நெஞ்சமடி நெஞ்சம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 23, 2023
பார்வையிட்டோர்: 4,627 
 

(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம்-16 

அது புத்தம் புதிய கைனடிக் ஹோண்டா..! 

ரூபிணி அவசரமாய் அதைச் சுற்றி வந்தாள். அவ ளுடைய பழைய வண்டியின் நிறத்திலேயே இருந்தாலும்… அது புதிய வண்டி.. அவளது பழைய வண்டியின் நம்பரே எழுதப்பட்டிருந்தாலும்.. அது புதிய நம்பர் பிளேட்… கையிலிருந்த கவரை உடைத்தாள்… உள்ளேயிருந்து ஒரு கடிதம் வெளிவந்தது. 

ஹரிஹரன் எழுதியிருந்தான். ‘நான் உன்னுடன் போனில் பேசுவதை நீ விரும்ப மாட்டாய்… வேறு வழியின்றி கடிதம் எழுதுகிறேன். புது வண்டியைப் பார்த்ததும் திகைத்திருப்பாய்… உன் வண்டி என் வீட்டு கார் ஷெட்டில் பத்திரமாய் இருக்கிறது… உன் நினைவாக அதை நான் எடுத்துக் கொண்டு விட் டேன்.. என் நினைவை உனக்கு ஏற்படுத்த புது வண்டி வாங்கி கொடுத்து விட்டிருக்கிறேன்.. நம்பர் முதல் கலர் வரை எதுவும் மாறாமல் உன்னிடம் அது வந்து சேர்ந்திருக்கும்.

ரூபிணி..! உன்னிடம் நான் அனுப்பியிருப்பது எனது நெஞ்சம். என்னிடம் நான் எடுத்துக் கொண்டிருப்பது உனது நெஞ்சம்… இதை நீ மறந்து விடாதே. நெஞ்சத்தை நீ கொடுக்க மறுத்தாலும் நான் எடுத்துக் கொள்வேன் என்பதை இதன் மூலம் உனக்கு உணர்த்துகிறேன். என் நெஞ்சத்தை நீ ஏற்க மறுத்தாலும் அது உன்னுடன் தான் இருக்கும் என்பதையும் உனக்கு அறிவுறுத்துகிறேன். 

என்றேனும் ஓர் நாள் எனை நீ அழைப்பாய் என்ற நம்பிக்கையுடன் டெல்லிக்குப் பறக்கப் போகிறேன். மீண்டும் ஓர் நாள் சந்திக்கலாம். 

-ஹரிஹரன்.’ 

ரூபிணி புது வண்டியைக் கண்ணீருடன் தொட்டுப் பார்த்தாள். அது ஹரிஹரனின் நெஞ்சமாமே. அவளது விழி நீர் வண்டியில் தெறித்து விழுந்தது. அவசரமாய் சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து அதைத் துடைத்தாள். 

பரிவுடன் அவ்வண்டியைத் தடவி பூப்போல் அதை வருடிக் கொடுத்தாள். 

“என்னடி வண்டியுடன் கொஞ்சிக் குழாவுகிறாய்…” ஜமுனா கேட்டுக் கொண்டே வந்து நின்றாள். 

“ரிப்பேருக்கு போய் வந்திருக்கிறது. அதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்…” 

“புது வண்டி போல் ஆகிவிட்டதே. பரவாயில்லை. எவ்வளவு கேட்டாலும் கொடுத்து விடு…” 

“கொடுக்காவிட்டால் விட்டு விடுகிறவர் போல் தெரியவில்லையே…” ரூபிணி ஹரிஹரனின் நினைவோடு சொன்னாள். 

“நீ கொடுக்க மறுப்பதில் நியாயம் இல்லையே…” ஜமுனா வொர்க் சாப் மெக்கானிக்கைப் பற்றிக் கூறினாள். 

ரூபிணி தனக்குள் சிரித்துக் கொண்டே வண்டியை மற்ற வண்டிகளுடன் நிறுத்தி பூட்டிவிட்டு வந்தாள். 

ஜமுனா அங்கிருந்த மரத்தடியிலிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தாள். அவள் எதையோ சொல்ல விரும்புவது புரிய ரூபிணி அவளருகில் சென்று அமர்ந்தாள். 

“என்னடி… தனியாய் உட்கார்ந்து விட்டாய்… காதல் வந்தால் தான் தனிமையைத் தேடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்…” 

“கேள்விதான் பட்டிருக்கிறாயா…? உனக்குத் தெரியாதா..?” 

ரூபிணி மௌனம் சாதித்தாள். பொய் சொல்ல அவளுக்கு மனம் இல்லை… அதே சமயம் ஜமுனாவின் அறிவுரையையும் அவள் மதித்தாள். 

“என்ன பேச்சையே காணோம்… மதியம் காரில் வந்து இறங்கினாயாமே… ஹரிஹரனின் கார்தானே…” 

“ஆமாம்… வரும் வழியில் என் வண்டி ரிப்பேராகி விட்டது… அவர்தான் என்னை ஹாஸ்டலில் டிராப் பண்ணினார்..” 

“என்ன சொன்னாலும் கேட்கக் கூடாதுங்கிற முடிவோடு இருக்கிறாயா…?” 

“இனி நீ சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது ஜமுனா… அவர் இனிமேல் என்னிடம் பேசமாட்டார்…”

“நீ பேச வேண்டாமென்று சொல்லி விட்டாயா..?”

“ஆமாம்…” 

ஜமுனா ரூபிணியை அணைத்துக் கொண்டாள். 

“நல்ல வேலை செய்தாய் ரூபிணி. உன் நன்மைக்குத்தான் நான் சொன்னேன். நீ பணத்தைப் பார்த்து மயங்குகிறவளாக இருந்திருந்தால் நான் இதைச் சொல்லியிருக்க மாட்டேன். நீ பாவம். வெளியே ஒரு சினிமாவுக்குக் கூட பிரண்ட்ஸோடு சேர்ந்து போகப் பயப்படுகிற ரகம்… உனக்கும் ஹரிஹரனுக்கும் ஒத்து வராது ரூபிணி. உன்னைப் போன்ற அழகான.. மென்மையான.. நல்ல குணமுள்ள பெண்ணைப் பார்த்தால் ஹரிஹரனுக்கு ஆசை வருவது இயற்கை. ஆனால் நீ மென்மையான பெண். ஹரிஹரனின் முரட்டு சுபாவத்துக்கும்.. அடாவடித்தனமான செய்கைகளுக்கும்… உன்னால் பொருந்தி வாழ முடியாது.. அதனால் தான் சொன்னேன்… உனக்கு இதனால் மனம் வலிக்கலாம். சிறிது நாளில் இது சரியாகிவிடும்…” 

ஜமுனா பேசிக் கொண்டே போனாள். 

ரூபிணியின் நெஞ்சம் கண்ணீர் விட்டது. மனதின் வலி சரியாகிவிடுமா..? எப்போது சரியாகும்.. அவள் இறந்த பின்னாலா.. ? ஓர் நொடி.. பெண்ணென்று இந்த பூமியில் ஏன் தான் பிறப்பெடுத்தோம் என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் ரூபிணி. 

‘பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் – மிகப் 
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்…’ 

பாரதி ஆணாய் இருந்ததால்தான் பெண்ணின் துன்பத்தைப் புரிந்து… உணர்ந்து எழுதினாரோ… அவரே பெண்ணாக இருந்திருந்தால் இதைப் புரிந்திருப்பாரா..? 

பெண்ணே.. பெண்ணை.. உணர மறுப்பதேன்? 

ரூபிணியின் கை விரல்கள் அவளது துப்பட்டா நுனியைத் திருகிக் கொண்டு இருக்க ஜமுனா தொடர்ந்து பேசினாள். 

“எனக்கு கல்யாண ஏற்பாடு நடக்கிறது ரூபிணி…”

“ஈஸிட்… என்னிடம் சொல்லவே இல்லையே…” உண்மையாய் முகம் மலர்ந்தாள் ரூபிணி. 

“இன்றைக்குத்தான் முடிவானது.. இரண்டு மூன்று மாதங்களாகவே அவர் குடும்பத்திற்கும்… என் குடும்பத்திற்கும் கல்யாணப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.. அவர்கள் வீட்டில் அதிகம் எதிர்பார்த்தார்கள். எனக்கு அவர்கள் அப்படிக் கேட்டதில் விருப்பமில்லை… அதனால் இந்தக் கல்யாணத்தில் எனக்கு இன்ட்ரெஸ்ட்டும் இல்லை… உன்னிடம் நடக்காத கல்யாணத்தைப் பற்றி ஏன் பேசுவானேன் என்று சும்மா இருந்துவிட்டேன்… பட்.. இன்றைக்கு என்னைப் பார்க்க என் காலேஜிற்கு அவர் வந்திருந்தார்…” ஜமுனா முகம் சிவந்தாள். 

“இதைப் பாருடா… இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று சாதுப் பூனை வேசம் போட்டுவிட்டு இன்றைக்கு நீயே சைட் அடித்து விட்டு வந்திருக்கிறாயா? ஊருக்குத்தான் உபதேசமா?” ரூபிணி கேலியாய் வினவினாள். 

“ரூபிணி… இப்போதும் சொல்கிறேன். ஹரிஹரனுக்கு மட்டும் ‘தாதா’ என்கிற இமேஜூம்.. மிகப் பெரிய பின்புலமும் இல்லாமலிருந்து… அவர் உன்னைப் போல் ஒரு கவர்ன்மென்ட் எம்ப்ளாயி ஆக இருந்திருந்தால் உங்கள் காதலை நான் ஆதரித்து இருப்பேன். முன்னால் நின்று உங்கள் கல்யாணத்தை நடத்தியும் வைத்திருப்பேன். ஆனால் அவர் எட்டாத உயரத்தில் இருக்கிறாரே…” 

“விடு ஜமுனா.. எனக்கு உன்னைத் தெரியாதா? நான் விளையாட்டாய் சொன்னேன்.. உன் ‘அவர்’ எங்கே வேலை பார்க்கிறார்…” 

“பார்த்தாயா… அதைச் சொல்ல மறந்து விட்டேன்.. அவர் உன் ஹீரோவின் காலேஜில் தான் லெக்சரர் ஆக வேலை பார்க்கிறார்…” 

“யாரைச் சொல்கிறாய்…?” 

“ஹரிஹரினின் இன்ஜினியரிங் காலேஜ் ஒன்றும் இங்கு இருக்கிறது. இதை உன்னிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அவர் என்னைப் போலவே எம்.ஈ. படித்து விட்டு அங்கே என்னைப் போலவே லெக்சரராக இருக்கிறார்…” 

”உன்னவர்… உன்னைப் போலவே தானே இருப்பார்…?” 

“கிண்டலா.. ? அவர் என்னைப் போல சிந்திக்கவில்லை ரூபிணி. என்னைப் பார்க்க இன்று அவர் வந்திருந்தபோது அவருடைய பேரன்ட்ஸ் கேட்பதைச் செய்தால் என்ன என்றுதான் என்னிடம் வாதாடினார்…” 

ஜமுனா எரிச்சலுடன் கூறினாலும்.. அதையும் தாண்டி அவள் முகத்திலிருந்த உல்லாசத்தையும்.. மகிழ்வையும் கண்ட ரூபிணி தோழியைப் பற்றி என்ன முடிவுக்கு வருவது என்று தெரியாமல் குழம்பினாள். 

அத்தியாயம்-17

ஜமுனாவின் வருங்காலக் கணவன் உயர்திரு. நந்தகோபாலன் ஜமுனாவைத் தேடி வந்து நின்றபோது முதலில் ஜமுனா அவன் தன் பெற்றவர்களின் செயலுக்கு மன்னிப்புக் கேட்டு வரதட்சணைக் கொடுமையை எதிர்த்து வீர வசனம் பேசப் போகிறான் என்று எண்ணி புளகாங்கிதமடைந்தாள். ஆனால் அவனோ எடுத்த எடுப்பில், 

“உன் வீட்டாருக்கு தப்புத்தப்பாய் ஆலோசனை சொல்லிக் கல்யாணத்தை நிறுத்தி வைத்துக் கொண்டிருப்பது நிதானாமே…? இது என்ன பைத்தியக்காரத்தனம் ஜமுனா…” என்றுதான் கேட்டு வைத்தான். 

“பைத்தியக்காரத்தனமா.. ? ஏன் சொல்ல மாட்டீர்கள்? நீங்கள் பேசவில்லை. உங்கள் உடம்பில் ஓடும் ஆண் பிள்ளை ரத்தம் அப்படியெல்லாம் பேசச் சொல்கிறது… ஆணாகப் பிறந்து விட்டத் திமிர்.. பெண்களைக் கண்டால் இளப்பமாகத் தெரிகிறது”. 

“ஸ்ஸ்… ஆ.. இப்பவே கண்ணைக் கட்டுதே… இன்னும் உனக்குத் தாலிக் கட்டி குடும்பம் நடத்த ஆரம்பித்தால் வாழ்நாள் முழுவதும் இப்படி ஆணாதிக்கம்… பெண்ணடிமைன்னு லெக்சர் அடித்தே என்னை ஒரு வழி பண்ணிவிடுவாய் போல இருக்கே…” 

கண்ணை மூடி அவன் சொன்ன விதத்தில் ஜமுனா விற்கு சிரிப்பு வந்துவிட்டது. சிரிப்பை அடக்கிக் கொண்டு பொய்யாய் அவனை முறைத்தாள். அவனோ அவளை ரானையாய் நோக்கி கண்சிமிட்டினான். ஜமுனா தான் வீழ்த்தப்படுவதை உணர்ந்தாள். தன் உணர்வுகளை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். 

“இதோ பாருங்கள் மிஸ்டர் நந்தகோபால்?” 

“இதோ பாருங்கள் என்று வெறும் கையைத் தானே ஆட்டுகிறாய். எதைப் பார்க்கச் சொல்கிறாய்?” அவன் தேடும் பாவனையில் அங்கும் இங்கும் பார்வையை அலைய விட ஜமுனாவிற்கு அவன் முதுகில் நாலு போட்டால் என்ன என்று தோன்றியது. 

‘இவன் கெட்டிக்காரன்.. நான் அவனால் ஈர்க்கப் படுகிறேன் என்பதை உணர்ந்தே விளையாட்டுக் காண்பிக்கிறான்.’ 

ஜமுனாவின் முகம் சிவந்தது. ‘பெண்கள் ஆண்களை தம் விருப்பத்திற்கு வளைத்தது அந்தக் காலம். இன்றைய ஆண்கள் மகா கெட்டிக்காரர்கள். சாகஸக்கலை பயின்றவர்கள். பெண்களை தங்களது விருப்பத்திற்கேற்ப வளைத்து விடும் வல்லமை கொண்டவர்கள்’. 

“காலம் காலமாய் பெண்களை அவமானப்படுத்தும்.. துன்பப்படுத்தும் வழக்கம் வதரட்சணைக் கொடுமை.. மாட்டை வாங்கினால் கூட பணம் வாங்குகிறவர்தான் கொடுக்க வேண்டும்… பெண்ணை மட்டும் பணம் வாங்கிக் கொண்டுதான் அழைத்துப் போவீர்களோ…” 

அவன் முகம் தீவிரமானது. அவளை ஏற இறங்க ஓர் முறை பார்த்தான். “உன் வசனத்தில் இன்னும் ஓர் வாக்கியத்தை சேர்த்துக் கொள்… மனதுக்குப் பிடித்த பெண்ணை பணம் வாங்கிக் கொண்டுத்தான் அழைத்துப் போவீர்களா என்று கேட்க வேண்டும். வெறுமனே பெண் என்கிறாயே…” 

ஜமுனா தடுமாறினாள்.. அவன் கண்களில் சிரிப்பு இருந்தது. 

“நான் எவ்வளவு சீரியஸாக பேசிக் கொண்டிருக்கிறேன் தெரியுமா?”

“அதை நீ ஏன் பேச வேண்டும்?” 

“நான் பேசாமல் வேறு யார் பேச வேண்டும்?”

“மற்றவர்களைப் பற்றி எனக்கென்ன கவலை? உன்னைப் பற்றித்தான் நான் கவலைப்பட முடியும்.” 

“என்னைப் பற்றிக் கவலைப்படுகிறவர்… என் கருத்துக்களையும் கொள்கைகளையும் மதித்திருக்க வேண்டும்..” 

“உன் கருத்துக்களும்… கொள்கைகளும் சரியானவை தான்.. நான் இல்லையென்று சொல்லவில்லையே.. ஆனால் அது நமக்கு எதற்கு?” 

”ஊருக்குத்தான் உபதேசமா…” ஜமுனா கேட்டாள்.


ஜமுனா சிமிண்ட் பெஞ்சில் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் கூறியதைக் கேட்ட ரூபிணி சிரித்தாள் 

“ஸோ… நான் உன்னைக் கேட்ட கேள்வியை நீ மிஸ்டர் நந்தகோபாலிடம் ஏற்கனவே கேட்டுவிட்டாய்…?” 

“ஆமாம்…” 

“அப்புறம் என்ன ஆச்சு?” 


ஜமுனாவின் கேள்வியைக் கேட்ட நந்தகோபால் உரக்கச் சிரித்தான். அவளோ.. தான் என்ன நகைச்சுவையைச் சொன்னோம் என்று இவன் இப்படிச் சிரிக்கிறான் என்று ரோசப்பட்டவளாய்… 

”நான் இப்போது என்ன ஜோக் அடித்தேனென்று இப்படிச் சிரிக்கிறீர்கள்,” என்று கோபமாய் கேட்டாள். 

“மண்டூ… மண்டூ… உன் பேரன்ட்ஸிற்கு எத்தனை பிள்ளைகள்?” 

“ஏன்…? நான் ஒருத்தி மட்டும்தான்…”

“உன் அப்பா என்ன ஏழையா..?”

”ஊருக்கே பெரிய பண்ணையார்…” 

“அவர் சொத்து முழுவதும் யாருக்கு…?”

“இது என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி?”

“உன்னிடம் உன்னை மாதிரியே தானே கேட்க வேண்டும்..” 

ஜமுனா முறைத்தாள். சந்தடி சாக்கில் இவன் அவளை மட்டம் தட்டப் பார்க்கிறானே. 

“அப்போ… நான் பைத்தியக்காரியா…?” 

“பின்னே இல்லையா…? ஊருக்கு பெரிய பண்ணையார் வீட்டுப் பெண்.. அவர் சொத்துக்கு ஒரே வாரிசு.. சீர்வரிசை செய்ய விட மாட்டேன்னு கொள்கை பேசினால் எனக்கு சிரிப்பு வருமா வராதா?” 

“என் அப்பா பணக்காரர் என்பதால்தான் எனக்கு மதிப்பு என்றால் எனக்கு அந்த மதிப்பு வேண்டாம். நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன்…” 

“நீ நீயாக இருப்பதால்தான் நான் உன்னைத் தேடி வந்து பேசிக் கொண்டிருக்கிறேன் புரிந்து கொள். உன் அப்பா சும்மா ஒன்றும் எனக்குப் பெண் கொடுக்க முன் வரவில்லை. உன் அப்பா கிராமத்திலேயே பெரிய பணக்கார விவசாயி என்றால் என் அப்பா அந்த கிராமத்திற்கு பக்கத்து டவுனில் மிகப் பெரிய வியாபாரி. உன் சொத்துக்கள் கிராமத்தில் வயலாக இருந்தால்.. என் சொத்துக்கள் டவுனில் வீடுகளாகவும்… கடைகளாகவும் இருக்கின்றன. என் அப்பாவிற்கு நானும்.. என் அண்ணனும் மட்டும்தான்.. உன் அப்பா சல்லடை போட்டுச் சலித்துத் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை நான்.. இதை முதலில் தெரிந்து கொள். விட்டால் இன்றைக்கு முழுவதும் லெக்சர் அடித்துக் கொண்டிருப்பாய். அதைக் கேட்க எனக்கு பொறுமையில்லை. இரண்டு பரம்பரைப் பணக்காரர்கள் அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் அது பிரம்மாண்டமான கல்யாணமாகத்தான் இருக்கும். என் அப்பா அம்மா நூறு பவுன் நகை வேண்டுமென்று கேட்டார்கள் என்கிறாயே. உன் அப்பா உனக்காக இருநூறு பவுன் நகை செய்து வைத்திருப்பதாக மாப்பிள்ளை வீடு பார்க்க வந்த அன்றே சொல்லிவிட்டார், இது உனக்குத் தெரியுமா? அதோடு வீட்டுக்கு வரும் மருமகள்களுக்கு என்று குடும்ப வைர நகைகளில் என் வருங்கால மனைவிக்காக பிரித்து வைத்திருக்கும் நகைகளின் மதிப்பு நீ போட்டுக் கொண்டு வரும் நகைகளின் மதிப்பை விட பலமடங்கு அதிகம். இதுவும் உனக்குத் தெரியுமா?” 

ஜமுனாவின் வாய் அடைத்துக் கொண்டது 

“ஊர் பார்க்க நடத்தும் திருமணத்தின் பாரம்பரியமாய் செய்து வரும் சீர்வரிசைச் சடங்குகளை செய்யச் சொல்லி என் வீட்டார் சொல்லியிருப்பார்கள். உன் வீட்டில் உனக்காக வாங்கி வைத்திருப்பதை சபையில் வைத்துக் கொடுப்பதை தடுப்பதுதான் உன் கொள்கையா…?” 

இப்போது ஜமுனா அருகிலிருந்த செடியின் இலை கூளைக் கிள்ள ஆரம்பித்து விட்டாள். அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது. 

“தெரியாமல்தான் கேட்கிறேன். நீ கொண்டு வரும் சீர் வரிசைகளையும்.. நகைகளையும் அனுபவிக்கப் போவது யார்..? நீயா.. இல்லை என் வீட்டாரா..? உன்னிடம் வாங்கிப் பிழைக்க வேண்டிய அவசியம் என் வீட்டில் இல்லை…” அவன் குரலில் இப்போது கோபம் வந்திருந்தது. 

“ஐ ஆம் ஸாரி…” ஜமுனாவின் விழியில் கண்ணீர் தழும்பியது. 

நந்தகோபாலன் சுற்று முற்றும் பார்த்துவிட்டு தன் கைக்குட்டையை எடுத்து அவள் விழி நீரைத் துடைத்தான். அந்த செய்கையில் மனம் நெகிழ்ந்து விட்ட ஜமுனா… அவன் கரம் பற்றி மெதுவாய் இதழ்களைப் பதித்தாள். 

கேட்டுக் கொண்டிருந்த ரூபிணியின் உடலில் உணர்வுகள் அலையடித்து எழுந்தன. மற்றவர்களால் மட்டும் எப்படி நினைத்ததைச் செய்ய முடிகிறது? அவளுக்கு மட்டும் ஏன் நினைவுக்குக் கூடத் தடை விதிக்கப்படுகிறது…? அவள் மனம் ஹரிஹரனை நாடியது. 

அத்தியாயம்-18

ரூபிணி.. ரெடியா.. போகலாமா.. வாசவி அறை வாசலில் இருந்து குரல் கொடுத்தாள். 

“ம்ம்.. ரெடி.. போகலாம்…” கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள் ரூபிணி. 

‘ஆலிவ் கிரீன்’ என்று அழைக்கப்படும் பாட்டில் பச்சை வண்ணக் கலரில் பட்டுப்புடவை கட்டியிருந்தாள். அதே வண்ணத்தில் கைகளுக்கு ஜரிகை பார்டர் கொண்ட பிளவுஸ்… காதுகளில் முத்து ஜிமிக்கி அணிந்து… கழுத்தில் முத்துக்களில் பதக்கம் கோர்க்கப் பட்ட மாலை அணிந்திருந்தாள். நீண்ட பின்னலை தளர்வாய் பின்னி… அதில் நெருக்கிக் கட்டப்பட்ட மல்லிகைப் பூவை சூடியிருந்தாள். மல்லிகையின் மணம் அவள் நாசியை வருடியது. 

”கோமளா.. ரூபிணி ரெடியாகிவிட்டாள்… நீதான் லேட்…” என்று குரல் கொடுத்தவாறு உள்ளே வந்த வாசவி… ஆரஞ்சு வண்ண பிரிண்டட் சில்க்கில் இருந்தாள். 

‘“வாவ்…” என்று குரல் கொடுத்தபடி ரூபிணியை ஏற இறங்கப் பார்த்தாள். 

“எவ்வளவு அழகாய் இருக்கிறாய் ரூபிணி.. என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு. அப்புறம் ஏன் ஹரிஹரன் உன்னிடம் மயங்க மாட்டார்..?” அவள் இயல்பாய் கூற ரூபிணிக்கு தூக்கிவாரிப் போட்டது. 

“என்ன வாசவி.. இப்படிச் சொல்லிவிட்டாய்…” 

“எல்லாம் எனக்கும் தெரியும் ரூபிணி.. ஹரிஹரன் உன்னைக் காரில் அழைத்து வந்து ஹாஸ்டல் வாசலில் இறக்கி விட்டுவிட்டுப் போயிருக்கிறார். உன் வண்டியை ரிப்பேர் பண்ணிக் கொடுத்திருக்கிறார்…” 

“இதெல்லாம் ஜஸ்ட் எ ஹெல்ப் தானே வாசவி…” 

“ரூபிணி… உன் குழந்தைத் தனத்தைப் பார்த்தால் ரசிக்கத்தான் தோன்றுகிறது. நீ இவ்வளவு இன்னொஸன்டா…? ஹரிஹரனைப் பார்ப்பதென்றால் அப்பாயின்ட்மென்ட் வாங்கித்தான் பார்க்க முடியும்… தமிழ்நாட்டின் முக்கிய விஐபிக்களில் அவரும் ஒருவர்.. அவரிடம் சரிக்குச் சரியாய் நின்று பேச பெரிய அந்தஸ்துள்ள மனிதர்களே பயப்படுவார்கள்.. அவர் யாரையும் மதித்து ஓர் வார்த்தை அதிகம் பேசமாட்டார் அப்படிப் பட்ட சூப்பர் மேன்.. உனக்கு டிரைவர் வேலை பார்க்கிறார்… உன் வண்டியை ரிப்பேர் பண்ணி அனுப்புகிறார்… என்றால்.. எதுவும் விசயம் இல்லாமல் இருக்குமா?” 

“வாசவி.. ப்ளீஸ்.. நான் ஏற்கெனவே கலங்கிப் போயிருக்கிறேன். நீ வேறு பயமுறுத்தாதே…” 

“எதற்குக் கலக்கம்… சிங்கத்தை உன் கண்ணசைவில் கட்டிப் போட்டிருக்கிறாய்.. இதில் கலக்கம் எங்கேயிருந்து வந்தது…” 

”என்னைச் சொல்லிவிட்டு நீங்கள் இரண்டு பேரும் அரட்டை அடித்துக் கொண்டு நிற்கிறீர்களே.. இப்படியே.. நாம் லேட்டாகப் போனால்.. ஜமுனாவின் மேரேஜ் ரிஸப்சனுக்குப் போக மாட்டோம். அவளுடைய வளைகாப்பிற்குத்தான் போவோம்…” குரல் கொடுத்துக் கொண்டே கோமளா வந்தாள். 

பேச்சை நிறுத்திவிட்டு வாசவியும் ரூபிணியும் அறையை விட்டு வெளியே வந்தனர். ரூபிணி அறைக் கதவை மூடி சாவியை ஹேண்ட் பேகிற்குள் போட்டுக் கொண்டு ஜமுனாவிற்கு கொடுக்க வாங்கிய வண்ணக் காகிதத்தால் சுற்றி அலங்கரிக்கப்பட்ட பரிசுப் பொருளை எடுத்துக் கொண்டாள். 

“என்ன வாங்கியிருக்க ரூபிணி ?” கோமளா வினவினாள். 

“வெள்ளிக் குத்துவிளக்கு…” ரூபிணி படியிறங்கிக் கொண்டே கூறினாள். 

‘ரூம்மேட் இல்லையா… உன் பெஸ்ட் பிரண்ட் வேறு… ஆனால் நீ எப்படி அவளது கல்யாணத்திற்குப் போகாமல் விட்டாய்…” 

“அவர்களுடைய ஊர் தர்மபுரிக்குப் பக்கம்… அங்கே தனியாய் போக என் பேரன்ட்ஸ் பெர்மிஷன் தர வில்லை…” 

“எல்லோருக்கும் அதுதானே பிரச்சனை… ? சரி சரி… ரிசப்ஸனிலாவது காலாகாலத்தில் போய் கலந்து கொள்வோம்…” கோமளா பரபரப்பாய் மணி பார்த்தாள். 

“காலாகாலத்தில் எங்கே போய் சேரப் போகிறோம்… இந்த மறதி மணிமேகலைதான் ஹாஸ்டலில் எல்லோரும் சேர்ந்து போக வேண்டும்ன்னு நம் காலைக் கட்டிப் போட்டு விட்டதே… மூன்று வேன்களை வாடகைக்குப் பேசி வர வைத்திருக்கிறதாம்.. அங்கே பார் வரிசையாய் எல்லோரையும் வேனில் ஏறி உட்கார வைப்பதை.. வர வர இதற்கு தான் வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலின் வார்டன் என்பதே மறந்து விடுகிறது. என்னவோ ஸ்கூல் ஹாஸ்டல் வார்டன் என்கிற நினைப்பில் இருக்கிறது.” கோமளா பல்லைக் கடித்தாள். 

”விடுடி… நம்மை விடடால் யார் அதற்கு கம்பெனி கொடுப்பார்கள்? அதனால் நம்மோடு ஒட்டுப்புல் போல் ஒட்டிக் கொள்ள வார்டன் என்கிற பந்தாவைக் காட்டிக் கொண்டு தொற்றிக் கொள்கிறது” வாசவி சமாதானப் படுத்தினாள். 

அதற்குள் அவர்களைத் திரும்பிப் பார்த்த மணிமேகலை ரூபிணியைப் பார்த்து புருவம் உயர்த்தினாள். 

“ஏம்மா… ஜமுனா.. நீயே லேட்டாக வந்தால் உன் ரூம் மேட் ரூபிணி கோபித்துக் கொள்ள மாட்டாளா?” என்று வேறு வினவி வைத்தாள். 

“பார்த்தாயா.. நம் மறதி மணிமேகலை எவ்வளவு சரியாய் பெயர்களை தப்பாய் இடம் மாற்றிச் சொல்கிறது.. இது கூடப் பேசிப்பேசி.. எதை எங்கோ வைத் தோமென்று எனக்கு மறந்து போகுதுடி…” கோமளா மனம் குமுறினாள். 

“எல்லோருக்கும் இந்தக் கதைதான். மறதி நோய் ஒரு தொற்று வியாதியான்னு டாக்டரை கன்சல்ட் பண்ணினால் தேவலைடி” வாசவி கவலைப்பட்டபடி வாசல் படியில் உட்காரப் போனாள். 

“என்ன வாசவி இங்கே உட்காருகிறாய் ? ஜமுனாவின் மேரேஜ் ரிசப்ஷனுக்கு போக வேண்டாமா..?” ரூபிணி அவளது கையைப் பிடித்து எழுப்பினாள். 

“அடக்கடவுளே.. நான் இங்கேயா உட்கார்ந்து விட் டேன். வேனில் ஏறி உட்கார்ந்தது போலவே இருந்ததே…” வாசவி பயந்தே போனாள். 

“ஆபிஸ் டென்சன்.. சீக்கிரம் ஜமுனாவின் மேரேஜ் ரிசப்ஷனுக்கு போகணுமேங்கிற டென்சன்.. நம்மை தனியாக போகவிடாமல் வார்டன் மேடம் நம் காலைக் கட்டிப் போட்டு விட்டுட்டாங்களேங்கிற டென்சன்… இதனால்தான் இப்படி ஆகிவிட்டது. நீயாய் எதையாவது நினைத்து மனதைப் போட்டு உழப்பிக் கொள்ளாதே.. வா போகலாம்…” ரூபிணி சமாதானப்படுத்தி அழைத்துப் போனாள். 

ஒரு வழியாய் மூன்று வேனும் வரிசையாய் ஹாஸ்டலை விட்டு வெளியேறின. ஜமுனாவின் திருமண வரவேற்பு விழுப்புரத்தின் மிகப் பெரிய கல்யாண மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது. 

“ரிசப்சன் செலவை மாப்பிள்ளையின் காலேஜ் ஓனர் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.. பாரேன் பணத்தை தண்ணீராய் வாரி இறைத்திருப்பதை…” ஷர்மிளா என்ற பெண் அவள் அருகில் அமர்ந்திருந்த இன்னொரு பெண்ணிடம் கூறினாள். 

ரூபிணி மனம் படபடக்க ஜன்னல் புறம் நோக்கினாள். அவளது மனதிலிருந்த பெயரை வாசவி கூறினாள். 

“பின்னே ஹரிஹரன் சாருக்கு பணம் தண்ணீர் பட்டபாடு தானே…” வாசவி ஜாடையாய் ரூபிணியைப் பார்த்தாள். ரூபிணிக்கு வியர்த்தது. 

நல்லவேளையாக திருமண மண்டபம் வந்துவிடவே அவர்களது பேச்சு நின்றது. தற்காலிகமாய் தப்பித்து விட்ட நிம்மதியுடன் ரூபிணி வேனிலிருந்து கீழே இறங்கினாள். 

வரிசையாய் கார்கள் நின்று கொண்டிருக்க திருமண மண்டபத்தின் வாசல் சீரியல் விளக்குகளால் களை கட்டியிருந்தது. பெண்கள் எல்லோரும் பூங்கொத்தி லிருந்து பிரிந்து விழுந்த மலர் கூட்டம் போல் உள்ளே நுழைய அங்கிருந்த அனைவரின் கவனமும் இவர்கள் பக்கம் திரும்பியது. ஒவ்வொருவராய் மேடையில் ஏறி மணமக்களுக்கு வாழ்த்துக் கூறி பரிசுப் பொருளைக் கொடுத்தார்கள். ரூபிணியின் முறை வர அவள் ஜமுனா வின் அருகே சென்று பரிசை நீட்டினாள். ஜமுனா அவளது கை பிடித்து அணைத்து நந்தகோபாலுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அப்போது தான் ரூபிணி எதிர்பாராத ஒன்று நடந்தது. 

– தொடரும்…

– நெஞ்சமடி நெஞ்சம் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 2010, அறிவாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *