அவள் ஒரு கர்நாடகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2023
பார்வையிட்டோர்: 2,760 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

கண்ணாவின் கடைவிழிகளில் மலரத் துடிக்கும் மொட்டுகளைப் போலக் கண்ணீர்த் துளிகள் ததும்பி நின்றன. ஒரு நாள் கூட கண்ணா இவ்வளவு மனச் சங்கடத்தைத் தாங்கிக் கொண்டிருந்ததில்லை. அன்று மட்டும் அவள் அடங்காத் துயரத்திற்கு ஆளாகித் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள்.

“கண்ணா!’ முகப்புக் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

இந்தக் குரலைத்தான் கண்ணா நெடுநேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அந்தக் குரல் பிருந்தாவனத்திலிருந்த கண்ணனின் குரலைப் போல் அவள் மனதுக்குப்பட்டது. புருஷனின் குரல் எவ்வளவுதான் கரகரப்பாக இருந்தாலும் மனைவிக்கு அதுதானே புல்லாங்குழல் இசை!

“என்ன கண்ணா ஒரு மாதிரியாக இருக்கிறாய்?”

கண்ணா பதில் பேசாமல் தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டாள்.

கண்ணப்பன் அவளைத் தழுவியபடி அழைத்துக் கொண்டு உள்ளே போய் விட்டான்.

உள்ளே போனதும் படுக்கை அறையிலுள்ள இரட்டைக் கட்டிலில் அவள் குப்புறப் படுத்துக்கொண்டு கோ என்று கதறினாள்.

“எனன கண்ணா இதெல்லாம்? உன் அத்தைக்குத் தெரிந்தால் ஒரு மாதிரியாகப் பேசுவார்கள். விஷயத்தைச் சொல்லு!”

“எத்தனையோ முறை ஜாடை மாடையாக உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. இன்றைக்கு வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டார்கள்.

கண்ணாத்தாள் அடிக்கடி ஏன் கண்கலங்கி நிற்கிறாள்? இதற்காக இருக்குமோ, அதற்காக இருக்குமோ என்று குழம்பிக் கொண்டிருந்த கண்ணப்பனுக்கு அன்று தெளிவாகப் புரிந்து விட்டது.

“உன் மனக்குறை லேசானதில்லை கண்ணா! உன்னைப் போன்றவர்களுக்காகத்தான் ‘சுவீகாரம்’ என்ற முறையை நம் ஜாதிக்காரர்கள் பின்பற்றி வருகிறார்கள்!” என்று கண்ணப்பன், கண்ணாவுக்கு ஆறுதல் சொன்னான். சமாதானம் சொல்லும் கணவனது ஆறுதல் மொழிகள் அந்த நேரத்திற்கு வேண்டுமானால் சங்கீதமாகத் தெரிய லாம். ஆனால் அதையே மனக்குறை அகற்றும் மாமருந்தாக எந்தப் பெண்ணும் எடுத்துக்கொள்வதில்லை.

கோயிலூர்!

ஒரு பெண் தெய்வத்தின் ஆலயத்தைச் சுற்றி அந்த ஊர் அமைந்திருந்தது. செட்டிநாட்டில் பெரும் பாலான சிற்றூர்கள் அப்படித் தான் அமைந்திருக்கும்.

கோயிலின்முன் வாசல் மண்டபம் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கல் தூண்களால் நிறுவப் பட்டிருந்தது. கோடைகாலமாக இருந்தாலும் சரி, மழை காலமாக இருந்தாலும் சரி – அந்த ஊர் மக்கள் ஓய்வு நேரத்தை அந்தக் கல் மண்டபத்தில் தான் கழிப்பார்கள்.

கோயிலுக்கு எதிரே ஒரு அழகான தெப்பக் குளம். செம்மண்கலந்த சுவையான அந்த நீர்த்தடாகத்தின் நடுவே ஒரு மையமண்டபம். ஒரு பக்கத்திலே சிறிய கடை வீதி; இன்னொரு பக்கத்திலே பெரிய திறந்தவெளி மைதானம். அந்தக் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லா விட்டாலும் அருகில் வந்து பார்ப்போருக்கு அந்தப்பெண் தெய்வத்திற்கு ஏதோ ஒரு பூர்வீக வரலாறு இருப்பது போல்வே தோன்றும். மற்ற இந்துக் கோயில்களில் இருப்பதுபோல இந்தக் கோயிலில் கோயிலில் கம்பத்தடி கிடையாது. நந்தி இல்லை. கோயில் வாசல் கதவைத் திறந்ததும் மூலஸ்தானத்தைத் தரிசித்து விடலாம்.

இந்தக் கோயில் இந்து அறநிலையத் துறைக்குக் கட்டுப்பட்டதென்றாலும், சிவகங்கை சமஸ்தானத்தின் நேரடி மேற்பார்வையில் இயங்கி வந்தது.

இந்தத் தெய்வத்திற்கும் நிறைய அணிமணிகள் ண்டு! வைகாசி விசாகம் புகழ் பெற்றது. விசாகத் திருவிழாவை நாட்டுக் கோட்டை வம்சத்தார் தங்களுக்குக் கிடைத்த தேசீயத் திருவிழாவாக எண்ணி வீட்டுக்கு வீடு விருந்து வைத்து ஆரவாரத்துடன் கொண்டாடுவார்கள்.

இந்த ஊரில் கூரை வீடுகளைவிட கெட்டியான மச்சு வீடுகளே அதிகம். பெரும்பாலானவர்களுக்கு வெளி நாட்டு வியாபாரம். சிலருக்கு பர்மாவிலே வட்டிக்கடைன் வேறு சிலருக்கு சிங்கப்பூரிலே ஜவுளிக்கடை, மிகுதிப் பேருக்கு சுமித்ரா, ஜாவா பகுதிகளில் கமிஷன் கடைகள்.

நாளடைவில் பர்மா சுதந்திரம் அடைந்தது. பர்மாவின் எழுச்சி, அங்கு வாழ்ந்த தமிழர்களின் தொழி லுக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக அமைந்து விட்டது. அதனால் பர்மா தமிழர்கள் வாழ்க்கையில் நொடித்துப் போனார்கள். பர்மா பணம் இந்தியாவிற்கு அனுப்புவது தடை செய்யப்பட்டது.

இதனால் தமிழ் நாட்டிலுள்ள சிங்கப்பூர் கடைக்காரர்கள் வாழ்விழந்த பர்மாக் கடைக்காரர்களை ஏளனமாகக் கருதினார்கள், சிங்கப்பூர் கடைக்காரர்கள் கை ஓங்கியது. மேலும் மேலும் அவர்கள் சொத்துக்களை வாங்கிக் கொண்டே வந்தார்கள். அதற்கு நேர்மாறாக பர்மாக்கடைக்காரர்கள் குடியிருந்த வீடுகளையே இடித்து விற்கத் தலைப்பட்டார்கள். மிகவும் கஷ்டப்பட்டு பர்மாவிலே இருந்து கொண்டுவந்த சித்திர வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட வண்ண வண்ண தேக்குமர உத்திரங்களைக் கொண்ட வீடுகள் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்து விட்டன. சிங்கப்பூர் கடைக்காரர்கள் மலிவாக அவைகளை வாங்கி புதிய மோஸ்தரில் வீடுகளைக் கட்டினார்கள் புதிய கார்கள் வீட்டுக்கு வீடு நின்றன. பாவம், பர்மாக் கடைக்காரர்கள் பல்லுப் போன பழைய காலத்துப் பந்தயக் குதிரைகளைப் போல மனமொடிந்து போனார்கள். தாங்கள் பர்மாவில் இருந்தோம், வாழ்ந்தோம் என்பதற்கு அடையாளமாக அவர்கள் தங்கள் கைகளில் ஒரு பவள வேரையும், காலில் மரக்கட்டைச் செருப்பையும் தான் அணிந்திருந்தார்கள்.

ஒரு காலத்தில் ரங்கோன் மொகல் ரோட்டில் மூன்றடுக்கு மாளிகையில் வாழ்ந்தவர்கள் இன்று கோயிலூரில் அதே கல்மண்டபத்தில், மேல் துண்டைச் சுற்றித் தலையணை யாக்கி வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

இதைவிட கோயிலூருக்கு இன்னொரு துர்பாக் கியம் ஏற்பட்டு விட்டது. செல்வ நிலையை யொட்டி அந்தக் கிராமம் செயற்கையாக இரண்டு பகுதிகளாகப் பிரிந்து விட்டன. ஒரு பகுதியில் சிங்கப்பூர் கடைக்காரர் கள் புதிய வீடுகளிலும் அடுத்த பகுதியில் பர்மாக் கடைக் காரர்கள் அவர்களது பூர்வீக வீடுகளிலும் வாழ்ந்து வந்தார்கள். இதனால் வெளியூர் வியாபாரிகள் யாரும் பர்மாக் கடைக்காரர்கள் இருக்கும் பழைய வலவிற்கு வருவதில்லை. காய்கறிக்காரன், மளிகைக் கடைக்காரன், உப்பு வண்டிக்காரன் உட்பட எல்லோருமே புதிய வலவிற்குத்தான் போய் வந்து கொண்டிருந்தார்கள். பழைய வலவிலே இருந்த பர்மாக் கடைக்காரர்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை.

வாழ்க்கையில் என்னதான் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும் உறவும், உரிமையும் அழிந்துபோய் விடுமா? தாய்மாமன், சகோதரி, சம்பந்தி என்ற உறவு முறை அற்றுப்போய்விடாதல்லவா? ரத்தபாசம் என்பது சமையலறையில் பிடித்த கரிமாதிரி! எத்தனைமுறை சுண்ணாம்படித்தாலும் சுவரில் படிந்து போயிருக்கும் புகைக்கரியை மாற்றவே முடியாது!

தமிழ் ஆராய்ச்சியில் கற்றுத் தேர்ந்த கண்ணப்பனுக்கு இது தெளிவாகத் தெரிந்த ஒன்று. பர்மாவின் வீழ்ச்சியினால் அவனது மாமனார் வீடு மிகவும் நொடித்துப் போய்க்கிடந்தது. கண்ணப்பன் திருமணத்தின்போது அவன் மாமனார் வீடு இருந்த நிலை இப்போதிருக்கும் நிலை வேறு. நாலு முகப்பு நாராயணன் செட்டியார் என்ற புகழ் அவன் மாமனாருக்கு இருந்தது. ஆம்; நாராயணன் செட்டியார் வீட்டுக்கு நாலு தலை வாசல்கள் இருந்தனவாம்! ஐந்தாண்டு காலத்திற்குள் சர சர வென்று அவர் குடும்பம் சரிந்து விட்டது. அதற்காக அவர் மரியாதையை இழந்து விடவில்லை. மற்றவர்களைப் போல அவர் கோயில் கல்மண்டபத்து வாசியாகி விடவில்லை. கிராமத்திலே விளையும் நெல்லை வைத்து குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.

நாராயணன் செட்டியார், கண்ணாவின் கல்யாணத்தை தடபுடலாக நடத்தினார். நாதசுரக் கச்சேரி முதல் நாட்டியக் கச்சேரி வரை, கண்ணாவின் திருமணத்தை அமர்க்களப் படுத்தின. இன்று நாராயணன் செட்டியார் குடும்பம் நசித்துப் போய் விட்டது என்பதற்காக கண்ணப் பனுக்கும் கண்ணாவுக்குமுள்ள பந்தமும், பாசமும், ரத்தக் கலப்பும் வற்றிப் போய் விடுமா?

எந்த மாமனார் ஒரு காலத்தில் கண்ணப்பனுக்கு வலிய வலிய வந்து அள்ளி அள்ளி கொடுத்தாரோ எந்த மாமனார் ஒரு காலத்தில் மகள் கண்ணாவுக்கு வெள்ளியிலும், வெண் கலத்திலும் வண்டி வண்டியாகப் பாத்திரங்களை அனுப்பிவைத்தாரோ அந்த மாமனார் இன்று விடியற் காலையில் எழுந்ததும் வேப்பங்குச்சியைப் பல்லில் வைத்துத் தேய்த்துக் கொண்டு முகட்டையே பார்த்துக் கொண்டிருப்பது கண்ணப்பனை வாட்டத்தான் செய்தது.

கண்ணப்பன் குடும்பத்திற்கு மூத்தவன். அவன் தான் தலைமகன். ஒரு குடும்பத்தில் மூத்தவனுக்கே குழப்பம் ஏற்பட்டு விட்டால் அந்தக் குடும்பத்திலே குதூகலம் இருக்காது. அந்த வீடே உரமில்லாத பயிரைப் போல், உவட்டுத் தரையில் குன்றி நிற்கும் தென்னையைப்போல் பளபளப்பை இழந்து விடும். எல்லாம் தெரிந்த கண்ணப்பனுக்கு இது தெரியாமல் இல்லை. அவன் ஒரு பட்டதாரி. தமிழிலும் பாண்டித்தியம் பெற்றவன். இருந்தாலும் அவன் உள்ளத்தின் ஒரு மூலையில் ‘குறுகுறுப்பு’ இருந்து கொண்டு தானிருந்தது. அதனால் அவன் பலவீனமடைந்துவிட்ட வனைப் போல் தோன்றலானான். உடல் பலவீனமடைந் தால் மருந்து சாப்பிடலாம். மனம் பலவீனமடைந்தால் எந்த மருந்தைச் சாப்பிடுவது? ஆயிரம் களம் நெல்லை ஒரு பெரிய களஞ்சியத்திலே போட்டுப் பூட்டி விடலாம். அதற்குள்ளே ஒரு அந்து புகுந்து விட்டால் யாராலும் அந்தக் களஞ்சசியத்தைக் காப்பாற்ற முடியுமா?

அன்று கண்ணப்பனுக்குத் தூக்கமே வரவில்லை. மல்லாந்து படுத்தபடி எப்போது விடியும் என்றே விழித்துக் கொண்டிருந்தான். அவனது அறையின் கிழக்கு ஜன்னல் வழியாக சிறுகச் சிறுக வெளிச்சம் வந்து கொண் டிருந்தது. அறைக்குள்ளே இருந்த டைம்ப்பீஸ் கடிகாரம் அலறியது. கண்ணப்பன் எழுந்து சுவரில் மாட்டப்பட் டிருந்த மறைமலை அடிகள் படத்திற்கும் பாரதிதாசன் படத்திற்கும் வணக்கம் போட்டு விட்டு அடுத்த தாழ் வாரத்திற்குப் போய் அங்கே கிடந்த கர்லாக்’ கட்டையை எடுத்துச் சுற்ற ஆரம்பித்தான். அவன் தேகப்பயிற்சி செய்ய ஆரம்பித்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. இதற்குள்ளாக கண்ணா அந்த கொண்டு வந்து இடத்திற்கே காபியைக் விட்டாள். அவள் அங்கு வருவது எப்போதும் இல்லாத பழக்கம்; எப்போதுமே தேகப் பயிற்சி முடிந்து கண்ணப்பனாகக் கேட்ட பிறகு தான் கண்ணா காபியைக் கொண்டு வருவாள்; அன்றும் மட்டும் கண்ணா முந்திக் கொண்டாள்.

“இன்னுமா இந்தப் பழக்கம் போகவில்லை? நமக்கு எதற்கு இதெல்லாம்?”

“நீ சொல்லுவதும் சரி தான் கண்ணா. ஒரு நல்ல பழக்கத்தை திடீரென்று நிறுத்தி விட்டால் உடல் கெட்டுப் போய் விடுமே என்று யோசிக்கிறேன். அதுவும் போக, ஒரு நல்ல பழக்கம் போய் புதிதாக ஏதாவது கெட்ட பழக்கம் வந்து உடம்பு கெட்டு விடக் கூடாதே என்ற பயமும் எனக்கு இருக்கிறது!”

“உடம்பினாலே ஒன்றுமில்லை” என்றாள் என்றாள் கண்ணா. இது சாதாரண பதில்தான். ஆனால் இந்த பதில் கண்ணப்பன் உள்ளத்தில் முள் தைப்பது போல் பட்டது.

“நீ சொல்வது எனக்கும் புரிகிறது கண்ணா! உனக்கும் எனக்கும் இப்போது இளமையா போய் விட்டது? எத்தனையோ பெண்களுக்கு நாற்பது வயதுக்கு மேலே குழந்தை பிறந்ததில்லையா?”

கண்ணப்பன், கண்ணாவுக்கு பதில் சொல்லி விட்டானே தவிர, அவன் மனதுக்கு பதில் சொல்லிக் கொள்ள அவனால் முடிய வில்லை.

கண்ணாத்தாளின் கண்களில் நீர் கோத்து விட்டது.

“அத்தை முன்னைப் போல இப்போது என்னோடு கலகலப்பாகப் பேசுவதில்லை. பெட்டகத்துச் சாவி,உக் கிராணச் சாவி எப்போதுமே என்னிடம் தான் இருக்கும். இரண்டு சாவிகளையும் அத்தை என்னிடமிருந்து நேற்று வாங்கிக் கொண்டார்கள்”.

“அம்மா,பாதுகாப்பிற்காக வாங்கிக் கொண் டிருப்பார்கள். வேறு எதுவும் காரணமிருக்காது” என்று கனிவாகச் சொன்னான் கண்ணப்பன்.

“நீங்கள் எப்போதுமே இப்படித்தான். எல்லாவற்றையும் மூடிமூடி மறைப்பீர்கள்.” என்று முணுமுணுத்தாள் கண்ணா.

“உனக்கு ஏதாவது காரணம் தெரிந்தால் சொல்லு ! அம்மாவை நானே கேட்கிறேன்” என்றான் கண்ணப்பன்.

“ஆறு வருஷமாக என்னிடமிருந்த சாவிக் கொத்து திடீரென்று ஏன் கைமாற வேண்டும்? பேரன் மேலே வந்த பிரியம் சின்ன மருமகள் மீது தாவிவிட்டது! இதுதான் காரணம்” – கண்ணா இவ்வளவு கடுப்பாக என்றைக்கும் பேசியதில்லை.

“விஷயத்தை இப்படி விளக்கமாகச் சொன்னால் தானே எனக்கும் புரியும் ? அம்மா உன்கிட்டே இருந்த சாவிக் கொத்தைப் பிடுங்கி மீனாவிடம் கொடுத்துவிடடார்கள்: அவ்வளவு தானே?”

“உங்களுக்கு இது சாதாரணமாகத் தெரியலாம்; ஆனால் எனக்கு அப்படி இல்லை!”

“உனக்கு அவமானமாகத் தெரிகிறது என்கிறாய்? அந்த அவமானமும் என்னால்தான் வந்தது என்று எனக்கு இடித்துக்காட்டுகிறாய்!”

கண்ணா இதற்குப் பதில் சொல்லவில்லை.

வாய்விட்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

“கண்ணா, உன் நோக்கமும் எனக்குப் புரிகிறது, என் அம்மாவுடைய மனமாற்றமும் எனக்குப் புரிகிறது. உனக்குக் குழந்தை இல்லாததால் உன் மீதுள்ள பிரிய மெல்லாம் மீனாவின் பக்கம் போய்விட்டது. அதற்குக் காரணம் அவளுக்குக் குழந்தை இருக்கிறது என்பது உனது மனக்குமுறல்! என் அம்மாவின் அன்பை இழந்ததற்கு நீ மட்டும் பொறுப்பாளி அல்ல. நானும் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியவன்தான்! இதில் எதற்கு ஒளிவு மறைவு எல்லாம்?”

“இருந்தாலும் அத்தை என்னை இவ்வளவு அசிங்கப்படுத்தியிருக்கவேண்டியதில்லை. நான் அவர்களை எவ்வளவோ மதித்தேன். மரியாதை செலுத்தினேன். அவர்கள் அதை வர வரப் பொருட்படுத்துவதே இல்லை. எல்லாமே மீனாதான் அவர்களுக்கு! அதனாலே மீனாவும் என்னை மதிப்பதில்லை. ‘அக்கா அக்கா!’ என்று அன்பொழுகப் பேசிய மீனா இப்போது ஜாடை பேசத் தொடங்கிவிட்டாள்”

“மீனா ஏழை வீட்டுப்பெண்; நம் குடும்பத்திற்குப் பொருத்தமானவள்; கருப்பாக இருந்தாலும் கவர்ச்சியாக இருக்கிறாள் என்று என் தம்பிக்கு மீனாவை முடித்துவைத்தவளே நீதானே!”

“அதையெல்லாம் இப்போது யார் நினைத்துப் பார்க்கிறார்கள்! மீனாவின் தாயும் தகப்பனும் நம்ம வீட்டுக்கு நடையாய் நடந்தார்கள். நீ சொன்னால் தான் உன் மாமி கேட்பாள் என்று என்னைக் கெஞ்சாக் குறையாகக் கேட்டார்கள். இப்போது அவளிடம் நான் படுகிறபாடு சொல்லத் தரமில்லாததாகிவிட்டது!”

“இதெல்லாம் ஒரு பெரிய குடும்பத்தில் நடக்கக்கூடிய சம்பவங்கள் தான்! அதற்காக உன் மனக்குறையை நான் மதிக்காமல் இல்லை கண்ணா!”

“எனக்குப் பிராப்தம் இவ்வளவுதான் என்று நினைத்து மீனாவின் பிள்ளையை என் பிள்ளையாக எண்ணி மகிழக்கூட அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். பிள்ளையைத் தூக்கிக்கொஞ்சினால் வேலைக்காரியை அனுப்பி குழந்தையைப் பிடுங்கி வைத்துக் கொள்கிறார்கள்”

கண்ணாவின் இந்தப் பிடியிலிருந்து கண்ணப்பனால் தப்ப முடியவில்லை.

“என்ன இருந்தாலும் நீ தான் மூத்த மருமகள். அதை யாராலும் குறைத்து விட முடியாது. மீனா எத்தனை பிள்ளைகளைப் பெற்றாலும் இந்த வீட்டில் உனக்குள்ள உரிமை அவளுக்கு வந்து விடுமா, அல்லது அவள்தான் உனக்கு மூத்தவளாகிவிடப் போகிறாளா?”

இதைத் தவிரவேறு சமாதானத்தை கண்ணப்பனால் சொல்ல முடியவில்லை.

“உங்கள் சமாதானம் உங்களுக்கு வேண்டு மென்றால் சரியாகப்படலாம். வயிறு எரிகிறது என்கிறேன், நீங்களோ – வாழைப் பழத்தைச் சாப்பிடு சரியாகிவிடும் என்கிறீர்கள்’’

“கண்ணா, நீ வருத்தப்படுவதிலே நியாயம் இருக்கிறது. ஆனால் உன் வருத்தம் உடனடியாகத் தீரக் கூடியதா? இதற்கு மருந்து கடைவீதியில் கிடைக்குமென்றால் என்ன விலை கொடுத்தும் வாங்கிவந்து விடுவேனே. ”

“இரும்புப் பெட்டியில் பணம் இருந்தால்தான் அதற்குப் பெயர் பெட்டகமாம்! இல்லாவிட்டால் அது வெறும் இரும்புதானாம். அத்தை அடிக்கடி இப்படி என்னை இடித்துக் காட்டிப் பேசுகிறார்கள்!”

“உனக்கிருக்கும் மனத்தாங்கல் எனக்கும் இருக்கிறது. ஆனால் உன்னைப் போல் என்னால் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லையே! பெண்கள் வீட்டுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் கொஞ்ச நாளில் கூடிக்கொள்வார்கள். அதுவே ஆண்கள் மத்தியில் வந்துவிட்டால் பாகப் பிரிவினை வரை போய்த்தான் நிற்கும்! இந்தப் பிரச்சினையால் எனக்கும் தம்பிக்கும் அபிப்பிராய பேதம் வந்துவிடக் கூடாதே என்றுதான் பார்க்கிறேன். எதற்கும் ஒரு முடிவு வரும். அதுவரை காத்திருப்போம்” என்று கண்ணப்பன் கண்ணாவின் தோளைத் தொட்டு ஆறுதல் சொன்னான்.

இந்தச் சமயத்தில் கண்ணப்பனின் தந்தை முத்துக்கருப்பர் உள்ளே வந்தார்.

“என்னம்மா, காலை நேரத்திலேயே அவனைப் பாடாய்ப் படுத்த ஆரம்பித்திருக்கிறாய்?” என்று கேட்டுக் கொண்டேதான் நுழைந்தார். நுழைந்தார். அவர் தோளில் அவரது பேரப் பிள்ளை – மீனாவின் மகன்- தொத்திக்கொண்டிருந்தான்.

“பெரியப்பாவைக் கேளுடா, என்னைப் போல ஒரு புள்ளையை நீங்களும் பெத்தா என்னப்பானு கேளுடா” என்று பேரனுக்குச் சொல்லிக் கொடுத்தார் முத்துக் கருப்பர்.

இதைக் கேட்டதும் கண்ணப்பன் துணுக்குற்றுப் போனான். கண்ணா எவ்வளவு பெரிய தாக்குதல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை அப்போது தான் நிதர்சனமாகத் தெரிந்துகொண்டான்.

கண்ணா துக்கத்தைத் தாங்க முடியாமல் வீட்டின் பின்கட்டுக்கு விரைந்தாள். கண்ணப்பனும் அவளுக்கு ஆறுதல் சொல்லுவதற்காக கண்ணாவைப் பின்தொடர்ந்து சென்றான்.

2

எவ்வளவு சமாதானம் சொல்லியும் கண்ணாவின் அழுகை அடங்கவில்லை. “இந்த வீட்டில் இதற்கு மேல் ஒரு விநாடி கூட இருக்கமுடியாது” என்றாள் கண்ணா.

“கண்ணா, உன்னுடைய முடிவுக்கு நான் உனக்கு வந்து விட்டேன். ஆனால் எனக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. அதை மட்டும் நீ எனக்கு அனுமதி! கண்ணா, என் பெற்றோர்கள் உன்னை மட்டும் பரிகசிக்கவில்லை. என்னையும் சேர்த்துத்தான் இழிவு படுத்துகிறார்கள். அதனால் தான் கொஞ்சம் அவகாசம் தேவை என்கிறேன்”.

“பொறுத்துப் பொறுத்துத்தான் என் கன்னங்கள் நிரந்தரமாகக் கறை படிந்து விட்டதே! இன்னும் நான் பொறுத்தால் என் கண்களே அவிந்து போனால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை”

இந்த நேரத்தில் மீனா அங்கே வந்தாள்.

“அக்கா, இந்தப் பிரச்சினையில் நீங்கள் என்னைச் சம்மந்தப்படுத்திப் பேசுவது சரியில்லை.”

இதற்கு கண்ணா ஏதாவது விபரீதமான பதிலைக் கூ றி விடுவாளோ என்று நினைத்து கண்ணப்பனே குறுக்கிட்டு விட்டான்.

“மீனா, நம் வீட்டுப் பிரச்சினை உன்னைப் பற்றியோ, கண்ணாவைப் பற்றியோ எழுந்ததல்ல; வெளிப்படையாகச் சொல்லுவதானால் அது என்னைச் சுற்றி வளைத்திருக்கும் பிரச்சினை. நான்தான் அதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஆனால் மீனா நீ ஒன்றை மட்டும் மறந்து விடக்கூடாது. நீ இந்த வீட்டில் சிறிய மருமகளாக வருவதற்குக் கண்ணாதான் முக்கிய காரணம் என்பதை மட்டும் மறந்து விடாதே!”

மீனா வாயடைத்துப் போனாள். ஏனெனில் கண்ணப்பனும், மீனாவும் ஒரு நாள்கூட நேருக்கு நேராக நின்று பேசிக் கொண்டதில்லை. தன் கணவரோடு பிறந்த மூத்தவரை தமிழ்நாட்டுப் பெண்கள் அவ்வளவு உயர்வாக மதிப்பார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல கண்ணாவின் உள்ளம் மேலும் துயரத்திற்கு இலக்காகிவிட்டது. அந்த அனல் கண்ணப்பனையும் லேசாகச் சாடியது. எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம் என்று சொல்லுவது வெறும்பேச்சல்ல. அது ஒரு தத்துவம்; பெரிய உண்மை. நமக்குப் பிடித்தமானவர்கள் பாதிக்கப்பட்டால் நமக்கும் மனம் துடிக்கிறது. நமக்கு வேண்டாதவர்கள் சகிக்க முடியாதபடி துன்பப்பட்டால் கூட நம் மனம் தூக்கத்திலிருந்து கண் திறக்க மறுத்து விடுகிறது.

“கண்ணா, குடும்பம் என்பது ஒரு குருவிக் கூடு மாதிரி. அதில் ஆயிரம் பின்னல்கள் இருக்கும் என்று நீ வந்த மறுதினமே சொன்னேனே இப்போது ஞாபகம் இருக்கிறதா?”

“நீங்கள் குருவிக்கூடு என்றுதானே சொன்னீர்கள்? இது பாம்புப் புற்றாக அல்லவா அத்தான் மாறி விட்டது?”

“கண்ணா, உன் மனத்தை ஆற்றுவதற்கு நான் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்”.

“எத்தனை நாளைக்குத்தான் மகாத்மா சொன்னார் மறைமலை சொன்னார் என்ற உபன்யாசங்களை நான் தாங்கிக் கொண்டிருப்பது?”

“கண்ணா, நீ ஒரு சுத்தக் கர்நாடகம்! தத்துவங்களே ஒரு மன ஆறுதலுக்காக சிருஷ்டிக்கப் பட்டவை தான். அவைகளில் சிலது மனதுக்கு இதம் அளிக்கலாம். ஏதாவது உன் மனதைத் தொடுகிறதா என்றுதான் தொடர்ந்து எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் எதுவும் உன் நெஞ்சை நெருங்கக் கூட முடியவில்லை”.

“இப்படியே பேசிப்பேசி காலத்தை ஓட்டி விடலாம் என்ற எண்ணமா?”

“பொறு கண்ணா! உன்னையும் அழைத்துக் கொண்டு எர்ணாகுளத்திற்குப் போய் குடியேறுவதாக முடிவு செய்து விட்டேன். அப்பாவிடமும் நேற்று இரவே பேசிவிட்டேன். வருகிற வெள்ளிக்கிழமை நாம் எர்ணா குளம் போகிறோம்”.

“எர்ணாகுளமா? அது எங்கே இருக்கிறது?” விகர்ப்பமில்லாமல் கேட்டாள் கண்ணா. அவள் படிக்காதவள். கோயிலூர் எலிமெண்டரி ஸ்கூலோடு அவள் படிப்பு முடிந்து விட்டது.

“எர்ணாகுளம் மலையாளத்தில் இருக்கிறது; ஏன்; உனக்கு யானைகள் என்றால் பயமா?” கண்ணாவிடம் கொஞ்சலாகப் பேசினான் கண்ணப்பன்.

“இந்த வீட்டை விட்டு எங்கே போனாலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் மலையாளத்தில் போய் நான் யாரோடு பேசுவது என்றுதான் யோசனை!”

“மாமியார் ஊமையாக இருந்தால் மருமகளுக்கு சந்தோஷம்; மனைவி செவிடாக இருந்தால் புருஷனுக்குச் சந்தோஷம்! இப்போது நாம் போகிற இடம் நம் இரண்டு பேருக்குமே நிம்மதியைத் நிம்மதியைத் தரும், கவலைப்படாதே!” என்று அவளைத் தயார்ப்படுத்தி விட்டான் கண்ணப்பன்

கண்ணப்பனும் கண்ணாவும் எர்ணாகுளத்திற்கே குடியேறப் போகும் சேதி கோயிலூர் முழுதும் பரவியது.

”ஆணோ,பெண்ணோ – ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டுதான் இந்த வீட்டுப்படி ஏறவேண்டும் என்று முத்துக்கருப்பர் கண்டிப்பாகச் சொல்லி கண்ணாத்தாளை வெளியே தள்ளிவிட்டாராம்! என்ன இருந்தாலும் பெரியவர் இப்படிச் செய்திருக்கக்கூடாது. பிள்ளை பிறக்கவில்லை என்பதற்காக வீட்டுக்கு மூத்தவனை வீட்டைவிட்டுத் துரத்துவது நம் ஜாதிக்குப் பழக்கமா? முத்துக்கருப்பருக்கு எப்போதும் ஈவுஇரக்கம் இருந்ததே இல்லை. இந்தத் தகவல் அத்துக்குடி உப்பளத்திலே வேலை பார்க்கும் சின்னவன் சொக்கநாதனுக்குக்கூடத் தெரியாதாம்! அண்ணன் தம்பிகள் என்றால் ராமர்-லெட்சுமணர் மாதிரி அவ்வளவு ஒற்றுமை!”

கண்ணப்பன் எர்ணாகுளத்திற்குப் புறப்படும் முன்னரே இந்த ஊர்ப்பேச்சுக்கள் அவன் காதுக்கும் போய் விட்டன.

“அத்தான் ஊர் என்ன சொல்லுவது? நானே அந்தச் சபதத்தோடுதான் இந்த வீட்டை விட்டு இறங்குவதாக இருக்கிறேன்.”

“கண்ணா!”

“என்னுடைய சபதத்தை நான் மாற்றிக் கொள்வதாக இல்லை! இது உங்கள் மீது சத்தியம்!” கண்ணாவின் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்தது.

கண்ணப்பன் ஊரிலே உத்தமன் என்று பெயா எடுத்தவன். ஒரு அழகான பெண்ணுக்குக் கணவன் என்ற பெருமை வேறு அவனுக்கு இருந்தது.

கண்ணப்பன் சின்னப்பிள்ளையிலிருந்தே கண்டியில் வளர்ந்தவன். கண்டியில் அவர்களுக்கு வட்டிக்கடை இருந்தது. சிங்கப்பூர் கடைக்குப் போகப் பிடித்தமில்லாமல் கண்டிக்கடைக்கே கண்ணப்பன் போய் வந்து கொண்டிருந்தான்.

கண்டியில் கொஞ்சநாள், தமிழ்ச் சங்க தலைவனாக இருந்தான். தமிழ், தமிழன் என்றால் கண்ணப்பனுக்கு உயிர் தான். வாரம்தோறும் தமிழில் சொற் பொழிவுகள் ஏற்பாடு செய்வான். கட்டுரைப் போட்டிகளை வைப்பான். இப்படியே கண்ணப்பனின் தமிழார்வம் வளர்ந்தது.

கண்ணப்பனுக்கு பெற்றோர்கள் மீது தணியாத மரியாதை உண்டு. அதைப்போலவேதான் அவன் தம்பி சொக்கநாதனிடத்திலும்! ஊருக்கு வந்தால் சின்ன விஷயத்தைக்கூடத் தம்பியைக் கலக்காமல் செய்ய மாட்டான்.

கண்ணா அந்த ஊரிலேயே அழகான பெண். அவளுடைய முழுப்பெயர் கண்ணாத்தாள். அந்த ஊர்க் கோயிலில் குடிகொண்டிருக்கும் தெய்வத்தின் பெயரும் கண்ணாத்தாள்தான். கோயிலூரில் பெரும்பகுதி மூத்த பெண்களுக்குக் கண்ணாத்தாள் என்றும், மூத்த பையன் களுக்குக் கண்ணப்பன் என்றும் தான் பெயர் சூட்டு வார்கள். திருமணத்திற்குப் பிறகுதான் கண்ணப்பன் கண்ணாத்தாளை ‘கண்ணா’ என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினான்.

கண்ணப்பனுக்கும், கண்ணாத்தாளுக்கும் நிச்சயமாயிற்று. கண்ணப்பனைக் கேட்காமலே முத்துக் கருப்பர் கண்ணாத்தாளை நிச்சயித்து விட்டுக் கடிதம் எழுதினார். ஏனென்றால் கண்ணாத்தாளுக்கு அவ்வளவு போட்டி இருந்தது.

கண்ணப்பன் தமிழகம் திரும்பி கண்ணாத்தாளை மணந்து கொண்டான். அதற்குப் பிறகு கண்ணப்பன் கண்டிக்குப் போகவில்லை. ஆனால் அங்கே பழகிய தேகப் பயிற்சியும், அங்கே ஏற்பட்ட தமிழ்ப் பற்றும் கண்ணப் பன் உடம்போடு ஒட்டிய அவயங்களாகி விட்டன.

ஊருக்கு வந்ததும் ஊரின் ஒரு முனையில் மறை மலை அடிகள் மன்றம் அமைத்தான். மன்றத்தின் கொல்லை யில் ஓரு தேகப்பயிற்சி சாலையையும் நிறுவிக்கொண்டான்.

கண்ணாத்தாளும், கண்ணப்பனும் எர்ணா குளத்திற்குப் பயணமானார்கள். கண்ணப்பன் எர்ணாகுளத்தில் ஒரு பைனான்சிங் கம்பெனி’யைத் தொடங்கினான். அங்கு அவன் என்னதான் தொழில் நடத்தினாலும் அங்கும் அவனது தமிழ்ப்பற்று அவனை விட்டு நீங்கவில்லை. கொச்சித் துறை முகத்தில் வேலை பார்க்கும் தமிழர்களிடத்தில் அவன் கொடுக்கல் வாங்கல்’ பண்ணிக்கொண்டே தமிழ்ப் பணியி லும் ஈடுபட்டான். நாளடைவில் துறைமுகத் தமிழர்களின் தலைவனாகி விட்டான் கண்ணப்பன். கொச்சித் துறைமுகத் தமிழர்கள் மத்தியில் எழும் குடும்பச் சண்டைகள் முதல் பெரிய தகராறுகள் வரை கண்ணப்பன் தலையீடு தேவைப் பட்டது. கண்ணப்பன், காலக்கிரமத்தில் தமிழர்களின் அன் பால் ‘கண்ணப்பர்’ ஆகிவிட்டான். கண்ணப்பர் இங்கு இருக் கும் வரை மலையாளத் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை குறை ற யாது என்ற நம்பிக்கை கொச்சியில் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் வேரூன்றி இருந்தது.

புகழ் இருக்கிறதே அது இலக்கியத்தில் வரும் காதலைப் போன்றது. அரசகுமாரியின் ஆசை ஆண்டியைத் தேடி அலையும்; பிரபு வீட்டுப்பிள்ளை பிச்சைக்காரியைச் சுற்றி வட்டமிடுவான். அதைப் போலத் தான் புகழும்! புகழை விரும்பிச்செயல் படுவோருக்கு அது கிட்டாது. புகழ் யாரை விரும்புகிறதோ, அது அவனைத் தேடி அலைந்து கொண்டிருக்கும். கண்ணப்பன் கதையும் அப்படித்தான். அவன் அங்கு பைனான்சிங் கம்பெனி வைக்கப் போனான். அங்கே ‘தலைவர்’ பதவி அவன் காலடியில் காத்துக்கிடந்தது.

கண்ணாத்தாளுக்கு இவையெல்லாம் பெரிதாகப் படவில்லை. அவளுக்கு அவள் விடுத்து வந்த சபதம் தான் அவள் மனக்கண் முன் வந்து படமெடுத்து ஆடிக்கொண் டே இருந்தது. வட்டித் தொழிலில் போட்ட மூலதனம் முறையாகத் திரும்பவில்லையே என்ற கவலையை விட வயிற்றில் குழந்தை உருவாகிவில்லையே என்ற கவலை தான் அவள் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

“கண்ணா!”

“இருக்கிறேன்; நான் எங்கே போகப் போகிறேன்”

“துறைமுகத்திலிருந்து வேறு யாராவது வந்தார்களா?’

“இரண்டு பேர் வந்து வட்டிப்பணத்தைக் கட்டிவிட்டுப் போனார்கள்!”

“நான் அதையா கேட்டேன்? யாராவது தமிழ்ச்சங்கம் சம்பந்தமாக வந்தார்களா என்று கேட்கிறேன்”

இது கண்ணாத்தாளின் மனதைச் சுட்டது.

“என்னங்க நீங்களும் தொழிலைக்கவனிக்காமல் இப்படியே அலைந்தால் கம்பெனி என்ன ஆகும்?”

“நீ சொல்லுவதும் உண்மைதான்; அதற்காக அதிலேயே மூழ்கிவிட முடியுமா? எனக்கு மட்டும் நான் இதைச் சொல்லிக்கொள்ளவில்லை. உனக்கும் சேர்த்துத் தான் சொல்லுகிறேன். நீயும் வேலை இல்லாத நேரத்தில் தமிழர் வீடுகளுக்குப் போய்வரலாம்”

“எனக்கு வெளியில் போக ஆசைதான். ஆனால் போய் விட்டு வந்ததும் வீட்டில் தூக்கம் வராமல் நான் தவிக்கிறேன்.”

“அது என்ன அப்படி ஒரு வியாதி?”

“குழந்தைகளைக் கண்டாலே எனக்கு மயக்கம் வந்து விடுகிறது! தலை சுற்றுகிறது; மகாலட்சுமி போல் இருக்கிறாய்; பகவான் உனக்கு ஒரு குழந்தையைக் கொடுக்காமல் இப்படிச் சோதிக்கிறானே என்று வேறு கேட்கிறார்கள். அது ஒரு பக்கம் என் நெஞ்சைத் துளைக்கிறது”.

கண்ணப்பன் சிரித்தான்.

“என்னத்தான் சிரிக்கிறீர்கள்! நான் சொல்லுவது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறதா?”

“இல்லை கண்ணா! உன் பேச்சு ஒரு அறிஞனின் தத்துவத்தை எனக்கு நினைவு படுத்துகிறது. ஏழைகளுக்கும் வைரத்திற்கும் ஏன் பகை வந்தது தெரியுமா? ஏழைகளுக்கு அது கிடைக்காததால் அவன் வைரத்தைப் பார்த்துக் கோபப்பட ஆரம்பித்தான் என்று அந்த அறிஞர் கூறியிருக்கிறார்.

இந்த நேரத்தில் வாசல் கதவை யாரோ தட்டினார்கள்.

3

கண்ணாத்தாள் கதவைத் திறந்தாள். தபால் காரன் ஒரு கடிதத்தைப் போட்டு விட்டுப் போனான். அந்தக் கடிதம் கண்ணாத்தாளுக்கு அவள் தகப்பனார் எழுதியது. “கண்ணா – என்ன கடிதம் அது?”

“உங்கள் மாமனார் எழுதியிருக்கிறார். என்ன எழுதியிருப்பார் என்று உங்களுக்குத் தான் தெரியுமே! அவர் கவலை அவருக்கு!”

“உனக்கு வளைகாப்பு வைக்க எனக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டதே என்று எழுதியிருக்கிறாரா கண்ணா?”

“அதுதான் சொல்லி விட்டீர்களே! அதே தான்!”

“நாட்டிலே பிள்ளைகளுக்கா பஞ்சம்! . எத்தனையோ பேர் பிள்ளைகளை ஏராளமாக பெற்றுப் போட்டு விட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவைகளில் நாம் ஒன்றை எடுத்துக் கொண்டால் போகிறது! இதற்கு ஏன் கப்பல் மூழ்கி விட்டதைப் போல் கண்களைக் கசக்கிக் கொண்டே இருக்க வேண்டும்?”

“ஊரார் பிள்ளையை எடுத்து வளர்த்துவிடலாம்; அதை ஊர் ஒப்புக் கொள்ளுமா? உங்களுக்கும் எனக்கும் உள்ள அவப்பெயர் தான் போய்விடுமா?”

“ஊர் இது வரை எடுத்தவுடன் எதையாவது ஒப்புக் கொண்டிருக்கிறதா? அதிலும் சொந்த ஊர் பிறந்த ஊர் எதையாவது பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்ட தாகச் சரித்திரம் உண்டா? கஷ்டப்பட்டு ஒருவன் பணக் காரனாகி விட்டால் அவனைக் கள்ள நோட்டுக்காரன் என்பார்கள். உண்மையிலேயே ஒருவன் கள்ளநோட்டின் மூலம் பணக்காரனாகியிருப்பான். அவனை இந்திரன் சந்திரன் என்று வர்ணிப்பார்கள். கண்ணா நான் சொல்லுவதை நம்பு. ஊருக்காக வாழ்ந்தவர்கள் யாரும் இறுதிவரை நிம்மதியாக இருந்ததே இல்லை. உனக்குக் குழந்தை வேண்டும்; அதை நீ கொஞ்சி மகிழ வேண்டும். எனக்கு யாமலில்லை. குழந்தைகள் பூக்கள் மாதிரி. அவை எந்தத் தோட்டத்தில் மலர்ந்தாலும் அவைகளின் மணம் மாறாது. கொல்லையிலே பூக்கும் மல்லிகைக்கும் கோயில் நந்த வனத்திலே பூக்கும் மல்லிகைக்கும் வித்தியாசம் உண்டா? ஏழை வீட்டுக் குழந்தை மூக்கிலே சளியை வடித்துக்கொண்டு தெருவிலே விளையாடும்? பணக்கார வீட்டுக் குழந்தை பளிங்குத் தரையில் ரப்பர் பொம்மைகளை வைத்து விளையாடும்! ஆனால் இரண்டு குழந்தைகளின் முகங்களிலே கூத்தாடும் மகிழ்ச்சிப்பெருக்கு ஒரே மாதிரியானதுதான்'”கண்ணப்பன் இப்படி அடுக்கிக் கொண்டே போனான்.

“அத்தான் நீங்கள் எதைத்தான் சொல்லுங்கள்! அதெல்லாம் படிக்கத்தான் பயன்படுமே தவிர நடை முறைக்கு ஒத்துவராது”.

“எனக்கும் பொழுது போகவேண்டும்; உனக்கும் கவலை ஒழியவேண்டும். கண்ணா நீ இப்போது என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்? என்ன இருந்தாலும் வளர்ப்புக் குழந்தை நம் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு ஈடாகுமா என்கிறாயா அல்லது அவள் மலடி என்ற அவச்சொல்லை அழித்துக் கொள்வதற்காகக் குழந்தை கேட்கிறாயா?”

“ஆண் பிள்ளைகளைப் போல பெண்கள் எல்லா வற்றையும் வெளிப்படையாகப் பேசிவிடமாட்டார்கள்! அப்படிப் பேசவும் கூடாது. ஆண்கள் கலகலப்பாகப் பேசினால் அவர்களை விஷயமில்லாதவர்கள் என்பார்கள். பெண்களும் அப்படியே பேசினால் ‘இவள் சுத்த வெகுளி’ என்று இகழ்ந்து தள்ளிவிடுவார்கள். புருஷனுக்குத் தெரியாத ரகசியங்கள் கூட ஒரு பெண்ணிடம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அவள் பெண். விரித்த புகையிலையும், சிரித்த பெண்ணும் ஆகாது என்று சொன்னது எதற்காக?” கண்ணாத்தாளும் விட்டபாடில்லை.

“அது சரி இன்றைக்கென்ன இவ்வளவு தத்துவார்த்தங்களைப் பொழிந்து தள்ளிக் கொண்டிருக்கிறாய்?”

“இது நீங்கள் படித்துவிட்டுப் பேசும் வேதாந்த மல்ல; உண்மைகளை நான் சொல்லுகிறேன். ஒரு பெண் – அதுவும் குழந்தைப் பேற்றுக்காக தவம் கிடக்கும் ஒரு பெண் என்ன நினைக்கிறாள் அவள் மனம் என்ன பாடுபடுகிறது என்பதை புருஷன் தெரிந்துகொள்ள வேண்டாமா?”

“நீ உன் வாதத்தில் பிடிகொடுத்து விட்டாய்! புருஷனுக்குத் தெரியாத ரகசியம் ஒரு பெண்ணிடம் இருக்கலாம் என்கிறபோது ஊருக்குத் தெரியாத ரகசியம் ஒரே குடும்பத்திற்குள் இருப்பது தவறில்லையே?”

“புருஷனுக்கும். பெண்ஜாதிக்குமிடையே எவ்வளவோ ரகசியங்கள் இருக்கலாம். அதெல்லாம் ஊருக்குத் தெரிந்தால் குடும்பம் உருப்படுமா?”

அன்று சனிக்கிழமை. துறைமுகத் தொழிலாளர்களுக்கு அன்றுதான் சம்பள நாள். கண்ணப்பன் வட்டிப் பணத்தை வசூலிப்பதற்காகப் புறப்பட்டுப் போனான். விழியில் அவன் நினைவெல்லாம் கண்ணுத்தாளைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அவளுடைய கலங்கிய விழிகளில் துறைமுகப்பட்டணமே மிதப்பது போல அவனுக்குத் தோன்றியது.ஆவியும் போன்ற தன் மனைவி குழந்தை யில்லாக்கவலையால் ஒட்டி உலர்ந்து சருகாகி விடுவாளோ என்ற துக்கம் ஒருபக்கம் அவனை அழுத்திக்கொண்டிருந்தது.

மனிதன் படுத்துக் கொண்டு சிந்திப்பதைவிட நடந்து கொண்டு சிந்திப்பதையே அதிகம் விரும்புகிறான்? அதில்தான் அவன் சுகமும் காண்கிறான். கண்ணப்பன் தூரம் தெரியாமல் போய்க்கொண்டே இருந்தான், அப்போது கண்களில் ஒரு டீ ஸ்டாலின் போர்டு தென்பட்டது. அதில் ‘கொரியன் டீ ஸ்டால்’ என்று எழுதப்பட்டிருந்தது. கண்ணப்பனுக்குப் பழைய நினைவுகள் திடீரென்று பிரசவித்து விட்டன.

கண்ணப்பன் கண்டியில் இருந்தபோது அவனோடு நெருங்கிப் பழகிய ஒரு நண்பனின் பெயர் கொரியன். அவன் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவன்; கண்டியில் டாக்டராக இருந்துவிட்டு கண்ணப்பனுக்கு முன்பே சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டான். தென்னிந்தியர்கள் என்ற முறையில் இருவரும் உற்ற நண்பர்களாகிவிட்டார்கள். அதுமட்டுமல்ல; இருவரும் ஒரே தேகப் பயிற்சி சாலையில் தேகப் பயிற்சி எடுத்தவர்கள். அவர்களின் நட்பே கர்லாக் கட்டைகளுக்கு மத்தியில்தான் உதயமானது.

கண்ணப்பனுக்கு டாக்டர் கொரியனைப் பார்க்க பெரிதும் ஆசை! அவனைச் சந்தித்து தனது மனக் கவலையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று துடித்தான். கடிதம் எழுதினால் அது போய்ச் சேருமா, சேராதா என்று கூட யோசிக்காமல் மறுநாளே ஒரு கடிதத்தை எழுதிப்போட்டான். திருவனந்தபுரம் ஒரு பெரிய நகரம்; மொட்டையாக ‘கொரியன்’ என்று மட்டும் எழுதிப் போட்டால் கிடைத்துவிடுமா? கொரியன் என்ன அரசியல்வாதியா பெயரைப் பார்த்ததும் கடிதம் வீடு போய்ச் சேர்வதற்கு?

பதினைந்து நாட்கள் வரை பதில் இல்லை. திடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கண்ணப்பன் திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டுப் போனான். அங்கு கொரியன் என்ற பெயரில் பல டாக்டர்கள் இருந்தார்கள். எல்லோரையும் பார்த்தான். உருவம் மட்டுப் படவில்லை. இறுதியில் கண்ணப்பன் விரக்தியடைந்து எர்ணாகுளத்திற்குத் திரும்பும் போது அவனுடைய நண்பன் டாக்டர் கொரியனைப்பற்றி வியப்புறும் செய்தி கிடைத்தது. திருவி தாங்கூர் மன்னரின் டாக்டரே கண்ணப்பனின் நண்பர் கொரியன் தான் என்பதை அறிந்து அளவில்லா மகிழ்ச்சி யடைந்து அவனை நேரில் சென்று பார்த்துவிட நடந்தான்.

கொரியன் வயதில் இளைஞன். கண்ணப்பன் வயதுதான் அவனுக்கும். பழைய பாணியில் கேரள நாட்டு முறையில் கட்டப்பட்ட அரண்மனை போன்ற ஒரு மாளிகையில் கொரியன் குடியிருந்தான். சுவரில் பல படங்கள் மாட்டப்பட்டிருந்தன. கண்ணப்பன் அவனைக் கண்டதும் கட்டித் தழுவி அணைத்துக் கொண்டான்.

“பத்தாண்டுகளுக்குப் பிறகு என் நினைவு உனக்கு எப்படி வந்தது?” கொரியன் பிரியத்தோடும், ஆச்சரியத்தோடும் கேட்டான்.

“எனக்குக் கூட அது ஒரு சிதறலான நினைவாகத் தான் தோன்றியது. தெருவில் போய்க் கொண்டே இருந்தேன். ‘கொரியன் டீ ஸ்டால்’ என்ற ஒரு போர்டைப் பார்த்தேன். அது முதல் உன்னை வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

“உன் தமிழார்வமெல்லாம் எப்படி இருக்கிறது?”

“தமிழர்களைப் பொறுத்தமட்டில் பண ஆசை யும், தமிழாசையும் ஒன்றுதான். விட்டுக்கொடுக்க மாட்டார்கள்!”

“குழந்தைகள்?”

“உனக்கு எத்தனை குழந்தைகள் ? முதலில் நீ சொல்லு!”

“வைத்தியம் பார்க்க வரும் பிள்ளைகள்தான் என் பிள்ளைகள்!” – கொரியன் பெருமூச்சோடு இப்படிச் சொன்னான்.

“டாக்டர்! என் கதிதானா உன் கதியும்! நான் எதிர்பார்க்கவில்லை கொரியன். நான் உன்னைச் சந்திக்க வந்ததே இந்தக் கவலையைத் தீர்த்துக் கொள்ள ஏதாவது மார்க்கமுண்டா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு போகத்தான்!” கண்ணப்பனுக்கு வார்த்தைகள் சரியாக வரவில்லை.

“என் நிலைமை உனக்கு நேர்ந்துவிடக் கூடாது என்று நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சில நேரங்களில் பிரார்த்தனைகளும் பயனற்றுப் போய் விடுவதுண்டுத் என்னைப் பொறுத்த வரையில் இனி நான் தனி மரம்தான். என் மனதில் இருந்த ஆசைகள் இற்றுத் தூளாகி விட்டன. கடவுள் எனக்குப் பனைமரத்தைப் போல் நெடிய ஆயுளைக் கொடுத்தால் நான் ஆலமரத்து நிழலைப் போல் பலருக்கு பயன்படுவேன்!”

“இந்த விஷயம் உன் மனைவிக்குத் தெரிந்தால் அவர்கள் வேதனைப்பட மாட்டார்களா?”

“எப்படியோ அவளுக்குத் தெரிந்துவிட்டது. அதனால் அவள் கவலைப்பட்டுக் கவலைப்பட்டு எலும்புக் கூடாகி காற்றோடு கலந்துவிட்டாள் கண்ணப்பா!”

“எப்போது இதெல்லாம் நடந்தது? எப்படி அவர்களுக்குத் தெரிந்தது?”

“புருஷனுக்கும், மனைவிக்குமிடையே கூட சில ரகசியங்கள் இருக்க வேண்டும் என்பதை என் மனைவியின் மரணத்தின்போதுதான் உணர்ந்தேன். திருமணமாகி மூன்றாண்டுகளுக்குப்பிறகு என் உள்ளத்தில் சிறு அருவருப்பு ஏற்பட்டு கேரளத்திலுள்ள ஒரு பெரிய டாக்டரிடம் நானும் என் மனைவியும் ரத்தப்பரிசோதனை செய்து கொண்டோம். பதினைந்து நாட்கள்வரை அவரிடமிருந்து எனக்கு எந்த ‘ரிசல்ட்டும்’ வரவில்லை. நான் ஊரில் இல்லாத நேரத்தில் திடீரென்று அவரிடமிருந்து ‘ரிசல்ட்’ வந்துவிட்டது. அதில் அவர் ‘இனிமேல் உனக்கு புத்திர பாக்கியம் இல்லை; இந்த ரகசியம் உன் மனைவிக்குத் தெரியக்கூடாது’ என்று எழுதி விட்டார். நான் இல்லாத நேரத்தில் அந்தக் கடிதம் வந்ததால் என் மனைவி அந்தக் கடிதத்தை உடைத்துப் பார்த்து விட்டாள். அந்தக் கடிதமே அவளுக்கு எமனாக அமைந்து விட்டது,

அவளை எவ்வளவோ தேற்றினேன். ‘எனக்கு இந்த வயதிலேயே, வாழ்க்கையின் எல்லை தெரிந்து விட்டதே இனிமேல் நான் ஏன் வாழவேண்டும்’ என்று அவள் என்னைக் கேட்டது என் நெஞ்சில் இன்றும் கல்வெட்டைப் போல் பதிந்து கிடக்கிறது. அது மட்டுமா அவள் கேட்டாள்? ‘ஒரு புருஷனின் இரத்தத்தில் கருப்பொருள் இல்லை என்று மனைவிக்குத் தெரிந்து விட்டால் அவளுக்குத் புருஷனிடத்தில் மரியாதைக் குறைவும், தாழ்வு மனம்பான்மையும் எப்படி ஏற்படாமல் போகும்? அந்தப் பாவத்திற்கு ஆளாக நான் விரும்பவில்லை” என்றும் என் மனைவி எனக்கு போதனைகளைக் கூறினாள். மிஸ்டர் கண்ணப்பன் நான் எத்தனை நோயாளிகளைக் காப்பாற்றி அவர்களைச் சிரிக்க வைத்திருக்கிறேன். என்னைச் சிரிக்க வைக்க இறைவன் மறந்துவிட்டான்.”

“நான் சிரிக்காவிட்டாலும் பரவாயில்லை, என்னைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று எண்ணி வாழ்ந்த என் மனைவியை இழந்து நான் தினசரி அழுதுகொண்டிருக்கிறேன்!” கொரியன் விவரம் அறியாத குழந்தையைப் போல் தேம்பினான்.

“பெரிய டாக்டர் எழுதிய கடிதத்தை உன் மனைவி படிக்காதிருந்தால் அவள் இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டாள் அல்லவா?”

“நிச்சயமாக வந்திருக்கவே மாட்டாள்! புருஷனும், மனைவியும் எவ்வளவுதான் பாசமுள்ளவர்களாக இருந்தாலும் சில விஷயங்களை மனைவியிடம் வடிகட்டித் தான் சொல்ல வேண்டும். மனித வாழ்க்கைக்கு – அதுவும் ஒரு குடும்ப வாழ்க்கைக்கு-என் வாழ்க்கைக்கு ஒரு அபாய அறிவிப்பு” என்றான் கொரியன்.

கண்ணப்பன் நெற்றியைச் சுளித்தான்.

4

“நீ ஏன் நெற்றியைச் சுளிக்கிறாய்? உனக்கும் அப்படி இருக்குமோ என்ற அச்சம்தானே? என்று வினவினான் கொரியன்.

அப்படி ஒரு பீதி எனக்கு! உனக்கு ஏதாவது காரணம் சொன்னாரா டாக்டர்?”

“நானே நேரில் சென்று கேட்ட பின்புதான் அவர் காரணத்தைச் சொன்னார். எனது ரத்தம் அடியோடு முறிந்து போய்விட்டதாம். நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். ஒரு மனிதனின் உடலுறுப்புக்கள் ஒரு விமானத்தின் எஞ்சினை விட நுணுக்கமானவை என்கிறார் அந்த டரக்டர். என்னுடைய ரத்தம், எனது திருமணத்திற்கு முன்பே முறிந்து விட்டது என்கிறார் அவர். எனக்கு அப்போதே விபரம் தெரிந்திருந்தால் நான் திருமணமே செய்துகொண்டிருக்க மாட்டேன். நம் நாட்டில் எல்லோரும். திருமணத்திற்குப் பிறகுதான் வாழ்க்கையே துவங்குகிறது என்று நினைக்கிறார்கள். அதனால் விளைந்த வினையைப் பார்த்தாயா?”

கண்ணப்பன் பதில் சொல்ல முடியாமல் திணறினான். அவனுக்கு குடை ராட்டினத்தில் உட்கார்ந்து சுற்றுவது போலிருந்தது.

‘சிங்கம் போலச் சீறிப் பாயக் கூடியவன், இன்று எப்படியோ போய்’ விட்டானே! அவன் பேச்சில் இருந்த கம்பீரம், அவன் குரலில் இருந்து மிடுக்கு எல்லாமே இருந்த தடம் கூடத் தெரியாமல் அழிந்து விட்டதே?’ என்று கண்ணப்பன் மனத்துக்குள்ளேயே நினைத்துக் கொண்டான்.

“நீயும் அந்த டாக்டரிடம் சோதித்துக் கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். முடிவு செய்ய வேண்டியது உன் உரிமை!”

“எனக்கும் அதுதான் முடிவாக இருந்தால் என்ன செய்வது கொரியன்?” கண்ணப்பன் நடுக்கத்துடன் கேட்டான்.

“முடிவு அது தான் என்றால் அதை எப்படி மாற்ற முடியும்? அதைத் தான் விதி என்றும் தலையெழுத்து என்றும் மதவாதிகள் கூறுகிறார்கள். என் தலையெழுத்து இப்படி! அதற்காக நான் சனியும் புதனும் எண்ணெய் தேய்த்துக் குளித்திருந்தால் அந்தத் தலை யெழுத்து அழிந்து போயிருக்குமா?” கொரியன் இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே கண்ணப்பனின் உள்ளம் கண்ணாத்தாளைத் தேடி ஓடியது.

“அப்படியானால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை என் மனைவியையும் அழைத்துக்கொண்டு வந்து விடட்டுமா?”

“தேவை இல்லை என்பது என் கருத்து. உன் மனைவிக்குத் தெரியாமலே நீ சோதித்துக்கொள்வதுதான் உன் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பு. உனக்கு ‘ஆல் ரைட்’ என்று டாக்டர் சொல்லிவிட்டால் அதற்குப் பிறகு வேண்டுமானால் உன் மனைவியைச் சோதிக்கலாம். இந்த விஷயம் உன் மனைவிக்குத் துளியும் தெரியக்கூடாது. ஏனென்றால் பெண்கள் பிறவியில்தான் கோழைகள் வாழ்க்கையில் முடிவெடுப்பதில் வேகமானவர்கள். தவறு யார் பக்கம் என்று யோசிக்காமலே தற்கொலைக்கும் தயாராகிவிடுவார்கள். சாவது எளிது. ஆனால் சாவை நினைப்பதுதான் பயங்கரமானது என்ற தத்துவங்களெல்லாம் தென்னாட்டுப் பெண்களிடம் தோற்றுப்போய்விட்டன”. டாக்டர் கொரியன் தன் மனைவியின் அகால மரணத்தின்மூலம் பெண்களைப்பற்றி ஒரு தீர்க்க மான ஆராய்ச்சியையே செய்து முடித்தவரை போலப் பேசினான்.

கண்ணப்பன் சோதனைக்குத் தயாரானான். சோதனைக்குப் பிறகு அந்தப் பெரிய டாக்டர் பல கேள்விகளைக் கண்ணப்பனிடம் கேட்டார்.

“உங்களுடைய பால்ய காலத்தை எங்கே கழித்தீர்கள்?”

“கண்டியில் பத்து வருஷங்கள் இருந்தேன்!”

“அங்கே உங்களுக்கு என்ன பொழுதுபோக்கு?”

“தமிழ்ப்பணி, தேகப்பயிற்சி, மல்யுத்தம் இவைகள்தான் எனது பொழுதுபோக்குப் பணிகள்!”

“அந்தக் காலங்களில் நீங்கள் ஏதாவது மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டதுண்டா?”

“வட இந்தியாவில் இருந்து வந்த புகழ்பெற்ற அந்தக் குஸ்திபயில்வானிடம் நாங்கள் மல்யுத்தம் பயின்றோம். அவர் எங்கள் உடல்வளத்திற்காக தினசரி கொஞ்சம் லேகியம் கொடுப்பார். அப்படியே நாங்கள் ஆறு மாதங்கள் சாப்பிட்டோம்”

பெரிய டாக்டர் புருவத்தை நெறித்தார். பிறகு டாக்டர் கொரியனை நிமிர்ந்து பார்த்தார்.

“மிஸ்டர் கண்ணப்பன், அந்த லேகியம் சாப்பிட்ட பின் உங்கள் உடலில் ஏதாவது மாற்றம் தெரிந்ததா?”

“சதை இறுகியது. அது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. உடல் பளபளத்தது. அது எங்களுக்கு ஒரு விதமான உற்சாகத்தை வழங்கியது!”

இதைக் கேட்டதும் பெரிய டாக்டர் உதடுகள் விரிய லேசாகச் சிரித்துக் கொண்டார்.

“என்ன டாக்டர் நீங்களாகச் சிரித்துக் கொள்கிறீர்கள்?” கொரியன் உரிமையோடு கேட்டான்.

“ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லையே மிஸ்டர் கொரியன்!”

“கண்ணப்பன் லக்கிமேன்! இல்லையா டாக்டர்!”

“நான் அப்படிச் சொல்லவில்லை. அப்படி இருந்தால் நான் ஏன் சிரிக்க வேண்டும்? உங்கள் ரத்தத்திற்கும், இவருடைய ரத்தத்திற்கும் ஒரு சதவிகிதம் கூட வித்தியாசம் இல்லாமல் இருக்கிறதே! கூடப் பிறந்த சகோதரர்களுக்குக் கூட இப்படி ஒரு ஒற்றுமையைப் பார்க்க முடியாது!”

இதைக் கேட்டதும் கண்ணப்பனுக்கு முகமெல்லாம் வியர்த்துவிட்டது. அவன் மயக்க நிலையை அடைந்து விட்டான்.

“அப்படியானால் இவனுக்கும் புத்திரபாக்கியம் இருக்காது என்கிறீர்கள்! இல்லையா டாக்டர்!”

“ஆம்; இவரும் உன்னைப் போல் இருக்க வேண்டியவர்தான். ஆனால் இவரையாவது எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள். இந்த விஷயம் காற்றுவாக்கில் கூட இவர் மனைவிக்கு எட்டிவிடக்கூடாது. இதற்கு மாற்று மருந்து இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை”. பெரிய டாக்டர் ஒரு பெரிய கொலை வழக்கில் தீர்ப்புச் சொல்லுவதைப் போல் அறிவித்தார்.

கோயிலூர்!

கண்ணப்பனின் தகப்பனார் முத்துக் கருப்பர் நிம்மதியற்றிருந்தார். ஊரார் பேச்சு அவர் நெஞ்சைத் துளைத்துக் கொண்டிருந்தது. ‘மூத்தவனை வீட்டை விட்டுத் துரத்தி விட்டு முண்டம் போல வீட்டிலே உட்கார்ந்திருக்காரே இவருக்கு இருதயமே இல்லையா?’ என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட பேசத் தொடங்கி விட்டார்கள். ஒரு விழாவிற்கோ, கோயிலுக்கோ அவரால் மகிழ்ச்சியாகப் போய் வரமுடியவில்லை.

“திடீரென்று முத்துக்கருப்பர் கண்களை மூடி விட்டால் என்ன செய்வார்? கொள்ளி வைக்கவேண்டியவன் கொச்சியிலிருந்து வந்து தானே பிரேதத்தை எடுக்க வேண்டும்? அதற்குள் பிணம் நாறிப் போகாதா? மூத்தவன் இருக்க, இளையவன் கொள்ளி வைக்கலாமா?”

முத்துக்கருப்பர் உயிரோடு திடகாத்திரமாக இருக்கும் போதே அவரது பிரேதத்தைப் பற்றி ஊரார் பேசத் தொடங்கிவிட்டார்கள். எவ்வளவோ தூற்றல் களைத் தாங்கிக் கொண்டு பழக்கப்பட்டவர் முத்துக்கருப்பர். மிகவும் கஷ்டப்பட்டு சிங்கப்பூருக்கு போய் இன்னொரு வீட்டில் கணக்கப் பிள்ளையாகச் சேர்ந்து, பின்பு தனிக் கடை வைத்து முன்னேறியவர். முதலில் யாரும் அவருக்கு பெண் கொடுக்க முன் வரவில்லை. குடியிருக்க வீடில்லாதவன், சம்பளத்திற்கு வேலை செய்பவன் என்றெல்லாம் அவரை இகழ்ந்தார்கள். அப்போதெல்லாம் சின்னவயதில் அந்தப் பேச்சுக்களை சவாலாக ஏற்றுக்கொண்ட முத்துக் கருப்பரால் இப்போது ஊரில் பேசப்படும் அவதூறுகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கொச்சிக்குப் போய் எப்படியாவது கண்ணப்பனைக் கூட்டி வந்து விடுவது என்று முடிவு செய்து விட்டார்.

“இந்த நேரத்தில் நீங்கள் வெகுதூரம் பிரயாணம் செய்வது நல்லதுதானா?”

ஒரு முட்டுக் கட்டையைப் போட்டுப் பார்த்தாள் முத்துக்கருப்பரின் மனைவி.

“ஊரிலே தூற்றிக்கொண்டிருப்பது உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா? நீ ஒரு இருசியாம்! நான் ஒரு இரக்கமற்றவனாம்! இந்த அவப்பெயரெல்லாம் நம் குடும்பத்திற்கு அவசியம் தானா?”

“எதைத்தான் ஊரிலே பேசவில்லை? அதுவும் இந்த ஊர் மோசம்; மகாமோசம்!”

“எது எப்படி வேண்டுமானாலும் ஆகட்டும். தலைப்பிள்ளையை கண்காணாத தேசத்திற்கு அனுப்பிவிட்டு தள்ளாத வயதிலே பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க நான் தயாரில்லை!”

“நாமா அவனைப் போகச் சொன்னோம்? கண்ணாத்தாள் போட்ட தூபத்திலே அவன் கோபப்பட்டு போய் விட்டான். அதற்கு நாம் என்ன செய்வது?”

“கோபத்திலே போனால் அவனை அப்படியே விட்டு விடுவதா?”

“எனக்கொன்றும் அவன் மீது கோபமில்லை! அவன் என்ன எனக்குப் பகையாளியா? பெற்ற மகன் தானே?”

“என்ன ஆனாலும் பரவாயில்லை. நாளைக்கே கொச்சிக்குப் போய் அவனையும், கண்ணாத்தாளையும் திரும்பிக் கூட்டிவருவதுதான் எனது முதல் வேலை!”

“கோபித்துக் கொள்ளாதீர்கள். அது மட்டும் உங்களால் நடக்காது. கண்ணப்பன் வந்தாலும் வருவானே தவிர, கண்ணாத்தாள் ஒரு நாளும் வரமாட்டாள். அவள் ஒரு சபதம் போட்டுவிட்டுத்தானே போயிருக்கிறாள்!”

“அப்படி என்ன அவளுக்கும், நமக்கும் அவ்வளவு கொடிய மனஸ்தாபம்?”

“இந்த வீட்டுக்கே இனிமேல் அவளுக்கு வளைகாப்பு நடத்தி விட்டுத்தான் வருவாளாம்; போகும் போதே இப்படி ஒரு சபதத்தோடு போயிருக்கிறவளைக் கூப்பிட்டால் வருவாளா? அவன்தான் அனுப்புவானா?”

“அங்கே உற்பத்தியாகிற கரு இங்கே இருந்தால் உற்பத்தியாகாது என்கிறாளா? இது என்ன பைத்தியக்காரத்தனமான சபதம்!” என்று முத்துக்கருப்பர் முனங்கிக் கொண்டிருந்தார்!

இந்தச் சமயத்தில் வாசல்பக்கமாக இருந்து மீனாவின் மகன் ஓடி வந்து முத்துக்கருப்பரிடம் கூவினான்.

“தாத்தா! பெரியம்மா வந்துக்கிட்டிருக்கு!”

“அட் போடா இவனொருத்தன்! உங்க பெரியம்மா உன்னைப் போலே ஒரு பிள்ளையைச் சுமந்து கொண்டுதான் நம்ம வீட்டுக்கே வருவாளாம்!” என்று செல்லமாகக் கடிந்து கொண்டார்.

ஆனால் சிறுவன் சொன்னது உண்மைதான்.

கண்ணாத்தாள் தங்க ரதத்தைப்போல உள்ளே வந்து கொண்டிருந்தாள். முத்துக்கருப்பரும், அவர் மனைவியும் திகைத்துப் போனார்கள்.

5

தமிழ்நாட்டில் தான் ஒரு பெண்ணின் வரலாறு ஒரு நாவலைப்போல் அமைந்து விடுகிறது. அதுவும் ஒரு அழகான பெண்ணுக்குத் துன்பம் ஏற்பட்டு விட்டால் அவள் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன

திருவனந்தபுரத்தில் சோதனை செய்து பார்த்து விட்டு வந்தபிறகு கண்ணப்பன் தெம்பில்லாதவனைப்போல் நடந்து கொண்டான். தன் வாழ்க்கையில் ஊடாடிவிட்ட அந்த ரகசியத்தை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்ற மன உளைச்சல் அவனையும் அறியாமலேயே கண்ணப்பனைச் சோர்ந்திடச் செய்தது. மனதிலே ஊறிக் கொண்டிருக்கும் கூச்சத்தை மறப்பதற்காக சில நாட்கள் கண்ணாத்தாளைப் பிரிந்திருக்க விரும்பிய அவன், அவளை ஊருக்கு போய் அவளுடைய பெற்றோர்களைப் பார்த்துவிட்டு வரும்படி அனுப்பிவைத்தான். அதற்கு அனுகூலமாக கண்ணாத்தாளின் தகப்பனார் உடல் நலமில்லாதிருக்கிறார் என்று வந்த கடிதத்தைப் பயன்படுத்திக் கொண்டான்.

கண்ணாத்தாள். ஊருக்குப் போய் போய் பதினைந்து நாட்களுக்கு மேலாகி விட்டது. அவளிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. கண்ணப்பன் தனி ஆளாக இருந்து ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
கொச்சியில் மீன் அவன் உடம்புக்கு ஒத்துவராத ஒரு உணவு. மீன் சமைக்காத கடை அரிதாக இருந்தது. அதனால் பெரிதும் துன்பப்பட்டான்.

கண்ணாத்தாள் அவளது தாய் வீட்டில் இத்தனை நாட்கள் தொடர்ந்து இருந்ததே இல்லை. திருமணமான காலத்திலிருந்து ஒரு முறை கூட அவள் சேர்ந்தாற்போல இரண்டு நாட்கள் எங்கேயும் தங்கியதும் இல்லை.

“பாவம் கண்ணாத்தாள்! எனக்குக் குழந்தையே பிறக்காது என்ற தகவல் அவளுக்குத் தெரிந்தால் அவளும் டாக்டர் கொரியன் மனைவியைப் போலத்தான் முடிவெடுப்பாள் கண்ணப்பனுக்கு அவன் மனைவியின் அழகின் மீதுள்ள மயக்கத்தைவிட அவளுடைய குணத்தின் மீதுள்ள பயற்றுதான் அதிகமாக இருந்தது.

“பெண்ணின் அழகு பூவின் அழகைப்போல் நிரந் தரமற்றது. ஆனால் பெண்ணின் குணம் தங்கத்தின் குணத்தைப் போல் ஒளிமங்காதது” என்று அடிக்கடி கண்ணப்பன் கண்ணாத்தாளிடம் கூறி அவளைப் பெருமைப்படுத்தியிருக்கிறான்.

கண்ணாத்தாளும் அவனிடம் அப்படித்தான் பழகினாள். எவ்வளவு நேரமானாலும் கண்ணப்பன் வந்த பிறகு தான் அவள் சாப்பிடுவாள். கண்ணப்பனுக்குப் பிடித்த மானதைத்தான் அவள் சமைத்து வைப்பாள். ஒரு பெண்ணுக்குப் புருஷன்தான் மூலதனம். புருஷன் அவளிடம் காட்டும் அன்புதான் மனைவிக்குக் கிடைக்கும் வட்டி-என்பதில் கண்ணாத்தாள் இரண்டாவது கண்ணகியாகவே விளங்கினாள்.

கண்ணாத்தாள் கொச்சிக்குத் திரும்பாதது கண்ணப்பனுக்குப் பலவிதமான சந்தேகங்களை கிளப்பிக் கொண்டிருந்தது. இத்தனை வயதுக்கு மேலே நமக்கு இனி பிள்ளையே பிறக்காது என்று அவள் தீர்மானித்து தகாத முடிவுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது? எப்போதுமே நெருக்கடியான நேரங்களில் தான் மனிதனுக்கு குழப்பங்கள் ஏற்படுகின்றன! அதுவும் அடிக்கடி நெருக்கடிகளைச் சந்தித்திராத செல்லப்பிள்ளை களுக்குக் குழப்பங்கள் வந்துவிட்டால் அவர்கள் கற்பனையின் உச்சக்கட்டம் வரை போய்த்தான் திரும்புவார்கள்.

“கண்ணப்பர் இதற்கெல்லாம் குழம்பலாமா?” – என்று யாராவது அவனைக் கேட்டால், அதிகமாக இலக்கியமோ, தமிழோ படித்து விட்டால் இப்படித்தான் என்பான். அதோடு விடமாட்டான் – கவிச்சக்கரவர்த்தி கம்பன் சிறிய துன்பத்தைக்கூடத் தாங்கிக்கொள்ளமாட்டாராம்! நாவலாசிரியர் டூமாஸ் குடும்பக்கவலையால் நாவல் எழுதுவதையே நிறுத்தி விட்டாராம்; அதில் நான் மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா? – என்று விரிவுரை வேறு சொல்ல ஆரம்பித்து விடுவான். புதிதாகச் சந்திப்பவர்கள் அவனை ஒரு மாதிரியாக நினைத்துக் கொள்ளும் அளவுக்கு அவனது நடவடிக்கைகளும் பேச்சுவார்த்தைகளும் அமைந்து விடும்.

இளகிய உள்ளத்தை எளிதில் துன்பம் வசப்படுத்திக் கொண்டு விடுகிறது. கண்ணீரைக் கண்டு கலங்கும் நெஞ்சம் துன்பம் ஏற்பட்டதும் நடுங்கித் தவிக்கிறது. அதனால்தான் இளகிய நெஞ்சமுடையவர்கள் கோழைகளாக வாழத் தொடங்கிவிடுகிறார்கள்.

கண்ணப்பன் பிறவியில் கோழை அல்ல; சபலத்தால் தோல்வி மனப்பான்மையால் கோழையாகி விட்டான். தூற்றல்களும் கேலிப்பேச்சுகளும் அவனை அரைமனிதனாக்கி விட்டன. மனிதமனம் கூட ஒரு வகையான உலோகம் போன்றதுதான். நெருப்பிலே வாட்டினால் அது எப்படி உருகிவிடுகிறதோ அதுபோலத்தான் துன்பத்தால் தாக்குண்டால் மனித மனமும் கருகிவிடுகிறது.

கண்ணாத்தாள் பதினைந்து நாட்கள் தன்னோடு இல்லாதது, உலகத்தில் எல்லோரும் அவனைக் கைவிட்டு விட்டதைப்போல் கண்ணப்பனுக்குப்பட்டது. பைனான்சிங் கம்பெனிக்கு அவன் ஒழுங்காகப் போகவில்லை. தினசரி வசூலை முறையாகக் கவனிக்கவில்லை, கடை வரவு செலவில் அவன் கவனம் சிறிதும் நாடவில்லை. வெளியூரில் படிக்கும் மாணவன் ஒவ்வொரு நாளும் பெற்றோர்களிட மிருந்து பணம் வருகிறதா என்று தபால்காரனை எதிர்பார்த்திருப்பதைப் போல கண்ணப்பன் ஒவ்வொரு நாளும் கண்ணாத்தாளின் வரவை எதிர் பார்த்திருந்தான்.

அன்று எதிர்பாராத வகையில் அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அது கண்ணாத்தாளின் தகப்பனார் எழுதியது. தனக்கு உடல் நலமில்லாததால் கண்ணாத்தாள் இன்னும் கொஞ்ச நாளைக்கு ஊரில் இருந்து விட்டு வரட்டும் என்று தான் தனது மாமனார் எழுதியிருப்பார் என்று கண்ணப்பன் நினைத்தான். ஆனால் அந்தக் கடிதம் ஒரு பயங்கரமான வெடி குண்டோடு வந்திருந்தது. கடிதத்தைப் படித்ததும் அவன் தலைசுற்றியது.

“அன்புள்ள மாப்பிள்ளைக்கு,

எப்போதும்காணாத மகிழ்ச்சியோடு நான் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறேன். பல வருஷங்களாக நான் கும்பிட்ட தெய்வங்கள் என்னைக் கைவிட்டு விடவில்லை. ரதிக்கிளி போன்ற என் மகள் ஊரார் பேச்சுக்கு ஆளாகி விட்டாளே என்று நான் ஒவ்வொரு நாளும் கடவுளை நிந்தித்துக் கொண்டிருந்தேன். எதற்கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டல்லவா? அந்த முற்றுப் புள்ளி இப்போது என் மனக் கவலைக்கும் வந்துவிட்டது. நீங்கள் மலையாள தேசத்திற்குப் போன முகூர்த்தமாகக் கண்ணாத்தாள் கருவுற்றிருக்கிறாள். அங்கே உள்ள தெய்வங்களுக்கெல்லாம் நீங்கள் நேரில் சென்று காணிக்கை செலுத்த வேண்டும்.

கண்ணாத்தாளின் திருமணத்திற்குப் பிறகு என் வீட்டில் நடக்கப்போகும் பெரிய விசேஷம் கண்ணாத்தாளுக்கு நடைபெற இருக்கும் வளைகாப்பு விழாதான். அதற்கு நாள் குறிப்பதற்கு உங்கள் அபிப்பிராயத்தை அறியத்தான் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறேன். ஐந்தாவது மாதத்தில் அல்லது ஏழாவது மாதத்தில்தான் வளைகாப்பு நடத்து வது வழக்கம். உங்கள் விருப்பம் அறிந்துதான் விழாவிற்கு தேதி குறிப்பிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இப்படிக்கு.
நாராயணன் செட்டியார்,”

கடிதத்தைப் படித்து முடித்ததும் தலையிலே மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு நெருப்பை வைத்துக் கொள்ளலாம் போல் தோன்றியது கண்ணப்பனுக்கு. பல ஆண்டு காலமாக சேகரித்தத்து வைக்கப்பட்ட உண்டியல் திருட்டுப் போனதைப் போல, உழைத்துச் சம்பாதித்துக் கட்டிய வீட்டில் இடி விழுந்து விட்டதைப் போல அவன் மனம் புழுவாகத் துடித்தது.

“குழந்தை ஆசையால் குடும்பத்தின் ஆணி வேரையே கிள்ளி எறிந்து விட்டாளே! நான் இல்லாத நேரத்தில் வீட்டில் ஏதாவது தப்பு நடந்திருக்குமோ? சேச்சே! பல ஆண்டு காலம் என் ரத்தத்தோடு ரத்தமாகப் பழகியவள் அப்படி நடந்திருக்கவே மாட்டாள்”. கலங்கிய குட்டையில் பூச்சி, புழுக்கள் மிதப்பதைப் போல அவன் உள்ளத்தில் பல சந்தேகங்கள் அணிவகுத்துத் தலை தூக்கின.

கண்ணப்பன் உள்ளத்தில் மனப்போராட்டம் வலுத்தது.

கொரியனின் மனைவி உத்தமி; மகாலெட்சுமி. அவளுக்கு அவன் கோவில் கட்டிக் கும்பிட வேண்டும். தனக்குப்பிள்ளை பிறக்காது என்றதும் அவள் தன்னையே மாய்த்துக் கொண்டாள்.

“ஆனால் இவள்? சுத்தமான சுயநலக்காரி. தனக்குப்பிள்ளை வேண்டும் என்பதற்காக என் உயிரையே வாங்க எண்ணிவிட்டாள். ஊரில் இப்படிப்பட்ட தவறுகள் செய்ய முடியாது என்பதால்தான் வீட்டை விட்டுப்போக வேண்டும் என்று அடம்பிடித்திருக்கிறாள்”.

“பெண்கள் மிகவும் மோசமானவர்கள். அதிலும் ஏமாற்றமடைந்த பெண்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அற்ப ஆசைக்காக அரசாங்கத்தையே கவிழ்ப்பவர்கள் என்பதால்தான் முனிவர்களே அவர்களைச் சாடியிருக்கிறார்கள்”

இப்படி கிறுகிறுத்துப் போனான் கண்ணப்பன். அப்போது அவன் கொச்சி நண்பன் சசிகுமார் உள்ளே நுழைந்தான்.

சசிகுமார், கண்ணப்பனுக்குக் கிடைத்த கொச்சி நண்பன். அவன், ஒரு தமிழ் பெண்ணுக்கும் ஒரு- மலையாளிக்கும் பிறந்தவன். அவனுடைய தந்தை தமிழ் நாட்டில் அதிகாரியாக இருந்தபோது அங்கேயே ஒரு பேராசிரியையைத் திருமணம் செய்துகொண்டார். அவரது சொந்த ஊர் எர்ணாகுளம். பதவிக் காலம் முடிந்ததும் அவர் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார்.

சசிகுமாருக்குத் தமிழும் தெரியும், மலையாளமும் தெரியும். அவனும் கொச்சித்துறைமுகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். கண்ணப்பனின் தமிழ்ப்பற்று சிகுமாரைக் கவர்ந்ததால் சசி அவனுக்கு உற்ற நண்பனாகிவிட்டான்.

கல்யாணமாகாத ஆணும், பெண்ணும் சந்தித்தால் அது காதலாகிவிடுகிறது. ஆகாவிட்டாலும் உலகம் அதைக் காதல் என்றே சொல்லிவிடும். ஆனால் இரண்டு ஆடவர்கள் சந்தித்தால் அதைப்பற்றி உலகம் கவலைப்படுவதே இல்லை.

சசி அன்று வீட்டுக்குள் நுழைந்தபோது கண்ணப்பனிடமிருந்து என்றும் போல் வரவேற்பு கிடைக்கவில்லை.

“சசி, இன்று என் மனம் சரியில்லை. என்னவோ போல் இருக்கிறது. சூரியோதயத்திலிருந்து பத்து நாழிகை வரை மனம் நிம்மதியாக இருந்துவிட்டால் அன்று முழுதும் கவலை அணுகாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நேற்று மாலையிலேயே என்னைத் துக்கம் முற்றுகையிட்டுவிட்டது'” என்றான் கண்ணப்பன்.

“நல்ல நூல்களைப் புரட்டினால் எல்லாம் சரியாகிவிடும்”

“இந்த யோசனையை என்றைக்கும் நான் ஏற்றுக் கொண்டதில்லை. மனம் சரியாக இல்லாதபோது மனிதன் எதையும் ரசிக்க முடியாது. கோபமாக இருந்தாலே சாப்பிட முடிவதில்லை. கோபம் என்கிற போதை தணிகிறவரை குழந்தைகளின் குமிழ் சிரிப்புகூட மனதுக்குக் குளிர்ச்சி தருவதில்லை.” கண்ணப்பன் இப்படிப் பதில் சொன்னான்.

“வீட்டில் அண்ணியார் இல்லையா? ஊருக்குப் போனவர்கள் இன்னும் திரும்பவில்லையோ?” சசி பேச்சை மாற்றினான்.

“பெண்கள் தாய் வீட்டுக்குப் போனாலே இப்படித்தானே! அவர்களது பழைய நினைவுகள் மறையவே பத்து நாட்களாகும். சிறுமியாக இருந்த போது சிட்டிவைத்து விளையாடியதிலிருந்து செப்புக் குடம் எடுத்து சேங்கைக்குப் போன காலம் வரை பேசிப் பேசிப் பொழுதைப் போக்குவார்கள்!” என்றான் கண்ணப்பன்.

“சரி இன்று நீங்கள் சோகமாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?”

“கவலைகள் பல விதம் உண்டு ச்சி, பிறர் தலையிட்டால் தீர்ந்து விடக்கூடிய கவலைகளும் உண்டு. யார் தலையிட்டாலும் தீராத கவலைகளும் உண்டு. இதில் என் கவலை இரண்டாவது வகை. இந்தத் திருவிதாங்கூர் மன்னரே வந்தாலும் என் கவலையைத் தீர்க்க முடியாது. தானாக அந்தக் கவலை கரைந்தாலொழிய அல்லது நானாசு மடிந்தாலொழிய என் கவலை தீரவே தீராது” என்றான் கண்ணப்பன்.

“கவலைகள் என்பது எல்லோர் மனத்திற்கும் பொதுவானதுதான். எப்பேர்ப்பட்ட கவலைக்கும் குறிப்பிட்ட ஆயுள் தான் உண்டு! நாள் செல்லச் செல்ல அதன் வேகம் தானாகக் குறைந்து விடும். இரண்டு வருஷங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தில் திடீரென்று புகுந்த கவலை இப்போது தணிந்து தணிந்து விட்டது. எங்கள் குடும்பத்தில் அனைவருமே அன்று தற்கொலை செய்து கொண்டு மடிந்து விடலாம் என்றுதான் நினைத்தோம். பிறகு எப்படியோ நாங்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதல் அடைந்து விட்டோம்” என்றான் சசி.

“சசி, இவ்வளவு நாட்களாக நீ இதை என்னிடம் சொல்லவே இல்லையே! அது என்ன உன் குடும்பத்தையே உலுக்கிய கவலை?”

“காணாமல் போன சுபத்ரா என்ற என் தங்கையைப்பற்றிய கவலைதான்!”

“இரண்டு வருஷங்களுக்கு முன் போனவளா இன்னும் திரும்பவில்லை?”

“ஆம்; அவள் இறந்து விட்டாள் என்று நாங்கள் தீர்மானித்துக் கொண்டோம். என் தாயிடமும் அப்படியே சொல்லிவிட்டோம். அவள் இருக்கிறாள் என்று இன்று நினைத்தாலும் என் தாயார் திடீரென்று மனம் குன்றிப் போய் விடுகிறார்கள்.”

கண்ணப்பனுக்கு இது ஒரு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

6

கண்ணப்பன் அடைதிருந்த அதிர்ச்சியை தபால்காரனின் மணிச்சத்த கலைத்தது. தபால்காரன் ஒரு கடிதத்தைக் கண்ணப்பனிடம் கொடுத்தான். அது கண்ணாத்தாளிடமிருந்து வந்த கடிதம். கண்ணப்பனுக்கு அவள் மீதிருந்த கோபத்தினால் அந்தக் கடிதத்தை நெருப்பு வைத்துக் கொளுத்திவிட நினைத்தான்.

“சண்டாளி, ஏதாவது போலிச் சமாதானத்தை எழுதியிருப்பாள்; என்னதான் அவள் எழுதியிருந்தாலும் நான் அதை நம்பப்போவதில்லை. ஒரு டாக்டரின் பரிசோதனைக்குப் பிறகு – உனக்கு இனிமேல் கருத்தரிக்க வழியே இல்லை என்று சொன்னபிறகு இவளுக்கு வளைகாப்பு வருகிறதென்றால் இதைவிட ஒரு புருஷனுக்கு மானக்கேடான சம்பவம் உண்டா?” என்ற மனக்குமுறலுடன் அவன் அந்தக் கடிதத்தை பிரித்தான். ஆனால் அதில்,

“அன்புள்ள அத்தான் அவர்களுக்கு, வணக்கம். நேற்று என் தகப்பனாரின் தபால் உங்களுக்குக் கிடைத்திருக்கும். அதைப் பார்த்ததும் அளவில்லாத ஆனந்தம் அடைந்திருப்பீர்கள். நாம் எர்ணாகுளத்திற்குப் போன முகூர்த்தமாக நமக்குக் குழந்தை பிறக்கப் போகிறது என்று புளகாங்கிதம் அடைந்திருப்பீர்கள். ஆனால் அந்த மகிழ்ச்சியை இந்தக் கடிதம் உடைத்துத் தூளாக்கி விடப் போகிறதே என்பதை எண்ணி என் மனம் பெரிதும் துன்புறுகிறது

அத்தான், எனக்கு வளைகாப்பு நடத்திட நாள் குறித்து அனுப்பும்படி என் தகப்பனார் உங்களுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக இங்கே பேசிக் கொள்கிறார்கள். இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு எழுதிய கடிதம் அது! வளைகாப்பு என்பது ஐந்தாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சி. உங்களுக்குத் தெரியாமலா எனக்கு வளைகாப்பு வந்துவிடும்? ஆனால் இங்கே இருக்கிறவர்களுக்கு அதெல்லாம் தெரிந்திட நியாயமில்லை அல்லவா? எல்லாமே நீங்களும் நானும் எதிர்பாராத நாடகமாக நடந்துவிட்டது.

நாம் இருவரும் சென்ற வருஷம் எர்ணாகுளத்திற்குப் புறப்படும்போது நான் இனிமேல் கோயிலூருக்குத் திரும்பும்போது வளைகாப்பு விழாவிற்குத்தான் வருவேன் என்று என் வயிற்றெரிச்சலைச் சபதமாகப் போட்டுவிட்டு வந்தேன். அது உங்களுக்கும் தெரியும். அதை உண்மை என்று எண்ணிக் கொண்டு உடல் நலமில்லாத தாய் தகப்பனைப் பார்க்க வந்த என்னை என் பெற்றோர்களும், உங்கள் பெற்றோர்களும் சேர்ந்து கர்ப்பவதியாக்கி விட்டார்கள். அதை மறுக்கவோ, தெளிவுபடுத்தவோ அவர்கள் எனக்கு அவகாசம் அளிக்கவில்லை, அவ்வளவு குதூகலம் அவர்களுக்கு! ஊர் முழுதும் ஒரே பேச்சு – கண்ணாத்தாளுக்கு வளைகாப்பு வந்துவிட்ட தென்று! உறவினர் வீட்டுப் பெண்களெல்லாம் – வயிறு சிறிதாக இருப்பதால் பெண் குழந்தையாகத்தான் இருக்கும் – என்று ஜோசியம் சொல்லத் தொடங்கி விட்டார்கள். எர்ணாகுளம் தண்ணீர் நல்ல தண்ணீர்; குருவாயூரப்பன் ஒரு வரதையான தெய்வம் என்ற வர்ணனைக்கும் இங்கே குறைவில்லை. பிள்ளை இல்லாதவர்களெல்லாம் இனிமேல் ராமேஸ்வரத்திற்கோ, காசிக்கோ போகவேண்டியதில்லை. எர்ணாகுளம் போய் குடியிருந்தால் போதும் என்று கிண்டலாக ஊரில் பேசிக் கொள்வது இரவு முழுதும் என் காதுகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது.

ஆனால் நீங்கள் முன் கடிதத்தைப் பார்த்து என்ன நினைப்பீர்கள் என்று என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை. பிள்ளை இல்லை என்பதற்காக மூத்தவனான என்னை அவமானப்படுத்தினார்களே, இனி அவர்களைத் தலை குனிய வைத்தே தீருவேன் என்று எக்காளமாக எண்ணிக் குதூகலித்துக் கொள்வீர்கள். இந்த வதந்தி, புரளி எல்லாம் உண்மையாக இருந்திருக்கக் கூடாதா என்றுதான் நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். பெண்களின் வாழ்க்கையில் சில சம்பவங்கள் ஏன் நடந்தன என்று எண்ணிவிடத் தோன்றுகிறது; ஆனால் ஒரு சில பெண்களின் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாதா என்று நினைத்துவிடவும் நேரிடுகிறது

இப்போது உங்கள் பெற்றோரும் என் பெற்றோரும் உங்களின் கடிதத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள். திருமணத்தை நிச்சயித்துவிட்ட வீட்டைப்போல் இங்கே ஒரே அமர்க்களமாக இருக்கிறது. நான் வடிக்கும் கண்ணீரை இங்கே இருப்பவர்கள் ஆனந்தக்கண்ணீர் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எந்தப் பெண் ணுடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு கட்டம் வந்திருக்கவே முடியாது. உலகத்தில் எல்லோரும் தூங்கிக்கொண்டு கனவு காண்பார்கள்; நான் நடந்துகொண்டும், பேசிக் கொண்டும் ஊமைக்கனவு கண்டுகொண்டிருக்கிறேன். அந்தக் கனவைக் கலைக்க வேண்டியது, அல்லது எனக்கு சுய நினைவை ஊட்ட வேண்டியது என்றும் போல் உங்கள் பொறுப்புத்தான்; வழக்கமாக நான் யாரிடம் வரம் கேட்டு நிற்பேனோ அந்தத் தெய்வத்திடம்தான் இப்போதும் வரன் கேட்டு நிற்கிறேன்.

என்றும் தங்கள் கண்ணாத்தாள்”

– என்று குறிப்பிட்டிருந்தது.

கடிதத்தைப் படித்து முடிக்கு முன்பே அவன் முகம் வியர்த்து விட்டது. உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது. கோபத்தில் தெய்வத்தை இகழ்ந்து விட்ட பக்தனைப் போல் தலையில் அடித்துக் கொண்டான். அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் வாழ்பவன்கூட தன்னைத் துன்பம் தாக்கும் போது தாங்கிக்கொள்ள முடியாமல் அடுத்த தெருவுக்கே கேட்கும்படி அலறி விடுகிறான். அதிலும் கோழை மனம் படைத்த செல்லப் பிள்ளைகளின் உள்ளம் இம்மாதிரி நேரங்களில் உடைந்து நொறுங்கி பின்னிக்கிடக் கும் முருக்கைப் போல கலகலத்து விடுகின்றன. சற்று முன்பு சண்டாளியாத் தெரிந்த கண்ணாத்தாள் இப்போது கண்ணப்பனுக்குத் தேவதையாகத் தெரிந்தாள்.

“என்னை மன்னித்து விடு கண்ணா! உன்னை எவ்வளவு சீக்கிரத்தில் நான் லேசாக எடைபோட்டு விட்டேன். மலடி என்ற அவச் சொல்லை நீ துடைத்துக் கொள்வதற்காகப் புருஷனை நெருப்பாற்றில் தள்ளி விட்டாயே என்று நான் உன்னைப் பற்றிப் போட்டுக் கொண்ட கணக்கு எவ்வளவு தவறாகப் போய் விட்டது கண்ணா! என்னைச் சாவிலே இருந்து ஒரு நொடியில் காப்பாற்றிய உன்னை நான் என்றும் தலைகுனிய விடமாட்டேன்” என்று தனக்குள்ளே ஏதோ தீர்மானித்துக் கொண்டவனாய் வீட்டுக்குள் ஓடி கண்ணாத்தாளுக்கு பதில் கடிதம் எழுதினான் கண்ணப்பன்.

கண்ணப்பனிடமிருந்து யாருக்கும் கடிதம் வரவில்லையே என்று எல்லோரும் திகைத்துப் போயிருந்தார்கள். ஒரு வாரத்திற்குப் பிறகு கண்ணாத்தாளுக்கு மட்டும் அவனிடமிருந்து கடிதம் வந்தது.

“பிரியமுள்ள கண்ணாவுக்கு, உன் கடிதம் கிடைத்தது. அந்தக்கடிதம் என்னை மறுபிறவி எடுக்க வைத்து விட்டது. தக்க நேரத்தில் உன் கடிதம் வந்து சேர்ந்திரா விட்டால் நம் இருவருடைய வாழ்க்கையிலும் விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.

கண்ணா, கடிதத்தில் எதையும் விரிவாக எழுத வேண்டாமென்று நினைத்துக் சுருக்கமாகவே எழுதியிருக்கிறேன். உன்னை எல்லோருமாகச் சேர்ந்து கர்ப்பவதியாக்கி விட்டார்கள் என்று மட்டும் எனக்குப் புரிகிறது. அதுவும் ஒருவகைக்கு நல்லது தான். இனிமேல் நீ எதையும் அடித்துப் பேசி அகப்பட்டுக் கொள்ள வேண்டாம்; ஆகவே என் கண்ணா கர்ப்பவதி தான்! ஆம்; கர்ப்பவதியாக நடித்துவிடும்படி உனக்குச் சொல்லுகிறேன். மற்றவைகளைப் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். இந்தக் கூத்தினால் மலடி என்ற கேலிப் பேச்சும் இனி உன்னைத்தீண்ட முடியாது; நான் பிள்ளை இல்லாதவன் என்பதால் நான் என் வீட்டில் இழந்த மரியாதையையும் திருப்பிக் கொள்வேன். நாமே பெற்றால் தானா பிள்ளை? கண்ணா ஒரு முறை நீ சொன்னாயே – குடும்பம் என்றால் ஏதாவது ரகசியம் இருக்கவேண்டும் என்று! அதைக் காப்பாற்ற வேண்டியது இன்று முதல் நம் வீட்டுப் பொறுப்பு.

இப்படிக்கு உன் கணவன்
கண்ணப்பன்.

கண்ணாத்தாளுக்கு இந்தக்கடிதம் துப்பறியும் கதை படிப்பது போல் இருந்தது. கடிதத்தை மறைத்துக் கொண்டு அறைக்குள் ஓடினாள்.

“கண்ணாத்தா!”

“உன் மாப்பிள்ளை என்ன எழுதியிருக்கார்?”

“இந்த மாதத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என்று எழுதியிருக்கிறார் அப்பா!” அதற்குமேல் அவளால் பேசமுடியுமா?

கண்ணாத்தாள் இப்போது கர்ப்பவதி. உண்மையான கர்ப்பவதிகூட அப்படி நடந்து கொள்ள முடியாது? அதை விட அதிகமாக கண்ணாத்தாள் உடலை அலட்டிக் கொண்டாள்.

மாமியார் வீட்டில் இப்போது கண்ணாத்தாளுக்கு அளவு கடந்த மரியாதை. இட்லரிடம் இழந்த இடங்களை ஸ்டாலின் மீட்டுக் கொண்டதைப்போல கண்ணாத்தாள் உற்சாகமாக இருந்தாள்.

வளைகாப்பு விழா வெகு விமரிசையாக நடந்தது. கண்ணப்பன் பெண்ணைப்போல் வெட்கப்பட்டுக் கொண்டு யாரோடும் அதிகம் பேசாமலே நேரத்தைப் போக்கினான்.

கண்ணப்பன் தம்பி சொக்கநாதனும் வளைகாப்பிற்கு வந்திருந்தான், கண்ணப்பன், சொக்கநாதனைச் சந்தித்து இரண்டு வருஷங்களுக்கு மேலாகிவிட்டது. கண்ணப்பன், எர்ணாகுளத்திற்கு போவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு சொக்கநாதன் விசாகத்திருநாளுக்கு ஊருக்கு வந்திருந்தபோது இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகு கண்ணாத்தாளின் வளைகாப்பு விழாவில் தான் அவர்கள் சந்திப்பு ஏற்பட்டது.

சொக்கநாதன் கவர்ச்சியானவன். கண்ணப்பனை விடத் திடகாத்திரமானவன். சுருட்டை மயிர். ஆடை உடுத்துவதிலும் அலங்காரம் செய்து கொள்வதிலும் சிறு பிள்ளையிலிருந்தே சொக்கநாதனுக்கு அதிக நாட்ட முண்டு!.

சுருட்டைமயிர் நன்றாகப் படியவேண்டும் என்பதற்காகத் தலைக்குக் கரடிக்கொழுப்புப் போட்டுக் கொள்வான். அன்று முழுதும் நறுமணம் வீசவேண்டும் என்று எண்ணி சட்டையில் ‘அவினோலியா’ சென்ட் தடவிக்கொள்வான். அடிக்கடி புதுச் செருப்பு மாற்றுவதும் அவனுக்கு வாடிக்கை, காகிதத்தகடு போன்ற வாயல் வேஷ்டிகளே அவனுக்குப் பிடிக்கும், கையில் ஒற்றைக்கல் வைர மோதிரம் அணிந்திருப்பான்.

இரண்டு வருஷங்களுக்கு முன் ஒரு அரசகுமாரனைப்போல் விளங்கிய சொக்கநாதன் முகத்தில் இப்போது அருள். இல்லை. பூச்சி விழுந்த இலையைப் போல் அவன் முகம் சுருங்கியிருந்தது. அவன் சிரிப்பும் நடவடிக்கைகளும் செயற்கையாகவே இருந்தன. சொக்கநாதன் ஏன் இப்படி ஆகிவிட்டான்? அவன் உடலுக்குள்ளே ஏதாவது நோய் புகுந்து கொண்டு அவனை ஆட்டிப் படைக்கிறதா? கண்ணப்பனுக்கு இப்படியெல்லாம் ஒரு சிந்தனை.

“சொக்கு!”

“வந்திட்டேன்!”

“என்ன உன் உடம்புக்கு? ஏதாவது வைத்தியம் செய்து கொள்வது தானே?”

“அப்படி ஒன்றுமில்லை! எல்லோரும் என்னை இங்கு வந்ததும் இப்படித்தான் கேட்கிறார்கள். எனக்கு ஏதாவது வியாதி இருந்தால்தானே வைத்தியம் செய்து கொள்வதற்கு?”

அப்போதுதான் கண்ணப்பன் விளங்கிக் கொண்டான்!

சொக்கநாதன் நன்றாகக் குடித்திருந்தான். அவன் பேசும் போது சாராய நெடி கண்ணப்பனின் மூக்கைத் துளைத்தது.

7

சுபத்ரா!

இவள் அழகானவள்; மிகவும் அழகானவள். அவள் தோற்றம் காண்போர்களை உறுத்தக் கூடியது. சுபத்ரா பி. ஏ. பட்டம் பெற்று விட்டு வேலைக்காகக் காத்திருந்தாள்.

சுபத்ரா இசையிலும் வல்லவள். சின்ன வயதிலேயே அவள் வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டாள்.

பொழுது போகாத நேரங்களில் புத்தகம் படிப்பதைப் போல அவள் வயலின் வாசித்துக் கொண்டே இருப்பாள். ஒருநாள் அவளுக்கு திடீரென்று திருவனந்தபுரத்திலிருந்து ஒரு இண்டர்வியூ வந்தது. மறுநாளே அவள் திருவனந்தபுரத்துக்குப் புறப்பட ஆயத்தமானாள். அவள டைய அண்ணன் சசிகுமார் சுபத்ராவை திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தான். சுபத்ரா பகல் நேரத்தில் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தாள். அவள் வந்ததும் வராததுமாக இண்டர்வியூக்குக் கிளம்பினாள். சுபத்ரா, திருவனந்தபுரத்திற்குப் புதியவளாக, வெளியூரே போயிராத வெகுளியாகப் பார்ப்பவர்களுக்குத் தோன்றினாள்.

“டேவிட்!”

“என்ன பாஸ்?”

“மான் மருளுவதைப் பார்த்தாயா?”

“இளங்கன்று பாஸ்! துருதுருவென்று இருக்கும் இருவிழிகள்; தொட்டால் சிவக்கும் பருவப்பதுமை!”

“போதும்!”

இந்த உரையாடல் கேட்டுத் திரும்பிப் திரும்பிப் பார்த்தாள் சுபத்ரா. இரண்டு போலீஸ்காரர்கள் அவளருகே வந்து கொண்டிருந்தார்கள்.

“ஏய், யார் நீ?” என்றான் ஒருவன்.

“எங்கே புறப்பட்டே சொகுசா?” என்றான் அடுத்தவன்.

“பெரிய ஸ்டார் மாதிரியில்லை கெளம்பிட்டா, டிக்கட் போடுறவ போலேருக்கு!” போலீசாரின் பேச்சு அத்துமீறியது.

“பிராத்தல் கேசப்பா இது? பட்டணத்துக்கு ஏற்றுமதியாகுது! ம்…! கிளம்பு ஸ்டேஷனுக்கு!” என்று ஒருவன் மிரட்ட, அடுத்தவன் லத்தியை வைத்து சுபத்ரா வைத் தள்ள – அவள் எப்படியோ ஒரு டாக்சியில் ஏற்றப் பட்டாள்.

அழகு சில பெண்களுக்கு வாழ்வின் சூரியோதயமாக அமைகிறது; வேறு சிலருக்கு வாழ்வின் அஸ்தமனமாக ஆகிவிடுகிறது.

“இப்ப எங்கே போகணும் ?” டாக்சிக்காரன் கேட்டான்.

“போய்க்கொண்டே இரு! இப்ப நீ எந்தப் பாதையில் போகிறாய்?”

“நாகர்கோயில் பாதை இது!”

“ரொம்பச்சரி!”

சுபத்ரா தீக்குளித்தவளைப்போல் காருக்குள் சுருண்டு கிடந்தாள். மயக்கம் அவளைப் புரட்டிப் புரட்டிப் போட்டது.

“மூன்று வருஷத்துக்கிடையிலே இப்படி ஒரு உருப்படி கெடைச்சதே இல்லை. இன்று நமக்கு நல்ல லக்கு!”

சுபத்ரா திகைத்தாள். இவர்கள் உண்மையான போலீஸ்காரர்கள் இல்லையென்று அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.

“இரண்டாயிரத்திற்குக் குறையக் கூடாது. கட் அண்ட் ரைட்டாப் பேசிடணும். முந்தி ஒருத்தியைக் கொடுத்தோம். நானூறு ரூபாய் தான் கொடுத்தான். ஆனால் அவன் இரண்டே நாளிலே அந்தத் தொகையை எடுத்துட்டான். அந்த பாய் இருக்கானே அவன் ஒரு மலை விழுங்கி! பத்து வருஷமா நாம் இப்படியே தான் இருக்கோம். அவன் லாரி வாங்கிட்டான். வீடுகட்டிட்டான். திருநெல்வேலியிலே இன்னக்கி அவன் ஒரு பெரிய புள்ளியாம். நகரசபைத் தேர்தலுக்கும் நிக்கப் போறானும். பாய், கொடுத்து வச்சவன்; இன்னக்கி ஒரு கைபடாத ரோஜா கிடைக்கும்னு அவன் சொப்பனம் கூடக்கண்டிருக்க மாட்டான்”.

இந்தப் பேச்சு சுபத்ராவுக்கு மதிமயக்கத்தை அதிகரிக்கச் செய்து விட்டது. அவள் நினைவை இழந்தாள்.

பொழுது புலர்வதற்குள் டாக்சி திருநெல்வேலி வந்து விட்டது. கிழக்கு வெளுக்கப்போகும் நேரம். டாக்சி, நகரில் பல தெருக்களைத் தாண்டி இடுக்கும், முடுக்கும் நிறைந்த ஒரு பகுதிக்குள் வந்து விட்டது.

“வாழ்க! ஆகா. பிரமாதம்!” என்று வரவேற்புக் கொடுத்தான் ராசாக்கிளி ராவுத்தர். குடித்தவனைப் போல் பேசினான். ஆனால் அவன் குடிக்கமாட்டான். அப்படி அவனுக்கு ஒரு பேச்சுப் பழக்கம்.

ராசாக்கிளி ஒரு விநோதமான தோற்ற முடையவன். கைலி; ஒரு அழுக்குப்பிடித்த மேலே ஒரு முண்டா பனியன்; இடுப்பிலே பச்சை பெல்ட்; டக்டக் என்று பயங்கரமான ஓசைதரும் ‘பூட்’சுகள் காலில்; இளம் தாடி; ஆனால் மீசை இல்லை. பெண் குரலுக்கு எதிரான எருமைக் குரல். சிங்கத்தை அடக்கும் சர்க்கஸ்காரனைப் போல் நடவடிக்கைகள்.

சுபத்ராவைப் பார்த்ததும் நன்றாகப் பழக்கமான பெண்ணுடன் போல் பேசுவதைப் அவளை கனிவோடு உள்ளே அழைத்துக் கொண்டு போனான். லாயத்திற்குள் நுழைய இடக்கு செய்யும் புதிய குதிரையைப் போல சுபத்ரா திமிறினாள். இரவெல்லாம் அழுது அழுது அவள் கண்கள் பாழடைந்து கிடந்தன. மழைபெய்து ஓய்ந்த ஏரிக்கரையைப் போல அவள் கன்னங்களில் கறைக் கோடுகள் காய்ந்து தெரிந்தன.

ஒருவன் காபி கொண்டு வந்து கொடுத்தான். சுபத்ரா அதைத் தொட்டுக்கூடப் பார்க்க வில்லை. இன்னொருவன் சீப்பும், கண்ணாடியும் கொண்டு வந்து வைத்தான். சுபத்ரா அந்த திசைப்பக்கமே திரும்ப வில்லை. அந்த மாளிகைக்கே உரிய ஒரு பல்லுப் போன சீப்பு; சில்லுப்போன ஒரு கண்ணாடி!

கொஞ்ச நேரத்திற்குள்ளாக சுபத்ராவைக் கடத்திக் கொண்டு வந்த கார் புறப்பட்டு விட்டது. அப்போது சுபத்ராவின் மனத்தில், ‘இந்த ராசாக்கிளி ராவுத்தரை விட தன்னைக் கடத்தி வந்தவர்கள் பரவாயில்லை’ போல தோன்றியது. வெயிலில் நடந்து களைத்த அவள் மனதுக்கு பனைமரத்து நிழல்கூட ஆலமரத்து நிழலாகத் தெரிகிறது,

ராசாக்கிளி ராவுத்தர் புதுக்கோட்டையை சேர்ந்தவர். இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு அதாவது விபச்சாரத் தடைச் சட்டம் அமுலானதும் பிழைப்பிற்காக திருநெல்வேலிக்குக் குடியேறினார். அங்க தொடங்கிய தொழில்தான் இது! புதுக்கோட்டையிலிருந்து போகும்போதே நான்கு குமரிப்
பெண்களை உடன் அழைத்துப் போய்விட்டார். அதிக மூலதனம் போட்டு நாணயமாக நடத்தும் வியாபாரத்தை விட இதில் அபரிமித லாபம் கிடைப்பதை ராசாக்கிளி தெளிவாக உணர்ந்து கொண்டார்.

பத்து வருஷங்களுக்குள்ளாக ராசாக்கிளி திருநெல்வேலியில் ஒரு செல்வந்தராகி விட்டார். பணக்காரர்களை மதித்துப் பழக்கப்பட்ட பாமரர்கள், ராசாக்கிளில் மட்டும் எப்படிப் புறக்கணிக்க முடியும் ! அவர் நடந்து வந்தால் எழுந்து நிற்பது, அவர் பேச்சைத் தட்டாமல் கேட்டி நடப்பது என்பதெல்லாம் அந்தத் தெருவுக்கே கைவந்த கலையாகி விட்டது. எதிர்த்துப் பேசினால் எந்த அதிகாரியிடமாவது பிடித்துக் கொடுத்து விடுவார்; பிறகு அவரே போய் மீட்டுக்கொண்டு வருவதாக பாசாங்கு செய்வார்; எப்படியோ ராசாக்கிளி திருநெல்வேலியில் ஒரு ஒரு ‘பாப்புலர்’ மனிதராகி விட்டார்.

படிக்காதவர்கள் சில நேரங்களில் சிந்தனையாளர்ளைப்போல் பதில் சொல்லிவிடுகிறார்கள். ராசாக்கிளி தொழில் விபச்சார மாளிகை நடத்துவது; யாராவது அவரைக் கேட்டால், “வட்டிக் கடைக்காரன் பணத்தை வாடகைக்கு விடுவதைப்போல, சைக்கிள் கடைக்காரன் சைக்கிளை வாடகைக்கு விடுவதைப்போல நான் ரதிக்கிளி மாதிரிப் பெண்களை வாடகைக்கு விடுகிறேன்; இதுவும் ஒரு தொழில் தானே! திருடினால் குற்றம், கொலை செய்தால் குற்றம், பிறருக்கு இன்பத்தைக் கொடுத்து அதற்குப் பணம் வாங்கிக்கொள்வது எப்படி குற்றமாகும்? சுவையான ஹாட்டலில் சாப்பிட்டால் ஏற்படும் திருப்தியைவிட எனது மாளிக்கைக்கு வந்தால் அதிகமான மனத்திருப்தி கிடைக்கும்” என்று விளக்கம் தருவார் ராவுத்தர்.

ராசாக்கிளிக்கு என்றைக்கும் போலீசில் பயம் இருந்ததில்லை. ஏனென்றால் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் ராசாக்கிளியின் வசந்த மண்டபத்திற்கு வராத போலீஸ் அதிகாரிகளே இல்லை.

சுபத்ரா திருநெல்வேலிக்கு வந்து பத்து நாட்களாகி விட்டன. அசோகவனத்துச் சீதையைப் போல ராசாக்கிளி அவளைத் தனிமைப் படுத்திவைத்திருந்தார். இடையிடையே தூதுகள், மிரட்டல்கள் நடந்தன. எதற்கும் சுபத்ரா பணியவில்லை.

“சுபத்ரா, நான் யாருக்கும் இவ்வளவு அவகாசம் அளித்ததில்லை! இன்னும் இரண்டே தினங்கள் உனக்குத் தருகிறேன். அதற்குள் உன் மனதை நீ சரிப்படுத்திக் கொள்ளவேண்டும். எனக்கு ஐந்து வருஷங்களாகக் கைராசிக்காரராக இருந்துவரும் காசியப்பர் நாளை மறுதினம் வருகிறார்” என்று எச்சரித்துப்போய் விட்டார். ராசாக்கிளி.

அந்த நாளும் வந்துவிட்டது. காசியப்பர் ஜவ்வாதுப் பொட்டு கமகமக்க குறித்த நாளில் வந்து விட்டார்.

ராசாக்கிளி காசியப்பருக்கு புது மாப்பிள்ளைக்கு அணிவிப்பதைப்போல் மாலை அணிவித்து வரவேற்றார்.

மாடியில் சுபத்ராவின் அறையில் வாசனைகள் தெளிக்கப்பட்டிருந்தன. ஊதுபத்திகள் ஒரு பக்கம் கண்ணீரைப் புகையாகக் கக்கிக் கொண்டிருந்தன. சுபத்ராவிற்காக வாங்கிவந்த ஒரு பந்து மல்லிகைப்பூ மேஜையில் சீண்டுவாரற்றுக் கிடந்தது. வெள்ளிக்கூஜாவில் நயம் பசும்பாலும், அதனருகே இரு ஆப்பிள் பழங்களும் காத்திருந்தன.

ராவுத்தரி, காசியப்பரை மரியாதையுடன் உள்ளே அழைத்து வந்தார்.

‘சுபத்ரா, நானும் போகுது போகுதுனு பாக்கிறேன். நீயோ உச்சாணிக் கொம்பிலே ஏறிக்கிட்டே போறே! உன்னைவிட ராணிகளையெல்லாம் பாத்தவரு இவரு! எங்க முதலாளிகிட்டே இன்னிக்கு நீ முறையா நடந்துக்கல்லையின்னா என் சுயரூபத்தைக் காட்டித்தான் ஆகணும்! என்னிடத்திலே மாட்டை விரட்டும் தாருக்கம்பு குதிரையோட்டும் நீளச் சவுக்கு, மனுசனை வதைக்கிற திருக் கைவாரு – எல்லாமே இருக்குது!” என்று தனது கொடிய குரலால் நெருப்பைப் பொழிந்து விட்டு ராசாக்கிளி கிடு கிடுவென்று இறங்கிப் போய் விட்டார்.

கதவுகள் சாத்தப்பட்டன. மல்லிகைப் பூவின் நறுமணமும், ஊதுபத்திகளின் வாசனைப்புகையும் வெளியேற வழியில்லாமல் ஆலிங்கனம் செய்து கொண்டன. ஆனால் காசியப்பரும், சுபத்ராவும் ஒருவரை ஒருவர் தீண்டாமல் சண்டைக்காரர்களைப் போல பிரிந்தே உட்கார்ந்திருந்தார்கள்.

நேரம் செல்லச் செல்ல காசியப்பருக்கு வியர்வை கொட்டத் தொடங்கியது. ஜவ்வாது கரைந்து ஒழுகியது.

மனிதன் சாப்பிடுவதற்கே பசி என்ற உணர்ச்சி தேவைப்படும் போது சுகபோகங்களுக்கு மட்டும் அப்படிப் பட்ட உணர்ச்சி தேவைப்படாமல் போகுமா? அதனாலேயே காசியப்பர் மிருகத்தனமாக நடந்து கொள்ளவில்லை. அவர் அச்சம் கலந்த உணர்ச்சியில், சுதந்திரமில்லாத உணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார். அவர் உள்ளம் என்றும் இல்லாத அளவுக்குப் படபடத்தது.

“உன் பெயரையாவது உன் வாயால் சொல்லேன்; உன் குரலாவது எனக்கு இன்பமூட்டட்டும்.”

சுபத்ராவிடமிருந்து எந்த பதிலுமில்லை!

காசியப்பர் கனிவாகப் பேசினார்.” உனக்கு இஷ்டமில்லாவிட்டால் எனக்கும் அவசியமில்லை. ஏதோ ராவுத்தர் வழக்கம் போல் அழைத்தார்; வந்தேன். உன்னைப் பார்த்தால் எனக்கும் இரக்கம்தான் வருகிறது. எனக்கும் பிள்ளைகள் இருக்கின்றன. ஆனால் எனக்கு மனைவி இல்லை. இறந்துவிட்டாள். அதனால் தான் நான் இப்படி அலைகிறேன்” காசியப்பர் அருள் வந்தவரைப் போல சுபத்ராவின் எழிலில் மயங்கி உண்மைகளைக் கொட்டிக் கொண்டிருந்தார்.

இந்தக் கட்டத்தில் சுபத்ரா பேசத் தொடங்கினாள். அது காசியப்பருக்கு மீனாட்சியம்மனே வாய் திறந்து பேசுவது போலிருந்தது.

“என்னை நீங்கள் மன்னித்து எப்படியாவது காப்பாற்றவேண்டும். நான் பி. ஏ. வரை படித்தவள். எனக்கு திருவனந்தபுரத்தில் ஒரு இண்டர்வியூ. அதற்காக எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு வந்தேன். வழியில் இரண்டு போலீஸ்காரர்கள் மடக்கி இங்கே கொண்டுவந்து சேர்த்துவிட்டார்கள்”,

காசியப்பர் எதுவும் பேசாமல் தலையணையில் சாய்ந்தபடி இருந்தார்.

“பாவங்களுக்குத் தண்டனை உண்டென்றால் புண்ணியங்களுக்கும் சக்தி இல்லாமல் போகாது. அந்தப் புண்ணியத்தை நீங்கள் எனக்குச் செய்யுங்கள” என்றாள் சுபத்ரா.

“சுபத்ரா, நீ இந்த முரடனிடமிருந்து தப்புவது மிகவும் கஷ்டம். உன் இரத்தத்தை உறிஞ்சிவிட்டுத்தான் இவன் உன்ன விடுவான். என்னால் உனக்கு செய்ய முடிந்த உதவி நீ என்னிடம் பவ்யமாக நடந்து கொண்டாய் என்று சொல்லுவதுதான். அவன் அதிகாலையில் வந்து செட்டியார் கொடுத்த பணம் எங்கே என்று கேட்பான். அதற்காக உன் கையில் இருநூறு ரூபாய்களைத் தந்து விட்டுப் போகிறேன்” என்று முற்றி லும் மாறியவராய் காசியப்பர் பேசினார்.

சுபத்ரா பி.ஏ. படித்த சர்டிபிகேட்டும் அவளது இண்டர்வியூ கடிதமும் தான் காசியப்பரை ஒரு தந்தை ஸ்தானத்திற்குக் கொண்டுபோய் விட்டது.

காசியப்பர் புறப்படும் போது சுபத்ரா ஒரு துண்டுச் சீட்டை அவரிடம் கொடுத்தாள். அவர் அந்தச் சீட்டை அந்த இடத்தில் பிரிக்க விரும்பாமல் வெளியேறிவிட்டார்.

சுபத்ராவின் குடும்பம் கண்ணீரில் மிதந்தது. அவளுடைய தாய், தகப்பன், சகோதரன் எல்லோருமே இருட்டறையில் அடைக்கப்பட்ட கொக்குகளைப் போல் திகிலடைந்து போய் விட்டார்கள்.

“எங்கள் சுபத்ரா மினு மினு என்று இளமைப் பூரிப்பில் மின்னிக் கொண்டிருந்தவளாயிற்றே, அவள் எந்தக் கழுகின் கையில் சிக்கினாளோ, உயிரோடுதான் இருக்கிறாளோ, இறந்துதான் போய் விட்டாளோ?” என்று அவர்கள் தினசரி புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு மாதங்கள் கழித்து அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது. காசு இல்லாமல் தவிக்கும் ஹாஸ்டல் மாணவனுக்கு தெருவில் ஒரு மணிபர்ஸ் கிடைத்ததைப் போல் மகிழ்ச்சியோடு கடிதத்தைப் பிரித்தார்கள்.

“அன்புடையீர், வணக்கம். நான் உங்களில் யாருக்கும் அறிமுகமில்லாதவன். இருந்தாலும் நான், பிள்ளைப் பாசத்தை உணர்ந்தவன் என்ற முறையில் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன்.!

செல்வி சுபத்ரா திருநெல்வேலியில் கிருஷ்ணராசபுரத்தில் உள்ள ஒரு விபச்சார விபச்சார மாளிகையில் சிக்கிக் கொண்டு ஒற்றைச் சிறகினால் துடித்துக் கொண்டிருக்கும் பறவையைப் போல தரையில் குதித்துக் கொண்டிருக்கிறாள். அந்த விபச்சார விடுதி ராசாக்கிளி என்ற ஒரு முரடனால் நடத்தப்பட்டு வருகிறது.

இப்படிக்கு
காசியப்பன்”

கடிதம் கிடைத்த மறு கணமே சசிகுமார் திருநெல்வேலிக்குச் சென்றான். அங்கே தக்க உதவியோடு சசி அந்த விபச்சார மாளிகைக்குப் போனான். ராசாக்கிளி வழக்கம் போல இன்முகத்தோடு சசியை வரவேற்றான்!

முதலில் சசிக்கு டீ வந்தது – அடுத்து வெற்றிலை பாக்குத் தட்டு வந்தது. சசி எதையும் தொடவில்லை. அவனது விழிகள் – கதவு இடுக்குகள், ஜன்னல் திரைகள் இவைகளையே துளாவிக் கொண்டிருந்தன.

“தம்பி மாடிக்குப் போகலாமா?” பரிவோடு கேட்டான் ராசாக்கிளி

கூட வந்தவர்களிடம் ஒரு சகிக்கினை கொடுத்து விட்டு சசி, ராவுத்தரைப் பின்தொடர்ந்து மாடிக்குப் போனான்.

ஒரு சின்ன அறை ; அதில் இரண்டு பேர் படுக்கக் கூடிய ஒரு பெரிய கட்டில். அந்தக் கட்டிலைச் சுற்றித் தழுவிய படி ஒரு ரோஜா நிறக் கொசு வலை.

இதெல்லாம் சசிக்குப் புது அனுபவம். துப்பறியும் நாயைப்போல் அவன் மோப்பம் பிடித்துக் கொண்டு சென்றானே தவிர தப்புச் செய்யப் போகிறோம் என்ற எண்ணத்திற்கு அவன் உள்ளத்தில் அணுவளவும் இடம் கொடுக்கவில்லை.

“பேபி!”

ஒருத்தி வந்தாள்.

“இவளைப் பிடிக்கிறதா? இவர் மைசூர்க்காரி”

பிடிக்கவில்லை என்பதற்கு அறிகுறியாக சசி தலையை ஆட்டினான்.

“பாப்பா”!

இன்னொருத்தி வந்தாள்.

“இவள் கும்பகோணம், நன்றாக பரதநாட்டியம் ஆடுவாள்!”

“இவளையும் எனக்குப் பிடிக்கவில்லை. வேறு ஆள் இருக்கிறதா?”

ராசாக்கிளியிடம் யாரும் இப்படி பேசியதே இல்லை. காண்பித்தவளை அழைத்துக் கொண்டு கட்டிலறைக்குப் போய்விடுவது தான் வருகிறவர்களின் பழக்கம்.

“தம்பி, நீ சென்ற மாசமே வந்திருக்க வேண்டும். சுபத்ரா என்ற ஒரு மலையாளப் பெண் இருந்தாள். ரதிகூட அவளுக்கு வேலைக்காரியாகத்தான் இருக்கமுடியும், அவள் ஓடிப்போய்விட்டாள்” என்று ராசாக்கிளி சொன்னபோது சின்னக் குழந்தை வைரக் கடுக்கனைத் தண்ணீரில் எறிந்துவிட்டதைப் போல சசி திகைத்துவிட்டான்.

“என்ன தம்பி இப்படி பார்க்கிறே?”

“அவளைத்தான் நான் தேடி வந்தேன்; ஆனால் அவள் பறந்துவிட்டாள். அவள் கெட்டுப்போய் விட்டாளா?”

இதைக் கேட்டு ராசாக்கிளி பலமாகச் சிரித்தான். அது பழைய காலத்துப் பாதுஷாக்களின் சிரிப்பைப்போல சுவர்களில் மோதி எதிரொலித்தது.

“என்னத் தம்பி இப்படிக் கேக்கிறே! கழுதைகள் காணாமல்போனா குட்டிச்சுவர்களில் பாக்கணும்; காவடிகள் காணாமல்போனா குன்றக்குடியிலே தேடணும்; அதுமாதிரித் தான் இந்த மாளிகையும். கெட்டுப்போன பெண்கள் இங்கே வருவாங்க; இல்லாட்டா கெட்டுப்போக விரும்புற பெண்கள் இங்கே வருவாங்க! இங்கே வந்தீங்கன்னா இரண்டு வகையானவர்களையும் சந்திக்கலாம்.

இதைக் கேட்டதும் சசிக்குத் தலை சுற்றியது.

“சுபத்ரா முறிந்த பாலாகிக் கெட்டுப்போய் விட்டாளோ?”

“இருக்காது; அப்படியானால் அவள் ஏன் இங்கிருந்து ஓடவேண்டும்? நெய்யில் பால் மறைந்து கிடப்பது உண்மையானால் செத்துப்போன பால்தான் நெய்யாகிறது என்பதும் உண்மைதானே! ஆகையால் என் தங்கை நெய்யாவதற்காக ஓடிப்போயிருக்கலாம் அல்லவா?”

இந்த மனப்போராட்டத்துடன் சசி அந்த மாளிகையை விட்டு வெளியேறினான்.

8

“கண்ணா!”

“அத்தான்”

“இதோ புத்தகம் ஒரு கர்ப்ப ஸ்திரீக்கு என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதெல்லாம் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. நீ இதைப்படித்து அதன்படி நடந்து கொள்ளவேண்டும். சில பேர் வாழ்க்கை முழுதும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீயும் நானும் லட்சியத்திற்காக கொஞ்ச நாட்களுக்கு நடிக்க வேண்டும்” என்று செல்லமாக அவள் கன்னத்தில் தட்டினான். பசுவின் உடம்பெல்லாம் பரவியிருக்கும் ரத்தம்தான் மடுவிற்கு பாலாக வந்து பயனளிப்பதுபோல் பெண்ணின் உடம்பெல்லாம் துளிர்த்து நிற்கும் இளமை அனைத்தும் ஒன்று திரண்டு அவள் கன்னத்தில் குவிந்து தன் கணவனை மகிழ்விக்கிறது. அதிலும் கண்ணாத்தாள் தேவசுந்தரி மாதிரி அழகுடையவள். நடுத்தரவயதுக்கு அவள் வந்துவிட்டிருந்தாலும் குழந்தை யில்லாத காரணத்தால் குன்றாத இளமையோடு விளங்கினாள். அவளது உடலின் ஒவ்வொரு பகுதியும் ஜல்லிக்கட்டுக் காளையின் அவயவங்களைப் போல் தினவெடுத்து நின்றன. அரும்பு மல்லிகைகளை ஆரமாகத் தொடுத்தது போன்ற அவளது பல் வரிசை அரைகுறையாகத் தெரியும்போது திருவில்லிபுத்தூர் ‘ஆண்டாளே’ தரிசனம் தருவதுபோல் இருக்கும். பீமனின் வலிமையைக் போல கண்டு துரியோதனாதியர் பொறாமைப்பட்டதைப் கண்ணாத்தாளின் அழகைப் பார்த்து பொறாமைப்படாத பெண்களே இல்லை!

கண்ணாத்தாள் அதிகமாக வெளியில் வருவதில்லை. தன் உடம்பை யாரும் புரிந்து கொள்ளும்படியாக அவள் நடந்து கொள்வதை தவிர்த்து வந்தாள். கள்ளத்தனமாகக் கர்ப்பம் தரித்தவர்கள் யாருக்கும் தெரியாமல் வயிற்றை மறைத்துக் கொள்வதைப்போல. கர்ப்பமே தரிக்காத கண்ணாத்தாளும் வயிற்றை மூடிக்கொண்டே நாட்களைக் கடத்தினாள். துன்பங்களும் கடமைகளும் பெண்களுக்குத் தான் அதிகம். பாயசம் சாப்பிட்ட நாக்கில் நெய்படிவதில்லை; ஆனால் அதைச் சாப்பிடும் போது கையில் ஒட்டிக் கொள்ளும் நெய்யைத் துடைப்பது ஒரு வேலையாகவே வந்து விடுகிறது. அது மாதிரித்தான் மனித வாழ்க்கையும் சுவையெல்லாம் ஆண்களுக்கு; சுமையெல்லாம் பெண்களுக்கு.

ஒன்பது மாதம் ஆகிவிட்டது. ஊரிலிருந்து கடிதங்கள் வந்த வண்ணமிருந்தன. கண்ணாத்தாளைப் பிரசவத்திற்கு ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கண்ணப்பன் வீட்டிலிருந்தும், கண்ணாத்தாள் வீட்டிலிருந்தும் எழுதி கொண்டே இருந்தார்கள். கடிதங்களைப் படிக்கப் படிக்கக் கண்ணப்பனுக்கே ஒரு உணர்ச்சி பிறந்து விட்டது. கண்ணாத்தாள் உண்மையிலேயே கர்ப்பமாக கிடப்பது போன்ற உணர்வு அவனுக்கு வந்து விட்டது.

“அத்தான்!”

“என்ன கண்ணா?”

“மற்ற ஏற்பாடுகளெல்லாம் செய்து விட்டீர்களா?”

“என்ன ஏற்பாடு? ஓ கோ, அதைக் கேட்கிறாயா?”

இருவரும் புதிய தம்பதிகளைப் போல் பேசிக் கொண்டார்கள்.

“ஏன் கண்ணா, நீ உன் விருப்பத்தை எனக்குச் சொல்லவில்லையே!… உனக்குப் பையன் வேண்டுமா, பெண் வேண்டுமா?”

“அடேயப்பா, நினைத்ததைப் பிறக்க வைக்கும் விஞ்ஞானியைப் போல் கேட்கிறீர்களே!”

“உன்னைப் பொருத்த வரையில் நான் ஒரு விஞ்ஞானி தான் கண்ணா! நீ சிரித்துக் கொண்டே வாழ வேண்டும்; நான் அதைக் கண்டு ரசித்துக் கொண்டே பொழுதைப் போக்க வேண்டும். இப்போது நான் இறங்கியிருப்பது அந்த ஆராய்ச்சியில்தான்”

“அத்தான்!”

“உன் உள்ளம் மென்மையானது; மிகவும் நுணுக்கமானது. அதனால்தான் உனது கவலைகளை அகற்ற பின்னலை அவிழ்ப்பது போல நான் நிதானமாகப் போய்க் கொண்டிருக்கிறேன்’”

“எல்லாம் எனக்காகத்தான் செய்தீர்களாக்கும்! உங்களுக்கும் சேர்த்துத்தானே?”

“அது என்னவோ உண்மைதான்! ஊரார் முன்னே நானும் தலை நிமிர்ந்து நடப்பேன் அல்லவா!”

“இப்பவே கோட்டை கட்டாதீர்கள். எல்லாம் மங்களமாக முடியட்டும்!”

“இனி ஒன்றும் பயமில்லை. எல்லாவற்றையும் டாக்டர் கொரியனுக்கு ஒளிவில்லாமல் எழுதி விட்டேன். என்னைப்போலவோ, அல்லது உன்னைப்போல் மூக்கும் விழியுமாகவோ விக்ரகம் போல் ஒரு குழந்தையை ஏற்பாடு செய்து கொடு என்று எழுதியிருக்கிறேன்”

“தைமாதம் பத்தாம் தேதி வாக்கில் எனக்கு பிரசவமாகலாம் என்று அத்தைக்கு எழுதியிருக்கிறேன். அதை அனுசரித்து நாம் ஏற்பாடு செய்யவேண்டும்”

“குறித்த நேரத்தில் உனக்குப் பிரசவமாகும்; பயப்படாதே!?” என்று கொஞ்சலாகச் சொல்லிவிட்டு கண்ணப்பன் திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டான்.

அவன் போய்க் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சசிகுமார் வந்தான்.

“தலைவர் எங்கே?”

“அவர் திருவனந்தபுரம் போயிருக்கிறார்! என்ன விசேஷம் உண்டா சசி?”

“இரண்டு வருஷத்திற்கு முன் காணாமல் போன என் தங்கை சுபத்ராவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது! அது சம்பந்தமாக தலைவரை. யோசனை கேட்க வந்தேன்”

“அப்படியா, ரொம்பவும் நல்லது சசி! உங்கள் அம்மாவும் அப்பாவும் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்களே!”

“இல்லை! சுபத்ரா இறந்துவிட் தாக எண்ணி ஒருவாறு அவர்கள் கவலையை மறந்திருந்தார்கள். இப்போது அவள் திரும்பியது அவர்களை வாட்டி வதைக்கிறது”.

“இது என்ன வேடிக்கை சசி! காணாமல் போன மகள் திரும்பிவந்ததில் என்ன சங்கடம்? ரத்தபாசம் கூடவா உன் பெற்றோர்களுக்கு இல்லாமல் போய் விட்டது?”

“இல்லை சிஸ்டர்! எனக்கு அதை வெளிக்காட்டிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறதே!”

“சும்மா சொல்லு! என்னிடம் சொல்லுவதற்கு உனக்குக் கூச்சம் வரலாமா? என்ன நடந்தது சசி?”

சசி, தலை கவிழ்ந்தபடி சட்டைப் பைக்குள்ளிருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான். அது சுபத்ரா எழுதிய கடிதம்.

கண்ணாத்தாள் மனதுக்குள்ளேயே கடிதத்தைப் படித்துப் பார்த்தாள். அவள் முகம் கறுத்தது.

எதிரே நின்ற சசி, பத்து நாட்கள் பட்டினி கிடந்தவனைப் போல் சோர்ந்து போயிருந்தான்.

கண்ணாவால் அவனுக்குச் சமாதானம் சொல்லத் தெரியவில்லை. கையிலிருந்த கண்ணாடிப் பாத்திரம் தரையில் விழுந்து நொறுங்கி விட்டதைப் போன்ற உணர்வு சசிக்கு! எந்த விஷயத்தையும் ரகசியமாக வைத்துக் கொண்டால் குடும்பம் தப்பித்துக் கொள்ளும் என்ற புத்திமதியை சசிக்கு எப்படிச்சொல்வது என்ற மனக்குழப்பம் கண்ணாவுக்கு!

உலகில் இரண்டு பெண்களைத் தான் நல்லவர்கள் என்று சொல்லுவார்கள். ஒருத்தி செத்துப் போனவள் இன்னொருத்தி காணாமல் போனவள். இதில் சுபத்ரா இரண்டும் கட்டவளாக வந்து விட்டதாக சசிக்கு நினைப்பு.

சில நேரங்களில் மனப்பூர்வமான ஆறுதல் மொழிகள் கூட வெறும் சடங்கு வார்த்தைகளாகி விடுகின்றன. கணவனை இழந்து கஷ்டப்படும் இளம் பெண்ணுக்கும், அவமானம் தாங்காமல் அலறித்துடிக்கும் பெரிய மனிதனுக்கும் ஆறுதல் சொல்லுதல் பிச்சைக்காரனுக்குச் செல்லாக் காசுகளை வழங்குவதைப் போலாகி விடுகிறது.

சசி நல்லவன். பண்பாளன். அவன் தகப்பன் மலையாளியானாலும் தாய் தமிழச்சி என்பதால் அவனுக்கு கண்ணப்னிடமும் கண்ணாத்தாளிடமும் தனி அன்பும் மரியாதையும் இருந்தது.

சுபத்ரா மூட்டிய தீ அவன் உள்ளத்தில் அணையாத நெருப்பாக ஜுவாலை விட்டு எரிந்தது.

9

டாக்டர் கொரியன் பரபரப்பாக இருந்தார். மெட்டர்னிட்டி வார்டு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

மருத்துவமனைக்குள் நுழைந்த கண்ணப்பனுக்கு – ஏதோ ராஜகுடும்பத்தின் பிரசவம் நடப்பதுபோல் தோன்றியது. போனவுடன் அவன் டாக்டர் கொரியனைச் சந்திக்க முடியவில்லை. அரை மணி நேரம் கழித்துத்தான் கொரியன் வார்டை விட்டு வெளியே வந்தான்.

“ஹல்லோ! கண்ணப்பனா?”

“எஸ் டாக்டர்!”

“நல்ல நேரத்தில் வந்து விட்டாய். உன் கடிதத்தைப் பார்த்தேன், உனக்கு எப்படியும் உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். இன்றைக்கு அது நிறைவேறி விட்டது”.

“உண்மையாகவா? குழந்தையை நான் பார்க்கலாமா? யாருடைய குழந்தை அது?”

“அதையெல்லாம் நீ தெரிந்துகொள்ளக்கூடாது? தேவையுமில்லை! ஆனால் ஒன்று! நீ ஆண் குழந்தை கேட்டாய்; உனக்கு இன்று கிடைக்கப்போவது பெண் குழந்தைதான். குழந்தை மிகவும் அழகானது. சிருஷ்டியின் ரகசியங்களை யெல்லாம் இறைவன் அந்தக் குழந்தையிலேயே திணித்திருக்கிறான். கன்னத்தில் ஒரு மச்சம்; குங்குமச்சிமிழ் போல் குவிந்த மூக்கு; வைரக்கற்களுக்கு மத்தியில் நீலம் பதித்தது போல ஒளி பொருந்திய விழிகள்”

“பெற்றோர்களைத் தெரிந்து கொண்டால் நன்றி கூறலாம்!”

“அந்த வகையில் குழந்தை துர்பாக்கியசாலி; தாயார் இறந்துவிட்டாள். சுபத்ரா அவள் பெயர்!”

“சுபத்ரா!”…ஒரு கணம் யோசித்தான். சசியின் தங்கை பெயர் சுபத்ராதானே! அவளாகத்தானிருக்கும். மனதுக்குள்ளே ஒரு அரிப்பு!

“ஏன் டாக்டர், அந்தக் குழந்தைக்குத் தந்தை என்ன ஆனார்?”

“அவன் ஒரு பெரிய பணக்காரனாம்! இரண்டு வருஷங்களுக்கு முன்புதான் இருவருக்கும் திருச்செந்தூர் கோயிலில் திருமணம் நடந்திருக்கிறது”

“அவர் ஏன் இவளைக் கைவிட்டான்? சுபத்ரா ஏதாவது விபரம் சொன்னாளா?”

“உனக்கு எதற்கு அந்த ஆராய்ச்சி எல்லாம்? ரிஷிமூலம் எவ்வளவு அருவருப்பானதோ அதைவிட ஆஸ்பத்திரியில் வாங்கும் குழந்தைகளின் பூர்வீகம் அருவருப்பானது” என்றார் டாக்டர் கொரியன்.

பொங்கி வழியும் பூரிப்போடு, கண்ணாத்தாளை அழைத்துவருவதற்காக கண்ணப்பன் காற்றாய்ப் பறந்தான் எர்ணாகுளத்திற்கு.

“கண்ணா”

மகிழ்ச்சியோடு வரவேற்றாள் கண்ணாத்தாள்.

“ஊருக்குத் தந்தி கொடுக்க வேண்டியதுதான்; உனக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது; தாயும் சேயும் நலம்!” என்றான் கண்ணப்பன். அவன் உள்ளம் தர்மயுத்தத்தில் வெற்றி கண்டவனைப்போல் உவகையில் திளைத்து விட்டது.

“புறப்படு! இப்பவே நாம் திருவனந்தபுரத்திற்குப் புறப்படவேண்டும். அங்கு பத்து நாட்கள் படுக்கையில் இருக்கவேண்டும்!” ஊரிலிருந்து எல்லோரும் ஆஸ்பத்திரிக்கே வரவேண்டும். ஏன், கண்ணா, ஏதாவது தாலாட்டுத் தெரியுமா, உனக்கு?”

“என்னத்தான் இப்படிக் கேட்கிறீர்கள். ஒரு பெண் புஷ்பவதியானவுடன் ரகசியமாக மனப்பாடம் செய்வதே தாலாட்டுத்தானே! அதுதானே ஒரு பெண்ணுக்குத் தாய் வீட்டுச் சொத்து!”

“எங்கே பாடிக்காட்டு பார்ப்போம்!” – கண்ணப்பன் புதுமாப்பிள்ளையைப் போல் கொஞ்சினான்

அதற்கு கண்ணாத்தாள்,

“ஸ்ரீரங்கம் ஆடி
திருப்பாக் கடலாடி
மாமாங்கம் ஆடி
மதுரைக் கடலாடி
சங்கு முகமாடி
சாயா வனம் பார்த்து
முக்குளமும் ஆடி
முத்தி பெற்றுவந்த கண்ணே”

– என்று இசைக் கூட்டிப் பாடிக்காட்டினாள்

10

கோயிலூர்!

கண்ணப்பன் குழந்தையுடன் ஊருக்கு வந்துவிட்டான். ஊரில் ஒரே பரபரப்பு! உறவினர்கள் மத்தியில் விதவிதமான கிசுகிசுப்பு!

“கண்ணாத்தாளின் பொண்ணைப் பாத்தியா? அவ சித்தப்பனை அப்படியே உரிச்சு வச்சமாதிரிப் பொறந்திருக்கா!”

“எனக்குக்கூட அந்த மாதிரித்தான் தெரியுது!… பேத்தி தாத்தா மாதிரிப் பொறக்கலாம், தவறினா அம்மாவைப் பெத்த ஆயா மாதிரிப் பொறக்கலாம்; சித்தப்பன் மாதிரி பொறக்கிறது இதுதான் முதல் தடவை!”

“ஏண்டி இதுகூடவா ஒனக்குப் புரியல்லோ இவ்வளவு நாளாப் பொறக்காத புள்ளே இப்ப மட்டும் எப்படிப் பொறந்ததாம்!… இப்ப புரியுதா விஷயம்?”

“எனக்கு ஒண்ணும் புரியாமெ இல்லை: அதை என் வாயாலே சொல்லக்கூடாதேனு யோசிச்சேன்”

“அதெல்லாம் அவுங்க வீட்டுக்குள்ளே பண்ணிக்கிட்ட ஏற்பாடு!”

இந்தக் கிசுகிசுப்பெல்லாம் கண்ணப்பனுக்கும் தெரியாமல் இல்லை.

குழந்தையின் மூக்கு, விழிகள், கன்னத்திலே கிடந்த மச்சம் எல்லாமே சொக்கநாதனின் அச்சாகத்தான் இருந்தது.

கலைத்துவிட்ட தேன் கூட்டைப் போல் கண்ணப்பனின் உள்ளம் இதனால் கலவரமடைந்தது.

மூன்று மாதம் கழித்து குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா நடந்தது. அந்த விழாவிற்கு டாக்டர் கொரியனைப் பிரதம விருந்தாளியாகக் கலந்துகொள்ளும்படி கண்ணப்பன் கேட்டிருந்தான்.

அழைப்பை ஏற்றுக்கொண்டு டாக்டரும் வந்திருந்தார். சொக்கநாதனும் வந்திருந்தார்.

விழா இனிதாக முடிந்தது. டாக்டர் விடை பெற்றுப் போகும்போது,

“கண்ணப்பா, இங்கே வந்த பிறகுதான் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது”.

“நீ என்ன சொல்லப் போகிறாய் என்பதை நான் யூகிக்காமல் இல்லை டாக்டர்!”

“உன் தம்பியைப் பார்த்த பின்னர் தான் கண்ணாத்தாளின் மடியில் தவழும் குழந்தை சொக்கநாதனுக்குப் பிறந்தது என்பதைத் தெரிந்து கொண்டேன்”

“அது எப்படி உனக்குத் தெரிந்தது?”

“சுபத்ரா என்னிடம் அட்மிட் ஆகும் போது கொண்டு வந்த அவர்கள் கல்யாணப்படத்தில் இவர்தான் இருக்கிறார்” என்றார்.

கண்ணப்பன் கண்கள் கலங்கின. அப்போது கண்ணாத்தாள் உன் வீட்டில் குழந்தையைத் தொட்டிலில் போட்டுத் தாலாட்டிக் கொண்டிருந்தாள்.

“உனக்கு இப்போது இன்னொரு பொறுப்பும் கூடுகிறது. இந்த ரகசியமும் கண்ணாத்தாளுக்குத் தெரியக் கூடாது? ஏனென்றால் ஒரு உத்தமி மலடியாக வாழ விரும்பினாலும் விரும்புவாளே தவிர மானம் இழந்தவளாக வாழ விரும்பவேமாட்டாள்” என்றார் கொரியன்.

உடலை அடக்கி, நாவை அடக்கி, மனத்தை அடக்க தெய்வப் பிறவியைப்போல வாழ்ந்த கண்ணாத்தாள் இறுதிவரை ரகசியத்தை வெளியிடாமல் அந்தக் குழந்தையைத் தன் குழந்தையைப் போலவே சீரோடு வளர்த்துப் பெரியவளாக்கி திருமணமும் செய்து கொடுத்து விட்டாள். குழந்தை மலையாளத்திலே பிறந்ததால் பிற்காலத்தில் அவளுக்கு ‘மலையாளத்து ஆச்சி’ என்ற பட்டப் பெயரும் வந்து விட்டது.

*இந்தக் கதை ஒரு உண்மைத் தடாகத்திலே மிதக்கும் கற்பனைத் தெப்பம்.

– அவள் ஒரு கர்நாடகம், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1979, மேகலா, சரோஜினி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *