சிதைந்த காதல்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 4,731 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிழக்கே பளீரென்று எழும் உதய சூரியன். மேற்கே ஒளியிழந்த நிலவு. சலசலவென்று மெல் லொலி பரப்பிச் செல்லும் வைகை நதி தூரத்தில். மீனாக்ஷி கோவிலில் ஒலிக்கும் மணியின் சப்தம் இளந்தென்றலில் மிதந்து வந்தது. நீரில் இடுப்பளவில் நின்று கொண்டு கதிரவனுக்கு அர்க்கியம் வீடும் அந்தணர்கள் வேதங்களை உச்சரித்த வண்ணம் கரையேறினர். மங்கையர் அங்கயற்கண்ணியின் புகழைப் பாடிக்கொண்டு கூந்தலிலிருந்து நீர் சொட்ட ஊருக்குள் திரும்பினர். இந்தச் சௌந்தரியக் காட்சியை அநுபவித்துக்கொண்டே சத்தியவிரதன் ஆலயத்தை நோக்கி நடந்தான். தூண்களில் உயிர் கொண்டு பேசும் அற்புதச் சிற்பங்கள் ‘எந்தச் சிரேஷ்டனுடைய கரங்கள் இதை வடிக்கப் புண்ணியம் செய்தனவோ?’ என்று நினைக்கும்படி இருந்தன. ‘குதிரைகள் சவாரிக்குத் தயாராக இருக்கின்றனவே! அட்டா! அந்தக் கல் யானைகள் உயிரோடு இருக்கின்றனவா? அதோ அந்த மங்கை மீனாக்ஷியை உள்ளம் குழைய வேண்டுகிறாளே! இவையெல்லாம் கற்களால் செய்தவையா?’ என்று திகைத்துப் போனான் சத்தியவிரதன். அவன் திகைப்பு அடங்குவதற்கு முன் உள்ளம் குழைந்து அருள் வேண்டும் ஓர் வனிதையைக் கண்டான். ‘என்ன! சற்று முன் பார்த்த சிற்பமா உயிர்கொண்டு தரையில் இறங்கி விட்டது? மின்னல் கொடி போல் துவளுகின்ற இடை. இதழ்க் கடையில் தவழுகின்ற நகை.’ அந்த அபூர்வ நாட்டியம் எங்கே நின்றுவிடுமோ என்று ஒவ்வொரு நிமிஷமும் பயந்தான். ஸ்நானம் செய்து துவட்டாத கூந்தல் முதுகில் புரள ஈசுவரிக்குத் தன் கலையை அவள் அர்ப்ப ணம் செய்து கொண்டிருந்தாள்.

‘கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல’ ஆடிக்கொண்டிருந்த அவளுடைய நயனங்களிலிருந்து முத்துப்போல் நீர் சொரிந்தது. ஆலயத்திலிருந்த இரண்டோர் அர்ச்சகர்களுக்கு இது புதிதல்ல. யாத்திரிகர்கள் அவளை முறைத்துப் பார்த்துவிட்டுப் போனார்கள். அர்ச்சகர்களுக்குள், ‘இவ்வளவு அழகு செறிந்துள்ள இந்தப் பெண்ணுக்கு இப்படியா பைத்தியம் பிடிக்க வேண்டும்? எத்தனையோ பிரபுக்கள் பணத்தைக் கொட்டி இவள் இதழ்க் கடையின் அசைவைப் பெறக் காத்திருக்கையில் தலையெழுத்தா இவளுக்கு?’ என்று பேசும் பேச்சுக்கள் நேற்று இன்றைய அநுபவமல்ல. மந்தாகினியின் மனம் ஒரே வைராக்கியத்தில் நின்றுவிட்டது. பிறந்தது தாசிக் குலமானாலும் உன்னத லக்ஷ்யங்கள் அவள் உள்ளத்தில் குடிகொண்டன.

“என் அழகையும் இளமையையும் விரும்புகின்றனரே தவிர, தம் இருதயத்தை எனக்கு அர்ப்பணமாக்க ஒருவராவது முன் வருவார்களா? காதல், அன்பு என்பதை அறியக் கூடாத பிறவியா இது? வேண்டாம். என் அழகு, கலை எல்லாம் அம்பிகைக்கே அர்ப்பணமாகட்டும்” என்கிற திட சங்கல்பம். அவள் தாயின் பிதற்றல்தான் எஞ்சி நின்றது.

மந்தாகினி கோவிலைப் பிரதக்ஷிணம் செய்துகொண்டு சிந்தனை தேங்கிய முகத்துடன் வெளியே சென்றாள். சத்தியவிரதனின் மனத்தில் எண்ணங்கள் சிதறின: ‘பாவம்! அவள் மனத்தில் குமுறும் எண்ணந்தான் என்னவோ ? மலரைவிட மெல்லியதான அந்த மனம் ஏன் அப்படித் துடிக்கவேண்டும்? கலையெல்லாம் ஒரே இடத்தில் பொழிந்துவிட்டதா? இந்த அபூர்வ நாட்டியத்தை ரஸிக்க இவ்வூரில் யாரும் இல்லையா? எல்லோரும் முகத்தைத் திருப்பிக்கொண்டு போகிறார்களே.’

ஸந்நிதியில் ஒருவன் விளக்குகளுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டிருந்தான்.

“இப்பொழுது ஆடிவிட்டுப் போனாளே, அந்தப் பெண் யாரப்பா?” என்றான் சத்தியவிரதன்.

“அவளா?” என்று அலக்ஷ்யமாகச் சொல்லிவிட்டு, “தாசி மீனலோசனியின் பெண். சித்தப் பிரமை..பைத்தியம். அதை ஏன் சொல்ல?” என்று பெருமூச்சு விட்டான்.

சித்தப் பிரமையா? வெறும் புரட்டு உள்ளத்தில் பொங்கும் பக்தி கண்களில் ஜ்வலிக்கிறது. நல்ல தெளிவான முகம். பரதநாட்டியத்தின் ஆழ்ந்த முத்திரைகளை வெலேசமும் பிசகாமல் ஆடும் திறன். உள் மர்மங்களை அறியாமல் பிதற்றும் குப்பைச் சமூகம்…இதற்கு வாழ்வாம்…அந்தஸ்தாம்!” என்று முணுமுணுத்தான் சத்தியவிரதன்.

எண்ணெய்க்காரன் தன் ஜோலியை முடித்துக் கொண்டு, எண்ணெய்த் தாழியைக் கந்தையால் துடைத்துக்கொண்டிருந்தான்.

“அவள் வீடு?” என்றான் சத்தியவிரதன் தயங்கிய வண்ணம்.

அவன் வியப்போடு நிமிர்ந்து, “இதில் என்ன ஐயா அக்கறை? வடக்கு மாசி வீதியில் இருக்கிறாள். பிரபுக்களையே சட்டை பண்ணாத கர்வக்காரி! உம்மை..” என்று நிறுத்தினான்.

சத்தியவிரதன் தலையைக் குனிந்து கொண்டான்.

‘இதற்குள்ளேயா சமூகம் என்னைச் சந்தேகிக்க வேண்டும்?’

எண்ணெய்த் தாழியை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான் எண்ணெய்க்காரன்.

வானில் ரவி தன் நீண்ட யாத்திரையைத் தொடங்கி விட்டான். சுளீரென்று பாயும் கிரணங்கள் பொற்றா மரையில் படிந்து விளங்கின.


தென்றல் வீசும் மாலை. மதுரையம்பதி சோபையுடன் திகழ்ந்தது. மங்கையர்கள் வீதி வழியே அரம்பையர்கள் போல் அன்னையின் ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருந்தனர். வடக்கு மாசி வீதியில் ஒரு கிருகத்தில் சோகத்தை யெல்லாம் திரட்டிக் கான மூலமாய் வெளியிட்டது ஒரு தீங்குரல். ஜய், ஐய் என்று சாரணி அநுசாரணியுடன் சப்திக்கும் தம்பூர். கிருஷ்ணலீலா தரங்கிணியையும், சதாசிவப் பிரம்மேந்திரர் கீர்த்தனைகளையும், நடு நடுவே தேனைப்போல் இரண்டொரு தமிழ்க் கிருதிகளையும் பொழிந்துகொண்டிருந்தாள் மந்தாகினி. வாசற்படியில் கற்சிலைபோல் நின்று ஓர் உருவம் இதைக் கவனித்தது. கண்களில் நீர் மல்கியது. உள்ளே அடி எடுத்து வைப்பதற்குப் பயம், தயக்கம். உள்ளிருந்து வரும் கானம் அவன் மனத்தில் காலையில் மூண்ட தாபத்தைத் தணித்து விட்டது. மெதுவாக உள்ளே போய்விட்டான். எப்படி என்பது அவனுக்கே தெரியாது.

கூடத்தில் மெத்தென்ற ரத்தின கம்பளம். சுவரில் அழகாகத் தீட்டப்பட்ட தேவியின் படம். அதை வெண்மையான மல்லிகை மாலை அலங்கரித்தது. நெளிந்து சுருண்டு கிடக்கும் கூந்தல் பின்னப்பட்டு முதுகில் வளைந்து கிடந்தது. கடைந்த தந்தம் போன்ற கரங்களில் தம்பூர். வாய் ஈசுவரியின் புகழைப் பாடிக்கொண்டிருந்தது.

சத்தியவிரதனைக் கண்டதும் மந்தாகினி துணுக்குற்று எழுந்தாள். ஒரு முறை அவன் நெஞ்சமும் திக்கென்று அடித்துக்கொண்டது.

“காலையில் தங்களை…” என்றான். தேய்ந்த குரலில், “கோவிலில் பார்த்திருப்பீர்கள்” என்று முடித்தாள் மந்தாகினி.

“தங்களுடைய அபூர்வ நாட்டியம் என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்தது”.

“அதில் ஒன்றும் வியப்பில்லையே? கலைக்கு அடிமையாகாத இருதயம் இருக்கிறதா?”

“இந்த ஊரில் தாங்கள் கிருஷ்ண பக்ஷத்துச் சந்திரன் போல் இருக்கிறீர்கள். தங்களுக்குக் கௌரவம் அளிக்கும் திறமை இந்த மூடர்களுக்கு இல்லை.”

“வாஸ்தவம். மதுரைவாசிகளின் மனம் என்னைப் பைத்தியம் என்று கொண்டிருக்கிறது. அதுவரையில் க்ஷேமமே.”

“இன்னும் இரண்டு பாட்டுப் பாடத் தடங்கல் இல்லையே?”

“தடங்கல் எதுவும் இல்லை. ஆனால், கையில் மலர் ஹாரம் இருக்கிறதே. தேவியின் தரிசனத்திற்குப் பங்கம் ஏற்படுமோ என்று அஞ்சுகிறேன”.

“பரவாயில்லை. அன்னையின் மார்பில் துலங்குவதற்கு வாங்கிய மாலையை என் பரிசாகத் தாங்கள் தாம் ஏற்றுக் கொள்ளுங்களேன். ஈசுவரிக்கு அது சம்மதமாக இருக்கலாம்” என்று மாலையை நீட்டினான்.

மந்தாகினி தயங்கியபடியே அதை வாங்கிச் சுவரிலிருந்த படத்திற்கு அணிவித்தாள். அதிலிருந்து உதிர்ந்த ரோஜா மலர் ஒன்றைத் தன் குழலில் செருகிக் கொண்டு பாட ஆரம்பித்தாள்.

‘காலையில் தெய்வ ஸந்நிதியில் ஏற்பட்ட மனச்சாந்திக்கு அறிகுறியாக இருக்குமோ இது? கலையின் பரிசாக மலர்மாலையைக் கொடுத்த இவர் மனம் தூய்மை யுடையதா? நான் தாசி என்பதை அறியார் போலும்! தெரிந்தால் அன்பைப் பகிர்ந்து கொடுப்பாரா? கொடுத்தால்?…அதுவும் உண்டா?’ என்று அவள் மனம் ஏங்கிற்று.

சத்தியவிரதன் அவள் கண்களில் மின்னும் வேதனையைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தான்.

தம்பூரை உறையில் வைத்துவிட்டு நிமிர்ந்தாள் மந்தாகினி.

“நாட்டியம் சதஸில் ஆடுவதற்குத் தாங்கள் அப்பியசிக்கவில்லையோ?” என்றான் சத்தியவிரதன்.

“அப்பியாசம் உண்டு. ஆனால் மனம் இல்லை.”

“என்ன அபசாரம் இது? கலையைப் பலருடைய ரசனைக்குப் பகிர்ந்து கொடுப்பதுதான் உத்தமம்.”

“முழு மனத்துடன் ஏற்க யாரும் இல்லை. அதனால்…” என்றாள் மந்தாகினி.

“இல்லை என்கிற தீர்மானத்துக்குத் தாங்களே வந்துவிட்டீர்களாக்கும்!” என்றான், பரிகாசம் கலந்த சிரிப்போடு.

மந்தாகினியின் கன்னங்களில் குபீரென்று ரத்தம் பாய்ந்தது. தலையைக் கவிழ்ந்துகொண்டாள்.

சத்தியவிரதனின் மனத்தில் அவ்வுருவம் வேகமாகச் சென்று ஒளிந்துகொண்டது.

” தாங்கள் இவ்வூரைச் சேர்ந்தவரா?” என்றாள் மந்தாகினி.

“இல்லை, தென்னாட்டுப் பிரயாணத்தை ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிறது பல்லவரின் கலைத்திறனை மாமல்லபுரத்தில் கண்டுவிட்டுத் தெற்கே ஒரு காலத்தில் பஃறுளியாறும், குமரியாறும் சேர்ந்து தமிழகம் துயிலும் குமரிமுனையைக் கண்டுவிட்டுப் போக விருப்பம். வழியில் பாண்டியனின் பதியை வெறுத்துச் செல்ல முடிய வில்லை.”

“இந்த ஊரில் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்றாள் ஆவலுடன்.

“தங்குவதற்கு இடம் வேண்டுமா என்ன? காலையில் தங்கள் நாட்டியத்தைக் கண்டபிறகு ஆலயம் முழுவதும் சுற்றினேன். இடம் ஒன்றும் ஏற்படவில்லை.”

“இந்த ஊரில் இருக்கிறவரையில் இவ்வில்லத்தில் தங்கத் தடங்கல் இல்லையே? நான் கேட்பதுகூடக் குற்றமோ?” என்றாள் கையிலிருந்த மலரின் இதழ்களை உதிர்த்துக்கொண்டே.

“நான் நினைத்ததற்குமேல் கிடைத்துவிட்டது” என்றான் முறுவலுடன்.

வெளியே நீல வானிடை மின்னும் தாரகைகள்; அவைகளின் நடுவே பூரித்து எழும் அம்புலி, சற்றுத் தொலைவில் கோபுர கலசங்கள் அவ்வொளியில் பளபள வென்று மின்னின.

மந்தாகினி படத்தருகில் சென்று கனன்றுகொண்டிருந்த அனலில் அகிறபொடிகளைத் தூவிவிட்டு வந்தாள்.


“என்ன அழகு! என்ன சௌந்தரியம்! அம்பிகையின் லாவண்யம் கண்களைப் பரவசப்படுத்திவிட்டது” என்றாள் மந்தாகினி.

“அதைவிட உன் லாவண்யம் என்னைப் பித்தனாக்கி விட்டதே. அதைப்பற்றி உன்னைத் தண்டிக்க யாரும் இல்லையா?” என்றான் சத்தியவிரதன்,

‘தாங்கள் ‘போன்ற மரியாதைப் பதங்கள் மறைந்து விட்டன. மந்தாகினி இப்பொழுது அவன் உடைமை.

“என்ன பரிகாசம் இது?” என்று பிணங்கினாள்.

“பரிகாசம் இல்லை…என் மனத்தை உனக்கே அர்ப்பணமாக்கிவிட்டேன்” என்று அவள் தளிர்க் கரங்களைப் பற்றினான்.

சுற்றிலும் அமைதியான தோட்டம். விருக்ஷங்களும் மலர்க் கொடிகளும் இவ் வார்த்தையை அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தன.

யுகக் கணக்காய் நீலக் கடலைப் பார்த்துச் சலியாமல் தவக்கோலம் பூண்டிருக்கும் கன்யா குமரியைப்பற்றிச் சத்தியவிரதன் மறந்துவிட்டான். அவன் பிரயாணம் மதுரையோடு முடிவடைந்தது. காசியில் இருந்த வயது சென்ற தந்தையையும், தொழிலையும் புறக்கணித்தது அவன் மனம். மாதந் தவறாமல் தந்தை பணம் அனுப்பி வந்தார். தம் தனயனின் நடத்தையில் அணுப்பிரமாணங் கூட அவருக்குச் சந்தேகமில்லை. தம் குமாரன் கலைப்பித்துக் கொண்டவன்: ஏதாவது ஆராய்ச்சியில் இறங்கி விட்டால் நாள் கழிவதுகூடத் தெரியாது என்பதை அவர் அறியாதவரா என்ன? இருந்தாலும் அவர் மனம் வேதனையில் ஆழ்ந்தது. “மதுரையில் மாதக் கணக்கில் தங்குவானேன்? மற்றப் பிரயாணத்தை முடித்துக்கொண்டு சீக்கிரம் வந்துவிடு. தினம் வித்தியார்த்திகள் வந்து அலைந்து விட்டுப் போகிறார்கள்.நீ இருக்கும்போது சுலபமாக இருந்த ஆரியம் இப்பொழுது அவர்களுக்குக் கடினமாகப் போய்விட்டது. அவர்களுக்குப் போதிக்கத் தகுந்த ஞாபகசக்தி எனக்கு இல்லை” என்று கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார்.

இந்தக் கடிதங்களைப் படிக்கும்போது அவன் மனம் இருண்டுவிடும். மேகத் திரளால் மறைக்கப்பட்ட வானம் போல் இருள் சூழ்ந்துவிடும் அந்த மனத்தில். அந்த இடத்தைத் துருவிக்கொண்டு வரும் கதிரவனைப்போல் மந்தாகினி உதயமாவாள். அப்படியும் குழப்பம் அடங்கா விடில் இருக்கவே இருக்கிறது அவள் அபூர்வ நாட்டியம்! சத்தியவிரதன் யோசனையில் ஆழ்ந்திருந்தான். நேற்றுக் காசியிலிருந்து வந்த கடிதத்தில், “என் உடம்பு மிகவும் பலஹீனமாயிருக்கிறது. சத்தியா! உன் கலை ஆராய்ச்சி போதும். சாவதற்கு முன் உன் முகத்தைக் காட்டப்பா” என்று எழுதியிருந்தார் தந்தை.

ஒரு புறம் தந்தையின் பாசம். மற்றொரு புறம் மந்தாகினியிடம் வைத்த பிரேமை. துக்கம் நிரம்பிய மனத்தோடேயே அந்தப் பகற்பொழுது கழிந்தது.

எப்படியாவது மந்தாகினியிடம் சொல்லிக்கொண்டு இரவு கிளம்பவேண்டுமென்று சங்கற்பித்துக்கொண்டான். இரவும் அந்தப் பிரிவை எண்ணி வருந்துவது போல் மெதுவாக வந்தது.

நீள் விசும்பில் மங்கிக் கிடக்கும் மூளிச் சந்திரன். தீவுகள் போல் வெண்மேகங்கள் அங்கும் இங்கும் அலைந்தன. எதிரில் மாமரத்தில் பிரிவை ஏங்கிக் கதறும் பூவை. எங்கும் நிச்சப்தம். பிரிவின் ஏக்கம்.

மந்தாகினி நீர் மல்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டு நோக்கினாள்.

“அன்பே! இந்தப் பிரிவை உன்னால் சகிக்க முடியாதா? தவணை அவ்வளவு நீண்டதல்லவே, இரண்டு மாதங்களில் வந்துவிடுவேன்.”

“என்னையும் உங்கள் ஊருக்கு அழைத்துப் போகலாமே” என்றாள்.

“ஐயோ! இதென்ன கேள்வி? தந்தையின் காலத்திற்குப் பிறகு என் மனம் போனபடி செய்யலாம். அவருடைய ஆசாரசீலத்திற்கு அது முடியுமா?” என்று உருகிற்று அவன் உள்ளம்.

தாங்க முடியாத சோகத்தால் மந்தாகினியின் அதர ங்கள் துடித்தன.

சத்தியவிரதன் அவளைச் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“இதென்ன பதட்டம்? உன்னை மறந்துவிடுவேனா? பைத்தியமே!”

“மறக்க மாட்டீர்களா? சீக்கிரம் திரும்ப வேண்டும்.”

“இன்று என்ன கிருஷ்ண பக்ஷத்துப் பஞ்சமி அல்லவா? இன்றைக்கு அறுபதாம் நாள் பஞ்சமி அன்று உன் கிருகத்தில் இருப்பேன்.”

“உண்மைதானா? ஆனால்…” என்று அவள் மார்பு விம்மிற்று.

மாசி வீதியில் கடகடவென்று வண்டியின் சப்தம். இரண்டு கயல் விழிகள் அதன் உருவம் மறையும் மட்டும் பார்த்துக்கொண்டு நின்றன.

சாம்பிய மனத்துடன் அம்பிகையின் பாதத்தில் மலர்களைத் தூவி நமஸ்கரித்தாள் மந்தாகினி. அச்செய்கை அவளுக்கு ஆறுதல் அளித்தது.


கிருஷ்ண பக்ஷங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று கழிந்தன. ‘வருவார்’ என்ற நம்பிக்கைச் சுடர் மங்க ஆரம்பித்தது. லிகிதம் வந்துகூட ஒரு மாதம் ஆகி விட்டது ஒருவேளை தந்தைக்கு ஏதாவது உடம்போ? “பிரேமையின் ஆழத்தை நான் அறியமாட்டேனா? கிடைத்தற்கரிய பொருள் கிடைத்தது. அதை ஒளித்து விடுவாயோ ஈசுவரி?” என்று சாம்பினாள்.

மந்தாகினியின் வதனம் நகையிழந்தது. சத்தியவிரதனை அடைவதற்கு முன் வைகறையில் தேவியின் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தவள் இப்பொழுது வீட்டை விட்டு வெளிவருவதில்லை. மதுரைவாசிகள் மந்தாகினியைப் பார்த்து மாதக்கணக்கில் ஆகிவிட்டது.

ஒரு நாள் மாலை திடீரென்று ஆலயத்தில் ‘சரசர வென் று எதையோ எழுதிக் கோவில் அதிகாரியிடம் கொடுத்து வீட்டுச் சென்றாள் மந்தாகினி. பிறந்தது முதல் பிரிந்தறியாத மதுரையைப் பிரிந்து இரவில் வைகையைக் கடந்து ரெயிலில் சென்றுவிட்டாள். ‘காசியில் சத்தியவிரதனைக் கண்டு அவனிடம் அடைக்கலம் புகுவது; அல்லது இருக்கவே இருக்கிறாள் கங்கை அடைக்கலம் அளிக்க’ என்ற எண்ணம்.

சத்தியவிரதன் மதுரையிலிருந்து திரும்புவதற்குள் அவன் தந்தை பெண் பார்த்து வைத்திருந்தார். குமாரனின் கல்வியைப் பற்றி நன்றாய் அறிந்த அவர், மங்கை மைந்தனுக்கு ஒத்தவளாக இருக்க வேண்டுமே என்கிற கவலையுடன் இருந்தார். பெண கவிதா சக்தி நிரம்பியவள். உள்ளத்தின் கம்பீரம் முகத்திலும் பிரதிபலித்தது. மந்தாகினியைப் போல் பேதை அல்ல. மந்தாகினி வியாகரணம், இலக்கியம், வேதாந்தம் முதலியவைகளைப் படிக்கவில்லை. குறைவில்லாத பிரேமையை வேண்டியவள்.

சத்தியவிரதன் ஊருக்குத் திரும்பியதும், “என்ன சத்தியா! மதுரை உன்னைக் கவர்ந்துவிட்டதா? என்னைக் கூட அடியோடு மறந்துவிட்டாயே. நான் கண்ணை மூடின பிறகு எங்கேயாவது போகலாம்” என்றார் பிதா.

“இல்லை அப்பா ! மதுரையில் வேலை இருக்கிறது” என்று சிந்தனையுடன் கூறினான்.

”உனக்குக் காசியில்தான் வேலை. மதுரையில் இல்லை” என்று மொழிந்தார் முதியவர்.

“மந்தாகினியை மறந்துவிடுவதா? அந்தப் பேதை நெஞ்சம் எப்படி வாடுகிறதோ? அவளையே மணந்து கொண்டால் என்ன? தந்தையின் நியமம்! அவர் ஒரு நாளும் ஒப்பமாட்டார். காதல் கருகிவிடுமே. தந்தை யின் பாசம் அறுந்துவிடுமோ? அவருக்கு என்னைக் கிருகஸ்தனாக்கும் விருப்பம் தினம் அதிகரித்தே வருகிறதே. மந்தாகினி ! நீ ஏன் தாசிகுலத்தில் பிறந்தாய்?”

இந்தக் குழப்பத்துடன் மணம் நடந்தது.

மனைவி விற்பன்னை கங்கையில் நீந்திச் செல்லும் படகுகளையும், உதய சூரியனையும் அஸ்தமன ஜோதியையும், மலரின் மந்தஹாஸத்தையும் கவிதையின் மூலம் படம் பிடித்துக் காட்டினாள். கவிதைகள் நல்ல கற்பனை யில் தோய்ந்தவை. சத்தியவிரதனின் மனம் மந்தாகினியை மெதுவாக மறந்துவிட்டது.


காசியில் சத்தியவிரதனின் மனையைக் கண்டு பிடிப்பது சிரமம் அல்ல. ஊர் அரவம் அடங்கிவிட்டது. இரண்டொரு பண்டாக்கள் சாலையோரமாகப் போய்க் கொண்டிருந்தனர். பளபளவென்று மின்னும் கற்களால் ஆன மாளிகை. அதைச் சுற்றி நாலுபுறமும் விருக்ஷங்கள் சூழ்ந்திருந்தன. மலர் செறிந்த வகுளமரம். அதனடியில் சத்தியவிரதன். அவன் பக்கலில் ஓர் அரம்பை; ஆகாயத்தில் தேய்ந்த நிலவு. சத்தியவிரதன் அவளுடன் சல்லாபித்துக்கொண்டிருந்தான். திடீரென்று அவள் பிணங்கி ஒதுங்கி, “நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்” என்றாள்.

“என்ன விஷயமோ?”

“தென்னாட்டில் மதுரையில் ஓர் பரத்தையின் நேசம் உங்களுக்கு உண்டோ?”

அவன் நெஞ்சம் துணுக்குற்றது.

“யார் சொன்னது? வீண் வம்பு. அவள் நாட்டியத்தில் தேர்ந்தவள். அதன் நுட்பங்களை அறிய அங்கே தங்கியிருந்தேன். வேறு நேசம் ஒன்றும் இல்லையே” என்று திடமாக மொழிந்தான்.

“அப்படியா? நான் கேட்டவுடன் பயந்து போனீர்களே?” என்று தன் மெல்லிய விரல்களால் அவன் கன்னத்தில் தட்டினாள்.

மந்தாகினியின் நம்பிக்கை சிதறிப்போயிற்று. காசியில் எங்கே போவது? ‘என் மனத்தை அவருக்கு அர்ப்பணமாக்கினேன். அதை வரவேற்க அவர் தயாராக இல்லை.’ பளிச்சென்று ஓர் எண்ணம்.

கங்கைக் கரை நிர்மானுஷ்யமாய் விளங்கிற்று. ஸ்படிகம்போல் சென்றுகொண்டிருந்தாள் கங்காதேவி. முகத்தில் என்றும் இல்லாத குதூகலம் நிரம்பி வழிய இடுப்பளவு நீரில் நின்றுகொண்டிருந்தாள் மந்தாகினி. தொலைவில் பாண்டியனின் மதுரை. அதனுள் குறுகிச் சுருண்டு செல்லும் வைகை, மீனாக்ஷி ஆலயம் முதலியன கண் எதிரில் மிதந்து வந்தன.

வானில் மூளிச் சந்திரன்.

“உன்னை மறந்துவிடுவேனா? பைத்தியமே!” என்ற அமுதமொழிகள்.

குபுக்கென்று நீரில் அமிழ்ந்தாள் மந்தாகினி.

நிர்மானுஷ்யமான அந்த இடத்தில் ஒரு ஜீவன், துடிக்கும் தன் உள்ளத்தின் வார்த்தைகளை நதியிடம் முறையிட்டது. அதுவும் மறைந்துவிட்டது அந்த நதியிலே.

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “சிதைந்த காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *