நீயின்றி நானில்லை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2023
பார்வையிட்டோர்: 5,696 
 

(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-13

நீ விலகிப் போனாலும்
நீயின்றி நானில்லை…

அந்த அகன்று விரிந்திருந்த ஆலமரத்தின் அடியில் கல்லினால் கட்டப்பட்ட மேடை அமைந்திருக்க… அதன்முன் ஊர் ஜனங்கள் குழுமியிருந்தார்கள். 

“ஐயா… வர்றாரு… வழி விடுங்கப்பா…” ஒரு பெரிசு உரக்கக் குரல் கொடுக்க… கூட்டம் இரண்டாகப் பிளந்து வழி விட்டது. 

ஆஜானுபாகுவான தோற்றத்தோடு… வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு… பெரிய மீசையை முறுக்கியவாறு… அந்தக் கல் மேடையில் அமர்ந்தார் சண்முகம். 

“என்ன பிராதுப்பா…?” கம்பீரமான குரலில் அவர் வினவவும்… இரண்டு பேர் முன்னால் வந்தார்கள். 

“என்னப்பா… முனியா… சுப்பா…? என்னா சமாசாரம்…?”

“ஐயா… இவன் என் கூடப்பிறந்தவனுங்க…”

“அதுகூட உனக்கு நினைப்பிருக்காப்பு?”

“இப்ப இவன் என் பங்காளிய்யா…” 

“அதுதானே பார்த்தேன்… என்னடா… ஒடன் பொறந்தவன் மேல… பாசமழையைப் பொழியறானேன்னு ஒரு நிமிசம் அசந்து போயிட்டேன்… ம்ம்… ஒன் பிறவிக் குணம் எங்கே போயிரும்…?” 

“ஊரில… உலகத்தில… இல்லாததையா நான் சொல்லிப்புட்டேன்…? உடன்பிறந்தவன் வளர்ந்துட்டா… அவன் உடன் பங்காளிதானேய்யா…” 

“இதைச் சொல்லித்தானே போன வருசம்… காடு கரையைப் பிரிச்சுக்கிட்டுப் போனீங்க… இப்ப என்னப்பு… புதுசா பஞ்சாயத்தில் வந்து நிக்கறீங்க… ஒங்க பஞ்சாயத்தைத் தீர்த்து வைக்கிறதுதான் பெரிய பஞ்சாயத்தா போயிருச்சு எனக்கு. வாயைத் திறந்து… வழக்கை சொல்லுங்கப்பு…” 

“ஐயா… அவன் வீட்டில ஒருமாசம்… என் வீட்டிலே ஒரு மாசம்ன்னு எங்க ஆத்தாக்கிழவி கஞ்சி குடிக்கும்…”

“அடகெரகமே… இதையும் காது கொடுத்துக் கேட்கணு முன்னு எந்தலையில் எழுதி வைத்திருக்கு… ம்ம்… மேலே சொல்லப்பு…” 

“ஆனா பாருங்க… அவன் வீட்டில் என் ஆத்தா இருக்கிறப்போ மட்டும் மாதத்துக்கு முப்பது நாள்தான் வருது… என் வீட்டுக்கு வர்றப்போ… முப்பத்தியொரு நாள் வருது…”

“அதுக்கு இப்ப என்னாங்கிறப்பு…?” 

“ஒரு நாள் கூடக் கஞ்சி ஊத்த… நான் கேணச் சிறுக்கியான்னு… என் பொஞ்சாதி கேள்வி கேட்கிறாள். அதனால்… இனிமே… அடுத்த வருசம் முழுக்க… அவன் வீட்டில் முப்பத்து ஒரு நாளும் என்வீட்டில் முப்பது நாளும்… எங்க ஆத்தா கஞ்சி குடிக்கணுமுன்னு நீங்க உத்தரவு போடணும்.”

“தூத்தேறி… இதெல்லாம் ஒரு வழக்கு… இதுக்கு ஒரு பஞ்சாயத்து… பெத்த கிழவிக்கு ஒரு வாய் கஞ்சி ஊத்த கணக்குப் பார்க்கிற நீயெல்லாம் என்ன பிறவிடா. இந்த மண்ணில் பொறந்தவனா நீயி…? ஒருநாள் கூடக் கஞ்சி ஊத்தினால்… யார்வீட்டுச் சொத்துடா குறையும்? அது உன் அப்பனும்.. ஆத்தாளும் வம்பாடுபட்டு… வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி… சம்பாதித்து வைத்தச் சொத்துடா… அதை அனுபவிக்க உனக்கு உரிமை இருக்கு… ஆனால்… ஆத்தாளுக்கு ஒருநாள் கூடக் கஞ்சி ஊத்த எனக்கு மனசு இல்லை… இப்போ சொல்றேன்… எல்லாரும் கேட்டுக்கங்க. இவன் இனிமேல் காலம் முச்சூடும் இவனுடைய ஆத்தாளுக்கு அரிசிச் சோறும்… கறிக்குழம்புமாய் ஆக்கிப்போடணும்… தவறினால்… இவனை ஊரை விட்டுத் தள்ளி வைக்கணும்… இதுதான் இந்தப் பஞ்சாயத்தின் தீர்ப்பு…” 

“ஐயா… இது அநியாயம்ங்க…”

“எனக்கு இதுதாண்டா நியாயம்…” 

“என் தம்பிக்காரனுக்கும் ஆத்தாளைக் காப்பாற்றும் கடமை இருக்கில்ல…?” 

“இவன் உன்னைப் போல… பெத்தவளுக்கு கஞ்சி ஊத்தக் கணக்குப் பார்த்து பஞ்சாயத்துக் கூட்டினானா…?” 

சண்முகம்… துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு… எழுந்து நின்று கர்ஜித்தார்… அந்தக் கூட்டத்தில் ஒட்டாமல்… விலகித் தெரிந்த அந்த அழகிய இளம் பெண்ணின் விழியில் தெரிந்த வியப்பைக் கவனித்தவர் யோசித்தார். 

‘இது யார் வீட்டுக்கு வந்த பொண்ணு…? ஊருக்குப் புதுசாய் தெரிகிறதே…’ 

அவரது பார்வையை உணர்ந்த அந்தப் பெண் அவருக்கு கரம் குவித்து வணக்கம் சொல்ல… பதில் வணக்கம் சொல்லி விட்டு விசாரித்தார். 

“யாரும்மா நீ…?” 

“என் பெயர் சாருலதாங்க…”

“எந்த ஊர்…?” 

“சென்னை…” 

“இந்த ஊரில் யார் வீட்டுக்கு விருந்தாளியாய் வந்திருக்கிறாய்…?” 

“உங்கள் வீட்டுக்குத்தான் விருந்தாளியாய் வந்திருக்கிறேன்…” 

அவருக்கு தூக்கி வாரிப் போட்டது… ‘என் வீட்டிற்கு வந்திருக்கிறாளா…? இது யார் என்றே தெரியவில்லையே…?’ 

“என் வீட்டுக்கா வந்திருக்கிறேன்னு சொன்னே?’

“ஆமாங்க…” 

“எங்களை உனக்கு எப்படித் தெரியும்…?”

“நான் உங்கள் வீட்டிற்குச் சொந்தம்…”

“சொந்தமா…? எப்படி சொந்தம்…? எந்த வகையில் சொந்தம்…?” 

“அதை… உங்கள் வீட்டிற்குப் போய் பேசலாமே…”

சண்முகம் கூர்மையான அறிவுள்ளவர்… வந்திருந்த பெண்ணின்… அழகிய… படித்தப்பெண் போன்ற தோற்றமும்… அவளது கையிலிருந்த… துணிகள் அடங்கிய பெரிய பையும் அவருக்கு எதையோ உணர்த்த.. 

“வாம்மா…” என்றபடி முன்னால் நடந்தார். 

“என்ன மாமா… வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்கு போல…” எதிரே வந்த பெண் விசாரித்தாள்… 

“ஆமாம்… புள்ள…” 

“எந்த ஊராம்…?” 

“சென்னைப் பட்டணமாம்…” 

“அப்படின்னா…” 

“மெட்ராஸும்மா…”

“ஆ… அப்படிச் சொன்னாத்தானே எனக்குத் தெரியும்… பொண்ணு யாரு… உங்க சொந்தமா…?” 

“ஆமாம்…” 

அடுத்து அவர்… ‘என்ன முறையான சொந்தம்’ என்று கேட்டு வைத்தால் எப்படிப் பதில் சொல்வது என்ற சங்கடத்தோடு நடையை எட்டிப் போட்டார். 

அந்தப் பெரிய வீட்டின் முன்னால் சிமிண்ட் போடப் பட்ட தரையிருக்க… அதில் நெல்… மிளகாய், பருப்பு போன்ற தானிய வகைகள் காய வைக்கப்பட்டிருந்தன. 

சுற்றிலும் மர வேலி போடப்பட்டிருக்க… மரப் படலைத் தள்ளித் திறந்தபடி உள்ளே சென்ற சண்முகம், வாசலில் மிளகாயை அள்ளிக் கொண்டிருந்த மனைவியை சத்தமாய் அழைத்தார். 

“தெய்வானை… அடியேய் தெய்வானை…” 

“ஏன் இப்படிச் சத்தம் போட்டு ஏழூரையும் கூட்டு கிறீங்க… தெய்வானைக்கு என்ன வைச்சிருக்கீங்களாம்…”

“யாருடி இவ… நேரம் கெட்ட நேரத்தில் வியாக்கி யானம் பேசிக்கிட்டு… இங்கே வாடி…” 

“அடி… ஆத்தி… இந்த மனுசனுக்கு… இந்த வயசிலயும் கோபம் குறைவேனாங்குதே…”

அங்கலாய்த்தபடி… கைவேலையைப் போட்டுவிட்டு அவர்கள் அருகே வந்தாள் தெய்வானை… அப்போதுதான் சாருலதாவைக் கவனித்தவள்… 

“யாரு இந்தப் பொண்ணு…?” என்று கேட்டாள்.

“அதைக் கேட்கத்தான் உன்னைக் கூப்பிட்டேன்… உள்ளே வா. நீயும் வாம்மா…” 

சண்முகம் வீட்டிற்குள் போனதும்… முற்றத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார். நான்கு புறமும் இருந்த தூண்களில் ஒன்றின் மேல் சாய்ந்து நின்றபடி சாருலதா அவர் முகம் பார்த்தாள். 

“தெய்வானை… அந்தப் பெண்ணுக்கு குடிக்க ஏதாவது குடு…?” 

தெய்வானை கொண்டு வந்து கொடுத்த மோரை வாங்கிக் குடித்ததும்… சாருலதாவிற்கு கொஞ்சம் தெம்பு வந்தது. 

“சொல்லும்மா… நீ எந்த வகையில் எங்களுக்கு சொந்தம்…?” 

“உங்கள் மகனைக் காதலிக்கிறவள் என்ற வகையில் உங்களுக்குச் சொந்தம்…” 

சண்முகம் இதுவாகத்தான் இருக்கும் என்று முன்பே பூகித்திருந்ததால்… அவர் முகத்தில் அதிர்ச்சியின் சாயல் இல்லை. 

“ஆத்தி… இந்தப் பொண்ணு… என்னத்தையோ சொல்லுதே… யாரும்மா நீ…? என் மகனை உனக்கு எப்படித் தெரியும்? எத்தனை நாளாய் உங்களுக்குள்ள பழக்கம்…?” 

தெய்வானை பதறினாள்… சாருலதா பொறுமையாய் எல்லாவற்றையும் சொன்னாள். சண்முகம் தீர்க்கமான விழிகளுடன்… அவள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். 

“நீங்க ஊருக்கெல்லாம் நியாயம் சொல்கிறவங்க… எனக்கொரு நியாயத்தை நீங்களே சொல்லுங்க… என்னை உயிருக்குயிராய் காதலித்து… பெண் கேட்டு என் வீட்டுப் படியேறியும் வந்து விட்டு… நீ வேண்டாமுன்னு தூக்கிப் போட்டுவிட்டுப் போய் விட்டார் உங்கள் மகன்… இது நியாயமா?” 

“உன்னைப் பெற்றவர் பேசியது மட்டும் நியாயமாம்மா?” 

“நியாயமில்லைதாங்க… ஆனால்… அதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்…? என்னைக் கைவிடாமல் காலம் பூராவும் காப்பாற்ற வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறதா… இல்லையா…?” 

“உன்னைப் பெற்றவங்க நினைப்பு வேறு மாதிரி இருக்கேம்மா…” 

“ஆனால் என் நினைப்பு உங்க மகன் மேல் மட்டும்தாங்க. என்னால் அவரில்லாமல் வாழ முடியாது…”

“இந்த நினைப்பில் நீ உறுதியாக இருக்கிறாயா…?”

“உறுதியில்லாமலா வீட்டை விட்டு வெளியே வருவேன்…?” 

“இது சண்முகத்தின் வீடும்மா… என் மகனை நம்பி… வீட்டை விட்டு வெளியே வந்து… என் வீட்டுப் படியை நியாயம் கேட்டு மிதித்து விட்டாய்… இனி… இது உன் வீடு… நீ எங்கள் மருமகள்… இந்த உலகமே எதிர்த்து வந்தாலும்… என் மகன் கழுத்தில் தாலி கட்டுவான்… உங்க அப்பன் என்னம்மா… எனக்கு அவர் வெறும் பிஸ்கோத்து…” 

சண்முகம் மீசையை முறுக்கியவண்ணம் கூறினார். தெய்வானை வந்திருக்கும் பெண்ணின் அழகில் மகிழ்ந்து போய் அவள் கைப்பிடித்து அருகில் அமர வைத்துக் கொண்டார். 

“எவ்வளவு அழகாயிருக்கேம்மா… எங்க தனா உன்மேல் ஆசைப்பட்டானா…?” 

“ம்ம்ம் …” 

“அப்புறம் எதுக்கு அவன் அப்படிச் சொல்லி விட்டுப் போனானாம்… கூறு கெட்ட பயல்… இவ்வளவு பாசத்தோடு ஒரு பொண்ணு பின்னால் வந்தால்… அவளைக் கை நழுவ விட்டுவிட்டுப் போகிறவனை என்னன்னு சொல்றது?” 

“அவன் வந்ததும் அதை நீயே அவனிடம் கேளு… இப்ப எழுந்திருச்சு… மருமகளைக் கூப்பிட்டுக்கிட்டு போய் குளிக்கச் சொல்லி… துணிமணிகளை மாத்தினப்புறம் சோற்றைப் போடு… எந்நேரம் சாப்புட்டுச்சோ… புள்ள… பாவம்… பசி அது முகத்தில் தெரியுது…” 

அவசரமாய் எழுந்து கொண்ட தெய்வானை… சாருலதாவின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு போக… சாருலதாவிற்கு… அது முன் பின் அறியாத வீடு என்றே தோன்றவில்லை… காலம் காலமாய் அவள் கால் பதித்து வாழ்ந்து வந்த வீடு போலவே அவள் உணர்ந்தாள். 

சண்முகம் புயலைப்போல் செயலில் இறங்கினார்… ஊர் பெரிய மனிதர்களைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தினார். வீட்டு வாசலில் பந்தல் கால் நட்டு. கொட்டகை போட்டார்… வாழை மரம் கட்டினார்… வீடு விழாக்கோலம் பூண்டது… பக்கத்து டவுனிலிருந்து… அவரது மகளும் மருமகனும் பேரப்பிள்ளைகளும்… உறவுக்காரர்களும் வந்து நிறைய… வீடு… கல்யாணக் கோலம் பூண்டது. 

அத்தியாயம்-14

அன்பே! நான் உன்னடிமை…
நீயின்றி நானில்லை… 

“தனா…” 

“என்னடா…”

“சாருலதா இன்றைக்கும் ஆஃபீஸ் வரவில்லை…”

தனஞ்ஜெயனுக்கும் அது தெரியும். அவன் மனதிற்குள் அதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தான். இருந்த போதும் கிருஷ்ணனிடம்… அலட்சியமான முகபாவனையுடன் பதில் சொன்னான். 

“அவளுக்கு லீவு நிறைய இருந்திருக்கும். லீவு போட்டிருப்பாள். அதைப்பற்றி உனக்கும்… எனக்கும் என்னடா வந்தது…?” 

“எனக்கொன்றும் வரவேண்டிய அவசியமில்லை… ஆனால் உனக்கு ஏன் கவலை வரவில்லை?” 

“இதில் கவலைப்பட என்ன இருக்கிறது…?” 

“எதுவுமே இல்லையா…? தனா அவள் மெடிகல் லீவு போட்டிருக்கிறாள்… முழுதாக ஒரு மாதம்… இது உனக்குத் தெரியுமா… இல்லை… தெரியாதா…?” 

தனஞ்ஜெயனுக்கு அது தெரியாது… அவன் மனம் தவித்தது… முழுதாக ஒரு மாதம் அவள் வரமாட்டாளா…? அவளில்லாமல்… அவள் குரலைக் கேட்காமல்… அவள் முகத்தைப் பார்க்காமல்… அவனால் இருக்க முடியுமா…?

“என்னடா பேசாமல் இருக்கிறாய்…?” 

“என்னை என்ன செய்யச் சொல்கிறாய் கிருஷ்…”

“பேசுடா… அவளோடு பேசு… என்ன ஆனதென்று கேளு… அது உன் கடமைடா…” 

“ஏன்… அவள் பேச மாட்டாளா…?” 

“இது ஈகோ பார்க்கும் நேரமாடா…?” 

“இது ஈகோ இல்லை கிருஷ்… நான் பாட்டுக்கு நிம்மதியாய்… ஜாலியாய் இருந்தேன்… அவள் வந்து காதல் சொன்னாள். என் நிம்மதியே போச்சு… காதல் சொன்னவளுக்கு… அந்தக் காதலைக் காப்பாற்றணும்கிற பொறுப்பு இருக்கணுமா… இல்லையா…?” 

“அவள் வீட்டில் உன்னைப் பற்றிச் சொல்லயிருக்கிறாளேடா… உன்னைப் பெண் கேட்டு வரச் சொன்னதும் அவள்தானேடா…?”

“அதுதான் அவள் செய்த பெரிய தப்பு… அவளுடைய வீட்டு ஆண்களின் குணம் தெரிந்த பின்னாலும்… அவர்களைச் சமாளிக்காமல்… அவசரமாய் என்னை வரச்சொல்லி விட்டாள்…” 

“அவள் அப்பாவைப் பற்றி உன்னிடம் சொல்லியிருக்கிறாள் தனா… நீ… ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’னு… வாக்குக் கொடுத்திருக்கிறாய்… இதை உன் வாயாலேயே என்னிடம் சொன்னாய்…” 

“அந்த மனுசன் இப்படி மட்டம் தட்டுவான்னு யார்டா நினைத்துப் பார்த்தது…?” 

“அவர் செய்த தவறுக்கு சாருவைப் பொறுப்பாக்கி நீ திட்டி விட்டு வந்தது உன் தப்புடா தனா…” 

“நான்தான் கோபத்தில் திட்டினேன்… அவள் எப்போதும் போல் ஆஃபீஸ் வந்து… என்னிடம் வந்து பேசி சமாதானப் படுத்தியிருக்கலாமில்லையா…? அதை விட்டுவிட்டு… லீவைப் போட்டு… வீட்டுக்குள் அடைந்து கொண்டால் என்ன அர்த்தம்…?” 

சாருலதா வீட்டிற்குள் அடைந்து கொள்ளவில்லை என்பது… ரமணனும்… கங்காதரனும்… அலுவலகத்திற்குள் வந்து தனஞ்ஜெயனின் முன்னால் நின்று விசாரித்த போதுதான் அவனுக்குத் தெரிந்தது. 

“சாருலதா எங்கே…?” கங்காதரன் கண்கள் சிவக்கக் கேட்டார். 

“இது என்னங்க… அபத்தமாய் கேட்கறீங்க… உங்க மகள் எங்கேன்னு உங்களுக்குத்தானே தெரியும்… எங்களுக்கென்ன தெரியும்…?” கிருஷ்ணன்… தனஞ்ஜெயனுக்குப் பதில்… அவனே பேசினான். 

“ஹலோ… நீங்க யாருங்க…?” ரமணன் முஷ்டியை மடக்கினான். 

“மிஸ்டர்… இது எங்கள் ஆஃபீஸ்… இங்கே வந்து உதார் விட்டிங்கன்னா… வீட்டுக்கு ஒழுங்காய் போய் சேர மாட்டீங்க…” கிருஷ்ணன் தன் சட்டையின் கையை மடக்கி விட்டுக் கொண்டான். 

“கிருஷ்ணா… பொறுடா… மிஸ்டர் ரமணன்… உங்கள் தங்கை எங்கேன்னு ஏன் என்னிடம் வந்து கேட்கறீங்க? அவள் இரண்டு நாளாய் லீவு போட்டிருக்கிறாள். அது மட்டும்தான் எனக்குத் தெரியும்… வேறு எதுவும் தெரியாது…” தனஞ்ஜெயன் கிருஷ்ணனை ஒதுக்கி விட்டு… முன்னால் வந்து நின்றான். 

“அவள் லெட்டர் எழுதி வைத்து விட்டு… வீட்டை விட்டுப் போய் விட்டாள். உங்களிடம் வராமல், வேறு எங்கே அவள் போயிருக்க முடியும்…?” ரமணன் முறைத்தான். 

“வாட்…?” தனஞ்ஜெயன் அதிர்ந்து விட்டான். 

“சாருலதா வீட்டில் இல்லையா…? அவள் எங்கே போனாள்? சொல்லி விடு… இல்லாவிட்டால் உன்னை சும்மா விட மாட்டேன்…” பாய்ந்து ரமணனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து விட்டான் தனஞ்ஜெயன். 

“டேய்… என் தங்கையை எங்கேயோ ஒளித்து வைத்து விட்டு என்னிடம் டிராமா போடுகிறாயா…? எங்கேடா என் தங்கை…?” பதிலுக்குக் கத்தியபடி அவனுடன் கட்டிப் புரண்டான் ரமணன். 

அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்கள் வந்து பிரித்து விட… இருவரும் ஆளுக்கொரு பக்கமாய் நின்று கத்திக் கொண்டிருந்த போது… தனஞ்ஜெயனின் செல்ஃபோன் ஒலித்தது… 

எடுத்துப் பேசியவனின் ஆவேசம் அடங்கி விட்டது… அவன் முகத்தின் ஒளிர்வைக் கண்ட கிருஷ்ணன் ஆவல் தாங்க மாட்டாமல்… 

“என்னடா தனா…?’ என்று கேட்டான்… 

அவனுக்கு பதில் சொல்லாமல் ரமணனின் பக்கம் திரும்பிய தனஞ்ஜெயன்… சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொண்டான். 

“ஏய்ய்… இப்பக் கேட்டுக்கடா… உன் தங்கை எங்கே இருக்கிறாள் என்பதை…”

“என்னது… என் தங்கை இருக்குமிடம் உனக்குத் தெரியுமா…? எங்கேடா அவள்?” 

“அவள் என வீட்டில் இருக்கிறாள்…” 

“உன் வீட்டிலா…? அங்கே போய்ப் பார்த்து விட்டுத்தானே இங்கே வருகிறோம்… உன் வீடுதான் பூட்டியிருந்ததே…” 

“இது நான் குடியிருக்கும் வாடகை வீடு… அது என் கிராமத்தில் இருக்கும் என் சொந்த வீடு…”

“என்ன…? சாருலதா… உன் கிராமத்திற்குப் போய் விட்டாளா…?” 

“ஆமாம்… அவள் போக வேண்டிய இடத்திற்குப் போய்விட்டாள். தைரியமிருந்தால்… உன் ஆள்படை… அம்பை என் கிராமத்துப் பக்கம் அனுப்பிப்பார்… பஞ்சு பஞ்சாகப் பறக்கவிட்டு விடுவாங்க… இனி அவள் உன் தங்கையில்லை… என் பெண்டாட்டி…” 

தனஞ்ஜெயனின் முகத்தில் வெற்றிப் பெருமிதம் இருந்தது… தன்னை நேசித்தவளின் துணிவைக் கண்ட கர்வம் இருந்தது. தனக்காக அவள் வீட்டைத் துறந்து தன் வீட்டுப் படியில் ஏறிவிட்டாள் என்ற திமிர் இருந்தது… இத்தனைக்கும் மேலாக… தன் காதலி… என்றுமே… தன்னைவிட்டுப் போகமாட்டாள்… தன்னையும் அவளை விட்டுப் போக விடமாட்டாள் என்ற தன்னம்பிக்கை இருந்தது. 

அத்தியாயம்-15

நானின்றி நீயில்லை…
நீயின்றி நானில்லை…
 

தனஞ்ஜெயனும்… கிருஷ்ணனும்… இன்னும் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் சிலரும் சேர்ந்து… டாடா சுமோ வண்டியை எடுத்துக் கொண்டு ஊரை நோக்கிப் பறந்தார்கள். ஊர் எல்லையிலேயே…ஒலி பெருக்கியில் பாடல் ஒலிக்கும் சத்தம்… காதைப் பிளந்தது. 

“மணமகளே… மருமகளே… வா… வா…
உன் வலதுகாலை எடுத்துவைத்து வா… வா…
குணமிருக்கும் குலமகளே வா… வா…
தமிழ் கோயில் வாசல் திறந்து வைத்தோம் வா… வா…”

தனஞ்ஜெயனின் உடல் சிலிர்த்தது… இந்தப் பாடல் ஒலிப்பரப்பாத திருமண விழாக்களே… அந்த ஊரில் நடந்ததில்லை… ஒவ்வொரு திருமணத்தின் போதும் இந்தப் பாடலை கேட்டிருக்கிறான் அவன். ஆனால்… அன்று உணராத ஆயிரம் அர்த்தங்களை இன்று உணர்ந்தான் அவன். 

அவர்களது வீட்டு வாசலில் கார் நின்றது. அவர்கள் எல்லோரும் திமுதிமுவென இறங்க… ஒரு சிறுமி, 

“மாப்பிள்ளை வந்தாச்சு…” என்று கூவிக் கொண்டே வீட்டிற்குள் ஓடினாள். 

“அப்படியே நில்லுப்பா…” ஆரத்தி கரைத்துக் கொண்டு வந்த உறவுக்காரப் பெண்மணி ஒருத்திக் கூறினாள். 

ஆரத்தி எடுத்து முடிந்ததும் தனஞ்ஜெயன் அவசரமாய் வீட்டுக்குள் சென்றான். சண்முகம் எதிரே வந்தார். 

“சாருலதா எங்கேப்பா…?” 

“இவ்வளவு பாசம் வைத்திருக்கிறவன்… ஏண்டா அவளை வேண்டாமுன்னு சொன்னே?” 

“அது… ஒரு கோபத்தில்…” 

“என்னதான் கோபம் வந்தாலும்… உன்னை நம்பி நிற்கும் பெண்ணிடம் அப்படி ஒரு வார்த்தையை நீ சொல்லலாமா…?” 

“தப்புத்தான்ப்பா…” 

“இதை என் மருமகளிடம் சொல்லு… அவள் மன்னிக்கறாளான்னு பார்ப்போம்…” 

“இப்போதே சொல்லி விடுகிறேன்… எங்கே அவள்?”

“அலையாதே… போய் பட்டு வேஷ்டி சட்டையைப் போட்டுக் கொண்டு வா…” 

“எதற்குப்பா…?” 

“என் மருமகளின் கழுத்தில் தாலி கட்டத்தான்…”

“இப்போதேவா…?” 

“உன் மாமனாரும்… மச்சினரும் போலீஸுக்குப் போயிருக்கிறாங்க… அவங்க வருவதற்கு முன்னால் கல்யாணத்தை முடித்து விடணும்னு நாங்க ஊரே ஒன்று கூடி வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம். நீ என்னன்னா… ஆடி அசைஞ்சுகிட்டு இப்பவேவான்னு கேட்கிற… இப்பத் தாலி கட்டாமல்… வேறு எப்போ தாலிகட்டப் போகிற…?” 

“ஒரு நொடியில் வந்து விடுகிறேன்ப்பா… இதுக்கு எதுக்கு இன்னொரு நாளைப் பார்க்கணும்?”

அவன் ஓடிய வேகத்தைக் கண்டு சண்முகம்… மீசைக்குள் சிரித்துக் கொண்டார்… 

தனஞ்ஜெயன் மாப்பிள்ளைக் கோலத்தோடு… வீட்டின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த மண மேடையில் அமர்ந்துவிட்டான். சாருலதா வராததனால்… அவன் கண்கள் அவளைத் தேடித் துழாவின… 

அவள் மெல்ல… மற்ற பெண்கள் புடைசூழ வந்து… அவனருகில் அமர்ந்தபோது… அவன் அவள் முகம் பார்க்க முயன்றான். அவள் குனிந்த தலை நிமிரவில்லை. அவன் ஏமாற்றத்துடன் நிமிர்ந்து அமர்ந்தான். 

“கெட்டி மேளம்… கெட்டிமேளம்” ஒருவர் உரக்கச் சத்தம் போட… நாதஸ்வர ஓசையுடன் கெட்டி மேளம் பலமாய் ஒலித்தது. 

தனஞ்ஜெயன் தாலியை எடுத்து சாருலதாவின் கழுத்தில் கட்டி… மூன்று முடிச்சுகளைப் போட்டான். 

“பொண்ணு மாப்பிள்ளைக்கு… நலங்கு வையுங்க…” வரிசையில் எல்லாரும்… சந்தனத்தை தீற்றி வாழ்த்திவிட்டுப் போக… பெரியவர்களின் பாதம் பணிந்து எழுந்ததில்… மணமக்களுக்கு இடுப்பு வலித்தது. 

“குலதெய்வம் கோயிலுக்கு போகணும்… வாங்க…” அனைவரும் கார்களிலும்… கால்நடையாகவும் ஊர் எல்லையில் இருந்த கோயிலுக்குச் சென்று வணங்கிக் கொண்டு இருந்தபோது… போலீஸ் ஜீப் அங்கு வந்து நின்றது… அதில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர், சண்முகத்தை அணுகினார். 

போலீஸ் ஜீப்பின் பின்னால் வந்த காரில் இருந்து கங்காதரனும், ரமணனும் இறங்கினார்கள். 

“என்ன இன்ஸ்பெக்டர் சார்… எங்கள் ஊருக்குள்ள புதுசாய் போலீஸ் காலடி வச்சிருக்கு…?” 

“என்ன சண்முகம் தெரியாதது போல கேட்கறீங்க…இவங்க மகளை நீங்க கடத்திக்கிட்டு வந்து விட்டதாக இவங்க புகார் கொடுத்திருக்காங்க…” 

“பாருங்க சார்… இதுதான் என் மருமகள்… வயது இருபத்து ஒண்ணாகுது… கவர்ன்மென்ட் வேலை பார்க்குது… மேஜரானப் பொண்ணு. இப்பத்தான் இதுக்கும் என் மகனுக்கும்… ஊரைக் கூட்டிக் கல்யாணம் நடத்தி வைத்தோம்… ரிஜிஸ்டரும் பண்ணிவிட்டோம். இது கிட்டேயே கேளுங்க… இந்தப் பெண்ணை நாங்க கடத்திக்கிட்டு வந்தோமா… இல்லை… இது சுய விருப்பத்தோடு காதல் கல்யாணத்தை எதிர்த்த பெத்தவங்களை எதிர்த்துக்கிட்டு – வீட்டை விட்டு தானாய் வெளியே வந்ததான்னு இப்பவே கேளுங்க…” 

சாருலதா வாயைத் திறக்குமுன்னால்… மாலையும் கழுத்துமாய் நின்ற மகளைக் கண்ட கங்காதரனின் மனம் மாறிவிட்டது. அங்கே சூழ்நிலையும் மாறிவிட்டது. 

“ஏம்மா… இவ்வளவு பிடிவாதமாய் நீ இருப்பேன்னு தெரிந்திருந்தால் நானே உன் கல்யாணத்தை முன்னே நின்று நடத்தியிருப்பேனே…” என்று கங்காதரன் கண்கலங்க…”இப்ப என்ன கேட்டுப் போச்சு மச்சான்… உங்க சார்பாய்… நான் நின்று நடத்தி வைத்து விட்டேன். எப்படியிருந்தாலும் வாழப் போவது நம்ம பிள்ளைகள் தானே! அதுகளை மனசார வாழ்த்துங்க…” என்று சொந்தம் கொண்டாடினார் சண்முகம். 

“மாப்பிள்ளை…” என்று ரமணன் தனஞ்ஜெயனை ஆரத் தழுவிக் கொள்ள… 

“மச்சான்..” என்று பதிலுக்கு கட்டித் தழுவிக் கொண்டான் தனஞ்ஜெயன். 

“இதைப்பாருடா… கடைசியில் எதிரிகளாய் ஆகிப்போனது நாமதாண்டா…” என்று பல்லைக் கடித்தார்கள் கிருஷ்ணனும்… அவனது நண்பர்களும். 

மணமக்கள் அன்று இரவு சண்முகத்தின் வீட்டிலேயே தங்கி விடுவதென்றும்… மறுநாள் மறுவீட்டிற்கு முறைப்படி அழைக்க… காரை எடுத்துக்கொண்டு… மனைவியோடு ரமணன் வருவானென்றும் பெண்ணும்… மாப்பிள்ளையும் மறு வீட்டு விருந்திற்குப் போய்… பெண் வீட்டாரோடு சமரசம் ஆகிவிடுவதென்றும்… பேச்சு வார்த்தையில் முடிவாக… கங்காதரனும்… ரமணனும் கிளம்பி விட்டார்கள். 

மாடியறையில்… தனிமையில் காத்திருந்தான் தனஞ்ஜெயன்… தாலிகட்டியும் இன்னும் சாருலதாவின் முகம் பார்த்து ஒரு வார்த்தை பேச முடியவில்லையே என்று அவனுக்குத் தாபமாக இருந்தது… 

கொலுசு சத்தம் கேட்க… திரும்பிப் பார்த்தான்… சாருலதா உள்ளே வந்தாள்… எழுந்து சென்று கதவைத் தாழிட்ட தனஞ்ஜெயன் தாபத்துடன் அவளை நெருங்கினான். அவள் முகம் திருப்பிக் கொண்டாள்… தனஞ்ஜெயனின் புருவங்கள் மேலேறின… அவன் முரட்டுத் தனமாய் அவளை நெருங்கி… அவள் முகம் பற்றித் தன்பக்கம் திருப்பினான். 

“ஏண்டி.. என் முகத்தைப் பார்க்க உனக்குப் பிடிக்கவில்லையா?”

“என்னிடம்… நீங்கள் ஒன்றும் பேச வேண்டாம்…”

“இதற்கா… என்னிடம் தாலி வாங்கிக் கொண்டாய்…?”

“அது… என் காதலை நிரூபிக்க… நீங்கள் என்னை விட்டுப் போனாலும்… நான் உங்களை விட்டுப் போகமாட்டேன் என்பதை உங்களுக்கு உணர்த்த…”

“ஸோ… உன் காதலுக்காக மட்டும்தான் என்னிடம் தாலி வாங்கிக் கொண்டாய்… என்னோடு வாழ்வதற்காக இல்லை…” 

“ஆமாம்…” 

“ஓஹோ… இந்தக் கல்யாணத்தில் உன் பக்கத்தில் பச்சை சேலை கட்டிக் கொண்டு நின்றிருந்தாளே ஒருத்தி…”

“அவளுக்கு என்ன?” 

“அவள் என் அத்தை மகள்… என் மேல் அவளுக்கு கொள்ளைப் பிரியம்… இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப் பட்டாலும் பரவாயில்லை உங்களுடன்தான் வாழ் வேன்னு இப்போதுதான் சொல்லிவிட்டுப் போனாள்.” 

“அவள் சொன்னால்… நீங்கள் கேட்டுக் கொள்வதா…? எவ்வளவு தைரியமிருந்தால் என்னிடமே இதைச் சொல்வீங்க?” 

சாருலதா அவன் மார்பினில் குத்த… அவன் சந்தோசமாய் அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டு பலமாய்ச் சிரித்தான். அவன் அணைப்பினில் ஒன்றியவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டு கட்டிலில் சரிந்தான்… சாருலதா… புயலில் சிக்கிய பூவானாள்… 

அவள் விரும்பியவனின் கைகளுக்குள் விருப்பத்துடன் சிக்குண்டாள். எல்லைகளைத் தொட்டுத் திரும்பிய தனஞ்ஜெயனின் திருப்தியுடன் விலகிய போது… அவனை விலகவிடாமல் அணைத்து, அவனது காதோரம் அவள் சொன்னாள்… 

“நீயின்றி… நானில்லை…” 

(முற்றிற்று)

– நீயின்றி நானில்லை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 2011, திருமகள் நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *