே இருக்கும் சுஜா, மனதில் இருப்பதை வார்த்தைகளில் கூற தெரியாமல் தவித்தாள். இதுவே பாபு சுஜாவிற்கு இடையே இடைவெளி விழ காரணம் ஆகும் என்று அவள் சற்றும் அறிந்திருக்கவில்லை.

வாரம் ஒரு முறை சந்தித்தும், ,மீதி நாட்களில் போனிலும்,மற்றும் வாட்ச் ஆப்,பேஸ்புக் ,அதன் பங்கிற்கு அவர்கள் காதலை வளர்த்தன. சுஜாவை விட பாபுவே எப்போதும் அவனிற்கு அவளிடம் எவ்வளவு காதல் உள்ளது என்பதை உணர்த்தினான். மாறாக சுஜா, தன் வாழ்க்கை துணை இப்படிதான் இருக்கவேண்டும் என்று அவள் கற்பனைக்கு உயிர் வந்தது போல் அவன் இருந்ததாலோ என்னவோ அவனை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு கனவு போல் இருந்தது. அவனை பார்த்து விட்டுவந்த பிறகே சுயநினைவிற்கு வருவது போல் உணர்வாள். சிறிது காலம் இப்படியே சென்றது.

ஓரு நாள் பாபுவிற்கு போன் செய்தாள்,அவன் டீம் மீட்டீங்கில் இருப்பதாகவும் சிறிது நேரத்தில் திரும்ப அழைப்பதாக கூறினான். ஏதோ அவசர வேலைப்போல், அதான் திரும்ப அழைக்கவில்லை என்று நினைத்தாள் . ஓரிரு நாட்களாகியும் அவனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி கூட வரவில்லை. ஓருமுறை இல்லை பலமுறை அவள் அழைத்தபோது ஏதாவது காரணம் சொல்லி புறகணித்தான்,முன்போல் என்னிடம் பேசுவது இல்லை, ரொம்ப மாற்றம் இருக்கு உங்ககிட்ட என்று கூறியதற்கு, உனக்கு நேரம் அதிகம் இருக்கு, அதனால எதையாவது யோசிக்காத.எனக்கு வேலையா நீயா- ன்னு வந்தா என் வேலைக்கு தான் முக்கியத்துவம் குடுப்பேன் என்றான்.

அவனது புறக்கணிப்பு அவளை மிகவும் காயப்படுத்தியது. எப்படி கேட்டும் அவனிடமிருந்து பதில் சரியாக வரவில்லை. அவளுக்கு அவன் மேல் வரும் கோபதிற்க்கு ஆயுள் மிக குறைவு ,ஆனால் அவனுடைய இந்த மாற்றம் அவளுக்கு மிகவும் வேதனைஅளித்தது. அன்பின் மிகுதியால், ஒருவரை ஒருவர் பாப்பா,குட்டி என்றும், அவன் அவளை ‘டா’ போட்டு பேசும் அளவு நெருக்கமாக பழகியவர்கள், இப்போது அந்நியர்கள் போல் ஆனது வருத்தம் அளித்தது.

அவள் தோழி அவளை பார்க்க வந்திருந்தாள். அவளை பார்த்ததும் ஏன் மிகவும் களைத்து போனது போல் இருக்கிறாய், போனிலும் சரியாக பேசுவதில்லை என்றாள். அதற்கு சுஜா, பாபு என்னோடு ஒழுங்கா பேசி ரொம்ப நாள் ஆச்சு. எனக்கு இது புதுசாவும், பயமாகவும் இருக்கு. முன்னெல்லாம் எனக்கு அப்புறம் தான் எல்லாம்னு ரொம்ப முக்கியத்துவம் குடுப்பாரு,இப்போ அவருக்கு நான் முக்கியமா இல்லயானே தெரியல. என் பிறந்த நாளுக்கு கூட ஒரு வாழ்த்து இல்லை.

நான் நல்லா யோசிச்சு பாத்துட்டேன், எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை தெரிஞ்சு நான் எதுவும் தப்பு பண்ணல. ஒருவேளை தெரியாம ஏதாவது காயப்படுத்தி இருந்தா மன்னிப்பும் கேட்டும் பாத்துட்டேன், ஒரு பதிலும் இல்லை.

யோசிச்சு பார்த்ததுல, எனக்கு அவர் மேல் உள்ள காதலை சொல்லியது இல்லை. எனக்கு உணர்வுகளை வெளியில் சொல்ல வராது. அதுவும் அவர்கிட்ட நிறைய பேசனும்ன்னு தோணும் ஏனோ பாத்ததும் பேச முடியல. அவருக்கு நான் அவர உதாசீனபடுத்தறேன்னு தோணிருக்குமோ? ஆனா உண்மை அது இல்லை. எனக்கு அவர் மீதும் அவருடைய காதல் மீதும் அதிக நம்பிக்கை இருந்தது, இப்பவும் இருக்கு. அவர் எப்பவும் என்ன விட்டு விலக மாட்டார் ன்னு இருந்தேன், அது எங்க காதல் மேல் இருக்கும் நம்பிக்கை. நான் எதுவும் சொல்லாமலே என்னை தெரிந்து கொள்பவர்,ஏன் இதை புரிந்து கொள்லாமல் விலகி போய்விட்டார். மேலும் அவர போய் அடிக்கடி பார்பதையும், கைபேசியில் பேசுவதும் எங்க வீட்டுக்கோ அவர் வீட்டுக்கோ யாருக்காவது தெரிந்தால், எங்களை எப்பவும் பேச விடமாட்டங்க. அந்த பயம் எனக்குள்ள இருந்ததால தான் என்னால் அவரிடம் சரியாக பேச முடியல.

பேச விருப்பம் இல்லாமல் அவர் கிட்ட நேரடியா சொல்லியிருப்பேனே. என்னோட பயத்துனால தான் மற்றபடி அவரிடம் அதிக அன்பு இருக்கு,. அது அவருக்கு புரியும் அதனால கோவபட்டு,என்ன விட்டு விலகி போக மாட்டார்னு நம்பினேன். ஆனா அவர் புரிஞ்சுக்கல.பேசி புரிய வைக்கலாம்.அவர் பேச தயாரா இல்லை . நான் அவரை தெரியாம காயப்படுத்திட்டேன். இப்போ அவர் தெரிஞ்சே என்னை இழக்க முடிவு எடுத்துட்டார். மேலும் அவர் என்னை இப்போ விரும்பறாரான்னு கூட தெரியலை,அதான் அவர் கிட்ட பேச முயற்சிக்கல. நான் அவரையும் அவர் என்னையும் கஷ்டப்படுத்தினது போதும், காலம் எங்கள் காயங்களை ஆற்றும். யாரோ கவிஞர் சொன்னது போல், புரிதலில் காதல் இல்லயடி, பிரிதல் சொல்லும் காதலடி..

இவர்கள் பிரச்சனைக்கு என்னதான் முடிவு என்ற தோழியிடம், நம்மை மீறி நடக்கும் எதற்க்கும் தீர்வு காலத்தின் கையில் உள்ளது. எங்கள் காதல் மேல் நம்பிக்கை உள்ளது..அதுவரை, இன்பங்களும் வலிகளும் நிறைந்த எங்கள் காதல் நினைவுகளுடன் நான்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *