கற்பு எனப்படுவது யாதெனில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2023
பார்வையிட்டோர்: 8,014 
 
 

டைரக்டரின் அறையிலிருந்து வெளிப்பட்டு கையெழுத்து வாங்கிய கடிதத்தை நடந்தபடியே வாசித்து தன் இருக்கைக்கு வந்து வசுமதி அமர்ந்த போது இன்டர்காம் அழைத்தது. பிரபாகர் நினைத்த போதே மெலிதாக சிரிப்பு வந்தது. முந்தானையைக் கையால் நீவியபடியே இன்டர்காமை எடுத்து “யெஸ்….பிரபா…. சொல்லு” என்றாள்.

“மணி என்ன தெரியுமா? இரண்டரை! சாப்பிடணும்னு ஏதாவது ஐடியா இருக்கா?”

“நிறைய இருக்கு. ஆனா வசதிப்பட மாட்டேங்குது, என்ன பண்ணலாம்?” என்றால் அலுங்காமல்.

“ப்சு… விளையாடாதே… இன்னிக்கு மூன்றரை மணிக்கு நான் பர்மிஷன்ல போறேன் தெரியுமில்லை? சீக்கிரமா சாப்பிட்டுட்டு கிளம்பலாம்னா…” வசுமதி இப்போது சீரியசாகி, “ஒகே. அப்ப ஒண்ணு பண்ணு. நீயும் சந்தரும் சாப்பிடுங்க. ஒரு முக்கியமான விஷயம் கன்வே பண்ண வேண்டியிருக்கு. முடிச்சிட்டு வந்து ஜாய்ன் பண்ணிக்கறேன்” என்றாள்.

பேச்சு முடியவில்லை. தொடர்ந்தது.

“ரைட்…. அப்ப நீ கீழே வர்றப்ப பெட்டில தோத்ததுக்கு 100 ரூபாய் எடுத்துகிட்டு வந்திடு” என்றான் பிரபாகர்.

“நூறு ரூபாயா? எந்த பெட்? எப்ப தோத்தேன்?” என்றால் வசுமதி ரொம்ப அப்பாவியாக.

“நீ கொடுக்க வேண்டியிருந்தா மட்டும் உனக்கு சகலமும் மறந்திடுமே! போன சனிக்கிழமை “Rembrandtesque”ஐத் தப்பா ஸ்பெல் பண்ணிட்டு, சரிதான்னு சாதிச்சியே அதுக்காகத்தான்”

“பிரபா.. நூறு ரூபாய் பந்தயம்ங்கிறதெல்லாம் ரொம்ப அநியாயம். இப்ப இருந்து ஐம்பது ரூபாவா வைச்சுக்கலாமா?” – கொஞ்சலாக.

“அம்மாடி… எத்தனை நூறு ரூபாய் என்கிட்ட இருந்து நீ கறந்திருப்பே? விதிமுறைகளை எல்லாம் மாத்த முடியாது. வேணுன்னா நான் உன்கிட்ட எப்பவாவது தோத்தேன்னா அப்ப இருந்து மாத்திக்கலாம்.”

சரியான உடும்பு என்ற முணுமுணுத்தபடியே இன்டர்காமை வைத்தாள் வசுமதி.

பதினைந்து நிமிடங்கள் கழித்து வசுமதி டைனிங் ஹாலை அடைந்த போது சந்தரும் பிரபாகரும் சாப்பாட்டு மேசையில் தட்டும் பாத்திரங்களும் ஏகமாய்ப் பரத்தியபடி சுவாரசியமாய் பாதி சாப்பாட்டை முடித்திருந்தார்கள். வசுமதியைப் பார்த்தவுடன் பிரபாகர் பாத்திரங்களை ஒரு புறமாக ஒதுக்கி அவளுக்கு இடம் கொடுக்க முனைந்த போது, சிரமப்படாதே பிரபா… நான் அந்த டேபிள்லே உட்கார்ந்துக்கறேன்” என்றவாறே ஒரு நூறு ரூபாய்த் தாளை பிரபாகர் டேபிள் மீது வைத்துவிட்டு, எதிர்ப்புறமிருந்த மற்றொரு மேசையில் அமர்ந்து கேரியரைத் திறந்தாள்.

“காலையில வர்றப்ப என்னவோ சொல்ல ஆரம்பிச்சயே, என்ன அது?” என்று ஆரம்பித்தாள்.

பிரபாகர் யோசித்து, “எப்ப சொன்னேன்? என்றான்.

“காலையில என்னமோ படிச்சே, சொன்னா எனக்குக்கூட கோபம் வரும்னு சொன்னியே!” என்றாள்.

“ஓ அதுவா? அது எதுக்கு இப்ப? இன்னொரு சமயம் சாவகாசமாய்ப் பேசலாம்” என்றான்.

“முடியாது, இப்பவே சொல்லு. காலையில இருந்து போர்டு மீட்டிங். ப்ரொக்ராம் ஷ“ட்டுன்னு காஞ்சு போய் கிடக்கறேன்.” வசுமதி பிடிவாதமாய்க் கேட்க, சந்தர் “ஏண்டா, பர்மிஷன் வேற போட்டிருக்கே.. ஒழுங்கா கல்யாணத்துக்குப் போய்ச் சேரணும்னு ஆசையில்லையா?” என்று சொல்லவே, வசுமதி மேலும் ஆவலானாள்.

“அது வந்து வசு, நேத்து ஒரு கதை படிச்சேன். எழுதினது… யார்னு ஞாபகம் இல்லை. அதிலே ஒருத்தன் அவனோட லவர்கிட்ட”Chastity is nothing but lack of opportunity,” அதாவது கற்பு எனப்படுவது சந்தர்ப்பமின்மையே தவிர வேறெதுவுமில்லை”ன்னு சொல்றான். அதுவும் அவன் சொல்லலை. பெர்னாட்ஷா சொன்னாராம். கதையோட கரு கூட கிட்டத்தட்ட அதுதான்” என்றான் பிரபாகர்.

வெண்டைக் காயை எடுத்து வாயில் வைத்த வசுமதி, பிரபாகரை உற்றுப் பார்த்து, என்ன சொல்ல வர்றே? என்றாள்.

“கதை முழுதும் படிச்சேன். அற்புதமா இருந்தது. அப்புறம் ரொம்ப நேரம் யோசிச்சுப் பார்த்தேன். பெர்னாட்ஷா சொல்றது சரிதான்னு தோணிச்சு. பெண்கள் கற்பு, கற்புன்னு அனாவசியமா அடிச்சுக்கறாங்கன்னு படுது. அதெல்லாம் கட்டுக்காவல் இருக்கற வரைதான். கொஞ்சம் சாதகமான சந்தர்ப்பம் கிடைச்சா கற்பாவது, ஒண்ணாவது? There is no such thing called கற்பு” என்ற பிரபாகர், சந்தரின் வார்த்தைகளை மதித்து இந்த விஷயத்தை அந்த சமயத்தில் வசுமதியிடம் சொல்லாது இருந்திருக்கலாம்.

வசுமதி குளிர்ச்சியான பெண், கோபமான பெண். ஆனால் எப்போது குளிர்வாள், எப்போது கோபிப்பாள் என்பது மர்மமான விஷயம்! இருந்தும் அவள் இமைகளைப் படபடவென்று ஐந்தாறு முறை தொடர்ச்சியாகக் கொட்டினால் அழப் போகிறாள் என்பது வரை பிரபாகருக்குத் தெரியும். வசுமதியை அத்தனை தூரம் அறிவான். பள்ளி, கல்லூரி, இப்போது அலுவலகம் என்று சிறுவயதிலிருந்து பழகியதில் வலுவான, வார்த்தைகளுக்கு மிஞ்சிய நட்பு!

இருந்தும் இப்போது அனுமானிக்கத் தவறி விட்டான். வசுமதி எடுத்த எடுப்பில் வெடித்தாள். “கொஞ்சமாவது அறிவு இருக்கா? ஏன் இப்படி பொறுக்கித்தனமா பேசறே?”

பிரபாகருக்கு இயல்பாகக் கோபம் வந்தது. இருந்தும் நிதானித்து, “என்ன வசு, உண்மைன்னு தோணற ஒரு கருத்தைச் சொல்ல பொறுக்கியா இருக்கணுமா?” என்றான்.

வசுமதி குளிரவில்லை. இன்னும் கோபித்தாள். “அப்ப சந்தர்ப்பம் கிடைச்சா எல்லாப் பெண்களும் கெட்டுப் போயிடுவாங்கங்கறே. வெல், இதுக்குப் பதில் சொல்லு! உங்கம்மாவுக்குத் தப்பு செய்யறதுக்கு இத்தனை வருஷத்தில் ஒரு சந்தர்ப்பம் கூடவா கிடைக்கலை?” வார்த்தைகளை அனாயாசமாக அள்ளித் தெளித்தாள்.

பிரபாகருக்குத் தலைக்குள் ரத்தம் ஜிவ்வென்று பாய்ந்தது.

“இப்ப பொதுவாத்தானே பேசிகிட்டு இருக்கோம்? எதுக்கு எங்கம்மாவை இழுக்கறே? ஆயிரம் தரம் சொல்வேன். பெண்களுக்கு கற்புன்னு ஒண்ணு கிடையாது. எல்லாம் ஒரு ஷோ தான்.”

சாப்பிடுவதை நிறுத்தி அவனையே முறைத்துக் கொண்டிருந்த வசுமதி கையிலிருந்த ஸ்பூனை சட்டென்று அவரைக் காயுடன் அப்படியே பிரபாகரை நோக்கி விட்டெறிந்தாள்.

இதை கொஞ்சம் எதிர்பார்த்தவன் போல் சந்தர் அதைக் “காட்ச்” பிடித்து, “அம்மா தாய்க்குலமே! நீங்க சும்மா வாயாலே பேசினாலே எங்களுக்குப் புரியும், இதெல்லாம் எதுக்கு?” என்றவாறே பிரபாகர் பக்கம் திரும்பி, “ஏண்டா மடையா, அப்பவே சொன்னேனில்லை? ஏதோ சாப்பிட வந்தோம், நாட்டுக்குத் தேவையான விஷயமா – கிர்க்கெட்ல யார் ஜெயிச்சாங்க, தேர்தல் எப்ப வரும்னு பேசிட்டுப் போனோம்னா எவ்வளவு நல்லா இருக்கும்! பெரிய இவங்க… கற்பு இருக்கா இல்லையாமா? கால் காசு பெறாத விஷயம்” – நிலைமையை மட்டுப்படுத்த அவன் பேசியது வசுமதிக்கு இன்னும் வெறுப்பூட்டியது.

பிரபாவுக்கு அவங்க அம்மாவைச் சொன்னவுடனே எப்படிக் கோபம் வருது பார்த்தியா? ஏன் அவன் சொன்ன அந்த “கேட்டகரி”யில் அவங்க அம்மா, தங்கச்சி மட்டும் இல்லையாமா? அத்தனை ஏன்? எத்தனை நாள் உன்கூட நேரம், காலம் பார்க்காம ஊர் சுத்தியிருக்கேன்? கேவலம் ஒரு லவ் லட்டர் கூட நீ கொடுக்கற மாதிரி வைச்சுக்கலியே!”

தணிந்து சமநிலைக்கு வந்திருந்த பிரபாகர் இப்போது வசுமதியை உசுப்பிவிட ஆசைப்பட்டான்.

“நீ கொஞ்சம் அழகா இருந்திருந்தா, கொடுத்திருப்பேனோ என்னவோ” என்றான் சாவதானமாக.

பெண்களின் அடுத்த பலவீனம்! வசுமதியின் அழகு அங்கு பிரசித்தம்! இருந்தும் பிரபாகரின் வார்த்தைகளை அவளால் தாங்க முடியவில்லை.

சாப்பிட்டுக் கொண்டிருந்ததை அப்படியே ஜன்னல் வழியாக வெளியே கவிழ்த்தாள். கை கழுவி, பாத்திரங்களை சப்தத்துடன் அடுக்கினாள்.

“ஆமாம்… அழகா இல்லாமதான் வாரத்துக்கு நாலு லவ் லெட்டர் வருது” நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி, சந்தர் கூப்பிடக்கூப்பிட கேட்காமல் செருப்புத் தேய வெளியே நடந்து போனாள்.

மூன்றரை மணிக்கு மீண்டும் பிரபாகர் வசுமதியைக் கூப்பிட்டு தான் கிளம்புவதாகச் சொன்ன போதும் அவள் கோபம் தணிந்திருக்க வில்லை. “எங்கேயோ போய்த் தொலை, ஏன் என்கிட்ட சொல்றே?” என்று சீறினாள்.

லேசான மனப்பாரத்துடன் கிளம்பி, திருப்தியில்லாத மனத்துடனே ஊட்டிக்குப் புறப்பட்டுப் போனான். மறுநாள் பெரியப்பா மகன் கோபால் கல்யாணத்திலும் உற்சாகமில்லாமலே இருந்தான். நண்பர்கள் “என்னப்பா அண்ணன் கல்யாணம் முடிஞ்சது, அடுத்தது நம்மளதுதானே? என்று கிண்டலடித்த போது கூட ஒப்புக்காக சிரித்து வைத்தான். மாலையில் மணமக்களுடனேயே கிளம்பலாம் என்றிருந்த போது, சின்ன மாமா வந்து கார் சாவியை அவன் கையில் கொடுத்தார்.

பிரபு…. லலிதாவோட சிநேகிதிக்கு கோயமுத்தூர்ல நாளைக்குக் கல்யாணமாமா. இன்னிக்கே அங்கே இருக்கணும்ங்கறா. காலையில் முகூர்த்தம் முடிஞ்சதில் இருந்து போகலாம் போகலாம்னு நச்சிகிட்டு இருக்கா. என்னால உடனே கிளம்ப முடியாது. பொண்ணு, மாப்பிள்ளையை சாயந்திரம் கோயிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வந்துட்டுதான் கிளம்ப முடியும். தலைக்கு மேலே வேலை கிடக்கு. காரை கொடுக்கச் சொல்லி பிடிவாதம் பிடிக்கறா. அவ டிரைவிங் இந்த ரூட்டுக்கு ஒத்துவராது. கொஞ்சம் முன்னாடியே கிளம்பி, நீயே அவளைக் கொண்டு போய் விட்டுடு” என்ற போது திடும் என்று மனதில் உற்சாகம் பொங்கியது.

காரணம் லலிதா இன்னும் நான்கு மாதங்களில் அவனுக்கு மனைவியாகப் போகிறவள். சொந்த மாமா பெண் என்பதால் லலிதா அவனுக்குப் புதியவளல்ல. இருந்தாலும் கல்யாணத் தேதி நிச்சயிக்கப்பட்ட பின்பு எல்லாமே வித்தியாசமாகத் தோன்றியது. லலிதாவுடன் மாலைநேர மலைவழிப் பயணம் என்பது சோர்ந்திருந்த பிரபாகருக்கு சந்தோஷமளித்தது.

லலிதா தயாராகக் கையில் பெட்டியுடன் வந்து நின்றாள்.

“கிளம்பலாம் பிரபா. இப்பவே கிளம்பினாதான் போய்ச்சேர சரியாயிருக்கும். லதா தெரியுமில்லே? உயரமா, சுருட்டை முடியா… பீளமேட்டில வீடு…. நீங்ககூட ஒருதரம் என்னை அவங்க வீட்டிலே கொண்டுபோய் விட்டீங்களே எக்சாமுக்குப் படிக்க ஞாபகமிருக்கா?”

மாமா குறுக்கிட்டு, “உடனே கிளம்பணுமா? மத்தியானம் விருந்து சாப்பிடாமக் கிளம்பினா நல்லாயிருக்காது. ஏற்கெனவே கோபால் நீ கோயிலுக்குக்கூட வராம கிளம்பறேன்னதும் முகத்தைத் தூக்கி வைச்சுக்கிட்டு இருக்கான். இப்பவே பிரபுவும் கிளம்பினா ரொம்ப வருத்தப்படுவான். சாப்பிட்டுட்டு ஒரு மூணு மணிக்குக் கிளம்பினீங்கன்னா ஆறு, ஆறரைக்கெல்லாம் போய்ச் சேர்ந்திடலாம். நீயும் வீட்டுக்குப் போய் குளிச்சுக் கிளம்பறதுக்கு சரியாயிருக்கும் என்றதும் லலிதா முகம் வாடினாள்.

மாமா அந்தப் பக்கம் நகர்ந்ததும், “லதா எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃபிரண்டு தெரியுமில்லை? சீக்கிரமா போய் அவகூட இருக்கலாம்னா விட மாட்டேங்கறாங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. கோபால் கிட்ட நான் ஏற்கெனவே சொல்லிட்டேன். என்னைக் கொண்டுபோய் அங்கே சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு” என்றாள்.

சாப்பிட்டு விட்டு கோபாலிடம் சொல்லிக் கொள்ளப் போனபோது, அவன், “பிரபு, நல்லவேளை வந்தே! இவரு மிஸ்டர் வில்லியம் கிளன்டேல், ஆபிஸ் விஷயமா பெர்லின்லேயிருந்து வந்தார். நான்தான் கல்யாணத்துக்குக் கூட்டிகிட்டு வந்தேன். ஊட்டியிலே ரெண்டுநாள் தங்கியிருக்கப் பிரியப்படறார். நீ அவரைக் கூட்டிகிட்டுப் போய் நல்ல ஹோட்டலாப் பார்த்து அரேன்ஜ் பண்ணிட்டு வந்துருடா” என்றான், ஒரு உயரமான வெளி நாட்டவரை அறிமுகப்படுத்தி.

பெரியப்பா மகன்தான் கோபால் என்றாலும் சொந்த சகோதரன் போல. மறுக்க முடியுமா? லேசாகத் தயக்கம் காட்டிய போது, அவனே “லலிதா சொன்னா. அஞ்சு மணிக்கு இங்கேயிருந்து கிளம்பினாக்கூட எட்டு மணிக்கெல்லாம் போய்ச் சேர்ந்திடலாம் என்றான் சமாதானமாக.

எல்லாம் முடிந்து ஐந்தரை மணிக்குக் கிளம்பிய போது லலிதா உம்மென்றிருந்தாள். முகத்திலேயே கோபம் தெரிந்தது.

சமாதானப்படுத்த முயன்றான். “சொல்லாம கொள்ளாம நான் பாட்டுக்கு வண்டியை எடுத்துகிட்டு கிளம்பியிருக்கணும். அப்ப எல்லாம் சரியா இருந்திருக்கும்” என்றாள். அப்புறம் பேசாமலேயே வந்தாள். பிரபாகர் ஹேர்பின் வளைவுகளில் அனாயசமாகத் திருப்பிய போது மட்டும், “வேகம் வேண்டாம் பிரபா, மெதுவாகவே போங்க” என்றாள். பிரபாகர், உன்னைக் கொண்டுபோய் ராத்திரிக்குள்ள கல்யாண வீட்டில் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. கவலைப்படாம இப்ப ஏதாவது பேசு பார்ப்போம்” என்றதற்கு, கவலைப்படாம எப்படி இருக்கறது? மழை வர்ற மாதிரி இருக்கு போய்ச் சேருவோமான்னு தெரியலை. இதுக்குத்தான் முன்னாடியே கிளம்பலாம்னு அடிச்சுகிட்டேன் என்றாள்.

சொன்னது போலவே மழை பிடித்துக் கொண்டது. பரலியாற்றில் மழை வலுத்து, மேலே செல்ல முடியாமல் காரை நிறுத்தி ஒரு கடையில் டீ குடித்து மழை கொஞ்சம் மட்டுப்பட்டதும் மீண்டும் இறங்கி, மேட்டுப் பாளையத்துக்கு சற்று முன்பு வந்த போது, கார் இரண்டு மூன்று சிலுப்பல்களோடு நின்று போனது.

மழையில் நனைந்து கொண்டே, பானெட்டைத் திறந்து ஆராய்ந்து பார்த்தான், பிரயோசனமில்லை.

பாட்டரி கனேக்ஷன் அவுட்! சோல்டர் செய்தாக வேண்டும்.

இருட்டில் கடந்து போன ஒன்றிரண்டு வாகனங்களை நிறத்த முயன்று பயனில்லாமல் போன போது பிரபாகர் நிஜமாகவே கவலைப்பட ஆரம்பித்தான். லலிதாவைத் தனியாக பஸ்சில் கோவைக்கு அந்த நேரத்தில் அனுப்ப முடியாது. காரை அத்துவானத்தில் விட்டுவிட்டு தானும் அவளோடு கிளம்பிப் பஸ்சில் போக முடியாது என்ன செய்வது?

“லலிதா….” மெல்ல அவள் தோளைத் தொட்டு “சாரி” என்றான். “நீங்க என்ன பண்ணுவீங்க?” என்றவள், அடுத்த நிமிடம் விசும்பி அழ ஆரம்பித்தாள்.

ஏமாற்றத்தில் அழுகிறாள் என்பது புரிந்தாலும், ஒன்றும் செய்ய முடியாத இக்கட்டில் கையைப் பிசைந்து, மீண்டும் சாலையோரம் நின்று கடந்து போகும் வாகனங்களை நிறுத்த முயற்சித்தான்.

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இருட்டில், மழைநேரத்தில், மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்று கொண்டு ஒருவன் கையசைத்தால் யாராக இருந்தாலும் லிஃப்ட் கொடுக்க யோசிக்கத்தான் செய்வார்கள்.

கொஞ்ச நேர முயற்சிக்குப் பின்பு கடந்து போன ஒரு மோட்டார் பைக் வட்டமடித்துத் திரும்பி அருகில் வந்த போது, ஆச்சரியத்தில் பிரமித்துப் போனான்.

வந்தது சுப்ரமணியன். கல்லூரித் தோழன். மேல் படிப்பு முடித்து வெளிநாட்டில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டான். இப்போது… இங்கே…. “டிரெயினிங் முடிஞ்சு, இப்ப இங்கே புது யூனிட்ல இருக்கேன். யூனிட்ல இருந்து வீட்டுக்கு ஃபோன் வந்தது. ஒரு மெஷின் ப்ரேக் டவுனாயிடுச்சு. அவசர வேலை. அதுதான் ராத்திரியில கிளம்பிட்டேன். நாளைக்கு டெல்லியில இருந்து யூனிட் விசிட் வரப் போறாங்க” என்று விவரித்தவன், “பிரபு, உன்னைப் பார்ப்பேன்னு நினைக்கவேயில்லடா.. ஹெள நைஸ்” என்றான்.

பிரபாகர் நிலைமையைச் சொன்னான். பலவித யோசனைகளுக்குப் பிறகு,, “சரி, இருக்கறதிலயே பெஸ்ட் ஐடியா இதுதான். நான் பைக்ல போய் மேட்டுப்பாளையத்திலிருந்து ஆட்டோ கூட்டி கிட்டு வர்றேன். நீயும் அவங்களும் என் வீட்டுக்குப் போய் ஏதாவது சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க. நான் யூனிட் போய் ஆள் அனுப்பி, வொர்க்ஷாப்பில இருந்து மெக்கானிக் கூட்டிக்கிட்டு வர ஏற்பாடு பண்றேன். அவங்க காரை ரெடி பண்ணி வீட்டுக்கு எடுத்துட்டு வரட்டும். உடனே நீங்க கிளம்பலாம். காலை கிளம்பறதானாலும் சரி…” அலுவலகத் தொலைபேசி எண், வீட்டுச் சாவி, அட்ரஸ் கொடுத்தவன், காருக்குள் குனிந்து, “மேடம், கவலைப்படாம போங்க. சீக்கிரமா கிளம்பிடலாம்” என்றான் லலிதாவிடம்.

லலிதா புன்னகைத்து நன்றி தெரிவித்தாள்.

ஆட்டோவில் சுப்ரமணியம் வீடு வந்து சேர்ந்து கதவைத் திறந்த போது வியந்தார்கள். அழகான, கச்சிதமான வீடு! ஒரு முன்பக்க அறை, ஒரு ஹால், இரண்டு படுக்கையறைகளுடன், சின்ன சமையலறை… எல்லாமே சுத்தமாக வைக்கப்பட்டிருந்தன.

பிரபாகர் இப்போது முற்றிலும் வேறு மனநிலையிலிருந்தான். திருமண வீட்டுக் களைப்பு, கார் பிரயாணம், மழை, தாமதம் எல்லாம் முற்றிலும் மறந்து போய் விட்டது.

“இந்தாங்க, முதல்ல தலையைத் துவட்டுங்க” என்ற லலிதா கொடியில் இருந்த டவலை எடுத்து அவனிடத்தில் நீட்டினாள்.

அவளையே பார்த்தான் கொஞ்ச நேரம். பிறகு “நமக்கு கல்யாணம் முடிஞ்சு, தனியா வீடு பார்த்து வந்த மாதிரி இருக்கு, இல்லை?” என்றான்.

“இல்லை”

“என்ன இன்னும் கோபமா?”

“எப்படியும் லேட்டாயிடுச்சு. இனிக் கோபப்பட்டு என்ன பண்றது?”

தலையைத் துவட்டிவிட்டு டவலை அவளிடத்தில் கொடுத்தவன், வாங்க முயன்ற அவள் விரல்களைப் பற்றினான். அருகே இழுத்தான்.

“ப்ச், என்ன பிரபா இது, விடுங்க….” என்றவள் தன்னை விடுவித்துக் கொண்டாள். கொடியில் டவலை உலர்த்தியவளை நெருங்கி, மீண்டும் கைகளில் சேர்த்துக் கொண்டான்.

“எனக்குப் பசிக்குது, விடுங்க என்னை. எதாவது சாப்பிட இருக்கான்னு பார்க்கறேன்” – யதார்த்தமாய்ப் பேசி, மீண்டும் விடுதலை பெற்று சமையலறைக்குள் புகுந்தாள்.

ரொட்டித் துண்டுகள், ஜாம், சூடாக்கப்பட்ட பாலுடன் வந்தவள் பிரபாகருக்குத் தந்து தானும் உண்ணத் தொடங்கினாள்.

சாப்பாடு முடித்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த பிரபாகர், “லலிதா, நீ ரொம்ப அழகாயிருக்கே” என்றான் ஆங்கிலத்தில்.

“தாங்க்யூ”

“கண்களைக் கட்டிப் போட்டாள் – அப்படின்னு கதைகள்ல படிச்சிருக்கேன். இப்பதான் அது என்னண்னு புரியுது.”

“அப்படியா?”

“சரி…..” சாப்பிட்டுவிட்டு காலி தம்ளர்களுடன் சமையலறையை நோக்கி நகர்ந்தவள் மீண்டும் சிறைப்பட்டாள். கன்னம், கண்கள், கூந்தல் என்று ஆராயப்பட்டாள்.

“இன்னிக்கு எனக்கு நீ ரொம்பப் புதுசா இருக்கே” என்றான் ரொம்பக் கிசுகிசுப்பாக அவள்காதருகே….

“எனக்கு நீங்க பழசாத்தான் இருக்கீங்க. நீங்க பண்றதுதான் ரொம்பப் புதுசா இருக்கு” என்றவள், தன் இடையைச் சுற்றியிருந்த அவன் கைவிரல்களைப் பிரித்துத் தூர விலக்கினாள். தோள்களைக் குலுக்கி அவன் வலது கரத்தினின்றும் விடுபட்டாள். ஸ்திரமாய் அவனை விட்டு நகர்ந்தாள்.

“ஏன் ஓடறே? என்னைப் பிடிக்கலையா?” கேள்வி அவனுக்கே அபத்தமாகப் பட்டது.

உள்ளே சென்று தம்ளர்களைக் கழுவிய பிறகு, இடது பக்கப் படுக்கையறைக்குள் புகுந்து, பிரபாகர் உணருமுன் கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.

இரண்டு, மூன்று முறை கதவைத் தட்டியும் பிரயோசனமில்லை. அந்தக் கதவுகள் திறக்கப்படவில்லை.

கார் சரி செய்யப்பட்டு வந்து, தொலைபேசியில் சுப்ரமணியனை அழைத்து பல முறை நன்றி தெரிவித்து, வீட்டைப் பூட்டி, சாவியை அவன் யூனிட் ஆளிடம் கொடுத்தனுப்பி விட்டு, வண்டியைக் கிளப்பி லலிதாவைக் கோவையில் கல்யாண வீட்டில் விடும் போது மணி இரவு பன்னிரண்டரை.

“தாங்க்ஸ் பிரபா… குட் நைட்…. நாளைக்கு வீட்டில இருக்க மாட்டேன். நாளன்னிக்கு சாயந்திரம் வீட்டுக்கு வாங்க. முடியலேன்னா ஃபோன் பண்ணுங்க,” இயல்பாகப் பேசியவள், அவன் உள்ளங்கையை மெத்தென்று அழுத்தி விடைபெற்றாள்.

மறுநாள் பதினொன்றரை மணிக்கு அலுவலகம் திரும்பிய பிரபாகர், முதல் வேலையாய் வசுமதியை இன்டர்காமில் அழைத்தான்.

“ஹாய்” பிரபா, எப்ப வந்தே? நீ இல்லாம நேத்திக்கு ஒரே போர்” – உற்சாகத்தில் பொங்கினாள்.

அதுதான் வசு, குளிர்ச்சியாக இருக்கிறாள்.

“உடனே கான்ட்டீனுக்கு வா, உன்கிட்ட பேசணும்.”

இப்ப எம்.டி. கூப்பிடுவாரு. இன்னும் பத்து நிமிஷத்துல வர்றேன், சரியா?”

ஆவி பொங்கிய காபியை டபராவில் ஊற்றி ஆற்றிய வசுமதி, ஒவ்வொரு வாயாக ரசித்துக் குடித்தவாறே கேள்விகளை அடுக்கினாள்.

“சொல்லு, கல்யாணம்லாம் எப்படி நடந்தது? பொண்ணு எப்படி? எத்தனை மணிக்குத் திரும்பி வந்தே?”

பிரபாகர் பதில் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஹேய், என்ன இது? ஒண்ணும் பேச மாட்டேங்கறே? இப்ப எதுக்கு இவ்வளவு அவசரமா கூப்பிட்டே? எங்கயாவது அடி, கடி வாங்கினியா?” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. உனக்கச் சேர வேண்டிய நூறு ரூபாயை உடனே கொடுத்தாதான் மனசு ஆறும் போலத் தோணிச்சு. அதான் கூப்பிட்டேன்.”

“ஹை, நூறு ரூபாயா? கொடு…கொடு… ஆமா எந்த பெட்டில தோத்தே? எனக்கே தெரியாம எப்ப தோத்தே? சரி எதுவா இருந்தா என்ன? முதல்ல பணத்தைக் கொடுத்திட்டு அப்புறம் பேசு… தெரியும் எனக்கு. வசுமதிக்கு இன்னிக்குப் பண வரவுன்னு” – மூச்சு விடாமல் பேசியவள் கையை நீட்டினாள்.

நீட்டப்பட்ட கையில் ஐம்பது ரூபாய்த்தாளை வைத்தான் பிரபாகர்.

“ஏய், என்ன இது? எதுல தோத்தேன்னும் சொல்ல மாட்டேங்கறே! இப்ப என்னடான்னா ஐம்பது ரூபாதான் தர்றே… மிச்ச ஐம்பது ரூபாயை யார்கிட்டே இருந்து கலெக்ட் பண்றதாமா? – சிணுங்கினாள்.

“பெர்னாட்ஷா கிட்டே இருந்து” – பிரபாகரின் பதிலில் லேசான பெருமிதம் இருந்தது.

– சந்திரக் கற்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1998, சென்னை பல்கலைப் பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *