புதியதோர் பிசாசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2023
பார்வையிட்டோர்: 2,456 
 

(1924ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குசிகர் குட்டிக் கதைகள் – மூன்றாம் பாகம்

சிவனார் சிரித்த திரிபுரம் போல் இந்நாள்
நவமாக எம்மை நலியும்-அவமெல்லாம்
நான் சிரிக்க வே அழிய நாவினின்று நீ மொழிக
தேன் சிரிக்கும் வெண்மலர் மா தே.

இவை

பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்து மீனாக்ஷி , 4 உதயலன், திருமலை சேதுபதி, சித்தார்த்தன், புத்தசரிதை, பால ரொமாயணம், பாலவிநோதக் கதைகள், பொது தர்ம சத்கீதமஞ்சரி, புதுமாதிரிக் கலியாணப் பாட்டு, ஆசாரச் சீர்திருத்தம், பாரிஸ்டர் பஞ்சந்தம், தில்லைக் கோவிந்தன் முதலிய பல பிரபலமான நூல்களின் ஆசிரியரும், பஞ்சாமிர்தம் பத்திராதிபருமான அ. மாதவையர் இயற்றியன.
சென்னை
ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் – புஸ்தகசாலை,
எட்வர்டு எலியட் ரோடு–மயிலாப்பூர்
1924

புதியதோர் பிசாசு

சுந்தரமையர் சரசி; சந்தோஷ புருஷன்; நித்தியமங்கள சொரூபி; மனக்கவலையை ஒழித்து மனத்தை உற்சாகப்படுத்த அவர் சகவாசமே போதும். மதராஸ் பட்டணத்தில் அவரை அறியாதாரில்லை; அவர் சிநேகிதரை எண்ணி முடியாது; சாதி வித்தியாசமின்றி ஹிந்துக்கள் மட்டுமோ, மதபேத மின்றி முஸ்லீம்கள் கிறிஸ்தவர் மட்டுமோ, வர்ணபேதமின்றி ஐரோப்பியரும் கூட, அவர் நண்பர்களே. அவர் தக்க சம்பளமுள்ள சர்க்கார் உத்தியோகஸ்தர்; குடும்பி; நாற்பத்தைந்து வயதுள்ளவர்; செலவாளி; நன்றாய் உண்டு உடுத்துச் சுகமாய் வாழ்பவர் ; கோடை நாளிலே ஒரு மாதமாவது நீலகிரியில் கழியாமல் விடார்; மற்றக் காலங்களிலும் கூட, சேர்ந்து காலைந்து நாள் ரஜா நேர்ந்தால், குசாலாக நாலு சிநேகிதருடன் எங்கேயாவது சவாரி புறப்பட்டு விடுவார். மதராஸ் பட்டணத்திலேயே இருக்கும் பொழுதும், காலை மாலை உலாவப்போதல் தப்ப மாட்டார்; ஞாயிற்றுக்கிழமை தோறும் அவர் வீட்டில் சீட்டுக்கச்சேரியு முண்டு.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, அவர் வீட்டு மாடியில் சீட்டுக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அவரது ஆப்தமான பாலிய நண்பரும் பந்துவுமாகிய சேஷையர், அன்று காலை தான் திருச்சியிலிருந்து வந்திருந்தார். இராமையர் முதலிய வேறு சில மதராஸ் நண்பர்களும் கூட விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பின் வரும் சம்பாஷணை நடந்தது:

சேஷையர் :- அப்படியே வைத்துக்கொள்வோம். ஐரோப்பியருடன் அளவளாவிப் பழகி அவர்கள் சிநேகத்தை அடைய வேண்டுமாயின், டீ, காப்பி முதலியன அவர்களுடன் உண்டுகளிக்கவேண்டியது அவசியமாகவே இருக்கட்டும். அவர்கள் வீட்டிலே பறையர்களால் செய்து கொண்டுவரப்பட்ட தின்பண்டங்களைப் பிராமணர் புசிப்பதினால் பாதகமில்லை என்றும் வைத்துக் கொள்வோம். அப்படியானாலும் மது, மாமிச பக்ஷணங்களை உண்ணலாமோ?

சுந்தர :- யாராவது அவற்றையும் புசிக்கும்படி நிர்ப்பந்தம் செய்கிறார்களா? இல்லையே. நாம் நம்முடைய வீடுகளில் சாதாரணமாய்ச் சாப்பிடுகிற வஸ்துக்களை அவர்கள் வீடுகளிலும் அவர்களுடன் கூடி உண்ணல் வேண்டுமென்பது தானே முக்கியம். நமது வழக்கம் எப்படி யாயினும், அவர்களுடன் பந்திபோஜனம் செய்யாத பேர், ஐரோப்பியரது அந்தரங்க சிநேகத்தை அடைய முடியாது; இங்கிலீஷ்காரன் இருதயத்தை அவன் வயிற்றின் வழியாகத் தான் அடைய வேண்டும் என்று கேட்டதில்லையா? ஐரோப்பியர் சமபோஜனத்தை அவ்வளவு முக்கியமாகப் பாராட்டுகிறார்கள். அதை நம்மால் மாற்றமுடியாது. நமக்குள்ளும் அப்படி நினைக்க வில்லையா? உண்ட வீட்டுக்கு இரண்டு நினைக்கலாகாது.” என்று சொல்வதின் பொருள் என்ன? மனிதர்களை ஒன்றுபடுத்த சமபோஜனம் அதி முக்கியமானது.

இராமையர் :- சரி, அப்படியே வைத்துக்கொள் வோம். ஐரோப்பியர்களோ மது மாமிச பக்ஷிணிகள். நம்ம சமையல் முறை அவர்கள் வேலைக்காரருக்குத் தெரியவே தெரியாது. அப்படியிருக்க, நாம் அவர்கள் வீடுகளில் தாராளமாய் உண்பதெப்படி?

சுந்தர :- உலகத்திலுள்ள பல கோடி ஜனங்களையும் கணக்கெடுத்துப்பார்த்தால், மது மாமிச பக்ஷணம் செய்யாதவர் மிகச் சிலரென்றே ஏற்படும்.

சேஷ :- உலகத்திலே மூடர்கள் தான் அதிகம்; ஆயிரத்திலொருவன் கூட புத்திசாலியில்லை.

சுந்தர:- சேஷூ! நாம் வேண்டுமானால் அப்படி வைத்துக் கொள்ளலாம் , நாமே புத்திசாலிக ளென்றும் எண்ணிக் கொள்ளலாம். ஆயினும், நீ அறியாத விஷயமில்லையே. நமது ஆரிய முன்னோர்கள் தின்ற மாமிசத்துக்கும் குடித்த ஸோமாஸத்துக்கும் கணக்குண்டோ? ஒரு ருஷி மற்றொரு ருஷியின் ஆசிரமத்துக்கு விருந்தாக வந்து விட்டால், புடலங்காயும் கத்தரிக்காயும் கறிசெய்தார்களோ, கன்றிறைச்சியும் மான் இறைச்சியும் கறி செய்தார்களோ? பானகமும் நீர்மோரும் கரைத்தார்களோ? ஸோம ரஸம் தயார் செய்தார்களோ? பழைய ஏடுகளைத் திருப்பிப் பார். நமது சிராத்தங்களிலே தேனும் உளுந்தும் இப்பொழுது சேர்ப்பது மது மாமிசத்துக்குப் பதிலாகவே என்று சொல்வதில்லையா? நான் சொல்வது, நாமெல்லாரும் இப்பொழுது திரும்பியும் மது மாமிச பக்ஷிணிகள் ஆகவேண்டு மென்பதல்ல. அப்படி யானோ மெனில் நம் தேகவலி அதிகரிக்கும் என்று பலர் மனப்பூர்வமாக நம்புகிறார்கள். அது கிடக்க, நாம் இப்பொழுது மது மாமிசங்கள் உண்ணாமையினால், அப்படி யுண்பவர்கள் எல்லாம் காட்டுத்தனமான அநாகரிக ஜனங்களென்று எண்ணிவிடக்கூடாது. எத்தனையோ கோடி ஜனங்கள் இவ்வுலகத்திலே மாமிசத்தையே முக்கிய உணவாகக் கொண்டு வாழ்கிறார்கள்; மிதமாகப் பானம் செய்தால், மதுவினால் ஒரு பாதகமுமில்லை; சாதகமே ஏற்படும் என்று சில வைத்திய சிரோமணிகளும் அபிப்பிராயப் படுகிறார்கள்; அவசியமாக நினைப்போருமுண்டு.

இராமையர் :- அதுதானே சங்கடம், எது மிதம் எது அமிதம்? முதலில் ஒரு துளி, ஒரு சிறு ஸ்பூன் அளவு; அரைச் சிறங்கை தான் குடிக்கிறது, உத்ஸாக மாகவே இருக்கிறது; வரவா, வழக்கம் பலப்பட்டு, குப்பி குப்பியாகக் குடிக்க ஆரம்பித்து விடுகிறது. காவேரி போற்டு ஒயினாக ஓடாதா! என்று, ஏங்கிப் பிரார்த்திக்கிறது. மனுஷனும் தொலைகிறான், குடும்பமும் நாசமாகிறது. குடிமட்டும் வழக்க மாய்விட்டதோ, அப்புறம் குடித்தன மெல்லாம் குடிமோசந்தான்.

இஃதோடு சீட்டுக்கச்சேரி முடிந்து, மற்ற நண்பர் தத்தம் வீடு சென்றனர். சுந்தராமையரும் சேஷையரும் மட்டும், இரண்டு சாய்வான நாற்காலிகளில் வீற்றிருந்து பேசலானார்கள்:

சேஷ :- இராமையர் சொன்னது கேவலம் சத்தியமே, சுந்தரம்! இந்தப் புதுப்பிசாசு உன்னைப் பலமாய்ப் பிடித்து கொள்ளுமுன், நீ எப்படியாவது அதை ஒழித்து விடவேண்டும்.

சுந்தர :- பிசாசுப் பிடியா இது? நினைத்தால் நிறுத்தி விட மாட்டேனோ? ஜீரணசக்தி குறைவா யிருப்பதினால் அதைக்கொஞ்சம் பலப்படுத்தும் பொருட்டே, சிறிது சாப்பிடுகிறேன். நானா குடிகாரன் ஆகி விடுவேன் என்று பயப்படுகிறாய்? மட்டுக்கு மிஞ்சி, நான் தாங்க முடியாத அளவு, நான் சாப்பிடுகிறதே இல்லையே.

சேஷ :- போன மார்கழி மாதத்தில், அன்று இரவு நீ வீட்டுக்கு வந்தஸ் திதி உனக்கு ஞாபகமில்லையா?

சுந்தர:- அன்று புதுவருஷ விருந்து; விசேஷ தினம்; ஐரோப்பிய சிநேகிதர் புதிதாய்ச் சிலர் வந்திருந் தார்கள். கொஞ்சம் மறந்து விட்டேன்; கூட்டத்தின் குதூகலத்தினால் அப்படியாயிற்று.

சேஷ :- உன் உடம்பைப் பார்த்தால் எனக்குப் பயமாகவே இருக்கிறது; நான் கடைசியாகப் பார்த்ததற்கு இப்போது அதிகம் கெட்டிருக்கிறது. இன்னும் நீ இப்படியிருந்தால் எப்படி?

சுந்தர:- என் உடம்பா? அதற்கென்ன குறை? ஒன்றுமில்லை. வா , சேஷு, சாப்பிடப் போவோம். என் அகமுடையாள் உனக்குப் பிரியமான வஸ்து ஒன்று இன்றிரவு தயாரித்து வைத்திருக்கிறாள். இப்பொழுது இன்ன தென்று சொல்லமாட்டேன். சாப்பிடும் பொழுது உனக்குத் தெரியும். கீழே போவோம்; வா.

பின்பு சுந்தரமையர், ஒரு சின்னக்ளாஸ் வழக்கம் போல் குடிக்கத் தன் அறைக்குட் சென்றார். சேஷையரும் கூடவே சென்று, அவர் கையைப் பிடித்துத் தடுத்து : இன்றிரவு வேண்டாம், சுந்தரம்! இந்த ஒரு நாளிரவு வேண்டாம்; நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திவிடுவேன் என்று ஜம்பம் பேசினையே, இன்றி ராத்திரி நிறுத்து, பார்ப்போம்,” என்றார்.

சுந்தர :- வேண்டு மெனின் நான் நிறுத்த மாட்டேனா என்ன? ஆனால் இன்று ஏன் நிறுத்த வேண்டும்? இன்று இராத்திரி உனக்காக விசேஷச் சமையல். இன்று தான் முக்கியமாய்ச் சாப்பிடவேண்டும்; இல்லாவிடின் ஜரிக்காது.

சேஷை :- ஜரிக்காத வஸ்துவை சாப்பிடுவதேன்? அது என்னவாயினும் நானும் சாப்பிடவில்லை; நீயும் சாப்பிடாதே. ஒரு விஷம் ஜரிப்பதற்காக மற்றொரு விஷத்தைச் சாப்பிட வேண்டாமே.

சுந்தர :-இது விஷமா? சும்மா உளறாதே, சேஷூ! விடு, ஒரு கிளாஸ் சாப்பிட்டு விட்டு, இருவரும் போஜனத்துக்குப் போவோம்.

சேஷையர் தம்மால் இயன்ற மட்டும் கையைப் பிடித்துத் தடுத்துப்பார்த்தார்; பலிக்கவில்லை; சுந்தாமையர், அவர் கையை உதறிவிட்டு, மேஜைமேலிருந்த குப்பியை எடுத்து, கண்ணாடி டம்ளரில் கடகடவென்று மதுவை ஊற்றிக் குடிக்கலானார். சேஷையர் கவனித்ததில், முன்னிலும் இரு மடங்குக்கு மேல் குடித்தது மன்றி, சுந்தரமையர் கையும் ஊற்றும் பொழுது நடுங்கிற்று. பின்பு இருவரும் கீழே சாப்பிடப் போயினர். தமது நண்பரைப்பற்றி சேஷையர் கொண்ட மனக்கவலையை, சுந்தரமையரின் தர்ம பத்தினி ஜானகியம்மாளின் முகமும், பதின் மடங்கு அதிகமாகப் பிரதிபலித்துக் காட்டிற்று.

இரண்டே இலைகள் போட்டுப் பரிமாரி இருப்பதைப் பார்த்தவுடன், சேஷையர், ‘எங்கே? குழந்தைகள் எங்கே? அவர்கள் கூடச் சாப்பிட வில்லையா?’ என்று கேட்டார்.

“அவர்கள் சாப்பிட்டாய் விட்டது. அவர்கள், அப்பாவுடன் இப்பொழுது சாப்பிடகிறதில்லை.” என்று, ஜானகியம்மாள் விடையளித்தாள். சுந்தரமையர் போஜன கால முழுவதும் வெகு உல்லாசமாய்ப் பேசிச் சிரித்துப் பரிகாசஞ் செய்து கொண்டிருந்தார். சேஷையரோ, அவரது சந்தோஷத்தை உடன் அனுபவிக்க முடியாதவராய், கவலையோடு ஊண்கழித்தார். பின்பு இருவரும், வழக்கம் போலத் தாம்பூலம் அருந்த மாடிக்குச் சென்றனர். இருவரும் உற்ற நண்பர்களாயிருந்தும், ஒருவரை ஒருவர் கண்டு பிரிந்து வெகு நாட்களாயிருந்தும், சுந்தரமையர், தாம்பூலத்தை அவசரப்படுத்தி, சேஷையரைச் சீக்கிரம் படுக கைக்கு அனுப்பிவிட்டார். தாம்பூலம் மென்று கொண்டு அவர்கள் வீற்றிருந்த சிறிது நேரத்துக்குள், சுந்தரமையரின் கண்கள், தம்மையறியாமலே பல தாம் மேஜைமேலிருந்த உஸ்கி மதுக்குப்பியை நோக்கியதைச் சேஷையர் கவனித்தார்.

சேஷையர், மற்றொரு நண்பர் வீட்டுக்குப் படுக்கைக்குப் போகும் வழியில், சுந்தாமையர் மனைவி ஜானகியம் மாளுடன் சிறிது பேசலானார். அப்பொழுது, நாளுக்கு நாள் சுந்தாமையர் குடிமுற்றிக் கெட்டுப் போவதையும், மனைவி மக்கள் மேல் அவர் வரவர உபேக்ஷையா யிருப்பதையும், குடும்ப விஷயங்களை முன்போற் கவனியாம லிருப்பதையும், வருமானத்துக்கு மேற்பட்ட செலவினால் கடன் பாம்பு விஷம் ஏறுவது போல ஏறுவதையும், அடிக்கடி, சுந்தரமையர், இரவில் போஜனஞ் செய்யாமல் வெளிவிருந்துகளுக்குச் சென்று குடிமயக்கத்தோடு நள்ளிரவில் திரும்பி வருவதையும், வீட்டிலிருக்கும் பொழுது, அவர், தம்மனைவி எவ்வளவு கெஞ்சி மன்றாடித் தடுத்தாலும் கேளாமல் அமிதமாகக் குடிப்பதையும் பற்றிச் சேஷையர் அறிந்தார். அவருக்குண்டான விசனம் கொஞ்சமல்ல. சுந்தாமையருடைய குடும்ப விஷயங்களை நன்கறிந்தவரா தலின், அவர் இவ்வாறு ஒரு துர் வழக்கத்தால் கெட்டுப் போவதைக் கண்டு மிகவும் பரிதபிக்கலானார். குடியினால் குடும்பம் கெட்டுப்போவது மன்றி, அவர் உடம்பு சீக்கிரம் சீரழிந்து, அவரது அகால மரணத்தினால் தனக்கு வைதவ் யமும் நேரிடக்கூடுமென்று ஜானகியம்மாள் ரத்தக் கண்ணீர் வடித்தாள். இதற்கென்றே ஒருவாரம் வரை மதராஸ் பட்டணத்தில் தங்கி, சேஷையர், தம்மால் இயன்ற பட்டும் சுந்தரையருடன் வாதாடியும் கெஞ்சியும் பயமுறுத்தியும் பார்த்தார். அவர் எடுத்துக்காட்டின நியாயங்களையும், தீங்குகளையும் சுந்தாமையர் ஒப்புக்கொண்டா ரெனினும், மாலைப்பொழுது வந்தவுடன் அவர் புத்தி எல்லாம் மாறி, குப்பியே ஞாபகமாக விருந்தது. தாம் வேண்டினால் நினைத்தபோது நிறுத்திவிடக்கூடுமென்று வீரியம் பேசுவதை விட்டு, உலக வாழ்க்கையிலே கடவுள் அருளி யிருக்கும் சுகபோக்கியங்களை யெல்லாம் மனுஷன் அனுபவிப்பது கிரமந்தான் என்றும், தாம் மதுபானஞ் செய்வது அவ்வாறே என்றும், அப்படிச்செய்யாதார் உலக போகங் களில் ஒன்றை வீணே இழப்பவர்களென்றும் தத்துவம் பேசத் தொடங்கினார்.

“உன் பாட்டனார் யாகம் செய்தார்; உன் தகப்பனார் பாம வைதீகர்; சிஷ்டர்; உன்னை மட்டும் எங்கிருந்தோ இப்பிசாசு வந்து பிடித்துக்கொண்டதே! நான் ஆதி முதலே இது வேண்டாம், வேண்டாம், கெட்ட வழக்கம், பிடித்துக்கொண்டால் ஒரு நாளுமே விடாது என்று எச்சரித்தேன். அப்பொழுது கேட்காமல் வீரியம் பேசினையே. அந்தோ! ஒரு குடும்பம் அநியாயமாய்க் கெட்டுப் போகிறதே!” என்று, சேஷையர் பரிதபித்து முறையிட்டார். ஒன்றும் பயன்படவில்லை. பின்பு அவர் தம்மூர் திரும்பிவிட்டார்.

மலை யேறுவது கஷ்டம், மலையுச்சியினின்றும் கீழே உருளுபவன் வெகு சுலபமாய் விழுந்து விடக்கூடும். சுந்தாமையர் நாளுக்கு நாள் அப்படியே குடிவெறி மிக்குக் குணங்குன்றிச் சீர் கெட்டு, நோய் முற்றி, மறுவருஷத்தில் தேக வியோகமானார். ஒரு நாள் காலை, அவர் இரவில் படுத்த படுக்கையில் பிணமாகக் கிடந்தார். உள்ள நாள் வரை அவர் குணக்கேட்டைச் சகித்து வந்த ஜானகியம்மாள், ஊரார் சிரியாதபடி, குடியின் மிகுதியால் சாகுமுன் அவர் படுக்கைமேற் செய்திருந்த அசங்கியங்களை எல்லாம் மாற்றி, மானத்தைக் காப்பாற்றி, தன் துக்கத்தைச் சகித்துக்கொள்வதுடன், அலங்கோலமாய் அவர் விட்டுப்போன குடும்ப விஷயங்களைச் சீர்ப்படுத்தி, தன்னாலியன்ற மட்டும் பாடுபட்டு, தன் குழந்தைகளையும் போஷிக்க வேண்டிய தாயிற்று.

ஆதி ஆரியரது வாழ்க்கை எவ்வாறாயினும், அவர்கள் சந்ததியாராகிய நமக்குள் மதுபான வழக்கம் இல்லாம லிருந்தது. வாந்திபேதி உபத்திரவம் உற்றார்க்கும், பிரச வித்தவர்க்கும் சாராயமானது அவசியமான மருந்தென்று, நமக்குள் சிலர் எண்ணுகிறார்கள். இது முற்றிலும் தவறென்பது, சிறந்த மேனாட்டு வைத்திய சிகாமணிகளின் அபிப்பிராயம், இந்தியாவினும் மிகச் சீதளமான தேசங்களிலிருந்து வந்துள்ள ஐரோப்பியரிற் பலர், மதுபானஞ் செய்வது மெய்யே ஆயினும், நெடு நாளைய வழக்கத்தினால், அவர்கள், மிதமிஞ்சிப் போகாமல் தடுத்துக் கொள்ள அறிந்திருக்கிறார்கள். மேனாட்டுச் சனசமூகங்களுக்குள் நடக்கும் குற்றங் கோளாறுகளுக்கெல்லாம் குடி வெறியே முக்கியகாரணம் என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது. அங்ஙன மிருக்க, உஷ்ண பூமியில் அவசியமில்லாததும், தேச சம்பிரதாயத்தோடு முரணியதும், பிடித்தால் விடாததுமான ஓர் ஈன வழக்கத்தை, நம்முள் சிலர் புதிதாய் அப்பியசிப்பது பரிதபிக்கத்தக்கதே. பள்ளு பறை என்று கீழ் ஜாதிகளாக மதிக்கப்படும் இனத்தாரைத் தவிர மற்றொருவருமே மது பானஞ்செய்யாதிருந்த இந்நாட்டிலே, இப்பொழுது மேல் ஜாதியாரும் குடிக்கக் கற்றுக்கொள்வது விபரீதமே. கீழ் ஜாதியாரின் கெட்ட வழக்கத்தை நீக்கி அவர்களை மேம்படுத்த முடியாமல், தாம் அவ்வழக்கத்தை அனுசரித்து, கீழ் ஜாதியாக முயலுதல் ஆச்சரியமே! தன் புத்தியைப் பாழாக்கித் தன்னை மிருகத்துக்குச் சமமாக்கும் மதுவை, தெய்வாம்சமான மனிதன் எவனாயினும் தன் வாய்க்குள் ஊற்றிக்கொள்வானா என்று, ஆங்கில கவீந்திரமே எழுதியிருக்கிறார். இன்னும் அதிகம் பரவாவிடினும், நாளுக்கு நாள் நமக்குள் இக்கெட்ட வழக்கம் பரவிக்கொண்டு வருகிறது என்பது நிச்சயம். இதை வாசிக்கும் மித்திரர் பலர்க்குச் சுந்த மையர் குடும்பத்தைப்போல் யஜமானன் குடியினால் கெட்டுப் போன குடும்பங்கள் சில ஞாபகத்துக்கு வரலாம். கெட்ட வழக்கத்தைப் பழகி எதிர்ப்பது வீரமாகாது: வெகுவாய் தோல்வியே சித்திக்கும். ‘துஷ்டர்களைக் கண்டால் தூர விலகு’ என்பது போல, தீய வழக்கத்தைப் புலி போலஞ்சி விலகுவதே ஆண்மையாகும்.

– குசிகர் குட்டிக் கதைகள் – மூன்றாம் பாகம், 1924, ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் புஸ்தகசாலை, மயிலாப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *