நெஞ்சமடி நெஞ்சம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2023
பார்வையிட்டோர்: 5,384 
 

(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம்-13

எப்படி முடியும்? தன் கையிலிருந்த செல்போனை அணைக்க ஓர் நொடி போதும். ஆனால் அந்த ஓர் நொடிக்குப் பின்பு…? ரூபிணியால் அதைத் தாங்க முடியுமா? கலவரமாய் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றாள். 

“என்ன பேச்சையே காணோம்” 

“எனக்குப் பயமாக இருக்கிறது… “

“எதற்குப் பயம்? பைத்தியம்.. நானிருக்கிறேன்.”

“இல்லை சார். இது சரி வராது…” 

“சரி வராததை விட்டுவிடு… நான் ‘சார்’ என்று நீ அழைத்ததைச் சொல்கிறேன். அது சரி வராது ரூபிணி… விட்டுவிடு.. இனி அப்படி என்னை அழைக்காதே…” 

“வேண்டாம். நான் நம் இருவருக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க விரும்பவில்லை.” 

“இடைவெளியே இல்லாமல் மனத்தால் நெருங்கி விட்ட பின்பு இல்லாத ஒன்றைக் குறைப்பதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறாய்?” 

“இது பேச நன்றாக இருக்கும்.” 

“கேட்கவும் நன்றாகத்தான் இருக்கும்… “

“நடைமுறை என்பது வேறு…” 

“நடைமுறையில் என்னைத் தடுப்பது யார்? என்னைத் தடுக்க எவனும் இன்னும் பிறக்கவில்லை. இனி பிறந்து வந்தாலும் அவன் என் மகனாகத்தான் இருப்பான்.” 

ரூபிணிக்கு மெய் சிலிர்த்தது. ‘ஹரிஹரனின் மகன்.’ 

“என்ன ரூபிணி.. மீண்டும் பேசா மடந்தையாகி விட்டாய்..? கற்பனையில் என் மகனைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாயா?” 

ரூபிணி அழுது விட்டாள்.. “அது நடக்குமா?” 

“ஏய்ய்.. ஏன் அழுகிறாய்.. இதோ பார் ரூபிணி. சுற்றியுள்ளவர்கள் ஆயிரம் சொல்வார்கள். நாம் நம் மனம் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். எந்த நம்பிக்கையில் நீ லாரன்ஸிற்கு பரிந்து என்னிடம் சிபாரிசு செய் தாய்…? எந்த நம்பிக்கையில் சில்மிஷப் பேச்சு பேசுகிறவனிடமிருந்து தப்பிக்க என் அருகினில் வந்து உட்கார்ந்தாய்… அந்த நம்பிக்கையை மட்டும் கடைசி வரை என் மேல் வை. எல்லாம் சரியாகிப் போய் விடும். நான் இருக்கிறேன் ரூபிணி. பயப்படாதே. தைரியமாய் இரு. நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வேன்.” 

ரூபிணி சுதாரித்துக் கொண்டாள். இனிப்பாக இருக்கிறது என்பதற்காக ஜமுனாவும் ப்ரீதியும் சொல்வது போல் அபாயகரமான விளையாட்டை விளையாடுவதா? இன்று இந்த ஊருக்கு தெரிவது கோவில்பட்டிக்குத் தெரிந்தால் அம்மாவும் அப்பாவும் தாங்கிக் கொள்வார்களா? 

“சார்… நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்.”

“சார் என்று கூப்பிடாதே.” 

“இல்லை சார்… நான் என்ன சொல்ல வருகிறேனென்றால்…” 

”சார் என்று கூப்பிடாதேயென்று சொல்கிறேனில்லை…?” ஹரிஹரனின் குரலில் குழைவு மறைந்து கடுமை இருந்தது. 

“என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? சொல்லச் சொல்ல சார் என்று கூப்பிடுகிறாயே… ஹரிஹரனை உன் இஷ்டத்துக்கு விளையாடும் பொம்மை என்று நினைத்து விட்டாயா? ஜாக்கிரதை.. இன்று ஹோட்டலில் நான் உன்னை ‘நீ’ என்று அழைத்தபோது ஏன் நீ அதை ஆட்சேபிக்கவில்லை? சொல்லு.. ஏன் பேசாமல் ஏற்றுக் கொண்டாய்?” 

“நான் அதைக் கவனிக்கவில்லை.” 

”ஏன் கவனிக்கவில்லை. இதையே உன் ஆபிஸில் யாராவது உன்னை ‘வா.. போ.’ என்று கூப்பிட்டால் கேட்டுக் கொள்வாயா?” 

“மற்றவர்களும் நீங்களும் ஒன்றா..” ரூபிணி தன்னையும் அறியாமல் வெடுக்கென்று கூறினாள். 

மறுமுனையில் ஓர் நொடி மௌனம் நிலவியது. 

“ரூபிணி… இதிலிருந்தே உன் மனம் உனக்குப் புரியவில்லையா?” ஹரிஹரனின் குரலில் பழைய மென்மை மீண்டிருந்தது. 

“என் மனம்… என் மனம்… நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்களேன்.” 

“சொல்.. கேட்கிறேன்.” 

“என்னைத் தொடர்ந்து வர ஏன் ஆளை அனுப்பியிருக்கிறீர்கள்.” 

“ஓ.. அது உனக்குத் தெரிந்து விட்டதா?” 

”ஊருக்கே தெரிந்து விட்டது…” 

“அதுதான் கோபமா?… நான் அவனைக் கண்டிக் கிறேன். இனி அவன் தொடர்ந்து வரமாட்டான்…” 

“ஏற்கனவே வந்தது வந்ததுதானே…” 

“ஸாரி… ஸாரி.. போதுமா? யாருக்கும் தலை வணங்காத இந்த ஹரிஹரன் உன் கோபத்துக்குப் பயந்து ‘ஸாரி’ சொல்லி விட்டான்… கோபம் தீர்ந்ததா?” 

ரூபிணிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 

“சிரிக்கிறாயா.. அப்பாடா ஒரு வழியாய் சிரித்து விட்டாய்.” 

“ரொம்பப் பயந்தவர் போல என்னமாய் நடிக்கிறீர்கள்.”

“பயமில்லாதவன்தான் அது மற்றவர்களிடம் உன்னிடம் பயம்தான்.” 

“தோடா.. ஊரே உங்களைப் பார்த்து பயப்படுகிறது. நீங்கள் என்னைப் பார்த்து பயப்படுகிறீர்களா? யாரிடம் கதைவிடுகிறீர்கள்.” 

“உன்னிடம் தானே நான் கதை பேச முடியும்…” 

“நான் ஒன்று சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே…” 

“என் கோபத்தைக் கண்டு பயந்தவள்தான்… சும்மா சொல்லு.” 

“ஒருவருக்கு ஒருவரைப் பிடித்திருந்தால் ஒருவர் மேல் ஒருவருக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தால்… அது மனதுக்குள் இருந்தால் மட்டும் போதாதா?” 

“நீ என்ன சொல்ல வருகிறாய்?” 

“மனதுக்கு தெரிவது ஊருக்குத் தெரிய வேண்டுமா… ? நான் ஊர் விட்டு ஊர் வந்து வேலை பார்க்கிறேன்… என் பேரன்ட்ஸ் என்னைத் தவறாக நினைத்து விடக் கூடாது இல்லையா..?” 

“அதற்காக…?” 

“பார்த்தீர்களா.. கோபப்படுகிறீர்கள்… உங்கள் உலகம் வேறு. என் உலகம் வேறு… நான் இப்போதுதான் என் பேரண்ட்ஸை விட்டு வெளியே வந்திருக்கிறேன். உங்களைப் போல நினைத்ததைப் பேசவும்.. செயல் படுத்தவும் என்னால் முடியாது…”

“உனக்காக நான் பேசி விட்டுப் போகிறேன். பழைய பாடல் ஒன்று இருக்கிறது தெரியுமா?” 

அவன் பாடினான். 

“நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேச வேண்டும். நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்.” 

“சரியாப் போச்சு போங்க. பாட்டையே உல்டா பண்ணிப் பாடிட்டிங்க. அது நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்ன்னுல்ல வரும்.” 

“என்ன செய்வது.. நீதான் என்னைப் போல் நினைத்ததைப் பேச முடியாது என்கிறாயே.. உனக்காக நான் பேச வேண்டியது தான்.” 

“ஓ.கே. குட்நைட்.. போனை வைத்து விடவா?”

“எங்கே வைக்கப் போகிறாய்..?” 

“நீங்கள் பேச்சை வளர்ப்பதிலேயே குறியாய் இருப்பீர்கள்…” 

“தெரியுதில்ல… அப்ப பேசு…” 

“போனை கட் பண்ணிவிடவா என்றால் அதற்கும் சண்டைக்கு வருவீர்கள்… அதனால்தான் வைத்து விடவா என்றேன்.” 

“ஏன்.. இன்னொன்றும் சொல்லலாமே.” 

“என்ன?” 

“போனை அணைத்து விடவா என்று கேட்கலாமே…” அவன் குரலில் சீண்டல் இருந்தது. அவள் உதடு கடித்தாள். 

“அது என்ன எதற்கெடுத்தாலும் உதட்டைக் கடித்துக் கொள்கிறாய்…” 

‘எப்படி யூகிக்கிறான்…?’ 

“உங்கள் போன் நான் என்ன செய்கிறேனென்று காட்டுகிறதா?” 

“இல்லாவிட்டால் அம்மணி என்ன செய்வீர்கள் என்று தெரியாதா? அதைத்தானே செய்வாய்…” 

“போதும்… நாளைக்கு நான் ஆபிஸ் போக வேண்டாமா?” 

“அது கூட நல்ல ஐடியாதான். வேலைக்குப் போகாதே.”

“வேலைக்குப் போகாமல்..” 

“நான் உனக்கு வேலை தருகிறேன்.” 

“போகாத ஊருக்கு வழி சொல்லாதீர்கள். குட்நைட்.”

“குட்நைட்டா.. குட்மார்னிங்ன்னு சொல்லு.”

“குட்மார்னிங்கா.” 

“மணி என்ன தெரியுமா… ஆறு… “

“கடவுளே… விடிந்து விட்டதா?” 

பாத்ரூம் கதவு படபடவென்று தட்டப்பட அவசரமாய் போனை அணைத்து விட்டு கதவைத் திறந்தாள். 

“ஆவ்” என்று கொட்டாவி விட்டபடி உள்ளே வந்த ஜமுனா. 

“ஏண்டி.. எப்ப எழுந்தாய்…?” என்று வினவினாள்.

‘தூங்கினால்தானே விழிப்பதற்கு…’ மனதிற்குள் நினைத்தவள். 

“அப்போதே எழுந்து விட்டேன்” என்றாள். 

“சரி.. கீழே போய் நம் இரண்டு பேருக்கும் காபி வாங்கிக் கொண்டு வா…” 

மதியம் வரை தாக்குப்பிடித்து வேலை பார்த்த ரூபிணி.. தன்னையறியாமல் கம்ப்யூட்டரை கட்டிப் பிடித்துக் கொண்டு கண் அயர்ந்து விட்டாள். மதியம் சாப்பிடக் கூப்பிட வந்த ப்ரீதி உலுக்கி எழுப்பினாள். 

“ரூபிணி.. ரூபிணி.. உடம்பிற்கு என்னடி பண்ணுது. சபாபதி தண்ணியை எடு.” 

ப்ரீதி தண்ணீர் தெளித்தவுடன் முகத்தை சுளித்தவாறு விழித்த ரூபிணி… “என்னப்பா..” என்றாள் சோர்வாக. 

“சாப்பிடப் போகலாம்ன்னு கூப்பிட வந்தால் மயங்கிக் கிடக்கிறாய்.” 

“மயங்கிக் கிடக்கிறேனா.. தூங்கிக் கிடக்கிறேன்..” ரூபிணி தலையைப் பிடித்துக் கொண்டாள். 

“என்னடி பண்ணுது…” ப்ரீதி அவளுடைய நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். 

“தலைவலிக்குது ப்ரீதி.. நான் ஆப்டே லீவு போட்டு விட்டு ஹாஸ்டலுக்குப் போகிறேன்.” 

“பொறுடி. சூடாய் காபி கொண்டு வரச் சொல்கிறேன்.” 

“வேண்டாம்…”

ரூபிணி சோர்வாக எழுந்து லீவ் லெட்டர் எழுதிக் கொடுத்துவிட்டு வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டு போனாள். சென்னை செல்லும் நெடுஞ்சாலை யில் சற்று தூரம் போயிருப்பாள். அவளது வண்டி நின்று விட்டது. இறங்கி வண்டியை யோசனையாய் பார்த்துக் கொண்டு நிற்கையில் அவளருகே கார் ஒன்று வந்து நின்றது. 

“ஏறு…” என்றான் காரின் முன் பக்க கதவைத் திறந்து விட்ட ஹரிஹரன். 

“நோ.. தேங்க்ஸ்…” ரூபிணி பதட்டமாய் சுற்று முற்றும் பார்த்தாள். 

“இப்போது ஏறப் போகிறாயா.. இல்லையா?” ஹரிஹரன் காரிலிருந்து இறங்கப் போனான். 

இவன் இறங்கி நின்று இவளோடு பேச்சு வளர்ப்பதை யாரேனும் பார்த்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்துடன் காரில் ஏறி அவன் பக்கத்தில் அமர்ந்து விட்டாள் ரூபிணி. 

இளஞ் சிவப்பில் சுடிதார் அணிந்திருந்தவளை ரசனையாய் பார்த்தபடி காரை ஓட்ட ஆரம்பித்தான் ஹரிஹரன். அவள் பதற்றமாய் திரும்பிப் பார்த்தாள். 

“என்ன பார்க்கிறாய்.” 

“என் வண்டி.” 

“எங்கேயும் போய் விடாது. ரிப்பேருக்கு போகும்.”

“எப்படி கை கால் முளைத்து பறந்து போகுமா?” 

“கை கால் இருக்கிற ஆள் தள்ளிக் கொண்டு போவான்.”

“என்னது..” ரூபிணி அவசரமாய் திரும்பி பின் கண்ணாடி வழியாகப் பார்த்தாள். 

அவளது கைனடிக் ஹோண்டாவை யாரோ ஒரு ஆள் உருட்டிக் கொண்டு போனான். 

“ஐயோ…” தலையில் கை வைத்துக் கொண்டாள் ரூபிணி. 

“ஏன்..” ஹரிஹான் பருவம் உயர்த்தினான் 

”ஏற்கனவே.. நீங்களும் நானும் ஹோட்டலில் பேசிக் கொண்டிருந்ததை ஊரே பேசுகிறது. இப்போது எல் லோரும் பார்க்க என் வண்டியை உங்களுடைய ஆள் தள்ளிக் கொண்டு போவதைப் பார்த்தால் இன்னும் என்னவெல்லாம் பேசுமோ..” ரூபிணியின் முகம் பயத்தில் வெளுத்தது. 

“இப்படி தொட்டதற்கெல்லாம் பயந்தால் எப்படி..?”

“உங்களை யார் இவ்வளவு பெரிய வி.ஐ.பி.யாக இருக்கச் சொன்னார்கள். அதுதான் எனக்குத் தொல்லையாக இருக்கிறது.” 

“உனக்குப் பிடிக்கவில்லையென்றால் வி.ஐ.பி. பட்டத்தையே விட்டு விடுகிறேன்.” ஹரிஹரன் இலகுவாகக் கூற ரூபிணி திகைத்துப் போனாள். 

‘ஏன் இப்படி இவன் வேகம் காட்டுகிறான்? புயல் போல் இருக்கிறானே.. இவனை அவள் நெஞ்சம் நினைப்பது எப்படி நிறைவேறும்?’ 

“மதியமே ஹாஸ்டலுக்குப் போகிறாயே.. ஏன்?”

“உடம்பு சரியில்லை…” 

“உடம்புக்கு என்ன.. பீவரா.. டாக்டரிடம் போகலாமா?” அவன் வண்டியைத் திருப்ப முயல. 

“ஐயோ சாமி… உங்களுக்குப் புண்ணியமாகப் போகும். கொஞ்சம் அடங்கி உட்காருங்கள். நீங்கள் என்னை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போனால் வேறு வினையே வேண்டாம்” என்று அலறினாள் ரூபிணி. 

அவளது பதட்டத்தைக் கண்ட ஹரிஹரனின் புருவம் சுருங்கியது. காரை சாலையோரமாக நிறுத்தினான். அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான். ரூபிணி பதட்டத்துடன் சாலையில் கடந்து போகும் வாகனங் ளில் போகிறவர்கள் யாராவது தங்களைப் பார்க்கிறார்களா என்று கவனிப்பதைக் கண்ட அவனது முகம் இறுகியது. 

அத்தியாயம்-14

ஹரிஹரனின் முகம் கடுமையாக மாறியிருந்தது. முகச்சுளிப்புடன் ரூபினியைப் பார்த்தான். கண்ணுக்குக் குளுமையாக அழகான தோற்றத்துடன் அவள் இருந்தது அவனது கோபத்தைக் குறைக்கவில்லை. 

ரூபிணி அவனது முக மாற்றத்தைக் கவனிக்காமல் சாலையிலேயே கவனமாய் இருக்க, 

“கார் கதவு மூடியிருக்கிறது… உள்ளே யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று வெளியே தெரியாது..” என்றான் எரிச்சலுடன். 

நிம்மதியுடன் ரூபிணி. “அப்பாடி..” என்று மூச்சுவிட்டாள். 

அப்போதுதான் அவனது முகத்தைக் கவனித்தவள் துணுக்குற்றாள். 

‘இவன் ஏன் இவ்வளவு கோபமாய் இருக்கிறான்..’
ஹரிஹரனின் விரல்கள் ஸ்டியரிங்கில் தாளமிட்டுக் கொண்டிருந்ததையும் அவன் தன் டென்சனை கட்டுப் படுத்திக் கொள்ள முயல்வதையும் கண்டவள், 

“கோபமாய் இருக்கிறீர்களா..?” என்று பயத்துடன் கேட்டாள். 

”இல்லை… மகா சந்தோசமாய் இருக்கிறேன்…” அவன் வெடித்தான். 

”நான் என்ன செய்தேன்..?” 

“கடுப்பைக் கிளப்பாதே… இப்போது என்ன நடந்து விட்டதுன்னு இப்படி ஓவராய் ரியாக்ட் பண்ணுகிறாய்? ரோட்டில் வண்டி ரிப்பேர்ன்னு நின்று கொண்டிருந்தாய்.. வண்டியை வொர்க் சாப்புக்கு அனுப்பி விட்டு உன்னைக் காரில் அழைத்துக் கொண்டு வருகிறேன்.. உடம்பு சரியில்லையென்று சொன்னாய்.. டாக்டரிடம் போகலாம் என்றேன்.. இதற்குப் போய் இப்படி அலறக் காரணம் என்ன..? நான் முதன் முதலாய் பார்த்த அஞ்சாத பார்வை கொண்ட அந்த ரூபிணி எங்கே.. இயல்பான செய்கைகளுக்குக் கூட பயந்து அலறும் இந்த ரூபிணி எங்கே.. ஏன் இப்படி மாறிப்போனாய்..” அவன் கோபத்துடன் படபடத்தான். 

“நீங்கள் ஒருவர்தான் பாக்கி.. நீங்களும் சொல்லி விட்டீர்களா…” ரூபிணி கண் கலங்கிவிட்டாள். 

“ஸ்ஸ்… இப்போது எதற்காக இந்தக் கண்ணீர்? நேற்று இரவும் இப்படித்தான் அழுதாய்.. வாட் இஸ் ராங் வித் யு ரூபிணி.. உன்னை உன் ஹாஸ்டலில் டிராப் பண்ணத்தானே காரில் ஏறச் சொன்னேன்? வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லையே..” 

“ஹரி… ப்ளீஸ்… இப்படியெல்லாம் பேசாதீர்கள். நான் கனவில் கூட உங்களைப் பற்றித் தவறாக நினைத்ததில்லை… இனி நினைக்கவும் மாட்டேன்..” ரூபிணி இன்னும் கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள். 

ஹரி… என்ற அழைப்பில் அவனது இறுக்கம் தளர்ந்து இளகியவன். 

“ஈஸி.. ஈஸி… இயல்பாய் இருக்காமல் இப்படிப் பேசுகிறாயே என்ற கோபம்தான் எனக்கு… லீவ் திஸ் மேட்டர்…” என்றான். 

“இல்லை ஹரி.. இதை இப்படியே விட்டு விட முடியாது. நேற்றுப் பார்த்து பேசியதற்கே என் பிரண்ட்ஸ் என்னை திட்டினார்கள்.” 

“அவர்கள் ஏன் உன்னைத் திட்ட வேண்டும்?” 

“நீங்கள் மூர்த்தியை பனிஷ் பண்ணியது.. என் பின்னால் ஒரு ஆளை பாதுகாப்பாய் ஹாஸ்டல் வரை புல்லட்டில் பாலோ பண்ண வைத்தது… எல்லாமே எல்லோருக்கும் தெரிந்து விட்டது..”

“அதனால் என்ன…? என் கண் முன்னால் அந்த ராஸ்கல் உன்னை டார்ச்சர் பண்ணினான். வார்ன் பண்ணினேன். வெளியே போனதும் உன்னை பாலோ பண்ணி வம்பு இழுப்பானோ என்ற சந்தேகத்தால் பாதுகாப்புக்கு ஒரு ஆளை உன் பின்னால் அனுப்பி வைத்தேன்…” 

“இந்த அதீதமான அக்கறை எனக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்…” 

“ஆபத்தா…? என்னாலா…? உனக்கா..?”

“ஆமாம்…” 

”உன் மேல் சிறு துரும்பு பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.. என்னால் உனக்கு எப்படி ஆபத்து வரும் ரூபிணி?” 

“வேண்டாம்… நேற்று இரவு முழுவதும் தூங்காமல் போனில் பேசும் அளவிற்கு நமக்குள் என்ன இருக்கிறது?” 

“எதுவும் இல்லையா? உன் மனச்சாட்சியைக் கேள்.” 

“இந்த வேகத்தை நான் தாங்கமாட்டேன். நேற்று தூக்கம் கெட்டது உங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆனால் நான் ஆபிஸில் வேலை செய்ய முடியாமல் லீவ் போட்டுவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்…” 

“எனக்குத் தூங்காமல் கண் விழித்துப் பழக்கம் உண்டு. பல பிஸினெஸ் பார்க்கிறவன் நான். நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரம் தூங்கினாலே அதிகம்.” 

“அதைத்தான் சொல்கிறேன். உங்கள் பழக்க வழக்கமும் வாழ்க்கை முறையும் வேறு.. என் பழக்கவழக்கமும் வாழ்க்கை முறையும் வேறு…” 

“எதிர்மறைத் துருவங்கள் தானே ஒன்றையொன்று ஈர்க்கும்.. “

“நீங்கள் பெரிய பிஸினெஸ்மேன். என்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் உங்களிடம் விடை இருக்கும். ஆனால் நான்..? போன வருடம் வரை என் பேரண்ட்ஸின் நிழலில் காலேஜ் படித்துக் கொண்டிருந்த மாணவியாக இருந்தேன். இந்த வருடம் தான் வேலைக்கு என்று அவர்களைப் பிரிந்து தனியாக வந்திருக்கிறேன்.. என் பிரண்ட்ஸ் என்னைப் பார்த்து இன்று கேட்ட கேள்விகளை நாளை என் பேரன்ட்ஸ் என்னைப் பார்த்து கேட்டு விடக்கூடாது..” 

“அதற்காக என்ன செய்ய வேண்டும் என்கிறாய்? நான் உன்னை டிஸ்டர்ப் செய்வதாக நீ நினைக்கிறாயா?”

“நிச்சயமாக இல்லை. எனக்கு உங்களைப் பிடிக்கும்..” 

“என்ன சொன்னாய்…? திரும்பவும் சொல்லு…” ஹரியின் விழிகள் மின்னின. 

“எனக்கு உங்களை மிக.. மிக.. அதிகமாகப் பிடிக்கும் ஹரி. ஆனால் அது எதனால் என்று நான் இன்னும் சரிவர ஒரு முடிவிற்கு வரவில்லை…” ரூபிணி மெதுவான குரலில் கூறினாள். 

“இதில் முடிவுக்கு வர என்ன இருக்கிறது..?” 

“இல்லை ஹரி, நான் எனது இந்த வயதுவரை பார்த்த ஆண்கள் வேறு… நீங்கள் வேறு.. உங்களைப் பார்ப்பதற்கு முன் உங்களைப் பற்றி ஏதேதோ சொல்லிப் பயமுறுத்தினார்கள். நேரில் பார்த்தால் நீங்கள் மிகவும் நல்லவராக… நியாயவாதியாக இருந்தீர்கள். உங்களிடம் வேலை பார்த்தவனை பனிஷ் பண்ணுவது உங்கள் சொந்த விசயம்… மனம் பொறுக்காமல் நான் அதில் தலையிட்டேன். எனக்காக நீங்கள் லாரன்ஸை மன்னித்து வேலைக்குச் சேர்த்துக் கொண்டீர்கள். இதனால் சொல்லத் தெரியாத சொந்தம் ஒன்று உங்கள் மேல் எனக்குள் உருவாகிவிட்டது… ஆனால் இதையெல்லாம் வைத்து பெரிய முடிவிற்கு என்னால் வர முடியவில்லை…” ரூபிணி சஞ்சலத்துடன் பேசினாள். 

”ஓ.கே..நீ குழப்பத்தில் இருக்கிறாய்.டேக் யுவர் ஓன் டைம். எவ்வளவு நாள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள். நீயாக ஒரு முடிவுக்கு வந்து என்னை போனில் அழைக்கும் வரை நான் உன்னை எந்த வகையிலும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். உன் மனதிலிருப்பதை நீ சொல்லிவிட்டாய். என் மனதில் இருப்பதையும் தெரிந்து கொள்.. என்னை வசீகரித்த முதல் பெண் நீ. இந்த ஹரிஹரன் பெண்கள் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டான். ஆனால்.. உன் முகம் பார்க்காமல் இனி இருக்கவும் மாட்டான். உன்னைப் பார்க்கும் வரை உன் மேல் நல்ல ஓபினியன் எனக்கு இல்லை. ஊர் சுற்றிப் பார்க்க வந்தவள் விளையாட்டாய் என் ஆள் ஏதோ சொன்னதற்கு வேண்டுமென்றே ஈவ் டீஸிங் என்று புகார் பண்ணிவிட்டாள் என்ற கோபம் தான் எனக்கு இருந்தது. ஆனாலும்.. நீ வெளியூரிலிருந்து வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாய். உன்னிடம் நானே நேரே பேசுவதுதான் உனக்குப் பாதுகாப்பு என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே நான் உன்னை நேரில் பார்க்க வந்தேன்…” 

“ஏன்..? இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும்?’ ரூபிணி புரியாதவளாய் கேட்டாள். 

“நீயே சொன்னது போல் என் உலகம் வேறு ரூபிணி. என் ஆள்கள் ஒருவர் மேல் ஒருவர் பாசமாய் இருப்பவர்கள். அவர்களில் ஒருவனை நீ தூக்கி உள்ளே போட்டு விட்டதால்… உன் மேல் கோபமாய் இருந்தார்கள். உன்னைப் பார்த்துப் பேச யாரை நான் அனுப்பியிருந்தாலும் அவன் உன்னிடம் நல்லவிதமாய் பேசியிருக்க மாட்டான்… மிரட்டியிருப்பான். அதைத் தவிர்க்கத்தான் நானே உன்னிடம் நேரில் பேச வந்தேன்..” ஹரிஹரன் அவள் முகம் பார்த்தான். 

“இதில் இவ்வளவு விசயம் இருக்கிறதா…?” கண் விரியக் கேட்டாள் ரூபிணி.. ஹரிஹரனின் அந்தக் குணம்.. அந்தத் தன்மை.. அவளைக் கவர்ந்தது. 

“ஆமாம்… வந்த இடத்தில்.. உன்னைப் பார்த்ததும் அயர்ந்து விட்டேன். உன் பேச்சும்.. உன் பக்க நியாயத்தை நீ விளக்கிய விதமும்.. என்னைக் கவர்ந்து விட்டன. முதன் முதலாய் ஒரு பெண்ணின் மேல் எனக்குள் ஓர்வித ஈர்ப்பு தோன்றியதென்றால்.. அது உன் மீது தான்… ” ஹரிஹரன் முகம் திருப்பி சாலையைப் பார்த்தான். 

ரூபிணி கீழ் உதட்டை மடித்துப் பற்களால் கடித்தாள். சரேலெனத் திரும்பிய அவனது பார்வை அவள் உதட்டில் படிந்தது. ரூபிணி முகம் சிவக்க பார்வையைத் தாழ்த்தினாள். ஹரிஹரனின் முகம் மென்மையானது. 

ஓர் சிறு பார்வையைக் கூடத் தாங்க முடியாமல் நாணித் தலைகுனியும் பூங்கொடி போன்றவள் இவள்… 

இவளை எப்படி அவனால் விட முடியும்? 

அத்தியாயம்-15

“உனக்குத் தெரியாது ரூபிணி… நான் ஒரே இடத்தில் நிற்க முடியாது. பறந்து பறந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவன். நீ இந்த ஊரில் இருக்கிறாய் என்ற ஒரே காரணத்திற்காக இந்த ஊரை விட்டு நான் இப்போதெல்லாம் நகர்வதேயில்லை. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இரவில் தூங்க விழுப்புரம் வந்து விடுகிறேன். எதற்காக… ? உனக்காக… ரூபிணி.. நீ லாரன்ஸிற்காக போனில் பரிந்து பேசியது எனக்குள் எந்த அளவு பாதிப்பை உருவாக்கியது தெரியுமா? அவன் உனக்கு அவமரியாதையை உண்டு பண்ணினான். நீ அவன் மேல் கருணை காட்டினாய். பகைவருக்கும் இரங்கும் உன் உள்ளம் கண்டு நான் அதிசயப்பட்டுப் போனேன். எனக்குப் பழிவாங்கித்தான் பழக்கம். மன்னித்துப் பழக்கமே இல்லை. என் வாழ்வில் முதன்முறையாக நான் அவனை மன்னித்தேன். நீ எனக்கு மன்னிக்கக் கற்றுக் கொடுத்தாய். ரூபிணி… என்னிடம் வேலை செய்பவர்கள் வீட்டிற்கு நான் போனது கிடையாது.. ஆனால் லாரன்ஸின் வீட்டிற்குப் போனேன்… எதற்காக தெரியுமா? உன் பரிதாபத்தை சம்பாதித்த அந்தக் குழந்தையின் முகம் பார்க்க.. அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்த போது உன் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.. ரூபிணி.. அன்று அந்தக் குழந்தையின் கையில் நான் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தேன்.. உன்னை எனக்குத் தெரியப்படுத்தியதற்காக.. உன் நெஞ்சம் எவ்வளவு உன்னதமானது என்பதை நான் அறிய வைத்தற்காக.. ” ஹரிஹரன் காரைக் கிளப்பினான். 

ரூபிணியின் கண்களில் கண்ணீர் ததும்பி வழிந்து கொண்டிருந்தது. இவன் எவ்வளவு நல்லவன்? இவனிடம் பேசிப் பழக ஊர் உலகம் தடை செய்கிறதே. 

“என் நெஞ்சத்தைப் பற்றி நீ இன்னும் சரியாக அறிந்து கொள்ளவில்லை. இப்போது உன்னை விட்டு விலகிப் போகிறேன். என்னால் நீ படும் வேதனைகளைத் தாங்க முடியவில்லை. இங்கேயே இருந்தால் உன்னைப் பார்க்காமல்.. பேசாமல் இருக்க என்னால் முடியாது.. டெல்லிக்குப் போகிறேன்…” ஹரிஹரன் உணர்ச்சியற்ற குரலில் கூறினான். 

“எப்போது திரும்பி வருவீர்கள்…?” ரூபிணி அவசரமாய் கேட்டாள். அவளது விழிகளில் பிரிவைத் தாங்க முடியாத வேதனை இருந்தது. 

அவளைத் திரும்பிப் பார்த்தவனின் விழிகள் மின்னின. முகம் விகசித்தது. 

“தெரியாது… அங்கே ஹோட்டல் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.. உன்னை நான் இனித் தொந்தரவு செய்ய மாட்டேன்.. நிம்மதியாய் போய் வா.” 

ரூபினியின் ஹாஸ்டல் முன்னால் கார் நின்றது. இறங்க முடியாமல் ரூபிணி தவித்தாள். தாய் முகம் தேடும் மழலையாய் ஹரிஹரனின் முகம் பார்த்தாள். ‘நிம்மதியா.. நீ அருகில் இல்லாமலா…?’ 

“இறங்க மனமில்லையா…” 

ரூபிணி இதழ் கடித்து கண்ணீரைக் கட்டுப்படுத்த விழிகளைச் சிமிட்டினாள். ‘முடியவில்லையே.. என்னால் பிரிய முடியவில்லையே…’ 

“சொல் ரூபிணி. இப்படியே என்னோடு வந்து விடுகிறாயா..? உன் மனம் மறைத்து ஏன் இந்தத் தவி தவிக்கிறாய்.. உன் மனதில் நான் இல்லையா? உன் நெஞ்சில் என்மேல் நேசம் இல்லையா? ஏன் இந்தப் போராட்டம்? போய் விடலாமா? என் வீட்டிற்குப் போய் விடலாமா..?” ஹரிஹரன் கரம் நீட்டி அழைத்தான். 

இன்னும் சற்று நேரம் தாமதித்தால் அவன் கேட்பதற்கு ‘சரி’யென்று சொல்லி அவன் பின்னாலேயே போய் விடுவோம் என்று தோன்றவும் ரூபிணி படக் கென்று கார்க் கதவைத் திறந்து கொண்டு இறங்கி விட்டாள். ஹரிஹரனின் முகம் கல்லைப் போல் கடினமானது. 

”வருகிறேன்… ” ஹரிஹரனின் குரல் காற்றோடு கலக்க அவனது கார் அந்தக் காற்றை விட வேகமாகப் பறந்தது… கண் பார்வையிலிருந்து மறைந்தது. 

ஏன் இவ்வளவு வேகமாக ஓட்டுகிறான்? அவளது பார்வையிலிருந்து மறைய அவ்வளவு ஆர்வமா? அவளைப் பிரிந்து செல்ல இவ்வளவு துடிப்பா? 

‘இருக்காதா..?’ அவளது மனம் அவளைக் குத்திக் காட்டியது. 

‘அன்பைச் சொல்கிறவனை வம்பு செய்கிறவன் போல் விலக்கி வைத்தாய்.. உன் முகம் பார்க்க அத்தனை வேலைகளையும் புறக்கணித்து விட்டு வந்தவனின் முகம் பார்க்க அஞ்சி நடுங்கினாய்.. இயல்பாக அவன் உதவி செய்வதை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டி னாய்… ஊரில் கொடிகட்டிப் பறப்பவன்.. உன் அருகே அமர்ந்து.. உன் முகம் பார்த்துப் பேசத் துடித்தான்… அவன் துடிப்பை உணர்ந்தும் உணராதவள் போல் நடித்து அவனைப் புண்படுத்தினாய்.. இனி உன்னை விட்டு விலகி ஓடாமல் என்ன செய்வான்..?’ 

உயிரற்ற உடலுடன் அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் விழுந்து கதறினாள். அழுது அழுது ஓய்ந்து.. தன்னையறியாமல் தூங்கிவிட்டாள். மாலையில் ஜமுனா வந்து எழுப்பி விடும் வரை எழுந்திருக்கவே இல்லை. 

“ரூபிணி எழுந்திரு… இந்தா காபி..” ஜமுனா அவள் கையில் காபித் தம்ளரைக் கொடுத்தாள். வாங்கிக் குடித்துக் கொண்டே, 

“நீ இப்போதுதான் வந்தாயா?” என்று கேட்டாள் ரூபிணி. 

“ஆமாம். அது சரி… உன் உடம்புக்கு என்ன? மதியமே வந்து விட்டாயாமே.. உன் ஹேண்ட்பேகில் சாப்பாட்டுப் பொட்டலம் அப்படியே இருக்கிறதே… மதியம் சாப்பிட வில்லையா…?” 

“ஒரே… தலைவலி ஜமுனா..” 

“இப்போது எப்படியிருக்கிறது…?”

“பரவாயில்லை…” 

மதியம் ஹரிஹரனின் காரில் வந்து இறங்கியதை யாரும் பார்த்து விட்டார்களோ.. ஜமுனாவிடம் சொல்லியிருப்பார்களோ என்று மனதில் பயந்து கொண்டே இருந்தாள் ரூபிணி. ஆனால் ஜமுனா அதைப் பற்றிக் கேள்வியே கேட்கவில்லை. 

நிம்மதியாய் உணர்ந்தவள் எழுந்து குளியலறைக்குள் சென்று முகம் கழுவிக் கொண்டிருந்த போது, 

“ஏம்மா… நம்ம ரூபினியம்மா எங்கேம்மா…” என்று ரோஜாரமணி வினவுவது கேட்டது. 

“ஏன் ரோஸ்… என்னிடம் பேசமாட்டாயா..?” 

“ஐய்யே… உன்கிட்ட பேச என்னாம்மா கீது…”

“இந்த சென்னைச் செந்தமிழும் விழுப்புரம் மணித் தமிழும் சேர்ந்த கலவைத் தமிழ் இருக்கில்ல… அதைக் கொஞ்சம் பேசேன். என் காது குளிரக் கேட்கிறேன்.” 

”நீயா. ஏம்மா எனக்கு காது குத்தறே… வெறுமே பேச்சைக் கேட்கிறதோட நீ நிறுத்திக்குவியாக்கும்… உன்னை எனக்கு தெரியாதாக்கும்.” 

“அப்படி என்ன என்னைப் பற்றி நீ தெரிந்து கொண்டாயாக்கும்..?’ 

“என் வாயைக் கிளறி வேடிக்கை பார்ப்பே…” 

“கிளறிப் பார்க்க நீயென்ன. உப்புமாவா… எங்கள் ரோஸ் ஆச்சே.” 

“அட போம்மா… எனக்குப் பல ஜோலி இருக்கு.” 

“எனக்கு மட்டும் ஜோலி இல்லையா…?” 

“நீ ஜோலி முடிஞ்சு ஜாலியா வந்து உட்கார்ந்துக்கினு கீறே… எனக்கு அப்படியா… ராத்திரி கண் மூடுற வரைக்கும் வேலையிருக்கும்…” 

“அதுக்காக ஒரு பேச்சுக் கூட பேசமாட்டியா..?”

“நீ ஒரு பேச்சோடு நிறுத்த விடுவியா..?” 

என்னவோ தான் பேச்சை நிறுத்திவிட்டது போல் தன் வாயை உண்மையிலேயே கிளறி ஜமுனா பேச வைத்துக் கொண்டிருப்பதை அறியாதவளாய் ரோஜாரமணி பிகு பண்ணிக் கொண்டிருப்பதைக் கண்டு ரூபிணிக்கு சிரிப்பு வந்தது. முகத்தை டவலால் துடைத்துக் கொண்டே குளியலறையில் இருந்து ரூபிணி வெளியே வந்தாள். 

“என்ன ரோஜாரமணி..”. 

“இந்தா… ரூபிணியம்மாவே வந்தாச்சு… அம்மா உன் வண்டியை ரிப்பேருக்கு விட்டிருந்தியாமில்ல… அதை ரிப்பேர் பண்ணி வொர்க் ஷாப் ஆள் கொண்டு வந்திருக்கான். கீழே நிக்க வைச்சிருக்கேன். ஜரூரா வா…” 

“ஏன் ரோஸ்… நான் பேசினால் பேச மாட்டாய்.. ரூபிணியிடம் மட்டும் இவ்வளவு நீளமா பேசுகிறாயே.. ஆனாலும் உனக்கு இவ்வளவு ஓர வஞ்சனை ஆகாது… ரோஸ்…” 

“நீ ரோஸ்… ரோஸ்ன்னு என் பெயரைக் கொலை செய்யறே.. இந்தம்மா வாய் நிறைய ரோஜாரமணின்னு என் பெயரைச் சொல்லுது…” 

“அதுக்காக இப்படியா…?” 

ஜமுனா விடாமல் ரோஜாரமணியை வம்புக்கு இழுத்துக் கொண்டிருக்க ரூபிணி லேசாகச் சிரித்துக் கொண்டே படிகளில் இறங்கினாள். 

வாசலில் காக்கி உடையுடன் ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும் வணக்கம் சொன்னான். அவள் கையில் ஒரு கவரையும் வண்டிச் சாவியையும் கொடுத்துவிட்டு விரைந்து சென்றுவிட்டான். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கைனடிக் ஹோண் டாவைப் பார்த்ததும் ரூபிணிக்கு தூக்கிவாரிப் போட்டது. 

– தொடரும்…

– நெஞ்சமடி நெஞ்சம் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 2010, அறிவாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *