நீயின்றி நானில்லை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 15, 2023
பார்வையிட்டோர்: 6,768 
 
 

(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-11

இதயத்திலே இருப்பவனே…
நீயின்றி நானில்லை… 

தனஞ்ஜெயன் கோபத்துடன் தன் எதிரே நின்று கொண்டிருந்த உதவியாளரைத் திட்டிக் கொண்டிருந்தான்… சாருலதா அவனது கேபினுக்குள் நுழைந்தாள். உதவியாளரை திட்டுவதை நிறுத்திவிட்டு… அவளை அனல் பார்வைப் பார்த்தான் அவன்.

‘எதற்கு இப்படிப் பார்க்கிறான்…?’ அவள் புரியாமல் அவன் முகம் பார்க்க… 

“நீங்க போங்க ரமேஷ்… இனிமேல் இப்படிக் செய்யாதீங்க… ஸ்டேட்மென்டை கரெக்ட் பண்ணி. புதிதாய் பிரிண்ட் போட்டுக்கிட்டு வாங்க…” என்று ரமேஷை அனுப்பி வைத்தான் தனஞ்ஜெயன்… 

“தனா…” என்று சாருலதா ஆரம்பிக்க… 

“அறிவில்லையா… உனக்கு?” என்று வெடித்தான் அவன். 

“ஏன் கோபமாய் பேசுகிறீங்க…?” 

“பின்னே… நீ செய்யும் காரியத்திற்கு உன்னைக் கொஞ்சச் சொல்கிறாயா…?” 

‘அப்படியே… நீ கொஞ்சி விட்டாலும்… முசுடு…’ சாருலதா மனதிற்குள் அவனைத் திட்டிவிட்டு… வெளியே… 

“நான் என்ன செய்தேன்…?” என்று கேட்டாள்.

“அது கூடத்தெரியவில்லை… மக்கு… நீயெல்லாம் எப்படித்தான் இந்த ஆஃபீஸில் இத்தனை வருடமாய் குப்பை கொட்டுகிறாயோ…?” 

“எதைத் திட்டுவதென்றாலும்… காரணத்தை சொல்லி விட்டுத் திட்டுங்க…” 

“கேபினுக்கு கதவுன்னு ஒன்று இருக்கில்ல… அதைத் தட்டிவிட்டு வரணும்கிற மேனர்ஸ் உனக்கு இருக்க வேண்டாமா…? நீ பாட்டுக்கு உள்ளே வந்து விடுவதா…?” 

“உங்கள் ரூமிற்கு… நான் வருவதற்கு… பெர்மிசன் கேட்டு விட்டுத்தான் வர வேண்டுமா…?” 

“என் வீட்டிற்கு நீ வருவதாக இருந்தால்… பெர்மிசன் கேட்க வேண்டிய அவசியம் இல்லை… அது உன் வீடு… நீ இஷ்டப்படி… வரலாம். நான் ஏனென்று கேட்க மாட்டேன்… இது ஆஃபீஸ்… இங்கே சில பார்மாலிட்டீஸ் இருக்கிறது… இப்போது பார்த்தாயா… நீ வரும்போது நான் ரமேஷை திட்டிக் கொண்டிருந்தேன்… உன் முன்னால் திட்டு வாங்க… அவன் சங்கப்பட்டிருப்பானா… மாட்டானா…?” 

“எனக்கென்ன தெரியும்… நீங்க அவரைத் திட்டிக் கொண்டிருப்பீங்கன்னு…” 

“தெரிய வேண்டும்… சும்மா… புத்திசாலின்னு பீற்றிக் கொண்டால் போதாது… அந்தப் புத்தியைக் கொஞ்சம் பூஸ் பண்ணனும்…”

மனம் நிறையக் கவலையுடனும்… போராட்டத்துடனும் அவனது துணையைத் தேடி வந்த சாருலதா மனம் நொந்தாள்… அவனிடம் பேச வந்ததைப் பேசாமலேயே திரும்பிச் சென்றுவிட்டாள். 

“எப்போது பார்த்தாலும் இதேதானா… எப்போது அவன் தேளாய் கொட்டுவான்… எப்போது தேனாய் சிரிப்பான் என்று தெரியாத பிழைப்பு… என்ன பிழைப்பு…?” 

அவளுடைய இருப்பிடத்தில் அமர்ந்து… பேப்பரில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தாள்… அவளது கையில் இருந்த பேப்பர் உருவப்பட்டது… 

”ம்ம்… மனம் சரியில்லைன்னா… கவிதை மழை கொட்ட ஆரம்பித்து விடுமே…” என்றபடி அவள் எதிரே அமர்ந்து அவளது கவிதையை வாய்விட்டு படிக்க ஆரம்பித்தான் தனஞ்ஜெயன்… 

“ஊனக் கனவுகளே…
ஊனுருக்கும் நாள் தோறும்;
காண ஒரு மனதில்லை… 
கவிக் குயிலோ மனச்சிறையில்…” 

பேப்பரில் இருந்து பார்வையை உயர்த்தி சாருலதாவைப் பார்த்தான் அவன்… அவளோ… அவனது பார்வையைத் தவிர்த்து… கம்ப்யூட்டரின் கீ போர்டைத் தட்டிக் கொண்டிருந்தாள். 

‘கோபமாம்… என்னோடு பேச மாட்டாளாம்…’ அவன் முகத்தில் இளநகை அரும்பியது. 

‘என்னோடு பேசாமல் இருந்து விடுவாளா…? இவளால் அது முடியுமா…?’ என்ற நினைவு மனதில் எழ, அவன் முகம் மென்மையானது. 

“என்னடி இது…?” என்றான் பேப்பரை அவள் முன்னால் காட்டி. 

“என்னன்னு தெரியாமல்தான் இப்போது படித்தீர்களாக்கும்…” அவள் முகம் நிமிராமல் பதில் சொன்னாள், 

‘பேசி விட்டாள்…’ அவன் முகத்தில்… வெற்றிக் குறியீடு வந்தது. 

“அது தெரியுது… கவிதை எழுதினால்கூட… ஆரோக்கியமான கவிதையாய் எழுத மாட்டாயா…? அது என்ன ஊனக் கனவுகள்… ஊனை உருக்குவது…? கவிதையில் கூட… ஊனத்தைப்பற்றியும்… உருக்குவதைப் பற்றியும் தான் உனக்கு எழுத வருமா…? உருப்படியாய் எழுத வராதா…?” 

அவன் வம்பிழுத்தான்… அவன் எதிர்பார்த்தபடி அவள் ரோசமாய் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். 

“இதோ பாருங்கள் தனா…” 

“பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன்…!” அவனது காந்தம் போன்ற கண்கள் கவர்ந்து இழுக்க அவள் பேச்சு வராமல் தடுமாறினாள். 

‘ஊஹூம்… இவன் மயக்கப் பார்க்கிறான்… திட்டுவதை எல்லாம் திட்டி விட்டு… இப்போது கொஞ்சிக் குலாவ வருகிறான்… மயங்கி விடக்கூடாது…’ 

அவள் அவசரமாய் அவன் முகத்திலிருந்த பார்வையை விலக்கிக் கொண்டாள். 

“நான் பாட்டுக்கு… நானுன்டு… என் கவிதை யுண்டுன்னு இருக்கிறேன்… என்னோடு வம்புக்கு யாரும் வரவேண்டாம்..” 

“வேறு யாரும் வந்தால்… இந்த தனஞ்ஜெயன் யாருன்னு அவங்களுக்குக் காட்டி விடுவேன்… அதனால் நீ கவலைப்படாதே… உன்னோடு வம்புக்கு நான் மட்டும் தான் வருவேன்…” 

“அதுதானே உங்களுக்குத் தெரியும்…”

“எது… வம்பு வளர்ப்பதா…?”

“ஆமாம்…”

அத்தியாயம்-12

நீரின்றி ஓடமில்லை…
நீயின்றி நானில்லை… 

சரியாக மாலை ஆறு மணிக்கு தனஞ்ஜெயனின் வண்டிச் சத்தம் வாசலில் கேட்டது… சாருலதா… ஆவலாக வாசலுக்கு ஓடினாள்… தனஞ்ஜெயன் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுப் படியேறி வந்தான்… கண்களில் கவலையோடு அவனைப் பார்த்த சாருலதாவிற்கு. நம்பிக்கையூட்டும் விதமாய்… இதமாய் புன்னகைத்தான் வரவேற்பறையில் கங்காதரன் டி.வி.யை பார்ப்பது போல் அவன் வரவுக்காக காத்திருந்ததைக் காட்டிக் கொள்ளாமல் பாவனை செய்தார். ரமணன் அறையை விட் வெளியே வந்து கங்காதரனின் அருகே அமர்ந்தான். சுவர் மீது சாய்ந்து நின்றுகொண்டிருந்த மேகலா தனஞ்ஜெயனின் தோற்றத்தை எடை போடுவதுபோல் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். 

“அப்பா… தனஞ்ஜெயன் வந்திருக்கிறார்…” சாருலதா எரிச்சலுடன் சப்தமாய் கூறினாள்… 

அப்போதுதான் அவனைப் பார்ப்பதுபோலத் திரும்பிய பார்த்த கங்காதரன்… அமர்த்தலாக… 

“வாங்க… உட்காருங்க…” என்று கூறினார். 

தனஞ்ஜெயன் அமர்ந்தான்… சாருலதா சற்றுத் தள்ளி, மற்றொரு சோபாவில் அமர்ந்தாள்… சமையலறையிலிருந்து காபி டிரேயுடன் வெளிப்பட்ட அஞ்சலியைக் கண்டதும்… நிம்மதியாய் பெருமூச்சுவிட்ட சாருலதா… அவளை நன்றியுடன் பார்த்தாள். 

“தேங்க்ஸ்…” என்றபடி ஒரு காஃபிக் கோப்பையை எடுத்துக்கொண்டான் தனஞ்ஜெயன்… 

“அப்புறம்… சொல்லுங்க மிஸ்டர் தனஞ்ஜெயன்…” பேச்சை ஆரம்பித்தார் கங்காதரன்… 

“எதைப் பற்றிச் சொல்ல சார்…?” வினயமாகக் கேட்டான் தனஞ்ஜெயன்… 

“உங்களைப் பற்றிச் சொல்லுங்க…” 

“என்னைப்பற்றி சாருலதா எதுவுமே சொல்ல வில்லையா?” 

தனஞ்ஜெயன் என்னவோ… இயல்பாகத்தான் இந்தக் கேள்வியைக் கேட்டான்… ஆனால்… ரமணனின் முகம் சிவந்துவிட்டது. 

“வேண்டுமென்றே நம்மைக் கலாய்க்கிறான்ப்பா…” சன்னக் குரலில்… கங்காதரனிடம் முணுமுணுத்தான் அவன். 

மகனின் கையைப் பிடித்து அழுத்தி… ‘பொறு’ என்பது போல் சிக்னல் கொடுத்தார் கங்காரதன்… 

“உங்களைப் பற்றி… உங்களிடமே நேரடியாய் கேட்டுத் தெரிந்து கொள்ளணுமுன்னு நினைக்கிறோம்…”

“அப்படியா… என்ன தெரிந்து கொள்ளணும்?”

“என்ன படித்திருக்கிறீங்க…?” 

“எம்.எஸ்.ஸி., எம்.பி.ஏ…” 

“சாருலதாவிற்கு சீனியர் ஆபிஸர்ன்னு சொன்னாள்…”

“ஆமாம்…” 

“எத்தனை வருசம் சர்வீஸ்…?” 

“ஆறு வருசம்…” 

“ஓஹோ… அப்புறம்… எங்கே தங்கியிருக்கறீங்க…?” 

“மடிப்பாக்கத்தில்… ஒரு அபார்ட்மென்டில் இருக்கிறேன்.” 

“சொந்த அபார்ட்மென்டா…?” 

“இல்லை… வாடகைதான்…” 

“வாடகையா…?” 

புருவம் உயர்த்தி மகனைப் பார்த்தார் கங்காதரன்… அவன், என்னவோ… செய்யத் தகாத காரியத்தைத் தனஞ்ஜெயன் செய்து விட்டது போல் அவனைப் பார்த்தான். 

‘அப்பனும்… மகனும்… ஏன் இப்படிப் பார்க்கிறானுக…’ தனஞ்ஜெயன் சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு பதிலுக்கு அவர்களைப் பார்த்தான். 

“இன்னும் சொந்தமாய் ஒரு அபார்ட்மென்ட் கூட வாங்கவில்லையா…?” 

“வாங்கவில்லை…” 

‘அதுக்கு… இப்ப என்னாங்கிற…?’ என்ற தொனியில் தனஞ்ஜெயன் கேட்டு வைக்க… சாருலதா கலவரமானாள்.

“வேறு… ஏதாவது இருக்கா…?” 

“புரியவில்லையே…” 

“பேங்க் பேலன்ஸ்… ஏதாவது இருக்கா?” 

“இல்லை…”

“அதுவும் இல்லையா…?” 

“ஆமாம்… அதுவும் இல்லை…”

பழைய தொனியில் தனஞ்ஜெயன் சொல்ல… சாருலதா அவசரமாய் அவர்களது பேச்சின் ஊடே குறுக்கிட்டாள். 

“அப்பா…”

“நீ சும்மாயிரு சாரு…”

“அதில்லைப்பா…” 

“நீ சும்மாயிருன்னு சொல்கிறேனில்லை… உனக்கு ஒன்றும் தெரியாது… நீ ஊடே வராதே…” 

செய்வதறியாதவளாய் சாருலதா… தனஞ்ஜெயனைப் பார்த்தாள்… அவன் முகத்தில் கோபக்குறி உதயமாகியிருப்பது புரிந்தது. அவளது அடிவயிற்றில் பயம் சூழ்ந்தது. பெற்றவர்… தனஞ்ஜெயனின் தன்மானத்தை வேண்டுமென்றே சீண்டுவதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. 

கங்காதரனின் கணக்கீடு என்ன என்று புரியாத அளவிற்கு சாருலதா முட்டாள் அல்ல… மகளின் காதலை மறுக்கவும் செய்யாமல்… அவளது காதலை நிறைவேற்றவும் செய்யாமல்… அழகாய்… காதலை முறிக்க வழி செய்து கொண்டிருந்தார் அவர். 

இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டால்… எந்த ஆண்மகனுக்கும் கோபம் வரும். அதிலும் ரோசக்கார தனஞ்ஜெயனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்… கட்டாயம் அவன் கழண்டு கொள்வான்… 

தன்மேல் பழிவராமல்… மகளின் காதலை உடைக்கும் வேலையைச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருந்தார் கங்காதரன். 

அதைத் தடுக்க வழியில்லாமல்… குமுறும் மனதோடு தகப்பனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்
சாருலதா. 

“ரமணா…” 

“அப்பா…” 

“நீ காலேஜ் லெக்சரர்… கைநிறையச் சம்பளம் வாங்குகிறாய்… உன் மனைவி எல்.ஐ.சி.யில் வேலை பார்த்தாலும்… உன்னைவிட தகுதிகுறைவுதான்…” 

“ஆமாம்ப்பா…”

“ஆனால்… உனக்குப் பெண் கேட்டுப் போன போது உன் மாமனார்… நம்மை எத்தனை கேள்விகள் கேட்டார் என்பது நினைவிருக்கிறதா…?”

“எப்படிப்பா மறக்கும்…” 

“உனக்குச் சொந்த வீடு இருக்கிறதான்னு கேட்டார்… சொந்த பங்களாவே இருக்குன்னு சொன்னோம். பேங்க் பேலன்ஸ் பற்றிக் கேட்டார்… லட்ச லட்சமாய்… கணக்கைக் காட்டினோம்… அப்புறமும்… முகத்தைத் தூக்கினார். வாங்கிப் போட்டிருக்கும் பிளாட்களைப் பற்றிய விவரங்களைச் சொன்னோம். அப்புறம்தான்… பெண்ணையே நம் கண்ணில் காண்பித்தார்…” 

“நிஜம்தான்ப்பா…” 

“இங்கே என்னன்னா… ஒரு சொந்த அபார்ட் மென்ட்டிற்குக்கூட வழியில்லை… கையில் ஒற்றைப் பைசா இல்லை… எந்தத் தைரியத்தில் இவர் பெண் கேட்டு நம் வீட்டுப் படியை மிதிதிருக்கிறார்…?” 

தகப்பனும்… மகனும் பேசிக் கொண்டிருப்பதை… கனல் வீசும் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்த தனஞ்ஜெயன், “உங்கள் வீட்டுப் பெண்… என்னைக் காதலிக்கும் தைரியத்தில்தான்… நான் பெண் கேட்டு உங்கள் வீட்டுப் படியை மிதித்தேன்…” என்றான். 

“அவள் அறியாப் பெண்… வாழ்க்கை நடத்த வசதிகள் வேண்டுமென்று தெரியாமல்… கனவில் மிதக்கிறாள்… அவள் பிறந்ததில் இருந்து வசதியாய் வாழ்ந்தவள்…” 

“நானும் ஒன்றும் ஓட்டாண்டியில்லை…” 

“மூன்று வேளை சாப்பாடும்… துணிமணியும் வாங்கித் தந்து வாடகை வீட்டில் குடித்தனம் செய்யத்தான் உங்கள் சம்பளம் கட்டும்…” 

“இதைத் தாண்டி… வேறு என்ன வேண்டும்…”

“என் வசதி போதுமென்று உங்கள் பெண் நினைக்கிறாளே…” 

“பிறந்த வீட்டில் சீரும் சிறப்புமாய் வளர்ந்தவள்… வாழ்ந்தவள்… போகும் வீட்டிலும் அதுபோல் வாழ வேண்டும் என்று நாங்க நினைக்கிறோம்… அப்பா ஒரு விவசாயி… சொந்த ஊர் குக்கிராமம்… இதில் உங்களுடன் வாழ மட்டும் சென்னை பெண் கேட்கிறதா…?” 

“ஹலோ… உங்கள் பெண்ணைக் காதலிப்பது நான்தான்… என்னைப்பற்றி மட்டும் பேசுங்க… எங்க வீட்டைப் பற்றியும் ஊரைப்பற்றியும் பேசாதீங்க… அதன் அருமை உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது…?” 

“புழுதி பறக்கும் கிராமத்தின் அருமை எங்களுக்குத் தெரியவே வேண்டாம்… ஒன்றுமில்லாத உங்களுக்கே இவ்வளவு பெருமை இருக்கும்போது… எல்லாம் இருக்கும் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்…?” 

“இருந்தால் நீயே வைத்துக் கொள்…” 

சட்டென்று ஏக வசனத்தில் பேசியவாறு தனஞ்ஜெயன் எழுந்துவிட… சாருலதா கலவரமானாள். 

“தனா…” என்று அவன் கைப் பிடித்துத் தடுத்தாள். “விடு…” அவன் கையை உதறினான்… 

“இப்போது சொல்கிறேன் கேட்டுக்கொள் சாரு… இனி உன் வீட்டிலேயே… என்னைத் தேடிவந்து, உன்னைப் பெண் கொடுக்கிறேன்னு சொன்னாலும்… நீ எனக்கு வேண்டாம்… நீயென்ன பேரழகியா… உன்னிடம் எதைக் கண்டு நான் மயங்கினேன்? உன் காதலைக் கண்டு மயங்கினேன்… அதற்காகத்தான் போனால் போகிறதென்று பெண் கேட்டு வந்தேன்… உன் வீட்டில் என் தன்மானத்தை தட்டிப் பார்க்கிறாங்க… இதெல்லாம் யாரால்…? உன்னால்… உன்மேல் நான் கொண்ட காதலால்… அந்தக் காதலே எனக்கு வேண்டாம் போடி…” 

அவன் போய்விட்டான்… சாருலதா… சிலையாய் சமைந்து நின்றுவிட அவளுடைய குடும்பத்தார். வெற்றிகரமான பார்வையை ஒருவருக்கொருவர் பரிமாறியபடி உள்ளே சென்று விட்டார்கள். அஞ்சலி மட்டும்… சாருலதாவின் அருகே வந்து ஆறுதலாய் தோள் தொட்டாள்… வெறுமையான பார்வையுடன். அவளது கையை விலக்கி விட்டாள் சாருலதா. அவளுக்குத் தேவை தனிமைதான் என்பதை உணர்ந்தவளாய் அஞ்சலி… மகளைத் தூக்கிக் கொண்டு… அறைக்குள் சென்று விட்டாள். சாருலதா சரிந்து அமர்ந்தாள். 

‘போய் விட்டானா…? நீ வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டானா…? அவ்வளவு எளிதாய் உதறிவிட்டுப் போக அவனால் எப்படி முடிந்தது…? அவன்மேல்… அவள் கொண்ட காதல் மாறாத தன்மையுடையது என்பதை எப்படி அவன் அறியாமல் போனான்…?’ 

சாருலதா… இரவு முழுவதும் தூங்காமல் அலைபாய்ந்து கொண்டிருந்தான். விடிந்து எழுந்தபோது அவள் மனம் தெளிந்திருந்தது. அலுவலகம் செல்லாமல் அமர்ந்திருந்தவளை மற்றவர்கள் கேள்வியாகப் பார்த்தபடி வெளியேறினார்கள். வீடு அமைதியாய் மாறியதும் விரைந்து அவள் செயல்பட்டாள். 

வீட்டை விட்டு வெளியே போனவள்… செய்ய வேண்டிய சில வேலைகளைச் செய்த பின் திரும்பி வந்தாள். ஒரு பெரிய பேப்பரை எடுத்து… நீளமான கடிதம் ஒன்றை எழுதி… வரவேற்பறையின் டீப்பாயின் மேல் வைத்தாள்… பெரிய டிராவல் பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு… வீட்டை விட்டு வெளியேறினாள். 

– தொடரும்…

– நீயின்றி நானில்லை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 2011, திருமகள் நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *